அது 1957-ம் ஆண்டு.
'ஆனந்தவிகடன்' நடத்திய அதன் வெள்ளிவிழா போட்டியில் இரு முதற்பரிசுகளை தன் சிறுகதைக்காகவும், சரித்திர நாவலுக்காகவும் பெற்றவரைத் தமிழ் எழுத்துலகும், பத்திரிகை படிக்கும் வாசகர் வட்டமும் வியப்புடன் நிமிர்ந்து பார்த்தது. ஜெகச்சிற்பியன் தமிழ் பத்திரிகைகளின் வெகுஜன வாசகர்களுக்கு அறிமுகமான ஆரம்பக்கதை இதுதான்.
பரிசு பெற்ற சிறுகதையின் பெயர்: "நரிக்குறத்தி". வெளியூர்களில் நாடோடிகளாகச் சுற்றித் திரியும் அந்த சமூக ஆண்களும், பெண்களும் பாசிமணி, ஊசி, மணிமாலை விற்கத் தனித்தனியாகச் சென்றாலும், சூரியன் மலைவாயில் விழும் மாலை நேரத்திற்குள் பெண்கள் தங்கள் இருப்பிடம் வந்துவிட வேண்டும். இது அந்த சமூக கட்டுப்பாடு. பாடிகோடியும், ஆடிகோடாவும் தம்பதிகள். பாசி, மணிமாலை ஏந்தி விற்கச்சென்ற புதுமணப்பெண் பாடிகோடி, ஆற்றில் திடீர் வெள்ளம் பிரவாகமாய் பொங்கி எழ அக்கரையில் மாட்டிக்கொண்டு இக்கரை வர முடியாமல் தவிக்க, நொப்பும் நுரையுமாக சுழித்து ஓடுகின்ற ஆற்றின் கரையின் இருமருங்கிலும் இருவரும் அலமந்து ஓடியாடி, இரவு முச்சூடும் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்கிற விதமாய், "ஆடிகோடா..பாடிகோடி.." என்று ஓலமிட்டது, ஆண்டுகள் பல ஓடிப் போயினும், இப்பொழுதும் சிந்தையில் ஒலிக்கிறது.. கொஞ்சம் கொஞ்சமாக,இரவு அந்தப் பகுதியைத் தன் இருட்டில் விழுங்கத் தொடங்க பின்னிரவும் நெருங்க..நெருங்க..
நரிக்குறத்தி' சோகமுடிவைக் கொண்ட ஜெகச்சிற்பியனின் பேசப்பட்டக் கதை.
சரித்திர நாவலுக்கான முதற்பரிசைத் தட்டிச்சென்ற "திருச்சிற்றம்பலம்" நாவல், ஓவியர் கோபுலுவின் படங்களுடன் அற்புதமாக ஆனந்தவிகடனில் வெளிவந்து படிப்போரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. தில்லை நடராஜர் ஆலயத்தை விரிவுபடுத்திப் பெரிதாகக் கட்ட விரும்பிய அநபாய குலோத்துங்கச் சோழன், கோயிலிலிருந்த கோவிந்தராஜப் பெருமாளை அகற்றிக் கடலில் அமிழ்த்த முயல, அரச குலப் போட்டிப் பங்காளிகள் அந்த நிகழ்ச்சியை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஆட்சிபீடத்தைக் கைப்பற்ற நடக்கும் சூழ்ச்சியாய் சைவ-வைணவ பூசல்கள் கிளப்பபடுகிற பின்னணியில் பக்தியும், காதலும் பின்னிப் பிணைந்த நாவல். ஏழிசை வல்லபி, காடவராயர், பரிவாதினி, காளத்தி தேவன் போன்ற மறக்க முடியா பாத்திரப் படைப்புகள்.
ஜெ.சி.யின் முத்திரை பதித்த இன்னொரு சரித்திர நாவல், "நந்திவர்மன் காதலி". அதன் தொடர்ச்சியாக "மாறம் பாவை" தவிர, "நாயகி நற்சோணை", "ஆலவாய் அழகன்" (ஆனந்த விகடன்) "மகரயாழ் மங்கை", "பத்தினிக்கோட்டம்" என்று நினைவுக்கு வரக் கூடியதாக நிறைய எழுதியிருக்கிறார் ஜெகச்சிற்பியன். கடந்தகால சரித்திரப் பின்னணி கொண்டு சரித்திர நாவல்களைப் படைத்தவர், நாட்டு நடப்புகளை நிலைக்களனாகக் கொண்டு, மிகச் சிறந்த சமூக நாவல்களையும் படைக்கத் தவறவில்லை.
நில உடமை சமூகப்பிரதிநிதிகளின் பேராசைகளையும், கூலி விவசாயிகளின் அல்லாடலையும் நெஞ்சம் கனக்கச் சொல்லும் "மண்ணின் குரல்", கல்கியில் தொடராக வந்த "சொர்க்கத்தின் நிழல்", "ஜீவகீதம்", "கிளிஞ்சல் கோபுரம்", அன்றாடங்காச்சிகளின் அவலவாழ்வைப் படம்பிடித்துக் காட்டும் "காணக் கிடைக்காத தங்கம்",மறக்கவே முடியாத "இனிய நெஞ்சம்" ஆகியவை அவரது ஆத்மார்த்த நாவல்கள். தொழிற்சங்கம்--தொழிலாளர் அவர்தம் வாழ்க்கைச் சிக்கல்கள் என்று நிஜத்தின் சாயலாய் ஜெகச்சிற்பியன் படைத்த "இன்று போய் நாளை வரும்" நாவலில் சமூகத்தின் மீதுள்ள அவரது பார்வையை தீட்சண்யமாய் பதிந்திருக்கிறார். அடித்தட்டு மக்களின் அவல வாழ்க்கை நிலையை உரத்த குரலாய் பிரகடனம் பண்ணியது மட்டுமல்ல, எல்லா நேரங்களிலும் ஏழைமக்களின் மீது எல்லையற்ற பரிவு காட்டுகிற ரட்சகராய் அவர் திகழ்ந்ததைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.
நாடக உலகையும் மறந்து விடாமல், அவர் படைத்திட்ட, "சதுரங்க சாணக்கியன்" என்கிற நீண்ட நாடகத்தைச் குறிப்பிட்டே ஆகவேண்டும். மகாகவி பாஸனின் மாணவியான கெளதமி என்னும் நாட்டிய நங்கை, சாணக்கியரைக் காதலிப்பதும், அது பற்றி அறியாத சந்திரகுப்தன் கெளதமியைக் காதலிப்பதும் இந்த நாடகத்தின் முடிச்சு. அரசியல் சதுரங்க விளையாட்டில், இது பற்றி ஏதும் அறியாத சாணக்கியன், சந்திரகுப்தனின் மறுப்பையும் மறுத்து, செலூகஸ் நிகேடாரின் அருமைப் புதல்வி, டயோபான்டீஸை அரசியல் காரணங்களுக்காக சந்திர குப்தனுக்கு திருமணம் செய்விக்கிறான். எல்லா சிக்கல்களும் கொண்ட, சாதுர்யமாக எழுதப்பட்ட இந்த நாடகம் ஜெகச்சிற்பியனின் எழுத்தாற்றலைப் பறைசாற்றும்.
தமிழின் புதின, சிறுகதை படைப்பிலக்கியத்தில் ஜெகச்சிற்பியன் வாழ்ந்த காலத்தில் சிறப்பாகச் சாதித்திருக்கிறார் என்பது வரலாற்று உண்மை. காந்தீயத்திலும், சர்வோதய
சிந்தனைகளிலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட இவர், இந்த தேசத்தின் சகல உன்னதங்களுக்கும் அந்தக் கொள்கைகளே வழிநடத்தி இட்டுச் செல்லும் என்று மனதார நம்பி, அவற்றை எழுத்திலும் பிரதிபலித்திருக்கிறார். அவர் சமகாலத்தில் வாழ்ந்த எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டு, வாசகர்கள் சுலபத்தில் புரிந்து கொள்கிற மாதிரி நிகழ்கால சமூகப்போக்குகளை அதன் வடுக்களைப்பற்றி துணிந்து எழுதியவர் ஜெகச்சிற்பியன் என்பது அவருக்கே உரிய பெருமை.
ஜெ.சி.யின் சிறுகதைகள் விதவிதமானவை. வெவ்வேறு குணாம்சங்களைக் கொண்டவை. சமூக வார்ப்புகளுக்கு வண்ணம் தீட்டிய கலைஞன் அவர். அந்தச் செயலையும், தன் சொத்தாக அவர் தன்னகத்தே கொண்டிருந்த ஆழ்ந்த பரிவுணர்வுடன் செய்திருக்கிறார். அதனால், அவரது கதாபாத்திரங்கள் நாம் சகஜமாகத் தெருக்களில் சந்திக்கிற சாதாரண மனிதர்களாய் இருந்த போதிலும், அவர்களது பாசாங்கற்ற உள்ளுணர்வுகளை வெளிப்படுத்துகின்ற தன்மை கொண்டிருக்கும்.
தான் வேறு மதத்தைச் சார்ந்தவராய் இருந்தும், இந்து, பெளத்த, சமண மதங்களின் தாத்பரியங்களைத் தனக்குள் ஆழ்ந்து உள்வாங்கிக்கொண்டு, அந்தந்த கோட்பாடுகளின் மீது மிகுந்த மரியாதையுடனும், ஆழ்ந்த புலமையுடனும் தனது நாவல்களில் அவற்றைப் பிரதிபலித்த ஜெகசிற்பியனின் மாண்பு போற்றத்தக்கது.
ஜெகச்சிற்பியனுக்கு அவரது 53-ம் வயதில் வாழ்க்கை முடிந்து விட்டது. சற்றேரக்குறைய 30 ஆண்டுகளின் இலக்கியப் பணிக்கு முற்றுப்புள்ளி.
ஒழுக்கம், சான்றாண்மை, மொழிப்பற்று, தேசிய உணர்வு போன்ற உன்னத இலட்சியங்களின் பிரதிநிதியாய் எழுத்துலகில் சாதித்துக்காட்டிய ஒரு தமிழ் எழுத்தாளரின் நினைவுகளை, காலச்சுவட்டின் புரட்டிப் போடும் மாற்றங்களிலும் மறந்து விடாமல் போற்றிப் பாதுகாப்பது நமது கடமை.
24 comments:
நான் அறுபதுகளின் ஆரம்பத்தில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது விகடன் ஒவ்வொரு வாரமும் முத்திரைக்கதை வெளியிட்டு வந்தது. மூன்று கதைகள் ஜெகசிற்பியன் எழுதியதாக நினைவு.'அன்னையர் மூவர்' என்று ஒரு கதை.சவப்பெட்டி செய்பவன் ஒருவன் பற்றி ஒரு கதை.மற்ற கதைதான் 'நரிக்குறத்தி' என் நினைக்கிறேன்.நான் மிக ரசித்துப் படித்த கதைகள்.நினைவூட்டியதற்கு நன்றி.
ஜெகச்சிற்பியன் அவர்கள் எழுத்து படித்ததில்லை. (என்னமோ மத்ததெல்லாம் ரொம்பப் படிச்ச மாதிரி!) நீங்கள் எழுதியிருக்கும் விதம் அவர் புத்தகங்களைப் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. அரிய எழுத்தாளரைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி ஐயா.
chennaipithan said...
//நான் அறுபதுகளின் ஆரம்பத்தில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது விகடன் ஒவ்வொரு வாரமும் முத்திரைக்கதை வெளியிட்டு வந்தது. மூன்று கதைகள் ஜெகசிற்பியன் எழுதியதாக நினைவு.'அன்னையர் மூவர்' என்று ஒரு கதை.சவப்பெட்டி செய்பவன் ஒருவன் பற்றி ஒரு கதை.மற்ற கதைதான் 'நரிக்குறத்தி' என் நினைக்கிறேன்.நான் மிக ரசித்துப் படித்த கதைகள்.நினைவூட்டியதற்கு நன்றி.//
அப்படியா, ஐயா! ரொம்பவும் சந்தோஷம். அறுபது ஆரம்பத்தில் கல்லூரி என்றால், நீங்களும் எனது சமகாலத்தவரே. நூற்றூக்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கும் ஜெகசிற்பியனின், அந்த சவப்பெட்டி செய்பவனின் கதை நன்கு நினைவிருக்கிறது. ஆனந்தவிகடனின் வெள்ளிவிழாப் போட்டி பரிசுக்கதை 'நரிக்குறத்தி' மட்டும் முத்திரை கதையல்ல.
ஜெகசிற்பியனின் அத்தனை நாவல்களையும் நூலாகப் பிரசுரித்து
ஆதரவளித்தவர், வானதிப் பதிப்பக பெரியவர் திருநாவுக்கரசு. இன்றும் வானதிப் பதிப்பகத்தில் ஜெகச்சிற்பியனின் நூல்கள் கிடைக்கும்.
தங்களின் வருகைக்கும், நீண்ட காலத்திற்கு முன்னான நினைவுகளைப் பதிந்தமைக்கும் மிக்க நன்றி, chennaipithan ஐயா!
கவிநயா said...
//ஜெகச்சிற்பியன் அவர்கள் எழுத்து படித்ததில்லை. (என்னமோ மத்ததெல்லாம் ரொம்பப் படிச்ச மாதிரி!) நீங்கள் எழுதியிருக்கும் விதம் அவர் புத்தகங்களைப் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. அரிய எழுத்தாளரைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி ஐயா.//
புதுமைப் பித்தனுக்கு பின்னால்,
ஜெயகாந்தனுக்கு முன்னால், அவர்களின் அளவுக்கு சற்றும் குறையாமல் அடித்தட்டு சாதாரண மக்களின் பிரச்னைகளை, அவர்களின் வாழ்க்கையை வெளிச்சமிட்டுக் காட்டி, மிக்க அனுதாபத்துடன் எழுதியவர் ஜெகசிற்பியன் என்பது வரலாறு காட்டும் உண்மை. ஆனால் ஏனோ அவர்கள் அளவு பேசப்படாமல் அவர் எழுத்தை சீராட்டவும் பாராட்டவும் ஆள் இல்லாது போயிற்று.
ஜெகசிற்பியன் சரித்திரக்கதைகளையும் சிறப்புடன் படைத்தார் என்பது மற்ற இருவரிடமும் இல்லாத கூடுதல் சிறப்பு.
அவரது புத்தகங்கள் கிடைக்கப்பெறின் நீங்களும் படித்து ரசியுங்கள்.
உங்கள் வருகைக்கும் கருத்துப் பரிமாறல்களுக்கும் மிக்க நன்றி.
மறக்கப்பட்டவர்களை நினைவூட்டும் தங்கள் மகத்தான போற்றுதற்குரியது, வாழ்த்துக்கள்!
லெண்டிங் லைப்ரரியிலெடுத்துப் படித்த ஒரு கல்கி தொடர். நாச்சினார்கினியன் என்ற நீக்ரோ
(அப்பன் பெயர் தெரியாத கேரக்டர். நாவல் பெயர் நினைவில் இல்லை. திரு சிற்றம்பலம், காணக்கிடைக்காத தங்கம் நல்லா நினைவிருக்கு.அந்த நரிக்குறத்தி கதை சினிமா ஆகியிருக்கா?
கதையை வீட்டில் அம்மா, அத்தைகள் பேசிக் கேட்டு இருக்கேன்.
லெண்டிங் லைப்ரரியிலெடுத்துப் படித்த ஒரு கல்கி தொடர். நாச்சினார்கினியன் என்ற நீக்ரோ
(அப்பன் பெயர் தெரியாத கேரக்டர். நாவல் பெயர் நினைவில் இல்லை. திரு சிற்றம்பலம், காணக்கிடைக்காத தங்கம் நல்லா நினைவிருக்கு.அந்த நரிக்குறத்தி கதை சினிமா ஆகியிருக்கா?
கதையை வீட்டில் அம்மா, அத்தைகள் பேசிக் கேட்டு இருக்கேன்.
ஜீவா (Jeeva Venkataraman) said...
//மறக்கப்பட்டவர்களை நினைவூட்டும் தங்கள் மகத்தான போற்றுதற்குரியது, வாழ்த்துக்கள்!//
சொல்லப்போனால், தமிழ் எழுத்துலகில் ஜெகசிற்பியன் எவ்வளவு மறக்க முடியாதவரோ அந்தளவு மறக்கக்கூடாதவரும் கூட. எந்தக் குழுவுடனும் ஜெ.சி.க்குத் தொடர்பில்லாதிருந்தது.
சுதந்திர எழுத்தாளராய் தனக்கு நியாயமாகப்பட்டதை, தீர்க்கமாக எழுதிவந்தார். இன்னும் சொல்லப்போனால், மற்ற எழுத்தாளர்கள் சொல்லத் தயங்கிய விஷயங்கங்களையும், தவிர்த்த விஷயங்களையும் அவர் எழுதினார்.
அவற்றை எழுதுவதற்காகத்தான் பேனா பிடித்திருப்பதாகவும் நம்பினார்.
அதுவும் வணிக நோக்குள்ள,
பலதரப்பட்ட வாசகர்கள் கொண்ட பத்திரிகைகளில் அவற்றை எழுதினார் என்பது தான் விசேஷம்.
அத்தனைப் பாராட்டும் ஜெ.சி.க்குத் தான் சொந்தம்.
ramachandranusha(உஷா) said...
//லெண்டிங் லைப்ரரியிலெடுத்துப் படித்த ஒரு கல்கி தொடர். நாச்சினார்கினியன் என்ற நீக்ரோ
(அப்பன் பெயர் தெரியாத கேரக்டர். நாவல் பெயர் நினைவில் இல்லை. திரு சிற்றம்பலம், காணக்கிடைக்காத தங்கம் நல்லா நினைவிருக்கு.அந்த நரிக்குறத்தி கதை சினிமா ஆகியிருக்கா?
கதையை வீட்டில் அம்மா, அத்தைகள் பேசிக் கேட்டு இருக்கேன்.//
வாருங்கள், உஷா! நலம் தானே?
நீங்கள் குறிப்பிடும் நாவல்தான்
"ஜீவகீதம்". 65-வாக்கில் 'கல்கி'யில் தொடர்கதையாக வந்தது. இந்தப் புதினம், நேஷனல் புக் டிரஸ்ட்டால், பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டப் பெருமை பெற்றது. பாவம், நச்சி! (நச்சினார்க்கினியன்)
தந்தை முகமறியா பாலகன். தமிழ் பேசிய கன்னியம்மாளுக்கும், ஒரு நீக்ரோ இனத்தவருக்கும் பிறந்தவன்.
சேரி வாழ்க்கையில் தவழ்ந்தது முதற்கொண்டு, மூர்மார்க்கெட்டின் செல்லப்பிள்ளையாய்த் திரிந்தது வரை, எது குறித்தும் கவலையின்றி, வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் உருண்டு திரண்டு வார்த்தெடுக்கப் பட்டவன். நச்சியைக் காதலித்த ஆங்கிலோ இந்தியப் பெண் ரோசலின்,
கிழக்கு வங்க அகதி ஸந்தியா ஆகியோர் நினைவிருக்கிறார்களா?..
'காணக்கிடைக்காத தங்கம்' கல்கியில் தொடராக வந்தது. அந்த நரிக்குறத்தி கதை திரைப்படம் ஆகவில்லை.
இயக்குனர் பாரதிராஜா அவர்கள், ஜெ.சி.யின் கதையொன்றை திரைப்படமாக்க முயற்சித்தாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். யாராவது சொன்னால், என்ன கதை என்று தெரியும்.
வீட்டுப் பெரியவர்கள், பத்திரிகைத் தொடர்பாகவும், அவற்றை விமர்சிப்பவராகவும் இருப்பது வளரும் தலைமுறைக்கு பாக்கியம்.
உங்களையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்.
முதல் வருகைக்கும், நினைவு கூர்தல்களுக்கும் மிக்க நன்றி.
ஒரு காலகட்டத்தில் சரித்திரக்கதைகளை அதிக நாட்டத்தோடு வாசித்திருக்கிறேன்.. அப்போதெல்லாம் என் அம்மாவின் விருப்பதிற்கிணங்க அவர்கள் அறிவுறுத்தலின் பெயரில் ஜெகசிற்பியின் நாவல்களையும் வாசித்திருக்கிறேன்.. ஆனால் விருப்பங்கள் மாறுபட்டுக்கொண்டே இருப்பதுதானே மனதின் விந்தை அந்த விந்தையான மனஓட்டத்தில் அவரது எழுத்துக்களை விட்டு விலகி ஆண்டுகள் பலவானது, அவர் சமூக நாவலகளும் படைத்திருக்கிறார் என்பது எனக்கு உங்கள் பதிவின் மூலம் தான் அறியமுடிந்தது. நன்றி...
கிருத்திகா said...
//ஒரு காலகட்டத்தில் சரித்திரக்கதைகளை அதிக நாட்டத்தோடு வாசித்திருக்கிறேன்.. அப்போதெல்லாம் என் அம்மாவின் விருப்பதிற்கிணங்க அவர்கள் அறிவுறுத்தலின் பெயரில் ஜெகசிற்பியின் நாவல்களையும் வாசித்திருக்கிறேன்..//
அப்படியா! ரொம்ப சந்தோஷம்.
இப்படிப்பட்ட அன்னையைப் பெற
மாதவம் செய்திருக்க வேண்டும்.
பலருக்கு இந்த கொடுப்பினைகளெல்லாம் இல்லை.
ஜெகசிற்பியன் படைத்தவை பெரும்பாலும் உயிரோவியங்கள்.
கிடைத்தால் படிக்கத் தவற விடாதீர்கள். எல்லாத்துறைகளிலும் எழுத வேண்டுமென்ற ஆர்வம் கொண்டிருந்தவர். பிரேமா பிரசுரத்தின் 'சிந்தனையாளர் வரிசை'க்காக டார்வினைப் பற்றியும் எழுதியிருக்கிறார்!
தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளர் ஜெகசிற்பியனுக்கு முக்கியமானதோரிடமுண்டு. இவரது சரித்திர மற்றும் சமூக நாவல்கள், சிறுகதைகள் பலகுறிப்பிடத்தக்கன. 'கொஞ்சும் சலங்கை' திரைப்படத்தின் திரைக்கதை வச்னக்ர்த்தாவும் இவரேயென்று நினைக்கின்றேன். ஜெக்சிற்பியனின் சமூக நாவல்களில் 'ஜீவகீதம்', 'கிளிஞ்சல் கோபுரம்' , 'நந்திவர்மன் காதலி' மற்றும் 'பத்தினிக் கோட்டம்' ஆகியன வாசகர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. எழுத்தாளர் ஜெகசிற்பியனின் சமூக நாவல்களை குறிப்பாக 'மண்ணின் குரல்', 'ஜீவகீதம்', 'கிளிஞ்சல் கோபுரம்', 'காணக்கிடைக்காத தங்கம்' போன்றவற்றை நூல் வடிவிலோ அல்லது தொடராக வெளிவந்த காலத்தில் 'பைண்டு' செய்யப்பட்ட நிலையிலோ எங்காவது பெற முடிந்தால் அறியத்தரவும். தகுந்த சன்மான வழங்கப்படும். ஓர் ஆய்வொன்றின் பொருட்டு அவை தேவைப்படுகின்றன. பினவ்ரும் மின்னஞ்சல் , navgiri@rogers.com, மூலம் என்னுடன் தொடர்பு கொள்ளலாம்.
சென்னை தியாகராயநகரில் தபால் நிலைத்திற்கு அருகிலிருக்கும் வானதி பதிப்பகத்தில் அமரர் ஜெகசிற்பியனின்
நூல்கள் கிடைக்கும் என்று நினைக்கிறேன். நான் அந்தப் பதிப்பகத்திற்கு செல்லுங்கால், விசாரித்து த்ங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன்.வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.
ஜீவி, உங்கள் பதிலுக்கு நன்றி. மேலும் விக்கிபீடியாவின் ஜெகசிற்பியன் பற்றிய கட்டுரை கீழே. ஜெகசிற்பியன் பற்றிய உங்கள் பதிவுக்குப் பயனுள்ளதாகவிருக்கும்.
*************************************************************************
ஜெகசிற்பியன் பற்றி விக்கிபீடியாவிலிருந்து ( http://ta.wikipedia.org/) ...
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜெகசிற்பியன்ஜெகசிற்பியன் தமிழ் நாட்டின் புனைகதை எழுத்தாளர்களில் ஒருவர்.
அவரின் 154 சிறுகதைகள் 12 தொகுதிகளாகவும், இரு குறுநாவல்களும் இரு தொகுதிகளாகவும் மொத்தம் பதினான்கு தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவற்றுள் முப்பது சிறுகதைகளும், குறுநாவல்களும் ஆங்கிலம், ஜேர்மன், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன.
பல இதழ்களில் சிறுகதை, குறுநாவல் எழுதிய போதிலும் ஜெகசிற்பியன் என்ற பெயர் தமிழ் வாசகர்களுக்குப் தெரிய வந்தது 1957இல் 'ஆனந்த விகடன்' நடத்திய வெள்ளிவிழாப் போட்டியில்தான். அதில் அவரின் நரிக்குறத்தி (சிறுகதை), திருச்சிற்றம்பலம் (வரலாற்றுப் புதினம்) ஆகியன இரு முதற் பரிசுகளைப் பெற்றன. தமிழ்நேசன் என்ற மலேசியத் தினசரியில் அவர் எழுதிய 'மண்ணின் குரல்' சமூகப் புதினம் தனி நூலாக வெளியானது.
'ஜீவகீதம்' தொடர்புதினத்தை ஜனவரி 17 1965 முதல் கல்கி இதழில் அவர் எழுதியது அவருக்குப் பெரிய வாசகர் வட்டத்தைப் பெற்றுத் தந்தது. இப்புதினம் 'நேஷன்ல் புக் ட்ரஸ்ட்டால்' பதின்மூன்று இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
சென்னைப் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பு, உயர்நிலைப் பள்ளிக் கல்வி ஆகியவற்றில், தமிழ்ப்பாட நூல்களில் 'அவன் வருவான்', 'நொண்டிப் பிள்ளையார்' ஆகிய சிறுகதைகள் பாடமாக வைக்கப்பெற்றன. மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் முதுகை (எம்.ஏ) வகுப்பிற்கு 'ஆலவாயழகன்' என்ற வரலாற்றுப் புதினத்தையும், 'நடை ஓவியம்' என்ற ஓரங்க நாடகத் தொகுப்பையும் பாடநூல்களாக வைத்தது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் முதுகலை வகுப்பில் ஜெகசிற்பியன் சிறுகதைகள், வரலாற்றுப் புதினங்கள் பற்றிய ஆய்வையும், அமெரிக்க கபிலடெல்பியாவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகம், தெற்காசிய மொழியியல் ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்த திராவிட மொழிகள் ஆராய்ச்சித் துறையினர் 'ஜெகசிற்பியன் சிறுகதைகள்' சமூகப் புதினங்கள் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளனர். இவற்றைவிட பல்கலைக்கழகங்களில் இவரின் நூல்களைப் பலர் மேற்பட்டப் படிப்புக்கு ஆய்ந்துள்ளனர்.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ், இண்டர்நேஷன்ல் பயோ கிராபிக்ஸ் செண்டர் தனது சர்வதேச எழுத்தாளர்கள், ஆசிரியர்கள்- யார் எவர்? நூலின் எட்டாம் பதிப்பில் அவரது வாழ்க்கைக் குறிப்பை வெளியிட்டுள்ளனர்.
கொஞ்சும் சலங்கை திரைப்படத்திற்கு உரையாடலை எழுதியவர் ஜெகசிற்பியன்.
வெளியான ஜெகசிற்பியனின் படைப்புக்கள் சில
[தொகு] சிறுகதைத் தொகுதிகள்
அக்கினி வீணை (1958)
ஊமைக்குயில் (1960)
நொண்டிப் பிள்ளையர் (1961)
நரிக்குறத்தி (1962)
ஞானக்கன்று (1963)
ஒரு நாளும் முப்பது வருடங்களும் (இரு குறுநாவல்கள்; 1962)
இன்ப அரும்பு (1964)
காகித நட்சத்திரம் (1966)
கடிகாரச் சித்தர் (1967)
மதுரபாவம் (1967)
நிழலின் கற்பு (1969)
அஜநயனம் (1972)
ஒரு பாரதபுத்திரன் (1974)
சமூக நாவல்கள்
ஏழ்மையின் பரிசு (1948)
சாவின் முத்தம் (1949)
கொம்புத் தேன் (1951)
தேவதரிசனம் (1962)
மண்ணின் குரல் (1964)
ஜீவகீதம் (1966)
காவல் தெய்வம் (1967)
மோகமந்திரம் (1973)
ஞானக்குயில் (1973)
கிளிஞ்சல் கோபுரம் (1977)
றாவது தாகம் (1977)
காணக் கிடைக்காத தங்கம் (1977)
இனிய நெஞ்சம் (1978)
சொர்க்கத்தின் நிழல் (1978)
இன்று போய் நாளை வரும் (1979)
இந்திர தனுசு (1979)
வரலாற்று நாவல்கள்
மதுராந்தகி (1955)
நந்திவர்மன் காதலி (1958)
நாயகி நற்சோணை (1959)
லவாயழகன் (1960)
மகரயாழ் மங்கை (1961)
மாறம்பாவை (1964)
பத்தினிக் கோட்டம் (பாகம் 1; 1964)
பத்தினிக் கோட்டம் (பாகம் 2; 1976)
சந்தனத் திலகம் (1969)
திருச்சிற்றம்பலம் (1974)
கோமகள் கோவளை (1976)
http://ta.wikipedia.org/
கிரிதரன் said...
//ஜீவி, உங்கள் பதிலுக்கு நன்றி. மேலும் விக்கிபீடியாவின் ஜெகசிற்பியன் பற்றிய கட்டுரை கீழே. ஜெகசிற்பியன் பற்றிய உங்கள் பதிவுக்குப் பயனுள்ளதாகவிருக்கும்.//
மிக்க நன்றி, கிரிதரன்.
நீங்கள் அனுப்பி வைத்திருக்கும் குறிப்பு அமரர் ஜெகசிற்பியன் பற்றிய பரந்து பட்ட வாசிப்பிற்கு பலருக்கு உதவியாக இருக்கும் தான்.
திரு. ஜெகசிற்பியனின் சமகால எழுத்தாளன் நானும் ஆகையால், நான் எழுதியிருக்கும் பல செய்திகள் அவர் காலத்தில் வாழ்ந்த எழுத்தாளனின், வாசகனின் உணர்வுகள். அதனால் தான் அந்த எனது கட்டுரை வெறும் விவரக் குறிப்புகளாக அல்லாமல் அமைந்து விட்டது.. அவரைப் பற்றிய எனது கட்டுரையின் நோக்கம், ஆகச் சிறந்த ஒரு தமிழ் எழுத்தாளரை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி நினைவு கொள்ள வேண்டுமென்பதே.
இப்படி நிறைய மறந்து பட்ட எழுத்துல பிர்ம்மாக்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் எழுதிச் சாதித்தவைகளை நினைத்தால் பிரமிப்பு தான் ஏற்படுகிறது. இன்னும் நிறையப் பேர்களைப் பற்றி எழுத வேண்டும்.
வேறு ஒரு தொடரில் மூழ்கி இருப்பதால் இடையே கொஞ்சம் நிறுத்தம். அது நிறைவு பெற்றதும், இந்தப் பக்கம் வர வேண்டும்.
தங்களுக்கு மிக்க நன்றி.
ஜீவகீதத்தை படமாக்க முயற்சி செய்தனர். கதாநாயகனாக ஏ.வி.எம். ராஜன், நச்சி என்னும் நச்சினார்க்கினியனாக நாகேஷ் கூடவே சச்சு ஆங்கிலோ இந்திய பெண்ணின் ரோலில். படம் வெளியானதாகத் தெரியவில்லை. சில ஸ்டில்கள் பேசும் படம் போன்ற ஒரு சினிமா பத்திரிகையில் பார்த்த ஞாபகம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஜெகசிற்பியனைப் பற்றி நன்றாகவே சொல்லியிருக்கிறீர்கள். ஜீவகீதம் அந்தநாளில் எனக்கு மிகவும் பிடித்த நாவல். அது என்ன சொந்த வாழ்க்கையில் பிரச்சினையோ, காதல் தோல்வியோ தெரியாது, தன்னுடைய ஒவ்வொரு கதையிலுமே ஒரு சோகமான முடிவை வைத்திருப்பார். டோண்டு ராகவன் சொன்னதற்கப்புறம் தான், இதைப் படமாக எடுக்கவும் முயற்சிக்கப்பட்டது என்பது தெரியும்.
நாள் கடந்து படித்தாலும், பழைய எழுத்தாளர்களைப் பற்றிய இந்தப் பகுதி சுவையாகத் தான் இருக்கிறது!
dondu(#11168674346665545885) said...
//ஜீவகீதத்தை படமாக்க முயற்சி செய்தனர். கதாநாயகனாக ஏ.வி.எம். ராஜன், நச்சி என்னும் நச்சினார்க்கினியனாக நாகேஷ் கூடவே சச்சு ஆங்கிலோ இந்திய பெண்ணின் ரோலில். படம் வெளியானதாகத் தெரியவில்லை. சில ஸ்டில்கள் பேசும் படம் போன்ற ஒரு சினிமா பத்திரிகையில் பார்த்த ஞாபகம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
அப்படியா, டோண்டு சார்! பல 'சமீபத்திய' தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள்.
தகவலுக்கு நன்றி.
கிருஷ்ணமூர்த்தி said...
//நாள் கடந்து படித்தாலும், பழைய எழுத்தாளர்களைப் பற்றிய இந்தப் பகுதி சுவையாகத் தான் இருக்கிறது!//
நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதுமல்லாமல், நிறைய எழுத உற்சாக மளித்திருக்கிறீர்கள். தங்கள் அன்புக்கு நன்றி.
ஜெகச்சிர்பியனின் பல படைப்புகளை படித்து ரசித்துள்ளேன்.பல நல்ல சிறுகதைகளும் எழுதிஉள்ளார் அவர் படைப்புகள் தொடராக வெளிவந்தபோது விரும்பி வாசித்துள்ளேன்
கல்கியில் தொடராக வந்த சொர்க்கத்தின் நிழல் என்னை மிகவும் கவர்ந்தது.நான் மிகவும் ரசித்த இன்னொரு படைப்பு 'பத்தினிக் கோட்டம்'
@ Ramakrishnan
வாருங்கள், ராமகிருஷ்ணன்,
ஜெகசிற்பியன் அவர்களை மீண்டும் நினைவுகொண்டமைக்கு மிக்க நன்றி.
அவர் படைப்புகள், தமிழ் எழுத்துலகில் முத்திரை பதித்தவை. தங்கள் பகிர்தலுக்கு மிக்க நன்றி.
அருமையான கட்டுரை. பகிர்தலுக்கு மிக்க நன்றி.
@ உமா ஷக்தி
தங்கள் வருகைக்கும் ரசித்துப் படித்துப் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி.
இது இன்னும் நிறைய எழுத ஊக்கத்தைக் கொடுக்கிறது. நன்றி.
Post a Comment