Monday, July 21, 2008

மதிப்பீடுகள்

பார்ப்பதற்கு வெகு இளைஞனாக இருந்தான். பெயர் பஸவராஜ் என்றான்.

"கர்நாடகமா?" என்றார் சுந்திரமூர்த்தி. மாநிலம் கேட்டு, ஊர் விசாரித்து அந்த ஊரைப் பற்றி விசேஷ இரண்டொன்று விஷயங்கள் சொல்லிச் சிரித்து யாரிடமும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது அவரது வழக்கம். "ஆரம்பித்து விட்டீர்களா?" என்று மனைவி ஆரம்பித்து விடுவாள் என்று அடக்கிக் கொண்டார்.

"சின்ன வேலைதாம்பா.." என்று காரியார்த்தமாக அவன் மனைவியே ஆரம்பித்தாள். "இந்த நாலு கதவுகளுக்கும் டோர் ஸ்டாப்பர் போடணும்"

"செஞ்சிடலாங்க.." கதவின் கீழ்ப்பக்கம் கைவைத்து, "இங்கே பிக்ஸ் பண்ணிட்டா தரையோடு அழுத்திப் பிடிச்சுக்கும்" என்றான் பஸவராஜ்.

"அந்த மாதிரி வேண்டாம். நாளாவட்டத்தில் புஷ் தேய்ந்து போனால், போட்டதே வேஸ்ட்" என்று அனுபவ அறிவோடு மறுத்தாள். "நீ என்ன செய்யறேன்னா,கதவும் நிலையும் சேர்ற இடத்திலே தடுக்கற மாதிரி இந்த ப்ரேமில் சின்னச் சின்ன கட்டை போட்டு பிக்ஸ் பண்ணிக் கொடுத்திடு."

"சரிங்க.." என்றான் பஸவராஜ்.

"அப்போ எப்போ வர்றே?" என்றார் சுந்திரமூர்த்தி.

"நாளைக்கு ஒங்களுக்குத் தோதுப்படுமா?" என்று பஸவராஜ் சுந்திரமூர்த்தியைப் பார்த்துக் கேட்டான்.

"நாளைக்குன்னா எப்போ?"

"மதியம் ரெண்டு மணிக்கு வந்திர்றேன்.. எல்லாம் ரெடி செய்துகிட்டு வந்தேன்னா, அரை அவர்லே செஞ்சு கொடுத்திடறேன்."

"சரி"

அதற்குள் சுந்திரமூர்த்தியின் மனைவி உள்பக்கம் சென்று மழமழவென்று ஒரு நீளக்கட்டையை எடுத்து வந்தாள். "இதோ பாரு. நல்ல பர்மா தேக்கு. கட்டில் வேலை செஞ்சப்போ மீந்தது. இதைச் சின்னச்சின்ன கட்டையா அறுத்துக்கறையா?" என்றாள்.

"இது எதுக்கும்மா?" என்றான் பஸவராஜ். "இந்த வேலைக்குப் படாக் போதும்மா..நான் வாங்கி அறுத்துக்கறேன். இது வேறே எதுனாச்சும் பெரிய வேலைக்கு உபயோகப்படும்" என்று மறுத்து விட்டான். அவன் சொன்னதைக் கேட்டதும் சுந்திரமூர்த்திக்கு அப்பாடா என்றிருந்தது.

"சாமான்லாம் வாங்கணும். கட்டைய அளவா மிஷின் கட்டிங் செய்யணும். அதுக்கு கதவு நெறத்துக்கு வார்னிஷ் பூசணும்.. கீல், ஸ்க்ரூ என்று வாங்கணும். நான் எல்லாம் ரெடியாக்கிக்கிட்டு வந்திடறேன். இப்போ செலவுக்குக் கொடுங்க" என்றான் பஸவராஜ்.

உள்ளே போய் உத்தேசமாக நூறு ரூபாய் கொண்டு வந்து கொடுத்தார் சுந்திரமூர்த்தி.

"கீலுங்களும் வார்னிஷூமே நூத்தி அம்பது ஆகும். இருநூறு கொடுங்க," என்றான் பஸவராஜ், ஒரு தீர்மானக்குரலுடன். ஒரு நிமிட யோசனைக்குப் பிறகு உள்ளே போய் இன்னொரு நூறு ரூபாய் எடுத்து வந்துக்கொடுத்தார், சுந்திரமூர்த்தி.

செய்து கொடுப்பதற்கான கூலி இருநூற்று ஐம்பது சொல்லி, இருநூறு தருவதாக தீர்மானமாயிற்று.

"அப்போ நாளைக்கு மதியம் வந்திடறேன்" என்று பஸவராஜ் கிளம்பினான்.

"எனக்கு வேலை இருக்கு.. கரெக்டா வந்திடுப்பா" என்றார் சுந்திரமூர்த்தி.

"சரி சார்." பஸவராஜ் தலையாட்டினான்.

அவன் போனதும்,"என்னங்க,இது?..குட்டியூண்டு நாலு கட்டை பொருத்தித் தர்றதுக்கு நானூறு ரூபாவா?..ஒண்ணுக்கு நூறா ரூபாவா? பகல் கொள்ளையா இருக்கே?" என்று முகத்தில் கைவைத்து ஆச்சரியப்பட்டாள்.

"எல்லாம் இன்ப்ளேஷன் காலம்.. ஒண்ணும் பேசப்படாது! வேலை முடிஞ்சதா, சரின்னு போ.. சக்தியில்லையா, ஒண்ணும் செய்யாது இரு என்கிற காலம் இது" என்று இப்போதைக்குச் சொல்லி வைத்தார், பின்னால் தான் படப்போகிற அவஸ்தைகளை அறியாது.


டுத்த நாள் மதியம் மணி இரண்டாச்சு; இரண்டரையுமாச்சு; பஸவராஜைக் காணோம்.

சுந்தரமூர்த்தியின் மனைவி கணவனை வண்டாகத் துளைக்க ஆரம்பித்து விட்டாள். "முன் பின் தெரியாதவனிடம் முழுசா இருநூறு ரூபா தூக்கிக் கொடுத்திட்டீங்க;
இனி அவன் வந்தாப்பலேதான். இப்படியும் ஒரு மனுஷன் அப்பாவியாக இருப்பீங்களா? அவன் அட்ராஸாவது வாங்கி வைச்சிக்கிட்டிருகீங்களா, அதுவும் இல்லையா?"

"அதான் செல் நம்பர் கொடுத்திருக்கானே?" என்று எழுந்து தொலைபேசினார் சுந்திரமூர்த்தி. கொஞ்சநேரத்திற்குப் பிறகு லைன் கிடைத்தது. பஸவராஜ் தான்
பேசினான். "உங்க வேலைதான் நடந்துக்கிட்டிருக்கு. வார்னிஷ் போட்டுக்கிட்டிருக்கேன். நாலு மணிக்கு வந்திடறேன்."

"ரெண்டு மணி நாலாயிடுத்தா?.. எனக்கு வெளிவேலை இருக்கு. சீக்கிரம் வாப்பா.."

"சரி சார்."

"வேலை முடிஞ்சமாதிரி தான். இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்திடறதா சொன்னான்" என்று சுந்திரமூர்த்தி மனைவியை சமாதானப்படுத்துகிற தோரணையில் வெற்று வெளியைப் பார்த்துச் சொன்னபோது, "இன்னுமா நம்பறீங்க?.." என்று தோளில் இடித்துக் கொண்டாள் அவர் மனைவி.

நாலு மணியும் ஆயிற்று. ஆளைக் காணோம்.

ஒரு எளிய மனிதனின் மேல் கொள்ளும் நம்பிக்கையும், அவனது மனுஷத்தன்மையும் வெறும் இருநூறு ரூபாய்க்குப் பலியாகப் போய்விடும் என்று சுந்திரமூர்த்தி நம்பவில்லை. ஏனோ அவன் வந்துவிடுவான் என்று உறுதியாக நம்பினார் அவர். அவர் மனைவி அவரை எகத்தாளமாகப் பார்த்து, முகத்தைச் சுளித்தாலே,"நிச்சயம் வந்திடுவான், பாரேன்" என்றார்.

"நீங்க சொல்றதை சின்னக்குழந்தை கேட்டாக் கூட சிரிக்கும். இருநூறு ரூபாய்! அவன் கேட்டானாம்; இவர் கொடுத்தாராம்..காசோட அருமை தெரிஞ்சா ஒவ்வொரு காரியமும் செய்யறீங்க?" என்று அவர் மனைவி கடுகடுத்தாள்.

"நிச்சயம் அவன் வந்திடுவான், பாரேன்" என்று சுந்திரமூர்த்தி சொல்லி வாய் மூடவில்லை, வாசல் காலிங்பெல் கணகணத்தது.

கதவு திறந்தார். பஸவராஜ் தான். சிரித்துக்கொண்டே, "வரலாமா, சார்?" என்றான்.

"என்னப்பா இப்படி லேட் பண்ணிட்டே?" என்று முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டார் சுந்திரமூர்த்தி. மனசுக்குள் சந்தோஷம்.. தான் நினைத்தபடியே
இருநூறு ரூபாய்க்கு இரையாகாமல் மனுஷத்தன்மையைக் காப்பாற்றிவிட்டானே என்று.

வந்தவன், விடுவிடுவென்று அழகாக வேலையை முடித்துக் கொடுத்தான். கேட்ட கூலி வாங்கிக்கொண்டுக் கிளம்பியதும், சுந்திரமூர்த்தி கதவு சாத்தி மனைவியைப் பார்த்தார். அவர் முகத்தில் முறுவல்.

"பல் சுளுக்கிக்கப் போறது" என்று மனைவி கிண்டலடித்தாள். ஏமாந்து போகவில்லை என்று ஆனதும் இப்பொழுது தான் அவள் முகத்தில் லேசான மலர்ச்சி."அதுசரி, எப்படியும் வருவான் என்று எப்படி அவ்வளவு நிச்சயமா சொன்னீங்க?"

"வெரி ஈஸி" என்றார் சுந்திரமூர்த்தி. "அந்த தேக்குக்கட்டையே அவனுக்குக் கொடுக்கறதா இருந்தியே?.. அதோட விலை என்ன இருக்கும், தெரியுமா? தாராளமா ஆயிரத்துக்கு மேலே தேறும். அப்போதான் நான் பயந்தேன். எங்கே, அதை வாங்கிண்டு போயிடப்போறானோன்னு. எப்போ அது வேண்டாம்னு வெறும் இருநூறு கேட்டானோ, அப்போவே அவன் நேர்மையைக் காட்டிட்டான். அதான் நிச்சயம் அவன் வந்திடுவான்னு நம்பினேன்."

"இதை அப்பவே எங்கிடே சொல்லி, என்னையும் கவலைப்படாம, செய்திருக்கலாமில்லே" என்று அவர் மனைவி குறைப்பட்டுக் கொண்டாள்.

"என் யூகம் சரியான்னு தெரிஞ்சிக்க நானும் தான் காத்திருந்தேனே?..ஏதோ சரியாயிடுத்து..அவன் வரலைன்னு வைச்சிக்கோ, அதுக்கும் சேர்த்து நான் உங்கிட்டே வாங்கிக்கட்டிக்கணும்.. இந்த ஆம்பளைங்களுக்கு எந்தப்பக்கமும் மத்தளம் போல இடிதான்" என்றார் சுந்திரமூர்த்தி.

"ஓகோன்னானம், சொல்ல மாட்டீங்களா,பின்னே" என்றதோடு அவர் மனைவி நிறுத்திக்கொண்டாள்.

துதான் பஸவராஜ் சுந்திரமூர்த்தி குடும்பத்தின் ஆஸ்தான கார்ப்பெண்ட்டரான ஆரம்பக்கதை.

இப்பொழுது அண்ணா நகரில் அவர் கட்டிக்கொண்டிருக்கும் கட்டிடத்தின் முழு மரவேலையையும் அவன் தான் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

Monday, July 14, 2008

புதுமைப் பெண்களடி!....

"ன்ன நீங்க பீடி பிடிப்பீங்களா?" என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் வித்யா.

சற்றுமுன் முன் மூக்கைச் சுளித்தபடி வெளியே போய்விட்டு வீட்டுக்குள் நுழைந்த அவன் முகப்பக்கம் வந்து வந்து மோப்பம் பிடிக்கும் தோரணையில் அவள் ஆராய்ந்ததின் அர்த்தம் இப்பொழுதுதான் அவனுக்கு உறைத்தது. 'பீடி' என்று அவள் சொன்னது வேறு அவன் அந்தஸ்த்தை அதல பாதாளத்தில் தள்ளியது போலிருந்தது அவனுக்கு.

"பீடி இல்லை; சிகரெட் பழக்கம் உண்டு" என்று கூலாகச் சொன்னான் சுரேஷ்.

"பீடி, சிகரெட், சுருட்டு---எந்தச் சனியனா இருந்தா, என்ன?..எல்லாம் ஒன்றுதான்...ஏங்க உங்க புத்தி இப்படிப் போறது?" என்று விரோதத்துடன் அவனைப் பார்த்து முறைத்தாள் அவள்.

தனிப்பட்டத் தாக்குதலைத் தாங்காது நிலை குலைந்துப் போனான் சுரேஷ். 'கல்யாணம் ஆகி முழுசாக நாலுநாள் கூட ஆகவில்லை. அதற்குள் இவள்
அட்டகாசம் இவ்வளவா' என்று அவன் மனம் குமைந்தது. இதற்குப் பயந்து விடக்கூடாது என்று ஆணின் பெளருஷம் மனசில் மூர்க்கமாய்த் தலைதூக்கியது.

"எல்லாம் உங்கள் நல்லத்துக்குத்தான் சொல்றேன்.." என்று பவ்யமாய் சொன்னாள் வித்யா. அவள் பணிவு இன்னும் இவன் ஆத்திரத்தைக் கூட்டியது. "என்ன பொல்லாத நல்லதுக்கு?" என்று சீறினான்.

"புதுசா உங்களுக்குத் தெரியாததை என்ன சொல்லிடப்போறேன்?..'புகை பிடிக்கிறது, உடல் நலனுக்குக் கேடு' ன்னு நீங்க பிடிக்கற பீடி பாக்கெட் மேலேயே எழுதியிருக்கறது கண்ணுக்குப் படலயா?"

"பீடி இல்லே, சிகரெட்" என்று உறுமினான் சுரேஷ்.

"சரி. எதுவோ ஒண்ணு.. சிகரெட்ன்னா ஒண்ணும் உசத்தி ஆகிடப்போறதில்லே.. உங்க அந்தஸ்த்தும் அதுனாலே ஒண்ணும் உசந்திடப்போறதில்லே."

"சிகரெட் பிடிச்சா வியாதி வரும்னா, அப்போ சிகரெட் பிடிக்காதவனெல்லாம் எந்த வியாதியும் இல்லாம இருக்காங்கங்கறையா?"

"இதோ பாருங்க..இப்படி விதண்டாவாதம் செய்யறதை விட்டு விஷயத்தை புரிஞ்சிக்கங்க..வியாதியே இல்லாத, மனுஷரில்லை.. ஒத்துக்கறேன். அதுவா வர்றது ஒண்ணுன்னா, நாமே ஏன் வரவழைச்சிக்கணும்ங்கறது தான் என்னோட கேள்வி.. கான்ஸர் அது இதுவென்று பெரிய வியாதியெல்லாம் வந்து நானும், நாளைக்கு நமக்குப் பொறக்கப் போற குழந்தையும் கண்கலங்கி நிக்கணும்ங்கறீங்களா.. இந்த 'இன்ப்ளேஷன்' காலத்திலே
ஆஸ்பத்திரி சார்ஜெல்லாம் சகட்டுமேனிக்கு எகிறிப்போயிடுச்சு, தெரியுமில்லையா?.. நாலு காசு சம்பாதிக்கறைச்சேயே, பெரிய சிந்தனாவாதி மாதிரி இப்படி ஊதிகிட்டு ஆட்டம் போடற வேலையை விட்டுட்டு, எந்த வியாதி வருமோன்னு பயந்திண்டு இப்பவே அதுக்கும் சேர்த்து சம்பாதிக்கற வழியைப் பாருங்க.. அதுதான் புருஷ லட்சணம்..தெரிஞ்சிக்கங்க.."

"ஏய்! என்ன அதிகமாப் பேசறே?"--என்றுவேகமாக ஆரம்பித்தவன், வித்யாவின் வழுவழுப்பான வட்ட முகத்தின் அழகை நேர்கொண்டதும், சுருதி குறைந்து சுருண்டு போனான்.. அதிக அலட்டல் அவளது அசூயையைக் கூட்டும் என்பது தெளிவாகத் தெரிந்தது. இவளை சாகஸமாக சமாளிக்க வேண்டும் என்று கணக்கு போட்டவன்,"உங்க அப்பா உதடைப் பார்த்தா சிகரெட் பிடிக்கற மாதிரித் தெரியுதே?" என்று சுற்றி வளைத்து ஆரம்பித்தான்.

"என்ன உளர்றீங்க?.. இது என்ன உதடு ஜோஸ்யமா?"

"வித்யா! கூல்.. ரொம்ப எகிறாதே!.. அகத்தின் அழகு முகம் காட்டும் என்பாங்க.. அதே மாதிரி சிகரெட் சமாச்சாரத்திலும் ஒரு சீக்ரெட் இருக்கு..இழுக்க இழுக்க இன்பம்ன்னாலும், இறுதிலே வெள்ளை வெள்ளையா உதட்லே படியற நிகோடின் திட்டை மறைக்க முடியாது. தெரிஞ்சிக்கோ.."

"தெரியுதுலே..பின்னே ஏன் இதைக் கட்டிண்டு அழறீங்க.." என்று அவனை மடக்கியவள், எச்சரிக்கும் தொனியில் தொடர்ந்தாள்: "தாலி கட்டின பெண்டாட்டி வேணுமா, இல்லே இந்த சிகரெட்டோடையே வாழ்க்கை நடத்தலாமான்னு நீங்களே தீர்மானிசிக்கங்க.." என்று கோபத்துடன் சொல்லியபடியே கட்டிலிலிருந்து எழுந்தாள்.

"ப்ளீஸ்..ப்ளீஸ்.. வித்யா..ஒரு நிமிஷம்.." என்று பற்றியவனின் கரத்தை உதறினாள் அவள்.."எனக்கு உங்க பக்கத்லே வந்தாலே குமட்டிண்டு வர்றது..சீச்சீ..
என்ன நாத்தம்?..நாலு நாளிலே இந்த லட்சணம்.. போகப்போக நான் வாந்தி எடுத்தே செத்திடுவேன்.."

"பழகிடும், வித்யா!..என்ன, உங்க அம்மா பழகிக்கலையா?"

"அடச்சீ..இன்னொரு தடவை எங்கப்பாவை இழுத்துப் பேசாதீங்க..தெய்வம் அவர்..தெரிச்சிக்கங்க.. நாலு வருஷம் முன்னாடி ஆட்டோலே போகறச்சே, ஒரு ஆக்ஸிடெண்ட்..உதடு கிழிஞ்சு, தையல் போட்டு..அதெல்லாம் உங்ககிட்டே என்ன விளக்கம் வேண்டியிருக்கு.." என்று வித்யா அதிர்ந்தாள்.

"தீர்மானமா சொல்றேன்..என்னாலே இந்த நாத்தத்தைச் சகிச்சிக்க முடியாது.. சிகரெட்டா, நானான்னு நீங்களே தீர்மானிசிக்கங்க.."என்று படீரென்று கதவு சாத்திக் கொண்டு சென்றாள்.

சுரேஷ் குழம்பினான். சிகரெட்டைப் பிடிக்காமல் விட்டு விட முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. 'எப்படியாவது இவளைச் சரிப்படுத்த வேண்டும். நாற்றம் என்கிறாளே?..என்ன ஜென்மம் இவள்?..இந்த வசீகர வாசனையை அவளுக்கும் பழக்கப்படுத்துவதே ஒரே வழி; அதை ஒரு தரம் அனுபவித்து விட்டாளானால்,
எல்லாம் சரியாகப் போய்விடும்' என்று நினைத்தான்.

டுத்த நாளுக்கு அடுத்த நாள்.

ஆபிஸ் விட்டு வீடு திரும்பிய சுரேஷூக்கு வீட்டு வெளி ஹாலிலிலேயே ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.

வித்யா சோபாவில் அமர்ந்து எதிரில் உட்கார்ந்திருக்கும் யாருடனோ ரொம்ப சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தாள்.

உள்ளே நுழைந்த அவனைப் பார்த்து முகம் மலர்ந்தவள், அந்நிய ஆடவனை அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். "சுரேஷ்! இவர்தான் மிஸ்டர் ஸ்ரீகாந்த்!
நான் வேலை செஞ்ச கம்பெனிலே என்னோட ஒண்ணா ஒர்க் பண்ணினவர்..இவர் அவசரமா கம்பெனி வேலையா டூர் போகவேண்டியிருந்ததனாலே, நம்ப கல்யாணத்திற்கு கூட வரமுடியாம போயிடுத்து."

"ஐ..ஸீ.." என்று ஒரு இழுப்பு இழுத்த சுரேஷ், ஸ்ரீகாந்தின் வணக்கத்தை ஏற்றுக்கொண்டு, அவனை லேசாக ஆராய்ந்தான். கொழுகொழுவென்று கோயில் காளை
போல அரும்பு மீசையும் அதுவுமாக அம்சமாக இவனை விட அழகாக அவன் இருந்தது வேறு இவனுள் எரிச்சலை அதிகப்படுத்தியது. இருந்தாலும், வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல், "ஓகோ.." என்று ஒப்புக்குச் சொல்லி வைத்தான்.

வித்யாவே தொடர்ந்தாள்: "சுரேஷ்! ஸ்ரீகாந்த் வெரிகுட் ஜெண்டில்மேன்.. பழகறத்துக்கு ரொம்ப ரொம்ப இனிமையானவர்.. இவரது நடவடிக்கைகள் பலது என்னை ரொப்பவே இம்ப்ரஸ் பண்ணும்..இதில் விசேஷம் என்னன்னா, இவரும் என்னைப் போலவே. எனக்குப் பிடிக்காதது பலதும் இவருக்கும் பிடிக்காது.. குறிப்பா சொல்லணும்னா, ஒரு சின்ன ஒற்றுமையைச் சொல்லலாம்.." ஒரு நிமிஷம் நிறுத்தித் தொடர்ந்தாள் வித்யா...
"எங்க ரெண்டு பேருக்குமே சிகரெட் பிடிக்கறவங்களைக் கண்டா அறவே பிடிக்காது.... யாராவது பத்த வைச்சா, நாங்க ரெண்டு பேருமே எழுந்து தூரப் போயிடுவோம். அவ்வளவு ஒற்றுமை எங்க ரெண்டு பேருக்க்கும்.." என்று கலகலவென்று சிரித்தாள்.

சுரேஷூக்கு விளக்கெண்ணை குடித்தமாதிரி முகம் கோணிற்று. ஜிவுஜிவுவென்று சிவந்த முகத்தை மறைத்துக் கொள்ள, "ஒரு நிமிஷம்--முகம் அலம்பி வருகிறேன்" என்று உள்ளே போய்விட்டான்.

அவன் உள்ளே போய்விட்டதை நிச்சயப்படுத்திக் கொண்டு "என்ன ஸ்ரீகாந்த்! ஏதோ தொலைக்காட்சி சீரியல்லே நடிக்கப்போறதா சொன்னீங்க..ஷூட்டிங் ஆரம்பிச்சாசா?" என்றாள் வித்யா.

"அட்வான்ஸ் பணம் கூட வாங்கிட்டேன், வித்யா!..என்னை மதிச்சு ஆக்ட் பண்ண நீங்களும் ஒரு துண்டு வேடம் கொடுத்திட்டீங்க..இந்த அனுபவத்திலே நிஜ ஷூட்டிங்னு வரும் பொழுது ஜ்மாச்சிடமாட்டேனா?..இப்போ சொல்லுங்க..எப்படி என் ஆக்டிங்?"

"பிச்சு உதறிட்டீங்க..'செவசெவ'ன்னு மூஞ்சி போன போக்கைப் பார்த்தபோதே, மனுஷர் திருந்திடுவார்ன்னு எனக்குத் தெரிஞ்சுபோயிடுத்து.. தேங்ஸ் அ லாட் ஸ்ரீகாந்த்!"

"இப்படி ஒரு ஆக்ட் கொடுக்க சந்தர்ப்பம் கொடுத்ததுக்கு நான் தான் தேங்ஸ் சொல்லணும்.. என்னை எங்கே பேசவிட்டீங்க?...நீங்களே சமாளிச்சு தூள் கிளப்பிட்டீங்களே?"

"எல்லாம் சொந்த வயித்துவலி ஸ்ரீகாந்த்!..ஆரம்பத்திலேயே இப்படி ஒரே போடா போட்டு வழிக்குக் கொண்டுவர்லேன்னா, பின்னாடி 'அம்மா,அப்பா'ன்னு அவஸ்த்தைப்படறது யாரு?..இது ஹெல்த் சமாச்சாரமில்லையா?..ஒரு குடும்ப நலனே இதுலே ஊசலாடிக் கொண்டிருக்கு இல்லையா?..அதான் அப்படி ஒரு கடுமையான 'டோஸா' கொடுக்க வேண்டியதாயிடுத்து.. ....ஓ.கே..ஸீ..யூ..ஸ்ரீகாந்த்!..தேங்ஸ்.."

"நான் தான் சொல்லவேண்டும். எனக்கு ஒரு சான்ஸ் கொடுத்ததுக்கு, தேங்ஸ்."
எழுந்து செருப்பு மாட்டிக்கொண்டு வெளியே போகிறவனை நன்றியுடன் பார்த்தாள், வித்யா.

டுத்த நாள் காலையில் சுரேஷ் விரலுக்கிடையில் எதையோ இடுக்கியபடி, யோசித்தவாறு ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.

"ஆபிஸ் கிளம்பலையா?" என்று ஹாலுக்கு வந்த வித்யா, "என்னங்க, கையிலே? சாக்பீஸா?..எதுக்கு இது?" என்று ஆச்சரியம் காட்டினாள்.

"வித்யா! ரெண்டு நாளா சிகரெட்டைத் தொடவே இல்லே. அதுக்குப் பதிலாத்தான் இந்த சாக்பீஸ்.. சிகரெட்டைக் கையிலே வைச்சிருக்கிற மாதிரியே இருக்கு..எல்லாம் அந்த சனியனை மறக்கத்தான்..நீயே பாரேன்..போகப்போகச் சரியாயிடும்..நானும் ஸ்ரீகாந்த் மாதிரி, உனக்குப் பிடிச்ச மாதிரி..." என்று அதற்கு மேல் வார்த்தை வராமல் தடுமாறுபவனின் கற்றை நெற்றிக் குழலைக் கோதி விட்டாள், வித்யா. .

Wednesday, July 2, 2008

வல்லாங்கு வாழ்தும் என்று எண்ணாது....

ப்பொழுதும் திருநெல்வேலி பக்கம் போனாலோ, அல்லது அந்த ஊரை நினைத்தாலே எனக்கு ராமசாமி நினைவு வந்து விடும்.

அடுத்த வாரம் தென்காசிக்கு ஒருவேலையாகப் போகவேண்டியிருக்கிறது. அப்படியே குற்றாலத்தில் ஒருநாள் தங்கல். ரயில்வே கால அட்டவணைப் புத்தகத்தை முன்பதிவுக்காகப் புரட்டும் பொழுது, ராமசாமி ஞாபகத்திற்கு வந்து விட்டான்.

அவன் தந்தையை நினைக்கையிலேயே எவ்வளவு அற்புதமான மனிதர் என்று மனசு நெகிழ்கிறது. ஆண்டவன் படைப்பில் மானுடராய் இப்படிப்பட்ட ஒரு வாழ்வு வாழ்ந்த நல்ல மனிதர்களை நினைக்கும் பொழுது நாமும் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்று நெஞ்சில் சூளுரைத்துக் கொள்வதும் இயல்பான ஒரு செய்கையாகப் போய்விட்டது. ரொம்பவும் மோசமாகப் போய்விடாமல், இப்படிப்பட்ட நல்லவர்களின் வாழ்வுதான் நம்மை வழிநடத்தி காப்பாற்றுவதாகவும் நான் நம்புகிறேன்.

ராமசாமி கொழுத்த செல்வந்தவர்களின் குடும்பத்தில் பிறந்தவன். பரம்பரையே மிட்டா மிராசுதாரர்கள். செலவம் ஓரளவுக்கு மேல் சேர்ந்துவிட்டால், அதுவே மேலும் மேலும் தன் வளர்ச்சியைத் தானே பார்த்துக் கொள்ளும் இயல்புடையது போலும்.

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் மா,பலா,தென்னை மரங்கள் சூழ்ந்த மிகப்பெரிய பங்களா அவர்களது. அவர்களின் வீடு என்று சொல்லப்படும் மாளிகையின் வேலியை ஒட்டிய நீண்ட தெருவில் ஒரு வீட்டில் நாங்கள் குடியிருந்தோம். வரிசையாக பதினைந்துக்கு மேற்பட்ட பக்கத்துப் பக்கமாக ஒட்டிக்கட்டப்பட்ட வீடுகள்..அத்தனையும் ராமசாமி குடும்பத்துக்குச் சொந்தமானது.

ராமசாமி என் பள்ளித்தோழன் கூட. எங்களது பெரிய ஜமா. பத்து பதினைந்து பேர்கள் கொண்ட எங்கள் குழு, தினமும் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி பள்ளிக்கு போவதும், மாலையில் வீட்டுக்குத் திரும்புவதும் ராமசாமி வீட்டு வேனில் தான். அந்தப் பக்க சிறுகுழந்தைகள் ஆரம்ப பள்ளிக்குப் போவதற்காக இன்னும் இரண்டு வேன்களைத் த்னியாக ஏற்பாடு செய்திருந்தனர்.

பங்களாவை ஒட்டியவாறே சத்திரம் போல மிகப்பெரிய ஹாலுடன் ஒரு கட்டிடம் இருக்கும். காலையில் கூட்டமாக துண்டும் சோப்புப்பெட்டியுமாக அரட்டை அடித்தபடி தாமிரபரணியில் குளித்துவிட்டு வந்தோமானால், அவரவர் வீட்டிற்குச் சென்று உடைமாற்றிக் கொண்டு இந்த சத்திரம் போன்ற இடத்தில் குழுமிவிடுவோம்.

எல்லோருக்கும் காலை டிபன் அங்கேதான். எப்படியும் தினம் இருபது பேருக்கு மேல் தேறிவிடும். ராமசாமி, ராமசாமியின் தம்பி, அவன் அப்பா, அம்மா சூழ உட்கார்ந்து சாப்பிடுவோம். சமையல்கார சாம்புமாமா, பளீரென்று வெள்ளை வெளேர் வேஷ்டியும் மேல்துண்டுமாய் நெற்றி நிறைய வீபூதி-சந்தனப்பொட்டுமாய் ஆரோக்கியமாய் இருப்பார். ராஜ உபசாரம் தான். அவர் அவரவரைப் பேர் சொல்லி விளித்து, "தேங்காய்ச்சட்னி போடட்டுமா?..கொத்ஸூ கொஞ்சம் போட்டுக்கோயேன்"..என்று கேட்டுக்கேட்டு விசாரித்து அன்புடன் பரிமாறுவார். குண்டு கத்திரிக்காயைச் சுட்டு, கட்டித் தயிரில் மூழ்க வைத்துத் தாளித்துக் கொட்டி சட்னிமாதிரி பண்ணியிருப்பார் சாம்புமாமா. அந்த வயசில் எனக்கு ரொம்பவும் அது பிடிக்கும். கேட்டுக்கேட்டு வாங்கிப் போட்டுக்கொண்டு சாப்பிடுவேன்.

அந்த சத்திரம் போன்ற ஹாலைச் சுற்றி வந்தால், இடதுப்பக்கக் கோடியில் ஒரு பிள்ளையார் கோயிலை பங்களாக்குள்ளேயே கட்டியிருப்பார்கள்...அந்தப் பிள்ளையாருக்கு தினமும் உச்சிகால பூஜை முடிந்ததும், ஏழைஎளியோருக்கு இலைபோட்டு எளிமையான சாப்பாடு தினமும் உண்டு..கிட்டத்தட்ட மத்தியானம் இரண்டு மணிவரை நாலைந்து பந்திகள் நடக்கும். சாப்பிட்டு வயிறு நிறைந்தவர்கள் வாயார வாழ்த்தியது தான், அந்த குடும்பத்தையே எந்தக்குறையுமில்லாமல் வாழ வைத்தது போலும்!..ராமசாமியின் அப்பாவுக்கு அப்பா, மற்ற சொந்தக்கார உறவுகள் என்று எண்பதைத் தாண்டியவர்களே ஏகப்பட்ட பேர் அந்த குடும்ப்த்தில் வளைய வந்து கொண்டிருப்பர்...எல்லோரும் ஏதோ வேலையில் ஈடுபட்டு எங்கங்கோ போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருப்பார்கள்...பங்களா பூராவும் எந்நேரமும் கலகலப்புடன் 'ஜேஜே' என்ற கூட்டம் தான்! எல்லோரும் உரக்கப் பேசி உரக்க சிரித்துக் கொண்டிருப்பார்கள்.. ஏழைக் குழந்தைகளுக்கு இரவுப்பள்ளி உண்டு.. அவர்களுக்கு பாடம் படிக்க வகுப்பு போன்ற தோற்றத்துடன் கரும்பலகையும் மேஜை நாற்கலிகளுமாய் ஒரு பெரிய ஹால் உண்டு.. இரவு பள்ளி நடத்தவென்றே, டவுனிலிருந்து நாலைந்து ஆசிரியர்கள் வந்து போவார்கள்...அவர்கள் வருவது போவது எல்லாம் பங்களா காரில் தான்!..

ஒருநாள், "என்ன இப்படி எல்லோருக்கும் வாரி வழங்குகிறீர்கள்?" என்று யாரோ 'ஒருமாதிரி' கேட்டதற்கு, ராமசாமியின் அப்பா, பரமார்திகமாக மேலே ஆகாயம் நோக்கி கையுயர்த்தி, "எல்லாம் அவன் கொடுத்தது; தீரத்தீர இன்னும் கொடுத்திண்டே இருக்கான்..அவன் என்னிடம் கொடுப்பதைத்தான் நான் நாலுபேருக்குக் கொடுக்கிறேன்" என்று ரொம்ப சுருக்கமாகச் சொன்னார்... இன்னொருநாள் சாயந்திரம் இதே மாதிரி கேட்ட இன்னொருவரிடம், "என்ன புதுசா கேட்கறே?..என் தாத்தா..என் தாத்தாக்கு தாத்தா.. அவர்கள் செஞ்சதைத் தானே நானும் செய்யறேன்.. இந்தக் குடும்பமே, ஜஸ்ட் மிடில் மென்! எல்லாம் அவனுக்குச் சொந்தம்..எந்தக் காலத்திலே யார் செஞ்ச பூர்வபுண்ணியமோ, இந்த மேனேஜ்மெண்ட் பாக்கியம் எங்களுக்குக் கிடைச்சிருக்கு.." என்று 'பகபக'வென்று சிரித்துச் சொன்னது இன்னும் என் நினைவில் நிழலாடி சிலிர்ப்பேற்படுத்துகிறது..

பிற்காலத்தில் நான் படித்த இந்தப் புறப்பாடலும் நினைவிற்கு வருகிறது:

"நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்,
பல் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும்,
கடும்பின் கடும் பசி தீர யாழ நின்
நெடுங் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்,
இனோர்க்கு என்னாது, என்னோடும் சூழாது,
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி--மனை கிழவோயே!--
பழம் தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்து வேல் குமணன் நல்கிய வளனே."

(புறநானூறு--163)

வள்ளல் குமணனைப் பாடி பரிசில் கொணர்ந்த பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் பெருந்தகை, தன் மனையோட்குச் சொன்னது, இப்பாடல்.

கொடுத்தவன், வள்ளல்; பரிசில் பெற்ற புலவனும் அவனை விஞ்சிய வள்ளலாய் இருப்பான் போலிருக்கு என்று மனசு களியாட்டம் போடுகிறது..எப்படிப் பட்ட இனம், இந்த தமிழினம் என்று நெஞ்சு பூரிப்பால் விம்மித் தணிகிறது.. அடடா! அடடாவோ! என்ன அருமையான, வரிக்கு வரி பெருமிதத்தைப் பூசிக்கொண்ட வார்த்தைகளால், வார்த்தெடுக்கப்பட்ட கவிதை!...

"உன்னை விரும்பி வந்தோருக்கும்,
நீ விரும்பியோருக்கும், உத்தம குணம் கொண்ட
வழிவழிவந்த உற்றோருக்கும்,
பிறர்பசி காணப் பொறாது
குறிப்பாலாயே உணர்ந்து அவர்தம் பசி
போக்கியோர்க்கும்---
இவருக்குத் தான் என்று எண்ணாது
என்னையும் இது குறித்துக் கலக்காது
நீண்ட நாள் கவலையின்றி வாழ இது
நமக்காயிற்று என்றும் எண்ணாது
எல்லோருக்கும் அள்ளி அள்ளிக் கொடு--
என் மனைக்கிழத்தியே---இந்த
செல்வம்?...இது முதிரத்துச் சொந்தக்காரனான
நம் குமணன் நல்கியது, அல்லவா?..


கரன்ஸி நோட்டுகளை அடுப்புப்பற்ற வைத்தாலும் பத்து தலைமுறைக்குக் காணும் சொத்து என்று செட்டிநாட்டுப் பக்கம் பேச்சுக்குச் சொல்வார்கள். அப்படிப்பட்ட செல்வத்தைப் பெற்ற செல்வந்தர்கள் இரக்கத்தின் அடிப்படையிலும், தர்மம் செய்ய வேண்டுமென்கிற இயல்பாக வழிவழிவந்த குடும்ப குணநலனாகவும், வசதிகுறைந்த வறியோருக்குக் கொடுப்பதை தானம் என்பார்கள். வரும் வருமானத்தில் ஒரு சதம் தானத்திற்கு ஒதுக்கி வைப்பதை சில குடும்பங்களில் ஒரு பழக்கமாகவும் கொண்டுள்ளார்கள்.

ஆனால், தானே வறிய நிலையில் இருக்கையில், இன்னொருவரிடம் தன் சொந்த திறமை காட்டிப்பெற்ற பரிசிலை, எல்லோருக்கும் வாரி வழங்குவது என்பது நினைத்துப் பார்க்கவே பெரிய விஷயமாகப் படுகிறது. அதுவும், "வல்லாங்கு வாழ்வோம் என்று எண்ணாது எல்லோருக்கும் கொடுத்துவிடு" என்று சொன்ன பெருஞ்சித்திரனாரின் குணமேன்மை நினைத்து நினைத்து மகிழத்தக்கது. 'இருப்பது தீர்ந்துவிட்டால், இருக்கவே இருக்கிறான், புலவர்களைக் காக்கும் புரவலன் குமணன்! பாடிப் பரிசில் பெறலாம்; பெறுவது என்பது பலருக்குக் கொடுத்து மகிழவே' என்கிற புலவர் பெருமானின் செம்மாந்த பண்புநலனும் ஊடும் பாவுமாய் பாட்டில் பரவியிருப்பதும் உன்னிப்பாய் கவனித்தால் புலப்படும்.
Related Posts with Thumbnails