Saturday, July 18, 2009

'பசித்த மானுடம்' படைத்த கரிச்சான் குஞ்சு

து 1959-- ம் ஆண்டு வாக்கில் இருக்கலாம். சரியாக நினைவில்லை என்பதால் குத்து மதிப்பாகச் சொல்கிறேன்.

நான் சேலத்தில் இருந்தேன். ஏறக்குறைய பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் காலம். வின்சென்ட் பகுதியில் சேலம் கல்லூரிக்கு எதிர்தாற்போல் இருக்கும் மாவட்ட நூலகம். வாரத்தில் சனி, ஞாயிறுகளில் தவறாமல் நூலக விஜயம் இருக்கும். இரண்டு மணி நேரம் கிளறி, முத்து போல இரண்டு புத்தகங்களை வீட்டுப் படிப்புக்காக எடுத்து வருவேன். அப்படி எடுத்து வந்த புத்தகத்தில் ஒரு புத்தகம் இன்றும் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் கழித்தும் இன்னும் மறக்காமல் மனத்தில் பசுமையாக நினைவிலிருக்கிறது.


புத்தகத்தின் பெயர்: "பசித்த மானுடம்". பெயர் விநோதம் காரணமாகவோ என்னவோ, அந்த புதினத்தை எழுதியவரின் பெயரான் "கரிச்சான் குஞ்சு" எனபதையும் மறக்கவில்லை.


பின்னால் தான் தெரியும். மணிக்கொடி காலத்தின் முடிசூடா சிறுகதை மன்னன் கு.பா.ராஜகோபாலன் 'கரிச்சான்' என்கிற பெயரிலும் எழுதியதினால், அவரின் அந்தியந்த சிஷ்யரான நாராயணஸ்வாமி என்பவர், தனக்கு புனைப்பெயராக 'கரிச்சான் குஞ்சு' என்பதை வரித்துக் கொண்டார் என்பது.


பெரிய ஜமா. கு.ப.ரா., கரிச்சான் குஞ்சு, தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கடராம் என்று ரசனையுடன் வாழ்க்கையை எழுத்தில் வடித்தத் திருக்கூட்டம். இலக்கிய ரசனையில், அந்த ரசனையில் விளைந்த விமர்சனங்களில் சொக்கிப் போய் இறுகிப் போன நண்பர்களின் வட்டம்.


பின்னால் 'காலச்சுவடு' பதிப்பகம், 'பசித்த மானுட'த்தைப் புத்தகமாகப் பிரிசுரித்திருக்கிறது. கிராமத்து ஆசிரியர் ஒருவரால் வளர்க்கப்படும் அனாதைச் சிறுவன் ஒருவன், வாழ்ந்த வாழ்க்கை கொடுத்த பரிசாய் பிற்காலத்தில் குறுநோய் சுமந்து, பிச்சைக்காரனாய், பின்னால் பெரிய மகானாய்ப் போனதுவும், எந்தப் பொறுப்புமில்லாமல் பொறுக்கியாய் சிறுவயதில் திரிந்து பிற்காலத்தில் பணக்காரனான இன்னொருவன் வாழ்ந்த வாழ்க்கையின் வெறுமையில் இந்த மகானைச் சந்திப்பதுமாய்----


வாழ்க்கையின் வேகமானப் புரட்டிப் போடுதலின், அதன் தென்றலிலும்--சூறாவளியிலும் சிக்கிக்கொண்ட வெவ்வேறு மனிதர்கள் பெற்ற பரிசையும், பாடத்தையும் சொல்லும் புதினம் 'பசித்த மானுடம்'.


தஞ்சைத்தரணியின் நன்னிலம் வட்ட சேதினாபுரத்தில் ஜனித்தவர் 'கரிச்சான் குஞ்சு' என்று பிற்காலத்தில் புனைப்பெயர் பூண்ட நாராயணஸ்வாமி அவர்கள். தமிழிலும், சமஸ்கிரத்திலும், இசையிலும் ஆழ்ந்த புலமை கொண்ட இவர், ம்ன்னார்குடியில் பள்ளி ஆசிரியராய் பணிபுரிந்திருக்கிறார். பிற்காலத்தில் நான் அரசுப் பணியாற்றுகையில் அருமை நண்பர் என்று நான் உணர்ந்த சாம்பசிவம், "மன்னார்குடியில் நான் படித்தபொழுது நாராயணஸ்வாமி சார் தான் எனக்கு தமிழ் வாத்தியார்; மிகப் பிரமாதமாக பாடம் எடுப்பார்--" என்று சொன்ன போது, எனக்கு லேசாகப் பொறாமையாய்க் கூட இருந்தது.


'தன்னிடம் புதைந்திருக்கும் அறிவுச் செல்வத்தை படாடோபமாய் வெளிகாட்டிக் கொள்ளாமல் இயல்பாய் இருப்பது மிகவும் சிரமமானக் காரியம்; அந்த சிறப்பு வெகு இயல்பாய் நாராயணஸ்வாமி சாருக்கு சாத்தியப்பட்டிருக்கிறது' என்று இவரைக் குறித்து சொல்லி வியப்பாராம் எழுத்தாளர் ஆதவன். எங்கேயோ படித்திருக்கிறேன்.


யோசித்துப் பார்த்தால், இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையின் மகத்துவம் புரிகிறது. ஆமாம், ஞானம் என்பது செறுக்காகித் தன்னையே பிடிசாம்பலாய்ச் சாப்பிட்டு விடாமல், அந்த வேள்வியை ஏழ்மையிலும் புன்னகையுடன் எதிர்கொண்டு, தனது மேதமையின் ஸ்மரணையே அற்று ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார், இந்தப் பெரியவர்.


எப்படி?....


"விற்றுப் பிழைப்பது தான் வாழ்க்கை-- இங்கு
விற்றுப் பிழைப்பதன்றி வேறில்லை;
கற்றுப் படித்தது ஏன்?.. வாழ்க்கை-- என்றும்
விற்றுப் பிழைப்பதன்றி வேறில்லை!"



---என்கிற கவிதை வரிகளை சவுக்கால் அடிக்கிற மாதிரி!...


"What is true and relavent in Indian Philosophy?" --- என்று ஓர் ஆகச்சிறந்த நூல்; அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யா எழுதியது. அழகாக இந்தத் தத்துவ நூலை மொழிபெயர்த்திருப்பவர் கரிச்சான் குஞ்சு அவர்கள்; 'இவரால் தான் இது முடியும்' என்கிற மாதிரி.


தி.ஜானகிராமன் அவர்களின் மறைவுக்குப் பின் அவருக்காக நினைவு மலரொன்று "யாத்ரா" இதழ் வெளியிட்டது. தி.ஜா. வுடன் பழகிய எத்தனையோ பேர், இதில் அவரைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்! அத்தனையிலும் நடுவே நட்பின் ஆழத்தையும், அதன் அந்நியோன்யத்தையும் அழகுபடச் சொல்லும் கரிச்சான் குஞ்சுவின் கட்டுரை, அவரின் மன வெளிப்பாடாய், வைரம் போல் ஜொலிக்கும்!..


எனக்கும் கும்மோணம் தான். எப்போதாவது கும்பகோணம் செல்கையில், டபீர்தெரு நுழைய நேரிடுகையில், கரிச்சான் குஞ்சு நினைவு மேலோங்கி நெஞ்சைக் கனக்கச் செய்யும்.

19 comments:

கபீரன்பன் said...

பல அரிய எழுத்தாளர்களின் வாழ்க்கையை சுவைப்படக் கூறுவது தங்களுக்கு கைவந்த கலை.

//அந்த வேள்வியை ஏழ்மையிலும் புன்னகையுடன் எதிர்கொண்டு, தனது மேதமையின் ஸ்மரணையே அற்று ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார், இந்தப் பெரியவர்//

எளிமையே சான்றோர்களின் சிறப்பு. அத்தகைய பெரியவர்களுக்கு வந்தனம்.
நல்லதொரு நினைவுகூரலுக்கு நன்றி

கிருஷ்ணமூர்த்தி said...

நினைவுகளை மிக அழகாகச் செதுக்கியிருக்கிறீர்கள். சின்ன வயதிலேயே படிக்கும் ஆசையை,தி.ஜா, கல்கி,போன்றவர்கள் ஏற்படுத்தினார்கள் என்றால், மற்ற எழுத்தாளர்கள், இன்றைக்கு மறக்கடிக்கப் பட்டவர்கள், அதை வேள்வித்தீயில் ஊற்றும் நெய்யாகவே இருந்து, வாசிப்பு என்பதே தவம் என்ற நிலைக்கு வர உதவியிருக்கிறார்கள்.

கரிச்சான் குஞ்சு என்ற நாராயணஸ்வாமியை, நினைவுபடுத்திக் கொள்வதில், எனக்கும் வாசிப்பு அனுபவமாகிற தவத்தைக் கண் முன்னே நிறுத்தி இருக்கிறீர்கள், நன்றி!

RV said...

Excellent writeup! Please see my post on your post as well...

http://koottanchoru.wordpress.com/2009/07/19/கரிச்சான்-குஞ்சு-பற்றி-ஜ/

RV said...

Excellent writeup! Please see my post on your post as well...

http://koottanchoru.wordpress.com/2009/07/19/கரிச்சான்-குஞ்சு-பற்றி-ஜ/

கவிநயா said...

அருமையான பகிர்தல்.

//'தன்னிடம் புதைந்திருக்கும் அறிவுச் செல்வத்தை படோபமாய் வெளிகாட்டிக் கொள்ளாமல் இயல்பாய் இருப்பது மிகவும் சிரமமானக் காரியம்; அந்த சிறப்பு வெகு இயல்பாய் நாராயணஸ்வாமி சாருக்கு சாத்தியப்பட்டிருக்கிறது' என்று இவரைக் குறித்து சொல்லி வியப்பாராம் எழுத்தாளர் ஆதவன்.//

இதைப் படிக்கையில் ஜீவா 'விநயம்' குறித்து எழுதிய பதிவு நினைவு வந்தது.

ஜீவி said...

கபீரன்ப! வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

பாச மலர் said...

எஸ். ராவின் கதாவிலாசத்தில் இவர் பற்றிய குறிப்பு படித்திருகிறேன்..உங்கள் அறிமுகம் இன்னும் அதிகமாய் அறிய வைத்தது..

Natrajan said...

பாலகுமாரனுடைய இரும்பு குதிரை நாவலில் ‘மன்னார்குடி நாராயாணசாமி என்ற பாத்திரம், கரிச்சானின் நினைவில் கொண்டு உருவாக்கப்பட்டது. நாராயணசாமி வாத்தியாரையும் (இகு) கரிச்சானையும் பிரித்துப்பார்க்கமுடியாது

ஜீவி said...

பாச மலர் said...
//எஸ். ராவின் கதாவிலாசத்தில் இவர் பற்றிய குறிப்பு படித்திருகிறேன்..உங்கள் அறிமுகம் இன்னும் அதிகமாய் அறிய வைத்தது..//

அப்படியா?.. நன்றி, பாசமலர்!

ஜீவி said...

வருகைக்கும், மனநெகிழ்வான வாழ்த்துக்கும் மிக்க நன்றி, கிருஷ்ணமுர்த்தி, சார்!

ஜீவி said...

RV said...
//Excellent writeup! Please see my post on your post as well...

http://koottanchoru.wordpress.com/2009/07/19/கரிச்சான்-குஞ்சு-பற்றி-ஜ///

தனியாக முயற்சி எடுத்தச் செய்த உங்கள் அறிமுகத்திற்கும், அன்பிற்கும்
ஆர்வத்திற்கும் மிக்க நன்றி, RV சார்! கூட்டாஞ்சோறு அற்புதமான தளம்; எவ்வளவு ஆர்வத்துடன் உழைத்திருக்கிறீர்கள் என்று பிரமிக்கிறேன்! இனி தவறாமல் படிப்பேன்.. வாழ்த்துக்கள், RV!

ஜீவி said...

கவிநயா said...
அருமையான பகிர்தல்.

//'தன்னிடம் புதைந்திருக்கும் அறிவுச் செல்வத்தை படோபமாய் வெளிகாட்டிக் கொள்ளாமல் இயல்பாய் இருப்பது மிகவும் சிரமமானக் காரியம்; அந்த சிறப்பு வெகு இயல்பாய் நாராயணஸ்வாமி சாருக்கு சாத்தியப்பட்டிருக்கிறது' என்று இவரைக் குறித்து சொல்லி வியப்பாராம் எழுத்தாளர் ஆதவன்.//

//இதைப் படிக்கையில் ஜீவா 'விநயம்' குறித்து எழுதிய பதிவு நினைவு வந்தது.//

ஓ! 'விநயம்'-- ஜீவா வெகு விநயமாகப் போட்ட பதிவல்லவா, அது?.. உங்களது இந்தப் பார்வை கூட அந்த வார்த்தைக்கு தனி அர்த்தத்தைச் சேர்த்திருக்கிறது!
மிக்க நன்றி, கவிநயா!

ஜீவி said...

Natrajan said...
//பாலகுமாரனுடைய இரும்பு குதிரை நாவலில் ‘மன்னார்குடி நாராயாணசாமி என்ற பாத்திரம், கரிச்சானின் நினைவில் கொண்டு உருவாக்கப்பட்டது. நாராயணசாமி வாத்தியாரையும் (இகு) கரிச்சானையும் பிரித்துப்பார்க்கமுடியாது//

ஒருவருடன் நெருங்கிப் பழகியிருந்தால் தான் அவருடைய குணநலன்களின் வார்ப்பாய், கதாபாத்திரங்களை அச்சு அசலாக அவரைப் போலவே படைக்க முடியும் என்பார்கள்.
அப்படிப்பார்த்தால், அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு பாலகுமாரன் அவர்களுக்கு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை.

நிகழ்காலத்தில்... said...

அன்பு நண்பரே
சுவாரசிய வலைப்பதிவு விருது தங்களுக்கு அன்புடன் வழங்கியிருக்கிறேன்.
http://arivhedeivam.blogspot.com/2009/07/blog-post_23.html#comments

ஜீவி said...

நிகழ்காலத்தில்... said...
//அன்பு நண்பரே
சுவாரசிய வலைப்பதிவு விருது தங்களுக்கு அன்புடன் வழங்கியிருக்கிறேன்.//

அன்பு நண்பரே,
தங்கள் உணர்விற்கும், அன்பிற்கும்
மிக்க நன்றி..
மிக்க மரியாதையுடன்,
அன்புடன்,
ஜீவி

கிருத்திகா said...

என் கணவர் கூட அவர் வேலை பார்த்த பள்ளியில் தான் படித்தாராம்.. நேஷனல் ஸ்கூல் மன்னார்குடி... அப்போது அவர் சீனியர் பதவிக்கு சென்று விட்டதால் பெரிய வகுப்புக்களுக்கு மட்டும் தான் வகுப்பு எடுப்பாராம்.. ஆனாலும் இவரது வகுப்பிற்கும் எப்போதாவது வருவதுண்டாம்.. மிகவும் சிலாகித்துச்சொல்லுவார். கேட்கவே ரம்யமாக இருக்கவும். அவரது நீல உமத்தை என்ற கதையை பற்றி அடிக்கடி கூறுவார்.. எனக்கு இன்னும் வாசிக்க கிடைக்கவில்லை...முடிந்தால் அது பற்றி எழுதுங்கள் ஜீவி...(என் கணவருக்கு பெயரைத்தவிர கதை ஞாபகம் இல்லை!!)

ஜீவி said...

தகவல்களுக்கு மிக்க நன்றி, கிருத்திகா!
அடடா! திரு. நாராயணஸ்வாமி சாருடன் பழகும் பாக்கியம் தங்கள் கணவருக்கு கிடைத்தது என்பதை அறிய எனக்கும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அவர் சமஸ்கிரதத்தில் மிகவும் பாண்டித்யம் மிக்கவராய்த் திகழ்தார். தி.ஜானகிராமனின் அரிய நண்பர்.
நிச்சயம் "நீல ஊமத்தை" பற்றி தகவல் சொல்கிறேன். முடிந்தால் அந்தக் கதையையே உங்களிடம் சேர்ப்பிக்கிறேன். தங்கள் கணவரிடம் சொல்லுங்கள்.
மிக்க நன்றி, கிருத்திகா!

கவிநயா said...

ஐயா, உங்களுக்கு ஒரு விருது
இங்கே காத்திருக்கிறது.

ஜீவி said...

கவிநயா said...

//ஐயா, உங்களுக்கு ஒரு விருது
இங்கே காத்திருக்கிறது.//

நிரம்ப நன்றி, கவிநயா!

நமது அன்பு நண்பர் "நிகழ்காலத்தில்"
(அறிவே தெய்வம்) அவர்களும்,
'சுவாரஸ்ய வலைப்பதிவு' விருது வழங்கியிருக்கிறார்.

இருவருக்கும் மனமார்ந்த நன்றி.

Related Posts with Thumbnails