Monday, July 27, 2009

"யாத்ரா" இதழ்கள் தொகுப்பு

தேடிப்போன மூலிகை காலில் சிக்கிக் கொண்ட கதை தான்.

எனது எழுத்தாளர்கள் பகுதியில் கரிச்சான்குஞ்சு சாரைப் பற்றிய கட்டுரையில் அவரைப் பற்றி எழுதும் போது, "யாத்ரா" இதழ் தி.ஜானகிராமனின் மறைவுக்குப் பின் அவருக்கு ஒரு நினைவுமலர் வெளியிட்டதென்றும் அதில் கரிச்சான் குஞ்சுவின் கட்டுரை நட்பின் அந்நியோன்யத்தை, அதன் ஆழத்தை வெளிப் படுத்துவதாய் இருந்ததென்றும் எழுதியிருந்தேனல்லவா?..

என்றைக்கோ படித்து, தேசலாக நினைவில் நின்ற கரிச்சான் குஞ்சுவின் அந்தக் கட்டுரையை மறுபடியும் படிக்கும் ஓர் அனுபவமும், பழைய நினைவுகளில் மனம் ஒன்றிப்போய் விக்கித்து நிற்கும் ஒரு நிலையும் நேற்று ஏற்பட்டது.

கரிச்சான் குஞ்சு மட்டுமில்லை.. தி.ஜா.வுடன் நெருங்கிப் பழகிய அவருக்கு நெருக்கமானவர்களில் நிறையப்பேர் அவரின் சிறப்பியல்புகளை நினைவு கூர்ந்து எழுதியிருக்கிறார்கள். அத்தனையையும் ஒன்று சேர ஒரே நேரத்தில் இப்பொழுது படிப்பது மனசுக்கிசைந்த புது அனுபவத்தைத் தந்தது.


மரியாதைக்குரிய வெங்கட்சாமிநாதனுக்கு தமிழ் இலக்கிய உலகம் 'ஸ்பெஷல்' நன்றியைச் சொல்ல வேண்டும். அவர் பின்புலமாய் இருந்து சாதித்த "யாத்ரா" இதழ்கள் எவ்வளவு கம்பீரத்துடன் வந்திருக்கின்றன என்பதை நினைத்துப் பார்க்கையிலேயே, இப்படி ஒரு பத்திரிகை இன்றைக்குக்கூட சாத்தியமா என்கிற வியப்பு ஏற்படுகிறது. அந்த வியப்பின் ஊடே, இன்றைய தேதிக்கு தமிழகப் பத்திரிகைகள் குறித்து பெருத்த ஏமாற்றமே நெஞ்சில் கவிகின்றது.

1978-ல் பிறவி எடுத்த "யாத்ரா", சுமார் ஆறுவருட காலம் அட்டகாசமாய் வெளிவந்திருக்கிறது.. வானத்துக்கூரையின் கீழ் நிகழும் எது பற்றியும் "யாத்ரா" எழுதியது. கலையின் எந்த விகசிப்பையும் அது விட்டுவைக்க வில்லை. நாடகம், தெருக்கூத்து, பாவைக்கூத்து,கிராமியக் கலைகள், கணியான் ஆட்டம், மெலட்டூர் மேளா என்று எத்தனை எத்தனை தலைப்புக்களில் எவ்வளவு அரிய தகவல்கள் ?..

தி.ஜா.வைப் போலவேத்தான் தி.ஜா. வாசகர்களும். தேர்ந்த ரசனை உள்ளவர்கள். அவர்களுக்கு தி.ஜா.பற்றிய இந்த நினைவுகள் மிகுந்த நெகிழ்வேற்படுத்தும். "யாத்ரா" தொகுப்பில் நான் படித்த சில உணர்வு பூர்வமான தகவல்களை--முழுதும் எழுத முடியாததை உணரும் நேரத்தில்--அந்த கடலிலிருந்து சில துளிகள்.. கடலே கைவசப்படும் பொழுது, முழுப் புத்தகமே உங்கள் வசப்படுகிற பொழுது அல்லது வாசிக்கக் கிடைக்கையில், தவற விட்டுவிடாதீர்கள், ப்ரிய நண்பர்களே!...

முதலில், கரிச்சான் குஞ்சு சார்....

அன்று விடியற்காலையில் எங்களுக்கு நேர்ந்த ஆனுபவம் ஒன்று மறக்க முடியாதது. நாங்கள் திருநாகேஸ்வரம் அருகே சென்றபோது குமபகோணம் போகும் ரயில் வரும் நேரம். ஆகவே அவசரமாக ஸ்டேஷனுக்குப் போவதற்காக--குறுக்கே ஸ்டேஷனுக்கு எதிரே சாலையிலிருந்து கிழக்கே இறங்கினோம். இடையில் ஒரு வடிகால் நீர்த்தேக்கம். அவசரத்தில் இருவரும் அதைக்கடக்க இறங்கினோம். ஜானகிராமன் நாலடி தள்ளி--நான் இப்புறம். ஆழமே இல்லை. முழங்காலளவு இருக்கும். அவ்வளவு தான். ஆனால் நான்
இறங்கிய இடத்தில்-உளை சேறு. என் கால்கள் புதைந்து கீழே, கீழே.. போய்க்கொண்டே இருந்தேன். இடுப்பளவு புதையுண்டு விட்டேன். மேலும் உள்ளே இறங்குகின்றன கால்கள். இதற்குள் அவன் தாண்டி விட்டிருந்தான். நான் வாய்விட்டுக் கத்தக்கூட முடியாமல் மரண பயத்தால் ஸப்த நாடியும் ஒடுங்கி எப்படியோ ஆகிவிட்டிருந்தேன். இறந்து விட்டது போலவே தேசலாக ஓர் நினைவு ஓடியது ஞாபகம் இருக்கிறது. மனம் என்பதே மாய்ந்து விட்டது. மறுகணம் ஜானகிராமனையோ- மற்ற எதையுமோ நினைவில்லை எனக்கு.

சில நிமிஷங்களுக்குப் பின் நான் கரையில், ஈரம்,சேறு தோய்ந்த நிலையில் பிரக்ஞை பெற்றபோது, நாலைந்து பேர் என்னைச் சூழ்ந்திருந்தனர்.
ஒரு கயிற்றைப் பற்றிக் கொண்டிருந்தேன். ஜானகிராமன் கலக்கத்துடன் என்மீது படிந்திருந்த சேற்றை வழித்து எறிந்துகொண்டே--கண்ணீர் ததும்ப ஆறுதல் கூறிக் கொண்டிருந்தான். அவன், "ஐயோ, ஐயோ" என்று மிகவும் உரத்த குரலில் கத்தினானாம். சிலர் ஓடிவந்து என் தோள்களுக்கடியில் கயிறு போட்டுத் தூக்கினார்களாம்.

"அம்மா வந்தாள்" நாவலில் வரும் பாடசாலை - அதை ஏற்படுத்திய அம்மாள் - அங்கு ஒரு பெண் இருந்தது முதலிய அம்ஸங்கள் நிஜமானவை. ஜானகியின் அண்ணா அந்தப் பாடசாலையில் வேதக்கல்வி முற்றும் கற்றதும் உண்மை. ஆனால் அவன் செய்யும் கதைக்கும் - இந்த மூலங்களுக்கும் துளிக்கூட சம்பந்தமில்லை....


அடுத்து எம்.வி. வெங்கட்ராம்:

அடைமழையாகப் பிடித்துக் கொண்டிருத்து. தெருக்களில் அதிகப்படியாகவோ அநாவசியமாகவோ நடமாட்டம் இல்லை. ஆகையால் நான் தனியாக வெளியே போய்விடுவேன் என்ற கவலை இல்லாமல் ஜானகிராமன் ஆபீசுக்குப் போகலானார் படிப்பதற்கு எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. எழுத வேண்டும் என்று தோன்றவில்லை.

."நீங்கள் ஏன் எழுத முயற்சி செய்யக்கூடாது?.. எழுத்தில் concentrate செய்தால், அது உங்களுக்கு ஒரு நல்ல distraction ஆக இருக்குமே?" என்றார் ஜானகிராமன் ஒரு நாள்.

"நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. என் மனத்தில் நடப்பதை டயரி போல் எழுதி வை என்று பிச்சமூர்த்தியும் சொன்னார். அது பிரசுரம் ஆகாவிட்டாலும் யாருக்காவது பயன்படும் என்றார். ஆனால், எழுதுவதற்கான அமைதியை எனக்கு மனம் தரவில்லை.

"மனக்குழப்பம் என்கிறீர்கள். உங்கள் அனுபவங்களைக் கதை போல் தெளிவாய்ச் சொல்கிறீர்களே, சொலவது போலவே நீங்கள் ஏன் எழுதக் கூடாது?"

"பேசுவது வேறு, எழுதுவது வேறு. எழுதுவதற்கு மிக அதிகமான concentration தேவைப்படுகிறது. எழுத உட்காராதபடி மனசில் குளறுபடி நடந்தபடி இருக்கிறதே?"

"concentration ஆல் அந்தக் குளறுபடியை அடக்க முயலுங்கள் என்று தான் நான் சொல்கிறேன்"

என்னுடைய சங்கடத்தை அவருக்குப் புரியும்படி சொல்ல என்னால் முடியவில்லை என்று தோன்றியது. "என் நிலைமை எனக்கே விநோதமாக இருக்கிறது. மனசுக்குள் நான் பைத்தியம்; வெளியே சித்த சுவாதீனம் உள்ளவன் போல் நிர்வாகம் செய்கிறேன். இது எப்படிச் சாத்தியம் ஆகிறது என்று எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறது. எழுத்து மனத்தைப் பொறுத்த விஷயம் ஆயிற்றே!"

"இவ்வளவு தெளிவாகப் பேசுகிறீர்கள்; இந்த உறுதியோடு ஏன் எழுதக்கூடாது?.. நீங்களும் நானும் clarity யோடு எழுத்க் கூடியவர்கள். concentration கலையில் முதல் தேவை என்பதைத் தெரிந்து எழுதுகிறவர்கள். நாம் இருவரும் சேர்ந்து எத்தனையோ திட்டம் போட்டோம். இப்போதும் நாம் அதைச் செய்யமுடியும்."
பல ஆண்டுகளுக்கு முன் நாங்கள் கண்ட கனவுகளின் எதிரொலியாக அவர் பேசினார். கு.ப.ரா.வைப் போல் ஜானகிராமனுக்கும் சன்னக் குரல். இருவருமே சற்றே நாசி வழியாகப் பேசுவதைப் போல இருக்கும். இருவருமே குரலைத் தூக்கி பேசியதை நான் கேட்டதில்லை. ஆனால், இருவருடைய பேச்சிலும் மென்மை இருந்தாலும் அழுத்தம் இருக்கும்."...............

என்று தொடர்ந்து எழுதுகிற எம்.வி. வெங்கட்ராம், தனது இரங்கல் கட்டுரையை இப்படி முடிக்கிறார்:

இந்த நண்பர் இப்போது எனக்கு இல்லை என்றாகிவிட்டார். என்னைப் பற்றி அவர் எழுதுவார் என்று நான் எண்ணியிருந்தேன். கெட்டிக்காரர். என்னைவிட இளையவர். என்னை முந்திக் கொண்டுவிட்டார்.

அதற்கடுத்து தஞ்சை பிரகாஷ்:


தஞ்சாவூர் வரும் போதெல்லாம் சொல்லியனுப்புவார். நான் போய்ச் சந்திப்பேன். "இதெப்படி தஞ்சாவூர் மட்டும் அப்படியே இருக்கு?" என்று வியப்பார். கடைசியாய் மரணத்திற்குச் சில மாதங்களுக்கு முன்பும் தஞ்சாவூர் வந்திருந்த போதும், "என்ன? தஞ்சாவூர் இப்படி மாறிப் போச்சு?" என்று வியந்தார். வெண்ணாற்றங்கரை போவோம்.

'ஹோ'வென்று பாயும் ஜலப்ரவாகத்தைப் பார்த்தபடி நிற்பார். திருவையாறு போவோம். தியாகையர் சமாதியின் மணல்வெளியில் நிற்பார். மேலவீதி காமாட்சியம்மன் கோவில் சந்நதியில் நிற்போம். இடிந்த மராட்டிய அரண்மனை இடிசல் சுவரில் சரிந்து வளர்ந்திருக்கும் அரசு பூத்திருக்கிறதைக் காட்டுவார். பெரிய கோவில் நிலா முற்றத்தில் காலத்தை வென்றக் காற்றை அண்ணாந்து வியப்பார். சந்தனாதித் தைலம் மணம் வீசும் சரஸ்வதி மஹால் பழஞ்சுவடிகளிடையே நின்று தெலுங்கு சுலோகத்தை என்னை வாசிக்கச் சொல்லிக் கேட்பார். தஞ்சாவூர் பாணி சீரங்கத்துப் படம் எழுதும் ராஜூவிடம் போய் அவன் ரேக்கு ஒட்டுவதைப் பார்த்து நிற்பார்.

கொண்டி ராஜபாளையம், சுவாமிமலை, மன்னார்குடி எல்லாம் போவோம். எங்கும் எதிலும் வியப்புத் தான். குழந்தை சந்தோஷம் தான். ஆச்சரியம் தான்; ஜானகிராமனுக்கு எழுத்து மூணாம் பட்சந்தான்; வாழ்க்கை தான் அவரது ருசி! மழை பெய்து கொண்டிருக்கும்; வராந்தாவில் நின்று பார்த்துக்கொண்டிருப்பார். வியப்பாய் மகிழ்ந்து கொண்டிருப்பது அருகிலிருந்தால் புரியும்.

கட்டுரை மேலும் தொடர்கிறது: பாவம் ஜானகிராமன். வாழ்க்கையில் நிறைய ஏமாந்தவரும் கூட. பத்திரிகையாசிரியர்கள், பதிப்பாளர்கள் பலரும் நிறைய அவரை ஏமாற்றியிருக்கிறார்கள். பதிப்பகங்கள் அவரை மிகவும் அழகாய் ஒதுக்கின. எல்லாருக்கும் நல்லவராக அவர் இருக்க முனைந்ததின் பலன் அது. அவரது "மோகமுள்" நாவல் அச்சாகி, பலவருடம் வெளியே வராமல் அரசு அலுவலகக் கட்டிடம் ஒன்றில் அடைந்து கிடந்தது.

ஆனாலும் ஜானகிராமன் சாதனை ஒண்ணு இருக்கு. ரொம்ப அடக்கமா வாசிச்சாலும் அவர் வாத்தியம் என்னமோ தனிதான். தமிழ் எழுத்துக்கு அது தனிசுகமான சாதனையைத் தந்திருக்கிறதை யாராலும் மறுக்க முடியாது.


இன்னும் ஸ்வாமிநாத ஆத்ரேயன், சிட்டி, லஷ்மி கண்ணன் என்று நிறையப் பேர் எழுதியிருக்கிறார்கள்.


எல்லாவற்றையும் படித்து விட்டு, 'ஓஹ்...எப்படிப்பட்ட ஆத்மா' என்று நமக்குப் பெருமூச்சு தான் வெளிப்படுகிறது.


'யாத்ரா' இதழ்கள் தொகுப்பு இரண்டு பாகங்களைக் கொண்டது.. இரண்டும் தனித்தனி புத்தங்களாக கிடைக்கிறது.. எதிர்காலத் தலைமுறையினரின்
ரசனைக்காகவும், அவர் தம் அறிவுத் தீனிக்காகவும் அழகுற இந்த இரண்டு புத்தகங்களையும் பதிப்பித்திருப்போர் பாராட்டுக்குரியவர்கள்.


புத்தகம் கிடைக்குமிடம்:
சந்தியா பதிப்பகம்,
57-A, 53வது தெரு, 9-வது அவென்யூ,
அசோக் நகர், சென்னை- 600 083

தொலைபேசி: 044- 24896979/ 65855704
செல்: 9841191397
Web: http://www.sandhyapublications.com

E.Mail: sandhyapublications@yahoo.com

8 comments:

கிருஷ்ணமூர்த்தி said...

/'யாத்ரா' இதழ்கள் தொகுப்பு இரண்டு பாகங்களைக் கொண்டது.. இரண்டும் தனித்தனி புத்தங்களாக கிடைக்கிறது../
மிக அருமையான தகவலைக் கொடுத்திருக்கிறீர்கள்.
நல்ல எழுத்து, வாசிப்பு அனுபவங்களை, நினைவில் வைத்துக் கொள்வதோடு, பகிர்ந்து கொள்ளவும் செய்கிறீர்களே, இந்த கைங்கர்யத்துக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.

ஜீவி said...

கிருஷ்ணமூர்த்தி said...

//நல்ல எழுத்து, வாசிப்பு அனுபவங்களை, நினைவில் வைத்துக் கொள்வதோடு, பகிர்ந்து கொள்ளவும் செய்கிறீர்களே, இந்த கைங்கர்யத்துக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.//

பகிர்ந்து கொள்ளல் பதிவுகளின் அடிப்படை அம்சம். இதற்காகத் தான் எழுதுவதே என்று கூடச் சொல்லலாம்.

பகிர்ந்து கொள்வதற்கு குறைந்த பட்சம் இரண்டு பேராவது வேண்டும்; அது நிச்சயம் ஒற்றை ஆளால் முடியாத ஒன்று. எழுதுவதை இன்னொருவர் அங்கீகரித்தோ அல்லது அலட்டலாகவோ கருத்து ஒன்றைச் சொல்லும் பொழுது தான் அது இன்னொருத்தருடன் பகிர்ந்து கொண்ட அந்தஸ்தைப் பெருகிறது.

படிப்பதோடு விட்டு விடாமல், தான் உணர்ந்ததை இரண்டு வரியாவது எழுதிவிடும் அன்பர்களால் தான் எந்தப் பதிவும் 'பகிர்ந்து கொண்ட' அந்தஸ்தைப் பெருகிறது. அந்த அந்தஸ்தைக் கொடுக்கும் உங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

வருகைக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி, நண்பரே!

கிருத்திகா said...

மிகவும் அரிதான அருமையான தகவல்கள்... இந்த தகவல்கள் முற்றிலும் புதியதானவை... அழகியலோடு இயைந்த வாழ்வையும், மிகவும் மென்மையான மனதையும் கொண்டவராதலால் தான் அவரால் மனிதர்களை இத்தனை நெருக்கத்தில் உணர்ந்து எழுத முடிந்ததோ... புத்தக அறிமுகத்திற்கு நன்றி.. வாங்க வேண்டிய புத்தக வரிசையில் சேர்த்தாச்சு...

ஜீவி said...

கிருத்திகா said...

// புத்தக அறிமுகத்திற்கு நன்றி.. வாங்க வேண்டிய புத்தக வரிசையில் சேர்த்தாச்சு...//

அப்படியா?.. ரொம்ப சந்தோஷம்.
நீங்களே மலைக்கக் கூடிய அளவுக்கு
நிறைய தகவல்கள் உள்ளன. உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
வருகைக்கு நன்றி.

sury said...

// வாழ்க்கையில் நிறைய ஏமாந்தவரும் கூட.//

அன்றாட வாழ்க்கையிலே நமக்கு நியாயமாக கிடைக்கவேண்டியதைக் கூட சில சமயங்களில் கொடுத்தால்
வாங்கிக்கொள்வது, நாமாக கேட்கவேண்டாம் என்று வாளா இருந்து விடுவது சில பெரியோர் செய்வதாம்.
நமக்குக் கிடைக்கவேண்டும் என்றால் கிடைக்கும் நாமாக நச்சரித்துக் கேட்கவேண்டாம் என்று இவர்கள்
பெருந்தன்மையுடன் இருக்கும்பொழுது, கொடுக்கவேண்டியவர்கள் இவர்களை இளிச்ச வாயர்கள், ஏமாந்தவர்கள்
என்று எடை போடுவதும் உலக இயல்பே.

ஒன்று மட்டும் சொல்ல வேண்டும். எதைக் கொடுக்கவேண்டுமோ அதைக் கொடுக்கவேண்டும் உரிய நேரத்தில்,
உரிய நபரிடத்தில். அதைத் தர தவறினால், அதைப் போன்ற பல மடங்கினை இழக்க நேரிடும் அதே சமயம்,
நல்வினைகளால் நாம் ஈட்டும் பொருள் ஒரு முறை வழிதவறி வாராது போயினும் பின் வந்து சேரும்.

" அழக்கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும்
பிற்பயக்கும் நற் பாலவை "

எனச் சொல்கிறார் வள்ளுவர்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

ஜீவி said...

//நல்வினைகளால் நாம் ஈட்டும் பொருள் ஒரு முறை வழிதவறி வாராது போயினும் பின் வந்து சேரும்.//

சூரி சார்!.. முத்தான வாழ்க்கை நெறிகளை முறைபட, அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.. அதுவும், மேலே குறிப்பிட்டிருப்பது அனுபவத்தில் உணர்ந்தது. இறுதியில் சொன்ன வள்ளுவரின் வாய்மொழி அறுபுத ரத்தினம் போன்றது.

வருகைக்கும், வழிகாட்டலுக்கும் மிக்க நன்றி, சார்!

Geetha Sambasivam said...

தி.ஜா. பற்றிய அருமையான விமரிசனங்களைக் கொண்ட கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி.

ஜீவி said...

@ Geetha Sambasivam

த.ஜா. பற்றி சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கு.

Related Posts with Thumbnails