Wednesday, September 23, 2009

மறக்க முடியாத மதுரை நினைவுகள்-1

எழுத்தாளர் நரசய்யாவைப் பற்றிப் பலருக்குத் தெரியும். கடலோடும், கடலலைகளோடும் பிணைந்த வாழ்க்கை அவரது. மதுரை மாநகர் பற்றி 'ஆலவாய்' என்கிற பெயரில் அவர் எழுதிய நூலொன்றையும், விமர்சனக்கலைஞர் வெங்கட்சாமிநாதன் அவர்களும், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களும் அந்நூல்பற்றி எழுதியுள்ள பார்வைகளையும் படிக்க நேர்ந்தது.

அந்த வாசிப்பே, சிலவருடங்களுக்கு முன் நான் எழுதிய என் இளவயது மதுரை நினைவுகளை
மீண்டும் பகிர்ந்து கொள்ள காரணம் ஆயிற்று.அந்த எழுத்தாள பெருமக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.


1. பார்த்த காட்சியும் கேட்ட சப்தமும்

நினைத்துப்பார்க்க இப்பொழுது வேடிக்கையாக இருக்கிறது. எல்லாமே பசுமை நிறைந்த நினைவுகள். கும்பகோணத்தில் பிறந்தாலும் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, சேலம் என்று பள்ளி இறுதி வகுப்பு முடிப்பதற்குள் எத்தனை ஊர்கள்!.. பணியாற்றுகையில் புதுவை, பவானி, திருப்பத்தூர். குன்னூர், காஞ்சிபுரம், சென்னை என்று.... இத்தனை இடங்களில் வாழ்க்கைப்போக்கில் வசித்துத் திரிந்தாலும், உண்மையிலேயே பால்ய வயதில், சக்கரைத் தட்டில் 'அ,ஆ'வன்னா எழுதத் தொடங்கி வைத்து, பெரியவர்கள் என்னை ஆரம்பப் பள்ளியில் சேர்த்த மதுரை மறக்கமுடியாத ஊர்தான். இப்பொழுதெல்லாம், பஸ்ஸிலோ இரயிலிலோ பயணிக்கும் நேரங்களில் இந்த ஊர்களையெல்லாம் கடக்க நேரிடும். அப்படிப்பட்ட சமயங்களிலெல்லாம் எனக்கும் அந்த ஊருக்கும் சம்பந்தப்பட்ட வாழ்க்கை நிகழ்ச்சி ஏதாவது ஒன்று படக்காட்சியாய் நினைவில் பளிச்சிட்டுப் போகும். சில நேரங்களில், பயணத்தை கத்தரித்துக்கொண்டு ஊருக்குள் சென்று நாம் அப்பொழுது வாழ்ந்த இடம் இப்பொழுது எப்படி இருக்கிறது என்று பார்க்கத் தோன்றும். இருந்தும் வாழ்க்கையின் அவசர வேலைகள் அப்படிச் செய்யமுடியாமல் தடுத்துவி்டும். இதற்கென்றே, இப்படி வாழ்ந்த இடங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கென்றே, முக்கியமாக இந்த இடங்கள் இப்பொழுது எப்படி இருக்கின்றன என்று 'அனுபவித்து' பார்ப்பதற்கென்றெ தனி ஒரு பயண அட்டவணை போட்டுக்கொண்டு கிளம்ப வேண்டுமென்று அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.

சின்ன வயசில் அந்த இடங்களைப் பற்றி நான் மனதில் போட்டு வைத்திருந்த சித்திரங்கள், இப்பொழுது மாறிப்போய் அந்த அழகான சித்திரங்களை அழிக்க நேரிடுமே என்கிற அச்ச உணர்வும் கூடவே தோன்றும். ஒன்றைக் குறிப்பிட வேண்டும். அறுபது வருடங்களுக்கு முன்பு என் சின்னஞ்சிறிய நெஞ்சில் நான் தேக்கி வைத்துக்கொண்ட மதுரை இது. இப்போது இந்த இடங்கள் எல்லாம் என்னவாச்சு, எப்படி உருமாறிப் போயிருக்கிறது என்று எனக்குத் தெரியாது. மற்றவர்கள் தான் சொல்லித் தெரியவேண்டும்.

மதுரை சிம்மக்கல்லிருந்து வைகை ஆற்றங்கரை நோக்கித் திரும்பி நடந்தால், வழியில் பாலம் போட்ட ஒரு நீண்ட வாய்க்காலைக் கடக்க வேண்டியிருககும். வாய்க்கால் புறத்தைத் தாண்டி செழித்து கொப்பும் கிளையுமாய் பிர்மாண்டமாய் வளர்ந்திருக்கும் அரசமரங்களைத் தாண்டி, உள்ளடங்கி அற்புதமான ஆஞ்சநேயர் கோயில். இங்கு மார்கழி மாதத்தில் நெய் ஒழுகும் வெண்பொங்கல் கிடைக்கும். கிடைக்கும் நேரம்: அதிகாலை 5 மணியிலிருந்து 5-30 க்குள். அகல அகல புரச இலைகளை வைத்துக் கொண்டு என் வயதொத்த சிறுவர் கூட்டம் அலைமோதும். உயரமாய், நீண்ட நெற்றி நெடுக நாமம் தரித்தவராய், கோயில் பட்டர் ஒரு பெரிய பாத்திரதைக் கையில் ஏந்தியவாறு அதிலிருந்து பொங்கலை உருட்டி உருட்டி எடுத்து ஒவ்வொருத்தர் இலையிலும் போடும் அழகே அழகு!.. அந்தக் குளிரில், வாயில் போட்டால் வெண்ணையாய் கரைந்து விடும். எப்படியும் ஒன்றிரண்டு முந்திரிப்பருப்பு தினமும் எனக்குத் தட்டுப்பட்டு விடும்.கூட என்னைவிட நான்கு வயது மூத்த என் தமக்கை வருவார். கிடைக்கும் முந்திரியைப் பகிர்ந்து கொள்வோம்.இந்த அனுமார் கோயிலுக்கு நேர் எதிரில் இருந்த தெருதான் பதிவர் சீனா அவர்கள் தனது மதுரை மலரும் நினைவுகளில் குறிப்பிட்டிருந்த லஷ்மி நாராயணப்புர அக்கிரஹாரத்தெரு. அனுமார் கோயிலுக்கு முன்னிருக்கும் வாய்க்காலுக்கு அருகில் இருந்த தெரு காமாட்சிபுர அக்கிரஹாரத் தெரு. பேருக்குத்தான் அக்கிரஹாரமே தவிர பேதமில்லாமல் எல்லோரும் ஒற்றுமையாய் வாழ்ந்த காலம் அது. இந்தத் தெருவில் தான் நாங்கள் குடியிருந்தோம்.

வருஷக்கணக்குப் பார்த்தால் எனக்கு அப்பொழுது ஆறு வயதிருக்கும். வாசலில் தெருக்குழாய் இருக்கும் வீடு. அந்தக்காலத்திலும் தண்ணீர் தட்டுப்பாடு. எப்பொழுது தண்ணீர் விடுவார்கள் என்று சொல்ல முடியாது. எந்நேரமும் அண்டா-குண்டாக்கள் குழாயடியிலுருந்து ஆரம்பித்து நாலு வீடு தள்ளி வரை வரிசை கட்டியிருக்கும்.அந்தத் தெரு நிறைய நாலைந்து தென்னை மரங்கள் இருந்தது நினைவிருக்கிறது. எங்கள் வீட்டிற்கு எதிரே ஒரு பெரிய தென்னை மரம் உண்டு. அந்த வீட்டில் முன் போர்ஷனில் நாங்கள் வாடகைக்கு ஒண்டுக்குடித்தனம்.

நீண்ட அந்த வீட்டில், மாடியிலும் சேர்த்து ஐந்து குடித்தனங்கள் இருந்ததாக நினைவு. ஒருநாள் சாயந்திர வேளை. தெருவே அல்லோகலப்படுகிறது. பக்கத்து தெய்க்கால் தெரு பகுதியில் யார் வீட்டிலோ பிடித்த தீ, வீசிய காற்றில் கொழுந்து விட்டெரிந்து, பாதித் தென்னைமர அளவுக்குப் பரவி, எங்கள் தெருவில் நுழைந்து விட்டது. எங்கள் வீட்டில் முக்கிய சாமானகள் சிலவற்றை எடுத்துக்கொண்டு வெளியே வந்து விட்டார்கள்.கிட்டத்தட்ட எல்லா வீட்டிலும் இந்த நிலை தான். பக்கத்தில் தான் வைகை ஆற்று படித்துறை பக்கம் என் மூத்த அக்கா திருமணம் ஆகி 'புகுந்த வீடு' இருந்தது. எல்லோரும் அங்கே போய்விடலாம் என்று உத்தேசம்.

இத்தனை கலாட்டாக்களுக்கு நடுவே, தீ அணைப்பு வண்டிகள் வந்து எரிந்த தீ மட்டுப்படுத்தப் பட்டு, எல்லாம் சகஜ நிலைக்கு வந்தது, தனிக்கதை! எனது ஆறு வயசில் பார்த்த, பாதி தென்னைமர உயரத்திற்கு கொழுந்து விட்டெரிந்த அந்தத் தீ, இன்னும் என் நினைவை விட்டு அழியவில்லை. அந்தத் தீ விபத்து, தெய்க்கால் தெரு தீ என்று அந்தக்காலத்தில் வெகு பிரசித்தம்.அனுமார் கோயிலை ஒட்டிய தெரு ஆதிமூலம் பிள்ளைத் தெரு. இந்த ஆதிமூலம் பிள்ளைத்தெருவில் தான் நான் எனது ஆரம்பக்கல்வியைத் தொடங்கிய எலிமெண்ட்டிரி ஸ்கூல் இருந்தது. ஆரம்பப்பள்ளிகள் எல்லாம் அரசுப்பள்ளிகள் தான். தனியார் பள்ளிகளைப் பார்த்த நினைவு இல்லை.ஸ்கூலுக்குப் பக்கத்தில் ரேஷன் கடை இருந்த நினைவு இருக்கிறது. கடை வாசலில் நானும் என் சகோதரியும் அரிசிக்கும், பிளாஸ்டிக் கேன் தாங்கி மண்ணெண்ணைக்கும் காத்துக் கிடந்த நினைவு மறக்கவில்லை. யுத்த காலத்திலும் அதற்கு பிந்தைய காலக்கட்டத்திலும் , அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு கிடைக்காமல் போகும் சாத்திய கூறுகள் ஏற்பட்டதால், அந்த அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடில்லாமல் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதே ரேஷன் கடைகள். சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்த ரேஷன் கடைகளும் , ரேஷன் கார்டுகளும் ஒழியவிலலை என்பது அர்த்தமுள்ள ஒரு சோகம். ரேஷன் கடைகள் பெயர் தான் நியாயவிலைக்கடைகள் என்று மாறி இருக்கிறதே தவிர, அந்த யுத்தகால ரேஷனுக்கும், இன்றைய ரேஷனுக்கும் பெருத்த வித்தியாசம் ஒன்றும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

யுத்த காலம் என்றவுடன் நினைவுக்கு வருகிறது. என்னில் அழியாதுப் பதிந்த ஒரு காட்சி. முண்டாசு கட்டிய ஒரு ஆள் ஏணியில் நின்றபடி விளக்கேற்றுகிறார். விட்டு விட்டு நீண்ட விசில் சப்தம். 'தப..தப' என்று பூட்ஸ் ஒலி கேட்க பலர் ஓடும் சப்தம். இதுதான் அந்தக் காட்சி. என்னைத் தோண்டித் தோண்டிப் பார்த்து, என் வாழ்க்கையிலே எந்த நினைவிலிருந்து எனக்கு இப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது என்று நினைத்துப் பார்த்தால், இந்த நினைவுதான் முதல் இடத்தைப் பிடிக்கிறது. பின்னால், இந்திய சரித்திரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், என் நினைவில் பதிந்த இந்தக் காட்சிக்கு அர்த்தம் புரிந்தது.இரண்டாம் உலகப்போர் 1939லிருந்து 1945வரை நடந்திருக்கிறது. நாஜி ஜெர்மனி, பாசிச இத்தாலி, ஜப்பான் அரசும் ஒன்று சேர்ந்த அச்சுநாடுகளுக்கும், நேசநாடுகளுக்கும் இடையே நடைபெற்றது இந்தப்போர். பிரிட்டன் நேசநாடுகளில் ஒன்றாகையால்,பிரிட்டனின் ஆளுகையில் இருந்த இந்தியாவும் இந்தப் போருக்கு இழுக்கப்பட்டது. 1945-ல் இந்தப் போர் முடிவுக்கு வந்தாலும், அதைத் தொடர்ந்து உலக அரங்கில் யுத்த முஸ்தீபுகளும், இராணுவ அச்சுறுத்தல்களும் இருந்தன போலும். 1947 இந்திய சுதந்திரத்திற்கு முன்னான --அப்பொழுது எனக்கு நான்கு வயதிருக்கும் -- இந்த நினைவு நிழல் போல் என் நினைவில் இருப்பது இப்பொழுதும் எனக்கு ஆச்சரியமான சமாச்சாரம்."கண்ணதாசன் பிலிம்ஸ்" முத்திரைச்சின்னம் உங்களுக்கு நினைவிருக்கிறதா?... நான்கு பக்கமும் கண்ணாடி சதுரங்களால் அடைக்கப்பட்டு, மேற்பகுதியும் கண்ணாடி கும்பம் போலிருக்கும் தெருவிளக்கு தான் அந்தச் சின்னம்!.. அந்தக்காலத்தில் தெருக்களில் இந்த மாதிரி தெருவிளக்குகள் தான் இருந்திருக்கிறது. 'மாலை 7 மணிவாக்கில் ஒரு ஊழியர், விளக்குக்கம்பத்தின் மேல் பகுதி கண்ணாடிக்கூண்டைத் திறந்துஅதனுள் இருக்கும் சிம்னி விளக்கை ஏற்றிவிட்டுப் போவார். இரவு பூராவும் அந்த விளக்கு எரியும்' என்றும் என் சகோதரிகளிடம் கேட்டு, இந்தத் தெரு விளக்கு பற்றியும், விளக்கேற்றும் சமாச்சாரம் பற்றியும் பின்னால் தெரிந்து கொண்டேன். அந்த விசில் சப்தம்?...பூட்ஸ் ஒலி சப்திக்க பலர் ஓடும் ஓசை?.. இரண்டாம் உலகப்போரின் தொடர்ச்சியாய், அது முடிந்தும் சில காலம் அமுலுக்கு இருந்த ஏ.ஆர்.பி. போலிசாரின் எச்சரிக்கை ஓட்டம்! விட்டு விட்டுக் கேட்ட அந்த விசில் ஓசையும் போலிசாரின் எச்சரிக்கை நடவடிக்கை தான். இதையெல்லாம் பின்னாளில் கேட்டுத் தெரிந்து கொண்டு எனக்குப் பெருத்த ஆச்சரியமாகப் போய்விட்டது. 1946 இறுதியில் இது நடந்திருக்கும் என்று வைத்துக்கொண்டாலும், அப்பொழுது எனக்கு சரியாக நான்கு வயசுதான்! ஒரு வாரத்திற்கு முன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, என்னிடம் பேசிவிட்டுப் போன பெரியவர் பெயர், இப்பொழுது நினைவுக்கு வரவில்லை; ஆனால், நான்கு வயதுக் குழந்தையாய் பார்த்தக் காட்சியும், கேட்ட ஒலியும் நினைவில் பதிந்து விட்டதென்றால்... இதை நினைக்கையில், எனக்குப் பிரமிப்பாகத் தான் இப்பொழுதும் இருக்கிறது.

(வளரும்..)

22 comments:

கிருஷ்ணமூர்த்தி said...

மருதேய்ய்ய்ய்ய்ய்....!
கொஞ்சம் நஞ்சமல்ல, நிறையவே மாறிப்போய் விட்டது. கான்க்ரீட் காடுகளாக ஒவ்வொரு வீதியிலும் முளைத்துக் கொண்டே இருக்கிறது.
கட்டடங்கள், பளபளக்கின்றன...

பெரும்பாலான மனிதர்கள் இன்னமும், அழுக்காக, வேர்வைக் கசகசப்போடு, அராத்தாகப் பேசுவதிலும், ஆரவாரம் செய்வதிலும், பழகினபின் பாசக்காரப் பயலுவளாகவும் தான் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

போத்தும் புடவை விற்க பாண்டியன் மதுரைக்குப் புதிய பெருமையாம்! பாட்டுக்கு எசப் பாட்டாக லலிதாவும் கோதாவில்!நாந்தேன் மருதே ஹீரோ
-என் ஹீரோயினி யாரோன்னு ஒரு காமெடிப் பீஸ் வேறு!

ஆனாலும், மருதையை மீட்க மீனாட்சிசுந்தரன் தான் பாண்டியனாக மறுபடி வரவேண்டும்!

அதுவரைக்கும் பழசை நெனச்சுப் பாத்துக்கத்தான் முடியும்!

ஜீவி said...

கிருஷ்ணமூர்த்தி said...
//மருதேய்ய்ய்ய்ய்ய்....!//

கிருஷ்ணமூர்த்தி சார்! 'மருதேய்ய்ய்ய்ய்ய்..' என்று இழுத்த அந்த ஆரம்ப இழுப்பே, மதுரைக்கு இழுத்துக் கொண்டு வந்து விட்டது! ' அராத்தாக'-- இது உள்ளூர் மொழியோ?.. 'பயலுவளாக' -- இது தஞ்சைத்தரணி வழக்குமொழி
அல்லவோ?..

'போத்தும் புடவை விற்க...' சும்மா பிச்சு உதறீங்க, சார்!.. அதுபாட்டுக்க கவிதையானா பீறீட்டுக் கிளம்புது!

கீதா சாம்பசிவம் said...

ஹிஹிஹி, இந்தப் பதிவுக்கும், நமக்கும் சம்பந்தம் இல்லை, அதான் கடவுளாப் பார்த்து படிக்கவேண்டாம்னு சொல்லிட்டார் போல! ஹிஹிஹி, எல்லாமே புது விஷயங்கள், நன்றி.

Shakthiprabha said...

காட்சிகளை கற்பனையாக மனதில் கொணர்ந்து நிறுத்தி விட்டீர்கள்.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

நிறைய பழைய விஷயங்களை மறந்து போய் விடுகிறீர்கள்.. யோசித்துப் பாருங்கள், நினைவுக்கு வரும்.. அந்த ஆதிமூலம் பிள்ளைத்தெரு, ரேஷன் கடை இதெல்லாம் ஞாபகத்திற்கு வரவில்லை?..

ஜீவி said...

@ ஷக்திபிரபா


வருகைக்கு மிக்க நன்றி, ஷக்தி!

கிருத்திகா said...

இது போன்று நினைவுகளை எழுத ஆரம்பிப்பதில் ஒரு பெரும் நிகழ்வு உண்Dஉ எழுதி முடித்தபின்னும் வார்த்தைகள் உள்ளே ஊர்ந்து கொண்டேயிருக்கும் முடிவின்றி அந்த அனுபவம் சுவையாகவும் அதே சமயம் சுமையாகவும் அமையும் சில சமயம்...

ஜீவி said...

@ கிருத்திகா


பல நினைவுகளை நாம் பகிர்ந்து கொள்ளவே தயங்குகிறோம். தயக்கத்திற்குக் காரணம் இதுபற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற தடுமாற்றம் தான். எழுத்தாளர்களுக்கும், கதைசொல்லிகளுக்கும் ஒரு வசதி. சொந்தமாக துய்த்த சம்பவங்களையும் பிறர் மீது (கதை மாந்தர் மீது) ஏற்றிச் சொல்லலாம். காந்திஜி மாதிரி சத்திய சோதனைகளை எதிர்கொண்ட பலரும் சரித்திரத்தில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டனர்.

நீங்கள் சொல்வது வேறுபட்ட தன்மைத்தானது.
அந்த பால்ய வயதில் துள்ளித் திரிகிற குழந்தை மனத்துடன் நான் உள்வாங்கிக் கொண்ட அல்லது நினைவில் படிந்த பல வெளியுலகத் தோற்றங்கள்
இப்பொழுது கன்னாப்பின்னாவென்று மாறிப் போயிருக்கிற அவலத்தினூடேயும், அந்த பழைய தோற்றத்தின் வித்து போன்ற அடிநாதம் ஒவ்வொரு பார்வையிலும் தென்பட்டது தான் விசேஷம்.
'ஓ, இது இப்படியா, அது அப்படிப் போயிற்றோ' என்று ஒன்றுக்கொன்று பொருத்திப் பார்த்து இனம் கண்டு கொண்டு துணுக்குறவும்,
ஆச்சரியப்படவும் முடிந்தது.

ஒரு அறுபது வருட இடைவெளியிலேயே இப்படி என்றால், மதுரையைப் போன்று சங்ககாலம் தொட்டும், அதற்கு முந்தியும் புழங்கிவரும் ஒரு பழைய பட்டிணத்தில், சரித்திரப் பிரசித்திப் பெற்ற நகரத்தில், சங்கக்கால சுவடுகளின் நீட்சியும் அங்கங்கே தட்டுப்படும்--ஆனால் நமக்கு அவை புரியாது-- என்று நினைக்கையில் புல்லரிப்பு தான் ஏற்படுகிறது.

காஞ்சீபுரத்தில் நான் வாழ்ந்த காலத்தில், அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' படைப்பில் வரும் பல நிகழ்வுகளின் சிதலமடைந்த சின்னங்களாய் கோயில்களிலும், சுற்றியிருக்கும் சிறுசிறு கிராமங்களிலும், மண்டபங்களிலும் ஓர்ந்து பொருத்திப் பார்க்கும் மனோசக்தி கைவரபெற்று

ஈடில்லா பெருமையும், சந்தோஷமும் அடைந்ததுண்டு. 'சுந்திரசோழர் வாழ்ந்த பொன்மாளிகை இந்த இடத்தில் தான் புதைந்து போயிருக்க வேண்டும், விண்ணைமுட்டும் தூசி பறக்க யானைப்படையும், குதிரைப் படையும்

சுற்றித்திரிந்த இடம் இதுவே தான்' என்று ஒருவித திகைப்பினூடே குதூகலித்த மகிழ்ச்சியை இதை எழுதும் இப்பொழுதும் உணர்கிறேன்.

radhakrishnan said...

ஜி.வி.அண்ணா,
நாம் ரொம்ப நெருங்கிவிட்டோம்.
நான் காமாட்சிபுரஅக்கிரகார வாசிதான்.
அனேகமாக நீங்கள்இருந்த வீட்டிற்கு எதிர்த்தவீடுதான்உங்களை அன்புடன்
அழைக்கிறேன்.எப்போதுவேண்டுமானாலும் நீங்கள்மதுரை வரலாம்.என்னுடன்
பழையஇட
ங்களைப்பார்த்து பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.நிரைய இலக்கியம்
பேசலாம்.

ஜீவி said...

@ Radhakrishnan

அண்ணா என்று அழைத்த அன்பில் நெகிழ்ந்தேன். தங்களின் மதுரை அழைப்புக்கு மனமார்ந்த நன்றி. அடுத்த தடவை மதுரை வரும் வாய்ப்பு சித்திக்கும் பொழுது நிச்சயம் தெரியப்படுத்தி வருகிறேன்.

அட! காமாட்சிபுர அக்கிரகாரத் தெரு தானா?.. அதுவும் எதிர்த்த வீடு என்று நினைக்கையில் பால்ய நினைவுகள் மனசை ஆக்கிரமிக்கின்றன.

இணைய வழி உறவுகளான நிறைய மதுரை அன்பர்களைப் பற்றி நானே சொல்ல வேண்டுமென்றிருந்தேன். பெரியவர் கிருஷ்ணமூர்த்தி தேர்ந்த இலக்கிய ரசனையாளர். தி.ஜா.வின் பரம ரசிகர். தினம் ஒரு பதிவிட்டு தனது 'எண்ணங்களை'ப் பகிர்ந்து கொள்வதில் முத்திரை பதித்த கீதாம்மா, ஆன்மிகத்திலும், பழம்பெரும் இலக்கியங்களிலும் ஆழ்ந்த பற்று கொண்ட குமரன்,
மற்றும் மதுரையம்பதியான மெளலி,
சீனா சார் என்று நிறைய நண்பர்கள்!

நீங்களே ஒவ்வொருவராகத் தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

radhakrishnan said...

அண்ணா,
அருமையான பதிவு.நம் அலைவரிசை
ஒரே மாதிரி இருக்கிறது.எனக்குப் சிறு
வயதில் பழகிய இடங்களை,வேலைசெய்த இடங்களைப்பார்க்கவேண்டுமென்று அடிக்கடி தோன்றும்.அப்படிபார்த்தால்
பழைய மதுரை(முடியுமா) மேட்டூர்பொள்ளாச்சி,
வேட்டைக்காரன்புதூர்,பல்லடம்,அருகே


பொங்கலூர்,கோவை.தேவகோட்டை,காரைக்குடி,சிவகங்கை,உத்தம்பாளையம்,ராயப்பன்பட்டி,தேக்கடி,மேலூர்,நிலக்கோட்டை ஆகியஊர்களை அடிக்கடி பார்க்கவேண்டும்.நீங்கள் கூறுவதுபோல்
ஒரு பயணத்திட்டம் வகுக்க வேண்டும்
குடும்பம் என்னாவது?

radhakrishnan said...

அண்ணா,
தங்கள் பதிவு என் பழைய நினைவுகளைக்கிளறிவிட்டது.
உங்களைப்போலவே நானும்அதிகாலையில் அனுமார்
கோயிலுக்குச்சொல்வேன்.வரிசையில் அமர்ந்துகையளவு
பொங்கல் வாங்கிவருவேன்.அருமையான ருசி.
மறக்க முடியுமா அந்த நாட்களை. அருமையான பதிவு. நன்றி

ஜீவி said...

@ Radhakirishnan

மதுரையும் மதுரையைச் சுற்றியும் என்பதால் உங்களைப் பொருத்தவரை கவலையில்லை; காலை போய் இரவுக்கு முன் திரும்பலாம். வாரத்திற்கு ஒரு இடமாவது போய்ப் பார்த்து வாருங்களேன்! எஸ்ஸாரின் கட்டுரைகளைப் படித்தீர்களென்றால், நினைப்பு நடப்பாகிவிடும்!

கோமதி அரசு said...

சின்ன வயசில் அந்த இடங்களைப் பற்றி நான் மனதில் போட்டு வைத்திருந்த சித்திரங்கள், இப்பொழுது மாறிப்போய் அந்த அழகான சித்திரங்களை அழிக்க நேரிடுமே என்கிற அச்ச உணர்வும் கூடவே தோன்றும்//

ஆம் மாறிதான் போய் விடும். ஆனால் மனதில் உள்ள அழியாத சித்திரங்களை எண்ணிப் பார்க்கலாம்.

Dr B Jambulingam said...

மனோ சாமிநாதன் தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதையறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.com
www.ponnibuddha.blogspot.com

கோமதி அரசு said...

மதுரையில் நீங்கள் குறிபிட்ட அனுமன் கோவில் பார்த்தது இல்லை இந்த மாத கடைசியில் போனாலும் போவேன் மதுரை என் தங்கையிடம் கேட்டு அங்கு போய் பார்த்து வர நினைத்து இருக்கிறேன்.

மதுரை நினைவுகள் அருமை.
இன்று மனோ அவர்கள் இந்த பதிவை குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
வாழ்த்துக்கள்.

yathavan nambi said...

இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
வாழ்த்துக்கள்!
ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு
திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
படைப்புகள் யாவும்.
நட்புடன்,
புதுவை வேலு,
www.kuzhalinnisai.blogspot.com

வே.நடனசபாபதி said...

மிக அருமையாக பழகிய நிகழ்வுகளை கண் முன்னே கொண்டு வந்திருக்கிறீர்கள். பழகிய பயின்ற இடங்களைப் போய் பார்க்ககவேண்டும் என்ற எண்ணம் எனக்கும் உண்டு. நீங்கள் சொல்வதுபோல் ஒரு அட்டவணை போட்டுக்கொண்டு போய் பார்க்கவேண்டும் போல் இருக்கிறது.
நானும் ஆரம்ப படிப்பை எங்கள் கிராமமான தெ.வ.புத்தூரிலும், பின்னர் அரியலூர், பெண்ணாடம் (பெண்ணாகடம்) விருத்தாசலம் ஆகிய ஊர்களிலும் கல்லூரி படிப்பை திருச்சி மற்றும் அண்ணாமலை நகரிலும் படித்திருக்கிறேன். பள்ளிப்படிப்பு மற்றும் புகுமுக வகுப்பு வரை நடந்த நிகழ்வுகளை பதிவிட்டு விட்டேன். வேளாண் அறிவியல் படித்தபோது நடந்தவைகளை மட்டும் இன்னும் எழுதவில்லை.
வங்கிப்பணியில் இருந்ததால் பல மாநிலங்களில் பணி புரிந்து பல மொழிகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவைகளைப் பற்றியும் எழுத ஆசை.
தங்களின் மறக்கக்முடியாத மதுரை நினைவுகளை படித்து இரசித்தேன்.

'நெல்லைத் தமிழன் said...

"நான்கு வயதுக் குழந்தையாய் பார்த்தக் காட்சியும், கேட்ட ஒலியும் நினைவில் பதிந்து விட்டதென்றால்... இதை நினைக்கையில், எனக்குப் பிரமிப்பாகத் தான் இப்பொழுதும் இருக்கிறது." - தொடரின் மற்ற பகுதிகளை இனிமேல்தான் படிக்கவேண்டும். நீங்கள் எழுதியுள்ள கடைசி வரிகள் என் சிந்தனையைத் தூண்டிவிட்டன. ஏதோ ஒரு பாதிப்பில்லாமல் சில விஷயங்கள் நம் ஆழ் மனத்தில் தங்காது. அது, ஒரே வேலையை, வழக்கத்தைச் சின்ன வயதில் தினமும் செய்ததனாலும் மனதில் பதியலாம்.

எனக்கு, 4 வயதில், திருவாடானை (1968) கோவிலுக்குச் சென்று (5 1/2 மணிக்கு. என் சகோதரர்களெல்லாம் தூங்கிக்கொண்டிருப்பார்கள்) மார்கழி மாதத்தில் பொங்கல் வாங்கிவந்தது ஞாபகம் இருக்கு. 5 வயதில், ஐயனார் சாமியாடி தெருவில் வருகையில், 'கடவுள்' என்று எல்லோரும் சொன்னது ஞாபகம் இருக்கு. உயிரோடு ஓடி வந்தவர் எப்படி மறுபடி கல்லாக ஆனார் என்று வியந்ததும் ஞாபகம் இருக்கு. எங்கள் வீட்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருந்த கோவில் குளம் ஞாபகம் இருக்கு. (குளத்தின் அமைப்பு எப்படி இருந்தது என்றுகூட). ஆனால் 69க்கு அப்புறம் அந்த ஊருக்குச் சென்றதே இல்லை.

நானும் தங்களைப் போலத்தான், 9ம் வகுப்பு வரை, பல இடங்களில் படித்துள்ளேன். உங்கள் கதை தெரியாது. என் அப்பா ஆசிரியப் பணி என்பதால் ஒவ்வொரு 3 வருடமும் ஒவ்வொரு இடம். திருவாடானையில்தான் 1ம் வகுப்பு, பரமக்குடி 2-3 வகுப்பு, பூலாங்குறிச்சி (பொன்னமராவதி பக்கம்) 4-6, தாளவாடி (சத்தியமங்கலம் பக்கம்) 7-8 வகுப்புகள். இதுல ஒரே ஒரு குறை, எனக்கு வட்டார வழக்கு அதாவது பேச்சுத் தமிழ் வரவேயில்லை. நான் திருனெல்வேலிக்காரன் என்று நாந்தான் சொல்லிக்கணும்.

ஜீவி said...

@ கோமதி அரசு

ஏப்ரல் 2012-ல் தாங்கள் போட்டுள்ள் பின்னூட்டம், மற்றும் ஜனவரி 2015-ல் போட்டுள்ள பின்னூட்டம் ஆகியவற்றிற்கு இப்பொழுது தான் மறுமொழி அளிக்கிறேன். நினைத்தால் வெட்கமாக இருக்கிறது.

இப்பொழுது மதுரையில் தானே இருக்கிறீர்கள்?.. அந்த அனுமார் கோயில் போய் தரிசித்தீர்களா?...

வலைச்சரத்தில் சகோதரி மனோ அவர்கள் இந்தப் பதிவை அறிமுகப்படுத்தியிருப்பதையும் இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்.

பெரியவர் ஜம்புலிங்கம் சாரும், திரு. யாதவன் நம்பி அவர்களும் இதே செய்தியைத் தெரியப்படுத்தி வாழ்த்தியிருக்கிறார்கள். அவர்களூக்கும் நன்றி. வெகு நாட்கள் கழித்து மறுமொழி தருவதகு நண்பர்கள் மன்னிக்க வேண்டும்.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

ரசனையுடன் வாசித்தலால் மனசில் விளைந்த கரூத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, நண்பரே!

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

என் இளவயது நினைவுகளைப் படிக்கப் போய் உங்கள் இளமை நினைவுகளும் உசுப்பி விடப்பட்டது கண்டு ஒரு விளக்கு சுடர் கொண்டு பல விளக்குகளை பிரகாசிக்க வைப்பது நினைவில் நின்றது.

கருத்துப் பகிர்தலுக்கு நன்றி, நண்பரே!

Related Posts with Thumbnails