Thursday, September 24, 2009

மறக்க முடியாத மதுரை நினைவுகள்-2

2. தாராசிங்--கிங்காங் மல்யுத்தம்.

நான் நான்காவது வகுப்பு முடிக்கையிலேயே, காமாட்சிபுர அக்கிரஹார வாடகை வீட்டைக் காலி பண்ணிவிட்டு, தானப்ப முதலித்தெருவில் ஒரு வீட்டுக்கு மாறி விட்டோம். தானப்ப முதலித்தெருவிலிருந்து சிம்மக்கல் வழியாகத் தான் தினமும் நடந்து ஆதிமூலம் பிள்ளைத்தெரு ஆரம்பப்பள்ளிக்குப் போவேன். சிம்மக்கல் ஜங்ஷனில் ஓவல் சைசில் ஒரு பெரிய நீர்த்தொட்டி இருக்கும். அந்தத்தொட்டி அருகில் நிறைய வண்டிக் குதிரைகளைக் கட்டியிருப்பார்கள். குதிரைகளைக் குளிப்பாட்டுவதெல்லாம் அந்த தொட்டி நீரைக் கொண்டுதான். அந்த ஜங்ஷனில் சின்ன பிள்ளையார் கோயில் இருந்த ஞாபகம். சரியாக நினைவில்லை. அந்த இடத்தில் கட்சி கொடிக்கம்பங்கள் காட்சியளிக்கும். தோழர்கள் டாங்கே, பி.இராமமூர்த்தி, கே.டி.கே.தங்கமணி பொதுக்கூட்டத்தட்டிகளை இங்கே பார்த்ததாக ஏற்கனவே "இழந்த சொர்க்கம்" என்னும் என் பதிவொன்றில் பதிந்திருக்கேன். அதனால் அது பற்றி இப்பொழுது வேண்டாம்.ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகள் பற்றி இந்த இடத்தில் நிறையத் தட்டிகளைப் பார்க்கலாம். மற்றும் மாட்டு வண்டிகளில் அலங்காரம் செய்து பொது நிகழ்ச்சிகளை ஊதுகுழல்களில் அறிவித்தபடி, பிட்நோட்டீஸ்களை வீசிவீசி எறிந்தபடியும் அறிவிப்புகள் உண்டு.

அப்படி ஊரே இதை விட்டால் வேறு வேலை இல்லை என்று பேசும்படியான மல்யுத்தப்போர் நிகழ்ச்சிகள் அந்தக்காலத்தில் மதுரையில் நடந்தன.தாராசிங், கிங்காங், ரெஸ்ட் காப்பியன், வாங்க் பெக்லி -- இவர்களெல்லாம் மறக்கமுடியாத மல்யுத்த ஹீரோக்கள். இந்த வீரர்களுக்குப் பட்டப்பெயர்களும் உண்டு. இந்திய செஞ்சிங்கம்--தாராசிங். மாமிச மலை--கிங்காங். செந்தேள்--ரெஸ்ட்காப்பியன். பறக்கும் வீரன்--வாங்க் பெக்லி.வாங்க்பெக்லி, ரெப்ரி. இரண்டு மல்யுத்த வீரர்கள் கிடுக்கிப்பிடி போட்டு பிணைந்து முட்டிக்கொள்கையில், மல்யுத்த கோதாவில் பறந்து வந்து அவர்கள் புஜங்களுக்கிடையில் இறங்கி அவர்களைப் பிரித்து விடும் ரெப்ரி வாங்க்பெக்லியின் பாணி பிரசித்தம்!இத்தனை வீரர்களுக்குமிடையே, நம் இந்திய செஞ்சிங்கம் தாராசிங் தான் வெகு இளமையாகத் தோற்றமளிப்பார். அத்தனை பேர் அனுதாபமும், நம்மவர் என்று அவர் மேல்தான் படிந்திருக்கும். இவரோடு மாமிசபர்வத்மாக கிங்காங் மோதுவார். இவர்கள் இரண்டு பேரின் இணை பிரசித்திபெற்றது. குஸ்திகோதாவில் விஸில் பறக்கும். கிங்காங் ஹங்கேரிக்காரர். உண்மையிலேயே அவர் நடக்கையில் மலை அசைந்து வருவது போலிருக்கும். (கம்பனின் நினைவு வருகிறது) ரெஸ்ட்காப்பியன் கையைக் கத்திபோல் வைத்துக்கொண்டு வெட்டுவதில் கைதேர்ந்தவர். வாங்க்பெக்லி விஷயம் தெரியும். மாலை போய்தான் மல்யுத்தம் ஆரம்பிக்கும். அத்தனையும் தமுக்கம் மைதானத்தில் நடந்தாக நினைவு. சில காலைநேரங்களில், இந்த மல்யுத்த வீரர்கள் திறந்த வேன்களில் நின்றுகொண்டு, தெருக்களில் அணிவகுப்பு நடத்துவது போல வரிசைவரிசையாக கையசைத்து வருவார்கள். அடடா! அடடாவோ! அந்த நேரங்களில் தெருவோரங்களில் இவர்களைப் பார்க்கக் கூட்டம் சொல்லி மாளாது. மதுரை மக்களிடையே உற்சாகம் கரைபுரண்டு ஓடும். அத்தனைக் கூட்டமும் மாலை தமுக்கம் மைதானத்தில் அலை மோதும்.

பின்னாட்களில், எழுத்தாளர் சாவி அவர்கள் ('வாஷிங்டனில் திருமணம்' சாவி தான்) தான் ஆசிரியரராய் இருந்த "சாவி" வார இதழில், இந்த மதுரை மல்யுத்த போட்டிகளைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்த பொழுது தான், இவரும், சின்ன அண்ணாமலையும் சேர்ந்து அந்தக்கால அந்த மல்யுத்தப் போட்டிகளை நடத்தினார்கள் என்கிற விவரம் அறிந்தேன். அந்தக் கட்டுரைகளில், இவரும் சின்ன அண்ணாமலையும் என்னவெல்லாம் கஷ்டப்பட்டு, விதவிதமான யுக்திகளைக் கையாண்டு, அலுப்புத் தட்டாமல் நிகழ்ச்சிகளை அமைத்துக் கூட்டத்தைத் திரட்டினார்கள் என்கின்ற விவரங்களை நகைச்சுவையுடன் சொல்லியிருப்பார். சின்ன அண்ணாமலையும் அருமையான நகைச்சுவை எழுத்தாளர். குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. ஒரு அண்ணாமலை முதலிலேயே பத்திரிகை உலகில் இருந்தமையால், இன்னொரு அண்ணாமலையான இவர் சின்ன அண்ணாமலை என்று அழைக்கப்பட்டார். கல்கி, சாவி, சின்ன அண்ணாமலை, தேவன், நாடோடி -- கூட்டு சேர்ந்து, தமிழ்பத்திரிகை உலகில் தம் நகைச்சுவை எழுத்தால், ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார்கள்.ஓ! 'அந்த நாளும் வந்திடாதோ...' என்று ஏக்கத்துடன் நினைக்கத் தான் தோன்றுகிறது.

(வளரும்)

23 comments:

கிருஷ்ணமூர்த்தி said...

பிள்ளையார் இன்னமும் இருக்கார். அவருக்கு முன்னால இருக்கற சிம்மத்தைத் திருப்பி வச்சா, மதுரைக்கு மழை வரும், சுபிட்சம் வரும்னு கவுன்சிலர்கள் எல்லாம் சேர்ந்து மாத்தி வச்ச கூத்தும் கொஞ்ச வருஷங்களுக்கு முன்னால நடந்தது!

மதுரைக்கு என்ன வந்தது, எப்படி இருக்குன்றது எல்லோருக்குமே தெரியுமே!

மருதையின்னா கோதாவில் குதிக்கறதுதான் ஞாபகத்துக்கு முன்னாடி வருது போல!

கீதா சாம்பசிவம் said...

தானப்ப முதலித்தெருவிலிருந்து//

தானப்பமுதலித் தெருவிலேயே முனிசிபாலிட்டி பள்ளிக்கு அருகே ஒரு தண்ணீர்த் தொட்டி இருந்ததே??? அடுத்த பக்கம் மேலாவணி மூலவீதியிலே தான் நாங்க இருந்தோம். அதுக்கு முன்னாலே வடுக காவல் கூடத் தெரு!

sury said...

நானும் தாராசிங், கிங்காங் மல்யுத்தம் பார்த்திருக்கிறேன். ஆனால் மதுரையில் அல்ல. திருச்சியில் 1950 ‍ 1960 ல் அவர்கள் மல்யுத்தம் பிரசித்தம்.

இப்போதெல்லாம், தெருக்குத் தெரு, மூலைக்கு மூலை, ஊருக்கு ஊரு, வாய் வார்த்தையிலேயே அந்த மல்யுத்தம் நடைபெறுவதால், அதற்கு மதிப்பு குறைந்துவிட்டது போலும் !!!


சுப்பு ரத்தினம்.

ஜீவி said...

@ கிருஷ்ணமூர்த்தி

அப்படியா.. அடேகங்கப்பா.. எத்தனை தகவல்கள்?..
ஹி..ஹி.. ஆரம்பப்பள்ளி ஸ்டேஜில் முதல் முதல் பார்த்து திகைத்து மகிழ்ந்ததை எழுதினேன்.. இன்னும் நிறைய கைவசம் இருக்கு..

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

வாங்க.. வாங்க.. நீங்க வராம மதுரையைப் பத்தி ஒரு பதிவா?..
இன்னும் நிறைய பேர் மிஸ்ஸிங்..
இன்னும் பாக்கலே போலிருக்கு!

கரெக்ட்! ஆங்!.. தண்ணித்தொட்டி
ஞாபகம் வந்ததே!.. மேலாவணி மூல வீதி தானா?.. வடுக காவல்கூடத் தெரு, சுருக்க கோயிலுக்குப் போக குறுக்கு வழி, இல்லையா?.. ஐ மீன்,
சுலப வழி.. அப்புறம், கீதா மேடம்,
முதல் அத்தியாய ஆதிமூலம் பிள்ளை தெரு ஞாபகம் வந்திருக்குமே.. LNP
தெரு?.. ஆஞ்சேநேயர் கோயில்?.. நினைவுகளை மீட்டெடுப்போம், அப்பப்ப வந்திடுங்க..
ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்போ
வந்தததுக்கு ரொம்ப நன்றி..

Sridhar Narayanan said...

//சின்ன பிள்ளையார் கோயில் இருந்த ஞாபகம்//

இருக்காரே இன்னமும்.

//செந்தேள் ரெஸ்ட் காப்பியன்//

அது Red Scorpion-ஓ? சரி விடுங்க. மருதக்காரய்ங்க எப்பவும் மாத்திதானே சொல்லுவோம் :))

சிம்மக்கல்லுக்கு இணையான வக்கீல் புதுத் தெருவில்தான் தாத்தா வீடு இருந்தது. சேதுபதி பள்ளியில் படிக்கும்போது மாடர்ன் லாட்ஜ் பஸ் நிறுத்தம்வரை நடந்து வந்து பின்னர் வக்கீல் புதுத் தெருவில் நுழைந்துவிடுவோம். பின்னர் சில வருடங்கள் தமிழ்சங்கம் சாலையில் இருந்தோம்.

கீதா சாம்பசிவம் said...

muthal athiyayam innum padikkalai, hihihi a.va.si. romba busy, chikirama padichutu kamentaren. appuram unga pathivu padipen, ellathukkum commenta mudiyalai! :))))))))))))))))

ஜீவி said...

@ சூரி

வாங்க, சூரி ஐயா! நலம் தானே?..
தராசிங் - கிங்காங் சவால்கள் திருச்சியில் கூடவா? எல்லாம் சாவி-சின்ன அண்ணாமலை கூட்டுக் கைங்கரியம் தான்.. சாவியின் அந்தக் கட்டுரைத் தொடரை நீங்கள் படிக்க வேண்டுமே?.. ரொம்ப டமாசு தான் போங்க! மனுஷன் ரொம்ப அனுபவஸ்தர். எழுத்துத் துறையில் சிஷ்ய கோடிகள் அநேகம். ஆனால் இந்தத் துறையில் மட்டும், ஆளாக்கியவர்களை பற்றி அதிகம் பேசுவதில்லை. சைக்கிள் கேப்பில் என் ஆதங்கத்தைச் சொல்லிவிட்டேன். அவ்வளவுதான்.

ஜீவி said...

Sridhar Narayanan said...

//செந்தேள் ரெஸ்ட் காப்பியன்//

அது Red Scorpion-ஓ? சரி விடுங்க. மருதக்காரய்ங்க எப்பவும் மாத்திதானே சொல்லுவோம் :))

சிம்மக்கல்லுக்கு இணையான வக்கீல் புதுத் தெருவில்தான் தாத்தா வீடு இருந்தது. சேதுபதி பள்ளியில் படிக்கும்போது மாடர்ன் லாட்ஜ் பஸ் நிறுத்தம்வரை நடந்து வந்து பின்னர் வக்கீல் புதுத் தெருவில் நுழைந்துவிடுவோம். பின்னர் சில வருடங்கள் தமிழ்சங்கம் சாலையில் இருந்தோம்.//

பால்ய மழலையில் Red Scorpion- ரெஸ்ட் காப்பியன் ஆகிவிட்டார் பார்த்தீர்களா?.. மருதக்காரய்ங்களை
விட்டுக் கொடுக்க மாட்டீங்களே?..

அடிசக்கை! வக்கீல் புதுத் தெரு தானே?.. ஒரு கல்யாண சத்திரம் கூட அந்தத் தெருவில் உண்டு இல்லையா?..ம்.. கருப்பட்டி சத்திரம்?.. இந்தப் பக்கம் பழைய சொக்கநாதர் என்றால் அந்தப் பக்கம் செல்லத்தம்மன். செல்லத்தம்மன் கோயில் தெருவில் சிலகாலம் இருந்திருக்கிறோம். அந்தக் கோயில் திருவிழா மறக்கமுடியாத ஒன்று.

சேதுபதி பள்ளி என்றவுடனேயே மஹாகவி நினைவுக்கு வருகிறார்.
ஒரு வேடிக்கை பார்த்தீர்களா?..
அப்பொழுதும், இப்பொழுதும் அது மாடர்ன் லாட்ஜே. எந்தத் தெரு தமிழ்ச்சங்க சாலையாயிறோ தெரியவில்லை.

முதல் வருகைக்கும் நினைவுகளை
பரிமாறிக்கொண்டமைக்கும் மிக்க நன்றி, சார்!

கீதா சாம்பசிவம் said...

//எந்தத் தெரு தமிழ்ச்சங்க சாலையாயிறோ தெரியவில்லை. //

குட்ஷெட் தெரு தாண்டி, சந்தைக்குப் போற வழியிலே தமிழ்ச்சங்கம் ரோடு எப்போவுமே இருக்கு. ஸ்ரீதர் நாராயணன் அங்கே இருந்திருப்பார் போல! :D

கீதா சாம்பசிவம் said...

//சேதுபதி பள்ளியில் படிக்கும்போது //

@ஸ்ரீதர் நாராயணன்,
எந்த வருஷத்திலே இருந்து எந்த வருஷம் வரை??????

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்,
//குட்ஷெட் தெரு தாண்டி, சந்தைக்குப் போற வழியிலே தமிழ்ச்சங்கம் ரோடு எப்போவுமே இருக்கு. ஸ்ரீதர் நாராயணன் அங்கே இருந்திருப்பார் போல! :D //

அப்பொழுது குட்ஷெட் தெரு அதே பெயருடன் தான் இருந்தது. சந்தைக்கு போற வழி பின்னால் தமிழ்ச்சங்கம் அங்கு வந்த பிறகு தமிழ்சங்க சாலையாயிற்று போலும்.

கீதா சாம்பசிவம் said...

//அப்பொழுது குட்ஷெட் தெரு அதே பெயருடன் தான் இருந்தது//

குட்ஷெட் தெரு எப்போவுமே அதே பேரிலே தான் இருக்கு. தமிழ்ச்சங்கம் ரோடும் அதே பெயரில் தான்.

ஆர்வி மில் போகும் சாலையின் குறுக்கேயா??? சரியா நினைவில்லை. ஆனால் சந்தைக்கு அருகே மணி ஆஸ்பத்திரி என ஒரு ஆஸ்பத்திரி முனிசிபாலிட்டி ஆஸ்பத்திரி??? இருந்தது. அதுக்கு முன்னாலேயே வரும் தமிழ்ச்சங்கம் ரோடு. எப்போவுமே தமிழ்ச்சங்கம் ரோடு மதுரையிலே உண்டு. கிருஷ்ணாராயபுர அக்ரஹாரத்தில் இருந்து கிட்டக்க இருக்கும். இந்தத் தெருக்களைத் தாண்டித் தான் ஞாயிறு, வியாழன் சந்தைக்குப் போகணும்னு நினைக்கிறேன்.

Sridhar Narayanan said...

தமிழ்சங்கம் எப்பவுமே உண்டே. B4 போலிஸ் ஸ்டேஷன், ஞாயிற்றுக் கிழமை சந்தை, பாண்டியன் ஆஸ்பத்திரி எல்லாம் இங்கதானே இருந்தது. சிம்மக்கல் ரவுண்டாணாவிலிருந்து மெஜுரா கோட்ஸ் போகும் வழி அதுதான். ரயில்வே கேட்டைத்தாண்டி மெஜுரா கோட்ஸ் சாலயாகிவிடும்.

குட்ஷ்ட் தெரு வேற பக்கம். குழப்பிகிட்டீங்கப் போல.

சேதுபதி ஸ்கூல்ல படிச்ச வருசமா? நேத்துதான் படிச்சது போல இருக்கு :) இதெல்லாமா பொதுவுல கேக்கறது கீதாம்மா. நம்ம பதிவுல வந்து மெயில் ஐடியோட கமெண்டுங்க. விரிவாச் சொல்றேன். ஹிஹி :)

கீதா சாம்பசிவம் said...

//குட்ஷ்ட் தெரு வேற பக்கம். குழப்பிகிட்டீங்கப் போல//

ஹிஹிஹி, ஆமாம் இல்லை??? அ.வ.சி.கொஞ்சம் குழப்பிட்டேன், சேதுபதி ஹைஸ்கூல் பத்திக் கேட்டேனா?? அப்போ இதுவும் நினைவுக்கு வரவே எழுதிட்டேன் போலிருக்கு! மத்தது சரியா இருக்கு இல்லை??? :))))))))))))

radhakrishnan said...

ஜி.வி.அண்ணா,
நாம ரொம்ப நெருங்கிட்டோம் போலிருக்கிறதே.காமாட்சி புரஅக்கிரகார
வாசிதான் நான்.ஆதிமூலஅக்கிரகாரஆரம்ப பள்ளியில் எனக்குநீங்கள் ஒரு வருடம்
சீனியர்.பின் சேதுபதி உயர்நிலைப்பள்ளி.பின் தமிழ்நாடு பாலிடெகனிக்.பின் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் குழந்தையுடன் காரைக்குடியில்பார்ட்டைம்(இன்ஜினியரிங்காலேஜில்) சிவில் படிப்பு.2001ல் படி ஓய்வுதற்போது பிறந்து,வளர்ந்த இடத்திலேயே வாசம்.கொஞ்சப்பேர்களுக்கே இப்படிக் கிடைக்கும்.இப்பொழுது தினமும் பழைய இடங்களை ஏக்கத்தோடு பார்த்து வருகிறேன்உங்களோடு தொடர்பு கொள்ள விரும்புகிறேன்

radhakrishnan said...

அன்புள்ள சிரீதர் நாராயணன்,
தற்போது எங்கு இருக்கிறீர்கள்? நம் மதுரையிலா?மதுரைப்பாசமே தனிதான்.

கீதா சாம்பசிவம் said...

ராதாகிருஷ்ணன், சேதுபதி பள்ளியா?? என் அப்பா கூட அங்கே தான் இருந்தார். நீங்க படிச்சப்போ யார் ஹெச் எம்?? வி. புஷ்பவனம்????

ஜீவி said...

@ Radhakrishnan

காமாட்சிபுர அக்ரஹாரவாசி, அதுவும் ஆதிமூல அக்கிரஹார ஆரம்பப்பள்ளி என்றால் கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது..

நிச்சயம் சந்தித்து பேசிக் களிப்போம்.

radhakrishnan said...

thanks geethamma,
very glad.appa peyar enna?
h.m thiru.ramaiahiyer avarkal.nan v.p. enra v.pushpavanamavarkalin student.athuvum avarin pet student. adada,arumaiyana aasiriarkal.english and science v.p eduppar enna dedication.varumpothe oru neelamana scale marrum colour chalkpiece uan vanthu arumayakappadam varainthu vilakkamaga sollikkoduppar.golden days marakkamudiyuma? h.m.sir moral instruction varam oru period varuvar .marakkave mudiavillai.geethamma ippothu engu irukkireerkal?etechchaiyaga arumaiyana nanbarkal kidaithirukkireerkal en athirshtamthan. mudiyumpothu madurai varungal.nanri.

ஜீவி said...

@ Radhakrishnan

கீதாம்மாவின் பதிவுகள் 'எண்ணங்கள்' என்னும் தலைப்பில் பதியப்படுகின்றன.
அவர் பெயரை க்ளுக்கி நீங்கள் அவர் பதிவுக்குப் போய்ப் படிக்கலாம். உங்கள் எண்ணங்களையும் செதுக்கலாம்.

கோமதி அரசு said...

வடுக காவல் கூடத் தெருவில் ”மகாலிங்கம் காம்பண்ட்” தான் என் தங்கையின் சொந்தவீடு. உறவோடு உறவாடி பதிவில் உள்ள ஆயுசு ஹோமம், காதணி விழா கதாநாயகன் சஞ்ஜிவ் மகாலிங்கத்தின் பாட்டிதான் என் தங்கை.

அவள் வீட்டுக்கு போவதற்கு சேதுபதி பள்ளி பஸ் நிறுத்ததில் இறங்கி போவோம்.

உங்கள் மதுரை அனுபவம் நன்றாக இருக்கிறது.

வே.நடனசபாபதி said...

நான் தாரசிங் மற்றும் கிங்காங் பற்றி நாளேடுகளில் படித்திருக்கிறேன். ஆனால் அவர்களது மல்யுத்தத்தை பார்த்ததில்லை. வட மாநிலங்களில் இருந்தபோது தாராசிங் நடித்த இந்திப் படங்களைப் பார்த்திருக்கிறேன்.

கல்கி, தேவன், நாடோடி, சாவி , சின்ன அண்ணாமலை போன்ற நகைச்சுவை ஜாம்பவான்கள் போன்றவர்களை இனி தமிழ் பத்திரிக்கை உலகம் என்று காணும் என்ற ஏக்கம் எனக்கு உண்டு.

Related Posts with Thumbnails