Friday, September 25, 2009

மறக்க முடியாத மதுரை நினைவுகள்--3

மீனாட்சி அம்மன் கோயிலை நினைத்தாலே நினைவுக்கு வருவது அந்த பொற்றாமரைக் குளம் தான். அந்த வயதில் ஒன்றும் தெரியாது. சந்நிதிக்கு போகும் முன் கால்களைச் சுத்தம் செய்து கொள்வதற்காக குளம் என்கிற எண்ணம் தான். என்றும். "பாத்துடா.. பாத்து...பாசி வழுக்கிடும்.." குரல் கேட்காது இருக்காது. பொற்றாமரை குளத்தில் ஏடுகள் எதிர்த்து வந்த கதைகளெல்லாம் பின்னால் தான் தெரியும்.

குளம் தாண்டி உள் நுழைந்தவுடன் பிர்மாண்டமாய் நிற்கும் வீரபத்திரர்(?) சிலையை நிமிர்ந்து பார்த்தாலே பிரமிப்பாய் இருக்கும். இப்பொழுது சாதாரணமாய்த் தெரியலாம். எல்லாம் சின்ன வயதில் மனத்தில் பதிந்த பிம்பங்கள். அங்கிருக்கும் தூணில் ஆஞ்சனேயரைப் பார்த்ததுமே, "அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத்தாவி.." என்று சதாசிவம் வாத்தியார் பள்ளியிலே சொல்லிக் கொடுத்தது, சிந்தையிலே வரிவரி்யாய் வார்த்தைகளாக ஓடி, ஒன்றிய உணர்வாய் வெளிப்படும். அம்மன் சந்நிதி நுழைவுக்கு முன்னால், கம்பி வலைகளுக்குப் பின்னால், நீண்ட கம்பிகளில் தொத்திக்கொண்டு நிறைய கிளிகள் இருக்கும். அதனருகில் போய் "மீனாட்சியைக் கள்ளன் கொண்டு போய்விட்டான்" என்று உரத்துச் சொன்னால், அவை "கீக்கீ..கீக்கீ" என்று கத்தும். இதெல்லாம் என் வயதுக்கும் கீழான சிறுவர்களுக்கு விளையாட்டு என்றால் சிலசமயம் பெரியவர்களும் தங்கள் குழந்தைகளைத் தூக்கி வைத்துக் கொண்டு, "எங்கே சொல்லு, பார்க்கலாம்.. மீனாட்சியை.." என்று குழந்தைகளுக்கு வார்த்தை வார்த்தையாகச் சொல்லிக்கொடுத்து, அந்தக் கிளிப்பிள்ளைகளும் தொண்டைவரள, "கீக்கீ..கீக்கீ.." என்று ஓயாமல் பதில் குரல் கொடுத்து ஓய்ந்து போகையில் எனக்குப் பாவமாக இருக்கும்.


சந்நிதியில் அம்மனைத் தொலைவில் வைத்து, நம்மை பளபள பித்தளை தகடுத் தடுப்புகளால் தடுத்து வரிசைக் கட்டி நிற்கவைத்த உணர்வு ஏற்படும். தடுப்புகள் தடுத்து, முன்னிற்கும் மனிதத் தலைகளும் மறைத்து, எம்பி எம்பிப் பார்த்தும் சந்நிதி தெரியாமல் பரிதாபமாய் நிற்கையில், இத்தனை வேலிகளையும் தாண்டி, அம்மனின் வலத்தோளில் கமுக்கமாக உட்கார்ந்திருக்கும் பச்சைக்கிளியை, நின்ற கோலத்தில் புன்முறுவல் தவழ நெஞ்சில் பதிந்த அங்கையர்க்கண்ணியை, யாரோ என்னை தூக்கிக்காட்டிய பொழுது கண்ணிமைக்காமல் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்ட நினைவு அழியவில்லை.

அம்மன் சன்னதியில் இருக்கும் கூட்டம் சுவாமி சன்னதியில் கொஞ்சம் குறைச்சலாய் இருப்பதாய் தோன்றி, நின்று நிதானித்து இறைவனை வழிபட வழிவகுக்கும். கூட்டக் குறைச்சல், மக்கள் அம்மனை வழிப்பட்டு விட்டு, இந்த சந்நிதி வராமல் அப்படியே போய்விடுவார்களோ என்று கூட நினைக்கத் தோன்றும். அப்படி நினைக்கையில், நான் மட்டுமே அவன் இடத்தில் இருக்கிற மாதிரி அப்பனிடம் ஒரு நெருக்கம் கூடும். குருக்கள் தரும் விபூதியை ஒன்றுக்கு இரண்டு தடவையாய் கேட்டு வாங்கிப்பூசிக்கொண்டு, ஆவுடையார் மேல் அமர்ந்திருக்கும் லிங்க சொரூபனின் மேனியில், வெள்ளை வெள்ளைப்பட்டைகளாய்த் தெரியும் வீபூதிப்பட்டைகளையே உற்றுப்பார்ப்பேன். ரொம்ப நேரத்திற்குப் பெருமானை விட்டுப் பிரிந்து போக மனசு வராது. உமாபதியைப் பற்றி பெரியம்மா சொல்லி சொல்லி மனசில் படிந்த கதைகளெல்லாம் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்து, இவனே உமையொரு பாகத்தானாய் இருக்கையில், எல்லாப் பெருமையும் இவனுக்கும் சேர்த்துத் தானே என்று மனதைச் சரிசெய்து கொண்டு சந்நிதியை விட்டுச் செல்ல மனமில்லாமல், பிரியாமல் பிரிவேன் போலும்.

இப்பொழுது நினைத்துப்பார்க்கையில் சைவத்தில் சக்தி வழிபாடு கொஞ்சம் தூக்கலாய்த் தான் தெரிகிறது. இருந்தாலும், அம்மையும் அப்பனும் ஆகி.. இரண்டு பேரும் சேர்ந்து வந்து தான் அருள் பாலிப்பார்கள். இரண்டு பேருக்கும் கணமேனும் பிரியாத அப்படியொரு நெருக்கம். போதாக்குறைக்குக் கூட்டுக்குடும்பத்தை வலியுறுத்த இரண்டு மகன்களையும் எங்கெங்கோ விட்டு விடாமல் தன்னிடத்திலேயே இருத்தி வைத்துக் கொள்வார்கள். சும்மாச் சொல்லக்கூடாது; மகன்களும் அப்படியே. தாங்கள் தனி சந்நிதிகளாய் இருக்குமிடங்களிலும், தாயையும், தந்தையையும் தங்கள் இடத்திலேயே தவறாமல் இருத்தி வைத்துக் கொண்டிருப்பார்கள். இதில் சின்னவனுக்கு, தாய் தந்தையர் பக்கத்தில் இல்லையென்றால், சரிப்படாது. பெரும்பாலும் தான் இருக்கும் இடங்கள் மலைகளும், குன்றுகளும் ஆச்சே என்று கூடப்பார்க்க மாட்டான். "வாருங்கள், என்னோடையே.." என்று கைபிடித்து, குன்றுகள் மேலும் ஏற்றி தன்னோடு கூட்டிக் கொண்டு போய்விடுவான். பெற்றோர்களிடம் கோபித்துக் கொண்டு ஒருதடவை போய்விட்டோமே என்கிற குற்ற உணர்வு போலும். பெரியவனும் ஞானமார்க்கமாய் உண்மையிலேயே 'பெரியவனாய்' யாராலும் விட்டு விட முடியாதபடி வளர்ந்து விட்டதும் சின்னவனுக்கு செளகரியமாய்ப் போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அழகனாய், ஆறுமுகனாய் அண்ணன் பக்கத்திலும் இருப்பான்; அப்பன்-தாய் அருகாமையிலும் இருப்பான். திருப்பரங்குன்றம் மட்டுமில்லை, பிற்காலத்தில் எந்த முருகன் கோயிலுக்குப் போனாலும் இந்த நினைப்பு தான் முந்தி வரும்.

சித்தரை திருவிழாபோது, தானப்ப முதலித்தெரு வீட்டு உயர்ந்த மொட்டை மாடியில் ஏறிக்கொண்டு, கீழே தெருவில் அம்மையப்பனின் தேர் உலா பார்த்தபொழுது, மேல்மாடிகளில் ஏறிக்கொண்டவர்கள், அந்த வெயிலில் வடம் பிடித்து தேர் இழுப்போர் பசி போக்க, கூடை கூடையாக திண்டுக்கல் மலை வாழைப்பழத்தை சீப்பு சீப்பாக வீசிப் போடுவர். எங்கே பார்த்தாலும் நீர்மோர் பந்தல்.

ஒருதடவை கள்ளர் வைகை ஆற்றில் இறங்கும் பொழுது, ஆற்றில் வெள்ளம் வந்துவிட்டது. கூட்டம் மொத்தமும் அடித்துப்பிடித்துக் கொண்டு மேடு ஏறத் தவித்துத் தத்தளித்தது. "குழந்தையை கெட்டியா பிடிச்சிக்கோ" என்று என் பெரியம்மா, பத்து வயசுப் பையன் என்னையும்-அம்மாவையும் அசுர பலத்தோடு இழுத்துக்கொண்டு, சின்ன கல்பாலம் ஏறிக்கடந்து ரோடுக்கு வந்தது இன்னும் மறக்கவில்லை.


பத்து வயசில், நாயக்கர் மஹால் தூண்கள் பிர்மாண்டமாய் எனக்கு எப்படிக்காட்சி அளித்திருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். கும்பலாய் நான்கு பேருக்குக் குறையாமல், ஒருவர் கை ஒருவர் பற்றி தூணை அணைக்கமுடியமல் தோற்றுப் போவோம். தரையில் படுத்து மேல் முகட்டுச் சித்திரங்களை அண்ணாந்துப் பார்ப்பது, ஒவ்வொரு தூணிற்கும் இடையில் எத்தனை கோலங்கள் என்று எண்ணுவது, தட்டாமாலை சுற்றி சித்திரம் பார்த்துத் தடுமாறி விழுவது என்று இது அது என்றில்லாமல் மனசுக்கு என்ன தோன்றுகிறதோ, அதை உடனுக்குடன் அமுல் படுத்தும் அத்தனை விளையாட்டுகள்.

இப்படித்தான், ஒரு சித்திரா பெளர்ணமி அன்று குடும்பத்தில் அத்தனை பேரும் அழகர்கோயில் போயிருந்த பொழுது, நான் என் வயசொத்தக் வால்களுடன் ஓடிப்பிடித்து விளையாடுகிறேன் பேர்வழியென்று ஓடி ஓடி சுற்றம் விட்டுத் தனியே தொலைந்து போனது ஒரு தனிக்கதை!

(வளரும்)

21 comments:

Sridhar Narayanan said...

//கூடை கூடையாக திண்டுக்கல் மலை வாழைப்பழத்தை சீப்பு சீப்பாக வீசிப் போடுவர். எங்கே பார்த்தாலும் நீர்மோர் பந்தல்.//

நாங்களும் தேரெல்லாம் இழுத்திருக்கோமில்ல. நீர் மோர் பந்தல் எல்லாம் சரிதான். ஆனா இந்த வாழைப்பழத்தை தூக்கிப் போடுறது என்ன கலாச்சாரமோ. பாதி பழம் கிழே விழுந்து நசுங்கித்தான் போகும்.

பிர்லா நிறுவனத்தினர் தேர் சக்கரத்திற்கு வளையம் அமைத்த பொழுது மிகவும் பரபரப்பாக இருந்தது. அப்படி ஒரு திருவிழா அனுபவத்தை இப்பொழுது மிகவும் மிஸ் செய்கிறோமோ என்று இருக்கிறது.

கிருஷ்ணமூர்த்தி said...

/பொற்றாமரை குளத்தில் ஏடுகள் எதிர்த்து வந்த கதைகளெல்லாம்..../

ஏடு எதிர்த்து வந்தது பொற்றாமரைக் குளத்தில் இல்லை, அது சோழவந்தான் பக்கத்தில் திருவேடகம் என்ற இடத்தில்! சமணர்களோடு சம்பந்தர் புனல் வாதம் செய்த போது, ஏடு வைகையை எதிர்த்து திருவேடகம் என்ற இடத்தில் ஒதுங்கியதாம்!

இந்த வருடம், ஏடு எதிர்த்து கரையேறிய கதையை வைகையாற்றில் பள்ளம் வெட்டி கொஞ்சம் தண்ணீர் விட்டு நடத்தின கதையைப் புகைப்படமாக தினமலர் நாளிதழில் தேடித் பார்க்கலாம்.

பொற்றாமரைக் குளத்தில் இருந்தது சங்கப்பலகை! கவிஞரும், அவர் அரங்கேற்றம் செய்ய வந்த நூலும் சங்கப்பலகையில் வைத்துக் கவிழாமல் இருந்தால், சங்கம் ஏற்றுக்கொண்டது. கவிழ்ந்துபோனால், ஊத்திக்கொண்டது! இப்படியெல்லாம் தமிழை இறையனாரும், சங்கப்புலவர்களும் அந்த நாளில் வளர்த்திருக்கிறார்கள்:-))

கீதா சாம்பசிவம் said...

//சித்தரை திருவிழாபோது, தானப்ப முதலித்தெரு வீட்டு உயர்ந்த மொட்டை மாடியில் ஏறிக்கொண்டு, கீழே தெருவில் அம்மையப்பனின் தேர் உலா பார்த்தபொழுது, மேல்மாடிகளில் ஏறிக்கொண்டவர்கள்,//

சித்திரைத் திருவிழாவுக்கு மாசி வீதிகளில் சாமி புறப்பாடு நடக்கும், தானப்ப முதலித் தெருவில் இருந்து பார்த்தீங்கன்னால் ஒருவேளை ஆவணிமூல உற்சவமா இருக்குமோ??? என்ன சந்தோஷமா இருக்கும் வீட்டு வாசல்லேயே உட்கார்ந்துண்டு சாமி வரதைப் பார்க்கையில்!ம்ம்ம்ம் அந்த நாளும் வந்திடாதோனு தான் இருக்கு.

கீதா சாம்பசிவம் said...

அப்புறம் அப்போல்லாம், அம்மனை நன்றாகக் கிட்டே போய்ப் பார்த்திருக்க முடியுமே? எனக்குத் தெரிஞ்சு 76 வரையிலும் உள்ளே போக அப்படி ஒண்ணும் கூட்டமோ, தடையோ இருக்காது, தெரிஞ்ச பட்டர் இருந்தால் போதும். 76-க்கப்புறம் அம்மனை தர்ம தரிசனம் என்ற கட்டுப்பாட்டில் அடைச்சாச்சு, என்றாலும் வெளியே இருந்து ஓரளவு பார்க்க முடியும், அதுக்கப்புறம் பத்து ரூபாய் கொடுத்து கடைசியாய் 2005 லேயும் அம்மனை உள்ளே போய்ப் பார்த்திருக்கேனே. இப்போக் கடைசியாய் 2007-ல் போனப்போ மீனாக்ஷியைப் பார்க்க முடியவே இல்லை, அப்புறமாத் தெரிஞ்சது, அவ மதுரையை விட்டே ஓடிட்டானு! :(((((((((((((((((((((((((((

ராம்ஜி.யாஹூ said...

nice post thanks for sharing. if you added pictures it would be great

Life Lessons from a Late Bloomer said...

Very nice post! I had been to Madurai once with my parents. One can keep gazing at Meenakshi's beauty forever. Pray that i get to go see Her sometime soon.

ஜீவி said...

@ Sridhar Narayanan

இந்த வாழைப்பழ எரிதல் விஷயத்தில் நான் கூட உங்களை மாதிரியே நினைத்துக் கொள்வதுண்டு.. பாதி வேஸ்ட் ஆவது மட்டுமில்லை, எத்தனைப் பேர் வழுக்கிவிழ ஏதுவாகிப் போய் விடும்?..
இந்த வாழைப்பழத்திற்கும் திருவிழாக்களுக்கும் என்ன ராசியோ தெரியவில்லை; பிற்காலத்துக்காரர்கள்
விஷயம் தெரிந்தவர்கள். திருவிழாக்களில் ஒதுக்குப்புறமாக லாரி லாரியாக வாழைப்பழ லோடுகளை ஏற்றிக்கொண்டு, சுற்றி கூட்டத்தை வளைத்துப் போட்டுக்கொண்டு கூவி கூவி ஏலம் விட்டு எறிவார்கள், பாருங்கள்.. காசுக்கு காசும் ஆயிற்று, எறிதலுக்கு எறிதலும் ஆயிற்று.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

ஓ! அது ஆவணிமூல உற்சவமோ?..
ஆனால் தேர் பார்த்த ஞாபகம் இருக்கே?.. நிச்சயம் அது தானப்ப முதலித் தெருதான்!

வீட்டு வாசல் குறட்டில் உட்கார்ந்து..
நல்ல நினைவுகள் எப்பொழுதுமே
கிறக்கம் கொடுக்கக் கூடியவை தான்!
அது, அதன் தொடர்ச்சியான இன்னொன்று என்று.. முடிவில்லாத வளையங்களாய்...

ஒன்று மட்டும் நிச்சயம்.. சுவையான நினைவுகளை திரட்டத் தெரிந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் தாம்!

ஜீவி said...

மிக்க நன்றி, ராம்ஜி யாஹூ!

ஜீவி said...

Life Lessons from a Late Bloomer said...

//Very nice post! I had been to Madurai once with my parents. One can keep gazing at Meenakshi's beauty forever. Pray that i get to go see Her sometime soon.//

தங்கள் எண்ணப்படியே எல்லாம் நடக்கட்டும்.. எல்லாம் அன்னையின் அருள்! குழந்தைகளின் கோரிக்கைகள் அன்னைக்குத் தெரியாததா?

கீதா சாம்பசிவம் said...

//ஓ! அது ஆவணிமூல உற்சவமோ?..
ஆனால் தேர் பார்த்த ஞாபகம் இருக்கே?.. நிச்சயம் அது தானப்ப முதலித் தெருதான்!//

சான்ஸே இல்லை! :))))))) ஆவணி மூல உற்சவத்துக்குக் கூட நீங்க தானப்ப முதலித் தெரு வீட்டு மாடியிலே இருந்து மேலாவணி மூலவீதி தெரிஞ்சால் தான் பார்த்திருக்க முடியும்! :))))))))) மேலாவணி மூலவீதியிலே இருந்து வடக்காவணி மூலவீதிக்குத் திரும்பிடுமே ஸ்வாமி புறப்பாடு எல்லாமே. அங்கே இருந்து கீழாவணி மூலவீதி போய் நிலைக்குப் போயிடும்னு நினைக்கிறேன்.

கீதா சாம்பசிவம் said...

சித்திரைத் திருநாள் முழுக்க முழுக்க மாசிவீதிகள் தான்! தானப்ப முதலித் தெருவிலே இருந்து தேர் பார்த்தா வடக்கு மாசி வீதிக்கு வந்திருக்கணும். தானப்ப முதலித் தெருவில் தெரு கடைசியிலே"இந்த வாரம் ஆநந்த விகடன் வாசித்தீர்களா?" போர்டு போட்டிருக்கும் ஜெமினி நாயுடு வீடையும் , த.பி.சொக்கலால் வீடையும் தாண்டிக் குடித்தனம் இருந்திருந்தால் வடக்கு மாசி வீதியில் தேரோடும் போது பார்த்திருக்கச் சான்ஸ் உண்டு. :))))))))))))))))))))

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

டவுன் ஹால் ரோடைத் தவிர நாங்கள் நீண்ட தெருவாய் குடியிருந்த இடம் தானப்ப முதலி தெரு ஒன்று தான்.
குட்டித் தெரு டவுன் ஹால் ரோடுக்கும் தேருக்கும் சம்பந்தமில்லை.
மொட்டை மாடி, நடுமாடி என்று ஏறிக் கொண்டுதான் திருவிழா பார்ப்போம்.
ஒன்பது வயதில் பார்த்த நிகழ்ச்சி.
நினைவு சரட்டில் ஏதோ முடிச்சு; வேறு எங்காவது அல்லது டி.வி.யில் பார்த்தது அப்படி இப்படி ஏதாவது நினைவுகளின் பாக்கி நுனி இந்த நினைவுகளில் பின்னிக் கொண்டு விட்டதோ என்னவோ.. ஓஹ்.. யோசிக்க யோசிக்க தேங்கல் தான் ஏற்படும். அடுத்த மேட்டருக்குப் போவோம். இடையில் ஏதாவது நினைவுக்கு வரும். தெரிவிக்கிறேன்.

நினைவில் அலசியதற்கு மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

வீரபத்திரர் சிலை பொற்றாமரைக் குளத்துக்குப் பக்கத்தில் இல்லையே ஐயா. சுவாமி சந்நிதியில் தானே இருக்கிறது? ஆஞ்சநேயரும் சுவாமி சந்நிதியில் தான் இருக்கிறார். ஒரு வேளை இராசகோபுரத்து நுழைவாயில் வழியாக கோவிலுக்கு வருவீர்களோ? அப்போது தான் இவர்களெல்லாம் முதலில் தரிசனம் தருவார்கள்.

சின்ன வயசில கிளிக்கூண்டைப் பார்த்தது நிழலாக நினைவிருக்கிறது. நான் கொஞ்சம் வளரும் போது அந்தக் கூண்டு காணாமல் போய்விட்டது என்று நினைக்கிறேன்.

அது என்னவோ அப்படித் தான். இன்றைக்கும். அம்மன் சன்னிதியில் இருக்கும் கூட்டம் சுவாமி சன்னிதியில் இருப்பதில்லை. சுவாமி சன்னிதியில் நின்று நிதானமாகத் தரிசனம் செய்யலாம்.

ஜீவி said...

ஆறு அல்லது ஏழு வயதில் கோபுரத்தின் பெயரெல்லாம் தெரியாததல்லவா?.. பொற்றாமரை குளம்-- அதைப் பற்றிய நினைவு -- சின்னப் பையனின் நினைவுகளில் கோயிலுக்குள்ளே நுழைகையிலேயே
பிர்மாண்டமாய் மிரட்டும்படியாய் இருந்த சிலைகள் -- இப்படித்தானே நினைவு போகும்?..

ஆரம்பத்திலிருந்து கடைசிவஅரை அந்தப் பருவப்பார்வையைத் தான் பதிந்திருக்கிறேன். குழந்தைப் பருவ நினைவுகளாய் இருப்பதால் தான் எந்தப் பூச்சுமற்று இவை இன்றும் மறக்கமுடியாமல் இருக்கின்றன.

வளர்ந்த பருவத்தில் மதுரை மாதிரி பல கோயில்களைப் பார்த்து விட்டேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் உசத்தி. திருநெல்வேலியிலும் இருந்திருக்கிறேன்.. நெல்லையப்பர் கோயில்என்ன,சாதாரணமானதா?..
காஞ்சீபுரத்திலும் பல வருடங்கள் இருந்திருக்கிறேன். ஒரு கோடியில் வரதராஜர் என்றால் இன்னொரு கோடியில் ஏகாம்பரேசுவரர். நடுவில்
அன்னை காமாட்சி, அருகில் சுட்டிப் பையன் மகன் சுப்ரமணியன் குமரக் கோட்டத்தில். சைவமும், வைணவமும் கைகோர்த்த இடம்.
எக்காலத்தும் ஏதாவது ஒரு கோயிலில் திருவிழாதான்; வாணவேடிக்கைதான்.
பல ஆண்டுக்குக்கு ஒருமுறையான அத்திவரதர் தரிசனமும் கிட்டியிருக்கிறது.

இருந்தும் கொஞ்சம் கூடிய வயதில்
அந்த வயதிற்கேற்பவான உணர்வுகள்..
பால்ய வயது பிர்மாண்டம் சாதாரணமாகிவிட்டது.. அவ்வளவுதான்.
கோயில் என்று மட்டுமில்லை. எல்லாவற்றிலும் இப்படித்தான்.

ஆக இளமைக்கும் முந்தியதான நினைவுகள் அழிக்கவொண்ணா சித்திரங்களாய் ஒருவித பிரமிப்புடன் நெஞ்சில் பதிந்துவிடுகின்றன. இப்பொழுது பார்த்த மதுரையில் அந்த பிரமிப்பு இல்லை. 'அட..' இந்த இடம், இப்படியாகி விட்டதா'
என்று ஒரு பார்வையாளன் மாதிரி பார்க்கத்தான் முடிந்தது. அந்த பார்வையில் ஒரு சோகம் வேறே.

உங்களுக்கு எந்த வயதிலிருந்து நினைவைத் திரட்ட முடிகிறது என்று நினைத்துப் பாருங்கள்.. அது எதுபற்றியதாக இருந்தாலும் சரிதான்.
அதை ஒரு பதிவு மாதிரி எழுதிப்பாருங்கள்.. அற்புதமான அனுபவமாய் இருக்கும். பரிசோதித்துத் தான் பாருங்களேன்!..

வருகைக்கும் பகிர்ந்தலுக்கும் மிக்க நன்றி, குமரன்!

கிருத்திகா said...

சைவ வழிபாட்டின் ஆரம்ப நிலையில் சக்திக்கே முதலிடம் ஆனாலும் நாள் செல்லச்செல்ல பக்தி கனிந்து சிவத்தில் சீவத்தை தேடும் முதிர்ச்சி வரத்தான் செய்கிறது.. அம்மையே அப்பனிடம் அழைத்துச்செல்லும் அழகிதுவோ....இது தொடர்பாக ஜெயமோகனின் கொற்றவையில் இருந்து சில வரிகளை சமயம் வரும்பொழுது பகிர்ந்து கொள்கிறேன் மிகவும் அபூர்வமான ஆழமான கற்பனை படிப்பதற்கு அத்தனை சுகமாகவும் இனிதாகவும் இருந்தது.

ஜீவி said...

@ கிருத்திகா,

தங்கள் பகிர்தலுக்கு மிக்க நன்றி. 'ஆத்மாவைத் தேடி'யில் எல்லா வழிப்பாட்டு நெறிகளையும் அவற்றின் தாத்பரியங்களையும் சொல்ல ஆசை.

திரு. ஜெயமோகனைக் குறித்து நாம் பெருமைப் பட நிறைய உண்டு. அவர் தாய் மாமன் கேசவபிள்ளை இந்த தேசத்தின் நல்வாழ்வு குறித்து நிரம்ப கவலைப்பட்டவர்; அதற்காக செயல்பட்டவர். குமரி மாவட்டத்தில் எடுத்துக் காட்டாக வாழ்ந்த தியாகி. அவரது தாயார் விசாலாட்சி அம்மையாருக்கு எழுத்தில் மிகுந்த ஆர்வமுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தற்கால இலக்கியம் குறித்தான ஜெயமோகனின் பார்வையும் பரந்து பட்டது. 'கொற்றவை'யை வாசிக்க ஆர்வம் மிக உண்டு. விரைவில் அதைச் செய்வேன்.
வாய்ப்பு கிடைக்கும் பொழுது தாங்களும் தாங்கள்
சுட்டியிருப்பதைப் பகிர்ந்து கொள்ளவும்.

radhakrishnan said...

g.v.anna,
ippothu maiai vazhappazhaththai enge parkkamudikirathu?
while seeing various comments,i feel proud and elated in residing in the same area.i can only whole heartedly invite u ,geetha mami and others to come to maduraiat any time ,of course after prior intimation.i shall be the host and will accompany u to all the places u want as i myself am longing to share the nostalgic memories of younger days with like minded people.

ஜீவி said...

@ Radhakrishnan

தங்கள் அன்பான அழைப்புக்கு நன்றி.
நிச்சயம் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணுவோம்.

கோமதி அரசு said...

கும்பலாய் நான்கு பேருக்குக் குறையாமல், ஒருவர் கை ஒருவர் பற்றி தூணை அணைக்கமுடியமல் தோற்றுப் போவோம். தரையில் படுத்து மேல் முகட்டுச் சித்திரங்களை அண்ணாந்துப் பார்ப்பது, ஒவ்வொரு தூணிற்கும் இடையில் எத்தனை கோலங்கள் என்று எண்ணுவது, தட்டாமாலை சுற்றி சித்திரம் பார்த்துத் தடுமாறி விழுவது என்று இது அது என்றில்லாமல் மனசுக்கு என்ன தோன்றுகிறதோ, அதை உடனுக்குடன் அமுல் படுத்தும் அத்தனை விளையாட்டுகள்.//

சிறு வயதில் ரசித்த காட்சிகளை கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்
.
முகட்டு சித்திரங்களை நிறைய எடுத்தேன் எனக்கு எடுக்க தெரிந்தவரை. இன்னும் நிறைய படங்கள் இருக்கிறது பதிவில் போட்டது போக.

வே.நடனசபாபதி said...

// மக்கள் அம்மனை வழிப்பட்டு விட்டு, இந்த சந்நிதி வராமல் அப்படியே போய்விடுவார்களோ என்று கூட நினைக்கத் தோன்றும்.//
முதன் முதல் 1969 ஆம் ஆண்டு மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்றபோது சுவாமி சந்நிதியில் ஓரிருவரே இருந்ததைப் பார்த்ததும் எனக்குக் கூட இந்த எண்ணம் தோன்றியது.
//அந்த வெயிலில் வடம் பிடித்து தேர் இழுப்போர் பசி போக்க, கூடை கூடையாக திண்டுக்கல் மலை வாழைப்பழத்தை சீப்பு சீப்பாக வீசிப் போடுவர்.//
மலை வாழைப்பழத்தை தற்போது காண்பதே அரிதாக இருப்பதால் இந்த காட்சியை இப்போது பார்க்க இயலாது என எண்ணுகிறேன்.
//ஒருதடவை கள்ளர் வைகை ஆற்றில் இறங்கும் பொழுது, ஆற்றில் வெள்ளம் வந்துவிட்டது//
நினைத்துப்பார்க்கவே வியப்பாய் உள்ளது. பழைய நிகழ்வுகளை அசைபோட்டு, சுவைத்து, இரசித்து எழுதியிருக்கிறீர்கள்.

Related Posts with Thumbnails