Monday, September 28, 2009

மறக்க முடியாத மதுரை நினைவுகள்--4

4. டவுன் ஹால் ரோடு புராணம்


க்கீல் புதுத்தெருவின் நடுவில் வெட்டிச்செல்லும் தெரு, செல்லத்தம்மன் கோயில் தெரு. தெருவிற்கான பெயர்க் காரணம், தெருவின் முக்கில்(!) செல்லத்தம்மன் என்னும் அம்மன் கோயில் ஒன்று இருக்கும். தானப்பமுதலித் தெருவிலிருந்து வீடு மாற்றி இந்தத் தெருவிற்கு வந்து விட்டோம். இந்த வீட்டின் மாடிப் போர்ஷனை எங்களுக்குக் குடக்கூலிக்கு விட்டிருந்தார்கள். வீட்டிற்கு சொந்தக்கார அம்மாவும், அவர் மகனும் வீட்டின் கீழ்ப்பகுதியில் வசிந்து வந்தனர். வீட்டு சொந்தக்காரப் பையன் என்னைவிட ஐந்து வயது மூத்தவராக இருக்கலாம்; சேதுபதி ஹைஸ்கூலில் படித்து வந்தார். இவர் என் பாடப் புத்தகங்களுக்கு பழுப்பு நிறக் கெட்டிக்காகிதத்தில் அருமையாக, அதுவரையில் எனக்குத் தெரிந்திராத ஒரு புது முறையில் அட்டை போட்டுத்தருவார். அந்த முறை எனக்கு மிகவும் பிடித்துப்போய், என் பையன், பெண்ணுக்கு இதே முறையில், பிற்காலத்தில் நிறைய புத்தகங்களுக்கு அட்டை போட்டுத் தந்து இருக்கிறேன். இப்படி அட்டை போடும் நேரங்களிலெல்லாம், ராஜாமணி என்னும் அவர் இன்றும் என் நினைவுக்கு வருவார். கூடவே,கோபால கிருஷ்ண கோன் பாடப்புத்தக விற்பனையாளர் களும், புதுமண்டபப் பழைய புத்தகக்கடைகளும் நினைவுக்கு வருகின்றன.

செல்லத்தம்மன் கோயிலுக்கு எதிரே பெரிய எண்ணைய் கடை ஒன்று உண்டு. கடைக்குப் பின்பகுதியில் எள் ஆட்டும் செக்கும் உண்டு. எங்கள் வீட்டுத்தேவைகளுக்கு இங்கு தான் எண்ணைய் வாங்குவோம். அந்தக்கடைக்காரர், சிறுவர்களைப் பார்த்தால் அப்பொழுதுதான் எள் ஆட்டிய புதுப் புண்ணாக்கும், வெல்லமும் தருவார். சிறுவர்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள். நானும் அவர் கொடுத்துச் சாப்பிட்டிருக்கிறேன். சுவையாக இருக்கும்.

டவுன் ஹால் ரோடின் நடுமத்தியில் அதை ஒட்டியவாறு ஒரு பக்கத்தில் அந்தக்காலத்தில் சின்ன தெரு ஒன்று உண்டு. அந்தத் தெருவின் முதலில் இருந்த மாடி வீட்டுக்கு குடித்தனம் மாறி விட்டோம். நானும் ஆதிமூலம் பிள்ளைத் தெரு ஆரம்பப்பள்ளியிலிருந்து ஆறாம் வகுப்பு வந்து விட்டதால், கோயிலுக்கு மிக அருகில் இருந்த அன்னக்குழி மண்டபம் ஸ்கூல் என்னும் பள்ளிக்கு மாறிவிட்டேன். பள்ளியின் உள் சென்றவுடனேயே, நட்டநடுப் பகுதியில், நிறைய ஆற்று மணல் கொட்டி மேடு தட்டப்பட்டிருக்கும். அந்த மணலில் நாங்கள் விளையாடிய 'சடுகுடு' விளையாட்டுகள், மறக்கமுடியாதவை. "நான் தான் உன் அப்பன்.. நல்லமுத்து பேரன்.. வெள்ளிப்பிரம்பெடுத்து விளையாட வாரேன்.. வாரேன்.." என்று 'வாரேன்..வாரேன்' னை இழுத்துப் பாடியபடி, மூச்சு விட்டு விடாமல் நடுக்கோடு தாண்டி. எதிரணி எல்லைக்குள் அட்டகாசமாய் நுழைந்து, அவர்களைப் பின்னுக்குத் தள்ளி, சில சமயங்களில் காலை மேல் நோக்கி வீசிக்காட்டி அவர்களை கால் பற்ற டெம்ட் பண்ணியும், முன்னோக்கி அவர்கள் ஓடி வருகையில், அவர்களிடம் பிடிபட்டும், வாரேன்..வாரேன்..னை விட்டுவிடாமல், மூச்சுப் பிடித்து, மீண்டு, எட்டி கைநீட்டி நடுகோட்டைத் தொடுவது சாகசம் தான்!.. ஸ்கூல் விட்டும், சில நாட்களில் ப்யூன் வந்து கதவைச் சாத்த வேண்டும் என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளும் வரை, விளையாடிக் கொண்டிருப்போம். புத்தகப் பையெல்லாம் மணல்... உடலெல்லாம் மணல் என்று அத்தனையும் தட்டி, சேர்ந்து வீடு போகும் வரை என்னென்னவோ அவரவர் பிரதாபங்கள் தான்...!

டவுன் ஹால் ரோடு வீட்டு வாசலில் பெட்டிக்கடை மாதிரி ஒரு கடையை பாலகிருஷணன் என்னும் கேரளத்தவர் வைத்திருந்தார். அவரது கடை அந்தக் காலத்தில் மிகப்பிரபலமாக இருந்த குறுக்கெழுத்துப் போட்டிகளுக்கான பதிவு - விற்பனை கடையாக இருந்தது. குறுக்கெழுத்துப் போட்டிகளில் R.M.D.C. என்னும் நிறுவனத்தின் போட்டி மிகப்பிரலமானது. போட்டிக்கான இலவச பாரங்களை வாங்கி, பூர்த்தி செய்து, ஒரு பதிவுக்கு இவ்வளவு என்று பணத்தைக் கட்டி, ரசீது வாங்கிக்கொண்டால், அடுத்த நாள, முதல் நாள் போட்டியின் ரிஸல்ட் வந்து விடும். எல்லாம் சரி, ஒரு தவறு, இரண்டு தவறு என்று முறையே பத்தாயிரம், ஐயாயிரம், ஆயிரம் என்று பரிசுகள் அறிவிக்கப்படும். பலர் சரியான விடையை எழுதும் பட்சத்தில் பரிசுத்தொகை பகிர்ந்து அளிக்கப்படும். நூறு ரூபாய்க்கு குறைவாக பரிசுத் தொகை இருந்தால், அந்தக் கடையிலேயே ரசீதைக் காட்டி பரிசு பெற்றுக்கொள்ளலாம். பாலகிருஷ்ணன் கடை மாதிரி நகரில் பல கடைகள்!

குறுக்கெழுத்துப் போட்டி கேள்விகளுக்கான ஒரு மாதிரி:1. பெண்களுக்கு இந்த மலரைக் கண்டாலே கொள்ளை ஆசை: (ரோஜா/மல்லிகை)2. சோற்றில் பிசைந்து கொண்டு சாப்பிடுவது: (ரசம்/குழம்பு)3. இந்த உறவென்றால் தனி மதிப்பு தான்: (தம்பி/தங்கை)இப்படி போட்டிக்கேள்விகள் எளிதாக இருக்கும். மூளைக்கு அதிக வேலை இருக்காது. இரண்டு ஆப்ஷன்களும் கிட்டத்தட்ட சரியாக இருக்கும். அவர்கள் வைத்திருக்கும் சரியான விடைக்குப் பொருந்தியிருந்தால் பரிசு, அவ்வளவு தான்! மாலை 7 மணி ஆகிவிட்டால் போதும். கடை ட்யூப் லைட்டெல்லாம் போட்டு, 'ஜே,ஜே' என்று ஆகிவிடும். சில போட்டிகள் அன்று மாலை முடிந்து அன்று இரவு பத்து மணிவாக்கில் ரிசல்ட் வந்துவிடும். ரிசல்ட் வரும் நேரம் கூட்டம் கொஞ்சம் பெருத்துவிடும். பெரியவர்கள், சின்னவர்களென்று வித்தியாசமில்லாமல் கூச்சலும், கும்மாளமுமாக இருக்கும். இந்த சப்தம் கேடடு, ஒரு சின்னத்தூக்கத்தை கத்திரித்துக்கொண்டு வெளியே வந்து ரிசலட்டை சரிபார்த்ததும் உண்டு.

இந்த டவுன்ஹால் ரோடு வீட்டில் இருக்கும் பொழுது தான் 'தங்கம்' தியேட்டர் திறக்கப்பட்டது. முழுத் தியேட்டருக்குமான கட்டுமானப்பணிகள் முடிந்துவிட்டாலும் சில சில்லரை வேலைகள் பாக்கியிருந்தன. அதற்குள் முதல் படத்தை ரிலீஸ் செய்துவிட்டார்கள். அங்கங்கு கொட்டியிருக்கும் மணல் குவியல்கள், தொங்கும் வாளிக்கட்டிய கயிறுகள், போட்டது போட்டமேனிக்கு இருக்கும் சில கட்டிடவேலைப் பொருள்கள் என்று இவற்றிக்கு ஊடே நுழைந்தும், தாண்டியும் சுடச்சுட ரிலீஸாகியிருந்த "பராசக்தி" படத்தை இரண்டாம் நாள் பார்த்த நினைவு மறக்கினும், கலைஞரின் வசனத்தை வாழ்நாள் பூராவும் மறக்கமுடியாது.

மாப்பிள்ளை விநாயகர் சோடா என்று கோலிசோடா ஒன்று விற்பனையாகும். ரப்பர் வளையம் பற்றியிருக்கும் கோலிக்குண்டை, மரஅழுத்தி கொண்டு தட்டி, உள்நிரம்பியிருக்கும் சோடாவையோ, ஜிஞ்சரையோ குடிக்க வேண்டும்.ஜின்ஞர் நீர் நிறைந்த சோடாவிற்கு ஜின்ஞர் பீர் என்று பெயர். டவுன்ஹால் ரோடில் இருந்த 'காலேஜ் ஹவுஸ் ஹோட்டலின், பாக்கெட்டில் அடைத்த வறுத்த முந்திரிப் பருப்புகளும்,காப்பியும் பிரசித்திபெற்றவை.ஊர் முழுக்க டிவிஎஸ் கம்பெனியாரின் டவுன்பஸ் தான். எல்லாம் வெள்ளை நிறத்தில், பஸ்ஸின் வெளிநடுப்பகுதியில் TVS எழுத்து வெளிர்பச்சையில் ஒரு வட்டத்திற்குள் வருகிற மாதிரி எழுதியிருப்பார்கள். அப்பொழுது 20 எண்வரை பஸ்ரூட் இருந்தது. எண் ஒன்று - சொக்கிகுளம், மற்றும் எண் இருபது - திருநகர் செல்லும் பஸ்கள் என்று நினைவு. சில வெளியூர் பஸ்களில்,பின்பக்கம் வீட்டில் காப்பிக்கொட்டை அரைக்கும் மிஷின் மாதிரியான தோற்றத்தில், ஒரு மிஷின் உண்டு. வண்டியின் நடத்துனர் அந்த மிஷினின் பிடிபற்றிச்சுற்றி, பின்பக்க பாய்லரில் கொட்டியிருக்கும் கரி எரித்து வண்டியைக் கிளப்ப வழிபண்ணுவதும் உண்டு!

இப்படிப்பட்ட பசுமையாக மனதில் தூங்கும் நினைவுகளை எழுதிக்கொண்டே போகலாம். எழுத எழுத எழுதாமல் விட்டு ஏதோ பாக்கியிருக்கிற மாதிரிதான் தோன்றுகிறது. இவையெல்லாம் நடந்து கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால்,எழுதுகையில் காலக்கணக்கு தவறுகளினால், முன்பின்னாக சில நினைவுகள் மாறிப்போயும் விட்டன. அப்பொழுதெல்லாம் எஸ்.எஸ்.எல்.சி. பள்ளி இறுதிப்படிப்பு முடிக்க வேண்டுமானால், பதினொன்று ஆண்டுப் படிப்பு. இப்பொழுது ஸ்டாண்டர்ட் என்பதை அப்பொழுது 'ஃபார்ம்' என்று அழைப்பார்கள்.நானும் செகண்ட் ப்பார்ம் என்று சொல்லிய ஏழாம் வகுப்புக்கு மறக்க முடியாத மதுரை நீங்கி, திண்டுக்கல் செயிண்ட் மேரீஸ் ஹைஸ்கூலில் போய்ச் சேர்ந்தேன். பள்ளியின் நட்டநடுப் பகுதில் ஒரு பெரிய மணிக்கூண்டுடன்,விசாலமான நிலப்பரப்பில் கட்டப்பட்டு, மிக அருமையாக இருக்குமாக்கும், செயிண்ட் மேரீஸ் ஹைஸ்கூல்!

15 comments:

Sridhar Narayanan said...

செல்லத்தம்மன் கோவில் தெருவில் வக்கீல் பாலசுப்ரமணியம் தெரியுமா? பக்கத்து வீட்டில் சௌந்திரராஜன் என்றும் ஒருவர் குடியிருந்தார். இருவரின் மகன்களும் என் பள்ளித் தோழர்கள்.

வக்கீல் புதுத்தெரு தங்கராஜ ஆஸ்பத்திரி அருகில்தான் தாத்தாவின் வீடு.


நல்ல கோர்வையா சொல்லிட்டு வர்றீங்க. கண்டினியூ... கண்டினியூ :)

கிருஷ்ணமூர்த்தி said...

செல்லத்தம்மன் கோயில் நல்ல எண்ணைச்செக்கு இன்றைக்கும் இருக்கிறது. எள்ளுப்புண்ணாக்கு, வெல்லம் கலந்து சாப்பிடத் தெரிந்த காலம், இன்றைக்கு குழந்தைகளுக்கு ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தானாம் என்று சொல்ல மட்டுமே:-)

காரைக்குடி ராமவிலாசில் இருந்து இரண்டு கரியில் ஓடும் பஸ்களை வாங்கித் தான் டி வி எஸ் தனது தொழிலை மதுரையில் ஆரம்பித்தது.
[ராமவிலாஸ் பஸ் சர்வீஸ் நடத்தியவருடைய பேரன், ஆடிட்டர் ஸ்ரீதர் இன்றைக்கு ரொம்ப பிசியான சின்னத்திரை ஆர்டிஸ்ட்!]

அன்றைக்கு மதுரையில் நாறாயணா காபி [வல்லின ரகரம் தான்!]ரொம்ப பேமஸ்!வியாபாரப் புள்ளிவிவரம் தெரியாது. ஒரு ஐயங்கார் பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு காபி கோப்பையை வைத்திருப்பது போல லோகோ. சின்னது பெரியதுமான காபிக் கோட்டையை வறுத்து அரைத்துக் கொடுக்கும் நிறுவனங்கள்!

1967-68 களில் கூட மதுரையில் litquiz என்ற மும்பைப் பத்திரிக்கை குறுக்கெழுத்துப் புதிர்களுக்காகவே கொஞ்சம் பிரபலம்.குறுக்கெழுத்தில் இருந்து குறுக்கு புத்தியில் தமிழ்நாடே மாறத் தொடங்கின காலம் அது:-))

கீதா சாம்பசிவம் said...

//இந்த டவுன்ஹால் ரோடு வீட்டில் இருக்கும் பொழுது தான் 'தங்கம்' தியேட்டர் திறக்கப்பட்டது. முழுத் தியேட்டருக்குமான கட்டுமானப்பணிகள் முடிந்துவிட்டாலும் சில சில்லரை வேலைகள் பாக்கியிருந்தன. அதற்குள் முதல் படத்தை ரிலீஸ் செய்துவிட்டார்கள். அங்கங்கு கொட்டியிருக்கும் மணல் குவியல்கள், தொங்கும் வாளிக்கட்டிய கயிறுகள், போட்டது போட்டமேனிக்கு இருக்கும் சில கட்டிடவேலைப் பொருள்கள் என்று இவற்றிக்கு ஊடே நுழைந்தும், தாண்டியும் சுடச்சுட ரிலீஸாகியிருந்த "பாராசக்தி" படத்தை இரண்டாம் நாள் பார்த்த நினைவு மறக்கினும், கலைஞரின் வசனத்தை வாழ்நாள் பூராவும் மறக்கமுடியாது.//

முற்றிலும் புதிய செய்தி!//சில வெளியூர் பஸ்களில்,பின்பக்கம் வீட்டில் காப்பிக்கொட்டை அரைக்கும் மிஷின் மாதிரியான தோற்றத்தில், ஒரு மிஷின் உண்டு. வண்டியின் நடத்துனர் அந்த மிஷினின் பிடிபற்றிச்சுற்றி, பின்பக்க பாய்லரில் கொட்டியிருக்கும் கரி எரித்து வண்டியைக் கிளப்ப வழிபண்ணுவதும் உண்டு!//

அட??????? இதுவும் தெரியாது, பார்த்ததே இல்லை! மதுரையிலேயும் பேருந்துகள் இப்படி ஓடி இருக்கா??????

ஜீவி said...

@ ஸ்ரீதர் நாராயணன்

நான் சொல்வது ஏறக்குறைய 1953 வருடத்திய செய்திகள். வேறு பெயருடைய ஒரு வக்கீல் அந்தத் தெருவில் இருந்தார். அந்தக் காலத்தில் அவர் ஒருவர் தான் அந்தத் தெருவில் இருந்த அட்வொகேட்.
நான் குறிப்பிட்டிருக்கும் சேதுபதி ஸ்கூல் ராஜாமணி கூட பிற்காலத்தில் வக்கீலாகி போர்ட் மாட்டிக்கொண்டு அதே தெருவில் ப்ராக்டீஸ் செய்ததாகக் கேள்வி.
எனக்குத் தெரிந்த மதுரை அவ்வளவுதான். போன கும்பாபிஷேகம போது மதுரை போயிருந்தேன். இந்தப் பதிவில் சொல்லியிருக்கும் அத்தனை இடங்களையும் பார்த்துவிட்டு வந்தேன்.
எவ்வளவு மாறுதல்கள்?.. மாறுதல்கள் இல்லாதது எதுதான் இருக்கிறது?..
ஹூம்.. அதையெல்லாம் பற்றியும் சாவகாசமாக எழுத வேண்டும்.

தொடர்ந்த வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி,
ஸ்ரீதர்!

ஜீவி said...

@ கிருஷ்ணமூர்த்தி

கிட்டத்தட்ட எல்லாவற்றையும் கவர் அப்
செய்துவிட்டீர்களே?.. நிறைய கொசுறு தகவல்கள் வேறு..

டிவிஎஸ் காரர்கள் கூட ஒரு விளம்பரம் செய்வார்களே, ஞாபகம் இருக்கா சார்?..

கிராமத்து மனிதர் ஒருவர் ஒரு குடையுடன் பஸ்ஸைக் கண்டு அஞ்சி பயந்து பயந்து நிற்பது போலவும்,
இவர் தான் எங்கள் முதல்பயணி என்று..

நாறாயணாக் காப்பி நன்றாக ஞாபகம் இருக்கிறது.. அந்த 'லோகோ' படம் கூட நினைவில் பளிச்சிட்டு விட்டது..

litquiz சமாச்சாரம் தான் தெரியாது..
RMDC--க்குப் பையன் போலிருக்கு.

வருகைக்கும், நினைவு பரிமாறல்களுக்கும் மிக்க நன்றி.

ஜீவி said...

வாருங்கள், கீதா மேடம்!
உங்களுக்கு தெரியாத மதுரைச் சமாச்சாரம் இருப்பதே எனக்கு ஆச்சரியம்!

கரியில் ஓடிய பஸ்களைப் போலவே இன்னொரு செய்தி. இது நினைவிருக்கா பாருங்கள்:

'ட' மாதிரி வளைந்த இரும்பு Rod
ஒன்று உண்டு.. அந்தக் காலத்தில் கார்களில் அதை வைத்திருப்பார்கள்.
கார் கிளம்ப அடம் பிடிக்கிறதென்றால்
அந்த ராடை காரின் ரேடியேட்டர் பகுதிக்குக் கீழே உபயோகித்துச் சுழற்றினால், கார் ஸ்டார்ட் ஆகிவிடும்.
மாப்பிள்ளை அழைப்பு கார்களில் கல்யாண ஊர்வலங்களில் கிளம்பாமல் மக்கர் பண்ணும் கார்களை இப்படிக் கிளப்புவது பார்க்க வேடிக்கையாக இருக்கும்!..

வருகைக்கு நன்றி, மேடம்!

கீதா சாம்பசிவம் said...

//வாருங்கள், கீதா மேடம்!
உங்களுக்கு தெரியாத மதுரைச் சமாச்சாரம் இருப்பதே எனக்கு ஆச்சரியம்!//

ஹிஹிஹி, அப்போப் பிறந்து இருக்கணும் இல்லையா?? என்னோட அண்ணாவுக்கும் தெரியாதுனு சொல்லிட்டார்! :D

//கரியில் ஓடிய பஸ்களைப் போலவே இன்னொரு செய்தி. இது நினைவிருக்கா பாருங்கள்:

'ட' மாதிரி வளைந்த இரும்பு Rod
ஒன்று உண்டு.. அந்தக் காலத்தில் கார்களில் அதை வைத்திருப்பார்கள்.
கார் கிளம்ப அடம் பிடிக்கிறதென்றால்
அந்த ராடை காரின் ரேடியேட்டர் பகுதிக்குக் கீழே உபயோகித்துச் சுழற்றினால், கார் ஸ்டார்ட் ஆகிவிடும்.
மாப்பிள்ளை அழைப்பு கார்களில் கல்யாண ஊர்வலங்களில் கிளம்பாமல் மக்கர் பண்ணும் கார்களை இப்படிக் கிளப்புவது பார்க்க வேடிக்கையாக இருக்கும்!..//

ம்ஹும், சான்ஸே இல்லை! :))))))

கிருத்திகா said...

படிக்க படிக்க ஆ.மாதவன் கதைகளில் வருணித்திருக்கும் திருவனந்தபுரத்தெருக்களும் பத்மநாதசாமி கோயில் முற்றமும் எப்படி கண்ணுள் வருமோ அது போல் கண்முன் கொண்டு நிறுத்தியுள்ளீர்கள்... சுவையான கோர்வை...

ஜீவி said...

@ கிருத்திகா


ரசனைக்கு மிக்க நன்றி, கிருத்திகா!
ஆ.மாதவனும் மறக்க முடியாதவர். அந்த சோகத்தை மறைத்துக் கொண்டு அவரைப் பற்றி 'எழுத்தாளர்கள்' பகுதியில் எழுத வேண்டும்.
அந்த நினைவை ஏற்படுத்தியமைக்கு நன்றி.

radhakrishnan said...

g.v.anna,
aniyayaththirku pazhaya gnapakangalai kilari vidukireerkale.nane perithum pazhaya ninaivukalil viruppathudan thilaippavan.chellaththamman koil theru rajamani enbavarthan advogate bala subra manian.ivar engal kudumba nanbarthan ivarum munbu kamakshi pura agrakara ththil kudiirunthavarthan.
sridhar narayanan and krishnamurthy sir --neengal ippothu maduraiyil engu irukkireerkal. santhikka aavalaka irukkiren.udan bathil kodukkavum

radhakrishnan said...

g.v.anna,
where is madurai ninaivukal--5?thodarai niruththivitteerkala?
adada ,udane thodaravum. padikka,illai suvaikka aavalaka
irukkiren.urgent.

ஜீவி said...

@ Radhakrishnan

நினைத்துப் பார்த்தால் அந்த வயசுக்கு அவ்வளவுதான் என்று தோன்றுகிறது.
ஆறாம் வகுப்பு அன்னக்குழி மண்டபம் ஸ்கூல், ஏழாவதுக்கு மதுரை நீங்கி திண்டுக்கல் செயிண்ட் மேரீஸ் ஹைஸ்கூல் என்று ஆகிவிட்டது!

சமீபத்தில் கும்பாபிஷேகம் போது மதுரை வந்திருந்த பொழுது, காமாட்சி புர தெரு, ஆதிமூலம் பிள்ளைத் தெரு, L.N. தெரு,
சிம்மக்கல் வட்டாரம், செல்லத்தம்மன் கோயில் தெரு என்று எல்லா இடங்களையும் பல வருடங்களுக்குப் பிறகு சுற்றிப் பார்த்து மாற்றங்களைப் பார்த்து மனதைத் தேற்றிக் கொண்டேன்.

கோமதி அரசு said...

பள்ளி படிக்காத சிறு வயதில் சொக்கிகுளத்தில் இருந்தோம்.
அப்புறம் நாகர்கோவில் போய் விட்டோம்.

மறுபடி. நாங்கள் 1973லில் நரிமேட்டில் இருந்தோம். என் சித்தப்பா சொக்கிகுளத்தில் இருந்தார்கள்.
இப்போது பாரதி நகரில் இருக்கிறோம்.

உங்கள் மதுரை நினைவுகள் அற்புதம்.

வே.நடனசபாபதி said...

மதுரையில் தங்களது இளம் வயதில் நடந்தவைகளை இன்னும் மறக்காமல் சுவைபட எழுதுவதே ஒரு வரம் தான். மதுரைக்கும் எனக்கும் உறவு 2008 ஆம் ஆண்டு தான் ஏற்பட்டது (என் மருமகளின் ஊர் அதுதான்) என்றாலும் தங்களது பதிவுகளைப் படிக்கையில் நானும் எனது இளம் வயதில் அங்கு இருந்ததுபோல் உணர்கிறேன். அருமையான பதிவு வாழ்த்துகள்!

'நெல்லைத் தமிழன் said...

ஜிவி சார்.. பதிவு முழுமைபெறாததாகத் தோன்றியது. உங்கள் காலத்திய அனைத்து நிகழ்வுகளையும் விளக்கமாக எழுத முடிந்தால், எப்படி வாழ்வு இருந்தது, இப்போது எப்படி மாறிவிட்டது என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள முடியும். (நீங்கள் சொல்லியிருக்கும் ரேடியேட்டர் கீழே சுத்தி காரை ஓட்டுவார்கள்' என்பதை ஒரு படத்தில் பார்த்த ஞாபகம்).

திருனெல்வேலியில், (அல்லது மதுரையிலும் பார்த்திருக்கிறேனா? 70களில்). குதிரை வண்டியில், பால் பாட்டில்கள் (1/2 லிட்டர். அந்த பாட்டில் ஷேப்பே என் நினைவில் இருக்கிறது) வரும். படம் ரிலீசின்போது, கூரை வேய்ந்தது போன்ற அமைப்பில் இரண்டு பக்கத்திலும் போஸ்டருடன், கைவண்டி தெரு முழுக்க வரும், படத்தின் நோட்டீஸை விசிறியடித்துக்கொண்டே. அதுவும் இரவ் 8-9 மணிவாக்கில்தான் வரும். இது திருனெல்வேலியில்.

மதுரை டி.வி.எஸ் நகரில், குழந்தைகள் பூங்காவில் சைக்கிள் ரவுண்டு போனது ஞாபகம் இருக்கிறது. அப்போது எல்லாமே பெரிய உருவமாக இருந்ததுபோல் நினைவு (குழந்தையாக இருந்ததால் இருக்கலாம். 10-11 வயது)

Related Posts with Thumbnails