Friday, December 31, 2010

நன்றே, நம்பி நாளும் வாழ்க்கை!

மாதவியின் குணமே அதுதான்
அவளுக்குப் பிடித்தவற்றை
பிடித்தவர்களைக் கண்டால்
அடியோடு அவளுக்குப் பிடிக்காது!
தனக்குப் பிடித்தது பிறருக்குப்
பிடிப்பதைப் பொறாதவள் அவள்.

மாதவனோ இதற்கு நேர் எதிர்
அவனுக்குப் பிடிக்காததெலாம்
அடுத்தவருக்குப் பிடிப்பது காணின்
அவனுக்கு அவரைப் பிடித்துப் போகும்
தனக்கு மாற்றான மனம் கொண்டோர்
வேண்டும் அவனுக்கு.

அகிலா தான் அலாதி
பிறருக்குப் பிடித்ததெல்லாம்
தனக்குப் பிடிக்குமா வென்று
தன்னில் சோதித்துப் பார்ப்பாள்
பிடித்தால் சந்தோஷப் படுவாள்
பிடிக்காதெனில் வருந்த மாட்டாள்

பிடித்ததில் கொஞ்சம்
பிடிக்காததில் கொஞ்சமென்பது
அழகனின் கட்சி!
கேட்டால் இனிப்பில் கொஞ்சம்
கசப்பில் கொஞ்சமாம்!

விநோதினி வினோதமானவள்
பிடிக்கும் பிடிக்காதென்று
எதுவுமில்லை இவளுக்கு
எதுவும் பிடிக்கும். சமயங்களில்
எதுவே பிடிக்காது!
எல்லாம் மனநிலை பொறுத்தது
எந்த நேரத்தில் எப்படி என்பது
அவளுக்கேத் தெரியாது!

வைத்தி வித்தியாசமானவன்
பிடிக்காததில் ஆர்வம் அதிகம்
பிடித்ததில் விருப்பம் குறைவு
பிடிக்காததைத் தெரிந்து கொண்டு
பிடித்ததிலிருந்து விலகலில் விருப்பம்
பிடித்ததென்று எதற்கும் எந்நேரத்தும்
அடிமையாக விரும்பாத அதிசயப்பிறவி!

பிடிப்பதும் பிடிக்காமையும் அவரவர்
அடிமனத்தின் ஆரவார ஆர்ப்பரிப்பே!
விருப்பின் வேடமே பிடிப்பெனில்
விரும்பாமை பிடிக்காமை
கடிவாளம் நம் கையில்
பிடிப்பை இறுக்குதலும்
தளர்த்தலும் நம் வசமே!
செருக்கு அறுத்தால் போதும்;
நன்றே நம்பும் வாழ்வின்
நாளைய வெற்றியும் நமதே!




அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்



Saturday, December 25, 2010

பெருமை சேர்க்கும் பெருமைகள்

சொற்களின் பிரயோகத்தில்
சொக்கி விட்டேன் என்றார்
எத்தனை எடுத்துக் காட்டுகள்
எத்தனை விஷய ஞானம்
அத்தனையும் அற்புதம் என்றார்

விரல் நுனியில் விவரங்கள்
வைத்திருப்பதை வியப்பதா
ஏற்ற இறக்கத்தோடு அத்தனையும்
எடுத்துச் சொன்னதைச் சொல்வதா
எதைச் சொல்வது
எதை விடுவதென்பது
தெரியவில்லை என்றார்.

எதைப் பற்றிச் சொன்னார் என்றால்
எதைப் பற்றி என்பதா முக்கியம்
யார் பற்றிச் சொல்கிறேன்
என்பதல்லவா முக்கியம் என்றார்

அந்த யாரும் யார் பற்றியாவது
சொல்லியிருக்க வேண்டுமல்லவா
அந்த யார், யார் என்றாவது
சொல்லுமேன் என்றேன்

இது மாதிரி இவர் சொன்னது
புது மாதிரி இருந்ததே இவர் சிறப்பு
எது குறித்து இவர் சொன்னாலும்
அது சிறப்பு பெறும் அவ்வளவே என்றார்
சொன்னவர் சொன்ன சிறப்பில்
சொன்னதெல்லாம் சிறப்பானது என்றார்

கதா காலட்சேபத்திற்குப் போய்
கடவுளின் கதை கேட்டு வந்தவர்
கதை இது.

பலநேரங்களில் இப்படித்தான்
பெருமைக்குரிய பெருமை எல்லாம்
அந்தப் பெருமையைப் பேசுவோருக்குப்
பெருமை சேர்ப்பதாய் போய்விடுகிறது

Saturday, December 18, 2010

எங்கிருக்கிறான்?...

நீரே மேகம் எனில் நீள் விசும்பில்
நீந்திப் போவது எவ்வாறு என்கின்றார்

நீர்மோரே நெய் எனில் கலயத்திலது
நீர்த்து இருப்பது எப்படி என்கின்றார்

நிலவே இரவியின் தண்மை ஒளியெனில்
நீளிருட்டு இரவு எங்ஙனம் என்கின்றார்

யாழின் மீட்டல் நாத தாலாட்டில் மயங்கி
இத்தனை நேரமிது இருந்ததெங்கே என்கின்றார்

நீக்கமற நிறைந்தோனின் இருப்பு இதுவென்றால்
பார்க்கிறபடி தோற்றம் அவனுக்கில்லையா என்கின்றார்

உன்னின் ஜீவிதத் துடிப்பு அவனே என்றால்
என்னில் தெரியலையே எங்கிருக்கிறான் என்கின்றார்

நீயே அவன் தான் என்றால் நாணிச் சிரித்து
நானே அவனென்றால் நான் யார் என்கின்றான்

Friday, December 10, 2010

செய்தி

புதுப்புடவை சரசரக்க மருமகள் வீட்டுக்குள் நடமாடுகையில் மகாலஷ்மியே வளைய வருவது போலிருந்தது. இதில் இன்னொரு பொருத்தமும் என்னவென்றால், மருமகளின் பெயரும் மகாலஷ்மியே.

புது மருமகள் புக்ககம் வந்து ஒருவாரம் தான் ஆகிறது. மாமியாருக்கு அவள் அழகைக் பார்த்து ரொம்பப் பெருமை; பொறுமை பற்றி நிறைவு. மருமகள் தமிழில் புலவர் படிப்புப் படித்திருக்கிறாள் என்பது சொன்னால் தான் தெரியும்; அவ்வளவு அடக்கம். மாமனார் பன்மொழிப்புலவர். அதனால் மருமகளின் தமிழ்ப்புலமை பற்றி அவரது மகிழ்ச்சி தனியாகத் தெரிந்தது.

உண்மையிலேயே அது பெரிய குடும்பம் தான். மாமனார், மாமியார், பெரியண்ணன், சின்னண்னண்,அண்ணிகள், நாத்தனார், மைத்துனன், அக்காக்கள், தங்கைகள் என்று பெரிய ஆலமரம் அதன் விழுதுகள் போல மூன்று தலைமுறைகளாக கட்டிக் காப்பாற்றி வரும் கூட்டுக் குடும்பம்.

பெரீய்ய.. சாப்பாட்டுக் கூடம். நீண்ட மேஜை; நிறைய நாற்காலிகள். அத்தனை பேரும் வரிசையாக உட்கார்ந்து கொண்டு, வேண்டும் என்கிறதை எடுத்துப் போட்டுக் கொண்டு ரசித்து ருசித்து சாப்படுவது அத்தனை அழகாயிருக்கும். பெரியண்ணனுக்கு சாப்பிடுகையில் ஒருத்தர் இல்லை என்றாலும் சாப்பிட்ட மாதிரி இருக்காது. 'எங்கே?.. ஏன் இன்னும் வரலை?' என்று தவித்துப் போய் விடுவார். அவருக்கு அந்தத் தவிப்பை ஏற்படுத்தக் கூடாது என்றே என்ன வேலை யாருக்கு இருந்தாலும் எல்லோரும் சேர்ந்து சாப்பிடுகிற சந்தோஷத்தை இழக்க விரும்பாமல் எப்பாடுபட்டேனும் சாப்பிடும் நேரத்தில் எல்லோரும் ஒன்று கூடி விடுவார்கள்.

சாப்பாடெல்லாம் முடிந்ததற்குப் பின்னாலும், எல்லோரும் தூங்கப் போவதற்கு முன்னால் ஒரு பெரிய அரட்டைக் கச்சேரி இருக்கும். நடுஹாலில் வரிசையாகப் போட்டிருக்கும் சோபாக்கள், நாற்காலிகள் என்று எல்லாம் நிரம்பி விடும். என்ன பேசுவது என்பதற்கா பஞ்சம்?.. இது நாள் வரை தினம் தினம் ஏதோ ஒரு தலைப்பு அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது. சாப்பிட்ட பின் ஒரு மணி நேரத்திற்கு அன்று கிடைத்த தலைப்பை தோய்த்து, அலசி, காயப்போட்டு என்று தூள் கிளம்பும். கைதட்டலும், உற்சாகப் பீறிடலுமாய் சிரிப்பும், கும்மாளமுமாய் ஹால் அதிரும். அன்றைய களைப்பு அத்தனை பேருக்கும் போன இடம் தெரியாது.

ஆனால் குமாருக்கு மட்டும் அந்தக் குறை இருக்கத்தான் செய்தது.. கல்யாணமாகி புக்ககத்திற்கு வந்து ஒரு வாரத்திற்கு மேலாகிறது. அவன் மனைவி மகாலஷ்மி மட்டும் இந்த ஆட்ட பாட்டங்களில் ஒன்றிலும் கலந்து கொள்ளாமல் தனித்து ஒதுங்கி இருப்பது மாதிரி உட்கார்ந்திருப்பது அவனுக்கு ஒரு மாதிரி இருக்கும். அவளைப் பார்த்து குமாரின் சின்னத் தங்கையோ, தம்பியோ, "அண்ணி.. நீங்க ஏதாவது சொல்லுங்க,அண்ணி.." என்று உற்சாகத்தோடு முறையிடும் பொழுது, லேசாக சிரித்து மழுப்பி நழுவி விடுவாள். இன்றைக்காவது மகாலஷ்மியிடம் இதுபற்றி சாப்பிடும் பொழுது ஏதாவது சொல்லி ஆட்ட அமர்க்களத்தில் அவளையும் கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கையிலேயே, எல்லாரும் சாப்பிட்டு ஹாலுக்கு வந்தாயிற்று.

"என்ன விசயம்னு அவங்க வீட்டுக்கு போனே?" என்று பொத்தாம் போக்கில் ஆரம்பித்து வைக்கிற மாதிரி பெரியண்ணி, சின்னண்ணியைப் பார்த்துக்கேட்டார்.

"ஒரு விஷயமும் இல்லேக்கா.. வருடப் பிறப்பு வருதில்லையா?.. புடவை எடுத்திருந்தாங்களாம்; பாக்கறத்துக்கு சந்திரிகா அக்கா கூப்பிட்டிருந்தாங்க.."

"அதுசரி.. நாமளும் தான் எடுக்கணும்.. என்னிக்குப் போகலாங்க?" என்று பெரிய அண்ணி கேட்கையிலேயே, "போகலாம், போகலாம்.. அதுக்குள்ளாற எனக்கொண்ணு தெரியணும். நீ 'விசயம்'ன்னு சொன்னே; தம்பி சம்சாரம் 'விஷயம்'ன்னு சொல்லிச்சு. இதுலே எது சரி?" என்று இன்றைய தலைப்பு கிடைத்த உற்சாகத்தில் ஆரம்பித்து வைத்தார் பெரியண்ணன்.

சின்ன அண்ணன் சொன்னார்:"ரெண்டும் சரிதான். அண்ணி தமிழ்லே விசயம்னு சொன்னாங்க.. லதான்னா, அதையே வடமொழிலே விஷயம்னு சொல்லித்து.. அதே மாதிரி 'வருஷ'த்தை 'வருடம்'ன்னு சொல்லித்து பாத்தீங்களா.."

"வருஷத்தை வருடம்ங்கலாம்.. விஷயத்தை விடயம்ங்கக் கூடாதா?" என்று சுரேஷ் தம்பி கேட்டான்.

"ஏம்பா, சுரேட்டு.." என்று பெரியக்கா நீட்டி முழக்க கொல்லென்று சிரிப்பு ஹால் முழுக்க நிறைந்தது. முதலில் சுரேஷூக்குப் புரியவில்லை.. பின் புரிந்தது. "ஓ.. அக்கா.. 'ஷ்' ஷை 'ட்'டுன்னீட்டிங்களா"ன்னு கேட்டு விட்டு அவனும் சிரித்தான்.

"ஏம்மா, மகாலஷ்மி! நீதான் சொல்லணும்; நீதான் தமிழ் படிச்சிருக்கே!" என்று பெரியண்ணி சமயம் பார்த்து புதுமருமகளை இழுத்து விட்டாள்.

மகாலஷ்மியை ஆர்வத்துடன் குமார் பார்க்க, அவள் முகத்தில் நாணம் செக்கச் சிவந்து தலை கவிழ்ந்தது.

"அண்ணி கேக்கறாங்கள்லே.. சொல்லு.." என்று குமார் ஊக்குவித்தான்.

அவளிடத்தில் தயக்கம்.

"பேசுமா.. நீ பேசி நாங்கக் கேக்கணும்லே.. தினம் தினம் இந்தக் கதை உண்டு.. எல்லாம் தெரிஞ்சிக்கத்தான் கேக்கறோம்.. சொல்லு.." என்றார் சின்ன அண்ணன்.

மகாலஷ்மி மெதுவாக வாய் திறந்தாள். "பெரியவங்க மத்தியிலே.." என்று அவள் இழுக்கும் பொழுதே, "இங்கே எல்லாம் ஒண்ணு தான்; அரட்டைக் கச்சேரி மாதிரியும் இருக்கு; புதுசா புதுசா பலது தெரியவும் தெரியுது. அதுக்குத்தானே?" என்று சின்னண்ணி துணைக்கு வந்தார்.

மகாலஷ்மிக்கு இப்பொழுது லேசாக தயக்கம் நீங்கிய மாதிரி இருந்தது. "வேறொரு மொழிச்சொல்லை சொல்லும் பொழுது அந்த மொழி உச்சரிப்புப் படியே எழுதறதோ சொல்றதோதான் சரியான அர்த்தத்தைக் கொடுக்கும். அப்படி இன்னொரு மொழிச்சொல்லை தப்பா எழுதியானும் சொல்லணும் வேறே வழியில்லைங்கற நிலைமையும் தமிழுக்கு இல்லை; தமிழ்லே இல்லாத சொல் வளமா?" என்று சொல்லி பெரியண்ணியைப் பார்த்தாள்.

"அப்படிச் சொல்லியே வழக்கமா போயிட்டதினாலே, தமிழ்ச் சொல்லே மறந்து போயிடறது மகாலஷ்மி! இந்த 'விஷயம்'ங்கற வார்த்தையே எடுத்துக்கோ.. அதுக்கு என்ன தமிழ்லே?" என்றார் பெரியண்ணி.

"ஏதோ தமிழ்லே இதுக்குப் பொருத்தமான வார்த்தையே இல்லாத மாதிரி, விஷயம்ங்கறதை அப்படி 'விசயம்' 'விடயம்'ன்னு சொல்லியானும் உபயோகப்படுத்தணும்ங்கற அவசியம் இல்லை. அதுக்கு பதிலா, தகவல், செய்தி-அப்படின்னு சொல்லலாம். அந்த வடமொழி வார்த்தையையே தான் சொல்லணும்னா, 'விசயம்' விட 'விதயம்' சரி. ஆனா, என்னவோ அந்த நல்ல சொல்லாக்கம் புழக்கத்து வராமயே போச்சு.. அதே மாதிரி, 'விஷம்னுங்கறதை,'விடம்' ன்னு எழுதறதை விட பேசாம 'நஞ்சு'ன்னு எழுதிடலாம்."

"பழம் பாட்டுகள்ல கூட 'விடம்'ங்கற வார்த்தையை உபயோகிச்சிருக்காங்கல்ல?" குமார் பேச்சுவாக்கில் நுழைகிற மாதிரி நுழைந்து மனைவிக்கு இன்னும் பேச உற்சாகமூட்டினான்.

"ஆமாம்.." என்று சொல்லி அவனைப்பார்த்து முறுவலித்தாள் மகாலஷ்மி.
"ஆமாம்.. நாயன்மார்கள் பாட்டுலே, காளமேகப்புலவரின் இரட்டை அர்த்த பாடல்களிலேலாம் நிறைய வரும். அப்படி 'விடம்'ன்னு வர்ற இடங்கள்லேலாம் பார்த்தீங்கன்னா, எதுகைக்காக உபயோகிச்சிருப்பது தெரியும். 'படம்' 'இடம்' 'வடம்'ங்கற வார்த்தைகளுக்காக இந்த 'விடம்' வந்திருக்கறது தெரியும்."

"ஓகோ.." என்று பெரியண்ணன் சுவாரஸ்யமானார்.

"எல்லா மொழிகளும் அழகுதான். எல்லா மொழிகளும் சுற்றி அததன் தனித்தன்மையோடு இருந்தாத்தான் நம்ம மொழியும் சிறப்பா இருக்கும். அது அதை அததன் உச்சரிப்பிலே சொன்னாத்தான் அழகு. அதுனாலே இன்னொரு மொழியை தப்பாவானும் நம்ம மொழிலே எழுத வேண்டாம். அதுக்கு நம்ம மொழிச் சொல்லையே எழுதிடறது நல்லது.. என்ன நான் சொல்றது?" என்றாள்.

"அற்புதம், மகாலஷ்மி!.." என்று அவள் மாமனார் பன்மொழிப்புலவர் அவளைப் பக்கத்தில் அழைத்து வாழ்த்தினார்.

Monday, December 6, 2010

என்னைப் போல் ஒருத்தி

என்னைப் போலவே தான் என் மகளும்
அதே நடை அதே பார்வை அதே முகம்
ஆறு வயதிருக்கும் அப்போது அவளுக்கு
நடை முற்றத்தில் நடு மத்தியானத்தில்
கொடையாய் மழை கொட்டிய பொழுது
குடை பிடித்து காகிதக் கப்பல் விடுவாள்
நானும் அந்த வயதில் அப்படித்தானாம்
அம்மா சொல்கையில் அடிமனசில்
விம்மிப் பெருமிதம் பொங்கி வரும்

புத்தகம் என்று பெயரிட்ட
எதுவொன்றையும்
பார்த்தால் போதும் அதைப்
புரட்டாமல் இருக்க மாட்டாள்
அச்சடித்த எந்த காகிதக் கத்தையிலும்
அப்படி ஒரு ஆசை அவளுக்கு
எப்படி என்னைப் போலவே
இப்படி என்று எனக்கு ஆச்சரியம்

காலையில் மாட்டி விடும் உடை
மாலைவரை எந்த மடிப்போ
கலைதலோ இன்றி இருக்கும்
கரிசனம் அத்தனை அதில் அவளுக்கு
நானும் அப்படித்தானாம்
நாணுப் பாட்டி சொல்கையில்
மனசுக்கு கிறக்கம் தான்

உறைப்பென்றால் கண்களில்
உப்பு நீர் வழிந்தாலும் சரி
உஸ் உஸ்ஸென்றாவது
உண்டு விடுவாள் கள்ளி!
என்னையே இதில் உரித்து
வைத்திருக்கிறாளாம் என் மகள்
அம்மா சொல்கையில்
அழகாய் சிரித்துக் கொள்வேன்

சொப்பனம் போலிருக்கு
இப்போது எல்லாம்
திமுதிமுவென்று திடீரென்று
வளர்ந்து விட்ட வாலிபத்தின்
வனப்பு!.. வனமோஹினிதான்!
கலகலவென்று சிரிக்கையில்
கன்னமிரண்டிலும் குழி
என்னைப் போலவே.
தாயைப் போல பெண்பிள்ளை
நூலைப் போல சேலை யென்று
புதுமொழி சொன்ன மகராசிக்கு
ஒரு வாய் சர்க்கரை!

Wednesday, December 1, 2010

நெஞ்சில் நிறைந்த பாலகுமாரன்

பாலகுமாரனின் எழுத்துக்களை வாசிப்பதே ஓர் அனுபவம். மிகவும் சுகமான ஒன்று அது. பளிச்சென்று அங்கங்கே வாழ்ந்து பார்த்த வாழ்வின் வெளிச்சம் பளிச்சிட்டுப் போகும். அது அவரது அனுபவமாய் மட்டுமல்ல, நமக்கும் அனுபவமாக ஆகிப்போன ஒன்றாய் அது இருப்பின் கேட்கவே வேண்டாம். அவரது எழுத்துக்கள் நமக்கு வெகு அந்நியோன்யமாய் ஆகிப்போய், பார்த்ததை அல்லது பட்டு அனுபவித்ததை படம் பிடித்தாற் போல் எவ்வளவு ரசனையுடன் எழுதியிருக்கிறார் என்று ரசித்து வியக்கத் தோன்றும்.


சொல்லப்போனால் இப்படி எழுதுவதே கிடைத்தற்கரிய ஒரு வரம். தனக்குள் வேள்வியாய் கேள்விகள் கேட்டுக் கொண்டதன் தேடலின் விளைவாய் விடைகண்ட விநோதங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்கையில் படைத்தவருக்கும் படிப்போருக்கும் விளையும் ஒன்றிய மனஉணர்வு ஒருவரை ஒருவர் உணர்ந்து புரிந்து கொண்ட நிலையில் விகசிக்கும்.

மனம் விளைவிக்கும் குறளி வித்தைகள் தாம் எத்தனை எத்தனை?.. புரிதலின் அடைப்படையில் ஒருவருக்கொருவர் மனநெருக்கம் கொள்ளும் தருணங்கள் உன்னதமானவை. பலதரத்து உணர்வுகள் மோதும் உள்ளத்து அடிமன படிமானத்தில் வேற்றுமைகளில் ஒற்றுமை காண்பது விவேகமானவை. ஆனால் மன உணர்வுகள் முரண்பட்டு தலைவிரித்தாடுகையில் அந்தத் தத்தளிப்புகளிலிருந்து மீண்டு வர பிரயத்தனப்படுவதே விதவிதமான கதைகளுக்குக் கருவாகிப் போகிறது. மனிதப் பிறப்பின் ஆனந்தத்தை அள்ளிப்பருகிட, இத்தகைய சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கு வழிசொல்லும எழுத்துக்கள் ஆரோக்கியமானவை. ‘எங்கேயிருந்தாலும், சந்தோஷமாக இருக்கப் பழகிக்கணும்; விடாப்பிடியாக சந்தோஷமாக இருக்க வேண்டும்’ என்று பிரகடனப்படுத்திய எழுத்துக்கள் பாலகுமாரனது.

‘கிருஷ்ண மந்திரம்’ ஆஸ்ரமம் அல்ல; ஆஸ்ரமம் போன்ற செயல்பாடுகள் கொண்டதாயினும், அதை ஒரு ஹோம் என்றே சொல்ல வேண்டும். மகன், மருமகள், சொந்த வீடு என்று எல்லாம் இருந்தும், வரலஷ்மிக்கு வயதான காலத்தில் இந்த ஹோமில் வாழ நேரிடுகிறது. மனைவிக்கும் பெற்ற தாய்க்கும் ஒத்து வராத பொழுது இந்த இருவரின் நிம்மதி—அதை ஒட்டிய தன் நிம்மதிக்காகவும் மகனே தாயைக் கொண்டு வந்து பணம் கட்டி இந்த ஹோமில் சேர்க்கிறான்.

நாற்பத்தாறு ஆண்கள் மத்தியில் இவனின் தாயும், அந்த ஹோமில் பொது வேலைகளைக் கவனித்துக் கொள்ளும் சுசீலாவையும் சேர்த்து இரண்டே பெண்கள். ஆரம்பத்தில் அந்த ஹோமில் தனித்து எப்படி காலம் தள்ளப்போகிறோம் என்று மிரளும் அந்தத்தாய், எல்லோருக்குமான தாயாய் மிளிர்ந்து அந்த மொத்த ஹோமின் நிர்வாகப் பொறுப்பேற்றுக் கொள்ளும் அளவுக்கு பரிமளிப்பது தான் கதை.

நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் குட்டியூண்டு குடும்பம் ஒன்றைக் கட்டி அழுது கொண்டு மகன், மகள், மனைவி, மருமகள், மருமகன் என்று மயங்கி சொந்த பந்தங்களுக்கிடையே வாழ்க்கையை முடக்கிப் போட்டிருக்கையில், அந்த வாழ்க்கையின் பிணக்குகளையும், சுணக்கங்களையுமே பெரிதாய் நினைத்து அலமந்து அல்லாடுகையில், அப்படிப்பட்ட ஒரு அல்லாட்டச் சுழலில் சிக்கியும் விதிவசத்தால் அதனின்று விடுபட்ட வரலஷ்மி, சொந்த பந்தக் குடும்ப உறவுகளைத் தாண்டி வெளியே தன் அன்பையும் ஆதுரத்தையும் எதிர்பார்த்து இருக்கும் விதவிதமான மனிதர்களைப் புரிந்து கொண்ட ஒரு தரிசனத்தை எவ்வளவு நேர்த்தியாக பாலகுமாரன் சொல்லிவிட்டார் என்று இந்த புதினத்தைப் படிக்கையில் மிக ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

இந்த ‘கிருஷ்ணமந்திரம்’ இதற்கு முன்னால் இவரே எழுதிய இன்னொரு நாவலின் வேறுபட்ட வளர்ச்சியடைந்த பார்வை. பெற்ற தாய் ஒரு புறம், மணந்த மனைவி மறுபுறம் என்று மகன் மாட்டிக்கொண்ட இவரது இன்னொரு நாவல் ‘நிழல் யுத்தம்’.

லலிதாவை முரளி முதன் முதல் சந்தித்தது ஒரு விபத்து. பின்னால் வரப்போவது எதுவும் முன்னால் தெரிவதில்லை. இப்படித் தெரியாமல் இருப்பது தான் வாழ்க்கையாகத் தெரிகிறது. முரளி மட்டும் விதிவிலக்கல்லவே; அவன் வாழ்க்கையிலும் அப்படித்தான் அமைந்தது.

முரளி அம்மா வளர்த்த பிள்ளை. விதவை வளர்த்த குழந்தை அவன். வளர்த்தது கூடப் பெரிசில்லை. வளர்த்த குழந்தையை வகை தெரியாமல் திருமணம் செய்து கொடுத்தது தான் பெரிசாகப் போய்விட்டது. மிலிட்ரியில் மேஜராக இருந்த சங்கரன் முதலில் அந்தக் குடும்பத்திற்குப் பழக்கமாக, அவர் தன் பெண் லலிதாவின் ஜாதகம் கொண்டு வந்து கொடுத்து லலிதாவுடனான முரளியின் திருமணம் முடிந்தது. மாமனார் சங்கரன் தனக்குத் தெரிந்த இடத்தில் சொல்லி வைத்து முரளிக்கு வேலையும் கிடைக்கிறது. அதாவது மாமனார் தயவில் கிடைத்த நல்ல வேலை.

பின்னால்த் தான் தெரிகிறது. ‘பெண்ணாட்டி உலகம் தான் புருஷன் உலகம்; புருஷன் உலகத்தில் பெண்ணாட்டி இருக்கணுங்கறது வேதனை தருகிற விஷயம்’ என்று நினைப்பவள் லலிதா என்று. எல்லா உறவுகளையும், உணர்வுகளையும் சிக்கலாக நினைப்பவள் அவள். ஒரு நாள், ‘நான் ஆம்பிளை வளர்த்த பெண் குழந்தை; அதனால் தான் எதிர் எதிர் துருவமாக இருக்கிறோம்’ என்கிறாள்.

இன்னொரு நாள் சொல்கிறாள். ”மனுஷா செல்ஃபிஷா இருக்கணும். சுயநலம் தான் ஆரோக்கியம். நான் முக்கியம். நான் முதல். நானே இந்த உலகத்தின் மையம். நான் இல்லாவிடில் இந்த உலகம் இல்லை. நான் இல்லாத போது இருக்கும் உலகம் பற்றி எனக்குத் தெரியப்போவதில்லை. நான் நன்றாக இருந்தால் தான் இந்த உலகம் எனக்கு நன்றாக இருக்கும். எனக்குத் தலைவலிச்சா உலகத்தில் எப்பேர்ப்பட்ட விஷயம் இருந்தாலும் எனக்குத் தேவை இல்லை. எனக்குத் தலைவலி முக்கியம். அதை யார்கிட்டேயும் கொடுக்க முடியாது” என்கிறாள்.

‘கிருஷ்ண மந்திர’த்தில் மருமகள் ஆடிய ஆட்டத்தில் மாமியார் 'ஹோமி'ற்கு போக வேண்டியதாயிற்று. ‘நிழல் யுத்தத்’து மருமகள் மாமியாரை மனம் வெதும்பி நோகச் செய்து உயிருக்கே உலை வைக்கிறாள்.

படித்தவர்களுக்குத் தெரியும். பெண்ணின் இருப்பை அவளின் ஆளுமையை நுணுகி நுணுக்கமாகச் சொன்னவர் பாலகுமாரன். பெண்களின் இயல்பான நேர்த்திகள் நேர்பட இருக்கும் பொழுது அவளைச் சுற்றி இருப்போர் அடையும் சந்தோஷத்தை யும், அதுவே கோணலாகிப் போகையில் நேருகின்ற வேதனைகளையும் படம் பிடித்துக் காட்டியவர் அவர். ஆணின் அமைதிக்கோ, பரிவிற்கோ, பரிதவிப்பிற்கோ, பாசத்திற்கோ, மேன்மைக்கோ அவர்களே காரணமாகிப் போகிறார்கள். இயக்குபவள் அவள்; இயங்குபவன் அவன். பெண்டாட்டிக்கேற்ற புருஷனாய், அம்மாவிற்கேற்ற மகனாய், அக்கா-தங்கைக்கேற்பவனான சகோதரனாய் பெண்களின் கைகளில் அவர்கள் இஷ்டம் போல் விளையாடக் கிடைத்த பொம்மையாகிப் போகிறான் அவனும். ஆட்டத்தில் ஈடுபடுவோர் அவனும் அவளுமாய் இருப்பினும் ஆட்டத்தின் போக்கை நிர்ணயிப்பவள் அவளே. தன் இஷ்டத்திற்கேற்ப எப்படி வேண்டுமானாலு ம் ஆட்டத்தை திசைதிருப்பவும், தீட்சண்யப்படுத்தவும் அவளால் முடியும் என்பதினால், உறவுகளின் ஒட்டலுக்கும் விரிசலுக்கும் இதுவே விளைவாகிப் போவதினால் அவள் ஆடும் முறையில் நேர்மையும், நியாயமுடனான பொறுப்பும் முக்கியமாகிறது.

‘நிழல் யுத்தம்’ 27 அத்தியாயங்களாய் வாராவாரம் ‘கல்கி’யில் வெளிவந்தது. இருப்பத்தேழு அத்தியாயங்களும் காவியம். ‘பெண்ணைப் பொருள் போகம் என்று நினைத்தவனுக்கு சிரமமுமில்லை; சந்தோஷமும் இல்லை. செம்புலப்பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்று உருகுகிறவனுக்குத் தான் சந்தோஷம், சிரமம் எல்லாம்’ என்று சொல்ல வந்த கதை. துன்பம் நேர்கையில் பாரதிதாசனுக்குக் கூட யாழெடுத்து இசைத்து இன்பம் சேர்க்க வேண்டியிருக்கிறது. வாழ நேர்ந்த வாழ்க்கையில் துன்பமெனும் நிழல் படியும் போது இப்படிப்பட்ட எழுத்துக்கள் வெளிச்சம் காட்டி நிழலைத் துறத்தவும் செய்கிறது.

ஊருக்குத் தெரிந்து கணவன்-மனைவி பிரிந்து வாழ்வது டைவோர்ஸ் என்று அழைக்கப்பட்டால், எல்லா திசைகளிலும் வந்து நெருக்கும் அழுத்தங்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் அவர்களுக்குள்ளேயே ஏற்படுத்திக்கொண்ட சைலண்ட் டைவோர்ஸோ ஊருக்குத் தெரியாமல் போனதில் ஆச்சரியமில்லை. சொல்லப் போனால் அதுவும் ஒரு நிழல் யுத்தம் தான். உயிரின் விளைவை, உறவின் மதிப்பைக் கற்றுக் கொள்ளாமல் போனால் யுத்தங்களைத் தவிர்ப்பதும் சாத்தியமில்லாது போகின்றது.

ஊருக்குத் தெரிந்த டைவோர்ஸுடுடன் ஆரம்பமாகிறது பாலகுமாரனின் ‘இரண்டாவது சூரியன்’. ஆணவம், அகம்பாவம், தன் ‘தானை’த் தானே தூக்கிச் சுமந்து எல்லா நேரங்களிலும் தன்னையே முன்னிலைப் படுத்தத் துடிக்கும் தன்னகங்காரம் என்று எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துக் குழைத்ததின் வடிவம் கவிஞன் கதிரேசன். கதிரேசன் பட்டிமன்ற கவிஞன், தமிழ் இலக்கியத்தில் முதுகலை படித்த பேராசிரியன், சமூகத்தில் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதற்காக சகல உபாயங்களையும் கற்றுத் தேர்ந்த வித்தகன். ரசாயனத்தில் எம்.எஸ்ஸி., படித்த பள்ளி ஆசிரியை பானுமதி அவனுக்கு வாழ்க்கைப்படுகிறாள். ஆரம்பத்தில் கதிரேசனின் சாதுரியங்கள் அவளைக் கவர்ந்தாலும், சுயநலமும் சுயபுராணமும் தன்னைச் சுற்றியே பின்னிப் பின்னி சகலத்தையும் அவன் சமைத்துக் கொள்வது அவளுக்கு சலிப்பேற்படுத்துகிறது. அவனது மமதையும் மனைவி உட்பட சகல உறவுகளையும் கிள்ளுக் கீரையாக நினைக்கும் அவனது உதாசீனமும் அவளுக்கு வெறுப்பேற்படுத்துகிறது. தினமும் சண்டை, அடிதடி என்று தொடர்கதையாகிப் போகும் அத்தனை அவமானங்களும் கடைசியில் விவாகரத்தில் முடிகிறது. பெற்றோர்களுடனும் இருக்க முடியாமல் போய் இரண்டு குழந்தைகளுடன் தனிக்குடித்தனம் துவங்குகிறாள் பானுமதி. துணையாய் இவளைப் போலவேயான வாழ்க்கை அமைந்து போன, குடும்ப நீதிமன்றத்தில் இவளதும் அவளுதுமான வழக்குகள் நடக்கையில் மனதுக்குப் பிடித்துப் போன பூக்காரி நாகம்மா துணையாகி வீட்டு வேலைகளையும், இவளது குழந்தைகளையும் கவனித்து பராமரிக்கும் தோழியாகிறாள். வாழ்க்கையின் போக்கில் நிகழும் அறிமுகங்கள், பிறர் நலனுக்காக தான் அல்லாடுகையில் கிடைக்கும் மகிழ்ச்சி, அதில் தனக்குத் தானே பிர்மாண்டமாய் உணரும் மனிதாபிமானம் எல்லாமே உலகையும், மானுட உறவுகளின் உன்னதத்தையும் பானுமதிக்கு பாடமாக எடுத்தோதுகின்றன. ‘கிருஷ்ண மந்திர’த்து வரலஷ்மிக்கு கிடைத்த மாதிரி ‘இரண்டாவது சூரியன்’ பானுமதிக்கும் கிடைத்த வேறுபட்ட வேறோரு ஞானோதயம். பெண் தண்ணென்று குளிர் பொழியும் நிலவல்ல; கனவுகளோ கற்பனை ஊற்றுகளோ அல்ல; சுட்டெரிக்கும் இரண்டாவது சூரியன் என்று சொல்ல வந்த கதை இது.

தஞ்சை மாவட்டத்து திருக்காட்டுப்பள்ளிக்கு அருகாமையில் உள்ள பழமார்நேரியில் பிறந்தவர் பாலகுமாரன். ஆசிரியையாய் இருந்த தாயார் சுலோச்சனா அம்மையார் சிறுவன் பாலகுமாரனின் பொது அறிவு வளர்ச்சியில் பெரும் கவனம் கொண்டார். எழுதுதலின் ஆரம்பத் தொடக்கம் கணையாழி, கசடதபற போன்ற சிற்றிதழ்களில் இவருக்கு ஆரம்பித்தது. 'குமுதம்' பத்திரிகை சார்ந்த பால்யூவின் அறிமுகம், வெகுஜன பத்திரிகைகளின் பக்கம் இழுத்தது. சாவி, கல்கி போன்ற இதழ்களில் மனதைக் கவர்ந்த கதைகளை எழுதியிருக்கிறார். இரும்பு குதிரைகள், மெர்க்குரி பூக்கள், கரையோர முதலைகள், பச்சை வயல் மனது, தாயுமானவன் போன்ற புதினங்கள் வாசகர்களின் மனதை மயக்கின. அவரின் எழுத்து நடையும், கட்டிப்போட்ட சொல்வளமும், பழைமையின் மெருகு கலையாத புதுமைக் கருத்துக்களும் இலட்சக் கணக்கான இளைஞர்களின் மனம் கவர்ந்தன. பிற்காலத்து திருவண்ணாமலை விசிறி சாமியார் யோகி ராம்சுரத் குமாரின் அருகாமை கிடைத்த யோகத்தில் ஆன்மிக சிந்தனைகளைக் கொஞ்சம் தூக்கலாக சொல்ல ஆரம்பித்தார்.

'என்னுயிரும் நீயல்லவோ' இன்னொரு மாஸ்டர் பீஸ். ஏலக்காய் எஸ்டேட் ஓனர் நாச்சியப்ப செட்டியார், தனது இரண்டாவது மனைவி பகவதியிடம் எஸ்டேட் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு கண் மூடுகிறார். செட்டியாருக்குப் பின் எஸ்டேட் உரிமை குறித்து பங்காளிகளிடையே கசமுச எழுந்த பொழுது அவர்களை அடக்கி எஸ்டேட்டைப் பார்த்துக் கொள்ளும் பகவதிக்கு பக்கபலமாக தன் மூத்த மகன் கதிரேசனை மலைக்கு அனுப்புகிறார் செட்டியாரின் முதல் மனைவி ஆச்சி. மலைக்கு வந்து ஏலப்பயிர் பற்றியும் அதற்கு உள்ள கிராக்கி பற்றியும் அறிந்து எஸ்டேட்டை விரிவுபடுத்த விரும்பி அதில் அவன் வெற்றியடைந்த கதை, அவனது காதலுக்கு இடையே சொல்லப்பட்டிருக்கிறது.

ஆச்சிக்கும் பகவதிக்கிடையான நேசத்தை, ஏலக்காய் பயிர் பற்றி ஞானம் கொண்டு ஒரு ஆணுக்கு நிகராய் எழுந்து நின்று கட்டிய கணவனின் சொத்தை, தன் மூத்தாளின் பிள்ளை கதிரேசனை காத்து நின்ற பகவதியின் கடமை உணர்வின் மாண்பை, சித்தியின் சொல் பேச்சுக்குப் பணிந்து பெற்ற அன்னையாய் அவளைப் பேணும் கதிரேசனின் குணநலனை என்று பாலகுமாரன் உணர்வுகளை கொட்டி வடிக்க நிறைய வாய்ப்புகள்.

இன்னொன்று. இந்த புதினத்தைப் படிக்கையில் பளிச்சென்று தெரியும் பாலகுமாரனின் வளர்ச்சி. ராஜம் கிருஷ்ணன் புதினங்களில் காணக்கிடைப்பது போலவான அந்த கள ஆராய்ச்சியைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். போடி நாயக்கனூர் பகுதி ஏலக்காய் தோட்டங்களை நிலைக்களனாகக் கொண்டு அந்த மலைப்பகுதி வாழ்க்கை, ஏலக்காய் பயிர், அதன் வளர்ச்சி, தண்ணீரை சாரலாகத் தூவும் ஸ்பிளிங்கர்கள் என்று தூள் கிளப்பியிருக்கிறார். பயிரோடு பயிராக நாமும் அந்த ஸ்பிளிங்கர்களில் நனையும் உணர்வு.

"...ஏலக்காய் ஆட்களை நம்பி செய்கிற பயிர். ஒற்றை ஆளாய் நிர்வகிக்க முடியாத தோட்டம். பயிர் செய்தோம், பறித்தோம், விற்றோம் என்று முடியாது. பறித்ததற்கு பிறகு தான் முக்கியமான வேலை துவங்குகிறது. பழுத்து ஈரமாய் இருக்கிற ஏலக்காயை உடனே உலரச் செய்யணும். உஷ்ணம் காட்டி இறுகச் செய்யணும். இல்லையெனில் பழுத்தது அழுகிவிடும். உஷ்ணமாக்கி உலர வைக்க தனியான அடுப்பும், தகரப்பாய்களும் வேண்டும். உஷ்ணம் அதிகமானால் ஏலக்காய் கருகி விடும். உஷ்ணம் குறைந்தால் ஏலக்காய் அழுகி விடும். மேல் தோலில் இருக்கிற பச்சை கெடாமல், உள்ளே இருக்கிற பயறு கெடாமல் காயை இறுக்கி, தரம் புரிந்து, தூசு தேய்த்து பளபளவென்று கொடுப்பதற்கு ஆட்கள் வேண்டும். இது தன் தோட்டம், தன் காய் என்பது போல உழைக்க வேண்டும்...."

பாலகுமாரனுடைய எழுத்து நடை, நம் பக்கத்தில் கூட உட்கார்ந்து முகத்தைப் பார்த்து கதை சொல்கிற நடை. அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் படிக்கிற நம் மனமும் தாவித்தாவி போகும். சிலம்பம் விளையாடறச்சே முன்னே, பின்னே, பக்கவாட்டில் என்று கால்களை நகர்த்தி பாவிப்பாவி விளையாடற மாதிரி எழுதற கருத்துக்களோடு அவரும் முட்டி, மோதி, வளைந்து, பின்வாங்கி, விழுந்து மீண்டும் எழுந்து எழுத்தின் உள் ஜீவனைக் கண்டு பிடித்து நமக்குச் சொல்கிற மாதிரி எழுதுவார்.

அது பிரிட்டிஷார் நாட்டை ஆண்ட காலம். கிட்டத்தட்ட எம்டன் குண்டு சென்னையில் வீழ்ந்த காலம். மாயவரத்து செம்பொனார் கோயில் சார்ந்த சாம்பசிவ சாஸ்திரிகள், அவர் மைத்துனன், பிள்ளை, பிள்ளையின் பிள்ளை என்று எல்லோரும் சப்ஜாடா தங்கள் குலத்தொழிலான வைதீகம் விடுத்து வாழ்க்கையின் அமுக்கி அடித்துப் போகும் சூழலின் சுழலில் துணிந்து மூழ்கி எதிர் நீச்சல் அடித்து நிமிர்ந்த கதை, 'அப்பம்,வடை,தயிர் சாதம்'. காலத்திற்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்வதில் எந்தவித கவலையும் படாமல் கம்பீரமாக நிமிர்ந்ததற்குப் பின்னாடி வழிவழி வரும் தலைமுறைக்கு காயத்ரி ஜபமும் சொல்லித் தரணும், 'அப்பம், வடை, தயிர்சாதம்'ன்னு தோள்லே கூடையைத் தூக்கிக்கொண்டு கூவிப்போகவும் சொல்லித் தரணும் என்று புரிந்து கொள்கிற முறையில் கதையை முடித்து வைக்கிறார்.

பாலகுமாரனின் எழுத்துக்களில் ஒன்றிப் படிக்கும் பொழுது ஒன்று தெரியும். தான் உணரும் பல விஷயங்களை சாவதானமாக அழகுபடுத்திச் சொல்வதற்குத் தான் இவர் கதை வடிவை எழுதத் தேர்ந்தெடுத்தாரோ என்று. கதை மாந்தர்களின் மூலமாக மற்றும் தானே தனியாகக் கொஞ்சம் என்று சொல்ல வாய்ப்பு இல்லாத நேரத்தும் அப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு பேசுவார். சில சமயங்களில் துண்டாகத் தனியே துருத்திக் கொண்டு தெரிகிற மாதிரி அவை தோற்றமளித்தாலும் அவரது உணர்வுகளைப் புரிந்து கொண்டு படிப்போருக்கு அதுவும் பிடித்துப் போகிற அளவில் அமைந்து விடும்.

இரும்பு குதிரைகள், மெர்க்குரிப் பூக்கள், கரையோர முதலைகள் போன்ற பாலகுமாரனின் புதினங்கள் அவருக்கு நிறைய வாசகர்களைத் தேடித் தந்தன என்பது உண்மை. திருப்பூந்துருத்தி, பலாமரம் போன்ற படைப்புகள் வேறொரு காலகட்டத்தில் வேறொரு விதமாய் அவரைப் பாதித்த எண்ண ஓட்டங்களைப் பிரதிபலித்தவை. எழுதுகின்ற எழுத்தாளனின் மன வளர்ச்சியோடு கூடச் சேர்ந்து அந்த எழுத்தாளனுக்கென்று அமைந்து போகிற வாசகர்களும் கூட வளரச் சொல்லிய கதைகள்.

பத்திரிகைகள் வேண்டுவனவற்றை எழுதிக் கொடுக்கிற எழுத்தாளர்கள் உண்டு. இவர்களால் ஒவ்வொரு பத்திரிகையின் போக்குக்கும் அதன் தேவைக்கும் ஏற்ப எழுத முடியும். 'தோசை வேண்டுமா இந்தா தோசை, இல்லை, இட்லியா, இந்தா இட்லி' என்கிற நிலை இது. சில எழுத்தாளர்கள் ஆரம்ப காலகட்டங்களில் வாசகர்களை அடைய பத்திரிகைகளை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டாலும், வாசகர்களின் அபிமானம் பெற்ற பிறகு நாளாவட்டத்தில் தனது வாசகர்களுக்குப் பிடித்தவற்றை எழுதத் தொடங்குகிறார்கள். இவ்வளவுக்கும் இணங்கிப் போகிற எழுத்தாளருக்கு அவருக்கென்று ஒரு வளர்ச்சி இருக்கிறதல்லவா?.. அந்த வளர்ச்சி அவரது மனதோடு தொடர்பு கொண்டது. மனம் கொள்ளும் எண்ணங்களே எது குறித்து எழுதினாலும் அதில் படியும். எழுத்தே அவர் மனத்தை வெளிப்படுத்தும் ஒன்றாகவும் அமையும் நிலை இது.

தன் மனம் சொல்வதை வாசகர்களிடம் மறைக்காமல் எழுதும் எல்லா எழுத்தாளர்களுமே இப்படித்தான்.

Related Posts with Thumbnails