இரண்டாவது-- நாவல், சிறுகதை என்று தனக்குத் தானே சிறைப்பட்டுக் கொள்ளாமல் தனக்குப் பிடித்ததை, தான் ரசித்ததை, தனக்கு அனுபவம் ஆகியவற்றை எந்த சிரமமும் இல்லாமல் தன் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டவர் அவர். அதனால் தான் அவருக்கு பிடித்தவையெல்லாம் பிடிக்கிற வாசகர்கள் அவரது வாசகர்களாய் ஆகிப் போனார்கள். இதை இன்னொரு விதத்தில் சொல்லப் போனால், தன் எழுத்தின் மூலம் தன்னைப் போலானவர் களைத் தேர்ந்து அவர்களுடன் பேசுவதற்காகவே இவர் எழுதினார் போலும் என்று நினைக்கத் தோன்றுகிறது.
விட்டல்ராவ் தொலைபேசி இலாகாவில் பணியாற்றியவர். நானும் அவரது சமகாலத்தில் அதே இலாகாவில் பணியாற்றி எழுத்திலும் ஆர்வமுள்ளவனாய் இருந்ததினால் விட்டல்ராவின் எழுத்துக்களுடனான பரிச்சயம் ஏற்பட்ட பொழுது அது ரொம்பவும் இயல்பான நெருக்கமாயிற்று. போதாக்குறைக்கு நடுவண் அரசில் நடந்த ஒரு பொதுவேலைநிறுத்தம் பற்றியதான சூழலில் அவரது நாவலொன்று அமைந்திருந்து, அதைப் படிக்க நேர்ந்த பொழுது அவர் மனதுக்கு மிகவும் பிடித்துப் போனார்.
தான் பார்த்து உணர்ந்த வாழ்க்கையே பாடப்புத்தகமாயிற்று விட்டல்ராவிற்கு. தான் ரசித்த உணர்வுகளை தவறாமல் தன் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்திருக் கிறார். பெரிய- சிறிய என்று பத்திரிகைகளில் பேதம் பார்க்காது தன் எழுத்துக்களை பிரசுரம் பண்ணத் தயாராக இருந்த எல்லா பத்திரிகைகளிலும் அவர் எழுதினார். 'கல்கி'யிலும் எழுதியிருக்கிறார்; 'கணையாழி'யிலும் எழுதியிருக்கிறார். 'கல்கி'க்கு ஒரு மாதிரி, 'கணையாழி'க்கு வேறு மாதிரி என்று அவர் எழுத்து அமைந்ததில்லை. அதனால், இலக்கிய வாசிப்பிற்கு எதிரான மன நிலையை வணிகப் பத்திரிகை எழுத்து உருவாக்குகிறது என்கிற அவப்பெயர் இவரால் ஒழிந்தது. வணிக அல்லது அவணிகத்தன்மை என்பதை ஒருவரின் எழுத்துதான் தீர்மானிக்கிறதே தவிர அந்த எழுத்து பிரசுரமாகும் பத்திரிகை அல்ல என்பது இவரின் எழுத்துக்களால் நிரூபணமான ஒன்று.
மூன்று தலைமுறை வாழ்க்கையை தமது 'நதிமூலம்' நாவலில் சொல்ல இவர் முயற்சித்தது, மூன்று தலைமுறைக்கான அந்தக் குடும்பத்தின் வாழ்க்கைக்கும் ஆகிப்போனது. அந்தந்த காலத்தின் வாழ்க்கை முறைகளை அந்தந்த தலைமுறை பிரதிநிதித்துவப் படுத்துவதால், மூன்று தலைமுறைக்கான சமூக மாற்றங்களில் இந்தக் குடும்பமும் அலைக்கழிக்கப்பட்ட அவலத்தை அழகாகப் பதிந்திருக்கிறார். அந்த பதிவினூடே தவிர்க்கவே முடியாமல் அந்த தலைமுறை காலத்து சமூக, சரித்திர நிகழ்வுகளும் கூட வந்து சேர்ந்து கொள்கின்றன. படிக்கும் வாசகன் எழுதும் எழுத்தினூடே பயணம் செய்கிற மாதிரி எடுத்துக்கொண்ட வேலையை நறுவிசாகச் செய்து இந்த 'நதிமூலம்' நாவலில் விட்டல்ராவ் வெற்றிக் கொடி நாட்டுகிறார். இவரது 'போக்கிடம்', 'நதிமூலம்' இரண்டும் இவரை நினைத்தாலே நினைவுக்கு வருகின்ற புதினங்கள். இன்னும் ஒரு நாவல், 'இன்னொரு தாஜ்மஹால்'- நூலகம் செல்லும் பொழுதெல்லாம் நான் தேடிக்கொண்டிருக்கும் புத்தகம். நா.பா.வின் 'தீபம்' இதழில் விட்டல்ராவ் எழுதிய 'பேர்கொண்டான்' என்னும் சிறுகதை இன்னும் நினைவில் இருக்கிறது. அந்தக் கதையில் பழைய புத்தகங்களை விற்கும் புத்தகக்கடை பற்றியும், அப்படியான ஒரு புத்தகக்கடைக்கு சொந்தமானவருடன் ஏற்பட்ட பழக்கம் பற்றி எழுதியிருப்பார். என் இளமை பருவத்தில் சேலம் வில்வாத்ரிபவன் ஹோட்டல் எதிரிலிருந்த 'ஏ.வி.எஸ். புக் செண்டர்' உரிமையாளர் ஏ.வி.எஸ்ஸுடன் இதே மாதிரியான ஒரு நட்பு நானும் கொண்டிருந்ததால், மறக்கவேமுடியததாக அக்கதை பற்றிய நினைவுகள் என் நெஞ்சில் பதிந்ததோ தெரியவில்லை.
அன்றைய சேலம் மாவட்டத்து ஹோசூர் தான் விட்டல்ராவ் பிறந்த ஊர். தொழிற் வளர்ச்சியில் பூதாகாரமாய் வளர்ந்து பளபளக்கும் இன்றைய ஓசூர் அன்றில்லை. சின்ன சின்ன கிராமங்களை உள்ளடக்கிய கொஞ்சம் பெரிய கிராமம்; அவ்வளவு தான். பக்கத்திலேயே பெங்களூரு ஆகையால் கன்னடமும், தமிழும் கலந்த பேசும் மொழி கேட்க மழலையாய் மிளிரும். பல இடங்களில் பணியாற்றிய வாய்ப்பு இவரது அனுபவ தளத்திற்குப் பரிச்சயமாகி, எழுத்து, ஓவியம், விமரிசனம், ரசனை என்று பல்வேறு தளங்களுக்கு விரிவடைந்திருக்கின்றன. நாடகத்துடன் அவரது தொடர்பு வழிவழியாய் வந்த பாரம்பரிய சொத்து. 'வண்ண முகங்கள்' என்னும் இவரின் படைப்பு, நாடக உலகின் வீதிகளில் உலாவும் உணர்வைத் தோற்றுவிக்கும்.
நல்ல இலக்கியம் என்பது இயற்கலைகளிலிருந்து பிரித்துப் பார்க்க இயலாத ஒன்று. இன்னும் சொல்லப்போனால் கலையின் பல்வேறு அம்சங்கள் இலக்கியத்தில் கலந்து குழைந்து வெளிப்படும் பொழுது தான் இலக்கியம் என்பது தனது இயல்பான இலக்கியத்தன்மையைப் பெற்றதாக தோற்றம் கொள்ளும். அதன் பெருமை சொற்களில் அடங்கா கீர்த்திகளைப் பெற்றுத் துலங்குவதாக மனதிற்குப் புலப்படும். ஓவியம், சிற்பம், ஆடல், பாடல், இசை என்பதானவற்றின் நுண்மைகள் இலக்கியத்தில் தங்கள் தடங்களைப் பதிக்கின்ற பொழுது எல்லாவிதமான கலைத்தன்மைகளின் சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டு முழுமையான தோற்றத்தையும் கொடுக்கும். ஓவியக் கல்வி பயின்ற, ஓவியத்தில் நாட்டம் கொண்டிருந்த விட்டல்ராவ் ஒரு ஓவியரின் நுண்மைகளை தனது எழுத்துக்களிலும் கொண்டிருப்பார். சரியாகச் சொல்லப்போனால், எழுதுதலும், ஓவியம் வரைதலும் வெவ்வேறான இரண்டு செயல்பாடுகளாய் இல்லாமல் அவரைப் பொருத்தமட்டில் ஒன்றாகிப் போனது. 'ஓவியக் கலை உலகில்' என்னும் தனது புத்தகத்தில் ஓவியக்கலை குறித்தான பல செய்திகளை மனதாரப் பறிமாறிக் கொண்டிருக்கிறார்.
'தமிழகக் கோட்டைகள்' என்றொரு கோட்டைகளைப் பற்றியதான தொகுப்பு நூல்; அற்புதமான நூல். யாரும் தொடாத சப்ஜெக்ட். கோட்டைகளைப் பற்றி எழுத வேண்டுமென்று இவருக்கு எப்படித் தோன்றியது என்கிற ஆச்சரியம் வேறே இதை எழுதும் பொழுதும் ஏற்படுகிறது. ஒன்றிரண்டு கோட்டைகள் தாம் நம் எல்லோருக் கும் தெரியும் என்றாலும், நமக்கு அறவே அறிமுகமில்லாத பல கோட்டைகளை விட்டல்ராவ் அறிமுகப்படுத்திப் பரிச்சயமாகும் பொழுது பிரமிப்பே மிஞ்சுகிறது. தமிழகத்தில் இருந்தும், இப்படியான அரிய விஷயங்கள் தெரியாமல் இருக்கிறோமே என்கிற நாணம் தான் எஞ்சுகிறது. நாமக்கல், ஓமலூர், வேலூர், ஆத்தூர் கோட்டை, தென் கரைக் கோட்டை, செங்கை கோட்டை, செஞ்சிக் கோட்டை, பாராமஹால் என்று விட்டல்ராவ் வரிசைபடுத்துதலின் நீட்சி மைசூர், ஸ்ரீரங்கப்பட்டினம் என்றும் உள்ளடக்கிக் தொடர்கிறது. இடைஇடையே இழைந்தபடி வந்து போகும் சரித்திரகால குறிப்புகள் சித்திரங்களாய் மனத்தில் படிகின்றன. படித்து முடிக்கும் பொழுது ஒரு பெருமூச்சு தான் வெளிப்படுகிறது. இன்றைய தலைமுறைக்கு எத்தனை சிறப்புகளை இழந்து நிற்கிறோம் என்பதும், இடிபாடுகளில் சிக்குண்டு, பாழடைந்ததாய்,பழுதடைந்ததா ய், சரித்திர நிகழ்வுகளின் நிழல்களாய், இன்று இருந்த சுவடே இல்லாமல் போனதுவாய்....
சிறு வயதில் படித்த டனாய்க்கன் கோட்டையைப் பற்றிய பிரமிப்பூட்டும் புத்தகமும், அந்த வயதில் பார்த்த தஞ்சைக் கோட்டையும் நினைவுக்கு வருகின்றன. அப்பொழுதெல்லாம் தஞ்சைக் கோட்டையைப் பார்க்கும் பொழுது, பொன்னியின் செல்வன் பாதிப்பில் பழையாறைக் கோட்டை, நிலவறை, வளைந்து வளைந்து செல்லும் சுரங்கப்பாதை எல்லாம் நினைவுக்கு வரும். கொத்தளம் என்பது இரட்டைக்கிளவி மாதிரி கோட்டையோடேயே சேர்ந்த வார்த்தை. எல்லாக் கோட்டைகளின் மேல் பகுதியில் பீரங்கிகளை நிறுத்த வாகாக இருக்கும் பெரிய வளைவுகளும், கோட்டைச் சுற்றிய அகழிப் பிரதேசமும், உள்ளே செல்வதற்காக அகழி மேலிட்டிருக்கும் பாலமும் தொடர்ந்து நினைவுக்கு வரும் செய்திகள்.
'தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்' என்று விட்டல்ராவின் இன்னொரு நூல். தமிழ் சினிமா வரலாற்று ஏட்டின் ஆகச்சிறந்த பக்கங்களைப் புரட்டிப் பார்க்கையில் ஏற்படும் பெருமிதமும், இழப்பு கலந்த சோகமும் தவிர்க்கவே முடியாமல் நெஞ்சில் படியும். இந்த புத்தகத்தின் சிறப்பு என்னவென்றால், வெறும் தகவல்களாகப் போய்விடாமல், எதைக்குறிப்பிட்டாலும் அது பற்றிய சுற்றுப்பட்ட செய்திகளையும் இழுத்து வந்து சொல்கிற பாங்கில் அமைந்திருப்பது தான். 1940- வாக்கில் திரையிடப்பட்ட படங்களிலிருந்து அதுபாட்டுக்க மலைக்க வைக்கும் விதவிதமான குறிப்புகள் புத்தகம் எங்கும் விரவிக் கிடக்கின்றன. ஜெமினி, பக்ஷிராஜா, மாடர்ன் தியேட்டர்ஸ் என்று இன்றில்லாத பல ஸ்டூடியோக்களைப் பற்றிய விசேஷ செய்திகளும் காணப்படுகின்றன. எல்லாவற்றையும் பகுதிபகுதி யாக எடுத்துக் கொண்டு ஆர அமர சொல்லியிருக்கிறார். திரைத்துறையில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் குறித்து வைத்துக் கொண்ட செய்திகள், தானே ரசித்து அனுபவித்து இன்னொருத்தருக்குச் சொல்ல ஆசைப்பட்டது என்று எழுத எடுத்துக் கொண்ட பொருளை விட்டல்ராவ் அமர்க்களப் படுத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இதே மாதிரி உலக சினிமாவைப் பற்றியும், பிற தேச சினிமாக் கலைஞர்களைப் பற்றியும் இவர் எழுதியிருப்பதாகக் கேள்விப்பட்ட துண்டு; படித்ததில்லை. தமிழகக் கோட்டைகளும் சரி, இந்தத் தமிழ் சினிமாவின் பரிமாணங்களும் சரி, இரண்டுமே விட்டல்ராவின் எழுத்து வன்மையை சிறப்பாக எடுத்துச் சொல்பவை. இந்தத் திறமையற்ற வேறு யாராவது இந்தப் பொருள்களை எழுத எடுத்துக் கொண்டிருந்தால் சொதப்பியிருப்பார்கள் என்பது சர்வ நிச்சயம்.
இரு தடவைகள் 'இலக்கியச் சிந்தனை'யின் விருதும், 'கணையாழி'யின் சிறந்த குறுநாவல் பரிசும், 'தினமணிகதிரி'ன் சிறுகதைகளுக்கான பரிசையும் பெற்றவர் விட்டல்ராவ். 'இந்த நூற்றாண்டு சிறுகதைகள்' என்று இவருக்கு பிடித்த, இவர் தொகுத்த இருபதாம் நூற்றாண்டு சிறுகதைகளின் தொகுப்பொன்று வெளிவந்திருக்கிறது. அதே மாதிரி, 'விட்டல் ராவ் கதைகள்' என்று இவரது சிறந்த சிறுகதைகளின் தொகுப்பொன்றும் குறிப்பிட்டேயாக வேண்டிய ஒன்று. சமீபத்தில் இவர் எழுதிய சிறுகதை ஒன்று 'கல்கி' பத்திரிகையில் படிக்கக் கிடைத்தது. அதுவே இவரைப் பற்றி எழுத வேண்டுமென்கிற உந்துதலையும் ஏற்படுத்தியது.
இவரது 'தமிழகக் கோட்டைகள்' புத்தகத்தை அம்ருதா பதிப்பகமும், 'தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்' நூலை நிழல் பதிப்பகமும் பதிப்பித்திருக்கிறார்கள்.
13 comments:
நான் படித்ததில்லை. அவரைப் பற்றி உங்கள் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன். தமிழகக் கோட்டைகள் புத்தகமும் சினிமா பற்றிய புத்தகமும் வாங்க வேண்டும். குறிப்பாக கோட்டைகள் பற்றிய புத்தகம். எனக்கும் இது போன்றவைகளை படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டதற்கு நீங்கள் சொல்வது போல நாம் படிக்கும் சரித்திரக் கதைகள் காரணமோ என்னவோ.....
நான் படித்ததில்லை. அவரைப் பற்றி உங்கள் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன். தமிழகக் கோட்டைகள் புத்தகமும் சினிமா பற்றிய புத்தகமும் வாங்க வேண்டும். குறிப்பாக கோட்டைகள் பற்றிய புத்தகம். எனக்கும் இது போன்றவைகளை படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டதற்கு நீங்கள் சொல்வது போல நாம் படிக்கும் சரித்திரக் கதைகள் காரணமோ என்னவோ.....
நண்பர் ஜீவி அவர்களுக்கு அனந்தகோடி நமஸ்காரம்.விட்டல ராயர் பற்றி இப்படி ஒரு அற்புதமான விமர்சனம்.பிரமாதம்.யார் யாரோ இங்கு நடமாடும் பல்கலை கழகங்கள்.தமிழ்நாட்டின் கோட்டை,கொத்தளங்கள்,சிற்பங்கள், சினிமா,பாய்ஸ் நாடக கம்பெனிகள்,கன்னட நாடக உலகம்,சென்ற நூற்றாண்டின் சேலம் ஜில்லா,சென்னை மாநகரம் அதில் உள்ள மாந்தர்கள் ,என்ன வேண்டும் உங்களுக்கு,ராயர் உங்கள் கண்முன் கடைவிரித்து விடுவார் தன அற்புதமான எழுத்து திறத்தாலே.அள்ள,அள்ள குறையாத ஒரு அற்புத அலாவுதீன் தீபம் அவர்.தமிழில் kali .n .ரத்தினம் பற்றி எழுதுவார் அதே மூச்சில் கன்னட காளிங்க ராவை பற்றியும் வாசகனுக்கு சொல்லுவார்.எதை எடுத்துகொள்வது என்று வாசகன் திணறிவிடுவான்.வாராது வந்த மாமணி விட்டல ராயர்.வாழ்க பல்லாண்டு.
திரு. விட்டல் ராவ் அவர்களைப் பற்றி விரிவாக சொல்லி ,படிக்கும் ஆவலை துண்டிவிட்டீர்கள். நன்றி.
முதலில் அவர் சிறுகதை தொகுப்பை படிக்க வேண்டும்.
@ ஸ்ரீராம்
தங்கள் பகிர்வுக்கு நன்றி. புத்தகங்கள், உடுமலை.காமில் கிடைக்கலாம்.
@ Vijayan
வாருங்கள், விஜயன் சார்! சில வரிகளிலேயே விட்டல் ராவின் சிறப்புகளை மிக அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.
படித்து பின்னூட்டமிட்டுத் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
@ கோமதி அரசு
படித்துப் பாருங்கள், கோமதிம்மா. உங்களுக்குப் பிடிக்கும்.
தங்கள் வருகைக்கும், எனது பதிவுகளைத் தொடர்ந்து படித்து நினைப்பதைப் பகிர்ந்து கொள்வதற்கும் மிக்க நன்றி.
g.v.sir,
u have not mentioned about his masterpiece novel --pokkidam--
such a wonderful novel.have u read it or not?
@ Radhakrishnan
'இவரது 'போக்கிடம்', 'நதிமூலம்' இரண்டும் இவரை நினைத்தாலே நினைவுக்கு வருகின்ற புதினங்கள்'
என்று குறிப்பிட்டிருக்கின்றேனே!
பிரபல எழுத்தாளர்கள் போடும் லிஸ்ட்டில் விட்டல்ராவ் இல்லையே தவிர, அவரது போக்கிடம் தமிழின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.
தங்களின் ஆர்வத்திற்கும் எடுத்துச் சொன்னமைக்கும் நன்றி, ராதாகிருஷ்ணன்.
sorry,g.v. sir.i missed it.i request u to kindly give a post about -pokkidam-novel.i have not come across a detailed write up about the novel.kindly enlighten me whether anybody has cared to post about the novel.
g.v.sir,
thanks alot for posting about tamil writers.a sincere and good effort.
@ Radhakrishnan
'போக்கிடம்' பற்றி எழுத நினைவில் குறித்துக் கொண்டிருக்கிறேன். மறு வாசிப்பிற்கு நமக்குப் புகலிடம் அரசு நூலகங்களே. கிடைத்ததும் எழுதுகிறேன்.
திரு. எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா.) 'போக்கிடம்' தமிழின் சிறந்த நூறு நாவல்களில் ஒன்று என்று குறித்திருப்பதை அறிந்தேன்.
தங்களின் ஆழ்ந்த ரசனைக்கு மிக்க நன்றி.
நல்ல அறிமுகம் சார். விட்டல்ராவின் ' இந்த நூற்றாண்டு சிறுகதைகள்' தொகுப்பை படித்தது பல நல்ல கதைகளை, முக்கியமாக நிறைய எழுத்தாளர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது. அவருடைய கதைகள் கூட அலாதியானது தான். ஒரு வித உருவ அமைதி எப்போதும் அவர் கதைகளில் இருக்கும்.
Post a Comment