Saturday, May 7, 2011

நவீன கதையுலகம்

நிஜத்தில் கால் பாவும்
கற்பனை புரவி ஏறி
கடிதாய் பறந்து வந்தேன்
கைநீட்டி நிறுத்தியவர்கள்
குதிரைக் கடிவாளம் பற்றி
உனக்கு மட்டுமே அனுமதி
உள்ளே போ என்றார்கள்..

புரவி மேவி அல்லாமல்
வெற்று நடை நடந்து
நாளாயிற்று என்றேன்
கால்களால் நடந்தால்
புரவிக் கற்பனை
காற்றாய் பறந்து விடும்;
நடக்க நடக்க
இந்த நடை பழகிவிடும்
நடந்து பழகு என்றார்கள்

அடுத்துப்
போர்த்தியிருந்த அழகு ஆடை பார்த்து
பூடகமாய் முகம் சுளித்தார்கள்;
அலங்கார பூச்செல்லாம் வேண்டாம்..
இங்கேயோ புனைவிற்கே
தடா என்றார்கள்.
தலைசுற்றியது எனக்கு.

எனக்குத் தெரிந்த எதற்குமே
இங்கே வேலையில்லை போலிருக்கு
பின் நானெதற்கு?
என்னை ஏன் அழைத்தீர்கள்
என்றதற்குத்தான் இதைச் சொன்னார்கள்

அது உன்னால் முடியும்
மாயக்கதை மந்திரக் கதைகளுக் கிங்கிடமுண்டு
நிகழ்ந்த நிகழ்வுகளையும் மாற்றி எழுத வழியுண்டு
மாற்றி எழுதியதே நடந்த நிகழ்வோ வென்று
நாளைய உலகம் மயங்குவதுண்டு
ஒற்றைப் பொருளை எடுத்து நிறுத்தி
நீட்டி முழக்கலான
வெறும் விவரிப்புகளின்றி
வேறு வேலையில்லை
எழுதும் எதுவொன்றும்
'ஒருமாதிரி' இருந்தாலும் சரிதான்
எடிட் செய்ய மாட்டோம்; எத்தனை பக்கத்திற்கு
வேண்டுமானாலும் எழுத வழியுண்டு என்றார்கள்.
மொத்தத்தில் போகும் பொழுதைப் போக்குவர்க்கு
துணையாக பொழுது போக்க உடன் வரவேண்டும்
அவ்வளவு தான்; சம்மதமா என்றார்கள்
நமக்குச் சரிப்பட்டு வராதுடா சாமியென்று
புரவி மேவிப் பறந்தேன்.


















10 comments:

G.M Balasubramaniam said...

கிட்டத்தட்ட நானும் உங்கள் நிலையில்தான் இருக்கிறேனோ .? அது சரியல்ல என்றே தோன்றுகிறது. நான் ஒரு ஸ்மால் டைம் ரைட்டர். எழுத்துலகில் ஒரு சின்ன புள்ளி. கவிதை நன்றாக இருக்கிறது ஜீவி.

ஸ்ரீராம். said...

நல்ல பாலிசி. எல்லா சமயத்திலும் எல்லோராலும் கடைப் பிடிக்க முடியுமா...ஒரு சில விஷயங்களிலாவது compromise ஆபவர்கள் அதிகம்.

ஜீவி said...

G.M. Balasubramaniam

அது சரி என்றே எனக்குத் தோன்றுகிறது. இதில் 'கிட்டத்தட்ட' என்ற ஏதும் இல்லாததினால்.

கவிதை உங்களுக்குப் பிடித்திருப்பது குறித்து மகிழ்ச்சி ஜிஎம்பீ சார்!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

'பிறர் பொழுது போக நம் பொழுதைத் தொலைக்க வேண்டுமா' என்கிற அர்த்தத்தில் கூடச் சொல்லவில்லை.
சில நவீன இலக்கிய போக்குகளைச் சொல்வதற்காக எழுத வந்தது.

தங்கள் பகிர்தலுக்கு நன்றி.

சமுத்ரா said...

GOOD ONE

ஜீவி said...

@ சமுத்ரா

நன்றி, சமுத்ரா.

உங்கள் பதிவுகளை சுவாரஸ்யத்துடன் படித்துக் கொண்டிருக்கிறேன்; நிறைய புன்முறுவல்களுக்கிடையே.

அங்கங்கே வந்து பகிர்ந்து கொள்கிறேன்.
விரைவில்.

சிவகுமாரன் said...

நல்ல கவிதை. சமரசம் செய்து கொண்டு எழுதுபவர்கள் தான் கவனிக்கப்படுகிறார்கள். முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்களும் நானும் இப்படித்தான் கவிதை எழுதி தணித்துக் கொள்கிறோம்.

ஜீவி said...

@ சிவகுமாரன்

உங்கள் பின்னூட்டத்தில் ஒருவித ஆற்றாமை தெரிகிறது, நண்பரே!உங்களுக்கு உற்சாகமூட்ட சில தகவல்கள் சொல்ல வேண்டும். பத்திரிகைகளை முன்னிருத்தி
இணையத்தில் எழுதும் வீச்சை குறைத்து மதிப்பிட்டு விடலாகாது!

இணையத்தில் எழுதுவது, கல்வெட்டில் பதித்த மாதிரி. யாருடைய சிபாரிசும், குறுக்கீடும் இல்லாமல் உங்கள் எண்ணத்தை நீங்கள் நினைக்கிற வண்ணத்தில் இதில் பதிக்கலாம்.

நான் பத்திரிகைகளுக்கு எழுதிய காலத்தில், 1963-ம் ஆண்டு காலத்தில் இப்படி ஒரு இணைய வசதி இருந்து இருப்பின் பத்திரிகைகள் பக்கம் திரும்பியிருக்கவே மாட்டேன். பத்திரிகைகளில் நிறைய நான் எழுதிவிட்டதால், இதை நிறைவுடன் என்னால் சொல்ல முடிகிறது. தான் எழுதிய அனைத்தும் இணையத்தில் பதிய வேண்டுமென்பது எழுத்தாளர் சுஜாதாவே ஆசைப்பட்ட ஒன்று. காரணம் இதன் சிரஞ்ஜீவித் தன்மை.
பத்திரிகை எழுத்தின் ஆயுள் நீங்கள் அறிந்த ஒன்றே.

கவனிக்கப்படுதலும், முன்னேறுதலும் எந்த அர்த்தத்தில் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. வெகுஜன பத்திரிகைகளின் ஆசிர்வாதத்தில் கவனிக்கப்பட்டும், முன்னேறியதாக தாகவும் எந்த கவிஞரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. தெரியவந்த அத்தனை பேரும் சிற்றிதழ்களின் அரவணைப்பில் வெளிச்சத்திற்கு வந்தவர்கள்.
ஆனால் எல்லாவகை இதழ்களுக்கும் பொதுவான அம்சம் ஒன்று உண்டு.
அவர்கள் எந்த அளவுக்கு நீங்கள் பறக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறார்களோ அந்த அளவே உங்களால் பறக்க முடியும். எங்கெங்கு காணினும் கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரமே! எந்தப் பத்திரிகையிலும் பிறருக்காக உங்களால் எழுத வேண்டி வருமே தவிர, உங்களுக்காக ஒன்றும் எழுத முடியாது. தனக்கென்று ஒரு பத்திரிகை வேண்டுமென்று இங்கு எத்தனையோ சிறந்த எழுத்தாளர்கள் கனவு கண்டிருக்கிறார்கள். ஆனால், பத்திரிகை வெளியீடு என்பது வியாபார சம்பந்தப்பட்ட ஒன்றானதால், அந்தக் கனவை நனவாக்கிய ஓரு சில பேராலும் சோபிக்க முடியாமல் போயிற்று.

இன்று இந்த இணைய செளகரியத்திலேயே, ஒரு சிறு இலக்கிய பத்திரிகையின் செயல்பாடு கிடைத்திருப்பதை உணர்கிறேன். உங்கள் எல்லை கவிதை மட்டுமேயானதால், இணைய சிற்றிதழ்களில் கூட நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.

கவிதை எழுதப் பொருளைத் தேர்வு செய்தல் முக்கியமில்லையா?.. அதற்கு சமகாலத்து நிகழ்வுகளைத் தெரிந்து தேர்ந்து புரிதல் முக்கிய தேவையாகிப் போகிறது. இந்தக் கவிதையே எடுத்துக் கொள்ளுங்கள். இன்றைய நவீன கதையுலகிற்கான எதிர்கொள்ளும் சிக்கல்கள் இவை.
இந்த சிக்கல்களில் சிடுக்குகள் தெரிந்தோருக்கு இந்தக் கவிதை தெள்ளந்தெரியப் புரியும். மெளனமாகவேக் கூட அந்த உலகத்தில் ஒரு பரஸ்பர புரிதல்கள் ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன.

மறுமொழி நீண்டுவிட்டது. அருள் கூர்ந்து அனுபவப்பட்ட ஒருவனின் ஆலோசனைகளாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

தங்கள் மனந்திறந்த மடலுக்கு நன்றி, சிவகுமாரன்!

.

madrasthamizhan said...

இந்த கவிதையை படித்த பிறகு எனது தமிழாசிரியரின் அனுபவம் தான் நினைவில் வந்தது. ஆசுகவியான அவரை ஒரு திரைப்படத்திற்கு பாடல் எழுத அழைத்தார்கள். அந்த படம் எடுத்து முடிவடைவதற்குள் அவரை வெறுப்பேற்றும் அளவுக்கு கதாநாயகன் முதல் இயக்குனர் வரை அனைவரும் "இப்படி எழுதுங்கள், அப்படி எழுதுங்கள்" என்று தலையிட்டு கடைசியில் ஏன்தான் இந்த துறைக்கு வந்தோமோ என்றி அவருக்கு ஆகிவிட்டது. இணையதளத்தில் அந்த தொந்தரவு இல்லை. நானே ராஜா, நானே மந்திரி என்று இருக்கலாம். உண்மையிலேயே பாராட்டும் நண்பர்கள் கிடைப்பதால் ஆத்மா திருப்தி கிடைக்கிறது.

சிந்தனையை தூண்டும் கவிதைக்கு நன்றி ஜீவி அவர்களே.

ஜீவி said...

@ Madras Thamizhan

பாலகுமாரன் கூட 'இதற்குத்தானா ஆசைப்பட்டேன்?' என்று வெதும்பிச் சொன்ன வார்த்தைகள் தாம் நினைவுக்கு வருகின்றன.

உருப்படியாக உபயோகித்தால் இணையம் போல் செளகரியமான தளம் இப்போதைக்கு இன்னொன்று இல்லை.

தங்கள் வருகைக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி, நண்பரே!

Related Posts with Thumbnails