வண்ணதாசனின் கதைகளைப் படிப்பது சுவாரஸ்யமான ஒரு விஷயம். கதையை எங்கு ஆரம்பிப்பது என்பது தான் அவருக்கு யோசிக்க வேண்டிய விஷயமாய் இருக்கும் என்பதைச் சுலபத்தில் தெரிந்து கொண்டு விடலாம். சொல்ல வேண்டிய கதையின் அடிநாதத்தை கறாராகத் தீர்மானித்து விடுவார் போல. மற்ற விஷயங்கள் எல்லாம் அது அது அதுபாட்டுக்க வந்து போகும்.
ஒரு மையப்புள்ளியில் காம்பஸின் ஒரு ஊசி முனையை ஊன்றிக் கொண்டு, பென்ஸில் செருகிய இன்னொரு முனையை அகட்டி வட்டமடிப்பது போல, எழுதுகையில் அதுபாட்டுக்க வந்து விழும் ஒவ்வொரு விவரணையும் அது தொடர்பான நிறைய ஜோடனைகளைச் சுற்றிக் கொண்டு பம்மென்று திரட்சியாக இருக்கும். இது வேண்டாம் அல்லது இது இதற்கு சம்பந்தமில்லாதது என்று ஒன்றைக் கூடச் சொல்லி விடமுடியாது. சொல்ல எடுத்துக்கொண்ட விஷயத்திற்கு அந்த அளவுக்கு ஒவ்வொன்றும் பாந்தமாக இருக்கும். ஒவ்வொன்றும் நுணுகி நுணுகிப் பார்த்து தேர்ந்த பொற்கொல்லர் மாதிரி அவரே சேகரித்து சேர்த்த அழகு சமாச்சாரங்கள். அத்தனையிலும் அத்தனை நகாசு படிந்திருக்கும்.
வண்ணதாசனின் நினைவுகளில் படிந்துள்ள ஞாபகப் படிமங்கள் தாம் அவரது கதைகள். அவரைத் தேடிவந்த முதல் வாசகர் நம்பிராஜனும், அவரது முதல் கதைத் தொகுப்பான 'கலைக்க முடியாத ஒப்பனைகளை' வெளியிட்ட சேலம் 'அஃக்' பரந்தாமனும் இன்றும் அவரது ஞாபக அடுக்குகளில் கம்பீரமாக வீற்றிருக்கின்றனர். சிறு வயதில் காது வைத்தியதிற்காக வைத்தியரின் கிளினிக்குப் போகும் வழியில் பார்த்த சிவப்பாக நின்ற ஆளுயர தபால் பெட்டி கூட பின்னும் நினைவில் நின்று எழுத்தில் ஏதோ ஒரு கணத்தில் பதிவாகியிருக்கிறது. இந்த நினைவாற்றல் தான் வண்ணதாசன் பெற்ற வரப்பிரசாதம். அவருள் படிந்துள்ள அவரது அபார நினைவாற்றல் கிளைபிரிந்து கிளைபிரிந்து வெவ்வேறு தரிசனங்களின் நினைவுகளை இழுத்து வந்து எடுத்துக் கொண்ட பொருளுடன் சேர்க்கும் ஆற்றல் கதைப் பின்னலாகின்றன. அதை இப்படிக் கூடச் சொல்லலாம்: அவரது ரசனை அலாதியானது. அந்த ரசனை அவரது வாழ்க்கை அனுபவங்களின் விளைவு. அந்த அலாதியான அவரது ரசனையுடன், காணும் காட்சிகள் கலந்து அவருள் வினைபுரிகையில் அவை கதைகளாகின்றன. இதனாலேயே அவரது ரசனைகளே ஸ்தூலமாக அவரது கதைகளை நடத்திச் செல்வதற்கும் பொறுப்பேற்கின்றன.
வண்ணதாசனின் தளம் சிறுகதைகள் தாம். சின்னச் சின்ன கதைகளின் எல்லை தாண்டிப் போவது அவருக்குப் பிடிப்பதில்லை. இந்த இடத்திலிருந்து இந்த இடம் வரை என்று மனத்தில் கோடு போட்டு வைத்திருப்பதைப் போல முடிக்க வேண்டிய அந்த இடம் வந்ததும் அப்ரப்ட்டாக முடித்து விடுவார். அப்படி அவர் முடித்ததும் கனக்கச்சிதமாக இருக்கும். பலநேரங்களில் அந்த கடைசி வரி கூட மேற்கொண்டான கதையை வாசகனே தன் யோசனையில் நீட்டித்து முடித்துக் கொள்கிற மாதிரி வசதி வேறு பண்ணிக் கொடுத்திருப்பார்.
அன்பு தான் ஆரம்பம்; இருந்தாலும் எல்லோராலுமே அந்த இடத்திலிருந்து ஆரம்பிக்க முடியாது என்பது தான் சூட்சுமம். அன்பு செலுத்துதல் கூட சிலருக்குத் தான் சாத்தியப்பட்டச் செயலாக இருப்பது தான் விநோதம். சிலபேருக்கு சிலரிடம் அது ஆழ்ந்து விகசிக்கும் பொழுது காதலாக மலர்கிறது. ஞானப்பனுக்கு சற்றே காலைச் சாய்த்து சாய்த்து நடக்கும் தனுவிடம் ஏற்பட்டதும் அதுதான். சொல்லப்போனால், டெஸ்சி டீச்சருக்கும் அதே மாதிரியான ஒன்று தான் ஞானப்பன் மேலும். ஆனால் தனலெட்சுமியின் பால் ஞானப்பன் கொள்வதற்கும், ஞானப்பனின் மீது டெஸ்சி கொள்வதற்கும் மென்மையான வித்தியாசத்தை படிப்பவருக்குப் புலப்படுத்துவார் வண்ணதாசன். இந்த நுண்மையைப் புரிந்து கொண்டோருக்கு அவரின் 'தனுமை' அற்புதமான சிறுகதை. மருத்துவமனையும் ஒரு உலகம் இல்லாவிட்டாலும், ஒரு சிற்றூர் தான். வகை வகையான நோய்களுக்கேற்றவாறு வகை வகையான மனிதர்கள். மனிதர்க்கு மனிதர் கொள்ளும் உறவுகளும், சில நாட்களுக்காயினும் அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் கொள்ளும் அக்கரையும், இயல்பாகப் படியும் அன்பு விசாரிப்புகளும், உதவிகளும் 'கடைசியாய் தெரிந்தவர்' கதையில் அழகாகப் பதியப்பட்டிருக்கும். காதலித்தவளைக் கரம் பிடிக்க முடியாமல் போகிறது அண்ணனுக்கு. வேறோர் இடத்தில் அவளுக்குத் திருமணமாகி, கைக்குழந்தையுடனான அவளை-- தம்பி தன் நண்பனுடன் எதேச்சையாக வழியில் சந்திக்கும் கதை, 'ரதவீதி'. அந்தக் குட்டியூண்டு கதைக்குள் கோடானுகோடி உணர்வுகளைப் பதித்துத் தருவார் வண்ணதாசன். 'கிருஷ்ணன் வைத்த வீடு' மனசைக் குடையும். அந்த மாதிரி கிருஷ்ண பொம்மை பதிக்கப்பட்ட ஒரு வீட்டைப் பார்த்த அனுபவம், வேறொரு நிகழ்ச்சியின் அதிர்ச்சியை இங்கு கொண்டு வந்து சேர்த்து கதையாகியிருப்பதாகத் தோன்றுகிறது.
'பாம்பின் கால்' கதையே சரசரவென்று ஆரம்பிக்கும். தலைப்பில் தான் பாம்பே தவிர, பாம்பு பற்றி எதுவும் கதையில் இல்லை. 'அதுபோல' என்பதற்காக வைத்த தலைப்பு அது. திறப்பதற்குக் கொஞ்சம் நேரமாகிப் போய்விட்ட அன்று, சலூனைத் திறந்ததிலிருந்து பொழுது போய்க்கொண்டிருக்கிறதே தவிர, 'முதல் போணி' பண்ண யாரும் வருவதாக இல்லை. பெரும்பாலும் அடைத்தே கிடக்கும் எலெக்டிரிக் கிடங்கு வாசலில் மரத்தடியில் புதிதாய் கடை போட்டிருக்கும் பையனுக்கும் இதே நிலை தான். முதல் போணிக்காக காத்திருந்து காத்திருந்து இனிப் பொறுக்க முடியாது என்கிற நிலை வந்த பொழுது, அந்தப் பையனிடம் பேரம் பேசாமல் அழுங்குக் கூடை ஒன்று வாங்கி போணி பண்ணி, அந்தப் பையனைக் கூப்பிட்டு நாற்காலியில் உட்காரவைத்து பையனுக்கு முடிவெட்ட ஆயத்தமாகிறான் அவன். இப்படியாக அவனுக்கும் அன்றைய முதல்போணி முடிவதற்கு வழியேற்படுகிறது.. இதற்கிடையே அமைந்து போய்விட்டத் தொழிலின் மீதான நேசத்தையும், இதன் தொடக்கத்திற்குப் பின் தான் மற்ற உதிரி வேலைகளெல்லாம் என்கிற மாதிரி அவன் மனத்தில் கோர்க்கும் நினைவுகளை சேகரமாய்க் காட்டுவார். இவரது கதைகளில் பாம்பு பல இடங்களில் தலைகாட்டும். ஏன்?.. ஒரு கதைத் தொகுப்புக்காக எழுதிய முன்னுரையில் கூட பாம்பு வரும் நேர்த்தி வியக்க வைக்கும். "பிராடனின் பிரம்புக் கூடையிலிருந்து தற்செயலாகத் தப்பித்த பாம்பு, கூடைக்குத் திரும்புகிற வழி தொலைந்து, ஒளிந்து கொள்கிற அவசரத்தில் பழக்கமற்ற தரையோரங்களில் சரசரத்து ஓடி முட்டி முட்டி முடைதேடுகிற நிஜம் அது.. எல்லா இடத்திலும் இருக்கவும், எல்லா இடத்திலும் வாழவும் விரும்புகிற அதே மனம், இன்னொரு விதத்தில் ஒரே இடத்தில் இருக்கவும் விரும்புகிறது என்பதும் எல்லா இடத்திலும் வாழ முடியாது தவிக்கிறது என்பதும் நிஜம்' என்று வண்ணதாசன் உணர்வதைச் சொல்வதற்காக வந்த காட்சி நேர்த்தி இது!
ஆமாம், பிறந்து வளர்ந்து வாழ்ந்த திருநெல்வேலிப் பகுதியை அவரால் மறக்கவே முடியாததினால் தான் அந்த சுலோச்சனா முதலியார் பாலமும், குறுக்குத் துறையும், கல்மண்டபமும், நெல்லையப்பர் கோயிலும், கொக்கிர குளமும், வாகையடி அம்மன் கோயிலும், சந்திப்பிள்ளையார் முக்கும், பாளையங்கோட்டை வாய்க்கால் பாலமும் அவர் எழுத்தில் அங்கங்கே தலைகாட்டிக் கொண்டே இருக்கும். அதே போல விறகுக் கடையில் விறகைப் பிளக்கும் சம்மட்டி அடி, ஈர விறகின் ஒரு புளிப்பான பச்சை வாசனை, திரும்பச் சங்கடப்பட்டிருக்கும் என்று உணர்த்திய கடையிலிருந்து ரோடு வரை மடங்கி மடங்கி கிடந்த லாரித்தடம், வேப்ப மரத்தின் அடர்த்திக்குள் ஒளியும் பளீர் வெயில், பாக்கு மரத்திலிருந்து பொத்தென்று விழும் அணில், தாம்புக் கயிறு மாதிரி ஜடை பின்னிக்கொண்டிரு க்கும் போகன் வில்லா என்று என்னன்னவோவான அனுபவித்த ரசனை ஜாலங்கள் அங்கங்கே பளிச்சிட்டு சித்திரமாய் நெஞ்சில் பசக்கென்று ஒட்டிக் கொள்ளும்.
எழுதிக் கொண்டு வரும் பொழுதே ஒன்று தெரிகிறது.. வண்ணதாசனின் சிறுகதைகளுக்கு இது இப்படியான கதை என்று குறிப்பு கொடுப்பது ஒருவிதத்தில் அவர் எழுத்தின் அழகை குறைத்து மதிப்பிட வழிகோலும் என்று தோன்றுகிறது. அவர் கதைகளை நேரிடையாக வாசித்து அவருடன் பரிச்சயம் கொள்வதே சரி. அவருடைய 'சின்னு முதல் சின்னு வரை' குறுநாவலை நினைத்தால் அப்படித்தான் முடிவுக்கு வரத் தோன்றுகிறது. அப்பொழுது தான் எடுத்துக் கொண்ட கதையின் போக்கினூடேயே நுணுகி நுணுகி ஒவ்வொன்றையும் நெருக்கத்தில் அணுகி படிப்போருக்கு அவற்றை எப்படிப் பழக்கப்படுத்துகிறார் என்பது புரிபடும். 'பெண்கள் துன்பப்படுகிறார்களே என்று கரிசனப்படுகிற ஆண்கள், அந்தக் கரிசனம் காரணமாகவே அடைகிற துன்பங்கள் ரொம்ப நுட்பமானவை' என்பன போன்ற மென்மையான உணர்வுகள், ஒரு கதையைப் படித்தால் கதையின் அவுட்லைனை மட்டும் மேம்போக்காகப் பார்த்துவிட்டு நகரும் மனங்களால் உணர முடியாதவை.
கல்யாண்ஜியின் முதல் கவிதைத் தொகுப்பு அன்னம் வெளியிட்ட 'புலரி'. மறக்கவே முடியாத அந்த 'தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்' பற்றி வேறொரு இடத்தில் நிறையச் சொல்ல வேண்டுமெனத் தோன்றுகிறது. அதே மாதிரி தான் ஆனந்தவிகடனில் எழுதிய 'அகம்-புறம்' கட்டுரைத் தொடரும். ஒரு காலத்தில், கண்ணதாசன், தீபம், நடை, மீட்சி, கணையாழி, உயிரெழுத்து என்று நிறைய இதழ்களில் காணக்கிடைத்தார். 'கண்ணதாசனி'ல் வண்ணதாசனைப் பார்த்தது, அந்த அச்சு நேர்த்தியிலும் அமுதோன் வரைதலிலும் அந்தக் கால அதி அனுபவம்.
இவ்வளவு சொல்லி விட்டு கல்யாண்ஜியின் கவிதைகள் பற்றி கோடி கூட காட்டவில்லை என்றால் அது பெருத்த குறையாகிப் போகும். பொத்தி வைத்த மன உணர்வுகளைப் பையப்பைய வெளிக்காட்டி நம் நெஞ்சில் நெகிழ்ச்சியுடன் உலாவிடுவார். பகிர்தலுக்காக எனக்குப் பிடித்த அவரது கவிதைகளில் ஒன்று:
நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில் தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்
தலை கீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்;
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்து விட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக் குளம்
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது.
எனக்கு வண்ணதாசனின் அப்பாதான் பழக்கம். கலை இலக்கியப் பெருமன்றம், தாமரை என்று தொடர்ந்து வந்த பழக்கம் அது. சிற்றிதழ்க்காரர்களுக்கு சொந்தக் காரர் அவர். வீட்டுக் கல்யாணத்திற்கு சொந்த பந்தங்களுக்குப் பத்திரிகை அனுப்புகிற மாதிரி, தமிழகத்தில் எவரேனும் சிற்றிதழ் ஆரம்பித்தால் தவறாமல், தி.க.சி.க்கு ஒரு பிரதி அனுப்பி வைப்பது பழக்கமாகிப் போன ஒரு வழக்கம்.. அனுப்பி வைத்த ஒரு வாரகாலத்திற்குள் ஒரு தபால் கார்டில் நுணுக்கி நுணுக்கி எழுதிய கையெழுத்தில் அந்த இதழ் பற்றி தாம் உணர்வதை அவரும் எழுதி அனுப்பி வைத்து விடுவார். ஆரம்பித்த சிற்றிதழுக்கு ஆசி கிடைத்த சந்தோஷத்தில், அடுத்த இதழில் ஆசிரியருக்கு கடிதங்கள் பகுதியில் அவரது அந்த கடிதத்தைப் பிரசுரித்து விடுவார்கள். தி.க.சி.யின் பதில் கடிதத்தைப் படித்துப் பார்ப்பதில் அத்தனை சந்தோஷமும் பெருமையும் அந்தக்கால சிற்றிதழ் வட்டாரத்தில்!.. நானும் நான் நடத்திய இரு இதழ்களுக்கு பெரியவரிடமிருந்து கடிதம் வாங்கிப் பிரசுரித்திருக்கிறேன்.
அதே மாதிரி தான், '77-வாக்கில் வெளிவந்த 'கமலி காத்திருக்கிறாள்' என்னும் என் முதல் சிறுகதைத் தொகுப்பை வண்ணதாசனுக்கு அனுப்பி வைத்திருந்தேன். தந்தையைப் போலவே தனயனும் உடனே பதில் அனுப்பி வைத்திருந்தார். ஆனால் இவர் தபால் கார்டில் இல்லை; ஒரு இன்லாண்ட் லெட்டரில். அந்த வெளிர்நீலக் கடிதத்தை அசகாய சாமர்த்தியத்தோடு உள்ளடக்கம் கிழிந்து விடாமல் பிரித்துப் பார்த்தால்.. பேனாவால் ஒரு ஓட்டு வீடு, வாதாமரம் மாதிரியான ஒரு மரம் என்று படமெல்லாம் வரைந்து நடுவில், ஓட்டுச் சார்புகளில் ஓடிவிளையாடும் அணில்கள் பற்றியும், மரத்தின் இடுக்குகளில் பளபளக்கும் சூரியனின் அதியற்புத ஒளிக்கீற்றைப் பற்றியும், திண்ணையைத் தொட்டுவிடத் துடிக்கும் நிழலின் நீட்சி பற்றியும் கவிதை மாதிரியான வரிகளில் எழுதி, வந்து சேர்ந்த கதைத்தொகுப்பு பற்றி பொதுவாகக் குறிப்பிட்டு வாழ்த்தியிருந்தார். உண்மையில் சாகித்ய அகாதமி விருது கிடைத்ததே போன்ற சந்தோஷம் தான் அப்போது..
அவரது 'உப்பு கரிக்கிற சிறகு'கள் கதையின் நடுவே, 'ஊஞ்சல் அசையும் போதா, அசையாத போதா, எப்போது ரொம்ப அழகு?' என்கிற கேள்வியுடன் ஒரு வரி வரும். அதைப் படித்த பொழுது 'ஊஞ்சல் உறவுகள்' என்று தலைப்பிட்ட எனது பிற்கால சிறுகதைத் தொகுப்பொன்றின் முன்னுரையில் நான் எழுதியிருந்த, 'உண்மைதான். நிலையாக ஒரே இடத்தில் தொங்கிக் கொண்டிருந்தால் அதற்குப் பெயர் ஊஞ்சல் இல்லை. மேலே உந்தித் தள்ளிய பலகை கீழே வர வேண்டும்; கீழே வந்தது மேலே போக வேண்டும். அப்பொழுது தான் அது ஊஞ்சல்; இல்லையென்றால் வெறும் தொங்கு பலகை தான்' என்கிற வரிகள் நினைவுக்கு வந்தன...

வண்ணதாசன், சார்! இப்பொழுது சொல்லுங்கள்: "ஊஞ்சல் அசையும் போதா, அசையாத போதா, எப்போ ரொம்ப அழகு?'

வண்ணதாசன், சார்! இப்பொழுது சொல்லுங்கள்: "ஊஞ்சல் அசையும் போதா, அசையாத போதா, எப்போ ரொம்ப அழகு?'
வண்ணதாசனின் பல நூல்களை சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
அவர்கள் தொலைபேசி: 24896979 அலைபேசி: 9841191397

22 comments:
எழுத்துக்களை மேலோட்டமாகப் படித்து,அல்ல, மேய்ந்து செல்லும் வாசகர்கள் நடுவே, ஊன்றிப் படிக்கவும் படித்ததை அனுபவித்து விமரிசிக்கும் எழுத்தாளர் / வாசகர் அமைய எழுதுபவர்கள் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். நானும் சிலரைப் படித்திருக்கிறேன். படிக்கும்போது ரசிப்பதோடு சரி.
இன்று உங்கள் வலைப்பூவினில் பின் தொடர்பவராக என்னை இணைத்துக் கொண்டுள்ளேன்.
பல்வேறு எழுத்தாளர்களைப்பற்றியும், அவர்களின் படைப்புகள் பற்றியும், அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் பற்றியும் தாங்கள் ஊன்றிப்படித்து, அவற்றை அழகாக எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.
தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன் வை.கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.com
//"வண்ணதாசனின் கதைகளைப் படிப்பது சுவாரஸ்யமான ஒரு விஷயம். கதையை எங்கு ஆரம்பிப்பது என்பது தான் அவருக்கு யோசிக்க வேண்டிய விஷயமாய் இருக்கும் என்பதைச் சுலபத்தில் தெரிந்து கொண்டு விடலாம்"//
//"எனக்கு வண்ணதாசனின் அப்பாதான் பழக்கம்"//
இது வாசிப்பின் ஆழத்தைக் காட்டுகிறது. கல்யாண்ஜியும் அவரே என்று தெரியும். ஆனால் அவர் தி.க.சியின் புதல்வர் என்று இப்போதுதான் தெரியும்.
நல்ல அலசல்
உண்மையில் சாகித்ய அகாதமி விருது கிடைத்ததே போன்ற சந்தோஷம் தான் அப்போது..
WELL SAID
வழக்கம் போல கல்யாண்ஜியும் எனக்கு சுஜாதா வழியாகத்தான் அறிமுகம் ("வாசல் சுத்தாமாச்சு, மனசு குப்பையாச்சு"!)
நீங்கள் குறிப்பிட்டிருக்கிற "உப்புக்கரிக்கிற சிறகுகள்" மனதை அகலாத பல சிறுகதைகளில் ஒன்று.
அதில் ஊஞ்சல் மாதிரியே நடைகள் பற்றியும் சொல்லியிருப்பார்.
"நடைகள் சில சமயம் நம்மைத்தடுக்கிறது, தாண்டிப் போகச்சொல்கிறது, உட்காரச்சொல்கிறது"
நாமும் செல்வியுடன் நடையில் உட்கார்ந்து கொள்கிறோம்...
அரசுவின் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டு அழைப்புமணியை எதிர்பார்த்திருக்கிறோம்.
அயரச்செய்யும் கடைசி வரி...
"
அழைப்புமணி ஒலிப்பதற்குச் சற்று தாமதமாயிற்று.
வாசலில் கிடக்கிற என் செருப்புகளை அரசு பார்த்திருக்க வேண்டும்
"
எனக்கு என்னவோ அரசு அழைப்புமணி அழுத்த இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்திருப்பார் என தோன்றுகிறது...
இன்னொரு சிறுகதையான "நடேசக்கம்பர் மகனும், அகிலாண்டத்தின் அத்தானும்"
ஒரு பத்து, இருபது நிமிட உள்ளூர் பேருந்து பிரயாணம்தான், திருமணத்தில் நாதஸ்வரம் வாசித்தவரை பார்த்தவுடன் மனம் வருடங்கள் தாண்டிப்பறக்கிறது; இறங்கி மனைவியிடம் சொல்லலாம் என்பதிற்குள் அவர்களும் வேறு உறவினரை பார்த்து மனதால் வருடங்கள் தாண்டியிருக்கிறார்கள்!
"நாம் நகராவிட்டாலும் நம்மையே நகர்த்திவிடுகிற மாதிரிதானே வாழ்க்கை இருக்கிறது. வாழ்க்கையே இப்படி இருக்கும்போது டவுண் பஸ் எம்மாத்திரம்! அவர், அவருடன் வந்தவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னால் நகர்ந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
"
நானும் அந்த பஸ்ஸில் அவர்களுடன் போய் வந்திருக்கிறேன் - பல தடவைகள்!
இந்த மாதிரி நிறைய சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
கடிதங்களுக்கெல்லாம் பதில் பொறுப்பாய், அழகாய் பதில் சொல்வார் என்று உங்கள் பதிவிலும் அவரது ஒரு பழைய எழுத்திலும்தான் தெரிந்து கொண்டேன். ஏன் மனம் கவர்ந்த எழுத்தாளர்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்று தெரியவில்லை, என்னையே கடிந்துகொள்வதைத்தவிர!
Essex சிவா
@ G.M. Balasubramaniam
எழுத்தாளர், வாசகர், விமரிசகர் என்று தனித்தனியாக நினைவுகள் கொள்வானேன்?.. எல்லா நிலைகளும் ஒன்றே; எல்லாமே நம் வசதிக்காகவே.
ஒன்றிற்குள் ஒன்று கூடுவிட்டுப் பாய்கிற சாத்தியம் சித்திப்பின், எப்பொழுது எது எது தேவையோ அந்த நிலை அடையலாம். ஒரு நல்ல வாசகர் ஒரு நல்ல எழுத்தாள மனோபாவம் கொண்டிருப்பார். ஒரு நல்ல எழுத்தாளரின் மனவீச்சும் அந்த நல்ல வாசகரின் மனநிலையே. சமூகத்தையும், தன்னைச் சுற்றி நடப்பனவற்றையும் பார்க்கும் பார்வையில் கொள்ளும் விமரிசங்களே நல்ல எழுத்தாளனுக்கு எழுத்துக்களாக ரூபம் கொள்கின்றன. எல்லாவற்றிற்கும் அடிப்படை என்னவோ, நீங்கள் சொல்லியிருக்கும் அந்த ரசனை தான். ரசனைக்கு தனிக்குணம் ஒன்று உண்டு. இன்னொருவரிடம் பகிர்தல் தான் அது. தான் மட்டும் ரசித்து விட்டு சும்மா இருக்க முடியாது. அந்த ரசனைதான் இந்த மூன்று நிலைகளிலும் அந்தந்த நிலைக்கேற்ப செயல்படுவதை யோசித்துப் பார்த்தால் உணரலாம். ஆக, ரசனை மட்டும் இல்லையெனில், இந்த மூன்று நிலைகளும் எட்டாக்கனி தான்.
அந்த ரசனையைக் கொண்ட தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி, ஐயா!
@ வை. கோபாலகிருஷ்ணன்
வாருங்கள், வை.கோ.சார்! தங்களின் இணைதலுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
உங்கள் வலைப்பூவினிலும் நான் இணைத்துக் கொண்டிருப்பதால், நீங்கள் பதிவிட்டவுடன், படிக்கக் கிடைத்து விடுகிறது.
தொடர்ந்து வருகை தந்து தங்கள் மனத்தில் பட்ட கருத்துக்களைச் சொல்ல வேண்டும்.
அன்புடன்,
ஜீவி
@ ஸ்ரீராம்
ஆமாம்! எங்காவது மனம் விரும்பும் ஒரு இடத்தில் ஆரம்பித்து, வழுவழு சாலையில் சுகப்பிரயாணம் செய்வது மாதிரி கதையைத் தொடர்வது அலாதியான சுகம் தான்!
இவர் சகோதரர், வல்லிக்கண்ணனிடம் கொண்ட பிரியத்தால், வல்லிதாசனானார்.
வண்ணதாசன் என்கிற பெயர் பூண்டதற்காக உந்துதல் அதிலிருந்து தான் கிடைத்ததாகச் சொல்லியிருக்கிறார்.
வண்ணதாசனின் பாதை தனியோ என்று எண்ண மயக்கம் ஏற்பட்டாலும், அடிநாதமாக மனிதாபிமானமே இழைந்து வருவதை எங்கணும் காணலாம்.
@ Nagasubramanian
ஆழ்ந்து படித்திருப்பீர்கள் போல. மிக்க நன்றி, என்.எஸ்.!
@ ராம்ஜி_யாஹூ
யாருக்குக் கொடுத்தாலும், இன்னும் இவருக்குக் கொடுக்கலையே என்றும், யார் விருது பெற்றாலும் இவ்வளவு தாமதமாகக் கொடுத்திருக்கிறார்களே என்பதே வாடிக்கையாய் இங்கு போய்விட்ட ஒரு சூழலில், மனசுக்கு இசைவான எந்த எழுத்துக்குமான பாராட்டை, அல்லது அதற்கான வாழ்த்தைக் கூட சாகித்ய அகாதமி விருது கிடைத்ததே போன்று சாதாரணமானவர்கள் சந்தோஷம் கொள்வது அர்த்தம் நிறைந்ததாகத் தான் தெரிகிறது.
நன்றி, ராம்ஜி சார்!
நேற்று நிவேதிதா பதிப்பகத்தின் கடல் படு மணல் அப்பா பெயருக்கு திரு கர்ணனால் அனுப்பி வைக்கப் பட்டு கைக்குக் கிடைத்தது.திரு தி க சி எண்பத்தேழாம் பிறந்த நாள் களஞ்சியம்.அவர் எழுதிய எழுத்துகளும் அவரைப் பற்றிய கருத்துகளும் இடம் பெற்றுள்ள புத்தகம்.உங்களுக்கு தெரிந்திருக்கும்.
@ Essex Siva
'இருட்டில் செக்கச் செவேலென்று பூக்கும் டார்ச்சின் உள்ளங்கை வெளிச்சம்'-- அந்த 'உப்புக் கரிக்கிற சிறகுகள்' கதையில் தானே வரும்?..
சின்ன வயசில் நமக்கும் இப்படிப்பட்ட காட்சிகள், ரசனையாய் நெஞ்சில் தேங்கிப் போயிருக்கும். இப்பொழுது வண்ணதாசன் எழுதிப் படிக்கும் பொழுது, நினைவின் தேங்கல் நமக்கும் நேர்ந்த அனுபவத்தின் மீட்டலாய் புன்முறுவலுடன் மீண்டும் நம்முள் நிழலாய் அந்தக் காட்சி மறுபடியும் படியும். இப்படியான நினைவு மீட்டல் தான் வண்ணதாசனுக்கே ஆன அவர் எழுத்தின் சிறப்பு. ஆமாம், அந்தக் கதையின் அந்தக் கடைசி வரி, அயரத் தான் செய்யும்.
//ஏன் மனம் கவர்ந்த எழுத்தாளர்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்று தெரியவில்லை, என்னையே கடிந்துகொள்வதைத்தவிர! //
பதின்ம பருவத்தில் பொங்கல் சமயத்தில் மனசுக்குப் பிடித்த எழுத்தாளர்களுக்கு வாழ்த்து அட்டை அனுப்புவது எனது வழக்கம். சில பேரிடமிருந்து பதில் வாழ்த்தும் வரும். நா.பா.வின் எழுத்துக்கள் அவர் கொண்ட புனைப்பெயரைப் போலவே மணிமணியாக இருக்கும். 'கல்கி'யின் புதல்வர் கி.ராஜேந்திரனின் கையெழுத்து கோழிக்கிறுக்கலாய் இருக்கும்.
பிற்காலத்தில் நேரில் சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவர்களிடத்து 'ஆட்டோகிராப்'பில் கையெழுத்து வாங்குகிற பழக்கம் ஏற்பட்டது. ஜெயகாந்தன், அந்தக் காலத்திலேயே, 'வந்தேமாதரம்' என்று எழுதி கையெழுத்திடுவார்.
பிற்காலத்து சிலரிடம் கொண்ட தொடர்பு அவர்களுடனான பழக்கமாக மலர்ந்திருக்கிறது. தங்கள் எழுத்தைப் போலவே மனதையும் வைத்துக் கொண்டவர்கள் சிலர் தான். எழுத்தை வைத்து எழுத்தாளரை கணித்தால் சில நேரத்து வருத்தமாகக் கூட இருக்கும். பல நேரத்து ஏமாற்றமே மிஞ்சும். சில காரியவாதிகளைக் கண்டால் எரிச்சலாய் கூட இருக்கும்.
எழுத்தாளருக்கும் வாசகனுக்கும் இருக்கும் தொடர்பும் பாலமும் அவரின் எழுத்து ஒன்றே. அதனால் தான் அந்த எழுத்து அதை எழுதியவரை விடவும் நமக்கு நெருக்கமாகிப் போகிறது. வாழ்க்கையின் நெருக்குதலுக்கிடையே எழுதியவராலேயே அதன்படி வாழமுடியாமல் போகலாம். அதனால் நமக்கென்ன? நமக்கு வழிகாட்டும் எழுத்தை தேர்வு கொள்வதால், எழுதியவரை விட அந்த எழுத்தே நமக்கு ஆசானாகிப் போகிறது. அதனால் இதில் கடிந்து கொள்வதற்கு ஏதுமில்லை.
தங்கள் அன்பான முதல் வருகைக்கும் மனம் நெகிழ்ந்த கருத்திற்கும் மிக்க நன்றி, சிவா!
very very nice
!!i expect for your visit my said!!
@ ஸ்ரீராம்
'மலை படு கடாம்' மாதிரி 'கடல் படு மணல்' போலும். நூல் வெளியிட்ட செய்தி தெரியும். நூலை வெளியிட்ட 'பாலம்' கல்யாணசுந்திரம் அற்புதமான மனிதர். புத்தகம் தான் இதுவரை படிக்கக் கிடைக்கவில்லை.
எழுத்தாளர் கர்ணனின் எழுத்துக்களை ஒரு காலத்தில் ஆனந்த விகடனில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். மதுரையில் தானே இருக்கிறார்?..
அப்பொழுதெல்லாம், கலை கலைக்காகவா, மக்களுக்காகவா என்கிற விவாதம் எரிந்த கட்சி, எரியாத கட்சி காட்சி போல அடிக்கடி நிகழும். இதில் தி.க.சி. 'மக்களுக்காகவே' என்கிற நிலையை அழுத்தம் திருத்தமாக மனத்தில் கொண்டவர். வண்ணதாசனின் எழுத்துக்களை மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது, 'கலைக்காகவோ' என்கிற கட்சியோ இவர் என்று தோன்றும். ஆழப்படிக்கும் பொழுது தான் எழுத்தின் எல்லா இடங்களிலும் புதைந்து கிடக்கும் அவரது மனிதாபிமானம் புரியும். அதுவே, அவரது சாற்றாண்மையாகத் திகழ்ந்து அவரின் எழுத்துக்கு மதிப்புக்கூட்டி மக்களிடம் அவரைச் சேர்ப்பிக்கும்.
5.6.2011--தேதியிட்ட 'கல்கி' இதிழில், லஷ்மி மோகன் என்பவர் எழுதிய 'மார்க்ஸூக்கு ஏற்ற ஜென்னி' என்னும் சிறுகதை படித்தேன். அந்தக் கதையிலும் மறைந்து கிடக்கும் ஒரு சேதியைத் தான் மீட்டெத்துச் சொல்கிறார், ஆசிரியர்.
தங்கள் மீள் வருகைக்கு நன்றி, ஸ்ரீராம்! தங்கள் தந்தையாருக்கு என் வணக்கங்கள்.
அன்புள்ள ஜீவி...
முதன்முதலாக உங்கள் வலைப்பக்கத்திற்கு வந்தேன். வண்ணதாசன் பற்றிய கட்டுரை உண்மையிலேயே ஒரு வண்ணதாசன் கதையைப் படிப்பதுபோன்ற உணர்வையே ஏற்படுத்தியது. கல்யாண்ஜி என்கிற கவிஞைனை அனுபவிப்பது ஒரு சுகம். வண்ணதாசன் என்கிற சிறுகதை சிற்பியைத் தரிசனம் செய்வது என்பது ஒரு சுகம். புலரி படித்துவிட்டூ தொடர்ந்து தீவிர நல்ல இலக்கிய வாசிப்பில் வண்ணதாசனையும் கல்யாண்ஜியையும் தேடித்தேடி அலைந்து படித்த சுகமான நாட்கள் நினைவில் அசைகின்றன. அருமையாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள். வண்ணதாசனுடைய சிறுகதைகளின் விவரிப்பு குறித்தே பக்கக்கணக்கில் எழுதினாலும் மாளாது. தொடர்ந்து எழுதுங்கள். இவர்கள் எல்லாம் இலக்கிய உலகில் இன்னும்இன்னும் உயரத்திற்கு கொண்டு சென்று கொண்டாடப்படவேண்டியவர்கள். மனசு இதமாக இருக்கிறது. வண்ணதாசன் பதிவைப் படிக்கப்படிக்க.
@ ஜீவி
[வை.கோபாலகிருஷ்ணனின் - வடிகால் - சிறுகதை - ஜூன் 2011]
இந்தக்கதையை ஆரம்பம் முதல் மிகவும் உன்னிப்பாகப்படித்து, உங்களுக்கே உரிய பாணியில், நன்கு திறனாய்வு செய்துள்ளீர்கள் என்பது கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
தாங்கள் எவ்வளவோ பிரபல எழுத்தாளர்களின் கதைகளைப்படித்து, வெகு அழகாக அவைகளை விமரிசனம் செய்து உங்கள் பதிவினில் வெளியிட்டுள்ளீர்கள்.
அவைகளைப் படித்துப்படித்து உங்கள் மேல் எனக்கு மிகப்பெரிய அன்பும், நல்லெண்ணமும் ஏற்பட்டுள்ளது.
அத்தகைய தாங்கள் இந்த மிகச்சாதாரண எழுத்தாளனாகிய என் படைப்பையும் படித்து, விமர்சனம் செய்ய வந்துள்ளது, என் அதிர்ஷ்டமோ துரதிஷ்டமோ என்ற கவலையுடன் தான் இருந்து வந்தேன்.
//அவரவர்க்குத் தேவையானதை தேர்ந்து கொள்கிற மாதிரி, கதையில் சொல்லியும் முழு திருப்திபடாது நிறைய ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறீர்கள். எல்லாவற்றிலும் உங்கள் நல்ல நோக்கம் பளிச்சிடுகிறது. அதற்கான பாராட்டுகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.//
தங்கள் அன்புக்கட்டளைக்கு அடிபணிந்து, தங்களின் இந்தப்பாராட்டுக்களை, பணிவன்போடு ஏற்றுக்கொள்கிறேன்.
நன்றி, நன்றி, நன்றி!!!
அன்புடன்,
வை.கோபாலகிருஷ்ணன்
@ Vidivelli
நன்றி, விடிவெள்ளி!
வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் வருகிறேன்.
@ Harini
தங்கள் முதல் வருகைக்கும், உணர்வு கொப்பளிக்கும் தங்கள் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
அடிக்கடி வாருங்கள்..
வை. கோபாலகிருஷ்ணான்
ஆசிரியர் 'கல்கி'க்கு தான் எழுதுவதை எத்தனை தரம் அடித்துத் திருத்தினாலும் திருப்தியே வராதாம். இவர் ஃப்ரூப்களை திருத்தித் தரத்தர, சளைக்காமல் அச்சுக் கோத்த கம்பாஸிடர் கோவிந்தனை மிகவும் பிடித்துப் போய்விடுகிறது 'கல்கி'க்கு. கம்பாஸிடர் கோவிந்தனோ, ஒரு தடவை எழுதுவதை இவர் ஏன், எதற்காக இப்படி பல தடவைகள் அடித்துத் திருத்தித் தருகிறார் என்பதை உன்னிப்பாகக் கவனித்து, அதையே பாடமாகக் கொண்டு, 'கதை எழுதும் கலை'யைக் கற்பதில் கவனமாக இருந்தாராம்!
இவரின் இந்த கற்றலே, இவரின் திறமை வெளிப்படக் காரணமாக இருந்து, கல்கிக்கு இவரை மிகவும் பிடித்துப் போய், உதவியாசிரியராய் தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டாராம். கம்பாஸிடர் கோவிந்தன், 'விந்தன்' என்கிற எழுத்தாளரான கதை இது. இவருக்கு 'விந்தன்' என்று நாமகரணம் சூட்டியதும் கல்கி தான். இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான 'முல்லைக் கொடியாளு'க்கு 'கல்கி' மாய்ந்து மாய்ந்து சிறப்புரை எழுதிக் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார்.
எழுதுதல் என்பது இறைவன் கொடுத்த வரம். எழுத எழுத வசப்படும். ஆன்மாவை வயப்படுத்தும் வேள்வி இது. ஆன்ம சம்பந்தப்பட்ட தன்னை வெளிப்படுத்தும் கலையாதலால் எந்த அளவுகோலுக்கும் இங்கு இடமில்லை. மற்றபடி, பிரபலங்கள் என்று நாம் அழைப்பதெல்லாம் ஊருக்கு உலகுக்காக.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பாணி. மனசில் தோன்றுவதை வெளிப்படுத்துதல் தான் அவரவர் பாணியாக அமைந்து போகிறது.
சுயரசனையின் வெளிப்பாடு இதே ரசனையைக் கொண்டுள்ள இன்னொருவர் ரசிப்பிற்கும் காரணமாகிவிடுகிறது. அவ்வளவுதான். எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதில் தான் ஒருத்தொருக்கொருத்தர் வேறுபாடு. சிறப்பாக வெளிப்படும் எல்லாமே இயல்பாகவே கலையம்சம் பெற்றுவிடுகின்றன. கலைப்படைப்பில் உயர்வு, தாழ்வு உண்டோ?..
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி, கோபு சார்!
ஆஹா...இந்த தளத்தை எப்படி நான் விட்டேன்..அருமையான திறனாய்வு!
படிக்க..படிக்க திகட்டவில்லை, எனக்கு!
@ ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி
தங்கள் ரசனைக்கு நன்றி, ஆர்.ஆர்.
எழுத்தாளர் திரு. ஜெயமோகனுக்கும் இந்த நேரத்தில் என் மனமார்ந்த நன்றியைச் சொல்ல வேண்டும்.
பழந்தமிழ் எழுத்தாளர்களை இந்தத் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் ஒரு எளிய முயற்சியாய், இந்தப் பகுதியில் எழுத ஆரம்பித்த ஆரம்ப காலங்களிலேயே, திரு.ஜெயமோகன் இந்தத் தளத்தின் இந்தப் பகுதியை தன் தளத்தில் அவரது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருந்தார். அந்த வழியில் அவரது பிரிய வாசகர்களுக்கு இந்தப் பகுதி அறிமுகமாகியது. அவர் எழுத்துக்களைப் பற்றியும் இந்த தளத்தில் எழுத வேண்டி எண்ணியிருந்ததால், சுதந்திரமாக எழுதுவதற்கு ஒருவித தர்ம சங்கடத்தை இருபகுதியிலும் ஏற்படுத்துமென்று அந்த சமயத்தில் அவருக்கு ஒரு நன்றி கூட சொல்வதற்கியலாமல், வாளாவிருந்தேன். இனியும் தாமதிக்கலாகாதென்று இந்த சமயத்தில் அவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் பகிர்ந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள் நிறைய இருப்பதான உணர்வு இருக்கிறது.
அடிக்கடி வாருங்கள். தங்கள் அன்பிற்கு நன்றி.
அன்புடன்,
ஜீவி
Post a Comment