Friday, June 24, 2011

நாளை மற்றுமொரு நாளே

மாலையில் மழை பெய்யுமா
காலை நடைப் பயிற்சியில்
கால் வலி தோன்றுமா
காய்கறி விலைதான்
கணிசமாய் இறங்குமா?
இரவு டிபனுக்கு இட்லியா?
இல்லை, உப்புமா ஊறுகாயுடன்
ஓரங்கட்டி விடலாமா?
அதுசரி, அந்த
ஹரியுடன் நானில்
யார் அந்த நான்?..

பங்கு சந்தையில் இன்று
தொங்கலா, தூக்கலா?
அடுப்பு எரிவாயு சிவப்பாய்;
அடுத்தவாரம் வரை வருமா?
பயணத்திற்கு ஒருமாதம்
இருக்கிறது; இருந்தும்
ஆன்லைன் ஆக்கிரமிப்பு மீறி
இருக்கை கிடைக்குமா
கிடைத்தாலும் கீழ் இருக்கை
கிடைக்க வேணுமே?..

பவர்கட் இன்றும்
ஒன்றிலிருந்து இரண்டோ
அன்றி வேறு பொழுதோ?
பதிவு பாதியில் நிற்கிறது
சென்ற தேடலில் கிடைக்காத
கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்
நூலகத்தில் இன்றாவது
கிடைப்பின் அடுத்த பதிவு
அட்டகாசம் தான்..
இடையில் சுஜாதாவிற்கும்
இன்னும் சில சுவாரஸ்ய
விவர சேகரிப்புகள் வேண்டும்

நிறைய எதிர்பார்ப்புகள்
விதவிதமாய் வர்ணம் பூசி
வரிசை கட்டி நிற்கின்றன
சாதாரணமானவை கூட
அசாதாரணமாய் சமயங்களில்;
வருவதை வரும் பொழுது
எதிர் கொள்கிற மாதிரி
இன்று புதிதாய்ப் பிறந்தோமென்று
ஏன் வாழத்தெரியவில்லை?
தெரியவில்லை....

22 comments:

ஸ்ரீராம். said...

கேள்விகள் ஆயிரம் மணத்தில் ஓடிக் கொண்டேயிருக்க, மனதின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் செயல்கள் ஸ்தம்பிக்கும் நேரம்...ஆமாம் ஹரியுடன் நானின் யார் அந்த நான்? நான் கூடப் பார்க்கவில்லை! இன்று புதிதாய் பிறந்தோமென்று ஏன் வாழத் தெரியவில்லை....ஏனென்றால் நாம் இன்னும் குழந்தைகளில்லை!! குழந்தைகளால் மட்டுமே முடிந்த கலை அது.

G.M Balasubramaniam said...

இத்தனை எண்ணங்கள் தோன்றி ஒவ்வொன்றாய் பட்டியலிட்டும் ஒன்றுமே தெரியாத பாவனையில் தேடத் துவங்குவதே குழந்தைபோல் வாழமுடிவதால்தான் என்று நான் நினைக்கிறேன்.

கீதா சாம்பசிவம் said...

Gone with the Wind கதையின் Scarlette O'Hara பற்றித் தான் ஏதோ எழுதி இருக்கீங்கனு நினைச்சேன். :)))) அந்தக் கதையில் அடிக்கடி வரும் வாக்கியம் tomorrow is another day.

# கவிதை வீதி # சௌந்தர் said...

இன்றை பொழுதை இனிமையோடு கழிக்க தெரிந்து விட்டால்..

இன்று என்ற எதார்த்தத்தில் வாழ பழகிவிட்டால்...

மனிதம் உயிர்ப்பெரும்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

அன்றாட நிகழ்வுகளில் மனிதம் மயங்கிக்கிடப்பதை அழகுப்பட கூறியுள்ளீர்..

கிருத்திகா said...

"வருவதை வரும் பொழுது
எதிர் கொள்கிற மாதிரி
இன்று புதிதாய்ப் பிறந்தோமென்று
ஏன் வாழத்தெரியவில்லை?
தெரியவில்லை"
ரொம்ப சிம்பிளா கேள்வி எழுப்பிட்டீங்க.. போராட்டமே அதுக்குத்தானே…

ஜீவி said...

@ ஸ்ரீராம்

வாருங்கள், ஸ்ரீராம்!

மனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த லகான் நம் கையில் என்று தான் சொல்கிறார்கள்.. அதை அனுபவத்தில் கொண்டு வருதல் மிகவும் சிரமமான ஒன்றாகத் தான் இருக்கிறது.. செயலுக்கு ஏற்றவாறு மனவேகத்தை மந்தப்படுத்தி, ஏககாலத்தில் எல்லா குதிரைகளையும் அடக்கி சாரத்தியம் செய்ய வேண்டுமென்றால்..உபநிஷத டார்ச் ஏந்தித்தான் இருட்டைத் துறத்த வேண்டும் போலத் தோன்றுகிறது.

ஓ! அந்த ஹரியுடன் நான்?.. சிங்கப்பூரோ, மலேஷியாவோ போய்
நான், நாங்களான வரை தான் தெரியும். தொடர்ச்சியான நிகழ்ச்சித் தொடர்தல் விட்டுப் போன உணர்வு..

குழந்தைகளால் மட்டுமே முடிந்த...
கொஞ்சம் பொறுங்கள்.. நண்பர் பெரியவர் ஜிஎம்பி குழந்தை போல் வாழ முடிவதைச் சொல்கிறார் பாருங்கள்...

இராஜராஜேஸ்வரி said...

இன்று புதிதாய்ப் பிறந்தோமென்று
ஏன் வாழத்தெரியவில்லை?
தெரியவில்லை...
நாளை மற்றுமொரு நாளே"

கோமதி அரசு said...

நிறைய எதிர்பார்ப்புகள்
விதவிதமாய் வர்ணம் பூசி
வரிசை கட்டி நிற்கின்றன
சாதாரணமானவை கூட
அசாதாரணமாய் சமயங்களில்;
வருவதை வரும் பொழுது
எதிர் கொள்கிற மாதிரி
இன்று புதிதாய்ப் பிறந்தோமென்று
ஏன் வாழத்தெரியவில்லை?
தெரியவில்லை....//

இந்த கேள்வி அடிக்கடி ஏற்படும் எனக்கும்.

ஒன்று குழந்தை மனம் வேண்டும், அல்லது அன்னை சொல்வது போல்
இறைவனிடம் சரண் அடையும் மனம் வேண்டும்.
’உமது திருவுளப்படியே ஆகுக என்னுடைய வாழ்வு உம்முடைய பாதுகாப்பில் இருப்பதால் நான் அஞ்சுவதற்கு எதுவும் இல்லை. நான் உம்முடையவன் என்று ’

இறைவனிடம் விட்டு விட்டால் நிம்மதியாய் இன்ப துன்பத்தை எதிர் கொள்ளும் பக்குவம் வந்து விடும்.

நல்ல கவிதை ஜீவி சார்.

ஜீவி said...

@ G.M. Balasubramaniam

குழந்தையின் அறிவு வேறு, மனம் வேறு போலிருக்கிறது. மாண்டிசேரி கல்வி பயிற்றுவைப்பில், எவ்வளவுக்கு எவ்வளவு பால்ய பருவத்தில் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அந்தக் குழந்தையின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு அது நல்லது என்று படித்த நினைவு இருக்கிறது. மூன்று வயது குழந்தையின் அறிவில் பதிய வைப்பது காலத்திற்கும் வழிகாட்டும் என்கிறார்கள். அதுவும், மாண்டிசேரி கல்வி செயல்முறைகளின் மூலம் போதிக்கும் கல்வியாதலால், இளம் வயதில் கற்கும் செயல்முறை கல்விக்கும் அந்தக் குழந்தையின் செயல்பாட்டுக்கும் வித்தியாசம் இல்லாது போகிறது. மனப்பாடம் செய்து மார்க் வாங்குவது வேறு, செயல்முறையில் அதை உணர்ந்து கற்பது வேறு என்றாகிறது.

இந்த அடிப்படையில் நீங்கள் சொன்னதை யோசித்துப் பார்த்தேன்.
எல்லா தகிடுத்தத்தங்களுக்கும் இரையாகி, அல்லது அவற்றை வென்று கடக்கும் சாமர்த்தியம் பெற்று, அத்தனையையும் மறந்து
ஒன்றுமே தெரியாத பாவனையில் குழந்தை மனம் கொண்டு வாழ முற்படுவதற்கு அசாத்திய பொறுமையும் மனத்திண்மையும் வேண்டும் போலத்தான் இருக்கிறது.
அப்படி வாழத்தெரிந்தால், அது அற்புதமான அனுபவமாகத் தான் இருக்கும் போலிருக்கிறது.

குழந்தைகளின் பிஞ்சு மன வளர்ச்சிப் போக்குப் பற்றி தனிப்பதிவே போட வேண்டும் என்று தோன்றுகிறது.
நீங்கள் ஆரம்பித்தாலும் சரி.. தொடர்கிறேன்.

வருகைக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி, ஜிஎம்பி சார்!

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

வாங்க, கீதாம்மா. பார்த்து ரொம்ப நாளாச்சு. நீங்களானால், 'கல்யாணமாம் கல்யாண' கொண்டாட்டத்தில் இருக்கிறீர்கள்:))
இத்தனை ரகளைக்கும் நடுவே Scarlette O'Hara ஞாபகமுமா!..

ஜி. நாகராஜனின் நாவல், 'நாளை மற்றுமொரு நாளே". அந்த நினைவில் தான் அந்தத் தலைப்பு வந்தது. 'Gone with the wind' என்றதும், 'நேற்றோடு சொன்ன வார்த்தை, காற்றோடு போயாச்சு' பாட்டு நினைவில் ரீங்கரித்தது.

ரொம்ப நன்றி. உங்கள் பின்னூட்டம் அடுத்தக் கவிதைக்கான ஆரம்ப வரியைக் கொடுத்து விட்டது. அதற்குத் தான் நன்றி.

கீதா சாம்பசிவம் said...

வரக்கூடாதுனு எல்லாம் இல்லை சார், இங்கே இருக்கிற நிலைமை அப்படி, போஸ்ட் போடறதும், அதுக்கு பதில் சொல்றதுமே கொஞ்சம் சிரமமா இருக்கு இப்போல்லாம். :))))))) மற்றபடி உங்கள் பதிவில் முக்கியமானவைகளைப் படிக்கிறேன். மற்றவை இன்னும் படிக்கலை; படிக்கணும்.

Scarlette O"Haraவை எப்படி மறக்க முடியும்?? நான் படிச்ச முதல் ஆங்கில நாவல் Gone with the Wind,இருபது வயதில் படிச்சேன்; அப்போ அந்தக் கதையின் தாக்கம் ஒரு மாதிரி, இப்போ நினைக்கையில் வேறு மாதிரி. மொத்தத்தில் மறக்க முடியாத கதாபாத்திரம், சினிமாவாக் கூட வந்ததுனு நினைவு. தெரியலை சரியா.

ஜீவி said...

@ 'கவிதை வீதி' செளந்தர்

ஆஹா! அருமையாகச் சொல்லி விட்டீர்கள்!

அந்த 'மனிதம்' தான் எத்தனை இடிபாடுகளுக்கிடையே தலை தூக்கி மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறது!
ஒட்டகத்தின் முதுகிலிருந்து ஒரு சின்னக் கைப்பையைத் தூக்கிப் போடுகிற மாதிரி, சின்ன சின்ன ஆசைகளில் திருப்தியுற்று, நீங்கள் சொல்கிற மாதிரி உன்னதமான மனிதம், அன்றாட நிகழ்வுகளில் மயங்கித் தான் கிடக்கின்றது!

முன்பெல்லாம், 'இன்று ரொக்கம்; நாளை கடன்' என்று கடைகளில் போர்டு தொங்க விட்டிருப்பார்கள். இருபது வருடங்களுக்கு முன்னால் திருச்சி செங்குளம் காலனிப் பகுதியில் ஒரு டாக்டரின் கிளினிக்கில் இதே மாதிரியான ஒரு அறிவிப்பைப் பார்த்து திகைத்து போனேன். மாண்புமிகு 'மனிதம்' மாண்டு பலநாளாயிற்று போலிருக்கு!

எந்த மாதிரியான 'இன்று' என்று வந்தாலும், வேறொரு மாதிரியான ஒரு'இன்று'க்கு நாளும் ஆசைப் படுவதே, பேதை மனம்! குதிரைக்கு கொள்ளு காட்டுகிற மாதிரி, அது தான் வாழ்க்கையைத் தள்ளிக் கொண்டும் போகிறது போலும்!

கவிதையின் உயிர்ப்புப் போன்ற பின்னூட்டத்திற்கு நன்றி, செளந்தர்!

ஜீவி said...

@ கிருத்திகா

அப்பாடி.. வருகைக்கு நன்றியும், மகிழ்ச்சியும். இந்த வருகை, உங்களிடமும், பிற பதிவுகளிலும் தொடரட்டும்!

'போராட்டமே அதுக்குத் தானே' என்று நீங்களும் தான் ஆலம்விதை அடக்கம் போல பிர்மாண்டத்தை மூன்றே வார்த்தைகளில் அடக்கிச் சொல்லி விட்டீர்கள்!

வாழ்வின் நியதி அது; வளர்ச்சிப் போக்கின் நியமமும் அதுவே!

ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

அட! கவிதையின் இறுதி வரிகளோடு தலைப்பையும் சேர்த்துப் பார்த்தால், வேறு காரணங்களும் தெரிகிறது, தான்!

முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிங்க.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல அருமையான பல கேள்விகளைக் கேட்டு விடைதெரியாமல் முடித்துள்ள கவிதை அருமை.

இன்று புதிதாய்ப் பிறந்தோமென்றுஏன் வாழத்தெரியவில்லை?தெரியவில்லை....

’நாளை மற்றொரு நாளே’ எனினும் இன்றைய தொடர்ச்சியல்லவா. அதுபோல ’இன்று’ நேற்றின் தொடர்ச்சி அல்லவா!

அதனால் தானோ!

பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

ஜீவி said...

@ கோமதி அரசு

'தத்தம் கருமமே கட்டளைக் கல்'--என்று குறள் வரி ஒன்றல்லவா?..
அந்த வரி தான் தெய்வத்தின் குரலாக ஒலிப்பது போலவான உணர்வு பலரில் உண்டு.

'பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்'
மட்டுமல்லாது, இன்பத்திற்கும் துன்பத்திற்குமான உணர்தலுக்கும் இது பொருந்தி வருவதைக் காணலாம்.

இறைவனிடத்து அளவிடமுடியா அன்பு கொள்ளும் (பக்தி அல்ல) அன்பாளர்கள் தம் வாழ்க்கை முறைகளிலும் தத்தம் கருமத்திலும் 'எவ்வுயிர்க்கும் தீங்கெண்ணா' உள்ளம் கொண்டிருப்பார் என்கிற அடிப்படையில் ஏகதேசமாக இவர்களை அவ்வளவாக துன்பம் அணடுவதில்லை; அப்படி அண்டினாலும், எல்லாம் இறைவன் சித்தம் என்கிற அசைக்கமுடியா உறுதிப்பாட்டுடன் இறைவன் தரும் தண்டனையாக அதைக் கொண்டு, அந்த இறைவன் மேல் கொண்டுள்ள அளப்பரிய அன்பையே, அந்தத் துன்பக்கடலைக் கடக்கும் தோணியாகக் கொள்வர்.

தெய்வத்தின் பன்முக தரிசனங்களில் ஒன்று, அவன் தோன்றாத் துணையாய் நம் நெஞ்சில் எஞ்ஞான்றும் கூட இருப்பது. அந்த பெறக்கரிய பேற்றைப் பெற்றிருப்போருக்கு இன்பமோ, துன்பமோ அதை சமநிலையில் பாவிக்கிற மனநிலை வந்து விடுகிறது.

இதையே நீங்கள் உங்கள் உணர்வில் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
தங்கள் மனம் நெகிழ்ந்த பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி, கோமதிம்மா.

ஜீவி said...

@ வை. கோபாலகிருஷ்ணன்

ஆமாம், கோபு சார்! அறிவு பூர்வமாக எண்ணிப் பார்த்தால் அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.

எந்த செயலும் முந்தைய செயலின் எச்சத்தின் தொடர்ச்சி தானே?.. துண்டாகப் பிரித்து தனியாக எதையும் பார்க்க முடியாது என்பது விஞ்ஞான உண்மை. செயலுக்கான (கருமத்திற்கான)பலாபலன்களும் இந்த எச்சத்தையே தொடர்பாய்க் கொண்டு தொத்தி நிற்கின்றன என்பதும் அறிவுலகச் சான்றாக தெரிகின்ற நேரத்தும், நம்புகிறவர்க்கு நம்புகிற உணர்வாய் அது போனது தான் காலத்தின் கோலம்!

கணக்கிற்கு நாளை மற்றொரு நாளாக இருப்பினும், கழிந்த நாளின் கவலைகள் ஒழித்து அதை எதிர்கொள்வதில் காட்டும் துணிவையும், புதுப்பொறுப்பையும்
சுட்டிக் காட்டத்தான் இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்கிற எழுச்சி கொள்ள வேண்டுமென்று பாரதி கூறினான் போலும்!

நல்ல கருத்தைச் சுட்டிக்காட்டிய தங்களுக்கு மிக்க நன்றி.

Matangi Mawley said...

ஒரு சில சமயங்களில்- எல்லா கேவிகளுக்கும் ஒரே பதில் தானோ என்று தோன்றுகிறது... ஒரு சில நேரம்- பதில்கள் பலத்திற்கும்- கேள்வி ஒன்றே தானோ- என்றும் தோன்றுகிறது. அந்த ஒரு கேள்வி- அந்த ஒரு பதில்- தான் தெரியவில்லை...

ரொம்ப அழகான கோர்வை...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இதைப் படித்து முடித்ததும், மனசு மிக மிக லேசாகி....மறுபடியும் அந்த மூணாங்க்ளாஸ் குழந்தையாக ஆக மாட்டோமா என்கிற ஆவலைத் தூண்டி விட்டீர்கள்...
அட..அந்த செங்குளம் காலனி... நீங்களும் நம்ம பேட்டை தானா?

அன்புடன்,


ஆர்.ஆர்.ஆர்.

ஜீவி said...

@ Matagi Mawley

பல நாட்களாக கணினி பக்கம் வர முடியாத சூழ்நிலையில் பதிலளிக்க தாமதமாகி விட்டது.

எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் தானோ--

பதில்கள் பலதிற்கும் கேள்வி ஒன்றே தானோ--

என்று யோசிக்க வைக்கும் பின்னூட்டத்தைப் போட்டு, நிறைய யோசிக்க வைத்து விட்டீர்கள்..

கேள்விகள் கூட இரண்டு என்கிற எண்ணிக்கை மயக்கத்தைத் தந்து,
ஒரே பதிலைத் தருகிற மாதிரியும், அவற்றிற்கான பதில் கூட இரண்டு கேள்விகளுக்கானது மாதிரியும் அமைத்துப்பார்த்து ரசித்திருக்கிறீர்கள்.

பல கேள்விகளுக்கான ஒரே பதில், ஒரே பதிலாகப் பல கேள்விகளுக்கு இருபதும் இயற்கை தானே?.. அந்த ஒரே பதிலும் இயற்கையாய் இருப்பது தான் அதன் இயல்பாய்த் தெரிந்து
சிலிர்க்க வைக்கிறது.

ஆழமான சிந்தனைக்குரிய பின்னூட்டத்திற்கு நன்றி, மாதங்கி!

ஜீவி said...

@ ஆரண்ய நிவாஸ் ஆர்.ராமமுர்த்தி

வாருங்கள், ஆர்.ஆர்.ஆர்!

'பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு தொல்லையடா!' என்பது கவியரசரின் கவிதை வரி அல்லவா?..

எல்லாவற்றிற்கும் மாற்றாகிப் போய்விட்ட இந்த நிகழ் யுகத்தில், கள்ளமிலா பிள்ளை உள்ளம் கொண்டிருப்பது அவருக்குத் தொல்லைகளைத் தோற்றுவிக்கும் என்றும், அவர் பொருட்டு மற்றோருக்கு தொல்லையின்மையை ஏற்படுத்தும் என்றும் மாறி விட்டது! ஆயிரமாயிரம் தொல்லைகள் இருந்து விட்டுப் போகட்டுமே, பிள்ளை மனம் மனநலத்திற்கு ஆரோக்கியத்தைத் தான் கொடுக்கும் என்கிற உணர்வு, அப்படிப்பட்டோரிடையே பரவலாகப் பரவியிருப்பது மட்டும் உண்மை!
இந்த உண்மையே நாளும் புதிது புதியாய்த் தோன்றும் பல மன நோய்களுக்கும் மருந்தாகிப் போயிருப்பதும் உண்மை!

//அட..அந்த செங்குளம் காலனி..//

பல வருடங்களுக்கு முன் என் தமக்கையார் அந்தப் பகுதியில் குடியிருந்தார்கள். ஒரு சமயம் அவரைப் பார்க்க வந்திருந்த பொழுது, அந்த டாக்டரின் மருத்துவ மனைக்கும் செல்ல நேரிட்டது.. அந்த டாக்டரின் பெயரை விட, அந்த மருத்துவரின் அறையில் தென்பட்ட அந்த வாசகங்கள், மனத்தில் ஆழமாகப் பதிந்து விட்டன. இப்படி நித்யமாக நினைவில் படிந்த பல செய்திகள், அந்தந்த சமயங்களில் முந்தி வந்து பகிர்வாக மிளிர்கின்றன. அவ்வளவு தான்.

அதுசரி, அந்த ஆரண்ய நிவாஸ்...
பழமையும் புதுமையும் கைகோர்க்கும்
அந்த அற்புத நாமகரணம். தனக்குச் சூட்டிய அந்தப் பெயரை எவ்வளவு சொகுசாய்த் தூக்கிச் சுமந்து கொண்டிருக்கிறது, பாருங்கள்!..

அன்புடன்,
ஜீவி

Related Posts with Thumbnails