படீரென்று அறுந்த பொழுது
எந்த ஜாமமோ தெரியவில்லை...
ஜோவென்ற ஓசை நடுவே
பளபளப்பாய் மினுக்கிய
நீரின் அசத்தும் வேகம் தான்
நினைவில் அசையாது நிற்கிறது.
முகட்டின் நுனிமுனையில் நின்று
முகம் துருத்திப் பார்த்த பொழுது
நுரையாடை வெண்மை வெளீரிட
ஜலமோகினியின் பிரவாக நர்த்தனம்
காற்றின் சிலுசிலுப்பில் சிணுங்கி
ஜில்லிப்பாய் நெஞ்சைத் தடவிச் சிலிர்த்தது.
தொட்டு விடும் தூரத்தில் மேலிருந்து கீழாக
தலைக்குப்புற நழுவியதை தழுவும் ஆசையில்
கைகள் நீட்டி விரல் மலர்த்திக் குவித்து
கொஞ்சமே தொட்டுப்பார்க்கத் துடிக்கையில்
யாரோ குரல் குழைந்து
ராமா என்றழைத்த சடுதியில்
நீட்டிய கை உள்ளுக்கு இழுபட
நிர்ச்சல நினைவு வளையம்
சுழலிட்டுச் சுழலிட்டுச் சுழன்ற நேரம் தான்
அந்தக் கனவிழை அறுபட்ட நேரம்...
கிருஷ்ணா கிருஷ்ணா வென்று பிறர்
அழைத்துப் பழக்கப்பட்ட உணர்வு
ராமா வென்ற அழைப்பை
இசைவாய் ஏற்றுக் கொண்டதேன்?..
இல்லை, சொப்பனத்தில் மனம்
வேறோர் தேகம் எடுக்குமோ?..
அந்தந்தப் பிறவிப் பெயர்
அந்தந்த தேகத்தின் பெயராதலின்
எந்தப் பிறவிப் பெயர் ராமனோ, அறியேன்!
பிறவி தொலைந்தும் பெயர்த் தொடர்பு அறாது
எந்தப் பிறவியின் வாசனை
இந்தப் பிறவியில் வசப்படுத்தியதோ?..
ராமகிருஷ்ணன் எனும் நாமதேயம் தான்
இருவேறு பெயராய் இனம் காட்டி
கனவில் ராமனாகவும்
நனவில் கிருஷ்ணனாகவும்
மயக்கம் கொடுத்து நினைவில்
முயங்கியது போலும்.
7 comments:
சாதாரணமாக கனவுக்குப் பொருள் தேடி அலையும் மனம், கனவில் அழைக்கப்பட்ட பெயரைக் குறித்து காரணம் நாடி, பதிலையும் சொல்லி சமாதானப் படுத்திக்கொள்வது, நினைவில் நடக்கும் காரணகாரியங்களுக்கு, சமாதானம் கற்பித்துக் கொள்வது போலவே இருக்கிறது. ஆமாம், கனவில் வரும் நபர்களுக்கு உடல் ,பொருள் ,ஆவி எல்லம் உண்டா என்ன.?ஆழ்மனசே அறியாத கற்பிதங்கள்தானே கனவுகள் எல்லாம்.?
நிஜமா, பொய்யா எனப் புரியாமல் கனவு கண்டதுண்டு. ஆனால் அப்புறமா யோசித்தால் கனவுகள் நினைவில் இருப்பதில்லை.
சிலருக்குத் தொடர்கனவெல்லாம் வருவதாய்ச் சொல்லுவாங்க.
ஆழ்மனக் கடலில் இருக்கும் எண்ணங்களை யாரால் அறிய முடியும்? சில சமயம் அவை கனவின் மூலம் வெளிப் படும் என்பார்கள். ராமனோ கிருஷ்ணனோ 'ஹலோ' என்று கூப்பிட்டால் கூட விழிப்பு வந்து விடுமே... சொப்பனத்தில் எந்த மொழியில் பேசுவோம்....? பேசுவோமா...அல்லது சிந்திப்போமா...? பேச்சும் இல்லாமல் சிந்தனையும் இல்லாமல் காட்சியாக உருவகப் படுமோ?
@ G.M. Balasubramaniam
எது இருக்கிறதோ இல்லையோ, கனவுகள் உணர்வு நிரம்பியவை.
அவை நம்மை சந்தோஷிக்கச் செய்யலாம், அழச் செய்யலாம், திடுக்கிடச் செய்யலாம் ஏன் கனவைக் கண்டு கொண்டே புன்முறுவலிக்கவும் செய்யலாம். நிதர்சன நிஜ உடல் ஆட்படக் கூடிய இந்த நிகழ்வுகளை யெல்லாம் கற்பிதங்கள் என்றா கூறுவீர்கள்?
இவையெல்லாம் உங்கள் யோசனைக்கே.
பின்னும் இதைப் பற்றி நிறைய கருத்துக்களைப் பறிமாறிக் கொள்ளலாம். எனது 'ஆத்மாவைத் தேடி' தொடரில் கனவுகளைப் பற்றி நிறைய செய்திகள் தொடர்கின்றன.
வருகைக்கு நன்றி.
@ கீதா சாம்பசிவம்
கனவு என்ற ஒன்றைக் கண்ட உணர்வு நினைவில் மிஞ்சி நின்றால், அதைக் கண்டது நிஜமாகத் தானே இருக்க வேண்டும். தூக்கத்தில் பலவகைகள் உண்டு என்பது போல் கனவுகளிலும் பலவகைகள் உண்டு. நினைவில் இருக்காத கனவுகள் எல்லாம் மேம்போக்கானவை. நீங்கள் அவற்றில் ஆழ்ந்து அமிழவில்லை என்று அர்த்தம்.
தொடர் கனவுகளுக்குக் காரணம், நிஜத்தின் தொடர்ந்த தொடர்வே.
நிகழ்வின் கேள்விகளுக்கு கனவில் விடை கிடைப்பது கூட உண்டு.
இதில் அதிசயம் ஒன்றுமில்லை. நிகழ்வின் அறுபடாத தொடர் சிந்தனைதான் தன்னை முடித்துக் கொள்ளாமல் கனவிலும் தொடர்கிறது.
வருகைக்கு நன்றி, கீதாம்மா.
@ ஸ்ரீராம்
நம் மனம் நமதே. நம் மனதை நாம் அறியாமல் வேறு யார் அறியக் கூடும்?
நம் தொடர் எண்ணங்களின் எக்ஸ்டன்ஷன் கனவுகள் என்பதால்
நாம் காணும் கனவுகள் நமக்கு அன்னியப்படாமல் அமைந்து விடுகிறது.
'ஹலோ' கூட இல்லை; வெளியில் நிகழும் ஒரு பெருத்த அதிர்வு கூட கனவு இழையை அறுத்து விடலாம்.
உங்களை மறந்து ஒன்றிப்போய் ஈடுபட்டிருக்கிற ஒரு விஷயத்திலிருந்து உங்களைப் பிரித்துக் கத்தரித்து விடுவதாக இதைக் கொள்ளலாம்.
இந்தக் கவிதையில் நடந்தது அதுவல்ல. அந்த 'ராமா' அழைப்பு, கனவிலேயே உள்ளடக்கமாய் நிகழ்கிறது. அதுவே கனவின் துண்டிப்பிற்கும் காரணமாக அமைகிறது. யார் கண்டார்கள், இன்னொரு நாள் இதன் தொடர்ச்சி இன்னொரு கனவாக நீளலாம்.
அதற்குள் அவசரப்பட்டு, நிகழ்காலப் பெயரை கனவில் கேட்ட பெயருடன் இணைத்து, கற்பனை கவிதையாக்கி மகிழ்கிறது.
கனவுகளின் தாத்பரியம் 'ஆத்மாவைத் தேடி'யில் அழகாக விரிகிறது. அங்கு நாம் நிறையப் பகிரலாம்.
அன்பான வருகைக்கு நன்றி, ஸ்ரீராம்!
Post a Comment