ஆசைகள் ஆயிரம் அகிலத்தில்
அதில் அளவோடிருப்பது அதிசயம்
நேசம் நிஜமாயிருப்பது துர்லபம்
நிஜமாயிருந்தால் நிம்மதி நிச்சயம்
உதவிகள் வேண்டுவோர் சகஜம்
அதை இதமாய்ச் செய்தல் இயற்கை
உதவுதல் உறவுகளின் உற்சாகம்
உண்மையாய்ச் செய்தல் உன்னதம்
கனவுகள் கோடி வெற்றிகளைத் தேடி
நினைவுகள் அனந்தம் நிம்மதி நாடி
உலகம் இருப்பது என்றும் நமக்காக
உன்னதம் பெறுவோம் நிலையாக
பொய்யுடனே பொழுது புலர்கிறது
பூநெஞ்சை வாட்டுகிறது; வதைக்கிறது
உள்ளே வெளியே வெவ்வேறென்று
கள்ளம் கபடம் எல்லாமும் கலந்து போச்சு
இத்தனை நிஜங்களையும் நிஜத்தில் மறந்து
எத்தனை கனாக்கள் வண்ணப் பூத்தூவலாய்
நெஞ்சில் செடி ஊன்றி தினம் தினம் நீரூற்றி
நினைவில் வளர்த்து நாளும் நெடும் பயணம்
இலட்சியம் நோக்கிய நிச்சயத் தேடலில்
ஜெயிப்பது என்பது நெடுங்கனவானது
சமரசம் தவிர்த்து சுயத்தைக் காப்பதே
காலத்துக்கும் வேள்விக் கனலானது.
14 comments:
நேசம் நிஜமாயிருப்பதை எப்படி அறிவது? நேசம் என்பது காலத்தையும் தேவையையும் பொறுத்தது என்று எனக்குத் தோன்றும்.
எதிர்பார்ப்பில்லாமல் உதவுவதும் முடிந்தவரை மற்றவரிடம் உதவி எதிர்பாராதிருத்தலும் நமக்கு நல்லது!
காலை வேளை கனவு வெற்றிகளைத் தேடினால் மாலைகளில் சின்ன நிம்மதி போதும் என்ற காம்ப்ரமைஸ் வந்து விடுகிறது. அதுதான் பெரிய வெற்றி என்பதும் மெல்லப் புரிகிறது.
பொய்யுடன் புலர்ந்து கள்ளம் கலப்பதை அழுக்குத் துணி அலமாரியை மறைக்கும் திரைச் சீலை போல மறைத்தே வாழ்கிறோம்...என்ன செய்வது..நம் நிம்மதி கெடாதிருக்க வேண்டுமே..!
நாளைப் பொழுது என்றும் நல்ல பொழுதாகும் என்ற நம்பிக்கைதானே வாழ்வின் சாரம்?
//சமரசம் தவிர்த்து சுயத்தைக் காப்பதே
காலத்துக்கும் வேள்விக் கனலானது.//
நன்றாகச் சொன்னீர்கள், ஜீவி ஐயா.
ஒவ்வொரு நிகழ்வுடன் அதனிலும் மேலான ஒன்றையும் சொல்லிப் போகிறீர்கள். நாம் நமது நல்ல குணம் என்று கொள்வது அடுத்தவருக்கு அப்படித் தெரிவதில்லை. சமரசம் தவிர்த்து சுயத்தைக் காப்பது, காலத்துக்கும் வேள்விக் கனலானது. சிந்திக்க வைக்கும் வரிகள்.
\\இலட்சியம் நோக்கிய நிச்சயத்தேடலில்
ஜெயிப்பது என்பது நெடுங்கனவானது
சமரசம் தவிர்த்து சுயத்தைக் காப்பதே
காலத்துக்கும் வேள்விக் கனலானது.///
- என் மனதை நெடுங்காலமாய் அரித்துக் கொண்டிருக்கும் கேள்வி தன இது. யார் தருவார் விடை ?
@ ஸ்ரீராம்
ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு பொருள் உண்டல்லவா?.. நாம் அந்த வார்த்தைப்படி பல்வேறு காரணங்களாய் வாழ முடிந்திடவில்லை என்பது வேறு விஷயம். அப்படியான நமது இயலாமையால், அந்த வார்த்தையின் பொருள் மாறிவிடாதல்லவா?..
காலத்தையும் தேவையையும் பொறுத்துத் தான் நேசம் கொள்ளமுடியும் என்பது ஒரு நிலை. இருந்தால் என்ன?.. அப்படி சில வரையறைகளை வகுத்துக் கொண்டு கொள்ளும் நேசமும் நிஜமாய் இருக்க வேண்டும் என்பதே முக்கியமாகிப் போகிறது. அப்படி இருப்பின் நிம்மதி என்பது தான் கவிதை. நிஜமாய் இருந்தால் தான் அது அதுவாகிறது; இல்லையென்றால் வேறொன்று என்று பொருள் கொள்ளலாம்.
கவிதையைக் கொண்டு வாழ்வை வரையறுக்க முடியாது போகலாம்; ஆயினும் வாழ்வைக் கொண்டு கவிதையின் ஆதாரசுருதியை மீட்டிப் பார்க்கலாம், இல்லையா?..
மனந்திறந்த கருத்துக்களுக்கு மிக்க நன்றி, ஸ்ரீராம்!
வாழ்கையெனும் வேள்வி
அழகாய் சொலிப்போகிறது
வாழ்க்கைத தத்துவம்.
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
கனவுகள் கோடி வெற்றிகளைத் தேடி
நினைவுகள் அனந்தம் நிம்மதி நாடி
உலகம் இருப்பது என்றும் நமக்காக
உன்னதம் பெறுவோம் நிலையாக//
உலகம் இருப்பது நமக்காகத்தான் உண்மை.
வாழ்க்கையை ஒரு தவமாய் வாழ்ந்து
நிம்மதி நாடி உன்னதம் பெறுவோம் நிச்சியம்.
நன்றாக சொல்லி விட்டீர்கள்.
@ கவிநயா
நல்ல எண்ணங்கள் மனத்தில் படியப் படிய அவை திரண்டு தனிநபரின் சுயமாய் வார்த்தெடுக்கப்படுவதுண்டு. சுயம் சுத்தமாய் இருந்தால் இன்னொருவரின் சுயத்தையும் மதித்து மரியாதை கொடுக்கும்.
வருகைக்கு மிக்க நன்றி, கவிநயா..
G.M. Balasubramanian
சமரசம் என்பது என்றைக்குமே இரண்டு பக்கமும் சார்புடையதாக இருக்கும். சில நேரத்து சமரசங்களும் அவரவர் சுயத்தை அந்த நேரத்தில் காப்பதற்கான ஒரு நடவடிக்கையாகவும் அமைந்து விடுவதுண்டு. அத்தகைத்தான சமரசங்களால் சுயம் காயப்படுவதில்லை.
அல்லாத சமரசங்களை சுயமே தன்னிச்சையாகத் தவிர்த்துவிடும். அத்தகைத்தான சமரசங்களிலிருந்து விலகி நின்று நல்ல சுயத்தைப் பலி கொடுத்து விடாமல் காப்பதே நல்லோருக்கு காலத்துக்கும் எந்நேரத்தும் உள்ளத்தில் கொழுந்து விட்டு எரியும் வேள்வியாக அமைந்து விடுகிறது.
உன்னிப்பாகக் கவனித்துச் சொன்ன கருத்துக்கு நன்றி, ஐயா!
@ சிவகுமாரன்
வாருங்கள், சிவகுமாரன்! வருகைக்கு நன்றி.
ஏன் இப்படி?-- என்பது தான் உங்கள் கேள்வியாக இருக்கும் என்று யூகிக்கிறேன்.
ஏனென்றால் இப்படி இருப்பது தான் அதன் இயல்பு. இப்படி இல்லாது போனால் தான் அது அதன் இயல்பு மாறிப் போகிறது என்று கொள்ளலாம்.
இலட்சியம் என்று சொல்கையிலேயே அதன் பிர்மாண்டம் புலப்படுகிறது.
அதை நோக்கிய நிச்சயப்படுத்திக் கொண்ட தேடல் வேறு. கேட்க வேண்டுமா?..
'மெய்வருத்தம் பாரார்; பசி நோக்கார்; கண் துஞ்சார்; எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் செவ்வி அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணாயினார்'-- கதை இது! இப்படிப்பட்டவரின் சுயம் எப்படியிருக்கும் என்பது தெரிந்ததே!
தனது இலட்சியப் பாதையிலிருந்து விலகச் செய்யும் எந்த சமரசத்துக்கும் தன்னை ஆட்படுத்திக் கொள்ளாமல், விலகல் இல்லையென்றாலும் சுயத்தை பலிகொடுத்து ஒரு சமரசத்திற்கு உட்படுத்திக் கொள்ளாமல், சுயத்தைக் காப்பதும் ஒரு இலட்சியமாய் போனோர்க்கு ஜெயிப்பது என்பது நெடுங்கனவாய்ப் போகலாம்; ஆயினும் ஜெயிப்பு என்றால் ஆயிரம் இன்னல்களைத் தாண்டிய இந்த ஜெயிப்பே சரித்திரத்தில் இடம் பெறும் ஜெயிப்பாய் மாறிப்போகும்! இன்னல்கள் ஏணிபடிகளாய் பாதை போட்டுக் கொடுத்து பயணிக்க வழி பண்ணிக் கொடுக்கும்!
@ இராஜராஜேஸ்வரி
படிப்பதின் மீதான பார்வையைப் பகிர்ந்து கொண்டு பாராட்டும் தங்களுக்கு மிக்க நன்றிங்க.
@ கோமதி அரசு
தாங்களும் நன்றாகச் சொல்லி விட்டீர்கள், கோமதிம்மா.
வாழ்க்கைச் சிக்கல்களை சிக்கலாக எண்ணாது அவற்றின் இயல்பே அது என்று எதிர்கொள்வதற்கான சக்தியைக் கொடுப்பதும் அந்த தவத்தின் நேர்த்திதான் போலும்! அப்படியான ஒரு வாழ்க்கையில் கிட்டும் நிம்மதிதான் உன்னதத்திற்கு கைப்பிடித்து அழைத்துக் கூட்டிச் செல்லும் போலிருக்கு.
என் கேள்விக்கான பதிலை மீண்டும் மீண்டும் படித்தேன். என் நாட்குறிப்பில் குறித்து வைத்துக் கொண்டேன். பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. நன்றி
@ சிவகுமாரன்
கொண்ட அன்பில் எழுதியிருக்கிறீர்கள்.
தங்களுக்கு நன்றி. விரைவில் தங்கள் பதிவுகள் மலரட்டும். அதற்கான ஆக்கமும் ஊக்கமும் இறைவன் அருளால் தங்களுக்குக் கிடைக்கட்டும்.
Post a Comment