Friday, August 12, 2011

கூடு

என்றைக்குமே ரயில் பயணங்களில்
என்னவெல்லாமோ ஈர்ப்பு எனக்கு.
ஓடும் தந்திக் கம்பங்களில் ஒயிலாக
உட்கார்ந்திருக்கும் தவிட்டுக் குருவி;
கையசைத்துக் கூவும் உற்சாக
கிராமத்துக் கள்ளமிலாச் சிறார்கள்;
சலசலத்தோடும் நதிப் பாலத்தில்
கடகடத்துக் கடக்கும் திடுக்கிடல்கள்;
வாய் பிளந்த கருங்குகைக்குள்
வருகையைக் கூவென்றுக் கூவி அறிவித்து
வாகாய் நுழைந்து மீளும் மிடுக்கு;
அடைக்கப்பட்டிருக்கும் கேட்டுக்கு அப்பால்
தடுக்கப்பட்டு நின்றிருக்கும் பேருந்துகள்
கூடவே வந்து குறுக்குப் பாதையில் அவை
குஷாலாக முந்திவிடும் சாகசம்!

பகல் நேரப் பாசஞ்சர்களில் இப்படியாக
பரவசப்படுத்தும் என்னன்னவோ உண்டு.
இந்தத் தடவையோ அதிசயமாய்
இரவுப் பயணம் வாய்த்தது.

கும்மிருட்டுக்கு முன்பாக
கும்பகோணத்தில் ஏறிய ரயில்
பொலபொலவென்று
பொழுது விடிகையில்
எழும்பூரில் கொண்டு வந்து
இறக்கி விட்டது.

அசங்கி அசங்கி ஆட்டிய தாலாட்டில்
அயர்ந்த தூக்கம் இரவு முச்சூடும்!
நிலையத்தில் நிற்பதற்கே நின்றிருந்தோர்
திமுதிமுவென்று வெளிப்பட்ட சடுதியில்
வெறிச்சோடிப் போன தொடர் வண்டி
ஒற்றைப் பனைமரம் வீழ்ந்து கிடந்த மாதிரி
ஒரு கோடாய் நீண்டு நின்றிருந்தது.

சுகப்பயணத்தில் சுமந்து வந்த கூட்டை
நன்றியுடன் பார்த்து விரலசைத்தது தவிர
வேறு என்ன செய்ய இயலும், என்னால்?..
உயிர்- உடல் நல்உறவே போல்
தன்னைப் பொத்திக் காக்கும் கூட்டை உயிர்
தூக்கிச் சுமக்கும் நன்றி நவிலற்கரிதே.



22 comments:

Matangi Mawley said...

"ஓடும் தந்திக் கம்பங்களில் ஒயிலாக
உட்கார்ந்திருக்கும் தவிட்டுக் குருவி"

ரொம்ப அழகான வரி... :)

என்னுடைய பல ரயில் பயணங்களை நினைவு படுத்தி விட்டது இந்த கவிதை. திருச்சி-ஹௌரா மூன்று நாள் பிரயாணம். அதில் ஒன்றரை நாள் ஆந்திரா மட்டும். அத்தனை மலை, நதி, கிராமங்கள்... விஜயவாடா வில் lunch. ஒரிசா - வில் "jaal mudi" (street side snack)- என்று கல கல-வென்று நகரும் இந்த பயணம்.

சிவகுமாரன் said...

இரயில் பயணத்திற்கு உயிர் உடல் உவமானம் வெகு பொருத்தம்.

வாகனத்திற்கு நன்றி கூறும் மனம் கவிஞர்களுக்கு மட்டுமே வரும்
மிக நல்ல கவிதை

சந்தியன் said...

அட, கும்பகோணத்துக்காரரா நீங்க - அதான்

கவிதைகளில் கலக்கறீங்க!

ஸ்ரீராம். said...

அருமையாய் எழுதப் பட்ட கவிதை.ரெயிலில் போவது போலவே உணர்வு. நதிப் பாலம், (ம்..ஹூம்! இந்தக் காலத்தில் நதி மணல்தான் இருக்கு...நதியில் சுழித்தோடும் தண்ணீரைப் பார்த்து எத்தனை நாட்களாகிறது!) தந்தி கம்ப குருவி, மூடிய கேட்டுக்கு அப்பால் காத்திருக்கும் மனிதர்கள்...

தொடர் வண்டி தரும் அனுபவங்களும் சொல்லும் பாடங்களும் எத்தனையோ என்பதைக் கடைசிப் பாரா உணர்த்துகிறது. ஆன்மா தான் நான் உடல் அல்ல என்று சொல்லும் தத்துவத்தில் உடலை நிரந்தரமில்லாதது என்று ஒதுக்கினாலும் இந்தப் பிறவிப் பயணத்தில் இடம் தந்த வண்டிக் கூடு என்றுரைத்து நன்றி நவில்வது அழகு.

ரெயில் வண்டி இன்னும் எத்தனை பாடங்களைக் கற்றுத் தருகிறது என்று யோசிக்க வைத்து விட்டீர்கள்..

கீதா சாம்பசிவம் said...

அட, கும்பகோணத்துக்காரரா நீங்க - அதான்

கவிதைகளில் கலக்கறீங்க!//

இது கொஞ்சம் அநியாயமா இருக்கே! :P

இப்போ ரயில் பத்தி,

ரயிலைப் பற்றினதுனு தெரிஞ்சதும் ஓட்டமாய் ஓடி வந்தால் ரயில் எழும்பூர் வந்து காலியாகி இருக்கு! இடம் கிடைக்கலை. ஓகே, அடிக்கடி போனாலும் அலுக்காத ரயில் பயணம். நீங்க குறிப்பிட்ட எல்லாமும் இன்னமும் ரசிக்கிறேன். அதோடு தூரத்து மலைச்சிகரங்கள், தன் இருப்பைக் காட்டிக்கொள்ளும் நதிகள், வயல்களில் மேயும் மாடுகள், வேலை செய்யும் ஆட்கள். தூரத்தே தெரியும் ஒற்றையடிப் பாதையில் அல்லது மண் சாலையில் செல்லும் வண்டிகள், மனிதர்கள். எத்தனையோ

கீதா சாம்பசிவம் said...

ராஜஸ்தானத்திலே நாங்க இருந்த நசிராபாத்தில் இருந்து காச்சிகுடா எக்ஸ்பிரஸில் வருகையில் சிதோட்கட் தாண்டும் முன்னர் வரும் காட்டில் காட்டுக்குதிரைகளையும், மயில்களையும் நிறையக் காணலாம். காட்டுக்குதிரைகள் என்றால் அப்படி ஒரு கம்பீரம். அசத்தும்! அதிலும் குட்டிகள் விளையாடும் பாருங்க!

கீதா சாம்பசிவம் said...

அங்கே இருந்து மத்யப் பிரதேசம் காண்ட்வா வரும் முன்னால் ஓர் இடத்தில் பாதாள் பூர் என பூமிக்குக் கீழே ரயில் நிலையம்.

G.M Balasubramaniam said...

என்னதான் எழுதினாலும் எப்படித்தான் நினைத்தாலும் கடைசியில் எண்ண அலைகள் வந்து குவியும் இடம் என்னவோ உயிர் உடல் சம்பந்தப்பட்டதாயிருப்பது ஆழ் மனத் தேடலின் விளைவோ.? அழகான கவிதை. கவிதை என்று சொல்லும்போது உங்கள் இலக்கிய இன்பம் படித்த பிறகு என்னுடைய எது கவிதை பதிவுக்கு “நாட்டாமை”யின் சிபாரிசால் சந்த்ரூஸ் ப்லாக் படிக்க நேரிட்டது. நீங்களும் படித்துப் பாருங்கள் .INTERESTING.!

ஜீவி said...

@ Matangi Mawley

எத்தனை மாநிலங்கள்?.. எத்தனை பழக்க வழக்கங்கள்.. அத்தனையும் பிணைக்கும் இந்த இரயில்களைப் பற்றி எத்தனை சொன்னாலும் அலுக்காது போலிருக்கு...

ஜீவி said...

@ சிவகுமாரன்

கவிஞரின் இதயம் பேசினால், களிப்புக்கு கேட்பானேன்?..
உணர்ந்து சொன்ன வரிகளுக்கு
உள்மனசும் நன்றி சொல்கிறது.

ஜீவி said...

@ சந்தியன்

ஆமாம், சந்தியன்! பிறந்தது குடந்தையில் என்றாலும் தமிழகத்தின் பல நகரங்களிலும் வளர்ந்திருக்கிறேன்

எனது பதிவின் 'எழுத்தாளர்' பகுதியில் பாருங்கள்! எத்தனை கும்பகோணத்து எழுத்தாளர்கள்! அந்தப் பகுதியை எழுத ஆரம்பித்த போது இந்த விஷயம் அவ்வளவாக அடிக்கோடிட்டுத் தெரியவில்லை.. போகப் போக, பிரமிக்கும் அளவுக்கு பெயர் சொல்லக் கூடிய எத்தனை தமிழ் எழுத்தாளர்களை அந்த ஊர் கண்டு விட்டது.. அவர்களுக்கு அந்த ஊராலும், ஊரால் அவர்களுக்கும் நிச்சயம் பெருமை தான்!

தங்கள் ரசனைக்கு நன்றி. அந்த 'அதான்' அவ்வளவு அழகைத் தூக்கிச் சுமந்து கொண்டிருக்கிறது!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

சமீபத்தில் குடந்தை சென்றிருந்தேன்.
காவிரியில் தண்ணீர் பார்த்துக் களிப்போ களிப்பு!

ரயில் பயணத்தின் நேர்த்தியில் பின்னாடி சொன்னது அமுங்கிப் போய்விட்டதோ என்கிற சந்தேகம் இருந்தது. இப்பொழுது இல்லை என்று ஆகிவிட்டது. உண்மையில் அதைச் சொல்லத் தான் இது!

மிக்க நன்றி, ஸ்ரீராம்!

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

//இது கொஞ்சம் அநியாயமா இருக்கே//

உங்களக்கே இது நியாயமா படறதா?.. உங்கள் மதுரையைப் பற்றி 'மறக்க முடியாத மதுரை நினைவுகள்' என்று 4 அத்தியாயம் நான் எழுதவில்லையா?.. யாதும் ஊரே, யாவரும் கேளிர்'-- என்ன சொல்றீங்க..

ஒண்ணு நினைவுக்கு வருதுங்க.. அதையாவது சொல்லிடறேன். நவீன புதுக்கவிதையின் பிதாமகன், ந.பிச்சமூர்த்தி பிறந்தது கூட கும்பகோணத்திலே தாங்க!

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

// இப்போ ரயில் பத்தி...//

இந்த விவரணை தான் உங்க பலம்.. சொல்லுங்க..

//ரயில் எழும்பூர் வந்து காலியாகி இருக்கு! இடம் கிடைக்கலை. ஓகே,//

இடம் கிடைக்கலையா?.. அதான் பின்னூட்டப் பெட்டிலேயே 3 சீட்டுக்கு கர்ச்சீப் போட்டுட்டீங்களே!

//ராஜஸ்தானத்திலே நாங்க இருந்த நசிராபாத்தில் இருந்து காச்சிகுடா எக்ஸ்பிரசில்...//

//பாதாளபூர் என்னும் பூமிக்கு கீழே ரயில் நிலையம்..//

கரெக்ட்! ரயிலுன்னா ரயிலு தாங்க!

கவிநயா said...

ஹை! ரயில்ல போறது எனக்கும் ரொம்பப் பிடிக்கும் :)

//வெறிச்சோடிப் போன தொடர் வண்டிஒற்றைப் பனைமரம் வீழ்ந்து கிடந்த மாதிரிஒரு கோடாய் நீண்டு நின்றிருந்தது.//

அழகு :)

உடற் கூட்டுக்கு நன்றி நவின்ற விதமும் அழகு. ஆனா, ரயில் பயணமும் சரி, வாழ்க்கைப் பயணமும் சரி, எப்போதுமே சுகப் பயணம்னு சொல்லிட முடியாது. ரயிலையாவது கொஞ்சூண்டு சேர்த்துக்கலாம்; மற்றது?

சிந்திக்க வைத்த கவிதைக்கு நன்றி ஜீவி ஐயா.

கீதா சாம்பசிவம் said...

யில் பயணமும் சரி, வாழ்க்கைப் பயணமும் சரி, எப்போதுமே சுகப் பயணம்னு சொல்லிட முடியாது. ரயிலையாவது கொஞ்சூண்டு சேர்த்துக்கலாம்; மற்றது? //

ரயில் பயணத்தில் முதல் வகுப்பு டிக்கெட் வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டுக்கொண்டு போனதும் உண்டு. ரயில் வெள்ளத்திலும், மழையிலும் நின்று போய், போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் போக முடியாமல் குழந்தைகளோடு தன்னந்தனியாக தெரியாத ஊரில் அவதிப்பட்டதும் உண்டு. என்றாலும் அவையும் வாழ்க்கைப் பயணத்திலே ஏற்பட்டவையே; இன்று நினைத்தாலும் சுவையூட்டுபவை; இப்படியே வாழ்க்கையிலும் அனைத்தையும் எதிர்கொண்டால் எல்லாமும் சுவையே!

எது தேவையில்லையோ அதை ருசிகரமாய்ப் பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்; அதுபோதும் அப்புறமாய் அந்த நிகழ்வை நினைத்தாலே சிரிப்பு வரும்.

கவிநயா said...

//எது தேவையில்லையோ அதை ருசிகரமாய்ப் பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்; அதுபோதும் அப்புறமாய் அந்த நிகழ்வை நினைத்தாலே சிரிப்பு வரும்.//

மன்னிக்கணும் அம்மா. வாதம் செய்வது என் நோக்கமல்ல. இருந்தாலும், சொல்வது மிகச் சுலபம். ஒரு விஷயம் கடந்து போன பிறகு, அதுவும் நல்ல விதமாக முடிந்தால், திரும்பிப் பார்க்கையில் சுவையாகத்தான் இருக்கும். அதன் நடுவில் இருக்கும் போதுதான் அதனுடைய வலியின் ஆழமும் அதிகமாக இருக்கும். அந்தச் சமயத்தில் இப்படியெல்லாம் நினைக்கத் தோன்றுவதில்லை. என்னுடைய பக்குவமின்மையும் காரணமாக இருக்கலாம்.

//சுகப்பயணத்தில் சுமந்து வந்த கூட்டை//

இந்த வரிதான் என்னை அந்தக் கருத்தை எழுதத் தூண்டியது.

! ஸ்பார்க் கார்த்தி @ said...

சுதந்திர தின வாழ்த்துக்கள்!!!!!!!!

இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

கோமதி அரசு said...

//ஓடும் தந்திக் கம்பங்களில் ஒயிலாக
உட்கார்ந்திருக்கும் தவிட்டுக் குருவி;
கையசைத்துக் கூவும் உற்சாக
கிராமத்துக் கள்ளமிலாச் சிறார்கள்;
சலசலத்தோடும் நதிப் பாலத்தில்
கடகடத்துக் கடக்கும் திடுக்கிடல்கள்;
வாய் பிளந்த கருங்குகைக்குள்
வருகையைக் கூவென்றுக் கூவி அறிவித்து
வாகாய் நுழைந்து மீளும் மிடுக்கு;
அடைக்கப்பட்டிருக்கும் கேட்டுக்கு அப்பால்
தடுக்கப்பட்டு நின்றிருக்கும் பேருந்துகள்
கூடவே வந்து குறுக்குப் பாதையில் அவை
குஷாலாக முந்திவிடும் சாகசம்!//

அருமையான வரிகள்.

பார்த்த ரசித்த காட்சிகளை கவிதை ஆக்குவது, அதை எங்களுக்கு படிக்க தருவது மகிழ்ச்சி.

நானும் என் ரயில் பயணங்களில் நீங்கள் சொன்னவற்றை ரசிப்பேன் சார்.
ரயில் சிநேகத்தையும் ரசிப்பேன்.

ஜீவி said...

@ G.M. Balasubramaniam

வாருங்கள், ஐயா!

நீங்கள் சொல்வது சரிதான். சந்த்ரூஸ் பிளாக்கைப் பார்த்தேனே தவிர ஆழ்ந்து படிக்க ஆரம்பிக்கவில்லை.. விஷயச் செறிவுள்ள எதையும் படித்தால், பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது. அதைச் செய்ய வேண்டும். தங்கள் அறிமுகத் திற்கு மிக்க நன்றி.

ஜீவி said...

@ கவிநயா

வாருங்கள், கவிநயா!

அயர்ந்த தூக்கத்திற்கு அனுசரணையாய் இரவு முழுக்க அசக்கி அசக்கி தொட்டிலாட்டிய தொடர்வண்டிக்குத் தான் வண்டி விட்டு இறங்குகையில் விரலசைத்து நன்றி.

பிறவிப் பயணத்திலோ உயிரைப் கூட்டு உறையாய் பொத்தி வைத்துக் காக்கிறது உடல். தன்னைக் காக்கும் உயிரை நன்றியுடன் சுமக்கிறது உயிர்.
(உடலில் இயக்கத்திற்கு உயிர் காரணமாதலின்). உடல் தொகுப்பில் எல்லாமும் ஒன்றாயினும், கவிதை நயத்திற்கான மயக்கங்கள்.

வாழ்க்கைப் பயணத்தில் உள்ளடங்கிய வண்டிப் பயணத்தை தனித்தனியாகப் பிரித்துப் பார்த்திருக்கிறீர்கள். உயிரையும் உடலையும் தனித்தனியாய் பார்த்த மாதிரி.

சுகமும், அந்த சுகமென்று நினைப்பதற்கான எதிர்மறையும்
கூட வாழ்க்கை மீது பிடிப்பு ஏற்படுத்துவதற்கான மயக்கங்களோ என்னவோ?

தங்கள் பகிர்வுகளுக்கு நன்றி, கவிநயா!

ஜீவி said...

@ கோமதி அரசு

//ரயில் சிநேகத்தையும் ரசிப்பேன்.//

ரயில் கூண்டில் கிளைப்பரப்பும் சிநேகம் யோசிக்க யோசிக்க அற்புதமானது.

மனிதர்கள் நேசிக்கவும், சிநேகிக்கவும், ரசிக்கவும் பிறந்தவர்கள். தனியாக வேறு வேலை இல்லாமல் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு சகமனிதர்களுடன் அடைக்கப்பட்ட நேரத்து அந்த மனிதகுணம் மிகவும் அர்த்தமுள்ளதாக அமைகிறது. இறைவன் தந்த இந்த வரமெல்லாம் நினைத்து நினைத்து மகிழ்வதற்கானவை.

தங்கள் பகிர்தலுக்கு மிக்க நன்றி, கோமதிம்மா.

Related Posts with Thumbnails