Tuesday, August 23, 2011

'சாயாவனம்' படைத்த சா. கந்தசாமி

'சாயாவனம்' தமிழ் நாவல் உலகில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நூல்களில் ஒன்று.. சீர்காழி தாண்டி பூம்புகார் அருகிலிருக்கும் திருச்சாய்க்காடு என்னும் ஊர் தான் சாயாவனம். இயற்கைச் செல்வங்கள் தனிமனிதர் கைக்கொண்டு எப்படி சிக்கிச் சின்னாபின்னமாகின்ற என்பதைச் சொல்ல வந்த கதை இது. கரும்பாலைக் கனவுடன் சாயாவனத்திற்கு வரும் சிதம்பரம் கடைசியில் அந்த வனத்தையே சாய்த்து விடுவது தான் கதை. புளியந்தோப்பு வனமாக உருவகம் கொண்டுள்ளது.

இயற்கையின் வரமாய் அந்தப் பகுதியையே ரட்சித்த வனம் அழிக்கப்படுவதின் மூலம் மனித மனத்தின் மாட்சி முதலில் அழிந்து படிப்படியாக எல்லாமும் அழிந்து படும் கதை. சொல்லப் போனால் இன்றும் இயற்கை வளங்களை நாகரிக செளகரியங்களுக்காக அழிக்கத் துணியும் போக்கு மாறவில்லை; மாறவில்லை என்பதைத் தாண்டி இன்னும் கூடியிருக்கிறது. காடுகள் போய் நாடெல்லாம் கான்கிரீட் காடுகளாகியிருக்கின்றன. எவ்வளவு தான் அழிந்துபட்டாலும், துளிர்த்துக் கொண்டிருக்கும் அந்த வரப்பிரசாதம் மட்டும் இல்லையெனில் என்றைக்கோ மனித சமூகம் மண்மூடிப்போயிருக்கும். பீனிக்ஸ் பறவை போல அழிவின் சாம்பலினூடே அவை எழும் என்கிற நம்பிக்கையினால் தான் இந்த அழிவு வேலைகளும் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனவோ, தெரியவில்லை.

இதெல்லாம் தான் மாற்றங்களின் தோற்றமான வளர்ச்சியா என்றால் சட்டென்று அவ்வளவு சீக்கிரத்தில் பதில் சொல்ல முடியவில்லை. அதுவும் வேண்டும், இதுவும் வேண்டும் என்று தான் நிறைய தயக்கத்திற்குப் பிறகு நினைக்கத் தோன்றுகிறது. காடும் வேண்டும், கான்கிரீட் வீடும் வேண்டும் என்கிற நினைப்பு என்ன சாத்தியப்படாத செயலா, என்ன?.. இது வேண்டும் என்றால் அது இல்லை என்று தட்டிப் பறிப்பது நியாயமாகத் தெரியவில்லை. ஏனென்றால் இது அன்றன்று கிளைக்கும் வாழ்க்கை செளகரியங்களுக்கான வாசல் திறந்தாலும், உயிர் இனங் களின் வாழ்வாதாரமே அது தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. இரண்டும் வேண்டும் என்பதை மேலை நாடுகளில் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஊர்களுக்கு உள்ளே, வெளியே, நெடுஞ்சாலைகளில் என்று வானுயர்ந்த நெடிய விருட்சங்களையும், நெருக்கமான காடனைய மரக் கூட்டங்களையும் பார்க்கையில் மனத்திற்கு சந்தோஷமாக இருக்கிறது. மரம்-மேகம்-மழை என்னும் சங்கிலித் தொடரின் கைகோர்த்தக் கொண்டாட்டத்திற்குக் குறைச்சலில்லை... இயற்கையின் கொடையான ஆதாரச் செல்வங்களின் செழிப்பில் களித்து மனிதகுல வளர்ச்சியின் மேன்மை கொழிக்க வேண்டும். நமது பழந்தமிழ் இலக்கியங்களில் கூட மலையும் மலைசார்ந்த இடமும், காடும் காடு சார்ந்த இடமும், கடலும் கடல் சார்ந்த இடமும், வயலும் வயல் சார்ந்த இடமும் என்று நிலவகை பகுப்புகளை படித்தறிகிறோம். அவற்றை முழுசாகப் பார்த்து மகிழாத நிலை தான் இன்றைக்கு.


சா. கந்தசாமி தனது இருபத்தைந்து வயதில் எழுதிய நாவல் சாயாவனம் என்பது அவரின் வாலிபப் பருவத்து சிந்தனையின் சிறப்பைச் சொல்கிறது. எனது இருபத்தேழு வயதில், 1970 வாக்கில் 'வாசகர் வட்ட' வெளியீடாக இதைப் படித்த நினைவு இருக்கிறது. 'வாசகர் வட்ட' வழக்கமான கலாசாகரம் ராஜகோபாலின் கோட்டோவிய முகப்புடன் நல்ல தரமான பைண்டிங்கில் பதிப்பிக்கப் பட்டிருந்தது. அந்த நேரத்து வெளிவந்த புதினங்கள் பெரும்பாலும் இந்த சுற்றுப்புற சூழல் விஷயத்தைத் தொடாதிருந்த பொழுது, அதைத் தொட்டு வாழ்வாதாரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது தான் இந்த நாவலின் சிறப்பு. சொல்லப்போனால் சா.கந்தசாமி தன்னுள் கனலாய் கனன்ற விஷயத்தைத் தான் ஒரு வடிகால் தேடி நாவலாய் அதை வெளிப்படுத்தியிருக் கிறார் என்று சொல்ல வேண்டும். அந்த சிறப்புக்காகத் தான் இந்த நாவல் பிற்காலத்தில் சாகித்ய அகாதமியாலும் கெளரவிக்கப்பட்டிருக்கிறது. நாவலில் வரும் சிதம்பரத்தைப் போல இன்றும் எத்தனையோ சிதம்பரங்கள்! சிவனாண்டிப் பிள்ளை, பஞ்சவர்ணம், பாப்பா, குஞ்சம்மா என்று இன்றும் நினைவில் நிற்கும் வார்ப்புகள்.

புத்தகங்களில் கதை படிப்பது போய் இப்பொழுதெல்லாம் ஒலிப்புத்தகங்களும் வந்திருக்கின்றன. கண்கள் கிரகித்து சிந்தையில் ஏற்றிய காரியம் காதின் வழியாக நடக்கிறது. ஒலிப்புத்தகங்கள் வந்து விட்டதினால், புத்தகங்கள் ஒன்றும் அழிந்து போய்விடவில்லையே?.. இந்த ஒலிப் புத்தகங்களில் கந்தசாமியின் கதைகளும் அடக்கம் என்பது தான் காலத்தின் விசித்திரம். .

'தக்கையின் மீது நான்கு கண்கள்' என்னும் இவரது இன்னொரு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கதை பற்றியும் சொல்ல வேண்டும். ஏதோ ஓர் ஓவியத்தைப் பற்றிச் சொல்கின்ற விவரக்குறிப்பு போன்றதான தலைப்பு. ஆசிரியருக்கும் ஓவியங்களின் மீது அதிக ஆர்வம் என்பதினால் இந்த தலைப்பு வந்ததோ தெரியவில்லை. எல்லாக் கலைகளையும் போல ஆறு, குளங்களில் மீன்பிடித்தலும் ஒரு கலைதான் என்று இந்தக் கதையைப் படிக்கையில் தோன்றும்.
தூக்கிப் போட்டத் தூண்டிலின் தக்கை குதியாட்டம் போடுவதும், கயிறைத் தளர்த்தி இரையைக் கவ்வ மீனுக்கு வசதி ஏற்படுத்துவதும், கயிற்றின் அசைவிலேயே தண்ணீருக்குக் கீழே என்ன நடக்கிறது என்பதைக் கண்டு கொள்வதும்..

தாத்தா-பேரன் இரண்டு பேருக்குமான சாமர்த்திய சாகசம் அது. தாத்தாவின் ஏகப்பட்ட முயற்சிக்குப் பின்னும் அந்த பெரிய வாளை மீன் அவர் போட்டத் தூண்டிலில் சிக்காமல் போக்குக் காட்டுகிறது. 'உனக்காச்சு; எனக்காச்சு' என்ற தாத்தாவின் மீன்பிடித்தலின் எல்லா சாகசங்களும் தவிடுபொடியாகின்றன. இரண்டு நாட்கள் மெனக்கெடலில் வெறுங்கையுடன் வீடு திரும்பும் தாத்தாவிடம் அவர் வாழ்க்கையிலேயே இதுவரை இந்தத் தொழிலில் சந்தித்திராத சோர்வு தான் மிஞ்சுறது. அடுத்த நாள் சின்னப் பையன் அவரது பேரன் பிடித்துக் கொண்டு வந்த வாளைமீன் தோட்டத்துப் பின்புறம் வாய்பிளந்து கிடக்கிறது. சொந்த பேரனின் சாகசத் திறமையை தாத்தாவாலேயே ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. பேரனிடம் சந்தோஷிப்பதை விட்டு சொந்த பெருமை சாய்ந்து விட்டதே என்று குமைந்து போகிறார். வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் வெளிப்படாத அன்பு அவருள்ளேயே சுற்றிச் சுழல்கிறது. 'தாத்தாவின் கை பேரனின் தோளில் விழுகிறது. அப்புறம் கழுத்தில் உராய்ந்து காதுக்குச் சென்றது. பேரன் "ஆத்தா.." என்று அலறிக் கொண்டு ஓடி பாட்டியின் பின்னே மறைந்தான்' என்று கதையை முடிக்கிறார் ஆசிரியர்.

இப்படித்தான். தன்னால் சாதிக்க முடியாத ஒன்றை பிறர் சாதித்து விட்டால் சிலரால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.. இந்த ஆற்றாமை தாத்தாவிடம் ஒரு முரட்டுத்தனமாகவே அமைந்து விட்டதை கதை நெடுகப் பார்க்கிறோம். இப்படிப் பட்ட சென்ற தலைமுறை சார்ந்த பெரியவர்களைச் சந்தித்தவர்களுக்கு இந்தக் கதை வெகுசுலபமாகப் பிடிபடும். கதைக்கு நடுவே ஆறுகளில், குளங்களில் மீன்பிடிக்கும் லாகவம் பற்றி நிறையவே, அலுப்புத் தட்டாமல் தொழிலின் சிரமங்கள் தெரிகிற மாதிரி ஆசிரியர் சொல்லிச் செல்லும் இடங்கள் அற்புதம்.

'60களின் பிற்பகுதியில் வெளிவந்த சிற்றிதழான 'கசடதபற'வில் வெளிவந்த 'தக்கையின் மீது நான்கு கண்கள்' கதை இப்படி என்றால், ஜெயகாந்தனை ஆசிரியராக, அறந்தை நாராயணனை நிர்வாக ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'கல்பனா' இதழில் '79 வாக்கில் வெளிவந்த 'ஏரிக்கரையில்...' நாவலில் தாத்தா-அப்பா சண்டையை தனது சிறுவயதில் பார்த்து திகைக்கும் பேரன்.

"... அப்போது இவனுக்கு வயது ஆறோ, ஏழோ. தினந்தினம் சண்டை. அப்பாவும் தாத்தாவும் மாறி மாறி கத்துவார்கள். கத்தி ஓய்ந்ததும் தடியை எடுத்துக் கொள்வார்கள். அம்மா, அப்பாவைப் பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டு போவாள். ஓரோர் சமயம், அப்பா அம்மாவைப் பிடித்துத் தள்ளி விட்டு தாத்தாவோடு சண்டைக்குப் போவார். இவன் விழிகள் பிதுங்க வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருப்பான்.

"ஒரு நாள் அந்தி கருக்கும் போது கூச்சல். பாப்பா வீட்டில் கிராமபோன் கேட்டுக் கொண்டிருந்த அழகு வெளியே ஓடி வந்தான். அப்பாவை விட தாத்தா பெரிதாகக் கத்திக் கொண்டிருந்தார். அவர் குரல் உச்சத்தில் கரகரத்தது. 'அவ உனக்கு அம்மா மாதிரியடா.."

அப்பா சிரித்தார்.

"தேவடியா மவனே சிரிக்கிறே?"

"போடா கிழவா" அப்பா ஓரடி முன்னே எடுத்து வைத்தார்.

"என்னடா சொன்ன?" தாத்தா எம்பி அப்பா முகத்தில் அடித்தார்.

மகா முரடன் என்று பெயரெடுத்த இவன் அப்பா முதல் அடி விழுந்ததும் திகைத்துப் போனவர் போல நின்றார். அவர் நிற்க நிற்க கிழவருக்கு வெறியேறியது. காலில் கிடந்த செருப்பைக் கழற்றி அடித்தார். வலிகண்டு கைசோரும் வரை அடித்தார். தன்னடிக்கு மகன் பதிலடி கொடுக்காமல் போகவே, திடீரென்று பயந்து பின்வாங்கி நடுத்தெருவில் நின்று கொண்டு பெரிதாக அலறினார். அவர் கூச்சல் சகிக்க முடியாததாக இருந்தது.

"கிழவா, இன்னமே கத்தின கொன்னுடுவேன்"..

'தாத்தா மூன்றாம் தாரமாக கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்த பிறகு அப்பாவுக்கு சுத்தமாகப் பிடிக்காமல் போயிற்று..' என்று பேரன் அழகு நினைப்பில் கதை போகிறது. தந்தையிடம் மகன் அழகுக்கு நேர்ந்ததும் அதே தான். மகனின் முகச்சாயலில் அப்படியே தன் அப்பனைக் காணும் தந்தை. அப்படிக் காணும் நேரங்களிலெலாம் அவனது ரெளத்திரம் எல்லை மீறிப் போகும். தாத்தாவின் பெயரே பேரனுக்கும் பெயரானது இன்னும் எரிச்சலைக் கூட்டியது.

அழகு புல்டோசர் டிரைவர்; அரசாங்க வேலை. ஏரிக்கரையை உடைப்பதற்காக புல்டோசருடன், இவன் இளமைப் பருவம் முழுதும் கழிந்த அன்னவாசலுக்கு வந்திருக்கிறான். அந்த ஏரியின் தென்கரையில் அன்னவாசல் ஊர் இருக்கிறது. ஒருகாலத்தில் பளிங்கு நீரை அலைஅலையாய்ச் சுமந்து வயிறு பெருத்திருந்த இந்த ஏரி இப்பொழுது வரண்டு, வற்றிக் கிடக்கிறது. இந்த ஏரிக்கரையை உடைப்பதற்காகத் தான் புல்டோசர், புல்டோசர் டிரைவர் அழகு, அரசாங்க அலுவலக ஆட்கள், ஆபிசர்கள் என்று ஒரு படையே திரண்டிருக்கிறது. வரண்டு போன ஏரியை சீர்படுத்தி ஜனங்களுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டுமெங்கிற அரசாங்க ஏற்பாட்டிற்காகத் திரண்டிருக்கும் படை! இங்கு கூட ஒன்றை அழித்துத் தான் இன்னொன்று என்கிற நமக்கே பழக்கமாகிப் போன திட்டமிடுதல் தான்!

புல்டோசரின் டாப்கியர் சரியில்லை; போட்டால் நழுவுகிறது. டாப்கியர் போடாமல் வேலை செய்ய முடியாது.. அடுத்த நாள் அரசாங்கப் பெருமக்கள் வந்து ஏரிக்கரை உடைக்கப்படுவதை ஆரம்பித்து வைக்க இருக்கிறார்கள்!.. இறுதியில் ஏரிக்கரை எப்படி உடைபட்டது என்பது தான் கதை. இந்தக் கதையை நடத்திக் கொண்டு வந்து இடைஇடையே அழகு நினைத்து பார்ப்பது மாதிரி அவன் வாழ்க்கைக் கதையைச் சொல்வது நாவலாகியிருக்கிறது.

இவரது 'அவன் ஆனது', அவன் அவனாக ஆன கதை. ராமலிங்கம் என்னும் மனிதன், மானுடனான கதை. ஆழ்ந்து படித்து, படித்த நேர்த்தியில் மனம் தோய வேண்டிய கதை. சுற்றியெரியும் தீப்பந்தங்களுக்கு நடுவில் கொளுந்தி எரியாத கற்பூரமும் இருக்கக் கூடுமோ?.. கூடும் என்று தான் தெரிகிறது. பத்மநாபன், திருவேங்கடம், ராகவலு, கமலா, ரோஸ்மேரி என்று நிறைய பேர் வந்து போகிறார்கள். அத்தனை நிறையவுக்கும் நடுவில் ராமலிங்கம் நிறைந்து நிற்கிறான். என்னைக் கேட்டால் சா.கந்தசாமியின் மாஸ்டர் பீஸும் இந்த 'அவன் ஆனது' தான் என்பேன்.

ஒரு கதையைச் சொல்கிற மாதிரி ஆரம்பித்து அதிலிருந்து கிளை பிரிந்து கிளை பிரிந்து நிறைய கதைகளைச் சொல்கிற மாதிரி எழுதுவது தான் சா.க.வின் பாணி! சொல்ல ஆரம்பிக்கும் கதையும் சரி, அதனின்று வெளிப்படும் வேறு வேறு கதைகளும் சரி, எல்லாமும் 'வெற்றுக் கதை' பண்ணும் கற்பனைக் கதைகளிலிரு ந்து வேறுபட்டு நடக்கின்ற நிகழ்வுகளைத் தொட்டு இருப்பது தான் இவரது கதையல்லாத கதைகளின் சிறப்பு! இன்னொன்று. இவர் எழுத்துக்களில் எங்கே தேடிப்பார்த்தாலும் நீதிபோதனை, நியாய அநியாயங்களுக்கு கட்சி பிரிந்து வக்காலத்து வாங்குவது போன்ற நிலைபாடுகளுக்கு இடமே இல்லாது இருக்கும். அதுபாட்டுக்க கதை கதையாகச் சென்று கொண்டிருக்கும். படிக்கையிலேயே அந்தந்த பாத்திர செயல்பாடுகளுக்கேற்ப நாமே கற்பித்துக் கொண்டால் தான் உண்டு. கூட்டிக் கழித்துப் பார்த்தால், வெவ்வேறு மனிதர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிற மாதிரி தோன்றும். தெரிந்தோ தெரியாமலோ அந்த மனிதர்களின் அனுபவங்களில் இவர் நுழைந்து கொள்வதால், மனிதர்கள் வேறு பட்டாலும் சில அனுபவங்கள் ஒன்றே போல் இன்னொன்றும் இருக்கும். தொடர்ச்சியாக இவரது சில நாவல்களை வாசித்தால் இந்த அனுபவம் தெற்றெனப் புலப்படும்.

சா. கந்தசாமி இன்றைய மயிலாடுதுறையான அன்றைய மாயவரத்தில் பிறந்தவர். இரண்டு முறை சாகித்ய அகாதமி விருதால் கெளரவிக்கப்பட்டவர். 'சாயாவன'த் திற்கு ஒன்றும், பிற்காலத்தில் எழுதிய 'விசாரணைக் கமிஷன்' புதினத்திற்காக இன்னொன்றும். 'தொலைந்து போனவர்கள்', 'சூரிய வம்சம்' என்று நினைவுக்கு வருகின்ற பெயர்களோடு சேர்த்து பத்துக்கு மேற்பட்ட நாவல்கள் எழுதியிருக்கிறார்..

சா.க. நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அத்தனையும் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடையில் அமைந்திருந்தாலும், சின்னக் கதைக்கு நடுவே அவர் எடுத்துச் சொல்ல எடுத்துக் கொண்ட விஷயம் மனதைக் குடைவதாக இருக்கும். ஒரு கர்மயோகியாய் ராஜாராமனை தந்திருக்கும் 'மலையூர்', மனிதனுக்கு மனிதன் கொள்ளும் கழிவிரக்கத்தைச் சொல்லும் 'காவல்' போன்ற கதைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

சிற்பக் கலை பற்றி ஆய்வுகள் செய்திருக்கிறார். ஓவியக் கலையிலும் ஆர்வம் கொண்டவர் இவர். தமிழின் உரைநடைக்கான படிப்படியான வளர்ச்சி பற்றிய இவரது கருத்துக்கள் மிகுந்த கவனம் கொள்ளத்தக்கவை. ஆவணப் படங்கள் எடுப்பதிலும் மிகுந்த நாட்டம் உள்ளவராகத் திகழ்கிறார். ஜெயகாந்தன் பற்றி இவர் எடுத்த ஆவணப்படம் அந்தக் காலத்தில் மிகவும் பேசப்பட்ட ஒன்று. சுடுமண் சிற்பங்கள் பற்றி விஷயத் தெளிவு கொண்ட இவர் எடுத்த ஆவணப்படங்களை தொலைக்காட்சியில் பார்த்த பொழுது பிரமிப்பு ஏற்பட்டது. இவையே வழக்கமான தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டவராக இவரைத் தோற்றம் கொள்ளச் செய்கின்றன.




18 comments:

G.M Balasubramaniam said...

நிறையப் படித்து நினைவில் வைத்து அசை போடுகிறீர்கள்.பாராட்டுக்கள்.

ஸ்ரீராம். said...

தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். இவர் படைப்புகள் எதுவும் படித்ததில்லை. உங்கள் பதிவின் கனமே அவர் எழுத்தின் கனத்தைச் சொல்கின்றது.

கோமதி அரசு said...

// தன்னால் சாதிக்க முடியாத ஒன்றை பிறர் சாதித்து விட்டால் சிலரால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.. இந்த ஆற்றாமை தாத்தாவிடம் ஒரு முரட்டுத்தனமாகவே அமைந்து விட்டதை கதை நெடுகப் பார்க்கிறோம். இப்படிப் பட்ட சென்ற தலைமுறை சார்ந்த பெரியவர்களைச் சந்தித்தவர்களுக்கு இந்தக் கதை வெகுசுலபமாகப் பிடிபடும்.//

பொறுக்க முடியாத குணம் தான் பொறாமை என்பார்கள். அது இவர் கதையில் தெரிகிறது.

கந்தசாமி அவர்களைப்பற்றி தெரிந்து கொண்டோன் நன்றி. நான் இருக்கும் ஊர்தான் அவர் சொந்த ஊர் என்று அறியும் போது பெருமையாய் இருக்கிறது.

கார்த்தி கேயனி said...

நல்ல பதிவு ங்கோ

ஜீவி said...

@ G.M. Balasubramaniam

எப்பொழுதோ படித்தவை பல. நினைவில் பற்றியிருக்கும் சில பற்றி இப்பொழுது எழுதத் தோன்றும் பொழுது தேடி எடுத்து மீண்டும் படிக்கின்றேன். அப்பொழுது தோன்றாததெல்லாம் இப்பொழுது படிக்கையில் மனதில் படிவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு காலத்திலும், நம்மிலும் நிகழ்ந்த வளர்ச்சி காரணமாகத் தெரிகிறது.

தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ஜிஎம்பீ சார்!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

கிடைத்தால் படித்துப் பாருங்கள், ஸ்ரீராம்! கதை படிக்கிறோம் என்கிற உணர்விருக்காது; அந்த எளிய நடையில் நம்மை அறியாமலேயே நாம் மூழ்கடிக்கப்படுவோம். மனித ஆழ்மனத்தின் குணவிசித்திரங்களை விளையாட்டு போல சொல்லிச் செல்வதில் கைதேர்ந்தவர் சா.க.

படித்து, படித்ததில் உணர்ந்ததைச் சொன்னமைக்கு நன்றி, ஸ்ரீராம்!

ஜீவி said...

@ கோமதி அரசு

அதை ஆற்றாமை எனக் கொள்ளலே சரி. வயதையும் தள்ளாமையும் கூட கணக்கில் கொள்ளாது, ஒரு பொருட்டாக நினையாது, தனக்கு நன்கு பழக்கப்பட்ட எந்தச் செயலிலும் இன்னொருத்தர் தன்னை மீறக் கூடாது என்று நினைப்பது. அப்படி மீறி விட்டால், அதை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் திகைப்பது.

இந்த மனம் இருக்கிறதே, சரியான 'இது' அது. அதை மட்டும் கைவசப்படுத்தி விட்டால், பூவுலகைப் பார்த்து புன்னகைக்கலாம்.

மாயூரம் என்றாலே டக்கென்று நினைவுக்கு வருபவர், மாயூரம் வேத நாயகம் பிள்ளையவர்கள். நம்ம அசோகமித்திரன் கூட மாயவரமே.

எனக்கு அந்த அழகான அற்புதமான கோயில், மனதை மயக்கும் மயூர நாதர்- அருள் பொழியும் அன்னை அபயாம்பிகையின் அழகுக் கோலம், மேத்தா தட்சிணாமூர்த்தி சன்னதி எல்லாமே நினைவைக் கொள்ளை கொள்ளும்.

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்தலுக்கும் மிக்க நன்றி, கோமதியம்மா.

ஜீவி said...

@ கார்த்தி கேயனி

மிக்க நன்றிங்க.

ஆதிரா said...

தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். ஆழ்மனத்து கொந்தளிப்புகளை கூறுவதில் சா.க. முதன்மையானவர் என்பார்கள். உண்மை என்பது புரிகிறது.

ஜீவி said...

@ ஆதிரா

வாருங்கள், ஆதிரா! அவர் நூல்கள் கிடைத்தால் படிக்கத் தவறாதீர்கள்.
தங்கள் அன்பான பகிர்வுக்கு நன்றி.

radhakrishnan said...

g.v.anna,
devan parri ezhuthivitteerkala? thedithedi aluththuvitten.
veettil noolagam vaiththulleerkala?
arasu noolakaththil nam virumbum puththakam kidaippathillaiye? enna seikireerkal?
tha.na.kumarasamy padiththirukkireerkala?neenkal pathivittirukkum 30 ezhuththalarkal list kodukka mudiyuma?

radhakrishnan said...

g.v.anna.
tharsamayam engu vasikkireerkal?mail vazhi thodarbu kolkireerkala.nan ippothu bengalooruvil irukkiren. 16 -9 -11kkuppin madurai vanduvuduven.udne thodarbu kollavum--by mail.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான ஒருவரைப்பற்றி அழகாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். என் மனமார்ந்த நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அன்புடன் vgk

ஜீவி said...

@ வை. கோபாலகிருஷ்ணன்

வாருங்கள், வை.கோ.சார்! தங்கள் ரசனைக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

உங்கள் கதைகளைப் படிக்கும் பொழுது எனக்கு எஸ்.வி.எஸ். நினைவு வரும். ரொம்பவும் சரளமாக,குடும்பப் பாங்காக, பாந்தமாக கதை சொல்கிறீர்கள். உங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

ஜீவி said...

@ வை. கோபாலகிருஷ்ணன்

மன்னிக்கவும். எஸ்.வி.வி. என்று குறிப்பிட வேண்டியது தவறுதலாக
எஸ்.வி.எஸ்.என்று தட்டச்சு ஆகிவிட்டது. திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.

ஜீவி said...

@ Radhakrishnan

சகட்டு மேனிக்கு எல்லா தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியும் வசவசவென்று இந்தப் பகுதியில் எழுதப் போவதில்லை. எனக்கே பிடித்த அல்லது தமிழ் எழுத்துலகில் தடம் பதித்த சிலரைப் பற்றியே எழுத எண்ணம். இப்போதைக்கு முப்பது பேர். 'பாலும் பாவை'யும் விந்தனிலிருந்து, 'சாயாவனம்' சா. கந்தசாமி வரை.

எங்கள் பகுதி அரசு நூலகத்தில் பெருவாரியான பழம்பெரும் தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள் கிடைக்கின்றன. கொஞ்சம் மெனக்கிட்டுத் தேட வேண்டும்; அவ்வளவு தான்.

தங்கள் பகிர்தலுக்கு மிக்க நன்றி சார்!

radhakrishnan said...

ஜி.வி.அண்ணா,
தேவனை குறைவாக கூறிவிட்டீர்களே.
மிஸ்டர் வேதாந்தம் படித்திருக்கிறீர்களா?உங்களை தேவன் கவராதது மிகவும்
ஆச்சரியமாக உள்ளது.

ஜீவி said...

@ Radhakrishnan

வாருங்கள், ராதாகிருஷ்ணன் சார்!
தமிழில் உங்கள் பின்னூட்டத்தைப் பார்க்கையில் மகிழ்வாக இருக்கிறது.

தேவன் என்று குறிப்பிட்டுக் குறைவாக மதிப்பிடவில்லையே. எந்த எழுத்தாளரையும் அப்படியாக எண்ணவும் மாட்டேன்.
வரிசையாகப் பார்த்தால் உங்களுக்கே தெரியும். இந்த வரிசைக்கு தேவன் பொருந்தமாட்டார். அவர் மாதிரியான வேறு சில எழுத்தாளர்களை உள்ளடக்கிய வரிசையில் அவரும் தாராளமாகப் பொருந்துவார். அப்படியானவர்களை பற்றி எழுதும் பொழுது நிச்சயம் அவரைப் பற்றியும் எழுதலாம். ஏன், நீங்களே உங்கள் மனம் கவர்ந்த அவரைப் பற்றி எழுதலாமே? நிறையப் பேர் அவரைப் பற்றி நிறையவும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அல்லயன்ஸ் பதிப்பகத்தார் தேவன் எழுதிய அத்தனை நூல்களையும் இப்பொழுது புதிய பதிப்புக்கு உள்ளாக்கியிருக் கிறார்கள்.

ஆத்மாவைத் தேடியைப் படிக்கத் துவங்கியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அன்பான வருகைக்கு மிக்க நன்றி, ராகி சார்!

Related Posts with Thumbnails