நடந்த எந்த நிகழ்ச்சிக்கும் அது நடந்த ஒன்று என்கிற யதார்த்தப் பிடிப்பு உண்டு. அப்படிப் பட்ட யதார்த்த நிகழ்வுக் களனையும் எடுத்துக் கொண்டு அந்த நிகழ்வுகளின் ஊடேயே யதார்த்தமற்ற மாயப்பூச்சுகளையும் பூசிப்பார்த்தால் எப்படியிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். சிறகடித்துப் பறக்கும் இரயில், உக்கிர பார்வை பார்க்கும் சூரியன், கண்ணீர் விடும் வாத்துகள், சிரிக்கும் சித்திரங்கள்.. இப்படியாக... குழந்தைக் கதைகள் பலவற்றில் இப்படியாக வரும் என்பதினால் இவைகளெல்லாம் குழந்தைகளின் உலகமாகவே ஆகிப்போகிறது. ஆங்! அதே தான். அப்படியான ஒரு குழந்தை உலகத்திற்குச் சொந்தமானவர் கிருஷ்ணன் நம்பி. சொல்லப் போனால், அவரே குழந்தை உள்ளம் கொண்டு தான் வாழ்ந்திருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. அவர் போலக் குழந்தை உள்ளம் பெறாதவர்கள், இவையெல்லாம் மாயலோகக் கதைகள் என்று வேண்டுமானால் நினைத்துக் கொள்ளலாம்.
குழந்தையாய் இருக்கும் பொழுது குழந்தை உள்ளமும், பெரியவராகும் பொழுது பெரியவர்களுக்கான உள்ளமும் பெறுவது இயல்பு. இந்த மாற்றத்திற்கு வளர்ச்சி என்று பெயரிட்டும் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அப்படிப் பட்ட வளர்ச்சிகள்
கோணலாகிப் போய் குதறும் பொழுது, குழந்தையாகவே இருந்திருக்கக் கூடாதா என்கிற குமுறல்களும் நம்முள் கிளைப்பதுண்டு. அப்படியான குமுறல்களை விடுத்து குழந்தையாகவே குறைந்தபட்சம் கதைகளில் வாழ்ந்து பார்த்தால் தான் என்ன என்று கிருஷ்ணன் நம்பி எண்ணியிருக்கலாம். நினைப்பில் நினைத்து விட்டுப் போய்விடாமல், அவர் காட்டிய குழந்தைகளின் உலகம் தான், அவரது கதைகள். குழந்தைகள் என்றால் குழந்தைகள் தான் கதாபாத்திரங்கள் என்று இல்லை. பெரியவர்களும் குழந்தைகள் ஆகி, மாசு மருவற்று குதூகலிக்கலாம் அல்லவா?...
கிருஷ்ணன் நம்பியின் எழுத்துக்களைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் இரண்டு பேர்கள் தவறாமல் நினைவுக்கு வருவார்கள். ஒருவர், கலைமகள் பத்திரிகை குழாமைச் சேர்ந்த 'கண்ணன்' பத்திரிகை ஆசிரியாராய் இருந்த திரு. ஆர்வி அவர்கள். இன்னொருவர் 'சக்தி' வை. கோவிந்தன் அவர்கள். இந்த இருவரும் கிருஷ்ணன் நம்பியின் இளம் வயதில் அவரை எழுத்துலகில் நிலைபெறச் செய்வதற்கு பெரிதும் துணையாக இருந்திருக்கிறார்கள். மூன்றாவதாக வருகிறார், 'ஒரு புளியமரத்தின் கதை' சுந்தர ராமசாமி. இவர் இளம் வயதில் கிருஷ்ணன் நம்பியின் அணுக்கத் தோழர். தோழர் என்றவுடனேயே இயல்பாக தோழர் ஜீவாவின் நினைவு வருகிறது. உள்ளூர்காரர் இல்லையா-- ஜீவா பிறந்து பெருமைப்பட்ட பூதப்பாண்டியில் கி.நம்பி உரக்கடையை மேற்பார்வை வேறு செய்து கொண்டிருந்தார்---ஜீவா, "தாமரைக்கு எழுதித்தாருங்கள்" என்று கேட்டு வாங்கிப் பிரசுரித்து ஆனந்தப்பட்டார். தொடர்ந்து விஜயபாஸ்கரனின் 'சரஸ்வதி'யிலும் நம்பி விருப்பத்துடன் நிறைய குழந்தைகளுக்கான கவிதைகள் எழுதினார். பிரசுரம் கண்ட முதற் சிறுகதையும் 'சுதந்திர தினம்' என்னும் பெயரில் குழந்தைகளைக் குறித்து எழுதியதே.. இப்படியாக எல்லாவிதங்களிலும் அவர் கண்ட குழந்தைகள் உலகத்திலிருந்து தப்பிக்க முடியாமல் போய், தப்பிக்க விரும்பாமல் அதிலேயே ஆழ்ந்து அமிழ்ந்து போன வாழ்க்கையாயிற்று நம்பிக்கு.
இவரது 'தங்க ஒரு..' சிறுகதையைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லியே ஆகவேண்டும். 'அன்புள்ள செல்லா..' என்று ஆரம்பித்து மனைவிக்கு கணவன் எழுதும் கடிதமாக அந்தக் கதை நீள்கிறது. ஊரில் மனைவியை விட்டு விட்டு சென்னை வந்திருக்கும் கணவன், வாடகை வீடு தேடும் அவலம் கடிதக்கதை நெடுக நீள்கிறது.
".... தேனாம்பேட்டை பக்கம் தான் போய்க்கொண்டிருந்தேன். ஒரு சந்து குப்பையும், சேறும் சாக்கடையும் பன்றிக் கூட்டமும்- ஒரே அசுத்தக் களஞ்சியமாக இருந்தது. மூக்கைக் கழற்றி எறிந்து விட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணமிட்ட மிட்டபடி நடந்தேன். அந்தச் சந்தினுள் எப்படித்தான் நுழைந்தேனோ கால்கள் நடக்கக் கூசின. ஆனால் மனிதன் அங்கும் சாப்பிட்டுக் கொண்டு, குழந்தை குட்டிகளோடு கொஞ்சிக் குலவிக் கொண்டு உட்கார்ந்து தான் இருக்கிறான். என்னத்தைச் சொல்ல?.. " என்று படித்துக் கொண்டு போகும் பொழுது புதுமைப் பித்தனின் கதையோ என்று திகைக்க வைக்கும்.
அடுத்து தான் கிருஷ்ணன்நம்பி தன் முத்திரையைப் பதிக்கிறார். குழந்தை நோக்கிலேயே எல்லாவற்றையும் பார்த்து பழக்கப் பட்ட சிந்தனைக்கு பொந்து பொந்தாக அங்கிருக்கும் வீடுகள், ஒரு போலீஸ்காரரின் முரட்டு பூட்ஸ் போன்றே கற்பனையை அவருள் நிகழ்த்தி அந்த குட்டியூண்டு வீட்டில் நிகழ்பவை ஒரு காலணிக்குள் நிகழ்வது போன்ற தோற்றம் கொடுக்கிறது. அந்த வீட்டினுள் அடுப்பு எரிதலினால் ஈர விறகிலிருந்து வெளிப்படும் புகைக்கற்றை கூட அந்த பூட்ஸிலிருந்து வெளிப்படும் புகைமண்டலம் போல, அந்த வீட்டிலிருந்து நூலேணி ஏறிவெளிப்படும் மனிதன் அரைவிரற்கடை உயரமுள்ள 'லில்லிபுட்' மனிதன் மாதிரி, என்று... இப்படியாக யதார்த்த நிகழ்ச்சிகளின் மீது குழந்தை உள்ளம் கொள்ளும் மாயப்பூச்சுகள் பூசப்படுகின்றன. இந்தப் பூச்சுகள் அசட்டுத்தனமாக அல்ல, மிகுந்த அர்த்தத்துடன் அமைவது தான் அதிசயம். சென்னை மாதிரியான இடங்களில் நெருக்கடியான பொந்துவளை ஒண்டுக்குடித்தனங்களில் வாழ்வோரின் அன்றாட வாழ்வுக்கான அவஸ்தைகள், விலைவாசி ஏற்றங்களில் சிக்குண்டு ஒவ்வொன்றிற்கும் குனிந்து குனிந்து அல்லலுற்று ஒவ்வொரு விஷயத்திலும் தங்களைக் குறுக்கிக் கொண்டு, குறுக்கிக் கொண்டு இறுதியில் சிசு கருவில் இருக்கையிலேயே குறுகி,அவர்களின் உடல் அமைப்பே வாழ்க்கையின் சுருக்கத்திற்கேற்ப குறுகிவிடுகிற மாதிரி அங்கத உணர்வை அள்ளித் தெளித்து சொல்ல வந்த கதை இது. வாழ்வுக்கான போராட்டம் கைத்த உணர்வில் கசிந்து வெளிப்பட்டிருக்கிறது என்றே வேதனையுடன் நினைத்துப் பார்க்க முடிகிறது.
பெயருக்கு ஏற்றவாறு நாஞ்சில் நாட்டு சிற்றூரான அழகிய பாண்டிபுரத்தில் பிறந்த நம்பிக்கு பெற்றோர் வைத்த பெயர் அழகிய நம்பி. நம்பி என்றால் ஆடவரில் சிறந்தோன் என்று அர்த்தம். கொண்ட அர்த்தத்திற்கேற்ப வளர்ந்தவர் பின்னால் நாகர்கோயிலில் வாழ்ந்த அபிமானத்தில் கிருஷ்ணன் நம்பி என்று பெயர் கொண்டார் போலும். 'கண்ணனி'ல் எழுதுகிற காலத்தில் சசிதேவன் என்கிற பெயரிலும் எழுதியதுண்டு. அவரது ஆரம்பப்பணி 'நவசக்தி'யில் என்று ஆயிற்று.அதுவும் கொஞ்ச காலத்திற்குத் தான். இருந்தாலும் எழுதுவது குறித்தும் பத்திரிகை எழுத்துகள் குறித்தும் சில முடிவுக்களுக்கு வருகிற சிந்தனைகளை அந்த குறைந்த கால பயிற்சியே அவர் மனத்தில் விதைத்திருக்கலாம். தனது பதினாறு வயதிலேயே நாட்டுப் பாடல்களைப் விவரமாக எழுதும் அளவுக்கு இருந்தவருக்கு இந்த பத்திரிகை அனுபவம் எழுத்துத் துறையில் ஒரு வீச்சாகப் படிந்தது. வாழ்க்கையின் அலைக்கழிப்பில் பின்னால் தந்தை பார்த்து வந்து உரக்கடை வியாபாரத்தை இவர் தொடர்ந்து செய்ய நேரிட்டாலும், அதில் பிடிப்பில்லாமல் போயிற்று. இலக்கியம், எழுத்து என்று மனத்திற்கு பிடித்ததில் அவர் கவனம் ஒன்றிய பொழுது சுந்தர ராமசாமியின் நட்பு அவருள் பதிந்த ஒன்றாயிற்று. ஜெயகாந்தனுக்கும், நகுலனுக்கும் கிருஷ்ணன் நம்பியை மிகவும் பிடிக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
மாமியாரின் ஆளுகை மருமகளில் படியாமல் படிந்த அழகைச் சொல்லும் 'மருமகள் வாக்கு', சமூகத்தின் ஏற்ற தாழ்வு சாபக்கேடுகளைச் சுட்டும் 'சட்டை', தர்ம- அதர்ம போக்குகளைப் பரிசீலனைக்குள்ளாக்கும் 'நாணயம்', சிறுவயதில் தனக்குக் கைவராத கணக்குப்பாடம் நினைவில் அவர் பாடமாகச் சொல்லியிருக் கும் 'கணக்கு வாத்தியார்' கதை, குழந்தை மனவெளிப்பாடுகளை அழகாக வெளிப்படுத்தும் 'சிங்கப்பூர் பணம்' என்று நம்பியின் நல்ல கதைகளைப் பற்றி நிறையச் சொல்லலாம். 'தம்பி ராஜப்பா மாதிரி மெட்ராஸில் தனக்கொரு வேலை தகைத்து ஜோராக வாழ்க்கை அமையவேண்டும்' என்று ஆதங்கபடும் அர்ச்சகர் குடும்பப் பையனின் கதையைச் சொல்லும் 'எனக்கு ஒரு வேலை வேண்டும்' கதையை ஸ்பெஷலாகச் சொல்லலாம்.
அதே மாதிரி 'மருமகள் வாக்கு' கதையில் அந்த மருமகள் ருக்மணி வீட்டுப் பசுவை பேச்சுத் துணைக்கு போல வைத்து கொண்டு அதனிடம் பேசுவது அத்தனையும் அழகு. கூடச் சாப்பிடும் பொழுது மாமியார் சொன்ன 'உண்டி சிறுத்தல், பெண்டிர்க்கு அழகு' உபதேசங்களையே எடுத்தாண்டு, 'பசுவே! நீ மட்டும் பெண்டிர் இல்லையா? உண்டி சுருக்கற நியாயம் ஒனக்கும் எங்க மாமியாருக்கும் மாத்ரம் கெடையாதா, சொல்லு!" என்று அதனிடம் பேசுகிற மாதிரிக் கேட்கையில் வளர்ந்து கல்யாணம் ஆகியும் அவளுடைய குறும்பினூடேயே குழந்தைத்தனத்தை நம்பி குழைத்துத் தந்திருப்பார். 'கேட்டாயா, பசுவே! நீ இப்போ மட்டும் இப்படிக் கறந்தாப் போதாது. எனக்குக் குழந்தை பொறந்தபுறவும் இப்படியே நெறய கறந்திட்டிருக்கணும். எங்கொழந்தை ஒம் பாலைக் குடிக்க வேணாமா? ஒங்கொழந்தை குடிக்கற மாதிரி எங்கொழந்தையும் ஒம் மடீலே பால் குடிக்க சம்மதிப்பியோ?' என்று குழந்தையாய் போயிருப்பது ருக்மணியா, இல்லை, கிருஷ்ணன்நம்பியா என்று தெரியாது. அவ்வளவு தத்ரூபம், இதற்குப் பின்னால் வருகிற அவளின் மனப்படப்பிடிப்பும் அற்புதம். அப்புறம் ஓட்டுச் சாவடியில் ஓட்டுப்போட ஓட்டுப்பெட்டியை ருக்மணி நெருங்குகையில் அவள் படும் அவஸ்தைகளுக்கூடே கிளிச் சின்னத்திற்கு போட நினைத்த ஓட்டை ஏதோ மெஸ்மரிஸத்திற்கு ஆட்பட்டது போல மாமியார் கை நினைவில் நெருங்கி பூனைச் சின்னத்திற்கு நேரே முத்திரை குத்த மாற்றி விட்டதும்.. கதையைப் படித்து முடிக்கும் பொழுது நம்பிதான் பிர்மாண்டமாய் வளர்ந்து நிற்கிற மாதிரி நினைவில் நிழலாடுவார்.
அவரது குழந்தைக் கவிதைகளைப் பற்றி தனியாகத் தான் எழுத வேண்டும். இருந்தாலும் அவை பற்றி எதுவும் சொல்லாமலும் இருக்க முடியவில்லை. 'ஆனை வேண்டுமென்று அழுத' குழந்தையின் கவிதையும், அம்பிப் பாப்பாவுக்கு கிடைக்கும் சலுகைகளை நினைத்துப் பார்க்கும் அங்கச்சிப் பாப்பா கவிதையும் கிருஷ்ணன் நம்பியை நினைக்கும் பொழுதெல்லாம் நினைவில் என்றும் நிற்கும்.
11 comments:
எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பி அவர்கள் பற்றி அருமையான பதிவு. மிக்க நன்றி.
எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பி அவர்கள் பற்றி அருமையான பதிவு. மிக்க நன்றி.
நெளிவு சுளிவு தெரியாதவர்களால் மட்டுமே குழந்தை உள்ளம் கொண்டு உலகைக் காணமுடியும். குழந்தைகள் உலகம் ஆச்சரியமானது. நாம் நினைக்காததை அவர்கள் நினைக்கிறார்கள். தேர்ந்தெடுத்த கதைகள் மூலம் ஒரு எழுத்தாளரின் பரிமாணங்களை அழகாகக் கொண்டு வருகிறீர்கள். இப்போது என் வாசிப்பின் வீச்சு மிகவும் குறைந்து விட்டதை உங்களைப் அடிக்கும்போது உணருகிறேன்.
தவறு நேர்ந்து விட்டது. படிக்கும்போது என்பது அடிக்கும்போது என்று வந்துவிட்டது. வருந்துகிறேன்.
@ வை.கோ
படித்துப் பார்த்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி, கோபு சார்!
@ G.M.B.
நெளிவு சுளிவு என்றாலே நேராக இல்லாமல் நெளிந்து விடுகிறது, இல்லையா?.. வாழ்க்கை கற்றுத் தரும் பாடம் குழந்தைப் பருவத்திலிருந்து வளர வளர எதிராகப் போய்விடுகிறது போலும். இல்லை, இந்த எதிராகப் போன படிப்பினை தான் 'ஒன்றும் தெரியாத' நிலையிலிருந்து கற்றுக் கொண்டதோ, தெரியவில்லை.
'பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா
பொல்லாத கண்களடா
புன்னகையும் வேஷமடா
நன்றி கெட்ட மாந்தரடா
நான்றிந்த பாடமடா
பிள்ளையாய் இருந்து விட்டால்
இல்லை ஒரு துன்பமடா..."
--- கவியரசர்
படிக்கும் பொழுதே 'அதை'த் திருத்திப் படித்து விட்டதினால் வலி தெரியவில்லை!
தங்கள் ரசனைக்கு மிக்க நன்றி,ஐயா!
குழந்தைகள் உலகத்தை சித்தரிக்கும்- குழந்தைகள் பார்வையில் உலகத்தை பார்க்க வைக்கும் கதைகள் மீது எனக்கு ஒரு தனி ஈர்ப்பு. அதில், ஒரு விதமான honesty உண்டு. swami and his friends கதையைப் போல. கிருஷ்ணன் நம்பி பற்றி நான் கேள்வி பட்டது கிடையாது. ரொம்பவும் அழகான 'insight'- அவர் எழுத்துகளின் மீது. inspiring... சந்தர்பம் கிடைத்தால் படிக்க வேண்டும்...
@ Matangi Mawley
ஆழ்ந்து ஈடுபாட்டுடன் படிக்கையில் ஏற்படுகிற புரிதல்களுக்கும், வெளிச்சங்களுக்கும் ஈடு இணை எதுவுமே இல்லை தான்.புது உலகின் வாசல் கதவுகளைத் திறந்து விட்டமாதிரி அது இருக்கும். அதுவும் நமக்கு பிடித்த சப்ஜெக்ட் என்றால் இன்னும் இன்னும் என்று அது போய்க்கொண்டே இருக்கும்.
வாய்ப்பு கிடைப்பின் கிருஷ்ணன் நம்பியின் எழுத்துக்களைப் படித்துப் பாருங்கள். உங்களுக்குப் பிடிக்கும்.
வருகைக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி, மாதங்கி!
https://siliconshelf.wordpress.com/2010/11/17/கிருஷ்ணன்-நம்பி/
- முடிந்தால் இதையும் பாருங்கள்
@ Siliconshelf
படித்து விட்டேன். உங்கள் தளத்தில் பதிலும் சொல்லியிருக்கிறேன். நன்றி.
'பசுவே! நீ மட்டும் பெண்டிர் இல்லையா? உண்டி சுருக்கற நியாயம் ஒனக்கும் எங்க மாமியாருக்கும் மாத்ரம் கெடையாதா, சொல்லு!" என்று அதனிடம் பேசுகிற மாதிரிக் கேட்கையில் வளர்ந்து கல்யாணம் ஆகியும் அவளுடைய குறும்பினூடேயே குழந்தைத்தனத்தை நம்பி குழைத்துத் தந்திருப்பார். 'கேட்டாயா, பசுவே! நீ இப்போ மட்டும் இப்படிக் கறந்தாப் போதாது. எனக்குக் குழந்தை பொறந்தபுறவும் இப்படியே நெறய கறந்திட்டிருக்கணும். எங்கொழந்தை ஒம் பாலைக் குடிக்க வேணாமா? ஒங்கொழந்தை குடிக்கற மாதிரி எங்கொழந்தையும் ஒம் மடீலே பால் குடிக்க சம்மதிப்பியோ?' என்று குழந்தையாய் போயிருப்பது ருக்மணியா, இல்லை, கிருஷ்ணன்நம்பியா என்று தெரியாது. அவ்வளவு தத்ரூபம், //
அருமையாக இருக்கிறது.
இந்த வரிகள் முழுகதையை படிக்கும் ஆவலை தூண்டுகிறது.
கிருஷ்ணன் நம்பி அவர்களை பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி.
Post a Comment