Wednesday, November 26, 2014

இனி (பகுதி-2)

                                                                                                                                                                                                                                                                           
                           அத்தியாயம்-- இரண்டு


சிரியர் அறையிலிருந்து புன்முறுவலுடன் வந்த ஜீ அன்போடு மோகனின் தோளைத் தொட்டார்.  "கதையின் ஆரம்பம் ஆசிரியருக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது.  தொடரச் சொன்னார்.  சில குறிப்புகளும் கொடுத்திருக்கிறார்" என்று அலுவலக குறிப்பு  நோட்டுப் புத்தகத்தைப்  பிரித்து வைத்துக் கொண்டார்.

அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் மோகனுக்குத் தித்தித்தது. "ரொம்ப நன்றி, சார்.." என்று தழுதழுத்தான்.

"இதானே நீங்க மொதமொதலா எழுதற தொடர்?.. அதனாலே ஒரு நாலு இல்லேனா ஆறு வாரத்துக்கு வர்றதா எழுதிடுங்க.  அடுத்த அத்தியாயமும் பிரசுரத்திற்கு முன்னாலேயே ஆசிரியர் பாக்கணும்ன்னார்.  பாத்திட்டு டிஸ்கஸ் பண்ணனும்னார்.  உங்களுக்கு ஒரு புனைப்பெயர் தேவைப்படுமோன்னு நான் தான் அபிப்ராயப்பட்டேன்.  ஆசிரியர் அதெல்லாம் வேணான்னார்.. மோகன்ங்கற பேர்லேயே பிரசுரிப்போம்ன்னுட்டார்" என்று ஜீ சொன்னார்.

நாலரை லட்சம் விற்கும் அந்தப் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் ஜீயை நிமிர்ந்து பார்த்தான் மோகன்.  அவரின் பெயர் என்ன என்று கூட அவனுக்குத் தெரியாது.  இவர் தான் இவன்  வீட்டிற்கு வந்து ஆசிரியர் உங்களைப் பார்க்கணும்ன்னார் என்று  அழைத்து வந்தார்.  இங்கு வந்து வேலையில்  சேர்ந்த ஒரு வார அனுபவத்தில் எல்லோருமே மரியாதைக்காகவோ என்னவோ பொறுப்பாசிரியரை ஜீ என்று கூப்பிடுவதால், மோகனுக்கும் அவர் ஜீ ஆனார்.

"புனைப்பெயர் வைச்சிக்கறது ஒரு காலத்லே மவுஸா இருந்தது.  அதனாலே வைச்சிண்டாங்க.  பெண்டாட்டி பேரைப் போட்டு இன்னாரோட மணாளன்னு தன்னை அடையாளப்படுத்திண்டாங்க.  அப்புறம் மனைவி பேர்லே ஒளிஞ்சிண்டு எழுதினாங்க.  பெண் எழுதற மாதிரி இருந்தா சில செளகரியங்கள் இருந்தது...  அதுக்காக அது.  ஆனா, உங்களுக்குப் புனைப்பெயர் வேண்டாம்ன்னு ஆசிரியர் சொன்னதற்கு காரணமே வேறே.." என்ற ஜீ பொடி டப்பாவை எடுத்துத்தட்டி சிமிட்டா எடுத்து உபயோகித்து நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தார். கர்சீப் எடுத்து கண்களையும் சேர்த்துத் துடைத்துக்  கொண்டார்.

உற்சாகமாய் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மோகன் பவ்யமாக ஜீயைப் பார்த்தான்.

"ஆசிரியர் என்னவோ இந்தப் பெயர் சமாச்சாரமெல்லாம் விஷயமே இல்லேங்கறார்.   மோகனுக்கு ஒரு புனைப்பெயர் முக்கியம்ங்கறதை விட அவர் எழுதறது எந்தவிதத்திலேயாவது வாசகர்கள் மனசிலே படியற மாதிரி இருக்கறது அதைவிட முக்கியம்ன்னார்.  கதையோ கட்டுரையோ தலைப்பைப் பாத்து மேட்டரை படிக்கறவங்களை, படிச்சு முடிச்சதும் யார் எழுதியிருக்காங்கன்னு எழுதினவங்க பேரைப் பாக்க வைக்கணும்.  அதான் முக்கியம்ங்கறார். ஏன் மோகன்ங்கறதே புனைப்பெயரா இருக்கக் கூடாதான்னு அவர் கேட்டப்போ எனக்கு எங்கே மூஞ்சியை வைச்சிக்கறது ன்னு தெரிலே." என்று ஜீ நாணமுற்றார்.  சிவந்த முகத்தில் பெண்பிள்ளை ஒருத்தி நிழலாக மோகனுக்குத் தெரிந்தாள்..

"நம்ம ஆசிரியர் இந்தத் துறைலே ரொம்பவும் அனுபவஸ்தர் மோகன்.. ஒண்ணு செஞ்சு முடிக்கணும்ன்னு நெனைச்சிட்டார்னா, பின்வாங்கவே மாட்டார். இப்ப அவர் செஞ்சு முடிக்கணும்ன்னு நெனைச்சிருக்கறது என்ன தெரியுமா?"

"சொல்லுங்க, சார்.."

"எழுத்துன்னா உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கணுங்கறது அவரோட கட்சி.  எதையும் செயல்படுத்தறதுக்கு அப்படி செயல்படுத்தறத்துக்கான உணர்வு வேணும்ன்னு அடிக்கடி சொல்வார்.  எழுதணும்ன்னு உணர்வு வந்தாத்தான்-- அதை தினவெடுத்தாத்தான்ம்பார் அவர்--  எழுதவே வரும்பார்.  படிக்கறவனையும் எழுதறவனையும் ஆட்டிப்படைச்ச அந்த  எழுத்தை இப்போ பாக்கவே முடியலேங்கறது அவரோட வருத்தம்.  எல்லாத்திலேயும்  ஒரு  செயற்கைதன்மை வந்திடுச்சுன்னு நினைக்கிறார்.  அதை நம்ம 'மனவாசம்' பத்திரிகையிலாவது மாத்திக் காட்டணும்ன்னு வீம்பா இருக்கார்" என்றவர் திடீரென்று நினைத்துக் கொண்டவர் போல, " அது என்ன பத்திரிகை?.. 'அஆஉஊஎஏ' தானே?.. ஒரு சிறுபத்திரிகையையும் ஆசிரியர் படிக்காம விடறதில்லே.  அந்த பத்திரிகைலே உன் கதை ஒண்ணைப் படிச்சிட்டு, 'அருமைப்பா'ன்னு நாள் பூரா சொல்லிண்டு இருந்தார்.  'கதைன்னா இது கதை!படிச்சுப்பாருங்க'ன்னு ஒரு சர்க்குலர் இணைச்சு இந்த பத்திரிகை ஆபீஸ் சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் படிச்சுப்பாக்க உன் கதையை ஒரு அஸ்வமேதக் குதிரை மாதிரி இந்த ஆபீஸ் பூரா அனுப்பிச்சு வைச்சார். என்ன நெனைச்சிண்டிருந்தாரோ, சாயந்தரம், என்னைக்கூப்பிட்டார்.  'அந்த மோகன் அட்ரஸ் தெரிஞ்சி வைச்சிங்கங்க.. நம்ம பத்திரிகைலே அவர் எழுதினா தேவலை'ன்னார்.  அதுக்கப்புறம் தான் நா உங்க வீட்டுக்கு வந்தது, நீங்க இங்க உதவி ஆசிரியராய் இருக்க ஒப்புத்துண்டது, எல்லாம்" என்று ஜீ விவரித்தை மந்தஹாச உணர்வுடன் மோகன்  கவனித்துக் கொண்டான்.  அந்த ஷணமே, எழுதக்கூடிய எதுவும் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும் என்கிற எழுத்துக்கலையின் பாலபாடத்தை மனசில் குறித்துக் கொண்டான்.

இரண்டு ரூம்களை இணைத்த மாதிரி இருபதுக்கு இருபது தேறுகிறமாதிரி அந்த அறை விசாலமாக இருந்தது.  நடுமத்தியில் பொறுப்பாசிரியர் ஜீயின் டேபிள். இந்த பக்கம் மூன்று பேர், அந்தப் பக்கம் மூன்று பேர் என்று துணை ஆசிரியர் உதவி ஆசிரியர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.  வலப்பக்க மூலையில் சின்ன டேபிளும் அமர்ந்து பேசுவதற்கு செளகரியமாக் நாற்காலியும்  போடப்பட்டு தொலைபேசி இணைப்பு.   அதைத் தவிர பொறுப்பாசிரியர் டேபிள் மீது  செக்க செவேலென்று ஒரு தொலைபேசி. நிருபர்களுக்கும் ஆர்ட்டிஸ்டுகளுக்கும் அறைகள் தனித்தனியாக இன்னொரு பக்கம் தடுப்புச்சுவர் தாண்டி இருந்தது.

இந்த அறைக்கு எதிர் அறை ஆசிரியரின் அறை.  கதவுக்கு  சல்லாத்துணி போடப்பட்டிருந்தாலும் ஆசிரியர் உள்ளே இருந்தாலும் சரி, இல்லேனாலும் சரி அவர் அறைக்கதவுகள் அலுவலக நேரத்தில் எந்நேரமும் திறந்தே இருக்கும். அறை மேல் ஜன்னல் வழியாக ஸீலிங் ஃபேன் சுற்றிக்கொண்டிருப்பது தெரிந்தால் ஆசிரியர் உள்ளே தான் இருக்கிறார் என்று அர்த்தம் என்று தெரிந்து கொண்டிருந்தான் மோகன்.  பொறுப்பாசிரியர் ஜீ  மட்டும் அழைப்பு வந்தால் ஆசிரியர் அறையின் உள்ளே சென்று வருவதைப் பார்த்தான்.  மற்றபடி அவரவர் வேலைகளை பொறுப்பு கலந்த அமைதியுடன் அவரவர் பார்த்து வருவது தெரிந்தது.

இந்த பத்திரிகை ஆபீஸில் வேலைக்குச் சேர்ந்த இரண்டே நாட்களில் மோகன் எல்லா பகுதிகளுக்கும் சென்று எல்லோரிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.  இதுவே அந்த பத்திரிகை அலுவலகத்தை பொறுத்த மட்டில் புதுமையாக இருந்தது.  புதுசாக பத்திரிகையில்  சேர்ந்திருக்கிற உதவி ஆசிரியர் என்கிற அளவில் எல்லோருக்கும் அவனை தெரிந்திருந்தது.

எதையோ சரி பார்த்துக் கொண்டிருந்த ஜீ சடக்கென்று அவன் பக்கம் திரும்பி, "அது சரி, மோகன்.. ஏன் அந்த பாண்டியனை கோயிலுக்கு அனுப்பிச்சே?  பீச்சு, மால்ன்னு எத்தனை இல்லை?.. அதுக்காகக் கேட்டேன்.." என்று கேட்ட பொழுது தன் புதுத்தொடரின் முதல் அத்தியாயத்தைப் பற்றியே அவர் நினைத்துக் கொண்டிருப்பது தெரிந்து பெருமையாக இருந்தது.

"கதையோட அடுத்த மூவ் கோயில் தானே சார்?.. அங்கே நடக்கறது தானே அடுத்தாப்லே சொல்ல  வேண்டிய விஷயம்?   அதுக்காக அவன் அங்கே போயாகணுமில்லியா? அதுக்காகத் தான் கோயில்" என்றான்.

"என்னவோப்பா.  இந்தக் காலத்லே இளவயசு அதுவும் கல்யாணமான ஆம்பளைகள்லாம் சாமிக்கு அர்ச்சனை செய்யணும்ன்னு மனைவியை விட்டுட்டு தனியா கோயிலுக்குப் போய் பாத்ததில்லைப்பா. அதான்..."

"ஏன் பாண்டியன் தனியாப் போனான்ங்கறதுக்குக்  காரணம் சொல்லியிருக்கேனே,  சார்."

"யாரு இல்லேனா?.. சொல்லியிருக்கே, சரி.  என்னவோ எனக்கு சமாதானம் ஆகலே.  என்னையே எடுத்துக்கோ.. என் வீட்லேலாம் இந்த பூஜை, புனஸ்காரம் எல்லாம் அவ தான்.  பூஜை அறைலேந்து மணி சப்தம் கேக்கறச்சேயே முடிஞ்சிருச்சுன்னு சிக்னல் கிடைச்சு வேகமாப் போய் ஒரு கும்பிடு போட்டுட்டு தீபாராதனை அணையறத்துக்குள்ளே கண்லே ஒத்திக்கறதோட சரி.  அப்புறம் எப்போடா தட்டை அலம்பிப் போடப்போறான்னு இருக்கும்.   அதான் எனக்குப் புதுசா இருக்கு போல இருக்கு.."

அவர் சொன்னதைக் கேட்டு சிரித்தே விட்டான் மோகன். "சார் ஒண்ணு தெரியுமா?  பாண்டியன் அதிர்ஷ்டக்கட்டை சார்.  மங்கை தான், பாண்டியன். பாண்டியன்  தான்  மங்கைன்ன்னு அம்சமா அமைஞ்ச ஜோடி சார்..  வெளிக்குத் தான் மங்கை பாண்டியனைக்  கோயிலுக்குத் தனியா அனுப்பிச்சாளே தவிர அவ மனசும் அவனோடு நிச்சயமா கைகோர்த்துப் போயிருக்கும். இவனுக்கும் மங்கை இல்லேனா அத்தனையும் அப்படியே ஸ்டாண்ட் ஸ்டிலாயிடும்.  தெரிஞ்சிக்கங்க.. வர்ற அத்தியாயங்கள்லே ரெண்டு பேரையும் படிக்கறவங்க மனசிலே படிய மாதிரி படம் பிடிச்சுக் காட்டிடலாம், சார்.." என்று சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.

"குட்.  அதான் வேணும்.  நீ சொல்றத்தையே செஞ்சிட்ட மாதிரி இருக்கு.  அப்புறம் இன்னொண்ணு.  சொந்த அனுபத்தையெல்லாம் தூர எடுத்து  ஒதுக்கி வைச்சிடாதே.  அதெல்லாத்தையும் தூசி தட்டி எடுத்து உன் கதைங்கள்லே கரைச்சிடு.  எதுக்குச் சொல்ல வர்றேன்னா, இந்த எழுதற பொழைப்பு தான் நமக்கு எல்லாத்துக்கும்  கிடைச்ச வடிகால்.  மனசிலே தேக்கி வைச்சிண்டிருக் கற அணை ஒடைஞ்சா  ஆபத்தாயிடும். தெரிஞ்சிக்கோ.." என்றார் ஜீ. அவர் சொன்ன தோரணையும் வார்த்தைகளில் கொடுத்த அழுத்தமும் உணர்ந்து  சொல்கிற மாதிரி இருந்தது.

'கோயிலுக்கு போற வழிலே கிளி ஜோசியனைப் பார்த்தது,  கூண்டுக்கிளியைப் பாத்து பரிதவித்தது, கதையில் நிகழ்ச்சியாக்குவதற்காகவே அவ்வளவு நேரம் உட்கார்ந்து உள் வாங்கிண்டது.. எல்லாம் நான் தான் சார்!' என்கிற நினைப்பு மோகன் மனசுக்குள்ளேயே புதைந்தது.

திடீரென்று ஒரு  உந்துதல்.   இந்த வேகத்திலேயே அடுத்த அத்தியாயம் எழுத வேண்டுமென்ற---- ஆசிரியர் சொல்வாராமே, அந்த தினவு----  மனசைப் பற்றியதும்,  மோகன் ரைட்டிங் பேடை எடுத்தான். அதில் பேப்பரைக் கோர்த்து,  'காளியண்ணன் கடையில் இல்லை..'  என்று அடுத்த அத்தியாயத்தின் முதல் வரியை எழுதும் போது,  "சாரி டு டிஸ்டர்ப் சார்.." என்ற குரல் அருகில் கேட்டது..

"காலம்பறயே ஜீ சொல்லிட்டார்... மத்த வேலையெல்லாம் முடிச்சிட்டு வர நாழி ஆயிடுத்து..." என்றவாறே அந்த பத்திரிகையின் ஆஸ்தான சித்திரக்காரர் ஹரி மோகன் எதிரில் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார்.

"அடடா!.. சொல்லி அனுப்பியிருந்தா நானே வந்திருப்பேனே.." என்ற மோகன் அத்தனை புகழ்பெற்ற ஓவியர் தன் இருக்கை தேடி வந்திருக்காரே என்று துணுக்குற்று சொன்னான்.

"அதான் வந்திட்டேனே.." என்றார் ஹரி. "ஐ நோ.. எழுத்துங்கறது தவம்.  நிஷ்டைலே இருந்து கற்பனையை கொழுந்து விட்டு எரியச் செய்யற யாகம்ன்னு நம்ம ஆசிரியர் சொல்வார்.." என்று அவர் சொல்கையிலேயே 'என்ன, இது? சொல்லிக் கொடுத்தாற் போல அத்தனை பேரும் ஆசிரியர் புகழ் பாடுறாங்களே, இனிமே நாமும் இப்படித் தான் இங்கே பேசக் கற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கு.." என்று நினைத்துக் கொண்டான் மோகன்.

"நான் வந்த வேலை என்னன்னா, சார்.." என்று ஆரம்பித்தார் ஹரி.  அவ்வளவு பெயரும் புகழும் பெற்ற அந்தப் பெரியவர் தன்னை சார் போட்டு அழைப்பது அநியாயமாக இருந்தது மோகனுக்கு.  "சார், நான் ரொம்ப சின்னவன். என்னை என்  பெயர் சொல்லிக் கூப்பிட்டால் தான் எனக்கு சங்கடமில்லாமல் இருக்கும்" என்றான்.

"அதெல்லாம் போகப்போக வந்திடும், மோகன்.  இப்போ எதுக்கு வந்தேன்னா.. உங்க 'இனி..' தொடர் முதல் அத்தியாயம் ஃபுரூப் படிச்சிட்டேன்.  நன்னா வந்திருக்கு.  இந்த அத்தியாயத்திற்கு எந்தக் காட்சியை ஓவியமா வரைஞ்சா சிறப்பா இருக்கும்ங்கறதை  உங்க கிட்டே கேட்டுட்டுப் போகலாம்ங்கறத்து க்காக வந்தேன்.." என்று அவர் சொன்னதும் திகைப்பாய் இருந்தது மோகனுக்கு.

அவன் முக ஆச்சரியத்தைப் பார்த்து விட்டு ஹரி சொன்னார். "மோகன்! ஆசிரியர் இந்த விஷயத்திலே கண்டிப்பா சொல்லியிருக்கார்.  எழுதறவங்களு க்குத் தான் அவங்களோட கேரக்டர் அருமை தெரியும்.  அதனாலே அவங்க சாய்ஸ் என்னவோ அதை அவங்க விரும்பற மாதிரி போட்டுக் குடுங்கோ'ன்னு.  ரொம்ப காலமா இந்த பத்திரிகைலே அதான் வழக்கமா நடந்திண்டு வந்திருக்கு.  சில பிரபல எழுத்தாளர்கள் அவங்க அனுப்பற மேட்டரோடையே சித்திரத்திற்கான காட்சியையும் சொல்லிடுவாங்க.  சில பேர் கிட்டே கேட்டுப் போடறதும் உண்டு. இதான் விஷயம்.  நீங்க நம்ம பத்திரிகையோட உதவி ஆசிரியர்.  உங்ககிட்டே கேக்காம நானே என் இஷ்டத்துக்கு ஒரு படத்தைப் போடக் கூடாது. கேட்டுத்தான் செய்யணும்.  அப்படி செய்யலேன்னு தெரிஞ்சா ஆசிரியர் வருத்தப்படுவார்.  அதுக்காகத் தான் வந்தேன்.." என்றார்.

இந்த பத்திரிகை ஆசிரியர் எப்படியெல்லாம் யோசித்து செயல்படுகிறார் என்பதை நினைத்துப் பார்க்க மோகனுக்கு ஆச்சரியமாக இருந்தது.  இங்கு வேலை செய்வோர் அத்தனை பேரும் அவர் புகழ்பாடுவதின் அர்த்தமும் விளங்கியது.

"நீங்க பத்திரிகை அனுபவம் வாய்ந்தவங்க.. இந்தப் பத்திரிகையோட வாசகர்கள் எதை விரும்புவாங்கங்கறது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.  அதனாலே இனி.. தொடரோட முதல் அத்தியாய எந்த காட்சிக்கு ஓவியம் வரைந்தால் நன்றாகவும் இருக்கும், வாசகர்களுக்கும் பிடிக்கும்ன்னு நீங்க நினைக்கிறீங்க?" என்று அவரிடமே புன்முறுவலுடன் கேட்டான் மோகன்.

"அப்படி நான் நினைக்கிற காட்சி எது தெரியுமா, மோகன்?" என்று லேசாக சிரித்தபடி அவனைப் பார்த்தார் ஹரி.  "அந்தப் பாண்டியன் குனிஞ்சு கூண்டுக் கிளிக்கு 'பை..' சொல்றானே, அந்தக் காட்சி தான்.. அந்தக் காட்சியை குளோசப்பில் காட்டி பின்புலமாய் கோயில் கோபுரத்தையும் அந்த இடத்து ஜனநெரிசலையும் வரைஞ்சா அற்புதமாக இருக்கும்.." என்றார்.

"ஓ.." என்று குஷியில் திளைத்தான் மோகன்."நான் என்ன நெனைச்சேனோ அதை அப்படியே நீங்க சொல்லியிருக்கீங்க, ஹரி சார்... நம்ம ரசனை எவ்வளவு ஒற்றுமையாக இருக்கு!"

"அதான் வாசக ரசனை.. அந்த ரசனை நம்ம ரசனையோட ஒத்துப்போறது. இல்லை, அந்த ரசனைக்கேத்தவாறு நம் ரசனை மாறிப்போயிருக்கு.  இந்த ரெண்டுக்குள்ளே ஒண்ணு.   ஓ.கே. அந்தக் காட்சியையே ஃபைனலைஸ் பண்ணிடலாம். நான் வரைஞ்ச பிறகு உங்களுக்குக் காட்டறேன்.." என்றார் ஹரி.

"உங்களுக்கு இல்லை.. உனக்கு.." என்று திருத்தினான் மோகன்.

"ஓ.. சட்டுனு வரலே.. இன்னும் ரெண்டு மூணு நாள் ஆனா பழகத்துக்கு வந்திடும்.." என்று புன்முறுவலுடன்  எழுந்தார் ஹரி.

மோகன்  மனசிற்கு நடப்பவை எல்லாம் இதமாக இருந்தது. பொதுவாக மனிதர்கள் எல்லோரும் எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான்.  இந்த பத்திரிகை சூழ்நிலை அவனது அவல வாழ்க்கைக்கு ரொம்பவே பிடித்துப் போயிற்று.

இந்த மனநிலையிலேயே அடுத்த அத்தியாயத்தை எழுதி விடலாமே என்கிற உத்வேகத்தில் ரைட்டிங் பேடை எடுத்தான் மோகன்.

எழுதி வைத்திருந்த முதல் வரிக்கு அடுத்து "காளியண்ணன், இல்லியா?" என்று எழுத ஆரம்பித்து நிஷ்டையில் ஆழ்ந்தான்.(இனி..  வரும்)14 comments:

Geetha Sambasivam said...

தேவனின் மிஸ்டர் வேதாந்தத்தை நினைவூட்டும் காரக்டர், இந்த மோகன் என்று தோன்றியது. இனி வரப் போவது மோகனின் கதையா? அல்லது மோகன் எழுதப் போகும்/ எழுதிக் கொண்டிருக்கும் தொடரில் வரும் பாண்டியன் கதையானு அறிய ஆவலுடன் காத்திருக்கேன்.

ஸ்ரீராம். said...

சென்ற அத்தியாயத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இந்த அத்தியாயம். ஒரு கற்பனை. ஒவ்வொரு அத்தியாயமும் அதற்கு முந்தய அத்தியாயத்தின் கன்னியைத் தொட்டு, ஆனால் முற்றிலும் புதிய பாதையில் பயணித்தால் அந்தக் கன்னியை எங்கு சேர்க்க முடியும்?! :))))

ஸ்ரீராம். said...

சென்ற பின்னூட்டத்தில் 'கண்ணி' 'கன்னி'யாகி விட்டது! மன்னிக்கவும். கீதா மேடத்துக்குக் காட்டாதீர்கள்!!!

//எழுதறவங்களு க்குத் தான் அவங்களோட கேரக்டர் அருமை தெரியும். ...//

நான் கூட சில படைப்புகளுக்கான ஓவியங்களைப் பார்க்கும்போது நினைத்துக் கொள்வேன். மிகப் பொருத்தமான ஓவியங்களைப் பார்க்கும்போது எழுத்தாளரின் ஆலோசனை கட்டாயம் இருக்கும் என்று தோன்றும். சிறுகதைகளுக்குக் கூடச் சொல்கிறேன்! பெரும்பாலும் சிறுகதைகளுக்கு இந்தப் பாக்கியம் கிடைப்பதில்லை! மீறி ஓவியம் பொருத்தமாக அமைந்து விட்டால் அதிருஷ்டம்தான்!

ஸ்ரீராம். said...

//சில பிரபல எழுத்தாளர்கள் அவங்க அனுப்பற மேட்டரோடையே சித்திரத்திற்கான காட்சியையும் சொல்லிடுவாங்க//

ஓஹோ....

G.M Balasubramaniam said...

பத்திரிக்கை கதாசிரியர் என்றே உங்கள் கதையின் பின் புலம் அமைகிறதே. ஏதாவது தனிப்பட்ட காரணங்கள் உண்டா.?உணர்வுகளால் உந்தப்பட்டு எழுதும் தெனாவட்டுத்தனம்..... எனக்குப் பிடிச்சிருக்கு. ஆரம்பகட்ட எழுத்தாளர்களிடம் தொடராக எழுத அனுமதிக்கும்போது , முழுத் தொடரையும் கேட்பதில்லையா.? தொடர்கிறேன்.

ஜீவி said...

@ Geetha Sambasivam

//தேவனின் மிஸ்டர் வேதாந்தத்தை நினைவூட்டும் காரக்டர், இந்த மோகன் என்று தோன்றியது. //

காணும் இடமெலாம் கண்ண பெருமானே!...

// இனி வரப்போவது... //

இரண்டு அத்தியாயத்திற்குள் இவ்வளவு யோசனையா?.. எழுதுவதில் சோதனை முயற்சியாக இந்தக் கதை அமைவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். கதையை விட்டு கதை சொல்வதில் கவனம் கொள்ள வேண்டுகிறேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//அந்தக் கண்ணியை எங்கு சேர்க்க முடியும்?! :)))) //

அப்படி இல்லை. புது மாதிரியாக எழுதலாம் என்றிருக்கிறேன். கண்ணிகளை சேர்ப்பதெதற்கு?.. அவைகளாகவே தாமாகச் சேர்ந்து கொள்ளும்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

ஆஹா! பத்திரிகைகளைத் தான் எவ்வளவு ஈடுபாட்டோடு வாசித்திருக்கிறீர்கள்?..

நிஜத்தில் நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை. கதையிலாவது இப்படி எல்லாம் இருந்தால் எப்படி இருக்கும் என்று நாம் கனவு காணலாம்! சாரி! அடுத்த 'ஓஹோ'வுக்கானதும் கற்பனையே.

ஜீவி said...

@ GMB

உண்டு ஜிஎம்பீ சார். இந்தத் துறையில் சுய அனுபவம் நிறைய உண்டு. அதை மீறிய இழப்பும் உண்டு. கற்றதையும் பெற்றதையும் நினைத்து நிறைய நிறைவும் உண்டு.

அந்த தெனாவட்டுத்தனம் மாமலையும் ஓர் கடுகாம் என்கிற நிலை! அந்த இடத்திற்கு வந்து விழுந்த சரியான வார்த்தை! உணர்ந்து ரசித்திருக்கிறீர் கள். நன்றி.

மோகன் சிறுபத்திரிகை எழுத்துலகிலிருந்து கண்டெடுக்கப் பட்டவன். பெரும் பத்திரிகை பயிற்சி களத்தில். ஆரம்ப அஸைன்மெண்ட் இது. நாலு அல்லது ஆறு வாரத்திற்கு வருகிற தொடர். அது எப்படித் தொடர்கிறது என்பது தான் கதையே.

கோமதி அரசு said...

கதையின் ஆரம்பம் ஆசிரியருக்கு ரொம்பவும் பிடித்து போய் விட்டது.//
எனக்கும் கதையின் ஆரம்பம் மிகவும் பிடித்து போனது.

அடுத்து அதே தொடரும் என்று பார்த்தால் பத்திரிக்கைக்கு எழுதும் தொடர் கதை என தெரிந்தது.

பத்திரிக்கைகள் செயல் படும் விதம் ஒவ்வொருவர் உடைய பொறுப்பு எல்லாம் அழகாய் விளக்கி சொல்கிறீர்கள்.
நல்லவர்களுக்கு எல்லோரும் நல்லவர்களாய் தான் தெரியும். மோகன் இந்த கதையில் மிக நல்லவர் போலும்.


//பெண்டாட்டி பேரைப் போட்டு இன்னாரோட மணாளன்னு தன்னை அடையாளப்படுத்திண்டாங்க.//

ஆம், முன்பு தாமரை மணாளன் என்று எழுத்தாளர் எழுதுவார்.

கதையில் வரும் படத்திற்கு போன இதழில் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் ரசித்த காட்சியை ஓவியர் நினைத்தது பொறுத்தமே.

மோகன் அடுத்து இனி என்ன என்று நினைக்க வைத்து விட்டார்.

ஜீவி said...

@ கோமதி அரசு

கதையின் ஆரம்பம் உங்களுக்கும் பிடித்துப் போனதில் மகிழ்ச்சி. இனி.. தொடர்ந்து வந்து ரசிப்பீர்கள்.

மோகன் மட்டுமென்ன?.. வழக்கம் போல எல்லோரும் நல்லவரே. சூழ்நிலைகள் தாம் அவர்களைப் பாடாய்ப் படுத்துகிறது.

இராதாமணாளன் என்றும் ஒருவர் இருந்தார். பெண் பெயரை முன்னாலும் தன் பெயரைப் பின்னாலும் போட்டு எழுதியவர்களைத் தான் ஆண் எழுத்தாளரா, பெண் எழுத்தாளரா என்று கண்டுபிடிப்பதில் அவர்கள் புகைப்படங்கள் பிரசுரிக்காத வரை சந்தேகம் இருக்கும்.

(உ.ம்) இந்திரா பார்த்தசாரதி - ஆண் எழுத்தாளர்.

லட்சுமி சுப்ரமணியம், உஷா சுப்ரமணியம் - பெண் எழுத்தாளர்கள்.

அடுத்த பகுதி பிரசுரமாகிவிட்டது. உங்களுக்குப் பிடிக்கும். எந்த காட்சிக்கு ஓவியம் வரைந்தால் சிறப்பாக இருக்கும் என்று யோசித்து வைத்திருங்கள்.

ரசித்துச் சொன்னவைகளுக்கு நன்றி, கோமதிம்மா.

ஜீவி said...
This comment has been removed by the author.
ஸ்ரீராம். said...

முன்னரே பின்னூட்டமிட்டிருந்தாலும் மறுபடி இப்போது இது :

ஆசிரியர் சாவியின் பிம்பமோ!

மனம் ஒன்றி உணர்வுகள் ஒன்றி எழுத வேண்டுமென்றால் வேறு வேலைகள்/ வேறு பிரச்னைகள் இருக்கக் கூடாது! இது ஒன்றையே தொழிலாகக் கொள்ள வேண்டும்! இல்லையா?

எழுதறவங்களைக் கேட்டு ஓவியம் வரைவது கட்டாயமாக எப்போதும் கடைப்பிடிக்கப் பட்டதா? படுகிறதா? தெரியவில்லை. சமயங்களில் பத்திரிகைகளில் சம்பந்தமில்லாத படங்கள் பார்த்திருக்கிறேன்!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

மறுவாசிப்புக்கு உட்படும் பொழுது அந்தந்த வாசிப்பில் புதுசாக ஏதாவது தோணும் தான்.

இரண்டெழுத்துக்காரர் இல்லை; எடிட்டர் என்றாலே எனக்கு மூன்றெழுத்துக்காரர் தான்!

எல்லா ஒன்றுதல்களுக்கும் தேவையானதைத் தானே சொல்லியிருக்கிறீர்கள்?.. பிரச்னைகள் இல்லாவதர்கள் யார்?
சொல்லப்போனால் எழுத்தாளர்களுக்கு எதிர்கொள்ளும் அவற்றின் பின்னல்கள் தாம் கதைகள். வாசிப்போருக்கு சுவாரஸ்ய மனக்குளியல்.

எல்லாம் எழுத்து செய்யும் சித்து வேலை. ஒருவரின் பிரச்னை இன்னொருவருக்கு சுவாரஸ்யமாகலாம்! சிரிக்கச் சிரிக்க விவரிக்கையில் நகைச்சுவையுமாகலாம்.

ஓவிய சமாசாரங்கள் மொத்தமும் கற்பனையே. பத்திரிகை உதவி ஆசிரியர்களே பக்கங்களை நிரப்பும் பொழுது இதெல்லாம் ஓரளவு சாத்தியப்படலாம். அவ்வளவே.

தங்கள் மீள்வருகைக்கு நன்றி, ஸ்ரீராம்!

Related Posts with Thumbnails