Friday, December 5, 2014

இனி (பகுதி-3)

                                 அத்தியாயம்--  3

காளியண்ணன் கடையில் இல்லை.

"காளியண்ணன் இல்லை?.." என்று கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தவரை வினவினான் பாண்டியன்.

அவர் பதிலே சொல்லவில்லை.   கேட்டவர்க்கு கேட்டதை உடனே கொடுக்கும் கிருஷ்ணனாக இருந்தார்.  கேட்கும் பொருளைக் கொடுத்து அதற்கான காசை வாங்கிக் கல்லாப் பெட்டியில் போடுவதும், 'அப்புறம்?' என்று புருவ உயர்த்தலுமாய் இருந்தார்.  இந்த சமயத்தில் காசு வாங்கிப் போடும் ஒரு இயந்திரத்தைக் கற்பனை செய்து அவரது தலையை மட்டும் அதற்குப் பொருத்திப்  பார்த்ததில் பாண்டியனுக்கு சிரிப்பு உதடுகள் வரை வந்து விட்டது. கஷ்டப்பட்டு ஓசையின்றி உள்ளுக்குள்ளேயே அடக்கிக் கொண்டான்.

கடைக்கு வந்தவர்கள் போனதும் தான் இன்னும் ஒரு ஆள் நிற்கிறானே என்பது அவர் உணர்வில் தைத்திருக்க வேண்டும்.  அவன் பக்கம் திரும்பி, "என்ன வேணும்?" என்றார்.

"காளியண்ணன் இல்லை?"

"தம்பியைக்  கேக்குறீங்களா?" என்று அவர் கேட்ட தருணத்தில் இவர் காளியண்ணனின்  அண்ணனாக இருக்கலாம் என்று  நினைத்துக் கொ ண்டான் பாண்டியன்.  இல்லாமலும் இருக்கலாம் என்று நினைப்பு  ஓடிய போது, "தம்பிக்கென்ன?.. அவுரு ராசா வீட்டுக் கன்னுக்குட்டி.  கடைக்கு எப்ப வேணா வருவாரு எப்ப வேணாப் போவாரு.  இப்போ ஜாமான் வாங்க மார்க்கெட்டுக்குப் போயிருக்கான்.   உங்களுக்கு என்ன வேணும்?"

"அர்ச்சனைத் தட்டு ஒண்ணு கொடுங்க.."

"தட்டு கொடுத்தா திரும்பி வர்றதில்லே.  அதனாலே இப்போலாம் பைதான். இந்தாங்க--" என்று பிளாஸ்டிக் பையில் ரெடியாகப் போட்டு வைத்திருந்ததை பாண்டியனிடம் நீட்டியபடியே, "இதை அப்பவே கேட்டிருக்கலாமிலே;  கேட்டிருந்தா இந்நேரம் வேலை முடிஞ்சி சன்னதி வரைக்கும் போயிருக்கலா மிலே?.. செவ ராத்ரிலே?.. ஜனம் சாய ஆரம்பிச்சாச்சு.. சரி, சரி, அம்பது ரூபா கொடுங்க.."

காசைக் கொடுத்து விட்டு, "இல்லே.  காளியண்ணனைத் தெரியும்.  எங்கூட ஒண்ணாப் படிச்சவன்.  அதான்." என்றான்.

 "அதுசரி. அவரு கடைலே இல்லேன்னு தெரியுதிலே?  பின்னே இல்லியான்னு கேட்டீங்கனா, நா என்ன சொல்றது?..  வியாபார ஜரூர் இல்லியா?.. பேசிக்கிட்டு இருக்க முடியுங்களா?.. சொல்லுங்க.."

இதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியாம "இந்தப்பக்கம் செருப்பை விட்டுட்டு போகலாமுங்களா?" என்று கடையைச் சுற்றி மணல் பரப்பி அடைத்திருந்த தட்டிப் பக்கம் கைகாட்டிக் கேட்டான் பாண்டியன்.

"அல்லாரும் அதைத் தான் செய்யிறாங்க.. அதுங்களும் ஏதோ அத்துக்குக் கட்டுப்பட்டுக் கெடக்குதுங்க.. பொருந்தற எவனாவது போட்டுக்கிட்டுப் போனா அப்படிப் போறவன் காலைக் கடிச்சு உனக்கு சேரமாட்டேனா சொல்லப் போகுது.. இந்த வியாபார மும்முரத்லே இதையெல்லாம் கவனிச்சிகிட்டு தான் இருக்க முடியுமா?.. சொல்லுங்க.." என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே கடைக்கு வந்த இரண்டு பெண்கள் பக்கம் அவர் கவனம் பாய்ந்து. "என்ன வேணும்மா.."

இவ்வளவு விட்டேர்த்தியாகச் சொல்கிறாரே, செருப்பை விட்டு விட்டுப் போகலாமா, வேண்டாமா?' என்று பாண்டியனுக்குத் தோன்றியது.

அந்தக் கோயிலில் செருப்புகளைப் பாதுகாத்து வைத்து திருப்பித் தர தனி வசதியில்லை.  இங்கே விடவில்லை என்றால் வானம் பார்த்தபடி பாதரட்சைகளை கோயில் கோபுர பக்க சுவர் பக்கம் விட வேண்டும்.  போன வாரம் வாங்கின புதுசு;  399.90.  இது பளபளத்து போற வர்றவன் கண்ணை எடுத்துக்கோ, போட்டுக்கோன்னு உறுத்தறதை விட இங்கே விடுவது எவ்வளவோ மேல் என்று பனைஓலை தட்டிக்குப்  பக்கத்தில் சட்டுனு யார் கண்ணுக்கும் படாத மாதிரி மறைத்துப் போட்டு விட்டுத் திரும்பினான்.

வெளியே வந்து நிமிர்ந்த பொழுது தான் தெரிந்தது.

கோயில் கோபுரத்தின் உச்சி விளக்கும்  போட்டு விட்டார்கள்.

சாரிசாரியாக கோயிலை நோக்கிப் போகும் கூட்டத்தோடு பாண்டியனும்
கலந்தான். கோபுரம் தாண்டி போன போது தான் தெரிந்தது.  காளியண்ணனின்  அண்ணன்  சொன்னது சரிதான். செவராத்ரிலே? ஜனம் சாய ஆரம்பிச்சாச்சு..

அர்ச்சனை சீட்டு வாங்க வேண்டுமென நினைப்பு வந்தது. சீட்டு கொடுக்கும் கவுன்ட்டர் முன்னாடி க்யூ.  அதில் தன்னையும்  ஒருவனாக இணைத்துக் கொண்டான் பாண்டியன்.  தட்டுக்கு பதில் ப்ளாஸ்டிக் பை என்பது லகுவாகத் தான் இருந்தது.  இதுன்னா கைவிரல்கள்லேயே கோர்த்துக்கலாம்.  நசுங்கி விடாதபடிக்கு மாரோடு அணைத்துச் செல்ல வேண்டும் என்கிற அவசியமில்லை.

இவன் முறை வந்ததும் பத்து ரூபா நோட்டை நீட்டினான்.

பிறைச் சந்திர மர வளைவுக்குப் பின்னாலிருந்து குரல் வந்தது. "சில்லறையா கொடுப்பா.."

"சில்லறை?" என்று அவன் தடுமாறிய பொழுது அடுத்து நின்றிருந்தவர் உதவிக்கு வந்தார்.  "அதை இங்கேக் கொடுங்க.." என்று ரூபாய் நோட்டை வாங்கி சில்லறை கொடுத்தார்.

வளைவுக்குள் பார்த்து "சீட்டு எவ்வளவுங்க?.." என்றான் பாண்டியன்.

"வெளிலே போர்டுலே போட்டிருக்கிலே?  பாக்கலையா?.. படிச்சவன் படிக்காதவன் அல்லாம் ஒண்ணாத் தான் இருக்கு..  சட்டுபுட்டுனு கொடுப்பா.."

பின்னால் நின்றிருந்தவர் இப்பொழுதும் உதவிக்கு வந்து "மூணு ரூபா.." என்றதும் மூன்று ரூபா காசை வளைவுக்குள் வைத்து விட்டு அவரை நன்றியுடன் பார்த்தான்.

"இந்தாப்பா.." கவுன்ட்டர் பலகையின் மீது வீசப்பட்ட சீட்டை எடுத்துக் கொண்டு வெளியே வந்த பொழுது 'அப்பாடா' என்றிருந்தது.

இந்த மாதிரி கோயில் விசேஷ நாட்களில் மங்கையுடன் எத்தனையோ தடவை எத்தனையோ கோயில்களுக்குப் போயிருக்கிறான்.  அதனால் கூட்டம் புதுசில்லை.  ஆனால் இப்போ தனியாக வந்திருப்பதில் ஒரு வித்தியாசம் அவனுக்கே தெரிந்தது..

மங்கையுடன் வரும் பொழுதெல்லாம், அவளுக்கு ஒரு ஆண்துணையாக வருகிற மாதிரியான உணர்வு மட்டுமே அவனுக்கு இருக்கும்.  அர்ச்சனை பொருட்கள் வாங்குவதில் ஆரம்பித்து, தரிசனம் முடிந்து வெளியே வருகிற வரை எல்லா பொறுப்பும் அவளுடையதாக இருக்கும்.  அதனால் தான் தனியாக வருகையில் சில தடுமாற்றங்கள் என்று நினைத்துக் கொண்டான்.

அடுத்து அர்ச்சனை தான்.  திடீரென்று ஒரு சந்தேகம்.  யார் பெயருக்கு அர்ச்சனை என்று மங்கையிடம் கேட்டுக் கொள்ளாமல் வந்து விட்டோமே என்று தோன்றியது.  "சிவராத்ரி அன்னிக்குத் தான்  நீ  பொறந்தே, தெரிஞ்சிக்கோ.." என்று ஒரு சிவராத்திரி அன்று அம்மா அவனிடம் சொன்னதும் சமயத்தில் நினைவுக்கு வந்து... 'ஓ.. மங்கை சரியான ஆள் தான்! அவளுக்குத் தான் எவ்வளவு ஞாபகசக்தி?' என்று நினைத்துக் கொண்டான்.

'இருந்தாலும் மங்கையிடம்  கேட்டு விட வேண்டும்.  அவள் சொல்லி எதையும் செய்தால் தான் சரியாக இருக்கும்' என்கிற தீர்மானத்தில் மொபைலை எடுத்தான்.   இந்த இரைச்சலில் ஒன்றும் கேட்காது என்கிற ஞானோதயத்தில் பிராகாரத்தின் உள்பக்கம் சென்று மங்கையை அழைத்தான்.

"என்னங்க.. எவ்வளவு நேரம்? ரொம்ப  கூட்டமா?.. அர்ச்சனைலாம் முடிஞ்சாச்சா?"

"அதுக்குத் தான்  கூப்பிட்டேன், மங்கை.. அர்ச்சனை யார் பேருக்கு?"

"சுவாமி பேருக்கே பண்ணிடுங்க.. அத்தை சொல்லியிருக்காங்க, நீங்க சிவராத்திரிலே தான்  பிறந்தீங்கனுட்டு.  இருந்தாலும் சுவாமி பேருக்கே பண்ணிடுங்க.. உங்க பொறந்த நாளில் அவரைக் கும்பிட்டுப்போம். சரியா?"

"சரி. மங்கை. இனிமே தான் கோயிலுக்கு உள்ளாறையே போகணும்.."

"கூட்டங்களா..?"

"ஆமா.. எல்லாம் முடிச்சிட்டு வந்திடறேன்.  சரியா?"

"சரிங்க.. சாமி  கிட்டே ஆரோக்கியமா இருக்கணும்ன்னு வேண்டிகிட்டு வாங்க...  ஏதோ ஒண்ணு மாத்தி ஒண்ணு படுத்திகிட்டே இருக்கு.."

"சரி,. மங்கை.."

சுவாமி சன்னதிக்கு முன்னால் கயிறு  கட்டி ஆண்--பெண் வரிசைகளாய்ப் பிரித்திருந்தார்கள்.  இவன் வரிசையில் சேர்ந்து  கொண்ட பொழுதே உத்தேசமாக இவனுக்கு முன்னால் நாற்பது  பேர்கள் இருப்பார்கள் என்று தெரிந்தது.  ஆனால் திருப்பதி மாதிரி ஜரூராக கூட்டம் வணங்கி சேவித்து வெளியேறிக் கொண்டிருந்தது.  கிட்டத்தட்ட சந்நிதிக்கு பக்கத்தில் பாண்டியன் நெருங்கியதும், "அர்ச்சனையா?.. இங்கிட்டு வாங்க.." என்று அங்கு  கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக நின்றிருந்த ஒருவர் இவனைச் சட்டென்று வலது  பக்கம் இழுத்தார். "அர்ச்சனைக்காரங்க அல்லாரும் சீட்டை மேலே எடுத்து வைச்சிக்கங்க.. அப்புறம் அதை வேறு தேட முடியாது..? என்று நடைமுறை உத்திரவை உரத்த குரலில் அவரே பிறப்பித்தார்.

ஐந்து அல்லது ஆறு அர்ச்சனைகள் இருக்கும்.  வலது பக்கம் அர்ச்சனைக்காரர் கள் மட்டும் தனியே ஒதுக்கப் பட்டிருந்தனர். குருக்கள் வந்து ஒவ்வொருவரி டமும் அர்ச்சனை தட்டையோ பையையோ வாங்கிக்  கொண்டு வரிசையாக சங்கல்பம் செய்வித்தார். இவன் முறை வந்த பொழுது, 'சுவாமி பெயருக்கு அர்ச்சனை' என்றான்.  அவனை ஆழ்ந்து  பார்த்து விட்டு அவனிடமிருந்த அர்ச்சனைப் பையை வாங்கி தனியாக விரலில் கோர்த்துக் கொண்டார்.  "அர்ச்சனை அவ்வளவு தானே?".. என்று நிச்சயப்படுத்திக் கொண்டு படியேறி கர்ப்பகிரஹம் பக்கம் நகர்ந்தார் அவர்.

முதலில் இவன் பச்சை பிளாஸ்டிக் பை இறைவன் சந்நிதியில் வைக்கப் பட்டது.  பின்னால் வரிசையாக மற்றவர்கள் தந்தது.  கைகூப்பி நின்றான். மங்கை சொன்னதை அவளுக்கும் சேர்த்து வேண்டிக்  கொண்டான்.

அர்ச்சனை முடிந்து வெளியே வந்த பொழுது மனம் நிம்மதியாக இருந்தது.  சுவாமி தரிசனம் முடிந்து அம்பாள் சந்நிதிக்கு வந்த பொழுது திவ்யமான தரிசனம் கிடைத்தது.  பிராகாரத்தைச் சுற்றி வரலாமென்று பாண்டியன் மறுபடியும் சுவாமி சந்நிதி பக்கம் வந்து இடப்பக்கம் திரும்பிய பொழுது திகைத்து  நின்று விட்டான்! அம்மாடி! கண்கொள்ளாக் காட்சி.   எத்தனை அகல்கள்!  காற்றில் அலைக்கழிக்கப்பட்டு அசங்கி அசங்கி தீபச்சுடரின் நர்த்தனம்!  சாரிசாரியாக பெண்கள் அகல் ஏற்றி மேடையில் வைத்துக் கொண்டிருந்தனர்.  ஒரு இண்டு இடுக்கு பாக்கியில்லை..  அகல் ஏற்றுவதற்காகவே அமைக்கப்பட்ட தகர பெரிய பெரிய மேசைகள் நிரம்பி பிராகார சுற்றுப்பாதையில் தீப  அலங்காரம்  தொடங்கி  விட்டது.

இங்கிருந்து பாண்டியன்  பார்க்கையில் அந்த லாவண்ய அழகில் ஒரு கணம் பிரமித்து  நின்றான்.  அகல் மேடைக்கு எதிர்ப்புறம் வரிசையாக நின்ற கோலத்தில் சிலைகள்.  அகல் ஒளிபட்டு அவைகள் மினுமினுத்தன. அறுபத்து மூவர்களின் வரிசை தீப ஒளிபட்டு ஜொலித்தது. நிஜ மனிதர்கள் வரிசையாக  நின்று கொண்டிருப்பதை போன்ற தோற்ற மயக்கத்தில் பாண்டியன் மயங்கினான்.  எவ்வளவு அழகான  காட்சி!
.
பாண்டியனின்  கண்கள் நிழலும் வெளிச்சமும் மாறி மாறிப் படியும் அந்த சிலைகளைப் பார்த்துக் கொண்டே இருக்கையில் பிந்தைய மாலையில் கிளிஜோசியன் படித்த தெய்வாம்சமும் ஜோதிடபலனும் கலந்த சீட்டு பாடல்களின் சில வரிகள் நினைவுக்கு வந்தன.  கிளிஜோசியன்  கையில் வைத்திருந்த சீட்டில் பார்த்த தெய்வ ஓவியங்கள் நினைவில் மயங்கி   சிலைகளாய் நீண்டது.  நிழல்-ஒளி காட்சி போலவான சூழலும், தெய்வ சந்நிதானமும்,  குறுக்கும் நெடுக்கும், நெடுக்கும் குறுக்குமாக மடங்கி நீண்டிருந்த நேர்த்தியான அகல் விளக்கு தீபஒளி வசீகரமும் அவன் சிந்தையில்  படிந்து விவரிக்க இயலாத  புல்லரிப்பை மனசில் தோற்றுவித்தது.

இந்த சமயத்தில்  பாண்டியனின் நினைப்பில்  திடீரென்று ஒரு எண்ணம்  வெட்டி விட்டுப்  போனது.  அறுபத்து  மூவரில் யாராவது ஒருவர் சிலையின் முன் கண்மூடிப் போய் நின்று அவர் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று.

அந்த எண்ணம் தோன்றியதும் செயல்படுத்திப் பார்க்க வேண்டுமென்று ஆவல் பற்றிக் கொண்டது.

பாண்டியன் அறுபத்து மூவர்  வரிசை நோக்கி நகர்ந்தான்.


(இனி..  வரும்)குறிப்பு:  படம் உதவிய நண்பருக்கு நன்றி.9 comments:

Geetha Sambasivam said...

வித்தியாசமான கதைப்போக்கு. தொடரப் போவது யார்?? ஒரு பட்டிமன்றம் வைக்கலாம்.:))))

G.M Balasubramaniam said...

கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்யப் போகும் போது நிகழும் நுணுக்கமான விவரங்களை அடக்கிச் செல்கிறது. எனக்கு இம்மாதிரி கோயில் தரிசனங்களின் போது சிலைகள் செய்த சிற்பிகள் யார் , என்ன மன நிலையில் அவை வடிக்கப் பட்டன என்று எண்ணங்கள் தோன்றுவதுண்டு.செருப்பை வெளியில் போட்டுவிட்டு மனதில் ஒரு ஓரத்தில் செருப்பு பற்றிய நினைவாகவே இருந்து சாமி கும்பிட மறக்கும் தருணங்களும் உண்டு.

ஸ்ரீராம். said...

கோவிலில் நிற்பது போல உணர்ந்தேன். நுணுக்கமான வர்ணனை.

ஸ்ரீராம். said...

அப்போ அடுத்த மறுபடி எழுதுபவர் கதை தொடருமோ... அல்லது மங்கை பார்வையில்....!

ஜீவி said...

@ Geetha Sambasivam

// தொடரப்போவது யார்? //

:))!

பாண்டியன் கதையை பாண்டியன் எழுதுவதாகவும், பாண்டியனின் கதையை நான் எழுதுவதாகவும் நினைத்தீர்களா?

தொடர்ந்து வாருங்கள்,கீதாம்மா.. ஒரு சர்ப்ரைஸ்!..

ஜீவி said...

@ G.M. Balasubramaniam

நுணுக்கமான விவரங்களுக்குள் பதிந்திருக்கும் நுணுக்கமான உணர்வுகளை தப்பவிட்டு விட்டீர்கள், போலிருக்கு, ஜிஎம்ஜீ சார்!
அதை உணர்ந்தால், அது பற்றி நீங்கள் ஒரு கட்டுரையே எழுதிவிடுவீர்கள்!

பகிர்தலுக்கு நன்றி, ஜீஎம்பீ சார்!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

கோவிலுக்குள் நிற்பது போல உணர்ந்ததினால், அந்த உணர்வுகளுக்கும் ஆட்பட்டிருப்பீர்கள் என்று தெரிந்து கொண்டேன்.

அப்போ அடுத்த அத்தியாயத்தில்?..
கதை எழுதுபவர் கதை தொடர்ந்தால்,
'இதற்கு அடுத்தது அது' என்கிற மாதிரி கதையும் ஒரு தோற்றம் கொண்டு விடுமல்லவா?.. அதனால் ஏதாவது மாற்றம் செய்யலாம்.

நன்றி, ஸ்ரீராம்!

கோமதி அரசு said...

சொன்னது அத்தனையுமே அந்தந்த தெய்வங்களின் குணாம்சங்களைக் குறிக்கிற மாதிரியும் ஜோசிய பலன் போலவும் இருந்தது தான் விசேஷம்.//

இப்படி முதல் அத்தியாத்தில் குறிப்பிட்டு இருந்தீர்கள்.

இந்த சமயத்தில் பாண்டியனின் நினைப்பில் திடீரென்று ஒரு எண்ணம் வெட்டி விட்டுப் போனது. அறுபத்து மூவரில் யாராவது ஒருவர் சிலையின் முன் கண்மூடிப் போய் நின்று அவர் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று.//

மூன்றாவது அத்தியாத்தில் தீபசுடரில் மின்னும் 63 நாயன்மார்கள் யார் முன்னாவது போய் நின்று அவரைப் பற்றி நினைத்து பார்க்க வேண்டும் என்று பாண்டியன் நினைப்பதும்

அப்போது அவர் என்ன மனநிலையில் இருக்கிறாரோ அதற்கு ஏற்ப அமையும் என்று நினைக்கிறேன்.
எந்த நாயனார் முன் நிற்க போகிறார்
பாண்டியன் ?அந்த நாயனார் குணாம்சங்கள் பாண்டியனுக்கு பொறுந்துமோ!

ஜீவி said...

@ கோமதி அரசு

வாங்க, கோமதிம்மா.

ஒன்றுக்கொன்று பொருத்திப் பார்த்து சரியாகவே யூகித்திருக்கிறீர்கள். நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் பாண்டியனை இந்த ஆட்டத்தில் சேர்க்காமல் பாண்டியனை வைத்து ஏதாவது டெவலப் பண்ண முடியாமான்னு பார்ப்பதாக மோகன் சொன்னார்.

என்ன செய்யறார்ன்னு பார்ப்போம்.

யோசித்து உங்கள் நினைப்பைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிம்மா.

Related Posts with Thumbnails