Monday, December 22, 2014

இனி (பகுதி-6)

ன்று கோயில் ஜனசந்தடியே அற்று 'ஹோ'வென்றிருந்தது.  காலை தாண்டிய முன் பகல் நேரம் என்பதினால் கூட்டமில்லையோ என்று நினைத்துக் கொண்டான் பாண்டியன்.

சுவாமி  சன்னதிக்குள் நுழைந்தவனைப் பார்த்து சன்னதி கீழ்ப்படியில் ஒருக்களித்தவாறு அமர்ந்திருந்த குருக்கள் எழுந்து வந்தார்.  அவன் கையில் ஒன்றும் இல்லை என்பதினால், அர்ச்சனைக்காரர் இல்லை என்று  நிச்சயித்துக் கொண்டவர் போலத் திரும்பினார்.  குறுகலான படிகள் ஏறி சுவாமி
கருவறைக்குள் சென்றவர் தட்டெடுத்து கற்பூரம் ஏற்றி சுவாமிக்குக் காட்டினார். இங்கிருந்தே கன்னத்தில் லேசாகத் தட்டிக்கொண்டு கைகுவித்து சுவாமி தரிசனம் செய்த பொழுது பாண்டியனுக்கு உடல் சிலிர்த்தது.

தீபாராதனையில் தெரிந்த உப்பிய  கன்னத்தில் குமிழாய் விளைந்த இறைவனின் குறுஞ்சிரிப்பு தனக்கு மட்டுமே அருள் பாலிப்பதான குறு நகைப்போல அவன் நினைப்பில் பதிந்தது. தன்னைத் தவிர வேறு யாரும் சன்னதியில் இல்லை என்கிற உணர்வு, தனக்காக மட்டுமேயான இறைவனின்  தரிசனம் இது என்கிற எண்ணமாய் அவனுள் உருக்கொண்டது.  அந்த எண்ணம் பாண்டியனின் மனசில் உருக்க்கொண்ட ஷணத்திலேயே குருக்கள் அங்கு இருப்பதையும் வலிய மறக்கடித்துக் கொண்டு இந்த இடத்தில் தானும் இறைவனும் தான் என்கிற நிலையாய் ஒரு நினைப்பு மனசில் வியாபித்தது. அந்த நினைப்பு அந்த நிலையே நெடுநேரம் நீடிக்கக் கூடாதா என்கிற ஆசையாய் தவித்து அலைபாய்கையில் குருக்களின் குரல் பாண்டியனின் எண்ண  அலையை அறுத்தது.  அவர் என்ன சொன்னார் என்று உணர்வில் படியவில்லை. தீபாராதனைத் தட்டுடன் நின்று கொண்டிருந்த அவர் உருவம் மட்டும் மங்கலாய் அவன் தோற்ற உணர்வில் படிந்தது.

கற்பூர ஜ்வாலை பக்கம்  கைவிரல் மடக்கி அந்த இளஞ்சூட்டை கண்களில் ஒற்றிக்கொண்டு,  அவர் தந்த வீபூதியை பாண்டியன் நெற்றியில் இட்டுக் கொண்டான்.  பாண்ட் பாக்கெட்டில் கைவிட்டு கிடைத்த சில்லரையை எடுத்து தட்டில் இட்டான்.  'இருங்கோ..' என்று சொல்லி விட்டு குருக்கள் படியேறி கருவறைக்குள் சென்றார்.  திரும்பியவர்  கையில் சின்ன பூச்சரமும் ஒரு வீபூதிப் பொட்டலமும் இருந்தது. அதை அவரிடம் பெற்றுக்கொண்டு கண்களில் ஒற்றி சட்டை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு அவரைப் பார்த்து முறுவலித்தான்.

"ஈஸ்வரன் சக்தி வாய்ந்தவர்.  நன்னா வேண்டிக்கோங்கோ.." என்றவராய் குருக்கள் திரும்பினார்.

சட்டென்று என்ன வேண்டிக்கொள்வது என்று தெரியவில்லை.  வேண்டிக்கொள்வதற்கு மட்டுமே தான் இறைவனா என்றும் தெரியவில்லை.  இப்பொழுது பாண்டியன் அடைந்த அனுபவம் அதையெல்லாம் தாண்டிய ஒன்றாக அவனுக்கு இருந்தது.   இன்னொரு முறை இறைவனைப் பார்க்க வேண்டுமென்ற குறுகுறுப்பில் அவன் மனசு  அலைபாய்ந்தது.  அந்த குறுகுறுப்பை அடக்க  முடியாமல் தலை நிமிர்த்தி இறைஞ்சும்  பார்வையில்  விழிவிரித்து அவன் பார்த்த பொழுது கர்ப்பகிரக தீபஒளியின் பொட்டு  போன்ற வெளிச்சத்திலேயே இறையனாரின் கன்னக் குமிழ்ச்சிரிப்பு இங்கிருந்தே பளிச்சென்று அவனுக்குத் தெரிந்தது. இதே மாதிரி இதற்கு முன் இப்படிப் பார்த்த தருணத்தில் சிறைபிடித்து அவன் நினைவில் தேக்கிக்கொண்ட இறைவனின்  குறுஞ்சிரிப்புக் கீற்று பளீரிட்டு இப்போது அதோடு சேர்ந்து கொண்ட மாதிரி இருந்தது.  அப்படிச் சேர்ந்தது, இரண்டாய் சேர்வது  தெரியாமல்,  ஒன்றில் ஒன்றாய் ஒன்றி ஒன்றாகிப் போன மாதிரி அவன்  பார்வைக்குப் பட்டது...

பட்ட தருணத்தில் நினைவின் அடி ஆழத்திலிருந்து, ஒரு குரல் கேட்டது.  மங்கை தான் சொல்கிறாள்: 'இங்கே-அங்கே'ன்னு ரெண்டு  இல்லே; ரெண்டாத் தெரிஞ்சாலும் ரெண்டும் ஒண்ணுதான். தெரிஞ்சிக்கங்க..'

 'கொஞ்ச நேரம் முன்னாடி இறைவன்-நீ இருவர் மட்டுமே இங்கிருப்பதாக நினைச்சியே?  இப்போ சொல்லு. பரமனும் ஜீவனும் வெவ்வேறான இரண்டா?.. இல்லை, ரெண்டா உணர்ந்தாலும் ரெண்டும் ஒண்ணு தானா?' என்ற கேள்வி பாண்டியன் மனசில் அந்த ஷணமே புரண்டது.

ரொம்ப சிரமப்பட்டு எண்ணம் குவித்து "இதையெல்லாம் கேட்க மூணாவதாக நீ யார்?" என்று பாண்டியன் தனக்குள்ளேயே கேட்டுக்  கொண்டான். 'மூணாவதும் ரெண்டு ஒண்ணான அந்த ஒண்ணில் அடக்கம்" என்று அவனுக்குள்ளே கேட்ட கேள்வியே பதிலாய் கிளர்ந்த பொழுது அதை ஆமோதிப்பது போல   கோயில் மணி கணகணத்தது. உபதேசத்தை உள்வாங்கிய விதிர்விதிர்ப்பில் தானாகவே பாண்டியனின் கைகள் கூப்பிக் கொண்டன.

கால் துவளுகிற மாதிரி இருந்தது.  அப்படியே உட்கார்ந்து கொள்ளலாம்
போலிருந்தது. சன்னதியின் ஒரு மூலையில் யாருக்கும் இடைஞ்சலில்லாமல் உட்கார்ந்தான் பாண்டியன்.  உட்கார்ந்ததும் அலைஓசையாய்  மனசில்  ஆர்ப்பரித்த இரைச்சல் எங்கே போனது என்று தெரியவில்லை.

மங்கையுடன்  கோயில்களுக்கு செல்லும் பொழுதெல்லாம் ஏற்படாத உணர்வுகள், தனியாக வரும் பொழுது மட்டும் ஏற்படுகிறதே என்று திடுதிப்பென்று தோன்றியது.  கவனக்குறைவுகளும், கவன ஈர்ப்புகளும் அதற்குக் காரணமாக இருக்கலாமோ என்று நினைத்துக் கொண்டான்.  தனித்திருப்பதில் அவையெல்லாம் களையப்படுகிறதோ இல்லை காணப்படுகிறதோ என்று எண்ணிக் கொண்டான். தனித்திருப்பதில் எண்ணம் குவிந்து தீட்சண்யப்படுவதை மட்டும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

அப்படி கூர்மையடைந்தது தான் காரணமாக இருக்கலாம். இப்படித் தனியாக கோயிலுக்கு வந்திருக்கும் தருணத்திலேயே, நின்று நிதானித்து வெளிச்சத்தில் அத்தனை நாயன்மார்களையும்  தரிசித்து விடவேண்டுமென்று பாண்டியனுக்குத் தோன்றியது. எழுந்திருந்தான்.  ஈஸ்வரனின் சன்னதிக்கு இடப்பக்கம் திரும்பிய பிராகாரத்தில் வரிசையாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த அறுபத்து மூவர் சிலைகளுக்கருகில் வந்தான்.

எல்லா சிலைகளும் வரட்சியின்றி எண்ணெய் முழுக்கில் பளபளத்தன. இடுப்பில் பூண்டிருந்த வஸ்திரங்கள் புதுசாக இருந்தன.  மூன்று பெண் நாயன்மார்களுக்கும் புடவை கட்டிய தோரணையில் அலங்காரம் செய்திருந்திருந்தனர். எல்லா நாயன்மார் பாதக்கமலங்களிலும் ஒற்றைப் புஷ்பம் வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு  பெயராகப் படித்துக்  கொண்டு அந்தந்த நாயன்மார்களின் தோற்றம் இப்படித்தான் இருந்திருக்கும் போலும் என்று எண்ணிப் பார்த்துக் கொண்டே வந்த பாண்டியன், நின்ற சீர் நெடுமாற நாயனாருக்கு அருகில் வந்ததும் சட்டென்று நின்றான்.

களையான முகம்.  கம்பீரமான தோற்றம்.  விசாலமான நெற்றி. நாயனார்க்குள்ளும் ஒளிந்திருந்த ராஜ  மிடுக்கு உணர்வாய் அவனுள் படிந்து அவனுக்கும் தொற்றிக் கொண்ட மாதிரி இருந்தது..

'ஐயே! மனசிலே ராஜாங்கற நெனைப்பு தான்'-- என்று மங்கையின் குரல் பாண்டியனின் மனசின் அடி ஆழத்தில் கேட்டது.


(இனி... வரும்)குறிப்பு:  படங்கள் உதவியோருக்கு நன்றி.26 comments:

Geetha Sambasivam said...

//கொஞ்ச நேரம் முன்னாடி இறைவன்-நீ இருவர் மட்டுமே இங்கிருப்பதாக நினைச்சியே? இப்போ சொல்லு. பரமனும் ஜீவனும் வெவ்வேறான இரண்டா?.. இல்லை, ரெண்டா உணர்ந்தாலும் ரெண்டும் ஒண்ணு தானா?' என்ற கேள்வி பாண்டியன் மனசில் அந்த ஷணமே புரண்டது.//


நம்பெருமாளின் சிரிப்பை ஒவ்வொரு முறையும் பார்க்கிறச்சே எனக்குள் தோணும்! ஆனால் கூடவே உயிருள்ள மனிதர் சிரிப்பதாகவே தோன்றும். விக்ரஹம் என்ற உணர்வே வராது. ஏதோ நம்ம பக்கத்து வீட்டுச் சிறுவன், குறும்பு செய்துவிட்டு விஷமச் சிரிப்புச் சிரிக்கிறாப்போல் இருக்கும். எனக்கு மட்டுமே அந்தச் சிரிப்பு தெரியறதாயும் நினைச்சுப்பேன். :)))) என்ன ஒரு தன்னலம் இதிலே கூட! இந்தப் பாண்டியனுக்குத் தோன்றின மாதிரி அவருள் நானும் அடக்கம்னு நினைக்கத் தோணலை பாருங்க!


// உட்கார்ந்ததும் அலைஓசையாய் மனசில் ஆர்ப்பரித்த இரைச்சல் எங்கே போனது என்று தெரியவில்லை.//

எங்கே! இப்படி ஒரு அமைதியும் வருமானு ஏக்கமாத் தான் இருக்கு! ஆனால் எந்த நினைப்பும் இல்லாமல், எதுவும் வேண்டிக்கொள்ளத் தோன்றாமல் வெறும் வெற்றுப் பார்வையோடுதான் இருக்க முடியுது!


//தனித்திருப்பதில் எண்ணம் குவிந்து தீட்சண்யப்படுவதை மட்டும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.//

எங்கேயோ போயிட்டார் இந்தப் பாண்டியன்! பொறாமையா இருக்கு.

Geetha Sambasivam said...

//களையான முகம். கம்பீரமான தோற்றம். விசாலமான நெற்றி. நாயனார்க்குள்ளும் ஒளிந்திருந்த ராஜ மிடுக்கு உணர்வாய் அவனுள் படிந்து அவனுக்கும் தொற்றிக் கொண்ட மாதிரி இருந்தது..

'ஐயே! மனசிலே ராஜாங்கற நெனைப்பு தான்'-- என்று மங்கையின் குரல் பாண்டியனின் மனசின் அடி ஆழத்தில் கேட்டது.//

ஆஹா, நின்ற சீர் நெடுமாறனைப் பற்றிப் பாண்டியனுக்குப் புரிந்துவிட்டதா? இதை, இதை, இதைத் தான் எதிர்பார்த்தேன். நின்றசீர் நெடுமாறன் குறித்த முதல் குறிப்பிலேயே! அதான் இதுவா? அல்லது வேறு திசையில் பயணிக்குமா? காத்திருக்கேன்.

இராஜராஜேஸ்வரி said...

அவனுக்குள்ளே கேட்ட கேள்வியே பதிலாய் கிளர்ந்த பொழுது அதை ஆமோதிப்பது போல கோயில் மணி கணகணத்தது. உபதேசத்தை உள்வாங்கிய விதிர்விதிர்ப்பில் தானாகவே பாண்டியனின் கைகள் கூப்பிக் கொண்டன.

பதிவைப் படித்ததும் ஏதோ கோவிலில் கர்பக்கிரஹத்தில் மனம் ஒன்றி நிற்கும் உணர்வுகள்..!

கோமதி அரசு said...

சுவாமி சன்னதிக்குள் நுழைந்தவனைப் பார்த்து சன்னதி கீழ்ப்படியில் ஒருக்களித்தவாறு அமர்ந்திருந்த குருக்கள் எழுந்து வந்தார்//
நல்ல கவனிப்பு ! அப்படித்தான் அமர்ந்து இருப்பார் நான் பலமுறை பார்த்து இருக்கிறேன். கையில் அர்ச்சனை இருந்தால் நம் பக்கத்தில் வருவார் அல்லது கர்ப்பகிரகம் சென்று விடுவார், பூஜை செய்ய. இதை எல்லாம் அழகாய் கதையில் கொண்டி வந்து இருக்கிறீர்கள்.

கோமதி அரசு said...

ஈஸ்வரன் சக்தி வாய்ந்தவர். நன்னா வேண்டிக்கோங்கோ.." என்றவராய் குருக்கள் திரும்பினார்.

சட்டென்று என்ன வேண்டிக்கொள்வது என்று தெரியவில்லை. வேண்டிக்கொள்வதற்கு மட்டுமே தான் இறைவனா என்றும் தெரியவில்லை. //

பண்டியனின் கேள்வி நல்ல கேள்வி.
வேண்டிக் கொள்ள மட்டும் தான் இறைவனா? நன்றியை சொல்வதற்கும், அன்னையாய், தந்தையாய் நண்பனாய், அனைத்துமாக இறைவன் இருக்க என்றும் நம் மனதில் இருக்கும் அவனுடன் உரையாடியபடிதானே இருக்கிறோம்.

கோமதி அரசு said...

தனித்திருப்பதில் எண்ணம் குவிந்து தீட்சண்யப்படுவதை மட்டும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.//

தனித்திருப்பதைப்பற்றி நீங்கள் சொல்வது உண்மைதான்.

G.M Balasubramaniam said...


எனக்குண்டான நினைப்பைப் பகிர்ந்து கொள்கிறேன். பெரும்பாலான ஆலயங்களில் நிற்ணயிக்கப்பட்ட கடவுளின் உருவம் சரியாகத் தெரிவதில்லை. அப்போது நாம் என்னவாக நினைக்கிறோமோ அதுபோல் தோன்றும். குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் கண்ணனின் உருவை படங்களில் காணும் உருவை நினைத்துக் கொண்டு பார்த்தால் அது போல் தெரியும். திருமதி கீதா சாம்பசிவம் சில நாட்களுக்கு முன் எழுதிய பதிவில் ஈசனின் லிங்கம் விநாயகன் உருவம் போல் தெரிந்தது என்று எழுதி இருந்தார். உருவமே இல்லாத கடவுளுக்கு நாம் விரும்பும் உருவம் கொடுத்து மனம் நினைப்பதுபோல் வணங்கி வழிபடுகிறோம். பாண்டியனின் மன நிலை சந்துஷ்டியாக இருந்து இருக்க வேண்டும். ஆண்டவனின் குமிழ்ச் சிரிப்பு தெரிந்திருக்கிறது. தவறு செய்துவிட்டு கடவுள் சன்னதிக்கு வந்திருந்தால் ஆண்டவன் கோபமாய்ப் பார்ப்பது போல் இருந்திருக்கும். ரயிலில் பயணம் செய்யும்போது ஓடும் ரயிலின் ஓசை நாம் நினைப்பது போல் இருக்குமே அது மாதிரி.

ஸ்ரீராம். said...

இறைவனுக்கும் தனக்குமான புரிதல் பாண்டியனின் எண்ண ஓட்ட வரிகள் பிரமாதம். ஈஞ்சம்பாக்கம் பாபா கோவிலுக்குச் சென்று வந்த என் நண்பர் ஒருவர் பாபா பார்த்து கண்ணிமைத்ததாக ஒரு தடவையும், புன்னகைத்ததாக ஒரு தடவையும் சொன்னார்.

ஸ்ரீராம். said...

//ஆஹா, நின்ற சீர் நெடுமாறனைப் பற்றிப் பாண்டியனுக்குப் புரிந்துவிட்டதா? இதை, இதை, இதைத் தான் எதிர்பார்த்தேன். நின்றசீர் நெடுமாறன் குறித்த முதல் குறிப்பிலேயே! அதான் இதுவா? அல்லது வேறு திசையில் பயணிக்குமா? காத்திருக்கேன்.//

கீதா மேடத்தின் இந்த வரிகள் சுத்தமாக அபுரி!

ஜீவி said...

@ Geetha Sambasivam

//அவருள் நானும் அடக்கம்னு நினைக்கத் தோணலை பாருங்க! //

அவருள்... அடக்கம் என்ற வரியிலேயே ஒரு 'நான்' வந்து இடைலே நுழைஞ்சிகிட்டது, பாருங்க.. அதான் தோண முயற்சிக்கறதை தடுக்கறது போலும்!

இது வேறு நிலை! ஒன்றினுள் ஒன்று என்று இல்லை! அதுவே இது- இதுவே அது நிலை! இரண்டற்ற நிலை (அ+துவைதம்)

(கொல்லன் களத்தில் ஊசி!) :))

ஜீவி said...

@ Geetha Sambasivam

//எதுவும் வேண்டிக்கொள்ளத் தோன்றாமல் வெறும் வெற்றுப் பார்வையோடுதான் இருக்க முடியுது! //

ஆஹா! இது பெரிய விஷயமாயிற்றே! இதுக்குத் தானே இந்த அவஸ்தை!..

ஜீவி said...

@ Geetha Sambasivam

// நின்ற சீர் நெடுமாறனைப் பற்றி..//

நீங்க கமெண்ட் போடறதுக்குனே, ஸ்ரீராம் வெயிட் பண்ணிகிட்டு இருப்பாரு, போல! என்னவோ சொல்றார் பாருங்க!

Geetha Sambasivam said...

//ஆஹா, நின்ற சீர் நெடுமாறனைப் பற்றிப் பாண்டியனுக்குப் புரிந்துவிட்டதா? இதை, இதை, இதைத் தான் எதிர்பார்த்தேன். நின்றசீர் நெடுமாறன் குறித்த முதல் குறிப்பிலேயே! அதான் இதுவா? அல்லது வேறு திசையில் பயணிக்குமா? காத்திருக்கேன்.//

கீதா மேடத்தின் இந்த வரிகள் சுத்தமாக அபுரி!//

ஶ்ரீராம், மங்கை பாண்டியனைப் பெரிய ராஜானு நினைப்போனு கேட்டதையும், நின்ற சீர் நெடுமாறனையும், பாண்டியனையும் ஒப்பிட்டுச் சில குறிப்புகள் எழுதுக! இதான் உங்களுக்கு சிறப்பு தண்டனை! :))))))

Geetha Sambasivam said...

ஆமாம் ஜீவி சார், இந்த நான் போனால் தான் கண்ணன் சொன்ன அந்த நானைப் புரிஞ்சுக்க முடியும். :(((

ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

நன்றி, மேடம். அந்த சூழ்நிலையை உணர்வில் கொண்டமைக்கு.

ஜீவி said...

@ கோமதி அரசு

ரசித்து வாசித்துப் பார்த்தமைக்கு நன்றி, கோமதிம்மா.

ஜீவி said...

@ கோமதி அரசு

@ கோமதி அரசு

//நன்றியை சொல்வதற்கும், அன்னையாய், தந்தையாய் நண்பனாய், அனைத்துமாக இறைவன் இருக்க.. //

பாரதியின் பார்வை. பேரண்டம் அளந்த பார்வை. 'எங்கிருந்தோ வந்தான்..' கவிதையில் நண்பனாய், நல்லாசிரியனாய், தெய்வமாய், சேவகனாய்..

'நம் மனத்தில் இருக்கும் அவனுடன் உரையாடியபடிதானே..' என்று நீங்கள் எழுதியிருக்கும் உங்கள் வரிகளைப் படித்து மனம் விக்கித்து நெகிழ்ந்தது.
அசைக்க முடியா பக்திக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?..

ஜீவி said...

@ GMB

நீங்கள் சொல்வது, சொற்கட்டுகளால் நம்மால் விளைக்கிக் கொள்ள முடியாத அபூர்வ நிகழ்வுகளுக்கு அர்த்தப்
பூச்சு பூசுவது..

ஆனால் சொற்கள் அனுபவம் ஆகாது. அனுபவத்தைச் சொல் வடிவமாக மாற்றிப் பார்ப்பது தான் சிக்கல்.

இந்தக் கதையில் இயல்பாகவே எல்லாம் நடக்கிறது. கற்பூர ஒளியில் செப்புச்சிலையில் கண்களால் கண்ட இறைவனின் குழிழ்ச்சிரிப்பு, பாண்டியனைக் கவர்ந்து அவன் நினைவுச் செல்களில் படிகிறது. கற்பூரம் ஏற்றப்படாத இருட்டிலும் ஏற்கனவே குழிழ்ச்சிரிப்புடன் கூடியதாய் அவன் நினைவில் படிந்த முகப்படிமத்தின் வீச்சு வெளிப்பட்டு பார்வையில் பார்ப்பது போலப் பதிகிறது. முதலில் பார்த்தது வெளியில் நிகழ்ந்தது. அடுத்துப் பார்ப்பது முன் பார்த்ததின் தொடர்ச்சியாய் அவனுள் நிகழ்வது..

ஒரு வினாடி நேரம் தகிக்கும் சூரியனைப் பார்த்து விட்டு தலைதிருப்பி இருட்டுப் பக்கம் பார்த்தீர்களென்றால், அந்த இருட்டிலும் சூரியனின் மசமசத்த வெளிச்சத் தோற்றம் தெரியும். பார்வையில் வாங்கிக் கொண்ட படிமத்தின் வீரியம், சில வினாடிக்கு மேலான நேரம் நம்மில் தங்கியிருந்து மாற்று சூழ்நிலையிலும் நம்மிலிருந்து வெளிப்படும். இது தான் நடந்தது.

எந்த நிகழ்வும் சட்டென்று நம் மனசைக் கவர்ந்து நினைவில் படிந்தால் நாம் நினைக்கும் பொழுது அவற்றை மீட்டிப் பார்க்கிற மாதிரி
கூட அமையும். எல்லாம் எந்த அளவுக்கு நம்மை ஆகர்ஷித்து நினைவில் படிகிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது.

'உருவமில்லாத கடவுளுக்கு உருவம் கொடுத்து'-- என்பது கூட நிகழ்ச்சிப் போக்கினூடான ஒரு சொற்டொடரே தவிர, ஒரு நிலைக்கு மேல் கொடுக்கப்பட்டதாக நாம் கொள்கின்ற அந்த உருவம் கூட தேவையற்றுப் போகும். நீங்கள் பார்க்கிற இறைவனின் உருவம் பார்வையில் படுவதற்கான
வசதிக்காக. பார்வை தவிர்த்த உணர்வில் இறைவனைக் காண்பது உள்ளத்தோடு உறவாகிப் போவது.

'கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே, நிழலே, நிழல் கனிந்த கனியே, ஓடைத் தண்ணீரே, தண்ணீரிடை மலர்ந்த மண மலரே,
மேடைப் பூங்காற்றே, காற்றின் விளை சுகமே, சுகத்திலுரும் பயனே' என்றெல்லாம் இராமலிங்க அடிகளாரின் அனுபவம் நீள்கிறது.

தங்கள் பகிர்தலுக்கு நன்றி, ஜிஎம்பீ சார்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

இந்தக் கதை விஷயம் வேறே. ஜிஎம்பீ சாருக்கான பதிலில் சொல்லியிருக்கி றேன்.

ஏற்றுக் கொள்கிற மாதிரியும், படிக்கறவங்களுக்கு பயனளிக்கற மாதிரியும், விஞ்ஞான முடிவுகளுக்கு ஒத்து வருகிற மாதிரியும்,ஒரு விஷயத்தைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு யாராவது கேட்டால் பதில் சொல்கிற மாதிரியும் தான் எழுத்து இருக்கணும்ன்னு என் ஆசை. அதனால் எனக்கே புரியாமல் உங்களுக்குப் புரிய வைக்க பிரயத்தனப்பட மாட்டேன்.

நன்றி, ஸ்ரீராம்..

ஸ்ரீராம். said...

பாண்டியனின் கூனை, குறையை நிமிர்த்தப் போகிறவர் யாரோ...

இது என்னுடைய புது கமெண்ட்.

கோமதி அரசு said...

பாண்டியனின் கூனை நிமிர்த்த மங்கையர்கரசியும், குலச்சிறையாரும் திருஞானசம்பந்தரை அழைத்து வந்தது போல் இந்த கதையில் பவர்புல் பாத்திரம் ஒன்று வரப்போகிறார் என்று நினைக்கிறேன் ஸ்ரீராம்.

malathi k said...

//சட்டென்று என்ன வேண்டிக்கொள்வது
என்று தெரியவில்லை, வேண்டிக்கொள்வதற்கு மட்டும் தான்
இறைவனா?// ஒரு உண்மையான
பக்த்தனுக்குத் தோண்ற வேண்டிய
கேள்வி.

ஜீவி said...

@ ஸ்ரீராம் - கோமதிம்மா

மாற்றுத் திறனாளர்கள் என்கிற பார்வை வந்ததும் இப்பொழுதெல்லாம் இயற்கையாய் விளைகின்ற எந்தக் குறைபாடுகளையும் நினைக்கவே தோன்றுவதில்லை.

அரிகேசரி, நின்ற சீர் நெடுமாறன் என்கிற பெயர்களே நினைவில் நிற்கின்றன. இந்தப் பாண்டியனை பெரிய சின்னமனூர் பட்டயங்கள்
அரிகேசரி பராங்குசன் என்றூ குறிப்பிடுகின்றன.

நி.சீ.நெ. லேசான பின்புலமாய்,
நம்ம கதை நாயகன் பாண்டியனை
சுற்றி கதை சுழல்கிறது. அதனால்
கோமதிம்மா, டீடெயிலாக நி.சீ.நெ.னை ஒற்றி எடுக்கிற மாதிரி நினைத்துக் கொள்ளாதீர்கள். கதை போகப் போக நி.சீ.நெ.னை மறந்தும் விடலாம். அவரா ஞாபகத்திற்கு வந்தால் சரி. சரியா?..

ஜீவி said...

@ malathi. k.

//ஒரு உண்மையான பக்தனுக்குத் தோன்ற வேண்டிய கேள்வி..//

துல்லியமான பார்வை. வரிகளோடு வரிகளாய் கலந்திருப்பதை எடுத்துச் சொன்னமை பிரமாதம்.

தங்கள் முதல் வருகைக்கு நன்றி.
தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அப்படிச் சேர்ந்தது, இரண்டாய் சேர்வது தெரியாமல், ஒன்றில் ஒன்றாய் ஒன்றி ஒன்றாகிப் போன மாதிரி அவன் பார்வைக்குப் பட்டது...//

:) அருமையான நிகழ்வு. அனுபவித்து உணர்ந்தவர்களுக்கே இது புரியும்.

நிறைய பேர்களின் பின்னூட்டங்களில் தேதி ஆகஸ்டு 2013 என்று உள்ளதே ! ?????

அன்புடன் கோபு

ஜீவி said...

@ வை.கோ.

14-ம் அத்தியாயம் வரை மீள் பிரசுரம்.

+-லிலும், முகநூலிலும் வாசிப்பவருக்கு வசதியாக.

15-க்கு மேல் புதுப் பிரசுரம்.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி.

Related Posts with Thumbnails