Monday, December 1, 2014

தேடித் தெரிவதின் சுகம்

நாள் பூராவும் ஏதோ  தேடுதல்.

இன்னது தான் என்று வரையறுத்துச் சொல்ல முடியாத தேடுதல்.

தொடர்ந்து முடிவில்லாத தேடுதல்.  ஒன்று மாற்றி இன்னொன்று.  ஒன்று முடிந்து இன்னொன்று என்றாலும் பரவாயில்லை.  ஏதாவது புரிபடும்.

அதுவும் இல்லை.  ஒன்றிலிருந்து இன்னொன்று கிளை கிளப்பிப் புறப்படுவது தான் ஆச்சரியம். எதுவும் முடிந்த பாடில்லாத அப்படி ஒரு தேடுதல்.

இருபதோ எண்பதோ வயசு நிர்ணயம் இல்லாம எல்லாருக்கும் இந்தத் தேடுதல் இருக்கிறது.   அவரவர் உள்ளப்பாங்கிற்கும் தேவைக்கேற்பவும் இந்தத் தேடுதல் தொய்வின்றி வாழ்க்கை பூராவும் தொடர்கிறது.  உண்டு உயிர் வாழ்வதே இந்தக் காரியத்துக்குத் தான் என்று நினைக்கற மாதிரி  அப்படி  ஒரு தேடுதல்.

ஒரு ஹைவேயில் வேடிக்கைப்  பார்க்கிற மாதிரி கொஞ்ச நேரம் நின்றால் போதும்.   சாரி  சாரியாக எத்தனை கார்கள்?  எத்தனை டூ வீலர்கள்? எத்தனை ஆட்டோக்கள்?..  என்ன காரியத்துக்காக இந்த அல்லாட்டம் என்று முடிவு காண முடியாத தேடல் இது.                                                  

சிலர்  முகத்தில் சிரிப்பு.  சிலரிடம்  அலுப்பு. இறுகிய  முகங்கள், இளவட்டங்கள்.  டூவீலரில் முன்னிருப்பவன் இடுப்பு பற்றிய இளம் பெண்கள்;  தோழிகளாய்; தோழர்களாய்.  காதலர்களாய், கணவர்களாய்.

அத்தனை பேருக்கும் ஏதோ தேடுதல்  இருக்கிறது. தேடுதல் நிமித்தம் பறத்தல்.

சிக்னல் விழுந்தால்  போதும்;  அடித்துப் பிடித்துக்  கொண்டு விரைகிற அவசரம் அதற்காகத்  தான் என்று  தெரிகிறது.

வீட்லே இருந்தாலும் சரி, வெளிலே கிளம்பினாலும் சரி, தேடுதலுக்கு குறைச்சலில்லை.    ஹிக்கின்பாதம்ஸ் தாண்டி, டாம்ஸ் ரோடு கடந்து, பிளாட்பாரம் ஏறி அண்ணாசலை அஞ்சலம் அருகே ஒதுங்கி நின்ற பொழுது எதைத் தேடி இப்படி நிற்கிறோம் என்று ஒரு நாள் இப்படி நின்ற பொழுது எனக்கே ஏதோ யோசனையாகப் போய்விட்டது.

வந்த வேலை அஞ்சலகத்திற்கு அடுத்த கட்டடத்திலே தான்.  இருந்தாலும் இங்கே ஒரு நிப்பாட்டல்.  இந்தப் பக்கம் வந்தாலே கொஞ்ச நேரம் நிற்பது வழக்கம் ஆகையால் அந்த பழக்க தோஷத்திலேயோ?..

'எதற்காகவும் இல்லை; சும்மா' என்று மனசு சொல்லிற்று.  'சும்மாவானும் கதை விடாதே.   எதுக்கு இந்த பராக்குன்னு தெரியாமத்தான்  இப்படி நிக்கறயாக்கும்?' என்று அதே மனசு அடுத்த வினாடியே இடித்தது.

Wendell Willkie  எழுதிய 'ONE WORLD'  எப்போவோ படித்தது.  அன்று தெரியாத இன்றைய வளர்ச்சியில் அந்தப் புத்தகம் கிடைக்குமா என்று நெடுநாட்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன்.   நடைபாதை ஓரத்தில் கடை பரப்பியிருக்கும் நிறைய பழைய புத்தகங்கள் புரட்டித் தான் பாரேன் என்று மனசை சுண்டி இழுக்கும்.  அதைக் கண்டுகொண்டதாலோ இல்லை கண்டு கொள்ளச் சொல்லியோ மனசின் கூப்பாடாகவும் இந்த இடித்தல் இருக்கலாம்.

ரெண்டு பொண்டாட்டி மாதிரி;  ஒருத்தி  வலது பக்கம்ன்னா  இன்னொருத்தி இடது பக்கம்.   மாத்தி மாத்தி நாள் பூரா இந்த ரெண்டு பேரு கிட்டே இடி வாங்கறதே பொழப்பாப் போச்சு.

ஒரு பொண்டாட்டிக்காரங்க புண்ணியவானுங்க;  இளிக்கறோம் இல்லை இழுத்து அணைச்சிக்கறோம் ஒருத்தரோட ஆச்சா போச்சான்னு நிம்மதி  இருக்கும். 'இதையும்  சொல்லி அதையும்  சொல்லி  மாத்தி மாத்தி யோசிக்கற இந்த ரெட்டை மனசு மட்டும் வேண்டாண்டா, சாமி!'ன்னு நெனைக்கறது அடிக்கடி நெனைக்கற நெனைப்பாப் போச்சு!

நேத்து சுரேஷ்  இந்த ரெண்டு பொண்டாட்டி சமாசாரத்தைத் தான் பாராட்டினான்;  'பாராட்டினான்னா நெனைக்கறே? நக்கலில்லையா,அது?'ன்னு இப்போ பாருங்க இன்னொருத்திக் கேக்கறா!  இவுளுக  ரோதனையே பெரிசா போச்சு;  ஒருத்திக்கு ஒருத்தி எப்பப்பார்த்தாலும் இப்படித் தான் ஏறா மாறா..

"உனக்குப் பரவாயில்லைடா.. எதுனாலும் இதுவா, அதுவான்னு சீர்தூக்கிப் பாக்கற ஞானம் இருக்கு;  எனக்குன்னா பாரு, ஒண்ணே மதின்னு..."

'இதுக்குப் பேர் சீர்தூர்க்கிப் பாக்கறதாடா?.. ஏண்டா, சுரேஷ்! உனக்கே நியாயமாடா, இது?.. இப்படியும் போகமுடியாம, அப்படியும்  போகமுடியாம நா படற அவஸ்தை..  உனக்கு சீர்தூக்கிப் பாக்கறதா, தெரியுதாடா?' ன்னு நினைசிண்டேன்.  பேசவுடமாட்டாங்க, இவுளுக! எல்லாம் நெனைப்போட சரி.

போவோரும் வருவோருமாய் அஞ்சலகம் ரொம்ப பிஸியா இருந்தது. கார்டு, கவர், லெட்டர், எல்லாம் எந்தக் காலத்து விஷயங்களோன்னு ஆன பின்னாடியும்,  அதெல்லாம் போச்சுன்னு இல்லாம அதுங்க இடத்தை இன்னொண்ணு நிரப்பிண்டிருக்கு.  இதான் விசேஷம்.  எல்லாத்துக்கும் ஒண்ணை அழிஞ்சிண்டு இன்னொண்ணா உருவாகற சக்தி இருக்கு..  இல்லே, ஒண்ணை அழுத்தி அமுக்கின வளர்ச்சியாய் இன்னொன்ணு..  அதுஅதுக்கு அதுக்கு ஏத்த மாதிரி  ஏதேதோ ஈடுபாடு எல்லாருக்கும் புதுசு புதுசா ஏற்பட்டுடறது.

இந்த ஈடுபாடல்களுக்கான தேடல் தான் வாழ்க்கையோ?..  ஈடுபாடு இட்டுச் சொல்லும் தேடலே வாழ்க்கை என்பது தான் வாழ்க்கைக்கான சூத்திரமோ?..

ஆம்,  வாழ்க்கை ஈடுபாடுகள் நிரம்பியது.  அல்லது ஈடுபாடுகளே வாழ்க்கை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஈடுபாடு.  ஒரு ஈடுபாடு நிறைவேறுதல் என்பது இன்னொரு ஈடுபாட்டிற்கான வாசல் திறப்பு.  அடுத்தடுத்து ஆட்படும் ஈடுபாடுகளை கைக்கொள்வதற்காக தேடல்.  ஆக வாழ்க்கை பூரா தேடல் தான்.

தேடல் தொலைத்தவனின் வேலை அல்ல;  தேடல் சுகம் கண்டவன், அதைத் துய்ப்பதற்காகவே தொலைப்பதில் சுகம் கொள்கிறான்.  ஒரு சுகத்திற்காற்காக இன்னொரு சுகத்தின் பலியிடல்.

எதையும் இழந்து தான் இன்னொன்றைப் பெற வேண்டியிருக்கிறது.  அல்லது ஒன்றைக் கொடுத்து இன்னொன்று;  இல்லை, ஒன்றிற்கு பர்த்தியாய் இன்னொன்று.

'இழப்பதற்கு எதுவுமில்லை' என்கிற நிலை, உன்னத நிலை.  எல்லாவற்றையும் இழந்த நிலை தான் தன்னை இழந்தும் தன்னில் நலிந்த ஒரு பெருங்கூட்டத்தின் பெறுதலுக்கு வழிவகை காணுகிறது.  சரித்திரத்தின் மஹா புருஷர்களின் சாதனையெல்லாம் இப்படி தன்னை இழந்ததில் தான் அடக்கம் கொண்டிருக்கின்றன.

தேடித்  தெரிந்து கொண்டாலே பூரிப்பு தான்;  மடியில் விழுந்த கனி கதையாய் தேடாமல் தானே கிடைப்பதில் அவ்வளவு ஈர்ப்பு இல்லை தான்.

தொடர்ந்து தேடியும் கிடைக்காமலே போகும்  எது ஒண்ணுக்கும் மதிப்பு ஜாஸ்தி தான்.  தோளில் துண்டைப்  போட்டுக்  கொண்டே துண்டைத் தேடுவோரும் உண்டு.  கடவுளைத் தேடுகிறகிறவர் மாதிரி.  உணர்வில் தேடாதவராய் அவரைப் பற்றித் தெரியப்பட்ட விவரங்களில் வெளியே தேடுகிறவர் மாதிரி.  இது தான் இருக்கும் இடத்தை விட்டு விட்டு இல்லாத இடம் தேடுதல்.

ஒருவிதத்தில் பார்க்கப் போனால் இருக்கும் இடம் தெரிந்து விட்டால் இந்த தேடலே இல்லையோ என்று தோன்றுகிறது.  யோசித்துப் பார்த்தால்,  எந்தத் தேடலுக்கும்  சிக்காமல் அறியப்படாததாய் இருப்பதே அப்படியான அறியப்படாதவற்றின் சிறப்பாகவும் தெரிகிறது.

இது தான் தேடலுக்கான சிறப்பும் அதன் சுகமும். அந்த சுகத்தில் ஒரு 'கிக்' இருக்கிறது.  எந்தத் தேடலும் தேடுபவனை  வழி நடத்திச் சென்று தெரிதலைக் காட்டி இன்னொரு தேடலுக்குக் கொண்டு  போய் விடும் என்பது தேடுதலின் வளர்ச்சிப் போக்கான இன்னொரு உண்மை.
மாயையான நீண்டுதோர் நெடும்பாதை இது என்கிறார்கள் ஞானவான்கள்.

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொப்பனந்தானோ?
பல தோற்ற மயக்கங்களோ?
...................................
போனதெல்லாம் கனவினைப் போல்                  
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஒர் கனவோ? 
இந்த ஞாலமும் பொய்தானோ?...

-- இரண்டே கேள்விகள் தாம்.  இரண்டும் இரண்டு அஸ்திரங்கள்.

ஊதி உப்பிய பலூன் படீரென்று வெடித்த மாதிரி இருக்கிறது.

அமெரிக்க பெர்கிலி பாதரியார் தனது தேடலின் தெரிவாய் சொன்னது நினைவுக்கு வருகிறது:  "நம் மனத்திற்கு வெளியே பொருள்கள் என்று எதுவுமே இல்லை;  எல்லாம் புலன் வழி உணர்வாய் நம் எண்ணங்களால் சமைக்கப் பட்டவையே"

அரைகுறைத் தேடல்கள் அத்தனையும்  அம்பேல் கேஸ்தான்.  தொடர்ந்த தேடுதலுக்கு ஆட்படுத்திக் கொள்ள விரும்பாத உடல், உள்ளம், உணர்வு ஆகியவற்றின் ஒன்று சேர்ந்த ஒத்துழையாமை இது.    இதன் சுகத்தில் தேடலைத் தொலைத்தவர்கள் உண்டு.  எதைத் தேட இந்த தேடுதலை ஆரம்பித்தாரோ அதையே கோணல் மாணல்களாக விமரிசிக்கப்  புகுவதுண்டு.  மனசுக்கு சிக்காத எதுவும் வரட்டுக் கேள்விகளில் தன்னைத் தானே மூழ்கடித்துக் குதர்க்கத்தில் சிக்கித் தடுமாறும்.

இது தான் தேடுதலுக்கும் தேடுபவர்க்கும் ஆன உறவு.   அதனால் தான் உடல், உள்ளம், உணர்வு வயப்பட்டே அவரவர் தேடுதல்களும் அமைந்து விடுகின்றன.

 கொலம்பஸின் தேடுதல் போல,  ஒன்றிற்கான தேடல் இன்னொன்றின் தெரிதலில் முடிவதுமுண்டு.    அப்படி எதிர்பாராதவாறு தெரிந்தலின் ஆனந்தம் இருக்கிறதே அந்த சுகம் அலாதியானது.  இந்த சுகமே இப்படித் தெரிந்ததையும் தெளியத் தெரிய இன்னொரு தேடலுக்கு இட்டுச் செல்லும்.

ஆக வாழ்க்கை பூராவும் தேடல் தான்.    அல்லது தேடல் தான் வாழ்க்கை. தேடல் உயிர்ப்பின் அடையாளம்.  தேடல் தொலைத்தவர்கள் வாழ்க்கையின் உயிர்ப்பையும் தொலைத்தவர்களோ?..

தேடுதலே மாயை எனில் உயிர்ப்பும் மாயையோ?..குறிப்பு:  படங்களை உதவியோருக்கு நன்றி.

ஆக்கபூர்வமாக  விவாதிக்கிற  கட்டுரை கருத்துக்களை மேலெடுத்துச் செல்கிற மாதிரியான பின்னூட்டங்கள் மட்டுமே வரவேற்கப்படுகின்றன.
12 comments:

Durai A said...

ஆக்கபூர்வமான பின்னூட்டமா? இது எந்தவித தேடல்?

பிறகு வருகிறேன். அவசரமாக இன்னொரு தேடல்..

ஸ்ரீராம். said...

ஆக்கபூர்வமான பின்னூட்டங்களுக்காக நானும் வெயிட்டிங்!

:)))

Kalayarassy G said...

"வாழ்க்கை பூராவும் தேடல் தான். அல்லது தேடல் தான் வாழ்க்கை. தேடல் உயிர்ப்பின் அடையாளம். தேடல் தொலைத்தவர்கள் வாழ்க்கையின் உயிர்ப்பையும் தொலைத்தவர்களோ?.."
தேடல் உயிர்ப்பின் அடையாளம் என்பது நூற்றுக்கு நூறு சரி.
சாமியார்க்குக் கடவுள்; அறிஞர்க்குப் புகழ், அரசியல்வாதிக்குப் பதவி; முதலாளிக்குப் பணம்; மாணவர்க்குக் கல்வி அறிவு; பிச்சைக்காரனுக்கு வயிறார உணவு; கார்பரேட் நிறுவனத்துக்குத் திறமையான நிர்வாகி; சிறிய கம்பெனிக்குத் தொழிலாளர் எனத் தேடுதல் பட்டியல் நீள்கிறது.

போலீஸ்காரர்கள் திருடனைத் தேடி தேடுதல் வேட்டை நடத்துகிறார்கள்; இளம்பெண்கள் கைநிறைய சம்பாதிக்கும் ஆண்களைத் தேடுகிறார்கள்; ஆண்களோ உலக அழகி ரேஞ்சில் மனைவியைத் தேடுகிறார்கள்; வறிய முதியவர்கள் தம் பிள்ளைகளிடம் பாசத்தைத் தேடுகிறார்கள்; இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேடல்.

மனிதர்களின் இந்தத் தேடலை அடிப்படையாக வைத்து தானே, இன்று கூகுள் இஞ்சின் உலகளவில் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது! தேடுதல் இல்லையேல் கூகுள் இல்லை!

தேடுங்கள் கிடைக்கும் என்றார் ஏசு.
ஆனால் நாம் எதைத் தேடுகிறோம் என்பது நமக்குத் தெளிவாகத் தெரிந்திருப்பது மிகவும் அவசியம். அப்போது தான் நாம் தேடுவது நமக்குக் கிடைக்கும். இல்லையேல் நம் கண்ணெதிரே இருந்தாலும், நம் கண்ணுக்கு அது ஒருபோதும் புலப்படாது. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் வாழ்நாள் முழுக்கத் தேடி அலைந்து கொண்டிருப்போம்! அல்லது அரைகுறை தேடலுடன் நம் கதை முடிந்து விடும்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

Enjoyed the detailed Comments offered by Mrs. G. Kalayarassy Madam.

Thanks a Lot for the same Madam.

- GOPU

Seshadri e.s. said...

தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் சுவையிருக்கும் என்ற பாடல் வரி நினைவுக்கு வருகின்றது! தேடலில் பார்வையின் பங்கை கவியரசர் அழகாக விளக்கியிருப்பார். பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்! பாதை தெரிந்தால் பயணம் தொடரும்! பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்! கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்! காட்சி கிடைத்தால் கவலை தீரும்! கவலை தீர்ந்தால் வாழலாம் என்பார்! இது யோகக்கலை குறித்த வரிகள் என்று கூறுவதும் உண்டு! பயனுள்ள தேடல் பலனளிக்கும் என்பதில் ஐயமில்லை!
வாழ்க்கையே "ஒன்றிலிருந்து ஒன்று! ஒன்றுக்காக ஒன்று! ஒன்றோடு ஒன்று என ஒன்றை ஒன்று சார்ந்த நிலைதானோ!

ஜீவி said...

@ Kalayarassy

ஏகதேசத்தில் நிறைய தேடல்களை வரிசைபடுத்தியிருக்கிறீர்கள். இன்னாருக்கு இந்தத் தேடல் தான் இருக்க முடியும் என்று வரையறை கொடுத்து நிர்ணயித்து விடமுடியாத
படிக்கு தேடல்கள் மனிதனின் வாழ்க்கையோடு கலந்து ஒன்றாகி வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுப்பதாகி இருப்பது தான் அதன் விசேஷம்.

ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், தெரியாத அனைத்தையும் தேடித் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும் என்பதே எல்லோருக்குமான நிலை. ஆனால் அப்படித் தெரிந்து கொள்வதை தனது அவசியத்திற்கேற்ப என்று மனிதன் குறுக்கிக் கொண்டு விடுதல் மனித குல ஒட்டுமொத்த வளர்ச்சிப்போக்கை பாதிக்கவும் செய்யும்.

தனக்காக என்றில்லாது சில உன்னத மானுடர்களின் தேடுதல் எல்லோருக்குமான என்கிற உயர்ந்த
நிலைக்கு இட்டுச் சென்றிருப்பதையும் பார்த்திருப்பீர்கள்.

அப்படியான தேடுதல்களை வரிசைப்படுத்திப் பாருங்கள். தேடுதலின் விஸ்வரூப தரிசனம் கிடைக்கும்.

ஜீவி said...

@ Seshadri

'தேடல் உள்ளவரை' என்று குறுக்கி விடமுடியாது என்று நினைக்கிறேன்.

பள்ளி, கல்லூரி படிப்போடு படிப்பது முடிந்து விட்டது என்று நினைக்கிற மாதிரி இது.

'தேடல்' என்று அறியாமலேயே வாழ்க்கை பூராவும் ஒவ்வொருவருக்கும் ஒரு தேடல் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

நிறைவு என்பது இல்லாத வரைக்கும்
தேடல் இருந்து கொண்டு தான் இருக்கும். எதிலும் 'இவ்வளவு தான் இதன் எல்லை' என்று நிறைவு காண முடியாததும் தேடலுக்குக் காரணமாகிப் போகிறது.

'நான் யார்?' என்கிற தேடுதல் தான் தேடுதலில் தலையாய தேடுதல்.

Kalayarassy G said...

“நான் யார் என்கிற தேடுதல் தான் தேடுதலில் தலையாய தேடுதல்”


என் குடும்பத்திலும் இந்தச் சமூகத்திலும் எனக்கென்று உருவாக்கி வைத்திருக்கும் தற்போதைய பிம்பத்தை முழுவதுமாக விலக்கிவிட்டு உண்மையில் நான் யார், என் வாழ்வின் நோக்கம் என்ன என்று தேடப் புகுந்தால், அது கண்ணுக்கெட்டிய தூரம், பாலையின் மணற்படுகை போல் முடிவில்லாமல் போய்க் கொண்டேயிருக்கிறது.
என் தேடலில் வெற்றி பெற, நான் மிக மிக அதிக தொலைவு பயணம் செய்தாக வேண்டும். பாரதி கூறும் தோற்ற மயக்கத்தையோ, பெரிகிலி பாதிரியாரின் கூற்றையோ இப்போது என்னால் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒரு வேளை என் தேடலில் நான் வெற்றி பெற்றால், இந்தத் தோற்ற மயக்கம் பற்றியும், பொருட்கள் எல்லாம் நம் புலன் வழி சமைக்கப்பட்டவை என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடியுமா?

ஜீவி said...

@ Kalayarassy

எந்த பிம்பத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சுற்றிச் சூழ்ந்திருக்கும் எல்லா மயக்கங்களினூடையே நாம் யார் என்று நம்மைத் தேடுவது தான் உண்மையான தேடலும் அதனால் விளையும் சுவாரஸ்யமும் ஆகும்.

எல்லோருக்குமான பொதுவான தேடலிலும் கூட ஆரம்பிக்கலாம்.

1. நமக்கு சூட்டப்பட்ட பெயர் தான் நாமேவா? நடப்பு வாழ்க்கையில் எல்லா தருணங்களிலும், நமக்கான எல்லா விவரக் குறிப்புகளிலும் பெயர் தான் நம்மைப் பிரதிநிதித்துவப் படுத்துக்கிறது என்பதினால் நமக்கான பெயர் தான் நாமேவா?..

2. இல்லை, நமக்கு வாய்த்திருக்கும் குண நலன்கள் தாம் நாமா? அவரவருக்கு வாய்த்திருக்கும் குணநலங்கள் தாம் அவரேவா?..

3. இதெல்லாம் இல்லை என்றால் வேறு என்ன தான் நாம்?..

4. இன்னாருக்குப் பிறந்த இவர் என்பதைத் தாண்டி தனித்த அடையாளமாய் இவர் யார் என்பதைச் சொல்ல தனி ஒருவரின் வாழ்வுக்கான அடையாளம் தான் என்ன?..

5. இல்லை, இந்த ஸ்தூல சரீரமே நாமா?

6. அது இல்லையென்றால் அவரவர் மனமே அவரவரா?..

--- இதெல்லாம் தான் 'நான் யார்?' என்கிற சிந்தனையைத் தொடங்கி வைக்கிற கேள்விகள்.

கிடைக்கும் விடைகளைப் பொறுத்து தேடலும் நீளூம். எந்தத் தேடலையும் தரிசிக்க நாம் தயாராக வேண்டும் என்பது தான் எந்தத் தேடலுக்குமான அடிப்படையான தேவை. இந்தத் தேடலே தேவையில்லை எனில் அதற்கான அவசியமும் இயல்பாகவே இல்லாது போகும்.

பிறர் சொல்லித் தெரிந்து கொள்வது, புத்தகம் வாசித்துத் தெரிந்து கொள்வது-- என்பதெல்லாம் வேலைக்காகாது. அத்தனைத் தேடலும் நம்மில் விளைய வேண்டும். நமக்கு நாமே உணர்ந்து தெரிந்து கொள்கிறா உண்மைகளே நம்மை கன்வின்ஸ் பண்ண சக்தி வாய்ந்தவை.

ஆனால் ஒன்று. இந்த மாதிரியான எந்த ஆன்மவிசாரங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல்---

கடவுளைப் பற்றி
உருவ வழிபாடு பற்றி
ஆன்மாவைப் பற்றி
சடங்குகளைப் பற்றி
உடலுக்கும் உலகிற்கும் உள்ள உறவு பற்றி

-- என்று சரிவரத் தெரியாத எது பற்றியும் எந்தக் கேள்வியையும் எழுப்பவோ, அதற்கு விடை கண்டுவிட்டதாக செருக்கு கொள்வதிலேயோ எந்த அர்த்தமும் கிடையாது.

அனுபவப் பாடமே அத்தனைக்குமான ஆசான்.

இராஜராஜேஸ்வரி said...

தேடல் தொலைத்தவனின் வேலை அல்ல; தேடல் சுகம் கண்டவன், அதைத் துய்ப்பதற்காகவே தொலைப்பதில் சுகம் கொள்கிறான். ஒரு சுகத்திற்காற்காக இன்னொரு சுகத்தின் பலியிடல்.


இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே..!
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே...!!

Kalayarassy G said...

என் சந்தேகங்களுக்கு விளக்கமாகப் பதில் அளித்திருப்பதற்கு என் நன்றி.

நீங்கள் குறிப்பிட்ட 6 கேள்விகளில் மூன்றும், ஆறும் மட்டுமே என்னைத் தேடத் தூண்டுகின்றன:-.
.
.பெயர் என்னைக் குறிக்க ஓர் அடையாளம் தானே தவிர, அது கண்டிப்பாக ‘நானி’ல்லை.

பெரும்பாலான குணநலன்கள் எல்லோருக்குமே பொதுவானவை. ஒன்றிரண்டு குணங்கள் மட்டுமே ஆளுக்காள் வேறுபடுகிறது. எனவே அவையும் ‘நான்’ இல்லை. சரீரம் கண்டிப்பாக ‘நான்’ இல்லை.

இன்னாருக்குப் பிறந்த இவர் என்பதைத் தாண்டி இவரின் தனித்த அடையாளம் என்ன என்ற தேடலிலும், ஒருவரின் மனமே அவரைக் குறிக்கிறதா என்ற தேடலிலும் அர்த்தம் இருப்பதாக என எனக்குத் தோன்றுகிறது.

ஜீவி said...

நிரம்ப சரி.

இரண்டு விஷயங்கள் தேறியிருக்கின்றன.

1. தன்னின் தனித்த அடையாளம் குறித்த தேடல்

2. தன்னின் மனமே தானா என்பதான தேடல்

தேடல் தொடரட்டும். இப்போதைக்கு இது இல்லையா?.. இதில் மாற்றம் கொண்டாலோ வேறு ஏதாவது புதுசாகத் தென்பட்டாலோ தெரியப்படுத்துங்கள். வாழ்த்துக்கள்.

மற்றவர்களும் சேர்ந்து கொண்டால் நல்லது. ஒரு குழு உரையாடலாக இந்தத் தேடல் தொடர வாய்ப்பு ஏற்படும்.

என் தேடலையும் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

Related Posts with Thumbnails