Tuesday, December 22, 2015

விவசாயி வியாபாரி விலைவாசி

'குங்குமம்' வார இதழில் நாஞ்சில் நாடன் எழுதும் 'கைம்மண் அளவு' என்னும் கட்டுரைத் தொடரை வாராவாரம் வாசிக்க நான் தவறியதே இல்லை.   சொல்லப்போனால், அந்தப் பத்திரிகையை வாங்கியதும் பிரித்துப் புரட்டிப் பார்த்து முதலில் வாசிப்பது 'கைம்மண் அளவு' கட்டுரையைத்தான்.

படித்து முடித்ததும், அந்த வாரம் அவர்  கையாண்ட பொருளைக் குறித்து தொடர்ந்த யோசனையில் ஆழாமல் இருந்ததில்லை.  நாஞ்சில் நாடனுக்கே உரித்த எள்ளல் கலந்த தமிழ் சொல்லாட்சியும், மனசில் விளையும் எண்ணங்களுக்கு விரோதமில்லாமல் வரிகளாய்,  வார்த்தைகளாய் வடிவம் பெறும் எழுத்து நேர்மையும்  நம்மையும் பற்றிக்கொள்ளும்.  அன்றைய பொழுது  பயனுள்ள வாசிப்பின் பலனைப் பெற்ற அனுபவமாய்  அது நம்மில் விளையும்..

'குங்குமம்'  14-12-15 இதழில் இந்தத் திருநாட்டின் விவசாய 'மாட்சி'யைப்  பற்றி நாஞ்சில் நாடன் எழுதியிருந்தார்.

இந்தியா ஒரு விவசாய நாடு என்று பள்ளிப் பருவத்திலிருந்து பாடம் பயின்றவர்கள் நாம்.  படித்த கல்விக்கும் வாழ்க்கை அவலங்களுக்குமான சம்பந்தத்தை பல நேரங்களில் ஆரஅமர சிந்திக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெறாமலேயே நம்மில் பலரின் வாழ்க்கைப் போக்கும் அதற்கென்றே வாய்த்த நெருக்கடிகளும் நம்மை பல செய்திகளிலிருந்து தூர விலக்கி வைத்திருக்கின்றன. நாஞ்சிலாரின் கட்டுரையை படித்த பொழுது அந்த விலகல் வெளிச்சம் போட்டு மனத்தை வாட்டி எடுத்தது.

நாஞ்சில் நாடன் விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர்.  இந்தக் கட்டுரையில் சொல்கிறார்:

"இந்தியத் திருநாட்டில் 85 விவசாய பல்கலைக் கழகங்கள் உள்ளன.   எத்தனையோ விவசாய ஆய்வு மையங்கள் உண்டு.  எத்தனை  ஆயிரம் விவசாய விஞ்ஞானிகள், அறிஞர்கள், பேராசிரியர்கள், இயக்குனர்கள், முது முனைவர்கள், இளங்கலை,\ முதுகலைப் பட்டதாரிகள்? மற்றும் இந்திய விவ்சாயத்தை முன்னேற்றி எடுக்க என்றே கடவுளால் அனுப்பப்பட்டிருக்கும் பன்னாட்டு  உற்பத்தி, விற்பனை, வணிக நிறுவனங்கள்?...

"மத்திய, மாநில் அரசுகளால் ஆண்டுதோறும் விவசாய அபிவிருத்திக்கென்று வழங்கப்பெறும் மானியங்கள் எத்தனை ஆயிரம்  கோடிகள்?  சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து  இன்று வரை தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் விவசாயக் கடன்கள் எத்தனை ஆயிரம் கோடிகள்?  செயற்கை உரத்திற்கும், பூச்சிக்கொல்லி மருந்துக்கும் விதைகளுக்கும், விவசாய உபகரணங்களுக்கும், விவசாயப்போருட்களின்  கொள்முதலுக்கும் மத்திய  மாநில அரசுகள் வழங்கியிருக்கும் மானியங்கள் இதுவரை எத்தனை கோடிகள்?

இத்தனைக்கும் பிறகும் ஏன் இந்திய விவசாயி எழுந்து நடமாட முடியாமல் தரையோடு தரையாக கிடக்கிறான்?  ஏன்  இத்தனை அதிக அளவிலான தற்கொலைகள்?  ஏன் குடும்பம் குடும்பமாக கூலி வேலைக்கு நகரம் நோக்கி இடம் பெயர்கிறான்?"

---- என்று அவரின் கேள்விகணைகள் வேதனையின் வீச்சாய் நம்மை வாட்டுகின்றன.

"ஒரு இல்லத்தரசிக்கு காலை ஆறு மணிக்குப்  பால் வாங்குவது தொடங்கி இரவு பத்தரை மணிக்கு கேட் பூட்டுவது வரைக்கும் எத்தனை வேலைகளோ அத்தனை வேலைகள் விவசாயிக்கும் தினமும்.  அவனுக்கு இரண்டாம் சனிக்கிழமை, ஞாயிறு, தேசிய விடுமுறைகள் கிடையாது.  CL,SL. PL இல்லை.  மெகா சீரியல் அவனுக்கு  என்னவென்றே தெரியாது.." என்று தொடரும் நாஞ்சில் நாடன் ஒரு விவசாயின் பண்பை, அவன் குணத்தை படம் பிடித்துக் காட்டும் பொழுது நாம் நெகிழ்ந்தே  போகிறோம்.

"வயலுக்குப் போகும் போது சாலையில் கிடக்கும் ஒரு  குப்பம் மாட்டுச்சாணியைப்  பிசைந்த சப்பாத்தி மாவு போல் உருட்டி எடுத்துச் செல்பவன் உழவன்.  வயலில் கிடக்கும் சிறு வெட்டாங்கல்லைத் தூக்கித் தூர விசுபவன்  உழவன். பயிரின் ஊஈடே வளர்ந்து நிற்கும் கோரையைப் பிடுங்கித் தூர எறிபவன் உழவன்.  நமக்குப் பொருட்டின்றி தோன்றுகின்ற சின்னஞ்சிறு வேலைகளையும் பொறுப்பாகச் செய்கிறவன் உழவன்.  சமூகத் தீமைகளையும், அறமற்ற செயல்பாடுகளையும் களை என்று பார்ப்பது விவசாய மனோபாவம். களையப்பட வேண்டியவை களைகள் தாமே அவை?" என்று அவர் கேட்கும் பொழுது நீண்ட பெருமூச்சு தான் வெளிப்படுகிறது.

"இந்த மனோபாவம்' தான் அவனை ஈடேற முடியாமல் செய்கிறது" என்று. கைத்துப்  போன விரக்தியில் நாஞ்சிலார் சொல்கிறார்: "அம்மணங்குண்டி ராஜ்ஜியத்தில் கோமணம் உடுத்துபவன் பைத்தியக்காரன்' என்பார்கள். எல்லோரும் எவ்வழியிலேனும் பொருள் ஈட்ட ராப்பகலாய் முனையும் காலகட்டத்தில் வஞ்சனையும் சூதும், அடுத்தவன் வயிற்றில் அடிக்கும் அநியாயமும் அறியாத உழவன் உய்வது எங்ஙனம்?'  என்று மாய்ந்து போகிறார்.

விவசாயியையும் வியாபாரியையும் வேறுபடுத்திக் காட்டும் நாஞ்சிலாரின் அனுபவப்  படப்பிடிப்பு நம் அனுபவங்களின் பாடங்களையும் நினைவுபடுத்தி எவ்வளவு நியாயமாய்ச் சொல்லியிருக்கிறார் என்று மனசாரப் பாராட்டத் தோன்றுகிறது.  இதோ நாஞ்சில் நாடனின் வார்த்தை வர்ணஜாலம்:

"உழவர் சந்தையில் உட்கார்ந்திருக்கும் விவசாயியையும் வியாபாரியையும் பிரிதறிய  இயலும்.  மொழி, முகபாவம், தராசுத்தட்டு பிடிக்கும் விதம் விவசாயி  எனில் சொத்தைக் கத்தரிக்காய் கண்பட்டால் எடுத்துக் களைவான். சொத்தை, அழுகல், நசுங்கல் என அறிந்தும் வியாபாரி கண்டும் காணாமல் எடை போடுவான்.  விவசாயிடம் வாங்கினால் ஒரு கிலோவில் நூறு கிராம் அதிகமாக இருக்கும்.  வியாபாரியிடம் நூறு கிராம் குறைவாக இருக்கும். விவசாயி வாழ்வானா, வியாபாரி வாழ்வானா?" என்று அவர் கேட்கும் கேள்வியில் நியாயத்  தராசின்  தட்டு வெகுவாகக் கீழிறங்கித்  தாழ்கிறது...

"இத்தனை பேர் இந்த நாட்டில் அமோகமாய் பிழைத்துத்  தழைக்கும் பொழுது விவசாய இனம் மட்டும் ஏன் வஞ்சனைப்பால்  சோறு உண்டு பாழாய்ப்  போகிறது?  அவனுக்குத் தெரியும், தனது பயிர் பச்சைகள் பூக்க, காய்க்க,  வீசும் காற்றுக்கு விலையில்லை..  மானாவாரியாகப் பெய்யும் மழைக்கு விலையில்லை... காயும் பகலவன் கதிர்களுக்கு விலையில்லை.. இயற்கை தனக்கு வழங்கும் நியாயத்தைச் சமூகத்துக்கு திருப்பிச் செய்ய  நினைப்பது அவன் மரபு; பண்பு..." என்று விவசாயினது மன நிலையைப்  படம் பிடித்துக் காட்டுகிறார்..

"ஒரு தரமான தேங்காய்க்கு விவசாயி ஐந்து ரூபாய் விலை பெறும் போது, கடையில் ஏன் அதை இருபத்தைந்து ரூபாய்க்கு வாங்க வேண்டும் என்ற கேள்வியும் நமக்குக் கிடையாது.  நகர்ப்புறங்களில் கூலி வேலைக்குச் செல்வோருக்கு  குறைந்தது தினத்திற்கு நானூறு ரூபாய் சம்பளம்.  கட்டிடத் தொழிலாளியின் கூலி தினமும் நானூறு எனில், விவசாயக் கூலிக்கும் அந்த ஊதியம் வேண்டும் என்பதில் நியாயமுண்டு.  அந்தக் கூலி தருவதற்கு விவசாயியின்  விளைபொருட்கள் அதற்கான விலையில் விற்கப்பட வேண்டும்  தானே?  நியாயமான விலை தேங்காய்க்கு இருபது ரூபாய் விவசாயிக்கு எனில் சந்தையில் அதையே நூறு ரூபாய்க்கு  விற்பார்கள். அதில் நமக்கு  சம்மதம் இருக்காது.  உடனே நாம் விலைவாசி உயர்வுப் போராட்டம் நடத்துவோம்.  ஆனால் இடைத்தரகர்களை, வணிகர்களைக் கேள்வி  கேட்க  மாட்டோம்.  அல்லது  கொய்ப்பரை, எண்ணெய் என இறக்குமதி செய்வோம்" என்று விவசாயப் புறக்கணிப்பைத்  தோலுரித்துக் காட்டுகிறார்.

"இன்றைய இந்திய வணிகச் சூழலில் விவசாயி வாழ வேண்டுமானால், வணிக உலகம் புரியும் அத்தனை மாய்மாலங்களையும் அவனும் செய்ய வேண்டும்.  சொத்தையையும், நசுங்கலையும், அழுகலையும் விற்க வேண்டும்.  முதல் தரம் என்று கூவி மூன்றாம் தரம் தள்ளி விட வேண்டும்.  'எவன் எக்கேடு கெட்டுப்  போனால் என்ன, கை கால் மூளை செயலற்றுப் போனால் என்ன, தன்  பை நிறைந்தால் போதும்' என்று எண்ண வேண்டும்" என்று சாடுபவர் தொடர்கிறார்:

"தீப்பேறு என்னவெனில், அது விவசாயினால் இயலாது என்பதே!  அதற்கான தொழில்நுட்பம் தெரியாது.  வஞ்சனை தெரியாது.  தரகருக்கும் வணிகருக்கும் வழங்கப்பட்டிருக்கும் அரசியல் ஆதரவும் இல்லை.  வேறு என்ன தான் செய்யலாம்?. என்ற அவரின் விடை தெரியாக் கேள்வி  நம்மையும் அசத்துகிறது.

"பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகத் துறைகள், பட்டி மண்டபப் மேடைகள், கருத்தரங்குகள் யாவும் உழவன் பெருமையைப் பேசும். அவனுக்காக கண்ணீர் சிந்தும்.  அனைத்து மத்திய  மாநில நிதிநிலை அறிக்கையிலும் விவசாய மேம்பாடு பற்றி ஒரு பத்தி வாசிக்கப்படும். 'சுழன்றும் ஏரப்பின்னது உலகம்' என்றும், 'உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி' என்றும், 'உழுதுண்டு வாழ்வாரோ வாழ்வார்' என்றும் திருக்குறள் மேற்கோள் காட்டப்படும்.

"வெட்டுப்படப்போகும் ஆட்டுக் கடாவைக் குளிப்பாட்டி, சந்தனம், குங்குமம், திருநீறு அப்பி சாமி சந்திதானத்தில் நிப்பாட்டித்  தழையைக் கடிக்க நீட்டுவது போல, கொலைக்களத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்திய  விவசாயம், 'விவசாயம் இல்லாவிட்டால் என்ன, இறக்குமதி செய்து கொள்ளலாம்' என்று நினைக்கிறது அறிவுலகம். அல்லது உணவுப் பொருட்களை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று  நினைப்பார்கள் போலும்!..

"எதற்கு விவசாய  நிலம், எதற்கு விவசாய நீர் ஆதாரங்கள், எதற்கு விவசாயி? அவன் செங்கல் சுமக்கவும், பெயிண்ட் அடிக்கவும், சாலைப்பணிகளுக்கு போவான்.  அவன் பெண்டிர் உணவு விடுதிகளில் தட்டு கழுவலாம்.  நமது அரசியல்காரர்களுக்கும் 'கர்நாடகமே தண்ணீர் தா' 'ஆந்திரமே தண்ணீர் தா, கேரளமே தண்ணீர் தா' என்று இரந்து கூவித் தொண்டைப்புண் ஏற்படாது.

"நமக்குத்  தாராளமாய் செல்போன், வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக், வெப்சைட் சேவைகள் உண்டு.  மெயிலில் ஆர்டர் செய்தால் பிளாட் கதவைத் தட்டுவார்கள்,  பீட்சா, பர்கர், புரோட்டா, சப்பாத்தி, பிரியாணி, குளிர்பானங்கள் கொண்டு வந்து!..  நமது சந்ததியினர் அரிசி காய்க்கும் மரம், வாழைப்பழம் காய்க்கும் கொடி, ஆப்பிள் ஆரஞ்சுக் கிழங்குகள் காய்க்கும் புதர் எனத் தேடித் திரிவார்கள்.

"அருங்காட்சிக் கூடங்களில், கண்ணாடிக் கூண்டுக்குள் கறுப்பாகக் குள்ளமாக இரு  ஆண்  பெண் உருவங்களை, இலை தழை ஆடகளுடன் பழங்குடிகள் என்று நிறுத்தி வைத்திருப்பார்கள்.  எதிர்காலத்தில் வேட்டி உடுத்து, தலையில் துண்டு கட்டிய ஆணையும், பிரா, பிளவுஸ் போடாத  கண்டாங்கி உடுத்த பெண்ணையும் கையில் மண்வெட்டி, பன்னருவாள், கூடை எனக் கொடுத்து கண்ணாடி கூண்டுக்குள் நிறுத்தி, 'விவசாயி' என எழுதி வைப்பார்கள்.  நமது சந்ததியினர் பார்த்து  நிற்பார்கள், பிழைக்கத்  தெரியாமல் அழிந்து போன இனம் என்று வியந்து!

                                                                                 நன்றி: குங்குமம்

-- என்று நாஞ்சில் நாடன்  கட்டுரையை  முடிக்கும் பொழுது அவர் பட்ட வேதனையின் வீச்சு நம்மையும் ஆட்கொள்கிறது.  தேசநலனின் நாம் கொண்டிருக்கும் தீராத காதல், எங்கு நேர்ந்திருக்கிறது  தவறு என்று தெளிவாய்த் தெரிவித்து அந்தத் தவறைக்  களைய  வேண்டிய  தாபமாய் நம்மில் விளைகிறது.

சீரிய சமூக நோக்கங்கள் கொண்ட எழுத்துக்கள் சாகாவரம் பெற்றவை. நியாயங்களுக்குப்  போராடுபவை.  நாஞ்சில் நாடனின் எழுத்துக்களின் வீச்சு நம்மையும் ஆட்கொள்வதில் வியப்பில்லை.

                                                                                       
திரு.எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களை எல்லோருக்கும் தெரியும்.  சுதந்திர இந்தியாவில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய விவசாய வித்தகர்.  சென்னையில் தன்  பெயரில் ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவி, 90 வயதிலும் தொய்வில்லாமல் தன் பணியைத் தொடர்ந்து  கொண்டிருக்கிறார். இந்திய விவசாயம் இன்றைய நிலைமை  குறித்து அவருடனான பேட்டி ஒன்றை 'கல்கி'  பத்திரிகை தனது 15-11-15 இதழில் வெளியிட்டிருக்கிறது. அந்தப்  பேட்டியிலிருந்து சில குறிப்பிட்ட பதிவுகள்:

கேள்வி: கடந்த 60 ஆண்டுகளில் இந்திய விவசாயம் எப்படிப்பட்ட முன்னேற்றத்தைக் கண்டுள்ளது?

பதில்:  சுதந்திரம் பெற்ற் காலகட்டத்தில் இந்தியாவில் கடுமையான உணவுப்  பஞ்சம் நிலவியது.  பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, ஒரு குடும்பத்தில் ஒரு நபர் ஒரு நாள் உணவைத் தியாகம் செய்யுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்தார். அந்த காலகட்டத்தையெல்லாம் தாண்டி உணவு  உற்பத்தியை அத்கப்படுத்தி,  இன்று  தன்னிறைவு காணும் அளவுக்கு இந்திய அரசாங்கம், இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும்  உணவுப் பாதுகாப்பை உறுதிப்ப்டுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியுள்ளது.  இது ஒரு மகத்தான சாதனை.  ஆங்கிலத்தில் இதனை 'From begging bowl to bread basket' என்பார்கள்.   என் வாழ்நாளிலேயே இந்த அபார சாதனையைக் காணும் பேறு பெற்றது என்  பாக்கியம்  என்று  கருதுகிறேன்.

கேள்வி: உணவு உற்பத்தியில் தன்னிறைவு கணட போதிலும் நாட்டில் ஏழ்மை நிலவுகிறதே?

பதில்:  இங்கே உணவுப் பொருளுக்குப் பஞ்சமில்லை.  தாராளமாகக்  கிடைக்கிறது.  ஆனால் அதை வாங்கும் சக்தி எல்லா மக்களுக்கும் இல்லை எனபது தான் இதற்குக் காரணம்.


                                                                             -- நன்றி:  கல்கி

போதும் பேட்டி.  இந்தப் பேட்டியில்  நமக்கு வேண்டிய செய்தியை எடுத்துக்  கொண்டாகி விட்டது.

இந்தியாவில் தன்னிறைவு காணும்  அளவுக்கு விவசாயம்.  உணவுப் பொருளுக்குப் பஞ்சமில்லை.  ஆனால் வாங்கும் சக்தி எல்லா மக்களுக்கும் இல்லை---  என்பது அடிக்கோடிட்டு சொல்ல வேண்டிய விஷயம்.

உணவு உற்பத்திக்குப்  பஞ்சமில்லை.  ஆனால் அதை வாங்கும் சக்தி எல்லா மக்களுக்கும் இல்லை என்றால் என்ன அர்த்தம்?..


தெரிந்தவர்கள் சொல்லலாம்..
படங்களைப் பதிவிட்டோருக்கு நன்றி.


21 comments:

ஸ்ரீராம். said...

வேஷ்டி கட்டும் ஊரில் கோவணம் கட்டுபவன் பைத்தியக்காரன் என்பது முந்தைய பழமொழி! அது முன்னேறிவிட்டது போலும்!

ஒரு இடத்தில் 'த்' விட்டுப் போயிருக்கிறது!

சம்பந்தமில்லாத செய்தி ஆயினும் இந்த மாமழை நேரத்தில் தொலைக்காட்சியில் ஒரு காட்சி பார்த்தேன். வரிசையாக அமர்ந்திருக்கும் சாலையோர காய்கறி வியாபாரிகளில் ஒரு கணவனும் மனைவியும், தங்கள் சிறு கடையில் வைத்திருந்த கீரைக் கட்டுகளையும், காய்களையும் சாலையில் தேங்கி நின்ற "தண்ணீரில்" அலசி அலசி எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள்! மற்றவைகள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

முன்பெல்லாம் பசலைக் கீரை எனக்குப் பிடிக்கும். சமீபத்தில் பிடிக்காமல் போனது. அதற்குக் காரணம் யதேச்சையாக ஒரு பசலைத் தோட்டத்தில் நான் கண்டஒரு காட்சி!

நாநா கட்டுரை பிரமாதம். பொதுவாக இது மாதிரி அங்கலாய்ப்புகள் எந்த விஷயத்திலும் எந்தக் காலத்திலும் சகஜம். கேட்டால் இது ஜனநாயக நாடு என்கிற பதில் வரும்!

வாங்கும் சக்தியைப் பற்றி : டிசம்பர் 2015 ஒன்றாம் தேதிக்கு முன்னர் ஒரு அர்த்தம் ; அப்புறம் ஒரு அர்த்தம்.

G.M Balasubramaniam said...

சில எழுத்தாளர்களின் எழுத்து பிடித்துப் போய்விட்டால் படித்துப்பார்த்தபின் நமக்குத் தெரியாததை ஏதும் சொல்லவில்லை என்று புரிய நேரமாகும் . விவசாயிக்குத் தகுந்த விலை கிடைக்காததன் காரணம் இடைத்தரகர்கள் தான் என்று அநேகமாக அனைவருக்கும் தெரியும் விவசாயிக்கும் தெரியும்

Durai A said...

கும்பகோணம் மாயவரம் ஒட்டிய விவசாய நிலங்களில் பம்புசெட் ஓரமாக குடிசைபோட்டு சிறிய அம்மா கலர்டிவியில் மெகா சீரியல் பார்ப்பதை நாஞ்சில் நாடன் கவனிக்கவில்லை போல. ஆடுதுறையிலிருந்து மருத்துவக்குடி போகும் வழியில் அவசியம் பார்க்கலாம் - அங்கே தான் அரிசி ஆய்வுத்துறையோ விவசாய ஆய்வுத்துறையோ கூட இருக்கிறது - விவசாயிகள் ஒன்றும் அறியாதவர்கள் அல்ல. நாஞ்சில் நாடன் இந்தக் காலத்துக்குக் கொஞ்சம் வர வேண்டும். நாற்று நடுவதில் இருந்து அறுவடை வரை ரிமோட் கன்ட்ரோலில் செய்ய முடிகிற இந்த நாளில் சும்மா விவசாயிகளுக்கு லீவ் இல்லை அது இல்லை என்பது புலம்பலோ? ("சாகுபடிக்கு ஆள் கிடைக்க மாட்டேங்குது - எல்லாரும் நூறு நாள் வேலைல சோம்பல்பட்டு இப்பல்லாம் வேலைக்கே வரதில்லை" என்று ஒரு அன்பர் சொன்னதும் நினைவுக்கு வருகிறது)


Durai A said...

வாங்கும் சக்தி எல்லாருக்கும் இல்லை என்பது உண்மையா? சக்தி எங்கிருந்து வரும்?

Durai A said...

வாங்கும் சக்தியில்லை என்பதற்காக இலவசமாகவோ அல்லது விலை மலிவாகவோ ஒரு பத்து பேருக்காவது விவசாயிகள் விற்பார்களா?

இராஜராஜேஸ்வரி said...

இந்தப் பேட்டியில் நமக்கு வேண்டிய செய்தியை எடுத்துக் கொண்டாகி விட்டது.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

டி.மு.-- டி.பி. கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிக் கொண்டு வருகிறது.

கீரைக் கட்டு ஒன்று ரூஈ.10/- என்று இருந்தது டி.பி.யில் ரூ.20/- ஆகி, தற்போது ரூ.15/- இந்த பதினைந்தே சாஸ்வதமாகிப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

நீங்கள் சொல்வதைப் பார்த்தால், நமக்குத் தெரிந்ததைச் சொல்கிறவர்கள் தாம் பிடித்துப் போகிறார்கள் என்றாகிவிடும்.

தெரிந்ததைத் தான் சொல்கிறார்கள் என்பது சொத்தை வாதம். எப்படிச் சொல்கிறார்கள் என்பது தான் அவரவர் திறமையாகப் போகிறது. எழுத்தோ பேச்சோ நமக்குத் தெரிந்ததோ, தெரியாததோ அதை எப்படிச் சொல்கிறார்கள் (Narration) என்பது தான் முக்கியமாகிப் போகிறது. நமக்கு 'எழுத்துக் கிறக்கம்' ஏற்படுகிற அளவுக்கு எழுத்துக்கள் பிடித்துப்போய் அடுத்து அப்படி எழுதியவர்கள் நமக்குப் பிடித்துப் போகிறார்கள். எழுதியவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளாமலிருப்பது ஒருவித அலட்சிய போக்கே. அது நம்மில் விளையும் ஒரு அங்கீகார மறுப்பு. நம்மை ரசனைக்குள்ளாக்கியவர்களை அறிந்து கொள்ளாமலிருப்பது எதற்கெடுத்தாலும் நம்மை நாமே முன்னிலைப்படுத்திக் கொள்வதில் கொண்டு போய் விடும். 74 வயது என் அனுபவத்தில் கற்றுக் கொள்வதின் அடிப்படையில் தான் ஒவ்வொன்றையும் நான் அறிந்து கொள்கிறவனாகிறேன். இந்தக் கற்றுக் கொள்ளல் முடிவே இல்லாமல் தினமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் உற்பத்தி செய்வோரில் ஆரம்பித்து ஐந்து அடுக்கு தாண்டி தான் நுகர்வோர் கையில் பொருள் வருகிறது. இந்த ஐந்தடுக்கு குறையக் குறைய விலைவாசி குறையும். அனால் இந்த ஐந்தடுக்கின் ஒவ்வொரு நிலையிலும் இருப்போருக்கு அதுவே தான் தொழிலாகிப் போயிருக்கிறது. அதனால் ஐந்தடுக்கில் ஏற்படும் எந்த மாறுதலும் எங்கள் தொழிலைப் பாதிக்கும் என்கிறார்கள். இது தான் இங்கே உள்ள சிக்கல்.

எல்லோருக்கும் ஏற்புடையதான ஒரு வழியைக் காண வேண்டும்.


ஜீவி said...

@ Durai. A. (1)

வாங்கும் சக்தி மக்களின் வருமான சக்தியைப் பொருத்து இருப்பதாக வெளிப்பார்வைக்குத் தெரியும். ஆனால் அப்படியில்லை. ஒரு நாட்டின் பணத்திற்கான மதிப்பே, மக்களின் வாங்கும் சக்தியை நிர்ணயிக்கிறது. பணவீக்கம் அதிகரிக்க அதிகரிக்க மக்களின் வாங்கும் சக்தி அதல பாதாளத்திற்கு வீழ்ச்சியடையும். பணத்தின் உண்மையான மதிப்பே, சக்திமானாகச் செயல்படுகிறது.

ஜீவி said...

@ Durai.A. (3)

வாங்கும் சக்தி இல்லை என்பது மேட்டுக்குடி வர்க்கத்தினரை தவிர்த்து எல்லோருக்கும் பொதுவான ஒன்று. ஒன்றை விற்பவர் இன்னொன்றை வாங்குபவராக இருப்பார். வாங்குவதும் விற்பதும் மாற்றி மாற்றி அவர்களின் சக்திக்கு ஏற்ப சாதாரண மக்களில் நிகழும் ஒன்று.

சிவாஜி கணேசன் கூட தன்னை விவசாயி என்று சில தருணங்களில் சொல்லிக் கொண்டதுண்டு.. அப்படிப்பட்ட விவசாயிகள் தான் உங்கள் பார்வைக்கு விவசாயிகளாகத் தெரிகிறார்கள் போலிருக்கு. அடித்தட்டு விவசாயி தன் விளைபொருளின் விலையை நிர்ணயிக்கும் சக்தி பெறும் கால கட்டத்தில் நீங்கள் சொல்வதும் நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

ஜீவி said...

@ Durai. A. (2)

வாங்கும் சக்தி மக்களின் வருமான சக்தியைப் பொருத்து இருப்பதாக வெளிப்பார்வைக்குத் தெரியும். ஆனால் அப்படியில்லை. ஒரு நாட்டின் பணத்திற்கான மதிப்பே, மக்களின் வாங்கும் சக்தியை நிர்ணயிக்கிறது. பணவீக்கம் அதிகரிக்க அதிகரிக்க மக்களின் வாங்கும் சக்தி அதல பாதாளத்திற்கு வீழ்ச்சியடையும். பணத்தின் உண்மையான மதிப்பே, சக்திமானாகச் செயல்படுகிறது.

ஜீவி said...

Durai. A. (1)

/கும்பகோணம்-- மாயவரம் ஒட்டிய விவசாய நிலங்களில்...//

உழைப்போர் ஓய்வும், மனமகிழ்ச்சியும் கொள்வது அவர்களின் உற்பத்தித் திறனைக்கூட்டும்.

படகோட்டும் பொழுது 'ஏலேலோ, ஐலஸா..' பாட்டின் வெளிப்பாடே இதான்.

// நாற்று நடுவதில் இருந்து அறுவடை வரை ரிமோட் கன்ட்ரோலில் செய்ய முடிகிற இந்த நாளில் //

தனது ஆரம்ப காலத்தில் தினமணிகதிரில் சுஜாதா எழுதிய ஒரு சிறுகதை நினைவுக்கு வருகிறது. விளைநிலங்களில் பகாசுர டிராக்டர்கள் இறங்கினால் அவை கொடி பிடிக்காது, கோஷம் போடாது என்று அந்தக் கதையில் சில வரிகள் வரும்.

ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

//இந்தப் பேட்டியில் நமக்கு வேண்டிய செய்தியை எடுத்துக் கொண்டாகி விட்டது.//

கரெக்ட். வேண்டாத செய்திகள் எதுவும் இல்லையெனிலும், வேண்டியதை மட்டும் சொல்ல வேண்டிய விஷயத்திற்கு உபயோகப்படுத்திக் கொண்டாயிற்று.

வல்லிசிம்ஹன் said...

வெகு நாட்களுக்குப் பிறகு உங்கள் பதிவைப் படிப்பதில் மகிழ்ச்சி ஜிவி சார்..
பழைய பாடல் விவசாயி படப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

நல்லது சொல்பவர்களும் இல்லை.
விவசாயி என்றும் நல்ல விவசாயியாகத் தான் இருப்பான். நடுவில் உள்ள மேற்பார்வையாளர்களால் எங்கள் பாப நாசம்
நிலங்கள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன தஞ்சை அருகே..

வசூல் செய்பவரின் வாயில் எப்போதும் விளையவில்லை என்பதுதான் மந்திரம்..
இவருக்குப் பிறகு அந்த நிலத்து ஆசையும் விட்டுவிட்டது.
யாராவது ஒருவர் சாப்பிட்டு நன்றாக இருக்கட்டும்.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

வாங்க, வல்லிம்மா. நெடுநாட்களுக்குப் பிறகு உங்களை என் தளத்தில் பார்த்ததிலும் மகிழ்ச்சி.

உங்கள் ஆதங்கம் புரிந்தது. 'எல்லாம் சாவியாகப் போய்விட்டது' என்று கைவிரிப்பது அந்தக் காலத்தில் ரொம்பவும் சகஜம்.

விவசாயி என்று சொல்லும் பொழுது 'tiller of the soil' என்றே அர்த்தப்படுத்திக் கொள்கிறேன். 'இழப்பதற்கு எதுவுமில்லை' என்றிருப்போருக்கு ஏமாற்றத் தெரியாது.

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

கோமதி அரசு said...

'விவசாயம் இல்லாவிட்டால் என்ன, இறக்குமதி செய்து கொள்ளலாம்' என்று நினைக்கிறது அறிவுலகம். அல்லது உணவுப் பொருட்களை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று நினைப்பார்கள் போலும்!..//

உண்மை முகத்தில் அறைகிறது.

நாஞ்சில் நாடன் அவர்கள் பகிர்வுக்கு நன்றி.


விவசாயி நேரடியாக விற்பனை செய்தல் நல்லது இடை தரகர் இல்லாமல்.நிலம் வைத்து இருப்பவர்களிடம் கேட்டால் உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பார்கள். இயற்கை சீற்றம், தண்ணீர் பற்றாகுறைகளால் விவசாயி படும் இன்னல் பல.
இப்போது வயல்களில் மனிதர்கள், மாடுகளை விட இயந்திரங்களே வேலை நிறைய செய்கிறது. (நாத்து நட, அறுவடை செய்ய, மருந்து அடிக்க இப்படி பல) (களைபிடுங்க மட்டும் இயந்திரம் இல்லை.) குறுநிலங்களில் மட்டும் வேலை ஆட்கள் பணி நடைபெறுகிறது. தான் பட்ட இன்னல் தங்கள் குழந்தைகள் படகூடாது என்று விவசாயி தன் குழந்தைகளை படிக்க வைத்துவெளியில் வேலைக்கு அனுப்பிவிடுகிறார், அவருக்கு பின் விவசாயம் பார்க்க ஆள் இல்லாமல் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறுகிறது.

அப்பாதுரை said...

பண்வீக்கம் உற்பத்தியையும் பாதிக்கும் இல்லையா?

அப்பாதுரை said...

உற்பத்தியும் வாங்கும் சக்தியை பாதிக்கும்.

KABEER ANBAN said...

மிக முக்கியமான சிந்திக்க வேண்டிய விஷயம் இது.
என் பின்னூட்டம் சற்றே நீளமாக போய்விடும் வாய்ப்புண்டு.
பல வருடங்களுக்கு முன்,முனைவர் ந.கண்ணன் தன் இடுகை ஒன்றில் இது போன்ற நிலை தென் கொரியாவில் ஏற்பட்டது குறித்து தெரிவித்திருந்தார். அதில் எப்படி அங்கிருக்கும் விவசாய இளைஞர்களுக்கு திருமணம் செய்ய தரகர்கள் மூலம் இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் நாடுகளிலிருந்து பெண்களைத் தேடும் அவலநிலை ஏற்பட்டது என்பதை விவரித்திருந்தார். ஏனெனில் நிலத்தில் வேலை செய்ய அந்த நாட்டுப் பெண்கள் தயாராக இல்லை. அறுபதுகளில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருந்த நாடு தொண்ணூறுகளில் உணவு பொருட்களுக்கு இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது. இன்று நம் நாட்டிலும் மங்களூர் பகுதி பெண்களைத் தேடி குஜராத் கிராமங்களிலிருந்து பெண் கேட்டு வருவதாக செய்தி படித்தேன். பணம் சம்பாதித்தால் போதும், எதையும் எவரையும் வாங்கிவிடலாம் என்று நினைப்பு எல்லா தரப்பிலும் வந்துவிட்டது.

காரணம் பணவீக்கம்.இது எதனால் ஏற்படுகிறது? பணவரவை, உற்பத்தி மூலம் மற்றும் சேவை மூலம் வருவன என்று பிரிக்கலாம். சேவைத்துறை இன்று பெரும்பாலும் ஆட்டிப்படைக்கிறது. மென்பொருள் துறை,தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்தயாரிப்பு, ரியல் எஸ்டேட், பங்கு வணிகம்,மருத்துவம்,கல்வி இப்படி பணப் புழக்கம் உள்ள அனத்துத் துறைகளிலும் மக்களுக்கு நாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கு வெளிநாடுகளில் அவசியம் இருப்பதாலும் பணத்தை அள்ளி வீச தயாராக இருப்பதாலும் எல்லோரிடமும் பணம் இருக்கிறது. போதாதற்கு கறுப்புப் பணம் வேறு.

இப்படி உற்பத்தி இரண்டாம் பட்சமாக போவதே நாம் காணும் பொருளாதார பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம். வெறும் விவசாயம் மட்டுமல்லாமல் தொழில் துறையிலும் கூட உற்பத்தியாளர்களை விட விற்பனைத்துறையில் இருப்பவர்கள் மேலிடத்தில் வைக்கப்படுகிறார்கள். அவர்களைவிட மேலே பைனான்ஸ்.
இதற்கான நிர்வாகக் கதை ஒன்றை [http://nirmal-kabir.blogspot.in/2007/02/blog-post_27.html] பல வருடங்களுக்கு முன் சொல்லியிருக்கிறேன். முடிந்தால் படிக்கவும்.
கருத்து பகிர்வுக்கு நன்றி.

ஜீவி said...

@ கோமதி அரசு

// அவருக்கு பின் விவசாயம் பார்க்க ஆள் இல்லாமல் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறுகிறது.//

நீங்கள் அடுக்கியிருக்கும் உண்மைகளும் முகத்திலறைக்கின்றன.

சோழ மன்னர் காலத்தில் மாடு கட்டிப் போரட்டித்தால் மாளாது என்று யானை கட்டிப் போரடித்த தஞ்சைத் தரணி. இன்று எதையெடுத்தாலும் இயந்திர மயம்.

உற்பத்திப் பொருளுக்கும் அதற்கான விலைக்கும் தலைகீழ் விகிதம். உற்பத்தி அதிகரித்தால் விலை குறைய வேண்டும். இந்த பொருள்ளாதார சூத்திரங்கள் எல்லாம் பொய்யாகிப் போகும் அளவுக்கு நாட்டில் விலைவாசி எகிறியிருக்கிறது.

ஏதனால் இந்த உற்பாதம் என்று யோசிக்க வைக்கவே இக்கட்டுரை. கபீரன்பன் சொல்லியிருக்கும் கருத்துக்களையும் பாருங்கள்.

ஜீவி said...

@ கபீரன்பன்

இந்த மாதிரி பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் தாம் தொடர்ந்து ஒரு பிரச்சனையை அலசுவதற்கு வாய்ப்பளிக்கின்றன. வாசிக்கும் அன்பர்களின் பின்னூஈட்டங்களிலிருந்து தெரியாத கருத்துக்களைத் தெரிந்து கொள்வதால் அறிவைக் கொளுத்தும் பின்னூட்டங்கள் எவ்வளவு நீண்டாலும் அது நன்மையையே பயக்கும்.

ஒரு கிலோ துவரம் பருப்பு விற்ற விலைக்கு இன்று அரைக்கிலோ துவரம் பருப்பு தான் வாங்கலாம். உற்பத்திக்கு நம் நாட்டில் பஞ்சமே இல்லை. அதீத உற்பத்தி குறித்து நெஞ்சை நிமிர்த்திய அறிக்கைகள் வெளிவருகின்றன். உற்பத்தியில் சுணக்கம் என்றால் விலைவாசி ஏற்றத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். நம் நாட்டில் அந்தப் பிரச்னை இல்லை என்பதே விஷயம்.

உற்பத்தியாளர்களிடமிருந்து கைக்குக் கை மாறிவரும் முறையில் அங்கங்கே கொஞ்சம் அதிக விலை என்று ஐந்தடுக்குகள் தாண்டி வரும் பொழுது வாங்குவோர் அதிக விலை கொடுக்க நேரிடுகிறது என்று வியாபாரப் பெருமக்களே ஒப்புக் கொள்கிறார்கள். உற்பத்தியாளர்-- உபயோகிப்போர் இவர்களுக்கு இடையில் பொருள்களைக் கையாளுவோரைத் தான் சேவைத் துறை என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் போலிருக்கு. உற்பத்தித் துறையை விட சேவைத் துறை பெருத்துப் போய் இருப்பது தான் பிரச்னையின் வேர். சேவைத்துறையும் கையைக் கட்டிக் கொண்டு சம்பாதிப்பதல்ல. இடம், ஆள், போக்குவரத்து, அதற்கான செலவு என்று மூலதன முடக்கலைத் தாண்டி இந்த நாட்டின் வேலையில்லா திண்டாட்டத்திற்கு மிகப் பெரும் தீர்வு கண்டு வளர்ந்திருக்கிறது. உற்பத்தியாவதை மக்கள் கைகளில் கொண்டு போய்ச் சேர்ப்பது மிகப்பெரிய சாகசம். உற்பத்தியாளருக்கும் உபயோகிப்போருக்குமான இந்த சேவைத்துறை பாலம் தகர்ந்ததென்றால் உற்பத்தி ஆகுபவை விலை போகாமல் சுணக்கம் காணுகிற ஆபத்தும் இருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு கண்டு தான் விலைவாசி கீழே இறங்க வேண்டும்.

மொத்த தானிய வர்த்தகத்தை அரசே ஏற்று நடத்தாமல் விலைவாசி இறங்காது என்று ஒரு காலத்தில் கருத்து இருந்தது. அந்த கருத்தும் இந்தக் காலத்திற்கு ஒத்து வராது.

பணவீக்கம் என்பது பணம் தன் மதிப்பை இழப்பதே. பணம் தன் மதிப்பை மீட்டதென்றால் விலைவாசி இறங்கி வர வாய்ப்பிருக்கிறது.

பணம் தன் மதிப்பை மீட்பதெப்படி?.. இந்த மிலியன் டாலர் கேள்வி தான் (கேள்விக்குக் கூட பணத்தால் தான் மதிப்பு கூட்டுகிறோம் பாருங்கள்) பொருளாதார வல்லுனர்கள் மத்தியில் விஸ்ரூபம் எடுத்து நிற்கிறது.

நீங்கள் சொல்லியிருக்கும் பணவரவு சமாசாரம் புரிகிறது. ஆனால் வரவை செலாவணியாக்குவது என்று ஒன்றிருக்கிறதல்லவா?.. அதற்கு நீங்கள் முக்கியத்துவன் கொடுக்க முயற்சிக்கவில்லையோ என்று தோன்றுகிறது.

அந்த பைனான்ஸ் நிர்வாகக் கதையைப் படித்துப் பார்க்கிறேன். மிக்க நன்றி, கபீரன்ப!

Related Posts with Thumbnails