Friday, September 23, 2016

ஆறு வாரத் தொடர்: உங்களுக்காவது தெரியுமா?....

பகுதி:  4

"உள்ளே உங்களை நான் பார்த்தேனே.." என்று  பெரியவர்  சொன்னதும்  "அப்படியா?" என்று  மீண்டும் திகைத்தேன். "உள்ளே தரிசனம் செய்யும் பொழுது என்னை மறந்தேன், ஐயா! எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருந்தது. இப்பொழுது அவன் குழந்தையான எனக்கு ஒரு குழந்தையைக் கொடுக்க அருள் புரிந்திருக்கிறான், ஐயா! அவன் தந்த அந்த ஆனந்தத்திலும், அருளிலும் என்னை மறந்து அவன் கருணையில் லயித்துவிட்டேன்" என்றேன்.

பெரியவர் புன்னகையுடன் மெய்சிலிர்த்த உணர்வுடன் பேசும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். மெல்லச் சிரித்து விட்டுச் சொன்னார். "அப்படியா?..குழந்தை பாக்கியம் கொடுத்திருக்கிறாரா?..   அவர் அருளுகென்ன குறைச்சல்?" என்றவர், "உங்களுக்கு எந்த ஊர்?" என்று கேட்டார்.

"திருநின்றவூர் ஐயா...சென்னைக்கு அருகில் இருக்கிறது."

"அடேடே! பூசலார் ஊராச்சே?" என்றார்.

எனக்குப் புரியவில்லை. "எந்தப் பூசலார்? உங்களுக்கு நண்பரா?"

"அதற்கும் மேலே! உயிருக்கு உயிரானவன். ஒருதடவை அவன் அழைத்து உங்கள் ஊருக்கு வந்ச்திருக்கிறேன்..அது நடந்து பல வருஷங்கள் ஆயிற்று. இருந்தும் நன்கு நினைவிலிருக்கிறது."

"அப்படியா, ஐயா! ஒருகால், அந்தப் பெரியவரை என் அம்மாவுக்குத் தெரிந்திருக்கலாம்.. என் தாயார் பிறந்தது, என் தந்தையை மணந்தது எல்லாம் அந்த ஊரில் தான்..அதனால், அம்மாவுக்குத் தெரிந்திருக்கலாம்."

"நிச்சயம் தெரிந்திருக்கும். ஊருக்குப் போனதும் அவரிடம் கேட்டுப் பாருங்கள்" என்றார்.

"கண்டிப்பாக ஐயா. நின்று கொண்டு பேசுகிறீர்களே? இங்கு தாங்கள் உட்காரலாமா?"

"செய்யலாமே?" என்ற பெரியவர், என் கைப்பற்றி, தோள் பிடித்து ஒரு தூணின் கீழ் அமர்ந்தார். அவர் ஸ்பரிசம் பட்டதும் உடலே சிலிர்க்கிற மாதிரியான உணர்வேற்பட்டது எனக்கு.                  


பெரியவரே தொடர்ந்தார். "அவன் என்ன செஞ்சான், தெரியுமா?.. திருநின்றவூருக்கு வா,வா என்று நச்சரித்து என்னை பலதடவை கூப்பிட்டுக்கொண்டே இருந்தான். அவன் அழைப்பை தட்டமுடியாத அளவுக்கு எனக்கும் அவன் மேல் பிரியம். ஒருநாள் அவனுக்காக திருநின்றவூருக்குக் கிளம்பி விட்டேன். என்னைக் கண்டதும் சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை, அவனுக்கு."

ஒருநாள் அவனுடன் இருந்து விட்டு வரலாம் என்றால் 'இங்கேயே தங்கிவிடு; போகாதே' என்றான். நீங்களே சொல்லுங்கள்..எவ்வளவு வேலை எனக்கிருக்கிறது?  அவனோடேயே, திருநின்றவூரிலேயே இருக்க வேண்டுமானால, எப்படி?.."

அந்த இரண்டு பெரியவர்களிடமும் நிலவும் நட்பின் ஆழத்தை நினைத்து நெஞ்சுக்குள் வியந்தபடி,"பிறகு என்ன செய்தீர்கள்?"என்று கதை கேட்கும் ஆவலில் கேட்டேன்.

"என்ன செஞ்சேனாவது? தீர்மானமாக அவன் கிட்டே சொல்லிவிட்டேன். இதோ பார்.. எனக்கு ஏகப்பட்ட ஜோலி. உன்னோடேயே இருக்க முடியுமா?" என்று அவனிடம் கேட்டேன்.

கோயிலில் அதிக கூட்டமில்லை; நாலைந்து வெளிநாட்டு டூரிஸ்ட்கள் காமராவும் கையுமாக வெளிப்புறமும் உள்ளேயும் அலைபாய்ந்து கொண்டிருந்தார்கள். நாங்களும் எழுந்து விட்டோம்.

பெரியவரே தொடர்ந்தார்: "அவனுக்கு மிகுந்த ஏக்கமாகப் போய்விட்டது..என்னைப் பிரியவே அவனுக்கு மனமில்லை. பரிதாபமாக என்னையே பார்த்தான். கடைசியில் அவனைத் தேற்றும்படி ஆகிவிட்டது. உன் நினைப்பில், நெஞ்சில் தான் நான் எப்பொழுதும் இருக்கிறேனே?..அப்படி இருக்கும் பொழுது நமக்குள் பிரிவேது?..'பிரிவு' என்று நீ நினைப்பதெல்லாம் பொய்யானது.  ..நானும் நீயும் ஒன்றுதானேப்பா" என்று அவனைத் தேற்றினேன்.

"கடைசியில் சமாதானம் ஆனவன் மாதிரி, 'ஆமாம்..என் நெஞ்சில் உன்னுடைய நினைவுகளே குடிகொண்டிருக்கும் பொழுது நமக்குள் பிரிவேது?' என்று பிரியா விடை கொடுத்தான்.

பேசிக்கொண்டே கோயிலின் உண்டியல் பக்கம் வந்து விட்டோம். உண்டியலைப் பார்த்ததும் தான், 'காசை அதில் போட்டுடு' என்று அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. பெரியவரிடம் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்ததில் எல்லாவற்றையும் மறந்திருக்கிறேன்!..

உண்டியலுக்கு பக்கத்தில் வந்ததும், "ஒரு நிமிஷம்--" என்று சொல்லிவிட்டு, சட்டைப்பையில் கைவிட்டேன்.

பகீரென்றது.


(வளரும்)

படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.

20 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஈசனோடான சந்திப்பினை மிகவும் சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள்.

கடைசியில் ஓர் கொக்கியுடன் ’தொடரும்’ போட்டுள்ளீர்கள்.

படத்தேர்வுகள் எல்லாம் அருமையாக உள்ளன.

தொடரட்டும் ............

கோமதி அரசு said...

வந்த பெரிய மனிதர் ஈசன் என்பதை அவர் பூசலார் அழைத்து வந்தாக சொன்ன விதம் உறுதி படுத்துகிறது.
பூசலார் நாயன்மார் கதை அவருக்கு அம்மா சொல்வார் இனி.
புண்ணியம் செய்து இருக்கார் இறைவனை நேரில் காண அவருடன் உரையாட. பணம் என்னவாயிற்று என்பதை அறிய ஆவல்.

கோமதி அரசு said...

"செய்யலாமே?" என்ற பெரியவர், என் கைப்பற்றி, தோள் பிடித்து ஒரு தூணின் கீழ் அமர்ந்தார்//

இதில் ஏதும் ஒளிந்து இருக்கிறதா?
அவருக்கு வேண்டியதை அவரே எடுத்துக் கொண்டாரோ?

கோமதி அரசு said...

விளையாடி பார்ப்பது அவருக்கு கைவந்த கலை ஆயிற்றே!
திருவிளைடாடல் இதில் உண்டோ? போன் பின்னூட்டத்தில் தொடர்ந்து எழுத நினைத்தது.

G.M Balasubramaniam said...

ஒரு சில அனுபவங்கள் ஒவ்வொருவர் ரசிக்கும் வகையில் இருக்கும் அதில் கருத்துசொல்வது சரியாகாது எனக்கு இவை எல்லாம் surrealistic ஆகத் தெரிகிறது தவறாக நினைக்க வேண்டாம்

‘தளிர்’ சுரேஷ் said...

சுவாரஸ்யம் தொற்றிக் கொள்கிறது. பெரியவர் உடனான உரையாடல்கள் அருமை! தொடர்கிறேன்!

middleclassmadhavi said...

அடுத்த பகுதி எப்போ என்று கேட்கத் தூண்டுகிறது!! எப்போ?
தொடரின் கடைசி வாக்கியம் உங்களுக்காவது தெரியுமா இல்லை தானே?! :-))

வே.நடனசபாபதி said...

அந்த ‘பெரியவர்’ எல்லாம் வல்ல இறைவன் எனத் தெரிகிறது. சட்டைப்பையில் இருந்த பணம் காணாமல் போனதும் அவருடைய திருவிளையாடல் தானோ? அடுத்து என்ன நடக்க இருக்கிறது என அறிய காத்திருக்கிறேன்.

ஸ்ரீராம். said...

அற்புதங்கள்.. விடை தெரியா சம்பவங்கள் சிலர் வாழ்வில் நடப்பதுண்டு. அது போல ஒன்றா இது?

Ramani S said...

படிக்கப் படிக்க உணர்வுப் பூர்வமாக
ஒன்றிப் போனேன்
புரிந்து கொள்ளும்படியாகப்
பூடகமாக சொல்லிச் சென்ற விதம்
மனம் கவர்ந்தது
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..
வாழ்த்துக்களுடன்...

ஜீவி said...

@ வை.கோ.

நீண்ட கதைகளுக்கு நடுவே அதுவும் அதைப் பிரித்துப் பிரித்து எழுதும் போது 'கொக்கி' போடுதல் அந்தக் கதையின் சுவாரஸ்ய வாசிப்புக்கு துணை செய்யும்.

இன்றைய சிறுகதை, புதின பிர்மாக்காள் இந்த மாதிரி கொக்கி போட்டால், அது ஒரு கதைக்கான இலட்சணத்தையே இழக்கிறது என்கிறார்கள். சொல்லப்போனால், கதைகள் இயல்பாக இருக்க வேண்டுமே தவிர வாசிப்பை சுவாரஸ்யப்படுத்தவே கூடாது
என்கிறார்கள்.

வேறு சிலரோ இதற்கு நேர் எதிர். 'படிப்பவர்களுக்கு படிப்பதில் சுவாரஸ்யம் ஏற்பட்டால் தானே எதையும் படிக்கவே தோன்றும்?' என்று எதிர்க்கேள்வி போடுகிறார்கள். அந்த சுவாரஸ்யம் இல்லையென்றால் படிப்பது வரட்சியாகப் போய் விடாதா என்பது அவர்கள் கட்சி.

அள்ளி முடிய முடிந்தவர்கள் முடிகிறார்கள். அப்படி முடிய முடியாதவர்கள் அள்ளி முடிவதையே கேள்விக்குள்ளாக்குகிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.

தாங்கள் வாசித்தவுடனேயே தங்கள் கருத்தை சூட்டோடு சூடாகப் பதிவதற்கு நன்றி, கோபு சார்.

ஜீவி said...

@ G.M.B.

realistic-க்கும் surrealistic-க்கும் ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல. இரண்டுக்கும் நூலிழை வித்தியாசம் தான். இரண்டுக்கும் நம் நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை தான் அஸ்திவாரம்.

அவரவர் நுண் உணர்வுகளுக்கு ஏற்ப மூளையின் செல்களில் பதிவாகின்றன. அவரவர் வாழ்க்கையில் பெறும் அனுபவங்களுக்கு ஏற்ப இவற்றின் மீதான நம்பிக்கையும் கெட்டிதட்டப் படுகின்றன. சிலருக்கு real--லாகத தோன்றுவது சிலருக்கு unreal- ஆக இருக்கலாம். சிலர் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் சிலருக்கு usual-ஆக இருப்பது சிலருக்கு unusual--ஆகலாம்.

ஒரு காலத்திய surealistic இன்னொரு காலத்திய realistic ஆகவும் நிரூபணம் ஆகலாம்.
இதற்கு பூமி உருண்டை என்று கலிலியோ சொன்னது பொருத்தமான உதாரணம்.

இதே மாதிரி தான் இறைவன் இருப்பது சிலருக்கு சூசகமாகத் தெரிதல், இருப்பதற்கான அறிகுறிகள் சிலருக்கு மட்டும் அபூர்வமாக தட்டுப்படல் போன்ற காரியங்கள் நடக்கின்றன.
ஆழ்ந்த நம்பிக்கைகள் உருவெளித் தோற்றமாக அல்லது தோற்ற மயக்கங்களாகவும் நம்மில் வினைபுரிவது உண்டு என்று தட்டிக் கழிக்க முடியாதபடியும் சிலருக்கு உண்மையான நேரிடையான அனுபவங்கள் வாய்த்திருக்கின்றன.

நடு இரவுக்குப் பின்னான நேரங்களில் கோயில் தெய்வ உருவுகள், தெய்வமாகவே அந்த கோயிலின் சுற்றுப் புறங்களில் ஊர்க்காவல் செய்வதாக சொல்லப்படுவதுண்டு. அம்மன் கோயில்கள் சுற்று வட்டாரத்தில் இந்த நம்பிக்கை அதிகம். பொதுவாக வதந்தி என்று புறக்கணிக்கப்படும் இம்மாதிரியான நிகழ்வுகளை நேரிடையாகப் பார்த்தவர்களும் உண்டு. அல்லது அப்படி ஊர்க்காவல் செய்ததற்கான அடையாளங்கள் சிலருக்குத் தட்டுப்பட்டதும் உண்டு.

ஒருகாலத்தில் 'பறக்கும் தட்டு' விஷயம் பிரபலமாக இருந்தது. வேற்று கிரகங்களிலிருந்து பூமிக்கு அந்த கிரகவாசிகள் வந்ததாக சொல்லப்பட்டது. இதெல்லாம் கட்டுக்கதை என்று மறுத்த விஷயம், நம் பூமிவாசிகளும் வேறு கிரகங்களில் கால்பதித்தமையால், ஏன் அப்படி இருக்கக்கூடாது என்ற பதிலை நம்மில் விதைத்தது.

surrealistic-க்கள் realistic-- ஆவது இப்படித்தான்.

கருத்துக்களை பதிவதில் தவறே இல்லை. நாம் நமக்குத் தெரிந்தவற்றைத் தான் விவாதிக்கிறோமே தவிர நம்மையே அல்ல. அப்பொழுது தான் பல தெரியாதவைகள் தெய்ர்ந்தவைகளாகும்.

தங்கள் மனந்திறந்த பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி, ஐயா.

ஜீவி said...

@ கோமதி அரசு

தங்களிருக்கும் ஆழ்ந்த இறைநம்பிக்கை அதுவும் இறைவனின் திருவிளையாடல் புராண நினைவுகளில் மனம் பதிந்தமையினால் இந்தக் கதை உங்கள் மனசில் பவனி வருவது அந்த அடிப்படையில் எந்த சிக்கலும் இல்லாமல் நிகழ்கிறது. சிவனடியார்கள் பெருமை சொல்லவும் பெரிதே!

தொடர்ந்து வாசித்து வாருங்கள். ஜிஎம்பீ ஐயா சொன்ன surrealistic எப்படி realistic ஆகிறது என்பதைக் கண்டு களியுங்கள்.

தொடர்ந்த பின்னூட்டங்களுக்கு நன்றி, கோமதி அம்மா.

ஜீவி said...

@ தளிர் சுரேஷ்

தோர்ந்து வாசித்து வருவதர்கு நன்றி, சுரேஷ் சார்!

கதைகள் படிப்போர்க்கும், அதில் ஆழ்வோர்க்கும், கதைகள் எழுதுவோருக்கும் இந்த சுவாரஸ்யம் தான் உயிர்மூச்சு!

வை.கோ.சாருக்கான பின்னூட்டத்தைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நீங்களும் அற்புதமான எழுத்தாற்றல் மிக்கவர் ஆதலால் அதுபற்றி உங்கள் கருத்தையும் பதியலாம்.

மிக்க நன்றி.

ஜீவி said...

@ MiddleclassMadavi

தங்கள் அன்பான முதல் வருகைக்கு நன்றி.

அடுத்த பகுதியை அநேகமாக அடுத்த புதனில் வெளியிட்டு விடலாம்.

அடுத்த பகுதி, இந்தப் பகுதியின் கடைசி வரிக்குத் தொடர்ச்சியாகத் தொடர்கிறது என்பது மட்டும் தெரியும்.

அடுத்த இரண்டு பகுதிகள், கதையின் முடிவை நோக்கி விரைகின்ற பகுதிகள். ஆதலாம் அதற்கேவான பிரமிப்புடன் வாசித்து விடலாம்.

தொடர்ந்து வாருங்கள், சகோதரி!

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

பூஜையில் வைத்து உண்டியலில் போடுவதற்காக எடுத்து வந்த பணம் அது. ஒரு காரியத்தை நிறைவேற்றுகிற நேரத்தில் நினைத்தபடி நிறைவேற்ற முடியவில்லை என்றால்
யாருக்கும் 'சுருக்'கென்று தான் இருக்கும். அடுத்த அத்தியாயத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

தொடர்ந்து வாசித்துக் கருத்திடுவதற்கு நன்றி, சார்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

அற்புதங்களை வாழ்க்கையில் தரிசிக்கும் பொழுது திகைத்துப் போகிறோம்.

விடை தெரியா சம்பவங்கள் நடக்கும் பொழுது 'ஏன் அப்படி நடந்தது?' என்கிற கேள்வி நம்மை குடைந்து தள்ளுகிறது.

வாழ்க்கையில் இதெற்கெல்லாம் பதிலில்லை என்பதே பதிலாகிப் போகிறது.

ஆனால் விடாமல் 'நமக்குத் தெரிந்த ஒரு பதிலை' அதற்கான பதிலாகக் கொண்டு திருப்தி அடைகிறோம் என்பதே உண்மை.

இப்பிரபஞ்சத்தில் விடை தெரியா சம்பவங்கள் எக்கச்சக்கம்.

தொடர்து வாசித்து வருவதற்கு நன்றி, ஸ்ரீராம்.

ஜீவி said...

@ S. Ramani

புரிந்து கொள்ளும் படியான பூடகங்கள்! ஒரு புது வார்த்தையைப் புழக்கத்தில் கொண்டு வந்திருப்பது யோசனையில் கொண்டு போய் விட்டது.

'புரிபவர்க்குப் புரியும்; புரியாதவர்க்கு பூடகமாய் இருக்கும்' என்று இரட்டை நிலை எடுக்கும் பூடகங்கள் தாம் புரிந்து கொள்ளும்படியான பூடகங்களா?

ஒன்றிப் போனதற்கு நன்றி, ரமணி சார். தொடர்ந்து சந்திப்போம்.

Shakthiprabha said...

paramathmavudanaana sandhippu. padikkavum ninaikkavum unaravum silirkirathu.

ஜீவி said...

@ Shakthiprabha

//Paramathmavudanaana sandhippu..//

ஓ! பரமாத்மா...
தன்னில் தானேயாய் உறைந்திருக்க
தன்னை விட்டுத் தனியாய்
பிரித்துப் பார்த்தாலல்லவோ, சந்திப்பு?..

//படிக்கவும், நினைக்கவும், உணரவும்---//

பெறவும், பெற்றதைப் பிறருக்குச் சொல்லவும்
உணர்ந்தவாறே சொல்ல முடியாமல் மலைப்பதுவும்..

Related Posts with Thumbnails