Wednesday, September 28, 2016

ஆறு வாரத் தொடர்: உங்களுக்காவது...

பகுதி--6

கைக்குழந்தையுடன் ஏழ்மை  அலைக்கழிக்கும் கோலத்திலிருந்த அந்தப் பெண்ணைப் பார்க்கையில் மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

"ஐயா..." என்று இறைஞ்சி அந்தப் பெண் பரிதாபமாக என்னைப்பார்த்து மீண்டும் அழைக்கையில், 'உண்டியலில் போடத்தவறிய எனது இந்தப் பணத்தை   இந்தப்  பெண்ணுக்குக் கொடுத்துவிட வேண்டும்' என்று நினைப்பு முன்னின்று மனசில் துளிர்க்கையில், அந்தப் பெரியவரின் குரல் நினைவில் ஏதோ அசரீரி மாதிரி ஒலித்தது.

'என்னது--உன்னது' என்று ஏன் பிரித்துப் பேசுகிறாய்?...நீயும் நானும் வேறா?..'

ஏதோ குருடனுக்கு பார்வை கிடைத்த மாதிரி மனசில் ஒரு புதுவெளிச்சம் பளீரிட்டது.   'ஆமாம், வேறில்லை தான்...அந்தப் பெரியவர், நான், அந்த ஏழை குடுகுடுப்பைக்காரன், அந்த   ரிக்ஷாக்காரன்  ஈஸ்வரன்,  இந்தப் பெண்,  இந்தப் பெண்ணின் கையிலிருக்கும் அந்த சின்னஞ்சிறு ஜீவன்,  என் அம்மா,  உஷா, உஷாவின் கருவில் உருவாகியிருக்கும்  குழந்தை....


ஓ, யாருமே  வேறில்லை தான்!...  அந்த மஹாசக்தி  ஒன்றிலிருந்து பிரிந்த ஒவ்வொரு கூறும்  அந்த ஒன்றையே  தன்னுள்  பதிந்து,  சேர்ந்து,  பிரிந்து,  மாயையாய் வெவ்வேறு வடிவெடுத்த மாதிரி ரூபம் கொண்டு......   எத்தகைய அற்புதம் இது!  மனித  உயிர்கள் மட்டுமில்லாது,   மரம், செடி, கொடி,  மீன், மான் என்று  உயிருள்ள அத்தனையையும் உயிர்ச்  சரடால் ஒன்றாய்க் கட்டிய  பந்தமல்லவோ இது!...

இத்தனை சிந்தனைக்கும் நடுவே, க்ஷணநேரத்தில், அனிச்சையாய் அந்தப் பெண்ணிடம் அந்த நூறு ரூபாயைக் கொடுத்திருக்கிறேன்....

"ஐயா..இவ்வளவு காசு வேண்டாம்..பாலுக்கு அஞ்சு ரூபா போதும்..."

"இல்ல...வைச்சிக்க..இன்னிக்கு..நாளைக்கு,அதுக்கு மறுநாளைக்கு...குழந்தைக்குப் பால் வாங்கித்தா....  மற்ற செலவுக்கும்  வைச்சிக்க..."

"வேண்டாம், ஐயா!..இவ்வளவு காசு வேணாம்..எங்கிட்டே இருந்தா,   யாருகிட்டேயிருந்தாவது திருடிட்டதா நெனைப்பாங்க..எனக்கு அஞ்சு....."  

வேறு யாரோ என்னுள் நுழைந்து கொண்டு என் குரலில் பேசுவது போன்ற உணர்வில் என் குரல் எனக்கே குழறி அந்நியமாயிற்று...."இல்ல..வாங்கிக்க...இது உன் காசு தான்.....என் மனசு சொல்றது..இது உனக்குச் சேர வேண்டியது தான்....மறுக்காம வாங்கிக்க..." என்று ஏதோ ஒரு சக்தி என்னை ஆட்டுவிக்கிற மாதிரி அவசர அவசரமாகக் கூறியவன், அந்தப் பெண் திருப்பித்தர முயலும் பணத்தை திரும்பி வாங்கிக்கொள்ள நேரிட்டுவிடுமோ என்கிற பயத்தில் வேகவேகமாய், பஸ் நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

வானம், கருமேகம் சூழ்ந்து எப்பொழுது பொத்துக் கொள்ளுமோ என்று மிரட்டியது.

கச்சபேசுவரர்  கோயில் அருகில், ஒரு சைக்கிள் ரிக்க்ஷா என்னைத் தாண்டிச் செல்கையிலேயே சடக்கென்று நின்ற்து.                   

ஈஸ்வரன் தான்.  என்னைப் பார்த்ததும் வண்டியை நிறுத்தியிருக்கிறான் போலிருக்கு.  “என்ன , சார்?.. தரிசனமெல்லாம் முடிந்ததா? ஏறிக்கங்க..” என்று ரிக்ஷாவை என் அருகாமையில் வலித்து நிறுத்தினான்.

“இவ்வளவு தூரம் வந்து விட்டேனே?..  நீ எங்கே சவாரிக்குப் போறியோ...” என்றவனை வற்புறுத்தி தன் வண்டியில்  ஏற்றிக்கொண்டான்..

ஏழ்மைத் தோற்றத்துடன் கைக்குழந்தையின் பாலுக்காக இரந்து கேட்கும் நிலைமைக்குத் தள்ளிய  அந்தப் பெண்ணின் நிலை மனசைப் பிழிந்து எடுத்தது.  அந்த இரக்கத்தில், “பாவம்!” என்று என்னை அறியாமல் கொஞ்சம் உரக்கவே சொல்லி விட்டேன் போலும்..

ஈஸ்வரன் ரிக்ஷாவை வலித்த படியே என்னைத் திரும்பிப் பார்த்தான்.  “என்ன சார், யார் பாவம்?”  என்று கேட்டான்.

“ஒண்ணுமில்லேப்பா..”

“உங்க முகமும் சரியில்லே சார்.  என்ன நடந்துச்சு, சார்?”

“ஒண்ணுமில்லேப்பா.. அங்கே ஒரு ஏழைப் பெண், கைக்குழந்தையுடன்..” என்று விஷயத்தைச் சொன்னேன்.

ஓ..” என்று ஏதோ தெரிந்தாற் போல ஈஸ்வரன் தலையை ஆட்டிக் கொண்டான். “அங்கணே   ஆலமரத்தடிலே  குடுகுடுப்பைக்காரங்லாம்  தங்கியிருக்காங்க.. அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த பெண்ணா இருக்கும்..  பாவம் தான்..  எல்லார்க்கும் கஷ்டம் தான்..  குடுகுடுப்பைக்காரங்க காலம்லாம் போயிடுச்சு, சார்..  அந்த இடத்துக்கு லாட்ஜ்லே தங்கி ஜோஸ்யம் சொல்றவங்க வந்திட்டாங்க..  ஜனங்களும் தேடிப் போய் ஜோஸ்யம் கேக்கறாங்க..  அவங்க காட்லே தான் இப்போ மழை..” என்றான்.    
அட! குடுகுடுப்பைக்காரங்க தங்கியிருக்காங்காங்களா!  அப்போ.. ஆண்டவா! அந்த நூறு ரூபாய் நோட்டு போக வேண்டிய இடத்திற்கு போய்ச் சேர்ந்து விட்டதா?--  என்று நெக்குருகிப் போனேன்.   அந்தப் பணம் போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் போவதற்குத் தான் அந்தப் பெரியவர் உண்டியலில் போட விடாதவாறு தடுத்தாற்கொண்டாரா?..  கைலாசநாதா! என்னே உன் திருவிளையாடல்?’ என்று மனம் நெகிழ்ந்து போனேன்.

பஸ்நிலையம் வந்ததும் என்னை இறக்கி விட்டு, காசு கொடுக்க முற்பட்ட என்னிடம் இருந்து வாங்கிக் கொள்ள மறுத்தான் ஈஸ்வரன்.

“ஏம்ப்பா?” என்றவனுக்கு  'இந்த வழியாத்தான் எனக்குப் போகணும்...  நீங்களும் வழிலே வந்தீங்க..  பாத்தேன், ரிஷாலே  ஏத்திக்கிட்டேன் ..அதுக்குப் போய் காசா?" என்று மறுத்தவனைப் பார்க்க எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவிலலை...

நெற்றியில் பட்டை பட்டையாக திருநீறு கீற்று....குழந்தைச் சிரிப்புடன், சின்ன வயசுப் பையன் ஒருவன் ஞானவான் மாதிரி ரிக்க்ஷாவுடன் பிணைத்திருந்த சைக்கிள் சீட்டில் உட்கார்ந்திருக்கிற மாதிரி உணர்வு எனக்கு...என் வசமில்லாமல், மாற்றி மாற்றி நடக்கும் நாடகக் காட்சியில் பங்கேற்கிற உணர்வில், அடுத்த காட்சி என்ன என்று தெரியாத மயக்கத்தில் பக்கத்தில் வந்து நின்ற பஸ்ஸின் நடத்துனர், "சென்னை தானே?..  வாங்க, சார்.." என்று அழைக்க ஏறிக் கொண்டேன். நல்ல வேளை,  பஸ்ஸும்  பூந்தமல்லி வழியாகச் செல்லும் பஸ்.   பூந்தமல்லி சென்று 56-A பிடித்துக் கொள்ளலாம்  என்று நினைப்பு ஓடியது.

பூந்தமல்லி சென்றவுடனேயே  56-A  தயாராக  நின்றதில் ஆச்சரியமான ஆச்சரியம்.

தோ ஊர் வந்து விட்டது. திருநின்றவூர் தான்.            

கோயிலைத் தாண்டித் தான் வீட்டுக்குப் போகவேண்டும். இருதயாலீசுவரர் கோயிலைத் தாண்டும் பொழுது, இறைவனையும் அன்னை மரகதாம்பாளையும் மனமுருக நெஞ்சில் நிறுத்தி வணங்கிப் பின் வீடிருக்கும் தெருவிற்குள் நுழைந்தேன்.

வீட்டு வாசல் திண்ணையில் அம்மா மூக்குக் கண்ணாடி தரித்து, ஏதோ புத்தகத்தை வழக்கம் போலக் கொஞ்சம் இரைந்த குரலில் படித்துக் கொண்டிருந்தார்கள்.   அம்மா வாசிப்புக்குத் தொந்தரவு  கொடுக்காமல் படித்து முடிக்கட்டும் என்று வாசற்படிப் பக்கம் நின்றேன்.

அம்மா  தமிழ்  ஆசிரியையாய்  இருந்தவர்கள்.  குரல் தீர்க்கமாக இருக்கும்.   பரிட்சைக்குப் படிக்கும் சிறுமி ஒருத்தி படிப்பதை மனப்பாடம் பண்ணும் தோரணையில்  தான் படிக்கும் எதையுமே  தன்னுள்  உள்வாங்கிக் கொள்கிற மாதிரி நின்று நிதானித்து உரக்கத் தான் வாசிப்பார்கள்.

அன்றும் அப்படித்தான்   

"....அ-த்வைதம்  என்றால்  'இரண்டு  இல்லை'  என்று அர்த்தம்.    
    
எந்த இரண்டு இல்லை?..  இப்போ  ஸ்வாமி  என்று ஒருத்தர் இருக்கிறார்.  அவருக்கு  இரண்டாவதாக  ஜீவர்கள் என்ற நாம் இருக்கிறோம்  என்று நினைக்கிறோம்  இல்லையா?..  அப்படி இரண்டு இல்லவே இல்லை..  ஸ்வாமி (பிரம்மம்)  என்கிற  ஒரே சத்திய வஸ்துவுக்குப் புறம்பாக இரண்டாவதாக     எதுவுமே இல்லை.  அந்த ஒன்றே தான் மாயா சக்தியினால் இத்தனை  ஜீவர்கள்  மாதிரியும்  தோன்றுகிறது.  இதெல்லாம் வெறும் வேஷம் தான்.

ஒரு நடிகன் பல வேஷம் போட்டாலும் உள்ளேயிருக்கிற ஆள் ஒருத்தன் தான் என்பது போல  இத்தனை ஜீவராசிகள் இருந்தாலும்  அவறிற்கு  உள்ளே இருக்கிற  சொரூபம்  ஸ்வாமி  ஒருத்தர் தான்.  ஜீவாத்மா--பரமாத்மா  என்று விவகார தசையில் பிரித்துச் சொன்னாலும்  உண்மையில்  உள்ளது ஒரே ஆத்மா தான்.  நாம்  மாயையைத் தாண்டி   இந்த  ஞானத்தை  நமது அனுபவத்தில் அடைந்து விட்டால்,  அப்புறம் எத்தனையோ  குறைபாடுகள் உள்ள ஜீவர்களாக  இருக்க மாட்டோம்;  ஒரு குறையுமில்லாத,  நிறைந்த நிறைவான  சத்தியமாகவே  ஆகி விடுவோம்'  என்பது தான்  அத்வைத தத்துவம்...."

நான் வாசற்பக்கம் நிறப்து எப்படித் தெரிந்ததோ தெரியவில்லை,  படித்துக் கொண்டிருப்பதை  'சட்'டென்று நிறுத்தி  தலை நிமிர்ந்த அம்மாவிடம்,"அம்மா! உனக்குப் பூசலாரைத் தெரியுமா?...இந்த ஊர்க்காரராமே?..."என்று கேட்கும் என்னை விநோதமாகப் பார்த்தார் அம்மா. 'பூசலாரைத் தெரிந்து கொள்ளாமலா இந்த ஊரில் இருக்கே?' என்று அவர் ஏளனமாக என்னை நோக்குவது போலிருந்தது அவரது அந்தப் பார்வை.

பூசலாரை   உங்களுக்காவது  தெரியுமா?...


(நிறைவுற்றது)

படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.

22 comments:

G.M Balasubramaniam said...

The kingdom of heaven is in you. அன்பே சிவம் உன்னை நேசிப்பது போல் அடுத்தவனையும் நேசி என்றெல்லாம் சொல்லிப் போகிறது கடைசி அத்ட்க்ஹியாயம் பூசலாரைப் பற்றி எனக்குத் தெரிந்திருப்பதை முன்னொரு பின்னூட்டத்தில் எழுதி இருந்தேனே In spite of certain surreal narrations ( I want to say that surreal is not just opposite of real) கதை சொல்லிப் போன விதம் ரசிக்க வைத்தது

ஜீவி said...

குறிப்பு:

காஞ்சி கைலாசநாதர்-- திருநின்றவூர் தொடர்பு வைத்து பூசலாரைப் பற்றிப் பெரியவர் ஜிஎம்பீ--க்கு தெரிந்திருந்தது ஆரம்ப அத்தியாயங்களில் நமக்கும் தெரிந்தது.

உங்களுக்காவது தெரியுமா?.. என்று கதை தான் முடிகிறதே தவிர, அதைத் தாண்டிய யோசனைகளுக்கு இட்டுச் செல்வது கதையின் சொல்பொருளாகி விட்டது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"வேண்டாம், ஐயா!..இவ்வளவு காசு வேணாம்..எங்கிட்டே இருந்தா, யாருகிட்டேயிருந்தாவது திருடிட்டதா நெனைப்பாங்க..எனக்கு அஞ்சு....." //

ஏழ்மையிலும் நேர்மை .... சிலிரிக்க வைக்கிறது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

// 'ஆமாம், வேறில்லை தான்...அந்தப் பெரியவர், நான், அந்த ஏழை குடுகுடுப்பைக்காரன், அந்த ரிக்ஷாக்காரர் ஈஸ்வரன், இந்தப் பெண், இந்தப் பெண்ணின் கையிலிருக்கும் அந்த சின்னஞ்சிறு ஜீவன், என் அம்மா, உஷா, உஷாவின் கருவில் உருவாகியிருக்கும் குழந்தை....


ஓ, யாருமே வேறில்லை தான்!... அந்த மஹாசக்தி ஒன்றிலிருந்து பிரிந்த ஒவ்வொரு கூறும் அந்த ஒன்றையே தன்னுள் பதிந்து, சேர்ந்து, பிரிந்து, மாயையாய் வெவ்வேறு வடிவெடுத்த மாதிரி ரூபம் கொண்டு...... எத்தகைய அற்புதம் இது! மனித உயிர்கள் மட்டுமில்லாது, மரம், செடி, கொடி, மீன், மான் என்று உயிருள்ள அத்தனையையும் உயிர்ச் சரடால் ஒன்றாய்க் கட்டிய பந்தமல்லவோ இது!... //

அருமையான எண்ணங்கள். இதுதான் அத்வைதம் சொல்லும் அற்புதமான கருத்து. ஆனால் இதனைப் புரிந்துகொள்வதோ, அதன்படி அனைத்து உயிர்களையும் ஒன்றாக நினைத்துப் பார்ப்பதோ, பழகுவதோ, துவேஷம் இல்லாமல் நடந்துகொள்வதோ, சாதாரண மனிதர்களால் இயலாத காரியமாக உள்ளது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

// 'இந்த வழியாத்தான் எனக்குப் போகணும்... நீங்களும் வழிலே வந்தீங்க.. பாத்தேன், ரிஷாலே ஏத்திக்கிட்டேன் ..அதுக்குப் போய் காசா?" என்று மறுத்தவரைப் பார்க்க எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவிலலை... நெற்றியில் பட்டை பட்டையாக திருநீறு கீற்று....குழந்தைச் சிரிப்புடன், சின்ன வயசுப் பையன் ஒருவன் ஞானவான் மாதிரி ரிக்க்ஷாவுடன் பிணைத்திருந்த சைக்கிள் சீட்டில் உட்கார்ந்திருக்கிற மாதிரி உணர்வு எனக்கு...//

இதனையெல்லாம் தன் சொந்த அனுபவத்தில் உணர்ந்தவர்களுக்கு மட்டுமே, இவைகளின் பின்னணியில் நடக்கும் ஈசனின் திருவிளையாடல்களைப் புரிந்துகொள்ள இயலும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஒரு நடிகன் பல வேஷம் போட்டாலும் உள்ளேயிருக்கிற ஆள் ஒருத்தன் தான் என்பது போல இத்தனை ஜீவராசிகள் இருந்தாலும் அவறிற்கு உள்ளே இருக்கிற சொரூபம் ஸ்வாமி ஒருத்தர் தான். ஜீவாத்மா--பரமாத்மா என்று விவகார தசையில் பிரித்துச் சொன்னாலும் உண்மையில் உள்ளது ஒரே ஆத்மா தான். நாம் மாயையைத் தாண்டி இந்த ஞானத்தை நமது அனுபவத்தில் அடைந்து விட்டால், அப்புறம் எத்தனையோ குறைபாடுகள் உள்ள ஜீவர்களாக இருக்க மாட்டோம்; ஒரு குறையுமில்லாத, நிறைந்த நிறைவான சத்தியமாகவே ஆகி விடுவோம்' என்பது தான் அத்வைத தத்துவம்...."//

இந்த அத்வைத தத்துவங்களுக்கு மேலும் சில உதாரணங்களுடன் நான் கொடுத்துள்ள ஓர் பதிவு ஏனோ என் நினைவுக்கு வந்தது. http://gopu1949.blogspot.in/2012/04/17.html

வை.கோபாலகிருஷ்ணன் said...


//பூசலாரை உங்களுக்காவது தெரியுமா?... //

63 நாயன்மார்களில் ஒருவரான பூசலார் என்ற நாயன்மாரையும், அவரின் பக்தியையும் தெரியாதவர்களே இருக்க முடியாது. ஒருவேளை யாராவது அதுபோல இருப்பின், அவரைப் பற்றி விக்கிபீடியாவில் படித்து அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். இதோ இணைப்பு:

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

"ஆறு வாரத் தொடர்: உங்களுக்காவது..." என்ற தலைப்பினில், தங்கள் தனிப்பாணியில் மிக அருமையாக எழுதி நிறைவு செய்துள்ளீர்கள். படித்து இன்புற்றோம். பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

ஸ்ரீராம். said...

ரிக்ஷாக்காரர் பெயர்!
எல்லாவற்றிலும் சிவன்! இது மாதிரி எல்லோருமே நல்லவர்களாக இருந்து விட்டால் வாழ்க்கை போரடித்துப் போகுமோ!

//உங்களுக்காவது தெரியுமா?.. என்று கதை தான் முடிகிறதே தவிர, //

அது பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும்தான். பின்னூட்டத்தில் அது பற்றிய விவரம் என்பதற்கான குறிப்போ!

:)))

Dr B Jambulingam said...

பூசலாரைத் தெரியாமல் இருக்கமுடியுமா? அன்றே மனத்தில் கோயில் கட்டியவரல்லவா?

middleclassmadhavi said...

Superb!! 'பூசலாரை உங்களுக்காவது தெரியுமா?... ' :-))

Ramani S said...

கதை நிறைவடைந்தது சரி
கதை படித்து மனம் நிறைவடைந்ததும் சரி
ஆயினும் சிந்தனையில் ஒரு பொறியை
அல்லவா துவக்கிவிட்டுச் சென்றுள்ளது
மனம்கவர்ந்த அற்புதமான கதை

பாயாசத்து வறுத்த நெய் முந்திரிபோல்
சூட்சுமாய்ச் சொன்ன விஷயங்களை ருசிக்க
மீண்டும் ஒருமுறை கதையைப் படிக்கத் துவங்குகிறேன்
வாழ்த்துக்களுடன்...

Shakthiprabha said...

ஆழ்ந்த தத்துவத்தை மையமாக கொண்டு கதையில் நுழைத்து, கரு குலைந்துவிடாமல் அப்படியே சிறு குழந்தை பாடமாக போதித்திருக்கிறீர்கள். எத்தனை பெரிய விஷயத்தை சின்ன குழந்தையின் சாக்லேட்டுக்குள் நுழைத்து புகட்டிய நெகிழ்வு. அபாரம்.

ஜீவி said...

அன்பு நண்பர்கள்,

1. G.M. Balasubramaniam
2. வை. கோபாலகிருஷ்ணன் (நெஞ்சில் பதிந்த 5 பின்னூட்டங்கள்)
3. ஸ்ரீராம்
4. Dr. B. Jambulingam
5. Middleclassmadhavi
6. S. Ramani

-- தாங்கள் ரசித்த விதத்தில் தங்கள் ரசனையைச் சொன்னமைக்கு நெஞ்சார்ந்த
நன்றி. வித்தியாசமான அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

அன்புடன்,
ஜீவி

வே.நடனசபாபதி said...

பூசலாரைத் தெரியாதவர்கள் சென்னையில் இருக்கமுடியாது என நினைக்கிறேன். அருமையையாய் கதையை நகர்த்தி அத்வைத தத்துவத்தை இந்த கதை மூலம் விளக்கிவிட்டீர்கள். நன்றி!

ஜீவி said...

@ நடனசபாபதி

கதையைத் தொடர்ந்து வாசித்துக் கருத்திட்டதற்கு நன்றி, சார்.

அத்வைத தத்துவத்தை இந்தக் கதை மூலம் விளக்கி விட்டதாக உணர்ந்து சொன்னமைக்கு மிக்க நன்றி, சார்.

KABEER ANBAN said...

‘Unless there is connection from previous birth even a dog will not approach you’ என்று பாண்டிச்சேரி அன்னை கூறியதாக நினைவு. (வேறொருவராகவும் இருக்கலாம்).

அந்த தொடர்பையெல்லாம் நாம் வகைப்படுத்தி, காரணப்படுத்தி பார்க்க இயலாது தான். ஆனால் அன்பெனும் சரடில் அவைகளை ஏதோ ஒரு விதத்தில் காரணப்படுத்தி கோர்க்கும் பொழுது அழகான மாலை உருவாகிறது. அப்படி ஒரு அழகான மாலை, வாசிக்கும் இன்பம் கிட்டியது.அருமையான நடை. தெள்ளிய ஓட்டம். மேலும் இத்தகைய தொடர்கள் தங்கள் பூ வனத்தில் மலரட்டும்.

ஜீவி said...

@ கபீரன்பன்

இத்தகைய் தொடர்கள் பூவனத்தில் மலரட்டும் -- என்ற வரி உற்சாகத்தை ஊட்டியது.

பூவனத்தை புதுமை வனமாக உருவாக்க சில புதுப் பகுதிகளை பிரசுரிக்க இருக்கிறேன்.

அடிக்கடி வந்து தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள், கபீரன்ப!

கோமதி அரசு said...

ஒரு நடிகன் பல வேஷம் போட்டாலும் உள்ளேயிருக்கிற ஆள் ஒருத்தன் தான் என்பது போல இத்தனை ஜீவராசிகள் இருந்தாலும் அவறிற்கு உள்ளே இருக்கிற சொரூபம் ஸ்வாமி ஒருத்தர் தான்.//

உண்மைதான்.

பூசலார் நாயன்மார் போல் உள்ளத்தில் அவனுக்கு கோவில் கட்டி அவனை எழுந்தருள செய்து வாழ்வில் எல்லா நலன்களையும் அவன் அருளால் அடைவோம்.
அருமையான கதை.

‘தளிர்’ சுரேஷ் said...

அருமையான நிறைவு! நன்றி!

'நெல்லைத் தமிழன் said...

தொடர் முழுமையாகப் படித்தேன். கதை சொல்லிச் சென்றதைவிட சொல்லாமல் விட்டது அதிகம். ஆரம்பத்தில் ஈஸ்வரன் என்ற ரிக்'ஷா ஓட்டியைச் சந்தித்தபோதே மற்ற எல்லாவற்றையும் guess பண்ண முடிந்தது. எல்லாமே ரொம்ப பாஸிடிவ் கேரக்டர்கள். எடுத்துக்கொண்ட கருவை (அ-த்வைதம்) நோக்கிய பயணத்திற்காக, அப்படி அமைத்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன். (அல்லது துரியோதனனையும், தர்மரையும் பற்றி ஒரு கதை வருமே.. முன்னவருக்கு, பார்ப்பவர்களெல்லாம் குறையுள்ளவர் மாதிரியும், பின்னவருக்கு, பார்ப்பவர்கள் எல்லாம் நிறையுடன் இருப்பதுமாதிரியும்.. கதை நாயகன் நல்லவராக இருப்பதால், அவர் சந்திப்பவர்கள் எல்லோருமே நல்லவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்ல விழைகிறீர்களா?)

இந்தக் கருத்துக்கு ஏற்றவிதத்தில், பூசலாரோடு கதை முடிந்தது (அதற்கு ஏற்றபடி திருவொற்றியூரிலிருந்து கதை ஆரம்பித்தது) ரொம்பவும் அருமை.

நான் சமயத்தில் நினைத்துக்கொள்வேன்.. கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டு உண்கிறோம்.. அதற்கு எவ்வளவு நேரம் கொடுக்கவேண்டும்? ரொம்ப சுடச் சுட அர்ப்பணிக்கலாமா? நாம் உப்பு போதுமா, சுவை சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு அர்ப்பணிப்பதில் என்ன தவறு? நமக்கு எது சரி என்று நினைக்கிறோமோ, அதுவேதானா கடவுளுக்கும் செய்யவேண்டும்?

எல்லோரிலும் கடவுளைப் பார்க்கும் அந்த நிலைக்கு வரமுடிந்தால் பூசல் ஏது?

நெகிழ்ச்சியான கதை. மொத்தமாகப் படிக்கும்போது இன்னும் அருமையாக இருக்கிறது.

Geetha Sambasivam said...

என்னால் இந்த முடிவைச் சிறிதும் எதிர்பார்க்க முடியவில்லை என்பதே உண்மை! ஆனால் கதை முழுவதும் வேறு ஒன்றை நோக்கியே செல்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். இது முடிந்து விட்டது என்பதையே இன்றைய உங்கள் பதில் ஒன்றில் தான் தெரிய வந்தது. :) கொஞ்சம் இல்லை நிறையவே குழப்பமான மனோநிலை என்பதால் எதிலும் மனம் பதியவில்லை. அதனால் இதுவும் தெரியாமல் போனது! கடைசியில் எல்லோரும் எல்லாமும் எங்கிருந்து வந்தார்களோ, வந்ததோ அங்கேயே சென்று விடுகிறது என்பது அழிக்க முடியாத உண்மை.

Geetha Sambasivam said...

திரு வைகோ அவர்களுக்கு,

சுட்டி கொடுக்கையில் http://tinyurl.com இந்தத் தளத்திற்குச் சென்று சுட்டியைச் சிறிதாக்கிக் கொடுக்கலாம். உங்கள் சௌகரியத்தையும் பார்த்துக் கொள்ளவும். உங்கள் நீண்ட சுட்டி இங்கே சிறிய வடிவில், http://tinyurl.com/h6vyyjg

Related Posts with Thumbnails