Wednesday, September 7, 2016

ஆறு வாரத் தொடர்: உங்களுக்காவது தெரியுமா?..

பகுதி--1


து எப்படித்தான் அவளுக்கு விழிப்பு ஏற்பட்டதோ தெரியவில்லை. கரெக்டாக அந்த நேரத்திற்கு விழித்துக் கொண்டிருக்கிறாள்.

மெல்ல என் தோள் அசைக்கப்பட,"என்ன?.." என்றேன், அசுவாரஸ்யமாக,  கொட்டாவியினூடே.

கிசுகிசு குரலில், "மணி நாலரைங்க.." என்றாள்.

"அதுக்கென்ன?"

"அவன் வர்ற நேரங்க..எப்படியோ எனக்கு 'டக்'ன்னு முழிப்பு வந்திடுத்துங்க.."

"அதெல்லாம் அனிச்சைசெயல். நேற்றைக்கு, அதுக்கு மொதநாள், இதே நேரத்துக்கு முழிச்சிண்டிருக்கேல்யோ, அதான் இன்னிக்கும்.." என்று நான் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, "உஷ்--" என்று என் வாயைப் பொத்தினாள் உஷா.

"ரெண்டு நாள் தான் என்ன சொல்றான்னு கேட்காமத் தவறவிட்டாச்சு; இன்னிக்கானும் என்னன்னு உத்துக் கேளுங்க..லேசா எனக்கு குடுகுடுப்பை சத்தம் கேக்கறது. சாந்தி வீட்டு வாசல்லே இருக்கான்னு நெனைக்கிறேன்..இன்னும் ரெண்டு நிமிஷத்லே இங்கே வந்திடுவான்.."

உஷாவின் நெருங்கிய தோழி சாந்தி வீடு, எங்கள் வீட்டுக்கு இரண்டு வீடு முன்னால் இருந்தது.   அங்கே தான் இருக்கான்.  .எஸ்.. இப்பொழுது எனக்கும் தெளிவா அந்த குடுகுடுப்பை சப்தம் கேட்டது. எங்கள் வீட்டுக்கு முன் வீட்டுக்கு வந்து விட்டான்.


எங்கள் வீட்டுப்படுக்கை அறை ரோடு பக்கம் பார்த்த மாதிரி இருந்தது. இந்த அறைக்கு வெளிப்பக்கம் ஒரு சின்ன திண்ணை. திண்ணையைத் தாண்டி ரோடு. அவ்வளவு தான்.


"என்ன செய்யட்டும், உஷா?.. ஜன்னல் கதவை லேசா தொறந்து பாக்கட்டுமா?.."

"நோ.." என்று அடிக்குரலில் அதிர்ந்தாள் அவள்."இந்த நேரத்லே அவனைப் பாக்கக்கூடாது..." அவள் குரலில் பதற்றம் மேலோங்கியிருந்தது. "அவன் சொன்னது பலிக்க வரம் வாங்கிண்டு, நேரே சுடுகாட்லேர்ந்து வர்றதா சொல்லுவாங்க.."

"எந்தக் காட்டிலேர்ந்து வந்தா என்ன?..இப்போ என்னை வேறு எழுப்பி.." எரிச்சலாக வந்தது எனக்கு. அந்த எரிச்சலுக்கு ஊடே இன்னொரு கொட்டாவி.
 
"உஷ்.. இதோ வந்திட்டாங்க, நம்ம வீட்டு வாசல்லேயே..என்ன சொல்றான்னிட்டு உத்துக் கேளுங்க..அது போது.." உஷா முடிக்கக்கூட இல்லை, லேசான ஆனால் உறுதியான குடுகுடுப்பை ஒலி ஈன ஸ்வரத்தில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக கூடிக்கொண்டு வந்தது.

தூக்கக் கலக்கம் போன இடம் தெரியவில்லை.

சடாரென்று நான் படுக்கையிலிருந்து எழுந்து விட்டேன். உஷா தடுத்தும் கேளாமல், படுக்கை அறையிலிருந்து வெளிவந்து, வாசல் பக்க மெயின் டோர் நோக்கி சத்தமில்லாமல் நகர்ந்து,கதவு பக்கம் காது வைத்து, அந்த குடுகுடுப்பைக்காரன் என்ன சொல்கிறான் என்று கேட்க முனைந்தேன்...

"நல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குது..." இது எல்லோரும் சொல்றது தான் என்று நினைக்கையிலேயே, தொடர்ந்து 'குடுகுடு'வென்று உடுக்கை ஒலி... தொடர்ந்து, அவன் என்ன சொல்லப் போகிறான் என்று கேட்க நான் முனைகையிலேயே, ஸ்பஷ்டமாக அவன் குரல் கேட்டது..."இந்த வூட்டு சாமிக்கு நல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குது..அம்மணி அரச மரம் சுத்த வேண்டாம்; அரசன் வரப் போறான் ஆறிரண்டு மாசத்திலே...நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது.."  இதற்கு மேல் என்ன சொல்லப்போகிறான் என்று கேட்கும் ஆவலில் காதைத் தீட்டிக் கொண்டேன்.                                        

'குடுகுடு' சப்தம் நிறுத்தி அவன் சொல்ல ஆரம்பித்தது தெளிவாக உள்பக்கம் எனக்குக் கேட்டது. "கச்சி மூதூர்   கைலாசநாதனே..  இச்செகத்து நாயகனே.. இடும்பை தீருமய்யா, உன் தயவாலே.."

மீண்டும் 'குடுகுடு'. ஒருநிமிடம் ஒலி நிறுத்தித் தொடர்ந்தான்: "ஐயிரண்டு திங்கள் அம்மணி அவனைச்சுமந்து..அழகான குழந்தை அய்யா பேர்சொல்ல...இது கைலாசநாதன் கருணை மறக்க வேண்டாம்..." தொடர்ந்து 'குடுகுடு' சப்தம். சற்று நேரத்தில் சப்தம் கொஞ்சமாகக் குறைந்து...

அடுத்த வீடு, அதற்கடுத்த வீடு தாண்டிவிட்டான் போலும்.

அந்த இருட்டிலும் முகம் பிரகாசிக்க படுக்கை அறைக்குத் திரும்பினேன். உள்ளுக்குள் கொப்பளிக்கும் உற்சாகம்.

உஷாவும் கதவு மூடிய ஜன்னல் பக்கமிருந்து வந்தது அந்த லேசான இருட்டிலும் தெளிவாகத் தெரிந்தது.

"என்ன நீயும் கேட்டயா,அவன் சொல்றதை?"

"ஆமாங்க..ரொம்ப சந்தோஷமா இருக்கு.."

அவளை ஆதுரத்துடன் அணைத்துக் கொள்ளும் பொழுது அவள் உடல் படபடப்பை உணர்ந்தேன். "கூல்.." என்று அவளை ஆசுவாசப்படுத்தினேன்.

என் அணைப்பிற்கிடையே, "என்ன தெளிவாச் சொன்னான் கேட்டீங்களா?" என்று பரவசத்துடன் கேட்டாள்.

"எனக்கென்னவோ, அவன் சொன்னது அரைகுறையாகத் தான் கேட்டது" என்றேன், காது கவ்வி. அவன் சொல்லியதை அவள் சொல்லிக் கேட்க வேண்டுமெனற ஆசை.

"தெரியுமே,எனக்கு! முக்கியமான சமயத்லே கோட்டை விட்டு விடுவீங்கன்னு.."

"எல்லாம் நீ இருக்கும் தைர்யம் தான்..நீ தான் சொல்லேன் என்ன சொன்னானுட்டு."

என்னிடம் இருந்து லேசாக விலகி, என் மாரில் சுட்டுவிரலால் அழுத்தினாள்.."அய்யாவுக்கு அய்யாவைப் போலவே அழகான..."

"அழகான..?"

"க்குங்.." என்று சிணுங்கினாள். அந்த சிணுங்கலூடேயே, "குட்டிப்பாப்பா  வந்துக் குதிக்கப் போகுதாம்.."என்று உஷா சொல்லி முடித்து வெட்கத்தில் என் கழுத்து கட்டிக்கொண்டாள்.

"அப்படியா சொன்னான், அவன்?.."

"பின்னே? நீங்க கேட்கலயா, அவன் சொன்னதை?" என்று ஏமாற்றம் காட்டினாள்.

"பின்னேவா?..  பின்னாடி என்ன?" என்று அப்பாவியாய் அவள் முதுகு திருப்பினேன்.

"ம்?..குத்தினேனா, பாரு.."என்று பொய்க்கோபத்தில் உஷா தன் வலக்கை குவித்து என் நெஞ்சு நோக்கிச் செலுத்துகையில், அவள் ரொம்பவும் குழைந்திருப்பதாக மனசுக்குப் பட்டது. போதாக்குறைக்கு அதிகாலைக் குளிர் வேறு கொஞ்சம் கூடவே உள்ளறையிலும் உரைத்து சிலிர்ப்பேற்படுத்தியது. போர்வையை இழுத்து மூடிக்கொள்கையில், உள் கதகதப்பும் உடலுக்கு இதமாக இருந்தது. எப்பொழுது தூங்கினேன் என்றே நினைவில்லை.

(வளரும்)


(அடுத்தப்  பகுதி,  அடுத்த வாரம்..  இதே  புதன் கிழமை)

படம்  உதவிய நண்பர்களுக்கு நன்றி.

23 comments:

Ramani S said...

சுவாரஸ்யமான துவக்கம்
இரு நிலைகளுக்கும் பொருந்திடும்படியாக
சூசகமாகச் சொல்லிப் போனதை
மிகவும் இரசித்தேன்
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..
வாழ்த்துக்களுடன்...

Geetha Sambasivam said...

காலம்பர நாலரைக்கு முழிப்பு வந்துடுச்சுன்னா அப்புறமாத் தூங்கவே முடியாது! இவர் மனம் நிறைந்திருப்பதால் தூங்கறார் போல! ஹிஹிஹி, முக்கியமாச் சொல்ல வந்தது வேறே!

Geetha Sambasivam said...

இங்கே கருத்துச் சொல்ல ஆரம்பிச்சாக் கிட்டத்தட்ட ஒரு பதிவாயிடும் அளவுக்கு விஷயங்கள் இருக்கு குடுகுடுப்பை பத்திச் சொல்ல! ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லணும். காலை இரண்டரை மணியிலிருந்து நாலரைக்குள் தான் பொதுவாக குடுகுடுப்பைகள் வருவாங்க. குடுகுடுப்பை சப்தம் கேட்டாலே போதும் வாசல்லே படுத்திருக்கிறவங்க எல்லாம் வாரிச் சுருட்டிக் கொண்டு உள்ளே வந்து படுப்பாங்க. அப்புறமாத் தூக்கமே இருக்காது. கோடி வீட்டிலே என்ன சொன்னான், எதிர் வீட்டிலே என்ன சொன்னான், நம்ம வீட்டிலே என்ன சொன்னான் என்பதே அன்றைய நாளின் முக்கிய விஷயமாகத் தொடங்கிப் பேசப்படும், பெண்கள் கோலம் போடவே ஐந்தரைக்குப் பின்னர் தான் வெளியே வருவார்கள். நல்ல செய்தி சொல்லிச் சென்ற வீடுகளில் கொஞ்சம் சந்தோஷத்துடனே காணப்படுவார்கள். நல்ல செய்தி சொல்லலை எனில் குடுகுடுப்பை வாக்கு பலிச்சுடுமோ என்று கவலையும் பயமும் வரும்.

Geetha Sambasivam said...

தலைப்பிள்ளையின் மண்டை ஓட்டிலிருந்து மை தயாரித்து அமாவாசை இரவன்று சுடுகாட்டில் பூஜை போடுவார்கள் என்றெல்லாம் சொல்வார்கள். மேலும் குடுகுடுப்பை விபூதி மந்திரித்துக் கொடுத்துக் கன்னிப் பெண்கள், சிறுமிகள், தலைப்பிள்ளைகள் எனக் கூட்டிச் சென்று விடுவார்கள் என்றும் வதந்திகள் உண்டு. குடுகுடுப்பை நல்ல செய்தி சொன்ன வீடுகளில் மட்டுமே விடியலுக்குப் பின்னர் தக்ஷணை கேட்டு வருவான் என்றும் அவன் தக்ஷணை கேட்காத வீடுகளில் கூப்பிட்டுக் கொடுத்தால் கூட வாங்க மாட்டான் என்றும் சொல்வார்கள். இவர்களைத் தவிரவும் இராப்பாடி என்றொரு குழு உண்டு. அதிகாலை மூன்றிலிருந்து ஐந்துக்குள் உடுக்கை அடித்துக் கொண்டு வந்து பாட்டுப்பாடுவார்கள். குடுகுடுப்பை அளவுக்குப் பயப்படாவிட்டாலும் இந்த இராப்பாடியையும் நேருக்கு நேர் மக்கள் சந்திக்க மாட்டார்கள். வெளியே படுத்திருப்பவர்கள் வீட்டினுள்ளே போய்விடுவார்கள். இன்னும் சொல்ல நிறைய இருந்தாலும் இப்போதைக்கு நிறுத்திக்கிறேன்.

கோமதி அரசு said...

அழகான குழந்தை அய்யா பேர்சொல்ல...இது கைலாசநாதன் கருணை மறக்க வேண்டாம்.//

அருமையான தொடக்கம்.

குடுகுடுப்பைக்காரர் குழந்தை பிறக்கும், கைலாசநாதன் கருணை மறக்க வேண்டாம் என்று சொல்வதில் ஏதோ ஒளிந்து கொண்டு இருப்பது போல இருக்கே!


அடுத்தபதிவை படிக்க ஆவலுடன்.

ஜீவி said...

@ Ramani. S.

வாங்க, ரமணி சார்.

நீங்களும் சூசகமாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள். சூசகங்கள் எப்பொழுதுமே சுவாரஸ்யமானவை.

உங்கள் பின்னூட்டத்தை ரசித்தேன். அடுத்த பகுதி பதிவு அடுத்த புதன் கிழமை. ஞாபகமாக வந்து விடுங்கள்.

ஜீவி said...

@ Ramani. S.

வாங்க, ரமணி சார்.

நீங்களும் சூசகமாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள். சூசகங்கள் எப்பொழுதுமே சுவாரஸ்யமானவை.

உங்கள் பின்னூட்டத்தை ரசித்தேன். அடுத்த பகுதி பதிவு அடுத்த புதன் கிழமை. ஞாபகமாக வந்து விடுங்கள்.

ஜீவி said...

@ Ramani. S.

வாங்க, ரமணி சார்.

நீங்களும் சூசகமாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள். சூசகங்கள் எப்பொழுதுமே சுவாரஸ்யமானவை.

உங்கள் பின்னூட்டத்தை ரசித்தேன். அடுத்த பகுதி பதிவு அடுத்த புதன் கிழமை. ஞாபகமாக வந்து விடுங்கள்.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

குடுகுடுப்பைக்காரர்கள் பற்றி உங்கள் தகவல்களுக்கு ரொம்பவும் நன்றி. உங்கள் பின்னூட்டம் வாசிப்பவர்களுக்கு இன்னூம் சுவாரஸ்யத்தைக் கூட்டலாம். கொசுறுக்கு இராப்பாடி வேறே.

இது ஒரு ஆறு வார தொடர்கதை. உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்ல நிறைய வாய்ப்புகள் கொடுக்கக் கூடிய தொடர். அதனால் தவறாமல் ஒவ்வொரு புதன்கிழமையும் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு விடுங்கள் என்பது அன்பான அழைப்பு.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

குடுகுடுப்பைக்காரர்கள் பற்றி உங்கள் தகவல்களுக்கு ரொம்பவும் நன்றி. உங்கள் பின்னூட்டம் வாசிப்பவர்களுக்கு இன்னூம் சுவாரஸ்யத்தைக் கூட்டலாம். கொசுறுக்கு இராப்பாடி வேறே.

இது ஒரு ஆறு வார தொடர்கதை. உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்ல நிறைய வாய்ப்புகள் கொடுக்கக் கூடிய தொடர். அதனால் தவறாமல் ஒவ்வொரு புதன்கிழமையும் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு விடுங்கள் என்பது அன்பான அழைப்பு.

ஜீவி said...

@ கோமதி அரசு

நெடுநாட்கள் தாண்டி உங்களைப் பார்த்ததில் சந்தோஷம்.

சிவபெருமானையும், சிவனடியார்களையும் பற்றி பேசும் பொழுதெல்லாம் எப்படியோ தப்பாமல் நீங்கள் வந்து விடுவீர்கள் என்பது ஒரு உள்ளுணர்வு. அது தப்பாமல் நடந்திருக்கிறது.

இயல்பாக ஒளிந்து கொண்டிருப்பதை விட ஒளித்து வைப்பதில் கதைகள் சுவாரஸ்யம் பெருகின்றன. அதற்காகத் தான் இந்த எழுத்து வித்தைகள் எல்லாம்.

தொடர்ந்து வந்து உங்கள் ரசனைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Geetha Sambasivam said...

இன்னொரு பின்னூட்டம் இதுக்கு முன்னாடி கொடுத்தது அதையும் கிடைச்சதும் போடுங்க! ரெண்டோ மூணோ கொடுத்திருந்தேன். :)

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

விட்டுப்போன உங்களது மேற்கண்ட இரண்டு பின்னூட்டங்களும் எனது ஐபேடில் பதிவாகியிருக்கின்றன. மடிக்கணினியில் எப்படியோ டெலிட் ஆகிவிட்டது போலிருக்கிறது. ஐபேடிலிருந்து அவற்றை இங்கு கொண்டு வந்திருக்கிறேன்.

நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

குடுகுடுப்பாண்டிகள் இப்போது அதிகமாகக் கண்களில் படுவது இல்லை. என் சிறிய வயதில் பலமுறை பார்த்துள்ளேன் / கேட்டுள்ளேன் / பயந்தும் உள்ளேன்.

எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள நல்லதொரு ஆரம்பம். தொடரட்டும். படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

G.M Balasubramaniam said...

இப்போதெல்லாம் குடுகுடுபொபைக்காரர்களைக் காண முடிவதில்லை நல்ல வார்த்தைகள் சொன்னால் ஒரு திருப்தி. இந்த வீட்டுக்காரர்களுக்குக் குழந்தைகள் இல்லையா சூசகமாகச் சொல்வதும் குடுகுடுப்பைக் காரனின் சாமர்த்தியமே திருமதி கீதா சாம்பசிவம் சொன்ன பல விஷயங்களை நானும் கேட்டிருக்கிறேன்

‘தளிர்’ சுரேஷ் said...

அந்தக் கால கிராமத்தை கதையில் கொண்டுவந்துவிட்டீர்கள்! குடுகுடுப்பை காரர்கள் இப்போது கிராமத்தில் கூட இருப்பதில்லை! சிறு வயதில் கலர்கலராய் முண்டாசு கட்டி மீசை முறுக்கி குடுகுடுப்பையோடு வந்து அவர்கள் பாடி துணி கேட்பார்கள். அப்போது பயமாய் உள்ளிருந்து பார்த்து இருக்கிறேன்! எங்க ஊர் பக்கம் பத்து பதினைஞ்சு வருஷமாவே இவங்களை பார்க்க முடியலை! கதை நல்ல சுவாரஸ்யமாக செல்கிறது. உரையாடல்கள் ரசிக்க வைக்கிறது! தொடர்கிறேன்.

ஜீவி said...

@ வை.கோ.

எதிர்பார்பினை ஏற்படுத்தியுள்ள ஆரம்பத்தை தொடர்ந்து காப்பாற்ற முயற்சிக்கிறேன்.
தாங்கள் இந்தத் தொடரைப் படித்து வருவது குறித்து சந்தோஷம். அடுத்த வாரம்
புதன் கிழமை. ஞாபகத்தில் இருக்கட்டும், சார்.

ஜீவி said...

@ G.M.B.

இந்தத் தொடர் உங்கள் கண்ணில் படவில்லையோ என்றிருந்தேன். பட்டதை உங்கள் வருகை நிச்சயப்படுத்தி விட்டது.

கணவன்--மனைவியாக இருந்தாலும் 'கண்ணே, மணியே' என்று மனைவியை விளித்து எழுதுவது அந்தக் கால நாடகபாணி. கதைகளில் இதே 'கண்ணே, மணியே' வரும் பொழுது ரொம்பவும் செயற்கையாகப் போய்விடும். அதை விட அவர்கள் நெருக்கத்தை வார்த்தைகளில் காட்சிப்படுத்தும் தன்மை சோபிக்கும். கதாசிரியர் வார்த்தைகளில் காட்சிப்படுத்துதல் தெரியாமல், வாசகரே அப்படியான காட்சிகளை கற்பனையில் காணுவது மாதிரி கதைகளில் விவரித்தால் மேலும் சோபிக்கும்.

கதைகள் எழுதுவதில் நிறைய பாணிகள். இந்தக் கதையும் அந்த பல பாணிகளில் ஒரு பாணி. தங்களின் வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி, ஜிஎம்பீ சார்!

ஜீவி said...

@ தளிர் சுரேஷ்

'உங்களுக்காவது தெரியுமா?' என்று ஒரு வித்தியாசத்திற்காக தலைப்பிட்டது தான் தப்பாகப் போய் விட்டது. வாசித்தோரில் நிறைய பேரின் கவனத்தை அந்த குடுகுடுப்பைக்காரர் கவர்ந்து விட்டார்.

உரையாடல் ரசிக்க வைக்கிறது என்று சொன்ன உங்கள் ரசனைக்கு நன்றி, சுரேஷ் சார்!

சிவகுமாரன் said...

நல்லதொரு ஆரம்பம்.குடுகுடுப்பைக்காரர்கள் பெரும்பாலும் காளி மாரியம்மா ஜக்கம்மா என்றெல்லாம் தான் கூப்பிட்டு குறி சொல்வார்கள். கைலாசநாதரை குறிப்பிட்டு குறி சொன்னது வித்தியாசமாய் இருந்தது. குடுகுடுப்பைக்காரர்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு பாரதி ஞாபகம் வந்துவிடும்.

ஜீவி said...


@ சிவகுமாரன்

நீங்கள் சொல்வது உண்மைதான். ஜக்கம்மா என்றவுடன் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு வந்தது.

நம் கதைக்கு காஞ்சி கைலாசநாதர் அருள் வேண்டும். அதற்காக அப்படிச் சொல்வதாகச் சொல்லப்பட்டது.

பொதுவாக நமக்குப் பிரியாமானவர்களின் தோற்றத்தின் ஏதாவது ஒரு அம்சத்தை அப்படியே வேறு எங்காவது பார்த்தாலும் சட்டென்று அதை நம் பிரியமானவரில் பொருத்திப் பார்க்கத் தவற மாட்டோம். சாதாரணமானவர்களுக்கே இப்படி என்றால் ஆகச் சிறந்த கவிஞர்களுக்குக் கேட்கவா வேண்டும்?.. பாரதியின் அடையாளமான அந்த முண்டாசு செய்த வேலை இது.

எனக்கும் இதே மாதிரி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலுக்குப் போய் சுவாமி தரிசனம் செய்த போது தோன்றியது, கீழே கவிதை ரூபத்தில்:

திருவல்லிக்கேணி கோயில்
போன போது தான் தெரிந்தது
பார்த்தசாரதியைப்
பார்த்து விட்டுத் தான்
பாரதி தன் மீசையை
அப்படி வைத்துக் கொண்டானோ?
அப்போ முண்டாசு?..

தங்கள் அன்பான அழகான பின்னூட்டத்திற்கு நன்றி, சிவகுமாரன்!

வே.நடனசபாபதி said...

இந்த குடுகுடுப்பைக்காரனின் பிரவேசம் கதையில் ஏதோ ஒரு திருப்பத்தை தர இருக்கிறது என நினைக்கிறேன். தொடர்கிறேன்.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

உங்களைப் பார்த்து ரொம்ப நாளேச்சே, சார்!.. வீட்டு மராமத்து வேலைகள் எல்லாம் முடிஹ்திருக்கும் என்று நினைக்கிறேன்.

குடுகுடுப்ப்பைக்காரர் தான் கதையின் ஆரம்பத்தை ஆரம்பித்து வைக்கிறார். கைலாச நாதர் கருணை என்று வழிகாட்டுவதும் அவர் தான். அதன் தொடர்ச்சியாகவே நடந்த நிகழ்வுகள். அதிகம் சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும். தொடர்வதற்கு நன்றி.

Related Posts with Thumbnails