Tuesday, September 13, 2016

ஆறு வாரத் தொடர்: உங்களுக்காவது தெரியுமா?....

பகுதி:  2

காலையில்  எழுந்திருக்க முயற்சிக்கையிலேயே மணி எட்டுக்கு மேலாகிவிட்டது.

திறந்திருந்த ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்திருந்த  சூரிய ஒளி ஒரு இடம் விடாமல் பளிச்சென்று  துலக்கிக் கொண்டிருந்தது. நானும் முகத்தில் பளிச்சிட்ட அந்த சுரீரின் வெம்மை தாங்காமல்  தான்           விழித்துக் கொண்டிருக்கிறேன்.   போர்வையை உதறிப் போட்டு விட்டு எழுந்திருந்தேன்.                                        

பின்பக்கம் போக வேண்டும் என்றால் பூஜை அறையைக் கடந்து தான் போக வேண்டும்.   கடக்கையில்  பூஜை அறைப்பக்கம் கண்ணுக்குத் தட்டுப்படுகிற சுவாமி படத்தில் 'விழித்து விட்டு' போவது தினப்படி வழக்கம்.

அந்தப் பழக்கத்தில் அந்தப் பக்கம் திரும்பினால்  ஊதுபத்தி மணத்திற்கிடையே உஷா கைகுவித்து  கண்மூடி ஆண்டவனிடம் ஐக்கியமாகியிருப்பது தெரிந்தது.  தலையில் சுற்றியிருந்த டர்க்கிடவல், அவள் தலைக்குக் குளித்திருந்ததைத் தெரிவித்தது.

பல் விளக்கிக் குளித்து விட்டு வருகையில், உஷா புன்முறுவலுடன் எதிர்ப்பட்டாள்
  
இன்றைக்கு வழக்கத்துக்கு மீறி அழகாகக் கண்களுக்குத் தென்பட்டாள். "டிபன் ரெடி. சாப்பிடறத்துக்கு முன்னாடி, நீங்களும் சாமி ரூம் போய் கும்பிட்டு வந்திடுங்க" என்றாள்.

"ததாஸ்து.." என்று நானும் பூஜை அறைக்குள் நுழைந்தேன்.   வீபூதி இட்டுக் கொண்டு  வழக்கமாகச் சொல்லும் தினப்படி ஸ்லோகங்களைச் சொல்லி, கும்பிட்டு, தலைநிமிரும் போது தான், நிவேதனமாக வைத்திருந்த பழத்தட்டில், இரண்டாக மடிக்கப்பட்டிருந்த அந்த பேப்பரைப் பார்த்தேன்.

'என்னவாயிருக்கும்' என்று மனசு நினைத்தாலும் உஷாவிடம் கேட்டுக்கொண்டால் போயிற்று என்று பூஜை அறைவிட்டு வெளிவந்தேன்.

டிபன் சாப்பிடும் பொழுது உஷாவே சொன்னாள்: "காலைலே எழுந்ததும் முதல் வேலை என்ன தெரியுமா?.. நேத்து ராத்திரி அந்த   குடுப்பைக்காரன்   சொன்னது அத்தனையும் வரிக்கு வரி ஞாபகப்படுத்திண்டு, அட்சரம் பிசகாம அப்பிடியே ஒரு பேப்பரில் எழுதிட்டேன்..அவன் சொன்னது மறக்காதுன்னாலும் பின்னாடி எதுவும் தப்பு நேர்ந்திடக்கூடாது, பாருங்கள்"   -- என்று  அவள் சொன்னதும் தான்  அதிகாலை  குடுகுடுப்பைக்காரன் வீட்டு வாசல்படியில் நின்று  குடுகுடுத்ததும் சொன்னதும் எல்லாம் நினைவுக்கு வந்தது.

எவ்வளவு பைத்தியக்காரன் நான்!   எவ்வளவு சந்தோஷம் கொடுத்த நிகழ்வு அது?.. நடந்தது  அத்தனையையும் மறந்தே போயிருக்கிறேனே என்று நினைத்துக் கொண்டேன்.

நினைத்துக் கொண்டது மட்டுமல்லாமால் அதையே உஷாவிடம் சொல்லவும் சொன்னேன்:  "எனக்குத் தான் உங்களைப் பத்தி   நல்லாத் தெரியுமே!"  என்று 'அழகு'  காட்டினாள்.  "இதுக்குத் தான் நானும் எல்லாத்தையும் எழுதி வைச்சது.. இல்லேனா---" என்று அவள் தொடர்ந்து ஏதோ சொல்வதற்குள்  சாமர்த்தியமாய் குறுக்கிட்டேன்.

 "எழுதி, பூஜை ரூம்லேயும் வைத்து ஆண்டவன் கிட்டேயும் இத்தனை நாள் மனசிலே வேண்டிண்டதை இப்போ எழுத்து ரூபமா எழுதி, உன் கோரிக்கையை சமர்ப்பித்து விட்டேயாக்கும்." என்று சிரித்தேன்.

"க்குங்.." குஷிவந்து விட்டால் சொல்லும் அந்த 'க்குங்'கைச் சொல்லி, கன்னம் குழிவிழச் சிரித்தாள் உஷா.


டையே இரண்டு மாதங்கள் ஓடிப்போனதே தெரியவில்லை.

ஒருநாள் உஷாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. "ஒண்ணுமில்லை; சரியாய் போயிடும்" என்று மறுத்தவளை வற்புறுத்தி டாக்டரிடம் கூட்டிப்போனேன்.

டாக்டர்  Office  வழக்கம் போலவான  டாக்டர்    Office--ஆகவே   இருந்தது.

நல்லவேளை,  சீக்கிரமே எங்கள் முறை வந்து  கூப்பிட்டு விட்டார்.
இரண்டு பேரும் அவர் அறைக்குள்ளே போனோம்.  எல்லா விவரங்களையும்  கேட்டுக் கொண்டு உஷாவை பரிசோதிக்க வேண்டி என்னை மட்டும் வெளியே  அனுப்பினார். 

கொஞ்ச நேரத்தில்  நர்ஸ்  என்னைக் கூட்ப்பிட்டு  டாக்டரின் அறைக்குள் அனுமதித்தாள்.

நான் நுழைந்ததும், "வாங்க.. உங்களுக்கு ஒரு  நல்ல செய்தி.." என்றார்  டாக்டர், ஆங்கிலத்தில்

என்ன நல்ல செய்தி என்று அவர் சொன்னதும்,  நாங்க, ரெண்டு பேரும் றெக்கை கட்டிக்கொண்டுப் பறந்தோம் என்று தான் சொல்ல வேண்டும்.

வீட்டுக்கு வந்ததும் உஷாவின் உயிருள் இன்னொரு உயிர் வளர்கிற செய்தியை போன்போட்டு அம்மாவுக்குச் சொன்னேன். செய்தி கேட்டு  சிதம்பரத்தில்  தம்பி வீட்டுக்குப் போயிருந்த அம்மா முகம் நிறைய சந்தோஷத்தைப் பூசிக்கொண்டு  ரயிலைப் பிடித்து வந்து விட்டாள்.

தலைக்குனிந்து நமஸ்காரம் பண்ணின மருமகளை, கைதூக்கி வாரி அணைத்துக் கொண்டாள்.  "சந்தோஷமா   இருக்குடி,  அம்மா.. எனக்கொரு பேரனையோ, பேத்தியையோ பெத்துக் குடுத்திட்டியானா,    அதுபோதும்.." என்று மனங்குளிர ஆசிர்வதித்தாள்.    

உஷாவுக்கு ரொம்பவும் வெட்கமாகப் போய்விட்டது. தலைகுனிந்து 'க்குங்.'.

"உஷா..எந்த பயமும் நீ மனசுலே வைச்சிக்க வேண்டாம்..அதான் நான் வந்திட்டேன்லே?" என்று ஆதுரத்துடன் சொன்ன அம்மாவைக் காண எனக்குப் பெருமையாக இருந்தது.

குடுகுடுப்பைக்காரன் விஷயத்தை அம்மாவிடம் சொன்னபொழுது ஆச்சரியப்பட்டாள். "அன்னிக்கு காலம்பற  இப்படிச் சொன்னான்னு சொன்னியே?..அப்புறம் அவன் வந்தானா?" என்று ஆர்வத்தோடு விசாரித்தாள்.

"இல்லேம்மா..பொதுவா குடுகுடுப்பைகாரர்களெல்லாம் நாடோடிகள் மாதிரி ஒருஊர்ன்னு நிலையில்லாம, ஊர் ஊராச் சுத்துவாங்க..எந்த ஊருக்குப் போனாலும், நாலைஞ்சு பேர்ன்னு ஒரே இடத்திலேதான் தங்கியிருந்து, தங்களுக்குள்ளே தெருதெருவா பிரிச்சிக்கிட்டு குறிசொல்லப் போவாங்கன்னு எங்க ஆபிஸ்லே ஒருத்தர் சொன்னார். எங்கேயாவது அவனை கண்டுபிடிச்சு, அவன் சொன்ன நல்ல சேதிக்கு ஒரு நூறு ரூபாவது கொடுத்திடணும்னு இதே வேலையா அலைஞ்சேன், அம்மா!.. எங்கேயும்  தட்டுப்படலே.. இவங்களைப் பத்தி விஷயம் தெரிந்த ஒருத்தர், இந்த மாசம் அவங்க வெளிலேயே வரமாட்டாங்களேன்னு வேறு சொன்னார்..எனக்கு ஒண்ணுமே புரியலை, அம்மா.."

"நானும் அதான் நெனைச்சேண்டா..எல்லாம் அந்த கைலாசநாதர் கருணைதாம்பா.. நாம்ப ஒருதடவை காஞ்சீபுரம் போய், அந்த கைலாசநாதர்  சந்நிதிலே  வேண்டிண்டு, கோயில் உண்டியல்லே  அந்தப் பணத்தைச் சேர்த்திடலாம்..நீ கவலைப்படாதே.." என்று தேற்றி, என் மனக்கவலைக்கு ஒரு மருந்தும் சொன்னாள். அம்மாவின் யோசனை எனக்கும் ஒருவிதத்தில் நிம்மதி ஏற்படுத்தியது.

(வளரும்)

படங்கள் உதவிய நண்பர்களுக்கு  நன்றி.


22 comments:

ஸ்ரீராம். said...

கரு கனமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆறு வாரங்களுக்குள் அதை முடிக்கவேண்டும் என்பதால் சில இடங்கள் மின்னல் வேகத்தில் கடக்கின்றனவோ! (நான் கதைக்கருவைச் சொல்கிறேன்!!!!)

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உஷா புன்முறுவலுடன் எதிர்ப்பட்டாள். இன்றைக்கு வழக்கத்துக்கு மீறி அழகாகக் கண்களுக்குத் தென்பட்டாள்.//

மிகவும் அழகான வரிகள்.

// "வாங்க.. உங்களுக்கு ஒரு நல்ல செய்தி.." என்றார் டாக்டர், ஆங்கிலத்தில்
என்ன நல்ல செய்தி என்று அவர் சொன்னதும், நாங்க, ரெண்டு பேரும் றெக்கை கட்டிக்கொண்டுப் பறந்தோம் என்று தான் சொல்ல வேண்டும். //

ஆஹா, இதைப்படிக்கும் நம் மனதே றெக்கை கட்டிக்கொண்டு பறக்கும்போது அந்த தம்பதியினரின் மனது என்னமாய் குஷியாக இருந்திருக்கும்.

//"அந்தக் குடுகுடுப்பைக்காரன் அன்னிக்கு காலம்பற இப்படிச் சொன்னான்னு சொன்னியே?..அப்புறம் அவன் வந்தானா?" என்று ஆர்வத்தோடு விசாரித்தாள்.//

குழந்தை பிறப்பதற்கு முன்பு கட்டாயம் இந்தக்கதையில் வருவான் என எனக்குத் தோன்றுகிறது.

விறுவிறுப்பான தொடர் ..... தொடரட்டும்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

இல்லை, ஸ்ரீராம். இது ரயில் கிளம்புகிற ஆரம்ப வேகம் தான். போகப்போகத்தான் வேகத்தைக் கூட்ட வேண்டும். உங்கள் யூகம் கரெக்ட். கனமான கரு தான். என்ன கனம் மிகுந்து இருந்தாலும் அதை எளிமைபடுத்தி அதுவும் கதையாகச் சொல்லும் பொழுது வாசிப்போர் நெஞ்சில் சுலபமாகப் பதிந்து விடுகிறது. அதற்காகத் தான் இந்தக் கதைத் தேர்வு. தொடர்ந்து வாசித்து சுவைத்ததற்கு சுவை கூட்டுங்கள். நன்றி.

ஜீவி said...

@ வை.கோ.

//மிகவும் அழகான வரிகள்//

தலையில் சுற்றியிருந்த டர்க்கிடவல், அவள் தலைக்குக் குளித்திருந்ததைத் தெரிவித்தது.
அது தான் கூடுதல் அழகுக்கு காரணம் போலிருக்கு.

அன்று வெள்ளிக்கிழமகி இல்லை. இருந்தும் தலைக்குக் குளித்திருந்தாள் என்று ஒரு வரி சேர்த்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்.

ஜீவி said...

@ வை.கோ.

//அந்த தம்பதியினரின் மனது என்னமாய் குஷியாக இருந்திருக்கும்.//

"கல்யாணத்திற்கு உடனேயே குழந்தை என்ற பேச்சுக்கே இடமில்லை" என்றார் சமீபத்திய தொலைக்காட்சி பேட்டியில் ஒரு பெண்மணி. அஞ்சாறு வருஷங்களாவது நாங்கள் ஜாலியாக இருக்க வேண்டும். உடனே குழந்தை என்றால் அந்த ஜாலிக்கு ஒரு வேண்டாத குறுக்கீடு என்பதை நாங்கள் தெளிவாகவே தெரிந்து வைத்திருக்கிறோம் என்றார் அவர்.
நன்றாக சம்பாதிக்க வேண்டும்; அடுக்கு மாடி குடியிருப்பில் 1500 ச.அடி.க்குக் குறையாமல் ஒரு ப்ளாட். வங்கி ஈ.எம்.ஐ. எல்லாம் ஒரு கட்டுக்குள் வந்த பின்னாடி
தேவன்னா ஒரு குழந்தை பற்றி யோசிப்போம். தேவை இல்லேனா, அதுக்கான அவசியமும் இருக்காது' என்றார் அவர்.

நம் கதைத் தம்பதியினருக்கு திருமணமாகி பல வருடங்களாகக் குழந்தை இல்லை. இடையில் ஏகப்பட்ட பிரார்த்தனைகள். இப்பொழுது குழந்தை என்றதும் இயல்பாகவே மனசில் கிளர்ந்த குழியில் றெக்கை கட்டியாச்சு.

ஜீவி said...

@ வை.கோ.

//குழந்தை பிறப்பதற்கு முன்பு கட்டாயம் இந்தக்கதையில் வருவான் என எனக்குத் தோன்றுகிறது.//

:)))

தாங்கள் இந்தத் தொடரை வாசித்து வருவது பற்றி எனக்கு ரொம்பவும் சந்தோஷம் கோபு சார்! தொடர்ந்து வாருங்கள்..

Ramani S said...

வெகு சுவாரஸ்யம்
ஆர்வமுடன் தொடர்கிறோம்
வாழ்த்துக்களுடன்

கோமதி அரசு said...

கைலாசநாதர் சந்நிதிலே வேண்டிண்டு, கோயில் உண்டியல்லே அந்தப் பணத்தைச் சேர்த்திடலாம்..நீ கவலைப்படாதே.."//

அது என்னபணம்?
அதில் ஏதோ கதை ஒளிந்து இருக்கு போலவே!

தொடர்கிறேன்.

G.M Balasubramaniam said...

/ அன்று வெள்ளிக்கிழமகி இல்லை. இருந்தும் தலைக்குக் குளித்திருந்தாள் என்று ஒரு வரி சேர்த்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்/ எங்கள் பக்கமெல்லாம் தினமும் தலைக்குத் தண்ணீர் ஊற்றிக் குளிப்பார்கள்

ஜீவி said...

@ S. Ramani

தொடர்வதர்கும் சுவாரஸ்யத்தைச் சொன்ன பின்னூட்டத்திர்கும் நன்றி, ரமணி சார்!

ஜீவி said...

@ கோமதி அரசு

//அது என்ன பணம்?''

அது நல்ல செய்ட்கி சொன்ன குடுகுடுப்பைக்காரனுக்கு வெகுமதியாகத் தரவேண்டும் என்று நினைத்திருக்கும் ரூ.100/- பணம்.

அதில் ஏதோ கதை ஒளிந்து இருக்கு போலவ..''

ஒளிந்து இல்லை, வெளிப்படையாக இனி கதையை நகர்த்த போவதே அதான்.

தொடர்ந்து வாருங்கள், கோமதிம்மா.

ஜீவி said...

@ G.M.B.

இயற்கையோடு இணைந்த கேரளத்தின் சூழலும், சீதோஷ்ணநிலையும் இங்கு இல்லை.
அங்கு ஆண்களும், பெண்களும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு அது ஒரு காரணம்.

இங்கு தினமும் தலைக்குக்குளித்தால் முடி உதிரும்; தலையில் நீர் கோர்த்துக் கொள்ளுதல், தலைவலி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். ஆனால் பொதுவாக வெள்ளிக்கிழமை பெண்கள் எண்ணெய்க் குளியல் நாளாக தொன்று தொட்டுக் கடைபிடித்து வருகிறார்கள். வெள்ளிக்கிழமை என்பது அம்மன் வழிபாட்டுக்கான தினம் என்கிற கூடுதல் செளகரியம் வேறே.

தலைக்குக் குளித்தல் என்றால் சில பகுதிகளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைத் தான் தலைக்குக் குளீத்தல் என்று சொல்கிறார்கள்.

இந்தக் கதையைப் பொருத்தமட்டில் வெறுமனே தலைக்குத் தண்ணீர் ஊற்றிக் குளிப்பதைக் குறிப்பிட்டிருக்கிறது.

சேர்த்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும் என்பது வேறு ஒரு காரணத்திற்காக.

தாங்கள் தொடர்ந்து வாசித்து வருவதில் மகிழ்ச்சி.

Dr B Jambulingam said...

கதையின்போக்கு வாசகர்கள் தம் வீட்டில் இந்நிகழ்வுகள் நடப்பதைப் போல உணர்த்துகிறது.

ஜீவி said...

@ Dr. B.Jambulingam

அப்பொழுது தான் வாசிப்போரால் கதையோடு ஒன்ற முடியும் என்பதற்காக தனிப்பட்ட அக்கறை எடுத்துக் கொள்வேன்.

தங்கள் ரசனைக்கு நன்றி, ஐயா!

‘தளிர்’ சுரேஷ் said...

இயல்பான நடையில் செல்கிறது கதை! ஒரு நடுத்தர குடும்பத்தை கண்முன்னே நிறுத்தி காட்சி படுத்தி வருவது சிறப்பு! தொடர்கிறேன்!

ஜீவி said...

@ தளிர் சுரேஷ்

வாசித்து வருவதற்கும் கதையின் சிறப்பாக தாங்கள் உணர்ந்ததைச் சொன்னதற்கும் நன்றி, சுரேஷ் சார்!

Shakthiprabha said...

குடுகுடுப்பை காரர்களெல்லாம் ஏறக்குறைய தொலைந்தே போன இக்காலத்தில், இத்தொடர் குடுகுடுப்பைகாரரின் சொல்லில் மையம் கொண்டிருப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது.

ஆறே வாரத்தொடர் என்பதால் கண்டிப்பாக இடையில் தொலைந்து போகாமல் படித்து முடிக்க எண்ணியிருக்கிறேன்.

Geetha Sambasivam said...

இனி கதையை நகர்த்தப் போவது கைலாசநாதரும், அந்தப் பணமுமா? நல்லபடியாகக் குழந்தை பிறக்கப் பிரார்த்திக்கிறேன்.

வே.நடனசபாபதி said...

தம்பதியர்கள் எதிர்பார்த்தது (தாய்மை அடைந்திருப்பது) நடந்திருந்தாலும், எதிர்பாராத ஒன்று ஏதோ நடக்க இருப்பதாக நினைக்கிறேன். எனது கணிப்பு சரியா என்பதை அந்த கைலாசநாதர் தான் சொல்லவேண்டும். தொடர்கிறேன்.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

முதலில் சொன்னது சரி. குடுகுடுப்பைக்காரனுக்குத் தர நினைத்திருந்த, அவனைக் கண்டுபிடிக்க முடியாததினால் கைலாசநாதர் கோயில் உண்டியலில் போட அம்மா வழிகாட்டிய அந்தப் பணம். இன்னும் சொல்லப் போனால் வீட்டில் பூஜையில் வைத்து (முடிந்து வைத்த) உண்டியலில் செலுத்த என்றே எடுத்துச் சென்றிருந்த பணம்.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

எதிர்பாராத ஒன்று என்றில்லை, எதிர்பாராத திருப்பம் ஒன்று காத்திருக்கிறது.

தொடர்ந்து வாசித்து கதையின் அந்த மையப்புள்ளியைக் கண்டுபிடியுங்கள், சார்.

ஜீவி said...

@ ஷக்தி

எல்லோர் பின்னூட்டத்திற்கும் பதிலளித்து வருகையில் இடையில் எப்படியோ தங்கள் பின்னூட்டத்திற்கு மறுமொழி அளிப்பது தவறி விட்டது. இப்பொழுது தான் கவனித்தேன்.

ஆறு வாரத் தொடரும் நிறைவடைந்து விட்டதே, இடையில் காணாமல் போகாமல் படித்து முடித்திர்களா?.. தெரிந்து கொள்ள ஆவல்.

Related Posts with Thumbnails