Monday, September 26, 2016

ஆறு வாரத் தொடர்: உங்களுக்காவது தெரியுமா?..

                                            

பகுதி--5

கோயில் உண்டியலில் போடுவதற்காக  வீட்டுப் பூஜையில்  நடராஜ விக்கிரகத்தின் பாதார விந்தத்தில் வைத்திருந்துப்  பின் 
என் சட்டைப்பையில் தனியே எடுத்து வைத்துக் கொண்ட பணம் நூறு ரூபாயைக் காணோம்.  

என் திகைப்பைப் பார்த்து, "என்னப்பா?" என்றார் பெரியவர்.

"ஐயா, கோயில் உண்டியலில் போடுவதற்காக சட்டைப்பையில் பணம் வைத்திருந்தேன். அதைக் காணோம்" என்று பரிதாபமாகச் சொன்னேன்.

"எவ்வளவு?"

"நூறு ரூபா."

`"இந்த நோட்டா பாரு__" பெரியவர் ஒரு நூறு ரூபாய்த் தாளை என்னிடம் நீட்டினார்.

"ஐயா, இது நூறு ரூபா நோட்டுதான். ஆனால் தொலைந்த என் ரூபாய்தான் என்று எப்படியய்யா, சொல்வது?"

"இந்தா. உன் பணம்" என்று பெரியவர் என்னிடம் ரூபாய் நோட்டை நீட்டினார்.

நான் தயங்கினேன்.

"நீ வைத்திருந்தது தான்.     அந்தத் தூணுக்கருகில் நாம்  உட்கார்ந்து   பேசிக்கொண்டிருந்தோம், இல்லையா? அப்பொழுது சட்டைப் பையிலிருந்து  வீபூதிப் பொட்டலத்தை எடுத்தாய், அல்லவா?...அப்போ நோட்டும் உன் கையோடு வந்துத் தவறித் தரையில் விழுந்தது. நான் தான் எடுத்து வைத்திருந்தேன். இந்தா__"

என்னால் நம்ப முடியவில்லை. 'அங்குத் தவறித் தரையில் விழுந்திருந்தால், அங்கேயே எடுத்துக் கொடுத்திருப்பாரே?.. உண்டியலில் போட எடுத்து வந்தக்காசைத் தொலைத்து விட்டுத் தவிக்கும் என் தவிப்பைக் காண சகியாமல், பெரியவர் தனது பணத்தைத் தருகிறாரா?' .

"ஐயா, இது உங்களது இல்லை தானே?...என்னது தானே?"

பெரியவர் கடகடவென்று கோயில் அதிரச் சிரித்தார். அவரின் அந்தச் சிரிப்பு, அந்த இடத்திற்குச் சம்பந்தமில்லாதது  போலிருந்தது.

"என்னது--உன்னது என்று ஏன் பிரித்துப் பேசுகிறாய்?..நீயும் நானும் வேறா?.."

"ஐயா---"

"உன்னை நீ என்று அழைத்துப் பேசுகிறேனே?..அந்த அளவுக்கு உன்னை எனக்கு மிகவும்  பிடித்துப் போய் விட்டது. உனது வெகுளியான மனசு நோகக்கூடாது. இந்தாப் பிடி.."

"--------------"

"பூசலாருக்குச் சொன்னது தான்.       கொஞ்சநேரம் நாம் பேசிக்கொண்டிருந்தாலும், பூசலாரும் நீயும் எனக்கு ஒன்றுதான். திருநின்றவூர்க்காரன் என்று வேறு சொல்றே..இந்தாப் பிடி."

எனக்கு பதில் பேச நாவெழவில்லை. விழி முனையில் நீர் தளும்ப, பார்வை கலங்கிற்று.

"என்ன யோசனை?..வாங்கிக்கோ..   வாங்கி உன் கையாலே உண்டியலில் போடு..  யாருக்குப் போகணுமோ, அவங்களுக்குப் போய்ச் சேரட்டும்" என்றார்.

நான் திகைத்தேன்..'யாருக்குப் போகணுமோவா?...நியாயப்படி அந்த அதிகாலைப் போதில் எங்கள் மனத்தில் சந்தோஷ அலைகளை புரளச் செய்த   அந்த ஏழை குடுகுடுப்பைக்காரனுக்கு அல்லவா இந்தப் பணம் போய்ச்சேரவேண்டும்?.  .உண்டியலில் காசை  நீ போடு; அவனுக்கேப் போய்ச் சேரும்' என்று குறிப்பால் உணர்த்துகிறாரா, இந்தப் பெரியவர்?..

'அவர் சொல்வதைச் செய்' என்று ஆழ்மனம் ஓங்காரமிட்டது.

இதற்கு மேல் என்னால் அவர் பேச்சைத் தட்டமுடியவில்லை. அவர் கொடுத்த அந்த நூறு ரூபாய்த் தாளை நடுங்கும் கரங்களால் வாங்கி,"ஈஸ்வரா---" என்று நெஞ்சடைக்க உச்சரித்து உண்டியலில் போட்டேன். பளீரென்று வெளுத்த வானம் போல, நெஞ்சமெல்லாம் நிர்மலமாயிற்று.

பெரியவர் என் தோள் பிடித்து அணைத்துக் கொண்டார். என் உடலில் மின்சாரம் மீட்டி விட்டுப் போனது. "இப்போ திருப்தி..   யாருக்குன்னு கேக்காதே..  ஊர் போய்ச் சேர்.." என்று அடிக்குரலில் சொன்னவர், சந்நிதி காட்டி,  "இந்தக் கச்சிமூதூர் கைலாசநாதன், இச்சகத்து நாயகன், உன் இடும்பை தீர்ப்பான். பத்திரமாகப் போய்வா.." என்று அவர் சொல்கையிலேயே எனக்குப் பொறி தட்டியமாதிரி இருந்தது. 'அன்று, அந்த  விடியலில் அந்தக் குடுகுடுப்பைக்காரன் 'இடும்பை தீரும்' என்று குறி சொல்வது போல் சொன்ன அந்த அசலான வார்த்தைகளல்லவா, இவை?...

அந்தப் பெரியவரை மலங்கப் பார்த்தபடி நான் நிற்கையிலேயே, "அதோ--இன்னொருத்தர் எனனைத் தேடி வந்துவிட்டார். என்னைப் பார்த்தால் தான் அவருக்குத் திருப்தி.." என்று கும்பலாகக் கோயிலுள் நுழைந்த கூட்டத்துள் கலந்தார்.

'இப்பொழுது தானே சந்நிதி சென்று வந்தோம்?..இந்தப் பெரியவர் சந்நிதி நோக்கி ஏன் அவசரமாக விரைகிறார்?'..என்று திகைத்து கொஞ்ச நேரம் நின்றேன். பிறகு ஊருக்குச் செல்ல வேண்டுமே என்கிற எண்ணத்தில் கோயிலின் வெளிப்புறம் வரத் திரும்பினேன்.

கிட்டத்தட்ட கைலாசநாதர் கோயிலின் வெளிப்புல்வெளி தாண்டி ரோடு பக்கம் வந்து விட்டேன்.

கொஞ்ச தூரம் நடந்திருக்க மாட்டேன்.  "ஐயா!.." என்று கெஞ்சுகிற மாதிரி அழைத்த குரல் வேகமாக நடைபோட்ட என் கால்களைப் பின்னுக்கு இழுத்தது. திரும்பிப் பார்த்தேன். முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண், மிக ஏழ்மைக் கோலத்துடன். கையில் கைக்குழந்தை....

"ஐயா..குழந்தை பாலுக்குத் தவிக்குதய்யா.. கையில் காசு இல்லை..தருமம் ஐயா!.." என்று திக்கித் திணறி அந்தப் பெண் யாசிக்கையிலேயே, இப்படி யாரிடமும் கேட்டு அந்தப் பெண்ணுக்குப் பழக்கமில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

'ஏதாவது கொடு...தாமதிக்காதே...கொடு...' என்று உள்மனம் அவசரமாக ஆணையிட பை துழாவினேன்...சட்டைப்பையில் சில்லரைக்காசு இல்லை... வலதுபக்க பேண்ட் பாக்கெட்டில் கைவிட, நான் வெளியூருக்கு எங்கு சென்றாலும் என்னோடு எடுத்து வரும் என் அலுவலக அடையாள அட்டை கையோடு வந்தது.

ஏதோ அவசர அவசரமாக நினைவில் பொறிதட்டிய வேகத்தில் பிளாஸ்டிக் உறையில் இருந்த அந்த அட்டையைப் பிரித்துப் பார்க்கையில் துணுக்குற்றேன்.    

வழிச்செலவுக்குப் போக, கோயில் உண்டியலில் போட பூஜை அறையிலிருந்து எடுத்து மற்ற நோட்டுகளுடன் கலந்து    விடக்கூடாது என்று தனியாக பத்திரப்படுத்தி  வைத்திருந்த நூறு ரூபாய் நோட்டு, அப்படியே பத்திரமாக இருந்தது.  

அந்தப் பெரியவருடன் பேசிக்கொண்டிருந்த  என் வசமிழந்த நேரத்தில்  ரூபாய் நோட்டைத் தனியாக பத்திரப்படுத்தி வைத்திருந்த சிந்தனையே இல்லாது மறந்து போயிருக்கிறேனே என்று எனக்கே வெட்கமாக இருந்தது..

அந்தப் பணம் என்னிடமே இருந்திருக்கிறது என்றால்?... 'அப்போ, என் சட்டை பையிலிருந்து வீபூதிப்  பொட்டலம் எடுக்கையிlல்,   விழுந்ததாகக் கூறி பெரியவர் கொடுத்த அந்த நூறு ரூபாய்?...அந்தப் பெரியவரின் காசா?.. வேண்டிக்கொண்டு உண்டியலில் போட வந்தக் காசை நான் தவற விட்டுவிட்டதைக் காணப் பொறுக்காமல், 'எவ்வளவு?' என்றுக் கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தப் பெரியவர் கொடுத்த பணமா அது?..   

அடப்பாவமே!.. எவ்வளவு வயசுப் பெரியவர்?...  எதற்கு வைத்திருந்தாரோ?...   அவரிடம் வாங்கி--'

அதை    நினைக்கையிலேயே  மனம் துவண்டு போனது.


(தொடரும்)

புகைப்படங்கள் உதவிய நண்பர்களுக்கு  நன்றி.
16 comments:

ஸ்ரீராம். said...

சிறிய திருப்பங்கள். பெரிய விஷயங்கள். தொடர்கிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வலதுபக்க பேண்ட் பாக்கெட்டில் கைவிட, நான் வெளியூருக்கு எங்கு சென்றாலும் என்னோடு எடுத்து வரும் என் அலுவலக அடையாள அட்டை கையோடு வந்தது. ஏதோ அவசர அவசரமாக நினைவில் பொறிதட்டிய வேகத்தில் பிளாஸ்டிக் உறையில் இருந்த அந்த அட்டையைப் பிரித்துப் பார்க்கையில் துணுக்குற்றேன்.//

இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. என் பழைய நினைவுகளைக் கிளறி விட்டது. நானும் இதே போல என் அலுவலக அடையாள அட்டைக்கு அடியே என் ஒரு விசிடிங் கார்டை அந்த ப்ளாஸ்டிக் ஃபோல்டரில் (ATM CARD போல) வைத்திருப்பேன். இவை இரண்டுக்கும் இடையே ஒரு புத்தம் புதிய 500 ரூபாய் தாளை நான்காக மடித்து, ஏதேனும் ஓர் எமெர்ஜென்ஸி ஏற்பட்டால் மட்டுமே செலவுக்கு எடுத்துக்கொள்ளலாம் என வைத்திருப்பேன்.

தொடர்ந்து படிக்க மிக்க ஆவலுடன் ......

கோமதி அரசு said...

"இந்தக் கச்சிமூதூர் கைலாசநாதன், இச்சகத்து நாயகன், உன் இடும்பை தீர்ப்பான். பத்திரமாகப் போய்வா.." என்று அவர் சொல்கையிலேயே எனக்குப் பொறி தட்டியமாதிரி இருந்தது. 'அன்று, அந்த விடியலில் அந்தக் குடுகுடுப்பைக்காரன் 'இடும்பை தீரும்' என்று குறி சொல்வது போல் சொன்ன அந்த அசலான வார்த்தைகளல்லவா, இவை?..//

அன்று வந்து இவனின் கவலையை போக்கி களிப்பைக் கொடுத்தவரும் கைலாசநாதன் தான் என்று தெரிகிறது.

//"அதோ--இன்னொருத்தர் எனனைத் தேடி வந்துவிட்டார். என்னைப் பார்த்தால் தான் அவருக்குத் திருப்தி.." என்று கும்பலாகக் கோயிலுள் நுழைந்த கூட்டத்துள் கலந்தார்.//

உன்னை போல் இன்னொருவர் வந்து விட்டார், என்னைப்பார்த்தால் தான் திருப்தி என்று சொல்லுவதை பார்த்தால் அவர் தான் என்று தெரிகிறது.

//யாருக்குப் போகணுமோ, அவங்களுக்குப் போய்ச் சேரட்டும்" என்றார்.//

கடைசியில் உண்டியலில் யாருக்கு சேர வேண்டுமோ அவருக்கு போய் சேர்ந்து விடும் என்று சொன்னதில் ஒரு கதை இருக்கிறது.

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதை சொல்கிறார்.

//ஐயா..குழந்தை பாலுக்குத் தவிக்குதய்யா.. கையில் காசு இல்லை..தருமம் ஐயா!.."//

உண்டியலில் போட சொன்ன பணம் அவர் பணம் தான்.

இப்போது கைலாசநாதருக்கு வைத்து இருந்த பணம் அந்த ஏழைதாயின் குழந்தை பசிதீர உதவ போகிறது.


நீங்கள் வேறு மாதிரி சிந்தித்து வைத்து இருப்பீர்களோ? கீழே உள்ள மாதிரி.குடுகுடுப்பைக்காரர் வைத்து இருந்த பணம் கைலசநாதருக்கு , யாருக்கு போய் சேரனுமோ அங்கு போய் சேரும் என்று கைலாசநாதர் சொன்னதை வைத்து பார்க்கும் போது அந்த குழந்தை குடுகுடுப்பைகாரர் குழந்தையோ ! என்று எண்ண தோன்றுகிறது.

Geetha Sambasivam said...

தொடர்ந்து படிக்கக் காத்திருக்கேன்.

வே.நடனசபாபதி said...

உண்டியலில் போட எண்ணிய பணம் தனியாக இருந்தது என்பது எதிர்பாராத ஒன்று. //யாருக்குப் போகணுமோ, அவங்களுக்குப் போய்ச் சேரட்டும்// என்று இறைவன் சொன்னது அந்த ஏழைப்பெண்ணைத்தானோ?
அவரின் திருவிளையாடலை யார் அறிவார்? தொடர்கிறேன்.

Ramani S said...

அழுத்தமாய்ச் சொல்லப்பட்ட வரிகளை
மிகவும் இரசித்தேன்
வெகு சுவாரஸ்யமான திருப்பங்கள்
மீண்டும் ஒருமுறை படிக்க வைத்தது
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..
வாழ்த்துக்களுடன்...

சிவகுமாரன் said...

வந்தேன். விட்டதை படித்து விட்டு மீண்டும் வருகிறேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

// சிறிய திருப்பங்கள். பெரிய விஷயங்கள். //

அட! நல்லாயிருக்கே! கதைத் தொடரின் தலைப்பாகவே வைத்திருக்கலாம் என்று இப்பொழுது தோன்றும் அளவுக்கு பொருத்தமாகவும் இருக்கு..!

ஜீவி said...

@ வை. கோ.

நானும் அப்படித்தான். ஆனால் நூறு ரூபாய் நோட்டு தான். இன்னொரு நூறு, பேண்ட் வயிற்றுப்பகுதியில் பதியும் இடத்தில் ரொம்ப சின்னதாக ஒரு பாக்கெட் உண்டு. அதில் இருக்கும். அநேகமாக பேண்ட் மாற்றும் பொழுது தான், மாற்றிய பாண்ட்டின் வயிற்று பகுதிக்கு இது போகும். வாஷிங்மெஷினில் பாண்ட்டோடு இதுவும் சேர்ந்து துவைக்கப்பட்டு அலசி உலர்த்தி அயர்ன் பண்ணும் பொழுது நோட்டையும் சேர்த்து அயர்ன் பண்ணிய காலமெல்லாம் உண்டு.

அடுத்த இறுதிப் பகுதி, உங்களை இப்படி 'ஹாயா' ஒரு கமெண்ட் போட விடாது என்று நினைக்கிறேன், கோபு சார்!

ஜீவி said...

@ Geetha Sambasivam

ரொம்ப காக்க வைக்க மாட்டேன்..

விரைவில் வெளியிட்டு விடுவேன், கீதாம்மா.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

ஒரு வித்தியாசமான தொடரில், மிகப் பிரபலமான ஒரு சித்தாந்தத்தைத் தொடர்ப்பு படுத்திப் பார்க்க நினைத்தேன். அதன் விளைவு தான் இந்தத் தொடர்.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, சார்.

ஜீவி said...

@ எஸ். ரமணி

அடுத்த பகுதியில் தொடரே நிறைவுறுகிறது, இல்லையா?..

கதையெல்லாம் ஒரு வடிவம் தான். சொல்ல நினைப்பதை அந்த வடிவத்தில் சொல்ல முயற்சிக்கிறேன். பார்க்கலாம். எப்படி சொல்லியிருக்கிறேன் என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

தொடர்ந்து வாசித்து வருவதில் மகிழ்ச்சி, ரமணி சார்.

ஜீவி said...

@ சிவ்குமாரன்

துண்டு துண்டாக எதற்கு?..
மொத்தக் கதையையும் படித்து விட்டு மனசில் பட்டதைச் சொல்லி விடுங்கள். வாசித்து வருவதற்கு, நன்றி, சிவகுமாரன்.

Shakthiprabha said...

இப்படி இறைவனை அருகில் உணரும் தருணமும் வருமோ என்று ஏங்க வைத்துவிட்டீர்கள்

‘தளிர்’ சுரேஷ் said...

கதையின் முடிச்சு அவிழும் வேளை வந்துவிட்டது போலிருக்கே! சுவாரஸ்யம்! தொடர்கிறேன்!

ஜீவி said...

@ தளிர் சுரேஷ்

கடைசியில் போட்ட முடிச்சை அவிழ்த்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் எழுதுபவருக்கு இருப்பதை விட கடைசி வரை முடிச்சு அவிழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற சாமர்த்தியமே பெரிதாகச் தெரிகிறது, சுரேஷ் சார்!

Related Posts with Thumbnails