Monday, September 19, 2016

ஆறு வாரத் தொடர்: உங்களுக்காவது தெரியுமா?..

பகுதி--3


நாங்கள் இருந்தது, திருநின்றவூர். இங்கிருந்து காஞ்சீபுரம் பொல்லாத தூரமில்லை;   ஆனால் ஏனோ    இதுவரை நான் காஞ்சீபுரம் வந்து சுற்றிப் பார்த்ததில்லை.   

நகரேஷூ காஞ்சி என்று காளிதாசன் புகழ்ந்த நகரம்.   இந்த ஊரில் மட்டும் சின்னதும் பெரியதுமாய் 1008 கோயில்கள் இருக்கிறதாம். பல்லவர்களின் தலைநகரம்;    அந்தக்கால  மகத தேசத்து  நாளந்தா பல்கலைக் கழகத்திற்கு நிகரான  கலவிச்சாலை  இங்கு   இருந்ததாம்.   எல்லாம் படித்துத் தெரிந்து கொண்டது தான்.   

காஞ்சிபுரம் கிளம்பும் முன் அம்மாவிடம் கேட்டேன்.  "ஏம்மா ஆதித்த கரிகாலர் தன் அப்பா சுந்திரசோழர் தங்குவதற்காக காஞ்சிபுரத்தில் பொன்மாளிகை  கட்டியதாக பொன்னியின் செல்வனில் வருமே? அது பற்றி ஏதாவது தடயம் இப்போ இருக்கா?     நீ  தான் நிறைய தடவை காஞ்சிபுரம் போய் வந்திருக்கையே?. உனக்கு  ஏதாவது தெரியுமா?" என்று நான் கேட்டவுடன் அம்மாவின் முகம் பிரகாசமடைந்தது.

"ஆஹா..  கல்கிதான் என்னமாய் அது பற்றி எழுதியிருப்பார்?" என்று கல்கி போலவே ஒரு 'ஆஹா..' போட்டாள்.  "பொன்மாளிகை  இருந்த சுவடு கூட இப்போ அங்கே கிடையாது" என்றாள். "ஐயங்கார் குளம்ன்னு பக்கத்திலே கிராமம் மாதிரி ஒரு சின்ன ஊர் இருக்கிறது. அந்த ஊருக்குப் பக்கத்திலே இருந்திருக்கும்ன்னு யாரோ சொல்லி படிச்ச  ஞாபகம் இருக்கு. என் அப்பா-- உங்க தாத்தாவுக்கு-- இப்படி சரித்திர ஆராய்ச்சிலேலாம் ரொம்ப விருப்பம்.  அவருக்கும் அந்தப் பக்கம் தான் பொன்மாளிகை இருந்திருக்கணும்ன்னு எண்ணம்" என்றாள்.

அம்மா சொன்னது பற்றி நான் யோசித்துக் கொண்டிருக்கையில் அம்மாவே தொடர்ந்தாள்:  "காஞ்சிபுரம் கோயில்  நகரம்ப்பா. ஏகாம்பரேஸ்வரர்,  காமாட்சி  அம்மன் என்று அப்பனும் அன்னையும் கோயில் கொண்டிருக்க இடையில் மகன் குமரனுக்கு கோட்டம்!   பார்க்க எவ்வளவு அழகாக இருக்கும், தெரியுமா?"  என்று கற்பனையில் ரசித்தவள்,  "நீ நேர்த்திக் கடனையும் நன்றிக் கடனையும் செலுத்த இப்போ கைலாசநாதரை தரிகிக்கப் போறே. இருந்து கோயிலைச் சுற்றிப் பார்த்து விட்டு மனசார வேண்டிக் கொண்டு வா..  அப்புறம் நான், நீ,  உஷா, குட்டிக் குழந்தை எல்லோரும் ஒண்ணாப் போய் நிதானமா காஞ்சிபுரம் முழுக்கப் பார்த்துட்டு வரலாம்.  சரியா?"  என்றாள்.

 அம்மாவுக்குத் தான் எவ்வளவு ஆசை!   'குட்டிப்பாப்பாவை விட்டு விடாமல் சேர்த்துக்  கொள்கிறாளே'  என்று நினைத்தபடி                        "சரிம்மா.." என்று புறப்படத் தயாரானேன்.   என் அதிர்ஷம் என்று தான் சொல்ல வேண்டும்.  காஞ்சிபுரம் அடையும் வரை உடனுக்குடன் மாற்றி மாற்றி பஸ் கிடைத்து  எந்த தொந்தரவும் இல்லாமல் வந்து சேர்ந்து விட்டேன். 

காஞ்சிபுரம் பஸ் நிலையம் மஹா நெரிசலாக இருந்தது.  அதுவே எதிர்பார்த்த  சரித்திரகாலப் புகழ் வாய்ந்த காஞ்சிபுரத்திற்கும், நம் கால காஞ்சிபுரத்திற்குமான வித்தியாசமாக இருந்து மனசுக்கு ஏமாற்றமாக இருந்தது. 

ஒருவழியாக  பஸ் நிலையத்திலிருந்து வெளியே  பிரதான சாலைக்கு வந்தேன்.  நீண்டிருந்த தெருவை வலப்பக்கம் இடப்பக்கம் என்று பிரித்துக் கொண்டு பஸ் நிலையத்திலிருந்து வெளியே வந்த பாதை இருந்தது.   நான் பார்த்துக் கொண்டே  இருக்கையில்  சாலையின் எதிர்ப்புறம்  இருந்த பஸ் நிறுத்தத்தில் ஒரு டவுன் பஸ் வந்து நின்றது. பஸ்ஸின் பெயர்ப்பலகையைப் பார்த்ததில்  கங்கை கொண்டான் மண்டபம் என்று போட்டிருந்தது கொட்டை எழுத்தில் தெரிந்தது.

கங்கை கொண்டான் மண்டபம் என்பது கைலாச நாதர் கோயில் இருக்குமிடமோ?  தெரியவில்லை.  இல்லை, தலையில் கங்கையைச் சுமந்து கொண்டிருப்பதால் கைலாச நாதர் தான்  கங்கை கொண்டானோ?..   அதுவும் தெரியவில்லை.

பக்கத்தில் பூக்கடை போட்டு பூ தொடுத்துக் கொண்டிருந்த பெண்ணை "இந்த பஸ்ஸில் போனால் கைலாசநாதர் கோயில் போகலாமா அம்மா?.." எதிர்ப்புறம் நின்ற பஸ்ஸைக் காட்டிக் கேட்டேன்..

"ஐயே!.." என்ற  அந்த பூக்காரப் பெண் வாயைப் பொத்திக் கொண்டு லேசாகக் குலுங்கினாள்.  அடக்க முடியாமல் சிரிக்கிறாள் என்று தெரிந்தது. சிரிக்கிற மாதிரி அப்படி என்ன சொல்லிவிட்டேன் என்று புரியவில்லை.  எனக்கு வந்த ஆத்திரத்தில் அந்தப் பூக்காரப் பெண்ணின் வாய் பொத்திய கரங்களை நீக்கி, "என்னத்துக்கு இப்படி சிரிக்கிறே?" என்று கேட்க வேண்டும் போல கோபம் பொத்துக் கொண்டு வந்தது 

அதற்குள் அந்தப் பெண் தன் வாயைப்  பொத்தியிருந்த கரங்களை எடுத்து விட்டாள்.  "கைலாசநாதர் கோயிலுக்கு எந்த பஸ்ஸூம் போகாது.   ஒரு  சைக்கிள் ரிக்ஷாவோ  ஆட்டோவோ  பிடிங்க.. கொண்டு விடுவார்கள்" என்று 'இவளா சற்று நேரத்திற்கு முன்பு அடக்க முடியாமல் சிரித்தாள்' என்று சந்தேகப்படும் அளவுக்கு சிரிக்காமல் சொன்னாள்.

அவள் சொல்லி வாய் மூடவில்லை.  என் பக்கத்தில் என்னை ஒட்டியவாறு சைக்கிள் ரிக்ஷா ஒன்று வந்து நின்றது.  

"சாருக்கு எங்கே போகணும்?" என்று ரிக்ஷாக்காரர்  பவ்யமாகக்           கேட்டார்.  இளவயது தோற்றம். நெற்றியில்  பட்டையாக வீபூதி.  முகத்தில் சாந்தமான பாவம்.

"கைசால நாதர்  கோயிலுக்கு.." என்றேன்.

"ஏறிக்கோங்கோ.." என்றார்.  அவர் சொன்னது வித்தியாசமாக இருந்ததில் இருந்த மரியாதையில் பதில் பேசாமல் ஏறிக் கொண்டேன்.

ரிக்ஷாவை உடைத்துத் திருப்பி மெதுவாக பெடலை மிதிக்கத் தொடங்கினார்.  இடது பக்கம் ரிக்ஷாவைத் திரும்பிய போது, நெல்லுக்காரத் தெரு என்று சிமிண்ட பலகையில் பெயிண்டில் எழுதியிருந்ததைப் பார்த்தேன்.  கொஞ்ச தூரத்தில் பெரிய கோபுரம் கொண்ட  கோயிலைத்  தாண்டும் பொழுது, "கச்சபேசுவரர் கோயில்
 சார்"  என்றார்  ரிக்ஷாக்காரர்.

"அப்படியா?" என்று கோபுரம் பார்த்துக்  கும்பிட்டேன்.  

கோயிலைக் கடந்ததும், " உங்கள் பேர் சொல்லலாமா?"  என்று கொஞ்ச   நேரத்தில் பழகிப்போன நெருக்கத்தில் அவர் பெயர்  கேட்டேன்.

"ஈஸ்வரன்.." என்றார்.

"குழந்தைகள்?"

"உண்டு சார்.  ரெண்டும் பையன்கள் தான்.  பெரியவன் ஆறாம் வகுப்பு.  சின்னவன்  நாலாம் வகுப்பு படிக்கறான்கள்" என்றார்.
'இரண்டு குழந்தைகளா?.. இவர் 'பையன்' தோற்றத்தைப்  பார்த்தால் அப்படி அனுமானிக்க முடியலேயே'  என்று நான் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கையில், "இந்தத் தெரு புத்தேரி தெரு சார்.  இந்தத் தெருக்  கடைசிலே   தான் கைலாசநாதர் கோயில் இருக்கு" என்று சொன்னவர் தெருவின் பள்ளம் மேடுக்குத் தகுந்த மாதிரி ரிக்ஷாவை வலித்துக்  கொண்டு சென்றார்.

பத்தே நிமிஷத்தில் கோயில் முன் கொண்டு வந்து சேர்த்து விட்டார். 

பர்சைத் திறந்து நான் கொடுத்த நோட்டை இயல்பாக வாங்கி சட்டைப்பையில்  திணித்துக்  கொண்டு, "வரட்டுமா, சார்?" என்று ரிக்ஷவைத்  திருப்பினார்.

வரவேண்டும்,வரவேண்டும் என்று நெடுநாள் காத்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டேன். அந்த இடத்து மண்ணை மிதித்ததுமே, உடலெங்கும் 'ஜிவ்'வென்று மின்சாரம் ஓடிவிட்டுப் போனது போன்ற உணர்வு. கோயில் இருந்த இடம் நகர்புறச் சந்தடியிலிருந்து விலகி ஒரு கிராமம் மாதிரி இருந்தது. வெளிப்புறத்திலிருந்து பார்க்கையிலேயே  தெரிந்த நீலப் பலகையில் எழுதப்பட்ட வெள்ளை எழுத்துக்கள்  இந்தியத் தொல் பொருள் ஆய்வுத்துறையின் பராமரிப்பில் இக்கோயில் இருப்பதாகத் தெரிவித்தது.கோயிலுக்குள்    நுழைவதற்கு முன்னாலேயே திறந்தவெளியில் மிகப்பெரிய நந்தி இருந்தது. 'கல்லில் செதுக்கப்பட்டது அல்ல; பிண்டி மணல் என்ற ஒருவகையான பாறை மண்ணால் ஆன நந்தி; கோயில்  பிராகாரச் சிற்பங்கள்  முழுக்கவே பிண்டி மணலால் உருவானவை!'  என்று யாரோ யாருக்கோ சொல்லிக்
கொண்டிருந்தார்கள்..  அவரே நுழைவாயில் போலவான இடத்திற்கு மேலே எழுப்பப்பட்டிருந்த சிறிய கோபுரத்தைக் காட்டி,"இதுவே தமிழ் நாட்டுக் கோயில்களில் காணப்படும் கோபுரத்திலேயே மிகவும் பழைமையான கோபுரம்" என்றார்.

நீண்ட பாதை போன்ற  உள் பிரகாரத்தின் சுவார் பூராவும்  சிற்பங்கள்!  சிற்பங்கள்!!.  ஒவ்வொரு சிற்பமாக வியப்புடன் பார்த்துக் கொண்டே கோயிலின் உள் பக்கம் வந்து விட்டேன்.  எந்தப் பக்கம் சந்நிதி என்று ஒரு நிமிடம் யோசித்துத் தயங்குகையில், "சந்நிதிக்குத் தானே? இந்தப் பக்கம் வாருங்கள்__" என்று குரல் கேட்டுத் திகைத்துத் திரும்பினேன். தூய வெள்ளை வெளேர் கதரில் வேட்டி, கைவைத்த பனியனோடு, நெற்றி பூரா பட்டை பட்டையாய் திருநீறு துலங்க ஒரு பெரியவர். வயது எழுபதுக்கு மேல் நிச்சயம் இருக்கும்.

அவரைக் கையெடுத்துக் கும்பிட்டேன்.

"கோயிலில் மனிதர்களைத் தொழலாகாது," என்று என் சைகையைத் திருத்தியவாறே, "இப்படி வாருங்கள்" என்று இடப்பக்கமாக அழைத்துச் சென்றார். அங்கே சில படிகள் ஏறியதும், தரையோடு தரையாக ஒரு சதுர திட்டிவாசல். தரையில் தவழ்ந்த வாக்கிலேயே தவழ்ந்து, ஒரு மனிதர் நுழைகிற அளவுக்கு அந்தத் திறப்பு இருந்தது.

"உள்ளே போங்கள்," என்று பெரியவர் சொன்னபடிச் செய்தேன்.  தவழ்நத     வாக்கில்   அந்தச் சதுரப் பிளவில்       உள்ளே நுழைந்து சென்றால்,  நிமிர்ந்து நின்ற நிலையில் சந்நிதியைச் சுற்றி ஓர் ஆள் வலம் வரும் அளவுக்கு ஒரு சின்ன பிரகாரம். பிரகாரத்தைச் சுற்றி வந்து  லிங்க வடிவில் இருந்த கைலாசநாதரை மனம் குளிர வழிபட்டேன்.. உடல் நெகிழ்வேற்படுத்துகிற மாதிரியான தரிசனம்.   அம்மா சொன்னபடி நிதாதமாக வார்த்தைகளைச் சொல்லி  மனசார வேண்டிக் கொண்டேன்.

தரிசனம் முடிந்துத் திரும்பிப் பார்த்தால், பெரியவரைக் காணோம். அப்பொழுதுதான் திட்டிவாசல் வழியே தவழ்ந்து உள்ளே அவர் வரவில்லை என்கிற நினைவு வந்தது. 'வெளியே இருப்பார்' என்று எண்ணிக் கொண்டே வெளிவருவதற்கு இன்னொரு பக்கம் இருந்த அந்த சின்ன திறப்பு வழியே தவழ்ந்து வெளிவந்தேன். வெளிவந்ததும், 'பெரியவர் இருக்கிறாரா?' என்று தான் என் கண்கள் தேடின.

சற்று தூரத்தில் பெரியவர் எனக்காகக் காத்திருக்கிற மாதிரி நின்று கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும், "திருப்தியாகத் தரிசனம் ஆயிற்றா?" என்று என் கண்களையே உற்று நோக்கிக் கேட்டார். அவர் கேட்டது, 'நான் என்ன பதில் சொல்லப்போகிறேன்' என்று எதிர்பார்த்து ஆவலுடன் கேட்ட மாதிரி இருந்தது.

"ஆயிற்று, ஐயா..கண்குளிர கைலாசநாதர் தரிசனம் கிடைக்கும் பேறு பெற்றேன், ஐயா!" என்றேன். தொடர்ந்து, "நீங்கள் தரிசனத்திற்கு உள்ளே வரவில்லையா?" என்றேன்.

"உள்ளே இருந்தேனே?..நீங்கள் பார்க்கவில்லை?" என்று என்னயே கேட்டார்.

"இல்லையே?" என்று திகைத்தேன். 'உள்ளே என்னுடன் வந்தவரைப் பார்க்காமல் தான் வந்து விட்டோமோ' என்று ஐயம் இருந்தது.


"உள்ளே உங்களை நான் பார்த்தேனே?" என்றார் பெரியவர்.


(தொடரும்)

படங்களை உதவிய நண்பர்களுக்கு நன்றி.

21 comments:

Dr B Jambulingam said...

தமிழகத்தில் பார்க்கவேண்டிய கோயில்களில் முக்கியமான கோயில் கைலாசநாதர் கோயில். நான் இரு முறை சென்றுள்ளேன். தற்போது உங்களோடு வருகிறேன்.

Geetha Sambasivam said...

ஆஹா, கைலாசநாதரே தரிசனம் கொடுத்துட்டாரா?

கோமதி அரசு said...

அவர் பெயர் கேட்டேன்.

"ஈஸ்வரன்.." என்றார்.//
முதலில் வந்து கோவிலுக்கு அழைத்து சென்று விட்டவரும்

கோவிலுக்கு கூட்டி சென்ற பெரியவரும் இருவரும் ஒருவரே!
நாம் பார்க்கவில்லை என்றாலும் அவர் நம்மை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்.

நாங்கள் குடும்பத்தோடு பல வருஷங்களுக்கு முன் போய் வந்தோம்.
படங்கள் அழகு.

Shakthiprabha said...

Getting curious.... very well written.

//அந்த இடத்து மண்ணை மிதித்ததுமே, உடலெங்கும் 'ஜிவ்'வென்று மின்சாரம் ஓடிவிட்டுப் போனது போன்ற உணர்வு.///

இது போன்ற உணர்வு ஏற்பட்டதுண்டு. சில அரண்மணைகள், நூற்றாண்டுகளான கற்சிற்பக்குடங்கள் ஏற்படுத்தியதுண்டு.

மிக்க ஆச்சர்யம் என்னவெனில், ஒரு சமயம் ஜம்மு மண்ணை மிதித்ததுமே எனக்கு அத்தகைய ஒரு ஆழமான பரிச்சிய உணர்வு ஏற்பட்டது வியப்பாயிருந்தது.

வே.நடனசபாபதி said...


கைலாசநாதர் கோவிலுக்கு இதுவரை சென்று வழிபட்டதில்லை. இன்று அங்கே நேரில் சென்றதுபோல் உணர்ந்தேன் தங்களின் வர்ணனையை படித்ததும்.
அந்த பெரியவர் யார் என அறியக் காத்திருக்கிறேன். .

ஜீவி said...

@ Dr.B Jambulingam

ஐயா, கச்சபேசுவரர் கோயில் சென்று தரிசித்திருக்கிறீர்களா?.. நெல்லுக்காரத் தெரு மேற்கு ராஜ வீதி சந்திப்பில் இருக்கிறது. உங்கள் நினைவுக் குறிப்புகளில் இருக்கலாம்.

கூட வருவதில் ரொம்பவும் மகிழ்ச்சி, ஐயா!ஜீவி said...

@ Geetha Sambasivam

//ஆஹா, கைலாசநாதரே தரிசனம் கொடுத்துட்டாரா? //

தவழ்நத வாக்கில் அந்தச் சதுரப் பிளவில் உள்ளே நுழைந்து சென்றால், நிமிர்ந்து நின்ற நிலையில் சந்நிதியைச் சுற்றி ஓர் ஆள் வலம் வரும் அளவுக்கு ஒரு சின்ன பிரகாரம். பிரகாரத்தைச் சுற்றி வந்து லிங்க வடிவில் இருந்த கைலாசநாதரை மனம் குளிர வழிபட்டேன்.. உடல் நெகிழ்வேற்படுத்துகிற மாதிரியான தரிசனம்.

--- அதான் திருப்தியாய் தரிசன பாக்கியம் கிடைத்ததே, கீதாம்மா!

ஜீவி said...

@ கோமதி அரசு

//அவர் பெயர் கேட்டேன்.

"ஈஸ்வரன்.." என்றார்.

முதலில் வந்து கோவிலுக்கு அழைத்து சென்று விட்டவரும்

கோவிலுக்கு கூட்டி சென்ற பெரியவரும் இருவரும் ஒருவரே! //

தத்துவங்கள் ஆழ ஆழ பார்க்க மென்மேலும் அழகாக இருக்கும், கோமதிம்மா!

G.M Balasubramaniam said...


முதலில் ஒரு சந்தேகம் அது காஞ்சிவரமா காஞ்சிபுரமா? கைலாச நாதர் கோவிலைக் காணும்போது எனக்கு பூசலார் அடிகள் இறைவனுக்கு தன் உள்ளத்தில் அஸ்திவாரம் முதல் ஒவ்வொரு கல்லாக எழுப்பிக் கோவில் கட்டி கும்பாபிஷேகத்துக்கு ஒரு நாளும் குறித்து இறைவனைக் குடியேற வேண்டியதும் , அதே நேரத்தில் பல்லவ அரசன் கலை நுணுக்கங்களுடன் ஒரு கற்கோவில் எழுப்பி கும்பாபிஷேகத்துக்கு நாள் குறித்ததும் , இறைவன் அரசன் கனவில் வந்து தான் பூசலாரின் கோவிலுக்கே முன்னுரிமை அளிப்பதாகக் கூறியதும் , அரசன் திருநின்றவூர் வந்து பூசலாரைக் கண்டு அவர் எழுப்பிய கோவில் பற்றிக் கேட்டதும் . பூசலார் தம் மனக் கோவில் பற்றிக் கூறியதும் அரசன் அவர் கால்களில் விழுந்த வணங்கியதாகவும் கூறப் படும் கதை நினைவுக்கு வந்தது. அந்த அரசன் கட்டிய கோவில் இந்தக் கைலாச நாதர் கோவிலா என்பது சரியா என்று தெரிய வில்லை. எப்படி இருந்தாலும் ஒரு இறைக்கதை பகிர்ந்து கொள்ள இது உதவுகிறது.
கைலாசநாதர் கர்ப்பக் கிருகத்தைச் சுற்றி ஒரு குகை மாதிரியான பாதை உண்டு. சந்நதியின் வலப் புறம் இரண்டுக்கு இரண்டு அடியில் ஒரு திறப்பு உண்டு. தரையிலிருந்து சுமார் மூன்றடி உயரத்தில் இந்தத் திறப்பு இருக்கும் . அதன் வழியே உள்ளே நுழைந்துசுற்றிலும் இருக்கும் பாதையில் ஏறத்தாழ தவழ்ந்து வந்தால் சந்நதியின் இடது பக்கம் இருக்கும் துவாரம் வழியே வெளியே வரலாம். அப்படி வந்தால் மறு பிறவி இல்லை என்று ஒரு ஐதீகம். சென்றமுறை நாங்கள் போனபோது நான் முதலில் கால்களை துவாரத்தில் இறக்கி பின் அங்கிருந்து மூன்றடி கீழே தரையில் கால் வைத்து அந்தக் குறுக்குப் பாதையைச் சுற்றி வலப் புறமாக வந்து எனக்கு மறு பிறவி இல்லை என்று உறுதி செய்து கொண்டேன். எங்களுடன் வந்திருந்த என் சகலை முதலில் காலை விட்டு கீழே இறங்கத் தெரியாமல் துவாரத்தில் இறங்கவும் முடியாமல் வெளியே வரவும் முடியாமல் தவித்தது ,பிறகு எல்லோரையும் சாடியது எல்லாம் நினைவிலாடுகிறது


ஜீவி said...

@ வே. நடனசபாபதி

பெரியவர் யார்?.. தங்கள் சிந்தனைக்கு..

தொடர்ந்து வாசித்து வருவதர்கும் காத்திருப்புக்கும் நன்றி, சார்!

ஜீவி said...

@ G.M.B.

காஞ்சிவரம், காஞ்சிபுரம், காஞ்சீபுரம் எல்லாம் சரியே. ஆங்கிலத்தில் Canjeevaram, Kanchipuram என்று எல்லா வழக்கும் உண்டு. ஒருவழியாக இன்று 'காஞ்சிபுரம்' என்பது புழக்கத்தில் இருக்கிறது. நான் 20 வருடங்களுக்கு மேலாக இந்த ஷேத்திரத்தில் வசித்திருக்கிறேன்.

பூசலாரைப் பற்றி நீங்கள் நினைவு கொண்டது அற்புதமான விஷயம். இந்தக் கோயில் சம்பந்தப்பட்ட வரலாறு தான் அது.

அந்தத் திறப்புப் பாதை பற்றி இந்தப் பகுதியிலேயே சொல்லி விட்டேன். சொல்லாதது ஒன்று இருக்கிறது. அடுத்த பகுதியில் அதைச் சொல்கிறேன்.

அந்தத் திறப்புப் பாதையில் நுழைவதற்கும், வெளிவருவதற்கும் தான் தவழ்ந்த நிலையே தவிர, உள்ளே நுழைந்ததும் நிமிர்ந்து நடந்து சுற்றி வரலாம்.

தொடர்ந்து வாசித்து வந்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தொடரும் கதையின் மையப்புள்ளியைக் கண்டுபிடிக்க முயற்சியுங்கள்.

ஆர்வத்துடனான பின்னூட்டத்திற்கு நன்றி, ஐயா.

Ramani S said...

சட்டென வேறு கதையோ
என நினைக்கும்படியாக கொஞ்சம்
கூடுதலாக கோவில் பற்றிய விஷயம்
வரக் குழம்பினேன்
பின் லேசாக ஒரு மின்னல் கீற்றுப் போல
ஒரு விஷயம் லேசாகப் புரிந்தது
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

ஜீவி said...

@ S. Ramanai

கதையை ஆறாகப் பிரித்தாலும் ஆறையும் இந்தந்த இடங்களில் முடிக்க வேண்டும் என்ற திட்டமிடுதலில் அங்கங்கே சில ஒட்டு வேலைகளைச் செய்யும்படி ஆயிற்று.

உங்களில் ஒளிவிட்ட அந்த மின்னல் கீற்று விஷயத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு வீட்டீர்கள் என்று தெரியப்படுத்தியது.

இருந்தாலும் கதையின் மையப்புள்ளி தான் இந்தக் கதையின் ஜீவன்.

கதை முடிந்த பின்னும் யாரேனும் அதைச் சுட்டிக் காட்டி சொல்ல மாட்டார்களா என்றிருக்கிறது.

இந்த மாதிரி மூடி மறைக்காமல் உங்களுக்காவது தெரிந்தால் சொல்லி விடுங்கள்.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, ரமணி சார்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

1993 வரை காஞ்சீபுரம் பலமுறை நான் போய் வந்துள்ளேன். ஒவ்வொரு வருடமும் குறைந்தது ஒருமுறையாவது ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா தரிஸனத்திற்காகவே நான் என் குடும்பத்தாருடன் போய் வருவது உண்டு.

அங்குள்ள மிகப் பிரபல கோயில்களான ஸ்ரீ காமாக்ஷி அம்மன், ஏகாம்பரேஸ்வரர், கச்சபேஸ்வரர், வரதராஜ பெருமாள், உலகளந்த பெருமாள், குமரக்கோட்டம், கைலாஸ நாதர் முதலிய கோயில்களையும், அவற்றைத் தவிர மேலும் ஒரு 50 கோயில்களுக்காவது நாங்கள் போய் தரிஸனம் செய்திருப்போம். கூடவே என் அம்மாவையும் கூட்டிப்போவது உண்டு.

இந்த தாங்கள் சொல்லியுள்ள கைலாசநாதர் கோயிலுக்கும் ஒரே ஒரு முறை சென்றுள்ளேன். பிரதக்ஷணம் செய்யும் போது இடதுபுறம் கொஞ்ச தூரமும், வலதுபுறம் கொஞ்சதூரமும் மட்டும் ஓர் சின்ன குகைபோல துவாரத்திற்குள் சென்று வர வேண்டும். அதுபோல நானும் என் தாயாரும், என் அண்ணன் ஒருவரும், சேர்ந்து ஒரே நாளில் ஒரே நேரத்தில் சென்று வந்துள்ளோம். அன்று என்னுடன் வந்த அவர்கள் இருவரும் இன்று இல்லை. இருப்பினும் அவர்களின் இனிய நினைவலைகள் இந்தப்பதிவைப் படித்ததும் + பதிவினில் உள்ள படங்களைப் பார்த்ததும் என் கண்களில் சில சொட்டுக்கள் கண்ணீரை வரவழைத்தன.

அந்த குகைப்பாதையில் சென்று பிரதக்ஷணம் செய்வோருக்கு மறுபிறவி கிடையாது என்றுதான் சொல்லுகிறார்கள். நானும் கேள்விப்பட்டேன் மிகப்பழமை வாய்ந்த கோயில்தான்.

காஞ்சீபுரத்தில் உள்ள எந்த சிவன் கோயிலிலும் அம்பாள் சந்நதியே கிடையாது என்பதும் ஓர் ஆச்சர்யமான விஷயமாகும். அந்த ஊரில் அம்பாள் என்றால் ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்பாள் மட்டுமே .... அந்த அம்பாளுக்கும் தனிக்கோயில் மட்டுமே.

தங்களின் அனுபவங்களை சுவாரஸ்யமாக எழுதி சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்தியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும்.

Geetha Sambasivam said...

http://geethasmbsvm6.blogspot.in/2009/10/1.html
http://geethasmbsvm6.blogspot.in/2009/10/2_27.html

காஞ்சிபுரத்துக்குப் பலமுறை சென்றுள்ளேன். கடைசியாகச் சென்ற சமயம் எழுதியவை மேற்கண்ட சுட்டிகளில். இந்தப் பதிவுக்கே இன்னொரு பின்னூட்டமும் கொடுத்திருந்தேன். அது வரலை! :)

Geetha Sambasivam said...

//இனி கதையை நகர்த்தப் போவது கைலாசநாதரும், அந்தப் பணமுமா? நல்லபடியாகக் குழந்தை பிறக்கப் பிரார்த்திக்கிறேன். //

இது முதலில் கொடுத்த கருத்து. இது இங்கே வரலை! :)

ஜீவி said...

@ Geetha Sambasivam

தெரியவில்லை. வரும் பின்னூட்டங்களுக்கெல்லாம் அவ்வப்போது பதில் அளித்துக் கொண்டு தான் இருக்கிறேன். நீங்கள் அனுப்பும் பின்னூட்டங்களை save செய்து வைத்து என் பதிவில் அவை காணவில்லை என்றால் மறுபடியும் அனுப்பி ஒத்துழைத்தால் இந்த பிர்ச்னைக்கு ஓரளவு தீர்வும் காணலாம்.

'அழகிய தமிழ் இது' பதிவில் உங்கள் பின்னூட்டத்திற்கான பதிலைப் பார்த்தீர்களா?..

உங்கள் கேள்விகளை இன்னும் அனுப்பவில்லையே! வரும் சனிக்கிழமை அந்தப் பதிவு வலையேறுகிறதே!

மிக்க் நன்றி.

ஜீவி said...

@ வை.கோ.

அப்படியா, சார்?..

1972-லிருந்து 1993 வரை காஞ்சிபுரம் வாசம் தான். மேற்கு ராஜ வீதியின் ஒரு பக்க முனையில் சங்கரமடம் இருக்கிறது. நாங்கள் மேற்கு ராஜ வீதியில் தான் குடியிருந்தோம்.

இந்தக் கதையின் மையப்புள்ளியும் மிகப்பிரபலமான ஒரு சித்தாந்தத்தைச் சார்ந்தது தான். கதையின் போக்கினூஈடே அடுத்த பகுதிக்கு அடுத்த பகுதியில் உங்களால் யூகிக்க முடியும்.

தங்கள் காஞ்சி தரிசன அனுபாங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

தொடர்ந்து வாசித்து வருவதற்கும் நன்றி, கோபு சார்.‘தளிர்’ சுரேஷ் said...

அந்த பெரியவர்தான் சாட்சாத் ஈஸ்வரனோ? காஞ்சி நகர வருணனை சிறப்பு! சுவாரஸ்யமாக செல்கிறது தொடர்கிறேன்!

ஜீவி said...

@ தளிர் சுரேஷ்

அந்தப் பெரியவர் மட்டும் தானா?..

பெரிய காஞ்சிபுரம், சின்னக் காஞ்சிபுரம், ஜைனக்காஞ்சிபுரம் என்று மூன்று காஞ்சிபுரங்கள்.
இது பெரிய காஞ்சிபுரம் பகுதி.

நன்றி. தொடர்ந்து வாருங்கள், சுரேஷ் சார்!

ஜீவி said...

@ Shakthiprabha

நெடுநாட்கள் கழித்து உங்களைப் பார்த்ததில் சந்தோஷம். உங்களது பின்னூட்டம் எங்கேயோ சிக்கிக் கொண்டதைப் பார்த்து மீட்டெடுத்தேன்.

புதையல் கிடைத்தது மாதிரி அது கிடைத்ததும் நீங்கள் தெரிந்து இந்தப் பக்கம் வந்ததும் அதிசயம். எப்படி வழிகாட்டப்பட்டு எப்படி வந்தீர்களோ?..

தாங்கள் சொல்லும் சிலிர்க்கும் அனுபவங்கள் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அப்படியே உணர முடிகிறது.

புதுசாகப் போகும் சில இடங்கள், அறிவுக்குத் தெரிந்து அப்பொழுது தான் பார்க்கும் சில
எப்பொழுதோ முன்பே பார்த்த மாதிரி இருப்பதைக் கண்டு குழம்பிப் போயிருக்கிறேன்.
இதெல்லாம் எப்படி என்று தெரியவில்லை.

தொடர்ந்து வாருங்கள், ஷக்தி!

Related Posts with Thumbnails