Tuesday, October 18, 2016

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்....

இலக்கிய  இன்பம்                 
                                                                                           ----     புதிய பகுதி
பகுதி--2
சேலத்தில் நான்கு ரோடு சந்திப்பில் நிமிர்ந்து நின்றிருந்தது, அந்த உணவகம்.

மிகப்பெரியதும் இல்லை; அதற்காக மிகச் சிறிதென்றும் சொல்லமுடியாது. தார்ச்சாலையிலிருந்து நன்கு விலகி, உணவகம் இருக்கும் இடம் மேடு தூக்கப்பட்டு சாலையில் செல்வோருக்குப் 'பளிச்'சென்று தெரியும்படி, அழகாக அடக்கமாக இருந்தது. 'லஷ்மி கபே' என்கிற வண்ணப் பெயர்ப்பலகை, கொப்பும் கிளையுமாக எதிரில் பிர்மாண்டமாக வளர்ந்திருந்த புளியமரத்திற்குப் பின்புலமாய் நிழலோடு நிழலாய் பார்வைக்கு சட்டென்று புலப்படாமல் மறைந்து தெரியும். 

ஓட்டலின் சொந்தக்காரர் எனது தாய் வழி தூரத்து உறவினர். நெடுங்காலம் யார் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாமல், குடும்பங்களுக்குள் தொடர்பில்லாமல் இருந்தது. கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து   ஆண்டுகளுக்கு முன் ஒருநாள்.     கடைத்தெருவில் ராஜகணபதி கோயில் வாசலில் என்னையும் என் அண்ணியையும் பார்த்தவர், ஓடிவந்து, விசாரித்து, நலம் கேட்டு மகிழ்ந்து, அடுத்த நாள் எங்கள் வீடு வந்து பார்ப்பதாகச் சொல்லிப் பிரிந்தார். சொன்னபடியே, அடுத்த நாள் ஒரு கூடை நிறைய பழங்களோடு எங்கள் வீட்டிற்க்கு வந்தார். நெடுநேரம் கலகலப்பும், சந்தோஷப்பேச்சு மாய் குடும்பமே குதூகலத்தில் திளைத்தது. அப்பொழுதுதான் சொன்னார், நாலுரோடு 'லஷ்மி கபே' பற்றி. ஒருநாள் குடும்பமே கொத்தாக ஓட்டலுக்குச் சென்றது. விதவிதமாகப் பலகாரம் சாப்பிட்டு மகிழ்ந்தது. பிறிதொரு நாள், வண்டியனுப்பி எல்லோரையும் அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

பெட்டி போல அழகான வீடு. கலராய், வர்ணமெருகு கலையாமல் இருந்தது. ஹாலின் ஒருபகுதி அறையே, பூஜை அறையாக மிளிர்ந்தது. சுவர் பூரா சுவாமி படங்கள். ஸ்ரீராமர் பட்டாபிஷேகக் காட்சியிலிருந்து, ரவிவர்மாவின் ஆலிலைக் கிருஷ்ணன் வரை கண்ணாடிச் சட்டம் போட்ட பெரிய பெரிய படங்கள், இப்பொழுதும் நினைவில் அழியாமல் பளிச்சிடுகிறது. ஊதுபத்திகளின் சுகந்த மணத்தில் அந்த இடமே கமகமத்தது. ஒரு மூலையில் கட்டுகட்டாக அந்தக் காலத்தில் மிகவும் புகழ்பெற்ற "மாதஜோதிடம்" இதழ்கள். ஜோதிட சாத்திரத்தில் மிகுந்த ஈடுபாடுடைய அவருக்கு அவரது எதிர்காலமே எப்படித் தலைகீழாகப் புரட்டிப் போடப்படப்போகிறது என்பது தெரியாதிருந்தது தான் மிகப்பெரிய சோகம்.

வாழ்க்கை என்பது மேலும் கீழும் உருளும் சக்கரம் என்று அப்பொழுதுதான் தெரிந்தது. அந்த அவரது ஓட்டலின் முன்னிருந்த புளியமரத்தில் ஒருநாள் யாரோ முன்பின் தெரியாதவர் தூக்குப் போட்டுக்கொண்டதாகச் சொல்லிக் கொண்டார்கள். அதிலிருந்து தொடங்கியது அந்த ஓட்டலுக்கும், அவரது குடும்பத்திற்கும் ஷீணதசை. சின்ன ஏணி, பெரிய ஏணி என்று ஏணிமாற்றி ஏணிமாற்றி மேலே உச்சம் போன குடும்ப செல்வச் செழிப்பு, பெரிய பாம்பு தீண்டிய பரமபத விளையாட்டாய், ஒரே சறுக்கலில் அதலபாதாளத்தில் விழுந்தது. வறுமை வாய் பிளந்து விழுங்க, இருந்த பாத்திர பண்டங்களை விற்று, இறுதியில் அந்த ஓட்டலே இன்னொருவருக்குக் கைமாறி, அதே சேலத்தில் கடைத்தெரு ஓட்டல் ஒன்றில் அவரை சரக்குமாஸ்டராகப் பார்த்த பொழுது நெஞ்சடைத்துக் கொண்டது.

புன்முறுவலுடன், "வாங்க..வாங்க.. என்ன வரவழைக்கட்டும்?" என்று என்னையும், என் தாய் மாமாவையும் அவர் விசாரித்த பொழுது, என் கண்கள் கலங்கி விட்டன. இதே ஓட்டல் தொழிலில், பீனிக்ஸ் பறவை போல அவர் எழுந்து நிற்க வேண்டும் என்று மனதார இறைவனை வேண்டிக்கொண்டேன். தான் நல்ல நிலையில் இருக்கும் பொழுது பிறருக்கு உதவியாய் இருப்பதன்றி வேறு தீங்கு விளைவிக்கா நல்லவர்கள், காலசக்கர இடிபாடுகளில் சிக்கி, நல்கூர்ந்து, வறுமை மிஞ்சி தளர்ந்து தத்தளிப்பதும், அவர்கள் வாழ்நாளிலேயே அதை பிறர் பார்க்கும் சோகம் தாளமுடியாத ஒன்று.

வளமோ, வறுமையோ எதுவும் சாஸ்வதமல்ல. சேலம் மாற்றி கோவையில் நாங்கள் இருந்த பொழுது, அவர் காலமாகிவிட்டதாக தாமதமாக அறிந்தேன். அடுத்த ஆண்டு, அவரது மகன், மாநிலத்திலேயே முதலாவதாக பள்ளி இறுதித்தேர்வில் தேர்வு பெற்று பதக்கமும், பரிசும் பெற்றதை 'தினத்தந்தி' மூலம் தெரிந்து மகிழ்ச்சியடைந்தேன். மாநிலமே பாராட்டும் பொழுது, இதைப் பார்த்து மகிழ தன் தந்தை இல்லையே என்று அந்த சின்னப்பையனுக்கு நிச்சயம் நெஞ்சம் தடுமாறியிருக்கும். நிலவு காட்டி சோறு ஊட்டி வளர்த்தத் தாயும், நெஞ்சணைத்து பாசம் பொழிந்த தந்தையும் சந்தோஷ காலத்தில் தன்கூட இல்லையென்றால் அந்த சோகம் யாருக்குமே தாங்கவொண்ணாதது.

மகிழ்ச்சியாய் இருக்கையிலேயே அப்படியென்றால், ஆலைவாய்ப்பட்ட கரும்பென துன்பத்தில் அல்லாடும் பொழுது கேட்க வேண்டுமோ?...


அப்படிப்பட்ட ஒரு காட்சியைத்தான் கண்முன் நிறுத்துகிறது, புறநானூறு பாடல் ஒன்று. துக்கம் அழுத்தும் வேதனை, வள்ளல் பாரியின் மகளிர் குரலில் கேட்கும் பொழுது சோகம் நெஞ்சைப் பிழிகிறது.

"அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
வென்று ஏறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!"

(புறநானூறு--112)

அந்நாள் இதே நிலவு வானில் வளைய வருகையில்
எம் தந்தையின் அருகாமையைப் பெற்றிருந்தோம்.
எம் பறம்புக் குன்றையும் பிறர் கவராமலிருந்தார்.
அன்று காய்ந்த அதே வெண்ணிலவு தான் இன்றும்.
நிலவு இருக்கிறதே தவிர, எம் தந்தை இல்லை
இப்போது எமதருகில்..
பகை வேந்தர், எம் குன்றையும் கொண்டார், ஐயா!

பாரி மகளிர் அங்கவை--சங்கவை, ஆதரவற்ற அன்றில் பறவைகளாய் ஆற்றாமையில் குமையும் பொழுது, நாமும் நெஞ்சு கனத்துப் போகிறோம்."அன்று வந்ததும் இதே நிலா...சச்சச்சா..." என்கிற திரைப்பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம், பாரி மகளிரின் இந்த "அற்றைத் திங்கள்.." பாடல் நினைவுக்கு வந்து என்னை சோகத்தில் அழுத்தி ஊமையாக்கிவிடும். கவியரசர் கண்ணதாசனுக்குக் கூட இந்தப் புறப்பாடல் தான், அவரது அந்தப் பாடலை எழுத தூண்டுகோலாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
26 comments:

வே.நடனசபாபதி said...

‘அற்றைத் திங்கள்’ என்ற புறநானூற்று பாடலை பலமுறை படித்திருந்தாலும் உண்மை நிகழ்வு ஒன்றைத் தந்து அந்த பாடலை எளிதாய் புரிந்துகொள்ள உதவிய தங்களுக்கு நன்றி! இலக்கிய இன்பத்தை இரசித்தேன்!

பாரி மகள்களுக்கு ஏற்பட்ட சோகத்தை இந்த பாடல் மூலம் அறியும்போது, அதிவீரராம பாண்டியனின்
‘குடைநிழ லிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர்’
என்ற பாடலும் நினைவுக்கு வருகிறது.

'நெல்லைத் தமிழன் said...

காலச் சக்கரம் ஏன் இதைச் செய்கிறது என யாரே அறிவர். நீங்கள் சொல்ல ஆரம்பிக்கும்போதே, 'புதினம்' என்று போடாததால் உங்கள் அனுபவம் என்று மனதில் இருத்தி வாசிக்க ஆரம்பித்தேன். (இருந்தாலும் 'புதிய பகுதி' என்று போட்டுள்ளதால், ஒருவேளை தொடர் கதையோ என்று சந்தேகம் வந்தது). இதில் மிகவும் பிடித்தது, ஒரு நிகழ்வு, அதையொற்றி ஒரு சங்கப் பாடல். அதிலும் குறிப்பாக, என்னைப்போன்ற எளிய வாசிப்பனுபவம் உள்ளவர்களுக்கு மொழிபெயர்த்த தமிழ்ப்பாடல். மிகவும் சிறப்பு.

நடனசபாபதி சார்... விதியின் சிறப்பைச் சொல்லும் பாடல். பொருளைத் தேடித் தெரிந்துகொண்டேன்.
குடைநிழல் இருந்து - வெண்கொற்றக் குடையின் நிழலில் இருந்து, குஞ்சரம் ஊர்ந்தோர் - யானையை நடாத்திச்சென்ற அரசரும், நடைமெலிந்து - நடத்தலால் தளர்ச்சியுற்று, ஓர் ஊர் - மற்றோர் ஊரை, நண்ணினும் நண்ணுவர் - அடைந்தாலும் அடைவர். - உள் அர்த்தம், விதி அவ்வாறு இருப்பின், அவரும் நடராஜா சர்வீஸில் செல்ல நேரும்படியாகும் என்பது.

நில உலகில், நிலவையும், சூரியனையும் எந்த நிகழ்வுக்கும் சாட்சியாக்குகிறார்கள். பெரும்பாலும் நிலவைச் சாட்சியாக்குவது, சோகம், தனிமை இரவில்தான் ஏற்படுகிறது என்பதாலா? அல்லது ஊர் உறங்கும் வேளையிலே மனதின் எண்ணமும் சோகமும் இன்னும் கூடுதலாவதாலா?

ஜீவி சார்.. உங்கள் இடுகையின் மூலம் (அதன் பின்னூட்டங்களின் மூலம்) ஒரு value addition இருக்கு (செலவழிக்கும் நேரத்திற்கு). தொடருங்கள்....

ஸ்ரீராம். said...

"அன்றொரு நாள் இதே நிலவில்... அவரிருந்தாரென் அருகில்.. நான் அடைக்கலம் கொண்டேன் அவரிடத்தில்... நீயறியாயோ வெண்ணிலவே" என்னும் நாடோடி படப்பாடல் இந்தக் காட்சிக்கு இன்னும் பொருத்தமாக இருக்கும்.

பாரிக்கு அப்படி இரு பெண்களே கிடையாது என்று யாரோ சொல்லி, எங்கோ படித்த நினைவும் வருகிறது!

சுவாரஸ்யமாக இருந்தது - பொருத்தமான ஒரு சம்பவத்துடன் இணைத்து புறநானூற்றுப் பாடலைப் படிக்க...

'நெல்லைத் தமிழன் said...

எனக்கு ஒரு சந்தேகம். அனுபவத்தை எழுதிவிட்டு அதற்கேற்ற சங்கப் பாடலைப் போடுகிறீர்களா அல்லது சங்கப் பாடல்களைப் படித்துக்கொண்டிருக்கும்போது, அதற்கேற்ற சம்பவம் வாழ்க்கையில் நடந்ததை விவரித்துக் கோர்க்கிறீர்களா? சம்பவம் மூலம் சங்கப்பாடலை இணைப்பது படிப்பவர்களுக்கு சங்கப்பாடலைப் படிக்கத் தூண்டுவதுபோல் இருக்கிறது.

மனோ சாமிநாதன் said...

'அற்றைத்திங்கள்' பாடலைப்பற்றி பல முறை படித்திருந்தும் வாழ்க்கையின் நிகழ்வையொட்டி நீங்கள் அதனை இணைத்து எழுதியிருந்த விதம் மனதை கனக்கச் செய்தது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஜோதிட சாத்திரத்தில் மிகுந்த ஈடுபாடுடைய அவருக்கு அவரது எதிர்காலமே எப்படித் தலைகீழாகப் புரட்டிப் போடப்படப்போகிறது என்பது தெரியாதிருந்தது தான் மிகப்பெரிய சோகம்.//

இந்த சோகம் மிகவும் யதார்த்தமானது. குறிப்பாக இந்தக்காலத்தில் எந்த ஒரு ஜோஸ்யர் சொல்லுவது போலவும் எதுவும் எப்போதும் நடப்பதே இல்லை. அதெல்லாம் சும்மா. இதில் எனக்கு அனுபவம் ஜாஸ்தி.

எது எது, எப்போ எப்போ, எப்படி எப்படி, எங்கு எங்கு, நடக்கணுமோ, அது அது, அப்போ அப்போ, அப்படி அப்படி, அங்கு அங்கு, நடந்தே தீரும் என்பதே, நான் பலரிடம் ஜோஸ்யம் பார்க்கப்போய், பல்லாயிரக்கணக்கான ரூபாய்களும் செலவு செய்து, கடைசியில் கற்றுத் தெளிந்ததோர் பாடம் + புத்திக்கொள்முதலாகும்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//தான் நல்ல நிலையில் இருக்கும் பொழுது பிறருக்கு உதவியாய் இருப்பதன்றி வேறு தீங்கு விளைவிக்கா நல்லவர்கள், காலசக்கர இடிபாடுகளில் சிக்கி, நல்கூர்ந்து, வறுமை மிஞ்சி தளர்ந்து தத்தளிப்பதும், அவர்கள் வாழ்நாளிலேயே அதை பிறர் பார்க்கும் சோகம் தாளமுடியாத ஒன்று.//

கெட்டுக்கூட வாழலாம். ஆனால் வாழ்ந்து கெடக்கூடாது. அது கொடுமையிலும் கொடுமைதான்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நிலவு காட்டி சோறு ஊட்டி வளர்த்தத் தாயும், நெஞ்சணைத்து பாசம் பொழிந்த தந்தையும் சந்தோஷ காலத்தில் தன்கூட இல்லையென்றால் அந்த சோகம் யாருக்குமே தாங்கவொண்ணாதது.//

’யாருக்குமே’ எப்போதுமே இந்த சோகம் இருந்துகொண்டே இருக்கும் எனச் சொல்ல முடியாது என நினைக்கிறேன்.

வசதி வாய்ப்புகள், மனைவி, மக்கள், மாமனார், மாமியார், மச்சினர் போன்ற புதுப்புது உறவுகள் தோன்றிவிடும்போது, சிலர் நாளாவட்டத்தில் அந்தப்பழைய உறவுகளை மறந்தும் போகலாம். சோகம் மறைந்து சுகமாகவும் இருக்கலாம்.

>>>>>

Bhanumathy Venkateswaran said...


சிறு கதை போல தொடங்கி, அதை சங்கத் பாடலோடு இணைந்திருந்த விதம் அருமை.!

தி.தமிழ் இளங்கோ said...

இந்த பாடலை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அடிக்கடி படித்து இருக்கிறேன். இன்று ஒரு வித்தியாசமான நடையில், அதாவது தற்கால நிகழ்வோடு சங்ககாலத்து நிகழ்வு ஒன்றைப் பொருத்திப் பார்த்த அருமையான ரசனையில், ரசித்துப் படித்தேன். ரசித்தேன் என்பதனை விட, லட்சுமி கபே நினைவுகளால் மனது கனத்தேன் என்பதுதான் உண்மை.

Dr B Jambulingam said...

அற்றைத்திங்கள்... பல இடங்களில் மேற்கோளாகப் பார்த்துள்ளேன். கேள்விப்பட்டுள்ளேன். இப்போதுதான் முழுமையாக பொருளோடு கண்டேன். நன்றி.

G.M Balasubramaniam said...

இலக்கிய இன்பம் என்று புற நானூற்றுப்பாடலும் சில அனுபவங்களும் இரண்டாவது முறையாகப் படிக்க நன்றாய் இருக்கிறது சோதிடர்களுக்கு இந்த ஊழ்வினை பற்றித் தெரிவதே இல்லையோ ரசித்தேன்

கோமதி அரசு said...

இலக்கிய இன்பத்தில் உண்மை சம்பவத்தை சொல்லி, புறநானூற்று பாடலையும் பொருத்தமாய் பகிர்ந்தமை நன்றாக இருக்கிறது.

முன்பு வந்த சினிமாக்களில் ஒரு சந்தோஷப்பாடல் பின் அந்த பாடலே சோகமாய் வரும். முன்பு அப்படி மகிழ்ச்சியாக இருந்தவர்கள் இப்போது சோகமாய் இருப்பதை , அல்லது கதைசுருக்கத்தையே , இன்ப, துன்ப பாட்டில் வைத்து விடுவார்கள்.
அது போல் உங்கள் பகிர்வு ஒரு காலத்தில் ஓஹோ என்று வாழ்ந்தவர்கள் நிலை தாழ்ந்து கஷ்டப்படுவதை பாடலின் மூலம் விளக்கி விட்டீர்கள்.
தொடருகிறேன் இலக்கிய இன்பத்தை.

ஜீவி said...

@ வே. ந்டனசபாபதி

சரியான நேரத்தில் அதிவீரராம பாண்டியர் உங்கள் நினைவுக்கு வந்திருக்கிறார்.

இந்த 'இலக்கிய இன்பம்' பகுதி பூராவும் அப்படித்தான் இருக்கப் போகிறது. ஒரு நிகழ்வு, அதற்குத் தோதான இலக்கிய பாடல், எளிமையான வரிகளில் கவிதையாக அந்தப் பாடலுக்கு
விள்க்கம் என்று.

உங்களுக்குப் பிடிக்கும். தொடர்ந்து வர வேண்டுகிறேன்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

'இலக்கிய இன்பம்' பகுதியை வாசிப்பவர்க்கு அறிமுகப்படுத்துவதற்காக புதிய பகுதி என்று போட்டேனே தவிர இந்தப் பகுதியின் முதல் பகுதி (தாமிரபரணி நினைவுகள்) ஏற்கனவே பிரசுரம் ஆகிவிட்டதல்லவா?..

பொதுவாக 'அருமை' என்று மூன்றே எழுத்துக்களில் தட்டச்சி விட்டு போய்க்கொண்டே இருக்கும் பின்னூட்டங்கள் என் பதிவுகளுக்கு வருவதில்லை. பதிவுகள் ஏதாவது ஒருவிதத்தில் கருத்தாழம் மிக்கவையாக இருப்பதால் வாசிப்போரும் தேர்ந்த வாசகராய் இருக்க வேண்டிய கட்டாயம் இயல்பாக ஏற்படுகிறது. பதிவில் லேசாகக் கோடி காட்டித் தொட்டுச் செல்வதும், பின்னூட்டங்களை பதிவில் சொல்லாதவைகளுக்காக சாங்கோபான்ங்கமாக விவரிப்பதற்கும் உபயோகப்படுத்திக் கொள்கிறேன்.

ஒரு முக்கியமான விஷயம். பின்னூட்டங்களில் தனிநபர் உரையாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்-- பதிவில், பின்னூட்டங்களில் சொல்லப்படும் விஷயத்தை மட்டுமே அலசுகிறேன். இதனால் சொல்லப்படும் பொருளைத் தான் விவாதிக்கிறோமே தவிர தனிநபரை அல்ல என்றாகிறது. மற்றும் பொதுவான விஷயங்களை பொதுவாகவே எழுதும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறேன்.

இந்தப் 'பூவனம்' தளத்தையே நல்ல ஒரு தமிழ்ப் பத்திரிகையை படிக்கும் உணர்வை ஏற்படுத்துகிற வகையில் கவனமாக எழுதும் பொருளைத் தேர்ந்தெடுக்கிறேன். பதிவில் எழுதும் நடையையும் பத்திரிகை நடையிலேயே அமைக்கிறேன்.

அச்சில் வெளிவந்த இரண்டு சிறு பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்திருக்கும் அனுபவம் இதையெல்லாம் செய்ய துணையாக இருக்கிறது.

செல்வழிக்கும் நேரத்தை பதிவையும் பின்னூட்டங்களுக்கான ம்றுமொழிகளையும்
எழுதுவதற்காக செலவழிக்கும் நேரம் என்று எடுத்துக் கொண்டேன்.

உங்களிடமிருந்து ஆக்கபூர்வமான பின்னூட்டங்கள் வருவதில் மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும் நெல்லைத் தமிழன் அவர்களே!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

ஆமாம்லே! நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 'நாடோடி' படப்பாடல் பொருத்தமாகத் தான் இருக்கிறது.

பெரிய குண்டாகத் தூக்கிப் போடுகிறீர்களே, ஸ்ரீராம்! வள்ளல் பாரிக்கு அங்கவை-- சங்கவை என்னும் மகள்களே இல்லை என்றா?.. யார் எங்கே சொன்னார்கள்?.. ஞாபகப்படுத்திப் பாருங்கள்..

பாரியின் இறப்பிற்குப் பிறகு பாரியின் நெருங்கிய நண்பராய் இருந்த புலவர் கபிலர் அந்தப் பெண்களுக்கு 'கார்டியன்' போலச் செயல்படுகிறார். அவர்கள்க்கு மணம் முடிக்க குறுநில மன்னர்களைச் சந்திக்கிறார்.

அங்கவை--சங்கவை பெயர்களைத் தேவையில்லாமல் உபயோகப்படுத்திக் கொண்ட ஒரு திரைப்படமும் நினைவுக்கு வருகிறது.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

பாடலைத் தேர்ந்தெடுத்து விட்டுத் தான் அதற்கேற்பவான ஒரு நிகழ்வை எழுதுகிறேன். நிகழ்வு அனுபவமாகத் தான் இருக்க வேண்டும் என்றில்லை. புனைவாகவும் இருக்கலாம்.
புனைவாக இருப்பதில் இருக்கும் செளகரியம் ஒரு நிகழ்வை கதை போல எழுதும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆக, சங்கப்பாடலைத் தேர்ந்தெடுத்து விட்ட்டால் அதற்கேற்ப கற்பனையில் ஒரு நிகழ்வைத் தயாரிப்பது சுலபமாகிப் போகும்..

நீங்கள் சொல்வது உண்மை. சங்கப்பாடல்களை சுலபமாக வாசிப்பவரிடம் சேர்ப்பது ஆக்கபூர்வமான ஒரு முயற்சியாக அமையும். தமிழ்ப்பத்திரிகைகள் செய்யாததை நாம் தான் செய்து பார்ப்போமே!

ஜீவி said...

@ மனோ சாமிந்தான்

தாங்கள் உணர்ந்து சொன்ன வார்த்தைகள், அந்த நிகழ்வுகளை நேரில் உணர்ந்த காலத்து சோகத்திற்கு என்னையும் இட்டுச் சென்றது. வாசித்துக் கருத்துச் சொன்னமைக்கு நன்றி, சகோதரி!

ஜீவி said...

@ வை.கோ. (1)

ஜோதிடத்தை சம்பந்தப்படுத்தியது வேறு எதற்காகவும் இல்லை. ஜோதிடத்தில் நாட்டம் கொண்டிருந்த அவருக்கு தன் எதிர்காலத்தைப் பற்றிக் கணிக்க முடியவில்லையே என்று ஒரு ஏக்க ஆதங்கம் அது.

கணித்திருந்தாலும் தான் என்ன செய்யப் போகிறார்?.. இன்னும் துன்பம் கூஈடியிருக்கும் அவ்வளவு தான்.

இந்த இடத்தில் தான் சிலப்பதிகார ஊழ்வினை பிரதட்சய உண்மையாய் தெரிகிறது.

ஊழ்வினை என்பதைத் தீர்த்துத் தொலைப்பதற்காகத் தான் பிறவியே எடுக்கிறோம் என்று தோன்றுகிறது. ஊழ்வினையை அனுபவித்துத் தீர்ப்பதே அதிலிருந்து நாம் தப்புவதற்கான ஒரே வழி. அதைத்தவிர வேறு எந்த உபாயமும் இல்லை. குறுக்கு வழிகளும் இல்லை.

'நடப்பதெல்லாம் நன்மைக்கே' என்ற பாஸிட்டிவ் அப்ரோச்சுக்கு அடித்தளம் அமைப்பதும் இந்த ஊழ்வினை நம்பிக்கை தான் என்பது ஆழ்ந்து சிந்திக்கும் பொழுது புலப்படுகிறது.

ஜோதிடம் என்பது பிரபஞ்ச இயல் தொடர்புடைய ஒரு சாத்திரம். அந்த இயலைக் கற்றவர்களிடம் இருக்கும் குறைபாடுகளை அந்த இயலின் தலையில் சுமத்தக் கூடாது.
அது ஒரு சயின்ஸ். அதற்கேற்பவான மரியாதை அதற்கு என்றுமே உண்டு.

ஜீவி said...

@ வை.கோ. (2)

வாழ்க்கையில் ஜெயிப்பதெல்லாம் தோற்பதற்குத் தானே வை.கோ. சார்?.. ஜெயிப்பதும் தோற்பதும் அன்றி தோற்பதும் ஜெயிப்பல்தும் சூரியன் சந்திரன் மாறி மாறிவருவது போன்ற நிகழ்வு தானே வை.கோ. சார்?..

'இரவு வரும்; பகலும் வரும். இயற்கை ஒன்று தான்' கதை தானே?

சாஸ்வதம் என்று சொல்ல எதுவுமே இல்லை. எல்லாமும் அந்தந்த நேரத்து மகிழ்ச்சி. அந்தந்த நேரத்து அமகிழ்ச்சி.

ஜீவி said...

@ வை.கோ. (3)

என்ன இருந்தாலும் தாய்--தந்தை உறவு விசேஷமானது இல்லையா?..

நிலவை மேகம் மூடுவது போல சில சந்தர்ப்பங்களில் பெற்ற உறவுகள் மறக்கலாம். ஆனால் மண்மூடிப் போகும் அளவுக்கு அது அழிந்தே போகும் அளவுக்கு வலுவற்றவை அல்ல. நம்மிலிருந்து பிரிந்து போன உயிர்கள் தானே, நம் குழந்தைகள்?.. இந்த பந்தத்தை எந்த சக்தியால் சாய்த்து விட முடியும்?..

நம் அருகே இல்லாது செய்யும் தொழில் நிமித்தம் வேறிடங்களில் இருக்க நேருகையில், தான் அனுபவித்த சில சந்தோஷங்களைச் சொல்லி நாம் பெற்ற குழந்தைகள் கூட, "Appa, I missed you' என்று சொல்வதில்லையா, அதைப் போலத்தான்.

திருப்பி திருப்பி அதான். மாற்றங்கள் எல்லாமே நல்லவைகளூக்காகத் தான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நமக்கு வேண்டும்.

ஜீவி said...

@ Bhanumathy Venkateswaran

ரசித்து வாசித்தமைக்கு நன்றிங்க. இந்த ரசிப்பு இல்லை என்றால் எந்த ரசனைக்குமே மரியாதை இல்லை. நன்றிங்க.

ஜீவி said...

@ தி. தமிழ் இளங்கோ

மனம் உணர்ததைச் சொல்லியிருக்கிறீர்கள். அதை உணர்வு பொங்கச் சொன்னமைக்கு நன்றி, நண்பரே!

ஜீவி said...

@ Dr. B. Jambuilingam

தாங்கள் வாசித்தது குறித்து மகிழ்ச்சி, ஐயா!

ஜீவி said...

@ G.M/B.

உங்கள் முத்திரை பதித்த பின்னூட்டம்.

ஊழ்வினை அனுபவித்துத் தீர்ப்பது. அனுபவித்துக் கடப்பது ஒன்றே அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு இருக்கும் ஒரே வழி.

ஜோதிடர்களுக்கு இது இடைஞ்சலான விஷயம். வரப்போவதை அனுபவித்துத் தான் தீர்க்க வேண்டும் வேறு வழியில்லை என்று கையை விரித்தால் இதைச் சொல்வதற்கு இவர் எதற்கு என்ற வினா எழும். வரப்போகிற துன்பம் நீங்க பரிகாரகத்தையும் கூட பரிந்துரைப்பவர்கள் ஜோதிடர்கள்.

அந்தப் பரிகாரங்கள் எல்லாம் ஊழ்வினை சமாச்சாரத்தில் வேலைக்கு ஆகாது என்பதினால் ஜோதிடர்கள் இந்த ஊழ்வினை விஷயத்தில் விலகியே இருக்கலாம்.

ஊழ்வினையை அனுபவிப்பது ஒரு படிப்பினையாகச் செயல்படும் பொழுது, நல்லன செய்வதற்கு ஆதரவாக அடிப்படையில் அது செயல்படுகிறது.

தங்கள் ஆழமான பின்னூட்டத்திற்கு நன்றி.

ஜீவி said...

@ கோமதி அரசு

ஒருவிதத்தில் பார்க்கப்போனால் திரைப்படங்களில் இன்ப--துன்ப காட்சிகள் மாறி மாறி வருவது போலத் தான் வாழ்க்கையும் இருக்கிறது. ஒரேயடியாக இன்பம், ஒரேயடியாக துன்பம் என்றாலும் சலித்து விடும். அதற்காகத்தான் வாழ்க்கையும் அந்த மாதிரி இருக்கிறது போலும்.

தொடர்ந்த இன்பத்தின் முனையில் துன்பம் தான் காத்திருக்கிறது என்பதும் தெரியாத அளவுக்கு இன்பத்தின் நுகர்தல் இருப்பது தான் அதன் சாகசம். துன்பத்தின் முனையில் இன்பம் காத்திருக்கிறது என்ற உணர்வு துன்பத்திலான நம் துவளலை சமாளித்து மீள உதவலாம்.

தங்கள் பகிர்தலுக்கு நன்ரி, கோமதிம்மா.

Related Posts with Thumbnails