Friday, February 10, 2017

செய்தி

புதுப்புடவை சரசரக்க மருமகள் வீட்டுக்குள் நடமாடுகையில் மகாலஷ்மியே வளைய வருவது போலிருந்தது. இதில் இன்னொரு பொருத்தமும் என்னவென்றால், மருமகளின் பெயரும் மகாலஷ்மியே.

புது மருமகள் புக்ககம் வந்து ஒருவாரம் தான் ஆகிறது. மாமியாருக்கு அவள் அழகைக் பார்த்து ரொம்பப் பெருமை; பொறுமை பற்றி நிறைவு. மருமகள் தமிழில் புலவர் படிப்புப் படித்திருக்கிறாள் என்பது சொன்னால் தான் தெரியும்; அவ்வளவு அடக்கம். மாமனார் பன்மொழிப்புலவர். அதனால் மருமகளின் தமிழ்ப்புலமை பற்றி அவரது மகிழ்ச்சி தனியாகத் தெரிந்தது.

உண்மையிலேயே அது பெரிய குடும்பம் தான். மாமனார், மாமியார், பெரியண்ணன், சின்னண்னண்,அண்ணிகள், நாத்தனார், மைத்துனன், அக்காக்கள், தங்கைகள் என்று பெரிய ஆலமரம் அதன் விழுதுகள் போல மூன்று தலைமுறைகளாக கட்டிக் காப்பாற்றி வரும் கூட்டுக் குடும்பம்.

பெரீய்ய.. சாப்பாட்டுக் கூடம். நீண்ட மேஜை; நிறைய நாற்காலிகள். அத்தனை பேரும் வரிசையாக உட்கார்ந்து கொண்டு, வேண்டும் என்கிறதை எடுத்துப் போட்டுக் கொண்டு ரசித்து ருசித்து சாப்படுவது அத்தனை அழகாயிருக்கும். பெரியண்ணனுக்கு சாப்பிடுகையில் ஒருத்தர் இல்லை என்றாலும் சாப்பிட்ட மாதிரி இருக்காது. 'எங்கே?.. ஏன் இன்னும் வரலை?' என்று தவித்துப் போய் விடுவார். அவருக்கு அந்தத் தவிப்பை ஏற்படுத்தக் கூடாது என்றே என்ன வேலை யாருக்கு இருந்தாலும் எல்லோரும் சேர்ந்து சாப்பிடுகிற சந்தோஷத்தை இழக்க விரும்பாமல் எப்பாடுபட்டேனும் சாப்பிடும் நேரத்தில் எல்லோரும் ஒன்று கூடி விடுவார்கள்.

சாப்பாடெல்லாம் முடிந்ததற்குப் பின்னாலும், எல்லோரும் தூங்கப் போவதற்கு முன்னால் ஒரு பெரிய அரட்டைக் கச்சேரி இருக்கும். நடுஹாலில் வரிசையாகப் போட்டிருக்கும் சோபாக்கள், நாற்காலிகள் என்று எல்லாம் நிரம்பி விடும். என்ன பேசுவது என்பதற்கா பஞ்சம்?.. இது நாள் வரை தினம் தினம் ஏதோ ஒரு தலைப்பு அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது. சாப்பிட்ட பின் ஒரு மணி நேரத்திற்கு அன்று கிடைத்த தலைப்பை தோய்த்து, அலசி, காயப்போட்டு என்று தூள் கிளம்பும். கைதட்டலும், உற்சாகப் பீறிடலுமாய் சிரிப்பும், கும்மாளமுமாய் ஹால் அதிரும். அன்றைய களைப்பு அத்தனை பேருக்கும் போன இடம் தெரியாது.

ஆனால் குமாருக்கு மட்டும் அந்தக் குறை இருக்கத்தான் செய்தது.. கல்யாணமாகி புக்ககத்திற்கு வந்து ஒரு வாரத்திற்கு மேலாகிறது. அவன் மனைவி மகாலஷ்மி மட்டும் இந்த ஆட்ட பாட்டங்களில் ஒன்றிலும் கலந்து கொள்ளாமல் தனித்து ஒதுங்கி இருப்பது மாதிரி உட்கார்ந்திருப்பது அவனுக்கு ஒரு மாதிரி இருக்கும். அவளைப் பார்த்து குமாரின் சின்னத் தங்கையோ, தம்பியோ, "அண்ணி.. நீங்க ஏதாவது சொல்லுங்க,அண்ணி.." என்று உற்சாகத்தோடு முறையிடும் பொழுது, லேசாக சிரித்து மழுப்பி நழுவி விடுவாள். இன்றைக்காவது மகாலஷ்மியிடம் இதுபற்றி சாப்பிடும் பொழுது ஏதாவது சொல்லி ஆட்ட அமர்க்களத்தில் அவளையும் கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கையிலேயே, எல்லாரும் சாப்பிட்டு ஹாலுக்கு வந்தாயிற்று.

"என்ன விசயம்னு அவங்க வீட்டுக்கு போனே?" என்று பொத்தாம் போக்கில் ஆரம்பித்து வைக்கிற மாதிரி பெரியண்ணி, சின்னண்ணியைப் பார்த்துக்கேட்டார்.

"ஒரு விஷயமும் இல்லேக்கா.. வருடப் பிறப்பு வருதில்லையா?.. புடவை எடுத்திருந்தாங்களாம்; பாக்கறத்துக்கு சந்திரிகா அக்கா கூப்பிட்டிருந்தாங்க.."

"அதுசரி.. நாமளும் தான் எடுக்கணும்.. என்னிக்குப் போகலாங்க?" என்று பெரிய அண்ணி கேட்கையிலேயே, "போகலாம், போகலாம்.. அதுக்குள்ளாற எனக்கொண்ணு தெரியணும். நீ 'விசயம்'ன்னு சொன்னே; தம்பி சம்சாரம் 'விஷயம்'ன்னு சொல்லிச்சு. இதுலே எது சரி?" என்று இன்றைய தலைப்பு கிடைத்த உற்சாகத்தில் ஆரம்பித்து வைத்தார் பெரியண்ணன்.

சின்ன அண்ணன் சொன்னார்:"ரெண்டும் சரிதான். அண்ணி தமிழ்லே விசயம்னு சொன்னாங்க.. லதான்னா, அதையே வடமொழிலே விஷயம்னு சொல்லித்து.. அதே மாதிரி 'வருஷ'த்தை 'வருடம்'ன்னு சொல்லித்து பாத்தீங்களா.."

"வருஷத்தை வருடம்ங்கலாம்.. விஷயத்தை விடயம்ங்கக் கூடாதா?" என்று சுரேஷ் தம்பி கேட்டான்.

"ஏம்பா, சுரேட்டு.." என்று பெரியக்கா நீட்டி முழக்க கொல்லென்று சிரிப்பு ஹால் முழுக்க நிறைந்தது. முதலில் சுரேஷூக்குப் புரியவில்லை.. பின் புரிந்தது. "ஓ.. அக்கா.. 'ஷ்' ஷை 'ட்'டுன்னீட்டிங்களா"ன்னு கேட்டு விட்டு அவனும் சிரித்தான்.

"ஏம்மா, மகாலஷ்மி! நீதான் சொல்லணும்; நீதான் தமிழ் படிச்சிருக்கே!" என்று பெரியண்ணி சமயம் பார்த்து புதுமருமகளை இழுத்து விட்டாள்.

மகாலஷ்மியை ஆர்வத்துடன் குமார் பார்க்க, அவள் முகத்தில் நாணம் செக்கச் சிவந்து தலை கவிழ்ந்தது.

"அண்ணி கேக்கறாங்கள்லே.. சொல்லு.." என்று குமார் ஊக்குவித்தான்.

அவளிடத்தில் தயக்கம்.

"பேசுமா.. நீ பேசி நாங்கக் கேக்கணும்லே.. தினம் தினம் இந்தக் கதை உண்டு.. எல்லாம் தெரிஞ்சிக்கத்தான் கேக்கறோம்.. சொல்லு.." என்றார் சின்ன அண்ணன்.

மகாலஷ்மி மெதுவாக வாய் திறந்தாள். "பெரியவங்க மத்தியிலே.." என்று அவள் இழுக்கும் பொழுதே, "இங்கே எல்லாம் ஒண்ணு தான்; அரட்டைக் கச்சேரி மாதிரியும் இருக்கு; புதுசா புதுசா பலது தெரியவும் தெரியுது. அதுக்குத்தானே?" என்று சின்னண்ணி துணைக்கு வந்தார்.

மகாலஷ்மிக்கு இப்பொழுது லேசாக தயக்கம் நீங்கிய மாதிரி இருந்தது. "வேறொரு மொழிச்சொல்லை சொல்லும் பொழுது அந்த மொழி உச்சரிப்புப் படியே எழுதறதோ சொல்றதோதான் சரியான அர்த்தத்தைக் கொடுக்கும். அப்படி இன்னொரு மொழிச்சொல்லை தப்பா எழுதியானும் சொல்லணும் வேறே வழியில்லைங்கற நிலைமையும் தமிழுக்கு இல்லை; தமிழ்லே இல்லாத சொல் வளமா?" என்று சொல்லி பெரியண்ணியைப் பார்த்தாள்.

"அப்படிச் சொல்லியே வழக்கமா போயிட்டதினாலே, தமிழ்ச் சொல்லே மறந்து போயிடறது மகாலஷ்மி! இந்த 'விஷயம்'ங்கற வார்த்தையே எடுத்துக்கோ.. அதுக்கு என்ன தமிழ்லே?" என்றார் பெரியண்ணி.

"ஏதோ தமிழ்லே இதுக்குப் பொருத்தமான வார்த்தையே இல்லாத மாதிரி, விஷயம்ங்கறதை அப்படி 'விசயம்' 'விடயம்'ன்னு சொல்லியானும் உபயோகப்படுத்தணும்ங்கற அவசியம் இல்லை. அதுக்கு பதிலா, தகவல், செய்தி-அப்படின்னு சொல்லலாம். அந்த வடமொழி வார்த்தையையே தான் சொல்லணும்னா, 'விசயம்' விட 'விதயம்' சரி. ஆனா, என்னவோ அந்த நல்ல சொல்லாக்கம் புழக்கத்து வராமயே போச்சு.. அதே மாதிரி, 'விஷம்னுங்கறதை,'விடம்' ன்னு எழுதறதை விட பேசாம 'நஞ்சு'ன்னு எழுதிடலாம்."

"பழம் பாட்டுகள்ல கூட 'விடம்'ங்கற வார்த்தையை உபயோகிச்சிருக்காங்கல்ல?" குமார் பேச்சுவாக்கில் நுழைகிற மாதிரி நுழைந்து மனைவிக்கு இன்னும் பேச உற்சாகமூட்டினான்.

"ஆமாம்.." என்று சொல்லி அவனைப்பார்த்து முறுவலித்தாள் மகாலஷ்மி.
"ஆமாம்.. நாயன்மார்கள் பாட்டுலே, காளமேகப்புலவரின் இரட்டை அர்த்த பாடல்களிலேலாம் நிறைய வரும். அப்படி 'விடம்'ன்னு வர்ற இடங்கள்லேலாம் பார்த்தீங்கன்னா, எதுகைக்காக உபயோகிச்சிருப்பது தெரியும். 'படம்' 'இடம்' 'வடம்'ங்கற வார்த்தைகளுக்காக இந்த 'விடம்' வந்திருக்கறது தெரியும்."

"ஓகோ.." என்று பெரியண்ணன் சுவாரஸ்யமானார்.

"எல்லா மொழிகளும் அழகுதான். எல்லா மொழிகளும் சுற்றி அததன் தனித்தன்மையோடு இருந்தாத்தான் நம்ம மொழியும் சிறப்பா இருக்கும். அது அதை அததன் உச்சரிப்பிலே சொன்னாத்தான் அழகு. அதுனாலே இன்னொரு மொழியை தப்பாவானும் நம்ம மொழிலே எழுத வேண்டாம். அதுக்கு நம்ம மொழிச் சொல்லையே எழுதிடறது நல்லது.. என்ன நான் சொல்றது?" என்றாள்.

"அற்புதம், மகாலஷ்மி!.." என்று அவள் மாமனார் பன்மொழிப்புலவர் அவளைப் பக்கத்தில் அழைத்து வாழ்த்தினார்.

28 comments:

Bhanumathy said...

கதைப்போல விஷயங்களை சொல்லும் பாணி அருகியே விட்டது. அதை சுவையாக புதுப்பித்ததற்கு நன்றி!
தேவன் 'அப்பள கச்சேரி' என்று எழுதியிருக்கிறார். என் பள்ளி காலத்தில் குமுதத்தில் 'அரட்டை' என்று ஒரு பகுதி இப்படி படித்ததாக நினைவு. மாலன் கூட சாவியை இதைப் போல எழுதியிருக்கிறார் என்றும் ஞாபகம், சரியா?

Geetha Sambasivam said...

நல்ல விஷயம்! பகிர்வுக்கு நன்றி.

கோமதி அரசு said...

அழகான விளக்கம் . பதிவில் நிறைய விஷயங்களை(செய்திகளை ) அறிந்து கொள்ள முடிகிறது.
விஷயம் என்பதை செய்தி, தகவல், என்றும் பொருள் என்றும் சொல்வார்கள் அல்லவா?
பேச்சு வழக்கில் தகவல் சொல்லவேண்டும், செய்தி சொல்ல வேண்டும் என்று பேசப்படுகிறது அதிகமாய்.
சில இடங்க்களில் என்ன விஷயம் ? என்ன பொருள் என்றும் வருகிறது.

ஸ்ரீராம். said...

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது மனிதர்களுக்கு மட்டுமில்லை, மொழிக்கும் பொருந்தும்!

'நெல்லைத் தமிழன் said...

வருந்தி வடமொழியைத் தமிழ்ப்படுத்துவதைவிட தமிழுக்கு உரிய சொற்களைப் பயன்படுத்தவேண்டும் என்பது சரியான செய்தி. பிறமொழி பெயர்ச்சொற்களைத் தமிழில் வலிந்து எழுதுவது தேவையில்லை என்பதும் ஏற்கத்தக்க செய்தி (உதாரணமாக ஸ்டாலின் என்பதை சுடாலின் என்று எழுதுவது, சுரேஷ் என்பதை சுரேசு என்று எழுதுவது. மரபு இலக்கியங்களில் மட்டும் விதிவிலக்காகிவிடும். "இலக்குவன் தன்னை", "பட்சி" போன்ற சொல்லாடல்கள்.

எனக்குள்ள சந்தேகம். "நஞ்சு" தமிழா? ஏன் இலக்கியங்கள் "நச்சுப் பொய்கை", "நச்சுப்பாம்பு " எனச் சொல்கின்றன. "நச்சு"தான் தமிழா? கர்நாடகத்தில், லிங்காயத் சமூகத்தில், "நஞ்சுண்டேசுவர்", "நஞ்சுண்டசாமி" , "நச்சுப்பாம்பு" போன்றவை வழக்கில் இருக்கும் பெயர்கள் (எல்லாம் பிறை சடையனைக் குறிப்பவை). தமிழ் இலக்கியங்களில் நீங்கள் சொல்லியபடி "விடம்" பல இடங்களிலும், ஓசை நயம் தேவையில்லாத இடங்களிலும் ("பாம்புக்குப் பல்லில் விடம்..") உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

G.M Balasubramaniam said...


என் நினைவு சரியென்றால் இது ஒரு மீள்பதிவாய் இருக்கணும் எப்பவோ படித்த நினைவு ஷவுக்குப் பதில் தவும் டவும்போட வேண்டிய அவசியமில்லை. அப்படியே எழுதலாம் இல்லையென்றால் வேறு வார்த்தை கிடைத்தால் உபயோகிக்கலாம் நான் புது மருமகள் மகாலக்ஷ்மி கட்சி.

வே.நடனசபாபதி said...


"எல்லா மொழிகளும் அழகுதான். எல்லா மொழிகளும் சுற்றி அததன் தனித்தன்மையோடு இருந்தாத்தான் நம்ம மொழியும் சிறப்பா இருக்கும். அது அதை அததன் உச்சரிப்பிலே சொன்னாத்தான் அழகு. அதுனாலே இன்னொரு மொழியை தப்பாவானும் நம்ம மொழிலே எழுத வேண்டாம். அதுக்கு நம்ம மொழிச் சொல்லையே எழுதிடறது நல்லது.. என்ன நான் சொல்றது?"

மகாலக்ஷ்மி சொல்லுக்கு மறு சொல் உண்டா?

வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல் ஒரு கருத்தை எளிதாக மிக நயமாக சொல்லிவிட்டீர்கள். நானும் இதுபற்றி யோசித்ததுண்டு. ஆனால் சிலசமயம் நம்மையறியாமல் வேற்றோரு மொழியின் சொல்லை தமிழில் சொல்லவேண்டும் என்பதற்காக இது போன்ற பிழைகளை செய்கிறோம் என எண்ணுகிறேன். அதைத் தவிர்க்கவேண்டும் என்பதை உங்களின் பதிவு வலியுறுத்துவது மகிழ்ச்சியே.

நானும் எனது பதிவுகளில் கூடியவரையில் தமிழ்ச்சொற்களையே பயன்படுவதுண்டு.

'நெல்லைத் தமிழன் said...

"நஞ்சப்பா" என்பது "நச்சுப்பாம்பு" என பதிவாகிவிட்டது

ஜீவி said...

@ Bhanumathy

தேவனும் மாலனும் இந்தப் பாணியில் எழுதியது நினைவில் இல்லை.

ஆனால் குமுதத்தில் வீட்டு அரட்டை மாதிரி வந்த பகுதி நினைவில் இருக்கிறது. அதிலும் ஒரு பெரியண்ணா வருவார். ஆனால் தலைப்பு அரட்டை இல்லை என்று நினைவு. அரட்டையை அர்த்தப்படுத்துகிற மாதிரி வேறு ஏதோ குமுதம் பாணி தலைப்பு. எஸ்.ஏ.பி. எழுதுகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ரா.கி.ரங்கராஜன் எழுதியதாகப் படித்த நினைவு.

கதை மாதிரி இல்லாவிட்டாலும் அரசியல் அரட்டை மாதிரி ஓரளவு இந்தப் பாணியில் இப்பொழுது தினமலரில் 'டீக்கடை பெஞ்ச்' வருகிறது.

பழைய நினைவுகளைக் கிளறியதற்கு நன்றி, சகோ. நல்ல நினைவாற்றல் உங்களுக்கு.

ஜீவி said...

@ Geetha Sambasivam

பதிவுலகப் பின்னூட்டங்களில் விடயங்கள் மனசை உறுத்தும்.

இந்தப் பகுதியில் பார்த்து ரொம்ப நாளாச்சு. வாசித்துக் கருத்துச் சொன்னதற்கு நன்றி, கீதாம்மா.

வை.கோபாலகிருஷ்ணன் said...


//புதுப்புடவை சரசரக்க மருமகள் வீட்டுக்குள் நடமாடுகையில் மகாலஷ்மியே வளைய வருவது போலிருந்தது. இதில் இன்னொரு பொருத்தமும் என்னவென்றால், மருமகளின் பெயரும் மகாலஷ்மியே.//

இவள் பெயரிலேயே பொருத்தம் ஏதும் இல்லாமல் சிக்கலும் குழப்பமும் மட்டுமே உள்ளன என்பது என் கருத்து.

இவள் பெயரைச் சொல்லும் போதோ அல்லது எழுதும் போதோ ’மஹாலக்ஷ்மி’ என்று மட்டுமே சொல்ல வேண்டும் / எழுத வேண்டும்.

Dr B Jambulingam said...

விஷயம் என்ற சொல்லிற்கு ஈடாக நீங்கள் கூறியுள்ள இரு சொற்களையும் நான் பயன்படுத்திவருகிறேன். விஷயம் என்ற சொல்லை நான் தவிர்க்கிறேன்.

ஜீவி said...

@ Bhanumathy

அதே யோசனையில் இருந்த பொழுது குமுதத்தின் நீங்கள் சொன்ன அந்தப் பகுதியின் தலைப்புப் பெயர் நினைவுக்கு வந்து விட்டது. அந்தப் பகுதியின் பெயர் 'கேள்வி நேரம்'

ஜீவி said...

@ கோமதி அரசு

நீங்கள் சொல்வது சரி தான்.

தொடர்வதற்கு நன்றி, கோமதிம்மா

ஜீவி said...

@ ஸ்ரீராம்

பொன்மொழி போலச் சொல்லியிருக்கிறீர்கள். அமெரிக்கா போன்ற தேசங்களில் பல் நாட்டு மக்களை ஒரு சேர பொதுவிடங்களில் சந்திக்கும் பொழுது மொழி என்பதும் பின்னுக்குப் போய் மனிதம் எனப்து அடிநாத உணர்வாய் நம்மில் பொங்கிப் பெருகும்.

எல்லா நாட்டு மொழி, பண்பாடு, கலாச்சாரம் இவற்றைப் பேணிக் காக்கவும் அனுசரித்துப் போகவ்ம் பழக்கப்படுத்திக் கொண்டு தேசங்கள் பேறு பெற்றவை, மனித இனத்திற்கு தலைமை தாங்கும் தகுதி பெற்றவை என்று உரத்த குரலில் சொல்லலாம்.

பகிர்வுக்கு நன்றி, ஸ்ரீராம்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

அடுக்கு மொழியில் எழுதுவது பேசுவது என்ற வழக்கம் கொடி கட்டிப் பறந்த காலம் ஒன்று தமிழகத்தில் உண்டு. பேச்சிலும், எழுத்திலும் அறிஞர் அண்ணாவும், கலைஞரும் வெகு இயல்பாக அந்த அடுக்கு மொழிப் பாணியை உபயோகப்படுத்திய பொழுது ஆற்றொழுக்கான அந்தப் பேச்சும் எழுத்தும் இன்னிசையைக் கேட்பது போல கேட்போரையும் வாசிப்போரையும் கள்வெறிக் கொள்ளச் செல்லும். 'தேன் வந்து பாயுது காதினிலே' என்று பாரதி சொன்னதை அனுபவ பூர்வமாக உணர்ந்த காலம் அது. அந்த இன்னிசைக்கு சுருதி ஏற்றியதில் வடமொழி வார்த்தைகளுக்கும் பங்குண்டு. அடுக்கு மொழி முக்கியமான மொழிப் பேதம் பார்க்காத காலம் அது.

அடுக்கு மொழிக்கு இன்னொரு பலமும் உண்டு. அடுக்கு மொழியில் அமைந்த எதையையும் படித்தாலும், கேட்டாலும் அவை மனத்தில் பசுமரதாணி போல மனத்தில் பதிந்து விடும். கம்பனும், இளங்கோவும் நம்மில் கோலோச்சியது அதனால் தான்.
இன்றைக்கும் பராசக்தி, மனோகரா மனத்தில் படிந்து ஓர் ஓரத்தில் கிடக்கின்றன.
நூல் கண்டின் ஒரு முனையைப் பிடித்து இழுத்தால் சரசரவென்று கண்டு நூலும் வழுக்கி வருமோ அதே மாதிரி பராசக்தி, மனோகரா திரைப்பட வசன காவியத்தில் ஒரு வார்த்தை ஆரம்பமாக மனத்தில் படிந்தால் போதும், தொடர்ந்த வசனம் அருவியாய் கொட்டும்.

"வசந்தசேனை! வட்டமிடும் கழுது; வாய்பிளந்து நிற்கும் ஓநாய்" என்று ஆரம்பித்தாலும் சரி, "கல்யாணி, மங்களகரமான பெயர்; ஆனால் கழுத்திலோ மாங்கல்யம் இல்லை" என்று ஆரம்ப முதல் வரியைத் தொடர்ந்தாலும் சரி, அடுத்த அடுத்த வசன வரிகள் நம் நினைவுகளைப் பசுமையாய் ஆக்கிரமித்துக் கொண்டு வண்டாய் வட்டமிட்டு ரீங்கரிக்கும். அண்ணாவும், கலைஞ்ரும் இளமையில் தம் தமிழ் ஆளுகையால் ஆட்கொண்ட ஆளுமை தான் வளர்ந்த பருவத்து தமிழின் மேலான காதலாய் மலர்ந்தது.

ஜீவி said...

//கள்வெறிக் கொள்ளச் செல்லும்.//

கள்வெறி கொள்ளச் செய்யும்.

//இன்றைக்கும் பராசக்தி, மனோகரா மனத்தில் படிந்து//

இன்றைக்கும் பராசக்தி, மனோகரா திரைப்பட வசனங்கள் மனத்தில் படிந்து

//கண்டு நூலும் வழுக்கி வருமோ//

கண்டு நூலும் வழுக்கி வருமே

//வசந்தசேனை! வட்டமிடும் கழுது//

வசந்தசேனை! வட்டமிடும் கழுகு


ஜீவி said...

@ நெல்லைத் தமிழன் (தொடர்ச்சி)

அடுக்கு மொழி தமிழுக்கு அடுத்த கட்டமாக தனித் தமிழ் இயக்கம் துளிர்விட்டது. வேதாசலம் என்ற தன் பெயரை மறைமலை என்று மாற்றிக் கொண்ட அடிகளாரும், சூரிய நாராயண சாஸ்த்ரி என்ற தன் பெயரை பரிதிமாற்கலைஞர் என்று மாற்றிக் கொண்ட தமிழறிஞரும், பெருஞ்சித்திரனாரும் இந்த இயக்கத்திற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். கடலூரிலிருந்து பெருஞ்சித்திரனாரை ஆசிரியராகக் கொண்டு 'தென்மொழி' என்ற பத்திரிகை சிறப்பாக வெளிவந்து கொண்டிருந்தது. அந்தப் பத்திரிகையை வருட கட்டணம் செலுத்தி தபாலில் பெற்றுக் கொண்டிருந்தேன்.

எந்த மொழியின் ஆக்கபூர்வமான வள்ர்ச்சியைத் தீர்மானிப்பவர்கள் மக்களே. அவர்களின் உதடுகளின் உச்சரிப்பிலிருந்து மென்மேலும் எந்த மொழியும் தழைக்க வேண்டும் என்ற நிதர்சன உண்மையால் தனித்தமிழ் இயக்கம் பண்டிதர்களைத் தாண்டி எளிய மக்களிடம் போய்ச் சேராது போய் விட்டது.

ஆனால் ஆதியிலிருந்து மொழியின் உயிர் மூச்சான படைப்பிலக்கியம் என்பது யாருக்காக இருக்க வேண்டும் என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது. கலை கலைக்காகவே என்றும் கலை மக்களுக்காகவே என்ற் விவாதங்கள் எக்காலத்தும் நடந்து கொண்டே இருக்கின்றன. இன்றைய இலக்கியம் கலை கலைக்காகவே என்ற மடை மாற்றலுக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

(தொடர்கிறேன்)Bhanumathy Venkateswaran said...

தேவனின் அப்பள கச்சேரி புத்தகம் என்னிடம் இருக்கிறது. அரட்டை என்று என்னாலும், கேள்வி நேரம் என்று உங்களாலும் நினைவு கூறப்பட்ட பகுதி 1974 ஆல்லது 75இல் குமுதத்தில் வந்தது. அந்த சமயத்தில்தான் பின்கோடு அறிமுகப்படுத்தப்பட்டது. எந்த மாநில பின்கோடு எந்த எண்ணில் தொடங்கும் என்று நானும் என் தோழியும் அதை படித்து விட்டுதான் தெரிந்து கொண்டோம்.

மாலன் சாவியில் மட்டுமல்ல, விகடனில் கூட 90களில் 'அனு,அக்கா,ஆன்டி' என்று இதைப் போலவே ஒன்று எழுதினார்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

'அழகிய தமிழ் மொழி இது' சென்ற பகுதி--27 பின்னூட்டங்களில் வடமொழி வார்த்தைகள் தமிழில் திரிபு கொள்வது பற்றி (சேஷம்-- சேடம்) எழுந்த விவாதங்களின் தொடர்ச்சியே இந்தக் குட்டிக் கதை.

பின்னூட்டங்களில் சொல்ல வேண்டியவைகளைத் தான் கதையாக்கியிருக்கிறேன்.

தொடர்ந்து வாருங்கள்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

எனக்குள்ள சந்தேகம். "நஞ்சு" தமிழா? ஏன் இலக்கியங்கள் "நச்சுப் பொய்கை", "நச்சுப்பாம்பு " எனச் சொல்கின்றன.

நஞ்ச்ம் நச்சும் ஒரே பொருளைத் தருபவை தான். இருந்தாலும் தொடர்ந்து வரும் பொருளுக்கு ஏற்ப இரண்டும் மாறி வரும்.

நஞ்சு உண்டான் என்பது பின்னால் வரும் உண்ணுதல் என்னும் வினையைக் குறிக்கையில்
நஞ்சு என்று குறிக்கப்படுகிறது.

நஞ்சு உண்டான் சரி.. நச்சு உண்டான் தவறு.

நச்சுப் பொயகை சரி.. நஞ்சுப் பொய்கை தவறு.

நச்சு அரவம் சரி... நஞ்சு அரவம் தவறு.


ஜீவி said...

@ ஜிஎம்பீ

நீங்கள் சொல்வது சரியே. இது ஒரு மீள் பதிவு. உங்கள் நினைவாற்றலுக்கு ஒரு சல்யூட்.

சென்ற சிலப்பதிகாரப் பதிவில் வந்திருந்த சேஷம்--சேடம் போன்ற வடமொழி வார்த்தைகளைத் தமிழில் எழுதுவது பற்றிய விவாதத்தின் தொடர்ச்சியாய் பின்னூட்டங்களில் எழுதுவதைத் தவிர்த்து ஒரு சிறுகதையாய் முன்பு எழுதி பதிவிட்டிருந்த ஒரு குட்டிக் கதையை உபயோகித்துக் கொண்டேன்.

நீங்கள் மகாலஷ்மி கட்சி என்பதை அறிய ரொம்பவும் சந்தோஷம்; அல்லது நிரம்பவும் மகிழ்ச்சி, ஐயா.

Geetha Sambasivam said...

//இன்றைக்கும் பராசக்தி, மனோகரா திரைப்பட வசனங்கள் மனத்தில் படிந்து//

பராசக்தி வசனங்கள் பத்திக் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் எதுவும் தெரியாது. சொல்லப் போனால் பராசக்தி திரைப்படத்தின் கதையே என்னனு தெரியாது! :)

'நெல்லைத் தமிழன் said...

அனைத்தையும் படித்து ரசித்தேன்.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

கலைஞரின் பராசக்தி திரைப்படத்தின் முதல் நாள் காட்சியை மதுரை தங்கம் தியேட்டரில் தான் பார்த்தேன். தங்கம் தியேட்டர் கட்டி முடித்து திரையிட்ட முதல் படமே 'பராசக்தி' தான்.

இதோ 'பராசக்தி' திரைப்படத்தில் வரும் நீதிமன்ற காட்சி வசனம், நான் குறிப்பிட்ட பகுதி மட்டும், என் நினைவுச் சுருளிலிருந்து, மீட்டெடுத்து நீங்கள் கேட்டதற்க்காக எழுதியிருக்கிறேன். முழுக் கதையை எழுதியை வேறொரு சந்தர்ப்பத்தில் அதற்கான வாய்பு வரும் பொழுது சொல்கிறேன். இப்பொழுது பராசக்தி திரைப்படத்தின் நான் குறிப்பிட்டிருந்த பகுதியின் சில வரிகள் மட்டும்..

".............. கல்யாணி! மங்களகரமான பெயர். ஆனால் கழுத்திலோ மாங்கல்யம் இல்லை. செழித்து வளர்ந்த குடும்பம் சீரழிந்து விட்டது. கையில் பிள்ளை;கண்களிலே நீர். கல்யாணி அலைந்தாள்; கல்யாணிக்காக நான் அலைந்தேன்.

க்ல்யாணிக்கு கருணை காட்டினர் பலர். அவர்களிலே காளையர் சிலர், அவளுடைய காதலைக் கேட்டனர். கொலை வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே, வேணு
இவன் பகட்டால் என் தங்கையைக் கற்பழிக்க முயன்றான்ல் நான் தடுத்திராவிட்டால் என் தங்கை அப்பொழுதே தற்கொலை செய்து கொண்டிருந்திருப்பாள்.

கடவுள் பக்தர்களும் கல்யாணிக்கு கருணை காட்ட முன்வந்தனர். பிரது உபகாரமாக அவள் கடைக்கண் பார்வையைக் கேட்டனர். அதில் தலையானவன் இந்த பூசாரில். கல்யாணியின் கற்பைக் காணிக்கையாகக் கேட்டான-- பராசக்தியின் பெயரால், உலக மாதாவின் பெயரால். கல்யாணியைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது, இந்தப் பூசாரியின் செயல் தான். தன் குழந்தையை இரக்கமற்ற இவ்வுலகில் விட்டுச் செல்ல அவள் விரும்பவில்லைல். அவளே கொன்று விட்டாள். விருப்பமானவர்களைக் கொல்வது விந்தையல்லல். உலக உத்தமர் காந்தி, அஹிமசா மூர்த்தி, ஜீவகாருண்ய சீலர், அவரே நோயால் துடித்துக் கொண்டிருந்த கன்றுக் குட்டியைக் கொன்றுவிடச் சொல்லியிருக்கிறார்-- அது கஷ்டப்படுவதைக் காணச் சகிக்காமல். அந்த முறையைத் தான் கையாண்டிருக்கிறாள், கல்யாணி! அது எப்படி குற்றமாகும்?..

என் தங்கை விட்டுக் கொடுத்திருந்தால்-- கோடீஸ்வரன் பள்ளி அறையிலே ஒரு நாள் மானத்தை விலைகூறி இருந்தால்-- மாளிகைவாசியின் மடியிலே ஒரு நா-- இப்படி ஓட்டியிருக்கலாம், நாட்களை! இதைத் தானா இந்த நீதி மன்றம் விரும்புகிறது?..

பகட்டு என் தங்கையை விரட்டியது-- பயந்து ஓடினாள்.
பணம் என் தங்கையைத் துறத்தியது-- மீண்டும் ஓடினாள்.
பக்தி என் தங்கையை பயமுறுத்தியது-- ஓடினாள், ஓடினாள், வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்.

அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்க வேண்டும், வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும், இன்று சட்டத்தை நீட்டுவோர்! செய்தார்களா? வாழ் விட்டார்களா, என் கல்யாணியை?..

(இன்னும் தொடர்கிறது-- இது வரை போதும்..)

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

//ஆனால் சிலசமயம் நம்மையறியாமல் வேற்றோரு மொழியின் சொல்லை தமிழில் சொல்லவேண்டும் என்பதற்காக இது போன்ற பிழைகளை செய்கிறோம் என எண்ணுகிறேன். //

மன்னிக்க வேண்டும். இதில் மாறுபட்ட கருத்து எனக்கு.

வேற்று மொழிச் சொல்லை-- குறிப்பாக வடமொழிச் சொல்லை-- எழுத விரும்பாமல் அதன் முகத்தில் உமிழ்கிற மாதிரி எப்படி என் தமிழ் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன், பாருங்கள் என்று சொல்லாமல் சொல்வதற்காகவே இந்த முயற்சிகள் என்பது எனது கருத்து.

விஷயம் என்பதை விடயம் என்று எழுதுவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏனென்றால் விடயம் என்ற வார்த்தையே தமிழில் இல்லாததால், அந்தச் சொல் அதற்கான எந்த அர்த்தத்தையும் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது போகிறது. அதுவுமில்லாமல், தேவையில்லாமல் இதற்கான விஷயம் என்ற வடமொழி மூல வார்த்தையை நம் நினைவுகளில் படரச் செய்கிறது. வடமொழி வார்த்தையைத் தவிர்க்கப் போய் அந்த வடமொழி வார்த்தையை நினைவில் படிய வைக்கிறது என்பது யோசித்தால் புலப்படும்.

உங்கள் தமிழ் ஆர்வத்தை நெல்லைத் தமிழருக்கான பின்னூட்டத்திலேயே குறிப்பியட
வேண்டும் என்று நினைவு கொண்டிருந்தேன். (தென்மொழி இதழைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது) மறந்தும் போனேன்.

தொடர் வருகைக்கு நன்ரி, ஐயா!

ஜீவி said...

@ வை. கோபாலகிருஷ்ணன்

//இவள் பெயரிலேயே பொருத்தம் ஏதும் இல்லாமல் சிக்கலும் குழப்பமும் மட்டுமே உள்ளன என்பது என் கருத்து.

இவள் பெயரைச் சொல்லும் போதோ அல்லது எழுதும் போதோ ’மஹாலக்ஷ்மி’ என்று மட்டுமே சொல்ல வேண்டும் / எழுத வேண்டும்.//

இந்த சின்னஞ்ச்சிறுக் கதைப்படிப் பார்த்தால் நீங்கள் சொல்வது சரியே.

ஆனாலும், ஒன்றைக் குறிப்பிட வேண்டும். மகாலஷ்மி என்ற வார்த்தை தமிழில் புழக்கத்தில் உள்ள வார்த்தை. எல்லா இடங்களிலும், திருக்கோயில்கள் உட்பட அப்படியே எழுதப்படுகிறது. அதனால் வெகுதிரள் மக்களுக்கு பழக்கமாகவும், வழக்கமாகவும் ஆன சொற்களை அவை வடமொழியாயினும், ஆங்கிலம் போன்ற அயல் மொழி ஆனாலும் அப்படியே எழுதுவதில் தவறில்லைல்.. (உதாரணம்: Coffee-க்கு காப்பி)

மகாலஷ்மியை, மகாலட்ச்சுமி என்றோ, மகா இலக்குமி என்றோ வலிந்து தமிழாக்கம் கொள்ளாமல் இருந்தால் சரியே.

அப்போம் மகாலஷ்மிக்கு என்ன தான் தமிழ்ச் சொல்?.. நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

ஜீவி said...

@ Dr. B. Jambulingam

//விஷயம் என்ற சொல்லிற்கு ஈடாக நீங்கள் கூறியுள்ள இரு சொற்களையும் நான் பயன்படுத்திவருகிறேன்.//

நன்றி, ஐயா. நீங்கள் சொல்லியிருப்பது இந்த சிறுகதைக்கே ஓர் அங்கீகாரம் கிடைத்த மாதிரி இருக்கிறது.

'அங்கீகாரம்' என்ற வடமொழிச்சொல் வலிந்து எழுதப்பட்டதில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். எழுதும் பொழுதே அப்படி எழுதுகிற வாக்கிலேயே வந்து விழுந்த சொல் அது.

இளமையிலிருந்தே மணிப்பிரவாள நடையில் எழுதிப் பழக்கப்பட்டவன் நான். வாசிப்பவரின் புழக்கத்தில் உள்ள சொற்கள் வாசிப்பை சரளப்படுத்தும் என்பது என் உணர்வு.

Related Posts with Thumbnails