Monday, March 6, 2017

சாபம்

சென்ற  பகுதி வாசிக்க:  http://jeeveesblog.blogspot.in/

பகுதி--3

புவியியல் பேராசிரியர் துரைசாமி மேடையேறியதும் அவரை வரவேற்று தனது அரிய கண்டுபிடிப்பான அந்தக் காலக் கணினி முன் நிறுத்தினான் டேவிட்..  துரைசாமியின்  பிறந்த தேதியும்  அன்றைய தேதியும் நேரமும் காலக்கணினியில் பதியப் பட்டன.

"துரைசாமி சார்!  உங்களது எந்த ஜென்மத்து நிகழ்ச்சியை பார்க்க  ஆவலாக இருக்கிறீர்கள்?" என்று அவரிடம் கேட்டான் டேவிட்..

"போன ஜென்மத்து என் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஏதாவது பார்த்தால் போதும்.
அதுவே எனக்குப் பேரானந்தமாக இருக்கும்" என்றார் துரைசாமி.

"ஓ.கே.  கொஞ்சம் வலது புறமாக நகர்ந்து கணினிக்கு நெருங்கி வந்து திரையில் உங்கள்  முகம் தெரிகிற மாதிரி  அமர்ந்து கொள்ளுங்கள்.  உங்களது இந்த ஜென்மத்து முக விலாசத்தை அந்தக் கணினி புரிந்து கொள்ளட்டும்" என்றான் டேவிட்.

துரைசாமியும் அப்படியே செய்தார்.   அவர் முகம் கணினித் திரையில் நன்றாகப் பதிந்ததும் விர்..ரென்று  விர்ரிட்டது கணினி.

டேவிட்  காலக்கணினியின் வயிற்றுப் பகுதியில் ஒன்று என்று இலக்கமிட்டிருந்த குமிழைத் திருப்பியதும்,   இரண்டே வினாடிகளில் 'பளிச்'  என்று துரைசாமி சாரின் போன ஜென்மத்து அந்தக் காட்சி திரையில் படர்ந்து விரிந்தது.

சட்டென்று டேவிட் கணினியில் மொழியைப் பதித்து ஸ்பீக் பட்டனை அழுத்தினான்.

இப்பொழுது பேண்ட்டும் ஸ்லாக்குமாக இருக்கும் துரைசாமி, திரையில் வேஷ்டியும் அங்கவஸ்திரமுமாய் இருந்தார். அவர் கையில் ஒரு கவளம் சாத உருண்டை. அதை ஒரு உயர்ந்த மேடையின் மேல் வைத்து விட்டு, "கா..கா..." என்று கத்துகிறார். உடனே காககையொன்று பறந்து வந்து அந்த சாத உருண்டையை கொத்துகிறது. அதே நேரத்தில் பின்புலக்காட்சியாக, ஒரு பசு. அந்தப் பசுவுக்கு எதிரே ஒரு கை நீண்டு வைக்கோல் கட்டு ஒன்றைப் போடுகிறது.

"ஓ..ஓ.." என்ற  ஆரவாரத்திற்கிடையே , டேவிட் விளக்கப் பொத்தானை அழுத்தி, பிளாஸ்டிக் அட்டையைப் பெற்று,  அதில் பொறித்திருந்த விஷயத்தைப்    படித்து விட்டு விளக்கினான்.   மொத்தக் கூட்டமும் டேவிட் சொல்வதைக் கூர்மையாகக் கேட்டுக் கொண்டிருந்தது.


"ஒன்றுமில்லை..இது துரைசாமி சாரின் சென்ற தலைமுறைக் காட்சி.   அதாவது  துரைசாமி சாரின் போன ஜென்மத்தில் இதே மாதம், தேதி, நேரத்தில் நடந்த காட்சி.   அன்றைய தினம், துரைசாமி சார் யாருக்கோ சிரார்தம் செய்திருக்கிறார்.    சிரார்தம்-- --யூ நோ?.. ஒரு குடும்பத்தில்  இறந்தவர்களுக்காக அவர் வழிவந்தவர்கள், சிரத்தையுடன் செய்யும் திதி அது.  அந்த ஜென்மத்து  துரைசாமி சார், பிண்டம் வைத்து காக்கைகளைக் கூப்பிட, அவை வந்து சாப்பிடுகின்றன.   அதெல்லாம் போகட்டும்.  அந்தப்  பின்புலக் காட்சியைப் பார்த்தீர்களா?..  அதுதான் இதில் விசேஷம்!..அதே நேரத்தில் இவன் உருட்டி வைத்த சாதப்பிண்டம், வைக்கோல் கட்டாக மாறி, யார் மூலமாகவோ, அந்த ஜென்மத்தில் பசுவாக உயிர் தரித்திருக்கும்-- துரைசாமி சார்  யாருக்காக சிரார்த்தம் செய்கிறாரோ அவருக்குப்-- போய்ச் சேருகிறது. இது உண்மையிலேயே உடலைச் சிலிர்க்கவைக்கும் ஒரு காட்சி" என்று டேவிட் முடிக்கிறான்.

"உடலையும் எரித்தாயிற்று;  உயிரும்  பிரபஞ்ச வெளியோடு கலந்தாச்சு. அப்படியிருக்க இறந்து போனவர்வர்கள்  எப்படி இவர் அளிக்கும் உணவை ஏற்றுக் கொள்வார்கள்?  என்ற கேள்விக்கு பதிலாக அந்தப் பின்புலக் காட்சி அர்த்தம் நிறைந்ததாகத் தெரிகிறது.." என்றார்  வானவியல் பேராசிரியர் உலகநாதன்.

"இன்னொன்றும் தெரிகிறது.." என்றார் சாமிநாத சர்மா.  "பிறப்புகளில் உயர்ந்த மனிதப்பிறப்பு கிடைத்து விட்டது என்று இறுமாந்து இருக்க வேண்டாம்.  அந்தந்த பிறப்புகளில் செய்யும் நன்மை--தீமைகளுக்கு ஏற்ப அடுத்த பிறவி கிட்டுவதாகவும் கொள்ளலாம்" என்றார் சர்மா.

ஜெகப்பிரியனுக்கு ஏக ஆச்சரியம்.  எழுந்திருந்தவர், "இந்த அதிசய காலக்கணினியின் செயல்பாடுகளைப் பார்த்து விட்டு அது பற்றி ஏதாவது சொல்லாமலிருந்தால் பாவம்.." என்று ஆரம்பித்தார்.  "இறப்பிற்குப் பிறகு ஏதுமில்லை. ஆட்டம் க்ளோஸ் என்று இதுகாறும் நம்பியிருந்தேன்.  அந்த நம்பிக்கை பொடிப்பொடியாக சிதறுண்டதை இப்போது என் கண் முன்னாலேயே கண்டேன்.    இத்தனாவது  ஜென்மம் என்றால் அதற்கேற்ப ஒரு காட்சியை ப்ரோகிராம் பண்ணியிருப்பீர்களோ என்ற சந்தேகமும் ஆரம்பத்தில் இருந்தது.  மாற்றி மாற்றி வரும் காட்சிகளின் நேர்த்தியும் அந்த காட்சிகளுக்கு ஏற்ப விவரக் குறிப்புகள்,  காட்சிகளின் நேரடி ஒலி விளக்கம் எல்லாம் அற்புதம்.  இந்தத் தலைமுறையின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு இதுவாகத் தான் இருக்கும்.   இளைஞன் டேவிட்டுக்கு என் அன்பார்ந்த ஆசிகள்.  கண்டுபிடிப்புகளுக்கான உலகின் மிகச் சிறந்த பரிசுகளைப் பெற என் வாழ்த்துக்கள்.." என்று சொல்லி அமர்ந்தார்.

கூட்டத்தின் வலது பக்க ஓரத்தில் லேசான சலசலப்பு.  அநத இடத்தில் அமர்ந்திருந்த  சுரேஷ் எழுந்ததும் அவன் தோற்றமே எல்லோரையும் கவர்வதாக இருந்தது.  .  இவனுக்குக் கூட இந்த தொடர் ஜென்மங்களில் ஈடுபாடு இருக்குமா என்று ஐயம் எற்படுகிற மாதிரியான இளமை ஊஞ்சலாடும் வசீகரிப்பு..

அவனைப் பார்த்து"ஓ..ஓ.." என்று கூட்டமே கரகோஷிக்க, அடுத்ததாக சுரேஷ் மேடையேறினான்.

"எங்கள் பெரும் மதிப்பிற்கும் பேரன்புக்கும் உரிய  இளம் விஞ்ஞானி      டேவிட்  அவர்களே! உங்களது அரிய இந்த கண்டுபிடிப்பைக் கண்டு அடக்கமுடியாத சந்தோஷத்தில் நாங்கள் திளைத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் எனக்கும்.."என்று மேடைப்பேச்சு பாணியில் ஆரம்பித்தவன், மெல்ல தனக்கு முன்னால் உட்கார்ந்திருக்கும் விஞ்ஞானிகளின் கும்பலில் இரண்டாவது வரிசையை நோட்டமிட்டான். அவன்  விழிகள்  மொய்த்த இடத்தில் உட்கார்ந்திருந்த ரேவதிக்கு முகமெல்லாம் சிவந்தது.

எத்தனை தலைமுறைகள் தாண்டிப் போனால் தானென்ன?.. பெண்கள் நாணப்பட்டால், முகம் தான் சிவக்கும் போலிருக்கிறது.

"ஹியர்..ஹியர்.."என்று கூவினான் டேவிட்."மிஸ்டர், ஷூரேஷ்! ரேவதியின் அனுமதியா?. இஃப் யூ டோண்ட் மைண்ட், கேன் ஐ டேக் தி பிரிவிலேஜஸ்?.. ரேவதி அனுமதிக்க மறுக்கமாட்டார்களென்று நினைக்கிறேன்." என்றவன் அட்டகாசமாக சிரித்தான்.

அந்த  மொத்த  கூட்டமே 'கொல்'லென்று சிரித்தது. இளம் விஞ்ஞானி சுரேஷ் மேடையில் நாணத்துடன் நெளிந்தான்.

"தென் வாட்?.. ரேவதி, உங்கள் காதலர் சுரேஷ் தனது முந்தைய ஜென்மத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதில் உங்களுக்கு ஆட்சேபணை உண்டா?" என்றான், குறுப்புக்கார டேவிட்.

ரேவதியும் அடக்கமுடியாமல் சிரித்து விட்டாள். "பை ஆல் மீன்ஸ்."

"ஓ.கே. அனுமதி கிடைத்துவிட்டது, சுரேஷ்!" என்று சுரேஷைப் பார்த்து டேவிட் முறுவலித்தான். "எந்தத் தலைமுறை சுரேஷ்?"

ஒரு நிமிடம் தான் சுரேஷின் தயக்கம். டக்கென்று "இருபது ஜென்மங்களுக்கு முன்னால் நான் எப்படி இருந்தேன் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா, புரொபஸர் சார்?" என்றான்.

"ஓ.." என்று உதடைக் குவித்த டேவிட், அன்றைய தேதி, சுரேஷின் பெயர், பிறந்த தேதி, ஆகியவற்றை கம்ப்யூட்டரில் பதிந்து,  காலக்கணினியின் வயிற்றுப் பகுதியிலிருந்த 20- என்று எண்ணிட்டிருந்த குமிழைத் திருப்பியதும் திரையில்...

அந்த காலத்து இராஜசபை.

புலவர்களும், தளபதியும் வீரர்களும் புடைசூழ மகுடம் தரித்து அரியாசனத்தில் மன்னன். அவன் தலைக்கு நேரே சிவப்பு அம்புக்குறி.

அழகே உருவான அபலைப் பெண் ஒருத்தி கண்களில் நீர் வழிய, மன்னனிடம் எதையோ யாசித்துக் கொண்டிருக்கிறாள். மன்னனின் முகத்தில் அதை மறுக்கும் தீவிரம்.

டேவிட்  காலக்கணினியில்    மொழியைப் பதிந்து, ஸ்பீக் பட்டனை அழுத்தியதும், குரல்! பெண்ணின் குரல்!

ந்தப் பெண்ணின் குரலில் அதிகப்பட்சப் பரிதாபம் கலவையிட்டிருந்தது.

"அன்பரே! எப்படி என்னை உங்களால் மறக்க முடிந்தது?.. இந்த சகுந்தலையை மறப்பது எப்படி உங்களுக்கு சாத்தியமாயிற்று?.. என் கைவிரல் தீண்டி கணையாழி போட்டது உங்களுக்கு நினைவில்லையா? அழகான சோலையில் பர்ணசாலை பக்கத்தில் நாம் கூடிக் களித்திருந்தது நினைவில்லையா, அன்பே?"

"இல்லை..இல்லை.." என்று அவசரமாக மறுத்தான் மன்னன். "நீ யாரோ?.. நீ யாரென்பதே எனக்குத் தெரியாது!உன் தகுதி உணராமல் அரசனுடன் உறவாடி இராஜத்துரோகம் புரியாதே.. போய்விடு, இங்கிருந்து.."

"மன்னா.. நீங்களில்லாமல் இந்த உயிர் உடலில் எப்படித் தங்கும்? நான் சொல்வது சத்தியம், மன்னா.. நான் சொல்வது சத்தி..."

"பசப்பாதே, பெண்ணே!.. போய்விடு, இங்கிருந்து.. துஷ்யந்தன் பெயரைக் களங்கப்படுத்த, மன்னனென்றும் பாராமல் பழிசுமத்த இங்கு வந்திருக்கிறாயா?.. தளபதி.. இவளை இழுத்து.."

தளபதி உக்கிரப்பார்வையுடன் அவளை நெருங்கி, அவள் கைப்பற்றியதும் சடாரென்று தலைதூக்கி ஆவேசமே அவளாகிறாள். "என்னை நெருங்காதே.... மன்னா! நினைவுபடுத்திப் பாருங்கள், என்னை நினைவு இல்லையா?..ஐயோ! நிஜமாக என்னை நினைவில்லையா, மன்னா! அதை எப்படி மறக்கமுடியும், உங்களால்? பொய்யுரைக்காதீர்கள். பொய்யுரைக்கும் உங்களுக்கு இனி எந்தப் பிறவியிலும், ஆமாம், எந்தப் பிறவியிலும்.. ஒரு பெண்ணின் காதல் கைகூடாமலே போகட்டும்.. போகட்டும்.." என்று தலை குனிந்து குலுங்கிக் குலுங்கி அழுகிறாள் சகுந்தலை.

இதைப் பார்த்து ரேவதி பதட்டத்துடன் தன் இருக்கையில் நிலைகொள்ளாமல் நெளிந்தாள்.

சுரேஷ் முகத்தில் விவரிக்க இயலாத குழப்பம். அந்த விஞ்ஞானிகளின் கூட்டமே திக்பிரமை அடைந்த மாதிரி உட்கார்ந்திருந்தது. கொஞ்ச நேரத்திற்கு முன்னாடியிருந்த சிரிப்பும், கும்மாளமும் இருந்த இடம் தெரியமல் ஓடி ஒளிந்திருந்தது.

கணினியை 'ஆஃப்' செய்வதற்கு முன், அவசர அவசரமாக 'விளக்க' பட்டனை தட்டினான் டேவிட்.. விளக்க அட்டை வந்து விழுந்தது. அங்கிருந்த யாருக்கும் பொறுமையில்லாமல், என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆவலில் எழுந்து விட்டார்கள்.

'விளக்க' அட்டையை ஒரே வினாடியில் மேய்ந்து விட்டு எல்லோருக்கும் கேட்கிற மாதிரி டேவிட் உரத்த குரலில் சொன்னான்: "அவன் பெயர் துஷ்யந்தன். இந்தியாவில் நாடாண்ட மன்னன். காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த பொழுது கன்வ மகரிஷியின் பாதுகாபிலிருந்த சகுந்தலையைச் சந்திக்கிறான்.. அவள் மேல் மோகம் கொண்டு காந்தர்வ மணம். மோகத்திற்கு அத்தாட்சி, அவன் அவளுக்கிட்ட மோதிரம்...

"துஷ்யந்தன் சகுந்தலையைப் பிறகு முறைப்படி அழைத்துக் கொள்வதாகச் சொல்லி நாடு திரும்புகிறான். ஒரு முனிவர் இட்ட சாபத்தால், சகுந்தலையை மறக்கிறான்.  துர்திர்ஷ்டவசமாக குளிக்கும் பொழுது கடலில் சகுந்தலை அவனிட்ட மோதிரத்தைத் தொலைத்து விடுகிறாள்...

"காட்டில் காந்தர்வமணம் புரிந்து கொண்டவனை நாட்டில், அரசவையில் சந்திக்கிறாள். தன் பரிதாப நிலையைச் சொல்லி முறையிடுகிறாள். முனிவர் சாபத்தால் எல்லாவற்றையும் மறந்த துஷ்யந்தன், 'பசப்பாதே..நீ யாரோ, நான் யாரோ' என்கிறான். இதுதான் நாம் பார்த்தது" என்கிறான் டேவிட்.

"ஓ.. வாட் எ பிட்டி!" என்று கூட்டமே புலம்ப, சுரேஷ், டேவிட்டிடம் சென்று, பரிதாபமாக "பிறகு துஷ்யந்தனான நான் என்ன செய்தேன்? அந்த சகுந்தலையை மணந்தேனா?.. அந்த அபலையைக் காப்பாற்றினேனா?.. என்ன செய்தேன்?..சொல்லுங்கள்" என்று துடித்தான்.

"அதற்கு மறுபடியும் கம்ப்யூட்டரை இயக்கினால் தான் தெரியும்" என்ற டேவிட் மறுபடியும் சுரேஷை கம்ப்யூட்டரின் முன்னால் நிறுத்தி, அவன் பெயரைப் பதிவு செய்து, '20' என்று எண்ணிட்ட குமிழைத் திருப்பி.....

அதற்குப் பிறகு நடந்தவற்றைத் தெரிந்து  கொள்ளும் ஆவலில் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள்     கூட்டம் உட்கார----

ரேவதி மட்டும்.......

ஓ, ரேவதி?....

அவள் அந்த இடத்தை விட்டு எப்பொழுதோ போய்விட்டாள்.

முந்தையப் பிறவியில் கொண்ட காதலை பகிஷ்கரித்த ஒருவனிடம், இந்தப் பிறவியில், இப்பொழுது தன் வாழ்க்கையை ஒப்படைப்பதா என்கிற தயக்கமா?...

அப்படித்தான் இருக்க வேண்டும். இல்லை, சாபமோ?..

ஆமாம், சாபம் தான். அதுவும் ஒரு பெண்ணின் சாபம். சகுந்தலையின் சாபம்!

(நிறைவுற்றது)


படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.

19 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...


இன்றைய நாடி ஜோஸ்யர்கள் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த கம்ப்யூட்டர் மிக நல்ல கற்பனை.

இதனால் கடைசியில் இன்று இந்த ஜன்மத்தில் பாதிக்கப்பட்டுள்ளது அந்தப்பெண் ரேவதி.

சந்தடி சாக்கில் .... துஷ்யந்தன் - சகுந்தலை போன்ற சில கதைகளையும், ஒருசில புராண சாஸ்திர நம்பிக்கைகளையும் நுழைத்துள்ளது தனிச்சிறப்பாகவும் ரஸிக்கும் படியும் உள்ளன. பாராட்டுகள்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
சிறப்பான கதை யோட்டம் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Dr B Jambulingam said...

நச்சென்ற முடிவு.

ஜீவி said...

சோதனை ஓட்டம்

'நெல்லைத் தமிழன் said...

"அந்த ஜென்மத்தில் பசுவாக உயிர் தரித்திருக்கும்-- துரைசாமி சார் யாருக்காக சிரார்த்தம் செய்கிறாரோ அவருக்குப்-- போய்ச் சேருகிறது" - வித்தியாசமான சிந்தனை.

"முந்தையப் பிறவியில் கொண்ட காதலை பகிஷ்கரித்த ஒருவனிடம், இந்தப் பிறவியில், இப்பொழுது தன் வாழ்க்கையை ஒப்படைப்பதா" - சகுந்தலை துஷ்யந்தன் கதையையும் இணைத்திருக்கிறீர்கள். ஆமாம் இதில் துஷ்யந்தன் தவறு எங்கு இருக்கிறது? (எங்கிருந்தோ வந்தாள் படத்தையும் நினைவுகூற வைத்துவிட்டீர்கள்).

இன்டெரெஸ்டிங் சிந்தனை. நிறைய கேள்விகளை எழுப்பக்கூடியது.

1. இறைவன் ஒருவன் (Only one) என்று இருக்கும்போது, பல ஜென்மங்கள் உண்டு என்று நம்புகிறவர்கள், மத துவேஷமோ, சமய துவேஷமோ கொள்வது அறிவுடைமையா?

2. நமக்கு முகம் தெரியாதவர்கள், நம்முடன் நேரடியாகச் சம்பந்தமில்லாதவர்கள் பலர் நமது வாழ்க்கையில் உதவுகின்றனர். இதையெல்லாம் நான் 'கடன்' என்று நினைக்கிறேன். அதை ஈடு செய்யும் அளவு, அவர்களுக்கோ அல்லது நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கோ நாம் உதவி செய்தால் மட்டுமே அது சமானமாகிவிடும். இல்லாவிடில் அடுத்த ஜென்மத்தில் இந்தக் கடன் நம்மைத் தொடர்ந்துவரும். இயன்ற அளவு, நாம் செய்யும் உதவி, பெற்றுக்கொள்வதைவிட அதிகமாக இருக்கவைப்பதுதான், நம் ஆத்மாவுக்கு நாம் செய்துகொள்ளும் நல்ல செயல் என்று தோன்றுகிறது.

3. சிலரைப் பார்க்கும்போதே (முன்பின் பழகாவிட்டாலும்) நமக்கு அவ்வளவு கம்பேடபிளாக (ஒத்திசைவு இல்லாதது) இருக்காது. அவருடன் பழக மாட்டோம் அல்லது அவர் மீது கொஞ்சம் வெறுப்பு வரும்.சிலபேரிடம் ஒரு தடவை பார்த்தவுடனேயே மிகுந்த பந்தமும் நட்பும் வந்துவிடும். எல்லோருக்கும் இது இயல்பானதுதான். இதற்கும் பூர்வ ஜென்மத்திற்கும் தொடர்பு இருக்கும் என்றே நம்புகிறேன்.

இதெல்லாம், Destinyஐ நம்புபவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியது.

சங்கத் தமிழை கொஞ்ச நாளாக விட்டுவிட்டீர்கள். விரைவில் தொடருங்கள்.

ஸ்ரீராம். said...

கற்பனைக்கு எல்லை இல்லை. கணினி இத்தனை வேலைகள் செய்யுமா என்பது வியப்புதான்! பழைய கமல் படம் ஒன்றில் ஆறு வயதுச் சிறுமி படத்தைக் கணினியில் ஏற்றி, இப்போது எப்படி இருப்பார் என்று கேட்டு படம் உருவாக்குவதே வியப்பாக இருந்தது!

துரைசாமி பழைய பிறவியிலும் துரைசாமி முகத்திலேயே இருக்கிறாரே... சிவாஜி படம் போல! சாபம் கருவைக் கொண்டு வர நல்ல தளம் அமைத்து கதையை முடித்து வைத்திருப்பது சிறப்பு.

ஸ்ரீராம். said...

ஒரு பெண்ணின் சாபத்தை நாம் காப்பாற்றி ஆகவேண்டும் என்று உலகப் பெண்கள் தினத்தில் ரேவா முடிவு எடுத்து விட்டாள் போல! புராணக் கதைகளில் எல்லா கதைகளுக்கும் ஒரு பின்கதையும், காரணமும் இருக்கும். சகுந்தலைக் கதையிலும் அப்படி ஒரு முன்கதை இருக்கும். அப்புறம் சிரார்த்தம் என்று சொல்வதை விட சிராத்தம் என்பதே சரி என்று நினைக்கிறேன்!

ஜீவி said...

@ வை.கோ.

நாடி ஜோஸ்யர்களின் நினைவு உங்களுக்கு வந்ததும் நல்லதுக்குத் தான். ஒலைச்சுவடிகளில் உள்ளதை கணினியில் ஏற்றி காலக்கணினி என்று பெயர் வைத்தால் போதும், விஷயம் முடிந்தது.

எல்லா ஜென்மங்களிலும் பாஞ்சாலி, கண்ணகி போல பாதிக்கப்பட்ட பெண்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

சந்தடி சாக்கில் துஷ்யந்தன்- சகுந்தலை கதை வரவில்லை. அவர்களை வைத்து கதை பின்னி மற்ற சமாச்சாரங்கள் ஒரு போக்கு காட்டுவதற்காகத் தூவப்பட்டவை.

தங்கள் ரசனைக்கு நன்றி, கோபு சார்.

ஜீவி said...

@ கவிஞர் ரூபன்

நன்றி, கவிஞரே! உங்கள் பாராட்டுக்கு நன்றி.

ஜீவி said...

Dr. B.J.

கச்சிதமான பின்னூட்டம். நன்றி, ஐயா!

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

"உடலையும் எரித்தாயிற்று; உயிரும் பிரபஞ்ச வெளியோடு கலந்தாச்சு. அப்படியிருக்க இறந்து போனவர்வர்கள் எப்படி இவர் அளிக்கும் உணவை ஏற்றுக் கொள்வார்கள்? --- என்று கதையில் நூலிழை போல பற்றித் தொடர்வதற்கு ஒரு இடம் கொடுத்திருந்தேன்.

இந்த தொடர் ஜென்மங்களுக்கு அடிப்படை உயிரும் இல்லை, உடலும் இல்லை. இதைத் தாண்டி ஆத்மா என்று ஒன்றிருப்பதாகவும் அதற்கு அழிவில்லை என்றும் வழிவழியாகச் சொல்வது தான். இந்த ஆத்மா ஆராய்ச்சி லேசுப்பட்டதல்ல. 'ஆத்மாவைத் தேடி' என்று தொடர்கதை போல ஒரு தொடர் எழுத ஆரம்பித்து இந்தப் பூவனம் பதிவிலேயே மூன்று பாகங்கள் எழுதி அரைகுறையாக விட்டிருக்கிறேன். ஆதமாவைப் பற்றி எழுத ஆரம்பித்தால் அது முடிவில்லாத சமாச்சாரம் என்பதற்காகச் சொல்ல வந்தேன்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழ்ன்

(தொடர்ச்சி.)

பசுவுக்கு வைக்கோலாகப் போய்ச் சேருவது திருமுருக கிருபானந்த வாரியார் தனது உபன்யாசம் ஒன்றில் சொல்லக் கேட்டது. கிட்டதட்ட 40 வருடங்களுக்கு முன்பு கேட்டது. நினைவுக்கு வந்து உபயோகப்படுத்திக் கொண்டேன்.

வாரியார் அழகாகச் சொல்லுவார்: அஞ்சல் அலுவலகத்தில் 599 ரூபாய் மணியாடருக்காக பணம் கட்டினால், அந்த ரூ.500 சேர வேண்டியவருக்கு போய்ச் சேரும். கட்டிய டினாமினேஷன் படியே போய்ச் சேரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் அந்த ஐநூறு ருபாய் போய்ச் சேருவது நிச்சௌஅம். அதுபோலவே யார் யார் எப்படி எப்படி ம்றுபிறவி எடுத்திருக்கிறார்களோ அவர் அவர்களுக்கு ஏற்ற மாதிரி உருக் கொண்டு
அந்தப் பிதிர்ப்பிண்டம் என்பது போய்ச் சேரும் என்று சொல்லுவார்.

ஸ்ரீராம். said...

என்ன ஆச்சு என் பின்னூட்டங்கள்?

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

'பூர்வ ஜென்ம வாசனை' என்று சொல்கிறார்களே என்ன அது?

பிறப்புகள் தொடர்வது மட்டுமில்லை; முந்தைய பிறவிகளின் குணவிசேஷங்களில் ஒரு கடுகளாவது அடுத்தடுத்த பிறவிகளில் ஒட்டிக் கொண்டு வருவதாகச் சொல்கிறார்கள்.

அந்தக் கடுகளாவது ஒட்டிக் கொண்டு வருவது தான் -- இந்தக் கதைக்கான சரடு.

எந்த ஜென்மத்திலோ நேர்ந்தது தொடர்ந்து வந்து இன்னொரு ஜென்மத்திலும் பாதிக்கிறது.

துஷ்யந்தன் தவறு எங்கிருக்கிறது என்று கேட்டிருக்கிறீர்கள்.

புராணக் கதைகளில் எவரின் தவறு அல்லது தவறின்மையையும் நீங்கள் சரியாக பொருத்த முடியாது.

நளன் தமயந்தியை காட்டில் தனியாக விட்டு விட்டுப் போக நேர்நதது எதனால்?..

இராமன் என்ன தவறு செய்தான், சீதையைப் பிரிய?

சூதாட்டத்தில் பாஞ்சாலி பணயமாக வைக்கப்பட்ட அநீதி எதனால் நேர்ந்தது?

தோண்டித் தோண்டிப் பார்க்க துணைக்கதைகள் கிளை கிளையாகப் பிரியும். அல்லது
'விதியின் வ்லிமை கொடியது' என்று ஒரே போடாகப் போட்டு விடுவார்கள்.

நம் அன்றாட வாழ்க்கையில் கூட இந்த 'தவறு'களைப் பார்க்கலாம்.

இன்று காலையில் காரணமே இல்லாமல் எனக்கு உதவி செய்தவரின் மேல் கோபப்பட்டேன். பின் வருந்தி அவரை அழைத்து சகஜமாகப் பேசிய பின் தான் மனம் சாந்தியடைந்தது.

'உள்ளத்தில் நல்ல உள்ளம், உறங்காதென்பது வல்லவன் வகுத்தடடா' என்பார் கண்ணதாசன்.

எதற்காக எது நடக்கிறது என்பது நமக்குத் தெரியாது.

அதனால் காரணங்களைத் தேடி அலைவதை விட எல்லாவற்றையும் வல்லவன் வகுத்திருப்பதாகவே கொள்வோம்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//துரைசாமி பழைய பிறவியிலும் துரைசாமி முகத்திலேயே இருக்கிறாரே..//

துரைசாமியை கணினி முன் உட்கார வைத்து முகத்தைக் காட்டச் சொன்னதைச் சொல்கிறீர்களா?..

கதை வாசிக்கும் வாசகரை அந்த தத்ரூபத்திற்குள் நுழைக்க வேண்டும். அதற்கான ஜிகினா வேலைகள் இவை. வாசகருக்கு நன்கு தெரிந்த விஷயங்களை அடுக்கிக் கொண்டு போய் நம்ப வைத்து நம் கற்பனை பொய்களையும் அதே வரிசையில் சொல்லி நம்ப வைக்க வேண்டும். அதற்கான ஜிகினா வேலைகள் இவை.

கதைகளே சரடு தான். நல்ல கதைகளுக்கு அழகு நிஜத்தின் சாயலில் இருக்க வேண்டுமே தவிர நிஜமாக இருக்கக் கூடாது. கதைகளில் உண்மைகளைத் தேடி அலைந்தால் கற்பனைகளுக்கே அர்த்தம் இல்லாது போய் விடும்.

என் கணினியில் face recognition வசதி இருக்கிறது. என்னைத் தவிர வேறு யாரையும் அனுமதிக்காது. அது ஒரு ஐடி போல. இதன் அடுத்த கட்ட வளர்ச்சி கணினியின் முன் உட்காரும் எல்லோருடைய முகத்தையும் புரிந்து கொள்ளல். அந்த முறையில் இந்த ஜேன்ம துரைசாமியை நிச்சயம் செய்து கொண்டு அவரின் போன ஜென்மப் பிரதியைத் தெரிவு செல்தல். எல்லா ஜென்மங்களிலும் ஒரே முகச் சாயலில் துரைசாமி இருபார் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. துரைசாமி ஆணாய், பெண்ணாய், மானாய், மரமாய் எப்படி வேண்டுமானாலும் இருஜ்திருக்கலாம்.

கணினி சம்பந்தமான ஒரு யுக்தியை கதையில் கையாண்டு வாசிப்பவரை வாசிப்பு விஷயங்களை நம்ப வைப்பதற்கான ஒரு முயற்சி அது. இந்த மாதிரி மாயாஜால தத்ரூப கதைகளுக்கு அப்படியான நம்ப வைத்தல் அவசியமானத் தேவை.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//ஒரு பெண்ணின் சாபத்தை நாம் காப்பாற்றி ஆகவேண்டும் என்று உலகப் பெண்கள் தினத்தில் ரேவா முடிவு எடுத்து விட்டாள் போல! //

ஹஹஹா.. இந்த மாதிரியான எல்லா தினங்களும் வியாபார் புத்தியில் உதித்து நம்மையும் உள்ளிழுக்கும் காலம் இது. தாங்கஸ் கிவ்விங் டே போன்ற நல்ல தினங்களை ஏனோ நாம் கொண்டாடுவதில்லை.

நம் நாட்டைப் பொருத்தமட்டில் எதன் பெயரிலாவது விடுமுறை வேண்டும். அவ்வளவு தான்.

(வங்கி) வேலை நிறுத்தங்களைக் கூட நாள் நட்சத்திரம் பார்த்துத் தான் நம் நாட்டில்
செய்வார்கள். தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு மேல் விடுமுறை வந்தால் அதற்கு முதல் நாள் வேலை நிறுத்தம்!! நம்ம ஆள் கிலலாடி. அந்த வேலை நிறுத்தத்திற்கு முதல் நாளே சொந்த விடுப்பு, இல்லையானால் மதியத்திற்கு பர்மிஷன் போட்டு விட்டு இரவே தெற்கு சீமை பக்கம் சொந்த ஊருக்குப் போய் விடுவார்.

மாநில அரசு உத்தியோகங்களைப் பொறுத்த மட்டில் எந்த தினமாக இருந்தாலும் சரி,
"ஸீட்டிலே இல்லே, சார்.." சகஜமான பழகிப்போன கேட்டுக் கேட்டு புளித்துப் போன ஒரு பதில்!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//அப்புறம் சிரார்த்தம் என்று சொல்வதை விட சிராத்தம் என்பதே சரி என்று நினைக்கிறேன்!

கீதா சாம்பசிவம் வந்திருந்தாலும் பின்னூட்டத்தில் மெனக்கெட்டு இதைச் சொல்லியிருப்பார்.
அவரிடமிருந்து தெரிந்து கொண்டது என்பதால் சொன்னேன்.

சிரத்தையுடன் செய்வதால் சிராத்தமாம். அழகு-- அளகு, அலகு என்றெல்லாம் மாற்றம் கொள்ளும் காலத்தில் எதை எப்படிச் சொன்னால் என்ன என்ற அசிரத்தை தான் ஏற்படுகிறது.

//புராணக் கதைகளில் எல்லா கதைகளுக்கும் ஒரு பின்கதையும், காரணமும் இருக்கும். சகுந்தலைக் கதையிலும் அப்படி ஒரு முன்கதை இருக்கும். //

நெல்லைத் தமிழன்! ஹியர்! புராணக் கதைகளின் 'கதைமூலம்' பாருங்கள்!

தி.தமிழ் இளங்கோ said...

ஏதாவது தீவிரமாக சொல்வீர்கள் என்று எதிர் பார்த்தேன். சப்பென்று முடித்து விட்டீர்கள். நல்லவேளை இப்போது யாருக்கும் போனஜென்ம ஞாபகம் என்று எதுவும் இல்லை.

ஜீவி said...

@ தி. தமிழ் இளங்கோ

"உடலையும் எரித்தாயிற்று; உயிரும் பிரபஞ்ச வெளியோடு கலந்தாச்சு. அப்படியிருக்க இறந்து போனவர்வர்கள் எப்படி இவர் அளிக்கும் உணவை ஏற்றுக் கொள்வார்கள்? --- என்று கதையில் நூலிழை போல பற்றித் தொடர்வதற்கு ஒரு இடம் கொடுத்திருந்தேன்.

கதையில் அதற்கு மேல் அந்த விஷயத்தைத் தொடர்ந்திருஜ்தால், கதை கட்டுரை ஆகியிருக்கும்.

சொல்லப் போனால் சுரேஷ்--ரேவதி சமாச்சாரம் தான் இந்தக் கதையின் கதை அம்சமே. அதைச் சொல்வதற்காக மற்ற சமாச்சாரங்கள் அழகியல் பூச்சு பூசிக் கொண்டு அந்தக் கதை அம்சத்தை ஊதிப் பெரிதாக்கி ஒரு முழுமையான கதை ரூபத்தைக் கொடுக்கிறது.

கதையில் வந்த அந்த நூலிழை வரிகளைப் பின்னூட்டங்களிலாவது யாராவது பற்றித் தொடர்ந்திருந்தால் நிறையப் பேசியிருக்கலாம். அதற்கும் இதுவரை வழியில்லாது போய் விட்டது.

ஆக--

'நச்'சென்ற முடிவும் 'சப்'பென்ற முடிவும் ஒரே தராசின் இரு தட்டுகள் தாம்!

//நல்லவேளை இப்போது யாருக்கும் போனஜென்ம ஞாபகம் என்று எதுவும் இல்லை.//

விக்கிரவாண்டி இரவிச்சந்திரன் அவர்களின் நூல்களைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

முற்பிறவியை அறிந்து கொள்வது எப்படி?-- என்று அவர் ஒரு நூல் எழுதியிருக்கிறார்.
மற்றும் இவர் எழுதிய 'ஆவிகள் உலகம்', 'ஆவிகளுடன் பேசும் முறைகள்' போன்ற நூலகள் இது மாதிரியான விஷய விருப்பங்கள் கொண்டோருக்கு அருமையான புத்தகங்கள். இந்த மாதிரியான விஷயங்களைத் தேடித் தேடிப் படிக்கும் ஆர்வம் கூடும் பொழுது, போன ஜெனம உணர்வுகள்' வாசிப்போருக்கு வரலாம்.

நம் எண்ணங்களே நாம் என்னவாக இருக்கிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது. அந்த தீர்மானிப்புகளே நம் எண்ணங்களைத் தொடர்ந்து வடிவமைக்கிறது.

சுவையான பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி, நண்பரே!

Related Posts with Thumbnails