Saturday, September 9, 2017

கமலி காத்திருக்கிறாள்...

பகுதி:   4


இதற்கு முன் பகுதி:  http://jeeveesblog.blogspot.in

"எனக்குக் கல்யாணமாகி ரெண்டு வருஷமாயிடுத்து, சாரங்கன்! காதல் கல்யாணம் தான். அவர் பேர் மோகன சுந்தரம்; ரொம்ப அழகாய் இருப்பார், சாரங்கன்.." என்று கனவில் எதையோ ரசிக்கும் பாணியில் வார்த்தைகளை வெளிப்படுத்துகிறாள் கமலி..   "லைஃப்லே கல்யாணம்ங்கறது ஒரு பெரிய கேம்பிள்.. என்ன தான் விசாரிச்சு, குலம் கோத்திரம் எல்லாம் பாத்து செஞ்சிகிட்டாக் கூட பிற்காலத்லே சந்தோஷமா இருப்பாங்கங்கறதை நிச்சயமா சொல்ல முடியறதில்லே..  இந்த லட்சணத்திலே என்னோடது காதல் கல்யாணம்.." என்று கைத்துப் போன சிரிப்பொன்றை வெளிப்படுத்துகிறாள் கமலி.

எதனாலோ அடிபட்டு துடிக்கக் கூட சிரமப்படும் அவள் சங்கடத்தைச் சமனப் படுத்தும் எண்ணத்துடன், ஒரு சகஜ நிலைக்கு அவளைக் கொண்டு வர வேண்டி, "என்ன, கமலி.. காதல் கல்யாணம்ங்கறது அவ்வளவு..." என்று அவன் சொல்ல வந்ததை சொல்லி முடிக்குமுன்னே, 

"ஸாரி.. காதலிப்பதை, காதல் வயப்படறதை நான் சொல்லலே. என்னோட வருத்தத்திலே நா சொன்னது அப்படி அர்த்தமாயிடுத்தோ, என்னவோ.. மன்னிக்கணும்.. காதல் ரொம்பவும் மரியாதைக்குரிய ஒண்ணு. நாம அதுக்குக் குடுக்கற மரியாதையிலே தான் அதோட ஜீவனும் துடிச்சிண்டிருக்கு... காதல் ஒரு பூச்சரம்ன்னு கவிதை எழுதறாங்க;  அதைக் காதலி தலைலே சூட்டி விட்டா அழகு; தரைலே தூக்கி எறிஞ்சு பூட்ஸ் கால்லே நசுக்கினா..."

சொல்லி முடிக்கட்டும் என்று சாரங்கன் காத்திருக்கிறான்.

இப்பொழுது குரல் தழுதழுத்துப் போகாமல் கொஞ்சம் தெளிவாகப் பேச ஆரம்பிக்கிறாள் கமலி. "எல்லாம் கதை மாதிரி இருக்கு; அப்படிக் கதை மாதிரி இருந்தாலும், நான் உயிர் வாழ்ந்திண்டு இருக்கறதாலே என்னோட இந்தக் கதையும் உயிர் வாழ்ந்திண்டு இருக்கு. நா எங்க அம்மாவுக்கு மூணாவது பெண்.  முதல் அக்கா ஓர் ஆண் துணையை நிச்சயித்துக் கொண்டு அவருடன் போய் விட்டாள்.  மிஸ்டர் மோகன சுந்தரத்தை நா சந்தித்த காலத்திலே, என்னோட ஊதிய சேமிப்பை வைச்சு ரெண்டாவது அக்காவுக்கு அவளோட திருமணத்தை முடிச்சு வைச்சேன்.. இந்த அக்காவுக்குக் கல்யாணம் ஆகி விட்டால், அடுத்து இருப்பது நான் தானே என்கிற உந்துதலும் ஒரு காரணம்.

"நா சிறுகச் சிறுக சேமிச்சு வைச்ச பணம் கொஞ்சம் இருந்தது. அதோட ஆபீஸ்லேயும் கொஞ்சம் லோன் வாங்கியிருந்தேன்.     அதை வைச்சு எங்களைப் பெத்தவங்க முன்னாடி, அவங்களோட ஆசிர்வாதத்தோடையே என்னோட கல்யாணத்தை சிம்பிளா முடிச்சிக்கலானு ஒரு நாளைக்கு நா காதலிச்ச மோகன சுந்தரத்தை எங்க வீட்டுக்கு வரச்சொன்னேன்.. பாவம், அவருகிட்டே என்னைப் பெத்தவங்க எப்படி நடந்துகிட்டாங்க, தெரியுமா சாரங்கன்?.. ஒரு மங்கலமான விஷயத்தைப் பத்திப் பேசவந்த அவருக்கு உட்கார ஒரு நாற்காலி கூட இவங்க கொடுக்கலே.. என்னை அவருக்குத் தர தயாராயில்லேன்னு மூஞ்சிலே அடிச்ச மாதிரி சொல்லி அனுப்பிச்சாங்க.. ஏமா, இப்படி செஞ்சிட்டீங்கன்னு அன்னிக்கு ராத்திரி, எங்கம்மாவை நா கேட்டதுக்கு அவங்க என்ன சொன்னாங்க, தெரியுமா சாரங்கன்?.. உனக்குக் கல்யாணம் முடிஞ்சிட்டா, நாங்கள்லாம் எப்படிடீ உயிர் வாழறது?  நீ சம்பாதிக்கற பணம் உன்னோட குடும்பத்துக்குத் தான் அப்புறம் சரியாயிருக்கும்ன்னாங்க.. 'உன்னோட குடும்பம்'ன்னு என்னை எங்கேயோ கொண்டு போய்ச் சேர்த்து அவங்க சொன்னதே எனக்கு ரொம்ப அசிங்கமாப் பட்டது!..

"என்னோட கல்யாணத்திற்கு அப்புறம் கூட என்னோட சம்பளத்லே பாதிப் பணத்தை ஒவ்வொரு மாசமும் தர்றதா அம்மா கிட்டே சொன்னேன்.. அந்த சமயத்லே நா மாசாமாசம் சம்பளம் கட்டிப் படிக்க வைச்ச என்னோட தம்பி வேறே காலேஜ் முடிச்சிட்டு ஜி.டி.லே ஒரு பெயிண்ட் கடைலே அக்கவுண்ட்ஸ் பாத்துக்கிட்டிருந்தான். அவன் கொடுக்கறதும் குடும்பச் செலவுகளுக்கு கொஞ்சம் உதவியா இருந்தது; இருந்தும் என்னைப் பெத்தவங்க, பூட்டியிருந்த சங்கிலியைக் கழட்டி விட்டு குடும்ப பாரச் சுமைதூக்கலிருந்து என்னை விடுவிக்கத் தயாரில்லே.. காலதிகாலத்துக்கும் என்னோட சம்பாத்தியத்திலேயே அவங்க பொங்கிச் சாப்பிட்டுண்டு இருக்கணுமாம்.. எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வந்தது.  பேசாம, மிஸ்டர் மோகனசுந்தரத்தைக் கூட்டிண்டு ஆடம்பரமில்லாம திருநீர்மலைலே என்னோட திருமணத்தை முடிச்சிண்டேன்.  கல்யாணத்திற்குப் பிறந்த வீட்லேந்து யாருமே வரலே.. ஆனா, இன்னும் அவங்களுக்கு மாசாமாசம் ஒரு தொகையைக் கொடுத்திண்டு தான் இருக்கேன்.  ஏன்னு கேட்டீங்கன்னா எனக்குப் பதில் சொல்லத் தெரியாது.  கொடுக்கணும்ன்னு மனசு சொல்றது; அந்த ஆணைக்குக் கட்டுப்பட்டு நடந்திண்டிருக்கேன்.  அதுவே வேணாம்ன்னு என்னிக்கானும் சொன்னா அப்போ பாத்துக்கலாம்.  அப்போ குடுக்கறதை நிறுத்திண்டாப் போச்சு.  என்னோட தம்பிகளில் மூத்தவனுக்குக் கல்யாணம் ஆகி இன்னிக்கு அவனோட பெண்டாட்டி இவங்க எல்லோரையும் வேலை வாங்கிண்டு இருக்க, என்னோட அப்பாவும் இப்போ ஏதோ ஒரு வட்டிக் கடைலே ஒரு சேட்கிட்டே கணக்கு எழுதிண்டிருக்கறதா கேள்வி" என்று சொல்லி விட்டு நீண்ட ஒரு பெருமூச்சு விடுகிறாள் கமலி.

இவளது அந்தரங்கமான வாழ்க்கையில் எந்த அளவுக்குத் தான் பங்கு பெறுவது என்பது புரியாததாலும் இவளது உணர்வு கொட்டும் பேச்சில் எப்படிக் குறுக்கிடுவது என்பதை அறியாமலும் மெளனமாக இருக்கிறான் சாரங்கன்.

மலியைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது சாரங்கனுக்கு.  கண்கள் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், மனம் இவளுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று எண்ணுவதிலேயே குறியாக இருக்கிறது. தன்னை விட இரண்டு வயது குறைவு என்று சொன்னாள்.  அப்போ இருப்பத்தாறு.  இருப்பத்து நான்கில் கல்யாணம்.  அதுவும் காதலித்தவனையே கைப்பிடித்த பேறு. இரண்டே வருஷத்தில் இப்படியான நிலை இவளுக்கு வந்திருக்கக் கூடாது. அப்படி வந்தது சோகம்.  என்ன நேர்ந்தது இவளுக்கு என்று அவன் மனம் சிலந்தி வலை பின்னுகிறது.

கமலியின் மனசில் ஆரம்பத்தில் இருந்த சாரங்கன் இப்பொழுது இல்லை. கொஞ்ச நேரத்திற்கு முன்னால் இதே ஸ்பென்ஸர்ஸின் கீழ் நடைபாதையில் அன்னிய ஆடவனாய் முதல் முதலாக அவனைப் பார்த்த போது இருந்த மூன்றாம் மனிதர் உணர்வு இப்பொழுது முற்றிலும் மாறிப் போயிருக்கிறது.  நெருக்கமான தன் தாய்வழிச் சொந்தக்காரனிடம் பேசிக்கொண்டிருக்கும் உணர்வில் கமலி நெகிழ்ந்து போயிருக்கிறாள். பத்திரிகையில் அவன் கொடுத்திருந்த விளம்பரம் பார்த்து வந்த எண்ணமே மறந்து போய் பாதிக்கப்பட்ட ஒருத்திக்கு நேர்ந்த சோகத்தை அனுதாபத்துடன் கேட்கும் ஓர் உத்தம இளைஞனிடம் தன் பரிதாபத்தைச் சொல்லும் உணர்வு அவள் நெஞ்சில் மேலோங்கியிருக்கிறது.

அவளாகச் சொல்லட்டும் என்று காத்திருக்கிறான் சாரங்கன்.  அடிபட்டிருக்கும் அவள் நெஞ்சை இன்னும் கீறிப் பார்க்கக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வில் அவன் இருந்தாலும் முதலில் இவளை சகஜ நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்கிற எண்ணத்தில் அதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறான்.
நீண்ட மெளனத்திற்குப் பிறகு தலையைக் கவிழ்த்தபடி, "விவரமா சொல்றத்துக்கு எனக்கு சக்தி இருக்குமான்னு தெரிலே; எல்லாத்தையும் சொல்றதுக்கும் யோசனையா இருக்கு" என்கிறாள் கமலி.

"என்ன யோசனை?" என்று கேட்கையில் சாரங்கனின் புருவங்கள் உயர்ந்தது அவன் முக அழகிற்கு அழகு சேர்க்கிறது.

"ஜெண்டர்.  நீங்கள் ஆண்.  நான் பெண்."

"அதனாலென்ன?.."

"ஒரு ஆண், பெண் பட்டத் துயரைப் புரிஞ்சிக்க முடியுமான்னு."

"இன்னொருத்தர் பட்ட கஷ்டத்தைப் புரிஞ்சிக்கறதிலே இந்த ஆண்-பெண் எங்கே வந்தது? துயரம் பொது இல்லையா?.."

எல்லாவற்றையும் பகுத்துப் பகுத்து பொதுவில் வைத்துப் பேசும் அவன் குண விசேஷம் அவளுக்குப் புதுசாக இருக்கிறது.  எவ்வளவு அழகாகச் சொல்கிறான்?..  'துயரம் பொது இல்லையா?'-- ஆமாம், துயரம் பொது தான். ஆண்-பெண் பேதமில்லை அதற்கு. ஆண் துயரம்- பெண் துயரம் என்று பேதப்படுத்திப் பார்ப்பதற்கு எதுவுமில்லை.  எல்லாவற்றையும் இப்படி ஆண்-பெண் என்று பேதப்படுத்திக் குடுவைக்குள் அடைப்பது தான் அத்தனை அனர்த்தங்களுக்கும் தோற்றுவாயோ என்று அவளுக்குத் தோன்றுகிறது. இந்த சிந்தனை மனசில் உறைத்ததும், ஆயிரம் வாசற்கதவுகள் விரியத் திறந்து வெளிச்சம் பளீரிட்ட உணர்வு ஏற்படுகிறது.

லேசாக ஒரு புன்முறுவல் அவள் இதழ்க்கடையில் பூத்து மறைகிறது.  அவனுடன் வெறுமனே பேசிக் கொண்டிருந்தால் போதும் என்று தோன்றுகிறது. இந்த பேச்சே மனசுக்கு மருந்திட்டு தன் குழப்பங்களுக்கு பதில் சொல்லும் போலிருக்கிறது.   அந்த மருந்து இந்த நேரத்தில் அவசியமாகத் தெரிகிறது. இதுவரை தனக்குள்ளேயே போட்டு எல்லாவற்றையும் உழப்பி தானும் அந்த சகதியில் உழன்று கொண்டிருப்பதாக அவளுக்குப் படுகிறது.  புது ரத்தம் பாய்ச்சின மாதிரி புது சிந்தனைகள் மனசில் பூத்துக் குலுங்கி மணம் பரப்பினால் எவ்வளவோ தேவலை.  அதற்கு இவன் பேச்சு வழிகோலும் எங்கிற நம்பிக்கை நெஞ்சில் விதை ஊன்றுகிறது.

 "துயரம் பொதுவாயிருந்தாலும்.." சாரங்கன் வெளிப்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் கமலியின் மனசில் இப்போது ஸ்பஷ்டமாகப் பதிகிறது. " அது போகட்டும். இப்படிப் பாருங்கள்.  உங்களுக்கு ஏற்பட்ட துயரம் ஆணினால் என்கிறீர்கள். அப்படிப்பாத்தாக்கூட இன்னொரு ஆணுக்கு அதைப் புரிஞ்சிக்கறது ஈஸி இல்லையா?"

பிரச்னையைப் பிரச்னையாய்ப் பார்த்து அவன் பேசுகிற விதம் அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.  இப்படி ஒரு ஆத்மாவைத் தானே இத்தனை நாளும் அவள் தேடிக் கொண்டிருந்தாள்?..;

"ஆணினால் மட்டுமில்லை. பெண்ணுக்குத் துயரம் பெண்ணாலேயும் இருக்கு.  அது தனி." என்கிறாள் அவள்.

"எஸ். ஐ அக்ரி.  பெண்ணால் ஆணுக்கு ஏற்படும் துயரம் என்று ஒரு தனி கேட்டகெரி வேறே.  ஆக, துயரம் பொது.  அந்தப் பொதுவான துயரத்தை ஆணும் பெண்ணும் எடுத்து ஒருத்தர் மேல் ஒருத்தர் பிரயோகிச்சிக்கறாங் கன்னு எடுத்துக்கலாமா?..  இல்லை, ஆணும் பெண்ணும் கலந்த உறவில் துயரம் என்பது யாருக்கு ஏற்பட்டாலும் சரி, அது இரண்டு பேரையுமே பாதிக்கிறது என்கிற யதார்த்த உண்மையை உணராமல் இருக்கிறோமா?.. இதோ பாருங்க, கமலி!  ஒண்ணு சொல்லட்டுமா?.. பிராக்டிகலாப் பார்த்தா யார் வலியையும் யாரும் தாங்கறதில்லே.. துயரம் மட்டும் மனசிலே தேங்கிப் போயிடக்கூடாது.  தேங்கினா உடல் ஆரோக்கியத்துக்கு கேடு. அது வெளியேற ஒரு வடிகால் வேணும். யாருக்கிட்டையாவது பகிர்ந்துக்கறது தான் அதுக்கான வடிகால். அப்படிப் பகிர்ந்து கொள்ள அதை அனுதாபத்தோடக் கேக்கக் கூடிய மனுஷ மனம் தேவையாயிருக்கு. அது கிடைச்சா பாரத்தை இறக்கி வைச்ச மாதிரி ஒரு ரிலீஃப் கிடைக்கும்.  அந்த ரிலீஃபே மருந்து தான். கூடவே ஒரு வழிகாட்டலும் கிடைச்சா பரம சந்தோஷமாய் போய் விடும்."

"அப்படீங்கறீங்க..  ஐ மீன் அப்படி சந்தோஷம் கிடைக்கும்ங்கறீங்க?.." என்று அவள் விழி விரித்து கேட்ட பொழுது, தான் சொல்வது அட்சரம் பிசகாமல் இவள் உணர்வில் படிகிறது என்கிற நிம்மதி சாரங்கனுக்குக் கிடைக்கிறது.

"அது ஆளாளைப் பொருத்த விஷயம்..   சந்தோஷத்தை உணரக் கூட ஒரு பக்குவம் தேவை.  இருந்தாலும் சில விஷயங்கள் முடியும், முடியாதுன்னு இல்லே;  முடியணும்.  முடியறதுக்காக முயற்சி செய்யணும். அவ்வளவு தான்."

இப்படியான அனுதாபம் இல்லாத ஒருத்தனைச் சந்திக்கப்போய் போனதடவை பொறியில் சிக்கிய நினைவு படச்சுருளாய் அவள் நினைவில் ஓடுகிறது.   விபத்துக்கள் சொல்லிக் கொண்டு வருவதில்லை. நேரப்போகிறது என்று எல்லா வினாடியும் எதிர்பார்த்துக் கொண்டே இருந்து அப்படி எதிர்பார்க்கிற மாதிரியே நேர்ந்தால் அது விபத்தும் இல்லை.   அவள் அப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அப்படி நடந்தும் இப்பொழுது இன்னொரு ஆடவனை சந்திக்க வந்திருக்கும் துணிவைக் கொடுத்தது அந்த விளம்பர வாசகங்கள்.  அந்த விளம்பர வாசகங்களுக்குச் சொந்தக்காரனான இந்த ஆண்மகனிடம் அந்த விபத்தைப் பற்றியும் சொல்ல வேண்டுமென்று அவள் மனம் துடிக்கிறது.

"கிஷோர்ன்னு ஒருத்தன், சாரங்கன்.. அவனிடம் வசமாக நான் மாட்டிக் கொண்டு தெய்வாதீனமாக தப்பி மீண்ட கதையை உங்களுக்குச் சொல்ல வேண்டுமே.." என்று ஆரம்பித்த பொழுதே அவள் குழந்தைமை அவனில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. "நீங்க எதுவுமே சொல்ல வேண்டாம்.  சொல்லாமலே என்ன நடந்திருக்கும் என்று எல்லாமே புரிகிறது" என்கிறான் சாரங்கன்.

"அது எப்படி?.. சொன்னாத்தானே தெரியும். சொல்லாமலே புரியறதுங்கறீங்க?"

"தெய்வாதீனமாகத் தப்பினேன்னு சொன்னீங்களே! அந்த ஒரு வரிலேயே அத்தனையும் அடங்கிப் போச்சு. தனியாச் சொல்லணும்ன்னு இல்லே."

"பெண்ங்கற ஜீவனே தன் உபயோகத்துக்கான ஒரு பொருள் மாதிரி பல ஆண்களுக்கு மாறிப் போனது எப்படி நேர்ந்ததுன்னு தெரிலே, சாரங்கன்..   ஆனா, ஒண்ணு நிச்சயம்.  திடீர்ன்னு நிகழ்ந்த புரட்டிப் போட்ட மாற்றம் இல்லை, இது! கொஞ்சம் கொஞ்சமாக 'பெண்ங்கறவ இதுக்குத் தான்'ங்கற மாதிரி ஆயிடுச்சு.  தன்னைப் போலவே அன்பு, ஆசை, கோபம், பொறாமை, பொறுமை அத்தனையும் கொண்ட ஒரு உயிர்ன்னு ஏன் இவங்களுக்குத் தெரியாமப் போச்சுன்னு அடிக்கடி நினைச்சிப்பேன்".

"நீங்க சொல்றது புரியறது.." என்கிறான் சாரங்கன்.

"ஒரு துணையில்லாம பெண்ணாலே வாழவே முடியாதுங்கற நிலைமை இருக்கறது ரொம்ப கொடூரம்.  ஒரு வயசுக்கு வந்த பெண் அப்பனோ, ஆத்தாளோ, கணவனோ இல்லாமல் தனியாக வாழ்ந்தாளானால் அவளை சுத்தி எத்தனை கதைகள்?..  தாய் மட்டும் கூட இருந்தால் சரி. மத்தபடி ஆணைச் சார்ந்தே அவள் இருக்க வேண்டும் என்பது நியதியாப் போய், அப்படி இல்லாது போனால் எல்லாவித இழிவுகளுக்கும் அவள் இரையாகிப் போவாள் என்பதே நடைமுறைத் தந்திரமாக மாறிப் போயிருக்கு. இல்லையா, சாரங்கன்?"

"பெண்ணின் பாதுகாப்பு குறித்து இந்த சமூகம் கொண்டிருந்த அதீத அக்கறை கூட அப்படி உருமாறிப் போயிருக்கலாமில்லையா?.." என்று சாரங்கன் சொன்ன போது நிமிர்ந்து அவனை நேருக்கு நேர் சுட்டு விடுவது போலப் பார்க்கிறாள் கமலி.  அடுத்த வினாடியே தலை தாழ்த்தி "நீங்கள் அப்படியா நினைக்கிறீர்கள், சாரங்கன்?" முணுமுணுப்பாய்க் கேட்கிறாள்.


(தொடரும்)
                                                     

28 comments:

வே.நடனசபாபதி said...

இந்த கதையில் குறிப்பாக இந்த பதிவில் உள்ள முக்கியமான சில வரிகளை என்னால் குறிப்பிடாமல் இருக்கமுடியவில்லை.

//லைஃப்லே கல்யாணம்ங்கறது ஒரு பெரிய கேம்பிள்.. என்ன தான் விசாரிச்சு, குலம் கோத்திரம் எல்லாம் பாத்து செஞ்சிகிட்டாக் கூட பிற்காலத்லே சந்தோஷமா இருப்பாங்கங்கறதை நிச்சயமா சொல்ல முடியறதில்லே//

கமலியின் வாயிலாக நீங்கள் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை

//காதல் ஒரு பூச்சரம்ன்னு கவிதை எழுதறாங்க; அதைக் காதலி தலைலே சூட்டி விட்டா அழகு; தரைலே தூக்கி எறிஞ்சு பூட்ஸ் கால்லே நசுக்கினா..."//

அருமையான சொல்லாடல்.

// உனக்குக் கல்யாணம் முடிஞ்சிட்டா, நாங்கள்லாம் எப்படிடீ உயிர் வாழறது? நீ சம்பாதிக்கற பணம் உன்னோட குடும்பத்துக்குத் தான் அப்புறம் சரியாயிருக்கும்ன்னாங்க//

இந்த கதையிலே வரும் கதை மாந்தர்கள் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை வெகு இயல்பாக கமலி மூலம் சொல்லியிருக்கிறீர்கள். இன்றைக்கு அநேக பெற்றோர்கள் தங்கள் மக்களுக்கு திருமணம் ஆகிவிட்டால் வருமானம் வருவது நின்றுவிடுமே என்பதால் சம்பாதிக்கும் மகள்களின் திருமணம் பற்றி யோசிப்பதே இல்லை அல்லது வரும் வரன்களை ஏதேனும் சாக்குப்போக்கு சொல்லி தட்டிக்கழித்துவிடுவது.


// இன்னொருத்தர் பட்ட கஷ்டத்தைப் புரிஞ்சிக்கறதிலே இந்த ஆண்-பெண் எங்கே வந்தது? துயரம் பொது இல்லையா?.."//
துயரம் பொதுவானதுதான். நாம் அதை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது.

// துயரம் மட்டும் மனசிலே தேங்கிப் போயிடக்கூடாது. தேங்கினா உடல் ஆரோக்கியத்துக்கு கேடு. அது வெளியேற ஒரு வடிகால் வேணும். யாருக்கிட்டையாவது பகிர்ந்துக்கறது தான் அதுக்கான வடிகால். //

இந்த வரிகள் அனைவருக்கும் பொருந்தும் .

கமலியின் பேரில் தொடரின் முதலில் ஏற்பட்ட கருத்து தற்போது மாறிவருகிறது. துயரங்களை அடக்கிக்கொண்டு தைரியாமாக உலா வரும் பெண்ணாக எனக்கு அவள் தெரிகிறாள்.

மேற்கொண்டு கமலி என்ன சொல்லப்போகிறாள். அதற்கு சாரங்கனின் மறுமொழி என்னவாக இருக்கும் என அறிய காத்திருக்கிறேன்

Geetha Sambasivam said...

படிச்சுட்டேன், பின்னர் வருகிறேன். ஆனாலும் கமலை செய்து கொண்ட கல்யாணம் என்ன ஆயிற்று என்று புரியலை!

Geetha Sambasivam said...

ஆனால் இன்று தான் நானும் காதல் குறித்தும் பெற்றோர் சம்மதம் இல்லாமல் செய்து கொள்ளும் திருமணம் குறித்துமே ஒரு பதிவு எழுதினேன். வெளியிட யோசனை! ஆகையால் ட்ராஃப்ட் மோடிலேயே இருக்கு!

G.M Balasubramaniam said...

ஒரு ஆணிடம் திருமணத்துக்கு முன் ஒரு பெண்மனம்திறந்தால் அதனால் பல இழப்புகளை பிற்காலத்தில் சந்திக்க நேரலாம் உன்னைப் பற்றி எல்லாம் எனக்குத் தெட்ரியும் என்று ஆண் நினைக்கத் தொடங்குவான் அது சரியாக இருக்காது என்று தோன்றுகிறது

Durai A said...

துயரம் பொதுவா? பாலுக்குட்பட்டது என்று நினைக்கிறேன்.

கோமதி அரசு said...

//சோகத்தை அனுதாபத்துடன் கேட்கும் ஓர் உத்தம இளைஞனிடம் தன் பரிதாபத்தைச் சொல்லும் உணர்வு அவள் நெஞ்சில் மேலோங்கியிருக்கிறது.//

கமலி நினைப்பது போல் சாரங்கன் உத்தம இளைஞனாக இருக்க வேண்டும் என்று மனது ஆசைபடுகிறது.

கமலி போன்ற பாதிக்கபட்ட பெண்கள் சொல்லும் கதைகளை தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொள்ளும் ஆண்களும் சமூகத்தில் இருக்கிறார்கள் தானே!
அதையும் கமலி கிஷோர என்பவரிடம் தப்பியதை சொல்லி விட்டீர்கள்.

பெற்றோர்கள் பெண்ணின் வருமானம் போய்விடும் என்று திருமணத்தை தவிர்ப்பது கொடுமை. அப்படி பட்ட ஒரு அம்மா எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்தார்கள்.

புரிந்து கொள்ளும் உறவுகள் கிடைப்பதும் வரம்.

நெல்லைத் தமிழன் said...

இந்தத் தடவை நிறைய விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது. சுயநலப் பெற்றோர், (இதைப்பற்றி நிறைய எழுதலாம். காலம் மோசமாவதற்கு சுயநலம் பெற்றோரின் பங்கு மிக மிக அதிகம்) அது கமலியின் திருமண வாழ்க்கையை எப்படி பாதித்தது? ஏன் முன் பின் தெரியாத ஆணிடம் முழுமையாக தன் வாழ்க்கையைத் திறந்து காண்பிக்கவேண்டும்? ஏன் தன் கணவன் மிக அழகானவன் என்று சொல்லவேண்டும்? உள்ளத்தில் அழகு இல்லை என்று விளக்கவா? காதல் ஒரு பூச்சரம்தான், ஆயுள் கம்மியாக, நல்லா இருக்கும்போது தலையிலும், காலாவதியாகிட்டா காலிலும் இருப்பதாலோ?கொஞ்சம் முடிந்தபோது விவரமாக எழுதறேன்.

ஜீவி said...

@ GMB

//அது சரியாக இருக்காது என்று தோன்றுகிறது..//

பொது புத்தியில் சரியாக இருக்காது என்று தோன்றுகின்றவற்றை சரிப்படுத்த தானே இப்படிப்பட்ட கதைகளே உருவாகிறது?..

ஜீவி said...

@ Durai. A.

தாங்கள் அப்படி நினைப்பதற்கான ஓரிரு காரணங்களைச் சொல்லுங்களேன். அலசிப் பார்க்கலாம்.

ஜீவி said...

@ கோமதி அரசு

உங்கள் பின்னூட்டத்தில் வெளிப்படுத்தியிருக்கும் புரிதலுக்கு நன்றி.

தங்கள் புரிதலுக்கு எந்த பங்கமும் இல்லாமல் கதையும் நீளும்.

ஆழமாக வாசித்து வருவதற்கு நன்றி, கோமதிம்மா.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்.

நன்றி. உங்கள் வழக்கப்படி முதல் அத்தியாயத்திலிருந்து இந்த அத்தியாயம் வரை சேர்த்துப் படித்தாலே பல கேள்விகளுக்கு பதில் கிடைத்து விடும்.

விவரமாக தாங்கள் எழுதுவதற்கும் காத்திருக்கிறேன்.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி.

Durai A said...

அப்பா(துரை)டி! ஒரு கமென்ட் ஒழுங்கா பதிவாயிடுச்சே!

Durai A said...

துயரம் பாலுக்குட்பது என்று அடிக்கடி நினைப்பதுண்டு. ஆண்பால் துன்பத்தைப் பெண்பால் முற்றும் அறிவதில்லை. பெண்பால் துன்பத்தை ஆண் அறிவதுமில்லை. புரிந்து கொள்ள முயல்கிறோம். அத்தோடு சரி. என் துன்பங்கள் பலவற்றை என் ஆண் நண்பர்கள் புரிந்து கொண்டது போல் பெண் உறவோ, மனைவியோ, நட்போ புரிந்து கொண்டதில்லை. ஒரு அளவுக்குப் பிறகு மேம்போக்காகி விடுவதாய் உணர்ந்திருக்கிறேன். தலைவலியும் ஜலதோஷமும் தனக்கு வந்தால் தெரியும் என்பது போல் சில துன்பங்கள் தனிமையிலே நம்முடனேயே இருக்கவும் செய்கின்றன - அவை ஆண்/பெண் பாலுக்கு அப்பாற்பட்ட தனிப்பால் (?).

நெல்லைத் தமிழன் said...

முழுவதும் படிக்கிறேன். தொடருங்கள்.

கதைத் தலைப்பே முடிவைச் சொல்லிவிட்டது. சாரங்கன் பதிலுக்காக கமலி காத்திருப்பாளோ?

அப்பாதுரை சார் சொல்லியிருப்பதுபோல் உணர்வுகளை சரியாக அந்த அந்த 'பால்'தான் புரிந்துகொள்ள இயலும். பெரும்பாலும், ஆண்களுக்கு நண்பர்கள் அந்தத் தோழமை உணர்வைத் தருவர். சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

ஜீவி said...

@ Durai.A.

//ஆண்பால் துன்பத்தைப் பெண்பால் முற்றும் அறிவதில்லை. பெண்பால் துன்பத்தை ஆண் அறிவதுமில்லை. புரிந்து கொள்ள முயல்கிறோம். அத்தோடு சரி. //

நான் சொல்ல வந்ததே வேறு அப்பாஜி! துயரம் பொது. அதைக் கூட ஆண் பெண் என்று பிரிக்க வேண்டாமே என்பது தான் ஆதங்கம்.

ஒரே துயரத்தை பெண்--ஆண் என்று பிரிக்கக் கூடாது என்பதற்காகச் சொன்னேன்.

நான் சொல்ல வந்தது ஆண் பெண் சார்ந்த சமூகம் சார்ந்த பொதுத் துயரங்கள்.

மனைவியையோ கணவனையோ இழப்பது ஒரு துயரம். இது ஒரு இழப்பு என்கிற மட்டில் ஆணுக்கும் பெண்ணுக்குமான பொதுவான துன்பம்.

ஆண் என்றால் மறுமணம் செய்து கொள்ளலாம்; பெண் என்றால் கைம்பெண்ணாய்த் தான் சொச்ச வாழ்க்கையைக் கழிக்க வேண்டும் என்பது ஒரே வகைப்பட்டத் துன்பத்தை ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனிச் சட்டமாகப் பிரிப்பது. பெண்ணின் இந்தத் துயரம் குறித்து ஆணுக்கு சரியான புரிதல் இருந்தால் அவன் அவளின் அந்தத் துயரத்தைப் புரிந்து கொள்ளலாம். போக்கலாம்.

இதே மாதிரி ஆண் சம்பந்தப்பட்டத் துயருக்கும் ஒரு புரிதலின் அடிப்படையில் பெண்ணால் தீர்வு காண முடியும்.

'கற்பு நிலையென்று சொல்ல வந்தீர்; இரு கட்சிக்கும் அஃதைப் பொதுவில் வைப்போம்'
என்று பாரதி சொன்னதும், இதைத் தான்.

கற்பு என்பதே ஏதோ பெண் சம்பந்தப்பட்டதாக நினைப்பது. கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணிற்கும் பொது அல்லவோ?..

துயரம் மட்டும் இல்லை, சந்தோஷம் கூடத் தான். ஆண் சந்தோஷம், பெண் சந்தோஷம் என்றோ, ஆண் சந்தோஷத்தை பெண்ணாலோ, பெண் சந்தோஷத்தை ஆணாலோ புரிந்து பகிர்ந்து கொள்ள முடியாது என்று எதுவும் இல்லை.

'என்னைக்குப் பெண்ணாப் பிறந்தேனோ, அன்னிக்கே இதெல்லாம் பட்டாகணும்ன்னு தலைலே எழுதியாச்சு'-- என்று வழக்கு மொழியாய் சொல்வதுண்டு.

சரியான புரிதல் இருந்தால் ஆணும் பெண்ணும் அவரவருக்கானது என்று எண்ணிக் கொண்டிருக்கும் துயர்களுக்குத் தீர்வு காணலாம், இல்லையா?..

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

கதை எழுதுகிறவனும் கதைத் தலைப்பில் ஆரம்பித்து கதை முடியும் வரை வாசகர் இப்படித்தான் நினைக்க வேண்டும் என்பதற்காக பெரும் முயற்சிகள் செய்து ஏமாற்றுவதும் உண்டு. காலாதிகாலமாகத் தொடரும் இந்த 'திறமை'யில் எந்த எழுத்தாளனும் இதுவரை சோடை போனதில்லை.

//அப்பாதுரை சார் சொல்லியிருப்பதுபோல் உணர்வுகளை சரியாக அந்த அந்த 'பால்'தான் புரிந்துகொள்ள இயலும். பெரும்பாலும், ஆண்களுக்கு நண்பர்கள் அந்தத் தோழமை உணர்வைத் தருவர். சில விதிவிலக்குகள் இருக்கலாம்.//

துரை சாரை 'சமாளித்திருக்கிறேனே'! வாசித்து விடுங்கள். சரி தானே?.. இல்லை என்றால் சொல்லுங்கள்.

Durai A said...

துயரத்துக்கு பதில் துன்பம் என்று தவறி எழுதிவிட்டேன்.

புரிதல் என்ற பார்வையில் நீங்கள் சொல்வது சரியே. பொதுவில் வைத்த்துப் புரிந்து கொள்ளும் (ஆதரவு தேடும்/தரும் நிலைப்பாட்டில்) மனங்கள் உண்டு.. பெண் என்ற பாலுக்கப்பாற்பட்ட இந்த நேயம் அபூர்வம். பொதுவில் வைக்கபட்ட துயரத்தை தன்னிலைப்படுத்திப் பார்த்து சமாதானமோ தீர்வோ சொல்லும் மனங்களே அதிகம். (உ : "என் காதலி என்னை ஏமாற்றிவிட்டு இன்னொருவனைத் திருமணம் செய்துகொள்கிறாள்" - "என் காதலியும் இப்படித்தான் செய்தாள்" அல்லது "இவளை விட்டா இன்னொருத்தித் விடு" அல்லது "இதுக்குத் தான் நான் காதல் கீதல் எல்லாம் நம்பறதில்லே").

துயரம் என்பது பாலுக்குட்பட்டது என்றே நினைக்கிறேன். ஆணின் துயரத்தை ஆணும் பெண்ணின் துயரத்தை பெண்ணும் அதிகம் உணர்கிறார்கள். பாலுக்கப்பாற்பட்டு துயரமுணர்ந்து நடக்கும் மனங்கள் அபூர்வம். அப்படி துயரமுணர்ந்து செயல்படும் மனங்கள் தீர்வில் அக்கறை காட்டாது என்று நினைக்கிறேன்.

துயரத்தைப் பகிரும் மனமும் தீர்வை எதிர்பார்ப்பது இல்லை. சரியா?

Durai A said...

எல்லாத் துன்பங்களும் துயரங்கள் ஆவதில்லை. அந்த வகையில் துன்பத்தைப் துயரமாக்கிப் பார்ப்பது பாலுக்குப் பால் மாறுபடுகிறதோ என்னவோ?!

Durai A said...

//சரியான புரிதல் இருந்தால் ஆணும் பெண்ணும் அவரவருக்கானது என்று எண்ணிக் கொண்டிருக்கும் துயர்களுக்குத் தீர்வு காணலாம், இல்லையா?.

தீர்வு காண/சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பல நேரம் துயரத்தைப் பகிர்ந்து கொள்ளத் தயங்க வைக்கிறது என்று நினைக்கிறேன். தீர்வு சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் துயர பகிர்தலை தட்டிக் கழிக்கவும் வைக்கிறது.

தீர்வோ அனுமானமோ பேதமோ இல்லாது துயரத்தை பகிர்ந்து கொண்டவரின் துயரமாக மட்டுமே பார்க்கையில் பகிர்ந்து கொண்டவரின் மனச்சுமையை சற்றேனும் குறைக்க முடியும் என்று நினைக்கிறேன்.

ஜீவி said...

@ அப்பாதுரை

//ஆதரவு தேடும்/தரும் நிலைபாட்டில்//

நிலைப்பாடாவது, ஒண்ணாவது?.. 'தேடும்/தரும்' என்ற பாகுபாடுகளையெல்லாம் மறந்த சங்கமம் அது!..

//பெண் என்ற பாலுக்கப்பாற்பட்ட இந்த நேயம் அபூர்வம்.//

இப்படியான நேயம் கொண்ட அபூர்வமானவர்களின் அறிமுகங்கள் கிடைத்தவர்களும் அவர்களுடன் பழகிப் பழகித் தங்களில் புதைந்திருக்கும் அபூர்வங்களை அறியாதாராய் மற்றவர்களுக்கு அபூர்வமாகத் தெரிகிறார்கள் என்பதும் இன்னொரு விசேஷம்.

க.கா. கதையின் சாரங்கனும் அப்படியான அபூர்வங்களில் ஒருவன் தான்.

//அப்படி துயரமுணர்ந்து செயல்படும் மனங்கள் தீர்வில் அக்கறை காட்டாது என்று நினைக்கிறேன்.

துயரத்தைப் பகிரும் மனமும் தீர்வை எதிர்பார்ப்பது இல்லை. சரியா?//

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் என்பார்களே, அது இது தான்.

'துயரம் உணர்ந்தவர்கள் மனம் தீர்வில் அக்கறை காட்டாது'

'துயரத்தைப் பகிரும் மனமும் தீர்வை எதிர்பார்ப்பது இல்லை..

-- இதை இப்படி சமன்படுத்திப் பாருங்கள்.

தீர்வில் அக்கறை காட்டுபவர்கள் துயரம் உணராதவராய் இருக்கிறார்கள்.

தீர்வை எதிர்பார்க்காதவர்கள் தான் துயரத்தையும் பகிர்கிறார்கள்..

எப்படிப் பார்த்தாலும் இடிக்கிறது. அல்லது இடிக்கிற மாதிரி நினைப்பு ஓடுகிறது.

அனுபவங்களே இப்படியான நிலைபாட்டுக்குத் தள்ளுகிறது என்றால் சொல்வதற்கு நிறைய இருக்கிறது.

ஜீவி said...

@ அப்பாதுரை

//துன்பத்தைப் துயரமாக்கிப் பார்ப்பது பாலுக்குப் பால் மாறுபடுகிறதோ என்னவோ?//

துன்பமோ துயரமோ பால் பார்த்து வருவதில்லை ஆதலால் பால் மாறுபாடும் இல்லை.
துன்பமும் துயரமும் அவற்றை நாம் எடுத்துக் கொள்ளும் பாங்கில் (நுகருவதற்கேற்ப) மாறுபாடு கொள்வதற்கு வழியுண்டு.

அப்படிப்பார்த்தால் கூட ஆண்,பெண் என்று மாறுபாட்டிற்கு வழியில்லை. மாறுபாடு அத்தகைய துன்பங்களையோ துயரத்தையோ நுகர்வோர் பொறுத்து மாறுபடுகிறது.

ஆனாலும் பெண்ணின் துயரம் அனுதாபத்தை பிறர் மனத்தில் கூட்டிக் காண்பிக்க எல்லா நேரங்களிலும் முயல்கிறது. இப்படியான அனுதாபங்கள் நாட்டுக்கு நாடு வேறுபாடு கொண்டும் உள்ளது.

இங்கு பெண்கள் படும் துயரங்களுக்கு சரியான தீர்வுகளுக்கு வழியில்லை என்றாலும் பெண் குலத்தின் மேல் நிரம்ப அனுதாபம் உண்டு. பெண்ணுக்கு அனுதாபப்படாதவன் மனித குலத்தில் சேர்த்தியே இல்லை என்ற தடாலடி தீர்ப்புகளும் இங்கு சகஜமானவை.

சில நாடுகளில் இயல்பாகவே ஆண்களுக்கும் பெண்களுக்கும் நிறைய சுதந்திரம் இருக்கலாம். ஆண்--பெண் வித்தியாசங்களும் இல்லாது இருக்கலாம். இருப்பினும் அங்கு மூத்த குடிமகர்க்கு சலுகைகளும் மரியாதைகளும் இருக்கலாம். குழந்தையை (வயிற்றில்) சுமப்போருக்கு, கைக்குழந்தையோடு இருப்போருக்கென்று தனி மரியாதைகளோ சலுகைகளோ இருக்கலாம்.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

//படிச்சுட்டேன், பின்னர் வருகிறேன்..//

வரேன், சரி. ஏன் வரலை?.. அடுத்த பகுதி போட்டு விட்டு அதற்கு முதல் பகுதி பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதென்றால் நடந்த கதையை மீண்டும் திருப்பிச் சொல்கிற மாதிரி இருக்கும். போட்ட பின்னூட்டங்களுக்குத் தேடித் தேடி பதில் சொல்லவில்லை என்றாலும் சரியாக இருக்காது.

//ஆனாலும் கமலை செய்து கொண்ட கல்யாணம் என்ன ஆயிற்று என்று புரியலை! //

கடைசியில் சொல்ல வேண்டியதை இப்பவே சொல்லி விடு என்று அடம் பிடித்தால் எப்படி?..

தவிர கடைசி வரை சொல்லாமல் போனாலும் கதைக்கு உயிர் கொடுத்துத் தூக்கலாகத் தெரியும்!

Geetha Sambasivam said...

மோகனசுந்தரத்தைக் காதல் திருமணம் செய்து கொண்ட கமலி ஏன் கிஷோரைத் தேடிப் போகணும்? மோகனசுந்தரம் இறந்து விட்டாரா? அல்லது விவாகரத்தா? கமலியின் துயரம் என்பது அடுத்தடுத்து மாபெரும் துன்பங்களாக அவரைத் தொடர்ந்து கொண்டு வருகிறது. பெற்றோர் ஆதரவும் இல்லை. இந்நிலையில் சாரங்கனைத் தேடி வந்ததும் முழுசும் பூர்த்தியாகாமல் காத்திருக்கும்படி ஆகி விடும் போலிருக்கே!

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

//மோகனசுந்தரத்தைக் காதல் திருமணம் செய்து கொண்ட கமலி ஏன் கிஷோரைத் தேடிப் போகணும்? மோகனசுந்தரம் இறந்து விட்டாரா? அல்லது விவாகரத்தா?//

உங்களுக்கே தெரியும் அந்தக் காலத்து சினிமா பிட் நோட்டீஸ்கள் பற்றி.

இப்படித் தான் திரைப்படத்தின் பாதிக்கதையைச் சொல்லி விட்டு, நீங்கள் குறிப்பிட்டிருக்கிற கேள்விகள் மாதிரி சில கேள்விகளைக் கேட்டு, மீதத்தை வெள்ளித் திரையில் காணுங்கள் என்பார்கள்.

இப்போதைக்கு சாரங்கனைப் பற்றி ஓரளவு தெரிந்தாயிற்று. இனி கமலியைத் தெரிந்து கொள்வோம். காத்திருப்பது கமலி தான் என்பதினால் அவள் காத்திருக்கும் காலத்தை நீடிக்க கமலியைப் பற்றி முழுதும் தெரிந்து கொள்வது கொஞ்சம் தாமதப்படுகிறது. அவ்வளவு தான். விரைவில் தெரிந்து கொள்ளவும் செய்வீர்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

துளசி: சாரங்கன் கதாபாத்திரம் மிகவும் மெச்சூர்டாக இருப்பது போல் இருக்கிறது. அப்படியே அவன் தொடர்ந்து கமலியை ஏற்க வேண்டும் என்றும் தோன்றுகிறது. கமலியும் பலதும் புரிந்து கொள்ளும் பெண்ணாக சிந்திக்கும் பெண்ணாக இருக்கிறாள். அவளது முதல் கல்யாணம் என்ன ஆயிற்று அறியத் தொடர்கிறோம்...ஸார்

Thulasidharan V Thillaiakathu said...

கீதா: கீதா:
"இன்னொருத்தர் பட்ட கஷ்டத்தைப் புரிஞ்சிக்கறதிலே இந்த ஆண்-பெண் எங்கே வந்தது? துயரம் பொது இல்லையா?.."

எல்லாவற்றையும் பகுத்துப் பகுத்து பொதுவில் வைத்துப் பேசும் அவன் குண விசேஷம் அவளுக்குப் புதுசாக இருக்கிறது. எவ்வளவு அழகாகச் சொல்கிறான்?.. 'துயரம் பொது இல்லையா?'-- ஆமாம், துயரம் பொது தான். ஆண்-பெண் பேதமில்லை அதற்கு. ஆண் துயரம்- பெண் துயரம் என்று பேதப்படுத்திப் பார்ப்பதற்கு எதுவுமில்லை. எல்லாவற்றையும் இப்படி ஆண்-பெண் என்று பேதப்படுத்திக் குடுவைக்குள் அடைப்பது தான் அத்தனை அனர்த்தங்களுக்கும் தோற்றுவாயோ //

இப்படி நானும் என் மகனும் பேசிக் கொண்டதுண்டு ஸார். துயரம் பொதுவோ நாம் தான் அதனைப் பகுத்துப் பெரிது படுத்துகிறோமோ என்று. ஆனால் ஒரு சில தனிப்பட்டவைதான் அதாவது பெண்ணுக்குரியது பெண் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஒரு சில ஆண்களுக்கானவற்றை ஆண்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். எதிர்பாலினருக்குப் புரிந்துகொள்வதில் சிறு தடுமாற்றம் ஏற்படுவதுண்டு இல்லையா ஸார். ஓர் ஆணிற்கு மிகச் சிறியதாகத் தோன்றும் துயரம் பெண்களுக்குச் சற்றுப் பெரிதாகத் தோன்றலாம்...அண்ட் வைஸ்வெர்ஸா...அதே போன்றுதான் தீர்வுகளூம் ...இல்லையா ஸார்.

கதை அருமையாக பல மெச்சூர் உரையாடல்களுடன் நகர்கிறது. இதோ அடுத்த பகுதிக்குச் செல்கிறோம்

ஜீவி said...

@ துளசிதரன்

தொடர்வதற்கு நன்றி, நண்பரே! வரும் அத்தியாயங்களில் சொல்கிறேன்.

ஜீவி said...

@ கீதா

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, சகோதரி!

ஆண், பெண் என்று பாலின ரீதியாகப் பகுத்துப் பார்ப்பதைத் தாண்டி பொதுவாக இரு பாலினரும் மனிதர்கள் என்ற பார்வை வேண்டும். ஆணோ, பெண்ணோ அவரவர் அடைந்த அனுபவங்களின் அடிப்படையில் வாழ்க்கையின் வார்ப்பு பெறுகிறார்கள்.

அம்மா இல்லாத அப்பா இருக்கும் வீடுகளில் அவர்களின் மூத்த பெண் கிட்டத்தட்ட அம்மா மாதிரியும் பொதுவாக இதெல்லாம் ஆண்கள் வேலை என்று ஒதுக்கியிருக்கிறோம் இல்லையா அவற்றையும் சமாளித்து செய்யும் பக்குவத்தில் இருப்பார். பிறந்தது தான் பெண்ணே தவிர கிட்டத்தட்ட அந்த வீட்டின் ஆண் மகனாகவே பொறுப்புகளை ஏற்று செயல்படும் சாமர்த்தியமும் எதிர்கால குடும்ப நலனை கண்ணும் கருத்துமாக பாதுகாப்பவராயும் இருப்பார். இப்படிப்பட்டவர்கள் தனக்கு என்று ஒரு குடும்பம் வாய்க்கும் பொழுது எதிர்கொள்ளும் பிரச்னைகளை ஊதித் தள்ளும் பக்குவம்
அவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது.

சகோதரிகள் என்னும் பெண் கூட்டத்தினரிடையே வளரும் ஒற்றை ஆண் (அக்கா தங்கைகள் நிறைந்திருக்கும் வீட்டு ஆண் மகன்) கிட்டத்தட்ட பெண்களைச் சார்ந்தவர்களாய் மனைவியை நேசிப்பவராய் மனைவி சொல்வதை தட்டாமல் செயல்படுவராய் இருப்பர்.

-- இதெல்லாம் ஜோதிடம் இல்லை. குழந்தையிலிருந்து வளரும் சூழ்நிலைகள் மனிதர்களை பக்குவப்படுத்தி வளர்க்கிறது.

ஆண், பெண் என்று பிரித்துப் பார்ப்பதை விட ஆண்மனம் கொண்டவர் பெண்மனம் கொண்வர் என்று பிரித்துப் பார்க்கலாம் என்றால்--

ஆண்ணா இப்படித் தான் இருப்பர்; பெண்ணென்றால் இப்படித் தான் இருப்பர்-- அல்லது இருக்க வேண்டும் என்ற பத்தாம் பசலிக் கொள்கைகள் மண் மூடிப் போகின்ற காலத்து இந்த மாதிரி ஆண்-பெண் என்று பிரித்துப் பார்ப்பதெல்லாம் இருக்கவே இருக்காத சமூகம் அமைந்திருக்கும்.

ஆண் ஆதிக்கத்திற்கு பெண்ணும் 'இது நியாயம் தானே?' என்று வாழும் வாழ்க்கை (என்ன இருந்தாலும் அவர் ஆண் அல்லவா என்று மனதார ஏற்றுக்கொள்வது) பரம்பரையாக படியும் ஒரு பழக்கமாகவும் ஆகிப்போயிருக்கிறது. அதே மாதிரி பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தன்னைச் சுற்றி ஒரு சட்டம் போட்டுக் கொண்டு வாழும் வாழ்க்கை முறையும் வழிவழி வரும் பழக்கமாக ஆகிப்போயிருக்கிறது.

ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் தாங்கலாக இருந்து ஆண்--பெண் பேதம் குறுக்கிடாமல் வாழும் வாழ்க்கைக் கனவுக்கு ஆண் ஒத்துழைப்பை விட பெண்ணின் அனுசரணையையும் ஒத்துழைப்பும் தேவையாகவும் இருக்கும் காலம் இது.

எதையும் சிறிது, பெரிது என்று எடுத்துக் கொள்வது அவரவர் அனுபவங்களின் அடிப்படையில் தான் ஏற்படுவது.

75 வயது பெரியவர் ஒருவர் பாரம் ஏற்றிய கைவண்டியை இழுத்துப் போவதைப் பார்க்கிறோம். தள்ளாத வயதில் கண் பார்வையும் தடுமாறும் நிலையில் பூ கட்டி விற்று ஜீவனம் நடத்தும் தாய்மார்களை கோயில் வாசல்களில் கடைத்தெருக்களில் பார்க்கிறோம்.
இவர்களிடம் சிறிது--பெரிது துயரங்களைப் பற்றி பேட்டி கண்டால் என்ன சொல்வார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.

'பூ கட்டி விற்பதில் இருக்கும் லாபம் வேறு எதிலும் இல்லையாக்கும்!' என்று இவரைக் கடந்து போகும் பொழுது மத்திய வர்க்கத்து பெண்களின் விமர்சனமும் தனியே இருக்கத்தான் செய்கிறது.

பூ கட்டக்கூடத் தெரியாது, கோலம் போடத்தெரியாது, துவரம் பருப்புக்கும் கடலைப் பருப்புக்கும் வித்தியாசம் தெரியாது வீட்டு குழந்தைகள் பெண்களாய் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். பூ கட்டும், சமையலறையில் திறமை காட்டி ஜகஜ்ஜாலங்கள் செய்வது எல்லாம் ஆண்கள் கைப்பற்றி வெகுகாலம் ஆகி விட்டது.

வேலைகளைப் பொதுவில் வைக்கும், வைத்திருக்கும் காலமும் இது தான்!

Related Posts with Thumbnails