Friday, September 1, 2017

கமலி காத்திருக்கிறாள்

சாப்பாட்டு நேரம்.

ஆபிஸே காலியாக வெறிச்சோடிக் கிடக்கிறது.  டிபன் பாக்ஸில் கொண்டு வந்திருந்த சாப்பாட்டைக் கமலி சாப்பிட்டு விட்டாள்.  நேற்று கூட இந்த நேரத்தில் தான் கமலி ஆபிஸ் டெலிபோனில் சாரங்கனுடன் பேசினாள்.  போன ஞாயிறு வழக்கமாக அவள் பார்க்கும் அந்த ஆங்கில செய்தித் தாளில் தான் 'மணமகள் தேவை' தலைப்பில் அந்த விளம்பரத்தைப் பார்த்தாள்.  அந்த விளம்பரத்தோடு தன் தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தான் சாரங்கன்.  முந்தாநாள், நேற்று என்று இரண்டு தடவைகள் அவனோடு பேசியாயிற்று.  அவனது விளம்பர வாசகங்களும், தொலைபேசி உரையாடல் களில் அவன் தன்னைத் தனித்துக் காட்டிக் கொண்ட வித்தியாசமும் அவளை வெகுவாகக் கவர்ந்திருந்தது. இன்றைக்காவது நேரில் அவனைப் பார்த்தால் தேவலை என்று அவளுக்குத் தோன்றியது. அது தான் இன்றைக்கும் அவள் அவனுடன் பேச முனைந்தற்குக் காரணமும் ஆயிற்று.

கமலி டெலிபோன் ரிஸீவரை எடுத்து சாரங்கனின் எண்ணைச்சுழற்றுகிறாள்.  இந்த இரண்டு நாள் பேச்சில் அவன் தொலைபேசி எண்ணே அவளுக்கு மனப்பாடம் ஆகியிருந்தது.  போய்க்கொண்டிருந்த ரிங் சட்டென்று கட்டாகி மறுமுனையில் யாரோ டெலிபோனை எடுப்பது தெரிந்ததும், "ஹலோ, மிஸ்டர் சாரங்கன் இருக்கிறரா?" என்று மென்மையாகக் கேட்கிறாள் கமலி.

"கமலி,  நான் தான்.  உங்களோட டெலிபோனுக்காகத் தான் காத்திண்டு இருக்கேன்" என்று சொல்லி விட்டு இனிமையாகச் சிரிக்கிறான் அவன்.


அவன் அப்படிச் சொல்வான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.  முதல் இரண்டு நாட்களில் இல்லாத ஒரு சுதந்திரம் அவளிடம் இன்று அவனுக்குக் கிடைத்த மாதிரி இருந்தது. இப்படியெல்லாம் பேசுபவர்களைப் பற்றி அவளுக்கென்று ஒரு கணிப்பு இருந்தது.  அவனும் அப்படி இருந்து விடக் கூடாதே என்கிற ஆயாசத்தில் மனம் தொய்ந்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், இயல்பாகப் பேச்சைத் தொடர்கிற தோரணையில் "ஓ.. அப்படியா?  சாப்பிட்டாச்சா?" என்று கேட்கிறாள்.  

"முடிச்சிட்டேன்.. நீங்க?.."

"நானும் ஆச்சு."

"கமலி, இன்னிக்கு காலைலே உங்க ஆபிஸ் பக்கம் வந்தேன்.  உள்ளே நுழைஞ்சு சர்ப்ரைஸா உங்களைப் பாத்திட்டுப் போகலாம்ன்னு தீர்மானம்.  ரிஸப்ஷன் வரை கூட வந்திட்டேன்.  அப்புறம் தான் அந்த ஞானோதயம் வந்தது.  பத்து பேருக்கு நடுவே, திடுதிப்புன்னு நான் அங்கே வந்து உங்களைப் பார்த்தா அதுனாலே உங்க கொலீக்ஸ் மத்திலே உங்களுக்கு சங்கடமாப் போயிடுமேன்னு திரும்பிட்டேன்.  ஆம் ஐ கரெக்ட்?.."

"அப்படீன்னு இல்லேனாலும், நீங்க செஞ்சது சரிதான்.  ஏன்னா, நாம இதுவரை ஒருத்தரை ஒருத்தர் நேர்லே பாத்திண்டது இல்லை தானே?.. அந்த மாதிரி நேரிடையான அறிமுகம் இல்லாம, அலுவலகம் மாதிரி இடங்கள்லே புதுசா அறிமுகப்படுத்திண்டு சந்திக்கறது நமக்கு ஓக்கேனாலும்,
பாக்கறவங்களுக்கு ஒரு மாதிரி இருக்கும், இல்லையா,  அதுக்காகச் சொன்னேன்" என்கிறாள் கமலி.

"குட்.   ஏறக்குறைய நீங்க நினைக்கற மாதிரி தான் நானும் நினைச்சேன்.  அதனாலே தான் திரும்பிட்டேன்"

அவன் அப்படிச் சொன்னது கமலிக்கு நிறைவாக இருக்கிறது.  நாகரிகம் தெரிந்தவர் என்று நினைத்துக் கொள்கிறாள்.

அவனைப் பற்றி அவசரப்பட்டு அப்படி நினைத்தது விட்டோமோ என்று அவள் நினைக்கற மாதிரி அடுத்து சாரங்கன் அவளிடம் கேட்கிறான்."கமலி, உங்க ஆபீஸூக்குப் பக்கம் தானே? ஈவினிங் உங்களுக்கு செளகரியப்படும்ன்னா 'அபிராமி'லே சந்திக்கலாமா?"

சட்டென்று அவன் அப்படிக் கேட்டதும் கமலி லேசாகத் துணுக்குறுகிறாள்.  இப்பொழுது மறுபடியும் அவனைப் பற்றி அவன் குணநலன்களை பற்றி மனசில் குழப்பம். முன்பின் பார்த்திராத பெண்களை முதன் முதல் ஒரு சினிமாவில் வைத்து சந்திக்கும் ஆணாக அவன் இருந்துவிடக் கூடாது என்பதை மிகவும் விரும்பியதைப் போல அவள் குரல் தழைகிறது.. "சினிமா வேண்டாம்.." என்று கத்தரித்தாற் போலச் சொல்லி விட்டு, அதற்கு மேல் எப்படித் தொடர்வது என்று ஒரு வினாடி யோசித்து.  அடுத்த வினாடியே, "ஒண்ணு செய்யலாமா?" என்கிறாள்.

"சொல்லுங்க.." எதிர்முனை குரலில் இருந்த லேசான பதட்டம் அவளுக்கு புரிபடுகிறது.

"நான் கூட உங்களைச் சந்திக்கறதிலே ஆர்வமா இருக்கேன். சில முக்கியமான விஷயங்களைப் பத்தி உங்ககிட்டே பேசணும். அதுக்காகத் தான் இந்த சந்திப்பு. அதற்கப்புறம் தான் மத்ததெல்லாம்.  இன்னிக்கு சாயந்தரம் ஸ்பென்ஸருக்கு வந்திடறீங்களா?.. காஃபி ஷாப் பக்கத்திலே. கரெக்டா அஞ்சரைக்கு.  மிஸ் பண்ணக் கூடாது.." என்று சொல்கையில் அவள் குரல் அவளுக்கே என்னவோ போல் இருப்பதை உணர்கிறாள்.

"நானா..  உங்களுக்கு முன்னாடியே அங்கே இருப்பேன்.  அது சரி, நாம தான் இதுக்கு முன்னாடி ஒருத்தரை ஒருத்தர் பார்த்ததே இல்லையே, நாம எப்படி அடையாளம் கண்டுக்கறது?.. ம்.. ஸப்போஸ் வேற யாராவது ஒரு மிஸ்ஸோட தோளைத் தட்டி 'கமலி'ன்னு ஆசையோட நா கூப்பிட்டுட்டு அவ செருப்பைக் கழட்டிட்டா.." என்று அவன் பிதற்றிச் சிரிக்கும் போது அவனுடைய அந்த மட்டரகமான ஹாஸ்யம் அவளுக்கு எரிச்சலை ஊட்டினாலும், நேரில் பார்த்துப் பேசித்தான் எல்லாத்தையும் தீர்மானிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் மனசு தவிக்கிறது.

அவளது அந்த வினாடி மெளனத்தைச் சகித்துக் கொள்ள முடியாமல், "எப்படி உங்களை நான் அடையாளம் கண்டுக்கறது?" என்று மறுபடியும் சாரங்கன் கேட்கிறான்.

ஒரு சகஜ நிலைக்கு வந்து விட்ட தோரணையில் கமலி லேசாகச் சிரிக்கிறாள். "அடையாளம் தானே.. ரொம்ப ஈஸி.  நா இன்னிக்கு சிவப்பு ஸாரி கட்டியிருக்கேன்.  தோள்லே தோல் பை.  வலது கையிலே வாட்ச்.. ஓ.கே.. அடையாளம் போதுமா?"

"சிவப்பு ஸாரின்னு நீங்க சொன்னது ஒண்ணே போதும்.  மத்தவங்கள்லேந்து பிரிச்சுத் தனியாக் காட்டிடும்.  நா இன்னிக்கு சிமிண்ட் கலர் பாண்ட்;  ஒயிட் ஷர்ட்டை இன் பண்ணியிருப்பேன்.  கொஞ்சம் மாநிறமா, உயரமா, கர்லிங் ஹேர்ஸோட இருப்பேன்..  இதுலே என்ன கமலி பெரிய சிரமம் இருக்கு.. இன்னிக்கு சரியா அஞ்சரைக்கு ஸ்பென்ஸர்லே..."

"தயவு செஞ்சு தோளை மட்டும் தட்டிடாதீங்க.. நான் கொஞ்சம் என்ன, நிறையவே சென்ஸிடிவ்.."

"ஸாரி.. ஒரு பேச்சுக்கு நகைச்சுவையா அப்படிச் சொன்னேன்.. நீங்க நெஜம்ன்னு நெனைச்சிட்டீங்களா?" என்ற குரலில் ஏமாற்றம் வழியறது.

"பின்னே.. நெஜம் ஒண்ணையே பேசத் தெரிஞ்சவளுக்கு மத்தவங்க பேசற எல்லாத்தையும் அப்படித் தான் நெனைக்கத் தோணும்.  இல்லையா?"

"Again ஸாரி.. நேர்லே பாக்கும் பொழுது ஸ்பெஷலா மன்னிப்பு கேட்டுக்கறேன்..  ஓக்கேவா"

'உரிமை எடுத்துக் கொண்டு உள்மனசில் நுழைய முயற்சிக்கற பேச்சு.  அத்துமீறும் பொழுது சுட்டிக்காட்டினால், சட்டுனு பின்வாங்கற சாமர்த்தியம்.  எந்த அளவுக்கு எடுத்துக்கறதுன்னு தெரிலே; பாக்கலாம்' என்று கமலியின் சிந்தனை ஓடுகிறது.

"என்னங்க.. பேச்சு மூச்சே காணோம்.. கோபமா?"

"ம்..அதெல்லாம் ஒண்ணுமில்லே" என்கிறாள் கமலி.  அவனை ரொம்பவும் காய்ச்சி விட்டோமோ என்று தோன்றுகிறது.  ஆரம்பத்தில் இந்த மாதிரி ஒட்டாமல் இருப்பது நல்லதுக்குத் தான் என்று இன்னொரு மனம் ஜாக்கிரதை உணர்வைக் கூட்டுகிறது. "அப்போ பாக்கலாம், வந்திடுங்க.." என்று ஒருவரியில் முடித்துக் கொள்ள முயற்சிக்கிறாள்..

"சரிங்க, ஸீ யூ.." என்று அவனும் போனை வைக்கிறான்.

காண்டினுக்குப் போனவங்க, சின்ன குட்டி தலை சாய்த்தல் ஆசையில் Dormitory ரூம் போனவங்க என்று ஒவ்வொருவராக திரும்பி அவரவர் ஸீட்டை நிறைக்கத் தொடங்கி விட்டார்கள்.  கமலியும் டேபிளில் கிடந்த ஃபைல்களில் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறாள்.

நாலரைக்கு கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என்று மூணு மணியை அலுவலக பெரிய சுவர்க் கடியாரம் காட்டிய பொழுது தோன்றுகிறது.

எதற்காக இந்த சந்திப்பு என்று நினைத்தவுடன் நெஞ்சம் கசந்தாலும், அடுத்த வினாடியே கமலியின் மனசில் அலாதியான ஒரு உறுதி வந்து உட்கார்ந்து கொள்கிறது.  அந்த உறுதி கொடுத்த தெம்பில் புத்துணர்ச்சி கிடைத்து முகம் பிரகாசமாகிறது.


(தொடரும்)


21 comments:

நெல்லைத் தமிழன் said...

கதைகள்ல தொடரும்னு போட்டா, நான் 'முடிந்தது' வரையில் காத்திருப்பேன். எனக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் படிப்பது கடினம்.

இதுல, கமலியும் சாரங்கனும் திருமணம் ஆகாதவர்களாக இருக்கலாம். இல்லை ஏற்கனவே விவாகரத்து பெற்றவர்களாக இருக்கலாம். 'மணமகள்' தேவைன்னு விளம்பரம் கொடுத்து தன்னோட போன் நம்பர் கொடுக்கற அளவு சாரங்கன் முன்னேறியவனாகத் தெரிகிறான். 'கமலி' எந்த எழுத்தாளர் Project செய்யும் பெண்ணிய இயல்பு கொண்டவர் என்று யோசிக்கிறேன்.

'சந்திப்புக்கு நெஞ்சம் ஏன் கசந்துபோகவேண்டும்? ஒருவேளை தன் தங்கைக்குப் பார்க்கிறாளா? இல்லை தனக்கு உகந்தவனைப் பார்க்க வீட்டில் யாருமே இல்லையே என்பதாலா?

தொடர்கிறேன்...

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்... சாரங்கன் என்றாலே ஜேகேயும் 'பாரிஸுக்கு போ' வும்தான் நினைவுக்கு வருகினார்கள்! ஆனால் இந்தச் சாரங்கனிடம் அந்த சாரங்கனின் மேதா விலாசமில்லை.

:)))

middleclassmadhavi said...

Interesting.....

வே.நடனசபாபதி said...


சாரங்கனிடம் பேசும்போது கமலியின் கடைப்பிடித்த அணுகுமுறை நிச்சயம் வெகு எளிதாக ஏமாந்துவிடமாட்டாள் என எண்ணத் தோன்றுகிறது.

கதையை எடுத்த எடுப்பிலேயே வேகம் பிடித்துவிட்டது.

மாலையில் ஸ்பென்சரில் என்ன நடக்க இருக்கிறது என அறிய கமலியைப் போலவே நானும் காத்திருக்கிறேன்.

கோமதி அரசு said...

//உரிமை எடுத்துக் கொண்டு உள்மனசில் நுழைய முயற்சிக்கற பேச்சு. அத்துமீறும் பொழுது சுட்டிக்காட்டினால், சட்டுனு பின்வாங்கற சாமர்த்தியம். எந்த அளவுக்கு எடுத்துக்கறதுன்னு தெரிலே; பாக்கலாம்' என்று கமலியின் சிந்தனை ஓடுகிறது.//

கமலியின் கணிப்பு எவ்வளவு சரியென்று சந்திப்பின் பின் தெரியும் அடுத்த பதிவை படிக்க ஆவல்.

கதை முன்பே படித்தது போல் இருக்கிறது. முன்பு தளத்தில் பகிர்ந்து இருந்தீர்களா சார்?

Thulasidharan V Thillaiakathu said...

துளசி: சாரங்கன் கொஞ்சம் அசட்டுத்தனம் நிறைந்தது போல் இருக்கிறான். கமலியை எப்படியேனும் அட்ராக்ட் செய்ய வேண்டும் என்று நினைக்கிறான் போலும்...ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. தொடர்கிறோம்...

கீதா: கமலி! அழகான பெயர்! இந்தக் கதையின் சில வரிகளை எங்கேயோ படித்தது போல் சட்டென்று நினைவுக்கு வந்தது குறிப்பாக கமலியின் உரையாடல்!! வேறு எங்கேனும் உங்கள் கதை வந்ததோ?!! இல்லை பத்திரிகையில் பிரசுரமானதா?

கமலிக்கும் தாமதமான கல்யாணம் போலும்...இல்லை இரண்டாவது கல்யாணமோ ..வீட்டில் பெரியவர்கள் இல்லையோ இல்லை வயதானவர்கள்? அவளது பேச்சு இப்படி யோசிக்க வைத்தது..அப்புறம் இல்லை முதல் கல்யாணமே தாமதம் போலும் என்றும் தோன்றியது...ரொம்பவே கவனமாக இருக்கிறாள். பெண்ணீயக் கொள்கைகள் சார்ந்தவள் போலவும் தெரிகிறாள். எனவே சாரங்கன் வழிந்தாலும் தைரியமாகக் கட் சொல்லும் திறன் இருப்பவள் என்றே தோன்றுகிறது...

தொடர்கிறோம்..

Geetha Sambasivam said...

முன்னரே படித்த மாதிரி இருக்கு. அதைத் தான் சொல்ல நினைக்கும்போது கோமதி அரசுவும் கேட்டிருக்கார். திருமணம் நடக்குமா, நடக்காதா, கமலியின் எதிர்பார்ப்பு என்ன என்பதெல்லாம் போகப் போகப் புரிந்து கொள்ளலாம். கமலியின் மன முதிர்ச்சி சாரங்கனிடம் இல்லை போல் தெரிந்தாலும் ஓர் ஆணாக ஒரு பெண்ணிடம் காட்டும் அவன் இயல்பு இது தான் என்பதைக் காட்டுவதாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். பொதுவாகவே எவ்வளவு புத்திசாலிகளாக இருந்தாலும் சில பெண்களிடம் ஆண்கள் தங்களைக் கொஞ்சம் அசடாகவே காட்டிக் கொள்வார்கள்!இது தான் பெண்களுக்குப் பிடிக்கும்னு நினைப்பார்களோ என்னமோ! இங்கே கமலியும் இதைத் தான் எதிர்பார்க்கிறாள் என சாரங்கன் புரிந்து கொண்டிருக்கிறான் எனத் தோன்றுகிறது. எனக்கு சாரங்கன் என்றால் ஏ.எஸ்.ராகவன் அவர்களின் "மனிதன்" கதை நாயகன் தான் நினைவில் வருவான்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

தொடர்கதைக்கென்றே வாய்த்த 'த்ரில்' ஒன்று உண்டு. முக்கியமான இடத்தில் வெட்டி அடுத்தப் பகுதி வருகிற வரைக்கும் ஏங்க வைக்கிற சாமர்த்தியம். ஒட்டுக்மொத்தமாக ஒரே தடவையில் படித்தால் அந்த ஏக்கத்தை எதிர்பார்க்க முடியாமல் போகும். வாரப்பத்திரிகை வாங்குவோரின் தொடர் வாசிப்பை நிச்சயப்படுத்த தொடர்கதைகள் வெகுவாக உபயோகப்படுகின்றன. இதனாலேயே எது பற்றியும் தொடராக வாரப்பத்திரிகைகளில் பிரசுரமாவது தவிர்க்க முடியாமல் போயிருக்கிறது.

ஜெமோ போன்றவர்கள் இந்தப் போக்கை முற்றிலுமாக புறந்தள்ளுகிறவர்கள். ஒரு நாவல் என்பது அதன் போக்கில் இயல்பாக இருக்க வேண்டுமே அன்றி இப்படி வாசிப்போரின் ரசனைக்காக துண்டு துண்டாக துண்டாடப்படக் கூடாது என்பது அவர்கள் கட்சி.

நாவலுக்கான இலக்கணம் இதுவே என்று பார்த்தால் உங்களுக்கு மிகவும் பிடித்த சாண்டில்யன் சரித்திரத் தொடர்கள் நாவலே அல்ல என்று ஆகிப்போகும். துப்பறியும் நாவல்களுக்கோ இப்படி துண்டு துண்டாக்கி வெட்டி ஒட்டுவதே அதன் ஜீவன்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//'கமலி' எந்த எழுத்தாளர் Project செய்யும் பெண்ணிய இயல்பு கொண்டவர் என்று யோசிக்கிறேன். //

யோசித்து முடிவு கண்டவுடன் சொல்லுங்கள்.

//'சந்திப்புக்கு நெஞ்சம் ஏன் கசந்துபோகவேண்டும்? ஒருவேளை தன் தங்கைக்குப் பார்க்கிறாளா? இல்லை தனக்கு உகந்தவனைப் பார்க்க வீட்டில் யாருமே இல்லையே என்பதாலா?.. //

இப்படியெல்லாம் யோசிக்க வைப்பது தான் பகுதி பகுதியாகப் படிப்பதில் இருக்கும் சுவாரஸ்யம். அந்த சுவாரஸ்யத்தை இனி தவிர்க்க முயற்சிக்காதீர்கள்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//ஆனால் இந்தச் சாரங்கனிடம் அந்த சாரங்கனின் மேதா விலாசமில்லை. //


ஜே.கே. அவரது ஒவ்வொரு கதை மாந்தரிலும் வாழ்ந்து பார்த்தவர். இதை விட சில விஷயங்களில் அவர் கொண்டிருந்த கருத்துக்களை ஸ்தாபிப்பதற்காக கதை மாந்தர்கள் ரூபத்தில் எதிரும் புதிருமாக வாதத்தை நடத்தியவர். அப்படியான வாதத்தை நடத்தும் திறனை தன் வாசகர்களிடமும் உருவாக்கியவர்.

ஜெயகாந்தனின் ஸ்கூலில் பத்தவர்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை
அலசி ஆராயத் தெரிந்திருப்பார்கள். அவை கண்டு மிரளாமல் தீர்வு காணப் புரிந்திருப்பார்கள். அதனால் தான் அவர் வாசகர்கள் அவரை மிகவும் நேசிக்கிறார்கள்.

என் வாலிப வயதில் ஜெயகாந்தனின் ஸ்கூலில் படிக்கிற வாய்ப்பு எனக்கும் கிடைத்த
அதிர்ஷ்டம் தான் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றி பேசுவதற்காகவே எழுத்தைக் கருவியாகக் கொண்டிருப்பது. இந்த மாதிரியான கதைகளில் கதையம்சம் முக்கியமில்லாது போய் எதிரும் புதிருமான உரையாடல்கள் மூலம் கதையின் போக்கு தீர்மானிக்கப்பட்டு வாசிப்பவனை யோசிக்க வைக்கும்.

சாரங்கனும் கமலியும் நபர்களாகத் தோற்றமளிப்பதை மறந்து பிரச்னையின் வடிவங்களாகப் பாருங்கள்.

அந்த சாரங்கன் அந்தக் கதைக்கேற்ற சாரங்கன். இந்த சாரங்கன் இந்தக் கதைக்கேற்பவான சாரங்கன். தான் படைக்கும் பாத்திரங்களை உயர்த்தியும் தாழ்த்தியும்
தான் சொல்ல வந்த விஷயத்திற்கு பலிகடா ஆக்கி பொம்மலாட்ட விளையாட்டைச் செய்வது எழுத்தாளனின் வேலை. அதனால் தான் பெயர் ஒன்றே ஆயினும் சாரங்கன் களில் வித்தியாசம் தெரிகிறது.

எல்லாவற்றையும் தாண்டி வாத்தியார் வாத்தியார் தான்; அவரிடம் கற்ற மாணவன் அவரிடம் கற்றதை வைத்தே அந்தந்த கால கட்டத்தின் தேவைக்கேற்ப அவரின் நீட்சியாக செயல்பட முயல்வதும் உண்டு. கற்றதிற்கு காணிக்கையாக கற்பித்தவருக்கான
அன்புப் பரிசாகவே இதனைக் கொள்ளல் தகும்.

ஜீவி said...

@ MiddleclassMadhavi

//Interesting.....//

ஒரே வரியில் ஓராயிரத்தை நீங்கள் சொல்லிக் கேட்ட உணர்வு.

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

பாவம் சாரங்கன். கமலியை வைத்துக் கொண்டு கதை சுழல்வதால் கமலியின் ஜாக்கிரதை உணர்வுகளை கொஞ்சம் தூக்கிப் பிடிக்க வேண்டியிருந்தது. அவ்வளவு தான்.

வரும் பகுதிகளில் அறிவார்ந்த அந்த இளைஞனின் பாத்திரப் படைப்பை இன்னும் கூர்மைபடுத்த முயற்சிக்கிறேன்.

ஒன்றி வாசித்து வருவதற்கு நன்றி, ஐயா.

ஜீவி said...

@ கோமதி அரசு

//கமலியின் கணிப்பு எவ்வளவு சரியென்று சந்திப்பின் பின் தெரியும்..//

ரொம்ப சரியே. அவளுக்கு வாய்த்த வாழ்க்கை புகட்டிய பாடம் அவளின் கணிப்பு.

//கதை முன்பே படித்தது போல் இருக்கிறது. முன்பு தளத்தில் பகிர்ந்து இருந்தீர்களா?//

தங்கள் நினைவாற்றல் சரியே.

69-வாக்கில் பத்திரிகை பிரசுரம் கண்ட கதை இது. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப இந்தக் கதையை திருத்தி எழுதிக் கொண்டே வருகிறேன். இந்த காலகட்டத்திற்கான மாற்றங்களுடன் மறுபடியும். இப்படி எத்தனை மறுபடியும்.. தெரியவில்லை.

காலங்கள் மாறும் என்பது சயின்ஸ் விதி ஆயினும் காலத்திற்கான மாற்றங்கள் வெகு மெல்லவே மலர்வதாகத் தெரிகிறது. ஓரடி முன்னே என்றால் நாலடி பின்னே என்று மாற்றங்களில் தடுமாற்றம் வேறே. இந்தக் கதைக்கான சமூகத் தேவை இருக்கும் வரை
அவ்வப்போது மாற்றங்களுடான இது போன்ற கதைகளுக்கான தேவையும் இருக்கும் போல.

வாசித்து முடித்து விட்டு தங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.


கோமதி அரசு said...

//காலங்கள் மாறும் என்பது சயின்ஸ் விதி ஆயினும் காலத்திற்கான மாற்றங்கள் வெகு மெல்லவே மலர்வதாகத் தெரிகிறது. ஓரடி முன்னே என்றால் நாலடி பின்னே என்று மாற்றங்களில் தடுமாற்றம் வேறே. இந்தக் கதைக்கான சமூகத் தேவை இருக்கும் வரை
அவ்வப்போது மாற்றங்களுடான இது போன்ற கதைகளுக்கான தேவையும் இருக்கும் போல.//


நன்றாக சொன்னீர்கள்.

சமூகத் தேவை இருக்கும் வரை இம் மாதிரி கதைகளும் தேவைதான்.

G.M Balasubramaniam said...

விளம்பரம் கண்டு ஒருவரை கணிக்க முயல்வதும் முகம் காணா பேசீல் அவரைப் பற்றி ஏற்படுமெண்ணங்களும் மனித மனத்தின் எதிர்பார்ப்புகளை கடாசிப்போட வைக்கும் நிஜங்களும் கதையை நகர்த்தி செல்ல உதவு ம் உத்திகளே வாழ்த்துகள்

ஜீவி said...

@ TVT

துளசிதரன்: இப்படியான ஒரு சுவாரஸ்யம் இந்தக் கதையின் பின் பகுதிக்குத் தேவையே.

அசட்டுத்தனம்?.. காதல் வயப்படுவதே அசட்டுத்தனத்தில் தான் ஆரம்பிக்கிறதோ?

//கீதா: இந்தக் கதையின் சில வரிகளை எங்கேயோ படித்தது போல் சட்டென்று நினைவுக்கு வந்தது குறிப்பாக கமலியின் உரையாடல்!! //

நல்ல நினைவாற்றல் உங்களுக்கு. அல்லது அந்த உரையாடல் உங்கள் நினைவை விட்டு அழியாமல் இருக்கும் அளவுக்கு பதிந்து போயிருக்கிறது.

கோமதிம்மாவின் பின்னூட்டத்திற்கான பதிலை பார்க்க வேண்டுகிறேன்.

ஆஹா! எத்தனை கேள்விகள்?.. இந்தக் கேள்விகளைப் பார்த்துத் தான் ஜிஎம்பீ சார் அப்படி ஒரு பின்னூட்டம் போட்டாரோ?.. :))

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

// கமலியின் மன முதிர்ச்சி சாரங்கனிடம் இல்லை போல் தெரிந்தாலும் ஓர் ஆணாக ஒரு பெண்ணிடம் காட்டும் அவன் இயல்பு இது தான் என்பதைக் காட்டுவதாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்,,//

கரெக்ட்!

//பொதுவாகவே எவ்வளவு புத்திசாலிகளாக இருந்தாலும் சில பெண்களிடம் ஆண்கள் தங்களைக் கொஞ்சம் அசடாகவே காட்டிக் கொள்வார்கள்!இது தான் பெண்களுக்குப் பிடிக்கும்னு நினைப்பார்களோ என்னமோ!//

நிஜமாலுமே அப்படியா?.. அல்லது இந்த எழுத்தாளர்களின் எழுத்துப் படப்பிடிப்பு அப்படியா? தெரிலே!

ஜெமினி கணேசன் ஞாபகத்திற்கு வருகிறார். காதல் ரசத்தை எவ்வளவு அழகாக வடித்துக் கொடுத்தார்?.. முன்னாலும் பின்னாலும் அவர் போல் யார் வெள்ளித்திரையில் வந்ததில்லையே! போயும் போயும் அவரைப் போய் சாம்பார் என்றார்களே! சாம்பாருக்கும் இந்த வழிதலுக்கும் என்ன சம்பந்தம், தெரியலையே!

வாழ்க்கை பூராவுக்கும் அசடாவதற்கு இதான் ஆரம்பம் என்றும் கொள்ளலாமில்லையா?..

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

// எனக்கு சாரங்கன் என்றால் ஏ.எஸ்.ராகவன் அவர்களின் "மனிதன்" கதை நாயகன் தான் நினைவில் வருவான்.//

உங்களுக்கு ஏ.எஸ்.ஆர். என்றால் எனக்கு அந்தக் கதைநாயகனுக்கு கோபுலு போட்ட கோடு போட்ட மடித்து விடப்பட்ட புல்ஹாண்ட் சட்டை சகிதமாக நினைவுக்கு வருகிறது.

சேலத்தில் எழுத்தாளர் சம்பந்தப்பட்ட்ட ஒரு விழாவுக்காக ஸ்ரீரங்கம் போயே அவரை அழைத்து வந்து ஒரு நாள் பூராவும் அவருடன் சுற்றியிருக்கிறேன். பதினெட்டே வயது அப்போது எனக்கு! அந்த சேலம் விழாவில் 'நான் தான் குமுதம் புனிதன்' என்று ஒருவர் ஆள்மாற்றாட்டம் செய்ய, ஏ.எஸ்.ஆர். அவரைக் கண்டு பொங்கி எழ, ஒரே ரகளை தான்!

ஜீவி said...

@ ஜிஎம்பீ

//விளம்பரம் கண்டு ஒருவரை கணிக்க முயல்வதும் முகம் காணா பேசீல் அவரைப் பற்றி ஏற்படுமெண்ணங்களும் மனித மனத்தின் எதிர்பார்ப்புகளை கடாசிப்போட வைக்கும் நிஜங்களும் கதையை நகர்த்தி செல்ல உதவு ம் உத்திகளே.. //

ஜிஎம்பீ சார் இதற்கு உங்களை மாதிரியே பதிலெழுத வேண்டும் என்று நினைக்கிறேன். முடியவில்லையே! :)))

Durai A said...

பின்னூட்டம் எங்கே போகிறது?

ஜீவி said...

@ Durai.A.

//பின்னூட்டம் எங்கே போகிறது?//

யாமறியோம், பராபரமே!

Related Posts with Thumbnails