Monday, September 4, 2017

கமலி காத்திருக்கிறாள்..

                                                2

முன் பகுதி:  http://jeeveesblog.blogspot.in/

வளை முதலில் அடையாளம் கண்டு கொண்டது அவன் தான்.

"ஹே.. கமலி.." என்று தனது காதுகளுக்கருகில் கரகரத்த அந்த ஆண்மை கலந்தக் குரலைக் கேட்டு ஒருவிதக் கூச்சத்தோடு கொஞ்சம் நகர்ந்து, அந்த அந்நிய ஆடவனை அரைகுறையாக நோட்டமிடுகிறாள் அவள்.

"நான் எதிர்பார்த்ததுக்கு மேலேயே, யூ ஆர் ஸோ ப்யூட்டிபுல்.." என்று தொடர்ந்த அவனது புகழுரைகள் தன்னைக் கிறக்கப் படுத்தாமல் ஸ்பென்ஸர்ஸின் உள்வட்ட நடைபாதை தாண்டி எக்ஸ்லேட்டர் வரை பார்வையால் அளந்து விட்டு "ஹலோ சாரங்கன்! நாம நடந்திண்டே பேசலாமே.." என்று மெல்லத் திரும்புகிறாள் கமலி.

"ஷூயூர்.." என்று அவனும் அவளைத் தொடர்கிறான்.  கூட நடக்கும் பொழுது அவனுக்கும் தனக்கும் ஒரு ஆள் நிற்கிற இடைவெளி விட்டுத் தொடர்கிறாள் கமலி.

கொஞ்ச நேரம் இருவரில் ஒருவரும் பேசவில்லை.  அவன் தன்னில் ஸ்பேரே செய்துகொண்டிருக்கும் விதேசி செண்ட்டின் லாவெண்டர் மணம் அவளைத் தாண்டி மணக்கிறது.  அவள் இதுவரை நுகர்ந்து அனுபவித்து அறியாதது;  அதனால் வேறுபட்டுப் பிடித்திருக்கிறது. எக்ஸ்லேட்டர் வந்ததும், "மேலே போகலாமா?" என்று அவளைப் பார்த்துப் புன்முறுவலுடன் கேட்கிறான் சாரங்கன்.

அவளிடமிருந்து அனுமதி கிடைத்ததும் அவளிடமிருந்து கொஞ்சம் விலகி அவளை முன்னால் போக விட்டு, பின் படியில் தொடர்கிறான் அவன்.

மேல் தளத்திற்கு வந்ததும் ரெண்டாவது சுற்றில் தென்பட்ட அந்த சின்ன ரெஸ்டரண்ட்டைக் காட்டி, "ஏதாவது சாப்பிடலாமா?" என்று முகத்தைத் தூக்கி, சாரங்கனைப் பார்த்தவாறு கேட்கிறாள் கமலி...

அந்த ஓட்டலுக்குள் போய் ஏதாவது சாப்பிடுவதும், இவளோடு தனித்த ஓர் இடத்தில் உட்கார்ந்து கொண்டு பேசுவதற்குச் சாதகமான ஒன்றாகத் தான் இருக்கும் என்று எண்ணியவனாய், "ஓ, சாப்பிடலாமே" என்று தன் தோள் உயரத்திற்கே வரும் கமலியைப் பார்த்து சாரங்கன் தலை குனிந்து சொல்கிறான்.

சாயந்திர வேளையாதலால் கூட்டம் அதிகமாகத் தான் இருக்கிறது,. அவளுக்கு மிக நெருக்கமாக நடந்தபடி 'பேமலி ரூம்' என்று ஒதுக்கப்பட்ட, பிளைவுட் பலகையால் தடுக்கப்பட்ட அந்தச் சிறிய அறையின் கதவை ஒரு கையால் அவள் மேலே மோதிவிடாதபடி பிடித்துக் கொண்டு, "ப்ளீஸ்.. கம் இன்" என்று புன்முறுவலுடன் கூறுகிறான்.

கமலியும் அவனது அந்தப் புன்முறுவலை அங்கீகரித்ததாகக் காட்டிக் கொள்ள இதழ்களைப் பிரிக்கிறாள்... சுத்தமாக இருந்த அந்த அறையில் எதிரும் புதிருமாக இரண்டிரண்டு அடுக்குகளாகப் போடப்பட்டிருந்த டேபிள்களில் ஒதுக்குப் புறமாக ஒன்றைத் தேர்ந்து இருவரும் எதிர் எதிரே அமர்கின்றனர்.

ஒரு பெண் துணையுடன் தனித்து இருக்கையில் பேசாமல் இருப்பது நாகரிகமல்ல என்று உணர்ந்தாலும், பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று சாரங்கன் யோசித்துக் கொண்டிருக்கிறான்.

திடீரென்று அவனை நோக்கித் தலையைச் சாய்த்து, "ம்.. மிஸ்டர் சாரங்கன்! எப்படியோ நாம இரண்டு பேரும் போனிலே பேச ஆரம்பிச்சு இரண்டே நாள்லே நமக்குள்ளே ஒரு பழக்கமாகி, இப்போ நாம தனியா இந்த ஓட்டல்லே உட்கார்ந்திருக்கறது__ ஓ,  இதெல்லாம் வேடிக்கையாயில்லை" என்று கமலி சொல்லிச் சிரிக்கிறாள்.  அந்த நொடியே வரவழைத்துக் கொண்ட சிரிப்பாக அதை அவளே உணர்ந்து தனக்குள் குறுகிப் போகிறாள்.

"எஸ். எஸ். நானும் அதைத் தான் நெனைச்சிண்டு இருந்தேன்.  ஒண்ணை நா படிச்சிருக்கேன், கமலி!  சேர வேண்டிய ஒண்ணாக் கலக்க வேண்டிய இருவர் இந்த உலகத்திலே எந்த மூலைலே இருந்தாலும், எப்படிப் பிரிஞ்சு இருந்தாலும் கடைசிலே சேர்ந்தே தீருவாங்கன்னு..."

அவன் பேசி முடிகட்டும் என்ற கருத்தில் அவள் மெளனமாக இருக்கிறாள்.. அவளது அந்த மெளனமே அவனை மேலும் பேசத் தூண்டுகிறது..

"இதை-- இப்படி இணைய வேண்டிய இதயங்கள்லாம் தனித்தனியாகப் பிரிஞ்சு எங்கெங்கோ வாழ்ந்து பின்னாடி அவங்க வாழ்க்கைக் காலத்துக்குள்ளாறயே ஒண்ணா கலக்கறதைப் புஸ்தகங்கள்லே படிக்கறச்சே 'இதெல்லாம் சுத்த ஹம்பக், அசட்டுத்தனம்'ன்னு நா நெனைச்சதுண்டு... ஆனா, என்னோட சொந்த வாழ்க்கைலே இந்த மாதிரி ஒரு அனுபவம் ஏற்படறதைப் பாக்கறச்சே..."

ஒரு ட்ரேயில் பிஸ்கட்டும், தேநீரும் கொண்டு வந்து மேஜை மேல் வைத்து விட்டுச் செல்கிறான், 'என்ன வேண்டும்' என்று இடையில் கேட்டுக் கொண்டு போன வெயிட்டர்.

அதிலிருந்து பிஸ்கட் ஒன்றைக் கையிலெடுத்து அவனை ஓரக்கண்களால் அளந்த கமலி, ஒரு வினாடி பேசாமல் இருந்து விட்டு எதிர் சுவரில் மாட்டியிருக்கும் இயற்கைக் காட்சி படத்தைப் பார்க்கிறாள்..

வெயிட்டரின் நுழைவால் பேச்சைப் பாதியிலேயே நிறுத்திக் கொண்ட சாரங்கன், இவள் எதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை தன்னுள்ளேயே பரிசீலித்துக் கொண்டு மெளனமாக இருக்கிறான்.  ஆனால் அவனது யோசனைக்கோ, கற்பனைக்கோ அவசியமில்லாத முறையில் கமலியே மெல்லக் கனைத்துக் கொண்டு அவனை நேரடியாக நோக்கியபடி திடும்மென்று, "மிஸ்டர் சாரங்கன்.. நீங்க என்னைப் பற்றி என்ன நெனைக்கிறீங்க.. தயவுசெய்து மனசிலே படறதைப் பட்டவர்த்தனமாக நீங்க சொல்லணும்ன்னு விரும்பறேன்.." என்று லேசான புன்முறுவலுடன் அவனிடம் கேட்கிறாள்.

இவ்வளவு வெளிப்படையாக கேட்பாள் என்று அவன் நினைக்கவே இல்லை. அதுவே அவளது பலவீனமாகவும் அல்லது பலமாகவும் அவனுக்குத் தோன்றுகிறது.  தான் ஏதாவது சொல்லப் போக அது இவளுக்குப் பிடிக்காமல் போய் விட்டால் என்ன செய்வது என்ற தடுமாற்றமும் அவனுக்கு இருக்கிறது.  அவனது அந்தத் தயக்கத்தை உணர்ந்தவள் போல அவள் சொல்கிறாள்:

"நீங்க மனசிலே தோணினதைச் சொல்லலாம்.  யூ ஹேவ் காட் எவ்வரி லிபர்ட்டி டு ஸே.." என்று தன்னை ஒரு சுய விமரிசனத்திற்கு வலிய ஆட்படுத்திக்கொள்ளும் தோரணையில் அவள் தயாராக, அவன் "உங்களைப் பற்றி நெனைக்கறத்துகு என்ன இருக்கு?.. நீங்க படிச்சவங்க.  அலுவலகத்தில் வேலை பாக்கறவங்க. சோஷலாப் பழகறத்துக்குத் தெரிஞ்சவங்க, வாழ்க்கைய ரசிக்கணும்ன்னு ஆர்வமுள்ளவங்கன்னு தெரியறது.." என்று சொன்னால் அவளுக்கு பிடிக்காமல் போகாது என்று சொல்லி வைக்கிறான் சாரங்கன்..

அவள் மென்மையாகச் சிரிக்கிறாள்.  "ஓ, மிஸ்டர் சாரங்கன், நீங்க சரியான ஆள்தான்.." என்று கண்களைச் சுழற்றி அந்த அறையையே ஒரு பார்வை பார்த்து விட்டு, "ஆல்ரைட்.. நீங்க கடைசிலே சொன்னீங்களே, வாழ்க்கையை ரசிக்கணும்ன்னு ஆர்வம் உள்ளவங்கன்னு-- அதுக்கு, அந்த வாக்கியத்துக்கு அர்த்தம் என்ன?" என்று சிரித்துக் கொண்டே கேட்கிறாள்.

"அதுக்கு--" என்று இழுத்து விட்டு, இதற்கு என்ன பதில் சொல்வதென்று ஒரு வினாடி மடங்கிய யோசனையில் தடுமாறி விட்டு அதே சமயத்தில் தன் பதிலைக் கொண்டே தன்னை மடக்கும் இவளிடம் தான் மடங்கி விடக்கூடாதென்ற சுயபிரக்ஞையில் ஜாக்கிரதையாக வார்த்தைகளை வெளிப்படுத்துகிறான் சாரங்கன்.

"அதுக்கு என்ன அர்த்தம்? வாழ்க்கையை ரசிக்கறத்துக்கு நா எந்த அசாதரணமான அர்த்தத்தையும் மனசிலே வைச்சிண்டு சொல்லலே, கமலி.. அதுக்கு நா உணர்ற அர்த்தம் இது தான்:  நாம வாழற ஒவ்வொரு வினாடியும் நிஜம்னு நீங்க நெனைக்கிறீங்கன்னு நான் நெனைக்கிறேன். பொய் இல்லாத நிஜம் அது, இல்லையா.. அதுனாலே, அந்தந்த நிமிஷத்திலே சந்தோஷமா வாழ்வோம்'னு நீங்க நெனைக்கிறீங்க.. இந்த உடம்பிலே உயிரோட்டம் நின்ன பின்னாடி அது மண்ணோட மண்ணா மக்கிப் போகப்போறதே-- அதான், நிஜம்;  போன பிறப்பும் கிடையாது, அடுத்த பிறப்பும் கிடையாது.  எல்லாம் கதை; உடான்ஸ்.  இப்போ இந்த நிமிஷத்திலே நாம வாழறோமே அதான் உண்மை.  சொர்க்கம்ன்னு ஒண்ணு இருக்கணும்ன்னா, அது இந்த வாழ்க்கைலே தான் இருக்கணும்; அதை நாமே தான் உண்டாக்கிக்கணும்ன்னு நீங்க நெனைக்கிறீங்கன்னு நா நெனைக்கிறேன்.." என்று, தான் பேசும் விஷயம் குறித்து அவள் முகத்தில் ஏற்படும் மாறுதல்கள் மூலம் ஏதாவது தெரிந்து கொள்கிற முயற்சியில் அவள் முகத்தை உன்னிப்பாகக் கவனித்தபடி சொல்கிறான் சாரங்கன்.

அதே நேரத்தில் வாழ்க்கையின் பல விஷயங்களில் எதிராளியின் கருத்து என்னாவாக இருக்கக் கூடும் என்பதைத் தெரிந்து கொள்வதில் கமலி ரொம்பவும் கவனம் எடுத்துக் கொள்வதாக அவனுக்குப் படுகிறது.  ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான வாழ்க்கை ஒப்பந்தத்தைத் தீர்மானிக்கும் விஷயங்களாக இதெல்லாம் தான் இருக்கும் என்று இதெற்கெல்லாம் தான் அவள் முக்கியத்துவம் கொடுப்பதாக அவனுக்குத் தோன்றுகிறது. தான் அதிகமாகப் பேசுவதற்கு ஏதுவாக அவள் அடக்கி வாசிக்கிறாள் என்கிற உணர்வு ஏற்பட்டதும், அவள் தன்னிடம் கேட்க விரும்பும் இந்த விஷயங்களிலெல்லாம் அவள் கருத்து என்னவாக இருக்கக்கூடும் என்று தெரிந்து கொள்வதில் அவன் ஆர்வம் அதிகரிக்கிறது.

"ஃபைன், சாரங்கன்!  இன்னொருத்தரோட உணர்வுகளைப் புரிஞ்சிக்கற சக்தி உங்களுக்கு ரொம்ப இருக்கு.." என்று அவன் சொன்னதை மிகவும் சிலாகித்துப் பாராட்டுகிறாள் கமலி. "சாரங்கன், நா ஒண்ணு கேக்கறேன்.  தப்பா நெனைச்சிக்க மாட்டீங்களே"

"நோ.. நீங்க எதைப் பத்தி வேணும்னாலும் கேக்கலாம்.." என்று மையமாகப் புன்னகை செய்கிறான் சாரங்கன்.

"இப்போ நாம ரெண்டு பேரும் நெருங்கிப் பேசிண்டு தான் நடந்து வந்தோம். இப்போ இந்த அறைலே உக்காந்திருக்கிற சில பேர் கூட நம்மை நெருக்கமா கவனிச்சிருக்கலாம்.  உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாரானும் கூட நம்மைப் பாத்திருக்கலாம்.  இவங்கள்லாம், அதாவது இந்தச் சமூகத்தின் பிரதிநிதிகளான இவங்கள்லாம் ஒரு பெண்துணையோடு நெருக்கமா பழகற உங்களைப் பத்தி ஏதோ ஒரு விமரிசனக் கண்ணோட கூர்ந்து பாக்கறாங்கங்கறதையும், அதையே மையமா வைச்சு உங்க தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றியும் ஒரு கதையைச் சிருஷ்டிக்க எந்த நிமிஷமும் அவங்க தயாரா இருக்காங்கறதையும் நீங்க நெனைச்சுப் பாத்தீங்களா? ஆர் யூ ஏபிள் டு ஃபாலோ மீ?" என்று யோசனையுடன் கேட்கிறாள் கமலி.

"எஸ்...எஸ்.. எனக்குப் புரியறது.." என்று அவசரமாக அவள் சொல்வதை அங்கீகரிக்கிறான் அவன். "அதனால் என்ன.. நம்ம ரெண்டு பேருக்கும் இடையே ஒரு நீடித்த பந்தத்தையும் உறவையும் ஏற்படுத்திக்கத் தானே இந்த சந்திப்பெல்லாம்.. அது தெரியாத யாரேனும் இது பற்றி என்ன நினைத்தால் தான் என்ன?.." என்று புன்னகையுடன் அப்படியான எதுவும் தன்னைப் பாதிக்கப் போவதில்லை என்கிற தீர்மானத்தில் சொல்கிறான் சாரங்கன்.


(தொடரும்)


16 comments:

Thulasidharan V Thillaiakathu said...

கூட நடக்கும் பொழுது அவனுக்கும் தனக்கும் ஒரு ஆள் நிற்கிற இடைவெளி விட்டுத் தொடர்கிறாள் கமலி.// ரொம்பவே ஜாக்கிரதை உணர்வு கமலி! இது பொதுவாகவே பெண்களின் ஜாக்கிரதை உணர்வு.

சாரங்கணின் எண்ணங்கள் மோசமாக இல்லை என்றாலும் சாரங்கனின் உரையாடல்கள் ரொம்பவே கவனமாகப் பேச, கமலியை கவரும் விதத்தில் இருக்கணும் என்று நினைத்துப் பேசுகிறானோ?!

என்றாலும் சாரங்கனின் புத்தகத்தில் வாசித்ததாகச் சொல்லும் வரிகளை ரசித்தேன்..

கமலி சாரங்கனை நேர்முகக் காணல் போன்று தோன்றுகிறது...

கமலியின் இறுதிக் கேள்வியும் அந்த ஜாக்கிரதை உணர்வு மற்றும் சமூகத்தின் மூன்றாவதுமனிதரின் எண்ணங்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரிகிறது. அவனது பதில் கமலியைத் திருப்தி படுத்தியதா...அறிய ஆவலுடன் தொடர்கிறோம்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நிறைய உரையாடல் வரிகள் அருமை! ரசித்தேன் ஸார்..

கீதா

வே.நடனசபாபதி said...

‘வாழ்க்கையை ரசிக்கணும்ன்னு ஆர்வம் உள்ளவங்கன்னு சொன்னீங்களே அதுக்கு, அந்த வாக்கியத்துக்கு அர்த்தம் என்ன?’ என்று கமலியின் கேள்விக்கு ‘இப்போ இந்த நிமிஷத்திலே நாம வாழறோமே அதான் உண்மை. சொர்க்கம்ன்னு ஒண்ணு இருக்கணும்ன்னா, அது இந்த வாழ்க்கைலே தான் இருக்கணும்; அதை நாமே தான் உண்டாக்கிக்கணும்ன்னு நீங்க நெனைக்கிறீங்கன்னு நா நெனைக்கிறேன்’ என்ற சாரங்கனின் பதில் சாதுர்யமான ஆனால் தீர்க்கமான பதில்.

‘ ஒரு பெண்துணையோடு நெருக்கமா பழகற உங்களைப் பத்தி ஏதோ ஒரு விமரிசனக் கண்ணோட கூர்ந்து பாக்கறாங்கங்கறதையும், அதையே மையமா வைச்சு உங்க தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றியும் ஒரு கதையைச் சிருஷ்டிக்க எந்த நிமிஷமும் அவங்க தயாரா இருக்காங்கறதையும் நீங்க நெனைச்சுப் பாத்தீங்களா? ‘என்ற கமலியின் கேள்விக்கு ‘நம்ம ரெண்டு பேருக்கும் இடையே ஒரு நீடித்த பந்தத்தையும் உறவையும் ஏற்படுத்திக்கத் தானே இந்த சந்திப்பெல்லாம்.. அது தெரியாத யாரேனும் இது பற்றி என்ன நினைத்தால் தான் என்ன?.." என்று புன்னகையுடன் அப்படியான எதுவும் தன்னைப் பாதிக்கப் போவதில்லை என்கிற தீர்மானத்தில் சொன்ன சாரங்கனின் பதில் யதார்த்தமானது.

சர்வ ஜாக்கிரதையுடன் பழக நினைக்கும் கமலியின் உள்ளப்போக்கை அறிந்து அதற்குத் தகுந்தாற்போல் சாரங்கன் பதில் சொல்கிறாரோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.

கமலி இனி எழுப்ப இருக்கும் கேள்விக் கணைகளை சாரங்கன் எவ்வாறு எதிர்கொண்டு கமலியின் மனதில் இடம் பிடிக்கப்போகிறாரேன்று அறிய காத்திருக்கிறேன்.


G.M Balasubramaniam said...

ஏனோ தெரியவில்லை என் பதிவுகளுக்கு பின்னூடம் எழுதும்போதுஎன்ன மன நிலையில் இருப்பீர்களோ அதேபோல் இருக்கிறது கமலி சார்ங்கன் சந்திப்பும் சம்பாஷணைகளும் நூல் விட்டுப் பார்ப்பதுபோல்

நெல்லைத் தமிழன் said...

இருவரும் ஒருவரை ஒருவர் ஆழம்பார்க்க நினைக்கிறார்களோ? அதிலும் கமலி மிகவும் முன் ஜாக்கிரதை உணர்வுடன் அணுகுவதாகப் படுகிறது. சாரங்கனுக்கோ அவளிடம் நல்ல இமேஜைக் காண்பிக்கணுமே என்ற எச்சரிக்கை உணர்வு.

வெளியிடப்பட்ட ஓவியம், கதைக்கான ஓவியமாக வந்திருந்ததா? படத்தின் கேரக்டர்கள், ரவிக்குமார், காஞ்சனாவை மாடலாகக் கொண்டு வரையப்பட்ட ஓவியம்போல் தோன்றியது.

தொடர்கிறேன்.

ஜீவி said...

@ துளசிதரன்.தி.

கமலியைக் கவர வேண்டும் என்ற உணர்வைத் தாண்டி அறிவார்ந்த ஒரு பெண்ணிடம் உரையாடுகையில் இயல்பாகவே பேச்சில் கவனம் கூடும் இல்லையா, அப்படியான ஒரு நிலையில் சாரங்கன் இருப்பதாகவும் கொள்ளலாம்.

இன்னொரு பக்கம் கமலி.. இருவருக்கிடையேயான பொதுவான உரையாடலை, சம்பந்தப்பட்ட இருவருமே தங்களின் தனிப்பட்ட விஷயத்திற்குப் பாலம் போடுவதற்காக உபயோகிக்கொள்ள முயற்சிக்கிறார்கள் என்றும் கொள்ளலாம்.

தொடர்ந்து வாசித்து எண்ணங்களைப் பகிர்வதற்கு நன்றி, துளசிதரன்!
ஜீவி said...

@ கீதா

ஒரே பெயரில் வரும் பின்னூட்டத்திற்கு பதிலளிக்கையில் லேசான தடுமாற்றம்.

உரையாடல்களை ரசித்து வாசித்து மகிழ்ந்தமைக்கும் தங்களின் மற்ற எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி, கீதா.

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

ஆழமான வாசிப்பு ரசனைகளுக்கு நன்றி, ஐயா.

கதையின் போக்கில் குறுக்கிடும் முக்கியமான விஷயங்களை அடிக்கோடிட்டுப் பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி.

தொடர்ந்து வாசித்து வர வேண்டுகிறேன்.

ஜீவி said...

@ GMB

கதை எழுதினால் என்ன கட்டுரை சமைத்தால் என்ன பின்னூட்டம் போட்டால் என்ன எழுதுகிறவனுக்கு வசப்பட்ட அவன் எழுத்து நடையே இயல்பாய் வரும். பல வருடங்களுக்கு முன்னாலும் இதே எழுத்து நடையைத் தான் நான் கொண்டிருந்திருக்கிறேன் என்ற உண்மை தங்கள் பின்னூட்டத்தினால் உணர்ந்தேன்.
நன்றி, ஐயா!

நூல் விட்டுப் பார்க்காவிட்டாலும் என்ன நோக்கத்தில் வாசிப்பது எழுதப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதில் நான் கவனம் கொள்வதுண்டு. அதே மாதிரியான நோக்கமே எதைச் சொல்வதற்காக எழுதுகிறோம் என்கிற கவனமாய் படியும் பொழுது elaborate- ஆக எழுத நேரிடுகிறது.

உணர்ந்ததை உணர்ந்தவாறே வெளிப்படுத்திய தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

கோமதி அரசு said...

//"இப்போ நாம ரெண்டு பேரும் நெருங்கிப் பேசிண்டு தான் நடந்து வந்தோம். இப்போ இந்த அறைலே உக்காந்திருக்கிற சில பேர் கூட நம்மை நெருக்கமா கவனிச்சிருக்கலாம். உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாரானும் கூட நம்மைப் பாத்திருக்கலாம். இவங்கள்லாம், அதாவது இந்தச் சமூகத்தின் பிரதிநிதிகளான இவங்கள்லாம் ஒரு பெண்துணையோடு நெருக்கமா பழகற உங்களைப் பத்தி ஏதோ ஒரு விமரிசனக் கண்ணோட கூர்ந்து பாக்கறாங்கங்கறதையும், அதையே மையமா வைச்சு உங்க தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றியும் ஒரு கதையைச் சிருஷ்டிக்க எந்த நிமிஷமும் அவங்க தயாரா இருக்காங்கறதையும் நீங்க நெனைச்சுப் பாத்தீங்களா? ஆர் யூ ஏபிள் டு ஃபாலோ மீ?" என்று யோசனையுடன் கேட்கிறாள் கமலி.//

கமலிக்கும் அது போல் இருக்குமே! கமலியை அப்படி யாரானும் பார்க்கலாம், கதையை சிருஷ்டிக்கலாம் தானே? அதை ஏன் சாரங்கன் உங்களுக்கும் பிரச்சனை உண்டே என்று கேட்கமால்

//‘நம்ம ரெண்டு பேருக்கும் இடையே ஒரு நீடித்த பந்தத்தையும் உறவையும் ஏற்படுத்திக்கத் தானே இந்த சந்திப்பெல்லாம்.. அது தெரியாத யாரேனும் இது பற்றி என்ன நினைத்தால் தான் என்ன?.." //

என்று கமலியை கேட்கிறார். அவளை எப்படியும் கமலியை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் எண்ணமே சாரங்கன் உரையாடலில் இருப்பது தெரிகிற்து.


ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

ஆழம் பார்க்க அல்ல, தீர்க்கமாக அறிந்து கொள்ள முயல்கிறார்கள்.

//அதிலும் கமலி மிகவும் முன் ஜாக்கிரதை உணர்வுடன் அணுகுவதாகப் படுகிறது. சாரங்கனுக்கோ அவளிடம் நல்ல இமேஜைக் காண்பிக்கணுமே என்ற எச்சரிக்கை உணர்வு.//

அப்படியானால் சரி. இரண்டு பேரிடமும் அதற்கான காரணங்கள் உண்டு.

//வெளியிடப்பட்ட ஓவியம், கதைக்கான ஓவியமாக வந்திருந்ததா?//

ஆமாம். அதை விட முக்கியமானது இந்தப் படம் வரைந்த ஓவியரைப் பற்றி உங்களுக்குச் சொல்லியாக வேண்டும்.

அவர் பெயர் க. தண்டபாணி. கோவையில் அந்த நாட்களில் வசித்தவர். ராஜேஷ்குமார் பிரபலமடைவதற்கு முன்னால், சித்திரக்கதைப் புத்தகமாய் 'ஸ்வீட்' என்ற பெயரில் சிறு பத்திரிகை ஒன்று கோவையிலிருந்து வெளிவந்தது. அந்த ஸ்வீட் இதழில் ராஜேஷ்குமார்
கதைகளுக்கு இவர் தான் சித்திரங்கள் வரைவார்.

ஓவியர் தண்டபாணி அவ்வளவு வசதி இல்லாதவர். கோவையிலிருந்து வெளிவந்த 'வான்மதி' என்னும் மாதப்பத்திரிகைக்கு ஆஸ்தான ஓவியர் இவர் தான். 'வான்மதி'யில் வெளிவரும் என் கதைகளுக்கு ஓவியம் வரைவதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது தான் சித்திரம் போடும் என் கதைகளைப் பாராட்டிக் கடிதம் போடுவார். 'வான்மதி' பத்திரிகைக்கு ஆசிரியராய் அழகாபுரி அழகப்பன் அப்போது இருந்தார். கோவையில் வசித்தும் 'வான்மதி' இதழுக்கு ராஜேஷ்குமார் ஏதும் எழுதியதில்லை.

நான் அப்பொழுது குன்னூரில் வசித்து வந்தேன். ஓவியர் தண்டபாணி, 'ஸ்வீட்' இதழ்கள் சிலவற்றை எனக்கு அனுப்பி வைத்ததால் தான் ஸ்வீட் இதழ் பற்றி எனக்குத் தெரிய வந்தது.

பிற்காலத்தில் 'சில கசப்பான உண்மைகள்' என்ற பெயரில் 'வான்மதி' இதழில் என் தொடர்கதை ஒன்று வெளிவந்து கொண்டிருந்த நேரத்தில் இதழ் இனி வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டு நிறுத்தப்பட்டது. அந்தப் பத்திரிகையை மிகுந்த ஆர்வத்துடன் வெளியிட்ட இராம. அரங்கநாதன் என்ற பெரிய மனிதருக்கு (இவர் ஆசிரியர் சாவிக்கும், ஜாவர் சீதாராமனுக்கும் மிகவும் நெருங்கிய நண்பர்) பத்திரிகை நின்றதை விட, எனது அந்தத் தொடரை முழுதும் வெளியிட முடியாமல் போய்விட்டதே என்று மிகுந்த வருத்தம். அதைக் குறிப்பிட்டு தனிப்பட்ட முறையில் கடிதமும் எழுதியிருந்தார்.

சரி. விஷயத்திற்கு வருவோம். ராஜேஷ் குமார் ஊருக்கு உலகுக்குத் தெரிந்த மிகப் பிரபலமான எழுத்தாளர் ஆன நேரத்து ஏதோ ஒரு பிரபல பத்திரிகையில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என்று போட்டிருந்தது. திரு. க. தண்டபாணியைப் பற்றி ராஜேஷ்குமாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் ஸ்வீட் இதழைப் பற்றிக் குறிப்பிட்டு அவரது பழைய ஏழை நண்பர் ஓவியர் தண்டபாணியைப் பற்றிக் கேட்டு கடிதம் போட்டிருந்தேன். ஓவியர் தண்டபாணிக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்ய வேண்டும் என்று மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தேன்.

ஆனால் அந்தப் பத்திரிகையில் என்ன காரணத்தினாலோ ராஜேஷ்குமாரிடம் நான் கேட்டிருந்த கேள்வி பிரசுரமாகவில்லை.

ஜீவி said...

@ கோமதி அரசு

//கமலிக்கும் அது போல் இருக்குமே! கமலியை அப்படி யாரானும் பார்க்கலாம், கதையை சிருஷ்டிக்கலாம் தானே? //

லாம் தான். ஆனால் கமலிக்கோ இது பற்றி சாரங்கன் என்ன எண்ணம் கொண்டிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்வது தான் முக்கியமாகப் படுகிறது. (அவள் கேள்விகள் மூலம் எதிராளியைத் தீர்மானிப்பதில் தீவிரமாக இருப்பதால்)

//அவளை எப்படியும் கமலியை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் எண்ணமே சாரங்கன் உரையாடலில் இருப்பது தெரிகிற்து.//

ஆமாம். இந்தக் கேள்விக்கு பதிலளிப்பதின் மூலம் தன் நோக்கத்தை கமலிக்குத் தெளிவாகத் தெரிவிக்க அவளின் இந்தக் கேள்வியை உபயோகப்படுத்திக் கொள்கிறான் சாரங்கன்.

Geetha Sambasivam said...

ஆரம்பத்திலேயே இருவரும் இவ்வளவு முன் ஜாக்கிரதையுடன் பேசுவது சற்றும் இயல்பாகத் தெரியவில்லை. அதோடு அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க வேலை தான் முக்கியமாக இருக்கும். இவங்க இரண்டு பேரைப் பற்றியா யோசிப்பார்கள்? இதே போல் பலரும் வரலாமே! தெரிஞ்சவங்க இருந்தால் வேணா என்னடா இதுனு யோசிக்கலாம், அல்லது ஆச்சரியப்படலாம். தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டியது தாங்கள் இருவர் மட்டும் தான் என்பதை முதலில் இவங்க உணரட்டும்! அப்புறமா மத்தவங்க என்ன நினைப்பாங்கனு யோசிக்கலாம். நம்ம மேல் தப்பில்லைனா யார் என்ன நினைச்சாலும் தூக்கியும் எறியலாம்.

Geetha Sambasivam said...

கமலி காத்திருக்கிறாள் பகுதி3 என எங்கள் ப்ளாக் சொல்கிறது. ஆனால் அந்தப் பக்கம் இல்லை. எரர் வருகிறது.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

//ஆரம்பத்திலேயே இருவரும் இவ்வளவு முன் ஜாக்கிரதையுடன் பேசுவது சற்றும் இயல்பாகத் தெரியவில்லை. //

தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டியது தாங்கள் இருவர் மட்டும் தான் என்பதை முதலில் இவங்க உணரட்டும்!-- அதற்குத் தான் முன் ஜாக்கிரதை போலும்.

// நம்ம மேல் தப்பில்லைனா யார் என்ன நினைச்சாலும் தூக்கியும் எறியலாம்.//

கரெக்ட்! ஹியர் கமலி!

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

// கமலி காத்திருக்கிறாள் பகுதி3 என எங்கள் ப்ளாக் சொல்கிறது. ஆனால் அந்தப் பக்கம் இல்லை. எரர் வருகிறது.//

இந்த மாதிரி எரர் வராமே பாத்துக்கறது உங்க கைலே தான் இருக்கு! எரர் வரலேன்னா இது முந்தின பகுதிக்குப் போட்ட பின்னூட்டமா போயிருக்குமிலே!..

Related Posts with Thumbnails