Wednesday, September 6, 2017

கமலி காத்திருக்கிறாள்...

பகுதி: 3


  முன்பகுதி:    http://jeeveesblog.blogspot.in

சாரங்கன் சொன்ன பதில் கமலிக்குத் திருப்தியாக இருக்கிறது.

"வெரிகுட்.." என்று அனிச்சையாக அவள் உதடுகள் முணுமுணுக்கின்றன.

 "அப்போ, சாரங்கன்.. ரொம்ப சரி.. என்னோட கணக்குத் தப்பில்லை.  வித்தியாசமான உங்க பதில்களிலேயே உங்க தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் உணர்கிறேன்.  போகப்போக இன்னும் நா சொல்லப்போற விஷயங்களைக் கேட்டு நீங்க என்ன முடிவுக்கு வரப்போறீங்களோ, எனக்குத் தெரியாது.. ஆனா, ஒண்ணு மட்டும் நிச்சயம், சாரங்கன்..    சில பிரச்னைகளைப் பத்தி விவாதிக்க, அது பத்தி ஒரு சுதந்திரமான முடிவை நாம எடுக்கத் தான் நம்ம ரெண்டு பேருக்கிடையே இப்படியான ஒரு சந்திப்பு அவசியம்ன்னு நா நெனைச்சேன்.  உங்க பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்ததும் எனக்கேற்பட்ட சந்தோஷத்தை இப்போ உங்களோட பகிர்ந்துக்க ஆசைப்படறேன். எவ்வளவு துணிச்சலான முற்போக்கான விளம்பரம் அது!.. உங்க விளம்பர வாசகங்கள் தான் என்னை இழுத்துக் கொண்டு வந்து இப்போ உங்க முன்னாடி உக்காத்தி வைச்சிருக்கு.. அந்த வாசகங்களின் கீர்த்தியின் அடிப்படியில் தான் என்னோட தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கைலே பங்கு பெற, அது பத்திப் பேச உரிமையோட உங்களுக்கு அனுமதி அளிச்சிருக்கேன்.  காரணம் இதுலே உங்களோட பங்கு மகத்தானதாக இருப்பதால் தான்.  இதுலே சுதந்திரமான ஒரு முடிவுக்கு வர்றத்துக்கு உங்களுக்குப் பூரண உரிமையுண்டு.  அதுக்கு முன்னாடி, நீங்க தவறா நெனைக்கலேனா, உங்களை நா சில கேள்விகள் கேட்க அனுமதிப்பீங்களா?" என்று பவ்யமாகக் கேட்கிறாள் கமலி.

"ஓ..எஸ்.. நீங்க கேக்கலாம்.." என்று அவள் பேசும் பாணியில் தன்னையே மறந்திருக்கும் சாரங்கன் சம்மதம் தெரிவிக்கிறான்.

"உங்களோட ரெண்டு மூணு தடவைகள்  தான்     ஃபோன்லே  பேசிருக்கேன்.    இன்னிக்குக் காலம்பற கூட போனை எடுத்ததுமே நான்னு தெரிஞ்சதும், உங்களோட போனுக்காகத் தான் காத்திண்டிருக்கேன்னு நீங்க சொன்னதும் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது, தெரியுமா சாரங்கன்.. ஓ.. இட் ஈஸ் கிரேட்!  பாலைவனத்திலே சோன்னு மழை பெஞ்ச மாதிரி அது..  என்னோட சந்தோஷத்தை விட்டுத் தள்ளுங்கள். என் போன் காலுக்காக காத்திண்டிருக்கேன்னு சொன்னீங்களே, அப்படி மனப்பூர்வமா உங்களை காக்க வைச்ச சக்தி, அதுக்கான காரணத்தை நான் தெரிஞ்சிக்கலாமா, சாரங்கன்?"

இந்தத் தடவை சாரங்கன் பலமாகச் சிரிக்கிறான். அவன் விரல் நுனிகள் டேபிளில் கொஞ்சமே சிதறியிருக்கும் தேநீர் துளிகளைக் கோடுகளாக இழுக்கின்றன. "ஓ! என்ன வெளிப்படையா ஒரு கேள்வியைக் கேக்கிறீங்க, கமலி.. இதுக்குக் கூட நா பதில் சொல்லியே தீரணுமா?" என்கிறான்.

"கட்டாயமா, என்னோட எந்தக் கேள்விலேந்தும் நீங்க தப்பிச்சிண்டு நழுவிட முடியாது" என்று லேசாகச் சிரித்துக் கொண்டு ஆள்காட்டி விரலை அவனை நோக்கி விளையாட்டாக பத்திரம் காட்டுகிறாள் கமலி.

"இந்தக் கேள்விக்குக் கூட.."

"நிச்சயமா.."

"சரி. சொல்றேன்--" என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்துப் புன்னகைத்தான் சாரங்கன். "சொல்லப்போனா மூணே  தடவைகள் தான் நாம போன்லே பேசி இருக்கோம்.  உங்களைப்  பத்தித் தெரிஞ்சிக்க அதுவே போதும்ன்னு எனக்குத் தோண்றது.  ஏன்னா, முதல் தடவை தயங்கித் தயங்கி என்னோட நீங்க பேசினப்பவே,  உங்க குரல் எனக்கு ரொம்பவும் பிடிச்சுப் போயிடுத்து. அந்தக் குரலில் இனிமை மட்டுமில்லை, அதுலே ஒரு போதை இருந்ததுன்னு கூடச் சொல்லலாம். ரொம்ப நாள் பேசிப் பழகினதுக்கு அப்புறம் தான் ஒருத்தரைப் பத்தித் தெரிஞ்சிக்க முடியும்ன்னு இல்லே. பேச்சிலே, எழுத்திலேலாம் ஒருத்தரோட மனசு தெரிஞ்சிடும். அப்படி ஒருத்தர் மனசைப் படிக்கத் தெரிஞ்சிருந்தா, அப்படித் தெரிஞ்சிக்கறதுக்கு ஓரிரு சந்தர்ப்பங்கள் கிடைச்சாப் போதும். உங்களுக்கு ஞாபகம் இருக்கா.. பேப்பர்லே என்னோட விளம்பரத்தைப் பார்த்திட்டு நம்ம ரெண்டு பேருக்கு இடையேயான பேச்சை நீங்க தான் ஆரம்பிச்சு வைச்சீங்க.. அன்னிக்கு நீங்க எங்கிட்டே பேசினது ரெண்டு நிமிஷத்துக்கு மேலே இருக்காது. இருந்தாலும் அந்த  ரெண்டு    நிமிஷமே எனக்குப் போதுமானதா இருந்தது, நாம் ரெண்டு பேருமே ஒரே அலைவரிசை சிந்தனை உள்ளவங்கன்னு தெரிச்சிக்கறத்துக்கு..

ஒரு  சங்கீதக் கச்சேரியைக் கேட்பது போல அரைக்கண் மூடிய மோன நிலையில் தான் சொல்வதை முழுமையான ஆழத்துடன் கேட்டுக் கொண்டிருக்கும் கமலியை உன்னிப்பாகப்  பார்த்துக் கொண்டே சாரங்கன் தொடர்கிறான்:  "அடுத்த நாள் பேசினப்போ தான் எங்கிட்டே, ராகுல சாங்கிருத்தியானின் 'வால்காவிலிருந்து கங்கை வரை' புஸ்தகத்தைப் பத்திச் சொன்னீங்களா.. நீங்க சொன்னதினாலேயே அந்தப் புஸ்தகத்து மேலே ஒரே கிரேஸாயிடுத்து. அந்தப் புஸ்தகத்தைப் பத்திக் கேள்விப் பட்டிருக்கேனே தவிர படிச்சதில்லே.. உங்ககிட்டே அன்னிக்குப் பேசி போனை வைச்சதுமே ஹிக்கின்பாதம்ஸ் போய் அந்தப் புஸ்தகத்தை வாங்கிண்டு வந்தேன். அன்னிக்கே அதைப் படிச்சு முடிக்கறத்தே, ராத்திரி மணி மூணு!  அந்தப் பின் இரவிலும் இப்படிப் பட்ட அருமையான ஒரு புஸ்தகத்தை எனக்கு அறிமுகப்படுத்திய உங்கள் ஞானம் என் மனசிலே பிரமிப்பாத் தேங்கிப் போயிடுத்து..  அதுக்கப்புறம், நீங்க கூப்பிட்டுப் பேச மாட்டீங்களான்னு ஒரு ஏக்கமே என்னுள் ஏற்பட ஆரம்பிச்சது..  உங்களை நேர்லே பாக்கற ஆசை. அதனாலத் தான் அன்னிக்கு உங்க ஆபீசுக்கு வந்தது.."

மாணவர் குழாத்திற்கு கஷ்டமான கணக்கை விளக்கும் ஓர் ஆசிரியன் போல் தொடர்ந்து சாரங்கன் தன் உணர்வுகளைக் கமலிக்குக் கூறுகிறான்: "பத்திரிகைலே நான் கொடுத்திருந்த விளம்பரத்தைப் பத்திச் சொன்னீங்க. அப்படியான ஒரு விளம்பரம் என்னை பிரதிநிதித்துவப் படுத்துவதாக நீங்கள் நினைப்பதிலும் எந்தப் பிழையும் இல்லை.  வாழ்க்கை ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு விதத்தில் வார்த்தெடுக்கிறது.  அவங்க அவங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் தான் அந்த வார்ப்புக்கும் காரணமாகிப் போகிறது. என்னோட வார்ப்பு, நான் அடைஞ்ச அனுபவங்களுக்கும், அந்த அனுபவங்களினால் என்னுள் உருவான என் உணர்வுகளுக்கும் சொந்தமானது.. என் மாதிரியான அனுபவம் ஏற்படாத ஒருத்தருக்கு என் அனுபவம் புதுசாகவோ இல்லை பாமரத்தனமாகவோ இருக்கலாம். இதையே இன்னொரு கோணத்திலே கூடப் பார்க்கலாம்.. நா எப்படிப்பட்ட உணர்வுகளை அனுபவிச்சேனோ, எப்படிப்பட்ட உணர்வு என்னை ஆட்டுவிச்சதோ, அதே உணர்வுகளை நீங்களும் அனுபவிச்சதினாலே தான், அதே உணர்வு உங்களையும் ஆட்டுவிச்சதினாலே தான் என்னோட பேசினதற்கும், இப்போ இங்கே என்னை வரவழைச்சதற்கும் காரணம்ன்னு நா முடிவுக்கு வர்றதிலேயும் தப்பில்லை தானே?"

கமலி கலகலவென்று சிரிக்கிறாள். "மிஸ்டர் சாரங்கன்.. நீங்க உங்க மனசிலே இருக்கறதை வெளிப்படையாச் சொன்னதுக்கு நன்றி.  என்னை நேரிலே பாத்ததுக்குப் பின்னாடியும் அப்படியே பேசறதினாலே நம் நட்பு மீதான உங்கள் விருப்பத்தில் மாற்றம் ஏதும் இல்லைன்னு தெரியறது.. ஆம் ஐ கரெக்ட்?.."

"அப்கோர்ஸ்.." என்று புன்னகை பூக்கிறான் சாரங்கன்.

"அந்த உங்களோட விருப்பம், வெறும் விருப்பம்ங்கற நிலைலேயே இருக்கா இல்லை அதைத் தாண்டி வேறே ரூபம் அடைஞ்சிருக்கான்னு தெரியணும் சாரங்கன்.  வேறே ரூபம் பெற்றிருந்தா என்னைப் பத்தி நிறைய உங்களுக்குச் சொல்லணும்.  என்னை விட ரெண்டு வயசு கூட உங்களுக்குன்னு உங்களோட விளம்பரம் பாத்துத் தெரிஞ்சிண்டேன். அதைத் தாண்டியும் உங்களைப் பத்தித் தெரிஞ்சிக்க ஆசைப்படறேன்" என்று சொல்லியபடியே தான் உட்கார்ந்திருந்த நாற்காலியை கொஞ்சம் முன்னுக்கு நகர்த்தி சாரங்கனின் முகம் பார்த்துப் பேசுவதற்கு வாகாக உட்கார்ந்து கொண்டாள் கமலி.

இப்பொழுது தான் முதல் முறையாகப் பார்ப்பது போல சாரங்கன் நேருக்கு நேராக கமலியை நிமிர்ந்து பார்க்கிறான். அந்தப் பார்வையில் ஒருவித மென்மை இருந்ததே தவிர எந்த விகல்பமும் இல்லை.   கமலிக்கோ  அவனது மேடிட்ட நெற்றியும், தீட்சண்யமிக்க கண்களும் ஒரு நல்ல ஆண்மகனின் துணை கிடைத்த சந்தோஷமாய் நெஞ்சில் ஜீவநதிப் பிரவாகம் பொங்கிற்று. 'பெண்ணே, பட்ட கஷ்டம் போதும், எதிலும் அவசரப்படுகிறாய். யோசி, யோசி..' என்று அவள் மனக்கோடியின் ஒரு மூலையிலிருந்து ஆலோசனை கிடைத்தது.  'ச்சீய்.. சும்மா இரு' என்று எழும்பிப் பரபரத்த அதை அடக்குகிறாள்.  இந்த நிமிஷமே மனப்பூட்டை உடைத்து தான் பட்ட மனவேதனை அத்தனையையும் சாரங்கனிடம் கொட்டி விட வேண்டும் என்று ஒரு பரப்பரப்பு அவளிடம் தொற்றிக் கொள்கிறது.  அந்த சமயத்தில் அவர்கள் அமர்ந்திருந்த அந்த ரெஸ்டரண்ட் அறையில் அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லாததும் அவர்களது தனிமைக்குப் பங்கம் விளைவிக்காது பாதுகாப்பான சூழலாய் இருக்கிறது.

 "இந்தக் காதல்ங்கற வார்த்தைக்குத் தான் காலத்துக்குக் காலம் மனம் போன போக்கில் எத்தனை மாறுப்பட்ட அர்த்தங்களைக் கொடுக்க துணிஞ்சிட்டாங்க, பாத்தீங்களா?.." என்று 'கபக்'கென்று தீப்பற்றிக் கொண்டாற் போல் கமலி திடும்மென சாரங்கனை நோக்கிக் கேட்கிறாள். "சத்தியமா பாரதி சொன்ன காதல் இப்போ இல்லேனாலும், பாரதியைப் படிச்சதாலே தான் என் மனசிலேயும் பூத்த காதலை உணர முடிஞ்சது, சாரங்கன்!" என்று சொல்லி விட்டு ஒரு வினாடி மெளனமாகிறாள் கமலி.    

அவள் படும் வேதனையை அவள் முகத்திலேயே படிக்க முடிந்ததினால், அவள் சொல்ல முடிந்தவாறு அதைச் சொல்லட்டும் என்று சாரங்கன் பொறுமையாய் காத்திருக்கிறான். கொஞ்ச நேரத்திற்கு முன்னால் குண்டு மல்லிகை போல் மலர்ந்திருந்த அவள் முகம்  இப்பொழுது சாம்பிச் சிறுக்க விழிக்கோடியில் லேசாய் முத்துப் போல் ஒரு நீர்த்துளி பொட்டாய்ப் பளபளக்கிறது.

அவனை நேராய்ப் பார்க்கத் துணிச்சலில்லாதது போல் கொஞ்சமே லேசாய்த் தலை நிமிர்த்தி, "மிஸ்டர் சாரங்கன்!.. ஸீ..." என்று கழுத்துக்குப் பின்பக்கம் கை வைத்து, இத்தனை நேரம் கூந்தலுக்கு அடியே கிடந்த தனது தாலியை வெளியே எடுத்துச் சாரங்கனுக்குக் காட்டுகிறாள் கமலி. "ஸீ.. ஐ ஆம் எ மேரிட்டு கேர்ல்" என்று அவள் உதடுகள் படபடக்க உச்சரித்த பொழுதும் அவள் சொன்ன வார்த்தைகளைச் செவிமடுத்ததில் தான் அடைந்த எந்த திடுக்கிடுதலையும் அவள் உணர்ந்து விடலாகாது என்று சாரங்கன் மெளனம் காக்கிறான்.


(தொடரும்)

15 comments:

நெல்லைத் தமிழன் said...

Transition Periodல வந்த கதை என்று நினைக்கிறேன். அதாவது, பெண்ணுக்கும் உரிமை உண்டு, அவளும் பேசுவாள் என்ற சிந்தனை வர ஆரம்பித்த காலம். அப்போவே இப்படி சிந்தித்திருப்பது வியப்புக்குரியதாகத்தான் இருக்கிறது.

Looks like, திருமணம் என்பதை 'பார்ட்னர்ஷிப்' ஆக அணுகும் முறையில் இருவருமே இருக்கிறார்கள். இந்த மாதிரி புதுமைச் சிந்தனையைப் புகுத்தும்போது வாசகர்களுக்கு நெருடக்கூடாது என்று, சாரங்கன் இரண்டு வயது மூத்தவனாகக் காண்பிக்கிறீர்கள்.

ராகுல காங்கிருத்தியனின் 'வால்கா' நாவலை நிறைய தடவை கேள்விப்பட்டிருக்கிறேன். இன்னும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தொடர்கிறேன்.

வே.நடனசபாபதி said...

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களது கதையில், கதை மாந்தர்களிடையே நிகழும் உரையாடல் யதார்த்தைப் பிரதிபலிப்பதுபோல் இருக்கும். அது போன்ற உணர்வை தங்களின் இந்த தொடரை வாசிக்கும்போது பெற்றேன் என்பது உண்மை/

எடுத்துக்காட்டாக சாரங்கன் கமலியிடம் ‘ரொம்ப நாள் பேசிப் பழகினதுக்கு அப்புறம் தான் ஒருத்தரைப் பத்தித் தெரிஞ்சிக்க முடியும்ன்னு இல்லே. பேச்சிலே, எழுத்திலேலாம் ஒருத்தரோட மனசு தெரிஞ்சிடும்.’ என்றும் ‘வாழ்க்கை ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு விதத்தில் வார்த்தெடுக்கிறது. அவங்க அவங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் தான் அந்த வார்ப்புக்கும் காரணமாகிப் போகிறது.’ என்றும் சொல்வதை சொல்லலாம்.

‘இந்தக் காதல்ங்கற வார்த்தைக்குத் தான் காலத்துக்குக் காலம் மனம் போன போக்கில் எத்தனை மாறுப்பட்ட அர்த்தங்களைக் கொடுக்க துணிஞ்சிட்டாங்க, பாத்தீங்களா?..’ என்று கமலி சாரங்கனைப் பார்த்து கேட்கும் கேள்வி இன்றைய இளந்தலைமுறையினரின் போக்கை பார்த்து சொல்வதுபோல் இருக்கிறது.

பேச்சினூடே அவள் "ஸீ.. ஐ ஆம் எ மேரிட்டு கேர்ல்" என்று அவள் உதடுகள் படபடக்க உச்சரித்த பொழுது சாரங்கன் திடுக்கிட்டதை விட.நான் திடுக்கிட்டேன். மேற்கொண்டு அவள் என்ன சொல்லப்போகிறாள்? அவளுடைய நோக்கம் என்ன/ அதை எவ்வாறு சாரங்கன் எதிர்கொள்ள இருக்கிறான் என அறிய காத்திருக்கிறேன்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

தொடர்ந்து வாசிப்போருக்கு உபயோகமான பின்னூட்டம். நன்றி, நெல்லைத் தமிழன்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//Looks like, திருமணம் என்பதை 'பார்ட்னர்ஷிப்' ஆக அணுகும் முறையில் இருவருமே இருக்கிறார்கள். //

கதையை முழுதாகப் படித்து முடித்த பிறகு உங்களின் இந்த யூகம் பற்றியும் சொல்ல மறக்காதீர்கள்.

கோமதி அரசு said...

//இத்தனை நேரம் கூந்தலுக்கு அடியே கிடந்த தனது தாலியை வெளியே எடுத்துச் சாரங்கனுக்குக் காட்டுகிறாள் கமலி. "ஸீ.. ஐ ஆம் எ மேரிட்டு கேர்ல்" என்று அவள் உதடுகள் படபடக்க உச்சரித்த பொழுதும் அவள் சொன்ன வார்த்தைகளைச் செவிமடுத்ததில் தான் அடைந்த எந்த திடுக்கிடுதலையும் அவள் உணர்ந்து விடலாகாது என்று சாரங்கன் மெளனம் காக்கிறான்.//

சாரங்கனிடம் எப்போது சொல்ல போகிறாள் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.
சொல்லி விட்டாள்.

சாரங்கன் திடுக்கிடுதல் , மெளனம் காத்தல் கமலி சொல்லி முடித்தவுடன் சாரங்கன் பதில் என்னவாய் இருக்கும் என்பதை அறிய ஆவல்.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

என் எழுத்தாசிரியர்களில் பிரதானமானவரைச் சுட்டி அவர் பற்றிச் சொன்னமைக்கு நன்றி, ஐயா.

தங்கள் திடுக்கிடல் நியாயமானதே. ஏறத்தாழ 47 வருடங்களுக்கு முன் இந்தக் கதை பிரசுரமான நேரத்து எப்படியிருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அந்தக் காலத்தில் இப்படியான பிரச்னைகளுக்கு தீர்வை திரைப்படங்கள் எழுத்துக்கள் மூலம் யோசித்தார்கள் என்பது உண்மை. 'எதிர்பாராதது','நெஞ்சில் ஓர் ஆலயம்' போன்ற திரைப்படங்கள் சட்டென்று நினைவுக்கு வருகின்றன.

அந்தக் காலத்தை விட இப்பொழுது சமூகத்திற்கான மாற்றங்களிலும்,
பிரச்னைகளுக்கான தீர்விலும் மிகவும் பின் தங்கிப் போயிருப்பதாக எனது உணர்வு.

இந்தக் கதையை 'வான்மதி' பத்திரிகையில் வெளியிட்டு விட்டு இந்தக் கதை பற்றிய வாதப்பிரதிவாதங்களை வரவேற்று வாசகர்களுக்காக ஒரு போட்டி வைத்திருந்தார்கள்.

கிட்டத்தட்ட 800க்கும் மேற்பட்டவர்கள் அந்தப் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் கருத்தை வெளியிட்டிருந்தார்கள். அந்த அளவிற்கு சமூக மறுமலர்ச்சியில் அன்றைய தலைமுறையினர் ஆர்வம் கொண்டிருந்தார்கள்.

'கமலியை மட்டும் நான் சந்தித்திருந்தால் நிச்சயம் அவரை மணந்திருப்பேன்' என்று திண்டுக்கல்லிருந்து ஒரு வாசகர் சொல்லியிருந்தது இன்னும் நினைவில் நிற்கிறது.

தொடர்ந்து வாசித்து கருத்துக்களைச் சொல்வதற்கு நன்றி, ஐயா.

ஜீவி said...

@ கோமதி அரசு

//எப்பொழுது சொல்லப் போகிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சொல்லி விட்டாள்.//

உணர்வு பூர்வமான வரிகள். இப்படிச் சொல்வாள் என்று தெரிந்திருந்தும் அதைச் சொல்லி விடாமல் சொல்ல வேண்டிய நேரத்திற்கு சொல்லியதற்கு நன்றி, கோமதிம்மா.

ஏற்கனவே வெளியிட்டிருந்த கதையை இனிமேல் தொடரலாம். சாரங்கனின் பதில், மேற்கொண்டான கதை நகர்வை இனிப் பார்க்கலாம்.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி.

Geetha Sambasivam said...

நான் சொல்ல நினைத்ததை ஏற்கெனவே கோமதி அரசு சொல்லி விட்டார்கள். இப்படி ஒன்றை எதிர்பார்த்திருந்தாலும் விவாகரத்தானவர் என்னும்படியே யூகித்திருந்தேன். தாலியை எடுத்துக் காட்டியதை எதிர்பார்க்கவில்லை! இனி எப்படித் தொடரப் போகிறது என்பதை அறியும் ஆவலுடன் காத்திருக்கேன்.

பொதுவாக அறிவுஜீவிகளாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் பெண்களுக்குத் திருமண வாழ்க்கையில் தோல்வி தான் ஏற்படுமோ என்னும் யோசனை வந்தது! பெண் தன்னைக் கொஞ்சம் அசடாகச் சார்ந்திருப்பவளாக இருப்பதே ஆண்களுக்குப் பிடித்தமானது என்றும் தோன்றுகிறது. ஆனால் சாரங்கன் தனி மனித உரிமையை மதிப்பவராகச் சித்திரிக்கப் படுகிறார். பார்க்கலாம், அடுத்து என்ன வரப் போகிறது என்று!

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

ஆண்களுக்குப் பிடித்தமானது என்பதற்காக (கணவனுக்குக் கூட) பெண் தன்னைக் கொஞ்சமாவேனும் கூட அசடாகக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை அல்லவா?

நீங்கள் சொல்வது புரிகிறது. இதற்கு முன் வரியில் நீங்கள் சொல்லியிருக்கிற (பொதுவாக அறிவுஜீவிகளாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் பெண்களுக்குத் திருமண வாழ்க்கையில் தோல்வி தான் ஏற்படுமோ என்னும் யோசனை வந்தது! ) அசடாக இல்லை என்றாலும் அசடாகக் காட்டிக் கொள்கிற நிர்பந்தம் என்று புரிகிறது.

பல விஷயங்களில் 'இதெல்லாம் உன் பாடு; நான் தலையிட மாட்டேன். பார்த்துக்கொள்' என்று இப்பொழுதெல்லாம் ஆண் நழுவி விடுகிற மாதிரியும் வாழ்க்கை அமைப்பு மாறிக் கொண்டு வருவதாகவும் தெரிகிறது.

இப்பொழுதெல்லாம் பெண்கள் ஆண்களை விட எல்லாவிதங்களிலும் கூடுதலாக ஜொலிக்கிறார்கள். ஒருவிதத்தில் ஆண்களுக்கும் பல நேரங்களிலும் நிம்மதியான விஷயமாக இது இருப்பதாகத் தெரிகிறது.

பெண்ணைச் சார்ந்து ஆணும் ஆணைச் சார்ந்து பெண்ணும் இருப்பது வாழ்க்கையின் வெற்றிக்கான திறவுகோல் என்று இருவருமே புரிந்து கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

தன் சுயமரியாதையை மதிப்பவன் இன்னொருவருடைய சுயமரியாதையையும் மதிப்பான் என்பது தான் உண்மையான சுயமரியாதைக்காரனுக்கு அழகு.

பின்னூட்டங்களிலும் பதிவின் விஷயங்கள் அலசப்பட்டால் பதிவு போடுவனுக்குக் கொண்டாட்டம். இதில் எந்த நேரத்திலும் குறையே வைத்ததில்லை நீங்கள்.
மிக்க நன்றி, கீதாம்மா.

G.M Balasubramaniam said...

ஒரு பெண் ஆணைச் சார்ந்து இருப்பதையே விரும்புகிறாள் இதில் இரண்டு லாபம் எதையும் ஆணின் குற்றமாகக் காட்டி விடலாம் எதற்கும் முழுப்பொறுப்பும் ஏற்கத்தேவை இல்லை பெண்கள் அறிவு ஜீவிகளாக இருப்பதை ஆண்கள்பொதுவாக விரும்புவதில்லை சொல்லப்போனால் ஆண்கள் ஆதிக்க வாதிகளாகவே இருக்கிறார்கள் காலம் மாறு வதுபொபோல் தோன்றினாலும் நிஜம் அதுவல்ல கதையில் ஆசிரியரின் கருத்துகள் வருவதைத் தடுக்க முடியாதுநெஞ்சில் ஒர்ர் ஆலையம் திரைபடத்துக்கு ஒரு விமரிசனம் எழுதி இருந்தேன் கதாநாயகி காதலனை விட்டு மணந்த போதே கணவருடனான மணம் இரண்டாவதாகத்தான் கருத வேண்டும் இந்நிலையில் கணவன் இறந்தால் பழைய காதலனை மணப்பது தவறி ல்லை என்று எழுதி இருந்தேன் விமரிசனப் போட்டியில் எனது எழுத்துக்கும் பரிசு கிடைத்தது அது அந்தக் காலத்தில் ஒரு வித்தியாசமான சிந்தனை

Durai A said...

சோபி

ஜீவி said...

@ ஜீஎம்பீ

சார்ந்திருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டியது சமூகத்தின் பாதுகாப்பு கருதி. ஆனால் பெண்ணுக்கு ஆணை விட தான் உசத்தி என்பது உள்ளூர எண்ணமாக ஊடுறுவி இருக்கும்.
மனைவியானால் கேட்கவே வேண்டாம். என்றைக்கு தாலி கட்டினானோ அன்றையிலிருந்து அவனைப் பற்றிய அரிச்சுவடியை அவள் அறிந்து கொள்கிறாள். இந்த ஆளை இப்படித் தான் டீல் பண்ண வேண்டும் என்று ரகசியம் அறிந்தவளாகிறாள். பேத்தி, பேரன் எடுத்த நிலையில் கணவனுக்கு அவளின் மீதான மோகம் கூடும் பொழுது அவன் மீதான அவள் ஆளுகை இன்னும் அதிகரிக்கிறது.

ஜீவி said...

@ ஜீஎம்பீ

பொது வெளியில் எல்லா இடங்களிலும் நீங்கள் பெண்களே குடும்பப் பொறுப்பைச் சுமந்து கொண்டு அல்லாடுவதைப் பார்க்கலாம்.

அது ரேஷன் கடையோ, ஆதார் சமாச்சாரங்களோ, வங்கி, மார்க்கெட் போக வரவோ, எல்லா இடங்களிலும் இன்றைக்கு பெண்களைத் தான் பார்க்கலாம். குழந்தைக்கு எல்.கே.ஜி. அட்மிஷனிலிருந்து பிற்கால் பொறியியல் கல்லூரி சேர்க்கை வரை கூட இருப்பது தாய்மார்கள் தாம். அவர்கள் போனால் வேலை சீக்கிரம் முடிகிறது. பள்ளி, கல்லூரி என்று எங்கு போனாலும் அதிகாரத்தில் இருப்பதும் பெண்களே ஆதலால் ஆண் போவதை விட பெண் போனால் சுலப காரிய சாதிப்பு நிச்சயம்.

இன்றைய ஆணும் அதையே விரும்புகிறான். அவன் ஏரியாவே வேறு.

ஜீவி said...

@ Durai. A.

//சோபி//

So Beautiful?..

Thulasidharan V Thillaiakathu said...

எப்படி பல பகுதிகள் மிஸ் ஆகிப் போனது என்று இன்று உங்கள் பகுதி 6 பார்த்ததும் அறிய முடிந்தது....இதோ ஒவ்வொன்றாய் வாசிக்கிறோம்..

கொஞ்சம் முந்தையக் காலக்கட்டக் கதை அதுவும் படங்களைப் பார்க்கும் போது தோன்றுகிறது...உங்கள் எழுத்தும் அப்படியே அக்காலக்கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. என்றாலும் பரவாயில்லை ஆணும் பெண்ணும் தனியே சந்தித்து தங்கள் வாழ்க்கையைக் குறித்து வாழ்க்கையில் இணைவதைக் குறித்துப் பரஸ்பரம் பேசி புரிந்து கொண்டு சுதந்திரமாக முடிவு செய்ய முயற்சிப்பது எல்லாம் கொஞ்சம் பாலச்சந்தரை நினைவூட்டியது...தொடர்கிறோம் சார்...இதோ அடுத்த பகுதிக்கு....

துளசிதரன், கீதா

(ஸார் எங்கள் தளத்தில் நாங்கள் இருவர் நண்பர்கள் எழுதுகிறோம்...துளசிதரன் பாலக்காட்டில் இருக்கிறார். நான் கீதா சென்னையில். அதனால் கருத்திடும் போது இருவரது கருத்தும் கிட்டத்தட்ட ஒன்றே என்றால் எங்கள் இருவரின் பெயருடன் அல்லது சில சமயம் இல்லாதும் வந்து விடுகிறது. தனித்தனிக் கருத்து என்றால் ஒரே ஐடியாக இருந்தாலும் யாருடைய கருத்தோ அவரது பெயர் தாங்கி வரும் ஸார். தவறாக எண்ண வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் ஸார்.)

Related Posts with Thumbnails