Tuesday, November 14, 2017

கமலி காத்திருக்கிறாள்...

பகுதி-- 22

இதற்கு முன் பகுதி:   http://jeeveesblog.blogspot.in

கெடிலாக் வாசலில் வந்து நின்றதே தெரியவில்லை.   அழைப்பு மணி ஒலித்ததும் தான் அவர்கள் வந்து விட்டார்கள் என்று தெரிந்தது.

ஹாலில் ப்ரியன் தான் இருந்தான்.   வாசல் கதவு இவர்களின் வருகைக்காகத் திறந்தே தான்  இருந்தது.  இருந்தாலும்  ஒரு நாகரிகத்திற்காக அவர்கள் அழைப்பு மணியை அழுத்தியிருக்கிறார்கள் என்பதைப்  புரிந்து கொண்டு ப்ரியன் அவசரமாக வாசல் பக்கம் நகர்ந்து, "வாங்க, வாங்க.." என்று அவர்களை உள்ளே அழைத்தான்.

பெரியவர் முகம் மலர்ந்திருந்தது.   திரைக்கதையின்  வடிவத்தை தீர்மானிப்பதில் ப்ரியாவின் பங்கு  மகத்தானதாக இருக்கப்  போகிறது என்பதனை  எதிர்பார்க்கும்  மலர்ச்சியாக அது தெரிந்தது.  அரங்கராஜனோ வழக்கம் போல, வெற்றிலைப் பெட்டியும் கையுமாக.

"ஸாரி.. உள்பக்கம் கொஞ்சம் வேலையாய் இருந்தேன்.." என்று தெரிவித்தபடி ப்ரியா அவர்களிருந்த ஹாலுக்கு வந்தாள்.  "சுடச் சுட எல்லாம் ரெடி.. சாப்பிட்டுடலாமா?"

"இல்லை, ப்ரியா..  இன்னிக்கு காலைலே டிபன்  கொஞ்சம் ஹெவி.. இன்னும் அரைமணி நேரம் போகலாமா?  உங்களுக்கு எப்படி?.." என்றார் அரங்கராஜன்.

"எங்களுக்கும் பரவாயில்லை.." என்றான்ப்ரியன்.   "இந்த ஹால் செளகரியம்  என்றால் இங்கேயே நம்ம டிஸ்கஷனை வைத்துக்கொள்ளலாம்.  இல்லேனா மாடிக்குப் போயிடலாம்.." என்றான் ப்ரியன்.

"போன தடவை மாடியில் தானே பேசிக் கொண்டிருந்தோம்?..  இன்னிக்கு ஒரு மாறுதலா இருக்கட்டும்..  இந்த இடமும் செளகரியமாகத் தான் இருக்கிறது" என்று பெரியவரைப் பார்த்தார் அரங்கராஜன்.

பெரியவர் அதற்கு முன்னாலேயே அங்கிருந்த ஒரு நீண்ட சோபாவில் அமர்ந்திருந்தார்.  அவருக்குக் கொஞ்சம் தள்ளி சோபாவின் இன்னொரு மூலையில் அரங்கராஜன் அமர்ந்து தன் கையோடு கொண்டு வந்திருந்த ப்ரீப்-கேஸைத் திறந்தார்.   அதில்  செவ்வக வடிவத்தில் டைரி போலிருந்த குறிப்புப் புத்தகத்தை கையிலெடுத்துக் கொண்டார்.  பக்கங்களைப் புரட்டினார்.

"கமலியின் கணவன் குடித்து விட்டு  நினைவில்லாமல் கிடந்த ராத்திரி அது. வீட்டை சுத்தம் செய்து  பாயை விரித்து அவன் அருகிலேயே படுக்கிறாள் கமலி..   அந்த இடத்திலிருந்து திரைக்கதையைத் தொடர வேண்டும்,ஸார்.." என்று ப்ரியா சொன்னாள்.

ப்ரியா சொன்ன இடத்தை குறிப்புப் புத்தகத்தில் கண்டு பிடித்து விட்டார் போலும்.. "எஸ்.. மேற்கொண்டு என்ன நடந்தது தெரியுமா?" என்று தொடர்ந்து திரைக்கதையைச் சொல்லத் தொடங்கினார் அரங்கராஜன்.

குறிப்புகள் நினைவுகளைக் குவிக்கத் தான் என்று தெரிந்தது.  குறிப்புகளைப் பார்த்த ஜோரில்  எதிரில் கேட்பவர்களுக்கு கதை போலக் கோர்வையாகச் சொல்கிற ஞானம் அரங்கராஜனுக்கு கைவந்த கலையாக இருந்தது.

"பொலவென்று அடுத்த நாள் பொழுது விடிந்தது.." என்று நேற்று விட்ட இடத்திலிருந்து கதையைத் தொடர ஆரம்பித்தார் அவர்.

கமலிக்குத் தான்  கொஞ்சம் லேட்டாகத் தான் எழுந்திருந்திருக்கிறோம் என்று தெரிந்தது.  சமையலறை மின் விளக்கு போடப்பட்டிருந்தது.  ஏதோ பாத்திரங்களை எடுத்து வைக்கும் ஒலி இங்கே இவளுக்குக் கேட்டது.  கணவன் வழக்கம் போல எழுந்து சமையல் வேலையை ஆரம்பித்து விட்டார் என்று தெரிந்தது.

அவள் பல் விளக்கி வந்து டைனிங் டேபிளில் அமர்தால் போதும்.  அவசர அவசரமாக அவளுக்கு  காபி கலந்து கொண்டு வந்து கொடுப்பான்.  காபி தயாரிப்பில் மோகன சுந்தரம் மன்னன்.   அளவான ஸ்ட்ராங்கில் அளவான சர்க்கரை போட்டு  மேலாட நுரை மினுக்கலுடன் தேவாமிர்தமாக இருக்கும்.  தினம் தினம் அவன் போட்டுத் தரும் அந்த காபியின் மணம் அவள் நாவின் சுவை அரும்புகளைக் கிளர்த்தி அவளை எழுந்திருக்க வைத்திருக்கிறது..

கோல்கேட்டெல்லாம் போயே போச்சு;   இப்பொழுதெல்லாம் அவர்கள் பதஞ்சலி தயாரிப்பிலான பேஸ்ட் தான் உபயோகிக்கிறார்கள்.   ப்ரஷ் கூட பதஞ்சலி தான்.   பேஸ்ட்டை லேசாகப் பிதுக்கி ப்ரஷில் தடவி உற்சாகத்துடன் பல் விளக்கி முகம் துடைத்து டைனிங் டேபிளுக்கு வந்தாள் கமலி.

கைப்பிடித் துண்டில் கையைத் தேய்த்தவாறே சமையலறையிலிருந்து ஏதோ வேலையாக ஹாலுக்கு வந்த மோகன் அவளைப் பார்த்தவுடன் முகம் மலர்ந்து "குட்மார்னிங்  டார்லிங்.." என்றான்.  அவனுக்கு அவள் எப்பொழுதுமே டார்லிங் தான்.   அவளும் அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

கொஞ்ச நேரத்தில் டபரா செட்டில் சுடச்சுட காபி  கொண்டு வந்து பதமாக ஆற்றி அவளுக்கு நேரே வைத்து விட்டு தானும் டைனிங் சேரில் அவளுக்கு எதிரே அமர்ந்து  கொண்டான்.  ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி மாதிரி மதர்ப்புடன் இருந்தான் மோகன்.   செக்கச்சேவேலென்ற சிவப்புடன் ரோமம் படர்ந்த அவன் கைகள் இரண்டும் டைனிங் டேபிளில் லேசாகத் தாளம் போட்டுக் கொண்டிருந்தன.  கண்கள் காபி அருந்தும் கமலியின் உதடுகளையே பார்த்துக் கொண்டிருந்தன.   அதைக் கவனித்ததும் லேசான சிணுங்கலுடன் கமலி தன் இடது கையைத் தூக்கி அவன் சிவந்த கைவிரல்களுடன் தன் விரல்களைப் பிணைத்துக் கொண்டாள்.

அவள் காபியை அருந்தி முடியும் வரைக் காத்திருந்தான் மோகன்.  காபி டம்ளரை அவள் டைனிங் டேபிளில் வைத்ததும்  அவள் முகத்தைப் பார்த்தபடி, தழைந்த குரலில், "ஸாரி.." என்றான்.

அவன் எதற்கு ஸாரி சொல்கிறான்   என்று தெரிந்திருந்தும் அவன் வாயாலேயே அந்த ஸாரிக்கான காரணத்தைச் சொல்லட்டும் என்று எதிர்ப்பார்த்து, "எதற்கு ஸாரி, மோகன்?" என்று கமலி கேட்டாள்.

"நேற்று ராத்திரி நடந்ததுக்கெல்லாம்.." என்றான் அவன்.

அவள் பதிலே பேசவில்லை.. அவனே முழுதும் சொல்லட்டும் என்று எதிர்பார்ப்பில் காத்திருந்தாள்.

"தெரியாதது மாதிரி கேக்காதே, கமலி.." என்று  சொன்ன பொழுது அவன் குரல் தழுதழுத்தது.  "பக்கத்து வீட்டுக்காரன் கடைலேந்தே கூடவே வந்து சேர்ந்தே வீட்டுக்குள்ளே  நுழைஞ்சிட்டான்.   அவனுக்கும் இந்தப் பழக்கம் உண்டுன்னான்.   அவனைத் தவிர்க்க முடியவில்லை.  இதுக்கும் துணை இருந்தா அலாதி தான்.." என்றான்.

"ஓ.. அப்படியா, சேதி?" என்றாள் கமலி.  அவன் சொன்னது கேட்டு அவள் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை.  "அப்போ ஒண்ணு செய்யலாம்.. பக்கத்து வீட்டுக்காரன்லாம், எதுக்கு?..  நானே இனிமே துணையா இருக்கேன்.. தாம்பத்தியத்தில் எப்படி நான் துணையோ அதுமாதிரி இதுக்கும் துணை.
சரியா?"

"கமலி..  நிஜமாத்தான் சொல்றியா?"

"அதிலென்ன, சந்தேகம்?.. நிஜமாத்தான்.  இனிமே வாங்கறத்தே எனக்கும் சேர்த்து வாங்கிட்டு வந்திடுங்க..  ஆரம்பத்லே குமட்டும்.. ஆனா போகப் போக சரியாயிடும் இல்லையா?..  உங்க அனுபவமும் அப்படித்தானே? சொல்லுங்க, மோகன்.." என்று அவன் கழுத்துப் பட்டையில் கைவைத்து தலையைக் கோதி விட்டாள் கமலி.  "வாழ்க்கைத் துணைனா என்ன?  வாழ்க்கை சம்பந்தப்பட்ட எல்லாத்திலேயும் ஒருத்தொருக்கொருத்தர் துணையா இருக்கறது தானே?.. இதிலே மட்டும் இல்லாம இருப்பானேன்?..  இனிமே இருந்திட்டாப்  போச்சு.."

"நோ.." என்றான் மோகன்.  "டியர்.. என்னாலே அது முடியாது.." என்று தீர்மானமாக தலையை அசைத்தான்.

"குடிக்காமல் இருக்கவும் முடியாது..   நா துணையா இருக்கவும் முடியாதுன்னா   எப்படி, மோகன்?..  முடிந்தால் ரெண்டும் முடியணும்.. இல்லேனா, இரண்டுமே முடியக்கூடாது இல்லியா, மோகன்?" என்று கேட்கும் பொழுது அவள் கை ரொம்பவும் இயல்பாய் அவன் காதுப்பக்கம் போயிற்று.  அவள் விரலின் ஸ்பரிசம் அவனில் சிலிர்ப்பேற்படுத்தியது.

"கமலி,  சத்தியமாச் சொல்றேன்.  இனிமே நானும் குடிக்க மாட்டேன். எனக்காக நீயும் உன்னை வருத்திக்க வேண்டாம்.   இது உறுதி.  சிரிக்காதே. என் வைராக்கியத்தைப் பார்த்து நீயே ஆச்சரியப்படப்போறே பாரு!"

"என் ராஜாவே!.." என்று மோகனை இறுக அணைத்துக் கொண்டாள் கமலி.  அவனுக்கு மூச்சு வாங்கியது..  பஞ்சு போல இருக்கும்  அவளுக்கு எப்படி இப்படி ஒரு அசுர பலம் வந்தது என்று அவன் திகைத்தான்.  தான் அவளுக்குக் கொடுத்த சத்தியத்தினால் விளைந்த சந்தோஷம் மிருக பலமாய் அவளில் செயல்படுகிறது என்று போகப்போக அவன் உணர்ந்த பொழுது அந்த சந்தோஷம் அவனுக்கும் கூடு விட்டு கூடு பாய்ந்தது.  மனம் கட்டுக்கடங்காத சுதந்திரம் பெற்றது போல அவனில் ஆர்ப்பரித்தது.  தன்னை மறக்கடிக்கும் சுகத்தை விட தன்னை மறக்காது செயல்படும் சுதந்திரம் அவனுக்கு இன்றைக்கு ஏற்பட்ட புது அனுபவமாய் அவனில் துளிர் விட்டது.. என்றைக்கும் இந்த சுதந்திரமே நிலைத்திருக்க வேண்டுமென்று சின்னக் குழந்தையாய் மனம் ஏங்கியது.  இந்த ஏக்கத்தைத் தணிப்பதற்கு எந்த தத்தத்தையும் செய்யலாம் என்ற உறுதி எஃகு திண்மையாய் மனசில் உருவெடுத்தது.

சட்டென்று அவனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை விடுவித்துக் கொண்டாள் கமலி.  கொஞ்சலாக, "நான் என்னவோ குறை உங்களுக்கு வைத்திருக்கிறேன் என்று மனசில் உருத்தலாய் இருக்கு.." என்றாள்.

"அப்படி எதுவும் இல்லே..  எதுக்காகக் கேக்கறே?"

"அப்படி எதுவும் மனசிலே குறை இல்லேனா, சாயந்திரம் ஆச்சுனா கடைக்குப்  போக மாட்டீங்க.."

"அதுக்கும் இதுக்கும் என்ன  சம்பந்தம்..?"

"இருக்கு.. அதை அப்புறமா சொல்றேன்..  உங்களுக்கு ஏதாச்சும் மனசிலே குறை இருந்தா சொல்லுங்க.."

"லேசா இருந்த குறையும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நிறைவாயிடுத்து.."

"ஐயே!..  எங்கே போனாலும் சுத்தி சுத்தி மனசை இங்கே கொண்டு வந்து நிறுத்திடக் கூடாது.  அதான் இதெல்லாம்  அப்பப்ப  கிடைச்சிக்கிட்டிருக்கே..  அப்போ இதெல்லாம் ஒரு குறையா இருக்க முடியாது..  மனசிலே ஆழமா  நிறைவேறாத ஆசை மாதிரி ஏதாச்சும் படிஞ்சிருந்தா சொல்லுங்க.. அது தான் வடு மாதிரி வாழ்க்கை பூராவுக்கும் குறையா இருக்கும்.. அப்படி ஏதாவது உங்க மனசிலே இருந்தா சொல்லுங்க.. நான் தீர்த்து வைக்கிறேன்..  அந்தக் குறை நிறைவேறிப் போச்சுனா,  அப்புறம் சாயந்திரம் ஆச்சுனா அங்கெல்லாம் போகணும்ன்னு தோணாது..  அதனாலே தான் கேக்கறேன். சொல்லுங்க.."

'அப்படியென்ன குறை தனக்கு இருக்கும்?'.  மோகன் யோசித்துப் பார்த்தான்.

எதுவும் சட்டென்று மனசுக்குப் பிடிபடவில்லை..  "கமலி! நீ இருக்கறச்சே எந்தக் குறையும் எனக்கில்லை.." என்று சிரித்தான்.

"அதான் எனக்கு நீ, உனக்கு நான்னு ஆயி போச்சே!..  நம்ம ரெண்டு பேரையும் தாண்டி யோசிச்சுப் பாருங்க..  ஏதாச்சும் உங்களுக்குக்  குறை இருக்கு?"

அப்படி எதுவும் இல்லை என்று தான் மோகனுக்குத் தோன்றியது.. இருந்தாலும் யோசிக்க யோசிக்க..

இப்பொழுது பிடிபட்டது.. அவன்  மனசின் அடி ஆழத்தில் பதுங்கியிருக்கிற அந்தக் குறை!    மனசில் நிறைவேறாத ஆசையாய்  அப்பப்போ நினைவுக்கு வந்து அவனை வாட்டுகிற  குறையாய்...

"நீ சொல்றது சரி தான்..  மனசில் எனக்கு ஒரு குறை இருக்கிறது, கமலி.." என்று தயங்கித் தயங்கிச் சொன்னான் மோகன்.

(தொடரும்)



17 comments:

ஸ்ரீராம். said...

குழந்தை இன்மையோ!

Thulasidharan V Thillaiakathu said...

குழந்தை பாக்கியம்?!! ம்ம்ம் அது வந்துவிட்டால் அவனிடம் மாற்றம் ஏற்பட்டுவிடும் என்ற கமலியின் நம்பிக்கை!!

நேற்றுதான் ஆதவனின் புகைச்சல்கள் கதை ஒன்றை சகோ ஏகாந்தன் பகிர்ந்திருந்தார். அதிலும் கதாநாயகனனின் புகைபிடிக்கும் பழக்கம் குறித்து கணவன் மனைவி இருவருக்குள்ளும் ஆர்க்யூமென்ட் வரும்..மனைவி சொல்லிப் பார்ப்பாள்..நான் புகைத்தால் என்று கேட்பாள்...மனைவி கர்ப்பமாகியிருக்காள் என்று தெரிந்ததும் கணவன் இனி புகைக்க மாட்டேன் என்று சொல்லுவதாக வரும்...

அப்படி மோகனும் மாறுவானோ?!! ஆனால் தலைப்பு கமலி காத்திருக்கிறாள்! ம்ம்ம் பலவற்றை யோசிக்க வைக்கிறது... அடுத்து என்னவாகும்னு ஆவல் வெயிட்டிங்க்..

கீதா

ஜீவி said...

@ ஸ்ரீராம்

முதல் பின்னூட்டத்தைத் தொடர்தல் பற்றி ஏற்கனவே நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.
(இரண்டாவது பின்னூட்டம் முதல் பின்னூட்டத்தின் தொடர்தல் இல்லை; சேர்ந்தாற் போலவே பப்ளிஷ் பண்ணினேன்.) அதனால் அந்த குழந்தை சமாச்சாரத்தைத் தொடர்வதைத் தவிர்க்க இப்பொழுதே சொல்லி விடுகிறேன்.

//குழந்தை இன்மையோ!//

இல்லை ஸ்ரீராம். வேறே.

ஜீவி said...

@ கீதா

ஆதவனின் புகைச்சல்கள் நான் படித்ததில்லை. ஆதவனின் 'என் பெயர் ராமசேஷன்' எங்கேயாவது கிடைத்தால் படித்துப் பாருங்கள். அவரின் இன்னொரு பிரமாதமான நாவல் 'காகித மலர்கள்'-- இரண்டிலும் விளையாடியிருக்கிறார்.

ஆதவனின் இழப்பு எதிர்பாராதது.. ஒரு நாள் வீட்டில் சொல்லிக் கொண்டு தரிசனத்திற்காக சிருங்கேரி பயணப்பட்டவர் துங்கா நதியில் குளிக்க யத்தனிக்கையில் பெரியதொரு நீர்ச்சுழலில் சிக்கி.....

ஆதவன் எழுதியது மேற்குறித்த இரண்டே நாவல்கள் தாம். அந்த இரண்டுமே அவர் எவ்வளவு திறமைகளை உள்ள்டக்கியவர் என்பதைச் சொல்லிக் கொண்டு தமிழ் எழுத்துலகில் நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. அந்த எதிர்பார்ப்புகள் ஏமாற்றமானது தமிழ் எழுத்துலகிற்கும் பெரியதொரு இழப்பே.

பூ விழி said...

ஹா ஹா இப்படியும் என்ன இப்படித்தான் இப்போதெல்லாம் சொல்கிறார்கள் எல்லாவற்றிலுமே பாணி நன்றாக இருக்கிறது சோ அவனின் மேல் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை நல்லவன் என்பதுதான் முன்னதை மோசமாய் காண்பித்து கேரக்டரின் இயல்பை மறைத்தது எழுத்தாளரின் குற்றம் தானே .....
கலா ரசனையோடு வாழும் தம்பதிகளான இவர்களுக்கே இப்படியான பிரச்சனையென்றால் வருகிறது சராசரிக்கும் கீழே இருப்பவர்களுக்கு ? முரண்டயும், முரனையும், முற்போக்கையும் அனைவரும் விரும்புவார்கள்தான் ஆனால் அதை உபோயோகிக்கும் பொழுது நடைமுறை மாறுதல்கள் வரும் கதையில் கவிதை போல் இவற்றை கொண்டுவரும் போது படிக்கும் போது ஒரு சுகம் வரத்தான் செய்கிறது
குறையென்ன என்று அறிய குறுகுறுப்புடன் காத்திருக்கிறேன்
இங்கு பிரியா மலர்ந்தவிகசித்து சபாஷ் போட போகிறாள்

Thulasidharan V Thillaiakathu said...

ஜூவி அண்ணா, ஆதவனின் நாவல்களை...வாசிக்கிறேன்.

அப்புறம் அண்ணா இன்னொரு கவிதை கூட வந்தது வாட்சப்பில் வலம் வந்தது. அதாவது ஒருவன் மொடா குடிகாரன், எல்லா கெட்ட பழக்கமும் உள்ளவன், ஆனால் குழந்தை அதுவும் பெண் குழங்கை பிறந்து அதன் பொக்கைவாய்ச்சிரிப்பு, அதன் ஸ்பரிசம் அவனை நல்லவனாக மாற்றுவது போல் வந்தது அதுவ்ம் மனதில் தோண்றியதால்...பின்னூட்டம். இப்போ நீங்களே இல்லைனு சொல்லிட்டீங்க...

ஸ்ரீராம் நீங்க சொல்லற அந்த முதல் கமென்ட் சைக்காலஜி சரிதான்... 90 % க்கு மேல ..அப்படித்தான் வொர்க் அவுட் ஆகுது...ஆனா. முதல் கமென்ட் உங்கள் கமென்டட் முந்தைய ஒரு பகுதியில் அது பார்த்து எனக்குத் தோன்றலை...ஸ்ரீராம்...என் கமென்ட் பொதுவாக பின்னூட்டங்களைப் பார்க்காம நான் முதலில் சொல்ல வேண்டியதை சொல்லிட்டு அப்புறம் பின்னூட்டங்கள் பார்ப்பதுதான் வழக்கம். ஒருவேளை முன்னாடி முதல்ல இருக்கறத பார்த்துட்டு எனது கமென்டும் வேறு யாருடைய கமென்டும் ஒன்றென்றால் வழி மொழிகிறேன் என்று விட்டு போய்டறது...கிட்டத்தட்ட ஒரே போல இருந்து முன்னரே பார்க்கலைனா ஹைஃபைவ்! அப்படித்தான் உங்க வசனம்!!! ஹைஃபைவ் சொல்லிருந்தேன்.எனக்கு ஜஸ்ட் தான் அப்படித் தோன்றியது ...ஆனா நீங்க சூப்பரா வசனமா சொல்லிருந்ததை அட! என்று ரசித்தேன்!!

கீதா

G.M Balasubramaniam said...

பெண்கள் தங்கள் கணவருக்கு எந்தக் குறையும் வைப்பதில்லை என்றே எண்ணுகின்றனர் ஆனால் இந்தப் பெரிய ஆனாலை எப்படிவேண்டுமானாலும் சொல்லமுடியும் கதையை நீட்ட ஆசிரியர் கையாளும் வழிகளிலிதுவும் ஒன்றாகலாம்

ஜீவி said...

@ பூவிழி

அப்பாடி.. ஒரு வழியாக உங்களை கன்வின்ஸ் பண்ணி விட்டேன்.. அந்த வகையில் அடுத்த கட்டத்திற்குப் போதல் இனி ரொம்ப ஈஸி தான்.

//கேரக்டரின் இயல்பை மறைத்தது எழுத்தாளரின் குற்றம் தானே .....//

எழுதுபவனுக்கு வாசிப்பவரோடு கண்ணாமூச்சி விளையாட வேண்டும் என்று ஆசை அடிக்கடி தோன்றுவதுண்டு. அந்த மாதிரியான ஒரு விளையாட்டு ஆசை தான் இதெல்லாம். கற்பனையில் தோன்றுவதை நிஜம் போலக் கயிறு திரித்து எழுதி வாசகர்களை நம்ப வைக்கும் வேலைகளில் இதுவும் ஒன்று. இந்த மாதிரி வேலைகள் இல்லை என்றால் வாசிப்பதில் சுவாரஸ்யம் தான் ஏது?..

ஜீவி said...

@ பூவிழி

//முரண்பாட்டையும், முரணையும், முற்போக்கையும் அனைவரும் விரும்புவார்கள்தான் ஆனால் அதை உபோயோகிக்கும் பொழுது நடைமுறை மாறுதல்கள் வரும்.. //

காலத்தின் வளர்ச்சியை ஒட்டித் தான் எந்த முற்போக்கு சிந்தனைகளின் ஜீவிப்பும் இருக்கும். முற்போக்கு என்று நினைத்துக் கொண்டு தரையில் கால் பாவாமல் வானத்தில் பறக்க நினைத்தால் அவற்றிற்கு நடைமுறை சாத்தியப்படுத்தல்கள் இல்லாமல் போகும். வெத்துக் கற்பனைகளுக்கு முற்போக்கு என்ற லேபிள் ஒட்டுவதால் எந்தப் பயனுமில்லை.. எந்த முற்போக்கு சிந்தனையும் நடைமுறை படுத்தப்பட்டால் தான் அடுத்த காலகட்டத்திற்காக அடுத்த நகர்வுக்கு நகரக்கூடிய சாத்தியப்பாடும் அதற்கு ஏற்படும்.

//கதையில் கவிதை போல் இவற்றை கொண்டுவரும் போது படிக்கும் போது ஒரு சுகம் வரத்தான் செய்கிறது .. //

கவிதைகளுக்கு வேறு போக்கிடம் தான் ஏது?.. காதல் தம்பதிகளின் உரையாடல்களில் பதுங்கியிருப்பதில் அவற்றிற்கும் சுகம் தான்.

ஜீவி said...

@ கீதா

ஆதவனின் எழுத்து குடும்பப்பாங்கானது. மனோவியல் சார்ந்தது. வாழ நேர்ந்த வாழ்க்கையின் போலித்தனங்களை எள்ளல் கலந்த நகைச்சுவையோடு அவர் பரிமாறும் பொழுது நம்மையறிந்தே அவர் எழுதும் முறைக்கு நாம் வசப்பட்டு விடுவோம். வாசித்துப் பாருங்கள்.

ஸ்ரீராம்! ஹியர்! பாராட்டுக்கள் குவிகின்றன.

ஜீவி said...

@ G.M.B.

//பெண்கள் தங்கள் கணவருக்கு எந்தக் குறையும் வைப்பதில்லை என்றே எண்ணுகின்றனர்.//

ஆண்கள் கூட அப்படித்தானே ஐயா நினைக்கிறார்கள்?.. யார் என்ன நினைத்தாலும் குறை என்பது மனம் சம்பந்தப்பட்டது என்பதினால் அவை ஆண், பெண் சம்பந்தப்பட்டவை அல்ல. இருபாலரிடமும் அவை இருந்து கொண்டே தான் இருக்கும். ஒன்று போனால் போன ஒன்றை இட்டு நிரப்ப அந்த இடத்தில் இன்னொன்று வந்து உட்கார்ந்து கொள்ளும். குறை இல்லாத மானுட ஜென்மம் தேவனாவான்.

அதனால் 'குறையொன்றும் இல்லை, மறைமூர்த்தி கண்ணா..' என்று ராஜாஜி சொன்னது பெரிய விஷயம். அப்படிச் சொல்வதற்கு மனதை வென்றிருக்க வேண்டும்.
இல்லை, கவிதை போக்கிற்காக எதுகை அழகிற்காக, குறையும் மறையும் அமைந்தனவோ
தெரியவில்லை.

சரி, நமது இந்தக் கதை விஷயத்திற்கு வருவோம்.

உளவியல் நோக்கில் கமலி யோசிக்கிறாள். டென்ஷன், பிரச்னை, ஏமாற்றம், குறைகள், நிறைவேறாத எண்ணங்கள் இவை மனிதனை ஆட்கொண்டு விட்டதென்றால் அவற்றை தற்காலிகமாக மறக்க மனிதன் மதுவை நாடுகிறான் என்று ஒரு உளவியல் பார்வை உண்டு. அப்படியான ஏதாவது ஒன்று மோகனுக்கு இருந்து அதைத் தீர்த்துவிட்டால் இவன் மதுக்கடை பக்கம் போக மாட்டானே என்ற நப்பாசை(!) அவளுக்கு.

பார்க்கலாம். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

கோமதி அரசு said...

மோகன சுந்தரத்தின் மனக்குறை என்ன என்று அறிந்து கொள்ள ஆவல்.
பெரிதாக ஏதாவது குறையை சொல்ல போகிறானா? கமலியால் அந்த குறையை போக்க முடியுமா? பார்க்கலாம்.

வே.நடனசபாபதி said...

ப்ரியனின் குறை என்னவாக இருக்கும் என அனுமானிக்க முடியவில்லை. அது என்ன என்று அறிய காத்திருக்கிறேன்.

பூ விழி said...

காண்பிக்கவில்லை பதிவை -23

ஜீவி said...

@ கோமதி அரசு

உங்களால் மோ.சு. குறையை யூகிக்க முடியும் என்று நினைத்தேன். அடுத்த அத்தியாயத்தில் அவனுக்கு என்ன குறை என்று சொல்லி விடுகிறேன்.

தொடர்ந்த வாசிப்புக்கு நன்றி.

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

பொதுவாக ஆணின் குறை தான், சார். அடுத்த அத்தியாயம் நீங்கள் வாசிக்கும் பொழுது தெரிந்து விடும்.

தொடர்ந்த வாசிப்புக்கு நன்றி.

ஜீவி said...

@ பூவிழி

டிராப்ட்டில் கால் வாசி கூட எழுதாத பகுதி தவறுதலாக பிரசுரமாகி விட்டது. அவ்வப்போது தான் பகுதி பகுதியாக எழுதுகிறேன். விரைவில் அடுத்த அத்தியாயத்தைப் பிரசுரம் பண்ணி விடுகிறேன்.

தங்கள் ஆவலுடனான விசாரிப்புக்கு நன்றி.

Related Posts with Thumbnails