மின் நூல்

Saturday, April 27, 2019

இதில் ஒன்றுமில்லை


                          இதில் ஒன்றுமில்லை      

                                                                         ==  ஜீவி


ப்யூன் கொண்டு வந்து தந்த விஸிட்டிங் கார்டை ஹரிஹரன் மேலோட்டமாகp பார்த்தான்... 'ரகுபதி.  பி.எஸ்ஸி. அக்ரி டிபார்ட்மெண்ட்' என்று அழகாக அச்சடிக்கப் பட்டிருந்தது.  ஒரு அக்ரி இலாகா ஆளுக்கு  பெரிய விளம்பர நிறுவன  பொதுஜனத் தொடர்பு அதிகாரி தன்னிடம்  என்ன வேலை இருக்கும் என்று புருவம் உயர்ந்தாலும், "உள்ளே வரச்சொல்" என்ற அவன் உத்திரவை சுமந்து கொண்டு ப்யூன்  வெளியேறினான்.

ஆளைப் பார்த்தவுடனேயே எப்படிப்பட்டவன் என்று எடைபோடும் அலாதியான  திறமை ஹரிஹரனுக்கு உண்டு.   அந்த அனுமானம் இதுவரை பொய்த்ததில்லை.

உள்ளே நுழைந்தவன் இளைஞனாக இருந்தான்.  பரந்த நெற்றிக்குக் கீழே தங்க பிரேமிட்ட கண்ணாடி.  அளவான மீசை.  சுமாரான உயரம்.    காஸ்ட்லி சட்டையை நுழைத்துக் கொண்டு தொப்புளிடத்தில் பெல்ட்டிட்ட பளபள பேண்ட்.  கையில் கருப்பு நிறத் தோல்பை.

ஏஸி,  அறையை  ஜிலுஜிலுப்பாக்கிக் கொண்டிருந்தது.

வந்தவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன், "என் பெயர் ரகுபதி.." என்று  ஆரம்பித்தான்.

"விஸிட்டிங் கார்டைப் பார்த்து விட்டேன்." என்று ஹரிஹரன்  சொன்னதும் ரகுபதிக்கு என்னவோ போலிருந்திருக்க வேண்டும்.  லேசாக அவன் முகம் சுருங்கியது.  அதை மறைக்கவோ என்னவோ புன்னகைக்கிற மாதிரி வெளிக்குக் காட்டிக் கொண்டான்.   ஹரிஹரினை ஆழமாக ஒரு பார்வை பார்த்தபடி, "உங்களோடு தனிமையில் கொஞ்சம் மனம் விட்டுப் பேசவேண்டுமே.." என்றான்.

"உங்களுக்கு  ஏதாவது ஆவி உபாசனை தெரியுமா?" என்று ஹரிஹரன் சிரிக்காமல் கேட்டான்..

"ஏன்?"

"இல்லை.  என் கண்களுக்கு இந்த அறையில் நாம் இரண்டு பேரும் இருப்பது தான் தெரிகிறது.  ஆவிகீவி ஏதாவது எனக்குப்  புலப்படாமல் உங்கள் கண்களுக்கு..." 

ரகுபதியின் காதோரங்கள் ஜிவுஜிவுப்பதைப் பார்த்தவுடன் ஹரிஹரன் சொல்ல வந்ததை பாதியிலேயே நிறுத்திக் கொண்டு விட்டான்

"நான் நேரடியாகவே ஆரம்பித்து விடுகிறேன்" என்று படபடப்புடன் சொன்ன ரகுபதி,, கையிலிருந்த தோல்பையைத் திறந்தான்.  ஒரு பழுப்பு நிறக் கவரை வெளியே எடுத்தான்.

ஒரு  வினாடி அவன் கண்கள் அந்த உறையின் மேல் லயித்தன.  அதைத் தொடர்ந்து ஏதோ ஒரு பிரேமையுடன் அவன் அந்த உறையை முத்தமிட்டது  பைத்தியக்காரத்தனமாகப் பட்டது.

ஹரிஹரன்  நாசூக்காக கைக்கெடியாரத்தைப் பார்த்துக்  கொண்டான்.

"நீங்கள் எனக்கு ஐந்து நிமிடங்கள் ஒதுக்கினால் போதும்.  நான் வந்த வேலை  முடிந்து போய் விடுவேன்" என்ற ரகுபதி கர்சீப்பை  எடுத்துக் கழுத்துப் பட்டையைத் துடைத்துக்   கொண்டான். "இந்தக் கவரைப் பிரித்துப் பாருங்கள்," என்று  ஹரியிடம் அந்தப்  பழுப்பு நிற உறையை  நீட்டினான்.

உறை ஒட்டப்படாமல் இருந்தது.  பிரித்துப் பார்த்த பொழுது உள்ளே கார்டு ஸைஸில் இரண்டு போட்டோக்கள்.

"அந்தப் பெண்ணை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?"

ஹரிக்குத் தெரிந்தது.  அவள் அவன் மனைவி.  நான்கு மாதங்களுக்கு முன்
அவன் கல்யாணம் செய்து கொண்ட அவனது இரண்டாவது  தாரம்.

"முதல் போட்டோவில் தன் வளையல் கரங்களால் அவன் கழுத்தைச் சுற்றிக் கொண்டும், இரண்டாவது  போட்டோவில் அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக்  கொண்டும் இருக்கிறாளே அவளைத் தெரிந்து கொண்டு விட்டீர்கள். ரொம்ப  சரி.  அவனை-- அவள் காதலனை -- உங்களுக்கு  இப்போது புரியும் என்று நினைகக்கிறேன்.." ரகுபதி லேசாகச் செருமிக் கொண்டான்.

ஹரி தலை நிமிர்ந்த பொழுது.  புகைப்படத்தில் இருப்பதைப் போலவே ரகுபதி லேசாகப் புன்முறுவல் பூத்துக் கொண்டிருந்தான்.

ஹரிக்கு லேசாக நெஞ்சு எரிவது போலிருந்தது.

"அந்த இரண்டு போட்டோக்களின் நெகட்டிவ்களும் அந்தக் கவருக்குள்ளேயே இருக்கின்றன.  இருக்கற மார்க்கெட் நிலவரப்படி அந்தக் கவரின் விலை ஐம்பதாயிரம்.." ரகுபதியின் உதடுகளில் கோல்ட்பிளாக் நர்த்தனமிட்டது. லைட்ரின் தீ.

சிகரெட் பாக்கெட்டை ஹரியின்  பக்கம் நகர்த்தினான்.

"பழக்கமில்லை.." என்றான் ஹரி, கரகரத்த குரலில்.

"தட்ஸ் ஆல்ரைட்!" என்று எழுந்த ரகுபதி மிக லாவகமாக அந்தக் கவரை ஹரியின் விரல்களுக்கிடையிலிருந்து  பறித்துக் கொண்டான்.

ரொம்ப சாவதானமாக அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடக்கத் தொடங்கினான்.... ஏதோ கனவுலகில் சஞ்சரிக்கிற தோரணாயில் அரைக் கண்களை மூடியபடி, "எனக்கும் அவளுக்கும் காலேஜ் பழக்கம்.  சாத்தனூர், இல்லை, சாத்தனூர்?.. அங்கே தான்  ஒரு டிரிப் போய் வர வேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்றாள்.  எல்லாம் இந்த சினிமாக்களால் வந்த வினை.  என்ன செய்யறது, ஸார்?.. ஆசையோடு ஒரு காதலி கேட்கும் பொழுது எந்தக் காதலனாவது ....." மேடை நாடக தோரணையில்  ரகுபதி இரண்டு கைகளையும்  பரக்க விரித்தான்.

இதெல்லாம்  ஏற்கனவே தன் மனைவி சொல்லி ஹரிக்குத் தெரிந்தது தான்.  பெண் பார்க்கப் போன சமயத்தில் பெண்ணுடன் தனித்துப் பேச அவன் விரும்பிய பொழுது  எதையும் மறைக்காமல் அவளே சொன்னவை தான்.  ஒரு அபலைப் பெண்ணை கை கழுவியது மட்டுமல்லாமல் அதை வைத்து காசு பார்க்க நினைக்கும்  இந்தக் கயவன் காதலனாமே!..

வந்த ஆத்திரத்தில் ஹரிக்கு படபடப்பாக இருந்தது.  நெற்றியில் படிந்த வியர்வையை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டான்..

"புழுக்கமாக இருக்கிறதா?  ஏஸி கூலிங்கை அதிகப்படுத்தலாமா?.."  என்று புன்னகைத்தான் ரகுபதி.   மீதி சிகரெட்டை ஆஷ் டிரேயில் நசுக்கினான்.

ஹரிக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

வலது கையைத்  திருப்பி மேஜை மேல் வைத்துக்  கொண்டான் ரகுபதி. "உங்களுக்கு ஐந்து நிமிடம் அவகாசம் போதுமா? சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாருங்கள்.. இப்போ மணி 3-15.. 3.20-க்குள்.  அவன் பார்வை கடியாரத்தில் பதிந்திருந்தது...  பச்சை பிளாக் மெயில்!....

ஹரியின்  கண்களுக்கு டெலிபோன் தட்டுப்பட்டது.  போலீசைக் கூப்பிடலாமா என்ற எண்ணத்தை ஒதுக்கித் தள்ளினான்.

எரிச்சல் கலந்த  வேதனையுடன் அறைச் சுவரை அவன் கண்கள் வட்டமடித்தன.. ரோஜாப்பூவுடன் சிரித்துக் கொண்டிருக்கும் குழந்தை படம்;  பொக்கை வாய்  காந்தித் தாத்தா,  நயாகராவின் சட்டமிட்ட இயற்கை வண்ணப்படம்,

ஒரு நிமிடம் தான்..  ஒரே ஒரு நிமிடம் தான்.  ஹரி ஒரு முடிவுக்கு வந்து விட்டான்.

"ஸார்.. மணி 3-30 என்றான் ரகுபதி.  "கரன்ஸியாகத் தருகிறீர்களா?.. இல்லே, செக்கே வெட்டி விடுகிறீர்களா?"

'யூ,  கெட் அவுட்.."  ஹரி சீறியதைப் பார்த்து ரகுபதி பதறிப் போய் விட்டான்.  "என்ன சொல்கிறீர்கள்?" என்று தடுமாறினான்.

"உன்னை வெளியே போகச் சொல்கிறேன்,"

"ஸார்.. நான்  வெளியே போனால் என் வாய் சும்மா இருக்குமா?  இந்தக் கைதான் இந்தப் போட்டோக்களை யாரிடமாவது... ஸார், உங்களுக்கு 'பந்து பாசன்'  பத்திரிகை தெரியாது,  மஞ்ச மஞ்சேரென்று இருக்குமே?  அவன் கிட்டே மட்டும் இந்தப் படம் போயிட்டதுன்னா..."

"பரவாயில்லை..." என்றான் ஹரி அமைதியாக.  "ரகுபதி,  'பந்துபாசன்' பத்திரிகை  கிடக்கட்டும்...  நீ செய்த அயோக்கியத்தனம் எல்லாமே எனக்குத் தெரியும்"

"ஸார்..." என்றிழுத்த ரகுபதியின் முகம்   லேசாக வெளிறியது   வெளிப்படையாகத் தெரிந்தது.

"எத்தனை பேரை இப்படி ஏமாத்தியிருக்கே?.. பொம்பளைன்னா அவ்வளவு கிள்ளுக் கீரையா போயிடுச்சாடா, உங்களுக்கு?..  காதலிக்கற மாதிரி நடிச்சே;  கை கழுவினே.. அதுவே படு  கேவலம்.  அதை போட்டோ எடுத்து காசு பாக்க வேறே நினைக்கறையே, ஏண்டா நீயெல்லாம் ஆம்பளையாடா?" என்று  ஹரி கர்ஜித்தான்.

ஒன்றுமே தெரியாத மாதிரி "என்ன ஸார் சொல்றீங்க? அப்போ அந்த போட்டோவை...." என்று  ரகுபதி  இழுத்த பொழுது 'பளார்' என்று அவன் கண்னத்தில் அறையலாம் போல இவனுக்கு இருந்தது.

"ரகுபதி, நன்னாத் தெரிஞ்சிக்கோ...  என்னோட மனைவி உன்னோட காலேஜ் வாழ்க்கைலே சாத்தனூர் போனானா, அந்த சமயத்திலே--- அவளுக்கு நான் கணவன் ஆகாத அந்த சமயத்திலே--- அவ உன்னை நம்பி காதலிச்சிருக்கலாம்.... போயிருக்கலாம்.. உன்னோட அவளுக்கு பழக்கம் ஏற்பட்டதே ஒரு விபத்து;  அவ்வளவு தான்!.." என்று பதட்டமில்லாமல் அவன் குரல் ஸ்பஷ்டமாக வெளிப்பட்டது.. "இப்போ என்னையே எடுத்துக்கோ... இறந்து போன என்னோட முதல் மனைவியோட நான் சேர்ந்து இருக்கற மாதிரி, இதே மாதிரி,   எத்தனை  புகைப்படங்கள் எங்க வீட்லே இருக்கு?...அதுலே ஒண்ணை எடுத்து வைச்சிண்டு  என்னோட பழைய வாழ்க்கையை நெனைச்சிண்டு அவ அழுதிண்டு இருந்தா அது எத்தனை பைத்தியக்காரத்தனம்?... இன்னும் சொல்லப் போனா தன்னோட முந்தைய வாழ்க்கைலே அவ எத்தனை தவறுகள் செஞ்சிருந்தாலும் அதை மன்னிக்கற அளவுக்கு அவளை நா காதலிக்கறேன்.. அதனாலே... ஆல்ரைட்... நீ  போகலாம்.." என்று வாசல் பக்கம் ஹரி   கை காட்டினான்..  இவ்வளவு அமைதியாக இந்த விஷயத்தை இவன் டீல் பண்ணுவான் என்று ரகுபதி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

இப்பொழுது இவனை சீண்டிப் பார்க்க வேண்டும், அதான் முக்கியம் என்ற தீர்மானத்தில் ரகுபதி  கேலியாகச் சிரித்தான்.. "ஸார்.. ஆம்பளையாடான்னு என்னைக் கேட்டுட்டீங்க.... சரி.. எனக்கு என்னவோ   உங்களைப்  பார்த்துத் தான் இப்போ அப்படிக் கேக்கணும் போல இருக்கு.." என்று அவன்  கேட்டு முடிக்கவில்லை...

"சரித்தான்  போடா!..   "என்று அலட்சியமாக உறுமினான் ஹரி..  "எவன் ஆம்பளைன்னு ஊர் உலகத்துக்கெல்லாம்  தெரியும்டா... நீ புதுசா சொல்ல வேண்டாம்..  தெரிஞ்சிக்கோ..  தன்னை நம்பி வந்த  பொண்ணை மதிக்கறவன்  தாண்டா, ஆம்பளை...  அதாண்டா ஆம்பளைக்கு  மரியாதை.. தெரிஞ்சிக்கோ/." என்று ஹரி சீறியதைப் பார்த்து ரகுபதியின் முகம் வெளிறிப் போனது.

அந்த பழுப்பு நிறக் கவரையும் பொருட்படுத்தாமல் மேஜை மேலேயே போட்டு விட்டு அவன் வெளியேறியது பார்க்கப் பரிதாபமாக இருந்தது.



No comments:

Related Posts with Thumbnails