மின் நூல்

Wednesday, May 29, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                      30


சென்ற   அத்தியாயத்தைப் படித்து விட்டு வல்லிசிம்ஹன் அவர்கள் 'பத்து  தபால்காரர்களா?.. குமாரபாளையம் பெரிய ஊர்  தான் போலிருக்கு' என்று வியந்திருந்தார்கள்.

குமாரபாளையம் மெயின் ரோடு தான் அந்த  ஊரின் இதய பாகம். மெயின் ரோடில் தான் சினிமா தியேட்டர், ஓட்டல், கடைகள், போஸ்ட் ஆபிஸ் என்று சகலமும்  இருந்தது.   நெசவுத் தொழில் குடிசைத் தொழிலாக புழக்கத்தில் இருந்த காலம் அது..  பெண்மணிகள் சம்பந்தப்பட்ட  ஒரு விஷயத்திற்கு மிகவும் பிரசித்திபெற்ற ஊர் குமாரபாளையம். அந்நாட்களில் பெண்கள் தங்கள் கூந்தலை பின்னி, நுனியை ரிப்பன் போட்டு முடிவார்கள் அல்லவா?..  அந்த ரிப்பன் தயாரிப்பில்  கொடிகட்டிப் பறந்த ஊர் குமாரபாளையம்.  கலர்க் கலராய் ரிப்பன்கள்-- அவற்றில் தான் எத்தனை வகைகள்,  வண்ணங்கள்!   அந்த  ரிப்பன் சுருள்கள் அழகாய் பேக் செய்யப்பட்டு பண்டில் பண்டிலாய் குமாரபாளையம் தபால் நிலையத்தில் பார்ஸல்  செக்ஷனில் நிறைந்திருக்கும். 

குமார பாளையமும்,  பவானியும் இரட்டைக் குழந்தைகளாய்  ஜமக்காளம்  நெசவில் கைதேர்ந்த  ஊர்கள்.  திருமணம் போன்ற குடும்ப குதூகல நிகழ்வுகளில் தரையில் விரிப்பார்கள் அல்லவா,  அந்த ஜமக்காளம்.  கல்யாண சீர்வரிசைகளில் பாய்--தலையணை-- ஜமக்காளம் என்பது அந்நாட்களில் மும்மூர்த்திகளாய் இருந்தன.   ஜமக்காள நெசவு குமாரபாளையத்திலும் உண்டு  என்றாலும்  பவானி ஜமக்காளம் என்று ஜமக்காளத் தயாரிப்புக்கு பவானி  பெயர் சூட்டி விட்டு.  ரிப்பனுக்கு குமாரபாளையத்தைக் கொண்டாடினார்கள்!  ஜமக்காளம் நெய்வதற்கு குழித்தறி என்று  அழைக்கப்பட்ட விசேஷ தறி இருந்தது.  விசைத்தறி பகாசுரன் வந்து அத்தனையையும் சாப்பிட்டு விட்டது இன்னொரு பரிதாபம்.

குமாரபாளையம் தபால் ஆபிசில் பார்சல் செக்ஷ்னில் பணியாற்றுவோருக்கு பெண்டு நிமிர்ந்து விடும்.  பார்சல்களைக் கையாள-- எடுக்க, எடை போட, உள்ளே உருட்டித் தள்ள என்று  உதவிக்கு இரண்டு மூன்று  இலாகா ஊழியர்களுக்கு எந்நேரமும்  வியர்வை வழிய வேலையிருக்கும்!

கிட்டத்தட்ட இருவாரங்கள் போஸ்ட் பாக்ஸ்   செக்ஷனின் வேலைக்குப் பிறகு  ரிஜிஸ்ட்ரேஷன் பிரிவில் பணியேற்றுக்  கொண்டேன்.  எனக்கு மிகவும்  பிடித்துப்  போன வேலையாக இது  ஆனது..  நிதானமாக  நறுவிசாக நாமுண்டு நம் வேலை  உண்டு  என்று பணி செய்ய  நல்ல  செக்ஷன்  இது.   கவுண்ட்டர் வழியாக நீட்டப்படும் கடித உறையை எடை போட்டு,  எவ்வளவு மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்ட வேண்டும் என்பதை  கவரின் பின்பக்கம் பென்சிலால் குறித்துக் கொடுத்து அவர் ஸ்டாம்ப் ஒட்டி வந்ததும் சரி பார்த்து அஞ்சல் தலையில் முத்திரை குத்தி கடித உறை கொடுத்தவருக்கு ரசீது கொடுத்து  உறையை பக்கத்திலிருக்கும் டிரேயில் போட்டு விட வேண்டியது  தான்.

வழக்கமாக மாலை மூன்று மணி வரைக்கும் தான் இந்தக் கவுண்ட்டர் செயல் படும்.  அப்புறம் அன்றைய பதிவுத் தபால்களை பட்டியல் இடுகிற மாதிரி விவரக் குறிப்புகளை எழுத வேண்டும்.   ஒரே ஊருக்கு பத்து உறைகள் இருக்கும் பட்சத்தில்  அந்த பத்து கடித உறைகளையும்  காக்கி  நிற பெரிய உறையில் போட்டு  அதன் மேல் எந்த ஊர் என்பதனை எழுத வேண்டும்.
இப்படியான உறைகளுக்கு  ஆர்.பி (Registered Budle)  கவர்கள்  என்று பெயர்.
இந்த நடவடிக்கைகள் எல்லாம்  அவசர கதியில் பின்னால் நடக்கப் போகும் கடிதப் பிரித்தல் வேலைகளுக்கு  உதவியாகத் தான்.

பிறகு  ஒவ்வொரு  பீட் தபால்காரரும்  பட்டுவாடா ஆன ரிஜிஸ்தர் தபால் விவரங்களைக் கொடுப்பார்.  பட்டுவாடா ஆகவில்லை என்றால் அதற்கான காரணத்தை ரிஜிஸ்தர் தபால் உறைகளின் பின் பக்கம் குறித்திருப்பார்.  (Door Locked, Not in Town,  Addressee not available,  Refused -- இந்த மாதிரி.)

ரு  ஞாயிற்றுக் கிழமை.  அத்தனை  பேருக்கும் விடுமுறை.

காலையில் காலைக்காட்சி என்று ஆங்கில படம்  எதற்கோ  ஒரு செட் ஆட்கள்  போய் வந்தனர்.  நான் காவிரிக்குப் போய் மனசார அமுங்கிக் குளித்து  விட்டு  வந்தேன்.   ரூமிற்கு வந்து உடை மாற்றி ராமாஸ் கேப் போய் சாப்பிட்டு வந்தேன்.  எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஏதாவது பாயசம் ஒரு கப்பில் வைப்பார்கள்.  அன்று எனக்குப் பிடித்த சேமியா பாயசம்.  ரூமிற்கு வந்த பொழுது  திம்மென்றிருந்தது.  பின்பக்க ரேழியில் நல்ல காற்று வரும்.  கதவை பரக்கத் திறந்து பாய் விரித்துப் படுத்தது   தான் தெரியும்.   பெண்டுலம் கடிகாரத்து மணியோசை தான் எழுப்பியது.  மணியைப் பார்த்தால் ஐந்து.    மாலை ஐந்து.

வீடு பூராவும் அமைதியாக இருந்தது..  ஈ காக்கை காணோம்.  முகம் கழுவி துடைத்து உடை மாற்றி வாசல் பக்கம் வந்தேன்.  மாடிக்குப் போகும் படிக்கட்டு வாசல் பக்கம் தான்.  வெளிக் கதவு திறந்து உள்ளே நுழைந்ததும் இருக்கும்.  மாடிப் பக்கமிருந்து பேச்சுக் குரல் வந்தது கீழே  கேட்டது.   ஆஹா!  அத்தனை பேரும் மொட்டை மாடிக்குப் போயிருக்கிறார்கள் என்று தெரிந்து படியேறினேன்.

வெளிப்பக்கம் போனதும் நல்ல காற்று..   வட்டமாக   உட்கார்ந்தும்,  சிலர் கைப்பிடிச் சுவரில்  அமர்ந்தும்  சுவாரஸ்யமாகப்  பேசிக்  கொண்டிருந்திருந்தனர்.   நான் போய்ச்  சேர்ந்ததும் தபால் ஆபிஸ் 2 வந்தாச்சய்யா என்று   யாரோ உரத்த குரலில் சொன்னார்கள்.  ரத்தினம்   தபால் ஆபிஸ்  1  அவர்களுக்கு.

என்னையும் ரத்தினத்தையும்  தவிர அத்தனை   பேரும் பள்ளி ஆசிரியர்கள் தேர்வுகளுக்குப் படித்தவர்கள்..  சொல்லப் போனால்  சிலர்  தமிழாசிரியர்களாகவும் தனியார்  பள்ளிகளில்  பணியாற்றியவர்கள்.   ஏதோ ஏற்பாட்டில்  தமிழில் பட்டப்படிப்பு  படிக்க   இங்கு  வந்திருப்பவர்கள்.   அந்நாளைய  தமிழாசிரியர்களில்   முக்கால்வாசிப் பேர்  திராவிட  முன்னேற்றக் கழக அனுதாபிகளாய்  இருந்தனர்.  பாக்கி கால்வாசி கிராமப்புறத்து ஆசிரியர்கள், காங்கிரஸ்.     இதெல்லாம்  அவர்களோடுப் பழகிய அந்தப் பதினைந்து  நாட்களில் நான் தெரிந்து கொண்டது.  வேலைக்குப் போனதிலிருந்து   மனசில் மறைந்திருந்த  திமுக மீதான பற்றும் பாசமும்
இந்தத் தமிழ் ஆசிரியர்களுடனான பழக்கத்தில் மீண்டும் என்னுள்  துளிர்த்திருந்தது.     நான்  மாதவி பத்திரிகையைக் கையாண்ட விஷயத்தை இவர்களிடம்  சொன்ன போது  மகிழ்ந்து போனார்கள்.  மாதவி தமிழ் தேசியக் கட்சி  பத்திரிகை என்று  இவர்களுக்குத் தெரிந்திருந்தது.   இரவில் ஒன்பது மணி சுமாருக்கு எல்லோரும் மலாய்  மிதக்கும் பால் சாப்பிட வெளியே போவோம்.  மாதவி பத்திரிகை சம்பந்தமாக  அரட்டை அடித்த அன்றைக்கு  அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில்  பன், பால், பழம் என்று  எனக்கு வாங்கித்  தந்து ஜமாய்த்து  விட்டார்கள்.

தமிழ் வாரப் பத்திரிகைகள் பற்றி பெரிசாக கருத்து ஏதும் அவர்களுக்கு இல்லாதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.   கழக  செய்தித்தாட்கள், கழக  வார ஏடுகளைத் தாண்டி வாசிக்கும்   பழக்கம் இல்லாதிருந்தது.  சலூனில் முடிவெட்டிக் கொள்ளப்  போன பொழுது ஆனந்த விகடன் பத்திரிகையைப் பார்த்ததாகவும் அதிலிருந்த ஜோக்குகள் மிகவும் பிடித்திருந்ததாகவும் ஒருவர் சொன்னார்.

"புதுமைப் பித்தனைக் கூடப் படித்ததில்லையா?" என்று கேட்டேன்.

"புதுமைப்பித்தனை படிக்கறதா? திரைப்படம் இல்லையா அது?" என்று பதிலுக்குக் கேள்வி வந்தது.

அந்நாட்களில் டி.கே. சீனிவாசன் என்ற கழக எழுத்தாளர் இருந்தார்.  அவரது 'ஆடும் மாடும்'  என்ற  நூல் பரவலாக பேசப்பட்ட நூல்.  திமுக பகுதியிலிருந்து வந்திருந்த அந்த நாளைய நல்ல ஆக்கமாக எனக்கு  அறிமுகமாகியிருந்தது.  அந்த நூல் பற்றி நான் குறிப்பிட்டு  சிலாகித்த  பொழுது யாருக்குமே அது பற்றித் தெரிந்திருக்கவில்லை.  இன்றைக்குக் கூட திமுக சார்பான இலக்கிய அணி  என்று ஏதாவது  இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் தெரிந்திருக்காது.

இலக்கியங்கள் என்றால் சங்க இலக்கியங்கள் தான்  என்ற அளவில் அவர்கள் புரிதல் இருந்தது.   பாரதிதாசனை கழகத்தின் புரட்சிக் கவிஞர் என்ற மட்டில் அறிந்திருந்தனர்.  பாரதியாருடன் அவருக்கிருந்த தொடர்புகள் பற்றி விவரமாக அறியாதாராய் இருந்தனர். பாரதிதாசனை கழகத்தின் நாத்திகக் கவிஞர் என்பது போலவான தோற்றம் தான் அவர்களுக்கிருந்தது.   மயிலம் முருக பெருமான் மீது பக்தி கொண்டு, 'மயிலம் ஸ்ரீசுப்பிரமணியர் துதியமுதி' என்ற பெயரில் பாரதிதாசனின் பாடல் திரட்டு ஒன்று இருப்பதைப் பற்றி நான்  சொன்னபோது, 'அப்படியா?'  என்று ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டனர்.   அந்த நேரத்தில் பெருமாள் என்பவர்  அழகின் சிரிப்பிலிருந்து பாரதிதாசனின் கவிதை ஒன்றை ராகத்துடன்  அழகாகப் பாடினார்.

அவர்கள் கற்றது வேறு  வகையாக இருந்தது.   தொல்காப்பியம் பற்றி  முகிலன் என்ற ஆசிரியர்  சொன்ன கருத்துக்கள் பிரமிப்பாக இருந்தன.  ஆனால் அவர்கள் சொன்னது எல்லாம் சொந்த முயற்சியில் ஆய்வின் அடிப்படையில் அறிந்தது என்றில்லாமல் யாரோ எழுதியவற்றை மனனம் செய்து ஒப்புவிப்பது போல செயற்கையாக இருந்தது.

வெள்ளை வாரணர் என்ற பழந்தமிழ் அறிஞர் மேற்கொண்ட ஆராய்சிகளை பற்றி சொல்லும் பொழுது  கி.மு. 7-ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியை தொல்காப்பிய காலம் என்று எப்படி அவர் வரையறுக்கிறார் என்று ஒப்பிலக்கிய சான்றுகளோடு முகிலன்  விளக்கினார்.

'தொல்காப்பியத்திற்கு  பனம்பாரனார் என்ற புலவர் பாயிரம் தந்துள்ளார்.  'வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு  நல்லுலகத்து'  என்றும் இன்றும் பிரபலமாக இருக்கும் நாமறிந்த சொற்றொடர் பனம்பாரனாரின் பாயிரத்து ஆரம்ப வரி தான்.  நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையில் தொல்காப்பியம் பாடப்பெற்றதாக பாயிரம் பதிவு செய்திருக்கிறது.  நான்மறை  முற்றிய  அதங்கோட்டு ஆசான் என்ற புலவர் முன்னிலையில் தொல்காப்பியம் அரங்கேற்றமானதாக பாயிரம்  சொல்கிறது.  தொல்காப்பியர் காலம்  கி.மு. 700 என்றும் ஏழாம் நூற்றாண்டின்  ஆரம்ப காலத்தில் தொல்காப்பியம் அரங்கேற்றமாயிற்று என்றும் கொள்ளலாம்' என்று வெள்ளை வாரணர் வரையறுத்திருப்பதாக முகிலன்  சொன்னார்.

கொஞ்சம் கொஞ்சமாக வானம் இருட்டிக் கொண்டு வந்தது.    குருசாமி பாளையம் போனதிலிருந்து  இலக்கியம், வார இதழ்கள் போன்ற எண்ணங்களே என்னில் அறுந்த  மாதிரி இருந்து,  இன்று அதன் தொடர்ச்சி தொடர்ந்த மாதிரி ஒரு புத்துணர்ச்சி மனசில் பொங்கியது.

ஒவ்வொரு ஞாயிறு அன்றும் இப்படியான கலந்துரையாடல் அந்த இல்லத்தின்  மொட்டை மாடியில் நடப்பதாகத் தெரிய வந்தது.  அன்றைய பொழுதுக்கு எல்லோரும் மகிழ்ச்சியாகக் கலைந்தோம்.

ரத்தினம் பவானியில் இருக்கும் அவரது சொந்தக்காரரைப் பார்க்கப் போக வேண்டியிருப்பதாகச் சொன்னார்.

லேசாகப் பசிக்கத் தொடங்கியிருந்தது.    செருப்பை  மாட்டிக்  கொண்டு நான் ராமாஸ் கேப்பிற்கு புறப்பட்டேன்.

(வளரும்)



Sunday, May 26, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                     29


ஞாயிற்றுக் கிழமை மாலையே குமார பாளையம் போய்ச் சேர்ந்து விட்டேன். குருசாமி பாளையம்  மாதிரியே அதுவும்  போஸ்ட் மாஸ்டர் வீடு அட்டாச்டு தபால் அலுவலகம் தான். ஆனால் பத்து மடங்கு பெரிசாய் பெரிய ஹாலுடன் ஆறேழு கவுண்ட்டர்களுடன் பிரமாதமாக இருந்தது.   நான் போனது  ஞாயிற்றுக் கிழமையாதலால் போஸ்ட் மாஸ்டர் அவர் வீட்டில் இருந்தார்.    நல்ல வேளை அலுவலகத்தில்  டெலிகிராபிஸ்ட் இருந்தார்.  அவர் என்னிடம் விவரங்களை விசாரித்ததும்  "பெட்டியை வைத்து விட்டு சாப்பிட்டு வாருங்கள்; பக்கத்திலேயே தான் ஓட்டல் இருக்கிறது.  நான் இரவுப் பணி தான். இன்று இங்கேயே தங்கிக் கொள்ளலாம்" என்றார்.

அவர் சொன்னபடியே  பெட்டியை உள் பக்கம்  வைத்து விட்டுக் கிளம்பினேன்  ஐந்து நிமிட நடையில்  ராமாஸ் கேப் என்று  உயர்தர சைவ ஓட்டலைப் பார்த்து உள்ளே  நுழைந்தேன்.   இட்லி, ரவா தோசை, காப்பி என்று அருமையான சிற்றுண்டி கிடைத்தது.  இந்த ராமாஸ் கேப் என் நினைவில் பதிந்த ஓட்டல்.   எனது பல கதைகளில் இந்த  ஓட்டலை கதை ஓட்டத்திற்குப் பொருந்துகிற மாதிரி பொருத்திப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.    எனது 'கனவில் நனைந்த  நினைவுகள்'  குறுநாவலில் கூட    இந்த ஓட்டல் பற்றி வரும்.

குமாரபாளையம் சேலத்தின் கடைக்கோடியில் இருக்கும் ஊர்.  பக்கத்தில் தான் பவானி.  பவானி என்றதும் சங்கமேஸ்வரர் கோயில்,  கூடுதுறை  எல்லாம் உங்கள் நினவுக்கு வரும்.   குமார பாளையத்தையும் பவானியையும் இணைக்கிற மாதிரி ஒரு பாலம் உண்டு.  பாலத்தின் கீழ்  காவிரி.   காவிரியின் ஒரு பக்க கரை குமாரபாளையத்திலும் மறுபக்கக் கரை பவானியிலும் இருக்கும்.  குமார பாளையம் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தும் பவானி கோவை மாவட்டத்தைச் சேர்ந்தும் அந்த நாட்களில் இருந்தது.

இரவு தங்கல்  தபாலாபீஸில்.  அடுத்த நாள் காலையில் போஸ்ட் மாஸ்டரிடம் கடிதம் கொடுத்து பணியில் சேர்ந்தேன்.  போ.மா. பெயர் சுலைமான்.  வெகு சாதாரணமாக இயல்பாய் பழகுகிறவர் மாதிரி பார்வைக்குத் தெரிந்தார்.  பத்துக்கு மேற்பட்ட தபால்காரர்கள்.  அவர்களில் மிக வயதானவர் போல தோற்றமளித்த ஒருவருடன் என்னைச் சேர்ந்து   பணியாற்றச் சொன்னார்.   பெரியவரின் பெயர் மாணிக்கம் என்று   பின்னால் தெரிந்தது.   டெலிவரிக்காக பஸ்ஸில் வந்திறங்கிய தபால் பைகளை  பேக்கர் பிரித்துப் போட்டார்.  மொத்த தபால்களையும்  பெரிய  பெரிய மேஜைகளில் மேல் பரப்பினர்.  ஒரே ஒரு பையை மட்டும் போஸ்ட் மாஸ்டர் முன்னிலையில் பிரித்து அதிலிருந்த சிவப்பு நிற  பையை எடுத்து போஸ்ட் மாஸ்டர் மேஜையின்  மேல் வைத்தார்.  கணக்காளர்  சுப்பிரமணியன் அந்தப்  பையை எடுத்து மேலோட்டமாக சோதித்து விட்டு தனியாக தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த மேஜையின் மேல் வைத்துக் கொண்டார்.

பைகளிலிருந்து பிரித்துப் போட்ட கடித உறைகள் கிட்டத்தட்ட ஐநூறுக்கு மேலிருக்கும்.   மாணிக்கம் என்னை அழைத்து இந்தக் கடிதங்களில் போஸ்ட் பாக்ஸ் நம்பர் போட்டிருக்கிற கடிதங்களை மட்டும் தனியாகப் பிரிக்க வேண்டும் என்றார்.  நானும் அவரும் சேர்ந்து அந்த வேலையைச் செய்தோம்.
அப்படி போஸ்ட் பாக்ஸ் எண் போட்டிருந்த கடிதங்கள் மட்டும் இருநூறு இருந்திருக்கும். 

போஸ்ட் ஆபிஸிற்கு உள்ளடங்கிய வெளித்திண்ணையில்   லாக்கர் மாதிரி   எண்கள் பொறித்திருந்த   நிறைய ஸ்டீல் பீரோக்கள் இருந்தன.     ஒரு பீரோவிற்கு ஏறத் தாழ இருபது லாக்கர்கள் தேறும்.  அந்த மாதிரி ஆறு பீரோக்கள்.  ஆக 120 போஸ்ட் பாக்ஸ் எண்கள்.  சேலம் மாவட்டத்திலேயே சேலம் தலைமை அஞ்சலகத்திற்கு அடுத்தபடி போஸ்ட் பாக்ஸ்கள் அதிகம் இருந்த தபாலாபீஸாக குமாரபாளையம் தபாலாபீஸ் அந்நாட்களில் திகழ்ந்தது.

பூட்டப்பட்டிருந்த ஒவ்வொரு லாக்கரின் மேல் பகுதியில் ஒரு கடித உறையைப் போடுகிற அளவில் துவாரம் இருந்தது.  கையிலிருந்த  கடிதக் கற்றையின் மேலேக் குறிப்பிட்டிருக்கும் போஸ்ட் பாக்ஸ் எண் பார்த்து அதே எண்ணுள்ள லாக்கரின் அந்த துவாரத்திற்குள் செருக வேண்டும்.  இது தான் வேலை..  குழந்தையும் செய்து விடும் என்று கருதுகிற மாதிரி சுலபமாகத் தான் தெரியும்.  ஆனால் மிகுந்த பொறுப்பும் செயலாற்றலும் இந்தப் பணிக்குத் தேவை என்று போகப் போகத் தெரிந்து கொண்டேன். 

காலை எட்டு மணி சுமாருக்கு போஸ்டல் வேன் வந்து  கித்தான்  பைகளை டெலிவரி செய்ததும் தபால்களை உத்தேசமாக போஸ்ட் பாக்ஸ் எண் வரிசைப்படி அடுக்கிக் கொண்டு  அவற்றை எட்டரை மணிக்குள் அந்தந்த போஸ்ட் பாக்ஸ் லாக்கருக்குள் போட்டு விட முடியாது.   22-ம் எண்ணுள்ள போஸ்ட் பாக்ஸ் ஒரு பக்கம் அடுத்த கடித 54-ம் எண் போஸ்ட்   பாக்ஸ் வேறிடம் என்று  இருக்கும்.  அவசரத்தில் அடுக்கிக் கொள்வதில் சில சமயங்கள் வரிசை எண்கள் மாறிப் போயிருக்கும்.  கடைசியில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஓடிக் கொண்டிருக்க  வேண்டியது தான்.   ஒன்பது மணிக்கெல்லாம் தங்கள் போஸ்ட்  பாக்ஸில் இருக்கும் தபால்களை எடுத்துக் கொள்வதற்கு ஆட்கள் வந்து விடுவார்கள்.   சில நேரங்களில் எப்பொழுதுடா வெளிக்கதவைத் திறப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் வெளியே கடைப் பையன் சைக்கிளில் காலூன்றிக்  காத்திருப்பார்கள்.

மாணிக்கத்திற்கு  எந்த  இடத்தில் எந்த   எண்ணுள்ள போஸ்ட் பாக்ஸ் இருக்கிறது  என்பது மனப்பாடம்.  அதே மாதிரி கடைகளின்   போஸ்ட் பாக்ஸ் எண்களும் தலைகீழ்ப் பாடம்.  மாணிக்கம் என்னிடம் "நான்கு நாட்கள் உங்களுக்குப் பழக்கம் ஆவதற்காக நான் கூட இருக்கிறேன்..  அப்புறம் நீங்கள் தான் தனியாகச் செய்ய வேண்டும்.." என்று சொல்லியிருந்தார்.  ஆகவே ஓரளவு  போஸ்ட் பாக்ஸ் எண்ணிட்ட அத்தனை கடிதங்களையும் வரிசை எண்படி அடுக்கிக் கொள்ள வேண்டும்,  அதை அந்தந்த போஸ்ட் பாக்ஸ்களில் கவனமாக நுழைத்து விட வேண்டும் என்பதை உன்னிப்பாக  கவனித்துக் கொண்டிருந்தேன்.

ஒன்பதுக்குள் இந்த வேலையை முடித்து விட்டு லாக்(G) புக்கில் கையெழுத்திட்டு விட்டு  காலை உணவு  முடித்து விட்டு    பதினோரு மணி  வாக்கில் அலுவலகம் வந்தால் போதும்.  வந்ததும் வெளியே இருக்கும் தபால் பெட்டியிலுள்ள கடிதங்களை   எடுத்துக் கொண்டு வந்து  Sort  பண்ண வேண்டும்.   மர அலமாரி போன்ற அமைப்பில்  பெரிய அளவில் அறை போல தடுப்புகள் இருக்கும்.  இதை பீஜன் ஹோல்கள் என்று சொல்வார்கள்.  அந்த தடுப்பின் மேல்  எந்தப் பகுதிக்கான 'தபால் பிரிப்பு அது'  என்று எழுதியிருக்கும். 

குமார பாளையத்திலிருந்து ஆத்தூர் என்ற இடத்திற்கு ஒருவர் கடிதம் போடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அந்தக் கடிதம் நேரடியாக ஆத்தூருக்குப்  போகாது.  சேலம் மாவட்டத்திலேயே இருக்கும்  ஒரு நகராட்சி ஆத்தூர் என்பதினால் சேலம் தலைமை அஞ்சலகத்திலிருக்கும் DSOக்கு (District Sorting Office)  சென்று அங்கிருந்து ஆத்தூருக்கான  கடிதங்களுடன் கலக்கப்படும்..  ரயில் நிலையங்கள் இருக்கும் ஊர்களில்  RMS (Railway  Mail Service) மூலம் தபால் பைகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

சேலம், அதன் சுற்று வட்டார ஊர்கள், தாலுக்காக்களுக்கு போக வேண்டிய  கடிதங்கள் சேலம் DSO  பீஜன் ஹோலில் அடுக்குவார்கள்.  இந்த மாதிரி மாநிலத் தலைநகர்களுக்குச் செல்ல வேண்டிய கடிதங்கள்,  வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியவைகள் என்று  தனித்தனி பீஜன் ஹோல்களில் பிரிக்கப்படும்.  அதற்கேற்ப தனித்தனி கித்தான் பைகளில் போட்டு   எந்த இடத்திற்குப் போக வேண்டிய பை அது என்று  ஒரு மஞ்சள் அட்டையில் எழுதி கட்டப்பட்டு  அரக்கு சீல் வைக்கப்படும். 

ஆரம்பத்தில் ஒரு சிவப்பு பை பற்றி குறிப்பிட்டது நினைவு இருக்கும்.  அந்தப் பைக்கு அக்கவுண்ட் பேக் என்று பெயர்.  அந்தப் பைக்குள்  மணியாடர் போன்ற இனங்களில் பட்டுவாடா  செய்ய வேண்டிய தொகை பணமாக இருக்கும்.  அந்த சிவப்புப் பை உள்ளடங்கி இருக்கும் கித்தான் பையைக் கட்டும் பொழுது அதனுள் சிவப்புப் பை இருக்கிறது என்ற குறிப்பு கொண்ட சிலிப் எழுதி சீல் வைப்பார்கள்.  அதனால் அந்தப் பை வெகு ஜாக்கிரதையாகக் கையாளப்படும்.

குமாரபாளையம் தபாலாபீஸில் பணியாற்றிய ரத்தினம் என்பவர் பணியில் சேர்ந்த  நாளன்றே பழக்கமானார்.  அவர் தான் தங்கியிருக்கும் இடத்திற்கு அழைத்துப் போனார்.  ஒரு பெரிய வீடை வாடகைக்கு எடுத்து கிட்டத்தட்ட பத்திற்கும் மேற்பட்டோர் அங்கு தங்கியிருந்தனர்.   இரத்தினம் ஒருவர் தான் தபாலாபீஸ்.. மற்றவர்கள் பெரும்பாலும் ஆசிரியர்கள் என்று  தெரிந்தது.

குமாரபாளையத்தில்  தமிழில் புலவர்  (அந்நாட்களில் வித்வான்-- பிற்காலத்தில் பி.லிட்.,) படிப்புக்காக  கல்லூரி  ஒன்று  இருந்தது.   அந்த கல்லூரியில் சேர்ந்து படித்தவர்களில் சிலர்  இந்த வீடை வாடகைக்கு எடுத்திருந்தனர்.   தான் தங்கியிருக்கும் அந்த இடத்திற்கு தான் ரத்தினம் என்னைக் கூட்டிச் சென்றார்.

நாங்கள் அங்கு போன  நேரத்தில்  ஹாலில் சிலர் அமர்ந்து  சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.  பெரும்பாலும் என்னை விட வயதானவர்களாகத்  தெரிந்தனர்.  ரத்தினம் என்னைப் பற்றிச் சொன்னார்.  நானும் அங்கு தங்கிக் கொள்ள அவர்களுக்கு  ஆட்சேபணை ஏதும் இல்லை என்று  தெரிந்தது.

(வளரும்)



Friday, May 24, 2019

வசந்த கால நினைவலைகள்..

                                                                        28


ப்பொழுது தபால் துறையும்,  தொலைபேசித் துறையும் தனிதனியாக இருப்பது போல் அல்லாமல்  தபால், தொலைபேசி, தந்தி என்று எல்லாப் பிரிவுகளும் ஒன்றிணைந்து  தபால் தந்தித் துறையாக   நடுவண் அரசின் கீழ் இருந்தது.    நான் வேலைக்காக விண்ணப்பித்திருந்தது   தபால் பிரிவுக்கு. ஆகையால் சேலம் டிவிஷனுக்கான தபால்  துறை  அதிகாரியான சூப்பிரண்டெண்டட் அலுவலகத்திற்கு நேர்காணலுக்காக வரச் சொல்லியிருந்தார்கள்.  அந்த நேர்காணலில்  எனது  தகுதிச் சான்றிதழ்களை சரி பார்த்தார்கள்.   தபால் அலுவலகத்தின் நடைமுறைகள்,  பணிகளின் தன்மை இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வதற்காக  பயிற்சி அளிக்க வேண்டுமல்லவா?.. அந்த நாட்களில்  வேலைக்காக நபர்களைத்  தேர்ந்தெடுத்ததும் அவர்களைக் களத்தில்  இறக்கி சில மாதங்களுக்கான அந்தக் களப்பணியையே வேலைக்கான பயிற்சி  (Training)  என்ற அருமையான ஏற்பாடு இருந்தது.  அந்த களப்பயிற்சி காலம் ஆறு மாதங்கள் என்றும் பின்னால் அந்தப் பயிற்சிகாலம் வேலை பார்த்த  பணிக்காலத்தோடு (Service Period) சேர்த்துக் கொள்ளப்படும் என்று தபால் இலாகாவின் நடைமுறைகள் இருந்தன.
                                                                                                                                   
ராசிபுரம் வட்டத்திலிருந்த குருசாமி பாளையம் தபால் அலுவலகத்தை எனது களப்பயிற்சி இடமாகத் தீர்மானித்து   அதற்கான ஆணையை வழங்கினார்கள்.     ஒரு நல்ல நாளில் குருசாமி பாளையம் போய்ச்  சேர்ந்தேன்.  அது ஒரு சின்ன கிராமம்.  நெசவாளர்கள் நிறைந்திருந்த கிராமம்.   ஒரு வீட்டின்  முன்பக்கம் தபால் ஆபிசாக இருந்தது.    அந்த வீட்டிலேயே போஸ்ட்  மாஸ்டர்
குடியிருந்தார்.  போஸ்ட் மாஸ்டர் நடேசன் என்னை விட மூனறு அல்லது நான்கு வயது  பெரியவராய் இருப்பார்.  திருமணமானவர்.  குழந்தைகள் இல்லை.  அலுவலக அன்றாட செயல்பாடுகளுக்கு நானும் சேர்ந்து கொண்டதில் அவருக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.   கிட்டத்தட்ட அவர் வயதொப்பவனாய் நான் இருந்ததில் அந்த மகிழ்ச்சியை இரு மடங்காக உணர்ந்தார்.

போஸ்ட் ஆபிஸின் பின்பகுதி அந்த வீட்டின் உள்ளடங்கி இருந்தது.  போஸ்ட் ஆபிஸின் பின்பகுதியையும் அந்த வீட்டையும் இணைத்து  ஒரு சின்ன அறை.  அந்த அறையை  ஒட்டி ஒரு கதவு.  அந்தக் கதவின் மறுப்பக்கத்தைப் பூட்டிக் கொண்டால் இந்தப் பகுதி ஒரு தனி வீடு போலாகி விடும்.  போ.மா. நடேசன் என்னை அந்த அறையில்  தங்கிக் கொள்ளச் சொன்னார்.  கிருஷ்ணகிரி ரிஸர்வாயர் ப்ரோஜக்ட் கதை தான்.   ஆறு அல்லது எட்டு   மைல் தூரத்தில் தான் ராசிபுரம்.   இருந்தாலும் "தினமும் போய் வருவது  உங்களுக்கு சங்கடமாக இருக்கும்.   அதனால் இங்கேயே தங்கிக் கொள்ளுங்கள்" என்று உரிமையுடன் நடேசன்   சொல்லி விட்டார்.

சின்ன தட்டி விலாஸ் ஓட்டல் ஒன்றிருந்தது.   நல்லவேளை சைவ ஓட்டலாக இருந்ததே போதுமானதாக ஆகி விட்டது.  பேசாமல் ராசிபுரத்தில் தங்கி தினமும் குருசாமிபாளையம் வந்து போயிருக்கலாமே என்று இப்பொழுது தோன்றுகிறது.  குளிக்க, சாப்பிட, தூங்க  இன்னும் அதிக செளகரியங்கள் கிடைத்திருக்கும்.  வேலை செய்யும் இடத்திலேயே தங்குவது  கொடுமையிலும் கொடுமை கூட...

சின்ன வயசிலிருந்தே என்னைத் தொடர்ந்து  வரும் ஒரு பழக்கம் இருப்பதை இந்த சமயத்தில் உணர்கிறேன்.   தெளிவாக காரண காரியங்களை விளக்கி யாராவது  எது குறித்தும் சொன்னால் ஏற்றுக் கொள்ளும் பழக்கம்.  நானாக என் அனுபவத்தில் அது சரியில்லை என்று உணர்கிற வரை அந்த பழக்கம் என்னுள் பதுங்கியிருக்கும்.   ஆரம்பத்தில் இயல்பாய் என்னுள் கிளை பரப்பிய இப்படியான செயல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைந்து இப்பொழுது எனது குணாம்சங்களில் ஒன்றாகவே வளர்ந்து போயிருப்பது  நன்கு  தெரிகிறது.

குருசாமிபாளையம் தபால் அலுவலகத்தோடு  சேர்க்கப்பட்டு   அதை விட  சின்ன கிராமங்கள் சில இருந்தன.  அந்த  மாதிரி கிராமங்களில்  வசதியுள்ள  எழுதப் படிக்கத்  தெரிந்த ஊர் பெரிய மனுஷர் யாராவது வீட்டுத்  திண்ணையில் தபால் ஆபிஸ் வைத்திருப்பார்.  கார்டு, கவர், இன்லெண்ட், மணியாடர் இப்படி ஏதாவது பரிமாற்றம் இருந்து கொண்டு தான் இருக்கும்.  ரன்னர் போய் அப்படியானவைகளை சேகரித்துக் கொண்டு மாலை 5 மணிக்குள் வந்து விடுவான்.  சரியாக 6 மணிக்கு ராசிபுரத்திலிருந்து மெயில் வேன் குருசாமி பாளையம் தபால் ஆபிஸுக்கு வந்து விடும்.  அதற்குள் வேனில் அனுப்பி  வைக்க நாங்கள் எல்லாவற்றையும் ரெடி பண்ணி   தயாராக வைத்திருப்போம்.  மெயில் வேன் வந்து போய் விட்டால் அன்றைய  வேலை முடிந்த மாதிரி தான்.

நடேசனுக்கு இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது  சினிமாத் தியேட்டருக்குப் போயாகணும்.   செகண்ட் ஷோ தான்.   ராசிபுரத்திற்குப் போனால் தான் சினிமா.   சைக்கிள் கேரியரில் நான் அமர அவர் தான் தார்ச்சாலையில் ஓட்டிப் போவார்.   திரும்ப நடுராத்திரி   இரண்டரை ஆகிவிடும்.  வழி பூராவும் சாலையில் புளிய மரங்கள், வீசுகிற காற்றில் ஹோவென்று தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கும்.  வேண்டாத கதையெல்லாம் ஞாபகத்திற்கு வரும்.   ஒரு நாள் அப்படித் தான் அவசர அழைப்பில் சைக்கிளிலிருந்து இறங்கி ஒரு  புளிய மரத்தடியில் 
ஒதுங்குகையில்  வெள்ளை வெளேர் என்று வேட்டி மட்டும்  காற்றிலாடுகிற நிழலினூடே  கன்னங்கரேலென்று இரு கால்கள் மட்டும் தொங்குகிற காட்சியாய்....   சடாரென்று  திரும்பி சைக்கிளுக்கு ஓடி வந்து விட்டேன்.  ஆனால் கன்னத்தில் மட்டும் ஏதோ உரசின மாதிரி உணர்வு. வழி நெடுக நடேசன் சைக்கிளை மிதித்தபடி நடிக நடிகர்களை பற்றி பத்திரிகை நிருபர்கள் விடும் சரடுகளை உண்மை போல நம்பி என்னிடம் சொல்லிக் கொண்டு வந்தார்.  அவர் சொன்னது எதிலும் மனம் பதியவே இல்லை.  அன்றிரவு போஸ்டாபீஸ் திரும்பியதும் ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்து படுத்தது தான் தெரியும்..
                                                                                                                               
காலையில் தாமதமாகத் தான் எழுந்தேன்.  எனக்கு முன்னாடியே எழுந்திருந்த நடேசன் வாசல் பக்கம் சேரில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கோண்டிருந்தார்.  என்னைப் பார்த்ததும் "என்ன,  ராத்திரி சரியாத் தூங்கலியா? மூஞ்சிலாம் வீங்கின மாதிரி இருக்கு?" என்று கேட்டார்.   "ஓண்ணுமில்லியே!" என்று அவரிடம் சமாளித்து பல் விளக்குகையில் வாஷ் பேசின் கண்ணாடியில் பார்க்கும் பொழுது லேசாக வீங்கின மாதிரி எனக்கும்  தோன்றியது..  எல்லாம்   பிரமை என்று ஒதுக்கித்  தள்ளினேன்.  அடுத்தடுத்த நாட்களில் இதை மறந்தே போனேன்.

அடுத்த சனி விட்டு அதற்கடுத்த சனிக்கிழமை நடேசனுடன் ராத்திரி சினிமாக்கு போக வேண்டிய முறை.  போதாக்குறைக்கு எம்ஜிஆரின் புதுப்படம் வேறு ரிலீசாகியிருந்தது.  அந்த புளியமரம் வழியில் எந்த  இடத்தில் இருக்கும் என்பது வேறு நன்றாக நினைவிலிருந்தது.  இந்தத் தடவை சினிமா பார்த்து விட்டு வரும் பொழுது சைக்கிளிலிருந்து இறங்கவே கூடாது என்று தீர்மானித்திருந்தேன்.

அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது.  அந்த வார புதன் கிழமையே  சேலம் சூப்பிரெண்டெண்ட் அலுவலகத்திலிருந்து எனக்கு ஒரு தபால் வந்திருந்தது.  பிரித்துப் பார்த்ததில்  அடுத்த இரண்டு மாத பயிற்சிக்காக குமாரபாளையம் தபால் ஆபிஸில் அடுத்து வருகிற திங்கட்கிழமை பணியில் சேர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

அந்தக் கடிதத்தின் நகல் ஒன்றையும்    நடேசனுக்கு அனுப்பியிருந்தார்கள்.    எனக்கு முன்னாடியே அவர் அதைப்  படித்திருக்கிறார்.. "வர்ற சனிக்கிழமை இங்கேயிருந்து ரிலீவ் ஆயிடலாம்..  அன்னிக்கு ராத்திரி சினிமா பார்த்திட்டு  ஞாயிற்றுக் கிழமை காலம்பற சேலம் கிளம்பலாமே?" என்றார்.

"சரியாப் போச்சு.." என்று மறுத்தேன்.  சேலம் போய் திங்கட்கிழமையே குமார பாளையத்தில் ஜாயின் பண்ணனுமே!..  எடுத்துக்கிட்டு போற பொருள்லாம் வேறு பேக் பண்ணனும்.. அதற்கென்ன, பின்னாடி வர்றேன் ..  ஒரு நாள் இருந்து தங்கி சாவகாசமா  திரும்பினாப்  போச்சு.." என்றேன்.

"அப்படி வந்தேனா, சனிக்கிழமையா பார்த்து இங்கே வந்திடு....  ராத்திரி சினிமாக்கு போக செள்கரியமா இருக்கும்" என்றார் நடேசன்..

சரியான  சினிமாப் பைத்தியம்!

(வளரும்)


Wednesday, May 22, 2019

வசந்த கால நினைவலைகள்....

                                                                         27


இலங்கை 'கதம்பம்'  பத்திரிகை 'எனக்குப்  பிடித்த எழுத்தாளர்' என்ற போட்டியை நடத்தியது என்றால்  குமுதம்  'எனக்குப் பிடித்த நாவல்' என்ற போட்டி ஒன்றை  நடத்தியது.   அந்தப் போட்டியில் பரிசுக்குரிய கட்டுரைகளில் ஒன்றாக  எனது கட்டுரை தேர்வாயிற்று.

பேராசிரியர் கல்கியின் மகள், மகன் இருவருமே எழுத்தாங்கங்களில் சோடை போனதில்லை.   மகள் ஆனந்தி  கல்கி பாதியில் விட்டு விட்டுப் போன 'அமரதாரா' நாவலை தகப்பனார் அந்த நாவலுக்காக எழுதி வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டே அற்புதமாக முடித்து வைத்தார்.  மகள் தந்தைக்கு  ஆற்றிய  அற்புத பணிக்கடமை இது.   இல்லையென்றால் கல்கி அவர்கள் எழுதிக் கொண்டிருந்த அமரதாரா நாவல் அவர் காலமானதும் அரைகுறையாகவே முடிக்கப்படாமல் நின்று  போயிருக்கும்.   கல்கியின்  திருமகனார்  ராஜேந்திரனோ  கல்கி காலத்திலேயே சில கதைகள் எழுதி சின்ன அண்ணாமலை போன்றோரிடம் பாராட்டு பெற்றவர்.  அவரது  அந்த ஆர்வம் கல்கி மறைந்ததும் தொடர்ந்தது.

கி.ராஜேந்திரன் கல்கி  பத்திரிகையில் எழுதிய முதல் தொடர் 'பொங்கி வரும் பெருநிலவே' என்பது.  லதா அவர்கள் தன் அழகு சித்திரங்களால் அந்தத்  தொடரின் கதாபாத்திரங்களின் நடமாட்டத்தை  நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார்.   கி. ராஜேந்திரன் கல்கியிலேயே இரண்டாவதாக எழுதிய  தொடர்  'நெஞ்சில் நிறைந்தவள்' என்ற பெயர் கொண்டது.  இந்தத் தொடருக்கு  வினு சித்திரங்களை வரைந்திருந்த நினைவு.  கமலபதி என்ற   பெயர் கொண்டிருந்த கதையின் நாயகனின் பாத்திரப்  படைப்பு அற்புதமாக  இருக்கும்.

கி. ராஜேந்திரரனின் இந்த நாவலைத் தான் எனக்குப் பிடித்த நாவலாக மனத்தில் வரித்துக் கொண்டு குமுதம் போட்டிக்கு அனுப்பியிருந்தேன்.  பரிசு பெற்ற அந்த கட்டுரை தான் குமுதத்தில் வெளியான எனது  முதல் படைப்பு.  குமுதத்தில் வெளியான  கட்டுரையைப்  படித்து விட்டு எனது அன்றைய முகவரி விசாரித்துக் கொண்டு  கி. ராஜேந்திரன் எனக்கு பாராட்டுக் கடிதம் எழுதியிருந்தார்.  நான் பொங்கல் வாழ்த்து அனுப்பும் எழுத்தாளர் பட்டியலில் கி.ராஜேந்திரனும் சேர்ந்து கொண்டார்.

இந்த சமயத்தில் தான் மறுபடியும் வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து கடிதம் வந்தது.   சேலம்  ஹஸ்தம்பட்டி பகுதியில் இருந்த தேசிய மாணவர் படை  (NCC -  National Cadet Corps) அலுவலகத்தில் அடுத்த திங்கட்கிழமை நேர்காணல் இருப்பதாக கடிதச் செய்தி  தெரிவித்தது.   அந்த  நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்டு  பணியும் ஏற்றுக் கொண்டேன்.   ACC  செக்ஷனில் இருந்தவர் நீண்ட விடுப்பில் சென்றிருந்ததால் அந்தப் பிரிவு வேலை எனக்களிக்கப் பட்டது.  உள்ளூரிலேயே பணி என்பது ஒரு பக்கம் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்துப் போன அலுவலகமாக இது ஆயிற்று.

சேலம் மாவட்டத்தில் இருந்த அத்தனை கல்லூரிகள்,  உயர் நிலைப்  பள்ளிகளிலும் இருந்த   NCC, ACC  மாணவர் படைகளுக்கான பயிற்சிகள்,  அவர்களுக்கான சீருடை,  பயிற்சி சுற்றுலா, சான்றிதழ் வழங்குதல் என்ற அத்தனை பணிகளையும் கண்காணித்து கவனித்துக் கொண்ட மாவட்ட அலுவலகம் அது.  நான் அங்கு  பணியில் இருந்த காலத்தில்  அதிகாரியாக இருந்த மேஜர்  கான் என்பவர் மறக்க முடியாதவர்.  கண்டிப்பும் அன்பும் கொண்ட அற்புத மனிதர் அவர்.

அந்த  அலுவலத்தில்  பணியாற்றிய எழுத்தர், காஷியர், ஸ்டோர் டிபார்ட்மென்ட் கண்காளிப்பாளர், கணக்காளர் போன்ற சகல அலுவலர்களும்  சிவிலியன்கள்.  மற்ற எல்லோருமே  இராணுத்தில்   பணியாற்றியவர்கள்.  அல்லது பணியாற்ற பயிற்சி பெறுபவர்கள் என்றிருக்கும்.  டெபுடேஷனாகவும் இராணுவத்திலிருந்து  இங்கு வருவர்.  இராணுவத்தினருக்கே  உரித்தான கட்டுப்பாடு, மிடுக்கு,  உடல்வாகு, பழக்க வழக்கங்கள் எல்லாம் அவர்களிடம் காணப்படும்.   என் வாழ்க்கையில் குறிப்பிடத்  தகுந்த சில பண்பாட்டு  நடவடிக்கைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை இங்கு பணியாற்றிய  கால கட்டத்தில்  கற்றுக் கொண்டேன்  என்று தாராளமாகச்  சொல்லலாம்.  சம்பளப்  பணத்தை புத்தம் புதிய நோட்டுகளாக ஒரு உறையிலிட்டு, உறையின் மேல் பெயரெழுதப்பட்டு  பெற்ற முதல் அலுவலகம் இதுவே.

சுதந்திரத்திற்கு  முன்னான காலத்திலே சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் டாக்டர் சுப்பராயன்.  அந்நாளைய சென்னை மாகாண முதல்வராய் இருப்பதற்கான  வாய்ப்பும் கிடைக்கப் பெற்றவர்.   பண்டித நேருவின்  ஆட்சி காலத்தில்  அவரது அமைச்சரவையிலும் பங்கு கொண்டவர்.   இவரது குடும்பமே பல்வேறு அரசியல் கட்சிகள், அரசு நிர்வாகங்களில் தங்கள் பங்களிப்பைத் தந்த குடும்பம்.  மூன்று மகன்கள்.  கோபால் குமாரமங்கலம்,  பரமசிவ குமாரமங்கலம்,  மோகன் குமாரமங்கலம்  என்று மூன்று மகன்கள்.  இவர் மகள் பார்வதி பொதுவுடமை இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான என்.கே. கிருஷ்ணனை மணந்தவர்.  பார்வதி கிருஷ்ணனும் இந்திய பொதுவுடமைக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராய் இருந்தவர்.  மோகன் குமாரமங்கலத்தின் துனைவியார் கல்யாணி குமாரமங்கலம், மகன் ரங்கராஜன் குமாரமங்கலம் எல்லோரும்  அரசியல்  தொடர்பு கொண்டவர்களே. 

நான் என்.சி.சி. அலுவலகத்தில் பணியாற்றுகையில் தான் அந்த அரிய வாய்ப்பு கிடைத்தது.  இந்திய ராணுவ தரைப்படைப் பிரிவில்  படைத் தலைவராக இருந்த பி.பி. குமாரமங்கலம் இந்த அலுவலகத்திற்கு வருகை தந்தார்கள். அவர் வருகையின் போது சிவிலியன்களான எங்களுடன் அமர்ந்து தேநீர் அருந்தியது, புகைப்படம் எடுத்துக் கொண்டது என்று எதையும் மறப்பதற்கில்லை.  நான் வாசித்த பாரதி வித்தியாலயா பள்ளியின்  ACC  பிரிவின்  சேர்க்கைகள், சான்றிதழ்கள் பெறுதல் சம்பந்தமாக நான் படிக்கும் காலத்து டிரில் மாஸ்டராய் இருந்த சண்முகம் அவர்கள் இந்த அலுவலகத்துக்கு வருவார்.  எனக்கு அவர் விஷ் பண்ணுவதற்கு முன்னால் முந்திக் கொண்டு நான் அவருக்கு விஷ் பண்ணுவேன்.  "இல்லையில்லை.  இப்பொழுது நீங்கள் இந்த அலுவலகத்தில் பொறுப்பான பதவி வகிப்பவர்.  நான் தான் உங்களைத் தேடி வந்திருக்கிறேன்'"  என்று சொல்லி வேண்டிய வேலைகளை முடித்துக் கொண்டு போவார்.  சேலம் கல்லூரியில் NCC பிரிவு  தலைவராக இருந்த லெப்டினெண்ட்  இராமமூர்த்தி அவர்களும் மறக்க முடியாதவர்.  அந்த அலுவலகத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் விடுப்பில் செல்ல  ஆறு மாதங்கள் பணியாற்றினேன்.  ஏதோ நிரந்தர அலுவலர்  அங்கு பணி முடித்துப் போவது போல அதிகாரி மேஜர் கான் அவர்கள் எனக்கு பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்ததை மறக்கவே முடியாது.

மறுபடியும் நான் அய்யங்காரின் ஜாப் டைப்பிங் அலுவலகத்திற்குப் போனாலும் தமிழக அரசின் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில்  அரசுப் பணியில் சேர்வதற்கான  ஆணை  வாசல் கதவைத் தட்டியது.  காமராஜர் அவர்கள் தமிழக முதல்வராய் இருந்த காலம் அது.
அதனால் வழக்கமாக வீட்டிற்கு வரும் இயல்பான கடிதம் போல் அரசு வேலைக்கான அந்த ஆணை தபாலில் வந்தது.

தமிழ்நாடு மீன்வளத் துறையில்  (LDC) லோயர் டிவிஷன் கிளார்க் பணியில் தூத்துக்குடி அலுவலகத்தில் பணியில் சேர்வதற்கான ஆணை அது.  செய்தி மகிழ்ச்சிகரமாக இருந்தாலும்  பணியில் சேரவிருந்த துறை குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை.   காமராஜருக்கே கடிதம் எழுதி வேறு இலாகா மாற்ற  கோரிக்கை மனு அனுப்பேன்' என்ற  ஆலோசனையை பக்கத்து வீட்டு பெரியவர் சொன்னார்.  அந்நாட்களில் திருமதி ஜோதி வெங்கடாசலம் என்பவர் அந்தத் துறை அமைச்சர்.  அவரையானும் போய்ப் பார்த்து இலாகாவை மாற்றிக் கொள்ள வீட்டில் வற்புறுத்தினார்கள்.  ஆனால் எனக்கென்னவோ வந்த முதல் அரசுப் பணியை ஏற்றுக் கொள்ளலாம் என்று தோன்றியது.  பணியில் சேர இரண்டு வார அவகாச காலம் இருந்தது.                 

அந்த ஆணை வந்து நான்கு நாட்கள் தாம் ஆகியிருக்கும்.   ஏற்கனவே  தபால்
தந்தி இலாகாவில்  வேலைக்காக  விண்ணப்பித்திருந்தேன்.  பரிசீலனையில் தேர்வாகி சேலம் சூப்பிரண்டெண்டெட் ஆஃப் போஸ்ட் ஆபிஸஸ் அலுவலகத்தில் ஒரு வார கால அவகாசத்தில் நேரிடைத்  தேர்வுக்காக வரச் சொல்லி கடித செய்தி சொல்லியது.  அந்தக் கடிதம் அளவில்லாத மகிழ்ச்சியை என் வீட்டாருக்கு  அளித்தது. 

நானும் சேலம் ராஜகணபதியை வேண்டிக் கொண்டு அந்த நேர் காணலுக்குத் தயாரானேன்.

(வளரும்)


Saturday, May 18, 2019

வசந்த கால நினைவலைகள்

                                                                       26


நான் கிருஷ்ணகிரியிலிருந்து திரும்பி விட்டதைக் கேள்விப்பட்டு அய்யங்கார்  அடுத்த நாளே ஜாப் டைப்பிங் அலுவலகத்திற்கு வரச் சொல்லி விட்டார்.  சுகவனமும் ஏதோ  வேலை என்று நான்கு நாட்கள் வரவில்லையாம்.  பாவம் தன் மகன் வெங்கடாச்சாரியை வைத்துக் கொண்டு சமாளித்திருக்கிறார்.  ஆக இரண்டு மாத இடைவெளி விட்டு பழைய  இடத்திலேயே வேலை துவங்கி விட்டது.

சேலம் இரண்டாவது அக்ரஹார சந்திப்பில்  மேட்டுத்தெருவும்  தேரடி வீதியும் சந்திக்கும் இடத்திற்கு  வலது புறத்தில்  நடுநிலைப் பள்ளி ஒன்று  இருந்தது.   அந்தப் பள்ளி வளாகத்தில் இரண்டு  மாதங்களுக்கு ஒரு முறையாவது ஏதாவது இலக்கிய  நிகழ்ச்சிகள் நடக்கும்.  சேலம் இலக்கிய ஆர்வலர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்வுகள் அவை.  அவர்களோடு எனக்குத் தொடர்பும் இருந்தது.   அவர்களில் முக்கியமானவர் அர்த்தநாரி  என்று  பெயர் கொண்டவர்.  அய்யங்கார் அலுவலகத்திலிருந்து மதியம் சாப்பட்டிற்காக வீடு வரும்  தருணத்தில்  வழியில் அர்த்தநாரி  என்னை மடக்கி விட்டார்.

"இலக்கியக் கூட்டம் ஏற்பாடு பண்ணியிருக்கு இல்லையா?.. தவறாம வந்திடு.."  என்றார்.

"எப்போ சார்?"

"சரியாப் போச்சு..  போன வாரத்திற்கு முந்தின வாரம் ஞாயிற்றுக் கிழமை நாம் கூட்டம் போட்டிருந்தோமே!  நீ வரவே இல்லையா?" என்றார்.

"நான் தான் கிருஷ்ணகிரி போயிருந்தேனே! எங்கே வர்றது?" என்றேன்.

"ஆமாம்லே.." என்று தன் தவறை உணர்ந்து  சிரித்தார்.  இந்த ஞாயிற்றுக் கிழமைக்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை தமிழ் எழுத்தாளர்கள் சில பேர் கலந்துக்கற கூட்டம் ஒண்ணை ஏற்பாடு பண்ணியிருக்கோம்.  திருச்சி எழுத்தாளர் ரெண்டு பேர்.   ஏ.எஸ். ராகவன் சாரும்,  திருலோக சீதாராம் சாரும் கலந்துக்கறாங்க..  குமுதம் புனிதன்,  ஜ.ரா. சுந்தரேசன் எல்லாரையும் அழைத்திருக்கிறோம்.  பிரமாதமா இருக்கப் போறது.  மறக்காம வந்திடு.." என்றார்.

"புனிதன்,  ஜ.ரா.சு. சரி.. ரா.கி. ரங்கராஜனை விட்டுட்டீங்களா?"

"விடுவோமாடா?.. கேட்டிருக்கோம்.  குமுதம் டீமையே நாம குத்தகைக்கு  எடுக்க முடியுமா?.. பாக்கலாம்.. யார் வரா, யார் வரலைன்னு  ஒரு வாரம் ஆனா கிளியர் பிக்சர் கிடைக்கும்.." என்றார்.

ஆனந்த விகடன் வெள்ளி விழா போட்டியில் பரிசு பெற்ற நாவலாய் ஏ.எஸ். ராகவனின்  'மனிதன்',  ஆனந்த விகடனில் வெளிவந்து அவர் ஊர் உலகத்திற்கெல்லாம்  தெரிந்திருந்த நேரம். இராகவன்   இப்போ பெங்களூர் பதிவரா இருக்கற திருமதி ஷைலஜாவின் (மைதிலி) தகப்பனார்.   ஷைலஜா அப்போ பிறந்திருக்கவே மாட்டார்  என்று நினைக்கிறேன்.  பிரபல எழுத்தாளரா இருக்கற இந்திரா செளந்திரராஜனும் இந்தக் குடும்பத்துக்கு உறவ முறை
தான்..   கவிஞர் திருலோக சீதாராமைப் பற்றி சொல்லவே வேண்டாம்.  அவர் ஒரு பன்முக ஆளுமை.   திருச்சியில் சிவாஜி பத்திரிகையை தவம் போல நடத்தினவர். பாரதியாரின் கவிதைகளை பட்டி தொட்டியெல்லாம் பரப்புவதை வாழ்நாள் கடமையாகக் கொண்டவர்.  பாரதியாரின் குடும்பத்தின் மீது பாசம் கொண்டிருந்தவர்.   சுஜாதாவின் முதல் கதை  பிரசுரமானதே 'சிவாஜி'யில் தான்.  இவர்களை எல்லாம் நேரில் பார்க்கப் போகிறோம் என்ற தலைகால் புரியாத சந்தோஷம் அப்பவே என்னைத் தொற்றிக் கொண்டது.

அந்த் நாளும் வந்தது..  ஏ.எஸ்.ஆருக்கும்,  திருலோகத்திற்கும் என்னை அர்த்தனாரி அறிமுகப் படுத்தி வைத்தார்.   திருலோக சீதாராம் என் கையைப் பற்றினார்.   அப்படிப்பட்ட புனிதரின் கை ஸ்பரிசம் பட்டு எனக்குச்  சிலிர்த்தது.   பாரதியாரின் குடும்பத்தை அவர் ஆதரித்ததெல்லாம் பிற்காலத்தில் கேள்விப் பட்டது.  அதையெல்லாம் இப்பொழுது நினைத்துப் பார்த்தால் அப்படிப்பட்ட பெரியவர்களின் அருகாமை கிடைக்கப் பெற்றதற்கு என்ன பாக்கியம் செய்திருப்போம் என்று  நெகிழ்ச்சியாக இருக்கிறது.                                 

ஏ.எஸ். ராகவன் நல்ல உயரம்.  படித்த இளைஞர் தோற்றம்.  ரிம்லெஸ் மூக்குக் கண்ணாடி தரித்திருந்தார் என்று நினைவு.  சுருள் சுருளான  படிந்து வாரிய தலைமுடி.   வெற்றிலை--சீவல்  பிரியர்  என்று முக விலாசம் சொல்லிற்று.   கடைசியில் ஏ.எஸ்.ராகவன் அந்தக் கூட்டத்தின் ஹீரோவாகப் போகிறார் என்று அப்போது தெரியாதிருந்தது. 

நடுநிலைப் பள்ளி வெளி வாசலில்  ஒரு பெரிய மேஜை,  மேஜை விரிப்பு, அதன் மேல் மைக்,  பத்து பேர் அமர்கிற மாதிரி நீண்ட  பென்ஞ் என்ற அலங்கரிப்பில் கூட்டம் மிளிர்ந்தது.   எல்லாம் அர்த்தநாரியின் தலைமையில் அமைந்த  குழுவின் ஏற்பாடு தான்.   பாரதியாரின்  'பொழுது புலர்ந்தது, யாம் செய்த தவத்தால்; புன்மை யிருட்கணம் போயின யாவும்'   என்னும் பாரத மாதா திருப் பள்ளியெழுச்சி பாடலின் சேர்ந்திசையாய்  கூட்டம் துவங்கியது.  ஆரம்பத்தில்  சுணக்கமாய் இருந்த அன்பர்களின் வருகை,  தெருவில் நின்றிருந்தவர்களும் ஒலிப்பெருக்கி ஒலி கேட்டு உள்ளே வர தலைப்பட்டனர்.   கலைக் குழுவின் உறுப்பினர்  ஒருவர் தன் வரவேற்பு உரையில் அனைவரையும்  எழுச்சியான உரையில் வரவேற்றார்.    ஏ.எஸ். ராகவன்  மனிதன் நாவல் தொடரை விகடனில் எழுதிய அனுபவங்களை விவரித்தார்.   எழுதும் உலகில் புதுசாக நுழைவோருக்கு ஆலோசனைகள் சொன்னார்.  அடுத்து தி. சீதாராம் உரை நெகிழ்ச்சியாக இருந்தது.  பாரதியை பல்வேறு கோணங்களில் அவர் பார்த்த பார்வை நிறைய விவரக் குறிப்புகளோடு  பலருக்கு சகஜமாகத்  தெரியாத புதுச் செய்திகளை உள்ளடக்கிக் கொண்டு இருந்தது.  பாரதியின்  பாஞ்சாலி சபதம் பற்றிய அன்றைய அவரது உரை அற்புதம்.  வீராவேசத்தோடு உணர்வு பூர்வமாக இருந்தது.   அந்த கூட்டத்திற்கு  வந்திருந்த இன்னும் சில எழுத்தாளர்களும் பேசினர்.   யார் யார் என்று  இப்பொழுது நினைவில்லை.    சேலம் அடுத்த ஜலகண்டாபுரம் தான்  ஜாராசுவின் சொந்த ஊர்.  அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்ப்பு இருந்தது.  ஆனால் அவர் கலந்து கொள்ள முடியாது போயிற்று என்று  யாரோ சொன்னார்கள்.

அடுத்து மைக்கைப் பிடித்த விழாக்குழு உறுப்பினர் ஒருவர் யோசனை ஒன்று சொன்னார்.  'மேடைப் பேச்சு  மாதிரி பேசிக் கலையாமல்  அந்த இடத்தில் கூடியிருந்தவர்களும் பங்கேற்கிற மாதிரி வினா-விடை நிகழ்ச்சியை வைத்துக் கொண்டால் அது எங்களைப் போன்றவர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்' என்று  அவர் சொன்னது பலத்த கைதட்டலோடு வரவேற்கப்பட்டது.

முதல் கேள்வியே பத்திரிகைகளுக்கு எழுதுவது பற்றி.   'நானும் நிறையக் கதைகளை எழுதி அனுப்பி  விட்டேன். ஒன்று கூட பிரசுரமானதில்லை. சலித்துப் போய் விட்டது..   பிரசுரமாவதற்கு ஏதாவது ரகசிய  ஆலோசனை இருந்தால் சொல்லுங்களேன்..' என்று யாரோ  கேட்ட முதல் கேள்வியே களை கட்டி விட்டது.

"எழுதி எழுதி அடித்து திருத்தி எழுதி திருப்பித் திருப்பி முயற்சி செய்யுங்கள். வெற்றி கிட்டும். முயற்சி திருவினையாக்கும்.  வாழ்த்துக்கள்' என்றார்
ஏ/எஸ்.ஆர்...

"எல்லாம் செஞ்சு பார்த்துட்டேன், சார்.. ஒண்ணும் வேலைக்காகவில்லை.." என்று அவர் சொன்னதும் கூட்டமே கலகலத்தது.

'பிரபலமான எழுத்தாளர்களைப் பார்த்து அவர் மாதிரி எழுத வேண்டும் என்று முயற்சி செய்யாதீர்கள்.. உங்களுக்குன்னு  ஒரு  way of writing இருக்கட்டும்" என்றார் அந்த எழுத்தாளர்களில் ஒருவர்.

எனக்கென்னவோ அவர் சொன்னது உடன்பாடில்லாமல் இருந்தது.  எனது பயிற்சிக் களமே அவர்கள் தானே என்று நினைத்துக் கொண்டது இப்பொழுதும் நினைவிலிருக்கிறது..

"ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்துப்  பிரதியை அனுப்பினால் தான் திரும்பி வருமா?.. ஒட்டலேனா கூட பாவம் அனுப்பிச்சிருக்கானேன்னு பெரிய பத்திரிகைகள் கூட  திருப்பி அனுப்ப மாட்டாங்களா?'ங்கறது ஒருத்தரோட கேள்வி.

"ஸ்டாம்ப் ஒட்டலேனா திருப்பி அனுப்ப மாட்டோம்ன்னு சொல்லியிருந்தாங்கன்னா நிச்சயம் ஸ்டாம்ப் ஒட்டுங்கள்.." என்று பதில்

"நான் இதுவரைக்கும் ஸ்டாம்ப் ஒட்டினதே இல்லை.. அனுப்பும் போதே பிரசுரம் ஆகாது இதுன்னு அவநம்பிக்கை நமக்கே இருந்துச்சுன்னா எப்படின்னு நினைப்பேன்.." என்றார் ஒருவர்.

"ஸ்டாம்ப் ஒட்டாட்டா கூட திருப்பி  அனுப்பறாங்களா?" என்று  கேட்டார் ஏ.எஸ்.ஆர்..

"ஆனந்த விகடன் மட்டும் ஸ்டாம்ப் ஒட்டாட்டாலும் திருப்பி அனுப்புவாங்க..
அந்த அனுபவம் எனக்குண்டு" என்றார் ஒருவர்.

"நீங்க எப்படி ஸார்?.. ஸ்டாம்ப் ஒட்டி அனுப்புவீங்களா, இல்லையா?" என்று நேரடியாகவே ஏ.எஸ்.ஆரைக் கேட்டார் ஒருவர்.

"ஸ்டாம்ப் ஒட்டறதில்லே.." என்று  சிரித்துக் கொண்டே சொன்னார் ஏ.எஸ்.ஆர்.

இந்த சமயத்தில்  குமுதம் புனிதன் வந்திருக்கறதாக ஒரு தகவல் பரவியது.

'யார் புனிதன்ங்கற பெயர்லே குமுதத்திலே எழுதறது, அவர் எப்படி இருப்பார்' என்று  நேரில் பார்த்து தெரிந்து கொள்கிற ஆர்வம் கூட்டத்தினரிடையே பரவியது.

நடுத்தர உயரமாய்  வேட்டி, ஸ்லாக் சட்டை என்று ஒருவர் மேடைப் பக்கம் வந்தார்.

அவரைப் பார்த்து "நீங்கள் தான் புனிதனா?" என்று ஏ.எஸ்.ஆர். கேட்டது கூட்டத்தினருக்கு மைக்கில் கேட்டது.

அவரோ, "எதற்குக் கேட்கிறீர்கள்?" என்றார்.

"நான் புனிதனைப் பார்த்திருக்கிறேன்.. நீங்கள் இல்லை புனிதன்..." என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் இராகவன்.

"அப்படியா?.. நான் புனிதன் தான்.."

"அதற்கு என்ன அத்தாட்சி?" என்று லேசில் ஒப்புக்கொள்ளாதவாறு உரக்கச் சொன்னார் இராகவன்.  "இது ஆள் மாறாட்ட விஷயம்.." என்று கர்ஜித்தார்.

"இப்படிப் பட்ட கூட்டத்தில் நான் இருக்கவே விரும்பவில்லை.." என்று  என்று சொல்லிக் கொண்டே அவர் திரும்பி வெளிவாசல் நோக்கி நடக்கத் தொடங்கினார்.

எனக்கு அவரைப் பார்க்கவே பாவமாக இருந்தது..  நான் தான் அந்த எழுத்தாளன் என்று சொல்லிக் கொண்டு -- அதுவும் தமிழ்நாட்டில் -- ஒருவருக்கு என்ன லாபம் இருந்து விட முடியும் என்று எனக்கு அந்த வயசிலேயே தோன்றிற்று. ..  மொத்தத்தில் வந்தவரின் தோற்றம், எளிமை, சாதுவான முகம் எல்லாம்  மனசைப் பிசைந்தன.

சொல்லி வைத்தாற் போல  திருலோக சீதாராமைப் பார்த்தேன்.  அவரும் uneasy-யாக ஏன் இந்த இராசாபாசம் என்று  நினைக்கிற தோற்றத்தில் இருந்தார்.

இராகவன் அவரை விடுவதாயில்லை.. இவரும் எழுந்திருந்து அவரைத் தொடர்ந்து வெளிப்பக்கம் வர,  மொத்தக் கூட்டமும் சலசலத்து வெளியே வர
அர்த்தநாரியோ சங்கடத்தில் நெளிய..  வந்தவர் வெளிப்பக்கம் இருந்த கூட்டத்தோடு கலந்து எங்கேயோ போய் விட்டார்.

"நிச்சயம் இந்த ஆள் புனிதன் இல்லை... புனிதனை எனக்கு நன்றாகத் தெரியும்.." என்று இராகவன் மட்டும் விடாப்பிடியாக சொல்லிக் கொண்டிருந்தார்.

யாரோ "வாங்க, சார்.." என்று அவரை சமாதானப்படுத்தி மேடைப் பக்கம் அழைத்து வந்தார்கள்.   அதற்கு மேல் கூட்டம் தனது நிகழ்ச்சி நிரலைத் தொடர்ந்தது.

'எனக்குத் தெரிந்த என் சக எழுத்தாளர்,  நான் தான் என்று வேறு எவரோ அவர் பெயரில் வந்தால் அதை நான் எப்படிப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்?' என்பது தான் ஏ.எஸ்.ஆரின் அப்போதைய  நிலை.

இந்த சூழ்நிலையில் நானாயிருந்தால் என்ன செய்திருக்கலாம் என்று  அந்த சிறு வயதிலும் எண்ணம் ஓடியது.  அந்த ஆளைக் கூப்பிட்டு,  'இதோ பாருங்கள்,  நீங்கள் புனிதன் அல்ல.  இது இந்தக் கூட்டத்தில் எனக்கு மட்டும் தான் தெரியும்.  நான் மைக்கில் இதைச் சொன்னால் ராசாபாசமாகிவிடும்.  அதனால் காதும் காதும் வைத்த மாதிரி போய் விடுங்கள்..' என்று அழுத்தமாய் சொல்லியிருக்கலாமோ?..

அதற்கப்புறம் எனக்கென்னவோ எதிலும் மனசு பதியவே இல்லை..  ஜடம் மாதிரி கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன்.  அப்புறம் எழுந்து வெளியே வந்து விட்டேன்.

'சில்'லென்று தெரு பக்கம் வீசிய காற்று மனசுக்கும் உடலுக்கும் இதமாக இருந்தது.

(வளரும்)

பி.கு.:  அடுத்த வாரம் அர்த்தநாரியை தற்செயலாகப் பார்த்த பொழுது இந்த  நிகழ்வைக் குறிப்பிட்டு "இராகவன் சார் அன்னிக்கு சொன்னது சரி தான்னு ஆயிட்டதுடா.. குமுதத்திலிருந்து யாருமே வரலே.." என்றார்.

குமுதம் புனிதன் அவர்களின் இயற்பெயர்:  சண்முக சுந்தரம்
சுந்தர பாகவதரும் அவரே;  தேசபந்துவும் அவரே.   அற்புதமான எழுத்தாளர் அவர்.  எடிட்டர் எஸ்.ஏ.பி.க்கு அவரை மிகவும் பிடிக்கும் என்று ஜராசு எழுதியிருக்கிறார்.    ஜராசு,  சண்முக சுந்தரம் இருவருமே சேலத்துக்காரர்கள். ஜராசு ஜலகண்டாபுரம் என்றால் புனிதனுக்கு  தர்மபுரி.

ஒரு ஸ்டூலில் ஏறி பரணில் எதையோ தேடும் பொழுது தவறி விழுந்ததால் புனிதன் சாருக்கு மரணம் சம்பவித்ததாக வாசித்த நினைவு.

நான் ஸ்டூலில் ஏறி எட்டாத இடத்தில் எதையாவது தேடினால் இப்பொழுதும் புனிதன் சாரின் நினைவு வந்து விடும்.

Wednesday, May 15, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                       25


ன்று இரவு அசந்து தூங்கினாலும்  சீக்கிரமாகவே எழுந்து விட்டேன்.  எழுந்து பல் விளக்கி காலைக்கடன் முடித்து குளித்து தலை வாரிக் கொண்டிருந்த பொழுது சின்னசாமி உள்ளே நுழைந்தார்.

"நல்லாத் தூங்கினீங்களா, சார்?" என்றார்.

"நல்ல களைப்பு சின்னசாமி.  அதனால் அடித்துப் போட்டாற் போலத் தூங்கி விட்டேன்.."

"அதான் சார் உடம்புக்கு நல்லது.  இன்னிக்கு ட்யூட்டிலே ஜாயின் செய்யணும் இல்லையா?"

"ஆமாம், சின்னசாமி.."

"அதான் உங்ககிட்டே சொல்லலாம்ன்னு வந்தேன்.  நான் கிருஷ்ணகிரி வரை போக வேண்டியிருக்கு..  ரூம் சாவியை  நீங்களே வைச்சிக்கங்க..  மதியத்துக்கு மேலே தான் நான் வருவேன்.. நான் வர்றேன்.." என்று சின்னசாமி கிளம்பினார்.

"கேண்டினுக்குப் போனீங்களா?"

'டீ மட்டும் குடிச்சிட்டு வந்தேன். அது போதும். இப்ப ஏழரைக்கு கிருஷ்ணகிரி பஸ் வரும்.  அதிலே போய்ட்டு மாலை  திரும்பிடறேன்.."  என்று சின்னசாமி கிளம்பினார்.

குளித்து உடை மாற்றிக் கேன்டினுக்குப் போனேன்.   ஜவஹர்லாலைக் காணவில்லை. கவுண்டரில் வேறு யாரோ இருந்தார்கள்.

மறுபடியும் இட்லி தான்.  சட்னி, சாம்பார் என்று எல்லாமே காரமாக இருந்தன.  மனசுக்குப் பிடித்து சாப்பிட முடியவில்லை. கடைசியில் சக்கரையைத்  தொட்டுக் கொண்டு இட்லித் துண்டுகளை விழுங்கினேன்.  காப்பி குடித்தவுடன் ஒரு நிறைவு ஏற்பட்டது.

அலுவலகத்தில் தலைமை எழுத்தரை சந்தித்து வேலை வாய்ப்பு அலுவலக கடிதத்தைத் தந்தேன்.

"ரொம்ப  நாளா கேட்டுக்கிட்டிருக்கோம்.  நல்லவேளை, இப்பவாவது ஒரு  டைப்பிஸ்ட்டை அலாட் பண்ணினாங்களே.." என்ற  ஏக குஷியில் சொன்னவர்,
வேலையில் சேரும் கடிதம்  ஒன்றை எழுதித் தரச் சொன்னார்.  ஜாப் டைப்பிஸ்ட்டாக இருந்த அனுபவம் இந்த மாதிரி கடிதம் எழுதுவதெல்லாம் தண்ணி பட்ட பாடாக இருந்தது.

"ஏஇ சேலம் கேம்ப். நான் புட் அப் பண்ணிடறேன்.. நீங்கள் இப்பொழுதிலிருந்தே உங்கள் வேலையை ஆரம்பிக்கலாம்.." என்ற சற்று ஒதுக்குப்புறமாக ஒரு சுவருக்குப் பின்னால் இருந்த தட்டச்சு மிஷினைக் காட்டினார்.  அதான் உங்க சீட்.. பை த பை இந்தாங்க தற்காலிக ஸ்டாப் ஃபைல்.  இதைப் பார்த்து  நீங்க இன்னிக்கு இங்கே வேலைலே சேர்ந்த லெட்டரையும் புட் அப்  பண்ணிடுங்க.." என்று என்னிடம் சம்பந்தப்பட்ட ஃபைலைக் கொடுத்தார்.

கண்ணைக்  கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருந்தது.  "சரி, சமாளிச்சிடலாம்.." என்ற ஒரே நம்பிக்கையில் என் இருக்கையில் அமர்ந்தேன்.  தட்டச்சு  இயந்திரத்தின் மேல் மூடியிருந்த ப்ளாஸ்டிக் கவரை கழற்றினேன்.

அன்று ஆரம்பித்தது தான்  அடுத்த ரெண்டு மாசமும் வேலை பிழிந்து தள்ளி விட்டது.  நேற்று வரை கையால் எழுதிய இரண்டு வரி கடிதங்கள் எல்லாம் தட்டச்சுக்காக என் டேபிளில் கொண்டு வந்து வைக்கப்பட்டன.  நிறைய ஃபைல்களின் மேல்  அர்ஜெண்ட் என்ற tag கட்டியிருக்கும்.  அதையெல்லாம் எடுத்து தனிக் கவனம் செலுத்தி உடனடியாக தட்டச்சு செய்ய ஆரம்பித்தேன்..
அப்புறம்  தான் ஒரு நாள் தெரிந்தது.  அந்த ஆபிஸில் அட்ஜெர்ண்ட் ஃபைல் கவர்கள் மட்டும் தான் ஸ்டாக்கில் இருப்பதாகவும் அதனாலேயே  எல்லோரும்  அதையே உபயோகப்படுத்துவதாகவும்.....

சாப்பாடு தான் எனக்கு ஒத்துக் கொள்ளவே இல்லை.  டிசண்ட்ரி, வயிறு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் என்று..  இரண்டு நாட்கள் நன்றாக இருந்தால்  நான்கு  நாட்கள் உபாதை என்று நாட்களைப் பிடித்துத் தள்ளுவதாக இருந்தது.
அலுவலகம் இல்லாத நேரங்களில் சின்னசாமியும்,  கேண்டின் ஜவஹர்லாலும் தான் பேச்சுத் துணையாக இருந்தார்கள்.  ஜவஹர் அவர் அப்பாவைப் பற்றி நிறைய தகவல்களைச் சொல்லுவார்.

இரண்டு மாத காலம் முடியற தருணத்தில் ஒருநாள்,  "ஏ.இ. உங்களைப்  பார்க்க விரும்புவதாக நேற்றே சொன்னார். மறந்து  விட்டேன்.  அர்ஜெண்ட்டா சேலம் கிளம்பிண்டிருக்கார்.  குவார்ட்டர்ஸில் தான் இருக்கார். அவரைப் பார்த்திட்டு வந்திடறீங்களா?" என்று த.எ. என்னிடம் கேட்டார்.

இது வரை ஏ.இ. வீட்டுக்கு போனதில்லை..  "தோ.. எதிர்த்தாற்பல தான். ரோஸ் கலர் பெயிண்ட் அடிச்சிருக்கும் பாருங்க..  கிளம்பிடப் போறார். சீக்கிரம் போங்க.." என்றார் தலைமை எழுத்தர்.

என்னவோ ஏதோ என்று போனேன்.   கதவு சாத்தியிருந்தது.  காலிங் பெல் அடிக்கலாமா,  வேண்டாமா என்று நான் தயங்கிய பொழுதே  "யாரு.. " என்று கேட்டபடியே வெளியே வந்தார்.

என்னைப் பார்த்ததும் அந்த அவசரத்திலும் அவர் முகம் மலர்ந்தது.  "உள்ளே வாங்க.." என்றார்.

செருப்பை கழற்றி விட்டு உள்ளே போனேன்..

எந்த பந்தாவும் இல்லாமல் "உட்காருங்க.." என்றார்.  அவர் நின்று கொண்டிருக்கிறாரே என்று உட்காரத் தயக்கமாக இருந்தது.  "உட்காருங்க.. இதோ வந்திட்டேன்.." என்று உள்ளே போனார்.

அவர் சொல்கிறாரே என்று உட்கார்ந்தேன்.  அடுத்த நிமிஷமே வெளியே வந்தவர், "ராமன்... ஒண்ணு கேக்கணும்.   நாளைக்கு  உங்க டெனியூர் முடியறதா சொன்னாங்க..  இன்னும் இரண்டு மாசத்துக்கு அதை நீட்டிக்கலாமா?.. அது முடியற தருணத்திலே இன்னும் இரண்டு மாசம்ன்னு மொத்தம் நீங்க இங்கே ஆறு மாசம் இருந்தாப் போதும்..  நிறைய வேலை தேங்கிக் கிடக்கும்.. எல்லாத்தையும் முடிச்சிடலாம்.. என்ன் சொல்றீங்க.. நீங்க எஸ்ன்னா, இன்னிக்கு சேலம் போறேன். அப்படியே  இதுக்கு ஈ.ஈ. கிட்டே சாங்கஷனும் வாங்கிண்டு வந்திடுவேன்.." என்றார்.

நான் தயங்கினேன்.  எல்லாம் எனக்கேற்பட்டிருக்கிற வயிற்றுத்  தொந்தரவு தான் காரணம்.  இந்த இரண்டு மாசத்தை ஒப்பேத்தறதே பெரிசா போயிடுத்து.
இன்னும் நாலு மாசம்ன்னா.. முடியவே முடியாது என்று மனசு ஓலமிட்டது. இதை எப்படி பக்குவமா, இவருக்குப் புரியற மாதிரிச் சொல்வேன்?..

"எதுனாலும் சொல்லுங்க.. முடியுமான்னு  கேக்கறேன்.. அவ்வளவு தானே?" என்றார்.

"சார். மன்னிக்கணும்.. நான் ஊருக்குப் போயே ஆகணும்.. எங்க அம்மாவுக்கு ரொம்ப முடிலேன்னு லெட்டர் வந்திருக்கு.." என்று சட்டென்று மனத்தில் தோன்றியவாறு உளறினேன்..

"அப்படியா?.. இதை நீங்க சொல்லயில்லையே?" என்று சட்டென்று துடித்துப் போனார்.   "கடைசி நாள் ஒர்க் பண்ணியே ஆகணுமே?" என்று கன்னத்தைத் தடவியவாறு யோசித்தார். "ஓண்ணு செய்யுங்க.. நான் ஹெட் கிளார்க்கிட்டே சொல்லிடறேன்.. நாளைக்கு எர்லியாகவே ரிலீவிங் ஆர்டர் வாங்கிங்க..  ப்யூன் கிட்டே சொல்லச் சொல்றேன்.  அவன் உங்களை மெயின் ரோடில்லே டூவீலர்லே கொண்டு விடுவான்.  பஸ்ஸைப் பிடிச்சு எப்படியும் சாயந்திரத்துக்குள்ளே போய்ச் சேர்ந்திடலாம்.." என்றார்.

எனக்கோ மனசு குழைந்து போயிற்று..

கிருஷ்ண மூர்த்தி சார்  சுவற்றில் மாலை போட்டு மாட்டியிருந்த போட்டோவைப் பார்த்தபடியே சொன்னார்.  "ராமன்!  உலகம் பெரிசு.. ஆனா தாய் ஒருத்தி தான்.." அதைச் சொல்வதற்குள் அவர் குரல் நெகிழ்ந்து போயிற்று.

நானோ துடித்துப்  போய் விட்டேன்.   'இப்படி ஒருவரிடம் போய் பொய் சொல்லி.. இது நியாயமா?.. '  என்று  தவித்தேன்.

"சரி.. சரி.. நான் பாத்துக்கறேன்..  வேறே யாரையாவது வரவழைச்சாப் போச்சு.." என்று அவர் முடிவெடுத்த பொழுது,  "நான்  வர்றேன், சார்.." என்று வெளியே வந்தேன்.

அன்று  பூராவும் அவர் சொன்னது என்னை வாட்டிக் கொண்டிருந்தது.  எத்தனை வருஷம் ஆச்சு?.. இப்போக் கூட அந்த நல்ல மனுஷரை நினைக்கையில்  அவர் சொன்ன வார்த்தைகள் ஸ்பெஷ்டமாக நினைவுக்கு வந்து மனம் நெகிழ்ந்து போகிறது..

(வளரும்..)


Sunday, May 12, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                          24


ஸ் கண்டக்டரிடம் முன் கூட்டியே சொல்லி   வைத்திருந்து  கிருஷ்ணகிரி  அணைக்குப் போகும் குறுக்குப் பாதை அருகில் மெயின் ரோடிலேயே இறங்கிக் கொண்டேன்.  கையில்  அந்தக் கால டிரங்க் பெட்டி.

சிறிது நேரத்தில் கிருஷ்ணகிரி பக்கமிருந்து ஒரு டவுன் பஸ் வந்து குறுக்குப் பாதையில் நின்றது.  கிருஷ்ணகிரி  டேம் (DAM) என்று  எழுதியிருந்ததை கவனித்து ஏறிக் கொண்டேன்.   வெளியே பார்த்துக் கொண்டே வந்தேன்.    பத்து நிமிஷப் பயணத்தில்  துணைப் பொறியாளர் அலுவலக வாசலிலேயே பஸ் நிற்பதைக் கவனித்து திடீரென்று மனத்தில் கிளைத்த ஒரு  குட்டி சந்தோஷத்துடன் இறங்கிக் கொண்டேன்.

அப்பொழுது  மாலை  சுமார் ஆறு மணி இருக்கும்.  இருட்டு கவிவதற்கு  அப்பொழுதே முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

உள்ளே நுழைந்த என்னைப் பார்த்ததும் உள் பக்கமிருந்து ஒருவர் வேகமாக என்னை நோக்கி வந்தார்.  "யார் சார் வேணும்?"

விஷயத்தைச் சொன்னேன்.  "அப்படியா?" என்றவர் "நான் தான் இங்கே ஆபீஸ் ப்யூன்,  தோட்டக்காரன் எல்லாம்.." என்றார்.  "சாப்பிட்டாச்சா, சார்?"

'இல்லை.. இனிமேல் தான்.."

"அப்போ சீக்கிரம் வாருங்கள்.  கேண்டீன் மூடி விடுவார்கள்.." என்று என்னை துரிதப்படுத்தி என்னிடமிருந்து டிரங்க் பெட்டியை வாங்கிக் கொண்டார்.

அலுவலத்திற்குள் நுழைந்து  முன் பக்கமிருந்த ஒரு அறையில் என் பெட்டியை வைத்து விட்டு அறையை தன்னிடமிருந்த சாவிக்கொத்தை எடுத்து பூட்டினார்.  "வாங்க, போலாம்.."

'நல்லவேளை.. எங்கேயும் அலைய வேண்டாம்.  இங்கேயே காண்டீன் இருப்பது  செளகரியம் தான்'  என்று நினைத்துக் கொண்டே அவருடன் பேச்சுக் கொடுத்தபடியே போனேன்.

கொஞ்ச தூரம் நடந்து திரும்பியதும்  காம்பவுண்டுக்குள்ளேயே ஒதுக்குப் புறமாக ஓரிடத்தில் இருந்தது காண்டீன்.  அதை ஒட்டி சின்னதாக ஒரு குடிசை வேறே.

நாங்கள் போனதும், "சார்  தான் நம்ப ஆபிசுக்குப் புதுசா வந்திருக்கிறவர்" என்று அங்கு வாட்ட சாட்டமாக நின்று கொண்டிருந்த ஒருவரிடம் சின்னசாமி -- ப்யூன் பெயர்-- அறிமுகப்படுத்தினார்.

"வணக்கம், சார்.." என்றார் அவர்.  நானும் வணக்கம் சொன்னேன்.

"இன்னும் கொஞ்ச நேரம் கழித்து வந்திருந்தீர்கள் என்றால் ஒன்றும் இருக்காது..  அஞ்சு மணிக்கெல்லாம் ஆபீஸ் மூடிறாங்க, இல்லையா?" என்றார் அவர்.  "என்ன சாப்பிடுறீங்க..?"  என்ன இருக்கு என்று கேட்டு தோசை மட்டும் போடச் சொல்லி சாப்பிட்டேன்.  தொட்டுக்க அவர் போட்ட வெங்காய சட்னி  காரமாக இருந்ததால் ஒதுக்கி வைத்து விட்டேன்.  சின்னசாமி தனக்கு ஒன்றும் வேண்டாம் என்றார்.  வற்புறுத்தியதில் ஒரு டீ மட்டும் குடித்தார்.

"எங்கே தங்கப் போறீங்க?..  பேச்சுலரா?..   அப்படின்னா ஆபிஸ்லேயே தங்கிக்கலாமே?..   எதுக்குச் சொல்றேன்னா, இங்கேயே எல்லாம் இருக்கு..  கிருஷ்ணகிரி போய் வருவது தேவையில்லை.  அங்கே ரூம் எடுத்தீங்கன்னா  அது வேறே செலவு.." என்று எல்லாம் சொல்லி விட்டு, "பாத்து செய்யுங்க.." என்றார் கேண்டீன் உரிமையாளர்  ஜவஹர்லால்.. நல்ல பெயரில்லை?..  அவர் அப்பா காங்கிரஸ் காரராம்.  அதனால் அப்படி பெயர் வைத்தாராம்.  "எனக்கு ஒரு மகன் மட்டுமே.."  என்று சொசுறு தகவலையும் சொன்னார்.

"உங்க பையனுக்கு நீங்க என்ன பேர் வைச்சிருக்கீங்க?.." என்று ஒரு எதிர்ப்பார்ப்போடு  கேட்டேன்.   அந்தக் கால வழக்கப்படி நெடுஞ்செழியன், மதியழகன் என்று ஏதாவது இருக்கும் என்ற எண்ணமும் மனசுக்குள் ஓடியது.

"என் பையனுக்கங்களா?.." என்று கேட்டவர், "லால்பகதூர்ன்னு பேர் வைச்சிருக்கேன்..." என்று இலேசாக புன்முறுவலித்துச் சொன்னார்.

மொத்தத்தில் அவர் ஒரு வித்தியாசமான நபராகத் தென்பட்டார்.  போகும் போது  "இங்கே தானே ஆபிஸ்லே தங்கப் போறீங்க.. காலைலே எட்டு மணிக்கெல்லாம் இட்லி கிடைக்கும்" என்றார்.

"அப்படியா?.. வந்திடறேன்.." என்று கிளம்பினேன்.

என்  டிரங்க் பெட்டியை  வைத்து பூட்டிய அறைக்கு சின்னசாமி என்னைக்  கூட்டிக் கொண்டு போனார்.  அறைக்கதவை திறந்தார்.   உள்ளே போய்ப்  பார்த்ததில் அறை  கொஞ்சம் விசாலமாகத் தான் தெரிந்தது.  "இந்த அறையை என் உபயோகத்துக்காகத் தான்  கொடுத்திருக்காங்க.. நீங்க இங்கேயே தங்கிக்கலாம்.." என்றார்.   அவர் குடும்பம் கிருஷ்ணகிரியில் இருப்பதாக ஏற்கனவே சொல்லியிருந்தார்.

"அப்போ உங்களுக்கு?"

"நான்   நைட் டூட்டி  தானே? வெளிப்பக்கம் தான் இருப்பேன்.  ஆபீஸ் சம்பந்தப்பட்டவங்க அகால நேரத்லே வந்தாங்கன்னாலும் இந்த அறையைக் கொடுக்கறது வழக்கம்.  பெரிய ஆபிஸர்ல்லாம் தங்கறத்துக்கு சூட் இருக்கு. வேறே தொந்தரவு ஏதும் இல்லே. அதுனாலே நீங்க இங்க இருக்கப் போற ரெண்டு மாசமும் இங்கேயே தங்கிக்கலாம்.  அந்த மூலைலே பாத்ரூம்லாம்  கூட இருக்கு.." என்றார்.. 
 அவர் சொன்னது எனக்கும் பிடித்திருந்தது.  "சரி.." என்றேன்.

வெளியே வந்தோம்.   அலுவலகத்தைச் சுற்றி பிர்மாண்டமான தோட்டம்.  சாயந்தரம் வரும் பொழுதே பார்த்துக் கொண்டேன்.   நிறைய  செடி கொடிகள்.  குரோட்டன்ஸ் பூத்துக் குலுங்கியது.  "பிரமாதமாய்  மெயிண்டைன்
பண்ணுகிறீர்கள், சின்னசாமி.." என்றேன்.

"பெரிய ஆபிஸரும் இதைத்  தான்  சொல்வார், சார்.." என்று சின்னசாமி முறுவலித்தார்.

அவரைப் பற்றிச் சொன்னார்.  அவர் குடும்பம், குழந்தைகள்  பற்றிச் சொன்னார்.    இரண்டும் ஆண் பிள்ளைகள்.  பெரியவன் ஆறாவது,  சின்னவன் நாலாம் வகுப்பு.  இரண்டு மணி நேரப்  பழக்கத்தில் என்னை மிகவும் பிடித்துப் போய் விட்டது என்றார்.

"அப்படியா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

"ஆமாம், சார்.. எங்களமாதிரி சப் ஸ்டாப்  கிட்டே இப்படி அன்பா யாரும் பழக மாட்டாங்க, சார்.."

"சின்னசாமி!  நான் இன்னும் வேலைலேயே ஜாயின் பண்ணலே..  அதுவும் வெறும் டெம்பரவரி ஆசாமி..."

"இருக்கட்டுமே, சார்! எப்படியாயிருந்தா என்ன? மனுஷாளுக்குள்ளே அதெல்லாம் முக்கியமில்லே, சார்.."

சின்னசாமி எப்படி அப்படி ஒரு முடிவுக்கு வந்தார் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் எனக்கிருந்தது. "இப்போத்  தான்  வந்திருக்கேன்.. அதுக்குள்ளே சொன்னா எப்படி?" என்று கொக்கி போட்டேன்.

"அதெல்லாம் பாத்தாலே தெரியும் சார்.." என்று ஒரே வரியில் சின்னசாமி முடித்துக் கொண்டார்.

இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன்.  எத்தனை  வருஷங்களுக்கு முன்னால்  முழுசாக நான் உருவாவதற்கு   முன்னேயே  எனக்கே தெரியாத எதிர்கால  என்னை  சின்னசாமி மனசில் படம் பிடித்துப் பார்த்து விட்டார் என்று வியப்பாகத் தான் இருக்கிறது.

(வளரும்)

Saturday, May 11, 2019

வசந்த கால நினைவலைகள்....

                                                                        23                 

        
பொதுப்பணித் துறை அலுவலகத்தில் எங்கள் ஆறு பேரையும்  இன்னொரு  அறைக்குக் கூட்டிச் சென்று விட்டு விட்டு  அந்த  அறிவிப்பாளர் போய் விட்டார்.  எங்கள் அறுவரில் ஒரு  பெண் பிள்ளை கூட இல்லாதது இன்னொரு  ஆச்சரியம்.   நாங்கள் ஒருவருக்கொருவர்  யார், எங்கிருந்து வருகிறோம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த பொழுது  என் அனுபவத்தையும் அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.  அந்த சமயத்தில்  ஐம்பது வயது  மதிக்கத்தக்க தோற்றமளித்த ஒருவர் சில காகிதங்களுடன் உள்ளே நுழைந்தார்.

அவரைப் பார்த்ததும் எங்கள் கலகலப்பு நின்றது.  சட்டென்று எழுந்தவர்களை அன்பாக உட்காரச் சொன்னார்.   தன்னை பாலசுப்பிரமணியன்,  செக்ஷன் ஆபிஸர்  என்று எங்களுக்கு  அறிமுகப்படுத்திக் கொண்டார்.   தன் கையில் கொண்டு வந்திருந்த காகிதத்தைப் பார்த்து  எங்கள் ஆறு பேர் பெயரையும் படித்தார்.   பெயர்களைப் படித்த  வரிசையில் எங்களை அமரச் சொன்னார்.  முதலாவதாக கஜேந்திரன், அடுத்தது கமலேஷ், அடுத்தது நான் என்று அமர்ந்த பொழுது இந்த வரிசை தான் செலக்ஷன் லிஸ்ட் என்றார்.  ஆக நான் மூன்றாவது நபராய் வரிசையில் இருக்கிறேன் என்று தெரிந்து கொண்டேன்.

அடுத்து  எத்தனை பேருக்கு வேலை,  எங்கு வேலை,  என்ன வேலை,  எப்பொழுது வேலையில் ஜாயின் பண்ண வேண்டும் என்பதைச் சொன்னார்.    ஒருவருக்குத் தான் வேலையாம்.   பணியிடம்  கிருஷ்ணகிரிக்கு  அருகில் உள்ள கிருஷ்ணகிரி ரிஸர்வாயர் ப்ரோஜக்ட் உதவிப் பொறியாளர் அலுவலகம்,  டைபிஸ்ட் வேலை, இப்போதைக்கு இரண்டு மாதத்திற்கு  தற்காலிக வேலை என்ற தகவல்களைச் சொன்னார். 

அவர் சொல்லி முடித்தவுடனேயே கஜேந்திரன்  தனக்கு வெளியூர் வேலைக்கு போக முடியாத குடும்பச் சூழ்நிலை என்று சொன்னான்.  கமலேஷ்  என்ன சொன்னான் என்று ஞாபகமில்லை.  மொத்தத்தில் அவனும் இல்லை என்று  ஆன பிறகு பந்து  என் கோர்ட்டுக்கு வந்தது.   நான் போகத் தயார் என்றதும் அந்த செக்ஷன் ஆபிஸர் என் அருகில் வந்து கைகுலுக்கினார்.  மற்றவர்களைப் பார்த்து 'பெஸ்ட் லக் நெக்ஸ்ட் டைம்' என்று சொன்னார்.  மற்றவர்கள் வெளியேற நான் மட்டும் அடுத்து என்ன சொல்லப் போகிறாரோ என்பதற்குக் காத்திருந்தேன்.   என்னை அந்த அறையிலேயே இருக்கச் சொல்லி விட்டு அவர் மட்டும் வெளியேறினார்.

கொஞ்ச நேரத்தில்  என்னைக் கூப்பிடுவதாக  ஒருவர் வந்து அழைத்துப் போய் இன்னொரு  அறைக்குள் போகச் சொன்னார்.   அந்த அறை தான் தலைமை அதிகாரி அறை போலிருக்கு.  அங்கு பாலசுப்ரமணியம் நிற்க அதிகாரி அவரிடம் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தார்.  நான் உள்ளே நுழைந்து அவருக்கு வணக்கம் சொன்னேன்.  அந்த அதிகாரி என்னிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தார்.  "இந்த   அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரை கிருஷ்னகிரி   ரிஸர்வாயர் ப்ரொஜக்ட் ஏ.இ. கிட்டே கொடுத்திடுங்க..    திங்கட்கிழமை பத்து மணிக்குள் வேலையில் சேர்ந்திடணும்.."  என்று என்னிடம் வேலை நியமன ஆணை தட்டச்சு செய்திருந்த காகிதத்தைக் கொடுத்தார்.

"நன்றி, சார்.." என்று வாங்கிக் கொண்டேன்.  'நீங்கள் போகலாம்..' என்கிற மாதிரி பாலசுப்ரமணியன்  ஜாடை காட்ட வெளியே வந்தேன்.

நேரே ஜாப் டைப்பிங் ஆபிஸ் வந்து அய்யங்காரிடம்  வேலை கிடைத்த விஷயத்தைச் சொன்னேன்..  அவருக்கும் சந்தோஷம்.. "தெரியுமோல்யோ?" என்றார் அய்யங்கார்.   "கிருஷ்ணகிரி  ரிஸர்வாயர்  ப்ரொஜெக்ட் என்றால் கிருஷ்ணகிரிக்கு முன்னாலேயே இருக்கு. ஆக்சுவலி கிருஷ்ணகிரி டாம் இருக்கற இடம்.  பஸ்லே தான் போகணும்.  கண்டக்டர் கிட்டே சொல்லி மெயின் ரோடிலேயே இறங்கிக்கோ..  அங்கிருந்து  உள்ளே போக லோக்கல் பஸ் வரும்.  இல்லேனா  உள்ளே போகிற வேன் ஏதாச்சும் வந்தாலும் ஏறிக்கோ...  ஏ.இ. ஆபிஸ்ன்னு சொன்னேனா,  வாசல்லேயே விட்டுடுவாங்க.." என்றார்.

இதெல்லாம் பற்றித்  தெரியாமலேயே   இருந்திருக்கிறேன்.  அந்த ஆபிஸ்லேயே  விசாரித்திருக்கலாம்.  அதுவும் செய்யாமலேயே    இருந்திருக்கிறேன்.  நல்லவேளை, அய்யங்கார் சொன்னார் என்றிருந்தது.     இப்படி வாழ்க்கை பூரா எத்தனையோ விஷயங்கள்.  ஒவ்வொண்ணும் பாடமாத்  தான் இருந்திருக்கு என்று  இப்பொழுது நினைத்துக் கொள்கிறேன்.

"சுகவனத்துக்கு சொல்லி அனுப்பிச்சிடறேன்.  நீ போய்ட்டு வா.  அந்த வேலையெல்லாம் முடிச்சுட்டு எப்போ வேணா நீ இங்கே வரலாம்.  யதா செளகர்யம்.." என்று சொல்லிக் கொண்டே எழுந்திருந்தார்.  சுகவனம் அவருக்குத் தெரிந்தவர்.  கால் டியூட்டி டைப்பிஸ்ட் மாதிரி.  அய்யங்காருக்கும் வேண்டப்பட்டவர்.  அதனால் அவர் வந்து அய்யங்காருக்கு உதவியாய் இருப்பதில் எந்த சங்கடமும் இருக்காது என்று நினைத்துக் கொண்டேன்.

அந்தக் கடை அறையின்  மூலையிலேயே  ஒரு இரண்டடி உயரத்திற்கு  டெஸ்க் மாதிரி மரப்பெட்டி அய்யங்கார் உபயோகத்தில் இருந்தது.  பக்கத்திலேயே  உட்கார்ந்து பெட்டியைத்  திறப்பதற்கு  வாகாக  ஒரு  சின்ன ஸ்டூல்  போட்டிருக்கும்.  அந்த ஸ்டூலில் போய்  உட்கார்ந்து கொண்டு பூணுலில் கோத்திருந்த சாவியால் பெட்டியைத்  திறந்தார்.  நான் ரோடைப் பார்க்கிற மாதிரி திரும்பிக் கொண்டேன்.

"இந்தா.." என்றார் அய்யங்கார்.  "ஐம்பது ரூபாய் இருக்கு..  இதை வைச்சுக்கோ.." என்றார்.   'இந்த  மாசம் பத்து நாள் போலத் தான் வேலை செஞ்சிருப்பேன்.  மாசச் சம்பளத்தையே கொடுத்திருக்கிறாரே' என்று நினைத்துக் கொண்டேன்.

அய்யங்கார் முதல்லேயே சொல்லி வைத்திருப்பார் போலிருக்கு.  சுகவனமும் வந்தார்.  என்னைப் பார்த்ததும், "என்னடா.. போன விஷயம் என்னாச்சு?.. வேலை கிடைச்சிடுத்தில்லையோ?" என்றார்.

"ஆமாம்.." என்று புன்னகைத்தேன்.

" நீ சூரப்புலிடா.." என்று என்னைத் தட்டிக் கொடுத்தார்..  "அய்யங்கார் சார்.. வேலை கிடைச்சதும் பையன்  முகத்திலே என்ன களை பாருங்க.."

"இப்போத் தான் முதல் தடவையா  கவர்ன்மெண்ட் ஆபிஸ் வேலைக்குப் போறான்.  நீ ரொம்ப அவனை சதாய்க்காதேடா.." என்றார் அய்யங்கார்.

"நான் வரேன், மாமா.." என்று  அய்யங்காரிடம் சொல்லிக் கொண்டு, சுகவனத்தைப் பார்த்து கையாட்டி விட்டு கடைப் படிகளில் இறங்கி ரோடுக்கு  வந்தேன்.

வீட்டுக்குப் போனதும் எல்லோருக்கும் சந்தோஷம்.   இரண்டு நாள் தான் இருக்கு.  இரண்டு  மாச உபயோகத்திற்கு எல்லாத்தையும் எடுத்து வைச்சிக்கணும்.  எங்கே தங்குவேன், என்ன செய்வேன் என்று எதுவும் தெரியவில்லை.  கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தது.

 ஞாயிற்றுக் கிழமை சாயந்திரம் வாக்கிலேயே அங்கேப் போய்ச் சேருவது  நல்லது போலிருந்தது.  அப்போத் தான்  பத்து மணிக்குள்ளே வேலையில் சேர முடியும் என்ற நினைப்பு மேலோங்கியது.

கிடைத்திருந்த  வேலை பற்றி இந்த இடத்திலாவது சொல்ல வேண்டும். அரசு வேலைகள் குறித்த ஆணையில்  10 (A) (1) என்று குறிக்கும் பகுதி ஒன்று உண்டு.   இப்பொழுது அமுலில் இருக்கிறதா, தெரியவில்லை.  அரசு அலுவலகங்களில் நிரந்தர வேலை பார்ப்பவர்கள்  நீண்ட விடுப்பு எடுத்திருந்தால்  அவர்கள் பணியைச் செய்ய தற்காலிகமாக அலுவலர் வேண்டி வேலை வாய்ப்பு அலுவலகத்திற்குத் தெரியப்படுத்துவார்கள். வேலை வாய்ப்பு  அலுவலகமோ தங்களிடம்  பதிந்திருப்பவர்களின் பணித் தேவைக்கான தகுதி பார்த்து அந்தந்த அலுவலகங்களுக்கு அனுப்புவார்கள்.  அவர்களை தேர்ந்தெடுத்து உபயோகப்படுத்திக்  கொள்வது அந்தந்த அலுவலகத்தின் வேலை.   வேலை வாய்ப்பு அலுவலகத்தால் அனுப்பப் பட்ட நபரை உபயோகப்படுத்திக் கொண்ட, அவர்களைப் பணி அமர்த்தல், நீக்கல் 
 சம்பந்தப்பட்ட எல்லா விவரங்களின் ஆணைகளில் ஒரு நகல் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கும் அனுப்பப்படும்.   அதனால்  இதெல்லாம் பற்றி வேலை வாய்ப்பகம் தகவல்களை சீறாக நடைமுறைப்படுத்தி வந்ததினால்  எல்லாம் முறைப்படி நடந்தன.

அரசாங்க விஷயங்களில் எந்தவிதமாக அரசியல் தலையீடுகளும் இல்லாத பொற்காலம் அது. 

(வளரும்)
 
            

Thursday, May 9, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                         22


ரண்டாவது அக்கிரஹாரத்தில் நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டில் ஸ்ரீனிவாச அய்யங்கார்  என்ற பெரியவர் இருந்தார். அவர்  முதல் அக்கிரஹாரத்  தெரு முனையில்  ஜாப் டைப்ரைட்டிங் நிலையம் ஒன்றை சொந்தத்தில் வைத்திருந்தார்.  அய்யங்கார் மிகப் பிரமாதமாக தட்டச்சு செய்வார்.  காட்ராக்ட் பாதிப்பில் பார்வை தான் பாதிக்கப் பட்டிருந்தது.

ஒருநாள் அய்யங்கார் கூப்பிட்டு ஜாப் டைப்ரைட்டிங் ஆபீஸ் போனேன்.  என் வாழ்க்கையில் மிகவும் குறிப்பிடத் தக்க  தெரியாதவைகளைத்  தெரிந்து கொண்ட காலம் அய்யங்கார் அலுவலகத்தில் வேலை செய்தது.  காலையில் ஒன்பது மணி வாக்கில் அய்யங்கார் ஒரு குடையுடன் கிளம்பி விடுவார்.  கிட்டத்தட்ட இருபது நிமிஷ நடை தூரம் அவருக்கு.   தெருவில் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் பார்த்து ஜாக்கிரதையாக அவர் நடப்பதே நெகிழ்ச்சியாக இருக்கும்.  அவரைப் பற்றி எழுதுகையிலேயே மனம் குழைந்து  போகிறது.

ஜாப் டைப்ரைட்டிங் ஆபீசும் வேலைக்குப் போன இடமாக எனக்குத் தெரியவில்லை.   கண் பார்வை குன்றிய ஒரு பெரியவருக்கு அவர் ஈடுபட்டிருந்த  தொழிலில்  என்னாலான உதவியைச் செய்கிற மாதிரியான எண்ணம் மனத்தில் படிந்திருந்தது.   அந்த ஜாப் டைப்ரைட்டிங் ஆபிஸ் முதல் அக்கிரஹாரத்தின் முக்கியமான இடத்தில்  நான்கு தெருக்கள் கூடுமிடத்தில் இருந்தது.  தூக்கிக் கட்டிய  இடம்.  இரண்டு படிகள் ஏறிப் போனால்  சின்ன அறை மாதிரி இருக்கும்.    உள்ளே போய் மிஷின் கவரைக் கழட்டி விட்டால் போதும்.  என் பக்கத்தில் அய்யங்கார் அமர்ந்து  மேனஸ்கிரிப்ட்டில் எழுதியிருப்பதை  வரி வரியாய் படிக்க அடுத்த நொடியே அவர் சொல்வதை தட்டச்சாய் நான் கொண்டு வருவேன்.  போவோர் வருவோரை ரோடில் பார்த்துக் கொண்டே  காது மட்டும் அய்யங்கார் சொல்வதைக் கேட்டுக் கொண்ட  நொடியில் விரல்கள் தட்டச்சு இயந்திரத்தின் கீ போர்டில் பழகிய செயலாய் நர்த்தனமிடும்.

ஜாப் டைப்பிங் லேசுப் பட்ட காரியமல்ல.   முதல் அக்ரஹாரத்தில் வக்கீல்கள் நிறைய.  கடையைத் திறக்கும் முன்னே  கட்சிக்காரர்கள் காத்துக் கிடப்பார்கள்.   எல்லாத்துக்கும் அய்யங்காரின் க்யாதி தான்  காரணம்.  ரொம்ப வருஷமாய் அந்த இடத்தில் இருப்பவர்.  ஆங்கிலப் புலமை மிக்கவர்.  வக்கீல்கள் கையெழுத்துன்னா கேட்கவே வேண்டாம்.  கோழிக் கிறுக்கல் மாதிரி இருக்கும்.   குறிகள் போட்டு  கோடிழுத்து அம்புக் குறி போட்டு ஒரு பேப்பரில் எங்கங்கெங்கோ வக்கீல்கள் கிறுக்கியிருப்பார்கள்.  சில இடங்களில் எல்லாம் அய்யங்காருக்குத் தெரியும் என்று  புள்ளிக் குத்தி விட்டிருப்பார்கள்.  கத்துக் குட்டிகளிடம் போனால்  அவர்கள் டைப் அடித்திருக்கும் லட்சணத்தைப் பார்த்த மாத்திரத்தில் வக்கீல்கள் நோட்டீசுகளைத் தூக்கி எறிவார்கள் என்று கட்சிக்காரர்களுக்குத் தெரியும். அதனால் எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை என்று அய்யங்கார் கடையில் காத்திருந்து டைப் அடித்துக் கொண்டு போவார்கள்.  எல்லா வக்கீல் நோட்டீசுகளிலும் வரும்  'To the best of my knowledge and belief... என்று தொடரும் ஒரு பாராவிற்கான  வரிகள் அந்தக் காலத்தில் மனப்பாடமே ஆன ஒன்று.

வக்கீல் குமாஸ்தாக்கள் கொண்டு வந்து கொடுக்கும்  டைப் அடிக்க வேண்டிய  சமாச்சாரங்கள் வேறே.  ஜெராக்ஸ் மிஷின் இல்லாத காலம்.   எண்பது  பக்கம், நூறு பக்கம் தேறும் கோர்ட் ஆர்டர்களை பிரதி எடுக்கும் வேலைகளும் இருக்கும்.  அப்படியான விஷயங்களை எடுத்துத் தனியே வைத்திருப்பார். ராத்திரி 7 மணிக்கு மேலே  மோகன் என்று இன்னொருத்தர் வருவார். லஷ்மி  நரசிம்மன் என்னும் என் நண்பணின் அண்ணன் தான் மோகன்.  பகல் நேரத்தில் சேலம் கிளாஸ் பாக்டரியில்  (Glass Factory)  ஸ்டெனோ.  அய்யங்கார் கடை பார்ட் டைம் வேலை.  சீனியர் . அதனால் அய்யங்கார் பக்கத்தில் இருந்து டிக்டேட் பண்ண வேண்டும் என்ற அவசியம் இல்லை.   இரவு எட்டு மணிக்கு மேலே அய்யங்கார் பையன்  வெங்கடாச்சாரி வந்து ஒன்பது மணிக்கு மோகன் போனவுடன் கடையை மூடிக்கொண்டு வீட்டுக்கு வந்து  சேருவான்.

அய்யங்கார் ஜாப் டைப் கடையில் வேலை செய்யும் பொழுது  தான் பக்கத்து போஸ் மைதானத்தில் எம்ஜிஆர்  பேச வருகிறார் என்று  பெரிய கடைத் தெருவும்  முதல் அக்ரஹாரமும்  ஜனசந்தடியில் களைகட்டியிருந்தது. பக்கத்து கிராமங்களிலிருந்தெல்லாம் வந்திருந்த ஜனக்கூட்டம்.  காலை பத்து மணிக்கு வருவதாக இருந்த எம்ஜிஆர்  பன்னிரண்டு மணிக்கு கொஞ்சம் முன்னால் வந்தார்.  புஸுபுஸூ என்று காற்றில் அலைபாய்ந்த சுருள் முடியைக் கட்டுப்படுத்த கர்சீப் ஒன்றை  கிரேக்க இளவரசன் தலைப்பட்டை மாதிரி அழகாகக் கட்டியிருந்தார்.  தோள் பட்டையில் சிறிய அளவில் கருப்பு--சிவப்பு  துண்டு.  ரோஸ் நிறம்.  ஜரிகை வேட்டி. கீழ்ப்பக்கத்தில் அகண்ட ஜிப்பா சட்டை.  அய்யங்காரிடம் பர்மிஷன் வாங்கிக் கொண்டு முதலிலேயே போஸ் மைதானத்தில் நான் ஆஜர்.

அதற்குப் பிறகு பல தட வைகள் எம்ஜிஆரை நேரில் பார்க்கும் வாய்ப்புகள்  வாய்த்திருக்கின்றன.  வருடா வருடம் தவறாமல் சேலம் பொருட்காட்சியில் அவர் நாடகம் இருக்கும்.  அவர் சம்பந்தப்பட்டு நிறைய நினைவலைகள்.  வருடக் கணக்கிட்டு வரிசையாக நினைவுபடுத்திப் பின்னால் சொல்கிறேன்.

அய்யங்கார் கடையில் வேலையில் இருக்கும் பொழுதே சேலம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தேன்.   ஒரு நாள் மதிய சாப்பாட்டிற்காக வீட்டிற்குப் போயிருந்த பொழுது எனக்கு வந்திருந்த தபாலை எடுத்துக் கொடுத்தார்கள்.   வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து வந்திருந்தது.  பிரித்துப் பார்த்தால்  இரண்டு நாட்கள் கழித்து  சேலம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஒரு நேர்காணலுக்கு வரச்சொல்லி அந்த அலுவலகத்தின் முகவரியையும் கொடுத்திருந்தார்கள்.

வீட்டில் எல்ளோருக்கும் மகிழ்ச்சி.  அதோடு என் மகிழ்ச்சியையும் சேர்த்து சுமந்து கொண்டு அய்யங்கார் கடைக்குப் போனேன்.  அய்யங்காரிடம் விஷயத்தைச் சொன்னேன்.  "ரொம்ப சந்தோஷம்.. இந்த வேலை உனக்கே கிடைக்கட்டும்.." என்று ஆசிர்வதிக்கிற பாணியில் சொன்னார்.

அடுத்த இரண்டு நாட்கள் நேர்காணல்  நினைவே.   அந்த நாளும் வந்தது.    பொதுப் பணித்துறை அலுவலகத்திற்குப் போனேன்.  அரை மணி நேரம் வெளியே வராண்டாவில் காத்திருந்த பிறகு உள்ளே எல்லோரையும் வரச் சொன்னார்கள்.  கிட்டத்தட்ட இருபது பேர் தேறும்.

எல்லோரையும் வரிசையாக நிற்க வைத்து  ஒவ்வொருவரிடம் தகுதிச் சான்றிதழ்களை சரி பார்த்து குறித்துக் கொண்டார்கள்.  சிறிது  நேரத்தில் அந்த அலுவலகத்து அலுவலர் ஒருவர் வந்து   எல்லோருக்கும் சொல்கிற   அறிவிப்பு பாணியில்  ஆறு பேர்கள்   பெயர்களை மட்டும்  அவர்கள் இன்ஷியலோடு  இரண்டு தடவைகள் நிதானமாகப் படித்தார்.  இந்த ஆறு  பேர்கள் மட்டும் அமர்ந்திருங்கள்.. மன்னிக்கவும்.  மற்றவர்கள் செல்லலாம்.  வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நாங்கள் தகவலைத் தெரிவித்து விடுவோம். உங்கள் ரிஜிஸ்ட்ரேஷன்  எந்தத் தடையும் இல்லாமல் அங்கு தொடரும்.  அதனால்  கவலைப் பட வேண்டாம்.  உங்களுக்கு எங்கள்  வாழ்த்துக்கள்.." என்று அறிவித்து விட்டு  அந்த அறையின் உள்பக்கம் சென்றார்.

உடனே அந்த ஆறு பேரைத் தவிர்த்து மற்றவர்கள் வெளியேறினார்கள்.

அந்த ஆறு பேரில் நானும் ஒருவன்.  அதனால் அடுத்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று ஆவலுடன்  காத்திருந்தேன்.

(வளரும்)


Tuesday, May 7, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                        21


காலையில்  ஒன்பது மணி சுமாருக்கு   மதிய உணவு டிபன் பாக்ஸோடு கிளம்பினேன்   என்றால் மாலை ஆறு  மணியளவில் வீடு திரும்பி விடுவேன்.  தினம் நாலைந்து கடிதங்கள் தட்டச்சு செய்ய  வேண்டும்.  வேலை  அவ்வளவு தான்.  கிருஷ்ணமூர்த்தி சாரைத்  தவிர கந்தசாமி, கோதண்ட ராமன் என்று மற்றும்  இருவர்.  மூன்று பேரும் உறவினர்கள் தான். ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர்கள்.  யாரானும் இருவர் எப்போதும் இருப்பார்கள். இல்லை, கண்டிப்பாக ஒருத்தர்.   பெரும்பாலும்  தெலுங்கில்  தான் ஒருத்தருக்கொருத்தர் பேசிக் கொள்வார்கள். 

அலுவலகத்திற்கு வெளியே விக்கெட் கேட் பொருத்திய  பெரிய கேட்.  செக்யூரிட்டி.  உள்ளே வந்தோம் என்றால் இடது பக்கம் அலுவலக அறை.  பத்துக்கு இருபது தேறும்.  அதை   தாண்டி உள்ளடங்கி  Factory இருந்தது.  சந்தன எண்ணை தயாரிப்பகம்.  ஒரே   ஒரு  தடவை  கிருஷ்ணமூர்த்தி  சார் என்னை உள்பக்கம் அழைத்துப் போய் தயாரிப்பைக் காட்டியிருக்கிறார்.

எனக்கு உள்பக்கம் வேலையில்லை என்பதினால்  லஷ்மண ரேகா இழுத்த மாதிரி வெளிப்பக்க அலுவலகத்தோடு சரி.   அந்த அறையிலேயே வாஷ் பேசின், ரெஸ்ட் ரூம் எல்லாம்   இருந்தது.  மூன்று முதலாளிகளில் யாராவது  அந்த அறையில் இருந்து கொண்டே   இருப்பார்கள்.   வேலையில்லா விட்டாலும்  எதையாவது கொடுத்து தட்டச்சு செய்யச் சொல்வார்கள்.
இப்பொழுது கூட அது மறக்காமல் நினைவிலிருக்கிறது; 

அது   என்னவோ தெரியவில்லை சம்பளப் பணத்தை ஒரு  ரூபாய் நோட்டாகத்  தான்  தருவார்கள்.   அத்தனையும் அழுக்கு நோட்டாகத் தான் இருக்கும்.  ஒண்ணோடு ஒண்ணு ஒட்டிக் கொண்டு மடிந்தும்  புரண்டும்.. எண்ணிப் பார்த்து சரியாயிருக்கிறது  என்று திருப்தி ஏற்படுவதற்குள்  ஒருவழியாகி விடும்.     அவர்கள் கணக்கு வைத்திருந்த வங்கியில் வித்ட்ரா பண்ணும் பொழுது அப்படித் தான் அழுக்கு நோட்டாக அவர்களுக்குத்  தருவார்கள் போலும் என்று நினைத்துக் கொள்வேன்.  ஒரு தடவை கூட 'நல்லா நோட்டாத் தான் தாருங்களேன்'' என்று இவர்கள் கேட்க மாட்டார்கள் போலிருக்கு..

சந்தன எண்ணைக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து ஐந்து மாதங்கள் கூட ஆகியிருக்காது.. ஒரு நாள்,   கிருஷ்ண மூர்த்தி சார் என்னிடம்,  "அடுத்த மாதத்திலிருந்து அதிக வேலை  இருக்காது.  அதனால் நீங்கள் வரவேண்டி  இருக்காது என்று  நினைக்கிறேன்.." என்றார்.

அவர் சொன்னதற்கு அடுத்த  நாள் சித்தூரிலிருந்து ஒரு பையன்  வந்திருந்தான்.  உறவினர் பையன் என்று கிருஷ்ணமூர்த்தி அவனை எனக்கு  அறிமுகப்படுத்தி வைத்தார்.  அவனுக்கும் தட்டச்சு தெரியும் என்று கூடுதல் தகவலையும் என்னிடம் சொல்லி வைத்தார்.  நானும் ஒண்ணும் ஒண்ணும் இரண்டு என்று கணக்கு போட்டு வைத்துக் கொண்டேன்.  என் கணக்கு தப்பாகவில்லை.

சரியாக அந்த மாதக் கடைசி நாளோடு கணக்கை முடித்து என் சம்பளப் பணத்தை வழக்கம் போல ஒரு ரூபாய் அ. நோட்டுகளாகவே கொடுத்து ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டிய பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள்.

நானும் விடைபெற்றேன்.  வழக்கம் போல செக்யூரிட்டியின் சோதனைக்குப்  பிறகு வெளி வந்தேன்.  இனிமேல் தினந்தோறும் இந்தப் பக்கம் வர வேண்டிய  வேலை  இருக்காது என்பதை நினைக்கையில் ஒருவிதத்தில் சந்தோஷமாகத்  தான்  இருந்தது.
                                                                                                                                   
டுத்த வேலைக்கு ரகுவும் என்னோடு சேர்ந்து கொண்டான்.   எங்கள் இருவருக்குமே மனசுக்கு மிகவும்    பிடித்தமான வேலை.  நடமாடும் வாடகை லைப்ரரி.  வார, மாத இதழ்களை வீட்டுக்கு வீடு சப்ளை  பண்ணுகிற வேலை.  வாடகை நூல் நிலைய உறுப்பினர்கள் இரண்டு நாட்களில் படித்து முடித்து வாங்கிக் கொள்ளும் புத்தகங்க்வளைத் திருப்பி விட வேண்டும்.   கலைமகள் வாடகை நூல் நிலையம் என்று பெயரையும் தேர்வு செய்து விட்டோம்.  அந்தப் பெயரில் ஒரு ரப்பர் ஸ்டாம்பும் தயாராயிற்று.

எங்கள் லிஸ்ட்டில் அந்நாட்களில் வெளிவந்த   கிட்டத்தட்ட அத்தனை பருவ  இதழ்களூம் இருந்தன.  ஆரம்பத்தில் அதிக அலைச்சல் வேண்டாம் என்று  எங்கள் தெருவிற்கு அருகாமையில் இருந்த ஏரியாக்களை மட்டும் தேர்தெடுத்தோம்.   மேட்டுத் தெரு, மரவனேரிப்  பகுதி, மூன்றாவது அக்ரஹாரம், கிச்சிப் பாளையம் என்று  சின்ன வட்டத்திற்கே இருபது வீடுகள் தேறி விட்டன.   இருபது  வீடுகளை இரண்டு பகுதிகளாகப் பிரித்ததில் வாங்கிய புத்தகங்களையும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்க முடிந்தது.   ஒரு பகுதிக்கு ஆனந்த விகடன்  என்றால் இன்னொரு பகுதிக்கு குமுதம் இப்படி.  திங்கள், புதன், வெள்ளி  ஒரு பகுதி என்றால் செவ்வாய், வியாழன், சனி இன்னொரு பகுதி.    ஞாயிறு எங்கள் நடமாடும் நூலகத்திற்கு  விடுமுறை.

பத்திரிகை வந்த முதல் நாளே  படித்து விட வேண்டும் என்று சிலருக்கு எதிர்பார்ப்பு  இருந்தது.   போன வாரம் வாசித்து விட்ட தொடரின் அடுத்தப் பகுதியை தெரிந்து கொள்வதில் அப்படி ஒரு ஆர்வம் அவர்களை ஆட்டிப் படைத்ததை அனுபவ பூர்வமாகவே உணர்ந்தோம்.  மூன்றாவது
அக்கிரஹாரத்தில் ஒரு மாமி.. "நீ படிச்சிருப்பேன்னு தெரியும். அப்புறம் அந்த  மஹேந்திர பல்லவர் எங்கே தான்  போய்த் தொலைச்சார்?.. பல்லவப் படை பாசறைக்கு வந்து சேர்ந்தாரா?.. இந்த வாரத்தில் அதைப் பற்றி  எதுனாச்சும் போட்டிருக்காங்களா?.." ன்னு இந்த மாதிரி அப்பப்போ அடுத்த வாரத்தில் தொடரப் போகிறதைத் தெரிஞ்சிக்கற ஆர்வத்தில் கேட்பார்.  (இது எந்தத் தொடர்கதைன்னு யாரானும்  யூகித்துப் பாருங்கள்..)

பொதுவாக  தொடர்கதைகள் வெளிவரும்  வார இதழ்கள் அப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன.  அதனால் வார இதழ்களை மட்டும் இரண்டு பிரதிகள் வாங்கி, அது பின்பு மூன்றாகி.. இப்படியான நிர்பந்தங்களுக்குத்  தள்ளப்பட்டோம்.  பக்கத்து வீடு, அடுத்த வீடு, எதிர்த்த வீடு என்று ஆரம்பத்தில் இருபது இருந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒரே மாதத்தில் ஐம்பதாக எகிறியதும் விழி பிதுங்கிப் போயிற்று.   பெரும்பாலும் வீட்டரசிகள் தாம் எங்கள் நூல் நிலைய உறுப்பினர்கள்.  ஆண்கள் வார, மாத இதழ்களைப் படிக்கவே மாட்டார்களோ என்ற பெருத்த சந்தேகம் எங்களுக்கு ஏற்படுகிற அளவுக்கு  பெண்களின்  வாசிப்பு ஆர்வம் எங்களை பிரமிக்க வைத்தது.   தொடர்கதைகள் என்ற ஏரியாவை அத்தனை பேரும் குத்தகைக்கு எடுத்திருந்தார்கள் என்றே சொல்லலாம்.

வார, மாத  இதழ்களை வைத்து மட்டும் சமாளிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட பொழுது  பிரேமா பிரசுர துப்பறியும் நாவல்களை பருவ இதழ்களோடு சேர்த்துக் கொண்டோம்.   சிரஞ்சீவி,  மேதாவி, சந்திர மோகன், அரு.ராமநாதன் எல்லோருமே எங்களுக்கும் நெருக்கமாக ஆனார்கள். 

"எப்படிப் பார்த்தாலும்  நாலு வீட்டுக்கு புத்தகம்  கொடுக்க முடியாம இடிக்கும் போலிருக்கு..  ஒண்ணு செய்யலாம்.. நேத்திக்கு வாங்கினோமே  சிரஞ்சீவி, மேதாவி  புது   நாவல்கள்? -- அதை நாளைக்கு  சர்க்குலேஷனுக்கு விட்டுடலாமாடா?"  --  ரகுராமன் கேட்பான்.  தினமும் சாயந்தரம் எங்கள் சந்திப்பு  இருக்கும்.


"ரெண்டைப் படிச்சிட்டேன்.  அதை மட்டும் தர்றேன். எடுத்துக்கோ.. இன்னும் ரெண்டிலே இருபது பக்கம் போல பாக்கியிருக்கு.  சிலதை  இன்னும் தொடவே இல்லை..  ஒழிஞ்ச நேரத்திலே முடிச்சிடறேன்.  சனி, ஞாயிறு வர்றது.. திங்கட்கிழமை சர்க்குலேஷனுக்கு  வைச்சிக்கலாமே?"

தனக்கு  மிஞ்சித் தான் தான தருமம் எல்லாம் என்பார்கள்.   இந்த இதழ்கள், புத்தகங்கள் விஷயத்தில் நாங்க புரட்டிப் பார்த்த பிறகு  தான் எதுவும் நூல் நிலைய வாசகர்களுக்குப் போகும் என்பதை தவிர்க்க முடியாத  நியதியாக நாங்க ரெண்டு பேருமே கொண்டிருந்தோம்.

கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக  எங்க இரண்டு பேரையும் இந்த  நடமாடும் நூல் நிலையம் மிகவும் பாதிச்சிருந்தது.  கத்தை  கத்தையாக நிறைய தொடர்கதைகள்,  முக்கியமான விஷயங்கள் என்று சேர்த்து  வைத்திருந்தோம். பைண்ட் பண்ணியும் பண்ணாமலும்..  சொல்லப் போனால் அதுக்குத் தான் இந்த வேலையே இறைவன் கொடுத்த வரமாக நடந்த மாதிரி நினைக்கிறேன்.

(வளரும்)


Related Posts with Thumbnails