மின் நூல்

Saturday, August 8, 2020

அறிவுடைநம்பியின் ரசனை

செல்வம் என்கிற வார்த்தைக்கு என்ன சரியான பொருள் கொள்வது என்றுத் தெரியவில்லை. பொதுவாக பணம், காசு, நகை, வீடு, ஆஸ்தி,கல்வி -- போன்றவற்றைச் செல்வம் என்று வழக்கில் குறிப்பிடுகிறோம். இவையெல்லாமே, மனிதன் தன் முயற்சியினால் ஈட்டுவது என்கிற செயலின் பாற்பட்டு இருக்கின்றவை; முயன்று கிடைப்பவை எதுவுமே சந்தோஷத்தைக் கொடுக்கும் இயல்பு படைத்தவை தான். 'அது கிடைக்க நான் பட்ட கஷ்டம் எனக்கல்லவா தெரியும்?' என்று நினைத்துப் பெருமூச்சு விடும் சிலரும் உண்டு. இந்த பெருமூச்சும் பெருமிதத்தின் பால் இருக்கும். என் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்கிற இறுமாப்பும் சிலரிடத்தில் லேசாக இதில் கலந்திருக்கும். அதைப் பாதுகாப்பதற்கும், அதை வைத்து இன்னும் என்ன செய்யலாம் என்கிற யோசனையும் அதைத் தொடர்ந்து இருக்கும்.

இவையெல்லாம், உயிரில்லாத செல்வங்களென்றால், உயிருள்ள ஒரு செல்வமும் உண்டு. அதுதான் குழந்தைச் செல்வம். இந்தச் செல்வம் மற்ற செல்வங்களிலிருந்து மாறுப்பட்டது. பெற்றிருப்பவருக்கு மட்டுமில்லை, பெற்றிருப்பவரின் சுற்றத்தினருக்கும், பெருமையையும், மனமகிழ்ச்சியையும், உறவுச்சங்கிலி உணர்வையும் கொடுப்பது.இந்தச் செல்வம் மட்டும், யாருடைய முயற்சியின் அடிப்படையிலும் கிடைப்பதல்ல; வேண்டினால் கிடைப்பதும், வேண்டாமையால் கிடைக்காமல் போவதுமில்லை. அதனால் தான் குழந்தைச்செல்வத்தை மட்டும் பாக்கியம் என்கிறோம். இயல்பாக ஏழை,பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் கிடைப்பதினால் தான், குழந்தை பாக்கியத்தை கடவுளின் கொடை என்று சொல்கிறார்கள்.

இந்த வரம் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதிலிருந்து தொடங்கி பரவ ஆரம்பிக்கும் மகிழ்ச்சி, அதைத்தொடர்ந்து தன் சுகம், தன் நலன் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு பிறக்கப்போகும் அந்த சிசுவுக்காக ஏங்கும் அந்த போக்குகள், ஒருவழியாக தாய்க்கு பிரசவம் நல்லபடி நடந்து குழந்தை இந்த பூமிப்பந்தின் பிரஜை ஆனதும் ஏற்படுகின்ற சிலிர்ப்பு, அந்த சிசுவின் அணைப்பில் ஏற்படுகின்ற சுகானுபவ ஆனந்தம், தங்கள் ரத்தத்தின் உயிர்த்துடிப்பான அந்த பூபாரத்தைக் கையில் தூக்கிச் சுமக்கையில் ஏற்படுகின்ற பரவசம், பொக்கை வாய் திறந்து அந்தக் குழந்தை சிரிக்கையில் ஏற்படும் பரமானந்தம், காரணமில்லாமலேயே வீல்வீலென்று அழுகையில் உணரும் பரிதவிப்பு --- எல்லாமே சொற்களில் சிறைபடுத்திச் சொல்லமுடியாத, ஒவ்வொருவரும் உணர்ந்து அனுபவித்து உணர வேண்டிய வாழ்க்கையின் வரங்கள்...

இந்தக் காலத்தில் தான் இப்படி என்றில்லை. எந்தக் காலத்திலும், இந்த சீராட்டும், பாராட்டும் இப்படித்தான். வாராது வந்த அந்த மாமணியை கட்டி அணைத்து, ஊரார் கண் பட்டுவிடப் போகிறதே என்று கன்னத்தில் கண்மைப் பொட்டிட்டு,அதன் பொக்கைவாய்ச் சிரிப்பில் உலக இன்பங்கள் அனைத்தும் காலடியில் வீழ்ந்து கிடப்பதாக உவகை கொண்டு மகிழ்வோர் தான் எல்லோரும். மனித இனத்தில் மட்டுந்தான் என்றில்லை, ரத்தவாடை நுகரும் மிருகங்களிலிருந்து, சின்னஞ்சிறிய குருவிகள் வரை--தனது குட்டிகள்,குஞ்சுகள் என்றால் அந்த அன்பும், அளப்பரிய கரிசனமும் எங்கிருந்துதான் வரும் என்றுத் தெரியவில்லை. தனக்கில்லாவிட்டாலும், தன்னிலிருந்து விடுபட்ட அந்த தனி உயிருக்கு, தன்னையே தந்துவிடும் அந்த பாசத்திற்கு ஈடுஇணை இவ்வுலகில் எதுவுமே இல்லை எனலாம்.  இந்தச் சீராட்டல், மண் குடிசையாயிருந்தாலும் சரி, மன்னனின் மாளிகையாய் இருந்தாலும் சரி,   ஆசையும் அன்பும், ய்பாசமும் போட்டி போட்டுக் கொண்டு இடம் பார்த்துப் பேதப்படாமல் எல்லா இடங்களிலும் ஒன்றாகத் தான் இருக்கும்.

இதோ, கடைச்சங்கக் காலத்து மன்னன் பாண்டியன் அறிவுடைநம்பி என்ன சொல்கிறான், பாருங்கள்:

"படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே."
 

(புறநானூறு--188)


ஆஹா, எப்படி அனுபவித்திருக்கிறான்!..எவ்வளவு அழகாக வெளிப்படுத்தியிருக்கிறான்!    மன்னனாலும் சரி, பரம ஏழையாய் இருந்தாலும் சரி, ஒரே உணர்வு தான், போலும்!

தத்தித்தத்தி தளர் நடை நடந்து, தன் சின்னக்கை நீட்டி,அந்தச் சின்ன அன்ன பாத்திரம் தொட்டு, அதில் வைக்கப் பட்டிருக்கும் நெய்வார்த்த உணவில் தன் பிஞ்சு விரல்கள் புதைத்து,தொட்டு, விரல்களால் அளைந்து, ஓரிரு பருக்கைகள் எடுத்துக் கவ்வி வாயில் போட்டுக் கொண்டும், வாயிலிருந்து நழுவிய சில பருக்கைகளை தன் மேனி எங்கும் உதிர்த்துக்கொண்டும் அட்டகாசம் பண்ணி நம்மை மயக்கி களிப்பில் ஊஞ்சலாட்டும் இப்படிப்பட்ட குழந்தைகளைப் பெறாதவர், ஓ, வாழ்க்கையில் எந்தப் பயனையும் பெற்றதாக எனக்குத் தெரியவில்லை என்கிறான்!..

எவ்வளவு உணர்வுபூர்வமான வர்ணிப்பு பாருங்கள்..  எவ்வளவு கூரிய பார்வை அவனுக்கு!..

 எனக்குத் தெரிந்து வேறு எந்தக் கவிஞனும்,சின்னஞ்சிறு குழந்தைகளின் சித்திர உலகையையும் அதனால் நமக்கு ஏற்படுகின்ற உவகையையும் இவ்வளவு அழகாக வர்ணித்ததில்லை! இவன் சரியான ரசிகனாய் இருக்கிறான்!

புலவர்கள் தன்னைப் புகழ்ந்து பாடும் புகழ்ப்பாட்டுகளால் மகிழ்வேற்பட்டு, ஆணவமும்-அகங்காரமும் பாதாதிகேசம் பரவி, அந்த அகமகிழ்ச்சியில் தன்னை வாழ்த்தி இறைஞ்சிய புலவர்களுக்கு, பண்டையத் தமிழ்மன்னர்கள் மனம்போன போக்கில் வாரி வழங்கினார்கள், என்கிற வசைச்சொல் இவனால் நீங்கியது... பாடும் புலவரின் பாடலை புரிந்து கொள்பவராயும், அதை வகைப்படுத்தி ரசிப்பவராயும் மட்டுமல்ல, தாங்களும் கவிபாடும் ஆற்றல் பெற்றவர்களாயும் இருந்திருக்கின்றனர் என்று அறிவுடைநம்பியின் அட்டகாசமானப் பாட்டால் அறிந்து கொள்கிறோம். உண்மையிலேயே இந்தப் பாண்டிய மன்னன் தன் பெயர்கேற்ப, தமிழ்ப்புலமையை தன்னகத்தேக் கொண்டுச் சிறந்திருந்தான் என்று தான் இந்தப் புறப்பாடலால் புரிகிறது

Wednesday, July 8, 2020

ஜஸ்ட் மிடில் மென்!..


ப்பொழுதும் திருநெல்வேலி பக்கம் போனாலோ, அல்லது அந்த ஊரை நினைத்தாலே எனக்கு ராமசாமி நினைவு வந்து விடும்.

அடுத்த வாரம் தென்காசிக்கு ஒருவேலையாகப் போகவேண்டியிருக்கிறது. அப்படியே குற்றாலத்தில் ஒருநாள் தங்கல். ரயில்வே கால அட்டவணைப் புத்தகத்தை முன்பதிவுக்காகப் புரட்டும் பொழுது, ராமசாமி ஞாபகத்திற்கு வந்து விட்டான்.

அவன் தந்தையை நினைக்கையிலேயே எவ்வளவு அற்புதமான மனிதர் என்று மனசு நெகிழ்கிறது. ஆண்டவன் படைப்பில் மானுடராய் இப்படிப்பட்ட ஒரு வாழ்வு வாழ்ந்த நல்ல மனிதர்களை நினைக்கும் பொழுது நாமும் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்று நெஞ்சில் சூளுரைத்துக் கொள்வதும் இயல்பான ஒரு செய்கையாகப் போய்விட்டது. ரொம்பவும் மோசமாகப் போய்விடாமல், இப்படிப்பட்ட நல்லவர்களின் வாழ்வுதான் நம்மை வழிநடத்தி காப்பாற்றுவதாகவும் நான் நம்புகிறேன்.

ராமசாமி கொழுத்த செல்வந்தவர்களின் குடும்பத்தில் பிறந்தவன். பரம்பரையே மிட்டா மிராசுதாரர்கள். செலவம் ஓரளவுக்கு மேல் சேர்ந்துவிட்டால், அதுவே மேலும் மேலும் தன்  வளர்ச்சியைத் தானே பார்த்துக் கொள்ளும் இயல்புடையது போலும்.

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் மா,பலா,தென்னை மரங்கள் சூழ்ந்த மிகப்பெரிய பங்களா அவர்களது. அவர்களின் வீடு என்று சொல்லப்படும் மாளிகையின் வேலியை ஒட்டிய நீண்ட தெருவில் ஒரு வீட்டில் நாங்கள் குடியிருந்தோம். வரிசையாக பதினைந்துக்கு மேற்பட்ட பக்கத்துப் பக்கமாக ஒட்டிக்கட்டப்பட்ட வீடுகள்..அத்தனையும் ராமசாமி குடும்பத்துக்குச் சொந்தமானது.

ராமசாமி என் பள்ளித்தோழன் கூட. எங்களது பெரிய ஜமா.   மழைக் காலங்களில் பத்து பதினைந்து பேர்கள் கொண்ட எங்கள் குழு, தினமும் நெல்லை ஜங்ஷன் பகுதியில் இருக்கும்  மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி பள்ளிக்கு போவதும், மாலையில் வீட்டுக்குத் திரும்புவதும் ராமசாமி வீட்டு வேனில் தான். அந்தப் பக்க சிறுகுழந்தைகள் ஆரம்ப பள்ளிக்குப் போவதற்காக  இரண்டு வேன்களைத் தனியாக ஏற்பாடு செய்திருந்தனர்.

பங்களாவை ஒட்டியவாறே சத்திரம் போல மிகப்பெரிய ஹாலுடன் ஒரு கட்டிடம் இருக்கும். காலையில் கூட்டமாக துண்டும் சோப்புப்பெட்டியுமாக அரட்டை அடித்தபடி தாமிரபரணியில் குளித்துவிட்டு வந்தோமானால், அவரவர் வீட்டிற்குச் சென்று உடைமாற்றிக் கொண்டு இந்த சத்திரம் போன்ற இடத்தில் குழுமிவிடுவோம்.

எல்லோருக்கும் காலை டிபன் அங்கே தான். எப்படியும் தினம் இருபது பேருக்கு மேல் தேறிவிடும். ராமசாமி, ராமசாமியின் தம்பி, அவன் அப்பா, அம்மா சூழ உட்கார்ந்து சாப்பிடுவோம். சமையல்கார சாம்பு மாமா, பளீரென்று வெள்ளை வெளேர் வேஷ்டியும் மேல்துண்டுமாய் நெற்றி நிறைய வீபூதி-சந்தனப் பொட்டுமாய் ஆரோக்கியமாய் இருப்பார். ராஜ உபசாரம் தான். அவர் அவரவரைப் பேர் சொல்லி விளித்து, "தேங்காய்ச் சட்னி போடட்டுமா?.. கொத்ஸூ கொஞ்சம் போட்டுக்கோயேன்"..என்று கேட்டுக் கேட்டு விசாரித்து அன்புடன் பரிமாறுவார். குண்டு கத்திரிக்காயைச் சுட்டு, கட்டித் தயிரில் மூழ்க வைத்துத் தாளித்துக் கொட்டி சட்னிமாதிரி பண்ணியிருப்பார் சாம்புமாமா. அந்த வயசில் எனக்கு ரொம்பவும் அது பிடிக்கும். கேட்டுக்கேட்டு வாங்கிப் போட்டுக்கொண்டு சாப்பிடுவேன்.

அந்த சத்திரம் போன்ற ஹாலைச் சுற்றி வந்தால், இடதுப்பக்கக் கோடியில் ஒரு பிள்ளையார் கோயிலை பங்களாக்குள்ளேயே கட்டியிருப்பார்கள்...அந்தப் பிள்ளையாருக்கு தினமும் உச்சிகால பூஜை முடிந்ததும், ஏழை எளியோருக்கு இலை போட்டு எளிமையான சாப்பாடு தினமும் உண்டு..  கிட்டத்தட்ட மத்தியானம் இரண்டு மணி வரை நாலைந்து பந்திகள் நடக்கும். சாப்பிட்டு வயிறு நிறைந்தவர்கள் வாயார வாழ்த்தியது தான், அந்த குடும்பத்தையே எந்தக் குறையுமில்லாமல் வாழ வைத்தது போலும்!..   ராமசாமியின் அப்பாவுக்கு அப்பா, மற்ற சொந்தக்கார உறவுகள் என்று எண்பதைத் தாண்டியவர்களே ஏகப்பட்ட பேர் அந்த குடும்ப்த்தில் வளைய வந்து கொண்டிருப்பர்...  எல்லோரும் ஏதோ வேலையில் ஈடுபட்டு எங்கங்கோ போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருப்பார்கள்...  பங்களா பூராவும் எந்நேரமும் கலகலப்புடன் 'ஜேஜே' என்ற கூட்டம் தான்! எல்லோரும் உரக்கப் பேசி உரக்க சிரித்துக் கொண்டிருப்பார்கள்.. ஏழைக் குழந்தைகளுக்கு இரவுப் பள்ளி உண்டு.. அவர்களுக்கு பாடம் படிக்க வகுப்பு போன்ற தோற்றத்துடன் கரும்பலகையும் மேஜை நாற்கலிகளுமாய் ஒரு பெரிய ஹால் உண்டு.. இரவு பள்ளி நடத்தவென்றே, டவுனிலிருந்து நாலைந்து ஆசிரியர்கள் வந்து போவார்கள்...  அவர்கள் வருவது போவது எல்லாம் பங்களா காரில் தான்!..

ஒருநாள், "என்ன இப்படி எல்லோருக்கும் வாரி வழங்குகிறீர்கள்?" என்று யாரோ 'ஒருமாதிரி' கேட்டதற்கு, ராமசாமியின் அப்பா, பரமார்திகமாக மேலே ஆகாயம் நோக்கி கையுயர்த்தி,  "எல்லாம் அவன் கொடுத்தது;  தீரத்தீர இன்னும் கொடுத்திண்டே இருக்கான்..  அவன் என்னிடம் கொடுப்பதைத்தான் நான் நாலு பேருக்குக் கொடுக்கிறேன்" என்று ரொம்ப சுருக்கமாகச் சொன்னார்.  இன்னொரு நாள் சாயந்திரம் இதே மாதிரி கேட்ட இன்னொருவரிடம், "என்ன புதுசா கேட்கறே?..என் தாத்தா..என் தாத்தாக்கு தாத்தா.. அவர்கள் செஞ்சதைத் தானே நானும் செய்யறேன்.. இந்தக் குடும்பமே, ஜஸ்ட் மிடில் மென்! எல்லாம் அவனுக்குச் சொந்தம்..  எந்தக் காலத்திலே யார் செஞ்ச பூர்வபுண்ணியமோ, இந்த மேனேஜ்மெண்ட் பாக்கியம் எங்களுக்குக் கிடைச்சிருக்கு.." என்று 'பகபக'வென்று சிரித்துச் சொன்னது இன்னும் என் நினைவில் நிழலாடி சிலிர்ப்பேற்படுத்துகிறது..

பிற்காலத்தில் நான் படித்த இந்தப் புறப்பாடலும் நினைவிற்கு வருகிறது:

"நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்,
பல் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும்,
கடும்பின் கடும் பசி தீர யாழ நின்
நெடுங் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்,
இனோர்க்கு என்னாது, என்னோடும் சூழாது,
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி--மனை கிழவோயே!--
பழம் தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்து வேல் குமணன் நல்கிய வளனே."

(புறநானூறு--163)

வள்ளல் குமணனைப் பாடி பரிசில் கொணர்ந்த பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் பெருந்தகை, தன் மனையாளுக்குச் சொன்னது, இப்பாடல்.

கொடுத்தவன், வள்ளல்;   பரிசில் பெற்ற புலவனும் அவனை விஞ்சிய வள்ளலாய் இருப்பான் போலிருக்கு என்று மனசு களியாட்டம் போடுகிறது..எப்படிப் பட்ட இனம், இந்த தமிழினம் என்று நெஞ்சு பூரிப்பால் விம்மித் தணிகிறது..  அடடா! அடடாவோ!.. என்ன அருமையான, வரிக்கு வரி பெருமிதத்தைப் பூசிக்கொண்ட வார்த்தைகளால், வார்த்தெடுக்கப்பட்ட கவிதை!...

"உன்னை விரும்பி வந்தோருக்கும்,
நீ விரும்பியோருக்கும், உத்தம குணம் கொண்ட
வழிவழிவந்த உற்றோருக்கும்,
பிறர்பசி காணப் பொறாது
குறிப்பாலாயே உணர்ந்து அவர்தம் பசி
போக்கியோர்க்கும்---
இவருக்குத் தான் என்று எண்ணாது
என்னையும் இது குறித்துக் கலக்காது
நீண்ட நாள் கவலையின்றி வாழ இது
நமக்காயிற்று என்றும் எண்ணாது
எல்லோருக்கும் அள்ளி அள்ளிக் கொடு--
என் மனைக்கிழத்தியே---  இந்த
செல்வம்?...இது முதிரத்துச் சொந்தக்காரனான
நம் குமணன் நல்கியது, அல்லவா?..


கரன்ஸி நோட்டுகளை அடுப்புப்பற்ற வைத்தாலும் பத்து தலைமுறைக்குக் காணும் சொத்து என்று செட்டிநாட்டுப் பக்கம் பேச்சுக்குச் சொல்வார்கள். அப்படிப்பட்ட செல்வத்தைப் பெற்ற செல்வந்தர்கள் இரக்கத்தின் அடிப்படையிலும், தர்மம் செய்ய வேண்டுமென்கிற இயல்பாக வழிவழிவந்த குடும்ப குணநலனாகவும், வசதிகுறைந்த வறியோருக்குக் கொடுப்பதை தானம் என்பார்கள். வரும் வருமானத்தில் ஒரு சதம் தானத்திற்கு ஒதுக்கி வைப்பதை சில குடும்பங்களில் ஒரு பழக்கமாகவும் கொண்டுள்ளார்கள்.

ஆனால், தானே வறிய நிலையில் இருக்கையில், இன்னொருவரிடம் தன் சொந்த திறமை காட்டிப்பெற்ற பரிசிலை, எல்லோருக்கும் வாரி வழங்குவது என்பது நினைத்துப் பார்க்கவே பெரிய விஷயமாகப் படுகிறது. அதுவும், "வல்லாங்கு வாழ்வோம் என்று எண்ணாது எல்லோருக்கும் கொடுத்துவிடு" என்று சொன்ன பெருஞ்சித்திரனாரின் குணமேன்மை நினைத்து நினைத்து மகிழத்தக்கது.    'இருப்பது தீர்ந்துவிட்டால், இருக்கவே இருக்கிறான், புலவர்களைக் காக்கும் புரவலன் குமணன்! பாடிப் பரிசில் பெறலாம்; பெறுவது என்பது பலருக்குக் கொடுத்து மகிழவே' என்கிற புலவர் பெருமானின் செம்மாந்த பண்புநலனும் ஊடும் பாவுமாய் பாட்டில் பரவியிருப்பதும் உன்னிப்பாய் கவனித்தால் புலப்படும்.

Thursday, June 25, 2020

இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும்....

றக்கமுடியாtத   திருநெல்வேலி நினைவுககள் இந்த வயதிலும் இ்ப்பொழுதெல்லாம் அடிக்கடி  நினைவுக்கு  வந்து  சந்தோஷ அலைகளை என்னுள் புரளச் செய்கின்றன.

திண்டுக்கல் செயிண்ட்  மேரீஸ் பள்ளியில்  ஆறாவது ஏழாவது  வகுப்புகளை முடித்துக்  கொண்டு எட்டாவதுக்கு    திருநெல்வேலிக்கு  வந்து விட்டேன்.   திருநெல்வேலியில் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரிப் பள்ளியில் படிப்பு.   மஹாகவியும்  புதுமைப்பித்தனும் பயின்ற பெருமை வாய்ந்த பள்ளி இது.

அது 1957-ம் ஆண்டு.  திருநெல்வேலி வண்ணாரப் பேட்டையில் வாடகை வீடு.   வண்ணாரப்பேட்டை   தாமிரபரணி படித்துறையில்  இறங்கி ஆற்றைக் கடந்து  அக்கறையிலிருந்த மாந்தோப்பில் நுழைந்து ஏறி இறங்கி ரோடுக்கு வந்தால் ஜங்ஷன் அந்த வயது குஷியில் கொஞ்ச தூரம் தான்.    திருநெல்வேலி    ஜங்ஷன் பகுதியில் தான் ம.தி.தா. இந்துக் கல்லூரி சார்ந்த ஹைஸ்கூல் இருந்தது.   உயர்நிலைப் பள்ளிப் படிப்பு என்பது அப்பொழுதெல்லாம் பதினோரு வகுப்பு வரை.  ஆறாவது வகுப்பிலிருந்து பாரம் (FORM)  என்று சொல்வார்கள்.    ஆறாவது பாரம் தான் எஸ்.எஸ்.எல்.ஸி.



ஆற்றைக் கடக்கும் பொழுதே சுலோச்சனா முதலியார் பாலம் கண்ணுக்குத் தட்டுப்படும்.  பாலத்தில் நடப்பது சுற்றுவழி என்று ஆற்றைக் கடந்தே தினம் பள்ளி செல்வோம்.  அந்த வயதில் நண்பர்களுடன் முட்டி அளவு நீரில் ஆற்றை அளைந்து கொண்டு செல்வது அற்புதமாக இருக்கும்.   தினந்தோறும் காலைக் குளியல் தாமிரபரணி ஆற்றில் தான். எங்களது நண்பர்களின் கூட்டம் பெரிய ஜமா. சுமார் 15 பேர்கள் தேறும்.

தாமிரபரணி ஆற்றை நினைவில் நினைத்து நினைத்து எழுத எழுத இனிக்கிறது.   புதுமைப் பித்தன் வாழ்ந்த வண்ணாரப் பேட்டை சாலைத்தெரு,  இன்று புதுமைப்பித்தன் வீதியாகியிருக்கிறது.  வண்ணாரப்பேட்டை எங்கள்
பகுதியிலிருந்து கிளையாகப் பிரிந்து செல்லும் நீண்ட தெரு வழியே நடந்தால், ஐந்து நிமிட நடை தூரத்தில் படித்துறை வந்து விடும். படித்துறையில் பிள்ளையார்.    காலையில் ஆற்றுக்கு வந்துக் குளித்துவிட்டுச் சென்றிருக்கும் பெண்கள் கூட்டம் வழிபட்டிருக்கும் சங்குப்பூக்கள் திருமேனியில் செருகப்பட்டிருக்கும் பிள்ளையாரை உற்றுப் பார்த்தால் சிரித்துக் கொண்டிருப்பது போலத் தோற்றமளிப்பார். நாங்களும் பிள்ளையாரை ஒரு சுற்று சுற்றித் தோப்புக்கரணம்   போட்டுவிட்டு படித்துறைப் படிகளில் இறங்கி தாயின் மடி நோக்கி ஓடும் குழந்தைகள் போல, மணல்வெளி தாண்டி ஆறு நோக்கி ஓடுவோம்.

அந்த ஏழுமணிக்கெல்லாம் காலைக் குளியலுக்காக நண்பர்கள் படித்துறையில் கூடி விடுவோம்.  அந்தக் காலைப் பொழுதில்  கணுக்கால் நீரில் படும் பொழுதே உற்சாகம் உள்ளத்தில் கொப்பளிக்கும்.   இடுப்பும், மார்புப்பகுதியும் நீரில் அழுந்தி, இருகைகளையும் நீட்டி நீரைத் துளாவுகையில் பரம சுகமாக இருக்கும். ஜிலுஜிலுப்பு என்பது அறவே இல்லாத அந்த வெதுவெதுப்பு எப்படித்தான் தாமிரபரணிக்கு வாய்த்தது என்பது அந்த வயதில் எங்களுக்குப் புரியாத அதிசயம்.

ஆற்றின் வடகிழக்குப் பக்கம் இக்கரையிலிருந்து முக்கால்வாசி தூரத்தில் ஒரு பெரிய யானையே நீரில் நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிற மாதிரி, யானைப்பாறை என்று அழைக்கப் படும் மிகப்பெரிய பாறை ஒன்று உண்டு. யானையின் முதுகு மட்டுமே வெளித் தெரிகிற மாதிரி முண்டும் முடிச்சுமாக நீரில் அமிழ்ந்திருக்கும் அந்த பெரிய பாறையின் மேல் பகுதி மட்டும் கண்ணுக்குத் தெரியும்.

பாறையைச் சுற்றி சுழல் போல் ஆற்றுநீர் சுழித்துக் கொண்டோடும். . அந்தச் சுழலின் போக்குக்கு எதிராக நீந்தி யார் முதலில் யானைப் பாறையின் முகட்டுக்கு ஏறுகிறார்கள் என்பது தினம் தினம் எங்களுக்குள் போட்டி.


எந்த முயற்சியும் வேண்டாம். அந்தச்சுழல் பக்கம் லேசாக உடலைக் கொடுத்தால் போதும். பாறையைச் சுற்றி அது இழுத்துக் கொண்டு போகும் வேகத்தில், நீரில் அழுந்திய பாறையின் துருத்திக் கொண்டிருக்கும் ஏதாவது முனை பற்றி, பாறையின் பக்கவாட்டு பள்ளத்தில் கால் புதைத்து எழும்பி பாறை பற்றி ஏறி விடலாம். சில நேரங்களில் பாறையின் முதுகு கையில் படாமல் வழுக்குவதும் உண்டு. அந்த நேரங்களிலெல்லாம், ஆற்றின் சுழலின் போக்குக்குப் போய், இன்னொரு சுற்று சுற்றி வேறு பகுதியில் ஏற வேண்டும். சில நேரங்களில் பச்சை நிறம் படிந்த நீரின் அடி ஆழத்திற்குப் போய் விடுவதுண்டு.   ஆழத்திற்குப் போனால் மறக்காமல் ஆற்றின் அடி ஆழ மணலை உள்ளங்கையில் வாரி எடுத்து வெளியே வருவோம். நீரின் மேற்பரப்புக்கு வந்து மணலை வீசி வெற்றி வீரரகள் போல விளையாடுவதுண்டு.  இளம் வயதின் திகட்டாத கொண்டாட்டங்கள்.

ஒருதடவை இப்படித்தான் யானைப் பாறையின் பிடி கைக்கு சிக்காமல் வழுக்கி ஆற்றின் அடி ஆழத்திற்குப் போனவன், சுழலின் போக்குக்கே இழுத்துக்கொண்டு போய், தட்டுத்தடுமாறி எப்படியோ இன்னொரு பக்கம் பாறை பிடித்து மேலேறி விட்டேன். கால் வெடவெடவென்று நடுங்குகிறது. இப்படிப்பட்ட அனுபவம், இதற்கு முன் எப்போதும் ஏற்பட்டதில்லை. மறுபடியும் நீரில் குதித்துத்தான் கரைக்கு மீளவேண்டும். என்னைத் திடப்படுத்திக்கொண்டு தைரியத்துடன் நீரில் குதித்து சுழல் தாண்டி மீண்டேன்.

எனது வலது கை ஆயுள் ரேகையில் வெட்டிச்செல்லும் தீவுக்குறி ஒன்றுண்டு. பின்னாளில் என் கைபார்த்த ரேகை ஜோதிடர் ஒருவர், 'உங்களுக்கு பதிமூன்று-பதினாங்கு வயதில் கண்டம் ஒன்று வந்திருக்குமே' என்றார். நானும் இதுதான் அந்த கண்டம் போலும் என்று நினைத்துக் கொள்வதுண்டு.

இப்படிப்பட்ட இளமை நினைவுகளையொத்த இன்னொன்றைப் படிக்கும் பொழுதோ, கேட்கும் பொழுதோ, அந்த செய்தி தரும் இன்ப அனுபவத்தில் நமது முழு மனசும் ஒன்றித்திளைத்து வார்த்தைகளில் வடிக்க இயலா மகிழ்ச்சியளிக்கிறது.

மாறிச் செல்லும் கால வேகத்தில் கூட இளமைக்கால சில விளையாட்டுகள் எக்காலத்தும் மாறுதலற்ற நிலையானவை போலும்! இளையோர் ஆற்றில் குளிக்கையில், ஆற்றின் அடிச்சென்று கைநிறைய மணல் அள்ளி, தான் ஆற்றின் அடிஆழம் வரைச் சென்றதற்கு சான்று போல அந்த மணலை மற்றையோருக்குக் காட்டி மகிழ்வது சங்ககாலத்தில் கூட இருந்த ஒரு விளையாட்டு தான் என்று 'தொடித்தலை
விழுத்தண்டினாரி'ன் புறப்பாடலின் மூலம் நமக்குத் தெரிய வந்து வியப்பு மேலிடுகிறது...

தொடரும் இருமலுக்கிடையே, தமது இளமை நினைவுகளை எவ்வளவு அழகாக அந்த புலவர் பெருந்தகை நினைவு கூர்ந்திருக்கிறார் பாருங்கள்:


இனி நினைந்து இரக்கம் ஆகின்று; திணி மணல்
செய்வுறு பாவைக்குக் கொய் பூத் தைஇ,
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து,
தழுவுவழித் தழீஇ, தூங்குவழித் தூங்கி,
மறை எனல் அறியா மாயம் இல் ஆய்மொடு
உயர் சினை மருதத் துறை உறத் தாழ்ந்து,
நீர் நணிப் படி கோடு ஏறி, சீர்மிக,
கரையவர் மருள, திரையகம் பிதிர,
நெடு நீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
குளித்து மணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே! யாண்டு உண்டு கொல்லோ--
தொடித் தலை விழுத் தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இரும் இடை மிடைந்த சில் சொற்
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே?


(புறநானூறு--243)

இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் வருத்தம் மேலிடுகிறது
மணல் பிடித்துச் செய்த உருவிற்கு
கொய்த பூவைச் சூட்டியும்
பொய்கையில் இளம் பெண்களின் கைகோர்த்துக் களித்ததுவும்
அவர் தழுவும் பொழுது தழுவியும்
அசைந்தாடுகையில் அசைந்தாடியும்
ஒளிவு மறைவற்ற வஞ்சனையறியா
நண்பர் குழாமொடு விளையாடி மகிழ்ந்ததுவும்
மருத மரத்தின் உயர்ந்த கிளைகள் உயரம் தாழ்ந்து
நீரோடு படிந்தவிடத்து அக்கிளை பற்றி ஏறி
உச்சிக் கிளை அடைந்து
கீழே நிற்போர் வியக்க, அவர் மீது நீர் திவலை விழ
'தொடும்..' என நீரில் குதித்து, மூழ்கி
ஆழ் அடிச் சென்று அடிமணல் அள்ளிக் காட்டியும்
--- இப்படியான கள்ளமிலா
இளமைக்காலம் கழிந்து சென்றதுவே!
ஊன்று கோலை ஊன்றி, நடுக்கத்துடன்
இருமலுக்கிடையே சில சொற்கள் மொழியும்
முதியவனான எமக்கே
இனி எப்போது கழிந்த அக்காலம் வாய்க்கும்?...



இப்பாடலை இயற்றியவரின் பெயர் தெரியவில்லை.. ஆனால் அவர் தன்னைத் தானே வர்ணித்த கோலேந்திய அவரின் தோற்றம்,    இலக்கிய ஏடுகளில் அழியாது அவரை நினைவு படுத்தும் சொல்லாக---  'தொடித்தலை விழுத்தண்டினார்' என்று---அவரின் பெயராகவே ஆகிவிட்டது!

'சென்ற காலம் மீளாது இனி' என்பது சித்தர்களின் வாக்கு.  ஆனால் சென்ற காலம் நெஞ்சில் பதித்த தடங்களின் வடுக்கள் நிலையாக நினைவில் பதிந்தவை; குறைந்த பட்சம் எப்பொழுதாவது அமைதி வேண்டிடும் போதோ, அல்லது அமைதியாக இருக்கும் பொழுதோ அவற்றை நினைவுச் சுருள்களில் ஓட்டிப் பார்த்து மகிழும் பொழுது அடையும் இன்பமே அலாதி தான்!

அப்படி அடிக்கடி மகிழ்ச்சியில் ஆழ்வது இந்தக்காலத்துக்கே வாய்த்த 'டென்ஷனை'க் குறைக்கும் அருமருந்து என்பது மட்டும்  உறுதி.

Friday, June 12, 2020

யாயும் ஞாயும் யாராகியரோ?

ரு நெருங்கிய நண்பரின் மகளின் திருமணத்திற்குப் போயிருந்தேன். நான் அவர்கள் வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் நண்பரின் மகள் மிகப்பாசமாக என்னுடன் பழகுவாள். என் மகளின் வயதுதான் அவளுக்கும் இருக்கும்.

கல்யாண நிகழ்ச்சிகளெல்லாம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தன. திருமணத்திற்கு வந்திருந்த பெரும்பாலான நண்பர்களும், உறவினர்களும் சாப்பிட்டு விட்டுக் கலைந்து விட்டனர். இன்னும் சிறிது நேரத்தில் கல்யாணச் சத்திரத்தைக் காலி பண்ண வேண்டும்.

பெண் வீட்டார் தங்கியிருந்த அறையில், கல்யாணப்பெண் தன் பெற்றோரின் கைபிடித்துக் கண்கலங்குகிறாள். அவளுக்கு ஒரே ஒரு தங்கை. அவளின் இன்னொரு கை தன் தங்கையின் தலைவருடித் தடுமாறுகிறது. இத்தனை வருடங்கள் சீராட்டி, கொஞ்சிக் குலவி, தனக்குக் கல்யாணப் பேற்றை அளித்த பெற்றோரைப் பிரிந்து, வேறொரு வீட்டுக்குச் சென்று வாழ வேண்டுமே என்கிற தடுமாற்றம்..  பாசம் என்பது இறுக்கிக் கட்டிய கயிறு போன்றது. அதை லேசில் படாரென்று அறுத்துக் கொண்டு செல்ல இயலாது.. கட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தித்தான் விடுபட வேண்டும்.

பெண்களாய்ப் பிறந்தவர் சுமக்க வேண்டிய பாரத்தை நினைத்தால் கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது. பாட்டியாய்,தாயாய், தமக்கையாய், தங்கையாய், தாரமாய், மருமகளாய், மாமியாராய் பெண்களைத் தொட்டு, ஓ... எத்தனை உறவின் மேன்மைகள்....ஒளி பட்ட இடத்திலிருந்து பிரகாசிக்கும் வைரப் பளீரிடலகள்!...

பெண்களும் மிக லேசாய், இலகுவாய் இந்த பெரும் பாரத்தைப் புரட்டிப்போடும் லாகவம், ..   அந்த மிருதுவான கைகளுக்கும்,தோள்களுக்கும் இந்தப் பாரம் பஞ்சாக மாறிப்போகும் விநோதம் தான் படைப்பின் ரகசியம்!

அந்தக் கல்யாண தினத்தன்று என் நண்பர் தன் மகளை, மாப்பிள்ளை வீட்டார் தங்கியிருந்த அறைக்கு, மனைவி-மாமன் மக்களோடு அழைத்துச் சென்று அவர்களிடம் விட்டுவிட்டுப் போகும் பொழுது, கண்கலங்கித் தன் சம்பந்தியிடம், "ஸார்...அவளுக்கு ஒன்றும் தெரியாது...குழந்தை மனசு. அப்படியே வளர்ந்து விட்டாள்..நீங்கள் தான் தந்தையாய்..தாயாய்.." என்று தழுதழுத்த பொழுது, அருகிலிருந்த எனக்கு நெஞ்சம் கனத்து என்னவோ போலாகிவிட்டது.

அவரது சம்பந்தி,"அதெல்லாம் ஒன்றும் கவலைப்படாதீர்கள்..   என்றைக்கு எங்கள் வீட்டிற்கு வந்து விட்டாளோ, இனி அவள் எங்கள் மகள்..."என்று சொன்னதும், வழிவழியாய் வழக்கமாய்---

--- பெண்ணைப் பெற்றவர்களாலும், இன்னொரு வீட்டு மருமகளாய் பெண்ணை அனுப்பியவர்களாலும் தான் இவற்றையெல்லாம் உணர்வு பூர்வமாக உணரமுடியும் என்று தோன்றுகிறது...

போனவாரம் நண்பர் போன் போட்டு எனக்குச் சொன்னார்: "பிரமிளா வந்திருக்காடா...  உங்களையெல்லாம் பார்க்கணும்ங்கறா...நீயும், தங்கையும் (என் மனைவியும்) வந்திடுங்க..சாப்பாடு இங்கே தான்..என்ன, தெரிஞ்சதா?" என்று உத்திரவு போடுகிற மாதிரிச் சொன்னார்.

நானும் மனைவியைக் கூட்டிக்கொண்டு நண்பர் வீட்டிற்குச் சென்றேன். ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டபடியால், பிரமிளாவைப் பார்க்க வேண்டும், நல்ல சேதி சுமந்து வந்திருக்கும் அவளுடன் பேசவேண்டுமென்று எங்களுக்கும் மிகுந்த ஆசை.

வாசலில் நாங்கள் செருப்பைக் கழட்டிப் போடும் போதே ஓடி வந்து எங்களை அன்புடன் உள்ளே அழைத்துச் சென்றாள் பிரமிளா...கொஞ்சம் சதை போட்டிருந்தாள்; முகத்தில் களையும், கலகலப்பேச்சும்----

சாப்பிடும் போது, தன் அம்மாவிடம் அவள் சொன்னதை அப்படியே இங்கு எழுதியிருக்கிறேன்.. "அம்மா!...எங்க வீட்லே வழக்கமா இட்லிதான் காலை டிபனுக்கு.. தொட்டுக்க சட்னியும், ஏதாவது பொடியும் செஞ்சிடுவேன்.. இவருக்கு தோசைன்னா, அப்பா--அம்மாக்கு இட்லினா, இஷ்டம்! அதனால், முதல் நாள் மாவை----"

-- இங்குதான் பெண் என்பவள் ஜொலிப்பதாக எனக்குப் பட்டது. 'இதுதான் வாழ்க்கை நியதி..இதுதான் சாஸ்வதம்' என்று தன் கணவனின் தாய் தந்தையரை,'அப்பா--அம்மா' என்று அழைக்கிற மாதிரி, எவ்வளவு இயல்பாக உறவுகள் மாறிவிட்டன, பார்த்தீர்களா?..


வியப்புடன், புருவமுயர்த்தி தொடுக்கும் இந்தப் பெண்ணின் அழகு வரிகளைப் பாருங்கள்!

"யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப்பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே."

(குறுந்தொகை:40)

யாய்  என்றால்  என் தாய் என்று அர்த்தம்.   ஞாய் என்றால் உன் தாய்.   எந்தை என்றால்  என் தந்தை,  நுந்தை என்றால் உன் தந்தை என்பதைப் புரிந்து கொள்வதில் சிரமமில்லை.

எவ்வளவு  எளிய வார்த்தைகளில்   கணவன் - மனைவி உறவின் தாத்பரியத்தின் சரித்திரமே சொல்லப்படுகிறது பாருங்கள்:


என் தாயும்  உன்  தாயும்  ஒருவருக்கொருவர் யாரென முன்பே தெரியாதவர்கள்.   அதே மாதிரி தான் என் தந்தையும் உன் தந்தையும்  தங்களுக்குள் இந்த உறவுக்கு முன் அறிமுகமற்றவர்கள்.  அவ்வளவு  தூரம் போவானேன்?.   நாம் இருவருமே  ஒருவருக்கொருவர் முன்னமேயே அறியாதவர்கள்.   ஆனால்  நம் இருவர் நெஞ்சங்கள்?..   ஒன்றை ஒன்று அறிந்து கொண்ட வாக்கில்  பின்னிப் பிணைந்து போனதுவே   என்று  பெண் மருகுகிறாள்.  அந்தப் பின்னிப் பிணைதலுக்கு   செம்புலப்பெயல் நீர் போல  என்று ஒரு உதாரணத்தை புலவர்  கையாண்ட  நேர்த்தி  தமிழ் இலக்கியத்தில்  மறக்கவொண்ணா உதாரணமாய் பதிந்து போயிற்று.

சோவென்று மழை  தாரை தாரையாய் பெய்து  செம்மண் நிலம் பூராவும் விரவிப்  பெருகுகிறது.   நிறம் இல்லா நீர் செம்மண்ணில் ஒன்றரக் கலந்ததும்  மண்ணின் செம்மை நிறத்தை தான் உள்வாங்கி பூசிக் கொள்கிறது.  நீரின் நெகிழ்வுத் தன்மை நிலத்தில்  ஊடுறுவி  நிலமே  நெகிழ்ந்து போகிறது.   இதில் எது நீர், எது  நிலம் என்று பிரித்துப்  பார்க்கவியலாத பிணைப்பு இது.   இந்தப் பிணைப்பை தலைவன்--தலைவி  நெஞ்சப் பிணைப்புக்கு  உதாரணமாக்குகிறார்  புலவர்.

'இந்தச் செம்புலப்பெயல் நீர் போல' உவமையை சிலாகித்து, அதற்கு வெவ்வேறான விளக்கங்கள் கூறி எத்தனையோ பேர் எழுதிவிட்டார்கள்! அதனால், மற்ற வரிகள் கிளர்த்தும் தொடர்பான சிந்தனைகளில் மனம் போய்விட்டது..

இந்த அற்புதமான பாடலை எழுதிய புலவரின் பெயர் கூட அறிய முடியாமல் போய்விட்டபடியால், அவர் பெயரையே "செம்புலப்பெயனீரார்" என்று வழங்கும் படி ஆயிற்று!

எட்டுத்தொகை நூல்களில்  அடங்கிய ஒரு தொகை நூல் குறுந்தொகை.    எட்டு வரிகளுக்குள் அடங்கிய  391 பாடல்கள் குறுந்தொகையில் நமக்குக் கிடைத்திருக்கின்றன.  205 புலவர்களின்  பாடல் தொகுப்பு இது.  காதல் வாழ்வின் அகப்பொருள் இன்பத்தை  அள்ளித் தெளிக்கும் பாடல்கள் அத்தனையும்.   தமிழர் தம்   பண்டைய பெருமிதங்களில்  ஒன்றாய்  இன்றும் நம்மைக்  கிளர்ச்சியடையச் செய்யும்  மயக்க வரிகளை உள்ளடக்கிய அற்புதம்  குறுந்தொகையில்  நிகழ்ந்திருப்பதை அனுபவபூர்வமாக உணரலாம்.

Wednesday, June 3, 2020

உயிரில் கலந்து உணர்வில் ஒன்றி....

மேட்டுப்பாளையத்திலேயே லேசான சிலுசிலுப்பு ஆரம்பித்து விட்டது, மனசுக்குள் உற்சாகத்தை உலுப்பி விட்ட மாதிரி இருந்தது.

"உமா.. இரண்டு எலுமிச்சம்பழம் வாங்கிக்கட்டுமா?" என்றான் உமாபதி. பஸ் நிலையத்தின் வெளிப்பக்க மூலையில் ஒரு கிராமத்து பாட்டி கோணியில் குவித்து வைத்திருந்த மஞ்சமஞ்சேரென்ற பழங்களைப் பார்த்த்தும் தான் அவனுக்கு இந்த நினைப்பு வந்தது.

"எதுக்கு?" என்று கேட்கிறமாதிரி உமா வில்லாக புருவங்களை வளைத்தாள்.

"மேட்டுப்பாளையம் தாண்டியவுடனேயே ஆரம்பித்து விடும். வழிபூரா வளைந்து வளைந்து ஹேர்-பின் பெண்ட்ஸ்" என்றவன், அவளுக்கு மிக நெருக்கத்தில் வந்து "அதுக்கும் எலுமிச்சைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறாயா?" என்றான்.

"உவ்வே தானே?" என்று அவள் முகத்தை இயல்பாக சுளித்துக் காட்டிய பொழுது, அவளை அப்படியே அள்ளி எடுத்து பஸ் நிலையம் என்றும் பாராமல் ஒரு சுற்று சுற்றலாம் போலிருந்த்து உமாபதிக்கு. அறிவுக் கொழுந்து தான். ஒரு விஷயத்தை சுட்டி பேசினதுமே, எப்படிப் பாயிண்ட்டைப் பிடிக்கிறாள் என்று அவனுக்கு ஆச்சரியம். இப்படிப்பட்ட ஒரு மனைவி கிடைத்ததில் பெருமை.

"அதெல்லாம் எனக்கு வராது.. கொடைக்கானலில் இருந்திருக்கேன் இல்லையா, இந்த சுத்தல் எல்லாம் எனக்குப் பழக்கப்பட்டது தான்" என்றாள்.

"எதுக்கும் வாங்கிக்கறேன். எனக்கு சும்மாக்காச்சும் கையிலேயாவது வச்சுக்கணும்" என்ற உமாபதி பாட்டி கேட்ட காசைக் கொடுத்து இரண்டுக்கு நாலாகவே வாங்கிக் கொண்டான்.

"உமா.. வாங்க.. பஸ்ஸை எடுக்கப் போறான் போலிருக்கு.." என்று ஒரு சினிமா போஸ்டரைப் பார்த்து தயங்கி நின்றவனை அவசரப்படுத்தினான் அவள்.

"அதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் எடுத்திடமாட்டான். இன்னும் டிக்கெட்டே சேரலே.. எடுக்கற மாதிரி, ஒரு 'பாவ்லா'; அவ்வளவு தான். உமா, நீ என்ன செய்றே?.." என்று ஏதோ சொல்ல வாயெடுத்தவன், அவளைப் பார்த்து சிரித்தான்.

"என்ன, உமா?.." என்று அவள் திகைக்க, "எஸ்.. இதான்.. இதான்.." என்று சொல்லி மீண்டும் சிரித்தான்.

எதற்குச் சிரிக்கிறான் என்று தெரியாமல் அவள் விழித்தாள். "எதற்கு உமா இந்த சிரிப்பு?" என்றவள் கைபிடித்து அழுத்தினான். "என்னப் பொருத்தம், இந்தப் பொருத்தம்'னு ஒரு சினிமா பாட்டு இருக்குலே, அது போல இருக்கு, நம்ம பொருத்தம்", என்று மீண்டும் சிரித்த பொழுது அவளுக்குப் புரிந்து விட்டது.

"நீயும் என்னை 'உமா'ன்னு கூப்பிட, நானும் உன்னை 'உமா'ன்னு கூப்பிட பாக்கறவங்க, என்னாடா இது சரியான பைத்தியங்களா இருக்குன்னு நெனைக்கப் போறாங்க.."

"அதுக்கு என்ன செய்யறது?.. அத்தனைப் பொருத்தங்களோட, இப்படிப் பெயர் பொருத்தமும் அமைஞ்சிடுச்சி... இவங்களுக்காக பெயரையா மாத்திக்க முடியும்?"

"ஒண்ணு செய்யலாம். உன் பேரை ஒண்ணும் செய்ய முடியாது .. என் பேரை.. ஆங்.. என்னை நீ இனிமே, 'பதி'ன்னு கூப்பிடேன்"

"குட்.. பதியே.. பிராணநாதா.." என்று அடக்கமுடியாமல் சிரிப்பை அடக்கிக் கொண்டு உமா கூப்பிடச் சிரித்தான் உமாபதி.

இந்தப் புதுமணத் தம்பதிகளே இப்படித்தான். பெரிசா விஷயம்னு எதுவும் வேண்டாம். எதை ஒட்டியும் சிரிப்புத்தான்.  எதைப் பார்த்தாலும் புதுசு தான்.

போனவாரம் கல்யாணம். இப்போ ஹனிமூனுக்கு ஊட்டி. நேரே குன்னூர் போய் சிம்ஸ் பார்க்கில் ஒரு சுற்று சுற்றி சாயந்திரம் ஊட்டியில் பிரபல ஹோட்டல் ஒன்றில் அடைக்கலம் ஆகி, அதைத் தொடர்ந்து நாலு நாளைக்கு ஊட்டியில் தான்; ஒத்தகமந்துவில் தான்; உதகையில் தான்.

நிஜமாகவே பஸ்ஸை எடுத்து விட்டான். ஓடிவந்து ஏறிக் கொண்டவர்கள் முதலிலேயே குறித்து வைத்திருந்த ஜன்னலோர சீட்டில் அமர்ந்து கொண்டார்கள்.

உமாபதி சொன்னது சரிதான். மேட்டுப்பாளைய மலை அடிவார எல்லை தாண்டியவுடனேயே, சுற்றிச் சுற்றி மேலேறும் மலை வளைவுச் சுற்றுகள் ஆரம்பித்து விட்டன. ஒவ்வொரு நீண்ட திருப்பத்துக்கும் சீட்டின் இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் பயணிகள் 'சாய்ந்தாடம்மா, சாய்ந்தாடு' என்று அலைக்கழிக்கப் பட்டார்கள்.  
                                             
உமாபதியும், உமாவும் அமர்ந்திருந்தது இருவர் அமரும் இருக்கை ஆதலால் இந்த சாய்தல் அவர்களிடையே உள்ளார்ந்த ஒரு சந்தோஷத்தைத் தான் கொடுத்தது. அதுவும் புதுமணத் தம்பதிகளாதலால், போகப்போக சந்தோஷம் கிளர்ச்சியாக உருமாறியது. பதியின் பரந்த தோளில் மெதுவாகச் சாய்ந்து கொண்ட உமா, பயணசுகத்தை மனசார அனுபவிக்கத் தொடங்கினாள்.


கல்லார் வந்ததும் பஸ்ஸைச் சுற்றி பழங்கள் விற்போரின் கூப்பாடு கேட்டது.

"பழம் வாங்கிக்கலாமா, உமா?"

"உம்.."

இப்பொழுதும் வயசான ஒரு பாட்டியிடம் தான் ஜன்னல் வழியாகவே கைநீட்டி, வால் பேரிக்காய்களும், குட்டி ஆப்பிள்களும் வாங்கிக் கொண்டான். பாட்டி அவற்றைத் தனித்தனியே காகிதப் பைகளில் இட்டுத் தந்தது உமாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. சுற்றுப்புறச் சூழலைக் காக்கும் உணர்வு இவ்வளவு தூரம் மலையேறி வந்ததில் மனசுக்குள்ளேயே சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.

வழிபூராவும் இயற்கை அன்னை மலர்ந்து சிரித்து தன் மடியை விரித்திருந்தாள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைப் பசேல். பலா மரங்கள் சுமக்க மாட்டாத சுமையுடன் பழங்களைச் சுமந்து கொண்டு நிமிர்ந்து நின்றிருந்தன. குட்டிகள் மாரில் கவ்வியிருக்க மரத்திற்கு மரம் தாவிக்கொண்டிருந்த குரங்குக் கூட்டங்களைப் பார்த்துக்
கொண்டாட்டமாக இருந்தது உமாவுக்கு. பாதை மலைச்சரிவுகளுக்கிடையே சலசலத்த சுனைகளின் தோற்றம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

லேசான முணுமுணுப்புக்கள் மாதிரி ஏதேதோ அவர்கள் பேசிக்கொண்டு வருகையிலேயே, குன்னூர் வந்துவிட்டது. 'மலைகளின் ராணி வரவேற்கிறாள்' என்று இங்கேயே ஆரம்பித்து விட்ட வரவேற்பை ஏற்றுக் கொண்டு, பஸ் குன்னூருக்குள் நுழைந்தது.

இறங்கியதும், "ஏதாவது சாப்பிட்டு விட்டு, மேற்கொண்டு போகலாமா?" என்று உமாவிடம் கேட்டான் உமாபதி.

"சிம்ஸ் பார்க்குக்கு எப்படிப் போகணும்?"

"இந்த இடம் கீழ்க்குன்னூர். பார்க் மேல்குன்னூரில் இருக்கிறது. இதோ இந்த மலைப்பாதை வழியே மேலேறிப் போக வேண்டும். மேலே போனால், காடு மாதிரி பிர்மாண்டமான பூங்கா. நாம் தனிவண்டிலே போகலாம். அதுக்கு முன்னாடி ஏதாவது லைட்டா ஹோட்டலில் சாப்பிட்டுப் போகலாம்."

"சரி.." என்று தலையசைத்தாள் உமா. ஒரு சின்ன சூட் கேசும், பழங்கள் ஸ்நாக்ஸ் அடங்கிய ஜோல்னாப் பையும். ஜோல்னாப் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு சூட்கேஸைத் தூக்கிக் கொண்டான் உமாபதி.

"நீங்களே ஏன் இரண்டையும் சுமப்பானேன்?" என்று அவனிடமிருந்து ஜோல்னாப் பையை வாங்கிக் கொண்டு தன் தோளுக்கு மாற்றிக் கொண்டாள் உமா.

"கொஞ்ச தூரம் தான். அதோ இருக்கே, ரயில்வே ஸ்டேஷன்.. அதுக்கு முன்னாடியே ஒரு பெரிய ஹோட்டல் இருக்கு.." என்று நடந்தான் உமாபதி.

ஹோட்டல் அந்த மலைப்பகுதி சாயலில் கொஞ்சம் விஸ்தாரமாகவே இருந்தது. சிற்றுண்டி சாப்பிட்டார்கள். அதுவும் இரண்டு வகை வரவழைத்து, இதில் பாதி அதில் பாதி என்று இரண்டு வகைகளையும் இரண்டு பேரும் மாற்றிக் கொண்டு சுவைத்தார்கள். "கூல் டிரிங்க்ஸ் ஏதாவது சாப்பிடலாமா?" என்றாள் உமா.

"ஓ.." என்று அவள் சொன்னதிற்கு 'ஓ' போட்டுவிட்டு, வழங்குபவர் வந்ததும், ஒரே ஒரு கூல்டிரிங்கை வரவழைத்தான். வழங்குபவரும் புரிந்து கொண்டு பெரிய அளவு கண்ணாடிக் கோப்பையில் குளிர்பானத்தை நிரப்பி இரண்டு ஸ்ட்ரா போட்டு எடுத்து வந்தார்.

"என்னங்க, இது?.. யாராவது பார்த்தா என்னவாவது நெனைச்சுக்கப் போறாங்க.." என்று பதியிடம் கிசுகிசுத்தாள் உமா.

"கணவன்-மனைவி சேர்ந்து வந்தால், இங்கெல்லாம் இதான் வழக்கம். நான் என்ன இரண்டு ஸ்ட்ராவா கேட்டேன்?.. அந்த சிப்பந்தியே புரிந்துகொண்டு இரண்டு கொண்டுவரவில்லை?" என்று ஒரு ஸ்ட்ராவில் உதடைப் பொருத்தினான் உமாபதி. "இன்னொண்னு உனக்கு.." என்று இன்னொரு ஸ்ட்ராவை அவள் பக்கம் திருப்பி வைத்தான்.

இந்தப் பக்கம் அந்தப் பக்கம் பார்த்தபடியே லேசான நாணத்துடன் இன்னொரு ஸ்ட்ராவைக் கவ்வினாள் உமா. முகம் நெருங்கிய நெருக்கத்தில் அவளைப் பார்க்க இரக்கமாக இருந்தது உமாபதிக்கு. 'நல்ல புத்திசாலியான பெண்; வாழ்க்கை பூராவும் கூட வரப்போகிறவள். கொஞ்சம் பூஞ்சைதான்; நிறைய வாங்கிக் கொடுத்துத் தேற்ற வேண்டும்' என்று எண்ணிக் கொண்டான். 'பாவம், எவ்வளவு பரிவுடன் இருக்கிறார்.. என்மேல் தான் எவ்வளவு ஆசை. பார்த்துப் பார்த்து எல்லாம் பண்ணிப்போட்டு நிம்மதியாக வைத்துக் கொள்ள வேண்டும்' என்று நினைத்துக் கொண்டாள் உமா.

கொஞ்ச நேரம் கழித்து ஏதோ அவளிடம் சொல்ல உமாபதி தலைநிமிர்ந்த பொழுது, வைத்த குளிர்பானம் கொஞ்சம் கூடக் குறையாமல் அப்படியே இருந்தது. "என்ன நீ குடிக்கவில்லை?" என்று அவளைப் பார்த்துத் திகைத்தான் உமாபதி. "வெட்கமா இருந்தா தனியா இன்னொண்னு வரவழிச்சுடலாமா?"

"வேண்டாம்.. வேண்டாம்" என்று அவசரமாக மறுத்தவள், "அட! நீங்களும் குடிக்கவில்லையா?" என்று அவனைப் பார்த்து நமுட்டுச்சிரிப்பு சிரித்தாள்.

இரண்டு பேருக்கும் இப்போது புரிந்தது. 'பாவம், இவன் குடிக்கட்டும்' என்று ஸ்ட்ராவில் அவள் உறிஞ்சாமல் இருக்க, அரும்பு கட்டியிருந்த அவள் நெற்றி வியர்வை பார்த்து 'பாவம், குளிரக் குளிர இவள் குடிக்கட்டும்' என்று அவன் ஸ்ட்ராவோடு உதடு மட்டும் உரச சும்மா இருக்க, கடைசியில் இரண்டு பேருமே உறிஞ்சாமல் கண்ணாடிக் கோப்பையில் குளிர்பானம் குறையாமல் வைத்தது வைத்தபடி இருக்க,... சிரிக்கத்தான் வேண்டும்!...

பார்த்துப் பார்த்து பரிதாபிக்கும் இந்த புருஷன் பெண்டாட்டி தம்பதிப் பிரியம், ஒருவரின் மேல் ஒருவர் வைத்திருக்கும் கரிசனை, அன்பு, ஆசை இன்னும் என்னன்னவோவெல்லாம், இன்று பார்ப்பது கூட காலங்காலமாய் தொடர்ந்துவரும் சங்கிலித் தொடரின் இன்றையக் கண்ணிதான்.

இதில் வேடிக்கை என்னவென்றால், மெத்த விஷயங்கள் தெரிந்தவர் என்று பீற்றிக்கொள்ளும் மனிதர்களை விட்டுத்தள்ளுங்கள்...

இந்தப் பரிவையும், பாசத்தையும் படம் பிடித்துக் காட்டும் சங்ககால இந்தக் காட்சிதான் நம்மை பரிதவிக்கச் செய்கிறது.

சின்ன குட்டைதான் அது. குட்டை என்று கூடச் சொல்ல முடியாது. ஏதோ கொஞ்சமே நனைந்த பிரதேசம். அந்தச் சின்னத் தேங்கலில் சிறிதளவே நிறைந்திருக்கும் நீர். அதுவும் லேசாகக் கலங்கியிருக்கிறது.

வெளிவெப்பத்தின் தாக்கம் நாவை வரளச் செய்கிறது. மருண்டு மருண்டு வந்த மான் ஜோடி ஒன்று, இந்தக் குட்டை நீரைப் பார்த்தும், இன்னும் நா வரள சேர்ந்து ஓடிவருகின்றன. வந்த இரண்டும் நீர் நனையும் இடத்தில் கால் பதித்துத் தலை குனிகின்றன.

"சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் -- கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.

--ஐந்திணை ஐம்பது (பாலைத்திணை)

அவை இரண்டும் ஆணும் பெண்ணுமான கலைமானும், பிணைமானும். நடந்தது இது தான். நா வறட்டும் தாகத்தில் தண்ணீர் கண்ட சடுதியில், ஓடிவந்து இரண்டும் தண்ணிரில் வாய் வைத்தன. வைத்ததும் தான், ஆண்மானுக்கு அந்த உணர்வு வந்தது. 'அடடா! இருக்கும் நீரே குறைச்சலாயிற்றே; இத்துனூண்டு இதை நான் அருந்தி விட்டால், தன் துணையான பிணைமானுக்கு நாவறட்சி தீர அருந்துவதற்கு போதிய அளவு நீர் கிடைக்காமல் போய்விடுமே என்று பதறி அருந்தாது நின்றதாம். அடுத்தாற்போல் அதற்கு வந்த நினைப்பு தான் அற்புதம்.
தான் அருந்தாமல் இருந்தால் தன் துணையும் அருந்தாமல் போய்விடும் என்று தண்ணீரில் வாய் மட்டும் வைத்துக் கொண்டு அருந்தாமல் அருந்துகிற மாதிரி பாவனை செய்ததாம். ஆண்-பெண் அன்பை இதைவிட மேலாகப் படம்பிடித்துச் சொல்லமுடியுமோ என்று வியக்கிறோம்.

அது என்ன ஐந்திணை? குறிஞ்சி, முல்லை,மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து வகைப்பட்ட நிலப்பரப்புகளுக்கு ஏற்பனவாக ஐந்து வகையான திணைகளாகப் பிரித்துச் சொல்வது தமிழர் மரபு. வெவ்வேறு நிலைகளில் வெளிப்படும் மனப்பாங்குகளை அததற்கான திணைகளில் ஏற்றிச் சொல்வது பழந்தமிழர் சிறப்பு.

அது என்ன ஐம்பது கணக்கு?.. ஒவ்வொரு திணைக்கும் பத்துப் பாடல்கள் என ஐந்து திணைக்கும் ஐம்பது பாடல்களைக் கொண்டதால், ஐந்திணை ஐம்பது.

இந்த ஐந்திணை ஐம்பது   பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள்  ஒன்று. சங்கம் மருவிய காலத்தது. காதலரின்   ஒழுக்கம் பற்றிக் கூறும் அகப் பொருள் கீழ்க்கணக்கு நூல்.    இதை இயற்றியவர் மாறன்  பொறையனார் என்னும் புலவர் பெருமகனார்.

Monday, May 18, 2020

EVEN IF--ம் இந்திரர் அமிழ்தமும்

ரு பிரபலத் தொலைக்காட்சியில் பேராசிரியர் ஒருவர் ஆங்கில மொழிக்கான  இலக்கணப்பாட  வகுப்புகளைத்  தொடர்ச்சியாக   எடுத்துக் கொண்டிருந்தார்.   சென்னை  தி.நகரில்,   சுலபமாக ஆங்கிலம் கற்பதற்காக பயிற்சி வகுப்புக்களைக் கொண்ட டூடோரியல் பள்ளி ஒன்றையும்  மிகப் பிரமாதமான முறையில் அந்தப் பேராசிரியர் நடத்தி வருகிறார்.

 அந்தப் பேராசிரியரின் பாடம் நடத்தும் ஆற்றலில் கவரப்பட்டு,  அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தவறாது பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் அவரது  தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ----

If- என்னும் ஆங்கில Conjunction சொல்லின் தொடர்பாகப் பயன்படுத்தும் வார்த்தைகளை விவரமாக விளக்கப்புகுந்தவர்,  "EVEN IF" என்ற வார்த்தையை எந்த நேரத்து எப்படியெல்லாம்  உபயோகப்படுத்தலாம் என்பதைச்  சொல்லிக்  கொண்டிருந்தார்.

Even if it is thunder strom, I will attend the programme.
Even if you provide $1000, I will not do that job.

இடி இடித்துப் புயல் வீசினும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன்.
ஆயிரம் டாலர் பணம் தந்தாலும், அந்தக் காரியத்தைச் செய்யமாட்டேன்.

'Even if' என்கிற வார்த்தையை  உபயோகப்படுத்துதலில் இன்னும் பல உதாரணங்களைச் சொல்லி   மிக அழகாக   அந்த நிகழ்ச்சியைப்  பார்க்கும் சிறார்களின் மனத்தில் படியும்படி பாடத்தை நடத்திக் கொண்டிருந்தார்.          
தீர்மானமாக, உறுதிபட செயல்பட முடியாது என்று முடிவெடுக்கையில், இந்த 'Even if' வரும்;

அதே மாதிரி எதுவரினும் செயல்படுவேன் என்கிற இடத்தும் இந்த 'Even if' ஒட்டிக்கொண்டு ஓடோடி வரும்.

'EVEN IF'--ன்  மாறுபட்ட எதிர் எதிரான இரண்டு உபயோகிப்புக்கள் இவை.

இந்த 'Even if'-ஐ தொலைக்காட்சியில் அந்தப் பேராசிரியர் விளக்கிக் கொண்டிருக்கையில், கண்கள் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்க, மனமோ தறிகெட்டு சங்க காலத்திற்குப் பறந்தது. கண்கள் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதியை நினைத்துப் பனித்தன!

வழுதி என்கிற வழக்கிலேயே அவன் பாண்டிய மன்னனென்று தெரிகிறது. பெருவழுதி எப்படி இறந்திருப்பான்?.. எதிர்பாராத இறப்பு மாதிரி தான் தெரிகிறது, அவன் எந்தப் பெருவழுதி என்று குறிப்பிட்டுச் சொல்வதற்காக சுட்டப்படுவது, 'கடலுள் மாய்ந்த' என்னும் குறிப்புச் சொற்றொடர்!

கடல் கடந்து படையெடுத்துச் சென்று வெற்றிவாகை சூடுவது, அன்றைய தமிழக மன்னர்களுக்கு இயல்பான ஒரு செயலாக இருந்தது. "கடாரம் கொண்டான்" என்று கடல கடந்து சென்று கடார நாட்டை வெற்றி கொண்டதைக் குறித்துச் சொல்லும்படி இராஜராஜ சோழனைக் குறிப்பிடுவதிலிருந்து, இந்த மாதிரி கடல் தாண்டிய போருக்கெல்லாம், தாங்களே தலைமை தாங்கிப் படை நடத்திச் சென்று வென்றிருக்கிறார்கள் தமிழக மாவேந்தர்களென்று தெரிகிறது! அப்படி ஒரு படையெடுப்பின் பொழுதுதான் இந்த பெருவழுதி கடலுள் மரக்கலம் கவிழ்ந்து மாய்ந்து விட்டானோ?...கடலுள் மாய்ந்த இந்த பெருவழுதி, இளம் வயதுடையோன் என்றுக் குறிக்க இளம் பெருவழுதியோ?..

--என் நினைவுகள், பரிதாபச் சூழலில் முக்கித் தவித்தன.

எவ்வளவு புலமை?..எவ்வளவு சிந்தனைச் சிறப்பு?..எவ்வளவு குண மேன்மை?..இவன் யாத்ததாக புறநானூற்றில் ஒரு பாடல்தான் இன்று நமக்குப் படிக்கக் கிடைக்கப்பெறினும், அந்த ஒரு பாடலே ஓராயிரம் அர்த்தங்களை நமக்குச் சொல்லி நானூற்றில் நட்சத்திரமாக ஒளிவிடுகிறது!...பண்டைய தமிழன் தலை நிமிர்ந்து நிற்க முற்றிலும் தகுதியுடையோன் என்று பறைசாற்றும் இப்படிப்பட்ட அட்டகாசமான பாடல்களை வாசிக்கும்
நேரத்து உள்ளம் விம்மி களிப்பெய்துகிறது!..

"உண்டால் அம்ம, இவ்வுலகம் -- இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும், 'இனிது' எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி
புகழ் எனின், உயிரும் கொடுகுவர்; பழியெனின்
உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகி
தமக்கு என முயலா நோன் தாள்,
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே"

(புறநானூறு--182)

திணை--பொதுவியல். துறை--பொருள்மொழிக்காஞ்சி

அமுது கிடைப்பினும் இனிது எனத்
தான் மட்டும் உண்ணார்; பிறரை வெறுத்தலும்
சோம்புதலும், மனச்சோர்வும் அறியார்
புகழ் என்றால் உயிரையே கொடுப்பர்
பழி என்றால் இந்த உலகையே
பரிசாகக் கொடுத்தாலும் பெறார்.
தனக்கென்றால், வலிந்து எந்த முயற்சியிலும் ஈடுபாடாதார்,
பிறர்க்கென்றால், எதையும் முயன்று செய்து கொடுக்கும் தன்மையுடையோர்.....

---'இப்படிப்பட்டவர் இருக்கையினால் தான், ஐயா, 'உண்டால் அம்ம இவ்வுலகம்'---இந்த உலகம் இருக்கிறது'  

---  என்று பிரகடனப்படுத்துகிற வகையில்,பாடலின் முழு அழுத்தத்தையும்
முதல் வரியில் கொண்டு போய்ச்சேர்த்து முடிக்கும் கவி அரசனின்  மாசுமறுவற்ற உள்ளமும்  மொழியை தான் சொல்ல வந்ததற்கேற்ப   வளைத்துக்  கையாண்ட அவனது மொழியாற்றலும்    சிலிர்ப்பேற்படுத்துகிறது!...

"இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத் தமியர் உண்டலும் இலரே"-- என்கிற வரிக்கு, "Even if"--என்னும் ஆங்கில Conjunction- வார்த்தையைப் பொருத்திப் பார்த்து உள்ளம் மகிழ்கிறது.

அமிழ்தம் எப்படிப்பட்ட உச்சகட்டச் சிறப்பு உடைத்து என்பது தெரியும்; அந்த அமிழ்தமே கிடைக்கப்பெறினும்,  தான்மட்டும் தனியே உண்ணமாட்டார்களாம்!

"Even If"--என்ன அருமையாக இங்கே பொருந்துகிறது, பாருங்கள்!

Sunday, April 19, 2020

தமிழ் பத்திரிகைகளின் வாசிப்பு அனுபவம் -- கலந்துரையாடல்

  வாசிக்க:       https://jeeveesblog.blogspot.com/

1.  நெல்லைத் தமிழன்:

நல்ல ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். சொல்ல வந்த கருத்தும் சுளீர் எனத் தாக்குகிறது. வெகுஜனப் பத்திரிகை எழுத்தாளர்களைத் தாண்டி நான் வாசித்ததில்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர பெரும்பாலும் வாசித்ததில்லை. இதெல்லாம் ஒருபுறம் இருக்க வாசகன் இலக்கியத்தை அருதியிட முடியும், ஆனால் அது மெஜாரிட்டி வாசகர்களாக இருக்க வேணும் என்பது அவசியமில்லை. வெகுஜன ரசிப்பு என்பதை மட்டும் கணக்கில் கொண்டால், நமக்கு சகலகலாவல்லவன், காலா தர்பார் போன்ற படங்களே சிறந்த சினிமாக்கள் விருது பெறுவதைப்போல் ஆகிவிடும்.

பதில்:

மனம் திறந்த வெளிப்பாடுகள்.

அந்த குறிப்பிட்ட எழுத்தாளர்களை இந்தத் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றே ஒவ்வொருவராக எழுதிக் கொண்டு வருகிறேன்.    வாய்ப்பு கிடைக்கும் பொழுது என் தளத்தில் வாசியுங்கள், நெல்லை.

 //இதெல்லாம் ஒருபுறம் இருக்க வாசகன் இலக்கியத்தை அருதியிட முடியும், ஆனால் அது மெஜாரிட்டி வாசகர்களாக இருக்க வேணும் என்பது அவசியமில்லை... //

பத்திரிகை, வாசிப்பு பழக்கம் உள்ள எனக்குத் தெரிந்த பதிவுலக நண்பர்களுக்காக நான் சொன்னது அது.    'சுஜாதாவோடு நின்று விடாதீர்கள். அது உங்கள் வாசிப்பபு வளர்ச்சியை குறுகலாக்கி விடும். சுஜாதாவை கடந்து வாருங்கள். இவர்கள் பற்றியெல்லாம் எழுதுங்கள். தமிழ் எழுத்துலகின் இருட்டுப் பகுதியை நாம் வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்' என்று விடுத்த அறைகூவல் அது.

இதையெல்லாம் எழுத ஆரம்பித்தால் யார் படிப்பார்கள் என்ற எண்ணம், வாசக வருகை குறைந்து விடுமோ அச்சம் எல்லாம் தடையாக இருந்து சிலருக்கு தடுக்கலாம்.

முதலில் நல்ல எழுத்துக்களின் -- அந்த எந்த சப்ஜெக்ட்டாக இருக்கட்டுமே -- வாசிப்பு பழக்கம் தனி நபருக்கு ஏற்பட ஏற்பட அதை தான் தன் பதிவுகளில் எழுதத் தோன்றும் என்பது என் எண்ணம்.

ஒன்று பார்த்திருக்கிறீர்களா, நெல்லை?.. குமுதம் மாதிரியான பத்திரிகைகளிலேயே திடீரென்று பக்கா இலக்கிய விஷயங்களைப் பற்றி பேட்டி போல ஒரு பக்க அளவில்  ---   வல்லிக்கண்ணனைப் பற்றி; இந்தத் தடவை ஞானபீட பரிசு பெற்றவர் -- என்று எந்த தலைப்பிலாவது ஏதாவது செய்வார்கள்..

இந்த மாதிரி விஷயங்களில் ஈடுபாடு கொண்ட 5% வாசகர்களும் குறைந்த பட்சம் தன் பத்திரிகையைப் புரட்டிப் பார்க்கவாவது செய்வார்களே, என்று தான்; இல்லை, இந்த மாதிரி விஷயங்களிலும் எங்களுக்கு அக்கறை உண்டு எனறு காட்டிக் கொள்வதற்காக. வாசகர்களின் எந்தப் பகுதியையும் விட்டு விடக்கூடாது என்பதற்காக.

பெரிய ஜவுளிக்கடைகளில், 9 கஜம் புடவைகளும் இருப்பது மாதிரி; தைத்த நிலையிலேயே பஞ்சக் கச்சம் இருக்கிற மாதிரி. அந்த மாதிரியாவது நமக்கு பழக்கமான பதிவர்கள் செய்தால் தேவலை. எப்படியானும் நல்ல வாசிப்பு அனுபவங்கள் நம்மிடையே கூட வேண்டும் என்பதற்காகத் தான் இத்தனை பாடும், நெல்லை.

2. ஸ்ரீராம்

ஆரம்பத்தில் ஜெயகாந்தன் தான் எழுதியவற்றில் எதையும் மாற்றக்கூடாது என்று சொன்னார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பின்னர் அந்நிலை என்று மாறியதோ...                     


பதில்:

ஆனந்த விகடனில் எழுத ஜெயகாந்தனை அழைத்த பொழுது "எனக்குத் தெரியப்படுத்தாமல் என் கதையில் எந்தப் பகுதியையும் நீக்கக் கூடாது.." என்பது தான் அவர் போட்ட முக்கியமான நிபந்தனை.

மஹாபாரதக் கதைகளில் வருமே ஒரு வரம் கேட்டாலே போதும், அதில் வேறு சிலவும் உள்ளடங்கியிருக்கும் என்று. அந்த மாதிரியான ஒரு நிபந்தனை இது.

நான் எழுதறதெல்லாம் எழுதுவேன், எதையும் நீக்காமல் நீ பிரசுரம் செய்ய வேண்டும் என்று இதற்கு அர்த்தமில்லை. நான் எழுதியதில் எதையானும் நீக்க நீ நினைத்தால், அதை எனக்குச் சொல்லி விட்டு என் அனுமதிக்குப் பிறகு அதை நீக்கலாம் என்பது தான். எழுதியவன் தன் எழுத்தின் மீது கொண்ட அக்கறை இது. கதையின் மத்தியில் எந்தப் பகுதியையாவது நீக்கப் போய் எழுதிய கதையின் உயிர்நிலையே போய் விட்டதென்றால் எனக்குத் தானே வருத்தம்? எனக்குச் சொல்லி விட்டுச் செய்தால் அதற்கு தகுந்த மாதிரி  மாற்றம் (modification) செய்து தரவும் எனக்கு வசதியிருக்கும் என்பதினால் இந்த நிபந்தனை..

இரண்டு பேருக்கான ஒரு நிபந்தனை என்றால் அதற்கு இரண்டு பகுதியிலும் யோக்யமாக இருக்க வேண்டும் என்பது நியாயவான்களின் குணமாக இருக்கும்.

அந்த மாதிரியே இரண்டு பகுதிகளிலும் இருப்பதற்காகத் தான் 'விகடனில் அச்சேறுவதற்கான எல்லை (limit) தெரிந்து 'இந்த அளவில் தான் வட்டாட வேண்டும் என்ற நிலை; இதை மீறிப் போனால் உறவு தகர்ந்து போகும்' என்கிறார். மிகுந்த பொறுப்புள்ள ஸ்டேட்மெண்ட் இது.

ஜெயகாந்தன் தன் கதைகளில் சில இடங்களில் ஒரு வரிக்குப் பின்னால் மூன்று புள்ளிகள் பொறிப்பது பழக்கம். எழுதுகிறவன் தான் எழுதுகிற சங்கதிக்கு ஒலிக்குறிப்பும் கொடுக்கிறான். இந்த வரி முடிகிற மாதிரி பாவ்லா காட்டிக் கொண்டு அடுத்த வரியையும் இழுத்துக் கொண்டு முடிகிறது என்று தெரியப்படுத்துவதற்காக. வாசகன் வாசிக்கும் பொழுது அதே மாதிரி வாசித்துப் பார் என்று கொடுக்கிற குறிப்பு இது.

ஜெயகாந்தனின் கையெழுத்துப் பிரதியைப் பார்த்த வாசன், "அந்த மாதிரியே அச்சில் எண்ணி மூணு புள்ளி வர்ற மாதிரி பாத்துக்கோப்பா.." என்பாராம். அவருக்கோ டெக்னிகலாக ஜெயகாந்தனுடன் போட்ட ஒப்பந்தத்தில் ஒரு அட்சாரம் பிசகக்கூடாது என்று எண்ணம்!...

இரண்டு பக்கமும் கெளரவஸ்தர்களாக இருந்தால் நிபந்தனைகளெல்லாம் ஒப்புக்கு போட்டுக் கொண்ட மாதிரி பல நேரங்களில் ஆகிவிடும்!..

நான் எழுதிக் கொடுத்த கதையில் சில இடங்களில் வெட்டி விட்டார்கள் என்று அழகாபுரி அழகப்பனோடு நானும் சண்டை போட்டிருக்கிறேன். கதைகளுக்குப் போடும் படங்களில் நேரும் தவறுதல்களையெல்லாம் சுட்டிக் காட்டியதும் உண்டு. பாவம், அவர்.. எதற்காக அப்படியான திருத்தம், படத் தவறுகள் எப்படி நேர்ந்தன. தனக்கும் இப்படி நேர்ந்ததையெல்லாம் சொல்லி விவரமாக இன்லெண்ட் லெட்டரில் எழுதுவார். அப்படி ஓரிரு கடிதங்களை அந்த அரிய நண்பரின் ஞாபகமாக இன்னும் வைத்திருக்கிறேன்.

அவ்வளவு தூரம் போவானேன்?.. 'கல்கியில் பிரசுரமான முதல் கதையில் சில பகுதிகளை வெட்டி விட்டார்கள் என்று அதற்குப் பிறகு கல்கிக்கு கதை அனுப்புவதையே கைவிட்டு விட்டேன்' என்று நம் அருமை நண்பர் ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி கூட சமீபத்தில் எழுதியிருந்தாரே, வாசித்தீர்களா?..

எழுத்தாள மனம் என்பது அனிச்சம் பூ போன்றது.


3.  ஸ்ரீராம்:

அந்நாளிலேயே பெயர்பெற்ற இந்த எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டிருந்த இதே பத்திரிகைகளில், இப்போது பெயரைச் சொன்னால் கூ நினைவுக்கு வருகிற மாதிரி சில எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். உதாரணம் ஏ ஏ ஹெச் கே கோரி, சார்வாகன், ஹேமா ஆனந்ததீர்த்தன்...                                                                                         

பதில்:

என் கட்டுரையே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. பெரும் பத்திரிகைகளைச் சிறப்பாக உபயோகப்படுத்திக் கொண்ட எழுத்தாளார்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். ஜெயகாந்தன், வையவன், இந்திரா பார்த்தசாரதி, நா.பா., ஜெகச்சிற்பியன், சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், இந்துமதி, வாஸந்தி என்று ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது... ஆனால் இவர்கள் எழுத்தை இந்தத் தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவோர் இல்லை என்பது தான் என் ஆதங்கம். எங்கள் பிளாக் போன்ற வாசகர் வாசிப்பு அதிகமுள்ள தளங்களில் இவர்கள் பேசப்பட்டால் கைதட்டக் கூடிய முதல் ஆளாக நான் இருப்பேன். அது இல்லை என்பது தான் சோகம்.

சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன் -- இந்த மூவரின் பிரமையைத் தாண்டி வந்தார்களா (தீர்களா?) என்று நீங்களே சொல்லுங்கள்.

ஏ ஏ ஹெச் கே கோரி -- குமுதத்தில் குமுதம் பாணிக்கேற்பவான நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறார். என் கணிப்பு அவ்வளவே.
                                                                                                                                                    
ஹேமா ஆனந்ததீர்த்தன் -- அந்நாளைய குமுதத்தின் ஆஸ்தான எழுத்தாளர். மொழியாக்க வல்லுனர். இவர் மொழியாக்கத்தில் 'தீப்பிடித்த கப்பலில் அம்மணியும் நானும்' என்ற உண்மை நிகழ்வின் விவரிப்பு நேர்த்தியை (மலையாளத்திலிருந்து தமிழுக்கான மாற்றத்தில்) பல வருடங்களுக்கு முன் குமுதத்தில் படித்தது இன்னும் நினைவிலிருக்கிறது. மற்றபடி உங்களைக் கவர்ந்த இவரது சிறப்பு படைப்பு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். அலசலாம்.

சார்வாகன் -- பிரபல அறுவை சிகித்சை நிபுணர் இவர். தொழுநோய்க்கான சிறுப்பு மருத்துவத்தில் தேர்ந்த டாக்டர். தனக்கிருந்த எழுத்தார்வத்தில் பல்வேறு தொழில்முறை பணிகளுக்கிடையேயும் எழுதியவர் இவர். நகுலன், சி.சு. செல்லப்பா போன்றவர்களின் அன்பைப் பெற்றவர். நகுலன் தான் தொகுத்த 'குருஷேத்திரம்' என்ற நூலில் இவரது படைப்புகளைச் சேர்த்திருக்கிறார். சி.சு. செல்லப்பா தனது எழுத்து பத்திரிகையில் இவரது கவிதைகளை வெளியிட்டிருக்கிறார். மொத்தத்தில் இவரை சீறாட்டியது சிறு பத்திரிகைகள் தாம்.

சாலிவாஹனன் என்று இன்னொரு சிறப்பான எழுத்துச்சிற்பி இருந்தார். இவர் அந்நாளைய 'சுதேச மித்திரன்' வார இதழில் நிறைய எழுதியிருக்கிறார். கலைமகளோடு மித்திரனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சுதேச மித்திரன் இதழின் பங்களிப்பு அற்புதமானது. பெரியவர் ஆர்வியின் 'திரைக்குப் பின்னால்' போன்ற நல்ல நாவல்களை வெளியிட்ட இதழ் அது.

ஆக, சிறப்பாக எழுதிய நல்ல எழுத்தாளர்கள் ஏன் நினைவு கூறப்படவில்லை என்பது தான் என் ஆதங்கம். தேடிப் படிக்கும் இன்றைய வாசகர்களுக்குக் கூட தட்டுப்படாமல் போனது ஏன் என்பது தான் கேள்வி.

பின்னூட்டங்கள் பதிலோடு முடிந்து விடுவதில்லை. உங்களுக்கு ஏற்படுகிற ஐயங்களைக் கேளுங்கள். உங்கள் தளங்களில் மறந்து போய் விட்ட தமிழ் எழுத்தாளர்களை அவர்கள் படைப்புகளுடன் நினைவு கொள்ளுங்கள்.

உங்களிடம் நான் வேண்டிக் கொள்வது இந்தப் பணி ஒரு இயக்கமாகவே நடைபெற வேண்டும்.


4.  வல்லிசிம்ஹன்

அன்பு ஜீவி சார்,                                                                                                                  
 இனிய புத்தாண்டுக்கான வாழ்த்துகள்.
தீவிரமான அலசல். உண்மைதான். எங்களது எழுத்து ரசனை இந்த
பத்திரிகைக்குள் அடங்கியது.
கலைமகள் எல்லார் வீட்டிலும் அனுமதிக்கப்
பட்டது.
கல்கி அடுத்தாற்போல. அதற்குப் பிறகு விகடன். கடைசியில் குமுதம்.
இப்பொழுது எல்லாமே மாறிவிட்டது.
கலைமகள் அப்படியே இருக்கிறது என்று நினைக்கிறேன்.

எல்லாமே வேறு கைகளுக்குப் போய்விட்டதாமே.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அத்தனை எழுத்தாளர்களையும்
75 சதவிகிதம் படித்திருக்கிறேன்.
அவர்களுக்குள்
ஒரு வட்டம் சதுரம் போடப் பட்டது தெரியாது.
என்ன ஒரு பரிதாபம்:(
தொடருகிறேன் சார்.

பதில்:  

கலைமகள் சவரட்சணை இல்லாத குழந்தை போல இளைத்துப் போயிருக்கிறது. அமுத சுரபி பரவாயில்லை. ஸ்ரீராம் க்ரூப்பின் போஷாக்கில் திருப்பூர் கிருஷ்ணனின் அயராத உழைப்பில் 'எழுத்து - எழுத்துலகம்' என்று நிறைய உள்ளடக்கங்களைத் தாங்கி வருகிறது.

மூன்றில் குங்குமம் பரவாயில்லை. கல்கியின் பழம்பெருமைகளை மீட்டெடுக்க யாருமில்லை போலிருக்கிறது. விகடன் டைஜஸ்ட் மாதிரியான முயற்சியில் சுலபமாக வாசிக்கக் கூடிய இயல்பான மொழி ஆளுமை இல்லாத அவஸ்தை. ஏதோ பிர்மாண்ட ஹாலிவுட் பட பங்கு கொண்டோரின் பெயர் பட்டியலை திரையில் பார்க்கிற மாதிரி ஒரு பக்கத்திற்கு பொடி பொடி எழுத்துக்களில் நிர்வாகக் குழுவினரின் பெயர் பட்டியல். பழைய விகடன் இல்லை; பத்திரிகையின் சைஸ் மாற்றியதிலிருந்து எல்லாமே அந்நியப்பட்டுப் போய்விட்டன. மகளிர் பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்பவைகளில்
குங்குமம் குழும 'தோழி' எடுப்பாக இருக்கிறது. எப்படியிருக்கும் என்று தெரிந்து கொள்ள இதழொன்று வாங்கி வந்து புரட்டிப் பார்த்த பொழுது, 'அட! நம்ம ரஞ்சனி நாராயணன்! அவர் கட்டுரையை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது!

/அவர்களுக்குள்
ஒரு வட்டம் சதுரம் போடப் பட்டது தெரியாது.
என்ன ஒரு பரிதாபம்:( //

????

தி.ஜா.வை பிறர் கணித்ததையா சொல்கிறீர்கள்?..

அதெல்லாம் பற்றி ஒரு தொடரே எழுதலாம்! ஒன்றுக்கானும் தி.ஜா. அசரவே இல்லையே!
கருமமே கண்ணாயினார் வர்க்கம் அவர்!

5.   சிகரம்  பாரதி:

பத்திரிகைகள் என்பது வேறு. சஞ்சிகைகள் என்பது வேறு. கல்கி, குமுதம் என்பதெல்லாம் சஞ்சிகைகள். தினகரன், மாலை மலர் போன்றவை தான் பத்திரிகைகள்.

பதில்:

அப்படியா சி.பா?..

சென்ற தலைமுறை பத்திரிகையாளர் மத்தியில் பத்திரிகைகள் என்று சொல்வது தான் வழக்கம். 'தி ஹிந்து' போலவானவற்றை செய்தித் தாட்கள் (News Paper) என்று அழைப்பது வழக்கம். உரையாடலில், "'ஹிந்து' பேப்பரில் போட்டிருக்காங்க, பார்த்தையா?"

இதைத் தெரிந்து கொள்ளவாவது ஒரு விகடன் இதழ் வாங்கிப் பாருங்கள். பத்திரிகை பற்றிய தகவல் குறிப்பில் பத்திரிகை விற்பனைப் பிரிவு என்று தான்
குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால் பத்திரிகை என்று குறிப்பிடுவது தான் பத்திரிகை பாஷை! :))

வார இதழ்கள் -- மாத இதழ்கள் என்ற வார்த்தை புழக்கத்தில் இதழ்கள் என்றும் குறிப்பிடுவது உண்டு. சிலருக்கு பருவ இதழ்கள்! (கவர்ச்சிக்கு கவர்ச்சி வேறே)

திராவிட கட்சிகள் வந்ததும் 'ஏடு' என்று அழைக்கலாயினர். 'கல்கி'யும் ஏடு தான்;
'இந்தியன் எக்ஸ்பிரஸூம்' ஏடு தான்.

இதெல்லாம் இருக்க, அரசு பாஷையில் எல்லாமே நியூஸ் பேப்பர்கள் தாம். எல்லா பத்திரிகைகளும் 'Registered as a Newspaper' கள் தாம். எந்த இதழைத் திருப்பிப் பின் அட்டையில் பார்த்தாலும் Registered with Registrar of Newspapers என்று குறிப்பிட்டு பத்திரிகையின் Regd.No. போட்டிருப்பார்கள். பத்திரிகையை ரிஜிஸ்டர் பண்ண வேண்டியது அவசியம். அப்படி செய்து கொண்டால் பல சலுகைகள் உண்டு. தபாலில் அனுப்ப, நியூஸ் பிரிண்ட் கோட்டா என்று. இரண்டாவது சொன்னது பகாசுர விஷயம்!

சிகரம் இணைய இதழ் தானே?.. கத்தியில்லா யுத்தம் மாதிரி, காகிதமில்லா அச்சடித்தல்! ஜமாயுங்கள்!


6.  சிகரம்   பாரதி:

படைப்புச் சுதந்திரம் படைப்பாளனுக்கும் வாசிப்புச் சுதந்திரம் வாசகனுக்கும் இருக்க வேண்டியது அவசியம். கல்கி, குமுதம் போன்றவை இதனை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றாலும் ஓரளவுக்காவது நிறைவேற்றியிருக்கின்றன. நிற்க, சிறந்தவை எவற்றுக்கும் முன்னுரிமை கிடைப்பதில்லை என்பது காலம் காலமாக நடப்பது தானே?


பதில்:
படைப்புச் சுதந்திரத்திற்கும் வாசிப்பு சுதந்திரத்திற்கும் எந்தக் குறைசலுமில்லை!

வேண்டியாங்கு வேண்டியவை விரவிக் கிடக்கின்றன! நமது தேர்வுச் சுதந்திரத்தில் தான் கோளாறு!

புத்தகச் சந்தையில், சுஜாதாவின் ஸ்ரீரங்கம் தேவதைகளும், 'களப்பிரர் கால வரலாறு' என்றும் நூல்கள் இருந்தால் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள், சொல்லுங்கள்!
7.   பா.வெ.


நல்ல சப்ஜெக்ட்  எடுத்துக் கொண்டு அதை சிறப்பாகவும் அலசியிருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எழுத்தாளர்கள் பலரையும் படித்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன். 
பதில்:

மகிழ்ச்சி. மனசுக்குகந்த எழுத்தாளர்கள் பற்றி நானெழுதும் பகுதியில் தங்கள் கோணத்தில் அந்தந்த எழுத்தாளர்களை நீங்கள் பார்த்த பார்வை பற்றியும் அல்லது நான் எழுதாமல் விட்டு விட்ட செய்தி ஏதாவது பற்றியும் குறிப்பிட்டால் மிகவும் மகிழ்ச்சி.

குறிப்பிட்ட அந்த எழுத்தாளரின் கதை ஒன்றை எடுத்துக் கொண்டு விவரித்தால் இந்தப் பகுதி இன்னும் சிறப்பாக இருக்குமா?..

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?.. சொல்லுங்கள், பா.வெ.

8.   Dr. B. Jambulingam   A.R. (Retd)  Tamil University.

தளம் என்பதானது விரிந்த எல்லையாக இருந்தால் மட்டுமே எழுத்தின் வீச்சினை உணரமுடியும். குறிப்பிட்ட எல்லைக்குள் இருந்து, கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டு, அவ்வாறு செய்வதுதான் சரி என்று போகும் நிலையை எழுத்துலகில் காணமுடிகிறது. இவ்வாறாக வரையறுக்கப்படுகின்ற எல்லைக்கு அப்பாற்பட்டு சென்று எழுத்தால் சாதிக்க முடியும். பிறர் அங்கீகரிக்கவேண்டும் என்பதில்லை. நம் எழுத்தை நாம் ரசிக்கும்போதே வெற்றி பெற்றுவிடுகிறது. அடுத்தவரின் அங்கீகாரம் என்பதை இங்கு கொள்ளவேண்டாம் என்று நினைக்கிறேன்.

பதில்:   

வாழ்ந்து மறைந்த தமிழ் எழுத்தாளர்களின் சாதனைகளை வரும் தலைமுறைக்கு நினைவு படுத்தி அயராது தமிழ்ச் சுடரை ஏந்தி தமிழ் ஒளி பரப்ப வேண்டும் என்ற வேட்கையின் அடிப்படையில் வேண்டுகோள் விடுத்தேன். அவ்வப்போது வாழ்கிறவர்களை, சமீப காலம் வரை வாழ்ந்தவரை மட்டுமே நினைவில் ஏந்தி செயல்படுவது என்பது விட்டில் பூச்சி போல ஒரு நொடி பளபளத்து விட்டு மறைந்து விடுகிறது. அதற்கென்று இருக்கும் அடித்தளத்தை (base) இழந்தும் மேலோட்டமாக உயிர் வாழ்கிற மாதிரியான தோற்றத்தை  மட்டுமே தெரியப்படுத்துகிறது. இந்த நிலை இல்லாது எந்தத் துறையிலும் அதன் அடிமட்டத்திலிருந்து அன்றைய நாள் வரை அடைந்திட்ட வளர்ச்சியை பேணிப் பாதுக்காத்து   அதை உந்து சக்தியாகக் கொண்டு மேற்கொண்டான வளர்ச்சிக்கு முயல வேண்டும் என்ற சுடர் தெறிப்பில் வெளிப்பட்ட எண்ணம் இது.

9.   வே. நடன சபாபதி

//எது எப்படியோ இலக்கியம் எது என்பதைத் தீர்மானிப்பது வாசகன் தான்.அது மட்டும் நினைவிருக்கட்டும்.//
                                                                                                        ஐயா. நான் இந்த கருத்திலிருந்து மாறுபடுகிறேன். காரணம் இலக்கியம் எது என்று தீர்மானிக்க வாசகனுக்கு வாய்ப்பு தரப்படுவதில்லை என்பது என் கருத்து.
                                                                                                 
வெகுஜன பத்திரிகைகள் என்று சொல்லப்பட்டவை வெளியிட்டதைத்தான் வாசகர்கள் படிக்கவேண்டியிருந்தது. வாசகர்கள் மீது ஒரு குறிப்பிட்ட இரசனையை திணித்து அதை மட்டும் கொடுத்து வணிகம் செய்து வந்தன அந்த பத்திரிக்கைகள். வாசகர்கள் அவற்றை புறக்கணித்திருக்கலாம். ஆனால் வாசகர்களின் இரசனையை அவர்கள் ஏற்கனவே மாற்றி தன்வயப்படுத்திக் கொண்டதால் வாசகர்களால் அவற்றை புறக்கணிக்கமுடியவில்லை

எழுத்தாளர்களையும் குற்றம் சொல்ல இயலாது. ஏனெனில் அவர்கள் பத்திரிக்கைகள் விரும்புவதைத்தான் எழுதமுடியும். இல்லையெனில் அவர்களுக்கு வருமானம் கிடைக்காது. ஏனெனில் அவர்களும் வாழவேண்டுமல்லவா?

திரைப்படத்துறையிலும் இதுபோன்று இரசிகர்களின் இரசனையை சுத்தமாக மாற்றி குப்பை படங்களை வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். (இது ஒரு பொதுவான கருத்து தான் ) இரசிகர்கள்/வாசகர்கள் விரும்புகிறார்கள் அதனால் இவ்வாறு செய்கிறோம் என்று சொல்வதெல்லாம் பம்மாத்து வேலை.

பதில்:

'நான் இந்த கருத்திலிருந்து மாறுபடுகிறேன். காரணம் இலக்கியம் எது என்று தீர்மானிக்க வாசகனுக்கு வாய்ப்பு தரப்படுவதில்லை என்பது என் கருத்து' -- என்கிறீர்கள்.

வாசகன் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதில் இருவருக்குமே மாறுப்பட்ட கருத்தில்லை, ஐயா. தீர்மானிக்கும் ஸ்திதியில் -- நிலையில் -- பத்திரிகைகள் அவனை வைத்திருக்கவில்லை என்பதே உங்கள் கருத்து. ரொம்ப சரி.. அதைத் தான் நானும் சொல்லியிருக்கிறேன்.

//எழுத்தாளர்களையும் குற்றம் சொல்ல இயலாது. ஏனெனில் அவர்கள் பத்திரிக்கைகள் விரும்புவதைத்தான் எழுதமுடியும். இல்லையெனில் அவர்களுக்கு வருமானம் கிடைக்காது. ஏனெனில் அவர்களும் வாழவேண்டுமல்லவா?//

எழுத்தே வேள்வியாகக் கொண்ட அந்தக் காலம் இல்லை சார், இது.. எழுத்தையே நம்பி எவரும் வாழ நேர்ந்திருக்கும் துர்பாக்கிய நிலையும் இன்று இல்லை சார். அரசு வேலைகளில் இருந்து கொண்டு எழுதுவோர் நிறைய பேர். தனக்கென்று ஒரு தொழிலில் இருந்து கொண்டு பெயருக்கும் புகழுக்கும் சொந்த ஆர்வத்திற்கும் எழுதுவோர் தான் அதிகம் பேர். பணம் பொருட்டல்ல; லட்சக்கணக்கான பிரதிகளில் தன் பெயரும், தன் எழுத்தும் அழகழனான 
ஓவியங்களோடு பவனி வருகிறதே-- அது தான் பெருமை. ஒவ்வொரு எழுத்தாளனையும் எத்தனையோ சோர்வுகளுக்குப் பிறகு எழுத வைத்துக் கொண்டிருக்கிற ஜீவசக்தி இது தான்.

பத்திரிகை அலுவலகங்களும் எல்லா அலுவலகங்களைப் போல ஒரு அலுவலகமாக மாறிப் போன காலம் இது. அதனால் அதில் பணியாற்றுவோருக்கும் தான் பணியாற்றும் ஒரு அலுவலகத்துடனான உறவு தான் காணப்படும். ஒரு வாரப்பத்திரிகையில் எல்லாமே இயந்திர கதி. அத்தனையும் கூட்டு முயற்சி. அடுத்த வார இதழ் அதற்கு முதல் வாரமே
தயாராவதற்குள் பெண்டு நிமிர்ந்து விடும்.

இட்லி, பொங்கல், வடை, தோசை, பூரி -- தொட்டுக் கொள்ள வகைவகையாய். ஒரு ஹோட்டலில் காலை மெனு இப்படி இருப்பது போலத் தான் இன்றைய பத்திரிகை நிலைமையும். 'இந்த ஐட்டத்திற்கு மேட்டர் சரி பண்ணியாச்சா?.. அடுத்தது அந்த மேட்டர். அதற்குத் தயார் பண்ணு' என்கிற மாதிரி தான் எல்லாம். லகாரக்கணக்கான அந்த வார இதழ்கள் மிஷின் துப்பி சுடசுட வெளிவந்து நடுப்பக்கத்தில் பின் குத்திக் கொண்டு மடித்த வாக்கில் அடுக்கடுக்காக வரிசை கட்டப்படுவதைப் பார்க்க வேண்டுமே --- ஆயிரம் கண் போதாதே, வண்ணக்கிளியே -- கதை தான். பத்திரிகைத் துறை என்பது மிகப் பெரிய இண்டஸ்ட்ரி இன்றைய தேதியில்.

ரா.கி.ரங்கராஜன் அவர்கள் குமுதத்திலிருந்து ரிடையர் ஆகி விட்டார் என்ற தகவல் கேள்விப் பட்ட பொழுது நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். 'அறுபது வயசு ஆகி விட்டால் பத்திரிகை அலுவலகங்களிலும் பணி மூப்பு ஓய்வு உண்டு' என்ற விஷயத்தை முதன் முதலாகக் கேள்விப்பட்ட தருணம் அது!

10.  தி.  கீதா

மிகவும் ரசித்து வாசித்தேன். உண்மையை, யதார்த்தத்தை மிக மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கீங்க. எனக்கு வாசிப்பு அனுபவம் மிகவும் குறைவுதான். வலையுலகம் வந்த பிறகுதான் என் சிறு, இளம் வயதில் வாசிக்க ஆசைப்பட்டதை இப்போதுதான் வாசிக்கத் தொடங்கியுள்ளேன். அதுவும் வலையில் இலவசமாகக் கிடைப்பதை டவுன் லோடு செய்து வைத்துக் கொண்டு.

உங்களின் இந்தப் பதிவு நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறது. நீங்கள் சொல்லியிருப்பவர்களையும் வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.

ஜெயகாந்தன் அவர்களின் கண்டிஷனில் எந்தத் தவறும் இல்லை. ஒரு படைப்பாளிக்கு எப்படித் தன் படைப்பில் மற்றவர் கை வைக்க மனசு வரும்? நாம் பெற்ற குழந்தை போல அல்லவா நம் ஒவ்வொரு படைப்பும்...

பதில்:                                                                                                                                 

தாங்கள் வாசித்து மகிழ்ந்ததில் ரொம்பவும் சந்தோஷம்.

ஜெயகாந்தன்?.. எழுத்தாளர்களின் தார்மீக பலத்தை இளம் வயதிலேயே தன் தோளில் தூக்கிச் சுமந்த சிம்ஹம் அவர்!

இணைய வலையில் கிடைப்பதை----

'அழியாச்சுடர்' இணைய ஆக்க முயற்சியில் பங்கு கொள்வோருக்கு நாம் எவ்வளவு நன்றி சொன்னாலும், அது தகும். அவர்களின் இணைய தளத்தில் சென்ற காலத்து தமிழ் எழுத்தாளர்களின் அரிய படைப்புகளை வாசித்துக் களியுங்கள்.

http://azhiyasudargal.blogspot.com/

இவர்களைப் பற்றித் தான் நானும் எழுதப் போகிறேன். என் தளத்தில் அவர்கள் பற்றி வாசிக்கும் பொழுது உங்களுக்கு இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.

மிக்க நன்றி, சகோ.

11.   இராய.  செல்லப்பா

ஆக, விஷயம், 'பெரிய பத்திரிகைகள் - சிறு பத்திரிகைகள்' என்ற அடிப்படையான வேறுபாட்டைப் பொறுத்ததே என்று ஆகிறது. இப்படியெல்லாம் நீங்கள் பெரிய பத்திரிகைகளைக் குறை சொல்லப்போய்த்தான் அவர்களே 'தீராநதி' என்றும் 'தடம்' என்றும் சிறு பத்திரிகைகளை ஆரம்பிக்க நேர்ந்தது. அதன் விளைவு என்னவாயிற்று?

'தடம்' நின்று போயிற்று. 'தீராநதி' வற்றிக்கொண்டே வருகிறது!

சிறு பத்திரிகைகளை நம்பி எந்த எழுத்தாளனும் பிழைக்கமுடியாது. அதை நடத்துபவர்களே பிழைக்கமுடிவதில்லை. எனவே இணையம் மற்றும் கிண்டில் போன்ற சுயபதிப்பு முயற்சிகளால்தான் எழுத்தாளர்கள் இனிப் பிழைத்தாகவேண்டும்.

வாசகன் எப்போதுமே அதிக சர்க்குலேஷன் உள்ள பத்திரிகைகளைத்தான் காசுகொடுத்து வாங்குவான். அவைதான் விலை மலிவாக இருக்கும். ஆகவே அதில் எழுதும் எழுத்தாளர்களுக்கு எளிதில் மவுசு வந்துவிடுகிறது. மாதம் முன்னூறு பிரதிகள் அடிக்இதுதான் வள்ளுவர் சொன்ன 'இருவேறு உலகத்து இயற்கை.' இது எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். நல்வாய்ப்பாக சமூக ஊடகங்கள் இலவசமாக நம்மைத் தேரில் ஏற்றிக்கொண்டு போகத் தயாராக உள்ளன. அதைப் பயன்படுத்திக்கொண்டு எழுத்தாளர்கள் தங்களைப் பலப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதே கண்கூடு.  சிறு பத்திரிகையால் எவ்வளவு எழுத்தாளர்களுக்கு சோறு போடமுடியும்?                                                       

இதுதான் வள்ளுவர் சொன்ன 'இருவேறு உலகத்து இயற்கை.' இது எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். நல்வாய்ப்பாக சமூக ஊடகங்கள் இலவசமாக நம்மைத் தேரில் ஏற்றிக்கொண்டு போகத் தயாராக உள்ளன. அதைப் பயன்படுத்திக்கொண்டு எழுத்தாளர்கள் தங்களைப் பலப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதே கண்கூடு.

பதில்:

அடடா! எவ்வளவு நாட்கள் கழித்து, உங்களைப் பார்க்கிறேன்?.. சென்னை வந்து சேர்ந்து விட்டீர்களா, ஐயா! ரொம்ப சந்தோஷம்.

எனக்குத் தெரியும். இதையெல்லாம் வாசித்து விட்டால் உங்களால் சும்மா இருக்க முடியாதென்று.

பொதுவாக சிறுபத்திரிகைகளின் வெளியீடுகளுக்காக நம்மில் விளையும் உந்து சக்தியும்
அவற்றிற்கான நோக்கமும் எல்லாக் காலங்களிலும் ஒன்று தான்.

ஆனாலும் அந்நாளைய சிறுபத்திரிகைகளில் பங்கு கொண்டவர்கள் மொழியைக் கையாண்ட அழகு, எடுத்துக் கொண்ட பொருள், விவரணைகளின் நேர்த்தி என்று எல்லா இலஷ்ணங்களுமே வேறு வகைத்தானது.

ஜெயகாந்தன் அந்நாளைய 'சரஸ்வதி'யில் போர்வை என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறார். இரண்டே பக்கங்கள் தாம். வாசித்து விட்டால் பிரமித்தே போவோம்.  இதை எழுதியது யார் என்ற கேள்வி மனசில் கிளர்ந்து எழுதியவரின் பெயரைப் பார்க்க முனைவோம். அந்த மாதிரியான 'கிறுக்குத்தனங்கள்' எல்லாம் இந்தக் கால சிறுபத்திரிகைகளை வாசிக்கும் பொழுது நேராது.

பெரிய பேனர் திரைப்பட முதலாளிகள் சின்ன பட்ஜெட் படம் எடுப்பது போலத் தான்
குமுதத்தின் தடமும், தீராநதியும்.

சிறுபத்திரிகைகளின் தோற்றமும், வளர்ச்சியும் தெரிந்தே உப்பு மூட்டையை ஆற்றில் போடும் சமாச்சாரம். இலாப நஷ்ட கணக்குப் பார்ப்பவர்கள் தினமும் அப்படி ஆற்றில் போட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

சிறு பத்திரிகையின் ஆயுள் என்பது இலட்சியப்பிடிப்பிலும், கொள்கைச் சான்றாண்மையிலும், எந்த இடர் வந்தாலும் சமாளிப்போம்; இதை செய்தே தீருவோம் போன்ற கடப்பாடுகளுடன் பிணைந்தது.
                                                                                                                                                         சி.சு. செல்லப்பா, தன் மனைவியின் கழுத்தில், காதில் என்று இருந்த ஓரிரண்டு நகைகளை அடகு வைத்தும், அழித்தும் எழுத்து பத்திரிகையை அச்சடித்தார். பிரதிகளைத் தோளில் சுமந்து பாடசாலைகளின் படிகளில் ஏறி இறங்கி இளம் பிள்ளைகள் மத்தியில் அவற்றை அறிமுகப்படுத்த முனைந்தார். அந்த மாதிரியெல்லாம் இப்பொழுது ஏதும் நடந்து விடாது மட்டுமில்லை, அந்த மாதிரியான நடவடிக்கைகள் எல்லாம் தேவையில்லாத பைத்தியக்காரத் தனங்களாக இப்பொழுது எள்ளி நகையாடப்படும்.

பிழைப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. சிறு பத்திரிகைகளை அச்சடித்துத் தான் பிழைக்க வெண்டும் என்று இல்லை. பிழைப்பதற்காகவும் இந்த மாதிரியான தன்னையே மாய்த்துக் கொள்ளும் காரியங்களிலும் யாரும் ஈடுபடுவதில்லை. அதனால் எழுதுவது என்பது பிழைப்பின் அடிப்படையில் இல்லை என்பதை எல்லோருமே அறிந்து தான் இருக்கிறார்கள். சொல்லப்போனால் பிழைப்பதற்காக வைத்திருப்பதை தொலைப்பதற்காகத் தான் என்பது நிதர்சன உண்மையாக இருக்கும் காலம் இது.

எத்தனை இணைய தள எழுத்துக்கள்?.. எத்தனை வித தலைப்புகள்?.. எவ்வளவு ஈடுபாடுகள்?.. எவ்வளவு கால, நேர செலவழிப்புகள்?..

இதற்கான ஆதார சுருதி என்ன?

பின் எதற்காக இத்தனை அல்லாடல்கள்?..

மனிதப் பிறப்பின் தீராத தாகம் தன் இருப்பைத் தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும்  என்கிற  இயற்கை நியதி.

கர்ப்பமுற்ற பெண் குழந்தையை பெற்றே தீர வேண்டும் என்பது போல இது. அறிவுத் தாகம் எடுத்தவனின் கதையும் இதே  தான். தன் இருப்பை சமூகத்திற்கு தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும்; இலட்சியங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்; பொது விஷயங்களில் தன் கருத்தைச் சொல்லியே ஆக வேண்டும் -- போன்ற தினவுகள்.

அந்தத் தினவுகள் தாம் கதைகளாகவும், கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும் முகிழ்த்து எழுத்தாய்  வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

எண்பது வயசு பெரியவரும் கண் பார்வைக் கோளாறுகளோடும், உடல் இயலாமைகளுக்கு இடையேயும் மூப்பின் அவஸ்தைகளுக்கு நடுவேயும் கணினியின் எதிரே உட்கார்ந்து கொண்டு சமூகத்தோடு பேசிக் கொண்டிருப்பதின் சூட்சும சக்தி இது தான் ஐயா!

இதெல்லாம் உங்களுக்குத் தெரியாததா என்ன?.. நிச்சயமாகத் தெரியும். இருந்தும் என் வாய் மொழியாக நான் சொல்லிக் கேட்பதில் அலாதி மகிழ்ச்சி என்பதும் தெரியும்.

நெடுநாட்கள் கழித்து உங்களை இணைய தளத்தில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ந்து போனேன். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி, ஐயா.

Related Posts with Thumbnails