Tuesday, July 18, 2017

வாழ்க்கை அழைக்கிறது !

         ஒரு வாழ்வியல் தொடர்


1.   இன்று புதிதாய்ப் பிறந்தோம்


"எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா!" என்று வியந்து போற்றிப் புகழ்வார், பாரதியார்.


இன்பம் எப்பொழுதுமே இனிப்பான விஷயம். அது துய்ப்பதின்பால் பட்டது. எதையும் அனுபவிப்பதற்கு ஒரு அவா வேண்டும். மனது தான் அவா என்கிற ஓர் அற்புதத்தை சிந்தையில் ஏற்படுத்தி, இது வேண்டும் என்கிற ஆசையைக் கிளறிவிட்டு, அந்த இன்பத்தை அனுபவிக்க தூண்டுகோலாக இருக்கிறது. அந்த ஆசை இல்லையென்றால், பாரதியாரின் கண்ணுக்குக் கோடிகோடியாகத் தெரிந்த அந்த இன்பம் ஒன்று கூட நமக்குப் புலப்படாது. மனம் ஒத்துழைப்பில்லாத எதுவும் இன்பத்தைக் கொடுக்காது.

ஆசைப்படுவதற்கும் ஓர் அர்த்தம் வேண்டும்; ஒரு நியாயம் வேண்டும். ஆசைப்படுவதை அடைய, ஆசையை முன்னிருத்தி அதைப் படிப்படியாக அடைய உழைப்பு தேவை. எந்த உழைப்பும் உற்சாகத்தோடு கலந்து வந்தால் பன்மடங்கு வேகம் கிடைக்கும். ஈடுபாடு இருந்தால், உற்சாகம் தானே கதவைத்தட்டிக்கொண்டு வரும். தானே தனியாகக்கூட வராது; தன்னம்பிக்கையையும் தன் கூடவே கூட்டிக்கொண்டு வரும்.

எல்லா ஆசையும் ஆசையாகி விடாது. நியாயமான ஆசைகளுக்கு எப்பொழுதுமே கண்ணுக்குத் தெரியாத ஒரு தார்மீக பலம் உண்டு.

நியாயமான ஆசையைத் தேர்ந்தெடுக்க நல்லறிவு வேண்டும்; குறைந்தபட்சம், நன்மை-தீமைகளை அலசுகின்ற மனசாவது வேண்டும்.

நந்தகோபால் என் நண்பர். போனவாரம் போன் பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்திருந்தார்.

அவரைப்பார்த்ததுமே  குழந்தைகளுக்கு ஏகப்பட்ட உற்சாகம். "அங்கிள்..அங்கிள்.." என்று சுற்றிக்கொண்டு விட்டன. ஆண்ட்டி அவர் கூட வரவில்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு இன்னும் நெருக்கம் காட்டினர்.

விஷயம் இதுதான். நந்தகோபால் மிமிக்ரி பண்ணுவதில் மன்னன். இன்னொரு பிரபலம் மாதிரி அவர் பேசுவது, நடிப்பது எல்லாம் அச்சு அசலாக இருக்கும். இதைத்தவிர, கைவிரல்களை, முட்டியை இப்படி அப்படி அசைத்து, கோணி, குவித்து, பிரித்து வெள்ளைச்சுவரில் மான், பாம்பு, குதிரை, முயல், யானை என்று ஏகப்பட்ட நிழலுருவங்களை அநாயசமாகப் போட்டுக் காண்பிப்பார்.

ஒருதடவை செய்தது இன்னொருதடவை இல்லை என்று அவர் வரும் பொழுதெல்லாம் விதம் விதமாக வெரைட்டியாக நந்தக்குமார் குழந்தைகளை  உற்சாகப்படுத்துவார். குழந்தைகள் சந்தோஷிப்பதில் அவரும் 'குஷி'யாகி, தானும் ஒரு குழந்தையாகி விடுவார். அது தான் விஷயம்.

இவர் செய்து காண்பிப்பதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு தங்கள் நண்பர்களுக்கு, "பார்த்தாயா, இதை?" என்று வேடிக்கைக் காட்டுவதில்  குழந்தைகளுக்கும் உற்சாகம்.

ஒருதடவை வீட்டுக்கு வந்தபொழுது, பேச்சோடு பேச்சாக தனனையறியாமல் நந்தகோபால் சொன்னார்: "நான் இப்படி குழந்தைகளோடு விளையாடுவது என் மனைவிக்குப் பிடிக்கவில்லை. 'என்னங்க, இது, குழந்தைகளோடு சரிக்குச் சமமாக?..உங்க வயசென்ன, அவங்க வயசென்ன? நாளைக்கு அதுகளுக்கு உங்க மேலே மரியாதை இல்லாமல் போய்விடும்!' என்று தன் மனைவி குறைப்பட்டுக் கொண்டதாகச் சொன்னார். அதிலிருந்து
'ஆண்ட்டி' அவர் கூட வரவில்லை என்றால், குழந்தைகளுக்கு நந்தகோபாலைப் பார்க்கையில் கூடுதல் சந்தோஷம்.

குழந்தைகள் இருக்கும் வீட்டிற்குப் போனால், சில அன்பர்கள் பழம், பிஸ்கட், சாக்லெட் என்று ஏதாவது வாங்கிக்கொண்டு போவார்கள். குழந்தைகள் அடையும் சந்தோஷத்தைப் பார்த்து, கள்ளம் கபடறியாத அந்த பிஞ்சுகளின் முகம் மலர்வது கண்டு இவர்கள் மனமும் மலரும்.

குழந்தைகளோ, பெரியவர்களோ---இதில் ஒன்றும் பெரிதாக வித்தியாசமில்லை. மனசு மகிழ்கிறதே, மனசு மலர்கிறதே, அதுதான் விசேஷம். அதுதான் முக்கியம்.

மனுஷப் பிறவிகளில் யாரும் 'வேஸ்ட்' இல்லை. 'எத்தனை மனிதர்கள், எததனை குணங்கள்' என்று வியக்கவைக்கின்ற தனித்தனி சுபாவங்கள், வெளிப்பாடுகள் ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் உண்டு. கவனித்துப் பார்த்தால், 'அடடா..' என்று ரசிக்கத் தோன்றும்; ரசிப்பதுதான் ஆரம்பப்படி அந்த ரசிப்பில் லயிப்பது அடுத்தபடி. அந்த லயிப்பு தீர்க்கமாகிக் கூடும் பொழுது, இன்னொரு மனுஷனின் ஆத்மாவின் அழகைத் தரிசிக்கும் பொழுது, மனித மேன்மை புரிகிறது.

அது போகட்டும். நந்தகோபால் எதற்கு வந்தார் என்பதைச் சொல்ல மறந்துவிட்டேனே?.


(வளரும்)


படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.
Related Posts with Thumbnails