மின் நூல்

Friday, October 30, 2009

ஆத்மாவைத் தேடி....13 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

13. உத்தமனைக் காண வாரீர்!

மேகநாதன் மேலும் தொடர்ந்தார்: "பிரபஞ்ச காந்த வெளியில் வேண்டிய மட்டும் விதவிதமான சக்திகள் வாரியிறைந்து கிடக்கின்றன. இவை நமக்கு கிடைத்தற்கரிய செல்வம். இவற்றை தகுந்த முறையில் சகல உயிர்களின் மேன்மைக்கும் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டிய கடப்பாடு நம் கையில் தான் இருககிறது.

"நான் சொல்லக்கூடியவை ஏதோ கற்பனைக் கதை போலத் தோற்றமளிக்கிறதோ என்கிற அச்சம் எனக்குண்டு. கொஞ்சமே நடைமுறைப் படுத்திப் பார்த்தால் அத்தனையும் நிதர்சன உண்மைகள் என்று உங்க்களுக்குப் புரியும். இதுவரை கண்டறிந்துள்ள விஞ்ஞான கண்டுபிடிப்புகள் அத்தனையும் இதுவரை இல்லாத ஒன்றைக் கண்டறிந்துள்ளதாக நமக்கு பிரமை உண்டு. மின்சாரத்திலிருந்து ஒவ்வொன்றாக நீங்கள் நினைத்துப் பார்த்தால், அத்தனையும் இயற்கையின் மடியில் ஏற்கனவே இருந்த செல்வங்கள் என்று புரியும். மழையில் இருந்து மந்தமாருதம் வரை இயற்கையில் ஏற்கனவே பொதிந்துள்ளகொடைகள் " என்று சொல்லி விட்டு மேலும் தொடர்வதற்கு முன் கையிலிருந்த காகிதக் கற்றைகளை பக்கம் வாரியாகச் சரிப்படுத்திக் கொண்டார் மேகநாதன்.

"இன்னொன்று. கண்டுபிடிப்புகள் அத்தனையும் மனிதனின் சுகபோக வாழ்க்கைக்காக என்கிற தவறான கருத்தும் பரவலாக ஏற்பட்டு விட்டது. சுகத்திற்காக என்ற எண்ணத்தினால் தான்
அத்தனையையும் காசாக்கி விட்டோம். இது என்றால் இவ்வளவு செலவு என்று தான் யோசிக்கிறோம். 'ஸ்விட்சைத் தட்டினால் வெளிச்சம்' என்கிற சாத்தியத்திற்கு தாமஸ் ஆல்வா எடிசன் எவ்வளவு சிந்தித்திருப்பார் என்கிற உணர்வு இல்லாது போய்விட்டது.
அந்த இல்லாத உணர்வே இயற்கையை இன்னும் புரிந்து கொள்ள முடியாத உணர்விற்கு ஆட்படுத்தியிருக்கிறது. இன்றைய அவசரத்தேவை, இயற்கையை நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான். அதன் செல்வத்தை கப்ளீகரம் பண்ணாமல் அத்தனை உயிர்களும் தங்கள் தேவைக்கு அமைதியாக அனுபவிக்க வேண்டியது. வெட்ட வெட்ட தங்கம் என்கிற மாதிரி, அழித்து விடாத அமைதியான அனுபவிப்பால், இன்னும் இன்னும் இயற்கை நமக்கு
வாரிவழங்கக் காத்திருக்கிறது.

"எங்கும் எதிலும் இறைவனைக் காண்பதே விஞ்ஞானம் என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர். விறகில் நெருப்பு உள்ளது என்று அறிந்துகொண்ட அறிவு தான் ஞானம். அந்த நெருப்பை உபயோகப் படுத்திக் கொண்டு வளம் பெறுவது விஞ்ஞா னம். இறைவன் இருக்கிறார் என்பதை உணர்வது ஞானம். அவருடன் பேசுவது, கலந்து ஆனந்தம் பெறுவது விஞ ஞானம். இறைவனே பிரபஞ்சமாகவும், உயிர்களாகவும் திகழ்கிறார் என்பதைத் தரிசிப்பது விஞ்ஞான்ம் என்பார் பரமஹம்சர்" என்று சொன்ன போது மேகநாதனின் குரல் தழுதழுத்தது.

தொடர்ந்து பேசுகையில் அவர் குரல் உணர்ச்சி வசப்பட்டிருந்தது. "முதலில் இயற்கையில் இறைவனைக் கண்டு, பின் இயற்கையின் எச்சமாகிய தன்னில் இறைவனைக் காணுதல ஒரு யோகமாகும்.

உடம்பினைப் பெற்ற பயனாவதெல்லாம் உடம்பினில்
உத்தமனைக் காண்" என்பது ஒளவையார் சொன்னது.

"---இதனால் எனக்கு என்ன பயன்?" என்று ஒரு செயலைச் செய்வதற்கு முன் ஒவ்வொன்றிற்கும் அத்னால் எனக்கு ஆவதென்ன என்று கேட்கும் உலகுக்கு, ஒள்வையார் சொன்னது இது. ஒரே ம்ட்டை அடி! 'உன் உடம்பினில் உள் உறையும் உத்தமனைக் காண்பது தான் நீ உடம்பு பெற்ற பயனே; அப்படிக் காணத்தவறின், பிறவி எடுத்ததே வீண்' என்கிறார் அவர்.

"பெற்ற பேறும், வீணும் பேறு பெற்றவர்க்கேத் தெரியும். வியாபாரத்தில் நஷ்டம் என்பது லாபம் அடைந்தவனுககே தெரியும் என்பது போல. இலாபத்தையே அடையாதார் அந்தப் பேற்றையே அடையாதாராய், இதுதான் இயல்பு போலும் என்கிற எண்ணமே அவரிடத்தில் பதிந்து இருக்கும். நாளாவட்டத்தில் செககுமாடு போல அதுவே படிந்தும் போய்விடும்.

"'உத்தமனைக் காண்பதால் எனக்கு என்ன பயன்?'---என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க
கேள்வி. எந்தக் கேள்வியுமே தான் ஞானத்தை அடைய ஆரம்பப்படி என்றாலும், கேட்கும் வெற்றுக் கேள்விகளே ப்தில்களைத் தந்துவிடாது. உள்ளத்தில் எழும் கேள்விகள், எந்நேரமும் அந்த உள்ளத்தையே துளைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு துளைத்தலின் பொழுதும், எழுந்த கேள்விக்குப் பதில் தேடுவதை நோக்கி ஓரடியாவது எடுத்து வைத்திருக்க வேண்டும்.

"இன்னொருவர் பதில் சொல்வார் என்று எதிர்பார்த்து 'என்ன பயன்' என்கிற கேள்வியே எக்காலத்தும் இருந்து கொண்டிருந்தால், இன்னொருவர் பதில் சொன்னாலும் அந்த பதிலுக்கு கேள்வியாய் இன்னொரு கேள்வி எழும். தனக்குள்ளேயே கேட்டுக் கொள்ளும் கேள்விக்கு, தனக்கே பதில் கிடைத்தால், அந்தக் கேள்வியே தன்னுள் முடங்கி நல்ல பதிலாகிப் போகும்.

"இன்னொன்று. பிறரிடம் பதிலை எதிர்பார்த்துக் கிடக்கையில், பதிலே பயனாய்த் துய்த்தவ்ர்கள் கூட்டம் பல்கிப் பெருகி, அவர்கள் பதில் சொல்லக் கூட நேரமின்றி, தான் அடைந்தப் பல்னைப் பெருக்கிக் கொள்ளும் வேலையில் மூழ்கிப் போவ்ர். பயனடைந்தோர் கூட்டம் பெருகப்பெருக, பயனடையாதோர் பின்னுக்குத் தள்ளப்படுவர்.

"அத்னால் வாழ்க்கை என்பது கேள்விகளால் நிரம்பியது என்பது மட்டுமல்ல, உள்ளத்துள் எழும் கேள்விகளுக்கு நல்ல பதில்களைப் பெறுவதும் நம்மிடமே இருக்கிறது என்று தெரிகிறது. 'ரொம்ப சரி. தன்னுள் கேள்விகளே எழாதவ்ன்?' என்று கேட்டால், 'சாரி, டெட் வுட்டுக்கு சமம். இந்த நிலை அவன் வாழ்வின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாகிப் போகும்' என்று தான் சரிததிரம் சொல்கிறது," என்றவர், மிகவும் அர்த்தத்துடன் அவையைச் சுற்றிப் பார்த்தார்.

அவரின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட கிருஷ்ணமூர்த்தி எழுந்திருந்து, அடுத்த கால்மணி நேரத்தில் அமைய்ப்போகும் அடுத்த அமர்வுக்கு, வழக்கம் போல கீழ் தளத்திற்கு வந்து விடுங்கள். அந்த அமர்வை, 'கேள்வி--பதில்' அமர்வாக வைத்துக் கொள்ளலாமா?" என்று புன்னகையுடன் கேட்க, அவையே கலகலப்புடன் எழுந்திருந்தது.

பூங்குழலியும், சிவராமனும் எதுபற்றியோ ஆழ்ந்து விவாதித்தபடி, அவைக்கு வெளியே வந்தனர். பாதி வழியில் குறுக்கிட்ட மாலுவைப் பார்த்து, "நன்னா பாடினீங்க.. உங்கள் குரல்வளம் அற்புதம்" என்றார் பூங்குழலி.

(தேடல் தொடரும்)

Wednesday, October 28, 2009

ஆத்மாவைத் தேடி....12 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

12. மனம் என்னும் தொடர்புச் சாதனம்

மாலு பாட்டைப் பாடி முடித்ததும் அவையே கரகோஷத்தில் அதிர்ந்தது.

அந்த கரகோஷ ஒலி அடங்கும் வரை காத்திருந்து விட்டு, மாலுவைப் பார்த்து லேசாக சிரித்துக் கொண்டே மேகநாதன் கேட்டார். "அற்புத்மாகப் பாடினீர்கள், மாலு! இப்படி இராகத்தோடு இந்தப் பாட்டைப் பாடவேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை நான் தெரிவ்து கொள்ளலாமா?"

மாலு பலமாகச் சிரித்தே விட்டாள். "என்னவோ தோணித்து, பாடணும்னு. எதுவும் மனசிலே தோணித்துன்னா, உடனே அதைச் செஞ்சிடறது என்னோட வழக்கம். அத்னால் தான் உங்கள் அனுமதி கேட்டு உடனே செஞ்சிட்டேன்."

"ஓ.. வெல். மன்சிலே தோணித்துன்னு சொன்னீங்களே.. அதான் இங்கே முக்கியம். தப்பா நினைக்க மாட்டீங்கன்னா, இன்னொரு கேள்வி. நான் உங்களைப் பாட வேண்டாம்னு சொல்லி இருந்தா, என்ன செஞ்சிருப்பீங்க?.."

"என்ன செஞ்ச்சிருப்பேன்?" என்று தனக்குத் தானே கேட்டுக் கொள்கிற மாதிரி கேட்டு விட்டு, "என்ன செஞ்ச்சிருப்பேன்னா, சபைலே நாலு பேருக்கு கேக்கறமாதிரி தானே நீங்கப் பாடக் கூடாதுன்னு சொல்லியிருபபீங்க.. எனக்குள்ளேயே பாடிக்க எந்த ஆட்சேபணையும் இல்லே தானே.. அதனாலே, லேசா முணுமுணுக்கற மாதிரி எனக்குள்ளேயேப் பாடிண்டிருப்பேன்."

"அற்புதம், மாலு! நீங்க உணர்றதை அழகாச் சொல்லீட்டீங்க" என்று மன்சார சிலாகித்தார் மேகநாதன். "மாலு சொன்ன இதைத்தான் நானும் சொல்ல வந்தது. மாலுவுக்கு முன்னாலேயே ப்ழக்கப்பட்டப் பாடல் இது. பல தடவை முன்னாலேயே அவங்க பாடி ரசிச்ச பாடல்! சங்கீத ஞானத்தோடு பாடக்கூடியப் பழக்கம் இருக்கறதினாலே, முன்னே பலதடவை அவங்களும் இந்தப் பாட்டைப் பாடி இருக்கிறதினாலே, இந்தப் பாட்டைப் பத்தி நாம இங்கே பிரஸ்தாபிக்கிற பொழுது இராகத்தோடு அந்தப் பாட்டை அலங்கரிக்கணும்ன்னு அவங்க மனசு விரும்பறது. டெக்னிக்கலாக ச் சொல்லணும்னா, இராகம் மூலமா அந்தப் பாட்டோடு தொடர்பு கொள்ள் அவங்க மனசு விரும்பறது.

" மனசு! மனசு! மனசு! இங்க இந்த மனசோட அழகு அற்புதமாப் பிரகாசிக்கிறது! விருப்பப் பட்டதைச் செய்யப் பழகிய மனசு, பாட வேண்டாம்னு நான் தடுததிருந்தாலும், எனக்குள்ளே
பாடியிருப்பேன்னு அவங்க சொல்றாங்களே, அதான் ஒண்டர்புல்! அதான் ஆட்டமேட்டிக்கா நடக்கும்! நாட்டியம் ஆடறவங்களா இருந்தா அவங்க பாதங்கள் ஜதி போட்டிருக்கும்! மன்சின் விருப்பும், வெறுப்பும், வலியும், வேதனையும், குஷியும், கொண்டாட்டமும், அவலமும், ஆனந்தமும்அளவில் கொள்ளமுடியாத விஸ்தாரமானவை. இவற்றை எல்லாம் பின்னால் பார்க்கலாம்.

"இப்போதைக்கு வெளியே வியாபித்திருக்கிற பிரபஞ்ச காந்தசக்தி, நமக்குள் இருக்கிற வெளிகாந்த சக்தியின் எச்சமான உள்காந்தசக்தி, இரண்டையும் தொடர்பு படுத்துகின்ற மனசு--இந்த மூன்று விஷயங்க்களை கவனமாக நினைவில் கொள்ளுங்கள். பிரபஞ்ச சக்தியை தலைவனாகக் கொண்டு, 'தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே' என்று சொன்னானே, கம்பன், அந்தக் கம்பனும் தன் உள்காந்த சக்தியைச் சரணாக்கி தலைவனிடத்து சமர்ப்பித்துத் தான் தனது காவியத்தை தொடர்ந்து பாடத் தொடங்குகிறான். மனமாகிய இணைப்புத் தொடர் மூலம், பிரபஞ்ச சக்தியை விரும்பி வேண்டிப்பெற்று, உள்காந்த சக்தியின் வலிமையை மேலும் கூட்டிப் பிரகாசிக்கச் செய்கிறான். இதுதான் வெளிப்பிரபஞ்ச சக்தி இறை சக்தியாய் நம்முள் தேங்கி வெளிப்படும் ரகசியம்.

"'உள் போந்தவை எல்லாம் வெளிப்பட வேண்டும்; வெளிப்பட்டவை எல்லாம் உள்வாங்க வேண்டும்' என்பது விஞ்ஞான உண்மை. மனமாகிய தொடர்புச் சாதனத்தைப் பிரயோகித்து
வெளிப் பிரபஞ்ச சக்தியை நாம் உள்வாங்க வேண்டும்.. அது ஒன்றே நம் வேலையாகிப் போகும்.. பிரபஞ்ச சக்தியை மனசால் தொடர்பு கொண்டு வேண்டிப் பெறுதலை, இறை வழிபாடு என்று சொன்னால் உங்களுக்கு ஆட்சேபணை இல்லையே?" கைகளை மார்புக்கு நேராகக் குவித்து அபிநயத்துக் காட்டினார் மேகநாதன்.

மேகநாதனின் நீண்ட உரையை உள்வாங்கிக் கொண்ட உற்சாகத்தில் அவையே ஸ்தம்பித்து நின்றது.

(தேடல் தொடரும்)

Saturday, October 24, 2009

ஆத்மாவைத் தேடி....11 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

11. காந்த வெளி

வழக்கத்திற்கு மாறாக இந்தத் தடவை அவைக்கூட்டம் மஹாதேவ் நிவாஸின் மேல் தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த இடம் மேல்கூரை இல்லாமலேயே இருந்ததினால், அவையில் அமர்ந்திருந்தோர் தலைக்கு மேலே வெளிர் நீலநிற ஆகாயம் நிர்மலமாகத் தோற்றமளித்தது.

எப்படித்தான் அப்படிப்பட்ட ஒருமுக எண்ணம் அத்தனை பேரிடமும் குவிந்தது என்றுத் தெரியவில்லை. இது, மனம் பற்றி மிக மெலிதாக பிரயோகிக்கப்பட்ட ஒரு சிந்தனைத்துளி தான்; அது பரவலாகப் பெரிதாகி அத்தனை பேரையும் பற்றிக் கொண்டது தான் ஆச்சரியம். அதன் விஸ்வரூபம் எல்லோரிடம் பூரித்துக் கிளம்பிய ஆனந்தத்திலிருந்து வெளிப்படையாகத் தெரிந்தது.

நிவேதிதா கையில் ஒரு கற்றைக் காகிதத்துடன் இங்கேயும் அங்கேயும் அலைந்து கொண்டிருந்தார். கிருஷ்ணமூர்த்தியைக் கண்டவுடன்,தன் கையிலிருந்த காகிதக்கற்றைகளைப் புரட்டி அவரிடம் காட்டி ஏதோ சொல்ல, கிருஷ்ணமூர்த்தியின் முகம் பிரகாசமடைந்தது. நிவேதிதா கொடுத்த பேப்பரை வாங்கி தனது ஃபைலில் பத்திரமாக வைத்துக் கொண்டார்.

இந்த சமயத்தில் தான் மனவியல் அறிஞர் மேகநாதன் அவைக்குள் அவசர அவசரமாகப் பிரவேசித்தார். அவரைக் கண்டதும் ஒரு யுகபுருஷனைப் பார்த்து பரவசப்பட்ட சந்தோஷத்துடன் அவை குதூகலித்து அடுத்த நிமிஷமே மெளனமாயிற்று. கிருஷ்ணமூர்த்தி மேடைகருகில் மேகநாதனை சந்தித்து தன்னிடமிருந்த கோப்பை அவரிடம் கொடுத்தார். புன்முறுவலுடன் மேகநாதன் அதைப் பெற்றுக்கொண்டார்.

சரியாக ஒன்பது மணி. சிவன் கோயில் காலை வழிப்பாட்டை முடித்துக்கொண்டு மாலு கிழக்குப்பகுதி வழியாக அவையுள் நுழைந்தாள். அவள் நடந்து வந்ததில் ஒரு அசாத்திய அமைதியும் முகத்தில் திருப்தியும் தெரிந்தது. அவளுக்கு முன்னாலேயே வந்து சிவராமன் வேறொரு இடத்தில் அமர்ந்திருந்தார்.

"நேற்று விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கலாமா?" என்று புன்முறுவலுடன் அவையைப் பார்த்தார் மேகநாதன்.

அவையின் உற்சாகம் அவர்களின் ஆமோதிப்பில் கலகலத்தது.

"நல்லது. இந்த அமர்வின் இறுதியிலும் அதற்காக நேரத்தை ஒதுக்கி நம் ஒருவொருவருக்கொருவர் ஏற்படும் சந்தேகங்களையும் தெளிந்து கொள்ளலாம். உங்களுக்குள் 'ஏன் இப்படி?' என்று கிளர்ந்தெழும் சில வினாக்கள், அதைப் பற்றி யோசிக்கும் எனக்கும் சில உண்மைகளை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்குமாதலால், உங்களுக்கேற்படும் ஐய வினாக்களை எக்காரணங்கொண்டும் கேட்காமல் இருந்து விடாதீர்கள். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், 'ஆத்மா'வைப் பற்றி உலகுக்குப் பிரகடனம் பண்ண மனோகர்ஜி ஏற்பாடு செய்திருக்கும் நிகழவிருக்கும் சதஸிற்கு முன்னாலான இந்த அமர்வின் அர்த்தமும் அதுதான். முழுமையான கருத்துக்களை முன்வைக்கப் போகும் இந்த சதஸுக்கான வரைவுகளுக்கான முனேற்பாடான அமர்வுகள் இவை. இந்த அமர்வுகளில் தாம், துறைதோறும் நாம் சில வரைவுகளை வரைந்து கொண்டு சதஸில் வைக்கப்போகிறோம். ஆகவே இந்த உரைக்கு பின்னாலான நமது வினாக்களும், அவற்றிற்கான விடைகளும் இறுதி வரைவுகளைத் தயாரிக்க மிக மிக முக்கியமானவை" என்று ஒரு முகவுரையாற்றி மேற்கொண்டு பேசத் தொண்டையைச் செருமிக் கொண்டார் மேகநாதன்.

"இந்த மகாதேவ் நிவாஸின் மேல்தளப்பரப்பில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் காரணமே இது தான். மேல் பரந்து விரிந்திருக்கும் ஆகாயத்தை அண்ணாந்து பாருங்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்திருக்கும் சமுத்திரம் போலவேயான பரந்து கிடக்கும் ஆகாயப்பரப்பு. பஞ்சுப்பொதிகளைப் போலத் தோற்றமளிக்கும் மேகக்கூட்டங்கள். அவை ஊர்ந்து மெல்ல நகரும் விநோதம்! அவை ஊர்வதால், ஆகாயத்தின் எல்லையே அதுவல்ல என்றுத் தெரிகிறது. கீழே இந்த மேகக்கூட்டங்கள் என்று இந்த மேகக்கூட்டங்களுக்கு மேலே போய் ஒரு விமானத்தில் பயணிக்கையில் அதற்கும் மேலே காணப்படுகின்ற பரந்த ஆகாயத்தின் பரப்பே ஏகாந்த வெற்றுவெளியாகத் தான் தென்படுகிறது. இந்தப் பிரபஞ்சத்தின் கூரையாகத் திகழும் அகண்ட வெளியெங்கணும் காந்த சக்தி நீக்கமற நிறைந்து பரவி விரவிக் கிடப்பதினால் தான் சூரியனும், சந்திரனும் இவை போன்ற இன்னபிற கிரகங்களும் ஒன்றிற்கொன்று முட்டி மோதிக்கொள்ளாமல், ஒரு பிரபஞ்ச விதிப்படி (Universal Law) இயங்கிக் கொண்டிருக்கின்றன.

"பிரபஞ்சக் கோட்பாட்டில் பூமி என்பது மிகச்சிறிய ஒரு துகள். அந்தத் துகளில் துள்ளித் திரியும் மனிதன் என்னும் துணுக்கு போன்றத் துகளிலும் அந்த பிரபஞ்ச காந்த சக்தியின் நீட்சி நிரம்பி, பிரபஞ்சத்தின் ஒரு துணுக்கு போன்ற காந்தத்துகளாக மனிதனும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். ஆக, மனிதனும் பிரபஞ்ச காந்த சக்தியின் ஒரு துணுக்கு என்பது உண்மை.

"மின் வேதியியல் அடிப்படையில் மூளை இயங்குகிறது என்பது இன்றைய விஞ்ஞானத்தின் முடிவென்றால், அந்த அதன் இயக்கத்திற்கு மூலகாரணமாக இருப்பது பிரபஞ்ச காந்தசக்தியின் ஒரு துகளாக நாமும் திகழ்வதே. இதயம் போன்ற முக்கியமான உறுப்புகள் இயங்குவதற்கும் அந்த பிரபஞ்ச சக்தி நம்முள் வியாபித்திருப்பதே காரணம். உடலின் உள்ளார்ந்த உறுப்புகளின் நில்லாத இயக்கத்திற்குக் காரணமாதலால், உயிரின் இயக்கத்திற்கும் காரணம் இதுவே. இதுவே காரணம் என்று சுலபமாக சொல்லிவிடுவதைத் தாண்டி, அந்த பிரபஞ்ச காந்தசக்தியின் தொடர்பு இருக்கிறவரை உயிர் இயக்கம் இருப்பதாகவும், தொடர்பு துண்டிக்கப்படுகையில் அல்லது சக்தியிழந்து தொடர்பிலிருந்து விடுபடுகையில் உடல் இயக்கம் ஒடுங்கி மரணம் சம்பவிப்பதாகவும் கொள்ளலாம்."

அவை முச்சூடும் அமைதி ஆட்கொண்டு அத்தனை பேரும் மேகநாதன் ஆற்றும் உரையை மிக்க கவனத்துடன் கேட்டுக் கொண்டிருக்கையில், நோட்ஸ் எடுப்பவர்களின் வசதிக்காவும் நின்று நிதானித்து அவர் தொடர்ந்தார். "ஆக, பிரபஞ்ச வெளியின் தொடர்ச்சியான ஒரு கூறாகத்தான் மனிதன் ஜீவித்திருக்கிறான். பிரபஞ்ச சக்திக்கும், மனிதனுக்கும் ஒரு தொடர்புச்சாதமாக அவன் மனம் திகழ்கிறது. தனக்குத் தேவையான சக்தியை பிரபஞ்ச சக்தியிடமிருந்து பெறுகின்ற ஆற்றல் மனதுக்கு உண்டு. பிரபஞ்ச பேராற்றலையே இறைவனாக, இறைசக்தியாகக் கொண்டால், அந்த சக்தியை சிந்தாமல் சிதறாமல் நம்முள் உள்வாங்கிக் கொள்வதற்கு மனமே முழுமுதல் சாதனமாகிப் போகிறது. இன்று இதைப்பற்றி விவரமாகப் பார்க்கலாம்.

"அதற்கு முன், பிரபஞ்ச சக்தியை இறைவனாக, தலைவனாக வரித்துப் பாடிய தமிழ்க்கவிஞன் ஒருவனின் பாடலைப் பார்ப்போம். அந்தக் கவிஞனின் பெயர் கம்பன்; கவிஞர்களுக்கெல்லாம் சக்ரவர்த்தியாகப் போற்றப்பட்டவன். ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் கதையை தமிழில் இராமகாதையாக வடித்தவன். அந்த இராமகாதையின் இறைவாழ்த்துப் பாடலாக பிரபஞ்ச சக்தியை இறைவனாக, தன் தலைவனாக வாழ்த்தி தனது 'இராமகாதை'யை எப்படித் தொடங்குகிறான், பாருங்கள்!..

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே
-- என்று மேகநாதன் கவிச்சக்ரவர்த்தியின் அந்தப் பாடலைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, "நான் இராகத்தோடு அந்த அருமையான பாடலை இந்த அவையில் பாடலாமா?" என்று அனுமதி கேட்டு நாட்டை ராகத்தில் இராமகாதையின் அந்தக் கடவுள் வாழ்த்துப் பாடலை மாலு பாடினாள்.

அவையே மெய்மறந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்தது.

(தேடல் தொடரும்)

Sunday, October 4, 2009

எஸ். ஏ. பி. யின் "நீ"

சிறுகதையோ அல்லது புதினமோ எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றை எழுதும் எழுத்தாளர்களில் தான் பலவிதம் என்றால், இவற்றை வாசிக்கும் வாசகர்களிலும் பலரகம். எந்தப் புத்தகத்தையாகவது குறிப்பிட்டு "இதைப் படித்திருக்கிறீர்களா?" என்று யாரையாவது கேட்டுப்பாருங்கள். நாமே கொஞ்சமும் எதிர்பார்த்திராத பலதினுசுகளில் பதில் வரும். "என்னத்தை எழுதிக் கிழிச்சிருக்கான்?" என்பதிலிருந்து "நாலு பக்கத்துக்கு மேலே நகர முடியலே; வெறும் குப்பை!" என்று ஒரேயடியாக கைகழுவி விடுபவர்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தோமானால், 90% பேர் 'இது இப்படியான கதை' என்கிற அளவில் தான் புரட்டியிருப்பார்கள்.

ஒரு முழு நாவலையே நாலே வரிகளில் சொல்லி விடுவோரே பெருவாரியான வாசகர்கள். மகாபாரதத்தைக் கூட ஒரே வரியில் சொல்லக் கூடிய எமகாதகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அது முக்கியமில்லை. 200 பக்க நாவலை எழுதியவர், எடுத்த புத்தகத்தை கீழே வைக்க முடியாமல், எழுதிய அந்தக் கதையை எப்படி நகர்த்திச் சென்றிருக்கிறார் என்பதை ரசித்துப் படிப்பவர் வெகுசிலரே. அந்த வெகுசில ரசனையாளர்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இவர்கள் எதுகுறித்தும் பேசவும் எழுதவும் விமரிசிக்கவும் தெரிந்தவர்களாய் இருப்பார்கள். இவர்கள் இளைஞர்களாய் இருப்பார்களே ஆயின், இவர்களே எதிர்கால தமிழ் எழுத்துலகின் நம்பிக்கை நட்சத்திரங்கள்.

குந்தலாவின் உள்ளத்தைக் கண்ணன் கவர்ந்தது இப்படி நேரவேண்டும் என்று விதித்திருந்ததைப் போல யதேச்சையாய் நடந்த சம்பவம்.

ஒருதடவை பார்த்த பார்வையிலேயே கண்ணனின் நெஞ்சத் தடாகத்தில் சம்மணம் போட்டு உட்கார்ந்தவள் சகுந்தலா. ஊட்டிக்கு தோழிகளுடன் சுற்றுலா வந்திருந்த சகுந்தலாவை பாதி பிக்னிக்கில் எதிர்பாராமல் மறுபடி சந்திக்கிறான் கண்ணன். இதுவரை தான் நான் உங்களோடு.. இனி அமரர் எஸ்.ஏ.பி.யின் எழுத்துக்கள் உங்கள் கூட வரும். மனிதர் எவ்வளவு இயல்பாய், லாவகமாய் கதையை நடத்திச் செல்கிறார், பாருங்கள்:

ஜ.ரா.சுந்தரேசனிலிருந்து சுஜாதாவரை எத்தனையோ எழுத்து மன்னர்களின் மனம் கவர்ந்தவர் என்றால், சும்மாவா...

*********

பிறகு, "நான் ஒரு விளையாட்டுச் சொல்லுகிறேன், விளையாடலாமா?" என்றாள், சகுந்தலா.

"ஓ," என்றார்கள் மற்றவர்கள், குதூகலத்துடன்.

"நம் எல்லோருக்கும் தெரிந்த யாராவது ஒருத்தரைப்பற்றி நான் நினைத்துக் கொள்வேன். அது யாரென்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்," என்றாள் சகுந்தலா.

"நீ மனத்துக்குள்ளே நினைத்திருக்கிறது எங்களுக்கு எப்படித் தெரியும்!" என்று ஆச்சரியப்பட்டாள் லில்லி.

சகுந்தலா அவளை கையமர்த்தினாள். "கொஞ்சம் பொறேன்?.. நீங்கள் ஒவ்வொன்றாகப் பத்துக் கேள்வி கேட்கலாம். என்கிட்டேயிருந்து வருகிற பதிலிலிருந்து, என் மனத்தில் உள்ளதைக் கண்டு பிடித்துவிடவேண்டும். பத்துக் கேள்வி கேட்டும் உங்களாலே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நீங்கள் தோற்றுப்போனதாக அர்த்தம்."

"அதற்குப் பத்து கேள்வி எதற்கு!" என்று புருவங்களை உயர்த்தினான் கண்ணன். "ஒரு கேள்வி போதுமே? 'நீங்கள் யாரை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்' என்று கேட்டால் போயிற்று!"

"அதுதானே நடக்காது!" என்று மறுத்தாள் சகுந்தலா, அழுத்தம் திருத்தமாக. "நீங்கள் கேட்கிற கேள்விக்கு, 'ஆமாம், இல்லை' என்று மட்டும் தான் பதில் சொல்வேன்!"

"அப்படியா? ஆனாலும் பத்துக்கேள்வி ரொம்ப அதிகம் என்று தோன்றுகிறது," என்று தன் அபிப்ராயத்தைத் தெரிவித்தான் கண்ணன்.

"அதிகமா குறைவா என்பது விளையாடிப் பார்த்தாலல்லவா தெரியும்? எங்கே, நான் ஒருவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கண்டுபிடியுங்கள், பார்ப்போம்?" என்று சவால் விட்டாள் சகுந்தலா.

உற்சாக மிகுதியில் ஆளுக்கொரு கேள்வியாகக் கேட்க ஆரம்பித்தார்கள். சகுந்தலா காதைப் பொத்திக்கொண்டு விட்டாள். "ஒருவர் தான் கேட்க வேண்டும். மற்றவர்கள் எல்லோரும் வாயை மூடிக்கொண்டு வேடிக்கைப் பார்க்கலாம். குறுக்கே பேசக்கூடாது!" என்று விதி வகுத்தாள்.

"நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறவர் ஆணா, பெண்ணா?" என்றான், கண்ணன்.

சகுந்தலா வாயை இறுக மூடிக்கொண்டு பேசாமல் இருந்தாள்.

கண்ணன் விழித்தான் பிறகு, மற்றவர்களைப்பார்த்து, "என்ன இது! இப்படிப் பதில் சொல்லாமல் உட்கார்ந்திருந்தால்?" என்று புகார் செய்தான்.

"உண்டு, இல்லை, என்று நான் பதில் சொல்லலாமே தவிர, ஆண், பெண் என்று சொல்லக் கூடாது. ஆணா என்று ஒரு கேள்வி கேளுங்கள். அப்புறம் பெண்ணா என்று இன்னொரு கேள்வி கேளுங்கள்," என்றாள் சகுந்தலா.

"ஓஹோ என்றானாம்! இப்படிக் கேட்டால் பத்து என்ன, இருபது கேள்வி கேட்டாலும் போதாது. ஆணா என்கிறா கேள்விக்கு இல்லை என்று பதில் வந்தால், பெண் என்று முடிவு கட்டிக்கொள்ள முடியாதாக்கும்?.. சரி, சொல்லுங்கள், ஆணா?"

"உம்," என்றாள் சகுந்தலா.
"ஆமா என்று வாயைத்திறந்து சொல்லுங்கள்."
"ஆமா."
"சுமாராக என்ன வயதிருக்கும்?"
சகுந்தலா மெளனம் சாதித்தாள்.
"அவள் தான் கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டாளே, உண்டு இல்லையென்று மட்டுமே பதில் சொல்ல முடியுமென்று?" என்று ஞாபகப் படுத்தினாள் லில்லி.
"மறந்துவிட்டேன்," பேருக்கு ஒரு தரம் தலையில் குட்டிக்கொண்டான் கண்ணன்.
"டாக்டரா?"
"இல்லை."
"வக்கீலா?"
"இல்லை."
"இஞ்ஜினியரா?"
"இல்லை."
"எழுத்தாளரா?"
"இல்லை."
"ஓவியரா?"
"இல்லை."
"நடிகரா?"
"இல்லை."
"பின்னே யார், உங்கள் வீட்டுப் பால்காரரா?" என்றான் கண்ணன், ஆத்திரத்துடன்.

"சகுந்தலா, "இல்லை," என்று விடையிறுத்தது, மற்றவர்களின் சிரிப்பொலியில் மூழ்கிற்று.
அவள் விரலை மடக்குவதைக் கவனித்த கண்ணன் திகைப்புடன், "அதையும் ஒரு கேள்வியாகக் கணக்குப் பண்ணிவிட்டீர்களா என்ன? நான் சும்மா விளையாட்டுக்காகக் கேட்டேன்!" என்று மன்றாடினான்.

"நீங்கள் விளையாட்டுக்காகக் கேட்டிருக்கலாம், நான் வினையாகத்தான் பதில் சொன்னேன்!" என்றாள் சகுந்தலா, நெஞ்சில் ஈரமில்லாமல்.

ஜோதியும் லில்லியும் பஞ்சாயத்துப் பண்ணிய பிறகே சகுந்தலா விட்டுக்கொடுத்தாள்.

"உஸ். அப்பாடா. எத்தனை கேள்வி ஆகியிருக்கிறது, இதுவரைக்கும்? ஐந்தா?" என்று விசாரித்தான் கண்ணன். ஆனவை ஏழு என்று அவன் நன்றாக அறிவான். சகுந்தலாவிடம் சண்டை பிடித்து, கோபத்தில் அவள் முகம் எப்படிச் சிவக்கிறது என்பதைக்கண்டு ரசிக்கவே இந்த தந்திரம்.

ஆனால் சகுந்தலா முகம் சிவக்கவில்லை. "ஒன்பது" என்றாள் சாவதானமாக. கண்ணனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. "ஒருகாலும் இல்லை! ஏழே ஏழுதான் ஆகியிருக்கிறது!" என்று கூச்சலிட்டான்.

"அப்படியானால் சரி. நீங்கள் இரண்டைக் குறைத்துச் சொன்னீர்கள், நான் இரண்டைக் கூட்டிச் சொன்னேன்," என்று புன்னகை செய்தாள்.

"இன்னும் மூன்று கேள்வி உண்டு, இல்லையா?" என்று தனக்குள்ளேயே சொல்லியபடி, மோவாயைத் தடவிக்கொண்டான் கண்ணன். பிறகு, எப்போதோ கேட்க வேண்டிய கேள்வியை இப்போது கேட்டான்."தமிழரா?"

"ஆம்," என்றாள் சகுந்தலா.

"இரண்டே கேள்வி பாக்கி," என்று அறிவித்தாள், பிஸ்கட் தகரத்தில் உதிர்ந்து கிடந்த தூளை வாயில் போட்டுக்கொண்ட ஜோதி.

பளிச்சென்று அப்போது ஒரு யோசனை உதித்தது, கண்ணன் மூளையில். அவன் முகம் பிரகாசம் அடைந்தது. ஒருகால்.. அப்படியும் இருக்குமோ? பரபரப்பை அடக்கிக்கொண்டு அவளை மெள்ள நோக்கினான். அவள் கடைக்கண்ணால் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒருகால் அவள் கண்ணனைத்தான் மனத்தில் வைத்துக் கொண்டிருக்கிறாளோ? பொங்கியெழும் ஆவலைக் கஷடப்பட்டு உள்ளே அமுக்கி, "பட்டதாரியா?" என்றான்.

"இல்லை," சந்தேகமே கிடையாது. அவன் ஊகித்தது சரிதான். அவள் சொன்ன ஒவ்வொரு பதிலும் அவனுக்கு அப்படியே பொருந்துகிறதே!

கடைசியாக ஒரு கேள்வி: "பிரம்மசாரியா?"

"ஆம்," என்றாள் சகுந்தலா.

கண்ணன் புளகிதம் அடைந்தான். ஆனந்தம், பனிபோல் அவன் கண்களைத் திரையிட்டது.

"நான் நினைத்தது யாரை?" என்றாள் சகுந்தலா.

"நீங்களே சொல்லுங்கள், நான் தோற்றுவிட்டேன்," என்றான் அவன். தன் பெயரை அவளே சொல்லவேண்டும் என்பது அவன் ஆசை.

சகுந்தலா தயங்கினாள். பிறகு, "காமராஜ நாடார்," என்றாள்.

கண்ணனுக்கு பகீரென்றது. காமராஜ நாடாராவது!

"அடே! என்களாலே ஊகிக்க முடியவே இல்லையே!" என்று ஒருத்தி பாராட்ட, "நல்ல ஆளாகப் பிடித்தாய்!" என்று இன்னொருத்தி உதட்டைப் பிதுக்க, "இவருக்குக் கேள்வி கேட்கவே தெரியவில்லை!" என்று மற்றோருத்தி கண்ணனை இடித்துரைக்க, சகுந்தலாவின் கண்கள் அவனைப் பரிவோடு நோக்கி, அவனிடம் ஏதோ தெரிவிக்க முயன்று கொண்டிருந்தன. சிரிப்பை வரவழைத்துக் கொள்ளச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த கண்ணனுக்கு அந்த நயன மொழி புரிந்தால்தானே? 'முதலில்நான் உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன். கடைசியில் ஏனோ வெட்கம் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டுவிட்டது. சம்யோசிதமாக பெயரை மாற்றிவிட்டேன்," என்று அவள் சொல்லாமல் சொன்னது அவனுக்கு விளங்கவில்லை.

அப்புறம் ஏதேதோ விளையாடினார்கள். அவற்றிலெல்லாம் கண்ணன் மனம் ஈடுபடவில்லை.


--- "நீ" யில் எஸ்.ஏ.பி.



புத்தகம் கிடைக்குமிடம்:

மணிமேகலை பிரசுரம்,
தணிகாசலம் சாலை,
தி.நகர், சென்னை-17

தொலைபேசி: 044-24346082
Related Posts with Thumbnails