மின் நூல்

Thursday, March 31, 2011

ஆத்மாவைத் தேடி .... 2 மூன்றாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

2. காலத்தின் கட்டாயம்

ஹாதேவ் நிவாஸ் வழக்கம் போலவே அன்றைக்கும் விடியலில் இருந்தே களைகட்டி இருந்தது. கோசாலைப் பகுதியில் தொழுவத்தில் கட்டியிருக்கும் பசுக்களுக்குத் தான் விடியலின் வாசனை முதன் முதலில் தெரியும் போலிருக்கு. கழுத்து மணி அதிர்வுடன் அவை ''மா.." என்று உரத்த குரலில் அழைப்பதற்குத் தான் காத்திருப்பது போல் அவற்றின் குரல் கேட்டதும் அந்த அதிகாலையில் ஆசிரமமே விழித்துக் கொண்டு விடும். உடனே ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த பகுதிக்கான இயக்கம் துவங்கி மொத்த ஆசிரமத்திலும் சங்கிலித் தொடர் போன்றதான உற்சாகம் ஒன்றை ஒன்று தழுவியதான தோற்றம் கொடுக்கும்..

ஒருத்தர் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்கிற தேவை இல்லாமல், அவரவருக்கு அவரவரின் தொடர்ச்சியான பணிகள் பழக்கப்பட்டுப் போயிருந்தன. இதை அடுத்து அது என்று ஒவ்வொருவருக்கும் அடுத்தடுத்த பணிகள் நாள் பூராவும் காத்திருந்தன. நடக்கும் எல்லாப் பணிகளும் ஒன்றைத் தொட்டு ஒன்று என்று நடக்கவிருக்கும் மாபெரும் சதஸ்ஸின் வெற்றியுடன் முடிச்சுப் போட்டவையாக அதற்கான முன்னேற்பாடுகளுடன் அமைந்திருந்தது தான் ஆச்சரியம்.

இப்பொழுதெல்லாம் எட்டுமணி அளவில் சிவன் கோயிலில் அத்தனை பேரும் காலை தரிசனத்திற்குஒன்று கூடும் பொழுதே அன்றைய நிகழ்வுகளின் நீட்சியும் போக்கும் தீர்மானிக்கப்பட்டு விடுகின்றன. சதஸின் நெருக்கம் நெருங்க நெருங்க அவரவரைத் தொற்றிக் கொண்ட ஒரு இயல்பான எதிர்பார்ப்பு கலந்த வேகத்தினூடேயே, அலாதியான பெருமிதமும் முகத்தில் தவழ்ந்தது. இந்த சதஸ் காலத்தின் கட்டாயம் என்று அவர்கள் உணர்ந்திருந்ததும், அந்த கட்டாயத்தில் பங்கு கொள்ள வாய்ப்பு கிடைத்ததும் அவர்களது பெருமிதத்திற்கு காரணம் ஆயிற்று.

யோசித்துப் பார்த்தால் அந்தந்த காலத்திற்கான அவ்வப்போதையான தேவைகள் தாம் கட்டாயங்களாக உணரப்படுகின்றன போலும். தேவைகள் தாம் தங்களுக்கான தீர்வுகளைக் காணத் துடிக்கின்றன. ஊரும் உலகும் வரட்சியில் தீய்ந்து போய் துடிக்கும் பொழுது உணவுக்கான தேவை அதை எப்பாடுபட்டாவது உற்பத்தி செய்வதின் கட்டாயமாக உருவெடுக்கிறது. உயிர் வாழ்வதற்கான அத்தனைத் தேவைகளுக்குமான தீர்வுகள் கிடைத்த பின்னும், மனித மதிப்பீடுகளுக்கான தேவைகள் பூர்த்தியாகவில்லை என்றால் அவைகளும் அதற்கான தீர்வுகளுக்கான கட்டாயங்களாக உருவெடுக்கும்! அறிவார்ந்த ஒரு சமுதாயத்தின் தேவைகள் காலத்திற்குக் காலம் வெவ்வேறு உருக்கொண்டு வேறு வேறு தீர்வுகளுக்காய் வடிவெடுத்துக் கொண்டிருக்கும்.. காலத்தின் வளர்ச்சிப் போக்கில் தன்னையும் வளப்படுத்திக் கொள்ளும் அறிவின் எதிர்பார்ப்பு அந்தந்த தீர்வுகளுக்கான கட்டாயங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

"மனித மதிப்பீடுகளில் மிக உயர்ந்த ஒன்று நன்றியறிதல்" என்று அன்றைய உரையைத் தொடர்ந்தார் தேவதேவன்.

மொத்தம் பன்னிரெண்டு குழுக்கள். ஒவ்வொரு குழுவிற்கும் எட்டு பேர். ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு துறை சார்ந்தது. ஒவ்வொரு விவாதப் பகுதியிலும் பேசப்படுவவதை எல்லா துறை சார்ந்தவர்களும் குறித்துக் கொள்கிற மாதிரி, அங்கங்கே தங்கள் துறை சார்ந்த விளக்கமோ இல்லை குறுக்கீடுகளோ இருந்தால் அவ்வவ்போது பதிவு செய்கிற மாதிரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அத்தனைக் குழு சார்ந்திருப்போரும் சுற்றி அமர்ந்திருக்க நட்ட நடுவில் தேவதேவனின் குழுவினர் அமர்ந்திருநதனர். தனது குழுவின் நடுநாயகமாக அமர்ந்திருந்த தேவதேவன் சுற்றிலும் பார்த்து புன்முறுவலித்து விட்டு சொல்ல ஆரம்பித்தார். "மனித மனத்தின் ஆதியான அடிப்படையான குணம் இந்த நன்றியறிதல். தனக்கு நன்மை பயத்தவைகளின் பால் நன்றி செலுத்துதல். ஆதிமனிதன் மரவுரி தரித்து காடுகளில் திரிந்தலைந்த காலத்திலிருந்தே தனக்கு நன்மை செய்தவைக்கு நன்றி செலுத்தத் தவறியதில்லை. நிலத்தையும், நீரையும், நெருப்பையும், காற்றையும், பரந்த வான் வெளியையும் வணங்கத் தவறவில்லை அவன். வணங்குதல் இங்கே எங்கே வந்தது என்றால், நன்றி செலுத்துதலின் வெளிப்பாடு தான் வழிபடுதல். இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தவனுக்கு, அந்த இயற்கையே வழிபடும் தெய்வமாயிற்று. இது தான் ஆதிமனிதனின் அறிவார்ந்த செயலின் முதல் தொடக்கம்" என்றார் தேவதேவன்.

தேவதேவனின் பேச்சு அவையினரை மிகவும் கவர்ந்து விட்டது. அவர் பேச்சின் சுவாரஸ்யத்தில் ஏற்பட்ட அமைதியில் அவர் குரல் மட்டுமே தனித்த ஒரு ஒலியாய் வெகு நிதானத்துடன் ஒலித்தது.

"விட்ட இடத்திலிருந்து இப்பொழுது தொடர்வோம். பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒன்று சேர்ந்த ஆறு பேர் இறைவனின் படைப்பின் தாத்பரியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டி, பிப்பலாத முனிவரை அணுகி குருகுலக் கல்வி தங்களுக்கு அனுகிரகிக்க வேண்டிக் கொண்டனர் என்று பார்த்தோம். பிராணன் பற்றி அச்வலர் மகன் கெளசல்யன் கேட்டு விளக்கம் பெற்றார். மனத்தின் செயல்பாடுகளுக்கேற்ப மனிதனின் உடலும் உள்ளமும் உருக்கொள்கின்றன என்று தெரிந்து கொண்டோம்.

"பிரச்ன உபநிஷத்தில், இறை அறிவைத் தேடிப் புறப்பட்ட ஆறு பேரில் ஒருவரான சூரியனின் பேரன் கார்க்கியன் என்பவர், மனிதனின் விழிப்பு, தூக்கம், கனவு நிலைகளைப் பற்றியெல்லாம் விளக்கம் கேட்டு முனிவரிடம் விக்ஞாபிக்கிறார். அப்பொழுது பிப்பலாத முனிவர் கூறுவதாக பிரச்ன உபநிஷதத்தில் பல விளக்கங்கள் வருகின்றன" என்று சொல்லி தேவதேவன் சொல்லி கொஞ்சம் பேச்சை நிறுத்தி சுற்றும் பார்த்த பொழுது,

"இறை அறிவைத் தேடிப் புறப்படுதல் என்றால் இறைவனால் படைக்கப் பட்டவைகளைப் பற்றி அறிவு கொள்ளுதல் என்று என்று அர்த்தம் கொள்ளலாமா, ஐயா?" என்று சித்திரசேனன் கேட்டார்.

"ஆமாம். அப்படித் தான் கொள்ள வேண்டும் என்று தெரிகிறது" என்றார் தேவதேவன். "அந்தக்கால குருகுலக் கல்வியின் அமைப்பும் அப்படியாகத் தான் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. இது ஏன், எதனால் என்று தெரியாதவாறு மர்மமாக இருக்கும் விஷயங்களுக்கான காரணங்களை குருவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் என்றும் அர்த்தம் கொள்ளலாம். ஒரு குருவைத் தேடிக் கண்டு அவரது அன்றாடப் பணிகளுக்கான பணிவிடைகள் செய்து அவரிடம் கல்வி கற்பதற்கான மனநிலையையும் அதற்கான ஆற்றலையும் தேர்ச்சியையும் பெற்றார்கள். அறிவார்ந்த விஷயங்களை தேடியவர்கள் மட்டுமில்லை, அரசர்க்கும் குருகுலக் கல்வி முறை அவசியமான ஒன்றாக இருந்தது தெரிகிறது. நீதிபரிபாலனம் செய்து மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையைக் கொடுக்க வேண்டிய அரசனுக்கு வாழ்க்கையின் சகல விஷயங்களைப் பற்றிய அறிவும் தேவையான ஒன்றாக இருந்திருக்கிறது. அதனால் அரசிளம்குமரர்களும் குருகுலத்திற்கு அனுப்பப்பட்டு கல்வி பெற்றார்கள்" என்று சொன்ன தேவதேவன் தொடர்ந்தார்.

"பெருகின்ற கல்வியும் அதற்கான பாடத்திட்டங்களும் கூட எவ்வளவு அழகாக இருக்கிறது, பாருங்கள்! இந்தக் கல்வியைத் தெரியப்படுத்துகிற உபநிஷத்துக்களும் எல்லாவிதங்களிலும் பார்க்கப் போனால் பாடப்புத்தகங்கள் போலத்தான் இருக்கின்றன. எதுபற்றியும் எந்த ஞானமும் இல்லாமல், ஞானம் என்கிற ஒன்றே நிகழ்வாக எங்கும் இல்லாது உலகமே உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் பாரதத்தில் உடல், மனம், பிராணன், மூச்சு இதெல்லாம் பற்றி யோசித்திருக்கிறார்கள் என்பது தான் இந்த தேசத்திற்கான சிறப்பு...

"பிப்பலாத முனிவரிடம் கார்க்கியன் கேட்ட கேள்விகளைப் பாருங்கள். 'ஐயா, மனிதன் துயில்கையில் தூக்கத்தின் தாக்கத்தில் எவை துயில்கின்றன? எவை விழித்திருக்கின்றன? கனவு காண்கிறவர் யார்? ' என்று கேட்கிறான். தூக்கத்தில் ஆட்பட்டாலும், கனவு வருகையில் ஏதேதோ உணர்வுகளில் சிக்கிக் கொள்வதால் அயர்ந்த தூக்கத்திலும் ஏதோ அல்லது எதுவோ விழித்திருப்பதாக கார்க்கியனு க்குப் படுகிறது. அதனால் தான் தூக்கத்தில் விழித்திருப்பது யார் என்கிற கேள்வி அவன் உள்ளத்தில் எழுகிறது.

"அதற்கு முனிவர் சொல்கிறார்: 'கார்க்கியா! மாலையில் சூரியன் மறையும் பொழுது எல்லா ஒளிக்கதிர்களும் அதன் ஒளித்திரளில் எப்படி ஒடுங்குகின்றனவோ, காலையில் சூரியன் உதிக்கும் பொழுது எல்லா ஒளிக்கதிர்களும் எப்படி மீண்டும் ஒளிர்கின்றனவோ அதேமாதிரி மனிதன் தூங்குகையில் அவன் புலன்கள் அனைத்தும் அவன் மனத்தில் ஒடுங்குகின்றன' என்கிறார். அதாவது தூங்குகையில் புலன்கள் அத்தனையும் அவரவர் மனத்தில் ஒடுங்கி அவையும் துயில் கொள்கின்றன என்கிறார். அடுத்து,

"ப்ரணாக்னய ஏவைதஸ்மின் புரே ஜாக்ரதி /கார்ஹபத்யோ ஹ வா ஏஷோsபானோ வ்யானோ sன்வாஹார்யபசனோ யத்கார்ஹ- பத்யாத் ப்ரணீயதே ப்ரணயனாத் ஆஹவனீய: ப்ராண: "

"அவன் தூங்குகையில், பிராண அக்னிகள் மட்டுமே விழித்திருக்கின்றன. அபானனே, கார்ஹபத்யம்; வியானனே அன்வாஹார்யபசனம்; எது கார்ஹபத்யத்திலிருந்து உருவாக்கப்பட்டது?.. பிராணன் தான் உருவாக்கப் பட்டதால், அதுவே ஆஹவனீயம் என்கிறார் பிப்பலாத முனிவர்.

"புறவுலக நடவடிக்கைகளில் ஈடுபடுவதான புலன்கள் அயர்ந்து தூங்குகையில் பிராணன் மட்டும் இழையோடிக் கொண்டிருக்கிறது. பிராண சக்திதான் உயிர் உடலில் தங்கி இருப்பதின் அர்த்தம் ஆதலால் உடல், மன இயக்கத்திற்கு ஆதாரமான அது மட்டும் விழித்திருக்கிறது என்கிறார். துயில்கையில் மனத்தில் புலனுணர்வுகள் ஒடுங்குவதும், விழிக்கின்ற நேரத்து ஒடுக்கத்திலிருந்து மீள்வதும் பிராண சக்தியால் தான் என்பதால் அந்தப் பணிக்காக பிராண அக்னி விழித்திருக்கிறது என்கிறார்".

தொல்லியல் மேம்பாட்டுத் துறை சேர்ந்த அசோகன் எழுந்திருந்து," மேற்கொண்டு தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. கார்ஹபத்யம், அன்வாஹார்யபசம், ஆகவனீயம் என்கிற மூன்று வார்த்தைகளைச் சொன்னீர்களே! அவை பற்றியும் சொல்லிவிடுங்கள்" என்றார்.

"அதற்கு முன்னால் தூக்கம் பற்றி கார்கியன் கேட்டதற்கு பிப்பலாத முனிவர் சொன்னதை தொகுத்துப் பார்த்து விடுவோம். அப்படி முழுதையும் ஒன்றாக நினைவு கொண்டால் இனித் தொடர்வதைத் தொடர்வதற்கு செளகரியமாக இருக்கும்.." என்று தேவதேவன் அவையைச் சுற்றிப் பார்த்தார்.


(தேடல் தொடரும்)


Friday, March 25, 2011

ஆத்மாவைத் தேடி ….1 மூன்றாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

1. நினைவில் நீந்திய நிலவு முகம்

மயந்தியும் கிரிஜாவும் தங்கியிருந்த காபின் பகுதியிலிருந்து பார்ப்பதற்கு மாதுரி குடும்பம் தங்கியிருந்த காபின் கூப்பிடு தூரத்தில் இருப்பதாகப்பட்டாலும் சரிந்தும் நீண்டும் வளைந்தும் சென்ற ஐந்தாறு கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டி மாதுரி குறிப்பிட்டிருந்த அவர்களின் காபினை அடைவதற்கு பத்து நிமிஷங்களுக்கு மேலாகி விட்டது.

தனது காரை ஓட்டிக் கொண்டு தமயந்தி முன்னால் செல்ல அவளைத் தொடர்ந்து பின்னால் தன் காரில் கிரிஜா வந்தாள். பாப்-டார்ட்டை கையில் பற்றிய படியே சிணுங்கிக் கொண்டு வந்த ரிஷிக்கு மணிவண்ணன் அவன் வயசுக்கேத்த ஏதோ விளையாட்டு காட்டிக் கொண்டு வந்தான்.

முன்னால் சென்ற தமயந்தியின் கார் வளைந்து திரும்பி அந்த காபினுக்கு வெளியே நீண்டிருந்த வெற்றுவெளியை அடையும் வரை தாமதித்து பின்னால் சென்று தன் காரையும் வளைத்துத் திருப்பி தமயந்தியின் காருக்கு பக்கத்தில் நிறைய இடம் விட்டு நிறுத்தினாள், கிரிஜா.

அதற்குள் மாதுரி தன் காபின் வாசலுக்கு வந்து வெளியே நின்று கொண்டு இவர்களைப் பார்த்து சிரித்தவாறு வரவேற்றாள். உள்ளே அவள் கணவன் நின்று கொண்டு, "வாங்க.. வாங்க.." என்று எல்லோரையும் அழைத்தான். பின்னால் மாதுரியின் அண்ணனும், பெரியப்பாவும் புன்முறுவலுடன் நின்று கொண்டிருந்தனர்.

வாசல் பக்க வளைவில் ஷூக்களை கழட்டி விட்டு எல்லோரும் உள்ளே நுழைந்தனர்.

இவர்கள் தங்கியிருக்கும் காபினை விட கொஞ்சம் பெரிதாக இந்தக் காபின் இருந்தது சாதாரணப் பார்வைக்கே தெரிந்தது. "பரவாயில்லையே! எங்களதை விட இந்தக் காபின் பெரிசு தான்!" என்றாள் தமயந்தி, மாதுரியை நெருங்கி.

"அப்படியா.." என்ற மாதுரி வியப்பு காட்ட அருகிலிருந்த சோபாக்களில் அமர்ந்தனர்.

"தமா! இங்கே பார். ஃபயர் பிளேஸ் கூட எவ்வளவு பெரிசா இருக்குன்னு!" என்று கிரிஜா வலது கோடிப் பக்கம் கைகாட்டினாள்.

"ஓ! ஒண்டர்புல்.. எம்மாம் பெரிசு!" என்று தமயந்தி வியந்து ஆமோதித்ததைக் கண்டு சிரித்து விட்டாள் மாதுரி. பெரியப்பா பக்கம் கைகாட்டி, "அப்பா கூட இப்படித்தான் அடிக்கடி 'எம்மாம் பெரிசு'ன்னு தான் சொல்லுவார். ஆரம்பத்திலே எனக்கு இந்த 'எம்மாம்' என்னன்னு புரியலே.. ஒரு நாளைக்கு அவர்கிட்டேயே கேட்டு விட்டேன். கை ரெண்டையும் அகல விரிச்சுக் காட்டி இம்மாம் பெரிசுன்னார். இந்த இம்மாமும் என்னன்னு தெரியலே. நீங்களே சொல்லுங்கள். 'எம்மாம்' என்னன்னு தெரிஞ்சாத் தானே இந்த 'இம்மாமும்' என்னன்னு தெரியும்!" என்று சொல்லி குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.

சொல்லி வைத்தாற் போல பெரியப்பாவையும் சேர்த்து அத்தனை பேரும் சிரித்தனர். சிரித்து விட்டு பெரியப்பா கேட்டார். "அம்மாடி! சும்மாக் காச்சும் தானே சொல்றே?" மறுபடியும் 'கொல்'லென்ற சிரிப்பு அந்த காபின் பூராவும் படந்தது.

"எதுகை, மோனை இதெல்லாம் எங்க பெரியப்பாவுக்கு அத்துப்படி. பேச ஆரம்பிச்சாலே சரளமா வரும். அதை கேட்டு ரசிக்கறத்துக்காகவே இப்படி ஏதாவது நாங்கள் கிளப்பி விடறதுண்டு.. எங்க பெரியப்பா பெரிய கவிஞராக்கும்!" என்று மாதுரி பெருமையோடு சொன்னாள்.

"அப்படிப் போடு! அவர் ஜிப்பா போட்டிட்டிருக்கறதைப் பார்த்து நான் அப்பவே நெனைச்சேன்.. எழுத்தாளர், கவிஞர் இப்படி ஏதாவது இருக்கும்னுட்டு.." என்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டு பிரகாஷ் சொன்னான்.

"அதெல்லாம் அந்தக் காலம்! இப்பெல்லாம் இவங்க ஃபேஷனே மாறிடுச்சு. தெரியுமிலே!" என்றான் குமார்.

"எழுத்தும் மாறிடிச்சுல்லே; அதனாலே ஃபேஷனும் மாறிடிச்சு" என்றார் பெரியப்பா கூர்மையாக.

"வாஸ்தவம் தான், நீங்க சொல்றது" என்று குமார் அவர் சொன்னதை ஆமோதித்தான். "ஒரு காலத்திலே தமிழ்லே கதை, கவிதைன்னு எதையும் விட்டு வைக்கலே நான். படிச்சிட்டுத்தான் மறுவேலைன்னு ஒரு கிரேஸ் இருந்தது. இப்போ அதெல்லாம் எங்கே போனதுன்னே தெரியலே; என்ன காரணம்னு எனக்கே சரியாத் தெரிலே. ஒரு ஈடுபாடோட கவனத்தைச் செலுத்திப் படிக்க முடிலே. அவ்வளவு தான் சொல்ல முடியும்" என்றான்.

"அமெரிக்காலே இருந்திண்டு தமிழ் இலக்கியம் பத்தி அதுவும் தமிழ்லேயே ஒரு இலக்கிய விவாதம் ஆரம்பிச்சிடுத்தே!" என்று ஆச்சரியப்பட்டாள் கிரிஜா.

"அந்தந்த நேரத்லே அதைஅதைப் பேசிடணும். கிடைச்ச சான்ஸைவிடக்கூடாது. ஒரு இலக்கியவாதி பெரியப்பா இங்கே இருக்கறச்சே, இப்படிப் பேசற இந்த வாய்ப்பை நழுவ விடலாமா?.. அதான்" என்றான் குமார்.

"ஒரு சாப்பாட்டுப் பிரியன் நான் இங்கே இருக்கேன். என்னைத்தான் யாரும் கண்டுக்கக் காணோம்.." என்று பேச்சை திசைதிருப்பினான் மாதுரியின் அண்ணன்.

மாதுரியும், கிரிஜாவும் கிச்சன் அறைப் பக்கம் போய்விட்டு வந்தனர். ரிஷிக்கு கிரிஜா பாலை பாட்டிலில் ஊற்றிக் கொண்டு வந்தாள். மணிவண்ணன் தட்டு நிறைய தனக்குப் பிடித்த எதையோ வாங்கிக் கொண்டு பின்னால் வந்தான்.

"இதோ.. அபிடைட்டோட ஆரம்பிச்சிடலாம், அண்ணா" என்று வெவ்வேறு தட்டுகளில் சமோசா, கட்லெட் என்று அவள் கொண்டு வர, அவள் அண்ணன் நடுஹாலில் நீண்ட ஒரு டேபிளை நகர்த்த அதன் மேல் கொண்டு வந்தவைகளை வைத்தாள் மாதுரி. தொட்டுக் கொள்ள சட்னி, தக்காளி சாஸ், வெங்காயப் பச்சடி எல்லாம் தனித் தனியாக. ஸ்பூன்கள், ப்ளேட்டுகள், கோக் பாட்டில்கள் எல்லாம் ரெடி.

"என்னங்க.. இந்தியாவிலே இருக்கிற மாதிரியே ஒரு சூழ்நிலையை உருவாக்கிட்டீங்க போலிருக்கு" என்று எழுந்து ப்ளேட்டையும் ஸ்பூனையும் பிரகாஷ் எடுத்துக் கொண்டான்.

"பச்சடிலே பாருங்க.. கொத்தமல்லியைக் கூட அரிஞ்சு போட்டிருக்கோம். கீழே இறங்கிப் போனா கான்டான்லே அத்தனையும் கிடைக்கிறது. சமோசா கூட நம்ம நாட்டு ஒரு பிரட் கடைலே ஆர்டர் கொடுத்து வாங்கினதுதான்" என்றாள் மாதுரி.

"இந்த சாப்பாட்டு விஷயம் மெயின். அது ஓக்கே ஆயிடுத்துன்னா எங்கே வேணா வேலை செஞ்சு பிழைப்பை ஓட்டலாம்.. என்ன சொல்றீங்க?" என்றான் சுரேஷ்.

"கரெக்ட்.. அதுனாலே தான் நாடாறு மாசம் காடாறு மாசம்ன்னு இருக்கற ஸ்நோவையும், கடும் வெயிலையும் ஒரு பொருட்டா நெனைக்கத் தோணலே. பழகிப் போயிடுத்துன்னா, அது கூட ரசிக்கிற மாதிரி தான் இருக்கு. ஆம் ஐ கரெக்ட்..?" என்றாள் தமயந்தி.

இத்தனையையும் ஒரு மெல்லிய புன்முறுவலுடன் ரசித்துக் கொண்டிருந்தார் பெரியப்பா. கரெக்ட் என்று பிறர் சொல்வதை ஆமோதித்து, தான் சொல்வது சரியா என்று பிறரிடம் சரிபார்த்துக் கொள்ளும் தமயந்தியின் அணுகுமுறை அவருக்குப் பிடித்திருந்தது.

"கரெக்ட், தமயந்தி.." என்று அவள் சொல்வதை ஆமோதித்த மாதுரிக்கு, தமா பேசும் முறை, பேசுகையில் கொஞ்சமே தலையைச் சாய்த்துப் பேசுகிற பழக்கம், அதே நேரத்தில் சொல்லி வைத்தாற் போல சிரிக்கும் கண்கள், வட்ட முகத்தில் தீர்க்கமான அந்த நெற்றி அமைப்பு, நெற்றி முகட்டுக்கு மேலே படிந்து வாரினாலும் நெளிநெளியாய் பளபளத்த கூந்தல் அழகு என்று எல்லாமே வெகு அருகில் பார்க்கும் பொழுது இத்தனை நேரம் தெரியாத ஒன்று தெரிந்து சடாரென்று பொறி தட்டிய மாதிரி தன் உயிரில் கலந்த ஒருவரின் முக அமைப்பை அவள் நினைவுக்குக் கொண்டு வந்தது.

அது சின்ன வயசில் தன் பிஞ்சுக் கரங்களால் அவள் தடவிப் பார்த்த வட்ட முகம். அம்புலி காட்டி அமுதூட்டுகையில் அங்கே பார்க்காமல் கையைக் காற்றில் அளைந்து அளைந்து அவள் ஆசையுடன் தொட்டுப் பார்த்த முகம். சின்ன வயசில் விளையாட்டுத்தனமாய் கழுத்தைச் சுற்றிக் கொண்டு தொங்குகையில், 'வலிக்கறதுடி..' என்று சிணுங்கிய முகம், துள்ளித் திரிந்த அவளது பருவ வயதில் அவளைத் தோழியாய் பார்த்துப் பதைபதைத்த முகம்-- அந்த பெற்ற தாயின் முகச்சாயலைப் போலவே இருந்த இன்னொருவரின் முகத்தை வெகு நெருக்கத்தில் பார்த்த சந்தோஷத்தில் மாதுரியின் மனம் குதி போட்டது.


(இன்னும் வரும்)



Friday, March 18, 2011

ஆத்மாவைத் தேடி …. மூன்றாம் பாகம்

இது வரை வந்தது..... முன் கதைச் சுருக்கம்.


கிருஷ்ணமூர்த்தி தமிழகத்தின் அரியலூரைச் சேர்ந்தவர். இறைவனின் பெருமை போற்றும் கதைகள் கூறி உபன்யாசங்கள் செய்பவர். அதன் பொருட்டு பல ஊர்களுக்கு பிரயாணப்படுவதால், பெரும்பாலும் வீட்டை விட்டு விலகி வாசம் செய்வதாகவே அவர் வாழ்க்கை ஆகிவிட்டது. அப்படிப்பட்டவருக்கு திடுமென மனத்தில் ஒருநாள், 'இமயமலை கைலாயத்திற்குச் சென்று இறைவனை தரிசிக்க வேண்டும்'என்று லேசாக கீற்று போல் ஒளிவிட்ட ஒரு நப்பாசை திண்மையான எண்ணமாக உருபெற்று நிஜமாகவே கிளம்பிவிடுகிறார்.

கிளம்பியவர் தில்லி ரயில் நிலைய பிளாட்பாரத்தின் ஒரு ஒதுங்கிய மூலையில் பெஞ்ச்சில் அமர்ந்து ஜம்மு தாவி எக்ஸ்பிரஸூக்குக் காத்திருக்கும் இரவில் அப்படியே அயர்ந்து விடுகிறார். அரைத் தூக்கமா, விழிப்பு நழுவிய நிலையா என்று சரிவர புரியாத ஒரு சூழலில் யாரோ ஒரு பெரியவர் தன் அருகில் அமர்ந்து பேச்சுக் கொடுத்த தருணத்தில், 'வந்த வேலை முடியவில்லை, கிருஷ்ணமூர்த்தி! இன்னும் நிறைய இருக்கிறது' என்று நினைவூட்டுகிற தொனியில் அவரிடம் சொன்ன நினைவு அவர் நெஞ்சில் தேங்கி விடுகிறது. நினைவு மீண்டு விழிப்புற்ற போது ஜம்மு தாவி எக்ஸ்பிரஸைத் தவற விட்டு விட்டது அவருக்குத் தெரிகிறது.

அதே நேரத்தில் ஸ்டேஷன் மாஸ்ட்டர் ஆள் அனுப்பி அவரைத் தேடுகிறார். தன்னைத் தேடி வந்தவருடன் இரயில் நிலைய அதிகாரியை அணுகிய கிருஷ்ணமூர்த்திக்கு, மனோகர்ஜி என்பவர் தான் நடத்தும் ஆசிரமத்திற்கு அவரை அழைத்துவர கார் அனுப்பிக் காத்திருப்பதாகத் தெரிகிறது. இரயில் நிலைய பிளாட்பார இருட்டில் சூசகமாகக் கிடைத்த ஆக்ஞை இதுதானோவென்று எண்ணுகிறார். எதற்காக இதெல்லாம் என்று சரியாகப் புரிபடவில்லை என்றாலும் அடுத்தடுத்து வழி நடத்துகிற திசையில் செல்ல அவர் மனம் விரும்புகிறது. இந்தப் பிறவியில் தான் செய்தாக வேண்டிய ஏதோ பணி காத்திருப்பது போலவும், அதைச் செய்வதற்கு தருணம் வந்து தான், அதற்காகத் தன்னை அழைத்துச் செல்வது போலவும் அவருக்குத் தோன்றுகிறது. செய்தாக வேண்டிய அந்தப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் உற்சாகத்துடன் கிருஷ்ணமூர்த்தி வந்தவருடன் கிளம்புகிறார்.

மகாதேவ் நிவாஸ் என்னும் அந்த ஆசிரமத்தில் கிருஷ்ணமூர்த்திக்கு நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. 'ஆத்மாவைத் தேடி' என்னும் தலைப்பில் தில்லியில் மிகப்பெரிய சதஸ் நடத்த மனோகர்ஜி தீர்மானித்திருப்பதும், அந்த சதஸூக்கான முக்கிய பணிகளை ஏற்றுக்கொள்ள அவர் தன்னைத் தேர்ந்தெடுந்திருப்பதாகவும் தகவல் அறிய கிருஷ்ணமூர்த்திக்கு நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாமே மிகுந்த வியப்பளிக்கிறது. நடப்பதெல்லாம் தெய்வ சங்கல்பம் தான் என்கிற உறுதி அவர் மனசில் கெட்டிப்படுகிறது. இந்த மாபெரும் யக்ஞம் போன்ற உயர்ந்த பணிக்கு தானும் ஒரு துரும்பு போல பங்கெடுத்துக் கொள்ளும் பாக்யம் அருளிய இறைவனின் கருணை நினைத்து மனம் உருகுகிறார். மிகுந்த சிரத்தையுடன் தினமும் அந்த சதஸூக்காக முன்னேற்பாடுகளாக நடக்கும் செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது கிருஷ்ண மூர்த்திக்கு மன உற்சாகத்தைக் கொடுக்கிறது. 'கைலாசத்திற்கு பயணம் மேற்கொண்டவன் இங்கு திருப்பப்பட்டது இறைவனின் ஏற்பாடே' என்று நடக்கும் ஒவ்வொரு செயலும் அவருக்கு நிச்சயப்படுத்தி மனதை நெகிழச் செய்கிறது.

கிருஷ்ணமூர்த்தியின் மனைவி ராதை அவர் மனமறிந்து நடக்கும் குணவதி. மகன் அர்ஜூன், மருமகள் சுபா என்று குடும்ப உறவுகளுக்குத் தன்னைத் தத்தம் செய்தவள். அர்ஜூன் சி.ஏ. பண்ணியவன். அரியலூரில் குடும்பத்தை வைத்துக் கொண்டு தினமும் சொந்த ஆடிட் ஆபீசுக்கு இரயிலில் திருச்சி சென்று வருபவன். திருமணமான அர்ஜூனின் சகோதரி கிரிஜா அமெரிக்காவில் இருக்கிறாள். அவளுக்கு ரிஷி என்று ஒரே பையன்.

கிருஷ்ணமூர்த்தியின் மாமா பெண் மாலதி என்கிற மாலு. அவள் தன் கணவர் சிவராமனுடன் அரியலூர் வந்திருப்பவள் தொலைபேசியில் கிருஷ்ண மூர்த்தியுடன் தொடர்பு கொண்டு, தன் கணவருடன் காசிப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும், தில்லி வந்து கிருஷ்ணா தங்கியிருக்கும் ஆசிரமத்திலேயே அவரைச் சந்திப்பதாகவும் சொல்கிறாள். அதன்படியே தில்லி சென்ற இருவரும் அந்த மகாதேவ் நிவாஸின் ஆசிரம நடவடிக்கைகளில் மனம் பறிகொடுத்து அந்த ஆசிரமத்தை நடத்தி வரும் மனோகர்ஜியின் விருப்பப்படி அங்கேயே தங்கி 'ஆத்மாவைத் தேடும்' அவர்களின் தேடலில் தாங்களும் பங்கு கொள்வதில் மன மகிழ்ச்சி கொள்கின்றனர்.

சிவராமன்- மாலு தம்பதியினரின் ஒரே மகள் தமயந்தியும் தன் கணவருடன் அமெரிக்காவில் வாசம் செய்கிறாள். அவளுக்கு ஆறு வயதில் மணிவண்ணன் என்று ஒரே பையன்.

அமெரிக்காவின் ஃபால் சீசன் ரசனைக்காக ப்ளு ரிட்ஜ் பார்க் வே என்னும் இடத்திற்கு கிரிஜாவின் குடும்பமும் தமயந்தியின் குடும்பவும் டூர் ஏற்பாடு செய்து கொண்டு வந்திருக்கின்றனர். அந்தச் சுற்றுப்பயணத்தில் தன் குடும்பத்துடன் சுற்றுலா வந்திருக்கிற மாதுரி என்கிற பெண்ணை அவர்களுக்கு சந்திக்க நேரிடுகிறது. தமயந்திக்கு அந்த மாதுரி, தன் அம்மா மாலதி மாதிரியே தோற்ற ஒற்றுமை கொண்டிருப்பது வியப்பேற் படுத்துகிறது. மாதுரி தாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து ஒரு பகல் உணவில் பங்கு கொள்ள தமயந்தியையும் கிரிஜாவையையும் அழைக்கிறாள்.


(இனி வருவது....)
Related Posts with Thumbnails