மின் நூல்

Monday, May 18, 2020

EVEN IF--ம் இந்திரர் அமிழ்தமும்

ரு பிரபலத் தொலைக்காட்சியில் பேராசிரியர் ஒருவர் ஆங்கில மொழிக்கான  இலக்கணப்பாட  வகுப்புகளைத்  தொடர்ச்சியாக   எடுத்துக் கொண்டிருந்தார்.   சென்னை  தி.நகரில்,   சுலபமாக ஆங்கிலம் கற்பதற்காக பயிற்சி வகுப்புக்களைக் கொண்ட டூடோரியல் பள்ளி ஒன்றையும்  மிகப் பிரமாதமான முறையில் அந்தப் பேராசிரியர் நடத்தி வருகிறார்.

 அந்தப் பேராசிரியரின் பாடம் நடத்தும் ஆற்றலில் கவரப்பட்டு,  அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தவறாது பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் அவரது  தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ----

If- என்னும் ஆங்கில Conjunction சொல்லின் தொடர்பாகப் பயன்படுத்தும் வார்த்தைகளை விவரமாக விளக்கப்புகுந்தவர்,  "EVEN IF" என்ற வார்த்தையை எந்த நேரத்து எப்படியெல்லாம்  உபயோகப்படுத்தலாம் என்பதைச்  சொல்லிக்  கொண்டிருந்தார்.

Even if it is thunder strom, I will attend the programme.
Even if you provide $1000, I will not do that job.

இடி இடித்துப் புயல் வீசினும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன்.
ஆயிரம் டாலர் பணம் தந்தாலும், அந்தக் காரியத்தைச் செய்யமாட்டேன்.

'Even if' என்கிற வார்த்தையை  உபயோகப்படுத்துதலில் இன்னும் பல உதாரணங்களைச் சொல்லி   மிக அழகாக   அந்த நிகழ்ச்சியைப்  பார்க்கும் சிறார்களின் மனத்தில் படியும்படி பாடத்தை நடத்திக் கொண்டிருந்தார்.          
தீர்மானமாக, உறுதிபட செயல்பட முடியாது என்று முடிவெடுக்கையில், இந்த 'Even if' வரும்;

அதே மாதிரி எதுவரினும் செயல்படுவேன் என்கிற இடத்தும் இந்த 'Even if' ஒட்டிக்கொண்டு ஓடோடி வரும்.

'EVEN IF'--ன்  மாறுபட்ட எதிர் எதிரான இரண்டு உபயோகிப்புக்கள் இவை.

இந்த 'Even if'-ஐ தொலைக்காட்சியில் அந்தப் பேராசிரியர் விளக்கிக் கொண்டிருக்கையில், கண்கள் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்க, மனமோ தறிகெட்டு சங்க காலத்திற்குப் பறந்தது. கண்கள் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதியை நினைத்துப் பனித்தன!

வழுதி என்கிற வழக்கிலேயே அவன் பாண்டிய மன்னனென்று தெரிகிறது. பெருவழுதி எப்படி இறந்திருப்பான்?.. எதிர்பாராத இறப்பு மாதிரி தான் தெரிகிறது, அவன் எந்தப் பெருவழுதி என்று குறிப்பிட்டுச் சொல்வதற்காக சுட்டப்படுவது, 'கடலுள் மாய்ந்த' என்னும் குறிப்புச் சொற்றொடர்!

கடல் கடந்து படையெடுத்துச் சென்று வெற்றிவாகை சூடுவது, அன்றைய தமிழக மன்னர்களுக்கு இயல்பான ஒரு செயலாக இருந்தது. "கடாரம் கொண்டான்" என்று கடல கடந்து சென்று கடார நாட்டை வெற்றி கொண்டதைக் குறித்துச் சொல்லும்படி இராஜராஜ சோழனைக் குறிப்பிடுவதிலிருந்து, இந்த மாதிரி கடல் தாண்டிய போருக்கெல்லாம், தாங்களே தலைமை தாங்கிப் படை நடத்திச் சென்று வென்றிருக்கிறார்கள் தமிழக மாவேந்தர்களென்று தெரிகிறது! அப்படி ஒரு படையெடுப்பின் பொழுதுதான் இந்த பெருவழுதி கடலுள் மரக்கலம் கவிழ்ந்து மாய்ந்து விட்டானோ?...கடலுள் மாய்ந்த இந்த பெருவழுதி, இளம் வயதுடையோன் என்றுக் குறிக்க இளம் பெருவழுதியோ?..

--என் நினைவுகள், பரிதாபச் சூழலில் முக்கித் தவித்தன.

எவ்வளவு புலமை?..எவ்வளவு சிந்தனைச் சிறப்பு?..எவ்வளவு குண மேன்மை?..இவன் யாத்ததாக புறநானூற்றில் ஒரு பாடல்தான் இன்று நமக்குப் படிக்கக் கிடைக்கப்பெறினும், அந்த ஒரு பாடலே ஓராயிரம் அர்த்தங்களை நமக்குச் சொல்லி நானூற்றில் நட்சத்திரமாக ஒளிவிடுகிறது!...பண்டைய தமிழன் தலை நிமிர்ந்து நிற்க முற்றிலும் தகுதியுடையோன் என்று பறைசாற்றும் இப்படிப்பட்ட அட்டகாசமான பாடல்களை வாசிக்கும்
நேரத்து உள்ளம் விம்மி களிப்பெய்துகிறது!..

"உண்டால் அம்ம, இவ்வுலகம் -- இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும், 'இனிது' எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி
புகழ் எனின், உயிரும் கொடுகுவர்; பழியெனின்
உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகி
தமக்கு என முயலா நோன் தாள்,
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே"

(புறநானூறு--182)

திணை--பொதுவியல். துறை--பொருள்மொழிக்காஞ்சி

அமுது கிடைப்பினும் இனிது எனத்
தான் மட்டும் உண்ணார்; பிறரை வெறுத்தலும்
சோம்புதலும், மனச்சோர்வும் அறியார்
புகழ் என்றால் உயிரையே கொடுப்பர்
பழி என்றால் இந்த உலகையே
பரிசாகக் கொடுத்தாலும் பெறார்.
தனக்கென்றால், வலிந்து எந்த முயற்சியிலும் ஈடுபாடாதார்,
பிறர்க்கென்றால், எதையும் முயன்று செய்து கொடுக்கும் தன்மையுடையோர்.....

---'இப்படிப்பட்டவர் இருக்கையினால் தான், ஐயா, 'உண்டால் அம்ம இவ்வுலகம்'---இந்த உலகம் இருக்கிறது'  

---  என்று பிரகடனப்படுத்துகிற வகையில்,பாடலின் முழு அழுத்தத்தையும்
முதல் வரியில் கொண்டு போய்ச்சேர்த்து முடிக்கும் கவி அரசனின்  மாசுமறுவற்ற உள்ளமும்  மொழியை தான் சொல்ல வந்ததற்கேற்ப   வளைத்துக்  கையாண்ட அவனது மொழியாற்றலும்    சிலிர்ப்பேற்படுத்துகிறது!...

"இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத் தமியர் உண்டலும் இலரே"-- என்கிற வரிக்கு, "Even if"--என்னும் ஆங்கில Conjunction- வார்த்தையைப் பொருத்திப் பார்த்து உள்ளம் மகிழ்கிறது.

அமிழ்தம் எப்படிப்பட்ட உச்சகட்டச் சிறப்பு உடைத்து என்பது தெரியும்; அந்த அமிழ்தமே கிடைக்கப்பெறினும்,  தான்மட்டும் தனியே உண்ணமாட்டார்களாம்!

"Even If"--என்ன அருமையாக இங்கே பொருந்துகிறது, பாருங்கள்!
Related Posts with Thumbnails