Monday, September 28, 2009

மறக்க முடியாத மதுரை நினைவுகள்--4

4. டவுன் ஹால் ரோடு புராணம்


க்கீல் புதுத்தெருவின் நடுவில் வெட்டிச்செல்லும் தெரு, செல்லத்தம்மன் கோயில் தெரு. தெருவிற்கான பெயர்க் காரணம், தெருவின் முக்கில்(!) செல்லத்தம்மன் என்னும் அம்மன் கோயில் ஒன்று இருக்கும். தானப்பமுதலித் தெருவிலிருந்து வீடு மாற்றி இந்தத் தெருவிற்கு வந்து விட்டோம். இந்த வீட்டின் மாடிப் போர்ஷனை எங்களுக்குக் குடக்கூலிக்கு விட்டிருந்தார்கள். வீட்டிற்கு சொந்தக்கார அம்மாவும், அவர் மகனும் வீட்டின் கீழ்ப்பகுதியில் வசிந்து வந்தனர். வீட்டு சொந்தக்காரப் பையன் என்னைவிட ஐந்து வயது மூத்தவராக இருக்கலாம்; சேதுபதி ஹைஸ்கூலில் படித்து வந்தார். இவர் என் பாடப் புத்தகங்களுக்கு பழுப்பு நிறக் கெட்டிக்காகிதத்தில் அருமையாக, அதுவரையில் எனக்குத் தெரிந்திராத ஒரு புது முறையில் அட்டை போட்டுத்தருவார். அந்த முறை எனக்கு மிகவும் பிடித்துப்போய், என் பையன், பெண்ணுக்கு இதே முறையில், பிற்காலத்தில் நிறைய புத்தகங்களுக்கு அட்டை போட்டுத் தந்து இருக்கிறேன். இப்படி அட்டை போடும் நேரங்களிலெல்லாம், ராஜாமணி என்னும் அவர் இன்றும் என் நினைவுக்கு வருவார். கூடவே,கோபால கிருஷ்ண கோன் பாடப்புத்தக விற்பனையாளர் களும், புதுமண்டபப் பழைய புத்தகக்கடைகளும் நினைவுக்கு வருகின்றன.

செல்லத்தம்மன் கோயிலுக்கு எதிரே பெரிய எண்ணைய் கடை ஒன்று உண்டு. கடைக்குப் பின்பகுதியில் எள் ஆட்டும் செக்கும் உண்டு. எங்கள் வீட்டுத்தேவைகளுக்கு இங்கு தான் எண்ணைய் வாங்குவோம். அந்தக்கடைக்காரர், சிறுவர்களைப் பார்த்தால் அப்பொழுதுதான் எள் ஆட்டிய புதுப் புண்ணாக்கும், வெல்லமும் தருவார். சிறுவர்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள். நானும் அவர் கொடுத்துச் சாப்பிட்டிருக்கிறேன். சுவையாக இருக்கும்.

டவுன் ஹால் ரோடின் நடுமத்தியில் அதை ஒட்டியவாறு ஒரு பக்கத்தில் அந்தக்காலத்தில் சின்ன தெரு ஒன்று உண்டு. அந்தத் தெருவின் முதலில் இருந்த மாடி வீட்டுக்கு குடித்தனம் மாறி விட்டோம். நானும் ஆதிமூலம் பிள்ளைத் தெரு ஆரம்பப்பள்ளியிலிருந்து ஆறாம் வகுப்பு வந்து விட்டதால், கோயிலுக்கு மிக அருகில் இருந்த அன்னக்குழி மண்டபம் ஸ்கூல் என்னும் பள்ளிக்கு மாறிவிட்டேன். பள்ளியின் உள் சென்றவுடனேயே, நட்டநடுப் பகுதியில், நிறைய ஆற்று மணல் கொட்டி மேடு தட்டப்பட்டிருக்கும். அந்த மணலில் நாங்கள் விளையாடிய 'சடுகுடு' விளையாட்டுகள், மறக்கமுடியாதவை. "நான் தான் உன் அப்பன்.. நல்லமுத்து பேரன்.. வெள்ளிப்பிரம்பெடுத்து விளையாட வாரேன்.. வாரேன்.." என்று 'வாரேன்..வாரேன்' னை இழுத்துப் பாடியபடி, மூச்சு விட்டு விடாமல் நடுக்கோடு தாண்டி. எதிரணி எல்லைக்குள் அட்டகாசமாய் நுழைந்து, அவர்களைப் பின்னுக்குத் தள்ளி, சில சமயங்களில் காலை மேல் நோக்கி வீசிக்காட்டி அவர்களை கால் பற்ற டெம்ட் பண்ணியும், முன்னோக்கி அவர்கள் ஓடி வருகையில், அவர்களிடம் பிடிபட்டும், வாரேன்..வாரேன்..னை விட்டுவிடாமல், மூச்சுப் பிடித்து, மீண்டு, எட்டி கைநீட்டி நடுகோட்டைத் தொடுவது சாகசம் தான்!.. ஸ்கூல் விட்டும், சில நாட்களில் ப்யூன் வந்து கதவைச் சாத்த வேண்டும் என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளும் வரை, விளையாடிக் கொண்டிருப்போம். புத்தகப் பையெல்லாம் மணல்... உடலெல்லாம் மணல் என்று அத்தனையும் தட்டி, சேர்ந்து வீடு போகும் வரை என்னென்னவோ அவரவர் பிரதாபங்கள் தான்...!

டவுன் ஹால் ரோடு வீட்டு வாசலில் பெட்டிக்கடை மாதிரி ஒரு கடையை பாலகிருஷணன் என்னும் கேரளத்தவர் வைத்திருந்தார். அவரது கடை அந்தக் காலத்தில் மிகப்பிரபலமாக இருந்த குறுக்கெழுத்துப் போட்டிகளுக்கான பதிவு - விற்பனை கடையாக இருந்தது. குறுக்கெழுத்துப் போட்டிகளில் R.M.D.C. என்னும் நிறுவனத்தின் போட்டி மிகப்பிரலமானது. போட்டிக்கான இலவச பாரங்களை வாங்கி, பூர்த்தி செய்து, ஒரு பதிவுக்கு இவ்வளவு என்று பணத்தைக் கட்டி, ரசீது வாங்கிக்கொண்டால், அடுத்த நாள, முதல் நாள் போட்டியின் ரிஸல்ட் வந்து விடும். எல்லாம் சரி, ஒரு தவறு, இரண்டு தவறு என்று முறையே பத்தாயிரம், ஐயாயிரம், ஆயிரம் என்று பரிசுகள் அறிவிக்கப்படும். பலர் சரியான விடையை எழுதும் பட்சத்தில் பரிசுத்தொகை பகிர்ந்து அளிக்கப்படும். நூறு ரூபாய்க்கு குறைவாக பரிசுத் தொகை இருந்தால், அந்தக் கடையிலேயே ரசீதைக் காட்டி பரிசு பெற்றுக்கொள்ளலாம். பாலகிருஷ்ணன் கடை மாதிரி நகரில் பல கடைகள்!

குறுக்கெழுத்துப் போட்டி கேள்விகளுக்கான ஒரு மாதிரி:1. பெண்களுக்கு இந்த மலரைக் கண்டாலே கொள்ளை ஆசை: (ரோஜா/மல்லிகை)2. சோற்றில் பிசைந்து கொண்டு சாப்பிடுவது: (ரசம்/குழம்பு)3. இந்த உறவென்றால் தனி மதிப்பு தான்: (தம்பி/தங்கை)இப்படி போட்டிக்கேள்விகள் எளிதாக இருக்கும். மூளைக்கு அதிக வேலை இருக்காது. இரண்டு ஆப்ஷன்களும் கிட்டத்தட்ட சரியாக இருக்கும். அவர்கள் வைத்திருக்கும் சரியான விடைக்குப் பொருந்தியிருந்தால் பரிசு, அவ்வளவு தான்! மாலை 7 மணி ஆகிவிட்டால் போதும். கடை ட்யூப் லைட்டெல்லாம் போட்டு, 'ஜே,ஜே' என்று ஆகிவிடும். சில போட்டிகள் அன்று மாலை முடிந்து அன்று இரவு பத்து மணிவாக்கில் ரிசல்ட் வந்துவிடும். ரிசல்ட் வரும் நேரம் கூட்டம் கொஞ்சம் பெருத்துவிடும். பெரியவர்கள், சின்னவர்களென்று வித்தியாசமில்லாமல் கூச்சலும், கும்மாளமுமாக இருக்கும். இந்த சப்தம் கேடடு, ஒரு சின்னத்தூக்கத்தை கத்திரித்துக்கொண்டு வெளியே வந்து ரிசலட்டை சரிபார்த்ததும் உண்டு.

இந்த டவுன்ஹால் ரோடு வீட்டில் இருக்கும் பொழுது தான் 'தங்கம்' தியேட்டர் திறக்கப்பட்டது. முழுத் தியேட்டருக்குமான கட்டுமானப்பணிகள் முடிந்துவிட்டாலும் சில சில்லரை வேலைகள் பாக்கியிருந்தன. அதற்குள் முதல் படத்தை ரிலீஸ் செய்துவிட்டார்கள். அங்கங்கு கொட்டியிருக்கும் மணல் குவியல்கள், தொங்கும் வாளிக்கட்டிய கயிறுகள், போட்டது போட்டமேனிக்கு இருக்கும் சில கட்டிடவேலைப் பொருள்கள் என்று இவற்றிக்கு ஊடே நுழைந்தும், தாண்டியும் சுடச்சுட ரிலீஸாகியிருந்த "பராசக்தி" படத்தை இரண்டாம் நாள் பார்த்த நினைவு மறக்கினும், கலைஞரின் வசனத்தை வாழ்நாள் பூராவும் மறக்கமுடியாது.

மாப்பிள்ளை விநாயகர் சோடா என்று கோலிசோடா ஒன்று விற்பனையாகும். ரப்பர் வளையம் பற்றியிருக்கும் கோலிக்குண்டை, மரஅழுத்தி கொண்டு தட்டி, உள்நிரம்பியிருக்கும் சோடாவையோ, ஜிஞ்சரையோ குடிக்க வேண்டும்.ஜின்ஞர் நீர் நிறைந்த சோடாவிற்கு ஜின்ஞர் பீர் என்று பெயர். டவுன்ஹால் ரோடில் இருந்த 'காலேஜ் ஹவுஸ் ஹோட்டலின், பாக்கெட்டில் அடைத்த வறுத்த முந்திரிப் பருப்புகளும்,காப்பியும் பிரசித்திபெற்றவை.ஊர் முழுக்க டிவிஎஸ் கம்பெனியாரின் டவுன்பஸ் தான். எல்லாம் வெள்ளை நிறத்தில், பஸ்ஸின் வெளிநடுப்பகுதியில் TVS எழுத்து வெளிர்பச்சையில் ஒரு வட்டத்திற்குள் வருகிற மாதிரி எழுதியிருப்பார்கள். அப்பொழுது 20 எண்வரை பஸ்ரூட் இருந்தது. எண் ஒன்று - சொக்கிகுளம், மற்றும் எண் இருபது - திருநகர் செல்லும் பஸ்கள் என்று நினைவு. சில வெளியூர் பஸ்களில்,பின்பக்கம் வீட்டில் காப்பிக்கொட்டை அரைக்கும் மிஷின் மாதிரியான தோற்றத்தில், ஒரு மிஷின் உண்டு. வண்டியின் நடத்துனர் அந்த மிஷினின் பிடிபற்றிச்சுற்றி, பின்பக்க பாய்லரில் கொட்டியிருக்கும் கரி எரித்து வண்டியைக் கிளப்ப வழிபண்ணுவதும் உண்டு!

இப்படிப்பட்ட பசுமையாக மனதில் தூங்கும் நினைவுகளை எழுதிக்கொண்டே போகலாம். எழுத எழுத எழுதாமல் விட்டு ஏதோ பாக்கியிருக்கிற மாதிரிதான் தோன்றுகிறது. இவையெல்லாம் நடந்து கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால்,எழுதுகையில் காலக்கணக்கு தவறுகளினால், முன்பின்னாக சில நினைவுகள் மாறிப்போயும் விட்டன. அப்பொழுதெல்லாம் எஸ்.எஸ்.எல்.சி. பள்ளி இறுதிப்படிப்பு முடிக்க வேண்டுமானால், பதினொன்று ஆண்டுப் படிப்பு. இப்பொழுது ஸ்டாண்டர்ட் என்பதை அப்பொழுது 'ஃபார்ம்' என்று அழைப்பார்கள்.நானும் செகண்ட் ப்பார்ம் என்று சொல்லிய ஏழாம் வகுப்புக்கு மறக்க முடியாத மதுரை நீங்கி, திண்டுக்கல் செயிண்ட் மேரீஸ் ஹைஸ்கூலில் போய்ச் சேர்ந்தேன். பள்ளியின் நட்டநடுப் பகுதில் ஒரு பெரிய மணிக்கூண்டுடன்,விசாலமான நிலப்பரப்பில் கட்டப்பட்டு, மிக அருமையாக இருக்குமாக்கும், செயிண்ட் மேரீஸ் ஹைஸ்கூல்!

Friday, September 25, 2009

மறக்க முடியாத மதுரை நினைவுகள்--3

மீனாட்சி அம்மன் கோயிலை நினைத்தாலே நினைவுக்கு வருவது அந்த பொற்றாமரைக் குளம் தான். அந்த வயதில் ஒன்றும் தெரியாது. சந்நிதிக்கு போகும் முன் கால்களைச் சுத்தம் செய்து கொள்வதற்காக குளம் என்கிற எண்ணம் தான். என்றும். "பாத்துடா.. பாத்து...பாசி வழுக்கிடும்.." குரல் கேட்காது இருக்காது. பொற்றாமரை குளத்தில் ஏடுகள் எதிர்த்து வந்த கதைகளெல்லாம் பின்னால் தான் தெரியும்.

குளம் தாண்டி உள் நுழைந்தவுடன் பிர்மாண்டமாய் நிற்கும் வீரபத்திரர்(?) சிலையை நிமிர்ந்து பார்த்தாலே பிரமிப்பாய் இருக்கும். இப்பொழுது சாதாரணமாய்த் தெரியலாம். எல்லாம் சின்ன வயதில் மனத்தில் பதிந்த பிம்பங்கள். அங்கிருக்கும் தூணில் ஆஞ்சனேயரைப் பார்த்ததுமே, "அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத்தாவி.." என்று சதாசிவம் வாத்தியார் பள்ளியிலே சொல்லிக் கொடுத்தது, சிந்தையிலே வரிவரி்யாய் வார்த்தைகளாக ஓடி, ஒன்றிய உணர்வாய் வெளிப்படும். அம்மன் சந்நிதி நுழைவுக்கு முன்னால், கம்பி வலைகளுக்குப் பின்னால், நீண்ட கம்பிகளில் தொத்திக்கொண்டு நிறைய கிளிகள் இருக்கும். அதனருகில் போய் "மீனாட்சியைக் கள்ளன் கொண்டு போய்விட்டான்" என்று உரத்துச் சொன்னால், அவை "கீக்கீ..கீக்கீ" என்று கத்தும். இதெல்லாம் என் வயதுக்கும் கீழான சிறுவர்களுக்கு விளையாட்டு என்றால் சிலசமயம் பெரியவர்களும் தங்கள் குழந்தைகளைத் தூக்கி வைத்துக் கொண்டு, "எங்கே சொல்லு, பார்க்கலாம்.. மீனாட்சியை.." என்று குழந்தைகளுக்கு வார்த்தை வார்த்தையாகச் சொல்லிக்கொடுத்து, அந்தக் கிளிப்பிள்ளைகளும் தொண்டைவரள, "கீக்கீ..கீக்கீ.." என்று ஓயாமல் பதில் குரல் கொடுத்து ஓய்ந்து போகையில் எனக்குப் பாவமாக இருக்கும்.


சந்நிதியில் அம்மனைத் தொலைவில் வைத்து, நம்மை பளபள பித்தளை தகடுத் தடுப்புகளால் தடுத்து வரிசைக் கட்டி நிற்கவைத்த உணர்வு ஏற்படும். தடுப்புகள் தடுத்து, முன்னிற்கும் மனிதத் தலைகளும் மறைத்து, எம்பி எம்பிப் பார்த்தும் சந்நிதி தெரியாமல் பரிதாபமாய் நிற்கையில், இத்தனை வேலிகளையும் தாண்டி, அம்மனின் வலத்தோளில் கமுக்கமாக உட்கார்ந்திருக்கும் பச்சைக்கிளியை, நின்ற கோலத்தில் புன்முறுவல் தவழ நெஞ்சில் பதிந்த அங்கையர்க்கண்ணியை, யாரோ என்னை தூக்கிக்காட்டிய பொழுது கண்ணிமைக்காமல் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்ட நினைவு அழியவில்லை.

அம்மன் சன்னதியில் இருக்கும் கூட்டம் சுவாமி சன்னதியில் கொஞ்சம் குறைச்சலாய் இருப்பதாய் தோன்றி, நின்று நிதானித்து இறைவனை வழிபட வழிவகுக்கும். கூட்டக் குறைச்சல், மக்கள் அம்மனை வழிப்பட்டு விட்டு, இந்த சந்நிதி வராமல் அப்படியே போய்விடுவார்களோ என்று கூட நினைக்கத் தோன்றும். அப்படி நினைக்கையில், நான் மட்டுமே அவன் இடத்தில் இருக்கிற மாதிரி அப்பனிடம் ஒரு நெருக்கம் கூடும். குருக்கள் தரும் விபூதியை ஒன்றுக்கு இரண்டு தடவையாய் கேட்டு வாங்கிப்பூசிக்கொண்டு, ஆவுடையார் மேல் அமர்ந்திருக்கும் லிங்க சொரூபனின் மேனியில், வெள்ளை வெள்ளைப்பட்டைகளாய்த் தெரியும் வீபூதிப்பட்டைகளையே உற்றுப்பார்ப்பேன். ரொம்ப நேரத்திற்குப் பெருமானை விட்டுப் பிரிந்து போக மனசு வராது. உமாபதியைப் பற்றி பெரியம்மா சொல்லி சொல்லி மனசில் படிந்த கதைகளெல்லாம் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்து, இவனே உமையொரு பாகத்தானாய் இருக்கையில், எல்லாப் பெருமையும் இவனுக்கும் சேர்த்துத் தானே என்று மனதைச் சரிசெய்து கொண்டு சந்நிதியை விட்டுச் செல்ல மனமில்லாமல், பிரியாமல் பிரிவேன் போலும்.

இப்பொழுது நினைத்துப்பார்க்கையில் சைவத்தில் சக்தி வழிபாடு கொஞ்சம் தூக்கலாய்த் தான் தெரிகிறது. இருந்தாலும், அம்மையும் அப்பனும் ஆகி.. இரண்டு பேரும் சேர்ந்து வந்து தான் அருள் பாலிப்பார்கள். இரண்டு பேருக்கும் கணமேனும் பிரியாத அப்படியொரு நெருக்கம். போதாக்குறைக்குக் கூட்டுக்குடும்பத்தை வலியுறுத்த இரண்டு மகன்களையும் எங்கெங்கோ விட்டு விடாமல் தன்னிடத்திலேயே இருத்தி வைத்துக் கொள்வார்கள். சும்மாச் சொல்லக்கூடாது; மகன்களும் அப்படியே. தாங்கள் தனி சந்நிதிகளாய் இருக்குமிடங்களிலும், தாயையும், தந்தையையும் தங்கள் இடத்திலேயே தவறாமல் இருத்தி வைத்துக் கொண்டிருப்பார்கள். இதில் சின்னவனுக்கு, தாய் தந்தையர் பக்கத்தில் இல்லையென்றால், சரிப்படாது. பெரும்பாலும் தான் இருக்கும் இடங்கள் மலைகளும், குன்றுகளும் ஆச்சே என்று கூடப்பார்க்க மாட்டான். "வாருங்கள், என்னோடையே.." என்று கைபிடித்து, குன்றுகள் மேலும் ஏற்றி தன்னோடு கூட்டிக் கொண்டு போய்விடுவான். பெற்றோர்களிடம் கோபித்துக் கொண்டு ஒருதடவை போய்விட்டோமே என்கிற குற்ற உணர்வு போலும். பெரியவனும் ஞானமார்க்கமாய் உண்மையிலேயே 'பெரியவனாய்' யாராலும் விட்டு விட முடியாதபடி வளர்ந்து விட்டதும் சின்னவனுக்கு செளகரியமாய்ப் போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அழகனாய், ஆறுமுகனாய் அண்ணன் பக்கத்திலும் இருப்பான்; அப்பன்-தாய் அருகாமையிலும் இருப்பான். திருப்பரங்குன்றம் மட்டுமில்லை, பிற்காலத்தில் எந்த முருகன் கோயிலுக்குப் போனாலும் இந்த நினைப்பு தான் முந்தி வரும்.

சித்தரை திருவிழாபோது, தானப்ப முதலித்தெரு வீட்டு உயர்ந்த மொட்டை மாடியில் ஏறிக்கொண்டு, கீழே தெருவில் அம்மையப்பனின் தேர் உலா பார்த்தபொழுது, மேல்மாடிகளில் ஏறிக்கொண்டவர்கள், அந்த வெயிலில் வடம் பிடித்து தேர் இழுப்போர் பசி போக்க, கூடை கூடையாக திண்டுக்கல் மலை வாழைப்பழத்தை சீப்பு சீப்பாக வீசிப் போடுவர். எங்கே பார்த்தாலும் நீர்மோர் பந்தல்.

ஒருதடவை கள்ளர் வைகை ஆற்றில் இறங்கும் பொழுது, ஆற்றில் வெள்ளம் வந்துவிட்டது. கூட்டம் மொத்தமும் அடித்துப்பிடித்துக் கொண்டு மேடு ஏறத் தவித்துத் தத்தளித்தது. "குழந்தையை கெட்டியா பிடிச்சிக்கோ" என்று என் பெரியம்மா, பத்து வயசுப் பையன் என்னையும்-அம்மாவையும் அசுர பலத்தோடு இழுத்துக்கொண்டு, சின்ன கல்பாலம் ஏறிக்கடந்து ரோடுக்கு வந்தது இன்னும் மறக்கவில்லை.


பத்து வயசில், நாயக்கர் மஹால் தூண்கள் பிர்மாண்டமாய் எனக்கு எப்படிக்காட்சி அளித்திருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். கும்பலாய் நான்கு பேருக்குக் குறையாமல், ஒருவர் கை ஒருவர் பற்றி தூணை அணைக்கமுடியமல் தோற்றுப் போவோம். தரையில் படுத்து மேல் முகட்டுச் சித்திரங்களை அண்ணாந்துப் பார்ப்பது, ஒவ்வொரு தூணிற்கும் இடையில் எத்தனை கோலங்கள் என்று எண்ணுவது, தட்டாமாலை சுற்றி சித்திரம் பார்த்துத் தடுமாறி விழுவது என்று இது அது என்றில்லாமல் மனசுக்கு என்ன தோன்றுகிறதோ, அதை உடனுக்குடன் அமுல் படுத்தும் அத்தனை விளையாட்டுகள்.

இப்படித்தான், ஒரு சித்திரா பெளர்ணமி அன்று குடும்பத்தில் அத்தனை பேரும் அழகர்கோயில் போயிருந்த பொழுது, நான் என் வயசொத்தக் வால்களுடன் ஓடிப்பிடித்து விளையாடுகிறேன் பேர்வழியென்று ஓடி ஓடி சுற்றம் விட்டுத் தனியே தொலைந்து போனது ஒரு தனிக்கதை!

(வளரும்)

Thursday, September 24, 2009

மறக்க முடியாத மதுரை நினைவுகள்-2

2. தாராசிங்--கிங்காங் மல்யுத்தம்.

நான் நான்காவது வகுப்பு முடிக்கையிலேயே, காமாட்சிபுர அக்கிரஹார வாடகை வீட்டைக் காலி பண்ணிவிட்டு, தானப்ப முதலித்தெருவில் ஒரு வீட்டுக்கு மாறி விட்டோம். தானப்ப முதலித்தெருவிலிருந்து சிம்மக்கல் வழியாகத் தான் தினமும் நடந்து ஆதிமூலம் பிள்ளைத்தெரு ஆரம்பப்பள்ளிக்குப் போவேன். சிம்மக்கல் ஜங்ஷனில் ஓவல் சைசில் ஒரு பெரிய நீர்த்தொட்டி இருக்கும். அந்தத்தொட்டி அருகில் நிறைய வண்டிக் குதிரைகளைக் கட்டியிருப்பார்கள். குதிரைகளைக் குளிப்பாட்டுவதெல்லாம் அந்த தொட்டி நீரைக் கொண்டுதான். அந்த ஜங்ஷனில் சின்ன பிள்ளையார் கோயில் இருந்த ஞாபகம். சரியாக நினைவில்லை. அந்த இடத்தில் கட்சி கொடிக்கம்பங்கள் காட்சியளிக்கும். தோழர்கள் டாங்கே, பி.இராமமூர்த்தி, கே.டி.கே.தங்கமணி பொதுக்கூட்டத்தட்டிகளை இங்கே பார்த்ததாக ஏற்கனவே "இழந்த சொர்க்கம்" என்னும் என் பதிவொன்றில் பதிந்திருக்கேன். அதனால் அது பற்றி இப்பொழுது வேண்டாம்.ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகள் பற்றி இந்த இடத்தில் நிறையத் தட்டிகளைப் பார்க்கலாம். மற்றும் மாட்டு வண்டிகளில் அலங்காரம் செய்து பொது நிகழ்ச்சிகளை ஊதுகுழல்களில் அறிவித்தபடி, பிட்நோட்டீஸ்களை வீசிவீசி எறிந்தபடியும் அறிவிப்புகள் உண்டு.

அப்படி ஊரே இதை விட்டால் வேறு வேலை இல்லை என்று பேசும்படியான மல்யுத்தப்போர் நிகழ்ச்சிகள் அந்தக்காலத்தில் மதுரையில் நடந்தன.தாராசிங், கிங்காங், ரெஸ்ட் காப்பியன், வாங்க் பெக்லி -- இவர்களெல்லாம் மறக்கமுடியாத மல்யுத்த ஹீரோக்கள். இந்த வீரர்களுக்குப் பட்டப்பெயர்களும் உண்டு. இந்திய செஞ்சிங்கம்--தாராசிங். மாமிச மலை--கிங்காங். செந்தேள்--ரெஸ்ட்காப்பியன். பறக்கும் வீரன்--வாங்க் பெக்லி.வாங்க்பெக்லி, ரெப்ரி. இரண்டு மல்யுத்த வீரர்கள் கிடுக்கிப்பிடி போட்டு பிணைந்து முட்டிக்கொள்கையில், மல்யுத்த கோதாவில் பறந்து வந்து அவர்கள் புஜங்களுக்கிடையில் இறங்கி அவர்களைப் பிரித்து விடும் ரெப்ரி வாங்க்பெக்லியின் பாணி பிரசித்தம்!இத்தனை வீரர்களுக்குமிடையே, நம் இந்திய செஞ்சிங்கம் தாராசிங் தான் வெகு இளமையாகத் தோற்றமளிப்பார். அத்தனை பேர் அனுதாபமும், நம்மவர் என்று அவர் மேல்தான் படிந்திருக்கும். இவரோடு மாமிசபர்வத்மாக கிங்காங் மோதுவார். இவர்கள் இரண்டு பேரின் இணை பிரசித்திபெற்றது. குஸ்திகோதாவில் விஸில் பறக்கும். கிங்காங் ஹங்கேரிக்காரர். உண்மையிலேயே அவர் நடக்கையில் மலை அசைந்து வருவது போலிருக்கும். (கம்பனின் நினைவு வருகிறது) ரெஸ்ட்காப்பியன் கையைக் கத்திபோல் வைத்துக்கொண்டு வெட்டுவதில் கைதேர்ந்தவர். வாங்க்பெக்லி விஷயம் தெரியும். மாலை போய்தான் மல்யுத்தம் ஆரம்பிக்கும். அத்தனையும் தமுக்கம் மைதானத்தில் நடந்தாக நினைவு. சில காலைநேரங்களில், இந்த மல்யுத்த வீரர்கள் திறந்த வேன்களில் நின்றுகொண்டு, தெருக்களில் அணிவகுப்பு நடத்துவது போல வரிசைவரிசையாக கையசைத்து வருவார்கள். அடடா! அடடாவோ! அந்த நேரங்களில் தெருவோரங்களில் இவர்களைப் பார்க்கக் கூட்டம் சொல்லி மாளாது. மதுரை மக்களிடையே உற்சாகம் கரைபுரண்டு ஓடும். அத்தனைக் கூட்டமும் மாலை தமுக்கம் மைதானத்தில் அலை மோதும்.

பின்னாட்களில், எழுத்தாளர் சாவி அவர்கள் ('வாஷிங்டனில் திருமணம்' சாவி தான்) தான் ஆசிரியரராய் இருந்த "சாவி" வார இதழில், இந்த மதுரை மல்யுத்த போட்டிகளைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்த பொழுது தான், இவரும், சின்ன அண்ணாமலையும் சேர்ந்து அந்தக்கால அந்த மல்யுத்தப் போட்டிகளை நடத்தினார்கள் என்கிற விவரம் அறிந்தேன். அந்தக் கட்டுரைகளில், இவரும் சின்ன அண்ணாமலையும் என்னவெல்லாம் கஷ்டப்பட்டு, விதவிதமான யுக்திகளைக் கையாண்டு, அலுப்புத் தட்டாமல் நிகழ்ச்சிகளை அமைத்துக் கூட்டத்தைத் திரட்டினார்கள் என்கின்ற விவரங்களை நகைச்சுவையுடன் சொல்லியிருப்பார். சின்ன அண்ணாமலையும் அருமையான நகைச்சுவை எழுத்தாளர். குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. ஒரு அண்ணாமலை முதலிலேயே பத்திரிகை உலகில் இருந்தமையால், இன்னொரு அண்ணாமலையான இவர் சின்ன அண்ணாமலை என்று அழைக்கப்பட்டார். கல்கி, சாவி, சின்ன அண்ணாமலை, தேவன், நாடோடி -- கூட்டு சேர்ந்து, தமிழ்பத்திரிகை உலகில் தம் நகைச்சுவை எழுத்தால், ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார்கள்.ஓ! 'அந்த நாளும் வந்திடாதோ...' என்று ஏக்கத்துடன் நினைக்கத் தான் தோன்றுகிறது.

(வளரும்)

Wednesday, September 23, 2009

மறக்க முடியாத மதுரை நினைவுகள்-1

எழுத்தாளர் நரசய்யாவைப் பற்றிப் பலருக்குத் தெரியும். கடலோடும், கடலலைகளோடும் பிணைந்த வாழ்க்கை அவரது. மதுரை மாநகர் பற்றி 'ஆலவாய்' என்கிற பெயரில் அவர் எழுதிய நூலொன்றையும், விமர்சனக்கலைஞர் வெங்கட்சாமிநாதன் அவர்களும், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களும் அந்நூல்பற்றி எழுதியுள்ள பார்வைகளையும் படிக்க நேர்ந்தது.

அந்த வாசிப்பே, சிலவருடங்களுக்கு முன் நான் எழுதிய என் இளவயது மதுரை நினைவுகளை
மீண்டும் பகிர்ந்து கொள்ள காரணம் ஆயிற்று.அந்த எழுத்தாள பெருமக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.


1. பார்த்த காட்சியும் கேட்ட சப்தமும்

நினைத்துப்பார்க்க இப்பொழுது வேடிக்கையாக இருக்கிறது. எல்லாமே பசுமை நிறைந்த நினைவுகள். கும்பகோணத்தில் பிறந்தாலும் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, சேலம் என்று பள்ளி இறுதி வகுப்பு முடிப்பதற்குள் எத்தனை ஊர்கள்!.. பணியாற்றுகையில் புதுவை, பவானி, திருப்பத்தூர். குன்னூர், காஞ்சிபுரம், சென்னை என்று.... இத்தனை இடங்களில் வாழ்க்கைப்போக்கில் வசித்துத் திரிந்தாலும், உண்மையிலேயே பால்ய வயதில், சக்கரைத் தட்டில் 'அ,ஆ'வன்னா எழுதத் தொடங்கி வைத்து, பெரியவர்கள் என்னை ஆரம்பப் பள்ளியில் சேர்த்த மதுரை மறக்கமுடியாத ஊர்தான். இப்பொழுதெல்லாம், பஸ்ஸிலோ இரயிலிலோ பயணிக்கும் நேரங்களில் இந்த ஊர்களையெல்லாம் கடக்க நேரிடும். அப்படிப்பட்ட சமயங்களிலெல்லாம் எனக்கும் அந்த ஊருக்கும் சம்பந்தப்பட்ட வாழ்க்கை நிகழ்ச்சி ஏதாவது ஒன்று படக்காட்சியாய் நினைவில் பளிச்சிட்டுப் போகும். சில நேரங்களில், பயணத்தை கத்தரித்துக்கொண்டு ஊருக்குள் சென்று நாம் அப்பொழுது வாழ்ந்த இடம் இப்பொழுது எப்படி இருக்கிறது என்று பார்க்கத் தோன்றும். இருந்தும் வாழ்க்கையின் அவசர வேலைகள் அப்படிச் செய்யமுடியாமல் தடுத்துவி்டும். இதற்கென்றே, இப்படி வாழ்ந்த இடங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கென்றே, முக்கியமாக இந்த இடங்கள் இப்பொழுது எப்படி இருக்கின்றன என்று 'அனுபவித்து' பார்ப்பதற்கென்றெ தனி ஒரு பயண அட்டவணை போட்டுக்கொண்டு கிளம்ப வேண்டுமென்று அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.

சின்ன வயசில் அந்த இடங்களைப் பற்றி நான் மனதில் போட்டு வைத்திருந்த சித்திரங்கள், இப்பொழுது மாறிப்போய் அந்த அழகான சித்திரங்களை அழிக்க நேரிடுமே என்கிற அச்ச உணர்வும் கூடவே தோன்றும். ஒன்றைக் குறிப்பிட வேண்டும். அறுபது வருடங்களுக்கு முன்பு என் சின்னஞ்சிறிய நெஞ்சில் நான் தேக்கி வைத்துக்கொண்ட மதுரை இது. இப்போது இந்த இடங்கள் எல்லாம் என்னவாச்சு, எப்படி உருமாறிப் போயிருக்கிறது என்று எனக்குத் தெரியாது. மற்றவர்கள் தான் சொல்லித் தெரியவேண்டும்.

மதுரை சிம்மக்கல்லிருந்து வைகை ஆற்றங்கரை நோக்கித் திரும்பி நடந்தால், வழியில் பாலம் போட்ட ஒரு நீண்ட வாய்க்காலைக் கடக்க வேண்டியிருககும். வாய்க்கால் புறத்தைத் தாண்டி செழித்து கொப்பும் கிளையுமாய் பிர்மாண்டமாய் வளர்ந்திருக்கும் அரசமரங்களைத் தாண்டி, உள்ளடங்கி அற்புதமான ஆஞ்சநேயர் கோயில். இங்கு மார்கழி மாதத்தில் நெய் ஒழுகும் வெண்பொங்கல் கிடைக்கும். கிடைக்கும் நேரம்: அதிகாலை 5 மணியிலிருந்து 5-30 க்குள். அகல அகல புரச இலைகளை வைத்துக் கொண்டு என் வயதொத்த சிறுவர் கூட்டம் அலைமோதும். உயரமாய், நீண்ட நெற்றி நெடுக நாமம் தரித்தவராய், கோயில் பட்டர் ஒரு பெரிய பாத்திரதைக் கையில் ஏந்தியவாறு அதிலிருந்து பொங்கலை உருட்டி உருட்டி எடுத்து ஒவ்வொருத்தர் இலையிலும் போடும் அழகே அழகு!.. அந்தக் குளிரில், வாயில் போட்டால் வெண்ணையாய் கரைந்து விடும். எப்படியும் ஒன்றிரண்டு முந்திரிப்பருப்பு தினமும் எனக்குத் தட்டுப்பட்டு விடும்.கூட என்னைவிட நான்கு வயது மூத்த என் தமக்கை வருவார். கிடைக்கும் முந்திரியைப் பகிர்ந்து கொள்வோம்.இந்த அனுமார் கோயிலுக்கு நேர் எதிரில் இருந்த தெருதான் பதிவர் சீனா அவர்கள் தனது மதுரை மலரும் நினைவுகளில் குறிப்பிட்டிருந்த லஷ்மி நாராயணப்புர அக்கிரஹாரத்தெரு. அனுமார் கோயிலுக்கு முன்னிருக்கும் வாய்க்காலுக்கு அருகில் இருந்த தெரு காமாட்சிபுர அக்கிரஹாரத் தெரு. பேருக்குத்தான் அக்கிரஹாரமே தவிர பேதமில்லாமல் எல்லோரும் ஒற்றுமையாய் வாழ்ந்த காலம் அது. இந்தத் தெருவில் தான் நாங்கள் குடியிருந்தோம்.

வருஷக்கணக்குப் பார்த்தால் எனக்கு அப்பொழுது ஆறு வயதிருக்கும். வாசலில் தெருக்குழாய் இருக்கும் வீடு. அந்தக்காலத்திலும் தண்ணீர் தட்டுப்பாடு. எப்பொழுது தண்ணீர் விடுவார்கள் என்று சொல்ல முடியாது. எந்நேரமும் அண்டா-குண்டாக்கள் குழாயடியிலுருந்து ஆரம்பித்து நாலு வீடு தள்ளி வரை வரிசை கட்டியிருக்கும்.அந்தத் தெரு நிறைய நாலைந்து தென்னை மரங்கள் இருந்தது நினைவிருக்கிறது. எங்கள் வீட்டிற்கு எதிரே ஒரு பெரிய தென்னை மரம் உண்டு. அந்த வீட்டில் முன் போர்ஷனில் நாங்கள் வாடகைக்கு ஒண்டுக்குடித்தனம்.

நீண்ட அந்த வீட்டில், மாடியிலும் சேர்த்து ஐந்து குடித்தனங்கள் இருந்ததாக நினைவு. ஒருநாள் சாயந்திர வேளை. தெருவே அல்லோகலப்படுகிறது. பக்கத்து தெய்க்கால் தெரு பகுதியில் யார் வீட்டிலோ பிடித்த தீ, வீசிய காற்றில் கொழுந்து விட்டெரிந்து, பாதித் தென்னைமர அளவுக்குப் பரவி, எங்கள் தெருவில் நுழைந்து விட்டது. எங்கள் வீட்டில் முக்கிய சாமானகள் சிலவற்றை எடுத்துக்கொண்டு வெளியே வந்து விட்டார்கள்.கிட்டத்தட்ட எல்லா வீட்டிலும் இந்த நிலை தான். பக்கத்தில் தான் வைகை ஆற்று படித்துறை பக்கம் என் மூத்த அக்கா திருமணம் ஆகி 'புகுந்த வீடு' இருந்தது. எல்லோரும் அங்கே போய்விடலாம் என்று உத்தேசம்.

இத்தனை கலாட்டாக்களுக்கு நடுவே, தீ அணைப்பு வண்டிகள் வந்து எரிந்த தீ மட்டுப்படுத்தப் பட்டு, எல்லாம் சகஜ நிலைக்கு வந்தது, தனிக்கதை! எனது ஆறு வயசில் பார்த்த, பாதி தென்னைமர உயரத்திற்கு கொழுந்து விட்டெரிந்த அந்தத் தீ, இன்னும் என் நினைவை விட்டு அழியவில்லை. அந்தத் தீ விபத்து, தெய்க்கால் தெரு தீ என்று அந்தக்காலத்தில் வெகு பிரசித்தம்.அனுமார் கோயிலை ஒட்டிய தெரு ஆதிமூலம் பிள்ளைத் தெரு. இந்த ஆதிமூலம் பிள்ளைத்தெருவில் தான் நான் எனது ஆரம்பக்கல்வியைத் தொடங்கிய எலிமெண்ட்டிரி ஸ்கூல் இருந்தது. ஆரம்பப்பள்ளிகள் எல்லாம் அரசுப்பள்ளிகள் தான். தனியார் பள்ளிகளைப் பார்த்த நினைவு இல்லை.ஸ்கூலுக்குப் பக்கத்தில் ரேஷன் கடை இருந்த நினைவு இருக்கிறது. கடை வாசலில் நானும் என் சகோதரியும் அரிசிக்கும், பிளாஸ்டிக் கேன் தாங்கி மண்ணெண்ணைக்கும் காத்துக் கிடந்த நினைவு மறக்கவில்லை. யுத்த காலத்திலும் அதற்கு பிந்தைய காலக்கட்டத்திலும் , அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு கிடைக்காமல் போகும் சாத்திய கூறுகள் ஏற்பட்டதால், அந்த அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடில்லாமல் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதே ரேஷன் கடைகள். சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்த ரேஷன் கடைகளும் , ரேஷன் கார்டுகளும் ஒழியவிலலை என்பது அர்த்தமுள்ள ஒரு சோகம். ரேஷன் கடைகள் பெயர் தான் நியாயவிலைக்கடைகள் என்று மாறி இருக்கிறதே தவிர, அந்த யுத்தகால ரேஷனுக்கும், இன்றைய ரேஷனுக்கும் பெருத்த வித்தியாசம் ஒன்றும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

யுத்த காலம் என்றவுடன் நினைவுக்கு வருகிறது. என்னில் அழியாதுப் பதிந்த ஒரு காட்சி. முண்டாசு கட்டிய ஒரு ஆள் ஏணியில் நின்றபடி விளக்கேற்றுகிறார். விட்டு விட்டு நீண்ட விசில் சப்தம். 'தப..தப' என்று பூட்ஸ் ஒலி கேட்க பலர் ஓடும் சப்தம். இதுதான் அந்தக் காட்சி. என்னைத் தோண்டித் தோண்டிப் பார்த்து, என் வாழ்க்கையிலே எந்த நினைவிலிருந்து எனக்கு இப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது என்று நினைத்துப் பார்த்தால், இந்த நினைவுதான் முதல் இடத்தைப் பிடிக்கிறது. பின்னால், இந்திய சரித்திரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், என் நினைவில் பதிந்த இந்தக் காட்சிக்கு அர்த்தம் புரிந்தது.இரண்டாம் உலகப்போர் 1939லிருந்து 1945வரை நடந்திருக்கிறது. நாஜி ஜெர்மனி, பாசிச இத்தாலி, ஜப்பான் அரசும் ஒன்று சேர்ந்த அச்சுநாடுகளுக்கும், நேசநாடுகளுக்கும் இடையே நடைபெற்றது இந்தப்போர். பிரிட்டன் நேசநாடுகளில் ஒன்றாகையால்,பிரிட்டனின் ஆளுகையில் இருந்த இந்தியாவும் இந்தப் போருக்கு இழுக்கப்பட்டது. 1945-ல் இந்தப் போர் முடிவுக்கு வந்தாலும், அதைத் தொடர்ந்து உலக அரங்கில் யுத்த முஸ்தீபுகளும், இராணுவ அச்சுறுத்தல்களும் இருந்தன போலும். 1947 இந்திய சுதந்திரத்திற்கு முன்னான --அப்பொழுது எனக்கு நான்கு வயதிருக்கும் -- இந்த நினைவு நிழல் போல் என் நினைவில் இருப்பது இப்பொழுதும் எனக்கு ஆச்சரியமான சமாச்சாரம்."கண்ணதாசன் பிலிம்ஸ்" முத்திரைச்சின்னம் உங்களுக்கு நினைவிருக்கிறதா?... நான்கு பக்கமும் கண்ணாடி சதுரங்களால் அடைக்கப்பட்டு, மேற்பகுதியும் கண்ணாடி கும்பம் போலிருக்கும் தெருவிளக்கு தான் அந்தச் சின்னம்!.. அந்தக்காலத்தில் தெருக்களில் இந்த மாதிரி தெருவிளக்குகள் தான் இருந்திருக்கிறது. 'மாலை 7 மணிவாக்கில் ஒரு ஊழியர், விளக்குக்கம்பத்தின் மேல் பகுதி கண்ணாடிக்கூண்டைத் திறந்துஅதனுள் இருக்கும் சிம்னி விளக்கை ஏற்றிவிட்டுப் போவார். இரவு பூராவும் அந்த விளக்கு எரியும்' என்றும் என் சகோதரிகளிடம் கேட்டு, இந்தத் தெரு விளக்கு பற்றியும், விளக்கேற்றும் சமாச்சாரம் பற்றியும் பின்னால் தெரிந்து கொண்டேன். அந்த விசில் சப்தம்?...பூட்ஸ் ஒலி சப்திக்க பலர் ஓடும் ஓசை?.. இரண்டாம் உலகப்போரின் தொடர்ச்சியாய், அது முடிந்தும் சில காலம் அமுலுக்கு இருந்த ஏ.ஆர்.பி. போலிசாரின் எச்சரிக்கை ஓட்டம்! விட்டு விட்டுக் கேட்ட அந்த விசில் ஓசையும் போலிசாரின் எச்சரிக்கை நடவடிக்கை தான். இதையெல்லாம் பின்னாளில் கேட்டுத் தெரிந்து கொண்டு எனக்குப் பெருத்த ஆச்சரியமாகப் போய்விட்டது. 1946 இறுதியில் இது நடந்திருக்கும் என்று வைத்துக்கொண்டாலும், அப்பொழுது எனக்கு சரியாக நான்கு வயசுதான்! ஒரு வாரத்திற்கு முன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, என்னிடம் பேசிவிட்டுப் போன பெரியவர் பெயர், இப்பொழுது நினைவுக்கு வரவில்லை; ஆனால், நான்கு வயதுக் குழந்தையாய் பார்த்தக் காட்சியும், கேட்ட ஒலியும் நினைவில் பதிந்து விட்டதென்றால்... இதை நினைக்கையில், எனக்குப் பிரமிப்பாகத் தான் இப்பொழுதும் இருக்கிறது.

(வளரும்..)

Tuesday, September 15, 2009

ஆத்மாவைத் தேடி...10 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


10. ஆக்ஞை கிடைத்தது


னோகர்ஜியின் அன்பு சிவராமனை நெகிழச் செய்தது. 'இன்னும் சில நாட்கள் கூட இங்கு தங்கமுடியுமா என்று கேட்கிறாரே? நாட்கள் என்ன, ஆயுசு பூராவும் இங்கேயே இரு என்று சொன்னாலும் அடிமைசாசனம் எழுதிக் கொடுத்து விட்டு இருந்து விடலாமே?.. இந்த எளியோனுக்கு ஜோதிஸ்வரூபமாய் தரிசனம் காட்டிய பெருமான் உறையும் புண்யபூமி அல்லவா, இது?.. மாலுவும் சந்தோஷப்படுவாள். தினமும் பூத்தொடுத்து உமையொருபாகனுக்கு மாலைசூட்டி மகிழ்வாள்.' என்று பலவாறாக அவர் சிந்தனை சிறகடித்துப் பறந்தது.

"என்ன சிவராம்ஜி?.. மெளனமாகி விட்டீர்கள்?"

""பொறுத்துக் கொள்ள வேண்டும், ஐயா! ஏதேதோ யோசனை.. நான் என்ன செய்ய வேண்டும்?" என்று ஆவலுடன் கேட்டார்.

"சொல்கிறேன். நாம் இப்படி அமர்ந்து கொண்டு பேசலாமா?" என்று மண்டபத்தின் கிழக்குப் பக்கம் தாழ்வாக இருந்த படிகளில் ஏறினார் மனோகர்ஜி.

ஏறியவர், அப்பொழுது தான் மாலுவைப்பார்த்தார் போலும். "அடேடே! நீங்களும் இங்கே தான் இருக்கிறீர்களா?.. ரொம்ப நல்லதாப் போச்சு.." என்று மாலுவுக்குக் கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டு மற்றவர்களையும் உட்காரச்சொன்னார்.

மாலு மட்டும் ஏனோ சுற்றி நடக்கும் செயல்களில் கவனம் ஒன்றாமல், நினைவில் இடறிவிட்டுப் போன ஏதோ ஒன்றை நினைத்துப் பார்க்கிற தோரணையில் அமர்ந்திருந்தாள். மனோகர்ஜி அவளிடம் கேட்டது கூட நெஞ்சில் உறைக்காத ஆழ்ந்த சிந்தனை.

மனோகர்ஜியும் அதை அவ்வளவு கவனித்தாகத் தெரியவில்லை. அவர் பாட்டுக்க தனது வழக்கம் போல சந்தோஷ வெளிப்பாடுடன் மனசில் இருப்பதைக் கொட்ட ஆரம்பித்தார். "நான் எதிர்ப்பார்த்தை விட எல்லாக்காரியங்களும் சிறப்பாக அதன் அதன் போக்கில் அது அது நடந்து கொண்டிருப்பதைப் பார்க்க எனக்கு சந்தோஷமா இருக்கு. எல்லாம் இறைவனின் சித்தம்" என்றவர் சிவராமனை உற்றுப்பார்த்தார். அவர் தீட்சண்யப் பார்வையின் தீர்க்கத்தை எதிர்கொள்ளமுடியாமல் சிவராமன் லேசாகத் தலைகவிழ்த்தார்.

ஆனால் அவர் ஏதோ முக்கியமான விஷயத்தைத்தான் சொல்லப்போகிறார் என்கிற தவிப்பில், "ஜி! எது என்றாலும் நீங்கள் தயங்காமல் சொல்லலாம். நீங்கள் எதை நினைக்கிறீர்களோ, அதை நிறைவேற்ற நாங்கள் காத்திருக்கிறோம்" என்றார்.

இப்பொழுது கிருஷ்ணமூர்த்தியின் பக்கம் திரும்பினார் மனோகர்ஜி. "கிருஷணாஜி! உங்களுக்குத் தெரியாததா?.. இப்பொழுதெல்லாம் எனக்குன்னு தனிப்பட்ட முறைலே எந்த விருப்பமும் இருந்ததில்லை. எல்லாம் அந்த ஐயனின் விருப்பம்" என்று கர்ப்பக்கிரகம் இருக்கும் திசை நோக்கிக் கும்பிட்டார் மனோகர்ஜி.

"ஐயனின் விருப்பமா?.. அது என்னவோ?" என்று ஆவலுடன் அவரைப் பார்த்தார் சிவராமன்.

"அந்த அற்புதத்தைச்சொல்கிறேன்,கேளுங்கள்!"என்று சொல்ல ஆரம்பித்தார் மனோகர்ஜி."அதை உடனே உங்களுக்குச் சொல்லவேண்டுமென்றுதான் உங்களைத் தேடிக் கொண்டு வந்தேன். இன்று காலை பொழுது புலர்வதற்கு கொஞச முன்னாடி இது நடந்தது.இதை நான் கனவில் கண்ட மாதிரி நிச்சயமா தெரியலே. தூக்கம் கலைந்து, எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே நான் இருக்கையில் நிழல் போல என் கண்ணுக்கு முன்னாடி நடமாடற மாதிரிதான் இது நடந்தது..." என்று சொல்லிவிட்டு மார்புகூடு நிமிர்த்தி நீண்ட சுவாசத்தை வெளிவிட்டார் மனோகர்ஜி.

வெற்று வெளியைத் துழாவிப் பார்க்கிற தோரணையில் மனோகர்ஜி ஆகாயப்பிரதேசத்தை அண்ணாந்து பார்த்து விட்டு, அரைக்கண்களை லேசாக மூடியபடி, தன் நினைவிலிருக்கும் தோற்றத்தையும் அது சம்பந்தமான செய்தியையும் மீட்டு எடுக்கிற லயிப்பில் சொல்ல
ஆரம்பித்தார்: "வயலின் வைச்சிருப்போம்ல, அந்த மாதிரி சின்னப் பெட்டி இல்லே.. இது பெரிய பெட்டி.. அந்தப்பெட்டி பக்கத்லே திடகாத்திரமா திறந்த மார்பிலே யக்ஞோபவீதம் தரித்து யாரோ நிக்கற மாதிரித் தெரியறது. இதுவரை மசமசன்னு இருட்டா இருந்த அந்தப் பிரதேசமே, ஒரு நொடியில் நெடியோனாய் நின்று கொண்டிருந்த அந்த வாலிபனின் தேஜஸ்ஸில் ஜெகஜோதியாத் தெரியறது. அந்த வெளிச்ச ஒளிலே கண்கூசக்கூச அந்த வாலிபனை நிமிர்ந்து நேரடியா பாக்கறத்துக்கு எனக்கு சக்தியில்லாம லேசா தலையைத் தூக்கறச்சேயே அந்த முகலாவண்யம் என் நெஞ்சு முழுக்க பரவசமாய் பற்றி உடம்பே லேசாயிடுத்து, கிருஷ்ணாஜி... ஹோ.. நான் என்ன புண்ணியம் செஞ்சேன்,ஜி!" என்று குரல் தழுதழுத்துக் கம்மத் தொடர்ந்தார் மனோகர்ஜி.. "ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே திருநாமம் துலங்க மந்தகாசச் சிரிப்போட.. கீழே குனிஞ்சு நிமிர்ந்த வேகத்லே, கையிலே கோடி சூரியபிரகாசத்தோட பளபளக்கற கோதண்டம்... மகாப்பிரபோன்னு கைதூக்கி கும்பிட யத்தனக்கையிலேயே, சிற்சபை ஆனந்தத் தாண்டவம்! தசரதக்குமாரனாய் ஜகஜ்ஜோதியாய் இருந்தவன் இடத்தில் இப்போது ஆடலரசனின் அற்புதத் தோற்றம்!.. முன்னே பார்த்த அந்த வாலிபனைப் போலவே இருக்கு.. ஓவியத்து எழுத முடியா உருவத்தானின் மதிமுக ஸ்ரீசூர்ணம் பார்த்த நினைவு மாறி இப்போ திருவெண்ணீறு வெள்ளி உருக்காய் தகதகக்க...

"சிவனும், ராமனும் ஒரே தோற்றமாய் சிவராமனாய் மனசைப் பிடித்து ஆட்டிய ஆட்டத்தில் அழுதுவிட்டேன்,ஜி! இந்த ஏழைக்கு இப்படி ஒரு இரட்டை அதிர்ஷ்டமா என்று அதிர்ந்து போனேன்.. யோசிக்க யோசிக்க வட்டவட்டமாய் முடிவில்லாமல் கலைந்து கலைந்து முடிவில் கலைந்தே போன நினைவுகளை ஒண்ணு சேக்க படாதபாடுபட்டேன். லேசாகப் பொழுது விடிகையில் பொறிதட்டிய மாதிரி அந்த நினைப்பு வந்தது.. நினைவில் நம்ம சிவராம்ஜியின் பெயரை யாரோ உச்சரிக்கிற மாதிரி இருந்தது. அவரும் நடக்கப்போகிற இந்த சதஸ்ஸில் முழுப்பங்கெடுத்துக் கொண்டு நடத்தித்தர ஆக்ஞை கிடைத்ததாக நான் நினைக்கிறேன்" என்று குரல் தழுதழுக்க மனோகர்ஜி ஆனந்தம் கண்களில் உந்தித்தள்ள சிவராமனை நோக்கினார்.

'நான் இங்குவர இறைவனின் சித்தம் இதுதானோ' என்று சிவராமன் நெகிழ்ந்து போய் மனோகர்ஜியை கண்கள் பளபளக்கப் பார்த்தார்.

(தேடல் தொடரும்)
Related Posts with Thumbnails