மின் நூல்

Friday, December 19, 2014

ஜெயமோகனின் 'வெண்முரசு'

ருப்பத்தாறு அத்தியாயங்கள் கொண்ட ஒரு  பத்திரிகை தொடர்கதையை 'ஒரு வரி' கதையா நினைத்து ஆரம்பிக்கிறது ரொம்ப சுலபம்.  நாலாவது அத்தியாயம் வரும் பொழுதே நாலு வேறு வேறு கதையா உருமாற அது முயற்சிக்கும்.  அந்த முயற்சியை புறந்தள்ளி கற்பனையின் பல நோக்குப் பார்வையைக் கட்டு ஆண்டு ஒரே பாதையில் மொத்த தொடர்கதையையும் ஒரே நேர்கோட்டில் இழுத்துச் சென்று நிறைவு செய்வது என்பது ஆரம்ப சுலபத்தை விட கஷ்டமான காரியம்.

இந்த இலட்சணத்தில் ஆயிரக்கணக்கான கிளைக் கதைகள் நெரிசலான நெய்வாகக் கொண்ட முழு மகாபாரதத்தை சுவை குன்றாமல் சொந்த எழுது முறை சாகசத்தில் முக்கி எடுத்து உதறி உலர்த்துவது என்பது எமகாதக வேலை.  துணிச்சலாக அந்த வேலையை கையிலெடுத்திருக்கிறார் ஜெயமோகன்.

இன்றைய தலைமுறையின் ஆகச்சிறந்த எழுத்தாளர் ஜெயமோகனுக்கு அறிமுகம் தேவை இல்லை.   என்ன தான் சிறப்பாக எழுதினாலும் அவர் சினிமா மூலமாக பிரபலமானால் தான் வெகுஜன பார்வையில் பதிவார் எங்கிற தமிழகத்தின் தலைவிதிக்கு ஜெயமோகனும் தப்பவில்லை. இது வரை வெளிவந்த 'நான் கடவுள்' 'அங்காடித்தெரு', 'நீர்ப்பறவை', 'கடல்' தாண்டி வசந்தபாலனின் 'காவியத்தலைவன்', கமலின் 'பாபநாசம்' படங்களிலும் இவரின் பங்களிப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்திய பண்பாட்டுத் தளத்தில் ஊறித் திளைத்த மகாபாரதம் 'வெண்முரசு' என் கிற பதாகையின் கீழ் ஜெயமோகனின் இணைய தள பதிவுகளில் மிடுக்காக உலா வந்து கொண்டிருக்கிறது.  சந்தேகமில்லாமல் இது ஒரு அசுர முயற்சி.   ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எடுத்துக் கொண்ட இந்த மகா முயற்சி ஒரு பத்து வருடப் பிரொஜக்ட் என்கிறார் ஜெயமோகன்.

வருடத்திற்கு குறைந்தது ஐந்து பாகங்கள்.  ஆக பத்து வருடத்திற்கு ஐம்பது பாகங்கள்.  ஒவ்வொரு பாகமும் ஆயிரம் ப க்கங்களுக்கு குறையாது என்கிற பொழுது ஐம்பது  பாகங்களும் ஐம்பதாயிரம் பக்கங்கள்.  ஐம்பதாயிரம் பக்கங்களா என்று மலைக்க வேண்டாம்.  ஜெயமோகனின் எழுதும் வேகம்
அறிந்தவர்களுக்கு இதெல்லாம் ஜெயமோகனுக்கு ஜூஜூபி என்று தெரியும். ஆனால் அந்த ஐம்பதாயிரம் பக்கங்களையும் மூலத்திலிருந்து வழுவாமல் பாரதம் முழுதும் அதன் பரந்து பட்ட குக்கிராமபகுதிகளிலெலாம் செல்வாக்கு பெற்றிருக்கிற எளிய மக்கள் நேசிக்கிற அந்த மகாபாரதத்தின் செறிவை குலைத்து விடாமல் ஜெயமோகன் எப்படித் தரப்போகிறார் என்பது தான் மிலியன்  டாலர் கேள்வி.

பி.கே. பாலகிருஷ்ணனோட 'இனி நான் உறங்கட்டும்' (இனி ஞான் உறங்ஙட்டே?')  மகாபாரதத்து கர்ணனை முக்கிய பாத்திரமாகக் கொண்ட நாவல்.  எம்.டி.வாசுதேவன் நாயரோட 'இரண்டாம் இடம்', ('இரண்டாமூழம்') மகாபாரதத்து பீமனை மையமாகக்  கொண்டது.   எம்.வி.வெங்கட்ராமின் 'நித்ய கன்னி'யோ மகாபாரத்தின் துணைப்பாத்திரமான மாதவியின் அவலத்தை மனம் இரங்கச் சொல்லி பதைபதைக்க வைப்பது. பிரபல கன்னட நாவலாசிரியர் எஸ்.எல். பைரப்பாவின் 'பருவம்', மனம் கவர்ந்த மராட்டிய எழுத்து மேதை காண்டேகரின் 'யயாதி'  என்று மகாபாரத கதை மாந்தர்களை நடமாட விட்ட கதைக்களன்களை நாம் அறிவோம்.  மகாபாரத்தை நிலைக் களனாகக்  கொண்டு கிட்டத்தட்ட முன்னூறு நாவல்களுக்கு  மேல் எழுதப் பட்டிருப்பதாக விஷயம் தெரிந்தவர்கள் கணக்கு சொல்கிறார்கள்.

ஆனால் இப்பொழுது ஜெயமோகன் மொத்த மகாபாரத்தையும் தன் எழுத்தில் எழுதப்  புகுந்திருக்கும் முயற்சி இதற்கு முந்தைய முயற்சிகளிலிருந்து வேறுபட்டது.  தனது 'வெண்முரசு' புதினத் தொடரில், மாகாபாரத்தின் ஒவ்வொரு பிரதான பாத்திரத்தையும் ஒவ்வொரு பாகத்திலும் அந்தப் பாத்திரத்தின் தனித்தன்மையை தூக்கி நிறுத்திக் காட்டி ஒட்டு மொத்த மகாபாரதத்தை நிறைவு செய்யப் போகிறார் என்பது அசகாய முயற்சி தான். மகாபாரத வரலாற்று நாயகர்களின் வரிசை அவரவர் சிறப்பியல்புகளால் எழுதுபவனின் எண்ணத்தில் ஓங்கி நிற்க எழுதுபவன் எழுதும் கதைக்கான பிரிவுகளின் எண்ணிக்கையைக்  கூட்டவும் செய்யலாம்..  'இருபத்து நான்கு மணி  நேரமும் இவர் எழுதிக்கொண்டே தான்  இருப்பாரா' என்று நாம் நினைத்து அதிசயிக்கத் தக்க அளவில் எழுதி சாதித்திருக்கும் ஜெயமோகனுக்கு எல்லாமே சாத்தியம் தான்.  இதுவே இவரின்  பலமும் கூட.

தனது www.jeyamohan.in தளத்தில் நாள் தோறும் ஒரு அத்தியாயம் என்று ஜெயமோகன் மகாபாரதத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.  இப்பொழுது வெளிவந்து கொண்டிருப்பது ஐந்தாம் பாகம்.  'பிரயாகை'  என்னும் தலைப்பு  கொண்டது.  'முதற்கனல்', 'மழைப்பாடல்', 'வண்ணக்கடல்' 'நீலம்' என்று நான்கு பாகங்கள் எழுதப்பெற்று தனித்தனியாக புத்தகங்களாகவும் வெளிவந்து விட்டன.  அவற்றை செம்பதிப்புகளாக  நற்றிணை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. (முகவரி: 6/84, மல்லன் பொன்னப்பன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5.  www.natrinaibooks.com -லில் ஆன்லைனிலும் வாங்கிக் கொள்ளலாமாம்.)

ஜெயமோகன் தளத்திற்குப் போனால் ஏக  பிரமிப்பு தான். மகாபாரத வாசிப்பின் தொடர்புகளாக 'வெண்முரசு விவாதங்கள்' 'வெண்முரசு வாசகர் விவாத குழுமம்', 'மகாபாரத அரசியல் பின்னணி'  என்று தனித்தனிப்  பகுதிகளாக மகாபாரத கொண்டாட்டம் களை கட்டியிருக்கிறது.

"மகாபாரத்துல இடம் பெற்ற எல்லோருக்குமே ஒரு கதை  இருக்கு.. அவங்களோட செயல்களுக்கு  ஒரு நீதி, நியாயம் இருக்கு.  இதை எல்லாம் விரிச்சு எழுத நினைச்சேன்" என்கிறார் ஜெயமோகன். "அப்ப நடந்தது தானேன்னு எதையும்  ஒதுக்க முடியாது.  இன்றைய வாழ்க்கைக்கான தரிசனங்கள் அதுலே அடங்கியிருக்கு...  பெரிய  கேரக்டரோ, சின்ன கதாபாத்திரமோ, மகாபாரதத்துலே இடம் பெற்ற எல்லோருக்குமே ஒரு  கதை இருக்கு.." என்று ஜெமோ சொல்லிக்கொண்டே வருகையில் கதையைத் தாண்டிய அந்த இதிகாச வரலாற்று நிகழ்வின் ஜீவன் நமக்குப்  புலப்படுகிறது.
அந்த வெளிச்சக் கீற்றின் ஒளிச்சுடரில் அஸ்தினாபுரமும், யுத்தபூமியான குருஷேத்திரமும் நிழலாடுகின்றன.  வாழ்க்கைக்கான உபதேசமான கிருஷ்ண பரமாத்மாவின் பகவத் கீதையின் நிலைக்களனான இதிகாசம். இது வெறும் கதையன்று,  இந்த புண்ணிய  பூமியில் நிகழ்வுற்ற வரலாற்று நிகழ்வன்றோ?' என்று புரண்டு புரண்டு நம்மில் யோசனையாகிறது.   வரலாறு என்றவுடனே என்னதான் ஒரு வரலாற்று நிகழ்வை கதைங்கற பாண்டத்தில் அடைத்து  தந்தாலும் நிகழ்வுற்ற நிகழ்வுகளான அந்த வரலாற்று நிகழ்வுகளுக்குக் குந்தகம் விளையாமல் கதையின் போக்கும் அந்தக் கதைக்கான சொல்லாடல்களும் அமைய வேண்டுமே என்கிற பொறுப்பும் கூடுகிறது,.


ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று உண்மைகள் கூட எப்படியெல்லாம் மாற்றியும் திருத்தியும் புதினங்களாகியிருக்கின்றன என்கிற நிதர்சனங்கள் நம்மை அயர்வுக்குள்ளாக்குகின்றன.  தமிழிலோ கேட்கவே வேண்டாம்.   எதற்காக இப்படித் திரித்து எழுத வேண்டிய அவசியம் நேரிட்டது என்று அந்த வரலாற்று உண்மைகளை அறிந்திருக்கும் வாசகன் எரிச்சலோ அயர்ச்சியோ கொள்ளும் அளவுக்கு திரிபுகளின் அரங்கேற்றம் தமிழில் நிகழ்ந்திருக்கின்றன.  எந்த எழுத்தும் வெகுதிரள்  பார்வையில் பட வேண்டும் என்றாலே அவை பத்திரிகைகளின் மூலமாகத் தான் நடக்க வேண்டும் என்கிற சாபத்தீடு வேறே.  பத்திரிகை விற்பனைக்கான போட்டுக்  கொள்ளும் வேஷங்களுக்கு ஏற்ப பத்திரிகைகளின் உள்ளடக்கமும் இருந்தாக வேண்டிய கட்டாயங்களுக்கு எழுதுபவனும் தன் எழுத்தை அந்த சட்டத்திற்குள் உள்ளடக்க வேண்டிய நிர்பந்தமும் இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது.  இந்த நிர்பந்த வேலிகளுக்குள் தன்னை உட்படுத்திக் கொள்ளாமல் ஜெயமோகன் இந்த மகாபாரத வெளியீடுகளுக்கு களனான தனது வலைத்தளத்தைத் தேர்ந்தெடுத்திருப்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  தமிழின் எதிர்கால எழுத்தின் போக்குகளை அறுதியிட்டு நிச்சயிக்கப்  போகிற வலைத்தள எழுத்துக்களின் செம்மாந்த வளர்ச்சிக்கும் அதன் சிறப்பிற்கும் தகுதி சேர்க்கக்கூடிய ஜெயமோகனின் அயராத சாதனைகளை இருகரம் நீட்டி ஆரத்தழுவி வரவேற்க கடமைப்பட்டுள்ளோம்.   ஜெயமோகனின் வெற்றி தமிழ் வலையுகத்தின் வெற்றியாகப்  பரிமளித்திருக்கிறது என்கிற உண்மை எல்லாவற்றிற்கும் ஊடேயே பதிந்து போயிருக்கிற நிகழ்வுலக சரிதமாகும்.

'வெண்முரசு' உலாவை மிகச் சிறபாக உலவ விட வேண்டுமென்ற அக்கறையில் தனது அன்றாட  வெண்முரசுக்கான பதிவுகளை வெகு நேர்த்தியாக ஜெயமோகன் அமைத்திருக்கும் பாங்கு வியக்க வைக்கிறது.மிகச் சிறந்த  ஓவியரான திரு.ஷண்முகவேல்  ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் சித்திரம் வரைந்து வருவது கதைக்கான வெளியீட்டு அழகைக் கூட்டுகிறது.


"இப்படி சித்திரம் வரைந்து தருவதற்காக ஷண்முகவேல் ஒரு பைசா கூட வாங்குவதில்லை.  அதனால புத்தக விற்பனையில் வரும் ராயல்டி தொகையை அப்படியே அவருக்கு வழங்க இருக்கிறோம்.  எனக்கு மகாபாரதத்தை எழுதற திருப்தி போதும்" என்று வெளிப்படையாய் ஜெயமோகன் சொல்லியிருப்பது  ஒரு சத்திய எழுத்தாளனின் தார்மீக வெளிப்பாடாய் மனசைப் புளகிக்கச் செய்கிறது.

வில்லிப்புத்தூராரின் 'வில்லிபாரதம்' பக்தியை மையமாகக்  கொண்ட கவிதை ஊற்று.  ராஜாஜியின் 'வியாசர் விருந்தோ' குழந்தைகளையும் கவரும் விதத்தில்  மிக  எளிமையாக எழுதப்பட்ட ஒன்று. இந்த மாதிரி தமிழில்  மகாபாரதம் அறிமுகமான களத்தைத் தாண்டி ஜெயமோகனின் வெண்முரசு வேறு வேறு எல்லைகளைப் பற்ற வேண்டும்  என்று எதிர்பார்ப்பு கூடுகிறது. இந்திய தத்துவ  ஞான  மரபில் மிகுந்த  பரிச்சயம் கொண்டவர் ஜெமோ.  இதுவே தனிச் சிறப்பாக ஜெயமோகனை  மற்றவர்களிடமிருந்து பிரித்த தனி அடையாளமாகத் திகழ்கிறது.  இந்த 'வெண்முரசிலும் தனது தனித்த முத்திரையை ஜெயமோகன் பதித்து மற்ற பகுதி மகாபாரதங்களிலிருந்து விலகிய ஓர் அடையாளத்தை தமிழுக்கான பதிப்பில் பதிப்பார் என்கிற எதிர்பார்ப்பு உற்சாகம் ஊட்டுகிறது.

ஜெயமோகன் என்கிற ஒரு தமிழ் எழுத்தாளரின் தனிப்பட்ட உன்னத சிறப்புகள் மேலோங்கி, அவர் தன் எழுத்துக்களில் வடித்துத் தருகின்ற ஒரு மாபெரும் நூலுக்கான சிறப்பாகவும் 'வெண்முரசு' மிளிரப் போகிறது.   நாம் வாழும் காலத்தின்  ஆகச் சிறந்த ஒரு எழுத்தாளரின் பெருமையெல்லாம் நம் மொழிக்கான பெருமையாய் மலரப் போவதின் சாத்தியங்கள் நம்  சந்தோஷத்தைக்  கூட்டுகிறது.

உலகின் இயற்கை சக்திகள் அத்தனையும் உங்களுக்குத் துணையாக இருக்கட்டும்!..  உங்கள் அரிய பணி சீரும் சிறப்பும் கொண்டு மிளிரட்டும்.

இது தமிழின் பெருமை;  தமிழனின் பெருமை.  வாழ்த்துக்கள், ஜெயமோகன்!



குறிப்பு:  படம் உதவிய நண்பருக்கு நன்றி.

Saturday, November 1, 2014

கோபம்

A. எப்பொழுதெல்லாம் உங்களுக்குக்  கோபம் வருகிறது?

1. பிறர் உங்களை குற்றம் சொல்லும் பொழுது.

2. உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்கும் பொழுது.

3. நீங்கள் பிறரால் அலட்சியப் படுத்தப்படும்  பொழுது


B. கோபப்படுதல் உடல் நலத்திற்கு  தீங்கு என்று தெரியுமா?

1.  தெரியும்

2. தெரியாது

3. அப்படீன்னா சொல்றீங்க?

C.  கோபத்தை தவிர்க்க  முயன்றிருக்கிறீர்களா?

1.  இல்லை

2.  முயன்றதுண்டு

3. அதெல்லாம் வேலைக்கு ஆகாது.


D.  கோபப்பட்டு ஜெயித்ததுண்டா?

1.  இல்லை

2.  சிலசமயம் உண்டு

3.  ஹிஹி.. அதுக்காகத்தாங்க கோபமே


E,  கோபம் வந்தால் என்ன நிகழும்?

1.  பிபி எகிறும்.

2. படபடப்பா இருக்கும்.  கைகால் உதறும்.

3.  கண்ணைக் கட்டிவிட்ட மாதிரி.  என்ன நடக்குதுனே தெரியாது


F. வீட்லே, வெளிலிலே எங்கே அதிகமா கோபப்படுவீங்க?

1.  எல்லா இடத்திலேயும்

2.  வீட்லே நிறைய;  வெளிலே கொஞ்சம்

3.  வீட்லே தாங்க.  வெளிலே பெட்டிப்பாம்பு

G.  கோபத்திற்கும்  சொரணைக்கும் சம்பந்தம்  உண்டா?

1.  சொரணான்னா என்னங்க?

2.  உண்டு.  அதுனாலே தாங்க  கோபமே

3.  நீங்க கேக்கறதே சரியில்லை.  கோபமூட்டாதீங்க


H.  கோபம்  எப்படி வரும்?

1.  டக்குனா?

2.  நிதானிச்சு ஆற அமரவா?

3. முதல்லேயே தீர்மானம்  பண்ணியா?

I.  கோபத்தை தவிர்ப்பதற்கு  ஏதாவது  யோசனை  உண்டா?

1.  தெரியாதுங்க.

2.  உண்டு.   கோபம் வந்தா  1,2, 3,4,-ன்னு எண்ணிக்கிட்டே சமாளிச்சுப்  பாப்பேன்.

3.  பின்னாடி வருந்தியிருக்கேன். அதுனாலே இப்போ  எவ்வளவோ  பரவாயில்லை.


J. மோதி மிதித்து விடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பான்னு  பாரதி சொல்லியிருக்கறதைப்  பத்தி  என்ன நினைக்கிறீங்க?

1.  நீங்க சொல்லித் தான் பாரதி அப்படி சொல்லியிருக்கார்ன்னு தெரியும்.

2.  பாப்பாக்கு தானே சொல்லியிருக்கார்.  நமக்கில்லை தானுங்களே?..

3.  அவரே சொல்லியிருக்கார்.  அப்ப என்னங்க கோபப்படாம இருக்க முடியுங்களா?


H.  கோபம்ன்னாலே எந்த முனிவர் நினைவு உங்களுக்கு வருகிறது?

1.  வசிஷ்டர்

2.  துர்வாசர்

3. ஜமதக்னி


-- எப்பவோ அசாத்திய கோபத்தில் இருந்த பொழுது  ஒரு காகிதமெடுத்து கிறுக்கின questionnaire  மேலே காண்பது.  பழைய காகிதங்களையெல்லாம்  குடைந்து கொண்டிருந்த போது கிடைத்தது.

சரியான  விடையோ, இந்த விஷயத்தில் நீங்கள் எப்படி என்று பார்த்துக் கொள்வதோ உங்கள் விருப்பம்.

கோபத்தை அடக்கக் கூடாது.  கக்கிவிடவேண்டும் என்பது சிலரது கணிப்பு.  கோபமாவது வந்த சுவடு தெரியாமல் போய் விடுமாம்;  அடக்கினால் அதுவே இரண்டு மடங்கு தீமை தரும் என்பது அவர்கள் கட்சி.

கோபப்படற மாதிரி நடிக்கறது, கோபப்படறது மாதிரி சம்பந்தப்பட்டவருக்கு அவ்வளவு  கெடுதல் விளைவிக்காதாம்.  பெரும்பாலும் குழந்தைகள் இடத்தில் இது செல்லுபடியாகுமாம். இப்படி நடிக்கறதிலே நாம விரும்பற பலனும் கிடைக்கும்;  உடல் நிலை பாதிப்பும் இந்த விஷயத்தில் இல்லைங்கறது அனுபவப்பட்டவர் ஒருவரது அபிப்ராயம்.  இதிலே இன்னொரு எதிர்மறை விஷயம் என்னன்னா,  குழந்தைகளும் இந்த மாதிரி கோபப்படறதுக்கு சின்ன வயசிலேந்தே பழகிக்குமாம்.  இதுனாலே இந்த விஷப்பரிட்சை வேண்டாம் என்கிறார் ஒரு மனநல  ஆலோசகர்.

கோபத்திற்கு எதிர்நிலை சாந்தமாம்.  எப்பவும் சாந்தமா இருக்கறது எப்பவும் ஸ்வீட் சாப்பிடற மாதிரியாம்.  அளவோட ஸ்வீட்டும்  காரமும் இருந்தால் மந்தத்தன்மை இல்லையாம்.  அதனாலே கோபத்தையும் சாந்தத்தையும் மிக்ஸ் பண்ணி சமநிலையில் அவ்வப்போது அனுசரித்துப் பாக்கலாமாம். அறவே கோபம் இல்லாமலும் அறவே சாந்தம் இல்லாமலும் இருப்பது ஒரு வாழ்க்கை அனுபவம் என்கிறார் அனுபவப்பட்ட ஒரு ஆசாமி.

ஆயிரம் சொல்லுங்கள், ஒவ்வொருத்தர் குணமும் அவர்களின் ஏற்றுக்கொள்ளலும் ஒரு மாதிரி என்பதால் அவரவருக்கு ஒத்து வர்றதை  கைக்கொள்ளலாமாம். இதுவே இக்கால வேத நெறியாம்.

ஒருத்தர் கோபம் ஒருத்தரோட போகாதாம்.  நாம யாரிடம் கோபப்படுகிறோமோ அவருக்கும் பத்திக்குமாம்.  கோபத்திற்கு எந்தக் காலத்திலேயோ யாரோ கொடுத்த சாபம் இது என்கிறார்கள் புராண ஞானம் கொண்டவர்கள்.

அந்த சாபத்தைச் செயலிழக்கச் செய்ய சில உபாயங்கள் உண்டு. கோபப் படுகிறவர் கோபத்தில் இரைச்சலிட்டுக் கொண்டிருக்கும் பொழுது எதிராளி எதுவும் பேசாமல் மெளனத்தைக் காப்பது கோபப்படுகிறவரை நிலைகுலையச் செய்ய பெரிதளவு துணை நிற்குமாம்.  ஒரு கை ஓசையில்  கொஞ்ச நேரத்தில் அவர் கோபமும் தணிந்து விடுமாம்.

எப்பப்பார்த்தாலும் கோபப்பட்டுக் கொண்டிருந்தால் அது செல்லாக்காசாகி விடுமாம்.  அதனாலே அளவு தெரிஞ்சு  அப்பப்போ இல்லை எப்பவோன்னு கைக்கொள்றது புத்திசாலித்தனம் என்கிறார் ஒரு விவேகி.

கோபிப்பது வேறே கோபத்திற்கு ஆளாவது வேறே என்று லெக்சர் எடுத்தார் ஒருவர்.  அதைக் கேட்கிற பாக்கியம் கிடைத்தது எனக்கு.  ஆரம்பத்தில் சுவாரஸ்யமாகத் தான் இருந்தது;  போகப்போக கோபிப்பவரின்  மனநிலை, கோபத்திற்கு ஆளாகுபவரின்  மனநிலைன்னு  அதை ரெண்டாப்  பிரிச்சார் அவர்.  கடைசியில்  கோபிப்பவர் நிலை, கோபத்திற்கு ஆளானவர் நிலை, இதைப் பார்ப்பவரின்  நிலை என்று மூன்றாக ஒவ்வொருவர் நிலையையும் பிரிச்சப்போ அவர் மேல் கோபம்  கோபமாக வந்தது.  இந்த மூணு நிலைலே எந்த நிலை என் நிலைன்னு நினைச்சதாலே வந்த   கோபம் அது.


கோபம் ஒரு தீ
தீக்கும் கோபம் பற்றும்
பற்றினால் பரவும்
பரவினால் சாம்பல்
சாம்பல் அழிதல்
அழிதலால் அறிதல்
அறிதலால் புரிதல்
புரிதலின் வினை தெரிதல்
தெரிதலின்மை கோபம்


-- வண்ணம் பூசி வெளிவந்த  ஒரு பத்திரிகைக் கவிதை.

(ஒரு வரியின் கடைசி வார்த்தையும், அடுத்த வரியின் ஆரம்ப வார்த்தையும்
ஒன்றாக இருக்குமாறு புனையப் பட்ட கவிதை என்று  ஒரு குறிப்பு வேறே!)


Tuesday, October 21, 2014

மறக்க முடியாத சில குறுங்கவிதைகள்


ரபுக் கவிதைகள் வலம் வந்த காலத்தில் தான் புத்தம் புது முயற்சிகளாய் ஏழெட்டு வரிகளில் அடங்கியதாய் உத்தியை முதன்மையாக் கொண்டு எழுதப்பட்ட கவிதை சாயலுள்ள வார்த்தைக் கோர்வைகள் கவிதைளாய் தோற்றம்  கொண்டன.

அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனின் 'புல்லின் இலைகள்' என்னும் கவிதைத் தொகுப்பின் பாதிப்பில் பல மொழிகளில் இம்மாதிரியான வசனக் கவிதைகளின் தாக்கம் துளிர் விட்டன.  மஹாகவி பாரதியாரும் வால்ட் விட்மனின் இந்த வசனக் கவிதைகளைப் (free verse poems)  பற்றி  தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.  தமிழ்க் கவிதை உலகிற்கு இவ்வகையான வசனக் கவிதை புதுவரவாகையால் அந்த நேரத்து அவை புதுக்கவிதைகள் என்று அழைக்கப்பட்டன.    கவிதைகள் யாப்பது என்பது பண்டிதர்களின் வசமாய் இருந்த காலத்தில் அவர்களிடமிருந்து பறிக்கப் பட்ட ஒரு செயலே போன்று தமிழில் ஓரளவு தேர்ச்சி பெற்றோர் எல்லாம் கவிதை எழுதலாம் என்கிற ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தமையால் வெகு எளிதில் தன் வளர்ச்சியைத் தானே நிர்ணயித்து கொண்ட மாதிரி  இப் புதுகவிதைகள் இயல்பாகவே வெகுஜன பிரபலம்  கொண்டன.  தமிழ் படித்த எல்லோருமே இப்படியான கவிதைகள் எழுத ஆசைப்பட்ட காலம் அது.

சி.சு. செல்லப்பா தனது 'எழுத்து' பத்திரிகையில் புதுக்கவிதைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்ததோடு மட்டுமல்லாது, 'புதுக்குரல்கள்' என்று ஒரு தொகுப்பை வெளியிட்டு புத்தக மூட்டைகளை சொந்தத் தோளில் சுமந்து பள்ளிகள், கல்லூரிகள் என்று அலைந்து அவற்றைக் கல்விச்சாலைகளில் அறிமுகப்படுத்தியவர்.  புதுக்கவிதைகளுக்கென்று  முதன் முதல் வெளிவந்த தொகுப்பு நூல் செல்லப்பாவின் 'புதுக்குரல்கள்' தொகுப்பு தான். தமிழில் புதுக்கவிதைக்கு மணிக்கொடிக் காலம், எழுத்துக் காலம், வானம்பாடிக் காலம் என்று அந்தந்த காலத்தை ஒட்டிய வளர்ச்சிப் போக்கு உண்டு.   'கசடதபற',  'தீபம்', 'சரஸ்வதி'. 'ழ', 'கலாமோகினி', 'கணையாழி', 'ஞானரதம்', 'நடை', 'தாமரை','கிராம ஊழியன்',
'ஐ',  'சூறாவளி' போன்ற இதழ்கள் புதுகவிதைகளின் வளர்ச்சிக்கு சிறப்பான பங்களித்திருக்கின்றன.


கலை சம்பந்தப்பட்ட ஒவ்வொரு காலகட்ட இயக்கமும் தனக்கு முற்பட்ட காலத்தின் இயக்க ரீதியான வழக்கு முறைக்கு எதிர் வினையாகத் தோற்றம் கொடுப்பதை மாற்றத்தின் செயலாக அந்தந்த இயக்கத் தொடர்ச்சியின் ஊடாக வழிநெடுக நாம் பார்க்கலாம்.  இந்த மாற்றத்தை  ஒரு காலத்து செயல்பாட்டிலிருந்து இன்னொரு காலக்கட்ட வளர்ச்சிக்கு முன்னெடுத்துச் செல்வதாகக் கொள்ளலாம்.  இதையே 'கடந்து  செல்வதாக' சிலர் சொல்லவும் கேட்டிருக்கிறேன்.  ஒரு காலத்தின்   வழக்கு முறைகளைக் கடக்கும் இந்தக்கடத்தல் தவிர்க்கமுடியாத ஒன்றாக ஒவ்வொரு இயக்கப் போக்கிலும் தன்னாலே நிகழ்கிறது.

இதற்கு தனிநபர்கள்  காரணமல்ல.  காலத்தின் மாற்றங்களில் அதற்கேற்பவான வழிமுறைகளும் மாற்றம் கொண்டு அந்தகைய மாற்றங்ளுக்கு உபயோகப்படுவர்களை உபயோகப்படுத்திக் கொள்கிறது என்றே நாம் கொள்ளுதல் தகும்.


தமிழில் புதுக்கவிதைக்கு பாரதி தான்  முன்னோடியாக அமைந்தார் என்றாலும் அவருக்குப் பிறகு புதுக்கவிதையுலகை வார்த்தெடுத்த பெருமை

பிச்சமூர்த்தி  அவர்களுக்குப் போய்ச் சேர்ந்தது.  சி.சு. செல்லப்பாவின் 'எழுத்து' பத்திரிகை, பிற்காலத்தில் கோவையில் நிலைகொண்ட  'வானம்பாடி' இயக்கம் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் வளர்ச்சிக்கேற்ப சீராட்டல்கள் நடந்திருக்கின்றன. இன்றைய காலகட்டத்திலும் கவிதை எனப்படுவதும் இதுவே என்கிற செல்வாக்கும் கிடைத்திருப்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இந்த சூழ்நிலையில் என் நினைவுகளில் மறக்கவே முடியாமல் பதிந்து போய் விட்ட சில கவிதைகளை பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டதின் விளைவு இப்படி ஒரு பதிவாக மலர்ந்திருக்கிறது.



ஆனை வந்தது முதலில்
அப்புறம் கலைந்து போனது
குதிரை மீதில் ஒருவன்
கொஞ்ச நேரம் போனான்                                  
பாட்டன்  புரண்டு மல்லாந்தான்
பாளை வெடிச்சு மரமாச்சு
அலையாய் சுருண்டது கொஞ்சம்
மணலாய் இறைந்தது கொஞ்சம்
கணத்தில் மாறிடும் மேகம்
உண்மையில் எது உன் ரூபம்?

                                                                -- மாலன்
                                                                                              


ராமச்சந்திரனா என்று கேட்டேன்
ராமச்சந்திரன் தான் என்றார்
எந்த ராமச்சந்திரன் என்று
நானும் கேட்கவில்லை
அவரும் சொல்லவில்லை.

                                                          -- நகுலன்




திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ சொன்னான்
களவு போகாமல் கையருகே வை

                                                           --  ஞானக்கூத்தன்



எங்கிருந்து வருகிறது
இந்த நதி?
    மலைகளின்
   மெளனம் உடைந்தா?
முகில்களின்
ஆடை கிழிந்தா?
வ்னங்கள் பேசிய
இரகசியங்கள் கசிந்தா?

என்னிலிருந்து

என் அந்தரங்களின்
ஊற்றுக் கண் திறந்து
என் மார்புகள்
புல்லரித்து
என் இரத்த குழாய்களில்
புல்லும் பூவும் மணந்து
என்னை முழுக்காட்டி
என்னையே கரைத்துக் கொண்டு
அங்கிருந்து வருகிறது
இந்த நதி

                                                                         -  சிற்பி



இலக்கண செங்கோல்
யாப்பு சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவையெதுவும் இல்லாத
கருத்துக்கள் தம்மைத் தாமே
ஆளக் கற்றுக்கொண்ட
புதிய மக்களாட்சி முறையே
புதுக்கவிதை

                                              -- மு. மேத்தா




முட்டி முட்டி பால்குடிக்கின்றன
நீளக் குழல் விளக்கில்
விட்டில் பூச்சிகள்

                                                         -- பாலா

மழைக்குப் பயந்து
அறைக்குள் ஆட்டம் போட்டன
துவைத்த துணிகள்

                                        -- பாலகுமாரன்





பின்னாலும் போகவில்லை
முன்னாலும் போகவில்லை
நடுக்கிணற்றில் நிகழ்காலம்

                                                          
                                                                                                                              
யாப்புடைத்த கவிதை
அணையுடைத்த காவிரி

                                                              --  சி. மணி




(பிறிதொரு போழ்து இன்னும் நிறைய பகிர்ந்து  கொள்ளலாம்..)



அன்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!




Related Posts with Thumbnails