மின் நூல்

Monday, January 19, 2009

ஆத்மாவைத் தேடி....32

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


32. பேப்பர் பையன் கதை


ஊஞ்சல் பலகை நன்கு இழைக்கப்பட்டு மழமழவென்றிருந்தது. லேசாக அசைக்கையில், 'நான் இருக்கேன்'னு கிரீச்சிடாமல் பலகையோடு பூட்டிய சங்கிலி மெளனமாக அசங்கி, பராமரிப்பின் நேர்த்தியைச் சொன்னது.


காலை ஊன்றி அமர்ந்திருக்கும் பலகையை கொஞ்சம் பின் தள்ளி உந்தி விசைக்கொடுத்து அழுத்திக் காலை எடுக்கையில் லேசாகப் பின்னே போய், அதே வேகத்தில் மேலும் கீழும் போனால் தான் அது ஊஞ்சல். நிலையாக பிணைத்திருக்கும் சங்கிலியில் தொங்கியபடிக் கிடந்தால் வெறும் தொங்கு பலகைதான். அவ்வப்போதுள்ள நிலைமைகளுக்கேற்ப உச்சம் போயும் தாழ்ந்தும் உணர்வுகளை வெளிப்படுத்தும் உறவுகளும் ஊஞ்சலைப் போன்றதே என்று சிவராமன் நினைத்துக் கொண்டார்.

மாலுவின் அப்பா சுந்தரேசனும், கிருஷ்ணமூர்த்தியின் அம்மா ஜானகியும் அண்ணன்-தங்கைகள். இவர்களின் மூத்த அக்கா பார்வதியின் பிள்ளைதான், கிருஷ்ணமூர்த்தியின் அண்ணா வைத்தீஸ்வரன். அண்ணா என்றால் ஒன்று விட்ட அண்ணா. சுந்தரேசனின் பெரிய பெண் சீதாலஷ்மிதான் கிருஷ்ண மூர்த்தியின் மன்னி. எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றான சம்பந்தம். அதனால் உறவு விட்டுப் போகாமல் மாமா-மாமா பெண்-மச்சினன் என்று கெட்டிப்பட்டிருந்தது.

மாலுவின் கணவர் சிவராமன் மட்டும் வெளி குடும்பத்தவர். பெரியவர்கள் யாரும் இப்போது உயிரோடு இல்லாமையால் அவர் தான் இந்த இரண்டு குடும்பத்திற்கும் இப்போதைக்குப் பெரியவர்.

சிவராமனுக்கு சொந்த ஊர் சேலம். சேலம் அம்மாப்பேட்டை. அவர் குடும்பத்தில் அப்பா- அப்பாவுக்கு அப்பா என்று வழிவழியாக தலைமுறையில் ஒருத்தர் எப்படியோ வைதீகராய் அமைந்துபோவது விசேஷம்.

சிவராமன் படிப்பில் படுசுட்டி. ஸ்கூல் பைனல் வரை முதல் ரேங்கைத் தவற விட்டதில்லை. எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்ட்டிவிடீஸ் வேறே-- பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி,நாடகம் என்று-- எக்கச்சக்கம். தான் படித்த பாரதி வித்தியாலயா பள்ளியின் பதாகையைத் தாழவிட்டுவிடாமல் மாவட்டம் பூராவும் தூக்கிப் பிடித்தவன்.


சிவராமன் எஸ்.எஸ்.எல்.ஸி. முடித்ததும், "என்னடா செய்யப்போறே?.. பி.எஸ்ஸி., படிக்கறையா?" என்றார் அப்பா ராமசுப்பு. இதோடு பையனின் படிப்பு முடங்கிப் போய்விடக்கூடாதென்ற தவிப்பு அவருக்கு.


"நேத்திக்கு சாயரட்சை ராஜகணபதி கோயிலுக்குப் போயிருந்தேன், அப்பா" என்று நேரடியாக அப்பாவை நிமிர்ந்து பார்க்காமல் தலை கவிழ்த்துச் சொன்னான் பிள்ளை.

"சொல்லு. வழக்கமா போறது தானே"

"பிள்ளையாரைக் கும்பிட்டு இதுக்கு மேலே என்ன செய்யறதுன்னு ஒரு வழிகாட்டப்பான்னு வேண்டிண்டேன்."

"ம்."

"விபூதி இட்டுண்டு வெளிலே வந்தா, பக்கத்து 'கலைவாணி நியூஸ் மார்ட்'லே ஒரு போர்ட் மாட்டியிருந்தா."

"ம்." பையன் என்ன சொல்லப் போகிறான் என்கிற ஆவல் அவருக்கிருந்தது.

"காலம்பற வீடு வீடா பேப்பர் போடற பையன் வேணுமாம். முதல் அக்கிரஹாரம், மேட்டுத்தெரு, டவுன் ஸ்டேஷன் பக்கம், இரண்டாவது அக்கிரஹாரம்ன்னு அம்பது-அறுபது வீடு தேறுமாம். கொஞ்சம் வார,மாச சஞ்சிகைகளையும் சேர்த்துப் போடணும். மாசம் முப்பது ரூபா தருவாராம். சரியாப்பா."

"சரியான்னு இப்படி மொட்டையாக் கேட்டா?.. நான் சொல்றது இருக்கட்டும். நீ என்ன நெனைக்கறே?" என்று பையனை நேரடியாகக் கேட்டார் ராமசுப்பு.

"காலம்பற அஞ்சு மணிக்கு ஆரம்பிச்சா, ஆறு ஆறரைக்கு முடிஞ்சிடும்ப்பா. செய்யலாம்னு நெனைக்கறேன்."

"படிக்கற வயசிலே, 'வேலை'ங்கறது கொடுமைப்பா. அப்புறம் புத்தி அப்படியே போயிடும். உன்னை மேலே மேலே படிக்கவைச்சு ஆபிஸரா பாக்கணும்ங்கறது என்னோட ஆசை."

"----------------"

"சுகவனேஸ்வரர் கோயில்லே புஷ்பப்பல்லக்கு இல்லையோ?.. சுவாமி கும்பிட ஜெயராம மாமா வந்திருந்தார். காலேஜ் அட்மிஷனுக்கு அப்ளிகேஷன் கொடுக்கறளாம். வாங்கிப் போடச்சொன்னார்."

"நேத்திக்கு மத்தியானம் அதான்'பா வேலை. போய் வாங்கிண்டு வந்திட்டேன்"என்று மேஜை இழுப்பறையைத் திறந்து பையன் காலேஜ் அட்மிஷன் அப்ளிகேஷன் பாரம்காட்ட தந்தையின் முகம் மலர்ந்தது.

"படவாப் பயலே--" என்று சந்தோஷம் வந்தால் வழக்கமாய்ச் சொல்லும் வார்த்தையைச் சொல்லிச் சிரித்தார். "பின்னே எதுக்கு இந்த பேப்பர் போடற வேலையெல்லாம்?"

"டைப்ரைட்டிங், ஷார்ட் ஹேண்ட், புக்கீப்பிங் இதெல்லாம் தெரிஞ்சிருந்தா எல்லாத்துக்கும் கைகொடுக்கும்'பா.. அதெல்லாம் படிக்கத்தான் இது."

பையனின் சூட்டிகை தந்தைக்குப் பிடித்திருந்தது. இருந்தாலும் நாலு பக்கம் கவனம் போனால், முக்கியமான படிப்பு பாதிக்குமோ என்கிற பயமும் கூடவே இருந்தது.


"என்னப்பா--"

"இல்லே, எல்லாத்லேயும் தலை கொடுக்க ஒன்னாலே முடியுமான்னு யோசிக்கறேன்."

"முடியும், அப்பா.. மேல்நாட்லேலாம் அப்படித்தானாம். படிக்கறச்சேயே ஒழிஞ்ச நேரத்லே ஏதாவது வேலை செய்வாளாம்.. படிச்சேன்."

"செய்யறது நல்லது தான்; ஒரு பொறுப்பு வரும்ங்கறது சரிதான். ஆனா ஒன்னாலே முடியுமா? அதை நீதான் சொல்லணும். என்ன சொல்றே?"

"முடியும், அப்பா."

"சரி. செய்.." என்று அனுமதி அப்பா வழங்கினார். "படிப்பு தான் முக்கியம். அதுக்கு குந்தகம் இல்லாம் வச்சுக்கோ. அப்படி அதுக்கு இடைஞ்சல்னா பேசாம எல்லாத்தையும் விட்டுடணும். தெரிஞ்சதா?"

"சரி, அப்பா."

ராமசுப்பு சாஸ்திரிகளுக்கு பையனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. நாலரை மணிக்கு அலாரம் வைத்து எழுந்தானானால், முகம் கழுவி உடைமாற்றிக் கொள்வதற்குள்,அவனோடையே எழுந்திருக்கும் அவன் அம்மா சிவகாமி, டிகாஷன் இறக்கி ஒரு கப் காப்பியோடு ரெடியாகி விடுவாள்.

சைக்கிளைத் தள்ளிக்கொண்டு கிளம்பினானால், திரும்புகிற வரையில் அந்த காப்பி தாங்கும். ஆறு மணிக்கு சாஸ்திரிகள் சந்தியாவந்தனம் பண்ணிக் கொண்டிருக்கையில் சரியாகத் திரும்பி விடுவான். அத்திப்பூத்தாற்போல் என்றாவது பேப்பர் வேன் டிலே ஆகி விட்டதென்றால், காலேஜ் கிளம்புவதற்குள் சிவராமன் அந்த தாமதத்தையும் சரிபண்ணிக் கொண்டு விடுவான்.

ராஜகணபதி கோயிலுக்கும், வில்வாத்ரி பவன் ஹோட்டலுக்கும் நடுவே இருக்கும் சிமிண்டு பாவிய தரையில் தான் வேன்களிலிருந்து இறக்கி வைத்த பேப்பர்கட்டுகள் மலையாகக் குவிந்து கிடக்கும். சிவராமன் வந்துவிட்டால், பேப்பர்கட்டுகளைப் பிரித்து அடுக்கும் அத்தனை பேருக்கும் டீம் லீடர் வந்துவிட்டமாதிரி குஷி! பரபரவென்று செயல்படும் சிவராமனின் வேகம் அந்தக் குழுவினரிடையே பிரச்சித்தி பெற்றது.


ஆங்கில, தமிழ் தினசரிகளைத் தனியே பிரித்துக் கொண்டார்களானால், ஒரு தினசரிக்கு இரண்டு பேர். பக்கம் பார்த்து சேர்ப்பது, தனிப் பண்டிலாக வரும் சப்ளிமெண்டுகளை தனியாகப் ஒவ்வொரு பேப்பரிலும் நுழைப்பது என்று வேலை பெண்டு வாங்கும். அரைமணி நேரத்தில் அவ்வளவையும் நேர்பண்ணி சைக்கிள் கேரியரில் தன்னதைத் தூக்கி வைத்துக் கட்டி கிளம்பிவிடுவான் சிவராமன். முக்கிய செய்திகள் ஏதாவது இருந்தால், அடுக்கும் பொழுதே மேலோட்டமாகப் பார்த்துவிடுவான். மொத்தத்தில் இந்த வேலை சிவரமனுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது; மனசுக்கு சந்தோஷமாகவும் இருந்தது.

"என்ன அப்படியே உட்கார்ந்திட்டேள்?..குளிக்கலையா?" என்று மாலினியின் குரல் அருகே கேட்டதும் தான் தலையைக் குலுக்கிக்கொண்டு நனவுலகுக்கு வந்தார் சிவராமன்.

"ம்.. என்ன கேட்டே?"

"சரிதான் போங்கோ... பாத்ரூம் காலியா இருக்கு. குளிக்கப் போகலையான்னு கேட்டேன்" என்றாள் மாலினி.

"இதோ--" என்று சிவராமன் எழுந்திருக்கையில், "அத்திம்பேர்! ஒரு டோஸ் காப்பி சாப்பிடறேளா?.. புதுசா டிகாஷன் இறக்கியிருக்கேன்" என்றபடியே வந்தாள் ராதை.

"பேஷா--" என்று எழுந்த சிவராமன் மீண்டும் உஞ்சலிலேயே அமர்ந்தார்.


(தேடல் தொடரும்)

Wednesday, January 14, 2009

ஆத்மாவைத் தேடி....31

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....


31. உயிராகிய மூளை


டற்கூறு அறிஞர் உலகநாதன் ஆஜானுபாகுவாக உயரமாக இருந்தார். மயில்க்கண் கதர் வேஷ்டியும், மஞ்சள்நிற கதர் ஜிப்பாவும் தரித்திருந்தார். உதடுகளில் நிரந்தரமான புன்னகையொன்று குடிகொண்டிருந்தது.


அவர் மேடைக்கு வரும் பொழுது அரங்கே நிறைந்திருந்தது. அவர் குழுவினர் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். பெரியவர் கிருஷ்ணமூர்த்தி மேடையேறி பேராசிரியர் உலகநாதனை அறிமுகப்படுத்தி வைத்ததும் கூட்டத்தின் எதிர்பார்ப்பு இன்னும் கூடியது.


"சகோதர, சகோதரிகளே" என்று ஆரம்பித்த உலகநாதனின் குரல் அவரது தோற்றத்திற்கு நேர்மாறாக மென்மையாக இருந்தது.


"இன்று தான் உடற்கூறு இயலின் முதல் அமர்வு. எட்டுபேர் கொண்ட எங்கள் குழுவினர் தயாரித்திருக்கும் இந்த உரையை நான் வாசித்தளிப்பதில் பெருமைப்படுகிறேன். சகோதரி நிவேதிதா அவர்களும் அவரைத் தொடர்ந்து சகோதரி பூங்குழலி அவர்களும் மிக அருமையாக தங்கள் குழுவின் ஆற்றல் மிக்க உரையை அளித்தார்கள். அவர் சமர்ப்பித்த உபநிஷதுகளின் பொக்கிஷக் கருத்துக்களை தொடர்ந்து தான் இன்றைய விஞ்ஞான பார்வையாக எங்கள் உரையைத் தொடர வேண்டும். அது தான் முறை.


"இருந்தாலும், உடற்கூறு என்று பார்க்கும் பொழுது உயிரினங்களின் உடலினுள் உள்ளேயும் வெளியேயும் இருக்கும் உடல் உறுப்புகளைக் குறிப்பனவாகவே அவை உள்ளன. அதைச் சரியாகச் சொல்ல வேண்டுமானால், உடலினுள்ளும், வெளியேயும் நமது கண்ணுக்குப்
புலப்படும் உறுப்புகளைப் பற்றிய அறிவாகவே உடற்கூறு இயல் இருக்கின்றது.


"அதனால் விஞ்ஞான நோக்குடன் ஆன இந்த உரையைத் தயாரிக்கும் பொழுது நமது வசதிக்காக இரண்டாகப் பிரித்துக் கொண்டோம். ஒரு பகுதி, கண்ணுக்குப் புலப்படும் ஆத்மாவைத் தேடும் இந்தத் தேடலுக்கு நெருங்கிய சம்பந்தம் கொண்டிருக்கும் மூச்சு மண்டலம், நரம்பு மண்டலம், சருமம் போன்றவற்றை ஒரு பகுதியாகவும், கண்ணுக்குப் புலப்படாத மனம், புத்தி, பிராணன் போன்ற அவை தொடர்பானவற்றை இரண்டாவது பகுதியாகவும் பிரித்துக் கொண்டோம்.


'இப்பொழுதே சொல்லி விடுகிறேன். முதல் பகுதியைப் பற்றியதான எங்கள் உரையாக எங்கள் சமர்ப்பித்தல் இருக்கும். இரண்டாவது பகுதியைப் பற்றி இன்னொரு குழு சொல்வார்கள்.


"அப்புறம் இன்னொரு விஷயம். நான் நீண்ட இந்த உரையைப் படித்துக் கொண்டு போகும் பொழுது, எந்த இடத்திலாவது அது தொடர்பாக உங்களுக்கு ஏதாவது ஐயப்பாடு இருந்தால் அருள்கூர்ந்து அதைக் குறிப்பிட்டுச் சொல்வீர்களே ஆனால், நான் அறிந்த அளவு தங்களுக்கு விளக்கம் அளிக்க ஏதுவாக இருக்கும். இந்த உரையாற்றலும் ஒரு கலந்துரையாடல் மாதிரி அமைந்து நமது விவாதத்திற்கு சிறப்புக் கூட்டும். இடையே இடையே டிட்பிட்ஸ் மாதிரி இந்த உடல் என்னும் இறைவன் தந்த செல்வத்தின் ஈடு இணையற்ற சிறப்பு பற்றி 'இறைவன் இருக்கின்றார்' என்கிற தலைப்பில் அவ்வப்போது என் மனத்தில் படுவதைச் சொல்கிறேன். அந்த செய்திகள் அது தொடர்பாக மேலும் நீங்கள் தகவல் சேகரிக்கவும், வியந்து மகிழவும் வாய்ப்பாக அமையும். சென்ற முறை மாதிரி அல்லாததான இந்த மாற்றத்தை நீங்கள் வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன்.




"'சிரசே பிரதானம்' என்பது ரொம்ப காலமாக நாம் சொல்ற ஒரு வார்த்தைத் தொடர். உடலின் ஒவ்வொரு அமைப்பும், நகம் உட்பட முக்கியமானது தான். இருந்தாலும் மிக மிக சிக்கலான அமைப்பு கொண்ட தலை பாகத்தின் சிறப்பை அடிக்கோடிட்டுச் சொல்ல இந்த வழக்கு மொழி வந்திருக்கலாம்.


"தலையின் எலும்புப் பகுதியைத்தான் கபாலம் என்கிறோம். இந்த கபாலக் குழிக்குள் மூளை பலத்த பாதுகாப்புடன் உள்ளது. தலைத் தோலுக்குக் கீழே சதை கிடையாது. பெரைடல், டெம்பொரல் என்று இரண்டுஜோடி, நெற்றிஎலும்பு, எத்மாண்டு என்று ஒன்று, பின் மண்டைக்கு ஒன்று, ஸ்டீபைய்டு என்று அங்கங்கே எலும்புப் பிடிமானம் என்று இந்தப் பகுதியில் பாதுகாப்புக்கு குறைச்சலில்லை. போதாக்குறைக்கு சில கபால எலும்புகளில் காற்றுக்குழிகள் வேறு உண்டு. நிமிர்த்தி வைத்திருக்கும் காலிப்ளவர் போலிருக்கும் மூளையைச் சுற்றி இரு மெலிதான படலங்களுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் ஒரு திரவத்தின் தேக்கம் உண்டு. இது போதும்; இந்த சமயத்தில் அத்தனையும் வேண்டாம்.


"பெருமூளை, நடு மூளை, சிறு மூளை, முகுளம் இதெல்லாம் தெரிந்தவை தாம். அதனால் அவை பற்றிய நீண்ட விவரங்களும் இப்போது வேண்டாம். மூளையின் புறப்பகுதி சாம்பல் நிறத்தில் இருக்கும். இந்தக் கலருக்குக் காரணம், அங்கு படிந்திருக்கும் நியூரான்கள். உட்பகுதி நிறம் வெண்மை.



இன்னொன்று. உடலின் எந்தப் பகுதியில் காயம் ஏற்பட்டாலும் உணர்வு நரம்புகளின் மூலமாக மூளைக்குச் செலுத்தப்பட்டு அந்த வலியின் வேதனையை மூளை உணரும். ஆனால் மூளையைச் சுரண்டினால் கூட அதற்கு உணர்விருக்காது. மூளை அறுவை சிகித்சை என்றால், வலியை மறக்கடிக்க ஊசி போடத் தேவையில்லை என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம்.


அனுபவம் என்கிறதைப் பற்றி நிறையச் சொன்னார்கள். செயல்பட்டதின் விவர நிகழ்ச்சிதான், அந்த உணர்வு தான் அனுபவம் என்று சொல்லலாமா?..
இந்த மாதிரியானதும், இது போன்ற நினைவுச் சங்கிலி சமாச்சாரங்களின்
சேகரிப்பு கிடங்கு தான் மூளையின் 'ஹிப்போகேம்பஸ்' பகுதி. மிக அற்புதமான பிரதேசம்.

என்னைக் கேட்டால், மனிதனின் உயிரே அவனது மூளைதான் என்பேன். அறிவுத் திறனோடு அமைந்த சிக்கலான 'சர்க்யூட்' அமைப்பு அது. தேர்ந்த கைவினைஞனால் இழைஇழையாக நரம்பு நார்களால் பின்னப்பட்ட அற்புதம்! அவ்வளவு தான் சொல்ல முடியும்.

உடம்பிலுள்ள மற்றப் பகுதிகளில் உள்ள செல்கள் உயிர்ப்பை இழப்பின், தங்களைத் தாங்களே புதிப்பித்துக் கொள்ளும் திறன் கொண்டவை; ஆனால் மூளை செல்கள் சேதம் அடைந்தால் அடைந்தது தான். அதனால் கோடிக்கணக்கான செல்களைக் கொண்டு உயிர்ப்புடன் இருக்கும் மூளைக்கு கொஞ்சம் அதிகப்படியான ஆக்ஸிஜனும் ஊட்டச்சத்தும் தேவை.
தொடர்ந்த பயிற்சிகளின் மூலம் மூளையை நன்கு பழக்கப்படுத்திக் கொண்டு ஆற்றல் மிக்க தாக ஆக்க முடியும்.

இறைவன் இருக்கின்றார்: விஞ்ஞான, துப்பறியும் உலகைச் சார்ந்தவர்களுக்கு, அவர்கள் எத்தனை தடவை மனசால் கைகுலுக்கி நன்றி சொன்னாலும், சர் பிரான்ஸிஸ் கால்டனின் கண்டுபிடிப்புக்கு தகுந்த மரியாதை செய்த திருப்தி ஏற்படாது. அப்படி கால்டன் என்னதான் கண்டுபிடித்து விட்டார்?..

உலக மக்களில் ஒருவரின் கைரேகையைப் போலவே இன்னொருவரின் கைரேகை இருக்காது என்று கண்டுபிடித்து நிரூபித்துக் காட்டியவர் கால்டன் தான். 'எந்த இரு கைரேகைகளும் ஒரே மாதிரியானவை அல்ல' என்கிற கடவுளின் ஏற்பாடு, துப்பறியும் துறைக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.
தந்தையின் காது மடலின் ரோம அடர்த்தி, மகனுக்கும் அதுவே. அப்பாவுக்கு கிளிமூக்கு, பையனுக்கும் டிட்டோ. அம்மாவின் உதட்டு வளைவே பையனுக்கும். இதெல்லாம் சகஜம்.

ஆனால்... ஆனால்?.. கோடானுகோடியான இந்த உலக ஜனத்தொகையில் கைகளில் அமைந்துள்ள ரேகைகள் மட்டும் ஒருத்தருக்கொருத்தர் வித்தியாசப்படும். ஆறு அங்குலத்திற்கும் குறைவான உள்ளங்கை பிரதேசத்தில், ஒன்று போல் இன்னொன்று இல்லாமல் வித்தியாசப்படுத்தி இப்படியோர் கோட்டுச் சித்திரத்தை வரைதல் எப்படி சாத்தியமாயிற்று என்பது தான் புரியாத புதிர். இது உங்களின் மேலதிக யோசனைகளுக்காக.



(தேடல் தொடரும்)

Wednesday, January 7, 2009

ஆத்மாவைத் தேடி....30

ஆன்மீகத்தின் அடுத்த கட்டம் நோக்கி....


30. "உண்மை இல்லை; பொய் உரை இலாமையால்"...


போனை வைத்து விட்டு ராதை திரும்பும் பொழுது, மாலு புறாக்களுக்கு தானியம் போட்டுக் கொண்டிருந்தாள்.

அதைப் பார்த்து ராதை சிரித்தாள். "என்ன, அக்கா! கொஞ்ச நேரத்திற்கு முந்தி தான் அதுகளை விரட்டு விரட்டென்று விரட்டினீங்க.. இப்போ என்னன்னா, தானியம்போட்டு சமாதானமா?"

மாலுவும் பதிலுக்குப் புன்னகைத்தாள். "விரட்டாதே... தானியம் போடுன்னு கிருஷ்ணாதான் சொன்னான். அதான்."

"அவரா சொன்னார்?.. ஏனாம்?.. சாப்பிடறதைச் சாப்பிட்டு இன்னும் ஹால் பூரா ரெக்கையைக் கொட்டவா?"

"பக்ஷிகளெல்லாம் 'த்விஜ' பிறவிகளாம்.. விரட்டக்கூடாதாம்."


"அப்படின்னா? 'தவிஜ'ன்னா?.."

"தாய்ப்பறவையிலிருந்து முதலில் முட்டை, பின்னாடி குஞ்சுன்னு இரு பிறப்புகளாம் அதுகளுக்கு."


"ஓ!" என்று உதட்டைக் குவித்தாள் ராதை. 'புருஷன் எவ்வளவு விஷயம் தெரிந்து வைத்திருக்கிறார்' என்று பெருமையாக இருந்தது. "அதுசரி.. அப்படிச் சொல்லிட்டா போதுமா?.. இதெல்லாம் முறத்லே எடுத்து யாரு கொட்டறதாம்?" என்று அங்கங்கே படிந்திருந்த புறா எச்சத்தையும், உதிர்ந்து கிடந்த இறகுகளையும் சுட்டிக்காட்டிக் கேட்டாள்.

"அதுக்குத் தான் நான் வந்திருக்கிறேனே?" என்று சொன்ன மாலு, 'ஏதும் தப்பாய்ச் சொல்லி விட்டோமோ' என்று சடாரென்று உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

"அதையும் அவர் தான் சொன்னாராக்கும்?.. சரியான அக்கா!" என்று சிரித்த ராதையின் விகல்ப்பமற்ற வெள்ளை மனம் மாலுவுக்கு மிகவும் பிடித்திருந்தது.

மாலுவும் சிரித்து விட்டாள். "அப்படின்னு கிருஷ்ணா சொல்லலே.. வேறொண்ணு சொன்னான். 'மனுஷாள்கிட்டே பறவைகள் நெருங்கறது பாக்கியம்'ன்னு சொன்னான்."


"ஓ' என்று அழகாக உதட்டைக் குவித்தாள் ராதை. "இப்படின்னு எனக்குத் தெரியும். அவர் இப்படி ஏதாவது சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும்னு எனக்கு ஏற்கனவே தெரியும்"

"அர்த்தம் இருக்கும்னு ஏத்துக்கறது சரி. என்ன அர்த்தம்னு தெரிஞ்சிக்க வேணாமா?"

இரண்டு கைகளையும் பரக்க விரித்தாள் ராதை. "தெரிஞ்சிண்டு என்ன ஆகப்போறது? அனுபவப்பட்டவா சொன்னா சரிதான்."

"என்ன ராதை சொல்றே?.. அனுபவப்பட்டவா அனுபவத்தை நீ அனுபவிச்சு அதை இன்னொருத்தருக்குச் சொல்ல வேண்டாமா?"

"யாருக்குச் சொல்லணும், அக்கா?"

"வேறே யாருக்கு.. உன் பையனுக்கு, மாட்டுப்பொண்ணுக்கு, குழந்தைகளுக்கு, என்னை மாதிரி சொந்தக்காரங்களுக்கு, ப்ரண்ட்ஸ்களுக்குனு எல்லாருக்கும்தான்"

ராதை 'கலகல'வென்று சிரித்தாள்.

"என்ன சிரிக்கறே?"

"எவ்வளவு விஷயம் வரிசையாச் சொல்றேள்?.. அதை நினைச்சுத்தான்."

"புலம்பறேன்னு நெனைச்சுச் சிரிக்கறயா?"

"ஐயய்யோ.. அப்படி இல்லே, அக்கா! தான் பட்டதை, தெரிஞ்சிண்டதை மத்தவாளுக்கும் சொல்லணும்னும், அவாளும் அதைத் தெரிஞ்சிக்கணும்னும் நெறைய ஆசை இருக்கு,உங்களுக்கு. அதைச் சொல்ல வந்தேன்."

"ரொம்ப அலட்டறேன்னு தோண்றதா?"

"நிச்சயமா இல்லே, அக்கா!.. மத்தவா மேலே எவ்வளவு அக்கறைன்னு ஆச்சரியப்படத் தோண்றது."

"நெஜமாவா சொல்றே?"

"சத்தியமா'க்கா."

"சீச்சீ.. இதுக்கெல்லாம் எதுக்கடி சத்தியம்?" என்று சொல்லியவாறு மாலு ஆதுரத்துடன் ராதையின் கைகள் இரண்டையும் பற்றிக் கொண்டாள்..

"இதுன்னு இல்லே, ராதை!.. லோகஷேமத்திற்காக நல்லதுன்னு நெனைக்கற பல விஷயங்களை நாம ஒருத்தருக்கு சொல்லி, அவா இன்னொருத்தருக்குச் சொல்லி, இப்படி அந்த விஷயங்கள் பரவறதிலே ஒரு சுயநலமும் இருக்கு, தெரியுமா?"

தன் பெரிய கருவிழிகளை விரித்து ஆச்சரியமாக மாலுவைப் பார்த்தாள் ராதை.

"என்ன அப்படிப் பாக்கறே?"

"இத்தனை வயசு வளர்ந்துட்டேன்; வளர்ந்திட்டது தெரியறதே தவிர, பலது தெரியாமலேயே வளர்ந்திட்டேன். அடுப்பங்கரை, ஆத்துக்காரர் செளக்கியம், மகன், மருமகள்,மகள், மாப்பிள்ளை, பேரன்னு என் வாழ்க்கை போயிடுத்து... சுத்தமா பலது தெரியலே."

"தெரியலைன்னு கைவிரிக்கறதை விட்டுத்தள்ளு. நல்லதைத் தெரிஞ்சிக்கணும்னு ஆர்வம் இருந்தாப் போதும். அதுவே பெரிய விஷயம். நெறையத் தெரிஞ்சிக்கலாம்."

"சரிக்கா.. இப்படி நாலு பேருக்கு நமக்குத் தெரிஞ்சிக்கறதைச் சொல்றதிலே ஏதோ சுயநலம் இருக்குன்னு சொன்னீங்களே?"


"ஆமாம், ராதை!" என்று முறுவலித்தாள் மாலு. "சரியாச் சொல்லணுன்னா பொதுநலம் கலந்த சுயநலம் அது."

""உம்..." ராதை சுவாரஸ்யமானாள்.

"நாம மட்டும் நல்லது நெனைச்சு, மத்தவாளுக்கு நல்லது பண்ணி, நாம செய்ய வேண்டியதைச் செஞ்சாச்சுன்னு ஓஞ்சுபோய் ஒரு தீவாப் போயிடக்கூடாது. அப்படிப்போனாவிரக்திதான் மிஞ்சும். எதுவும் எதிர்பார்த்துச் செய்யாட்டாலும், 'எவ்வளவு செஞ்சேன், ஒரு நன்றி இல்லையே'ன்னு சுயப்பரிதாபம் தான் மிஞ்சும்."


"சரிதான்."


"செய்யற நல்லதை நாலுபேருக்கிட்டே பகிர்ந்திக்கறதும், முடிஞ்சா நீயும் செஞ்சுப்பாரேன்னு வழிகாட்டறதுமான செயல் நாளாவட்டத்தில் ஒருத்தருக்கொருத்தர் பரவி இதை நியாயம்னு ஏத்திண்டு நல்லதையே நினைச்சு நல்லதையே செய்யற கூட்டம் பெருகப் பெருக, தீமைகளோட தலையாட்டம் தணிஞ்சு ஒழிஞ்சே போயிடும். அப்புறம் கிருதயுகம் தான்."


"பாரதி சொன்னாரே, அந்த கிருதயுகமா? படிச்சிருக்கேன்."


"அதே தான். கம்பராமாயணத்திலே ஒரு அடி வருமே, 'உண்மை இல்லை; பொய் உரை இலாமையால்'ன்னு. கிட்டத்தட்ட அதேமாதிரியான வேறொரு வெர்ஷன் இது. நல்லவை பரவப் பரவ, தீமைன்னா என்னன்னே வர்ற தலைமுறைக்குத் தெரியாமப் போயிடும். அப்புறம் செய்யற காரியங்களுக்கு நல்லதுங்கற பேரே கூட மறைஞ்சு போய், நல்ல காரியங்களோ செய்யற காரியங்களாயிடும்."

"-------------"

குளித்து உடைமாற்றிக் கொண்டு சுபா பாத்ருமிலிருந்து வெளியே வந்தாள். மாமியாரும், பெரியக்காவும் பேசிக் கொண்டிருந்த ஹாலுக்கு வந்தவள், முத்தத்தைப்பார்த்து திகைத்து, "அடேடே! இதுகளெல்லாம் எங்கே போச்சு.. ஒண்ணைக்கூடக் காணோமே?" என்று திகைத்தாள்.

"ஆமாம், சுபா! அந்தப் புறாக்கள்லாம் படபடத்திண்டு இல்லாதது வெறிச்சோன்னு தான் இருக்கு.. நான் பெங்களூர் போயும், அதுகளை மறக்க முடியாது போலிருக்கு.பறவைகள் மனுஷாளை நெருங்கறது பாக்கியம்னு கிருஷ்ணா வேறே சொல்லிட்டானா, அந்த பாக்கியம் கிடைக்கலேயேன்னு......"

"அதான் என்ன பாக்கியம்னு சொல்ல மறந்திட்டீங்களே!" என்று ஞாபகப்படுத்தினாள் ராதை.


"ஆமாம், ராதை.. கிருஷ்ணா சொன்னது சரிதான். யோசிச்சுப் பார்த்தா ஒரு பெரிய உண்மையே தெரியறது, அவன் சொன்னதிலே.."

மாலுவே தொடர்ந்தாள்: "பறவைகள் மனுஷாள் கிட்டே நெருங்கணும்னா, அப்படி அதுங்க நெருங்கற அளவுக்கு அந்த மனுஷன் அதுகளை பயப்படுத்தாம இருக்கணும் இல்லையா? பறவைகள் நெருங்கற அளவுக்கு மனுஷாள் சாத்வீகமா இருக்கறதைச் சொல்ல வந்த வார்த்தை அதுன்னு நெனைக்கறேன்."

"ஓ.. அந்த ஒத்தை வரிலே இத்தனை அர்த்தம் இருக்கா!" என்று வியந்தாள் ராதை.

"நேரடியான அர்த்தம் அதுதான்னு இல்லே.. யோசிச்சுப் பாத்து, இதுக்கு இப்படி இருக்கலாமோன்னு நாம்பளே பண்ணிக்கற வியாக்கியானம் தான்."


ராதை மாலுவை நெருங்கி வந்து அவள் வலக்கரம் தூக்கித் தன் விரல்களுக்குள் பொத்திக் கொண்டாள்: "நீங்க பேசறதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, அக்கா!"

"அப்படியா?.. எல்லாம் அவரோடப் பேசிப்பேசிப் பழகிண்டது தான்" என்று மாலு சொல்லிக் கொண்டிருக்கையிலேயே வாசல் பக்கம் நிழல் தட்டியது.

வாசல் பக்கமே செருப்பைக் கழட்டிப் போட்டு விட்டு ஹிண்டுவும் கையுமாக உள்ளே நுழைந்தார் சிவராமன்.

"அத்திம்பேர் கூட வாக்கிங் போயிட்டு வந்தாச்சே" என்றபடியே சமையறைப் பக்கம் நுழைந்தாள் ராதை.

"வழிலே பேப்பர் கடை ஒன்றைக் கூடக்காணோம். பஸ் ஸ்டாண்டு வரை போயிட்டு வரேன்" என்றபடியே ஊஞ்சலில் அமர்ந்தார் அவர்.

(தேடல் தொடரும்)
Related Posts with Thumbnails