Monday, December 11, 2017

இது ஒரு தொடர்கதை...

புதிய தொடர் ஆரம்பம்

அத்தியாயம் -- 1

ழமழவென்று மரத்தினால் இழைத்து சின்ன பெட்டி ஸைஸில் இருந்தது கூடு.  எல்லாப் பக்கமும் சுற்றி வெள்ளை வெளேர் தகடு அடிக்கப்பட்டு தூக்கிக் கொண்டு  செல்வதற்கு வாகாக மேல்பக்கம் வளையம் மாட்டி சின்ன சங்கிலி  கோக்கப்பட்டிருந்தது.  சிறைக் கம்பிகள் மாதிரி தகடில் சின்ன தடுப்புக் கம்பிகள்.  கம்பிக் கதவு திறக்க அது வழியாகத்  தான் அந்த பச்சைக் கிளி வெளிவந்து ஜோசியக்காரனிடம் சீட்டு எடுத்துக் கொடுத்து அந்த காரியத்திற்குக் கூலியாக அவன் தந்த நெல்மணியை சீட்டு கொடுத்த மூக்காலேயே வாங்கிச் சென்றது.

அது சீட்டு எடுத்துக் கொடுக்க வேண்டும், இவன் அந்த நொடியே நெல்மணி கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத ஒப்பந்தம்  போல நடந்து கொண்டிருந்தது.  வாலாயமாய்  நடைமுறையில் இருக்கும் இந்த ஒப்பந்தத்தை இருபக்கமும் இது வரை மீறினதாகத் தெரியவில்லை.  அதனால் வெளிக்குத் தெரியாத ஒரு அன்யோன்யம் இரு பகுதியிலும் இருப்பது தெரிந்தது.  உன்னை நம்பி நானும், என்னை நம்பி நீயும் என்பது மாதிரியான  ஒரு யதார்த்த பிடிப்பு.

ஈஸ்வரன் கோயில் தெருவில் கீழிறங்கி மேலேறிய மேம்பாலம் தாண்டித் திரும்பிய திருப்பத்தில் அந்த ஜோசியக்காரன் ஒரு ஒதுக்குப் புறமாக உட்கார்ந்திருந்தான். செம பிஸியான  ரோடு.  இருந்தும் இவனையும் இவன் கிளிக்கூண்டையும்  பார்த்த சிலர் இவனைத் தாண்டிப் போக மனமில்லாமல் விரித்திருந்த கோணியின் உட்கார்ந்து ஜோசிய தாகம் தீர்த்துக் கொண்டவர்களாகவே இருந்தனர்.

சற்றுத் தள்ளி சாத்தியிருந்த ஒரு கடையின் படிக்கட்டுகளில் உட்கார்ந்தபடி மூன்றாம் மனிதனாக இங்கு நடப்பனவற்றை நோட்டமிடுவது பாண்டியனுக்கு சுவாரஸ்யமாக இருந்தது..  அந்தக் கிளியும் இவன்  பார்வையிலிருந்து தப்பவில்லை.  எவ்வளவு கார்யார்த்தமாக அது செயல்படுகிறது என்பதைப்  பார்க்க பாண்டியனுக்கு வியப்பாக இருந்தது.  ஜோசியம் பார்க்க ஆள் வந்து இவன் கூண்டுக் கதவு திறந்ததும் ஒயிலாக அந்தக் கிளி நடந்து  வந்து அடுக்கியிருக்கும் சீட்டுக்கற்றையிலிருந்து  ஒரு கவரை மட்டும் பாங்காக இவனிடம் எடுத்துத் தந்து விட்டு மெஜஸ்டிக்காக நெல்மணி வாங்கி என் அடுத்த வேலை கூண்டுக்குள் நுழைந்து சிறைபடுத்திக் கொள்வது தான்  என்கிற மாதிரி இந்தப் பக்கம்  அந்தப் பக்கம் பார்க்காமல் தன் வேலை முடிந்த ஜோரில் கூடு நோக்கி விரைவதும், இனி மேல் என் வேலை ஆரம்பிச்சாச்சு என்கிற மாதிரி கிளி எடுத்துக் கொடுத்த சீட்டு உறையை உதடால் ஊதிப் பிரித்து உள்ளிருக்கும் ஜோசியப்பலன் கவிதையை பாட்டாக ராகம் போட்டுப் படித்து இவன் நடக்கப் போவதை விவரிப்பதும்...

பாண்டியன் சுற்றுப்புற சூழ்நிலையே மறந்து  போனவனாய் கிளி ஜோசியக் காரனைச் சுற்றி நடப்பதில் மனம் மயங்கிப் பார்த்துக் கொண்டிருந்தான்.  ஒரு ஆள் வந்து பலன் பார்த்துப் போனதும், அடுத்தாற் போல் வரப்போகிற ஆளை எதிர்பார்த்து சுற்றி நடந்து போகும் ஜனங்களை ஜோசியக்காரன் ஏக்கத்துடன் பார்க்கும் பொழுது பாண்டியன் கிளியைப்  பார்த்தான்.  அதுவும் வெளியே வந்து அடுத்த சீட்டை எடுத்துக் கொடுக்க படபடப்புடன் காத்துக் கிடக்கிற மாதிரியான பாவனையில் அடுத்த ஆளுக்காக எதிர்பார்த்திருப்பது போல...

இதுவரை ஆறு பேர் வந்து  பலன் பார்த்துக் கொண்டு போய்விட்டனர். கிட்டத் தட்ட எல்லாருக்கும் நல்ல பலன்களாகவே அமைந்திருந்தலில் வந்தவர் களின் சந்தோஷம் அவர்கள் முகச்சிரிப்பில் தெரிந்தது. விநாயகர், சுப்ரமணியர், திருப்பதி பெருமாள், அம்மையப்பனின்  கைலாச காட்சி, கஜலஷ்மி, ஐயப்பன் என்று ஜோசிய சீட்டில் இது வரை வந்த தெய்வ வரிசையை வரிசை தப்பாமல் பாண்டியன் நினைவு கூர்ந்தான்.  ஒருதடவை எடுத்த சீட்டை மறுமுறை எடுக்காத கிளியின் கவனத்தையும் நினைத்துக் கொண்டான்.

படத்துக்குக் கீழே அந்தந்த தெய்வங்களை போற்றி பாடுகிற வாழ்த்துப்பா மாதிரி இருக்கும் போலிருக்கு.  அதை ராகம் போட்டு வாசித்து வணங்கிய பின்னே கி.ஜோ. லேசாக மாற்றிய வேறுபட்ட குரலில் வந்தவர்களுக்கு குறிபலன் சொல்வது போல அச்சடித்திருந்த விவரங்களை அனுபவித்துச் சொன்னான்.  சொன்னது அத்தனையுமே அந்தந்த தெய்வங்களின் குணாம்சங்களைக் குறிக்கிற மாதிரியும் ஜோசிய பலன் போலவும் இருந்தது தான் விசேஷம்.

லேசாக வெளிச்சம் கவிந்ததும் இது போதும்ங்கற மாதிரி கிளிஜோசியன் எழுந்திருந்தான். எழுந்திருந்த வாகிலேயே அப்பொழுது தான்  பாண்டியனைப் பார்த்தது போல முகம் மலர்ந்து, சிகரெட்டை வாயில் நுழைத்தபடி, தீப்பெட்டி இருக்கிறதா என்று கேட்கிற பாவனையில் கைமுட்டி மேல் விரல் உரசிக் காண்பித்தான்.

பாண்டியனும் எழுந்திருந்து அவன் அருகாமையில் நகர்ந்து "வத்திப் பெட்டி வைச்சிக்கற பழக்கம் இல்லீங்க.." என்று சொன்னதைக் கேட்டு ஜோசியக் காரன் அவனை விநோதமாகப் பார்த்தான்.  'இல்லேனா, இல்லைன்னு சொல்லிட்டுப் போறது தானே, தான் கேட்டதுக்கு பதில் சொல்ற மாதிரி அவனைப் பத்தியும் சொல்வானேன்' என்று ஜோசியக் காரனுக்கு தோன்றியிருக்க வேண்டும். ஏதோ காட்டமாகச் சொல்ல வந்தவன் சமாளித்த தோரணையில், "கோயிலுக்கு வந்தீகளாக்கும்?" என்று பக்க வாட்டில் சற்றுத் தள்ளி பிர்மாண்டமாக நிமிர்ந்திருந்த கோயில் கோபுத்தை காட்டிக் கேட்டான்.

"ஆமா.  கோயிலுக்குத் தான்.   கொஞ்சம் பொழுது சாயட்டுமேன்னு பாத்திருந்தேன்.  இன்னிக்கு தீப  அலங்காரமில்லியா?.. இருட்டினாத்தானே அழகாயிருக்கும்..?"

"ம்..ம்.." என்று அவனுக்குப் பதில் சொல்லாமல் நகர்ந்தான் கிளி ஜோசியன்.
சொல்லப்போனால் பாண்டியனுக்கு ஜோசியனை விட அந்தக் கிளியை ரொம்பப் பிடித்திருந்தது.  அதைப் பார்த்தபடி, அதற்கு ஒரு 'பை..' சொல்கிற தோரணையில் குனிந்து கையசைத்தான்.

அந்த பொல்லாத கிளியும் அந்த நேரத்தில் "கீக்கீ.." என்று ஓசை கிளப்ப, அதுவும்  அதன் பாஷையில் தனக்கு 'பை' சொல்கிறதாக்கும் என்று நினைத்துக் கொண்டான் பாண்டியன்.  அந்த மகிழ்வில் லேசாக நடையை எட்டிப் போட்டான்.

மங்கை சொல்லியிருப்பது நினைவில் நின்றது.  கோவில் வாசல் பக்கம் காளியண்ணன் கடை இருக்குலே?  அங்கணே அர்ச்சனை தட்டு வாங்கிக் கங்க.. சிவன் கோவில் இல்லியா?.. அப்படியே வில்வ இலை கொஞ்சம் கேட்டு வாங்கி தட்டோட வைச்சிக்கங்க.. ஜோட்டை அண்ணன் கடைலேயே சொல்லிட்டு ஒதுக்குப்புறமா விட்டிடுங்க.  உள்ளாற போனதும் அர்ச்சனைக்கு சீட்டு வாங்கிக்கங்க.. மறந்திடாதீங்க.. சீட்டு இல்லாம அர்ச்சனை கிடையாது.  தெரியுமிலே?"

அவனுக்கு அது தெரியும் என்று மங்கைக்கும் தெரியும்.  இருந்தாலும் அப்படி கேள்வி கேட்டு உரையாடுவது அவள் பாணி..

அவனுக்கும் அது தெரியும்.  இருந்தாலும்  முறைப்பான்.  "இது என்ன ஒவ்வொண்ணும் குழந்தைக்குச் சொல்ற மாதிரி?.. இப்பத்தான் புதுசா முதல் தடவையா நான் கோவிலுக்குப் போற மாதிரி.."

"எப்பவும் நாம ரெண்டு பேரும் சேந்து தானே போற பழக்கம்?.. இன்னிக்குத் தான் குளிச்சேங்கறதாலே நீங்க மட்டும் போறதா ஆயிடுச்சி.. சிவராத்ரி அர்ச்சனை புண்ணியமுங்க.. கிளம்புங்க.."

"அதில்லே.  இவ்வளவு டீடெயில்டா.. குழந்தைக்குச் சொல்ற மாதிரி.."

"யார் கேட்டா?.. குழந்தை தான்.. குழந்தை இல்லாம பெறவு என்ன?.. எப்பவும் எதுனாச்சும் நெனைப்பு.. சொல்றதை காதுலேயே ஏத்திக்காத போக்கு.. நமக்கு சம்பந்தம்  இருக்கோ, இல்லியோ எதையும் பராக்கு  பாக்கற புத்தி.. குழந்தைன்னா குழந்தையாய்த் தான் இருக்கணும்ன்னு இல்லே.  குழந்தைத் தனம் இருந்தாலே போதும். தெரியுமிலே?"

"தெரியும்.. தெரியும்.." என்று சிரித்து வெளிக்கதவு தாண்டி படியிறங்கிய அந்தக் குழந்தை, மங்கை சொன்ன காளியண்ணன் கடையைக் கடந்த நொடியில் அர்ச்சனைத் தட்டு  நினைப்பு வந்து திரும்பியது.


(தொடரும்)
Sunday, December 10, 2017

பாரதியாரின் கதை                                                                                                        தென் பாண்டித் தமிழகத்தில் தேரோடும் வீதிகள் கொண்ட ஊர் திருநெல்வேலி.

திருநெல்வேலி என்று அந்த ஊர் பெயர் பெறுவதற்கு காரணங்கள் பலவாக இருக்கலாம்.  இருப்பினும் அந்த ஊரின் பெயரிலிருந்து பெறப்படுகிற காரணம் எளிமையானது.  நெல்வயல்களே அந்த ஊரை வேலியாகச் சூழ்ந்திருந்ததினால், அவ்வூர் திருநெல்வேலி என்று  பெயர் கொண்டது எனலாம்.

இப்பொழுது மாவட்டம் என்று அழைக்கப்படும் பெரிய நகரங்கள் எல்லாம் இதற்கு முன்னால்  ஜில்லா என்று அழைக்கப்பட்டது.  திருநெல்வேலியும் ஒரு ஜில்லா தான்.
                                                         விரைவில்  ஆரம்பம்


                                 இதுவரை பரவலாகத் தெரியாத பல  தகவல்களுடன்                                              பாரதியாரின்  கதை

                                                                                   
                             
                                                             (நெடுந்தொடர்)         


Tuesday, November 28, 2017

கமலி காத்திருக்கிறாள்...

பகுதி:  24

இதற்கு முன்  பகுதி:  http://jeeveesblog.blogspot.in

தியம் வெயில் இல்லாமல் வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது.  ப்ரியனின் வீட்டு மேல் தள அறை வெளிச்சூழ்நிலையில் குளிர்ந்து அவர்களின் விவாதங்களை மேலும் ரம்யமாக்கியது.

 திரைப்படக் கதாசிரியர் அரங்கநாதன் தன் குறிப்புப் புத்தகத்தை மூடி வைத்து விட்டு ப்ரியாவைப் பார்த்தார்.  "அவ்வளவு தான் கதை.." என்றார்.

"பிரமாதம், சார்.." என்றாள் ப்ரியா.  "ஓரளவு கதையோட அவுட்லைன் நமக்குக்  கிடைச்சாச்சு..  ஒட்டு மொத்தக் கதையை கன்ஸாலிடேட் பண்ணிப்  பாக்கறத்துக்கு முன்னாடி எங்கங்கே  இட்டு நிரப்ப வேண்டிய காட்சிகள் இருக்கின்றன என்று இப்போ நாம ஒரு முடிவுக்கு வந்து விட்டால்,  மொத்தக் கதையையும் இறுக்கமாய் நெய்து விடலாம். இல்லையா, ரங்கன் சார்?" என்று அவரை ஏறிட்டுப்  பார்த்தாள்.                                 

"எனக்கு சில கேள்விகள் இருக்கு.  அதுக்கெல்லாம்  பதில் பார்த்து விட்டால் ஓரளவு கதையமைப்பு  நம் பிடிக்குள் வந்து விடும்" என்றான் ப்ரியன்.

"கரெக்ட்.." என்றார் பெரியவர்.  "ப்ரியன் உங்க கேள்விகளை வரிசையாச் சொல்லுங்க..  ஒவ்வொண்ணாப் பாக்கலாம்.."

"முழுக் கதையையும் ஒரு பார்வை பார்த்து அலசி விடலாம்.  யாருக்கு என்ன தோணினாலும் சொல்லுங்க.." என்றார் அரங்கராஜன்.

"கமலி-- மோகன சுந்தரம்  திருமணம்;  அவர்களின் அன்றாட குடும்ப வாழ்க்கையின் நெருக்கங்கள் என்பதையெல்லாம் திரைப்படத்தின்
ஆரம்பக்  காட்சிகளாக அமைத்து  விடலாம்" என்றாள் ப்ரியா.

"அக்ரீட்.." என்றான் ப்ரியன்.  "அடுத்தாப்லே  அன்றாட வாழ்க்கையில் மோகன் மனசில் துளிர் விடுகிற குறை,   அதைத் தெரிந்து கொண்ட பக்கத்து வீட்டுக்காரன் இவனுக்கு மதுவை அறிமுகப் படுத்துதல்,  கமலி ஆபீஸ் போன பிறகு இவனை பக்கத்து வீட்டுக்காரன் மதுக்கடைக்கு அழைத்துப் போதல், சில நேரங்களில் சரக்கை வாங்கி வந்து இவனுக்குக் கொடுத்தல்,  ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரன் இவர்கள் வீட்டு படுக்கை அறையில் இருப்பது, ஆபிஸிலிருந்து வந்த கமலி அதைப் பார்த்து கொதித்துப் போவது போனற  காட்சிகள்.."

"ஓக்கே.  புரொஸீட்.." என்றார் பெரியவர்.

"அன்னிக்கு ராத்திரி அவர்கள் மது சாப்பிட்ட எச்சில்களை சுத்தம் செய்து விட்டு கமலி மோகனுக்கு அருகிலேயே பாய் விரித்துப் படுத்துக் கொள்கிறாள் இல்லையா?...." என்று மற்றவர்களின் நினைவுகளைத் திரட்டினாள் ப்ரியா.

"எஸ்.." என்றார் பெரியவர்.

"தனக்கும் தன் புருஷனுக்குமே சொந்தமான படுக்கை அறை என்று அவள் நினைத்திருந்த அவர்கள் படுக்கை அறையில் அன்னிய ஆடவன் ஒருவன் அமர்ந்திருந்த காட்சி கமலியை ரொம்பவும் டிஸ்டர்ப் செய்து விடுகிறது.
அதே அலைக்கழிப்புடன் தூங்கி விட்டாளா?..  தூக்கத்தில் கமலியின் கனவிலும் அதே காட்சியின் தொடர்ச்சி நீள்கிறது என்று அன்றைய இரவு அவள் தூக்கத்தில் கனவு காண்பதாகக் காட்டி ஸ்பென்ஸரில் எடுத்த காட்சிகளை அந்த இடத்தில் இணைத்து விட்டால் பொருத்தமாகப் போய்விடும்.." என்றாள் ப்ரியா.

"குட் ஐடியா.. " என்றார் அரங்கராஜன்.  "சரியான இடம்.   'வெறுத்துப்  போன அந்த சூழ்நிலையின் தொடர்ச்சியாக,  கமலி கனவில்  சாரங்கன் என்று ஒருவனைச் சந்திப்பதாக,  அவர்களின் சந்திப்புத் தொடர்ச்சியாக நீளும்
அந்த உரையாடல்'... என்று கனவில் கமலியை உலாவ விட்டால் அவள் கேரக்டருக்கும் எந்த சிதைவும் ஏற்படாது.. பின்னாடி நாம் சொல்லப் போகும் கதைக்கும் எந்த பாதகமும் இல்லாமல் அமைந்து விடும்.." என்றார் அவர்.

"எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது, ப்ரியா?" என்று பரவசத்துடன்  கேட்டார் பெரியவர்.  "அந்த ஸ்பென்ஸர் காட்சிகளில் சாரங்கனும் கமலியும் பரிமாறிக் கொள்கிற வசனம் ஏ கிளாஸ்.  அதனால் அந்தக் காட்சிகளை இழக்க எனக்கு மனசு வரவில்லை.  அதனால் அந்தக் காட்சிகள் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.." என்றார் பெரியவர்.

"எல்லாவிதங்களிலும் பார்த்தால் இந்தத் திரைப்படம் விவாகரத்தை வலியுறுத்துகிற படமில்லை.  மாறாக எப்படிப்பட்ட மனவேறுபாடுகளையும் நேர் செய்து கொண்டு புருஷன் மனைவி ஒத்துப் போக முடியும் என்று வலியுறுத்துகிற படம்..." என்றார் அரங்கராஜன்.

"எதற்காக ஒத்துப்போக வேண்டிய அவசியம் ஏற்படுகிறது என்கிறீர்கள்?" என்றான் ப்ரியன்.

அவன் எப்பொழுதுமே வாதத்தில் எதிர் நிலையில் இருப்பவரைக் கிண்டி தனக்கு வேண்டிய பதிலைப் பெறுவதில் சாமர்த்தியசாலி என்பதைத் தெரிந்தே, "ரொம்ப சிம்பிள்.." என்றாள் ப்ரியா. "ரொம்ப நாகரிகமான பாஷையில் சொல்ல வேண்டுமானால், திருமணம் என்ற பந்தத்தில் ஒருவனிடம் தன்னை இழந்த பெண் அவனைத் தவிர வேறு எவரிடம் தன் அந்தரங்க உணர்வுகளைப் பறிமாறிக் கொள்ள விரும்புவதில்லை..   அதான் அடிப்படைக் காரணம்..  அந்தரங்கங்கள் புனிதமானவை.  அதை அசிங்கப்படுத்த விரும்பாத மனைவி எந்த இக்கட்டிலும் அதற்கு எந்த பங்கமும் நேரிட்டு விடாதவாறு பொத்திக் காக்க விரும்புகிறாள்.  அந்த அசைக்க முடியாத விருப்பம் தான் அவளுக்குக் கிடைத்த சக்தியாய் செயல் பட்டு  எப்படிப்பட்ட வேறுபாடுகளையும் பெரிதான பிளவாய்  போய்விடாமல்  தடுத்தாட்கொள்ள உதவுகிறது.."   என்றாள்.

"அடிக்கோடிட்டுச் சொல்ல வேண்டியதை நீயும் ரொம்ப ரொம்ப நாகரீகமாச் சொல்லிட்டே, ப்ரியா.." என்று சொல்லி புன்னகைத்தார் பெரியவர்.

"இன்னொண்ணையும் இந்த இடத்தில் சொல்லியே ஆக வேண்டும்..  இந்திய சமூகத்துக்கு இந்த விவாகரத்தெல்லாம் அவர்கள் வளர்ந்த சூழ்நிலையிலும் பண்பாட்டுத் தளங்களிலும் ஒத்து வரவில்லையே தவிர இக்கால வளர்ச்சி சூழ்நிலையில் அப்படியான விவாகரத்திற்கான காரணங்கள் வாழ்ந்து கொண்டு தானிருக்கின்றன.." என்றாள் ப்ரியா.

"இந்திய சூழ்நிலையில் ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்திற்கான காரணங்கள் இருந்தும் எப்படிப்பட்ட முரண்பட்ட சூழ்நிலைகளிலும் சகித்துக்  கொண்டு வாழப் பழகிவிட்டார்கள் என்று சொல்றையா?" என்றான் ப்ரியன்.

"ஒரு பார்வையில் அப்படியென்றாலும் அதுவே முக்கியக் காரணம் இல்லை.." என்றாள் ப்ரியா.  "தன் அந்தரங்கத்தை  கணவனைத் தவிர பிறரிடம்  பகிர்ந்து கொள்ள இடம் கொடுக்காத  மனநிலை முதல் காரணம்.  மற்றபடி ஒருவனுடனான தன் திருமணத்தை முறித்துக்  கொண்ட பெண், இன்னொருவனை மறுமணம் செய்து கொண்டு வாழ்ந்தே ஆக வேண்டியிருக்கிறது..  அவளால் மறுமணத்தை ஏற்றுக்கொள்ளாமல் தனித்து வாழக் கூடிய அளவில் அல்லது தனித்து வாழ தீர்மானிக்கிற அவள் சுய முடிவை  அங்கீகரிக்கற   நிலையில் சமூகம் வளர்ச்சி காணவில்லை..  என்னைக் கேட்டால் இந்தத் திரைப்படம் சமூகத்திற்கு சொல்லக் கூடிய ஒரே செய்தி,  பெண்கள் தனித்து வாழ முடியாத அவல நிலையில் இருக்கிறார்கள் என்பதைத் தான்.  அப்படி பெண்கள்  தனித்து வாழ முடியாத நிலைக்கு  பெரும்பாலும் பெண்களே காரணமாக இருக்கிறார்கள் என்பதைத் தான்.  இதான் ஐரனியான ஒரு விஷயம்..

"திருமணம் ஆகாமல் தனித்து வாழ்தல்,  திருமணமுறிவு பெற்று தனித்து வாழ்தல் இந்த இரு சாரருக்கும்  இதான் நிலை.   இதையே இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டுமானால்,  பெண்கள் என்றால் ஆணைச் சார்ந்து தான் இருக்க வேண்டும் என்ற நிலை..  ஒரு ஆண் துணை இல்லாவிட்டால் பெண்களை சந்தேகக் கண்ணுடன்  இந்த சமூகம் பார்க்கிறது.  ஸீஸரின்  மனைவி போல சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக அவளைப் பார்க்க சமூகம் தயாரில்லை..  இந்த கசப்பான உண்மையை நாம் ஜீரணித்துக் கொள்ளத் தான் வேண்டும்.   வேறு வழியில்லை.. அதனாலேயே பெண்கள் தனித்து வாழ முடியாத அவல நிலையை ஹைலைட் பண்ணி இந்தத் திரைப்படத்தை உருவாக்கலாம் என்கிறேன்.." என்று உணர்வுடன் படபடத்த  ப்ரியா லேசாக தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

"இந்த விஷயத்தை வலுவாக இந்தத் திரைப்படத்தில் பதிய வேண்டுமானால் அந்தத் தனித்து வாழ முடியாத நிலையை  நன்றாக படம் பார்க்கிறவர்களுக்கு விளக்குகிற மாதிரி இன்னும் இரண்டு மூன்று காட்சிகளைச் சேர்த்தால் நன்றாக இருக்கும்.." என்றார் பெரியவர்.

"கமலியை மனத்தில் வைத்துக் கொண்டு அந்த மாதிரி தனித்து வாழ நேரிடும் பெண்களுக்கு என்ன நிலை என்கிற யதார்த்த உண்மையைத் தெரிந்து கொள்ள இன்று காலை என் பெண் நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் பேசினேன்.  'எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு வீடு வாடகைக்கு வேண்டும்; உதவி செய்ய  முடியுமா' என்று  கேட்டேன்.  'என் வீட்டின் மாடிப் போர்ஷனே காலியாக  இருக்கிறது; ஆனால் என் கணவன் பெண்கள் விஷயத்தில் சரியில்லை..  அதனால்  தான் நீ சொல்கிற பெண்ணுக்கு வீட்டை வாடகைக்கு விட  முடியாது.. வேறு  யாரானும் குடும்பமா வருவதானால் சொல்லு',, என்று தான் அனுபவிக்கும் கைத்துப்  போன உண்மையை  அந்த என் பெண் நண்பர் என்னிடம் சொன்னார்.   இந்த மாதிரி இன்னொன்று..  போன வாரம் நான் கேள்விப்பட்ட ஒன்று..  வயசுக்கு வந்த பெண் வீட்டில் இருப்பதால்,  தனித்து வாழும் பெண்ணை குடகூலிக்கு வைக்க மாட்டார்களாம்..  ஏன்னா, வேறு யாராவது வெளி ஆட்கள் அந்தப் பெண்ணை வீட்டில் பார்க்க வந்தால்,  தன் பெண் பாதிக்கப்படுவாள் என்று ஒரு சந்தேகம்.  இப்படித் தான் என்றில்லை.. இப்படி நிறைய.."

"ஏன் இப்படிப் பெண்களே பெண்களைப் பற்றி தவறான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள்?..  ஒரு பெண்ணாய் இது பற்றிச் சொல்ல முடியுமா?" என்று ஆதங்கத்துடன்  கேட்டார் பெரியவர்.

"பெண்களுக்கு தனக்குக் கிடைத்ததை  இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும், அதை யாருக்கும் தாரை வார்த்து  விடக்கூடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வு அளவுக்கு மீறி நிறையவே உண்டு..  இது ஒருவிதமான பொஸஸிவ்நெஸ்..  புருஷன், மகன், மகள், சொத்து என்று இதில் எதுவும் விதிவிலக்கில்லை..   இதை ஒருவித பிடிப்பு என்றும் சொல்லலாம்.  தனக்குக் கிடைத்ததை இழந்து விடக் கூடாது என்ற அதீத கண்காணிப்புத் தன்மை  அல்லது அதன் பாதுகாப்பு குறித்து அச்சம் என்றும் சொல்லலாம்.  அன்பு கொண்டோரின் மீதான ஆக்கிரமிப்பு என்றும் சொல்லலாம்.  எப்படிச் சொன்னாலும் இயற்கையிலேயே  அது ஒரு மனப்பாங்காக அவர்களிடம் அமைந்து விடுவதால் அது  குறித்து தவறு என்று சொல்வதற்கும் எதுவுமில்லை.."  என்றாள் ப்ரியா.

"பெண்கள் தனித்து வாழ முடியாத நிலை இருக்கிறது என்கிறீர்கள்.. அவர்கள் தனக்கு அமைந்த இரத்த பந்த உறவுகளிடம் அதீத பிடிப்பு கொண்டவர்கள் என்றும் சொல்கிறீர்கள்.  இந்த  இரண்டு நிலைகளுக்கும்  முரண்பாடு  இருப்பது உங்களுக்குத்  தெரியவில்லையா?"  என்றார் பெரியவர்.

"இதில் முரண்பாடு எதுவும் இல்லை.." என்றாள் ப்ரியா.  "அவர்கள் தனித்து வாழ முடியாத நிலை இருப்பதால் தான் தனக்குக் கிடைத்ததை இறுகப் பற்றிக் கொள்கிறார்கள்.  அதைச் சார்ந்து இது, இதைச் சார்ந்து அது என்கிற நிலை  இது.. யோசித்துப் பாருங்கள். புரியும்.."

படபடவென்று  கைதட்டினார் பெரியவர். "ஹியர், ப்ரியா!   அட்வகேட் படிப்பு படிக்காவிட்டாலும் நீதி மன்றங்களில் வாதாடக் கூடிய திறமையை  உன்னிடம் பார்க்கிறேன்.." என்றார் பெரியவர்.

"அப்பா வழி வந்த ஜீன் திறமை அது.." என்றான் ப்ரியன்.   பிரபல வக்கீல் ஒருவரின் பெயரைச் சொல்லி 'அவர் மகள் தான் ப்ரியா' என்றான்.

"ஓ, அப்படியா சேதி?"  என்று அரங்கராஜனும் பெரியவரும் ஒரே நேரத்தில் சொன்னது வேடிக்கையாக இருந்தது.

"அதெல்லாம் போகட்டும்..  'கமலி காத்திருக்கிறாள்'  என்று திரைப்படத்திற்கு நாம் முன்பு வைத்திருந்த பெயர்  இப்பொழுது பொருந்தாதே..  வேறு என்ன பெயர் வைக்கலாம்?.."  என்று ப்ரியா கேட்டாள்.

அரங்கராஜனுக்கு அவள் கதையோடு கொண்டிருந்த உணர்வு பூர்வமான பிடிப்பு ரொம்பவும் பிடித்திருந்தது.  பெரியவருக்கோ இந்தப் பெண் தொடர்ச்சியாக எவ்வளவு விஷயங்களைச் சிந்திக்கிறாள் என்று ஆச்சரியமாக இருந்தது.

"அதையும் நீயே சொல்லிடு, ப்ரியா.."  என்று பெரியவர் புன்னகைத்தார்.

"சட்டுன்னு மனசிலே தோணின பெயரைச் சொல்லிடவா?.."

"அதான் இயல்பா இருக்கும்..  சொல்லு, ப்ரியா.." என்று ப்ரியத்துடன் கேட்டான் ப்ரியன்.

"எங்கள் தோழி கமலி..    தங்கள் திருமண வாழ்க்கை ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு பிரிந்து போவதுப் பற்றித் தீவிரமாக சிந்திக்கும் நிர்பந்தம் ஏற்பட்ட எந்தப் பெண்ணுக்கும் கமலி யோசிக்கக் கூடிய ஒரு பெண்ணாக, தோழியாக இருக்கிறாள்.  அதனால்  இதான் இந்தத் திரைப்படத்திற்கான பெயர், 'எங்கள் தோழி கமலி'.. பிடித்திருக்கிறதா?"

"பிரமாதம்.." என்று பெரியவர் மலர்ந்து சிரிக்க எல்லோர் மனசிலும் ப்ரியா நீக்கமற நிறைந்து நின்றாள்.

                                           
                                                        (நிறைவுற்றது)Monday, November 20, 2017

கமலி காத்திருக்கிறாள்...

பகுதி:  23

இதற்கு முன் பகுதி:  http://jeeveesblog.blogspot.in

டைனிங்  டேபிள் பெரிதாகவும்  நாலு பேர் உட்கார்ந்து தாராளமாய் சாப்பிடலாம் என்பதாலும்  "எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடலாமே?" என்றார் பெரியவர்.   "சாப்பிட இருக்கும் அயிட்டங்களை நடுவே வைத்து விடுங்கள்..  பஃபே மாதிரி எடுத்துப் போட்டுக் கொண்டு  சாப்பிட்டால் போச்சு.." என்றார் அரங்கராஜன்.

போனதடவை மாதிரி ப்ரியா தனியாக சாப்பிட வேண்டி இருக்காது என்கிற எண்ணத்தில்  பெரியவர் சொல்கிறார் என்று ப்ரியன் புரிந்து கொண்டான்.  இலைகளை அலம்பி ப்ரியன் எதிரும் புதிருமாகப் போட    நடுவில்  பாத்திரங்கள், தேவையான  கரண்டிகள் எல்லாவற்றையும் கொண்டு வந்து வைத்தாள் ப்ரியா.  ஆரம்பத்தில் எல்லோருக்கும் பரிமாறி விட்டு தானும் அமர்ந்து கொண்டாள்.

அரங்கராஜனும் பெரியவரும் ஒரு பக்கமும் அவர்களுக்கு எதிரில் ப்ரியனும் ப்ரியாவும் என்று வசதியாக  எல்லோரும் அமர்ந்து சாப்பிடுகிற மாதிரி ஏற்பாடாகியிருந்தது.

ஜவ்வரிசி வடாம் பெரியவருக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.  எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிட்டார்.   வத்தக்  குழம்புக்கும் ஜவ்வரிசி வடாதிற்கும் சரியான காம்பினேஷன் என்று சிலாகித்தார்.  பெரியவருக்கு ஜ.வ. என்றால்  அரங்கராஜனுக்கு  அச்சில் போட்டுப் பிழிந்த முள்முருக்கு வடாம் பிடிக்கும் என்று தெரிந்தது.

"மோகன சுந்தரம் கூட சமையலில் நிபுணன்.." என்றார் அரங்கராஜன். "அப்படியா?.. நீங்கள் சொல்லவே இல்லையே!" என்று இயல்பாகப் ப்ரியா கேட்ட பொழுது அட்டகாசமாகச் சிரிந்தார் அவர்.

"பாத்து, புரையேறி விடப்போகிறது.." என்று எச்சரித்தார் பெரியவர்.

"மோகன சுந்தரத்திற்கு சரியான ஜாப் கிடைக்காதது தான் அவனுக்கு மிகப்  பெரிய குறையாக இருந்தது..  கமலி அளவுக்கு அவனுக்குப்  படிப்பறிவு இல்லை என்பதும் அதற்கான காரணம்.  தான் பிரபலமான ஒரு கம்பெனியில் வேலையில் இருக்க,  மோகனுக்கு சரியான வேலை அமையவில்லை என்பது அவனைக் காதலிக்கும் பொழுது கமலிக்குப் பெரிதாகத் தெரியவில்லை.  அவர்களுக்கு திருமணம் ஆன பின்னாடி,  மனைவி வேலைக்குப் போய் சம்பாதித்து வருகையில் அவள் சம்பாத்தியத்தில் தான் உட்கார்ந்து சாப்பிடுகிறோம் என்ற வெளிக்குக் காட்டிக் கொள்ளாத உள்ளூர உணர்வாய் அவனுக்கு இருந்தது.  வேலைக்குப்  போய் சம்பாதிக்க முடியவில்லை என்பது  எந்த ஆணுக்கும் இருக்கிற குறைபாடு தான்.    நல்ல வேலை ஒன்றில் அவனும் அமர்ந்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று கமலியும் ஆரம்பத்தில் நினைத்தாள்.  போகப்போக  அவன் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்பது பல விதங்களில் அவளுக்கு செளகரியமாகவும் இருந்தது.  நாளாவட்டத்தில்  அவன் அருகாமை அவளுக்குக் கொடுத்த சந்தோஷம்,
அவன் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கிறான் என்கிற உறுத்தலே அவள் அளவில் அவள் மனசில் இல்லாமல் போக்கிவிட்டது."

அரிசி அப்பளத்தை மட்டும் சுட்டு,  உளுந்து அப்பளத்தை எண்ணையில்  பொறித்திருந்தாள் ப்ரியா..   ரொம்பவும் காரமாய் இல்லாமல் தேனாய் தித்திக்கிற குழம்புக்கு  வடாமும் அப்பளமும் வாகாய்  இருந்தது.  சாதத்தில் குழம்பை ஊற்றிப் பிசையாமல்,  ஒரு பிடி சாதத்தை லேசாக குழம்பில் புரட்டி, அப்பளத்தையும் வடாத்தையும் மாற்றி  மாற்றி நொறுக்கி சேர்த்துச் சாப்பிடும் பொழுது அரங்கராஜனுக்கு தேவாமிர்தமாக இருந்தது.  அந்த குஷியில்  திரைக்கதை வர்ணிப்பில் தூள் கிளப்பினார்  அவர்.

"கமலியும் காலை ஒன்பதுக்கெல்லாம் ஆபிஸ் கிளம்பி விடுவாள்.  அதற்குள் காலை டிபன், மதியச் சாப்பாடு எல்லாம் தயாராக வேண்டும்.  ஒருத்தியாக சமையல் அறையில் கமலி அல்லாடுவது அதைப் பார்த்துக் கொண்டு தான் சும்மா இருப்பது என்பது நாளாவட்டத்தில் ஒரு குற்ற உணர்வாக மோகனை அவஸ்தைப்படுத்தியது.  அதனால் சமையல் அறையில் கமலிக்கு கூட மாட ஒத்தாசையாக இருப்பது என்று ஆரம்பித்தது, அவளை உக்கார வைத்து தான் அவளுக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுத்து அவளை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற ஆசையாக அவனுள் உருவாயிற்று.    சமையல் மட்டுமல்ல,  வீட்டைப் பெருக்கித் துடைப்பது,
அவள் கழட்டிப் போட்டிருக்கும் துணிகளை வாஷிங் மெஷிலில் போட்டு துவைத்ததை எடுத்து வெளிக் கொடிக்கம்பியில் உலர்த்துவது,  ஸ்டீம் அயர்ன் பாக்ஸ் கொண்டு அவற்றை  அயர்ன் பண்ணி அலமாரியில் அடுக்கி வைப்பது என்று அவளின் தேவைகள் அனைத்தையும் தானே பார்த்துப் பார்த்துப் பூர்த்தி செய்வது மோகனுக்கு அலாதியான சந்தோஷத்தைக் கொடுத்தது. கமலிக்கோ அவள் வீட்டில் இருக்கையில் அவனின் அருகாமை கொடுத்த பூரிப்பு மிகவும் தேவையான ஒன்றாகப் போய்விட்டது.   இந்த அத்தியாவசிய  தேவைகளின் அடிப்படையில்  கமலிக்கு ஆம்பளை வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கிறான் என்ற உணர்வே அவளவில் இல்லாமல் இருந்தது..

"கமலியும்  காலையில் குளித்து விட்டு வந்தாளானால் அன்றைக்கு என்ன புடவை, ஜாக்கெட் அணிய வேண்டும் என்று மோகன் தான் தேர்ந்தெடுத்துக் கொடுக்க வேண்டும்..  அவன் ஏதாவது வேறு வேலையில் இருந்தால் கூட  குளித்து வந்த கையோடு அறைக்குக் கூப்பிட்டு  எந்தப் புடவைக்கு எந்த ஜாக்கெட் பாந்தமாக இருக்கும்  என்று தொணப்பி எடுத்து விடுவாள்..    அவன் தேர்ந்தெடுத்துக்  கொடுத்தால் தான் அதுவும் அவளுக்கு சரிப்பட்டு வரும்.  பீரோ கண்ணாடி முன் அவளை  நிறுத்தி  புடவை நிறமும் ஜாக்கெட் நிறமும் மேட்சாக இருக்கிறதா என்று காட்ட  வேறு வேண்டும்.  அவளுக்கும் திருப்தி என்றால் ஓ.கே. ஆகும்.   பெரும்பாலும் காட்டன் புடவைகள் தான் கமலி அலுவலகத்திற்குப் போகையில் உடுத்துவது வழக்கம்.  காட்டன் புடவைகளை வாஷிங் மெஷினில் துவைத்து ஸ்டார்ச் போட்டு அலசி எடுத்து உலர்த்தி அயர்ன் பண்ணி வைத்திருப்பான்  மோகன்.   அவற்றை கமலி உடுத்தும் பொழுது  காட்டன் புடவை என்பதினால் கொசுவ மடிப்பு சரியாக வராது...

"காலை வேளை பரபரப்பில் புடவை கட்டிக் கொள்ள எத்தனிக்கும் பொழுது 'ப்ளீஸ்.. இங்கே வாங்களேன்..' என்று கமலி பொறுமையிழந்து மோகனைக்       கூப்பிடுவாள்.  இடுப்புப்  பகுதியில் புடவையை பிடித்துக்  கொண்டு ஒவ்வொரு மடிப்பாக அவள் மடித்து வர அவள் கால்களுக்கருகில் தரையில் உட்கார்ந்து அவள் மடித்து விடும் ஒவ்வொரு மடிப்பையும் மேலிருந்து கீழாக மடிப்பு  கலையாமல்  இழுத்து மடிப்புகளை அவள் கால் பகுதியில் மோகன் சேர்த்துக் கொண்டே வருவான். எல்லா மடிப்புகளும் முடிந்து  அவள் மேல் பகுதி கொசுவ மடிப்புகளை தன் தொப்புள் இடத்தில் செருகிக் கொண்டதும்  இவன் கீழ்ப் பகுதி மடிப்புகளை தன்  பிடிப்பிலிருந்து விடுவிப்பான்.    கொசுவ மடிப்புகள் மிகச் சரியாக அடுக்கடுக்காக அமைந்ததில்  திருப்தியாக இருக்கும்  கமலிக்கு.

'தேங்க்ஸ்ங்க..' என்று டக்கென்று குனிந்து தரையில் உட்கார்ந்திருக்கும் அவன்  கன்னக் கதுப்புகளைக் கிள்ளுவாள்.  அவள் கிள்ளுவாள் என்று  எதிர்பார்த்துத் தான் அவள் சந்தோஷக் கிள்ளலுக்காக அவனும் எழுந்திருக்காமல் உட்கார்ந்திருப்பான்.   தினமும் கிள்ளலாக இல்லாமலும் அவளுக்கு இருக்க வேண்டும்..  அவளுக்குப் பிடித்த வேறு ஏதாவது ஒன்றை மாற்றி மாற்றி செய்து மோகனை அசத்துவாள்... மொத்தத்தில்  கமலிக்கு அந்தந்த சமயத்தில் எதெல்லாம் பிடிக்கிறதோ அதெல்லாம் தான் அந்த வீட்டில் அன்றாட நிகழ்ச்சி நிரலாக அமைந்திருந்தது..."

படபடவென்று கைத்தட்டினாள் ப்ரியா..  "பிரமாதம், சார்!.." என்று மனசாரப் பாராட்டினாள்.. "சார், மாமியையும் உங்களோட கூட்டிகிட்டு வந்திருக்கலாம்லே..  உங்க வர்ணிப்புகளை அவங்க கேட்க அதை நான் கண்ணாரக் கண்டு ரசித்திருக்கலாம்லே.." என்று குறைப்பட்டுக் கொண்டாள்.

அரங்கராஜன் புன்னகைத்தார். "இந்த மாதிரி காட்சிகள் எல்லாம் அவர்கள் இண்டிமஸியைக் காட்டத் தான்.   படத்தைப் பார்ப்பவர்களுக்கு அந்த இணைபிரியாத தம்பதிகளின் நெருக்கம்  மனசில் ஆழப் பதியும்.  திரைப் படத்தைப்  பார்க்கும்  வேறு சிலருக்கு  இது மாதிரியான தங்கள் சுய  அனுபவங்கள் நினைவுக்கு வந்து 'என்ன யதார்த்தமாய் படம் எடுத்திருக்கிறான்'  என்று மகிழ்ந்து போவார்கள்.   மொத்தத்தில் ப்ரியா,  படம் வெற்றியடைய  அங்கங்கே  இந்த மாதிரி மாயப்பொடி எதையாவது தூவிண்டே இருக்கணும்..  கொஞ்சம் அசந்தாலும் போச்சு,  காலை வாரி விட்டுடுவானுங்க.." என்றார்.

"சரி, ரங்கா!..  நீ இப்படி இவங்களை இழைய விட்டுட்டு இன்ட்ரவெல்லுக்கு அப்புறம் இவங்களைப் பிரிச்சுக் காட்டினா  அதனோட எஃபெக்ட் அதிகம் இருக்கும்ன்னு நெனைக்கிறியா?" என்று கேட்டார் பெரியவர்.

இதுக்கு அரங்கராஜன் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ளும் விதமாகப்  ப்ரியன் அவரை ஆழமாகப் பார்த்தான்.

"நீ என்ன நினைக்கிறே?" என்று அரங்கராஜன் ப்ரியாவைப் பார்த்தார்.

இலையில் தயிரை விட்டுக் கொண்ட  ப்ரியா  திரும்பினாள்.  அவள் அது பற்றி என்ன சொல்லப் போகிறாள் என்று ப்ரியனுக்கும் ஆவலாக இருந்தது.

"அதற்கு என்ன, இப்ப  அவசரம்?"  என்றாள் ப்ரியா.  "இப்போத் தானே மோகனின் குறையைப் பத்தி லேசா கதாசிரியர் கோடி காட்டியிருக்கிறார்?..  கதை மேலும் நகர்ந்தால் ஸ்பென்ஸர்ஸ்லே எடுத்த காட்சிகளை என்ன செய்வது என்பதற்கு இன்னும் கொஞ்சம் கிளாரிட்டி கிடைக்கும் இல்லையா?"

"என்னைப் பொருத்த மட்டில் அந்தக் காட்சிகள் படம் பாக்கறவங்க மத்திலே ஒரு விவாதத்தை எழுப்பும்ன்னு நெனைக்கறேன்..  அதுனாலே எடுத்தது எடுத்தபடியே இருக்கட்டும்..  அதை எங்கே நுழைக்கலாம்ன்னு பாக்கலாம்.." என்றார் பெரியவர்.

"நானும் அதான் நினைக்கிறேன்.." என்ற ப்ரியனை விநோதமாகப் பார்த்தாள் ப்ரியா..

"குருவிக் கூட்டைக் கலைப்பதில்  எனக்கு என்ன அப்படி ஒரு அலாதி ஆசைன்னு நீங்க கூட  நினைக்கலாம்.." என்று  ஆரம்பித்தான்  ப்ரியன்.  "ரங்கன் ஸார் சொல்ற கதை ரொம்ப அழகா போயிட்டிருக்கு..  ரியலி இப்போ கதை போற போக்கு நாம ஏற்கனவே எடுத்த காட்சிகளுக்கு நேர்மாறானது தான்..  ரங்கன் ஸார் கூட  ஆரம்பத்லே இப்படித் தான்  கதை ஆரம்பிக்கும்ன்னு  நெனைக்கலே..  இப்போ என்னன்னா, அவரை அறியாமலேயே இந்தத் திரைப்படம் இப்படித் தான் ஆரம்பிக்கணும்ன்னு ஆகிப்போச்சு.     அப்படி ஆனது தான் விசேஷம்..  ஆனா பெரியவர் சொல்ற மாதிரி ஸ்பென்ஸர்லே நாம் எடுத்த காட்சிகள் இந்தக் கதைக்கு முதுகெலும்பு மாதிரி..  மத்தவங்க இது வரை யோசிக்காதது.  படம் வெளிவர்றச்சே இவங்க மாறுபட்டு யோசிச்சிருக்காங்களேன்னு படம் பாக்கறவங்க,  பத்திரிகை விமர்சனம் என்று எல்லா பகுதிகளிலும் ஒரு பேச்சு கிளம்பும்..  படம் ஓடறத்துக்கு  நேர்மறையாவோ அல்லது எதிர்மறையாகவோ இப்படி எதாவது அலை கிளம்பறது முக்கியம்.  ஒண்ணுமே இல்லேனாலும் அப்படி  ஒரு  அலை அடிக்கற முயற்சியை படம் ரிலீசுக்கு முன்னாடியே செயற்கையாகவே இப்பல்லாம் ஏற்படுத்துறாங்க..  இயற்கையாகவே நம்ம திரைக்கதைலே அப்படி ஒரு அலை கிளம்பறத்துக்கான சூழ்நிலை அமைஞ்சிருக்கு..  அதுனாலே அந்த அட்வாண்டேஜை ஏன் நம்ம இழக்கணும்ங்கறது தான் என் கேள்வி.  அதுனாலே தான் ஸ்பென்ஸர்ஸ்லே எடுத்த காட்சிகளை நான் வரவேற்கிறேன்.    படத்திலே அந்தக் காட்சிகள் வந்தால் அது படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கறதிலே பெரும் பங்காற்றும் என்பது என் கருத்து.." என்றான் ப்ரியன்.

இத்தனை நேரம் அவன் எதுவும் சொல்லாமல் இருந்தது அரங்கராஜன் சொன்ன திரைக்கதையை ஆழமாக உள்வாங்கிக் கொண்டதின் பிரதிபலிப்பாக வெளிப்பட்ட மாதிரி இருந்தது..  இப்படித் தான் ஆரம்பம் இருக்கணும்; இப்படித் தான் அதன் முடிவு இருக்கணும் என்று நினைக்கிற நினைப்பாய் இல்லாமல்,  அந்த முடிவை இப்படியான ஆரம்பம் தான் தூக்கிக் காட்டும் என்று எதிர்பார்க்கிற மாதிரி ப்ரியன் சொன்னதை எடுத்துக் கொண்டாள் ப்ரியா.

ஆனால் அவளுக்கோ  கமலியும்  மோகனும் விவாகரத்து அளவுக்குப் போக வேண்டுமா என்ற யோசனையும் இருந்தது..   யோசிக்க யோசிக்க  அப்படியான ஒரு விலகல் அவர்களில்  ஏற்படாமல் எப்படியாவது தவிர்த்து விட வேண்டும் என்ற தீர்மானம் அவள் மனசில் உருவாயிற்று.

(தொடரும்)

                           
     அடுத்த அத்தியாயத்தில் நிறைவுறும்.

Tuesday, November 14, 2017

கமலி காத்திருக்கிறாள்...

பகுதி-- 22

இதற்கு முன் பகுதி:   http://jeeveesblog.blogspot.in

கெடிலாக் வாசலில் வந்து நின்றதே தெரியவில்லை.   அழைப்பு மணி ஒலித்ததும் தான் அவர்கள் வந்து விட்டார்கள் என்று தெரிந்தது.

ஹாலில் ப்ரியன் தான் இருந்தான்.   வாசல் கதவு இவர்களின் வருகைக்காகத் திறந்தே தான்  இருந்தது.  இருந்தாலும்  ஒரு நாகரிகத்திற்காக அவர்கள் அழைப்பு மணியை அழுத்தியிருக்கிறார்கள் என்பதைப்  புரிந்து கொண்டு ப்ரியன் அவசரமாக வாசல் பக்கம் நகர்ந்து, "வாங்க, வாங்க.." என்று அவர்களை உள்ளே அழைத்தான்.

பெரியவர் முகம் மலர்ந்திருந்தது.   திரைக்கதையின்  வடிவத்தை தீர்மானிப்பதில் ப்ரியாவின் பங்கு  மகத்தானதாக இருக்கப்  போகிறது என்பதனை  எதிர்பார்க்கும்  மலர்ச்சியாக அது தெரிந்தது.  அரங்கராஜனோ வழக்கம் போல, வெற்றிலைப் பெட்டியும் கையுமாக.

"ஸாரி.. உள்பக்கம் கொஞ்சம் வேலையாய் இருந்தேன்.." என்று தெரிவித்தபடி ப்ரியா அவர்களிருந்த ஹாலுக்கு வந்தாள்.  "சுடச் சுட எல்லாம் ரெடி.. சாப்பிட்டுடலாமா?"

"இல்லை, ப்ரியா..  இன்னிக்கு காலைலே டிபன்  கொஞ்சம் ஹெவி.. இன்னும் அரைமணி நேரம் போகலாமா?  உங்களுக்கு எப்படி?.." என்றார் அரங்கராஜன்.

"எங்களுக்கும் பரவாயில்லை.." என்றான்ப்ரியன்.   "இந்த ஹால் செளகரியம்  என்றால் இங்கேயே நம்ம டிஸ்கஷனை வைத்துக்கொள்ளலாம்.  இல்லேனா மாடிக்குப் போயிடலாம்.." என்றான் ப்ரியன்.

"போன தடவை மாடியில் தானே பேசிக் கொண்டிருந்தோம்?..  இன்னிக்கு ஒரு மாறுதலா இருக்கட்டும்..  இந்த இடமும் செளகரியமாகத் தான் இருக்கிறது" என்று பெரியவரைப் பார்த்தார் அரங்கராஜன்.

பெரியவர் அதற்கு முன்னாலேயே அங்கிருந்த ஒரு நீண்ட சோபாவில் அமர்ந்திருந்தார்.  அவருக்குக் கொஞ்சம் தள்ளி சோபாவின் இன்னொரு மூலையில் அரங்கராஜன் அமர்ந்து தன் கையோடு கொண்டு வந்திருந்த ப்ரீப்-கேஸைத் திறந்தார்.   அதில்  செவ்வக வடிவத்தில் டைரி போலிருந்த குறிப்புப் புத்தகத்தை கையிலெடுத்துக் கொண்டார்.  பக்கங்களைப் புரட்டினார்.

"கமலியின் கணவன் குடித்து விட்டு  நினைவில்லாமல் கிடந்த ராத்திரி அது. வீட்டை சுத்தம் செய்து  பாயை விரித்து அவன் அருகிலேயே படுக்கிறாள் கமலி..   அந்த இடத்திலிருந்து திரைக்கதையைத் தொடர வேண்டும்,ஸார்.." என்று ப்ரியா சொன்னாள்.

ப்ரியா சொன்ன இடத்தை குறிப்புப் புத்தகத்தில் கண்டு பிடித்து விட்டார் போலும்.. "எஸ்.. மேற்கொண்டு என்ன நடந்தது தெரியுமா?" என்று தொடர்ந்து திரைக்கதையைச் சொல்லத் தொடங்கினார் அரங்கராஜன்.

குறிப்புகள் நினைவுகளைக் குவிக்கத் தான் என்று தெரிந்தது.  குறிப்புகளைப் பார்த்த ஜோரில்  எதிரில் கேட்பவர்களுக்கு கதை போலக் கோர்வையாகச் சொல்கிற ஞானம் அரங்கராஜனுக்கு கைவந்த கலையாக இருந்தது.

"பொலவென்று அடுத்த நாள் பொழுது விடிந்தது.." என்று நேற்று விட்ட இடத்திலிருந்து கதையைத் தொடர ஆரம்பித்தார் அவர்.

கமலிக்குத் தான்  கொஞ்சம் லேட்டாகத் தான் எழுந்திருந்திருக்கிறோம் என்று தெரிந்தது.  சமையலறை மின் விளக்கு போடப்பட்டிருந்தது.  ஏதோ பாத்திரங்களை எடுத்து வைக்கும் ஒலி இங்கே இவளுக்குக் கேட்டது.  கணவன் வழக்கம் போல எழுந்து சமையல் வேலையை ஆரம்பித்து விட்டார் என்று தெரிந்தது.

அவள் பல் விளக்கி வந்து டைனிங் டேபிளில் அமர்தால் போதும்.  அவசர அவசரமாக அவளுக்கு  காபி கலந்து கொண்டு வந்து கொடுப்பான்.  காபி தயாரிப்பில் மோகன சுந்தரம் மன்னன்.   அளவான ஸ்ட்ராங்கில் அளவான சர்க்கரை போட்டு  மேலாட நுரை மினுக்கலுடன் தேவாமிர்தமாக இருக்கும்.  தினம் தினம் அவன் போட்டுத் தரும் அந்த காபியின் மணம் அவள் நாவின் சுவை அரும்புகளைக் கிளர்த்தி அவளை எழுந்திருக்க வைத்திருக்கிறது..

கோல்கேட்டெல்லாம் போயே போச்சு;   இப்பொழுதெல்லாம் அவர்கள் பதஞ்சலி தயாரிப்பிலான பேஸ்ட் தான் உபயோகிக்கிறார்கள்.   ப்ரஷ் கூட பதஞ்சலி தான்.   பேஸ்ட்டை லேசாகப் பிதுக்கி ப்ரஷில் தடவி உற்சாகத்துடன் பல் விளக்கி முகம் துடைத்து டைனிங் டேபிளுக்கு வந்தாள் கமலி.

கைப்பிடித் துண்டில் கையைத் தேய்த்தவாறே சமையலறையிலிருந்து ஏதோ வேலையாக ஹாலுக்கு வந்த மோகன் அவளைப் பார்த்தவுடன் முகம் மலர்ந்து "குட்மார்னிங்  டார்லிங்.." என்றான்.  அவனுக்கு அவள் எப்பொழுதுமே டார்லிங் தான்.   அவளும் அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

கொஞ்ச நேரத்தில் டபரா செட்டில் சுடச்சுட காபி  கொண்டு வந்து பதமாக ஆற்றி அவளுக்கு நேரே வைத்து விட்டு தானும் டைனிங் சேரில் அவளுக்கு எதிரே அமர்ந்து  கொண்டான்.  ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி மாதிரி மதர்ப்புடன் இருந்தான் மோகன்.   செக்கச்சேவேலென்ற சிவப்புடன் ரோமம் படர்ந்த அவன் கைகள் இரண்டும் டைனிங் டேபிளில் லேசாகத் தாளம் போட்டுக் கொண்டிருந்தன.  கண்கள் காபி அருந்தும் கமலியின் உதடுகளையே பார்த்துக் கொண்டிருந்தன.   அதைக் கவனித்ததும் லேசான சிணுங்கலுடன் கமலி தன் இடது கையைத் தூக்கி அவன் சிவந்த கைவிரல்களுடன் தன் விரல்களைப் பிணைத்துக் கொண்டாள்.

அவள் காபியை அருந்தி முடியும் வரைக் காத்திருந்தான் மோகன்.  காபி டம்ளரை அவள் டைனிங் டேபிளில் வைத்ததும்  அவள் முகத்தைப் பார்த்தபடி, தழைந்த குரலில், "ஸாரி.." என்றான்.

அவன் எதற்கு ஸாரி சொல்கிறான்   என்று தெரிந்திருந்தும் அவன் வாயாலேயே அந்த ஸாரிக்கான காரணத்தைச் சொல்லட்டும் என்று எதிர்ப்பார்த்து, "எதற்கு ஸாரி, மோகன்?" என்று கமலி கேட்டாள்.

"நேற்று ராத்திரி நடந்ததுக்கெல்லாம்.." என்றான் அவன்.

அவள் பதிலே பேசவில்லை.. அவனே முழுதும் சொல்லட்டும் என்று எதிர்பார்ப்பில் காத்திருந்தாள்.

"தெரியாதது மாதிரி கேக்காதே, கமலி.." என்று  சொன்ன பொழுது அவன் குரல் தழுதழுத்தது.  "பக்கத்து வீட்டுக்காரன் கடைலேந்தே கூடவே வந்து சேர்ந்தே வீட்டுக்குள்ளே  நுழைஞ்சிட்டான்.   அவனுக்கும் இந்தப் பழக்கம் உண்டுன்னான்.   அவனைத் தவிர்க்க முடியவில்லை.  இதுக்கும் துணை இருந்தா அலாதி தான்.." என்றான்.

"ஓ.. அப்படியா, சேதி?" என்றாள் கமலி.  அவன் சொன்னது கேட்டு அவள் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை.  "அப்போ ஒண்ணு செய்யலாம்.. பக்கத்து வீட்டுக்காரன்லாம், எதுக்கு?..  நானே இனிமே துணையா இருக்கேன்.. தாம்பத்தியத்தில் எப்படி நான் துணையோ அதுமாதிரி இதுக்கும் துணை.
சரியா?"

"கமலி..  நிஜமாத்தான் சொல்றியா?"

"அதிலென்ன, சந்தேகம்?.. நிஜமாத்தான்.  இனிமே வாங்கறத்தே எனக்கும் சேர்த்து வாங்கிட்டு வந்திடுங்க..  ஆரம்பத்லே குமட்டும்.. ஆனா போகப் போக சரியாயிடும் இல்லையா?..  உங்க அனுபவமும் அப்படித்தானே? சொல்லுங்க, மோகன்.." என்று அவன் கழுத்துப் பட்டையில் கைவைத்து தலையைக் கோதி விட்டாள் கமலி.  "வாழ்க்கைத் துணைனா என்ன?  வாழ்க்கை சம்பந்தப்பட்ட எல்லாத்திலேயும் ஒருத்தொருக்கொருத்தர் துணையா இருக்கறது தானே?.. இதிலே மட்டும் இல்லாம இருப்பானேன்?..  இனிமே இருந்திட்டாப்  போச்சு.."

"நோ.." என்றான் மோகன்.  "டியர்.. என்னாலே அது முடியாது.." என்று தீர்மானமாக தலையை அசைத்தான்.

"குடிக்காமல் இருக்கவும் முடியாது..   நா துணையா இருக்கவும் முடியாதுன்னா   எப்படி, மோகன்?..  முடிந்தால் ரெண்டும் முடியணும்.. இல்லேனா, இரண்டுமே முடியக்கூடாது இல்லியா, மோகன்?" என்று கேட்கும் பொழுது அவள் கை ரொம்பவும் இயல்பாய் அவன் காதுப்பக்கம் போயிற்று.  அவள் விரலின் ஸ்பரிசம் அவனில் சிலிர்ப்பேற்படுத்தியது.

"கமலி,  சத்தியமாச் சொல்றேன்.  இனிமே நானும் குடிக்க மாட்டேன். எனக்காக நீயும் உன்னை வருத்திக்க வேண்டாம்.   இது உறுதி.  சிரிக்காதே. என் வைராக்கியத்தைப் பார்த்து நீயே ஆச்சரியப்படப்போறே பாரு!"

"என் ராஜாவே!.." என்று மோகனை இறுக அணைத்துக் கொண்டாள் கமலி.  அவனுக்கு மூச்சு வாங்கியது..  பஞ்சு போல இருக்கும்  அவளுக்கு எப்படி இப்படி ஒரு அசுர பலம் வந்தது என்று அவன் திகைத்தான்.  தான் அவளுக்குக் கொடுத்த சத்தியத்தினால் விளைந்த சந்தோஷம் மிருக பலமாய் அவளில் செயல்படுகிறது என்று போகப்போக அவன் உணர்ந்த பொழுது அந்த சந்தோஷம் அவனுக்கும் கூடு விட்டு கூடு பாய்ந்தது.  மனம் கட்டுக்கடங்காத சுதந்திரம் பெற்றது போல அவனில் ஆர்ப்பரித்தது.  தன்னை மறக்கடிக்கும் சுகத்தை விட தன்னை மறக்காது செயல்படும் சுதந்திரம் அவனுக்கு இன்றைக்கு ஏற்பட்ட புது அனுபவமாய் அவனில் துளிர் விட்டது.. என்றைக்கும் இந்த சுதந்திரமே நிலைத்திருக்க வேண்டுமென்று சின்னக் குழந்தையாய் மனம் ஏங்கியது.  இந்த ஏக்கத்தைத் தணிப்பதற்கு எந்த தத்தத்தையும் செய்யலாம் என்ற உறுதி எஃகு திண்மையாய் மனசில் உருவெடுத்தது.

சட்டென்று அவனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை விடுவித்துக் கொண்டாள் கமலி.  கொஞ்சலாக, "நான் என்னவோ குறை உங்களுக்கு வைத்திருக்கிறேன் என்று மனசில் உருத்தலாய் இருக்கு.." என்றாள்.

"அப்படி எதுவும் இல்லே..  எதுக்காகக் கேக்கறே?"

"அப்படி எதுவும் மனசிலே குறை இல்லேனா, சாயந்திரம் ஆச்சுனா கடைக்குப்  போக மாட்டீங்க.."

"அதுக்கும் இதுக்கும் என்ன  சம்பந்தம்..?"

"இருக்கு.. அதை அப்புறமா சொல்றேன்..  உங்களுக்கு ஏதாச்சும் மனசிலே குறை இருந்தா சொல்லுங்க.."

"லேசா இருந்த குறையும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நிறைவாயிடுத்து.."

"ஐயே!..  எங்கே போனாலும் சுத்தி சுத்தி மனசை இங்கே கொண்டு வந்து நிறுத்திடக் கூடாது.  அதான் இதெல்லாம்  அப்பப்ப  கிடைச்சிக்கிட்டிருக்கே..  அப்போ இதெல்லாம் ஒரு குறையா இருக்க முடியாது..  மனசிலே ஆழமா  நிறைவேறாத ஆசை மாதிரி ஏதாச்சும் படிஞ்சிருந்தா சொல்லுங்க.. அது தான் வடு மாதிரி வாழ்க்கை பூராவுக்கும் குறையா இருக்கும்.. அப்படி ஏதாவது உங்க மனசிலே இருந்தா சொல்லுங்க.. நான் தீர்த்து வைக்கிறேன்..  அந்தக் குறை நிறைவேறிப் போச்சுனா,  அப்புறம் சாயந்திரம் ஆச்சுனா அங்கெல்லாம் போகணும்ன்னு தோணாது..  அதனாலே தான் கேக்கறேன். சொல்லுங்க.."

'அப்படியென்ன குறை தனக்கு இருக்கும்?'.  மோகன் யோசித்துப் பார்த்தான்.

எதுவும் சட்டென்று மனசுக்குப் பிடிபடவில்லை..  "கமலி! நீ இருக்கறச்சே எந்தக் குறையும் எனக்கில்லை.." என்று சிரித்தான்.

"அதான் எனக்கு நீ, உனக்கு நான்னு ஆயி போச்சே!..  நம்ம ரெண்டு பேரையும் தாண்டி யோசிச்சுப் பாருங்க..  ஏதாச்சும் உங்களுக்குக்  குறை இருக்கு?"

அப்படி எதுவும் இல்லை என்று தான் மோகனுக்குத் தோன்றியது.. இருந்தாலும் யோசிக்க யோசிக்க..

இப்பொழுது பிடிபட்டது.. அவன்  மனசின் அடி ஆழத்தில் பதுங்கியிருக்கிற அந்தக் குறை!    மனசில் நிறைவேறாத ஆசையாய்  அப்பப்போ நினைவுக்கு வந்து அவனை வாட்டுகிற  குறையாய்...

"நீ சொல்றது சரி தான்..  மனசில் எனக்கு ஒரு குறை இருக்கிறது, கமலி.." என்று தயங்கித் தயங்கிச் சொன்னான் மோகன்.

(தொடரும்)Thursday, November 9, 2017

கமலி காத்திருக்கிறாள்...

பகுதி:  21

இதற்கு முன் பகுதி:   http://jeeveesblog.blogspot.in


"என்னடி என் ஞாபகம் இருக்கா?.." என்று சுசீலாவின் ஆச்சரியம் போனில் வழிந்தது.  "இவ்வளவு நாள்  கழிச்சானும் ஞாபகம் வந்ததே!  சரி, எப்படியிருக்கே?"

"நான் ஃபைன் சுசீ..  அடிக்கடி பேசணும்ன்னு நெனைச்சுப்பேன்.  நெனைப்போட சரி.. ஏதாவது வேலை வந்து அந்த நினைப்பை மூழ்கடிச்சுடும்.  இப்போ பேசியே ஆகணும்ன்னு கூப்பிட்டிருக்கேன்.."

"தேங்க் காட்..  என்ன விஷயம்?"

"ஜஸ்ட் ஒரு விசாரிப்பு.  என் ஃப்ரண்ட் ஒருத்தி இருக்கா.. அவளுக்கு தங்கறத்துக்கு இடம் வேணும்..  உனக்குத் தெரிஞ்சு உங்க ஏரியாலே ஏதாவது வீடு  வாடகைக்காக இருந்தாச் சொல்லு..  அப்பார்ட்மெண்டா இருந்தாலும் பரவாயில்லை.."

"பரவாயில்லையா?.. இப்பல்லாம் அப்பார்ட்மெண்ட் தான் செளகரியமானதுன்னு சொல்லலாம்..   நாம தனி வீட்லே இருக்கறதினாலே அதோட செளகரியங்களைத் தெரிஞ்சிக்கலேன்னும்  சொல்லலாம்.."

"அதை விடு..  இந்த ப்ரண்டுக்கு அப்பார்ட்மெண்ட்னாலும் சரிங்கறதுக்காகச் சொன்னேன்.  ஏன் உனக்குத் தெரிஞ்சு ஏதாவது வீடு காலியிருக்கா?"

"என் வீட்லேயே மாடி போர்ஷன் காலியாயிருக்கு, ப்ரியா..  போன மாசம் தான்  காலி பண்ணினாங்க.."

"நல்லதாப் போச்சு..  வாடகை என்ன?"

"இரண்டு ரூமும் சமையலைறையும் இருக்கு.  அட்டாச்சிடு பாத்ரூம் ரெண்டு.   முன்னாடி இருந்தவர் பத்தாயிரம் கொடுத்தார்.   இப்போ பன்னிரெண்டாயிரம் கேக்கலாம்.  மனுஷா எப்படி?..  ஹஸ்பெண்ட்,  ஒயிப் வேலைக்குப் போறவங்களா?..  குழந்தைங்க இருக்கா?"

"அப்படியெல்லாம் நெறையப் பேர் இல்லே..  சொல்லப்போனா இவ ஒருத்தி தான்.   அவளுக்குத் தான் வீடு வேணும்.."

"................................"

"என்ன சுசீலா.. லைன்லே இருக்கியா?.."

"இருக்கேன்,  ப்ரியா..  ஒருத்தர்ன்னா பிக்கல் பிடுங்கல் இல்லை..  செளகரியம் தான்..  இருந்தாலும்  எனக்குத் தான் ஒத்து வராது.."

"என்னடி, என்ன சொல்றே?.."

"ஆமாம், ப்ரியா.. எதுவும் கேக்காதே.. என் தலையெழுத்து எல்லாம்.  உன் ப்ரண்டுக்கு வேறே எடத்தைப் பாத்துக் குடு.."  சுசீலாவின்  குரல் தாழ்ந்து தடுமாறியது மாதிரி இருந்தது..

"ப்ரண்டு  ரொம்பவும் நல்லவ, சுசீலா..  நல்ல வேலைலே இருக்கா.. ஒண்ணாம் தேதி சம்பளம் வாங்கினதும் வாடகையைக் கொடுத்திடுவா..  உனக்கு அவளாலே எந்தத் தொந்தரவும் இருக்காது.."

"இங்கே வந்தா உன் ப்ரண்டுக்குத் தான்  தொந்தரவாப்  போயிடும்.. அதுக்குத் தான் சொல்றேன்.."

"நீ  சொல்றது புரியலே.."

"எப்படிச் சொல்றது, ப்ரியா?.. இவர் சரியில்லே..  வெக்கத்தை  விட்டுச் சொல்றேன்..  நான் வீட்லே இல்லேனா,  இவருக்குக் கொண்டாட்டமா போயிடும்.."

"புரிலே.."

"எதையாவது சாக்கு வைச்சிண்டு மாடிக்குப் போவார்.  பாவம், அந்தப் பொண்ணுக்குத்  தான் தொந்தரவு..  இவரை  வைச்சிண்டு நான் நிறைய பட்டுட்டேன்...  கொஞ்சம் என்ன நிறையவே சபலம்.  ஏன் தான் இப்படின்னு தெரிலே..  நானும் அவருக்கு எந்தக் குறையும் வைச்சதில்லே.."

ப்ரியாவால் அதற்கு  மேல்  பேச முடியவில்லை. விக்கித்துப் போயிற்று.  இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, "ஸாரி, சுசீலா..  நீ தான் ரொம்ப கோபக்காரி ஆச்சே..  எப்படிப் பொறுத்திண்டு..."

"ஒரு தடவை ரெண்டு  தடவைன்னா கோபப்படலாம்.  என்ன சொல்றது, போ! என்னாலே முடிலே.. சக்தி இல்லே.. எனக்கும் நாப்பதுக்கு மேலே ஆச்சு.. பிபி, சுகர் எல்லாம் இருக்கு..  இதெல்லாம் நினைச்சாலே படபடன்னு தேகம் நடுங்கறது...  ஆனா,  இவர் கிட்டே  இது ஒண்ணு தான் குறையே தவிர,  மத்தபடி  மனுஷர் தங்கக் கம்பி..   விட்டுத் தள்ளு..  காலம் ஓடிண்டே இருக்கு..

"தங்கத்திலே ஒரு  குறையிருந்தாலும்ன்னு பாட்டு வருமே? அது என்ன படம்?   சிவாஜி படம்.  பாகப்பிரிவினை  தானே?  அந்த மாதிரியா?.."

"அப்படில்லாம் எந்த மாதிரியும் இல்லே..  என்னை நானே ஏமாத்திப்பானேன்?..  தப்பு தான்..  பொண்ணு பிள்ளைக்கெல்லாம் கல்யாணம் ஆகி தனியா போயிட்டா..  அவாளுக்கெல்லாம் அவா குடும்பம்ன்னு ஆகிப் போச்சு..  ஒரு நாள், ரெண்டு நாளைக்கு மேலே தங்க முடியாது..  ரெண்டு நாளைக்கு மேலே ஆச்சுனா,  மூஞ்சியை முகத்தைக் காட்டுவா..  விட்டுத் தள்ளு.. நமக்கு சரிப்பட்டு வராது..   'கலகல'ன்னு இருந்த குடும்பம் நாங்க ரெண்டு பேர் தான்னு ஆகிப்போச்சு..  இந்த ரெண்டுக்குள் என்ன மனத்தாங்கல் வேண்டிக் கிடக்குனு பல சமயங்கள்லே பேசாம இருந்திடறேன்.  நீ ஆயிரம் சொல்லு.. விதின்னு ஒண்ணு இருக்கே.. விதிச்சது தான் நடக்கும்..    என்ன நா சொல்றது?.."

"விதியாவது வெண்டைக்காயாவது?.." என்று பொறுத்துக் கொள்ள முடியாமல் ப்ரியா சீறினாள்..

"அம்மாடி.. அப்படியே இருக்கே, ப்ரியா நீ..  அநியாயத்தை உன்னாலே பொறுத்துக் கொள்ள முடியாது..  உன்னாலே அது முடியறது... என்னாலே முடிலேம்மா.."

"பின்னே விதி அது இதுன்னு  சொன்னா?  நம்ம கையாலாகாதத்தனம் இல்லியா, இது?"

"சரி.. விதி  இல்லேன்னா வேறே ஒண்ணு..  இதெல்லாம் பாத்திண்டு இன்னும் எத்தனை வருஷம் இருக்கப் போறேனோ  தெரிலே..  இவரே சதம்ன்னும் ஆகிப்  போயிடுத்து.. வேறே என்னத்தைச் செய்யறது, சொல்லு..  எல்லாம் பகவான் விதிச்சது.. உனக்குத் தான் கீதா உபதேசம்லாம் மனப்பாடம் ஆச்சே.. எது நடக்க வேண்டுமோ அது  நன்றாகவே ....  எந்த ஜென்மத்திலே நான் செஞ்ச பாவமோ தெரிலே.. அனுபவிச்சுத் தான் கழிக்கணும்ன்னு  இருக்கு..."

"சாரி, சுசீ..  உன்னை வற்புறுத்த மனசு கேக்கலே..  நான் அந்தப் பொண்ணுக்கு வேறே இடம் பாக்கறேன்..  இந்த நிதர்சன உண்மையெல்லாம் தெரிஞ்சு எனக்கு இப்போ மூட் அவுட். அப்புறம் பேசறேன்.."  வைச்சிடட்டுமா?.."

"சரி, ப்ரியா..  பை.. பை.."

"பை..."

போனை வைத்து விட்டு ப்ரியனைப் பார்த்தாள்.  அவன் தலையைக் கவிழ்த்துக் கொண்டிருந்தான்.

"என்ன கேட்டீங்களா?..   இதான் ரியல் லைப்..  ஏதோ ஒண்ணு ரெண்டு  இப்படின்னு நாம அலட்சியப்படுத்தறக்கு இல்லே.."

"கமலிக்காக சுசீலாகிட்டே பேசப்போனா,  அவங்களோ  இன்னொரு கமலியா இருக்காங்க.." என்று விரக்தியுடன்  சொன்னான்  ப்ரியன்.

"எஸ்.."

"ப்ரிவ்யூ தியேட்டர்லே பார்த்த மாதிரியும் கதையைக் கொண்டு போக முடியாது..  புருஷனை வைச்சிண்டுன்னு அலையற மாதிரி கமலிக்கு கெட்ட பேர் தான் வரும்ன்னு இப்போத் தோண்றது.."

"அந்த விஷயத்திலே அரங்கராஜன் தீர்மானமா சொல்லிட்டார்.  அந்தக் காட்சியெல்லாம்  பின்னாடி தான் -- சொல்லப் போனா - படத்தின் இடைவேளைக்கு அப்புறம் தான்  வர்றது..  அந்த நேரத்திலே கமலி  விவாகரத்துக்கு அப்ளை பண்ணியிருப்பா..  இல்லை,  அவளுக்கு விவாகரத்து  நடந்திருக்கும்.  அதை எப்படித் தீர்மானம் பண்றமோ அதுக்கேத்த மாதிரி ஸ்பென்ஸ்ர்ஸிலே எடுத்த காட்சிகளை எடிட் பண்ணிக்கலாம்..."

"கமலி சாரங்கனுக்கு,  தான் திருமணமானவள் என்று சொல்லி அவள் தாலியை எடுத்துக்  காட்டற கட்டம் ரொம்பவும் எஃபெக்டிவ்வான ஒண்ணு. அந்தக் காட்சியை தக்க வைச்சிக்க என்ன செய்யலாம்ன்னு நான் யோசனை பண்றேன்.."

"இன்னொண்ணு பாத்தியா?....  விவாகரத்துன்னா கமலி அவள் புருஷனை விட்டு நீங்கி கொஞ்ச காலத்துக்கு தனித்து வாழ்ந்ததா வேறே காட்டணும்.."

ப்ரியா ஏதோ தீர்மானத்தோடு சொன்னாள்:  "அதான் இந்தக் கதைக்கே ஆன அடிச்சரடு.   இப்போ சுசிலாக்குப் போன் பண்ணி தெரிஞ்சிண்டோம்லே, ஒரு பெண் தனித்து வாழறதுங்கறது அவ்வளவு ஈஸியான காரியம் இல்லேன்னு தெரிஞ்சிண்டோம்லே..  அதான் இந்தக் கதைக்கான நாட்..   அதை முக்கியப்படுத்தி  இந்த சினிமாவின் முழுக் கதையையும் நெய்யலாம்.. விவாகரத்துங்கறதை விட இது முக்கியமான விஷயம்..  அதனால் இந்த-- ஒரு பெண் யார் துணையும் இல்லாம தனித்து வாழறதுங்கறது இன்றைய சமூக அமைப்பில் முடியாத காரியம் என்பதை -- ஹைலைட் பண்ணிச் சொல்லலாம்.."

"ப்ரியா.. மணி பாத்தியா?..  இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு. அவங்கள்லாம் வந்திடுவாங்க..  சட்டுபுட்டுனு சமையலை முடி..  நீ சொல்றபடியே கதைக்கு ஒரு மறுவடிவம் கொடுத்துப் பாக்கறேன்.. " என்று எழுந்தான்.

அந்த சமயத்தில் தான் ப்ரியனின்  மொபைல் ரீங்கரிட்டது.

எடுத்துப் பார்த்தால் எதிர் முனையில் அரங்கராஜன்.

"சார், பிரியனின் காலை வணக்கம்.."

"வணக்கம், ப்ரியன்..  ஒண்ணுமில்லே,  நாங்க வர்றதுக்கு ஒரு அரைமணி நேரம் தாமதமாகலாம்..  அதைச் சொல்றதுக்குத் தான் கூப்பிட்டேன்..  உங்க ஒய்ப் கிட்டே சொல்லிடுங்க..  அவங்களும் படத்துக்காக நிறைய  ஹோம் ஒர்க் பண்ணியிருப்பாங்கன்னு நெனைக்கிறேன்..  ஆம் ஐ கரெக்ட்?.."  என்று நிறைய எதிர்பார்ப்பில் கேட்கிற மாதிரி  கேட்டார் அரங்கராஜன்.

"ஆமாம், சார்..  நேர்லே பேசலாம், சார்.." என்றான் ப்ரியன்.

"ஓக்கே.. நாங்க வந்திடறோம்..  தேங்க்ஸ் ப்ரியன்.." என்று தொடர்பைத் துண்டித்தார் அரங்கராஜன்.


(தொடரும்)


Sunday, November 5, 2017

கமலி காத்திருக்கிறாள்...

பகுதி:  20

இதற்கு முன் பகுதி:  http://jeeveesblog.blogspot.in


ராத்திரி பூராவும்  ப்ரீ வ்யூ தியேட்டரில் கமலியின் படம் பார்த்ததின் தொடர்பாக ப்ரியாவுக்கு என்னன்னவோ யோசனை.   அத்தனை யோசனைக்களுக்கும் நடுவே  எப்போ தூக்கம் வந்தது என்று தெரியவில்லை.  விடிகாலை அரைகுறை  தூக்கத்தில் லேசான விழிப்பு வந்த பொழுது தன் நெருங்கிய நண்பர்களிடம் இது பற்றிப் பேச வேண்டும் என்கிற நினைப்பு மட்டும் துருத்திக் கொண்டு  நினைவில் நின்றது.  சட்டென்று எழுந்து 'கமலி பற்றி நண்பர்களிடம் பேச வேண்டும்' என்று ஒரு பேப்பரில்  குறித்துக் கொண்டாள்.  இல்லையென்றால் காலையில் எழுந்த பிறகு இது கூட மறந்து விடும் என்ற உணர்வு அவளுக்கு  இருந்தது.

எழுந்திருக்கும் பொழுது மணி  ஆறரைக்கு மேலாகி விட்டது.  பல் விளக்கி கிச்சனுக்கு வந்து பில்ட்டரில் காப்பிக்கு பொடி போட்டு சுடசுட வெந்நீர் வைத்து பில்டரில் ஊற்றி  மூடினாள்.    ப்ரியன் எழுந்து விட்டானா என்று  பார்க்க  மாடிக்குப் போனாள்.  ப்ரியன் தன் அறையில்  லேப்டாப்பைத் திறந்து வைத்துக் கொண்டு ஏதோ யோசனையில்  மூழ்கியிருந்தான்.

சப்தப்படாமல் அவன் பின்பக்கம் போய் குனிந்து அவன் தோள்களைக்  கட்டிக் கொண்டாள்.  லேசாக கழுத்தை  மட்டும் திருப்பி,"என்ன டியர்?" என்று மென்மையாகக் கேட்டபடி அவள் இடது காதைக் கவ்வினான் ப்ரியன்.  அப்பொழுது அவள் கூந்தல் மணக்கவே அவள் கழுத்துப் பக்கம் முகம் புதைத்துக் கொண்டான்.

"என்னங்க?.." என்றாள் ப்ரியா.  அவள் கேட்டது அவளுக்கே கேட்காத அளவுக்கு முனகலாக இருந்தது..

"இந்த  சிவபெருமான் போயும் போயும்  அந்த நக்கீரனிடம் அப்படியொரு கேள்வியைக் கேட்டாரே-- என்னைக் கேட்டிருந்தால் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா பதில் சொல்லியிருப்பேன்லே.."

"ஐயே!.." என்று சிணுங்கினாள் ப்ரியா.

"அதெல்லாம் போகட்டும்.. என்ன ஷாம்பு அது?..  உன் கூந்தல்லே  இப்படி ஒரு தாழம்பூ வாசனை?.."

வெடுக்கென்று முகம் திருப்பி பொய்க்கோபம் காட்டினாள் அவள். "ஷாம்புனாலே எனக்கு அலர்ஜின்னு தெரிஞ்சிண்டே தானே கேக்கிறீங்க?.."

"சத்தியமா இப்போ நீ சொல்லித் தான் எனக்கே அது தெரியும்.."

"அப்போ என் சம்பந்தப்பட்ட பேஸிக் விஷயங்கள்லேயே இவ்வளவு தெரியாமல இருக்கீங்களே..  அந்தக் கமலியைப் பத்தி உங்களுக்கு என்ன தெரிஞ்சிடப் போறது?.."

"அதெல்லாம் ரங்கன் சாருக்குத் தெரிஞ்சா போதாதா?..  அவர் தானே திரைக்கதை ஆசிரியர்..  கமலியைப் பத்தி அவர் என்ன நெனைக்கறாரோ அதைத் திரைலே கொண்டு வர்ற வேலை தான் நமக்கு.. தெரிஞ்சிக்கோ.."

"ரங்கன்  சாரும் உங்களை  மாதிரித் தானே?..  அந்த  மாமி கொடுத்து வைச்சவங்க..  அவருக்குத் தெரிஞ்சது ஏன் உங்களுக்குத் தெரிலே!.."

"எதைப் பத்திக் கேக்கறே?"

"பொம்பளைங்களைப் பத்தி.."

"இதுக்கு நான் என்ன பதில் சொல்லணும்ன்னு எதிர்பார்க்கறே?.."

"எதுவும் சொல்ல வேணாம். தெரிலேன்னா தெரிலேன்னு ஒத்துக்கோங்கோ.."

"சரி டியர்.. ஒத்துக்கறேன்..  எனக்கு வாய்ச்ச நீ ஒருத்தி இருக்கியே.. உன்னைப் பத்தித் தெரிஞ்சிண்டாலே போதும்.."

"என்னைப் பத்தியும் தெரிஞ்சிக்கறதிலே உங்களுக்கு அக்கறை இல்லே.. நான் பாடி வாஷ் தான் யூஸ் பண்றேன்.  ஷாம்பு அலர்ஜி.  தலைக்கு குளிக்கற நாளைக்கு மட்டும்  செம்பருத்தி, அரிசி, சீயக்காய்ன்னு கலந்து மிஷின்லே போட்டு அரைச்ச பெளடர் தான்..  இன்னிக்கு டீடெயில்டா என் கூந்தல் ரகசியம் பத்தி சொல்லிக் குடுத்திருக்கேன்..  இன்னொரு நாளைக்குக் கேட்டா அப்படியே சொல்லணும்.. தெரிஞ்சதா?"

"நான் மட்டும் என்னவாம்?.. நான் கூட ராப்பகல்ன்னு பாக்காம உனக்கு நெறைய சொல்லிக் கொடுத்திருக்கேன்.  மறந்திடாதே..  கேட்டதும் கொடுப்பவளே, ப்ரியா..ப்ரியான்னு நா  கேட்டதும் கொடுத்திடணும், தெரிஞ்சிக்கோ.." என்று அவன் சொன்ன போது அவள் கன்னம் சிவந்தது.

"ஐயே!..  எப்பப்பாத்தாலும் இதான்.." என்று அவன் காது  பிடித்துத் திருகினாள்.

அவன்  தலை சிலுப்பி பொய்க்கோபம் காட்டினான்.

"சரி.. கமலியை இனி உன் பாடுக்கு விட்டுடறேன்..   பத்து மணிக்கு அவங்கள்லாம் வந்திடுவாங்கன்னு எதிர்பார்க்கிறேன்.. மணி ஏழேகால் ஆயிடுச்சு.."

"வத்தக் குழம்பும் சுட்ட   அப்பளமும் தானே?..   உப்பிட்ட     மணத்தக்காளி  வத்தல் இருக்கு..  வத்தக் குழம்பைத் தேன் குழம்பாய் பண்ணிடலாம்.. வடாம், கொத்தவரங்கா வத்தல் எல்லாம் இருக்கு.   வடாம் போன சம்மர்லே இட்டது. எல்லாத்திலேயும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து பொறிச்சு வைச்சிடறேன்.   டோண்ட் ஒர்ரி.."

"ஃபென்டாஸ்டிக்.. அப்புறம்..  கேக்க வேணாலும் மனசு  கேக்கலே.. கமலியை என்ன பண்றதா உத்தேசம்?..  ரங்கன் சார் மனசிலே இழைச்சு இழைச்சு அந்த கதாப்பாத்திரத்தை உருவாக்கியிருக்கார்..  நீ ஸ்பாயில் பண்ணிடாதே.. அவ்வளவு தான் சொல்லுவேன்.."

"கமலி ஸ்பாயில் ஆயிடக்கூடாதுன்னு தான் எப்பவும் அவள் நினைவாவே இருக்கு..  நடு ராத்திரி தாண்டியும் அவ   ஞாபகம் தான்..  எப்போ தூங்கினேன்னே தெரியாது..  விடிகாலைலே..."  என்ற  ப்ரியா ஏதோ நினைவுக்கு வந்த அவசத்தில், "ஒன் மினிட்.. இதோ வந்திட்டேன்.." என்று அவசர அவசரமாக  அவள் அறைக்கு விரைந்தாள்.

திரும்பி வரும் பொழுது  லெட்டர் பேடில் கிழித்த  ஒரு காகிதத்  துண்டோடு வந்தாள்.

"என் லெட்டர் பேட்னா?.. அது எப்படி  உன்  ரூமுக்கு  வந்தது?"

"அதுக்கென்ன இப்போ வந்தது?..   இதப்  பாருங்க.. இதிலே என்ன எழுதியிருக்கேன்னு பாருங்க.." என்று அவன் முகத்திற்கெதிரே அந்த காகிதத் துண்டை நீட்டினாள்.

அதில் எழுதியிருந்ததை ப்ரியன்  படித்தான்.. "கமலி பத்தி  நண்பர்களிடம் பேச வேண்டும்.."  ஒன்றும் புரியாமல் அவளைப் பார்த்தான்.

"விடிகாலை அரைகுறைத் தூக்கத்லே நினைப்பா வந்தது.  மறந்திடப்  போறதேன்னு  கைக்கு கிடைச்ச பேப்பர் பேனா எடுத்து எழுதி வைச்சிருக்கேன்..   ஓக்கே.. டிகாஷன்  இறங்கியிருக்கும்..  பால்  காய்ச்சி காப்பி கலந்திண்டு வந்திடறேன்..   வந்ததும் பேசிடலாம்.."

"கமலி பத்தி எங்கிட்டியே பேசக்காணும்.. உன் நண்பர்கள் என்னை விட உசத்தியா?.. அவங்க கிட்டே என்ன பேசப் போறே?" என்று 'உர்'ரென்று முகத்தை வைத்துக்  கொண்டான் ப்ரியன்.

"இதோ.. வந்து சொல்றேன்.." என்று  ப்ரியா சமையலறைப்  பக்கம் நகர்ந்தாள்.

சும்மாச் சொல்லக்கூடாது..  கலந்து வந்த  காப்பி  தேவாமிர்தமாக இருந்தது.  அளவான சூடு தொண்டைக்கு இதம்  கொடுக்க,  "கமலி  பத்தி -- தியேட்டர்லே பாத்ததை  எல்லாம் உன் ப்ரண்ட்ஸ் கிட்டே டமாரம் அடிக்கப் போறியா?  இப்பவே இப்படி லீக் பண்ணிட்டியானா சினிமா பாக்கறச்சே அவங்களுக்கு என்ன த்ரில் இருக்கும்?.. சொல்லு.."

"கொஞ்சம் பேசாம இருக்க மாட்டீங்களா?  இப்போ என்ன செய்யப்  போறேன்னு பாருங்க.." என்று ஃபோன் ரிஸீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.  டயல் டோன் துல்லியமாக இருந்தது.

"ப்ளீஸ்.. என்ன செய்யப்போறே?  கொஞ்சம் சொல்லிட்டுத் தான்  செய்யேன்.."

எடுத்த ரிஸீவரை மீண்டும் ஃபோன் பேஸ் யூனிட்டிலேயே வைத்தாள்.  "சினிமான்னா வெத்து  கற்பனை இல்லீங்க..   இப்படிச் செய்யணும், அப்படிச் செய்யணும்ன்னு ரீல் விடற சமாச்சாரமும் இல்லே..  சினிமா மாதிரி ஊடகங்கள்    வாழ்க்கைலே நடக்கறதை  ரியலா சொல்றதா இருக்கணும்..  அதாவது ரியல் சினிமாவா இருக்கணும்..  அப்படி இருந்தா படம்  பாக்கற ஜனங்களுக்கு தங்கள் உணர்வுகளையே பிரதிபலிக்கற மாதிரி சினிமா இருக்கும்.. இருக்கணும்.. மனசிலே ஆயி?"  என்று புருஷனைப் பார்த்து கண் சிமிட்டினாள்.

"உனக்கு எல்லாமே விளையாட்டாப்  போச்சு.  யாருக்கும் எதையும் வெளிப்படையா சொல்லாம செஞ்சியானா நல்லது.."

"பாத்திண்டே இருங்க..  அடுத்தாப்லே கமலி என்ன செய்யணும்ங்கறதுக்கு ரியல் வாழ்க்கைலேந்தே தகவல் சேகரிக்கிறேன், பாருங்க.." என்றவள்   மீண்டும் ஃபோன் ரிஸீவரை எடுத்தாள்.

"ஸ்பீக்கர் போன் மோட்லே போடு.. நானும் கேக்கறேன்.." என்றான்  ப்ரியன்.

"குட்.. அப்படித்தான் சமத்தா  இருக்கணும்..  என்ன நடக்கறதுன்னு பாருங்க..  எது  நடந்தாலும் கமலி கதையின் அடுத்த மூவ்க்கு வழிகாட்டல் இதான்.." என்று தன் நெருங்கிய தோழி  ஒருத்தியின் தொலைபேசி எண்ணுக்கு டயல் செய்தாள்.

ப்ரியனுக்கும்  ப்ரியா என்ன செய்யப் போகிறாளோ என்று ஆர்வம் கூடியிருந்தது.   நாற்காலியில் முதுகு நன்றாகப் படிகிற மாதிரி சாய்ந்து உட்கார்ந்தான்.

"ஹலோ..." என்றாள் ப்ரியா..  "சுந்தரி   தானே?"

"சொல்லு, ப்ரியா.." என்று எதிர்க்  குரல் குழைந்தது.


(தொடரும்)

Friday, November 3, 2017

கமலி காத்திருக்கிறாள்...

பகுதி:  19

இதற்கு முன் பகுதி:  http://jeeveesblog.blogspot.in


ப்ரிவ்யூ     தியேட்டர் ரொம்பவுமே ஜிலுஜிலுப்பாக இருந்தது.

பெரியவர் ஏற்கனவே மொபைலில் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டார் என்று தெரிந்தது.  ஸ்பென்ஸ்ர்ஸில் எடுத்த காட்சிகள் கிட்டத்தட்ட இருபது நிமிடங்களுக்கு ஓடும் என்று ப்ரியன் சொல்லிக் கொண்டிருந்தான்.  அதுவும் ராவாக எடிட் செய்யாத காட்சிகள் என்பதினால் என்று தெரிந்தது.

கமலியும் சாரங்கனும் ஸ்பென்ஸர்ஸூக்குள் நுழைந்த பொழுதே ப்ரியா படக் காட்சிகளோடு ஒன்றி விட்டாள்.  சாதாரண ஆபிஸுக்குப் போகும் ஒரு பெண்ணின் தோற்றத்திலிருந்த கமலியைப் பார்த்தவுடனேயே ப்ரியாவுக்கு அவளை ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது.   லேசான சோகம் இயல்பாகவே அவள் முகத்தில் படிந்திருந்தது  உன்னிப்பாகக் கவனித்தால் தெரிந்தது.

"கதாநாயகி புதுமுகம் போலிருக்கே?.. அழகா இருக்காங்க.." என்று பிரியனிடம் கிசுகிசுத்தாள் ப்ரியா.

"பெங்கால் பொண்ணு.. இந்தப் படத்திலே தான் தமிழ்நாட்டுக்கு அறிமுகம் ஆகறாங்க.." என்றான் ப்ரியன்.  "பார்த்துக் கொண்டே இரு;  இந்தப் படம் நிச்சயம் இவங்களுக்கு ஒரு ப்ரேக்  கொடுக்கும்."

"அப்படி ஆனா உங்களுக்கும் அது பெருமை இல்லையா?.. ப்ரியன் சார் டைரக் ஷன்லெ தான் நான் அறிமுகம் ஆனேன் என்று பேட்டிக்குப் பேட்டி சொல்லுவாங்க, இல்லியா.."

"ஆரம்பத்துலே சொல்லுவாங்க.. போகப் போக மறந்திடுவாங்க.. எதையும் எதிர்பார்த்து நாம செய்யறதில்லே தானே?"

அதற்குப் பிறகு எதுவும் ப்ரியா பேசவே இல்லை.. பார்க்கும் காட்சிகளோடு ஒன்றிப் போய் விட்டாள் என்று தெரிந்தது..  ஓரக்கண்ணால் ப்ரியாவின் வெளிப்பாடுகளைப் ப்ரியன்  கவனித்துக்  கொண்டே இருந்ததான்..  சட்சட்ரென்று  ப்ரியாவின்  முக பாவங்கள் மாறிக்கொண்டே இருந்தை மனசில் குறித்துக் கொள்ளவும் செய்தான்.

கமலிக்கும் சாரங்கனுக்கும் நடக்கும் உரையாடல் தான் காட்சி ஓட்டத்தைப் புரிந்து கொள்ள முக்கியம் என்பதினால் பெரியவர் வசன ஒலிப்பதிவையும் காட்சிகளோடு இணைத்து தயாராக வைத்துக் கொண்டிருந்த ஏற்பாடு ரொம்பவும் செளகரியமாகப் போய்விட்டது.

'சாரங்கன், ஸீ..' என்று கழுத்துக்குப் பின்பக்கம் கை வைத்து இத்தனை நேரம் கூந்தலுக்கு அடியே கிடந்த தனது தாலியை வெளியே எடுத்து சாரங்கனுக்கு கமலி காட்டுகிற கட்டத்தில் ப்ரியன் லேசாகத் திரும்பி ப்ரியாவைப் பார்த்தான்.   அந்தக் காட்சியைப் பார்த்து அவள் அதிர்ந்தே போய் விட்டாள் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.. "என்னங்க, இது?" என்று உதடுகள் படபடக்க ப்ரியன் பக்கம் கொஞ்சம் நெருங்கி நகர்ந்தாள்.

அந்தக் காட்சியைப் பார்த்த சடுதியில் அவளிடம் விளைந்த பிரதிபலிப்பாக அவள் அவனிடம்  கேட்டது அனிச்சையான செயல் போல அவனிடம் எந்தப் பதிலும் எதிர்பார்க்காதவாறு படம் பார்ப்பதில் முழுக் கவனத்துடன் ஊன்றிப் போனாள் ப்ரியா.

அப்புறம் இதுவரை எடுத்திருந்த மொத்த படக் காட்சிகளும் முடியும் வரை ப்ரியா இந்தண்டை  அந்தண்டை  திரும்பவில்லை.

விளக்கு போட்டதும் அவள் பார்வை முதலில் எழுத்தாளர் அரங்கராஜன் பக்கம் தான் போனது.  ஒன்றுமே பேசாமல் வலது கை நாலு விரல்களை மடக்கி கட்டை விரலை மட்டும் உயர்த்தி, "கமலிக்கும் சாரங்கனுக்கும் இடையே நடந்த உரையாடல் அற்புதம் சார்..  ஜீவன் தளும்பும் வசனங்கள்.. பிரமாதம்.." என்றாள்.

பெரியவர் லேசாகப் புன்முறுவல் பூத்தார். "ப்ரியா.. இந்த படக்காட்சிகளைப் பார்த்த உணர்வுகளோடையே வீட்டுக்குப் போங்கள்..  முடிந்தால் ஒரு பேப்பரில் மனசில் தோன்றுவதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.  நாளை சனிக்கிழமை, அடுத்து ஞாயிறு இரண்டு நாட்களும் உங்களுக்கு லீவு தானே?  ரங்கன் சொல்ற மீதிக் கதையை நீங்கள் கேட்க வேண்டும்.  அதை எங்கே வைத்துக் கொள்ளலாம் என்று ப்ரியனுக்குப் போன் பண்ணுகிறேன். சரியா?" என்றார்.

"வித் பிளஷர்.." என்றாள் ப்ரியா.

ப்ரிவ்யூ தியேட்டர் கட்டடத்திற்கு மேலேயே  அந்த பிரபல ஹோட்டலும் அந்த ஹோட்டல் சார்ந்த தனி விடுதியும் இருந்தது.  ஹோட்டலுக்குப் போனால் கூட்டம் சேர்ந்து விடும் என்று ப்ரிவ்யூ தியேட்டரின் பின் பகுதியில் இருந்த லிப்ஃடை உபயோகித்து நேரடியாகத் தங்கும் விடுதிக்குப் போனார்கள்.   தனி சூட் ஒன்றில் இரவு விருந்திற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார் பெரியவர்.

அந்த இருபது நிமிடம் படம் பார்த்த இம்பாக்ட் ப்ரியாவின்  மனசிலேயே உழன்று கொண்டிருந்தது.   பிரமாதமான விருந்தில் அவள்  கவனம் படியவில்லை.  மதியம் அவள் திருத்திச் சொன்னக் கதைக்கும் இப்பொழுது படம் பார்த்தக் காட்சிகளுக்கும் எவ்வளவு பெரிய இடைவெளி இருக்கிறது என்று நினைத்து மருகிப் போனாள்.  எவ்வளவு பெருந்தன்மையும் எதிர்ப்பார்ப்பும் இருந்தால் அரங்கராஜன்  பொறுமையாக தன்னிடம்  கதைத் திருத்தங்கள் கேட்டுக் கொண்டிருப்பார் என்று நினைத்ததும் அவர் மேல் பெரும் மதிப்பும் மரியாதையும் மனசில் பொங்கியது.

அந்தக் கமலியின் பாத்திரப்படைப்பை எவ்வளவு நறுவிசாக செய்திருக்கிறார்கள் என்று அவள் மலைத்துப் போனாள்.  எவ்வளவு தீர்க்கமான தீர்மானம்?..  கல்யாணம் ஆகாத ஆணை கல்யாணம் ஆன பெண் மனசிலும் நினைத்துப் பார்க்கக் கூடாது என்று எவ்வளவு வைராக்கியம்?..  இந்த வைராக்கியம் சூட்டுக் கோலால் இழுத்த இழுப்பு மாதிரி இந்த சமூகத்திற்கு எவ்வளவு தீர்க்கமாக அந்த மெஸேஜைச் சொல்கிறது என்று பிரமித்தாள்.

அழகான அந்த புதுமுக நடிகைக்கு நல்ல வாய்ப்பு வந்து சேர்ந்திருக்கிறது என்று  நினைத்துக் கொண்டாள்.  மொத்தத்தில் இந்தப் படம் வெற்றியடைந்தால் ப்ரியனுக்கான டிமாண்ட் சினிமா உலகில் எகிறிவிடும்  என்று  கணக்குப் போட்டாள்.   இந்தப் படத்தை  வெற்றிகரமான படமாக்குவதற்கு நிறைய யோசிக்க வேண்டும் என்று தீர்மானித்தாள்.

"ப்ரியா.. அப்போ நாளைக்குப் பார்க்கலாம்.." என்று விடைபெற்றுக் கொள்கிற தோரணையில் பெரியவர் எழுந்தார்.

சடக்கென்று நனவுலகுக்கு வந்த ப்ரியா,   தன்னை சமாளித்துக் கொண்டு  "நாளைக்கு மதிய உணவு எங்க வீட்டிலேயே  இருக்கட்டும், சார்.." என்றாள்.

"அதுவும் சரி தான்.  அங்கே இங்கே அலைந்து நேரத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம்.." என்ற பெரியவர் "ஆனால் ஒண்ணு.." என்றார். "ப்ரியா, நிறைய ஐட்டங்கள் வேண்டாம்.  வத்தக் குழம்பு, சுட்ட அப்பளாம் அது போதும்.  இந்த மழை காலத்திற்கு தேவாமிர்தமாக இருக்கும்..  இதான் என் நேயர் விருப்பம்" என்று சகஜமாகச் சொன்னார்.

புன்னகையுடன், "ரங்கன் சாருக்கு?" என்று  அவர் பக்கம் திரும்பினாள்.  "நறுக்குத் தெரித்தாற் போல வசனம் எழுதியிருக்கிறாரே,  நான்  ஏதாவது ட்ரீட் கொடுத்தாகணுமே?" என்றாள்.

"நீ கூட இருந்து ஆலோசனைகள் சொல்வதே பெரிய ட்ரீட் ப்ரியா.." என்றார் அரங்கராஜன்.

"ரங்கனைத் தனியாப்  பாக்காதே.. அவன் என் நிழல் ப்ரியா.." என்று பெரியவர் அரங்கராஜனின் தோளில் கை போட்டுக் கொண்டார்.  அவர்களுக்கிடையேயான அன்னியோன்யத்தைக் கண்டு ப்ரியா பிரமித்தாள்.

காருக்கு போவதற்குள் ஸிலிப்பர் வழுக்குமளவுக்கு தரையெல்லாம் நீர் தேங்கியிருந்தது.  ப்ரீவ்யூ தியேட்டரின்  உள்ளே தாங்கள் படம் பார்த்துக் கொண்டிருந்த பொழுது வெளியே  மழை கொட்டித் தீர்த்திருக்கிறது போலும் என்று  ப்ரியா நினைத்துக் கொண்டாள்.

வீட்டுக்குப் போய் உடை களைந்து நைட்டிக்கு மாறியதும் ப்ரியனைத் தேடி மாடிக்குப் போனாள் ப்ரியா.   ப்ரியனின் தனி அறை மாடியில் தான் இருந்தது.   அந்த அறையை தன் அலுவலகம் மாதிரி உபயோகித்துக்  கொண்டிருந்தான் ப்ரியன்.

அவள் எதிர்பார்த்த மாதிரி ப்ரியன் அங்கில்லை..  ப்ரியன் வீட்டிலிருந்தால் வழக்கமாக அவனது இந்த  அறையில் தான் ஏதாவது செய்து கொண்டு இருப்பான்.  அங்கேயும் அவன் இல்லாதது ஆச்சரியமாக இருந்தது.

படுக்கை அறை, பாத்ரூம், ஸ்டடி ரூம் என்று எங்கும்  ப்ரியனைக் காணோம்.  ஒருக்கால்  கீழே தான் இருக்கிறாரோ என்ற யோசனையில் ப்ரியா பால்கனி பக்கம் வந்தால் அங்கு ஆகாயத்தை வெறித்துப் பார்த்த நிலையில் ஈஸிச்சேரில் சாய்ந்திருந்திருந்தான் ப்ரியன்.

"சனி,  ஞாயிறு இரண்டு நாளையும் இந்த படக்கதை அமைப்புக்காக ஒதுக்கி வைச்சிட்டேங்க.." என்றாள்.

பதில் ஒன்றும் சொல்லாமல் அவள் பக்கம் திரும்பிப் பார்த்தான் ப்ரியன்.

"இந்தப் படக் கதை அமைப்பு என்னை ரொம்பவும் பாதிச்சிருக்கு, ப்ரியன்.. அதான்  அதைப் பத்தின யோசனையாகவே  இருக்கு. ராப்பகலாய் இதே சிந்தனை தான் இருக்கும் போலிருக்கு..  படுக்கை கூடத் தனியாகத் தான்..."

தானும் ஏதோ யோசனையில் சொல்கிற மாதிரி, "நான் கூடத் தான்.." என்றான் ப்ரியன்.


(தொடரும்)

Tuesday, October 31, 2017

கமலி காத்திருக்கிறாள்...

பகுதி:  18

இதற்கு முன் பகுதி:  http://jeeveesblog.blogspot.in

ரங்கராஜன் வெற்றிலைப் பெட்டி திறந்து ஒரு கிராம்பைத் தேர்ந்தெடுத்து வாயில் போட்டுக் கொண்டார்.   ப்ரியாவைப் பார்த்தபடி திரைக்கதையை விட்ட இடத்திலிருந்து  தொடர்ந்தார்:

"எங்கே விட்டேன்?..  கமலி தன் வீட்டு பெட்ரூமிற்குப் போய் தன் புருஷன் மோகன சுந்தரம் குடிபோதையில் உருண்டு  கிடந்த அலங்கோலத்தைப் பார்த்தாளா?..  அவள் புருஷனும் பக்கத்து வீட்டுக்காரனும் சேர்ந்து சாப்பிட்ட எச்சில் மீதிகளைப் பார்த்து அவளுக்கு எரிச்சலாக வந்தது...

விடுவிடுவென்று  வீட்டுப்  பின்பக்கம் போனாள்.   புடவையின்  முன் பக்கக்  கொசுவத்தை லேசாக மேல் தூக்கிச் செருகினாள்.  ஒரு  பக்கெட்டை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்கு வந்து அரை பக்கெட் நீர் பிடித்து  பினைலை கொஞ்சம் ஊற்றினாள்.  மாஃப் குச்சியை எடுத்துக் கொண்டு  பக்கெட் நீரோடு பெட்ரூமிற்கு வந்தாள்.

மரக்கட்டை மாதிரி அவள் கணவன் சாய்ந்து கிடந்தது என்னவோ மாதிரி இருந்து மனசை சங்கடப்படுத்தியது.  மெள்ள அவனைக் கைத்தாங்கலாகத் தூக்கி இழுத்து  தலையணையை கழுத்துக்கு அண்டை கொடுத்து கால்களை நீட்டி படுக்க வைத்தாள்.   விஸ்கியின் அலாதியான வாசம் குடலைப்  புரட்டியது.  சமாளித்துக் கொண்டு எச்சில் மிச்சம் மீதிகளை சுத்தப்படுத்தி  குப்பைக் கூடையில் போட்டாள்.  மாஃபை பக்கெட் தண்ணியில் முக்கி எடுத்துப் பிழிந்து  தரை பூராவும் துடைத்தாள்.   மின் விசிறியைப் போட்டாள்.

கணவன் மோகன சுந்தரத்தைத் திரும்பிப்  பார்த்த பொழுது அந்த மயக்கத்தில் கூட சுருள் முடியுடன் அவன் களையாக இருப்பதாகத் தோன்றிற்று கமலிக்கு.  மோகனுக்கு  தீர்க்கமான மழமழவென்ற  மூக்கு.   அந்த மூக்கை எடுப்பாகக் காட்டும் உப்பியக் கன்னப்  பிரதேசங்கள்.  அந்நியோன்யமாக இருக்கும்  தருணங்களில் அவன் கன்னங்களை இவள் தடவினாலேயே அவன் சிலிர்த்துப் போய்விடுவான்.   'குறுகுறுக்கறது.. என்ன விளையாட்டு,  இது?' என்று செல்லமாகக் கடிந்து கொள்வான்.  மேலுக்குத் தான் அப்படிச் சொல்கிறானே தவிர உள்ளார அந்தத் தடவலைத் தான் எதிர்பார்த்து அவன் காத்திருப்பது போலவும் அவள் உணர்வாள்.  அவன் பொய்க்கோபம் மேலும் மூர்க்கத்தை அவளுள் கிளர்த்தும்.

இப்பொழுதும் அவன் கன்னப் பிரதேசத்தைத் தடவப் போனக் கைகளை கமலி கஷ்டப்பட்டு  இழுத்துக் கொண்டாள்.  கொஞ்சம் தள்ளிப் பாயை உதறிப்  போட்டு மெதுவாகப் பாய்ப்பக்கம் அவனை உருட்டி கழுத்துக்குத் தாங்கலாக தலையணையை வைத்தாள்.  ஃபேனை முழு வேகத்தில் வைத்து விட்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.

இத்தனை நேரம் அன்னிய ஆடவன் ஒருவன் இவளின் தனி அறையில் சுவாதீனமாக  இருந்ததை  நினைத்துப்  பார்க்கையிலேயே மரவட்டை   உதட்டோரத்தில் ஊர்ந்த மாதிரி மனசில் அருவெறுப்பு மூண்டது.  வாசல் பக்கம் வந்து வெளிக்கதவை நன்றாகத் தாழ் போட்டு விட்டோமா என்று பார்த்தாள்.  படுக்கை அறை ஜன்னல் கதவுகள் உள்பக்கம் இருந்ததால் கவலை இல்லை.  அந்த ஜன்னல் கதவுகளை வெளிக்காற்று உள்ளே வருகிற மாதிரி விரியத் திறந்து வைத்தாள்.  இப்படி  எல்லா பாதுகாப்புகளையும்  நிச்சயம்  பண்ணிக் கொண்டு தானும் தன் புருஷன் மட்டும் தான் இந்த வீட்டில் இந்த இரவில் தனித்து இருக்கிறோம் என்கிற உணர்வை மனசில் கொண்டு வந்த  பிறகு  தான் அவளுக்கு பசிக்கிற உணர்வே  வந்தது.   

பிரிட்ஜில்  காலையில்  சமைத்து வைத்து விட்டுப் போன குழம்பு இருந்தது.  வெண்டைக்காய் சாம்பார்.  வெளியே குண்டானில் சாதமும் இருந்தது.  இரண்டையும் ஒவனில் சுட வைத்துக் கொண்டாள்.   அப்படியே அப்பளம் இரண்டு எடுத்து சூடாக்கிக்  கொண்டாள்.   இருக்கவே இருக்கு பிரிட்ஜில் தயிரும் ஊறுகாயும்.  இருந்த  பசியில்  ஐந்தே நிமிடங்களில் சாப்பிட்டு எழுந்தாள்.   பத்துப் பாத்திரங்களை ஸிங்கில் போட்டு  நீர் ஊற்றி நனைத்து வைத்தாள்.  காஸ் மேடையையும் அடுப்பையும்  ஈரத் துணியால் துடைத்தாள்.

சமையலறை மின் விளக்கை அணைத்து விட்டு  ஹாலுக்கு கமலி வந்த பொழுது மணி ஒன்பது.  வழக்கமாக அவள் ஒன்பதரைக்கெல்லாம் படுக்கைக்கு வந்து விடுவாள்.   தூங்குவதற்கு முன் பத்திரிகைகள் படிப்பது அவள் வழக்கம்.   குமுதமும் விகடனும் மேஜை மேல் கிடந்தன.  இருந்தாலும் இன்றைக்கு பத்திரிகையைப்  புரட்ட மனமில்லை.  முதுகிலும் தோள்பட்டையிலும்  கால் பாதங்களிலும் இனம் தெரியாத வலி.  மோகன் இயல்பான நிலையில் இருந்தால் இவள் இங்கெல்லாம் வலிக்கிறது என்று சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான்.  கிண்ணென்று முறுக்கேறிய கைகளும் புஜங்களும் அவனுக்கு.  தொட்டாலே போதும்; வலியெல்லாம் பஞ்சாய்ப்  பறந்து விடும்.  நீண்ட கொட்டாவி ஒன்று எழுந்து அடங்கி கண்களை சுழற்றி எடுத்தது.  படுத்து எழுந்தால் போதும் காலையில் எல்லாம் சரியாகி விடும் என்று மனம் தூக்கத்திற்கு ஏங்கியது.

தானும் ஒரு பாயை எடுத்துக் கொண்டு வந்து  மோகனுக்கு சற்றுத் தள்ளிப் போட்டுக் கொண்டு தலையணையில் தலை சாய்த்து மல்லாக்க படுத்துக்  கொண்டாள்.   கால்களை நீட்டி பாயில் வைத்துத் தேய்க்கலாம் போல இடுப்புப் பிரதேசத்திலும் பின்னங்காலிலும் ஊமை வலி வாட்டியது.  ஒருக்களித்துத் திரும்பி புருஷனின்  முகத்தைப்  பார்க்கிற வாக்கில் படுத்துக்  கொண்டாள்.   அதுவே மனசுக்கு இதமாக இருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக எங்கோ இழுத்துக் கொண்டு போவது போல தூக்கம் கண்ணை சுழற்றிக் கொண்டு வந்தது தான் தெரியும்.

கமலி தன் வசமிழந்து  நித்திரை வசப்பட்டாள்".   


"பிச்சு உதறிட்டீங்க, சார்!" என்றாள் ப்ரியா தன்னை மீறி.  அரங்கராஜன் அவள் பாராட்டை எப்படி எடுத்துக் கொண்டார் என்று தெரியவில்லை.  அவர் முகத்தில் எந்த மாறுதலையும் கண்டு  கொள்ள முடியவில்லை.

"என்ன ப்ரியா? என்ன ஆச்சு?" என்றார் பெரியவர் திடுக்கிட்டு.

"ப்ரியாக்கு தன்னை இம்ப்ரஸ் பண்ணின  எதையாவது படிச்சாலும் சரி, சொல்லக் கேட்டாலும் சரி, இப்படித் தான் தன்னை மீறி கூவுவாள்" என்றான் ப்ரியன்.

"கூவுவாளாவது?.. என்ன ப்ரியன், எந்த ஊர் பாசை-- ஐ மீன் பாஷை?"-- என்றார் அரங்கராஜன்.

"அதையேன் கேக்கிறீங்க..  நானும் ப்ரியாவும் அடிக்கடி கலாய்க்கறது இந்த பாஷைலே தாங்க.." என்று  ப்ரியன்  சொன்னதும் கலகலவென்று சிரித்தாள் ப்ரியா.

"எழுத்தாளர் சார்!    சும்மாச் சொல்லக்கூடாது.  சடக்ன்னு  கதைலே அந்தத் திருப்பம் பிரமாதம் போங்க!"  என்றாள் ப்ரியா.   "அந்த ராத்திரி வேளைலே கமலியை நீங்க வீட்டை விட்டு துறத்திடுவீங்களோன்னு பயந்தே போனேன்.." என்ற பொழுது உண்மையிலேயே பயப்படுகிற மாதிரி அவள் முகத்தில் பளிச்சிட்ட பாவம் அழகாக இருந்தது.

"என் ஆச்சரியமும் அது தான்.." என்றார் பெரியவர்.  "ஒரிஜனல் திரைக்கதையும் அதானே?..  என்ன ஆச்சு, ரங்கா?.. கதையை மாத்திப்பிட்டியா?"

"நான் மாத்தலே..  அது என்னவோ எனக்கேத்  தெரிலே..  கோர்வையா ப்ரியாக்கு கதையைச் சொல்லிண்டே வந்தேனா?..  அப்படிச் சொல்லிண்டு வர்றச்சே என்னை அறியாமலேயே கதை தனக்குத் தானே புரண்டு மாறிண்டுத்து போலிருக்கு.."

"சிரிக்கத் தான் வேணும்.." என்றார் பெரியவர். "அது  எப்படி ரங்கா கதை தனக்குத் தானே மாறிக்கும்?.. "

"அதான் எனக்கும் ஆச்சரியமா இருக்கு.." என்றார் அரங்கராஜன்.

"இதான் திரைக்கதையின் சரியான போக்கு.." என்றாள் ப்ரியா ஆவேசமாய்.
"ராத்திரி வேளைலே கமலியை வீட்டை விட்டுத் துறத்தி என்னத்தைக் கண்டுடப்போறீங்க..?..  கமலியை சந்தோஷமா விடுங்க..  அப்போத்தான் ஜனங்களும் சந்தோஷப்படுவாங்க..  கமலியைக் கண்ணைக் கசக்க வீட்டீங்க,  ஜனங்களும் உங்களைக் கைவிட்டு விடுவாங்க.." என்று  தீர்மானமாகச் சொல்வது போலச் சொன்னாள் ப்ரியா.

"ப்ரியா.. இது பெண்களின் ப்ரச்னையைப்  பத்தின படம்.  கமலி போன்ற பெண்களின் அவல நிலை  தான் கதையின் மையப் புள்ளி..  அதைச் சொல்லாம விட்டா  கதையில் ஜனங்களுக்கு சொல்ல எதுவுமே இருக்காது.." என்றான் ப்ரியன்.  தான் இயக்கப் போகும் படம் தன் கண் முன்னாலேயே சின்னாப்பின்னமாவது  போல அவன் தவித்தான்.   ப்ரியாவிடம் ஆலோசனை  என்று இவர்கள் வந்ததே தவறோ என்று தோன்றியது.

"என்னங்க பொல்லாத ப்ரச்னை?...  கமலி போன்ற பெண்கள் எந்த ப்ரச்னை தனக்கு வந்தாலும் ப்னீக்ஸ் பறவை போல மீண்டு வருவாங்க, தெரிஞ்சிக்கோங்க..  கமலியை சந்தோஷமா உலாவ விட்டு ஜனங்களுக்கு நம்பிக்கையைக் கொடுங்க..    ஜனங்க எதை விரும்பறாங்களோ அதையே நம்ம விருப்பமா கதைலே கொண்டு வரணும்..  இதான் படம் ஓகோன்னு ஓடறதுக்கான ரகசிய  சாவி.."  என்று உணர்வு பூர்வமாக ஆவேசத்துடன்  சொல்லிக் கொண்டே வந்த  ப்ரியா சட்டென்று நிறுத்தினாள்..  அவள் முகம் லேசாக வெளிறியது..  "சாரி.." என்றாள் பெரியவரைப் பார்த்து..  "என்னை மன்னிச்சிக்கங்க..  திரையுலகில் எவ்வளவு அனுபவம் உள்ளவர் நீங்க?..
எத்தனை வெற்றிப் படங்களை எடுத்திருக்கீங்க?..  இந்தக் கத்துக்குட்டி
என்னன்னவோ உளறிட்டேன், பாருங்க, மன்னிச்சிங்கங்க..  அரங்கராஜன் சார்!  பத்திரிகை உலகுக்கும் திரை உலகத்திற்கும் பாலம் போட்டவங்க நீங்க...  தமிழ் எழுத்தாளர் யாரும் சினிமாக்கு  லாயக்கில்லைங்கற பழியை துடைச்சு எறிஞ்சவங்க நீங்க..   இன்னிக்கு தேதிலே சினிமா உலகிலே திரைக்கதை எழுத உங்களை மிஞ்சி யாருமில்லே..  உங்களுக்கு சின்னப் பொண்ணு நான்...'

"இல்லே, ப்ரியா.." என்றார் அரங்கராஜன்.  "சொல்லிண்டே வந்த கதையை என்னை அறியாமலேயே மாத்திச் சொல்லியிருக்கேன்.   அந்த மாற்றம் என்னையறியாமலேயே நிகழ்ந்திருக்கு..  ஏன் அப்படி  ஆச்சுன்னு எனக்குப் புரிலே.. ஆனா இது ஏதோ நல்லதுக்காகத்தான்னு தோண்றது..  இப்படியே கதையை நீட்டிப் பாப்போம்..  ப்ரியா.. நீ அப்ஸர்வ் பண்ணினது கரெக்ட்..  இப்படியே கதையைக் கொண்டு போவோம்.."

"கொண்டு  போய்?.." என்றார் பெரியவர்.  "அப்புறம் ஸ்பென்ஸர்லே எடுத்த அந்த  சீன்லாம் என்ன பண்றது?..  கல்யாணம் ஆகாத சாரங்கன், கல்யாணம் ஆன கமலியைச் சந்திச்சது..  தன் தாலியை எடுத்து கமலி அவனுக்குக் காட்டினது.. இந்த ஸீன்லாம்..  அந்த ஸீன்லாம் என்ன ஆவறது?" என்றார் பெரியவர்.     லேசான எரிச்சலை அவர் குரலில் உணர முடிந்தது மற்றவர்களுக்கும்.

"அது யார் சாரங்கன்?.. புதுசா ஒருத்தர்?..  கதைலே இனிமே வரப்போற கேரக்டரா?" என்று திகைத்தாள் ப்ரியா.

"ஆமாம், ப்ரியா.." என்றார் அரங்கராஜன்.  சாரங்கனை என்ன செய்வது என்று அவருக்கும் இப்பொழுது குழப்பமாக இருந்தது.

"ஒண்ணு செய்வோம்.." என்றார் பெரியவர். "ப்ளீஸ்.. ப்ரியா.. நீ இன்னும் நிறைய எங்களோட ஒத்துழைக்கணும்..   பத்து நிமிஷத்லே இங்கேயிருந்து நாம எல்லாரும் கிளம்பறோம்.   அதுக்கு ரெடி பண்ணிக்கோ.   வட பழனி போறோம்.  ப்ரீ வ்யூ தியேட்டர்லே இது வரை இந்தப் படத்துக்காக எடுத்த ஸீன்களை உனக்குப் போட்டுக் காட்டறோம்..   அப்புறம்  எடுத்த  காட்சிகளை எப்படி வெட்டி எங்கங்கே செருகி ஒட்டப் போறீங்களோ, எனக்குத் தெரியாது..  அது உன் பாடு, ரங்கன் பாடு..   அதுக்கு அப்பாலே அமையப் போறக் கதை ப்ரியனுக்கு ஓ.கே.ன்னா எனக்கும் ஓ.கே.  ஏன்னா அவன் தான் இந்தப் படத்தோட டைரக்டர்.  இந்தப் படத்தை உருப்படியா இயக்கப் போறது, அவன் தான்..  இறுதி ஓக்கே அவன் தான் சொல்லணும்..  சரியா?"  என்றார் பெரியவர்.

இங்கு என்ன தான் நடக்கிறது என்று தெரியாத பெரும் குழப்பத்தில் இருந்தான் ப்ரியன்.


(தொடரும்)

Friday, October 27, 2017

கமலி காத்திருக்கிறாள்...

பகுதி:  17

இதற்கு முன் பகுதி:  http://jeeveesblog.blogspot.in


ப்ரியா    டக்கென்று எதுவும் சொல்ல வில்லை.

என்ன சொல்வது என்று இவள் யோசிக்கிறாள் போலும் என்று எழுத்தாளர் அரங்கராஜன் நினைத்துக் கொண்டிருக்கையில் "நீங்கள் எப்படி அடுத்துக் கதையை நகர்த்த போவதாக இருக்கிறீர்கள்?" என்று ப்ரியா மென்மையாகக் கேட்டாள்.

இவள் இப்படி ஒரு கேள்வியைத் தன்னை நோக்கியே திருப்புவாள் என்று அரங்கராஜன் எதிர்பார்க்கவில்லை..   அவர் முழுக்கதையையும் எழுதி கதை இலாகாவிலும் திரைக்கதையைத் தீர்மானித்து விட்டார்கள் தாம்.  கமலி அந்த ராத்திரி வேளையில் வீட்டை விட்டு வெளியேற யத்தனிப்பது கதையில்  முக்கியமான கட்டம்.  கமலியின் அந்த முடிவு பற்றி  ப்ரியா என்ன சொன்னாலும் ஒரு பெண்ணின் பார்வையில்  கதையை எப்படி யோசிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பாக இருக்கும்.  பறவைகள் பலவிதம் மாதிரி பெண்களும் பலவிதம்.   ஹோம் மேக்கர்ஸ் என்று பெருமைப்படுகிறவர்களில் இருந்து  பத்து டு அஞ்சு அலுவலகப் பணியாளர்கள் வரை சினிமா ஒரு கனவுப் பிரதேசமாக இருக்கிறது. சினிமாவில் காட்டுபவை பற்றி  ஒரு பேசும் அரங்கத்தை ரொம்ப சுலபமாக உருவாக்கி விடுகிறார்கள்.  மீடியாக்களின் ஜீவனே சினிமா, அரசியல் என்று இரண்டே இரண்டு முகாம்களாகக் குறுகி அவற்றில் தங்களைப்  புதைத்துக் கொண்டு விட்ட  காலகட்டம் இது.  அதனால் வாழ்க்கையில் தப்பிக்க முடியாத அல்லது  தவிர்க்க முடியாத  அம்சங்களில் ஒன்றாக  சினிமா என்பது  பிரமாண்டமாக கால் பதித்து நிற்கிறது.

சினிமாவிலும் ஆண் பெண் அரசியல் உண்டு.   வாழ்க்கைக்கான அரசியலில் ஆண் எப்படி தீர்மானிக்கிற சக்தியாக இருக்கிறானோ அப்படியேத்   தான் சினிமாவில் என்றாலும்  பெண்ணின் கவர்ச்சியில் சிக்கிய  ஆண் என்ற ஹோதாவில் பெண்ணை முக்கியப்படுத்தி ஆணின்  சாகசங்களை தூக்கிப்  பிடிக்கும் அரசியல் அது.   சினிமாவின் இப்படியான பெண் அரசியலைப் பற்றி அவ்வளவாக  பெண் உலகம் அறிந்திருக்கவில்லை.  சிலர் அறிந்திருந்தாலும்  அவ்வளவாக அது முக்கியப்படுத்தப் படுவதில்லை.

இந்த சூழலில் தான் சோதனைப் படமாக இந்த கமலி சப்ஜெக்ட்டைஎடுத்து பிறகு பல தளங்களில் இந்தப் படம் பற்றி பேசப்படுவதற்கு  முன்னால்  படத்தை ஷூட் பண்ணுகிற தருணத்திலேயே பெண்களின் கருத்தை இந்தப்  படத்தைப் பற்றித் தெரிந்து  கொள்ளலாம் என்ற ஆர்வமும் பெரியவருக்கு இருந்தது.  இந்த ஐடியா பெரியவரின் மனசில் தோன்றியவுடனேயே ப்ரியனைக் கூப்பிட்டு அது பற்றி கருத்துக் கேட்டார்.   நாம் யாருடன் பேசப்  போகிறோமோ அந்தப்  பெண் --- பெண்களின் இன்றைய நிலை,  அவர்கள் எதிர்கொள்ளும் சமூகப்  பிரச்னைகள் என்பனவற்றையெல்லாம் தெரிந்தவராய் இருக்க வேண்டும் என்பதில் திரைக்கதை ஆசிரியர் அரங்கராஜன் குறியாக இருந்தார்.  அப்படியான தகுதியுள்ள யாரைச் சந்திக்கலாம் என்று சமூகத்தில் பிரபல பல பெண் பிரதிநிதிகளின் லிஸ்ட் எடுக்கும் பொழுது,  திடீரென்று வந்த ஞானோதயத்தில் 'அந்த பட்டியலையெல்லாம் குப்பையில் போடுங்கள்'    என்று பெரியவர் ஒரே போடாகப் போட்டு விட்டார்.  ப்ரியனை வரவழைத்து விஷயத்தைச் சொல்லி உன் மனைவி ப்ரியாவைத் தான் இது விஷயத்தில் நம்பி இருக்கிறோம்.. அதற்கான ஒத்துழைப்பை உங்க மனைவியிடம் எதிர்பார்க்கிறோம் என்று இறுதித் தீர்ப்பு மாதிரி சொல்லி விட்டார்.

ப்ரியன் பெரியவருக்குப் பதில் சொல்ல முடியாமல் திகைத்துப் போனான்.  ப்ரியன் தான் இந்தப் படத்தை இயக்கப் போகிறான் என்பது ஏற்கனவே தீர்மானமான விஷயம்.  அதனால் ஒரே குடும்பத்தில் இருக்கும் இருவரின் இன்வால்வ்மெண்ட் படத்தின் வெற்றிக்கு உதவினால் ரொம்ப சந்தோஷம்; அதுவே எதிர்மறையாக மாறிப்போனால்,  தான் தலையெடுக்க முடியாது என்று தயங்கினான் ப்ரியன்.

"இந்த வேலைக்கு உன்  மனைவியை எப்படி செலக்ட் பண்ணினேன் தெரியுமா?" என்று பெரியவர் உரத்த குரலில் கேட்டார். அவரே அதற்கான  காரணத்தை அடுத்த வினாடியே சொல்லவும் செய்தார். "நேத்து மத்தியானம் டிவிலே ஒரு ரியல் ஷோ பாத்தேன், ப்ரியன்!  அந்த  ரியல் ஷோவுக்கு நீதிபதிகளாக இருந்தவர்களில் ஒருவர் உங்கள் மனைவி ப்ரியா.  அந்த ஷோவை நீ பார்த்தையா?" என்று அவனைக் கூர்ந்து பார்த்தபடி பெரியவர் கேட்டார்.

"இல்லையே!..." என்று ப்ரியன் ஆச்சரியத்துடன் சொன்னான். "ப்ரியா அது பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லையே!" என்றான்.

"இந்த கமலி படத்தை நீங்கள் இயக்கவிருப்பதாக உங்க மனைவிகிட்டே நீங்க சொல்லியிருக்கீங்களா?"

"சாரி! இல்லை சார்..  என் வேலை உண்டு நான் உண்டு என்று இருப்பேன்.  என் வேலைலே இன்வால்வ் ஆகி விட்டால் அது ஒண்ணு தான் என் நினைப்பா இருக்கும்..  தானே விருப்பப்பட்டு அது பற்றி ப்ரியா என்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால் தான் உண்டு.." என்று ப்ரியன் தயங்கியபடியே சொன்னான்.

"உங்களை மாதிரி தான் உங்களுக்கு வாய்த்த உங்கள் மனைவியும் இருக்காங்க..  நல்ல பொருத்தமான ஜோடி தான்.." என்று சொல்லி பெரியவர் சிரித்தார்.

"'இன்றைய நிலையில் சமூகத்தில் பெண்களின் ஈடுபாடு' என்ற தலைப்பில் அந்த ரியல் ஷோ!..  கிட்டத்தட்ட 20 பெண்கள் பார்ட்டிசிபேட் பண்ணியிருப்பாங்க..  நாலு ஜட்ஜூங்க..   அந்த நாலு பேரில் உன் மனைவி ப்ரியாவும் இருந்தாங்க..   அந்த  ரியல்  ஷோவில்  கலந்து  கொண்ட ஒவ்வொருத்தர் பங்களிப்பையும் அனலைஸ் பண்ணி,  கடைசிலே ப்ரியா கொடுத்த தீர்ப்பு இருக்கே, ஒண்டர்புல்!..  கூட்டமே அவங்க அந்த ஷோவை டீல் பண்ணின திறமைலே அசந்து போயிட்டாங்க..   டிவிலே அந்த ஷோவை மறு ஒளிபரப்பு பண்ணினாங்கன்னா, பாக்கத் தவறாதே, ப்ரியன்.. இந்தப் படத்தை நீ இயக்கறதுக்குக் கூட ரொம்ப சப்போர்டிங்காக இருக்கும்.." என்று ப்ரியா புராணத்தை ஓகோவென்று எடுத்தோதினார் பெரியவர்.  "அந்த ரியல் ஷோ பார்த்த அடுத்த நிமிஷமே நம்ம கமலிக் கதையை ப்ரியாக்கிட்டே சொல்லி ஒப்பினீயன் கேக்கணும்ன்னு தீர்மானம் பண்ணிட்டேன்..."

"அப்படியா, சார்! அப்படியே செஞ்சிடலாம்.." என்று வெளிக்கு பட்டும் படாமலும் ப்ரியன் சொன்னானே தவிர தன் மனைவியின் திறமை பற்றி   உள்ளூர அவனுக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

"இதில் இன்னொரு வேடிக்கை என்னன்னா.." என்று பெரியவரே தொடர்ந்தார்.   அந்த மேடைலே  பிரபல திரைப்பட இயக்குனர் ப்ரியனின் மனைவி ப்ரியான்னு தான் ப்ரியாவை அறிமுகப்படுத்தினாங்க..  அந்த விதத்தில் உனக்கும் அது பெருமை தான்.." என்றார்..  பெரியவர் சொன்ன 'பெண்ணால் ஆணுக்குப் பெருமையை' உள்ளூர உணர்ந்து பார்த்த உணர்வில் ப்ரியன் பூரித்துப்  போனான்.  இன்று வீட்டுக்குத் திரும்பும் பொழுது ப்ரியாவுக்கு அவளே ஆச்சரியப்படும் அளவுக்கு ஏதாவது ட்ரீட் வாங்கிப் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

எழுத்தாளர் அரங்கராஜனோடு தான் பெரியவர் தன் ஆபிஸ் அறையில் இந்த ரியல் ஷோவை டிவியில் பார்த்தார்.  ப்ரியாவின் விஷயங்களைப் பகுத்துப் பார்க்கும் திறமையை கண்டு பெரியவரோடு சேர்ந்து அரங்கராஜனும் அட்டகாசமாக ரசித்து அசந்து போனவர் தான்.   இதுவரை உருவாகியிருக்கும் கதைக்கு மாறுதலாக ப்ரியா ஏதாவது சொன்னால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த வழியில் யோசிக்கலாமே என்று  அரங்கராஜன் நினைத்துத் தான் 'கமலி அந்த ராத்திரி வேளைலே வீட்டை விட்டு வெளியேறிப் போக வேண்டியது தானா?  சொல்லு..' என்று ப்ரியாவிடம் கேட்டார்.

தான் அமைத்திருக்கும் கதையின் போக்கைத் தெரிந்து கொண்டு அதற்குப் பிறகு அது பற்றித்  தன் யோசனையைச் சொல்லலாம் என்று ப்ரியா எதிர்பார்க்கிறாள்  போலிருக்கு என்று அரங்கராஜன் எண்ணினார்.அதனால்  அதற்கு மேலான   திரைக்கதையின் போக்கை ப்ரியாவுக்குச் சொல்லலானார்.

"....  இங்கிருந்து உடனே போய் விடவேண்டும் என்று அந்த இரவு நேரத்தில் வாசல் பக்க கல்தூணைப் பற்றியபடி கமலி நினைத்தாளே தவிர நின்றிருந்த இடத்திலிருந்து காலை நகர்த்தவே முடியவில்லை.  மனப்பாரம் வண்டிச் சுமையாய் தேகத்தை அழுத்திய வேகத்தில் கால்கள் பலமிழந்து தவிப்பதை கமலி  உணர்ந்தாள்.  அதற்கு மேல் நிற்பதற்கும் சக்தி அற்று அப்படியே கல்பாவிய தரையையே தாங்கலாகக் கொண்டு  நழுவி அமர்ந்தாள்.

இருட்டு மைக்கலவையைக் கொட்டியது மாதிரி கருந்திட்டு ஆகியிருந்தது.  அங்கங்கே எரிவதாகப் பெயர் பண்ணும் கார்ப்பொரேஷன் தெரு  விளக்குகள் அழுது வடிந்து கொண்டிருந்தன.   தெருவில் ஈ காக்காய் இல்லை.  வெறிச்சொடிக் கிடந்தது.

வாசல் படிக்கட்டில் இரு பாதங்களையுன் ஊன்றி கால் முட்டி மீது தலைகவிழ்த்து அடுத்து என்ன செய்வது என்பதைத் தீர்மானிக்க முடியாமல் அமர்ந்திருந்தாள் கமலி.  கொதிகலம் போலக் கொதித்துக் கொண்டிருந்த மனம் அமைதியின்றி தவித்தது.

பொதுவாக  இந்த மாதிரி சந்தர்ப்பங்களில்  'சட்'டென்று செயல்படும் வேகம் தான் நிகழ்வாக நடந்து விடுகிறது..  அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற யோசனை கிளம்பினாலே போதும் செயல்படுவதின்  வேகம் மட்டுப்படுத்தப் படுகிறது.  செயல்படுவதற்கான சாதக பாதகங்களை புத்தி பட்டியலிட்டு  அதற்கேற்ப மனசு இப்படியும் அப்படியும்  புரட்டிப்  போடப்பட வேகம் மட்டுப்படுத்தப்  படுகிறது.  கடகடவென்று உருளும் தேர் சக்கரங்களுக்கு கட்டை போட்ட நிலை தான்.

ஏன் இப்படி சட்டென்று எதுவும் செய்ய முடியவில்லை என்று கமலி தன்னையே நொந்து கொண்டாள்.  இன்று இது என்றால் நாளை என்னவாக இருக்கும் என்பதை அவளால் தீர்மானம் பண்ண முடியவில்லை.  'ஏன் இப்படி கற்பனை பண்ணி சாகிறாய்' என்று அவள் மனம் அவளையே நொந்து கொண்டது.  'எழுந்திரு.. பிரச்னைகளைச் சமாளிக்கப் பழகிக் கொள்' என்று அதே மனம் அவளுக்கு இடித்துரைத்தது.

அந்த சமயத்தில் தான் அது நடந்தது..  லுங்கியை தோள் அளவுக்குப் போர்த்தி மறைத்தபடி பக்கத்து வீட்டுக்காரன் விடுவிடுவென்று நிழல் நடப்பது போலப் படியிறங்கிப் போவதைப் பார்த்தாள்.  வேகமாக அவன் போனாலும் நிச்சயம் தன்னைப் பார்த்திருப்பான் என்று கமலி நினைத்துக் கொண்டாள்.

அவன் போய் விட்ட பிறகு மனசில் திடீரென்று ஒரு நிம்மதி குடி கொண்ட மாதிரி இருந்தது.  சட்டென்று எழுந்திருந்து தன் வீட்டில் தான் நுழைகிற சுவாதீனத்தில் கமலி வாசல் தாண்டி மரக்கதவு தள்ளி வீட்டிற்குள் நுழைந்தாள்.

அவள் பெட்ரூமில் மின்விளக்கு அப்படியே தான் எரிந்து கொண்டிருந்தது.  சோபாவுக்கு பக்கத்து இடுக்கில் அவள் கணவன் ஒருக்களித்து உருண்டு கிடந்தான்.   பெரிய அளவில்  விஸ்கி பாட்டில் ஒன்று டீப்பாயில் தலை கவிழ்ந்து கிடந்தது.  அவர்கள் சாப்பிட்ட எச்சில் மீதிகள்  அங்கங்கே சிதறிக் கிடந்தன. 

---- இதுவரை சொன்ன கதையை எந்தளவுக்கு ப்ரியா உள்வாங்கிக் கொண்டிருக்கிறாள் என்பதை நிச்சயம் செய்து கொள்ளும் தோரணையில் அரங்கராஜன் அவளைப் பார்த்தார்.

ப்ரியாவின் முகத்தில் பிரகாசம்.  அந்த பிரகாசத்தில் அவள் இதழ்க் கடையில் முறுவல் ஒன்று அழகாகப் பூத்திருந்தது அரங்கராஜனுக்கு நிம்மதியைத் தந்தது.

அரங்கராஜன் வெற்றிலைப் பெட்டியை தனக்கு இன்னும் நெருக்கத்தில் தள்ளிக் கொண்டு பெரியவரைப் பார்த்தார்.

பெரியவர் எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் இறுகிய  முகத்துடன் யோசனையில் அமர்ந்த நிலையில் இருந்தார்.

(தொடரும்)

Saturday, October 21, 2017

கமலி காத்திருக்கிறாள்...

பகுதி:  16

இதற்கு முன் பகுதி:  http://jeeveesblog.blogspot.in


"இந்த நிலமை எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது, சார்.." என்றாள் ப்ரியா.

"வந்து விடுகிறதே, ப்ரியா.. அதுக்கு என்ன செய்வது?"

ப்ரியா தன் கணவன் ப்ரியனைப் பார்த்தாள்.  அவள் கண்கள் அவனோடு பேசின.  அன்னிய மனிதர்கள் இருக்கிறார்கள்.  இல்லையென்றால் அவனைக் கட்டிக் கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்து விசும்பி விசும்பி அழுவாள் போலிருந்தது.

திருமணமான பெண்ணுக்கு உலகில் உள்ள எல்லா பந்தங்களையும் விட உயர்ந்த பந்தம் அவள் கணவன் தான் என்று தோன்றியது.  அந்தக் கணவனே கைவிட்டு விட்டால் வேறு நாதியில்லை பெண்ணுக்கு என்று நினைப்பு ஓடியது.

"என்ன சார் அநியாயம்  இது?"  என்றாள் அவள் வெகுண்டு.

தான் சொன்ன கதைக்கு இந்த மாதிரியான ஒரு எதிர்க்குரலைத் தான் எதிர்பார்த்தார் அரங்கராஜன்.  இருந்தாலும் வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல்  "ப்ரியா.. என்ன அநியாயத்தைக் கண்டுட்டே?" என்றார் எரிகிற தீயில் எண்ணை ஊற்றுகிற மாதிரி.

"இதை விட அநியாயம் ஒரு பெண்ணுக்கு என்ன வேண்டும், சார்?" என்றாள்.  "புருஷன் என்ன நடக்கிறது என்று தெரியாத போதையில்.  போதாக்குறைக்கு பெட்ரூமில் அன்னிய ஆடவன்.  அந்த ராத்திரி வேளையில் எங்கே சார் போவாள், அவள்?.. "

"இன்னொண்ணை நான் சொன்னால் நீ பதறிப் போவாய்.  அந்த வீடு கமலியின் பெயரில் இருக்கிற சொந்த வீடு.  புருஷன் பெயரில் தான் வீட்டை ரிஜிஸ்தர் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டாள் அவள்.  ஆனால் ஆபிஸில் லோன் வாங்கி கட்டின வீடாகையால் அவள் பெயரிலேயே ரிஜிஸ்தர் பண்ண வேண்டிய நிர்பந்தம் அவளுக்கு ஏற்பட்டது.  இப்பொழுது தன் வீடே தனக்கு அந்நியமாய்ப் போய் அந்தப் பெண் எங்கே போவது இந்த ராத்திரியில் என்று விழிக்கிறாள்"

"அந்தப் பெண்ணை-- பெயர் என்ன, கமலி தானே--  இவ்வளவு சாஃப்டாக நீங்கள் படைக்கக் கூடாது, சார்" என்றாள் ப்ரியா.  "பொம்பளைன்னா என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போக்கத்த இந்த ஆம்பளைங்க?  இப்படிப் பட்ட கையாலாகாத புருஷனை ஏறி மிதிக்க வேண்டும், சார்.
இவன்லாம்  குடும்பம் நடத்த வந்திட்டான்ங்கள்..  ஊரைக் கூட்டி நியாயம் கேட்க வேண்டும், சார், அவள்..  அவள் வீடு.. அவள் சொத்து.. வீட்டை விட்டு வெளியே போறாளாம்..  அந்த ரெண்டு பேரையும் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி கதவைச் சாத்த வேண்டும்..  அந்தக் காட்சியை அப்படி எடுங்கள்,  சார்!  பெண்கள் கூட்டம் அம்மும்.." என்று பரபரத்தாள்.

"நீ சொல்றது தான் காலாதிகாலமா இங்கே இருக்கற சினிமா ஃபார்முலா, ப்ரியா.." என்றார் பெரியவர்.  "மனோகரா, எங்க வீட்டுப் பிள்ளைன்னு எந்தப் படத்தை வேணா எடுத்துக்கோ..  ஒரு கதாபாத்திரத்தை எல்லாக் கஷ்டங்களையும் சுமக்கச் செய்து, அந்தப் பாத்திரத்தின் மேல் அனுதாபத்தைக் கூட்டி,  இந்தப் பாத்திரத்திற்கு எப்போடா நல்ல காலம் பொறக்கும்ன்னு ஜனங்களை ஏங்க வைச்சு, அந்தப் பாத்திரம் எழுச்சி கொள்ற நேரத்லே படத்தைப் பாக்கற ஜனங்க,  தாங்களே அனுபவித்த கஷ்டங்களிலிருந்து விடுதலை பெறுகிற மாதிரி.. நீ சொல்றது, சரி தான்; சினிமான்னா அதான்.   ரியல் வாழ்க்கைலே இல்லாத ரிலீஃபை நிழலாய் தியேட்டர் இருட்டில் பாக்கறது.. சினிமா முடிந்து விளக்குப் போட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் தான்,  நிஜ வாழ்க்கையின் வெப்பம் தகிக்கும்..  இந்தப் படத்திலேயேவாவது அந்தப் பாவத்தைச்    செய்ய வேண்டாம்ன்னு நா பாக்கறேன்.." என்றார் பெரியவர்.

"பின்னே என்ன தான் வழி சார்?.. பாவம் அந்தப் பெண் கமலி அடங்கிப் போக வேண்டியது தானா..  பெத்தவங்களை விரோதிச்சிண்டு செஞ்சிகிட்டக் காதல் கல்யாணம் வேறே..  அவ எங்கே தான் போவா?.. வேறே என்ன போக்கிடம் இருக்கு, அவளுக்கு..  அவ அந்த ராத்திரி பொழுதைக் கழிக்க என்ன தான் சார் ஏற்பாடு பண்ணியிருக்கீங்க?.."

"ப்ரியா..  இப்போ இந்த சீனையே உல்டாவா மாத்திப் பாரு..  நீ சொல்ற மாதிரி அந்த பரிதாபத்திற்குரிய பெண் கமலி ஆத்திரத்தை அடக்க முடியாமல் அந்த ரெண்டு பேரையும் வெளியே தொறத்தி, கதவைச் சாத்துகிறாள்ன்னு வெச்சுக்க..  அதனாலே அவங்களுக்கு பெரிசா எந்த விளைவும் ஏற்பட்டு  விடப்போவதில்லை..  போதையிலேயே ராத்திரி பொழுதை எங்கையாவது கழிச்சிட்டு  பொல பொலன்னு பொழுது விடியறச்சே போதையெல்லாம் தெளிஞ்சு வீட்டு வாசல்லே வந்து நிப்பான், அவ புருஷன்..  'ஆம்பளை குடிக்கறதுங்கறது எங்கேயும் நடக்கறது  தான்..  இவ என்ன ஊரிலே இல்லாத அதிசயமா அவனை வெளிலே தொறத்தறா?.. இன்னிக்கு அவனை வெளிலே தொறத்திட்டே, சரி.. நாளைக்கு என்ன செய்யப் போறே!..  என்னைக்கு ஒன் கழுத்திலே அவன் தாலி கட்டிட்டானோ, அவனோட தானே வாழ்ந்தாகணும்?..'ன்னு உலகம் நியாயம் பேசும் ப்ரியா..   இது ஆம்பளைங்களோட லோகம்.  அவங்களுக்கு ஏத்த மாதிரி எல்லா சட்டத்தையும் தீர்மானமா வகுத்திருக்காங்க..  அவன் செய்யறதுக்கெல்லாம் பெண்டாட்டி ஒத்து ஊதினாத் தான்,  இல்லே இவனை எதிர்க்கறதுங்கறது நாம்மாலே ஆகாதுடா சாமின்னு பணிஞ்சு போனாத் தான்--- அவ தான் புருஷனை அனுசரிச்சு போகற மனைவின்னு உலகம் போற்றும்..  உனக்குத் தெரியாததில்லை.." என்றார் அரங்கராஜன்.

"என்ன சார் இந்த அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட வேறே வழியே இல்லையா?" என்றாள் ப்ரியா கொதிப்புடன்.

"ஏன் இல்லாம?" என்றார் எழுத்தாளர்.  "படைச்சவன் அதுக்கெல்லாம் வழி பண்ணியிருக்கான்.  ஆயிரம் தான் ஆம்பளை காளைங்க துள்ளினாலும் மூக்கணாங்கயிரை மட்டும் என்னவோ பொம்பளைகிட்டே தான்  கொடுத்திருக்கான் இறைவன்..  'மகாராஜன் உலகை ஆளலாம்.. இந்த மகாராணி அவனை ஆளலாம்'ன்னு  கண்ணதாசன் பாட்டெழுத்தியிருக்காரு, கேட்டிருக்கியா?"  அப்படி ஆண்டாத்  தான் உண்டு..  சில நல்ல மனசுக்கார ஆம்பளைங்களும் இருக்காங்க.. பெண்டாட்டி உலகமே தன்  உலகம்ன்னு நெனைக்கறவங்க..  அந்த மாதிரி ஆம்பளைகள் கிடைச்ச பொம்பளைங்க புண்ணியம் செஞ்சவங்க..   அந்த மாதிரி ஆம்பளைங்களை அடக்கி ஆள வேண்டிய அவசியமே இல்லே..  இயல்பாகவே அந்த ஆம்பளைங்க அடங்கியிருக்கற சுபாவம் கொண்டிருப்பாங்க..  ஆனா எல்லாக் கவலைகளையும் அந்த ஆம்பளைங்க தூக்கிச் சுமக்க அந்த வீட்டுப் பொம்பளைங்க ஹாயா இருப்பாங்க..  நம்ம பாலா சொல்லுவாரு..."

"எந்த பாலா,  எழுத்தாளர் பாலகுமாரனா?" என்றாள் ப்ரியா.

"கரெக்ட்.. அவரே தான்.. 'பெண்ணை பொருள் போகம்ன்னு நெனைச்சவனுக்கு சிரமமுமில்லை;  சந்தோஷமும் இல்லை.  'செம்புலப்பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே' என்று உருகுகிறவனுக்குத் தான் சந்தோஷம், சிரமம் எல்லாம்' என்பார்.  சரி.. என்னன்னவோ தொடர்பாப் பேசி எங்கையோ வந்துட்டோம்.. இப்போ சொல்லு.. கமலி அந்த ராத்திரி வேளைலே வீட்டை விட்டு வெளியேறிப் போக வேண்டியது தானா?..  சொல்லு.." என்றார்.

(தொடரும்)


Related Posts with Thumbnails