Saturday, April 30, 2011

ஆத்மாவைத் தேடி …. 9 மூன்றாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி ....


9. ஓ!


குமார் அப்படிச் சொன்னதிலிருந்து இதுவரை இரண்டு பேரும் வழிநெடுகக் காரில் பேசிக்கொண்டு வந்ததின் தொடர்ச்சியாக கனவுகள் பற்றித் தான் இப்பொழுதும் பேசிக் கொண்டிருந்திருப் பார்கள் என்று தெரிந்தது.

சீரியலைக் கலந்து சிப்பிக் கப்பில் ஊற்றி ரிஷியிடம் தந்தாள் கிரிஜா. சமத்துக் குழந்தை, அடம் பிடிக்காமல் இரண்டு கைவிரல்களாலும் கப்பை இறுக்கப் பற்றி வாய்ப்பக்கம் வைத்துக் கொண்டது. குழந்தை சாப்பிடுவதை ஒரு பக்கம் கண்காணித்துக் கொண்டே பிரித்து வைத்திருந்த ஸ்நாக்ஸிலிருந்து ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள் கிரிஜா. மணிவண்ணன் தனக்கு வேண்டும் என்று வாங்கிக் கொண்டிருந்த டோனெட்டை ருசித்துக் கொண்டிருந்தான்.

"வாவ்! கனவுன்னாலே இன்ட்ரஸ்ட்டிங் சப்ஜெக்ட்! அந்தக் கனவின் கதையைப் பத்தித் தெரிஞ்சிக்கறது அதைவிட சுவாரஸ்யமா இருக்கும் போலிருக்கே!" என்றான் பிரகாஷ்.

"பிரகாஷ்! இது கதை இல்லே; மொத்தமும் சயின்ஸ்.." என்று அவன் சொன்னதைத் திருத்தினான் குமார்.

"ஸாரி.. அதைப் பத்தின விவரம்ங்கற அர்த்தத்திலே சொன்னேன்.. நீங்க சொல்லுங்க.." என்று குமார் இயல்பா தொடர்வதற்கு ஊக்கினான் பிரகாஷ்.

இப்பொழுது தமா இன்னொரு ஸ்நாக்ஸ் பொட்டலத்தைப் பிரிக்கத் தொடங்கியிருந்தாலும், அவர்கள் பேச்சில் கவனமாய் இருந்தாள். ரிஷி காலி பண்ணியிருந்த சிப்பிக்கப்பை அவள் கையிலிருந்து வாங்கிக் கொண்டு, டிஷ்யூ பேப்பரால் அவள் வாய்ப்பக்கம், கை எல்லா இடங்களிலும் துடைத்து விட்டாள் கிரிஜா.

"பொதுவா எப்போதாவது எனக்கும் கனவுங்கறது வரும் தான்.. இருந்தாலும் வந்த சடுதிலே மறந்தும் போயிடும்.. காலம்பற எழுந்ததும், ராத்திரி ஏதோ கனவு கண்டமாதிரி இருக்குமே தவிர, என்ன ஏதுங்கறதெல்லாம் சுத்தமா மறந்து போய்டும்!" என்றாள் கிரிஜா.

கிரிஜாவைப் பார்த்து புன்னகைத்தான் குமார். "அதுகூட ஒருவிதத்தில் நல்லது தான்.. கனவையும் நனவையும் இயல்பா பாக்கக் கத்துக்கிட்டீங்க நீங்க!"

"அப்படி கூட இல்லே.. எதனாச்சும் ஞாபகம் இருந்தாத்தானே அதைப் பத்தி நெனைச்சுப் பாக்கறதுக்கே! அதுவும் பயமுறுத்தமாதிரி, நடுங்கற மாதிரி, நினைவுலே தங்கற மாதிரி எதுவும் இருக்காது; வந்ததா, போனதான்னு வந்த சடுதிலே மறந்து போயிடும்!" என்றாள் கிரிஜா.

"நீ கொடுத்து வச்சவடி!" என்று சிரித்தாள் தமயந்தி. "நாள் பூரா எதையானும் போட்டு உழப்பிண்டே இருப்பேன், நான்! அந்த உழப்பல் தான் ராத்திரி கனவா வர்றதோன்னு சந்தேகம் கூட எனக்கு..!"

"கையிலே வெண்ணையை வைச்சிண்டு நெய்க்கு யாராவது அலைவாங்களோ?" என்றான் பிரகாஷ்.. "கனவுலே எந்த டவுட்டானாலும் கிளியர் பண்றத்துக்கு.."

"நான் இருக்கறச்சேன்னு என்னைத் தானேச் சொல்றீங்க, பிரகாஷ்?.. தமா தானே?.. ஒண்ணும் சொல்லமாட்டா.. எல்லாத்தையும் அவளுக்குள்ளேயே போட்டு அமுக்கிக்கணும் அவளுக்கு!.. அது கூட பாதிக்காரணம், இவள் கனவுகளுக்கு!" என்றான் குமார்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க.. அவர் இப்படி ஏதாச்சும் சொல்வார்! பச்சப் பசேர்ன்னு தோட்டம், கொல்லுன்னு மலர்ச்சியா பூத்திருக்கற பூக்கூட்டம், 'சோ'ன்னு கொட்ற அருவி, நீர்வீழ்ச்சின்னு இப்படி ஏதாவது தான் என் கனவிலே வரும்! சில நேரங்கள்லே கொஞ்சம் கொழப்பமான கனவுகளும் உண்டு. எங்கப்பா எப்போவானும், எங்கம்மா அடிக்கடி என் கனவிலே வருவாங்க.." என்றாள் தமா.

"சரியான அம்மா கோண்டு இவள்!" என்று சிரித்தான் குமார்.

இதற்குள் எல்லோரும் காப்பி குடித்து முடித்திருந்தார்கள். செல்போன் எடுத்து அழுத்தி மணி பார்த்த குமார், "ஒண்ணு செய்யலாமா?" என்றான். "பக்கத்லேயே ஒரு பெரிய கார்டன்! ரெஸ்ட் ரூம் ஃபெஸிலிட்டியோட அருமையா இருக்கு..
ஸே.. ஒரு மணி நேரம் அங்கே காலாற நடந்து பேசிண்டே பொழுதைப் போக்கிட்டுக் கிளம்பிடலாமா?.." என்றான்.

"ஓ!" என்று ஒரு பெரிய 'ஓ'வை மணிவண்ணன் போட, அவன் பக்கம் திரும்பி கலகலவென்று சிரித்தான் பிரகாஷ்..

"இப்படித்தாங்க, இவன்! நானும் இருக்கேன், மறந்திடாதீங்க'ன்னு அப்பப்ப இவன் இப்படித்தாங்க காட்டிப்பான்!" என்றாள் தமா.

மணிவண்ணன் பக்கத்தில் சென்று, லேசாக அவனை அணைத்து அலாக்காகத் தூக்கிக் கொண்டான், பிரகாஷ்.. "நீங்களே பாருங்கள்! மணிவண்ணன் பெரிய ஆளா வருவான், பாருங்கள்!" என்று வாழ்த்தினான்.

அதற்குள் பிரகாஷின் காதுகளில் அவன் ஏதோ கிசுகிசுக்க, "ஒண்ணும் புரியலைடா, சரியாச் சொல்லு!" என்றான் பிரகாஷ்.

மறுபடியும் அவன் திருத்தமாக அவன் காதுகளில் சொன்னது கேட்டு, பலமாகச் சிரித்தான் பிரகாஷ். "குமார்! உங்க பய என்ன சொன்னான், தெரியுமா!"

எல்லாரும் 'என்ன' என்று கேட்கிற மாதிரி பிரகாஷ் பக்கம் திரும்ப, "இந்த வாண்டுப் பயலுக்கும் அப்பப்ப கனவு வருமாம்! அதைத் தான் சொன்னான்!" என்று குலுங்கிக் குலுங்கிச் சிரித்தபடி சொன்னான் பிரகாஷ்.

"ஏண்டா, மானத்தை வாங்கறே! அம்மா, அப்பா, பையன்.. ஒரே கனவுக் குடும்பமாலே இருக்கு'ன்னு நெனைச்சிடப்போறாங்க!" என்றாள் தமயந்தி.

"அப்படி நெனைச்சாலும் இங்கே வேறே யாரும் வேத்து மனுஷா இல்லையே, நாங்க தானே இருக்கோம்.." என்று கிரிஜா சொன்ன போது, "அதுக்குள்ளே கோபம் பொத்துண்டு வர்றதைப் பார்!" என்று நெருக்கத்தில் வந்து அவள் கைகளைப் பற்றிக் கொண்டாள் தமா.. "'கிருஷ்ணா.. கிருஷ்ணா.'ன்னு வாய் ஓயாம சொல்லிண்டிருப்பா எங்க அம்மா! அப்படி ஒரு பிரியம் எங்கம்மாவுக்கு உன் அப்பா மேலே.. அந்தப் பிரியம் விட்டுப் போயிடுமா?.. அடுத்த தலைமுறைக்கும் அந்த அந்நோன்யம் கூட வந்திண்டு தான் இருக்கு!" என்றாள்.

"நீங்க சொல்றீங்க.. தேசம் விட்டுத் தேசம் வந்து ஒரு அன்னிய தேசத்திலே இருக்கறதாலே அந்த நேசம் பட்டுப் போகமா இருக்கோ, என்னவோ! உண்மைலே சொல்லணும்னா சொந்த பந்தங்களோட நெருக்கம்லாம் விட்டுப் போய் எவ்வளவோ நாளாச்சு.. சும்மா, வீட்லே ஒரு விசேஷம்னா, இல்லே குடும்பக் கல்யாணம் அது இதுன்னு ஏதாவது ஃபங்ஷன்னா ஒருத்தரை ஒருத்தர் பார்த்து குசலம் விசாரிச்சுக்கறதோட சரி.. அதுவும், வர்ற தலைமுறைங்க.. கேட்கவே வேண்டாம்.. ரொம்ப சுத்தம்!" என்றான் பிரகாஷ்.

"உங்க அண்ணா பேரு அர்ஜூன் தானே? ரொம்ப நாளைக்கு முன்னாடி இந்தியா போன போது பாத்தது.. அப்போ கல்யாணமான புதுசுன்னு நெனைக்கிறேன்.." என்றான், குமார்.


"ஆமா. அர்ஜூன் தான். அந்தப் பெயர் வைச்ச காரணத்தை எங்கப்பா கிட்டே கேக்கணுமே! ரொம்ப திரிலிங்கா இருக்கும்.. நெறையச் சொல்வார்!"


"எனக்கும் சொல்லியிருக்கார்.. அந்த ஞாபகத்திலே தான் இப்போ கூட கரெட்டா 'அர்ஜூன்'னு சொன்னேன்.." என்றான் குமார்.


"சுபாக்கு என்ன ஆறு மாசமா?.." என்ற தமாவுக்கு, "இல்லே.. இந்த பங்குனிக்கு ஏழாயிடுத்து.. அவாள்லாம் அந்த டெல்லி சதஸ் முடிஞ்சு ஊருக்குத் திரும்பறத்துக்கும், மன்னி டெலிவரிக்கும் சரியா இருக்கும்னு நெனைக்கிறேன்.."

"ஓ, அந்த சதஸ்! 'ஆத்மாவைத் தேடி..' இல்லையா?.. தமா அவா அப்பாவோட பேசிட்டு இந்த தலைப்பை ஒரு நாள் சொன்னா.. மறக்காம ஆழமா நெஞ்சிலே பதிஞ்சிடுத்து.. கிரிஜாவும் சரி, தமாவும் சரி-- ரெண்டு பேர் பெற்றோர்களுக்கும் இதிலே கலந்துக்க கெடைச்ச பாக்யம் சாதாரணமானது இல்லே.. எந்த ஜன்மத்திலேயோ பண்ணின புண்ணியம் தான் இதுக்கெல்லாம் காரணம்னு நா நெனைக்கிறேன்.."

பிரகாஷ் மிகுந்த வியப்புடன் குமாரைப் பார்த்தான். தன்னுடைய ஆச்சரியத்தை மறைக்காமல் அவனால் இருக்க முடியவில்லை.. "உங்களுக்கு இதிலெல்லாம் ஆர்வம் உண்டா, குமார்?.."

குமாரிடமிருந்து சட்டென்று பதில் வந்தது. "என்ன அப்படிக் கேட்டிட்டீங்க, பிரகாஷ்! ரொம்பவே ஆர்வம் உண்டு.. அதானாலே தான் கனவுகளைப் பத்தியும் தெரிஞ்சிக்கணும்னு ஆர்வம் வந்தது.. நான் தெரிஞ்சிண்டைதையெல்லாம் உங்களுக்கும் சொன்னேன்னா, இதெல்லாம் பத்தி இன்னும் தெரிஞ்சிக்கணுங்கற ஆர்வம் நிச்சயம் உங்களுக்கும் வரும்!" என்றான்.


(தேடல் தொடரும்)
Tuesday, April 26, 2011

ஆத்மாவைத் தேடி …. 8 மூன்றாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டம் நோக்கி ....


8. ஊகங்களும் உண்மைகளும்


"கிருஷ்ணமூர்த்தி சார், அவரது கனவு அனுபவங்களை விவரித்த விதம் என்னை வெகுவாகக் கவர்ந்து விட்டது.." என்று சொல்ல ஆரம்பித்தார் பூங்குழலி. "அவர் ஆரம்பித்து வைத்ததைத் தொடர்கிறேன்.. முண்டக உபநிஷதம் படம் பிடித்துக் காட்டும் அந்தப் பறவைகள், என் மனத்திலும் அழியாச் சித்திரமாய் படிந்த ஒன்று. உபநிஷத்துக்களைப் பற்றி எங்கே உரையாற்றினாலும், அந்தப் பறவைகளைப் பற்றிச் சொல்லாமல் இருக்க மாட்டேன். அந்த அளவிற்கு அந்தப் பறவைகள் என் உள்ளத்தைக் கவர்ந்தவை. கவர்ந்தவை என்பதைத் தாண்டி அந்தப் பறவைகளுக்கு ஆன்மிகக் கல்வியில் ஒரு நிரந்தர இடம் உண்டு" என்று பூங்குழலி சொல்லிக் கொண்டு வருகையிலேயே கேட்பவர்களுக்கு அவரது பேச்சில் ஒரு சுவாரஸ்யம் ஏற்பட்டு விட்டது.

"எதனால் அப்படி அவை பெருமை பெற்றன என்று நீங்கள் கேட்கலாம். அந்த இரண்டு பறவைகளும் உண்மையையும், உண்மையற்ற ஒன்றையும் பிரித்துக் காட்டுவதற்காக எடுத்தாளப்பட்டவை. உண்மையான ஆன்மா நம்மில் கொலுவீற்றிருக்கையில், உண்மையல்லாத இந்த 'நானை' நானாக நாம் நினைத்துக் கொண்டிருப்பதைச் சொல்ல வந்த ஜோடிப் பறவைகள் அவை. மரத்துப் பழத்தைத் தின்னாத ஒரு பறவையையும், பழத்தை ருசித்துத் தின்னும் ஒரு பறவையையும் நமக்குக் காட்டி, வெகு அழகாக நம்முள் உறைந்திருக்கும் ஆன்மாவையும், இன்ப துன்பங்களை அனுபவிக்கிற 'நானை' யும், வேறுபடுத்திக் காட்டுகிறார் முனிவர்.

"மரம், அதன் மேல்-கீழ்க் கிளைகளில் உட்கார்ந்திருக்கிற இரு பறவைகள், அதில் ஒன்று பழத்தை கொத்தி உண்பதாகவும், இன்னொன்று அப்படிச் செய்யாமல் 'தேமே'னென்று இருக்கிற மாதிரியும் ஒரு சித்திரத்தை வரைந்து காட்டும் பொழுது அந்தச் சித்திரத்தில் மயங்கி நம் கவனம் முழுதும் அதில் தோய்ந்து போய்விடுகிறது.. உண்மைதான். அதைத் தாண்டி, அந்த சித்திரம் சொல்லும் சேதி ஒன்று இருக்கிறதல்லவா, அந்தச் சேதிக்குப் போகவேண்டும். சித்திரத்திலேயே தேங்கிவிட்டோமென்றால், இரண்டு அழகுப் பறவைகள் தாம் கண்களுக்குத் தெரியுமே தவிர, அந்தப் பறவைகளைக் காட்டி சொன்ன சேதியை உணரமாட்டோம்.

"அந்தப் பறவைகள் சொல்ல வந்த செய்தி நினைவில் படிந்து விட்டால், பறவைகள் கண்களுக்குத் தெரியாது.. பறவைகள் நினைவிலிருந்து மறைந்து சொன்ன செய்தி முக்கியமாகிப் போகும். பறவைகள் சிந்தையில் மறைந்து விட்டதென்றால், அவற்றிற்கு பதில் ஒன்று ஆத்மா, இன்னொன்று ஜீவன் என்று நினைவில் படிந்து விடும். அப்படி நினைவில் படிந்து போனதால் தான், கிருஷ்ணமூர்த்தி சாருக்குக் கூட, தனக்கு ஏற்பட்ட அந்தக் கனவிலும் கூட, 'ஒரு புறாதான் ஆத்மா, இன்னொண்ணு ஜீவனோ' என்கிற நினைப்பு அவர் மனசிலே ஓடறது. அவர் நினைவிலே பதிஞ்ச இந்த ஆத்மா, ஜீவன் நினைவு கனவிலேயும் பளிச்சிடறது...

"அப்போ, ரொம்ப சின்னஞ்சிறு வயசிலே மாலு சொல்லி நான் கேட்ட சிபி சக்ரவர்த்தி கதை புறாகூட என் கனவிலே வந்ததே?.." என்று தயக்கத்துடன் இழுத்தார் கிருஷ்ணமூர்த்தி.

"அதுதான் விசேஷம். முண்டக உபநிஷத்து பறவைகள் கதையை நீங்கள் கேட்டதின் அடிப்படையில் உங்கள் மனத்தில் பதிந்த பறவைகள், கனவில் புறாக்களாகி விட்டன. அதற்குக் காரணம் பால்ய வயதில் நீங்கள் கேட்ட அந்தப் புறாக்கதை. உண்மையில் அந்த வயதில் புறா என்றால் எப்படியிருக்கும் என்று கூட உங்களுக்குத் தெரியாதிருக்கலாம். அந்தப் புறாவிற்காக அந்தச் சிறுவயதில் நீங்கள் பரிதாபப்பட்டதின் வீச்சு, மனத்தில் ஆழமாகப் பதிந்து பறவை என்றாலே புறாவைப் பற்றிய நினைவுகளைக் கோர்க்கும் தன்மயச் செயல்பாடாக மனத்தில் பதிந்து விட்டது.. அதனால் தான் முண்டக உபநிஷத்துக் கதைப் பறவையைப் பற்றிக் கேட்டு அது மனத்தில் பதிந்து அன்றைய இரவே உங்களிடத்து கனவாக மீளும் பொழுது, அதற்கு முன்னால் கேட்டு பரிதாபப்பட்ட சிபி சக்ரவர்த்தி கதையின் புறாவை நினைவுக்கு இழுத்து வந்து இதனுடன் கோர்த்து கதையின் நீட்சியாக இது அமைந்து விட்டது. பறவைகள் என்று நான் அன்று காலை எனது உரையில் குறிப்பிட்டதும் உங்கள் கனவில் புறாக்களாகி விட்டன."

பிரமித்து நின்றிருந்த கிருஷ்ணமூர்த்தி தன்னை அறியாமல் கைதட்டினார். மிக்க ரசனையுடன், மிக மென்மையாகத் தான் அவர் கைதட்டினார் என்றாலும் அமைதியாக இருந்த அந்த அவையில் வெகு தெளிவாக அந்த அவரது கைத்தட்டல் எல்லோருக்கும் கேட்டது.

"பூங்குழலி அம்மா! நீங்கள் சொன்னதை வெகுவாக நான் ரசித்தேன்" என்றார் கிருஷ்ணமூர்த்தி. "நான் சொன்ன விஷயங்களை எவ்வளவு தீர்க்கமாக நீங்கள் கவனித்திருந்தால், இந்தளவுக்கு என் வாழ்க்கையில் முன்னால் நடந்தவை, பின்னால் தெரிந்தவை எல்லாவற்றையும் முன்னே பின்னே வைத்துக் கோர்த்து கோர்வையாக இது இதனால் என்று தெள்ளந்தெளிவாகச் சொல்ல முடியும் என்று ஆச்சரியப்பட்டு நான் நிற்கிறேன்.. இத்தனைக்கும் நடுவே பின்னாடி நடந்த சில நிகழ்வுகளுக்கு ஏதாவது குறிப்பிட்டக் காரணம் இருக்கமுடியுமா என்று தெரியவில்லை.." என்றார்.

"சொல்லுங்கள், சார்! எந்த நிகழ்வுகள்?.."

"அதான்! அன்றைய இரவு, விழிப்பு வந்ததும் என் அறைக்கு வெளி மரக்கிளைகளில் சிறகடித்துப் பறந்த புறாக்களை நான் பார்த்தது... அப்புறம் அடுத்தாப்பலே அரியலூருக்கு நான் போனில் பேசினபோது, அங்கும் புறாக்கள் வந்து போவதாக மாலு எனக்குச் சொன்னது-- இதெல்லாம் தான்!"

"எஸ்.. உண்மையில் என்ன நடந்திருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. லேசான அரைத்தூக்கக் கலக்கத்தில், விழிப்பும் தூக்கமும் கலந்த ஒரு நிலையில், மஹாதேவ் நிவாஸ் மரக்கிளைகளில் புறாக்களை நீங்கள் பார்த்து விட்டீர்கள். நிஜத்தில் புறாக்களைப் பார்த்த அந்த நொடித்தான், அன்றைய உங்கள் கனவின் ஆரம்ப நொடி.. அதன் தொடர்ச்சிதான் இந்த முழுக்கனவின் வலைப்பின்னல்"

"அப்படியா?" என்று திகைத்து அதிசயத்தார் கிருஷ்ணமுர்த்தி. "எப்படி இவ்வளவு நிச்சயமாக உங்களால் அதைச் சொல்ல் முடிகிறது?"

"நிச்சயமாக என்று சொல்லமுடியாது.. ஒரு ஊகத்தின் அடிப்படையில் தான். ஆழ்ந்த தூக்க நிலையே நம் எல்லோருக்கும் ஒன்றிரண்டு மணிகளுக்கொரு முறை மாறிக் கொண்டே இருக்கிறது.. நினைவும் தூக்கமும் கலந்த ஒரு நிலையில், நிஜமாக நீங்கள் புறாக்களைப் பார்த்தது தான், இந்தக் கனவை ஆரம்பித்து வைத்திருக்க வேண்டும் என்று ஒரு உத்தேசத்தில் தான் சொன்னேன்."

"ஓ! நீங்கள் உத்தேசத்தில் சொல்வது கூட அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நம்பும் படியாக இருக்கிறதே, அது எப்படி?" என்று சிரித்துக் கொண்டே கேட்டார் கிருஷ்ணமூர்த்தி.

அதைக் கேட்டு பூங்குழலியும் சிரித்து விட்டார். "பேச எடுத்துக் கொள்ளும் விஷயங்களில் கொள்ளும் ஆழ்ந்த ஈடுபாடு அதற்குக் காரணமாக இருக்கலாம்.. நீங்கள் சொல்வதை எனக்கான பாராட்டாக நீங்கள் சொன்னதாக நான் எடுத்துக் கொள்ளலாமா, சார்?" என்று பவ்யமாகக் கேட்டார் பூங்குழலி.

"நிச்சயமாக.." என்று கிருஷ்ணமூர்த்தி சொன்ன பொழுதே, மாலு எழுந்திருந்து, "பூங்குழலி! நீங்கள் பேசும் பொழுது அடிக்கடி நாங்கள் உணர்வது அது!" என்றார்.

"லேசான விழிப்பு போன்ற நினைவுகளுடனான 'ரெம்' நிலையில் தான் கனவு காணும் சாத்தியப்பாடு இருப்பதால், நீங்கள் யூகமாகச் சொல்வது உண்மையாகக் கூட இருக்கும்.." என்றார் சிவராமன்.

அந்த சமயத்தில் அவையே திரும்பி சிவராமனைப் பார்த்தது.. "சிவராமன் சொல்வது சாத்தியமானதே.." என்றார் உயிரியல் அறிஞர் உலகநாதன்.

"என் யூகமும் அந்த அடிப்படையிலேயே அமைந்தது" என்றார் பூங்குழலி சொன்ன பொழுது சிவராமன் புன்னகைத்தார்.


(தேடல் தொடரும்)


Sunday, April 24, 2011

ஆத்மாவைத் தேடி …. 7 மூன்றாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


7. கனவுன்னா அவ்வளவு .....


"சரிப்பா... சரிப்பா.. " என்று சொல்லி விட்டு செல்லை ஆஃப் செய்தான் மணிவண்ணன். "அம்மா! கொஞ்ச தூரத்லே ஸ்டார்பக் ஸ்டோர் வர்றதாம். அங்கே காரை பார்க் பண்ணச் சொன்னார், அப்பா" என்றான்.

"ஓ! காப்பி ஞாபகம் வந்துடுத்தா, அவருக்கு! அவங்கள்லாம் எங்கே இருக்காங்களாம்?"

"ஒரு மைல் பின்னாடி வர்றதா சொன்னார்ம்மா..."

"ஓ.கே. ஓ.கே.." என்று தமயந்தி சம்மதம் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே 54-வது எக்ஸிட்டில் ஸ்டார்பக் இருப்பதைத் தெரிவிக்கும் அறிவிப்புப் பலகையைப் பார்த்து விட்டாள் தமயந்தி.. அடுத்த அரை நொடியில் 54-ம் வந்துவிட எக்ஸிட் பாதையில் வண்டியைச் செலுத்தினாள்.

"மணி கூட நாலாயிடுத்தே.. காப்பி நேரம் தான்.." என்று கிரிஜா சொல்கையிலேயே ரிஷியிடமிருந்து சிணுகல் சப்தம் கேட்டது. "நல்லவேளை... சரியான நேரத்லே குழந்தையும் முழிச்சிண்டான்.." என்று பார்க்கிங்கில் இடம் தேடினாள் தமயந்தி.

அதற்குள் பின்னாலேயே பிரகாஷ் ஓட்டிக் கொண்டு வந்த வண்டி வந்துவிட்டது.

"ரிஷிக்குத் தூக்கம்லாம் போயாச்சா?.... உள்ளே போகலாமா, கிரிஜா?"

"போகலாம்க்கா.. அதோ அவா கூட காரைப் பார்க் பண்ணிட்டு இறங்கிட்டா போலருக்கு."

காரைப் பார்க் பண்ணிவிட்டு இறங்கிய தமயந்தி, காரைச் சுற்றிக் கொண்டு பின்னால் வந்து கதவு திறந்து ரிஷியைக் கொஞ்சினாள். இன்னொரு பக்கம் இறங்கிய கிரிஜா, வலப்பக்கம் வந்து ரிஷியின் ஸீட் பெல்ட்டை அவிழ்க்கையில் உதவினாள். பெல்ட் விலகியதும் ரிஷிக்குக் கொண்டாட்டம்! பகபகவென்று சிரித்த குழந்தையைத் தூக்கிக் கொண்டாள் தமா. அதற்குள் மணிவண்ணன் ஓடிப்போய் அவன் அப்பாவுடன் சேர்ந்து கொண்டான்.

தமா கிரிஜாவுடன் நெருக்கத்தில் வந்ததும், "என்ன, காப்பி ஞாபகமே இல்லையா?.. நீயே கூப்பிடுவேன்னு பொறுத்துப் பார்த்தேன். கூப்பிடற வழியைக் காணோம்.. அதான் ஜிபிஎஸ்ஸைக் கேட்டு அது சொல்லி உன்னைக் கூப்பிட்டுச் சொன்னேன்" என்றான் குமார்.

கலகலவென்று சிரித்தாள் தமயந்தி ."பயங்கர பேச்சுச் சுவாரஸ்யத்திலே இருந்தோமா, ஸ்டார்பக்கும் கண்ணிலேயே படலையா, மறந்தே போச்சு.."

"பயங்கர பேச்சு சுவாரஸ்யமா.. என்ன மணியை வச்சிண்டு ஆவி கீவின்னு பேசிண்டு வந்தீங்களா?.." என்று கிரிஜாவைப் பார்த்து அப்பாவியாய் கேட்டான் பிரகாஷ்.

"ஓ.." என்று மீண்டும் சிரித்தாள் தமா. "நீங்க வேறே.. நானே பயங்கர பயந்தாங்கொள்ளிங்க.. இந்த பேய்-கீய் சமாச்சாரமெல்லாம் பகல்லே பேசினாலும் ராத்திரி கனவா வந்திடும்.."

"சரியாப் போச்சு போ! குமார்தான் கனவுலக மன்னனாய் இருப்பார்னு பார்த்தால், அவருக்கு சரிசமனா நீங்களும் கனவுலக மன்னியாய் இருப்பீர்கள் போலிருக்கே!"

"நானாவது அப்போப்போ கனவு காண்பேன்; அவரைக் கேளுங்கள், 'தூங்கறதே கனவு காணத்தான்' என்பார் பாருங்கள்!"

பிரகாஷ் சிரித்த சிரிப்பில் கிரிஜாவும் இப்பொழுது கலந்து கொண்டாள்.

"கனவு காண்றத்துக்கெல்லாம் கொடுத்து வைச்சிருக்கணும்.. என்னைக் கேட்டால், கனவு காணாத தூக்கமும் ஒரு தூக்கமான்னு கேட்பேன்" என்றான் குமார்.

"அவர் சொல்றதும் சரிதாங்க.. வழிபூரா விதவிதமா தான் கண்ட எத்தனை கனவுகளைப் பத்திச் சொன்னார்ங்கறீங்க.. அவர் சொல்லச் சொல்ல, இன்னிக்கு ராத்திரியானும் படுத்தவுடன் ஒரு கனவைக் காணணும்னு எனக்கே பொறாமையாப் போச்சு!.." என்றான் பிரகாஷ்.

"அது எப்படீங்க?.. கனவு காண்றதெல்லாம் நம்ம கைய்லயா இருக்கு?" என்ற தமாவுக்கு,

"இருங்க.. குமாரைக் கேட்டுச் சொல்றேன்.." என்று பிரகாஷ் குமார் பக்கம் திரும்ப, அதற்குள் தள்ளும் கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டு குமார் உள்ளே போக அவனைத் தொடர்ந்து காபி பாருக்குள் புன்னகைக்கும் முகத்துடன் எல்லோரும் நுழைந்தனர்.

பாரின் உள்ளே நுழைந்ததும் ரிஷியை வாங்கிக்கொண்டாள் கிரிஜா. கண்ணாடி தடுப்புக்குப் பக்கத்தில் வெளிப்பக்கம் போகிற வருகிறவர்களைப் பார்த்துக் கொண்டே உட்காருகிற மாதிரி வளைந்து வளைந்து நிறைய இருக்கைகள் இருந்தன. ரிஷிக்குக் கூட குழந்தைகள் உட்காருகிற மாதிரியான உயர்ந்த இருக்கை ஒன்று முன்சட்டம் போட்டபடி இருந்தது. அதில் ரிஷியை அமர்த்தி முன்னாடி விழுந்து விடாமலிருக்க சட்டமிட்டு, கையில் ஒரு லாலிபாப் கொடுத்ததும் குழந்தை சிரித்தபடியே விளையாட ஆரம்பித்து விட்டான்!

"நீங்க இங்க இருங்க.. நாங்க ரெண்டு பேரும் போய் காப்பி வாங்கி வந்திடறோம்" என்று எழுந்தான் குமார். "ஏங்க.. அப்படியே கொறிக்கறத்துக்கும் ஏதாவது ..." என்றாள் தமயந்தி. பிரகாஷ், குமார் கூடப்போனான். அம்மாவிடம் பர்மிஷன் வாங்கிக் கொண்டு அவர்களைத் தொடர்தான் மணிவண்ணன்.

"அதோ, அங்கே பார்!" என்று கண்ணாடிக்கு வெளியே விரல் நீட்டிக் காட்டினாள், தமயந்தி.

"எங்கேடீ.." என்று அவள் காட்டிய திசையில் பார்த்தாள் கிரிஜா.. "யார்? அந்தக் கறுப்பு நிறக் காருக்குப் பின்னாடியா?" என்றாள் கிரிஜா.

"ஆமா. கார் டிக்கியைத் திறந்திண்டு நிக்கறானில்லையா, அந்த ஆளுக்கு பக்கத்திலே ரெண்டு பேர்.."

"ஆமாம், அவாளுக்கென்ன?.. நம்ம தேசத்துக்காரங்கன்னு மூஞ்சிலே, நடை உடை பாவனை எல்லாத்திலேயும் எழுதி ஒட்டிருக்கு.. வேறே என்ன?"

"வேறே என்னமானும் தெரியறதா?.. இன்னும் சொல்லப்பாரு.."

"அநேகமா வடக்கத்திக்காரங்களா இருக்கும்.. அந்தம்மா புடவை கட்டிண்டிருக்கற பாங்கைப் பாத்து சொல்றேன்.."

"ஓ.கே.. இன்னும் ஏதாவது?.."

"நான் இத்தனை சொல்லிட்டேனே?.. நீ ஒண்ணு சொல்லேன்."

"நான் உன்னைக் கேட்டா, நீ என்னைக் கேக்கறியா?'

"பின்னே?.. கேக்கறது எவ்வளவு ஈஸி!.. மூளையைக் கசக்கிண்டு நீயும் தான் ஒண்ணு ரெண்டு சொல்லேன்.."

"ம்.... நா ஒண்ணு நெனைச்சிண்டு கேக்கறேன். அதை நீயும் சொல்றேயான்னு பாக்கறத்துக்குத் தான் உன்னைக் கேட்டா.."

'ப்பூ' என்று உதடைப் பிதுக்கினாள் கிரிஜா. "அந்தாள் அந்த இளம் பெண்ணோட புருஷன் மாதிரி தெரியறது.." என்று சொன்னதோடு நிறுத்திக் கொண்டாள்.

"எஸ்.. அதுக்கு மேலே என்னலாம் தெரியறது?" என்று ஆவலோடு தமயந்தி கிரிஜாவைப் பார்த்தாள்.

"தெரியலையேடி..."

"ச்சை.. இது கூடத் தெரியலையா?.. அந்த இளம் பெண்ணோட அம்மா மாதிரி அவ பக்கத்திலே நிக்கற அந்த பெரியம்மா தெரியலையா?.. அவங்க ரெண்டு பேரும் அம்மா--பொண்ணுன்னு அச்சடிச்ச மாதிரி அவங்க முகத்திலே எழுதி ஒட்டியிருக்கு, பாரு! ஜெராக்ஸ் எடுத்த மாதிரி அப்படி ஒரு நகல்" என்று படபடத்தாள் தமயந்தி.

"அதுக்கென்ன?.. எனக்கும் தான் தெரிஞ்சது.."

"தெரிஞ்சதுன்னா, சொல்லித் தொலைக்க வேண்டியது தானே?.."

"வாரே..வா... அதை நீ உன் வாயாலே சொல்லணும்லே.. அதுக்குத் தானே இப்படி இழுத்தடிச்சேன்..."

"சரியான இதுடி நீ!"

"இப்போ தெரிஞ்சதா?.. நீ அதையே தான் நெனைச்சிண்டிருக்கேன்னு.."

"எதை?.."

"அந்த சுகுணா மாதிரியே நாம் இருக்கோம்னா, அந்த சுகுணா யார்னு தானே அப்போலேந்து நெனைச்சிண்டிருக்கே?"

"கரெக்ட்.. நீ தான் சொல்லேன்.. அந்த சுகுணா யாராடி இருக்கும்?.."

"யாரா?.. மாதுரியோட அம்மா தானேடி சுகுணா.."

"அப்படித்தான் மாதுரி சொன்னா.. ஆனா அவங்க சொல்றதைப் பாத்தா, அவங்க அம்மா மாதிரி அவங்க இல்லேன்னு தெரியறதே?.."

"அதுமட்டுமில்லே.. அவங்க உங்கம்மா மாதிரி இருக்காங்க. அது தான் விஷயம்.."

"தேர் தி பாயிண்ட் இஸ்.. அவங்க அம்மா மாதிரி நான்.. எங்கம்மா மாதிரி அவங்க.. ஆக..." காற்றில் விரல்கள் அசைத்துக் கோலம் போட்டாள் தமயந்தி.

"என்ன ஆக?.."

"இன்னிக்கு ராத்திரி எங்கம்மாவோட பேசிடறேன்.. இல்லேன்னா எனக்குத் தலையே வெடிச்சிடும்.."

"நாஷ்வெல் போய் பேசிடலாண்டி.." என்று கிரிஜா சொன்ன பொழுது, பிரகாஷ்-குமார் டிரேயில் அலுங்காமல் சுடச்சுட காபி அட்டைக் குவளைகளைச் சுமந்து வர, மணிவண்ணன் ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகளுடன் வந்தான்.

டேபிளில் ட்ரேயை வைத்தபடியே, "எவ்வரிதிங்.. காட்ஸ் கிஃப்ட்... கனவுன்னா அவ்வளவு ஒண்டர்புல்லாக்கும்.. எப்படி கனவு வர்றதுன்னுங்கறதை இப்போ சொல்றேன்.." என்று பிரகாஷைப் பார்த்துச் சொன்னான் குமார்.


(தேடல் தொடரும்)

Wednesday, April 20, 2011

ஆத்மாவைத் தேடி .... 6 மூன்றாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி ..


6. புறா, புறா, ஒரே புறா மயம்!


டுத்ததான அந்த அமர்வு ஆரம்பிக்கும் பொழுதே களை கட்டிவிட்டது.

தேவதேவன் தன் குழுவினருடன் வந்து மேடையேறியதும், கிருஷ்ண முர்த்தியும் எழுந்திருந்து முன்னால் வந்து மேடையேறினார். அவரைப் பார்த்து முறுவலித்த தேவதேவன், அவரைத் தன் பக்கத்தில் அமர செய்கை காட்டி விட்டு மைக் பற்றினார். "நேற்று கிருஷ்ணமூர்த்தி சாருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது தான் இப்படிச் செய்யலாமேன்னு இந்த எண்ணம் உதித்தது. கனவுகளைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிற உபநிஷத்துச் செய்திகளையும், அந்தக் கனவுகள் பற்றிய பலரின் அனுபவங்களையும் தொடர்புபடுத்திப் பார்த்தால் யதார்த்த உணர்வுடன் பலபேருடைய அனுபவம் சார்ந்து பலவற்றை இன்னும் சிறப்பாகப் புரிந்து கொள்ளலாமோ என்று தோன்றியது. அந்த வகையில் கிருஷ்ணமூர்த்தி சார் தனது அனுபவங்களைக் கூறி இன்றையத் தொடரைத் தொடங்கி வைப்பார்" என்றார்..

சென்ற அமர்வுக்குப் பின்னால் வெளி நடையில் ஒரு குழுவினருடன் கிருஷ்ணமூர்த்தி தனக்கு ஏற்பட்ட கனவு அனுபவங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.. புராணக் கதைகளில் வரும் கனவுகளைப் பற்றியும் சொன்னார். அவர் அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கையில் அந்த இடத்தில் இருந்த தேவதேவன் அவர் சொன்னவற்றை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தவர், "நீங்கள் சொல்லும் பல செய்திகள் கனவு பற்றி நாம் நடத்தும் விவாதத்தை மேற்கொண்டு எடுத்துச் செல்ல வெகுவாகத் துணையிருக்கும். அடுத்த அமர்வில் நாம் இது பற்றி விவாதிக்கையில் தங்கள் அனுபவங்களை அவையில் சொல்ல வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அந்த சமயத்தில் "ஆஹா.. பேஷாய்ச் சொல்கிறேன்.." என்று கிருஷ்ணமூர்த்தியும் இதற்கு ஒப்புக் கொண்டிருந்தார்.

தேவதேவன் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே இந்த அடுத்ததான அமர்வில் கிருஷ்ணமூர்த்தி தனது கனவு அனுபவங்களைச் சுவைபடச் சொல்ல ஆரம்பித்தார். "நாம நனவுலே காண்ற பல காட்சிகளோடப் பதிவுகள் தான் கனவுகளா வர்றதோன்னு எனக்கு அடிக்கடித் தோணும்" என்றார் கிருஷ்ணமூர்த்தி. "கண்ணால் கண்ட காட்சிகள்னு மட்டும் இல்லே; நம்ம நினைப்புலே எதையானும் படிச்சோ இல்லை யார் சொல்லியோ தேங்கிப் போன ஒண்ணைப் பத்தின நினைவுகளைக் கூட இந்தக் கனவு காண்ற லிஸ்டிலே சேத்துக்கலாம்னு நெனைக்கிறேன். அப்படிப்பட்ட நாமே நேரடியா அனுபவப்பூர்வமா அனுபவப்படாத விஷயங்கள் கூட கனவு காண்ற நேரத்திலே, அப்போ கண்ணு முன்னாடி நடக்கற மாதிரி தத்ரூபமா நிஜத்தில் நடக்கறதைப் பாக்கற மாதிரியே கனவுகளா வரும்" என்று சொன்ன கிருஷ்ணமூர்த்தி லேசாகத் தன் தொண்டையைச் செருமிக் கொண்டு மேற்கொண்டு தொடர்ந்தார்:"ஆறு அல்லது ஏழு வயசு தான் அப்போ எனக்கிருக்கும். நாங்கள்லாம் அப்போ தஞ்சாவூர்லே இருந்தோம். ராணி வாய்க்கால் தெருன்னு நாங்க குடியிருந்த தெருக்குப் பேர். வீட்லே பெரிசு பெரிசா நாலு ஜன்னல் இருக்கும். ஒரு நா ராத்திரி பக்கவாட்டு சந்து பக்கம் இருந்த ஒருபெரிய ஜன்னலுக்கு பக்கத்லே, பாய் விரிச்சு, ஜன்னலுக்கு வெளியே தெரியற நிலாவைப் பாத்திண்டு படுத்திருக்கோம். அங்கே அந்த வயசிலே என்னோட மாமா பெண்--இங்கே இப்போ நம்மோட இருக்கற மாலு தான்-- சிபி சக்ரவர்த்தி கதையை எனக்கு அன்னைக்குச் சொன்னா. அப்போ தான் நான் சிபி சக்ரவர்த்தி கதையை முதல்முதலா கேக்கறேன். அந்தக் கதைலே ஒரு புறா வரும் இல்லையா?.. சிபி சக்ரவர்த்தி கூட இந்த புறாவைக் காப்பாத்தறத்துக்காக அதோட எடைக்கு எடை தன்னோட தொடை சதையை அரிந்து தராசுத் தட்டிலே வைப்பாரே.. உங்களுக்கெல்லாம் அந்தக் கதை தெரியும்னு நெனைக்கறேன்.. அந்தக் கதை தான்.

"ஒரு நா ராத்திரி. இந்த மஹாதேவ் நிவாஸூக்கு நான் வந்த புதுசில எனக்கு ஒதுக்கப்பட்ட அறைலே படுத்துத் தூங்கிண்டிருக்கறச்சே, ஆறு வயசிலே மாலு சொல்லி நான் கேட்ட அந்த சிபியோட கதை, ராணி வாய்க்கால் தெரு வீட்லே மாலு சொல்லி நான் கேட்ட களம், காட்சிகளோட தத்ரூபமா இங்கே கனவா வந்தது.. இப்போ அதை நெனைச்சுப் பாத்தாலும் பிரமிப்பா இருக்கு. கனவுன்னே நம்ப முடியாம மாலு கதை சொல்லிண்டிருக்கற மாதிரியும் நான் பாய்லே படுத்திண்டு 'உம்' கொட்டிண்டு கேட்டிண்டிருக்கற மாதிரியும், அந்த ஜன்னல், நிலா எல்லாம் கூட அப்படி அப்படியே.. ஆறு வயசிலே கேட்டது, பாத்தது எல்லாம் இந்த வயசிலே அதுவும் இப்போ நடக்கறாப் போல அப்படியே படக் காட்சி மாதிரி நினைவுலே வந்திட்டுப் போறதுன்னா, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலே.. இதுலே ஆச்சரியம் என்னன்னா அந்த வயசிலேந்து இந்த வயசு வரை இந்த இடைப்பட்ட காலத்லே ஒரு தடவை கூட இந்தக் கனவை நான் கண்டதில்லேங்கறது தான். ஆறு வயசிலே நடந்த ஒண்ணு இத்தனை வயசு கடந்து இப்போ கனவா காண்றத்துக்குத் தான் இத்தனை காலம் காத்திருந்ததோன்னு இதை நெனைச்சா எனக்கு பிரமிப்பாத் தான் இருக்கு..

"தொடர்ச்சியா வேறு சிலதையும் நெனைச்சுப் பாக்கறச்சே தான் இன்னும் இன்னும் ஆச்சரியம் கூடறது. என்னிக்கு அந்தக் கனவை இந்த மஹாதேவ் நிவாஸ்லே கண்டேனோ அன்னிக்குக் காலம்பறத் தான் நம்ம பேராசிரியர் பூங்குழலி முண்டக உபநிஷத்லே வர்ற, மரக்கிளைலே உட்கார்ந்திருக்கிற அந்த ரெண்டு புறாக்களைப் பத்தி சொன்னாங்க.. முண்டக உபநிஷத்துப் புறாக்களைப் பத்தியும் அப்பத்தான் நான் முதல் தடவையாக் கேக்கறேன். சிபி சக்ரவர்த்தி கதையைக் கனவுலே கண்டதுக்குத் தொடர்ச்சியா, பூங்குழலி அம்மா அன்னிக்கு இந்த சபைலே விவரிச்சதெல்லாம் கனவுலே வர்றது.. கனவுலே வர்றதுன்னா சாதாரணமா இல்லே; இங்கே அவங்க லெட்சர் கொடுப்பாங்களே, அந்த மாதிரியே அவங்க அந்த மேல் கீழ்க் கிளைப் புறாக்களைப் பத்திச் சொல்லிண்டிருக்கற மாதிரியே கனவு காட்சி காட்சியா மனசிலே ஓடறது.. அவங்க அதை சொல்லிண்டி ருகறச்சேயே, 'ஒரு புறா தான் ஆத்மா.. இன்னொரு புறா ஜீவனோ'ன்னு ஒரு நெனைப்பு வேறே என் மனசிலே பளிச்சின்னு தோண்றது.. பாக்கற நேரத்திலேயே அந்த மனசுக்கு ஒரு நினைப்பு வேறையா?..

"கண்ணை மூடிண்டு தானே தூங்கறோம். அதுனாலே கண் பாக்கலே. அப்போ நினைவுலே ஓடற கனவைப் பாக்கறது யாரு?.. ஒண்ணைப் பாக்கற சக்தி கண்ணுக்குத் தான் உண்டுன்னு நெனைச்சிண்டிருக்கோம். தூங்கறச்சே கனவுகளும் படம் பாக்கற மாதிரி மனசிலே படியறதினாலே கண்ணைத் தவிர பாக்கற உணர்வு வேறொண்ணுக்கும் இருக்குன்னு தோண்றது. அந்த வேறொண்ணு என்னங்கறனு தான் இப்போ கேள்வியா படறது..

கிருஷ்ணமூர்த்தி உணர்ச்சிவசப்பட்ட நிலையிலே தொடர்ந்தார்."கனவுலே அந்த நினைப்பு என் மனசிலே தோணின போது தான் 'டக்'குனு விழிப்பு வந்திடுத்து.. விழிப்பு வந்ததுமே, ஜன்னல் பக்கத்து வெளி மரக்கிளைலே ஒரு சலசலப்பை உணர்ந்தேன்.. எழுந்து பார்த்தா, கனவுலே பாத்த மாதிரியே நெஜமாலுமே ரெண்டு புறாக்களைப் பாக்கறேன்.. எந்தக் காலத்திலேயோ நடந்த நிகழ்ச்சியோட புறா நினைவு, அன்னிக்கு பூங்குழலி அம்மா சொல்லிக் கேட்ட முண்டக உபநிஷத்து புறா நினைவு, ஜன்னலுக்கு வெளிலே நிஜமாலுமே ரெண்டு புறா.. இதெல்லாம் எப்படி ஒண்ணாச் சேந்து கனவு--காட்சின்னு வந்தது எனக்கு இப்பவும் பிரமிப்பா இருக்கு.. எல்லாக் காட்சியையும் ஒண்ணு சேக்கற சரடா இரண்டு புறா இருக்கு.. இங்கே நிறைய சாஸ்திரங்களைப் படிச்சவா இருக்கா.. இதுக்கெல்லாம் விளக்கம் நிச்சயம் அவா படிச்ச படிப்பிலே இருக்கும்.. அவா தான் இன்னது இன்னதாலேன்னு எனக்குச் சொல்லணும்.."

அவையின் முன்வரிசையில் அமர்ந்திருந்த மாலு எழுந்திருந்து நிற்க, கிருஷ்ண மூர்த்தி தான் சொல்லிக் கொண்டு வருவதை நிறுத்தி அவளைப் பார்த்தார். "கிருஷ்ணா சொன்ன தோட இன்னொரு ஆச்சரியத்தையும் சேர்த்துக்கணும். அடுத்தாப்லே அரியலூர்லே இருந்த எங்கிட்டே இங்கேயிருந்து கிருஷ்ணா போன்லே பேசறச்சே, அதே மாதிரி புறாக் கூட்டம் ஒண்ணு அரியலூர்லே எங்க வீட்டு தாழ்வாரத்லே வந்து துவம்சம் பண்ணித்து.. 'ச்சூ..ச்சூ'ன்னு அதை நான் விரட்டற சப்தத்தை போன்லே கேட்டுட்டு, 'புறாக்களை விரட்டாதே.. அதெல்லாம் 'த்விஜப் பிறவிகள்'னு கிருஷ்ணா எங்கிட்டே சொன்னது ஞாபகத்துக்கு வர்றது.." என்று சொன்ன போது, சிவராமன் எழுத்திருந்து, "இது எல்லாத்தோடையும் இன்னொண்ணையும் சேர்த்துப் பாக்கணும்.. இது நடந்த சமயத்திலே நானும் அரியலூர்லே தான் இருந்தேன். புறா வளர்கற ஒருத்தர், குறிப்பிட்ட இந்த புறாக்களாம் வருஷத்துக்கொருமுறை டெல்லிலேந்து தான் அரியலூர் வர்றதா எனக்குச் சொன்னார்" என்றார்.

இந்த சமயத்தில் நிவேதிதாவிடம் பூங்குழலி ஏதோ சொன்ன பொழுது நிவேதிதாவின் முகம் மலர்ந்தது. அதைத் தொடர்ந்து பூங்குழலி இருக்கையிலிருந்து எழ, அவரை மேடைக்கு வந்து மைக்கில் பேசுமாறு அழைத்தார் தேவதேவன்.


(தேடல் தொடரும்)

Monday, April 11, 2011

ஆத்மாவைத் தேடி …. 5 மூன்றாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


5. மன மயக்கங்கள்

மயந்தி தான் வண்டியை செலுத்திக் கொண்டு வந்தாள். பக்கத்தில் ஸீட் பெல்ட் மாட்டிக் கொண்டு மணிவண்ணன். பின்னால் கிரிஜாவும், கார் ஸீட்டில் ரிஷியும். குன்றுப் பாதையில் இறங்கி மெயின் கேட்டைத் தாண்டுகையிலேயே ரிஷி தூங்கிவிட்டான். மணிவண்ணன் ஜிபிஎஸ்ஸில் போகும் வழித்தடத்தையும் அவ்வவ்போது மணி அடித்து எவ்வளவு தூரத்தில் எந்தப் பக்கம் திரும்ப வேண்டும் என்று சொல்லும் வழித்தட அறிவிப்புகளைக் கேட்டுக் கொண்டு சுற்றுப்புறங்களை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டு வந்தான். வழிப்பூரா உயர உயர வளர்ந்திருந்த அத்தனை மரத்து இலைகளும் பழுப்பைப் பூசிக் கொண்டிருந்தது, பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

தமயந்தியின் பக்கம் கொஞ்சம் முன்னால் வந்து சாய்ந்து, "தமா.." என்று அழைத்தாள் கிரிஜா.

ஆழ்ந்த யோசனையிலிருந்த தமயந்தி அந்த யோசனை கலையாமலேயே லேசாகத் தலையைச் சாய்த்து, "உம்.." என்றாள். அந்த நீண்ட ஹைவே பாதையில் பக்கத்து டிராக்கில் போய்க்கொண்டிருந்த அந்த பெரிய டிரக்கைத் தாண்டி வண்டி 70 மைல் வேகத்தில் போகையில் அவள் சொன்ன 'உம்..' கிரிஜாவிற்கு கேட்காமலேயே போனாலும் அவள் உதடுகள் மட்டும் அசைந்ததைப் பார்த்தாள்.

"என்ன அப்படி ஒரு யோசனை தமா?.. மாதுரியைப் பற்றியா?" என்று கேட்டாள், சற்று உரக்க்கவே. மாதுரியைப் பற்றித் தான் என்று அவளுக்கும் தெரியும். உண்மையிலேயே அவளும் அவளைப் பற்றித் தான் நினைத்துக் கொண்டு வந்தாள். இரண்டு பேரும் ஒருவரைப் பற்றியே நினைத்துக் கொண்டு வரும் பொழுது இரண்டு பேருமே மெளனமாக இருந்தால் எப்படி, ஏதாவது பேசினால் இருவரின் எண்ணங்களையும் கலந்து கொள்ளலாமே என்கிற ஆசையில் தான் கிரிஜா அப்படி கேட்டாள். மறக்க முடியாமல் மாதுரி அப்படி அவர்கள் இருவர் நினைவுகளிலும் பதிந்து பயணிக்கையில் கூடவே வந்து கொண்டிருந்தாள்.

அரைமணி நேரத்திற்கு முன்னாலேயே மலைச்சரிவு பாதைகளில் இறங்கி காண்டன் சாலையில் பயணித்து ப்ளூ ரிட்ஜ் பார்க் வேயின் விஸிட்டர் சென்டர் தாண்டி ஆஷ்வெல்லுக்குள் நுழைந்து விட்டார்கள். பெண்கள், குழந்தைகள் ஒரு வண்டியில் முன்னே செல்ல, ஆண்கள் எல்லோரும் வந்த வண்டி பின்னால் அவர்களைத் தொடர்ந்து கொண்டிருந்தது. 274 மைல்கள் நாலரை மணிப் பயணம் என்று ஜிபிஎஸ் சொல்லிற்று. இரவுக்குள் நாஷ்வெல் சென்று விட்டால் கிரிஜாவின் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி விட்டு தங்கள் ஊருக்குப் போக தமயந்தியின் குடும்பம் சம்மதித்திருந்தது.

"மாதுரிக்கு அந்த தெத்துப் பல் அழகா இருக்குல்லே?" என்று கிரிஜா கேள்வியை மாற்றிக் கேட்டபொழுது, தமாவினால் பதில் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.

தமா எதையோ ரசித்து சிரிப்பது போலவே லேசாகச் சிரித்தாள். "மயிலுக்குத் தோகை, முயலுக்கு நிமிர்ந்து நிற்கும் ரெண்டு காதுகள், குயிலுக்கு அதன் குரல், சேவலுக்குக் கொண்டைங்கற மாதிரி மாதுரிக்கு அவளோட தெத்துப்பல், இல்லையா?" என்றாள் தமா.

"அடேடே! இதுவரை எனக்குத் தெரியாதே! என்னைக்கு கவிதாயினியாய் மாறினே? அந்த மாதுரியைப் பார்த்த பிறகா?" என்றாள் கிரிஜா, பேச்சைத் தொடரத் தூண்டில் போட்டவாறு.

"மாதுரியை பாத்த பின்னாடி இல்லே.. அவளோட பெரியப்பாவைப் பாத்தலிருந்து!" என்று சிரிக்காமல் சொன்னாள் தமா. கலகலத்துச் சிரித்தது கிரிஜா தான். புன்முறுவலுடன் தமா வண்டியை நிறுத்தி கொஞ்சம் காத்திருந்து, அனுமதி கிடைத்ததும் இடது பக்கம் திரும்பி நியூபோர்ட் செல்லும் I-40 மேற்கு ஹைவேயில் ஊர்ந்து வேகமெடுத்தாள். வழிப்பாதை குறிப்பைப் பார்த்து அவள் போவது சரியான பாதைதான் என்று நிச்சயத்துக் கொண்டான் மணிவண்ணன்.

"ஆமாமாம்! உன்னைப் பார்த்து நம்ம சுகுணா மாதிரி இல்லேன்னு ஆச்சரியத்தோட கேட்டாரே! அவர் சொன்னதும் மாதுரிக்குத் தான் என்ன சந்தோஷம்ங்கறே.. அவளும் அதைத்தான் நெனைச்சிருப்பா போலிருக்கு.. அதையே அவரும் சொன்னதிலே தலைகால் புரியலே, அவளுக்கு!" என்றாள்.

"இருக்காதா, பின்னே?.. அவ அம்மா இப்போ உயிரோட இல்லை; தன் அம்மாவைப் போலவே இன்னொருத்தரைப் பாக்கறச்சே-- அதுவும் கொஞ்ச குறைந்த வயசு அம்மாவை--எந்தப் பொண்ணுக்குத் தான் அப்படி இருக்காது?.."

"கரெக்ட், தமா.. உன்னைப் பாத்ததிலேந்து அதையே நெனைச்சிண்டிருந்திருக்கா. வெளிப்படையா இதை எப்படிச் சொல்றதுன்னு தயக்கம் வேறே. அதையே அவ பெரியப்பா சொன்னதும், சந்தோஷம் தாங்கலே.. அதான் அப்படிப் பூரிச்சுப் போயிட்டா!" என்றாள் கிரிஜா.

கிரிஜா சொன்னதை ரசித்த மாதிரி காட்டிக் கொண்டு, "அவங்க சொல்றது எவ்வளவு தூரம் சரியா இருக்கும்னு தெரியலே.. ஒண்ணு மட்டும் தெரியறது.." என்று சொல்லி நிறுத்தினாள் தமா.

"என்ன, அந்தத் தெத்துப்பல் சமாச்சாரம் தானே?.. அவ அம்மா சுகுணாவுக்கு தெத்துப்பல் இல்லேன்னு தெரியறது.. அதானே?"

"சரியான எமகாதகிடி நீ!" என்று ஸ்டீரிங்கிலிருந்து வலது கை எடுத்து மற்ற விரல்களைக் குவித்து கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி அசைத்துக் காட்டினாள் தமா. "நான் என்ன நெனைக்கறேனோ அதை டக்குடக்குன்னு சொல்லிடறியே!"

"ரொம்பப் பேருக்கு படிக்கறதுன்னா புஸ்தகத்தைப் படிக்கறது தான் தெரியும்; மனுஷாளைப் படிக்கறதுன்னு ஒண்ணு இருக்கு. அது தெரியுமா?"

"திருவள்ளுவர் கூட சொல்வாறே?.. முகத்தைப் படிக்கறது பத்தி.. அது மாதிரியா?"

"மனசில்ல இருக்கறதை அவங்களோட முகம் காட்டிடும்ங்கறத்துக்கு அவர் சொல்லுவார். இது வேறே மாதிரி.. அதை இன்னொரு நாளைக்கு உனக்குச் சொல்லித் தர்றேன். மாதுரின்னோம்; அவ அம்மா சுகுணான்னோம். அந்த சுகுணா மாதிரியே நீ இருக்கறதா, மாதுரி மட்டுமில்லே-- அவ பெரியப்பாவும் சொல்லியாச்சு. அம்மா மாதிரியே பொண்ணு இருக்காளா, ஓ.கே.! அதை அந்தப் பொண்ணுக்கும் அம்மா சாயல்னு சொல்லலாம். ஆனா, அவங்க குடும்பத்தோட சம்பந்தமில்லாத நீ, அவ அம்மா சுகுணா மாதிரியே இருக்கேன்னா.. இங்கே தாண்டி ஏதோ ஒண்ணு இடிக்கறது" என்ற கிரிஜா, "இந்த ஈக்குவேஷன்லாம் நேர்படுத்தணும்னா ஒண்ணு தெரிஞ்சாகணும்.. எஸ்.. அந்த மாதுரி பேச்சு வாக்கில் தன்னைப் பத்தி உங்கிட்டே ஏதாவது சொன்னாளா?.. அவ யாரு மாதிரி சாயலாம்?" என்று யோசனையோடு கேட்ட பொழுது, "அதான் அப்பவே நமக்குத் தெரிஞ்சது தானேடி.." என்று தமயந்தி ஸ்டிரிங்கை விரலால் செல்லமாகத் தட்டிக்கொண்டே சொன்னாள்: "அந்த மாதுரி கிட்டத்தட்ட எங்கம்மா மாலு மாதிரி இருக்கான்னு தான் ஆரம்பத்திலேந்தே சொல்லிண்டிருக்கோம்லே!"

'"இருக்கோம்தான். அன்னிக்கு அந்த மலைப்பாதைலே தூரத்திலேந்து பாக்கறச்சே அப்படி சொன்னோம். இப்போ அப்படிச் சொல்றையான்னு தான் கேள்வி. இத்தனை நேரம் அங்கே தானே அவங்க கூடத் தானே இருந்திட்டு வர்றோம்.. இப்போ சொல்லு. மாதுரி உங்கம்மா மாதிரியா இருக்கா?"

"இப்பவும் அப்படித்தாண்டி நெனைக்கத் தோண்றது.. ரொம்பப் பக்கத்லே தீர்க்கமா பாக்கறச்சே இல்லேனாலும் முக்காவாசி.. பேசறச்சே கண்ணை படபடத்திண்டே பேசறது, யார்கிட்டேயும் நெருக்கமா ஒரு சொந்தத்தோடு பழகறது, மனசிலே ஒண்ணும் வைச்சிக்காம வெகுளியா பேசறது.. இப்போ அந்த முகம் கூட பிடிபட்டுப் போச்சுடி.. அந்த தாடை வளைவு, கோணல் வகிடு, பிடிச்சு விட்ட மாதிரி தீர்க்கமான அந்த மூக்கு... வாவ்! அவளுக்கு எங்கம்மா சாயல் நிறைய இருக்குடி..."

மாதுரியின் அம்மா சுகுணா மாதிரி தோற்றச் சாயலில் தான் இருப்பதும், தன் அம்மா மாலு மாதிரி மாதுரி இருப்பதுமான ஒரு அதிசய ஒற்றுமையை தமயந்தி மிகவும் ரசித்து விரும்பவாதாகவே அவள் உற்சாகமாக பேசிய தோரணையிலிரு ந்து கிரிஜாக்கு பட்டது. இருந்தும் அதை இன்னும் நன்றாக நிச்சயம் பண்ணிக் கொள்ளும் பொருட்டு, சாலையைப் பார்த்துக் கொண்டே வந்தவள் ஒரு நிமிடம் தாமதித்து விட்டுச் சொன்னாள்:

"ஒவ்வொண்ணா சரிபார்த்துச் சொன்னா நீ சொல்றதெல்லாம் பொருந்தித் தான் வர்றது.. ஆதிலேந்தே நானும் அப்படித் தான் நெனைச்சிண்டிருக்கேன். அவங்க காபினுக்கு போனதிலேந்தே இதான் என் மனசிலே ஓடிண்டிருக்கு.. என்ன, அவ டக்குனு எங்கம்மா மாதிரியே நீ இருக்கேன்னு உன்னைச் சொல்லிட்டா.. நீ தான் திருப்பி அவ கிட்டே, நீயும் கூடத்தான் எங்கம்மா மாதிரியே இருக்கேன்னு சொல்லலே.. அதான் ரெண்டு பேருக்கும் வித்தியாசம்."

"கிரிஜா! நீதான் சொல்லேன்.. அவ சொன்ன அதே மாதிரி என்னாலே அவகிட்டே ஏண்டி சொல்ல முடிலே?" என்று ரொம்பவும் மிருதுவாக தமயந்தி கேட்ட பொழுது, அந்த கேள்வி தட்டுத்தடுமாறி அவள் நெஞ்சத்தின் அடி ஆழத்திலிருந்து வருவது போலிருந்தது.. முன்னால் சென்று கொண்டிருந்த Fed-Ex வண்டி அவளுக்கு வழிவிட்டு அடுத்த டிராக்குக்கு மாறியது.

"ரொம்ப சிம்பிள்.. உனக்கு உங்கம்மா மேலே அவ்வளவு ஆசை. உங்கம்மா அவ்வளவு உசத்தி உனக்கு. இந்த உலகத்திலே உங்கம்மா மாதிரி வேறே யாரும் இருக்க மாட்டான்னு அடிச்சு நினைக்கற மனசு.. அதான் இன்னொருத்தர் உங்கம்மா மாதிரி இருந்தாலும் உன் மனசு சட்னுன்னு அதை ஏத்துக்கலே.. ஓரளவு ஏத்துண்டாலும், வெளிப்படையா அதைச் சொல்லி உனக்கும் உன் அம்மாவுக்கும் இருக்கற நெருக்கத்தை சாதாரணமாக்கி அதை இன்னொருவர் உருவத்திலே உன்னாலே பொருத்திப் பார்க்க முடியலே.. அவ்வளவு தான்" என்றாள்.

'"என்னடி, ஜட்ஜ் தீர்ப்புச் சொல்றமாதிரி படார்னு சொல்லிட்டே.. 'அம்மா, அசப்பிலே உன்னை மாதிரியே ஒருத்தரை இங்கே பாத்தேன்'னு போன்லே எங்கம்மாகிட்டேயே சொன்னேனடி.. அதுக்கு என்ன சொல்றே?"

"அதெல்லாம் ஒருத்தர் மாதிரியே இன்னொருத்தரை பார்த்த வேகத்லே பேசற பேச்சு. இந்தப் பெரியப்பாவை பாத்திட்டு கூடத் தான் உங்கப்பா மாதிரியே இருக்குன்னு நெனைச்சோம். நெருக்கத்லே பாக்கறச்சே வேறே மாதிரி தெரியலையா?.. அதுமாதிரி தான் உங்கம்மா மாதிரின்னு அப்போ உன் மனசு நெனைச்சதும்.."

"அப்போ, அப்போ நெனைச்சதும் இப்போ நான் நெனைக்கறதும் வேறே, வேறேங்கறையா?"

"அப்படின்னு இல்லே.. ஆனா அதை இப்படிச் சொல்லலாம். அப்போ ஒரே பார்வைலே அவசரத்லே நெனைச்சது, பேசினது எல்லாம் என்னவோ அதையேத் தான் இப்பவும் நெனைச்சிருக்கே.. நெனைப்புலே எந்த மாற்றமும் இல்லே. இருந்தாலும் உன்னோட உள்மனசு அதை ஒத்துக்காம இன்னும் முரண்டு பிடிக்கறது... உங்கம்மா கிட்டே உனக்கிருக்கிற பிடிப்பு அதை இப்பவும் அப்படி நெனைக்க முடியாம தடுத்திண்டு இருக்கு. அது தான் வெளிப்படையா எதையும் சொல்ல முடியாம உன்னைத் தடுக்கறது."

தமயந்தி பதிலே பேசவில்லை. வெறித்து வழவழ சாலையைப் பார்த்தவாறே வண்டியை செலுத்திக் கொண்டு வந்தாள். "அம்மா.. அறுபதிலே தானே போறே?.. " என்றான் மணிவண்ணன், சாலையோரத்தில் வேகத்தைக் குறைக்கச் சொன்ன அறிவிப்புப் பலகையைப் பார்த்தபடியே.

இப்பொழுது தான் மணிவண்ணனும் அந்த வண்டியில் இருக்கும் உணர்வே அவர்கள் இருவருக்கும் வந்தது.. மணிவண்ணனைப் பார்த்து புன்னகைத்த தமா, "ஸ்டீரிங்கைப் பிடிச்சிட்டா, உங்கம்மா அனிச்சையா எல்லாத்திலேயும் கவனமாத் தான் இருப்பாப்பா.." என்றாள்.

ரியர் வ்யூ ஆடியில் பார்த்த மணிவண்ணன், "என்னம்மா.. அப்பா வர்ற வண்டியையேக் காணோம்?.. எங்காவது சிக்னலே மாட்டிக்கிட்டாங்களா?" என்றான்.

அதே சமயம் சொல்லி வைத்தாற் போல அவர்கள் செல்போன் ரீங்கரிக்க, எடுத்துப் பார்த்த மணிவண்ணன், "அப்பாம்மா.." என்று சொல்லிவிட்டு, செல்லைக் காதில் பதித்து "என்னப்பா.. எங்கேயிருக்கே?" என்று கேட்டான்.


(தேடல் தொடரும்)
Friday, April 8, 2011

ஆத்மாவைத் தேடி …. 4 மூன்றாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


4. தூங்குகையில்....


பிரச்ன உபநிஷத்தில் சூரியன் பேரன் கார்க்கியன் கேட்ட கேள்விகளுக்கு பிப்பலாத முனிவர் தூக்கம் பற்றிச் சொன்னவற்றைப் பற்றி தேவதேவன் விவரித்ததைத் தொகுத்துச் சொல்வதற்காக அவர் குழுவைச் சேர்ந்த சந்திரமோகன் முன்வந்தார்.

நெடுநெடுவென்று இருந்தார் சந்திரமோகன். தீர்க்கமான பார்வையுடன் இதழோரங்களில் எந்நேரமும் சிரிக்கும் புன்னகையுடனே மைக்கைப் பற்றினார். "அயர்சியடைஞ்ச உடல் உறுப்புகள் களைப்பு நீங்கறத்துக்கு எடுத்துக்கற ஓய்வுதான் தூக்கம்ன்னு பொதுவா நாம நெனைக்கிறோம். அதனாலத் தான் மனுஷனுக்குத் தூக்கங்கறது அத்யாவசியமான ஒண்ணுன்னும், அது இறைவன் நமக்குத் தந்த கொடைன்னும் நம்மிடையே கருத்துக்கள் உண்டு. ரொம்ப நேரம் தூங்கின ஒரு தூக்கத்திற்குப் பின்னாடி களைப்பு நீங்கி இயல்பா ஏற்படற உற்சாகமும் இந்தக் கருத்துக்கு வலு சேக்கறது.."

திண்ணையில் பக்கத்தில் அமர்ந்து சிநேக பாவத்துடன் பேசுகிற சொந்தத்தில் இருந்தது சந்திரமோகனின் குரல். "மனுஷன் விழிச்சிருக்கற நேரத்லே அவனோட அவயவங்கள் அத்தனைக்கும் வேலை இருக்கு.. ஒரு நொடிக்கும் குறைஞ்ச நேரத்லே ஒரு விஷயத்லே கவனம் செலுத்தறதுக்குக் கூட வெளிப்பார்வைக்குத் தெரிஞ்ச தெரியாத உடல் உறுப்புகளோட, அதோட அத்தனை நரம்பு சார்பு மையங்களும் அந்த செய்யற செயலோட செயல்பாட்டோட சம்பந்தப்பட்டுப் போய்டறது. நாள் பூராவும் ஈடுபடற வேலைங்களைப் பத்திச் சொல்லவே வேண்டாம்.

"அப்படி உழைச்சுக் களைப்பதற்கு ஓய்வு இன்றியமையாத தேவை தான். அந்த அடிப்படைத் தேவையை கணக்கில் கொண்டு, மனிதனுக்கு இறைவன் அளித்த தூக்கமும் ஒரு வரப்பிரசாதம் தான். இருந்தாலும், அந்த அடித்துப் போட்ட மாதிரியான ஆழ்ந்த தூக்கத்திலும், சில நேரங்கள்லே கனவு காண்றோம். அந்த கனவுலே நனவுலே நடக்கற மாதிரியே காட்சிகள் தத்ரூபமா அமையறது ஆச்சரியமாத் தான் இருக்கு. நாமே அந்த காட்சிகளில் ஒரு பாத்திரமா பங்கு கொள்கிற மாதிரி, அதை நாமே பார்த்து ரசிக்கிற மாதிரி அல்லது பதறுகிற மாதிரி.. விழிச்சுப் பாக்கறச்சே தான், இத்தனை நேரம் கண்ட காட்சியெல்லாம் நிஜமா நடந்தது இல்லைன்னு தெரியறது. நாம நன்னா தூங்கிண்டிருக்கறச்சேயே, அந்தத் தூக்கத்திலேயே அந்த கனவுக் காட்சிகள்லே நாம எப்படி சம்பந்தப்பட்டுப் போனோம்னு தெரியலே. நம்ம கையப் பிடிச்சு இழுத்திண்டு போய் நம்மையும் அந்தக் காட்சிகளோட சம்பந்தப்படுத்தினது யார்னு தெரிலே. நாமோ தூங்கறோம்; நாமே பங்கு கொள்ற மாதிரியான அச்சு அசலான காட்சிகளை நாமே பாக்கறோம்னா இது என்ன கண்கட்டு வித்தைன்னு தெரிலே. இல்லே, நம்மை மெஸ்மரிஸம் பண்ணின மாதிரி அலைக்கழிச்சிட்டு உண்மைலே இந்தக் கனவையெல்லாம் ரசிப்பது நாம் அல்லாத வேறு யாரோவாங்க்கற சந்தேகம் கூட அப்பப்போ ஏற்படறது..

"எஸ். இப்படியான ஒரு சந்தேகம் தான் அந்த கார்க்கியனுக்கு அன்னிக்கு ஏற்பட்டது. அதனால தான் 'மனிதன் அயர்ந்து தூங்கறச்சே, அந்தத் தூக்கத்தோட ஆக்கிரமிப்லே அகப்பட்டுண்டு தூங்கறவை எவை-எவை, அந்த ஆக்கிரமிப்லேந்து விடுபட்டு விழிச்சிண்டிருக்கறவை எவை- எவை, அந்தஆக்கிரமிப்பில்லே அகப்பட்டிண்டுகறச்சேயே கனவு காண்பது யார், தூங்கறவனா இல்லை, வேறு யாரோவான்னு கேட்கிறான். கனவுகாண்ற அந்த தேவன் யார்னுங்கறதுதான் அவனோட கேள்வி.

"அதுக்கு பிப்பலாத முனிவர் சொல்றார். "தூங்கறச்சே தூங்கறவனோட புலன்கள் அத்தனையும் அவனோட மனசிலே ஒடுங்கறதாகவும், பிராண அக்னி மட்டும் அந்த நேரத்தில்லே விழிச்சிண்டிருக்குன்னு பதிலளிக்கிறார். பிராணனைப் பற்றி நாமோ முன்னாடியே விவரமா பாத்திட்டோம். அப்போ பாத்ததையெல்லாம் இப்போ இந்த சமாச்சாரங்களோட இணைச்சுப் பார்த்துக்கலாம்.. இதே நேரத்தில்லே ஒண்ணைச் சொல்லணும்.. கனவு காண்கிறவன் யார்னு கார்க்கியன் கேட்ட கேள்வி ரொம்பவும் அர்த்தம் நிறைஞ்சதாத் தெரியறது. அதற்கான பதிலை தெரிஞ்சிக்கறதிலே உங்களைப் போலவே நானும் ரொம்பவும் ஆவலோடக் காத்திருக்கேன்" என்று சொல்லிவிட்டு அமர்ந்தார் சந்திரமோகன்.

சந்திரமோகனின் தொகுப்புரை கேட்டு தேவதேவன் புன்முறுவல் பூத்தார். "தொகுப்புரை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். சொன்னதையெல்லாம் தொகுத்துச் சொல்லி சொல்லாததையும் தொகுத்துச் சொல்றச்சே மேற்கொண்டு தொடரும் பொழுது விட்டுப் போனதையெல்லாம் தொட்டுச் சொல்ல நினைவில் கொள்ள முடிகிறது.. தொகுப்புரைக்கு மிக்க நன்றி, சந்திரமோகன்" என்று சொல்லி விட்டு, "நல்லது. இதுவரைக்கும் சொன்னவற்றில் எந்த ஐயமும் இல்லை அல்லவா?" என்று கேட்டு அவையைச் சுற்றிப் பார்த்து விட்டுத் தொடர்ந்தார்.

அவை மிகுந்த ஆர்வத்துடன் அமர்ந்திருந்தது. அந்த ஆர்வம் சலசலப்பில்லாத அந்த அமைதியில் தெளிவாகத் தெரிந்தது. "இப்பொழுது மேற்கொண்டு பார்ப்போம்" என்று தொடர்ந்தார் தேவதேவன். "ஒன்று நன்றாகத் தெரிகிறது. புலன்கள் மனத்தில் ஒடுங்குவதால் தான் தூக்கம் ஏற்படுகிறது என்று நன்றாகத் தெரிகிறது. . தூக்கத்தின் ஆட்படுதலுக்கு உள்ளாகாமல் பிராண அக்னி விழித்திருப்பதாக முனிவர் வாக்கிலிருந்து தெரிகிறது. கனவுகளைக் காண்பவர் யார் என்று பிப்பலாத முனிவரிடம் கார்க்கியன் கேட்டதற்கு அவர் சொன்ன பதிலைப் பார்ப்பதற்கு முன்னால், முனிவர் சொன்ன அந்த மூன்று வார்த்தைகளைப் பற்றிப் பார்த்து விடுவோம். அசோகன் கேட்டார்லியா, அதைப் பத்தி தான். முனிவர் சொன்ன கார்ஹபத்யம், அன்வாஹார்யபசனம், ஆஹவனியம் என்கிற சொற்கள் எல்லாம் என்னன்னு பார்த்தா அவையெல்லாம் யாகச் சொற்கள் என்று தெரிகிறது.. . யாகம் செய்யும் பொழுது புழங்கும் அதற்கானச் சொற்களைச் சொல்லி, தூங்குகையில் தூங்கும் உடலில் வாயுக்கள் எப்படிச் செயல்படுகின்றன எப்பதை விளக்குகிறார் முனிவர். உடலில் செயல்படும் வாயுக்களைப் பற்றி இதற்கு முன்னாலேயே பார்த்துவிட்டபடியால், அவைபற்றி இப்பொழுது வேண்டாம். என்னன்ன வாயுக்கள் என்பதை நினைவில் மட்டும் கொள்ளுங்கள்.

"கிரகஸ்தன் செய்யும் யாகங்களில் முக்கியமான ஒன்று அக்னிஹோத்ரம் என்னும் யாகம். இந்த யாகத்தை செய்விப்பவர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு பின்புறம் ஒரு குண்டத்தில் அக்னி எரிந்து கொண்டிருக்கும். இதுவே கார்ஹபத்ய அக்னி என்று அழைக்கப்படுகிறது. மனிதன் தூங்குகையில் உடலின் உள்ளே செயல்படும் அபான வாயுக்கு இந்த கார்ஹபத்ய அக்னியை எடுத்துச் சொல்லி அதுமாதிரி என்கிறார்.

"யாகத்தை செய்விப்பவருக்கு வலது பக்கத்தில் அரைவட்ட வடிவில் குண்டத்தில் எரியும் அக்னிக்குப் பெயர் அன்வாஹார்யபசனம். இந்த அக்னியைப் போல வியானன் என்று சொல்கிறார்..

"யாகத்தை செய்விப்பவருக்கு முன்னால் சதுரவடிவில் எரியும் குண்டத்து அக்னிக்குப் பெயர் ஆஹவனீயம். கார்ஹபத்யத்திலிருந்து எடுக்கப்பட்டு அக்னியாய் வளர்க்கப்படுவது இது. தூக்கத்தில் பிராணன், அபானனிலிருந்து பிரிந்தெழுந்து செயல்படுவதால், கார்ஹபத்ய அக்னி அபானனுக்கும், ஆஹவனீயம் பிராணனுக்கும் உவமைபடுத்தி அவைமாதிரி என்று சொல்கிறார்..

"யதுச்ஸ்வாஸ நி:ச்வாஸெள ஏதாவாஹூதீ ஸமம் நயதீதி ஸ ஸமான: மனோ ஹ வாவ யஜமான இஷ்ட்டஃபலமேவ உதான: ஸ ஏனம் யஜமானம் அஹரஹர் ப்ரஹ்ம கமயதி "

"உள்மூச்சு, வெளிமூச்சு இந்த இரண்டும் யாகத்தின் இரண்டு ஆஹூதிகள். இந்த இரண்டையும் கண்காணித்து சமமாக இயக்கச் செய்வது சமானன். மனமே எல்லாவற்றிற்கும் தலைவன். வாழ்க்கையாகிய இந்த யாகத்தினை நடத்துகையில் வேண்டும் பலன் இறைவனை நெருங்குதல். உதானனே கூட இருந்து அனுதினமும் இறைவனிடம் சேர்ப்பிப்பதால் அதுவே நாடிய பலன்.

"நாம் உறங்குகையில் உடலில் செயல்படும் வாயுக்களைப் பற்றி அக்னிஹோத்தர யாகத்தை உதாரணம் காட்டி பிப்பலாத முனிவர் கார்கியனுக்கு விளக்குகிறார். ஒவ்வொரு காலத்திலும் எதெது எல்லோருக்கும் தெரிந்ததாக இருக்கிறதோ அந்தந்த தெரிந்ததைக் கொண்டு தெரியாததை தெரியப்படுத்துவது வழக்கமாதலால், தெரிந்த யாக உபாசனைகளைக் கொண்டு தெரியாத-- மனிதன் தூங்குகையில் உடலில் செயல்படும் வாயுக்களின் தன்மை பற்றி-- முனிவர் கூறினார்.

"அடுத்து கார்க்கியன் கேட்ட கேள்வியான கனவு காணும் அந்த தேவன் யார் என்னும் ஐயத்திற்கு பிப்பலாத முனிவர் சொன்ன விளக்கங்களைப் பார்ப்போம்" என்றார்.


(தேடல் தொடரும்)Sunday, April 3, 2011

ஆத்மாவைத் தேடி …. 3 மூன்றாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


ந்தக் காபின் முழுவதும் உயர்தர மரத்தால் இழைத்திருந்தார்கள். பெரிய டைனிங் டேபிள் ஓவல் சைஸில் இருந்தது, அத்தனை பேரும் சுற்றி உட்கார்ந்து சாப்பிடுவதற்கு வசதியாக இருந்தது. சாப்பிடும் பொழுது கிரிஜாவுக்கும் தமயந்திக்கும் நடுவில் அமர்ந்திருந்தாள் மாதுரி. இரண்டு பேரிடமும் இரண்டு பக்கமும் அவ்வப்போது திரும்பிப் பேசுவதற்கு அது செளகரியமாக இருந்தது. கொஞ்ச நேரப் பழகத்திலேயே ஒருமையில் சிரித்துப் பேசும் அளவுக்கு அவர்களுக்குள் பழக்கமேற்பட்டிருந்தது. இப்படி நிறைய இருந்ததுகள்.

"உங்கள் அப்பா அம்மா அரியலூரில் தானே இருப்பதாகச் சொன்னே?" என்று கிரிஜா பக்கம் திரும்பி மாதுரி கேட்ட பொழுது கிரிஜா "ஆமாம், மாதுரி" என்று தலையசைத்தாள். "அம்மா, அண்ணா, மன்னி எல்லோரும் அரியலூரில். அப்பா மட்டும் டெல்லி போயிருக்கார்!" என்றாள்.

"அப்பாக்கு டெல்லிலே வேலையோ?" என்றாள் மாதுரி, பறங்கிக்காய் கூட்டை கொஞ்சம் எடுத்து தட்டில் போட்டுக் கொண்டபடி. கூட்டு தித்தித்து வழியாமல் நாக்குக்கு இதமாக இருந்தது.

"வேலைன்னு இல்லே. அப்பா உபந்யாசம் பண்ணுவா. டெல்லிலே ஒரு பெரிய சதஸ் நடக்கப்போறது. அதுலே கலந்துக்க கூப்பிட்டிருக்கா. அதுக்காகப் போயிருக்கார்" என்று கிரிஜா சொல்லிக்கொண்டிருக்கையில் ஆச்சரியத்துடன் திரும்பி அவள் பக்கம் பார்த்தார் மாதுரியின் பெரியப்பா.

"ஓக்ரா கறி தூள்.. தக்காளி ரஸம் தனியா ஒரு கப்லே வேணும்" என்றான் குமார்.

"சதஸ்ஸா.. அதுலேலாம் கலந்துக்கணும்னா பெரிய பண்டிதராத்தான் உங்கப்பா இருப்பார்.. எல்லாம் பூர்வ ஜென்மப் புண்ணியம்" என்றார் பெரியப்பா. அவரே ஒரு நிமிடம் தாமதித்து, "காஞ்சிபுரத்திலே பெரியவர் அவர் காலத்லே ஒரு சதஸ் ஏற்பாடு பண்ணியிருந்தார், பார்! எங்கேயிருந்தெல்லாமோ எத்தனை பண்டிதர்கள் வந்திருந்தார்கள் என்கறே?.. சில்ப சாஸ்திரம் பற்றி விவாதம் நடந்த அன்னிக்கு அதைப் பாக்கப் போய் அசந்து போயிட்டேன்.. அவ்வளவு நன்னா இருந்தது" என்றார்.

"சதஸ்னா என்ன பெரிப்பா?" என்றாள் மாதுரி, பச்சடி பாத்திரத்தை கிரிஜா பக்கம் நகர்த்தியபடி.

"மாநாடு மாதிரின்னு வைச்சுக்கோயேன். சாஸ்திர விற்பன்னர்களெல்லாம் கலந்திண்டு பெரிய அளவிலே விவாதம் நடத்துவார்கள். ஒவ்வொரு துறைலேயும் பண்டிதர்கள் கலந்திண்டு சந்தேகங்களை நிவர்த்தி செஞ்சிண்டு, விவாதிச்சு கருத்துக்களை நிறுவுவார்கள். விஷயம் தெரிஞ்சவங்களுக்கு இதிலெல்லாம் கலந்திண்டு விவாதிகறதைக் கேக்கறதே கொண்டாட்டம் தான்! மோர்க் குழம்பிலே என்ன, சேப்பங்கிழங்கா போட்டிருக்கே?"

"ஆமாம் பெரிப்பா.. மாவா வெந்திருக்கு.. போட்டுக்கோங்கோ."

"எங்கப்பாவும் அம்மாவும் இப்போ அங்கே தான் இருக்கா. கிருஷ்ணா மாமா-- அதான், கிரிஜா அப்பாவைப் பார்க்கப் போய் அவர் கூடவே அங்கே தங்கிட்டா. அம்மா சொன்னா. அங்கேயிருந்து வரவே மனசு வர்றலியாம்; அவ்வளவு நன்னா இருக்காம்.." என்று தமா சொன்ன போது அவள் பக்கம் திரும்பி அவள் முகம் பார்த்த மாதுரிக்கு திரும்பியும் தன் அம்மா ஞாபகம் வந்துவிட்டது. அதே நினைவில் "அப்படியாம்மா?.." என்று கேட்டாள். ஒரு நொடியில் தான் சொன்னதை உணர்ந்து, "அப்படியா, தமா?" என்று திருத்திச் சொன்னாள்.

அதற்குள் அவள் தடுமாறியதைப் புரிந்து, "ரொம்ப மரியாதையெல்லாம் வேண்டாம். தமான்னே என்னைக் கூப்பிடலாம்" என்றாள்.

"ஓ! வெல்! அதுக்கில்லே தமா! ;உன்னைப் பாக்கறச்சே என்னென்னவோ நினைவெல்லாம் மனசிலே முட்டி மோதறது.." என்று மாதுரி சொன்ன போது "தனக்கும் அப்படித்தான் இருக்கிறது" என்று சொல்ல நினைத்தாள் தமயந்தி. ஆனால் ஏனோ சடாரென்று இப்பொழுது அதைச் சொல்லத் தோன்றவில்லை.

ஆனால் மாதுரிக்கு சட்டென்று நினைப்பதைச் சொல்ல முடியாமல் தான் தடுமாறுவதற்குக் காரணம் என்னவென்று இப்பொழுது லேசாகப் புரிகிற மாதிரி இருந்தது. தன் மனசின் அடி ஆழத்தில் லேசான சலனம் இது பற்றி இருப்பது தெளிவாகத் தெளிந்தது. தன் அம்மாவின் மேல் அவள் வைத்திருந்த அதீத பாசமும் அன்பும் தன் அம்மா மாதிரியே அரசுபுரசலான தோற்றம் கொண்ட யாரைப்பார்த்தாலும் நம் அம்மா மாதிரி இருக்கிறார்களே என்று நினைக்கத் தோன்றுகிறதோ என்கிற ஐயமும் அவளுக்கு இருந்தது. அதற்காக அப்படி நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை அவளால். வெளித் தோற்றத்தைத் தாண்டி தமயந்தியைப் பார்க்கும் பொழுதே கரகரவென்று நெஞ்சில் சுரக்கும் ஒரு அன்பை அவளால் உணர முடிந்தது. இந்த உணர்வு கூட பொய் என்று அவளால் விட்டேத்தியாக ஒதுக்க முடியவில்லை. இன்னொரு பக்கம், 'மனசில் வைத்துக் கொண்டு ஏன் புழுங்குகிறாய், சொல்லித் தொலை' என்று யாரோ கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளுவதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.

அந்த வேகத்தில் சொன்னாள். "அப்படியாம்மான்னு உன்னைப் பார்த்து நான் கேட்டது வார்த்தை வழுவிச் சொல்லலே. ரொம்ப இயல்பா உணர்ந்து அனிச்சையாய் நான் அப்படி உன்னைக் கூப்பிட்டது தான் ஆச்சரியம்"என்று சொன்ன மாதுரி ஒரு நிமிடம் நிறுத்தி,"இப்போ சொல்லிடறேன், தமா!" என்று தமாவைக் கூர்மையாகப் பார்த்து விட்டு பெரியப்பா பக்கம் திரும்பினாள். சாப்பிடுவதை ஒரு நிமிடம் நிறுத்தி எல்லோரும் மாதுரியையே பார்த்தனர்.

"பெரிப்பா.. தமாவைப் பாருங்க.. யார் மாதிரி இருக்கான்னு சொல்லுங்க, பார்ப்போம்.."

பெரியப்பா இப்பொழுது தான் முதல் முறை பார்ப்பது போல் தமயந்தியை உற்றுப் பார்த்தார். "கண்ணாடியை சரியாப் போட்டுண்டு பாருங்க பெரியப்பா" என்று கிண்டலடித்தான் குமார்.

"ஓக்கே.. பாத்தாச்சு.. சொல்லிடட்டுமா.."

"சொல்லுங்க..பெரிப்பா.." என்று அவசரப்படுத்தினாள் மாதுரி.

அத்தனைபேரின் பார்வையும் தன் பக்கம் திரும்பியிருந்தது லேசான குறுகுறுப்பைக் கொடுத்தது தமாவுக்கு.

"நம்ம சுகுணா மாதிரி தானே இருக்கா?" என்று பெரியப்பா சொன்ன போது மாதுரியின் அண்ணனுக்கு இத்தனை நேரம் தன் மனத்தில் நிழலாடிய ஏதோ ஒன்று நிஜமாகப் பளிச்சென்று புரிந்த மாதிரி இருந்தது.

மாதுரிக்கு தான் என்ன நினைத்து இத்தனை நேரம் குழம்பிக் கொண்டிருந்தாளோ அதையே சரியென்று இன்னொருவர் டிக் அடித்த சந்தோஷம். அந்த சந்தோஷம் இனம்புரியாத பூரிப்பாக உருவெடுத்து கையிலிருந்த ஸ்பூனைத் தட்டில் போட்டு விட்டு கெட்டியாக தமாவின் கைகளை வாஞ்சையுடன் இறுகப் பற்றிக் கொண்டாள்.

திடீரென்று அங்கே பீறிட்ட அன்பில் நனைந்த சிலிர்ப்பில், 'சுகுணாவா? எந்த சுகுணா? தனக்கு தெரியாத பெயராய் இருக்கிறதே' என்று யோசனையில் ஆழ்ந்தாள் தமா.


(தேடல் தொடரும்)

Thursday, March 31, 2011

ஆத்மாவைத் தேடி .... 2 மூன்றாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

2. காலத்தின் கட்டாயம்

ஹாதேவ் நிவாஸ் வழக்கம் போலவே அன்றைக்கும் விடியலில் இருந்தே களைகட்டி இருந்தது. கோசாலைப் பகுதியில் தொழுவத்தில் கட்டியிருக்கும் பசுக்களுக்குத் தான் விடியலின் வாசனை முதன் முதலில் தெரியும் போலிருக்கு. கழுத்து மணி அதிர்வுடன் அவை ''மா.." என்று உரத்த குரலில் அழைப்பதற்குத் தான் காத்திருப்பது போல் அவற்றின் குரல் கேட்டதும் அந்த அதிகாலையில் ஆசிரமமே விழித்துக் கொண்டு விடும். உடனே ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த பகுதிக்கான இயக்கம் துவங்கி மொத்த ஆசிரமத்திலும் சங்கிலித் தொடர் போன்றதான உற்சாகம் ஒன்றை ஒன்று தழுவியதான தோற்றம் கொடுக்கும்..

ஒருத்தர் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்கிற தேவை இல்லாமல், அவரவருக்கு அவரவரின் தொடர்ச்சியான பணிகள் பழக்கப்பட்டுப் போயிருந்தன. இதை அடுத்து அது என்று ஒவ்வொருவருக்கும் அடுத்தடுத்த பணிகள் நாள் பூராவும் காத்திருந்தன. நடக்கும் எல்லாப் பணிகளும் ஒன்றைத் தொட்டு ஒன்று என்று நடக்கவிருக்கும் மாபெரும் சதஸ்ஸின் வெற்றியுடன் முடிச்சுப் போட்டவையாக அதற்கான முன்னேற்பாடுகளுடன் அமைந்திருந்தது தான் ஆச்சரியம்.

இப்பொழுதெல்லாம் எட்டுமணி அளவில் சிவன் கோயிலில் அத்தனை பேரும் காலை தரிசனத்திற்குஒன்று கூடும் பொழுதே அன்றைய நிகழ்வுகளின் நீட்சியும் போக்கும் தீர்மானிக்கப்பட்டு விடுகின்றன. சதஸின் நெருக்கம் நெருங்க நெருங்க அவரவரைத் தொற்றிக் கொண்ட ஒரு இயல்பான எதிர்பார்ப்பு கலந்த வேகத்தினூடேயே, அலாதியான பெருமிதமும் முகத்தில் தவழ்ந்தது. இந்த சதஸ் காலத்தின் கட்டாயம் என்று அவர்கள் உணர்ந்திருந்ததும், அந்த கட்டாயத்தில் பங்கு கொள்ள வாய்ப்பு கிடைத்ததும் அவர்களது பெருமிதத்திற்கு காரணம் ஆயிற்று.

யோசித்துப் பார்த்தால் அந்தந்த காலத்திற்கான அவ்வப்போதையான தேவைகள் தாம் கட்டாயங்களாக உணரப்படுகின்றன போலும். தேவைகள் தாம் தங்களுக்கான தீர்வுகளைக் காணத் துடிக்கின்றன. ஊரும் உலகும் வரட்சியில் தீய்ந்து போய் துடிக்கும் பொழுது உணவுக்கான தேவை அதை எப்பாடுபட்டாவது உற்பத்தி செய்வதின் கட்டாயமாக உருவெடுக்கிறது. உயிர் வாழ்வதற்கான அத்தனைத் தேவைகளுக்குமான தீர்வுகள் கிடைத்த பின்னும், மனித மதிப்பீடுகளுக்கான தேவைகள் பூர்த்தியாகவில்லை என்றால் அவைகளும் அதற்கான தீர்வுகளுக்கான கட்டாயங்களாக உருவெடுக்கும்! அறிவார்ந்த ஒரு சமுதாயத்தின் தேவைகள் காலத்திற்குக் காலம் வெவ்வேறு உருக்கொண்டு வேறு வேறு தீர்வுகளுக்காய் வடிவெடுத்துக் கொண்டிருக்கும்.. காலத்தின் வளர்ச்சிப் போக்கில் தன்னையும் வளப்படுத்திக் கொள்ளும் அறிவின் எதிர்பார்ப்பு அந்தந்த தீர்வுகளுக்கான கட்டாயங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

"மனித மதிப்பீடுகளில் மிக உயர்ந்த ஒன்று நன்றியறிதல்" என்று அன்றைய உரையைத் தொடர்ந்தார் தேவதேவன்.

மொத்தம் பன்னிரெண்டு குழுக்கள். ஒவ்வொரு குழுவிற்கும் எட்டு பேர். ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு துறை சார்ந்தது. ஒவ்வொரு விவாதப் பகுதியிலும் பேசப்படுவவதை எல்லா துறை சார்ந்தவர்களும் குறித்துக் கொள்கிற மாதிரி, அங்கங்கே தங்கள் துறை சார்ந்த விளக்கமோ இல்லை குறுக்கீடுகளோ இருந்தால் அவ்வவ்போது பதிவு செய்கிற மாதிரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அத்தனைக் குழு சார்ந்திருப்போரும் சுற்றி அமர்ந்திருக்க நட்ட நடுவில் தேவதேவனின் குழுவினர் அமர்ந்திருநதனர். தனது குழுவின் நடுநாயகமாக அமர்ந்திருந்த தேவதேவன் சுற்றிலும் பார்த்து புன்முறுவலித்து விட்டு சொல்ல ஆரம்பித்தார். "மனித மனத்தின் ஆதியான அடிப்படையான குணம் இந்த நன்றியறிதல். தனக்கு நன்மை பயத்தவைகளின் பால் நன்றி செலுத்துதல். ஆதிமனிதன் மரவுரி தரித்து காடுகளில் திரிந்தலைந்த காலத்திலிருந்தே தனக்கு நன்மை செய்தவைக்கு நன்றி செலுத்தத் தவறியதில்லை. நிலத்தையும், நீரையும், நெருப்பையும், காற்றையும், பரந்த வான் வெளியையும் வணங்கத் தவறவில்லை அவன். வணங்குதல் இங்கே எங்கே வந்தது என்றால், நன்றி செலுத்துதலின் வெளிப்பாடு தான் வழிபடுதல். இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தவனுக்கு, அந்த இயற்கையே வழிபடும் தெய்வமாயிற்று. இது தான் ஆதிமனிதனின் அறிவார்ந்த செயலின் முதல் தொடக்கம்" என்றார் தேவதேவன்.

தேவதேவனின் பேச்சு அவையினரை மிகவும் கவர்ந்து விட்டது. அவர் பேச்சின் சுவாரஸ்யத்தில் ஏற்பட்ட அமைதியில் அவர் குரல் மட்டுமே தனித்த ஒரு ஒலியாய் வெகு நிதானத்துடன் ஒலித்தது.

"விட்ட இடத்திலிருந்து இப்பொழுது தொடர்வோம். பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒன்று சேர்ந்த ஆறு பேர் இறைவனின் படைப்பின் தாத்பரியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டி, பிப்பலாத முனிவரை அணுகி குருகுலக் கல்வி தங்களுக்கு அனுகிரகிக்க வேண்டிக் கொண்டனர் என்று பார்த்தோம். பிராணன் பற்றி அச்வலர் மகன் கெளசல்யன் கேட்டு விளக்கம் பெற்றார். மனத்தின் செயல்பாடுகளுக்கேற்ப மனிதனின் உடலும் உள்ளமும் உருக்கொள்கின்றன என்று தெரிந்து கொண்டோம்.

"பிரச்ன உபநிஷத்தில், இறை அறிவைத் தேடிப் புறப்பட்ட ஆறு பேரில் ஒருவரான சூரியனின் பேரன் கார்க்கியன் என்பவர், மனிதனின் விழிப்பு, தூக்கம், கனவு நிலைகளைப் பற்றியெல்லாம் விளக்கம் கேட்டு முனிவரிடம் விக்ஞாபிக்கிறார். அப்பொழுது பிப்பலாத முனிவர் கூறுவதாக பிரச்ன உபநிஷதத்தில் பல விளக்கங்கள் வருகின்றன" என்று சொல்லி தேவதேவன் சொல்லி கொஞ்சம் பேச்சை நிறுத்தி சுற்றும் பார்த்த பொழுது,

"இறை அறிவைத் தேடிப் புறப்படுதல் என்றால் இறைவனால் படைக்கப் பட்டவைகளைப் பற்றி அறிவு கொள்ளுதல் என்று என்று அர்த்தம் கொள்ளலாமா, ஐயா?" என்று சித்திரசேனன் கேட்டார்.

"ஆமாம். அப்படித் தான் கொள்ள வேண்டும் என்று தெரிகிறது" என்றார் தேவதேவன். "அந்தக்கால குருகுலக் கல்வியின் அமைப்பும் அப்படியாகத் தான் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. இது ஏன், எதனால் என்று தெரியாதவாறு மர்மமாக இருக்கும் விஷயங்களுக்கான காரணங்களை குருவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் என்றும் அர்த்தம் கொள்ளலாம். ஒரு குருவைத் தேடிக் கண்டு அவரது அன்றாடப் பணிகளுக்கான பணிவிடைகள் செய்து அவரிடம் கல்வி கற்பதற்கான மனநிலையையும் அதற்கான ஆற்றலையும் தேர்ச்சியையும் பெற்றார்கள். அறிவார்ந்த விஷயங்களை தேடியவர்கள் மட்டுமில்லை, அரசர்க்கும் குருகுலக் கல்வி முறை அவசியமான ஒன்றாக இருந்தது தெரிகிறது. நீதிபரிபாலனம் செய்து மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையைக் கொடுக்க வேண்டிய அரசனுக்கு வாழ்க்கையின் சகல விஷயங்களைப் பற்றிய அறிவும் தேவையான ஒன்றாக இருந்திருக்கிறது. அதனால் அரசிளம்குமரர்களும் குருகுலத்திற்கு அனுப்பப்பட்டு கல்வி பெற்றார்கள்" என்று சொன்ன தேவதேவன் தொடர்ந்தார்.

"பெருகின்ற கல்வியும் அதற்கான பாடத்திட்டங்களும் கூட எவ்வளவு அழகாக இருக்கிறது, பாருங்கள்! இந்தக் கல்வியைத் தெரியப்படுத்துகிற உபநிஷத்துக்களும் எல்லாவிதங்களிலும் பார்க்கப் போனால் பாடப்புத்தகங்கள் போலத்தான் இருக்கின்றன. எதுபற்றியும் எந்த ஞானமும் இல்லாமல், ஞானம் என்கிற ஒன்றே நிகழ்வாக எங்கும் இல்லாது உலகமே உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் பாரதத்தில் உடல், மனம், பிராணன், மூச்சு இதெல்லாம் பற்றி யோசித்திருக்கிறார்கள் என்பது தான் இந்த தேசத்திற்கான சிறப்பு...

"பிப்பலாத முனிவரிடம் கார்க்கியன் கேட்ட கேள்விகளைப் பாருங்கள். 'ஐயா, மனிதன் துயில்கையில் தூக்கத்தின் தாக்கத்தில் எவை துயில்கின்றன? எவை விழித்திருக்கின்றன? கனவு காண்கிறவர் யார்? ' என்று கேட்கிறான். தூக்கத்தில் ஆட்பட்டாலும், கனவு வருகையில் ஏதேதோ உணர்வுகளில் சிக்கிக் கொள்வதால் அயர்ந்த தூக்கத்திலும் ஏதோ அல்லது எதுவோ விழித்திருப்பதாக கார்க்கியனு க்குப் படுகிறது. அதனால் தான் தூக்கத்தில் விழித்திருப்பது யார் என்கிற கேள்வி அவன் உள்ளத்தில் எழுகிறது.

"அதற்கு முனிவர் சொல்கிறார்: 'கார்க்கியா! மாலையில் சூரியன் மறையும் பொழுது எல்லா ஒளிக்கதிர்களும் அதன் ஒளித்திரளில் எப்படி ஒடுங்குகின்றனவோ, காலையில் சூரியன் உதிக்கும் பொழுது எல்லா ஒளிக்கதிர்களும் எப்படி மீண்டும் ஒளிர்கின்றனவோ அதேமாதிரி மனிதன் தூங்குகையில் அவன் புலன்கள் அனைத்தும் அவன் மனத்தில் ஒடுங்குகின்றன' என்கிறார். அதாவது தூங்குகையில் புலன்கள் அத்தனையும் அவரவர் மனத்தில் ஒடுங்கி அவையும் துயில் கொள்கின்றன என்கிறார். அடுத்து,

"ப்ரணாக்னய ஏவைதஸ்மின் புரே ஜாக்ரதி /கார்ஹபத்யோ ஹ வா ஏஷோsபானோ வ்யானோ sன்வாஹார்யபசனோ யத்கார்ஹ- பத்யாத் ப்ரணீயதே ப்ரணயனாத் ஆஹவனீய: ப்ராண: "

"அவன் தூங்குகையில், பிராண அக்னிகள் மட்டுமே விழித்திருக்கின்றன. அபானனே, கார்ஹபத்யம்; வியானனே அன்வாஹார்யபசனம்; எது கார்ஹபத்யத்திலிருந்து உருவாக்கப்பட்டது?.. பிராணன் தான் உருவாக்கப் பட்டதால், அதுவே ஆஹவனீயம் என்கிறார் பிப்பலாத முனிவர்.

"புறவுலக நடவடிக்கைகளில் ஈடுபடுவதான புலன்கள் அயர்ந்து தூங்குகையில் பிராணன் மட்டும் இழையோடிக் கொண்டிருக்கிறது. பிராண சக்திதான் உயிர் உடலில் தங்கி இருப்பதின் அர்த்தம் ஆதலால் உடல், மன இயக்கத்திற்கு ஆதாரமான அது மட்டும் விழித்திருக்கிறது என்கிறார். துயில்கையில் மனத்தில் புலனுணர்வுகள் ஒடுங்குவதும், விழிக்கின்ற நேரத்து ஒடுக்கத்திலிருந்து மீள்வதும் பிராண சக்தியால் தான் என்பதால் அந்தப் பணிக்காக பிராண அக்னி விழித்திருக்கிறது என்கிறார்".

தொல்லியல் மேம்பாட்டுத் துறை சேர்ந்த அசோகன் எழுந்திருந்து," மேற்கொண்டு தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. கார்ஹபத்யம், அன்வாஹார்யபசம், ஆகவனீயம் என்கிற மூன்று வார்த்தைகளைச் சொன்னீர்களே! அவை பற்றியும் சொல்லிவிடுங்கள்" என்றார்.

"அதற்கு முன்னால் தூக்கம் பற்றி கார்கியன் கேட்டதற்கு பிப்பலாத முனிவர் சொன்னதை தொகுத்துப் பார்த்து விடுவோம். அப்படி முழுதையும் ஒன்றாக நினைவு கொண்டால் இனித் தொடர்வதைத் தொடர்வதற்கு செளகரியமாக இருக்கும்.." என்று தேவதேவன் அவையைச் சுற்றிப் பார்த்தார்.


(தேடல் தொடரும்)


Friday, March 25, 2011

ஆத்மாவைத் தேடி ….1 மூன்றாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

1. நினைவில் நீந்திய நிலவு முகம்

மயந்தியும் கிரிஜாவும் தங்கியிருந்த காபின் பகுதியிலிருந்து பார்ப்பதற்கு மாதுரி குடும்பம் தங்கியிருந்த காபின் கூப்பிடு தூரத்தில் இருப்பதாகப்பட்டாலும் சரிந்தும் நீண்டும் வளைந்தும் சென்ற ஐந்தாறு கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டி மாதுரி குறிப்பிட்டிருந்த அவர்களின் காபினை அடைவதற்கு பத்து நிமிஷங்களுக்கு மேலாகி விட்டது.

தனது காரை ஓட்டிக் கொண்டு தமயந்தி முன்னால் செல்ல அவளைத் தொடர்ந்து பின்னால் தன் காரில் கிரிஜா வந்தாள். பாப்-டார்ட்டை கையில் பற்றிய படியே சிணுங்கிக் கொண்டு வந்த ரிஷிக்கு மணிவண்ணன் அவன் வயசுக்கேத்த ஏதோ விளையாட்டு காட்டிக் கொண்டு வந்தான்.

முன்னால் சென்ற தமயந்தியின் கார் வளைந்து திரும்பி அந்த காபினுக்கு வெளியே நீண்டிருந்த வெற்றுவெளியை அடையும் வரை தாமதித்து பின்னால் சென்று தன் காரையும் வளைத்துத் திருப்பி தமயந்தியின் காருக்கு பக்கத்தில் நிறைய இடம் விட்டு நிறுத்தினாள், கிரிஜா.

அதற்குள் மாதுரி தன் காபின் வாசலுக்கு வந்து வெளியே நின்று கொண்டு இவர்களைப் பார்த்து சிரித்தவாறு வரவேற்றாள். உள்ளே அவள் கணவன் நின்று கொண்டு, "வாங்க.. வாங்க.." என்று எல்லோரையும் அழைத்தான். பின்னால் மாதுரியின் அண்ணனும், பெரியப்பாவும் புன்முறுவலுடன் நின்று கொண்டிருந்தனர்.

வாசல் பக்க வளைவில் ஷூக்களை கழட்டி விட்டு எல்லோரும் உள்ளே நுழைந்தனர்.

இவர்கள் தங்கியிருக்கும் காபினை விட கொஞ்சம் பெரிதாக இந்தக் காபின் இருந்தது சாதாரணப் பார்வைக்கே தெரிந்தது. "பரவாயில்லையே! எங்களதை விட இந்தக் காபின் பெரிசு தான்!" என்றாள் தமயந்தி, மாதுரியை நெருங்கி.

"அப்படியா.." என்ற மாதுரி வியப்பு காட்ட அருகிலிருந்த சோபாக்களில் அமர்ந்தனர்.

"தமா! இங்கே பார். ஃபயர் பிளேஸ் கூட எவ்வளவு பெரிசா இருக்குன்னு!" என்று கிரிஜா வலது கோடிப் பக்கம் கைகாட்டினாள்.

"ஓ! ஒண்டர்புல்.. எம்மாம் பெரிசு!" என்று தமயந்தி வியந்து ஆமோதித்ததைக் கண்டு சிரித்து விட்டாள் மாதுரி. பெரியப்பா பக்கம் கைகாட்டி, "அப்பா கூட இப்படித்தான் அடிக்கடி 'எம்மாம் பெரிசு'ன்னு தான் சொல்லுவார். ஆரம்பத்திலே எனக்கு இந்த 'எம்மாம்' என்னன்னு புரியலே.. ஒரு நாளைக்கு அவர்கிட்டேயே கேட்டு விட்டேன். கை ரெண்டையும் அகல விரிச்சுக் காட்டி இம்மாம் பெரிசுன்னார். இந்த இம்மாமும் என்னன்னு தெரியலே. நீங்களே சொல்லுங்கள். 'எம்மாம்' என்னன்னு தெரிஞ்சாத் தானே இந்த 'இம்மாமும்' என்னன்னு தெரியும்!" என்று சொல்லி குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.

சொல்லி வைத்தாற் போல பெரியப்பாவையும் சேர்த்து அத்தனை பேரும் சிரித்தனர். சிரித்து விட்டு பெரியப்பா கேட்டார். "அம்மாடி! சும்மாக் காச்சும் தானே சொல்றே?" மறுபடியும் 'கொல்'லென்ற சிரிப்பு அந்த காபின் பூராவும் படந்தது.

"எதுகை, மோனை இதெல்லாம் எங்க பெரியப்பாவுக்கு அத்துப்படி. பேச ஆரம்பிச்சாலே சரளமா வரும். அதை கேட்டு ரசிக்கறத்துக்காகவே இப்படி ஏதாவது நாங்கள் கிளப்பி விடறதுண்டு.. எங்க பெரியப்பா பெரிய கவிஞராக்கும்!" என்று மாதுரி பெருமையோடு சொன்னாள்.

"அப்படிப் போடு! அவர் ஜிப்பா போட்டிட்டிருக்கறதைப் பார்த்து நான் அப்பவே நெனைச்சேன்.. எழுத்தாளர், கவிஞர் இப்படி ஏதாவது இருக்கும்னுட்டு.." என்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டு பிரகாஷ் சொன்னான்.

"அதெல்லாம் அந்தக் காலம்! இப்பெல்லாம் இவங்க ஃபேஷனே மாறிடுச்சு. தெரியுமிலே!" என்றான் குமார்.

"எழுத்தும் மாறிடிச்சுல்லே; அதனாலே ஃபேஷனும் மாறிடிச்சு" என்றார் பெரியப்பா கூர்மையாக.

"வாஸ்தவம் தான், நீங்க சொல்றது" என்று குமார் அவர் சொன்னதை ஆமோதித்தான். "ஒரு காலத்திலே தமிழ்லே கதை, கவிதைன்னு எதையும் விட்டு வைக்கலே நான். படிச்சிட்டுத்தான் மறுவேலைன்னு ஒரு கிரேஸ் இருந்தது. இப்போ அதெல்லாம் எங்கே போனதுன்னே தெரியலே; என்ன காரணம்னு எனக்கே சரியாத் தெரிலே. ஒரு ஈடுபாடோட கவனத்தைச் செலுத்திப் படிக்க முடிலே. அவ்வளவு தான் சொல்ல முடியும்" என்றான்.

"அமெரிக்காலே இருந்திண்டு தமிழ் இலக்கியம் பத்தி அதுவும் தமிழ்லேயே ஒரு இலக்கிய விவாதம் ஆரம்பிச்சிடுத்தே!" என்று ஆச்சரியப்பட்டாள் கிரிஜா.

"அந்தந்த நேரத்லே அதைஅதைப் பேசிடணும். கிடைச்ச சான்ஸைவிடக்கூடாது. ஒரு இலக்கியவாதி பெரியப்பா இங்கே இருக்கறச்சே, இப்படிப் பேசற இந்த வாய்ப்பை நழுவ விடலாமா?.. அதான்" என்றான் குமார்.

"ஒரு சாப்பாட்டுப் பிரியன் நான் இங்கே இருக்கேன். என்னைத்தான் யாரும் கண்டுக்கக் காணோம்.." என்று பேச்சை திசைதிருப்பினான் மாதுரியின் அண்ணன்.

மாதுரியும், கிரிஜாவும் கிச்சன் அறைப் பக்கம் போய்விட்டு வந்தனர். ரிஷிக்கு கிரிஜா பாலை பாட்டிலில் ஊற்றிக் கொண்டு வந்தாள். மணிவண்ணன் தட்டு நிறைய தனக்குப் பிடித்த எதையோ வாங்கிக் கொண்டு பின்னால் வந்தான்.

"இதோ.. அபிடைட்டோட ஆரம்பிச்சிடலாம், அண்ணா" என்று வெவ்வேறு தட்டுகளில் சமோசா, கட்லெட் என்று அவள் கொண்டு வர, அவள் அண்ணன் நடுஹாலில் நீண்ட ஒரு டேபிளை நகர்த்த அதன் மேல் கொண்டு வந்தவைகளை வைத்தாள் மாதுரி. தொட்டுக் கொள்ள சட்னி, தக்காளி சாஸ், வெங்காயப் பச்சடி எல்லாம் தனித் தனியாக. ஸ்பூன்கள், ப்ளேட்டுகள், கோக் பாட்டில்கள் எல்லாம் ரெடி.

"என்னங்க.. இந்தியாவிலே இருக்கிற மாதிரியே ஒரு சூழ்நிலையை உருவாக்கிட்டீங்க போலிருக்கு" என்று எழுந்து ப்ளேட்டையும் ஸ்பூனையும் பிரகாஷ் எடுத்துக் கொண்டான்.

"பச்சடிலே பாருங்க.. கொத்தமல்லியைக் கூட அரிஞ்சு போட்டிருக்கோம். கீழே இறங்கிப் போனா கான்டான்லே அத்தனையும் கிடைக்கிறது. சமோசா கூட நம்ம நாட்டு ஒரு பிரட் கடைலே ஆர்டர் கொடுத்து வாங்கினதுதான்" என்றாள் மாதுரி.

"இந்த சாப்பாட்டு விஷயம் மெயின். அது ஓக்கே ஆயிடுத்துன்னா எங்கே வேணா வேலை செஞ்சு பிழைப்பை ஓட்டலாம்.. என்ன சொல்றீங்க?" என்றான் சுரேஷ்.

"கரெக்ட்.. அதுனாலே தான் நாடாறு மாசம் காடாறு மாசம்ன்னு இருக்கற ஸ்நோவையும், கடும் வெயிலையும் ஒரு பொருட்டா நெனைக்கத் தோணலே. பழகிப் போயிடுத்துன்னா, அது கூட ரசிக்கிற மாதிரி தான் இருக்கு. ஆம் ஐ கரெக்ட்..?" என்றாள் தமயந்தி.

இத்தனையையும் ஒரு மெல்லிய புன்முறுவலுடன் ரசித்துக் கொண்டிருந்தார் பெரியப்பா. கரெக்ட் என்று பிறர் சொல்வதை ஆமோதித்து, தான் சொல்வது சரியா என்று பிறரிடம் சரிபார்த்துக் கொள்ளும் தமயந்தியின் அணுகுமுறை அவருக்குப் பிடித்திருந்தது.

"கரெக்ட், தமயந்தி.." என்று அவள் சொல்வதை ஆமோதித்த மாதுரிக்கு, தமா பேசும் முறை, பேசுகையில் கொஞ்சமே தலையைச் சாய்த்துப் பேசுகிற பழக்கம், அதே நேரத்தில் சொல்லி வைத்தாற் போல சிரிக்கும் கண்கள், வட்ட முகத்தில் தீர்க்கமான அந்த நெற்றி அமைப்பு, நெற்றி முகட்டுக்கு மேலே படிந்து வாரினாலும் நெளிநெளியாய் பளபளத்த கூந்தல் அழகு என்று எல்லாமே வெகு அருகில் பார்க்கும் பொழுது இத்தனை நேரம் தெரியாத ஒன்று தெரிந்து சடாரென்று பொறி தட்டிய மாதிரி தன் உயிரில் கலந்த ஒருவரின் முக அமைப்பை அவள் நினைவுக்குக் கொண்டு வந்தது.

அது சின்ன வயசில் தன் பிஞ்சுக் கரங்களால் அவள் தடவிப் பார்த்த வட்ட முகம். அம்புலி காட்டி அமுதூட்டுகையில் அங்கே பார்க்காமல் கையைக் காற்றில் அளைந்து அளைந்து அவள் ஆசையுடன் தொட்டுப் பார்த்த முகம். சின்ன வயசில் விளையாட்டுத்தனமாய் கழுத்தைச் சுற்றிக் கொண்டு தொங்குகையில், 'வலிக்கறதுடி..' என்று சிணுங்கிய முகம், துள்ளித் திரிந்த அவளது பருவ வயதில் அவளைத் தோழியாய் பார்த்துப் பதைபதைத்த முகம்-- அந்த பெற்ற தாயின் முகச்சாயலைப் போலவே இருந்த இன்னொருவரின் முகத்தை வெகு நெருக்கத்தில் பார்த்த சந்தோஷத்தில் மாதுரியின் மனம் குதி போட்டது.


(இன்னும் வரும்)Friday, March 18, 2011

ஆத்மாவைத் தேடி …. மூன்றாம் பாகம்

இது வரை வந்தது..... முன் கதைச் சுருக்கம்.


கிருஷ்ணமூர்த்தி தமிழகத்தின் அரியலூரைச் சேர்ந்தவர். இறைவனின் பெருமை போற்றும் கதைகள் கூறி உபன்யாசங்கள் செய்பவர். அதன் பொருட்டு பல ஊர்களுக்கு பிரயாணப்படுவதால், பெரும்பாலும் வீட்டை விட்டு விலகி வாசம் செய்வதாகவே அவர் வாழ்க்கை ஆகிவிட்டது. அப்படிப்பட்டவருக்கு திடுமென மனத்தில் ஒருநாள், 'இமயமலை கைலாயத்திற்குச் சென்று இறைவனை தரிசிக்க வேண்டும்'என்று லேசாக கீற்று போல் ஒளிவிட்ட ஒரு நப்பாசை திண்மையான எண்ணமாக உருபெற்று நிஜமாகவே கிளம்பிவிடுகிறார்.

கிளம்பியவர் தில்லி ரயில் நிலைய பிளாட்பாரத்தின் ஒரு ஒதுங்கிய மூலையில் பெஞ்ச்சில் அமர்ந்து ஜம்மு தாவி எக்ஸ்பிரஸூக்குக் காத்திருக்கும் இரவில் அப்படியே அயர்ந்து விடுகிறார். அரைத் தூக்கமா, விழிப்பு நழுவிய நிலையா என்று சரிவர புரியாத ஒரு சூழலில் யாரோ ஒரு பெரியவர் தன் அருகில் அமர்ந்து பேச்சுக் கொடுத்த தருணத்தில், 'வந்த வேலை முடியவில்லை, கிருஷ்ணமூர்த்தி! இன்னும் நிறைய இருக்கிறது' என்று நினைவூட்டுகிற தொனியில் அவரிடம் சொன்ன நினைவு அவர் நெஞ்சில் தேங்கி விடுகிறது. நினைவு மீண்டு விழிப்புற்ற போது ஜம்மு தாவி எக்ஸ்பிரஸைத் தவற விட்டு விட்டது அவருக்குத் தெரிகிறது.

அதே நேரத்தில் ஸ்டேஷன் மாஸ்ட்டர் ஆள் அனுப்பி அவரைத் தேடுகிறார். தன்னைத் தேடி வந்தவருடன் இரயில் நிலைய அதிகாரியை அணுகிய கிருஷ்ணமூர்த்திக்கு, மனோகர்ஜி என்பவர் தான் நடத்தும் ஆசிரமத்திற்கு அவரை அழைத்துவர கார் அனுப்பிக் காத்திருப்பதாகத் தெரிகிறது. இரயில் நிலைய பிளாட்பார இருட்டில் சூசகமாகக் கிடைத்த ஆக்ஞை இதுதானோவென்று எண்ணுகிறார். எதற்காக இதெல்லாம் என்று சரியாகப் புரிபடவில்லை என்றாலும் அடுத்தடுத்து வழி நடத்துகிற திசையில் செல்ல அவர் மனம் விரும்புகிறது. இந்தப் பிறவியில் தான் செய்தாக வேண்டிய ஏதோ பணி காத்திருப்பது போலவும், அதைச் செய்வதற்கு தருணம் வந்து தான், அதற்காகத் தன்னை அழைத்துச் செல்வது போலவும் அவருக்குத் தோன்றுகிறது. செய்தாக வேண்டிய அந்தப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் உற்சாகத்துடன் கிருஷ்ணமூர்த்தி வந்தவருடன் கிளம்புகிறார்.

மகாதேவ் நிவாஸ் என்னும் அந்த ஆசிரமத்தில் கிருஷ்ணமூர்த்திக்கு நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. 'ஆத்மாவைத் தேடி' என்னும் தலைப்பில் தில்லியில் மிகப்பெரிய சதஸ் நடத்த மனோகர்ஜி தீர்மானித்திருப்பதும், அந்த சதஸூக்கான முக்கிய பணிகளை ஏற்றுக்கொள்ள அவர் தன்னைத் தேர்ந்தெடுந்திருப்பதாகவும் தகவல் அறிய கிருஷ்ணமூர்த்திக்கு நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாமே மிகுந்த வியப்பளிக்கிறது. நடப்பதெல்லாம் தெய்வ சங்கல்பம் தான் என்கிற உறுதி அவர் மனசில் கெட்டிப்படுகிறது. இந்த மாபெரும் யக்ஞம் போன்ற உயர்ந்த பணிக்கு தானும் ஒரு துரும்பு போல பங்கெடுத்துக் கொள்ளும் பாக்யம் அருளிய இறைவனின் கருணை நினைத்து மனம் உருகுகிறார். மிகுந்த சிரத்தையுடன் தினமும் அந்த சதஸூக்காக முன்னேற்பாடுகளாக நடக்கும் செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது கிருஷ்ண மூர்த்திக்கு மன உற்சாகத்தைக் கொடுக்கிறது. 'கைலாசத்திற்கு பயணம் மேற்கொண்டவன் இங்கு திருப்பப்பட்டது இறைவனின் ஏற்பாடே' என்று நடக்கும் ஒவ்வொரு செயலும் அவருக்கு நிச்சயப்படுத்தி மனதை நெகிழச் செய்கிறது.

கிருஷ்ணமூர்த்தியின் மனைவி ராதை அவர் மனமறிந்து நடக்கும் குணவதி. மகன் அர்ஜூன், மருமகள் சுபா என்று குடும்ப உறவுகளுக்குத் தன்னைத் தத்தம் செய்தவள். அர்ஜூன் சி.ஏ. பண்ணியவன். அரியலூரில் குடும்பத்தை வைத்துக் கொண்டு தினமும் சொந்த ஆடிட் ஆபீசுக்கு இரயிலில் திருச்சி சென்று வருபவன். திருமணமான அர்ஜூனின் சகோதரி கிரிஜா அமெரிக்காவில் இருக்கிறாள். அவளுக்கு ரிஷி என்று ஒரே பையன்.

கிருஷ்ணமூர்த்தியின் மாமா பெண் மாலதி என்கிற மாலு. அவள் தன் கணவர் சிவராமனுடன் அரியலூர் வந்திருப்பவள் தொலைபேசியில் கிருஷ்ண மூர்த்தியுடன் தொடர்பு கொண்டு, தன் கணவருடன் காசிப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும், தில்லி வந்து கிருஷ்ணா தங்கியிருக்கும் ஆசிரமத்திலேயே அவரைச் சந்திப்பதாகவும் சொல்கிறாள். அதன்படியே தில்லி சென்ற இருவரும் அந்த மகாதேவ் நிவாஸின் ஆசிரம நடவடிக்கைகளில் மனம் பறிகொடுத்து அந்த ஆசிரமத்தை நடத்தி வரும் மனோகர்ஜியின் விருப்பப்படி அங்கேயே தங்கி 'ஆத்மாவைத் தேடும்' அவர்களின் தேடலில் தாங்களும் பங்கு கொள்வதில் மன மகிழ்ச்சி கொள்கின்றனர்.

சிவராமன்- மாலு தம்பதியினரின் ஒரே மகள் தமயந்தியும் தன் கணவருடன் அமெரிக்காவில் வாசம் செய்கிறாள். அவளுக்கு ஆறு வயதில் மணிவண்ணன் என்று ஒரே பையன்.

அமெரிக்காவின் ஃபால் சீசன் ரசனைக்காக ப்ளு ரிட்ஜ் பார்க் வே என்னும் இடத்திற்கு கிரிஜாவின் குடும்பமும் தமயந்தியின் குடும்பவும் டூர் ஏற்பாடு செய்து கொண்டு வந்திருக்கின்றனர். அந்தச் சுற்றுப்பயணத்தில் தன் குடும்பத்துடன் சுற்றுலா வந்திருக்கிற மாதுரி என்கிற பெண்ணை அவர்களுக்கு சந்திக்க நேரிடுகிறது. தமயந்திக்கு அந்த மாதுரி, தன் அம்மா மாலதி மாதிரியே தோற்ற ஒற்றுமை கொண்டிருப்பது வியப்பேற் படுத்துகிறது. மாதுரி தாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து ஒரு பகல் உணவில் பங்கு கொள்ள தமயந்தியையும் கிரிஜாவையையும் அழைக்கிறாள்.


(இனி வருவது....)

Wednesday, February 23, 2011

விகடனும் குமுதமும்

வெள்ளிக்கிழமை சாயந்திரம் வரை ராஜியிடமிருந்து போனில்லை.

கோர்ட் வழிகாட்டல் கொடுத்து மூன்று மாசமாயிற்று; இதுவரை இப்படி நடந்ததில்லை. சரியா நாலு மணிக்கு ராஜியிடமிருந்து எத்தனை மணிக்கு இவன் வீட்டுக்கு வந்து குழந்தையைக் கொண்டு வந்து விடுகிறாள் என்று போன் வந்து விடும். முதல் தடவையாக இன்று தான் போனில்லை.

மோகனுக்கு ஆயாசமாக இருந்தது.

நாலரை மணிவரை கூப்பிடக் காணோம். என்ன ஆயிற்று இவளுக்கு?.. அவனால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. நாமே அவளுக்குப் போன் பண்ணிப் பார்க்கலாமா என்று அவன் நினைத்த பொழுது தான் தொலைபேசி கூப்பிட்டது.

ராஜிதான் லைனில் இருந்தாள். அவள் குரலில் ஏகப்பட்ட பதட்டம். "ரமேஷை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறது" என்று முழுசாக மூணு வார்த்தைகள் சொல்வதற்குள் அவளுக்கு ஏகத்துக்கும் மூச்சு வாங்கியது.

மோகன் பதறிப் போய்விட்டான். "என்னாச்சு?.. எங்கேயிருந்து பேசறே?.." என்று தடுமாறினான்.

"ஆசுபத்திரிலேந்து தாங்க... குழந்தைக்கு திடீரென்று ஜூரம் அனலாக் கொதிக்க..."

"எந்த ஆசுபத்திரி?" என்று கேட்டு முடிப்பதற்குள் அவனுக்கு நெற்றி பூராவும் வியர்த்து விட்டது.

"புஷ்பம் ஆசுபத்திரிங்க...ஆறாவது வார்ட்... இன்னிக்கு ஸ்கூல் கூட போனான்.." அவள் சொல்லி முடிக்கக் கூட பொறுமையாக அவனால் கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை.

"இதோ வந்திட்டேன்.." என்று போனைத் துண்டித்து, கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான்.

புஷ்பம் ஆசுபத்திரி வழக்கமான ஆசுபத்திரி களையுடன் இருந்தது.

லிப்ட்டிற்கு காத்திருக்கையில் 'ச்சை..' என்று வெறுத்து, ஒருவழியாக அது வந்து ஆறேழு பேர் அதில் திணிக்கப்பட்டு, ஆறாவது மாடிக்கு வருகையில் அவனுக்கு வியர்த்தது... வார்டுக்குள் நுழைகையிலேயே ராஜி எதிர்ப்பட்டாள். "என்ன செஞ்சு தொலைத்தே?" என்று சீறிவிழப் போனவன், முகம் நிறைந்த கலவரத்துடன் அவளைப் பார்த்ததும் கஷ்டப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டான்.

ரமேஷ் கட்டிலில் ஜூர அனத்தலில் கிடந்தான். " இங்கே பார்! அப்பாடா..ரமேஷ்!.." என்ற அவனின் கூப்பிடலுக்கு லேசாகக் கண்ணைத் திறந்துப் பார்த்து உடனே மூடிக்கொண்டான்.

"இப்போத்தான் டாக்டர் வந்து ஊசி போட்டு விட்டுப் போனார்.... தூங்கி எழுந்திருந்தா ஜூரம் தணியும் என்று சொல்லியிருக்கார்.." என்று சொன்னவளை விரோதத்துடன் பார்த்தான்.

"வழக்கம் போல ஸ்கூலுக்குப் போனான்.. அவன் வந்ததும், உங்ககிட்டே கொண்டு வந்து விடலாம் என்று நானும் ரெடியாத்தான் இருந்தேன்.. வரும் பொழுதே தலைய வலிக்கறது அம்மான்னான். நெத்திலே கைவைச்சுப் பார்த்தா லேசா சுட்டது..மாத்திரை கொடுத்தேன்,கேக்கலே.. கொஞ்ச நேரத்லே ஜூரம் தகிக்க ஆரம்பிச்சிடுத்து...அதான், இங்கே அட்மிட் பண்ணிட்டு, உங்களுக்கு போன் செஞ்சேன்.." என்று மூச்சு வாங்க ஒப்பித்த அவளைப் பார்க்கையில் அவனுக்கு லேசாகப் பரிதாபமாக இருந்தது.

"டாக்டர் என்ன சொன்னார்?"

"ஊசி போட்டிருக்கார்..மாத்திரையும் கொடுத்திருக்காங்க.. சாதாரண ஒவ்வாமை தான், சரியாப் போயிடும்னு சொன்னார்.." என்று சொல்லிவிட்டு, புடவைத் தலைப்பால் நெற்றியில் இட்டுக் கொண்டிருந்த குங்குமப் பொட்டு அழிந்து விடாமல் ஜாக்கிரதையாக வேர்வை துடைத்துக் கொண்டாள் ராஜி. கழுத்தில் இரட்டைவட சங்கிலியுடன் தாலிச்சரடு ஸ்பஷ்டமாகத் தெரிந்தது.

அவன் வந்ததும் தான் அவளிடம் இருந்த பதட்டம் தணிந்து லேசான நிம்மதி ஏற்பட்டது வெளிப்படையாகத் தெரிந்தது. பொறுப்பை ஆணிடம் ஒப்படைத்து விட்ட நிம்மதி.

கொஞ்ச தூரத்தில் ஸ்டெத்ஸ் மாலையுடன் நாலைந்து பேர் விவாதித்தபடி வருவது கண்ணுக்குத் தட்டுப்பட்டது. அதில் சிவப்புக்கலர் சட்டை போட்ட ஒருவரைச் சுட்டி, "அந்த டாக்டர் தாங்க நம்ம ரமேஷைப் பார்த்தது.." என்றாள் ராஜி.

அதற்குள் டாக்டரே இவர்கள் இருந்த இடத்திற்கு வந்து விட்டார். அவளைப் பார்த்து, "பிளட் ரிசல்ட்டும் பார்த்திட்டேன்...பயப்படற மாதிரி ஒண்ணும் இல்லை..." என்றவர், கட்டிலில் கிடந்த ரமேஷின் நாடி பிடித்துப் பார்த்து விட்டு தலை நிமிர்ந்தார். இப்பொழுதுதான் மோகனைப் பார்த்தார் போலும்.

அதற்குள் மோகனே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். "நான் தான் ரமேஷ் ஃபாதர், டாக்டர்.. "

"அப்படியா...குட்..ஒண்ணுமில்லை, கொஞ்ச நேரத்திலே, ஜூரம் விட்டுறும்.. தென் ஹி வில் பி நார்மல்.. ஓ.கே.. கம்ப்ளீட் ரெஸ்ட் வேணும் .." என்ற டாக்டர், மோகனைப் பார்த்து, " இன்னும் ரெண்டு வேளைக்கு மாத்திரையை மட்டும் கண்டினியூ பண்ணச்சொல்லியிருக்கேன்..நான் நாளைக்குப் பாக்கறேன், அப்புறம் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்...

அவர் கிளம்பும் பொழுது ராஜியைப் பார்த்து, "நல்லவேளை..உடனே கூட்டி வந்து அட்மிட் செய்தீர்கள்.." என்று அவள் செய்ததைப் பாராட்டுகிற மாதிரி சொன்னது, அவனுக்கு ஏதோ தான் குற்றமிழைத்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

நினைத்துப் பார்க்கையில் எல்லாம் ஏதோ நாடகம் போலிருக்கிறது. யாரோ முதலிலேயே சீன் சீனாக அழகாக எழுதி, காட்சியமைப்புகள் எல்லாம் தீர்மானித்து விட்டு, இந்த இந்த பாத்திரங்களில் நடிக்க நீங்களெல்லாம்தான் லாயக்கு என்று நடித்துக் கொடுக்கக் கூப்பிட்ட மாதிரி இருக்கு.. நடிப்பதில் ஒன்றுதலும், செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்கிற பக்குவமும் இருந்தால், அப்படிப்பட்டவர்களுக் கென்று ஸ்பெஷலாக காட்சியமைப்புகளில் மாற்றம் இருக்கும் போலிருக்கிறது. மற்றபடி வாழ்க்கையே அடுத்த காட்சி என்ன என்று தெரியாத நாடகமேடையாகத்தான் அவனுக்குப் பட்டது.

இன்னகாரணம் என்று சுட்டிக் காட்ட எதுவும் இல்லை. தொட்டதெற்கெல்லாம் அது எதெனால் என்று தெரியவில்லை, இருவருக்கும் பிடிக்காமல் போயிற்று. கல்யாணம் ஆகி புதுக்குடித்தனம் ஆரம்பித்த நாளிலிருந்து இந்தக் கதைதான். அவனுக்கு விகடன் என்றால் இவளுக்கு குமுதம் என்கிற மாதிரி சின்னச் சின்ன விஷயங்களிலெல்லாம் மாறுபட்ட கருத்து.

ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவரும் தங்கள் சுயத்தைக் கட்டி அழுதால் இப்படித்தான் நேரும் போலிருக்கு. இருவரிடத்திலும் கொஞ்சம் கூட விட்டுக்கொடுத்தல் இல்லாதபொழுது அது வெடித்துச் சிதறியது. கடைசியில் பிரிந்து விடுவது என்று தீர்மானித்து கோர்ட் வரை போனார்கள். அவர்களும் ஆனவரை சேர்த்துவைக்கப் பார்த்தார்கள். முடியாது போனபோது, 'ஆறுமாசம் தனித்தனியாக வாழ்ந்து காட்டுங்கள்; அப்புறம் தான் எந்த நடவடிக்கையையும் பற்றித் தீர்மானிக்க முடியும்' என்றார்கள். ராஜி அவள் பிறந்த வீட்டிற்குப் போனாள். பெற்றவர்கள் சொன்ன எந்த புத்திமதியையும் ஏற்றுக் கொள்ள இருவருக்குமே சங்கடமாக இருந்தது.

இவர்கள் இருவரும் குவிமையமாக ஒன்று சேர்ந்த ஒரே விஷயம், பெற்றெடுத்த குழந்தையிடம் பாசம் காட்டியது தான். அவனுக்கும் பத்து வயசு முடியப்போகிறது.. நான்காம் வகுப்பு படிக்கிறான். ரமேஷின் பள்ளிக்கூட நேரமும், இவர்கள் அலுவலக நேரமும் போக மற்ற நேரமெல்லாம் அவனிடம் கொஞ்சிக் குலாவுவதில் இருவருமே குறைவைத்ததில்லை; தனித்தனியான கொஞ்சல் போக, சில நேரங்களில் குழந்தையை நடுவில் வைத்து ஆளுக்கொரு பக்கமாக அணைத்துக் கொள்ளும் சந்தர்பங்களும் வரும். இருவர் முகங்களும் குழந்தையை நடுவில் வைத்து மிக நெருக்கத்தில் இருக்கும் அப்படிப்பட்ட நேரங்களில், இரண்டு பேருக்கும் இடையே ஏன் இந்த முரண்பாடு, எதற்காக இப்படி ஒருத்தருக்கொரு த்தர் மாறுபட்டு சண்டை போட்டுக் கொள்கிறோம் என்று இருவருக்குமே புரியாது. இருந்தும் ஏதாவது ஒரு விஷயத்தில் அடுத்த அரைமணி நேரத்தில் இருவரும் முரண்பட்டு அதுவே ஒரு பெரும் குதறலாக முடிந்துபோகும்.

அதுவும் கோர்ட் சொன்ன வழிகாட்டல் தான்; ஒவ்வொருவாரமும் ஒருவரிடம் என்று, மாற்றி மாற்றி குழந்தை இருக்க வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவுக்குள் யாரிடம் குழந்தை இருக்கிறதோ, அவர் இன்னொருவரிடம் குழந்தையை தன் பொறுப்பில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடவேண்டுமென்பதை ஏற்றுக் கொண்டு இதுவரை காப்பாற்றிவிட்டார்கள். எந்தத் தடவையும் இல்லாதபடி இந்தத் தடவைதான் குழந்தை ரமேஷூக்கு உடல்நிலை சரியில்லாது போய் அவனை ஆசுபத்திரியில் சேர்க்கும் படி ஆகிவிட்டது.

"ஏங்க...குழந்தை உங்களைக் கூப்பிடறாங்க.." என்று ராஜியின் குரல் கேட்டு, மூலையில் ஸ்டூலில் உட்கார்ந்த்திருந்தவன், சிந்தனை கலைந்து 'பெட்'டுக்கு ஓடி வந்தான்.

மலங்க மலங்க விழித்த ரமேஷைப் பார்த்து ஆடிப்போய்விட்டான் மோகன். "ரமேஷ்..இங்கே பார்!..அப்பா வந்திருக்கேன், பார்.." என்று தடுமாறியவனின் சட்டை நுனியைப் பிடித்துக் கொண்டான் குழந்தை.

ஜூரம் தணியாததின் வேகம் கண்ணிலும், அணத்தலிலும் வெளிப்பட்டது. "அப்பா..." குரல் ஈனஸ்வரத்தில் குழந்தையிடமிருந்து வெளிப்பட தலைகுனிந்து, "நான் இங்கேதாண்டா இருக்கேன்.." என்று வாத்ஸல்யத்துடன் குழந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

அரைகுறைக் குழறலுடன். "அப்பா..நீ எங்கேயும் போயிடாதேப்பா.." என்று கைநீட்டி மோகனின் முகம் தொட்டான் ரமேஷ்.

மோகனின் கண்கள் கலங்கி விட்டன.."எங்கேயும் போகமாட்டேன்...இங்கேயே இருக்கேன், பார்!" என்று அவன் ரமேஷை அணைத்துக் கொண்டபொழுது தணலாகச் சுடும் உடம்பின் வெப்பம் அவனையே சுட்டது. 'ஆண்டவனே!... குழந்தையைக் காப்பாற்று....அப்படியே இந்தக் குழந்தையின் ஜூரத் தகிப்பை எனக்கு மாற்றிவிடு...எந்தத் தப்பும் செய்யாத இந்த சின்னஞ்சிறு உயிரைக் காப்பாத்துப்பா' என்று மனசார வேண்டிக் கொண்டான் மோகன்.

அவன் கண்களில் வழிந்த நீரைத்துடைத்து விட்டாள் ராஜி. "அதான் டாக்டர் சொன்னாரே..ரமேஷுக்கு சரியாப் போயிடுங்க...நீங்க கலங்கினா, எனக்கு யாருங்க ஆறுதல் சொல்லுவா...ப்ளீஸ்.."

கொஞ்ச நேரத்தில், ரமேஷூக்கு எங்கிருந்து தான் அப்படி ஒரு தூக்கம் வந்ததோ தெரியவில்லை....சீராக சுவாசம் இழையோட, லேசாக உதடு திறந்து தூங்கும் குழந்தை கையைத் தொட்டவாறு அருகேயே ஸ்டூல் போட்டு உட்கார்ந்து விட்டான் மோகன். படுக்கைக்கு அருகில் சுவரில் சாய்ந்தவாறு ராஜி.

பொல பொலவென்று பொழுது விடிந்திருந்தது.

லேசான முதுகுத் தொடலில் திடுக்கிட்டு விழித்தான் மோகன். ராஜிதான். அப்படியே ஸ்டூலில் உட்கார்ந்தபடி தன்னையறியாமல் தூங்கிப் போயிருக்கிறான்.

"தூக்க மருந்து கொடுத்திருக்காங்க போலிருக்கு; ராத்திரி முழுக்க ரமேஷ் நல்லாத் தூங்கினாங்க... இப்போ ஜூரம் நல்லா இறங்கியிருக்குங்க.." என்று முகம் மலரச் சொன்னாள்.

நெற்றியில் கைவைத்துப் பார்க்கையில் மோகனுக்கும் திருப்தியாயிருந்தது.

"நீங்களும் இல்லையா?..நான் ரொம்பவும் பயந்து போய்ட்டேங்க..இனிமே என்னை விட்டு எங்கேயும் போயிடாதீங்க.." என்றவளின் கண்கள் கலங்கி அவனை நெகிழச்செய்தது.

"சீ..அசடு மாதிரி அழாதே!..என்னை விட நீ தான் தைர்யசாலின்னு நான் நெனைச்சிண்டு இருக்கேன்.. நீயே கலங்கினா, எனக்கு யார் இருக்கா, சொல்லு!" என்று மோகன் அவள் கைபற்றினான்.

"எல்லாம் என் தப்பு தாங்க.. நான் சொல்றது ரைட்டாத்தான் இருக்கும்ங்கற மனோபாவம்..சின்ன வயசிலேந்து, இன்னொருத்தருக்கு விட்டுக்கொடுத்துப் போகணும்ங்கறது தெரியாமலேயே வளர்ந்திட்டேங்க...எங்க அம்மா,அப்பா சொல்றதைக் கேட்டிருந்தாக்கூட இந்தளவுக்கு ஆகியிருக்காது.." என்று குமைந்தவளை ஆசுவாசப்படுத்தினான் அவன்.

"இல்லே, ராஜி.. நீ எவ்வளவோ நல்லவள்; வெகுளி...எனக்கும் இத்தனை முரட்டுத்தனம் கூடாது."

"நீங்க ஆயிரம் சொல்லுங்க, எனக்கு மனசு கேக்கலே..நமக்குன்னு யார் இருக்கா சொல்லுங்க... அப்பா-அம்மா இருக்காங்கதான்! இருந்தாலும் நாமே அப்பா அம்மா ஆகிட்ட பின்னாடி கொஞ்ச கூட விவஸ்தையில்லாம, நம்ம குழந்தைக்கெதிராவே சண்டை போட்டிருக்கோமே?.. நம்மை விட்டா அதுக்குத்தான் வேறே என்ன நாதி இருக்கு?..ராத்திரி பூரா நெனைக்க நெனைக்க எனக்கு மனசே ஆறலிங்க.." என்று கேவியவளை, தோள் தொட்டுச் சமாதானப்படுத்தினான் மோகன்.

"சரி..சரி..உனக்கு நான்; எனக்கு நீ; நமக்கு நம்ம குழந்தை ரமேஷ்!. சரிதானா?.. முக்கோணம் போல அமைஞ்சாச்சு...அதைக் காப்பாத்திக்கறது நம்ம சாமர்த்தியம்.. இத்தனை காலம், யதார்த்த உலகம் புரியாம வானத்லே பறந்தோம்..இப்போ தான் பூமிலே கால் பாவித்து..." என்று ஏதோ தத்துவம் போல் சொல்பவனை, புரிந்து கொள்ள முயற்சிப்பது போல நிமிர்ந்து பார்த்தாள் ராஜி.

காலை டெஸ்ட்டுகளுக்காக தூரத்தில் நர்ஸ் வருவது தெரிந்தது.

"நீ வேணா பல் விளக்கிட்டு வா..நான் போய் காப்பி வாங்கிட்டு வந்திடறேன்" என்றான் மோகன்.

"இல்லே..மாமா ராத்திரி போன் பண்ணினார். வர்றதா சொல்லியிருக்கார்" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மோகனின் பெற்றோர் அந்த வார்ட் கோடியில் வருவது தெரிந்தது. கூடவே ராஜியின் அப்பாவும் அம்மாவும். மோகனின் அம்மா கைக்கூடையில் காபி பிளாஸ்க் இருப்பது பக்கத்தில் வந்ததும் தெரிந்தது.


"ரமேஷூக்கு இப்போ எப்படிம்மா, இருக்கு..தேவலையா?" என்றவருக்கு, "இப்போ பரவாயில்லையப்பா. டாக்டர் வந்து பார்த்திட்டு டிஸ்சார்ஜ் பண்ணிடுவார் என்று நினைக்கிறேன்" என்றாள்.

"எங்களுக்கு ரொம்ப கவலையா போயிடுதுப்பா.." என்ற ராஜியின் அப்பாவிற்கு, "நானும் ரொம்ப பயந்திட்டேன், மாமா..இப்போ எங்க கண்களும் திறந்திடுச்சி.." என்று அவரை அர்த்தபுஷ்டியுடன் பார்த்தான் மோகன்.

கொண்டு வந்த கைக்கூடையில் இருந்த காபி பிளாஸ்க்கை டேபிளின் மேல் வைத்த மோகனின் அம்மா, கைப்பர்ஸ் திறந்து ஒரு பொட்டலம் பிரித்து அதிலிருந்த வீபூதியை வேண்டிக்கொண்டே ரமேஷின் நெற்றியில் இட்டார்.

மாம்பலம் வீடு.

சோபாவின் ஆளுக்கொரு பக்கமாக மோகனும், ராஜியும் இருக்க நடுவில் ரமேஷ்.

"என்னப்பா உன் கையிலே குமுதம்! அம்மா புஸ்தகம்னா அது?" என்று அப்பாவைத் துளைத்தெடுத்த ரமேஷூக்கு, "இது கூட வெறைட்டியா நன்னாத்தாண்டா இருக்கு," என்றவனை மலங்க மலங்கப் பார்த்தான் ரமேஷ்.

"விகடன் மட்டும் என்னவாம்?..அட்டகாசமான்னா இருக்கு.." என்று அப்பாவைப் பார்த்து குறும்புடன் சொன்ன அம்மாவைப் பார்க்கையில் அதிசயமாக இருந்தது அவனுக்கு.

மோகனின் பக்கத்தில் இன்னும் நெருங்கி, ரகசியமாக அவன் கைதொட்டு தன் கைக்குள் வைத்துக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட ராஜிக்கு இந்த சொர்க்கமே தன் கைக்குள் இருப்பது மாதிரியான உணர்வேற்பட்டது.

'ரமேஷூக்கு அடுத்து இதோ இன்னொரு குழந்தை' என்று நினைத்துக் கொண்டான் மோகன்.

(அமெரிக்காவில் வெளிவரும் 'தென்றல்' இதழில் பிரசுரமான கதையின் மீள் பிரசுரம். பிரசுரித்த 'தென்றல்' இதழுக்கு நன்றி.)
Related Posts with Thumbnails