Monday, July 27, 2009

"யாத்ரா" இதழ்கள் தொகுப்பு

தேடிப்போன மூலிகை காலில் சிக்கிக் கொண்ட கதை தான்.

எனது எழுத்தாளர்கள் பகுதியில் கரிச்சான்குஞ்சு சாரைப் பற்றிய கட்டுரையில் அவரைப் பற்றி எழுதும் போது, "யாத்ரா" இதழ் தி.ஜானகிராமனின் மறைவுக்குப் பின் அவருக்கு ஒரு நினைவுமலர் வெளியிட்டதென்றும் அதில் கரிச்சான் குஞ்சுவின் கட்டுரை நட்பின் அந்நியோன்யத்தை, அதன் ஆழத்தை வெளிப் படுத்துவதாய் இருந்ததென்றும் எழுதியிருந்தேனல்லவா?..

என்றைக்கோ படித்து, தேசலாக நினைவில் நின்ற கரிச்சான் குஞ்சுவின் அந்தக் கட்டுரையை மறுபடியும் படிக்கும் ஓர் அனுபவமும், பழைய நினைவுகளில் மனம் ஒன்றிப்போய் விக்கித்து நிற்கும் ஒரு நிலையும் நேற்று ஏற்பட்டது.

கரிச்சான் குஞ்சு மட்டுமில்லை.. தி.ஜா.வுடன் நெருங்கிப் பழகிய அவருக்கு நெருக்கமானவர்களில் நிறையப்பேர் அவரின் சிறப்பியல்புகளை நினைவு கூர்ந்து எழுதியிருக்கிறார்கள். அத்தனையையும் ஒன்று சேர ஒரே நேரத்தில் இப்பொழுது படிப்பது மனசுக்கிசைந்த புது அனுபவத்தைத் தந்தது.


மரியாதைக்குரிய வெங்கட்சாமிநாதனுக்கு தமிழ் இலக்கிய உலகம் 'ஸ்பெஷல்' நன்றியைச் சொல்ல வேண்டும். அவர் பின்புலமாய் இருந்து சாதித்த "யாத்ரா" இதழ்கள் எவ்வளவு கம்பீரத்துடன் வந்திருக்கின்றன என்பதை நினைத்துப் பார்க்கையிலேயே, இப்படி ஒரு பத்திரிகை இன்றைக்குக்கூட சாத்தியமா என்கிற வியப்பு ஏற்படுகிறது. அந்த வியப்பின் ஊடே, இன்றைய தேதிக்கு தமிழகப் பத்திரிகைகள் குறித்து பெருத்த ஏமாற்றமே நெஞ்சில் கவிகின்றது.

1978-ல் பிறவி எடுத்த "யாத்ரா", சுமார் ஆறுவருட காலம் அட்டகாசமாய் வெளிவந்திருக்கிறது.. வானத்துக்கூரையின் கீழ் நிகழும் எது பற்றியும் "யாத்ரா" எழுதியது. கலையின் எந்த விகசிப்பையும் அது விட்டுவைக்க வில்லை. நாடகம், தெருக்கூத்து, பாவைக்கூத்து,கிராமியக் கலைகள், கணியான் ஆட்டம், மெலட்டூர் மேளா என்று எத்தனை எத்தனை தலைப்புக்களில் எவ்வளவு அரிய தகவல்கள் ?..

தி.ஜா.வைப் போலவேத்தான் தி.ஜா. வாசகர்களும். தேர்ந்த ரசனை உள்ளவர்கள். அவர்களுக்கு தி.ஜா.பற்றிய இந்த நினைவுகள் மிகுந்த நெகிழ்வேற்படுத்தும். "யாத்ரா" தொகுப்பில் நான் படித்த சில உணர்வு பூர்வமான தகவல்களை--முழுதும் எழுத முடியாததை உணரும் நேரத்தில்--அந்த கடலிலிருந்து சில துளிகள்.. கடலே கைவசப்படும் பொழுது, முழுப் புத்தகமே உங்கள் வசப்படுகிற பொழுது அல்லது வாசிக்கக் கிடைக்கையில், தவற விட்டுவிடாதீர்கள், ப்ரிய நண்பர்களே!...

முதலில், கரிச்சான் குஞ்சு சார்....

அன்று விடியற்காலையில் எங்களுக்கு நேர்ந்த ஆனுபவம் ஒன்று மறக்க முடியாதது. நாங்கள் திருநாகேஸ்வரம் அருகே சென்றபோது குமபகோணம் போகும் ரயில் வரும் நேரம். ஆகவே அவசரமாக ஸ்டேஷனுக்குப் போவதற்காக--குறுக்கே ஸ்டேஷனுக்கு எதிரே சாலையிலிருந்து கிழக்கே இறங்கினோம். இடையில் ஒரு வடிகால் நீர்த்தேக்கம். அவசரத்தில் இருவரும் அதைக்கடக்க இறங்கினோம். ஜானகிராமன் நாலடி தள்ளி--நான் இப்புறம். ஆழமே இல்லை. முழங்காலளவு இருக்கும். அவ்வளவு தான். ஆனால் நான்
இறங்கிய இடத்தில்-உளை சேறு. என் கால்கள் புதைந்து கீழே, கீழே.. போய்க்கொண்டே இருந்தேன். இடுப்பளவு புதையுண்டு விட்டேன். மேலும் உள்ளே இறங்குகின்றன கால்கள். இதற்குள் அவன் தாண்டி விட்டிருந்தான். நான் வாய்விட்டுக் கத்தக்கூட முடியாமல் மரண பயத்தால் ஸப்த நாடியும் ஒடுங்கி எப்படியோ ஆகிவிட்டிருந்தேன். இறந்து விட்டது போலவே தேசலாக ஓர் நினைவு ஓடியது ஞாபகம் இருக்கிறது. மனம் என்பதே மாய்ந்து விட்டது. மறுகணம் ஜானகிராமனையோ- மற்ற எதையுமோ நினைவில்லை எனக்கு.

சில நிமிஷங்களுக்குப் பின் நான் கரையில், ஈரம்,சேறு தோய்ந்த நிலையில் பிரக்ஞை பெற்றபோது, நாலைந்து பேர் என்னைச் சூழ்ந்திருந்தனர்.
ஒரு கயிற்றைப் பற்றிக் கொண்டிருந்தேன். ஜானகிராமன் கலக்கத்துடன் என்மீது படிந்திருந்த சேற்றை வழித்து எறிந்துகொண்டே--கண்ணீர் ததும்ப ஆறுதல் கூறிக் கொண்டிருந்தான். அவன், "ஐயோ, ஐயோ" என்று மிகவும் உரத்த குரலில் கத்தினானாம். சிலர் ஓடிவந்து என் தோள்களுக்கடியில் கயிறு போட்டுத் தூக்கினார்களாம்.

"அம்மா வந்தாள்" நாவலில் வரும் பாடசாலை - அதை ஏற்படுத்திய அம்மாள் - அங்கு ஒரு பெண் இருந்தது முதலிய அம்ஸங்கள் நிஜமானவை. ஜானகியின் அண்ணா அந்தப் பாடசாலையில் வேதக்கல்வி முற்றும் கற்றதும் உண்மை. ஆனால் அவன் செய்யும் கதைக்கும் - இந்த மூலங்களுக்கும் துளிக்கூட சம்பந்தமில்லை....


அடுத்து எம்.வி. வெங்கட்ராம்:

அடைமழையாகப் பிடித்துக் கொண்டிருத்து. தெருக்களில் அதிகப்படியாகவோ அநாவசியமாகவோ நடமாட்டம் இல்லை. ஆகையால் நான் தனியாக வெளியே போய்விடுவேன் என்ற கவலை இல்லாமல் ஜானகிராமன் ஆபீசுக்குப் போகலானார் படிப்பதற்கு எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. எழுத வேண்டும் என்று தோன்றவில்லை.

."நீங்கள் ஏன் எழுத முயற்சி செய்யக்கூடாது?.. எழுத்தில் concentrate செய்தால், அது உங்களுக்கு ஒரு நல்ல distraction ஆக இருக்குமே?" என்றார் ஜானகிராமன் ஒரு நாள்.

"நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. என் மனத்தில் நடப்பதை டயரி போல் எழுதி வை என்று பிச்சமூர்த்தியும் சொன்னார். அது பிரசுரம் ஆகாவிட்டாலும் யாருக்காவது பயன்படும் என்றார். ஆனால், எழுதுவதற்கான அமைதியை எனக்கு மனம் தரவில்லை.

"மனக்குழப்பம் என்கிறீர்கள். உங்கள் அனுபவங்களைக் கதை போல் தெளிவாய்ச் சொல்கிறீர்களே, சொலவது போலவே நீங்கள் ஏன் எழுதக் கூடாது?"

"பேசுவது வேறு, எழுதுவது வேறு. எழுதுவதற்கு மிக அதிகமான concentration தேவைப்படுகிறது. எழுத உட்காராதபடி மனசில் குளறுபடி நடந்தபடி இருக்கிறதே?"

"concentration ஆல் அந்தக் குளறுபடியை அடக்க முயலுங்கள் என்று தான் நான் சொல்கிறேன்"

என்னுடைய சங்கடத்தை அவருக்குப் புரியும்படி சொல்ல என்னால் முடியவில்லை என்று தோன்றியது. "என் நிலைமை எனக்கே விநோதமாக இருக்கிறது. மனசுக்குள் நான் பைத்தியம்; வெளியே சித்த சுவாதீனம் உள்ளவன் போல் நிர்வாகம் செய்கிறேன். இது எப்படிச் சாத்தியம் ஆகிறது என்று எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறது. எழுத்து மனத்தைப் பொறுத்த விஷயம் ஆயிற்றே!"

"இவ்வளவு தெளிவாகப் பேசுகிறீர்கள்; இந்த உறுதியோடு ஏன் எழுதக்கூடாது?.. நீங்களும் நானும் clarity யோடு எழுத்க் கூடியவர்கள். concentration கலையில் முதல் தேவை என்பதைத் தெரிந்து எழுதுகிறவர்கள். நாம் இருவரும் சேர்ந்து எத்தனையோ திட்டம் போட்டோம். இப்போதும் நாம் அதைச் செய்யமுடியும்."
பல ஆண்டுகளுக்கு முன் நாங்கள் கண்ட கனவுகளின் எதிரொலியாக அவர் பேசினார். கு.ப.ரா.வைப் போல் ஜானகிராமனுக்கும் சன்னக் குரல். இருவருமே சற்றே நாசி வழியாகப் பேசுவதைப் போல இருக்கும். இருவருமே குரலைத் தூக்கி பேசியதை நான் கேட்டதில்லை. ஆனால், இருவருடைய பேச்சிலும் மென்மை இருந்தாலும் அழுத்தம் இருக்கும்."...............

என்று தொடர்ந்து எழுதுகிற எம்.வி. வெங்கட்ராம், தனது இரங்கல் கட்டுரையை இப்படி முடிக்கிறார்:

இந்த நண்பர் இப்போது எனக்கு இல்லை என்றாகிவிட்டார். என்னைப் பற்றி அவர் எழுதுவார் என்று நான் எண்ணியிருந்தேன். கெட்டிக்காரர். என்னைவிட இளையவர். என்னை முந்திக் கொண்டுவிட்டார்.

அதற்கடுத்து தஞ்சை பிரகாஷ்:


தஞ்சாவூர் வரும் போதெல்லாம் சொல்லியனுப்புவார். நான் போய்ச் சந்திப்பேன். "இதெப்படி தஞ்சாவூர் மட்டும் அப்படியே இருக்கு?" என்று வியப்பார். கடைசியாய் மரணத்திற்குச் சில மாதங்களுக்கு முன்பும் தஞ்சாவூர் வந்திருந்த போதும், "என்ன? தஞ்சாவூர் இப்படி மாறிப் போச்சு?" என்று வியந்தார். வெண்ணாற்றங்கரை போவோம்.

'ஹோ'வென்று பாயும் ஜலப்ரவாகத்தைப் பார்த்தபடி நிற்பார். திருவையாறு போவோம். தியாகையர் சமாதியின் மணல்வெளியில் நிற்பார். மேலவீதி காமாட்சியம்மன் கோவில் சந்நதியில் நிற்போம். இடிந்த மராட்டிய அரண்மனை இடிசல் சுவரில் சரிந்து வளர்ந்திருக்கும் அரசு பூத்திருக்கிறதைக் காட்டுவார். பெரிய கோவில் நிலா முற்றத்தில் காலத்தை வென்றக் காற்றை அண்ணாந்து வியப்பார். சந்தனாதித் தைலம் மணம் வீசும் சரஸ்வதி மஹால் பழஞ்சுவடிகளிடையே நின்று தெலுங்கு சுலோகத்தை என்னை வாசிக்கச் சொல்லிக் கேட்பார். தஞ்சாவூர் பாணி சீரங்கத்துப் படம் எழுதும் ராஜூவிடம் போய் அவன் ரேக்கு ஒட்டுவதைப் பார்த்து நிற்பார்.

கொண்டி ராஜபாளையம், சுவாமிமலை, மன்னார்குடி எல்லாம் போவோம். எங்கும் எதிலும் வியப்புத் தான். குழந்தை சந்தோஷம் தான். ஆச்சரியம் தான்; ஜானகிராமனுக்கு எழுத்து மூணாம் பட்சந்தான்; வாழ்க்கை தான் அவரது ருசி! மழை பெய்து கொண்டிருக்கும்; வராந்தாவில் நின்று பார்த்துக்கொண்டிருப்பார். வியப்பாய் மகிழ்ந்து கொண்டிருப்பது அருகிலிருந்தால் புரியும்.

கட்டுரை மேலும் தொடர்கிறது: பாவம் ஜானகிராமன். வாழ்க்கையில் நிறைய ஏமாந்தவரும் கூட. பத்திரிகையாசிரியர்கள், பதிப்பாளர்கள் பலரும் நிறைய அவரை ஏமாற்றியிருக்கிறார்கள். பதிப்பகங்கள் அவரை மிகவும் அழகாய் ஒதுக்கின. எல்லாருக்கும் நல்லவராக அவர் இருக்க முனைந்ததின் பலன் அது. அவரது "மோகமுள்" நாவல் அச்சாகி, பலவருடம் வெளியே வராமல் அரசு அலுவலகக் கட்டிடம் ஒன்றில் அடைந்து கிடந்தது.

ஆனாலும் ஜானகிராமன் சாதனை ஒண்ணு இருக்கு. ரொம்ப அடக்கமா வாசிச்சாலும் அவர் வாத்தியம் என்னமோ தனிதான். தமிழ் எழுத்துக்கு அது தனிசுகமான சாதனையைத் தந்திருக்கிறதை யாராலும் மறுக்க முடியாது.


இன்னும் ஸ்வாமிநாத ஆத்ரேயன், சிட்டி, லஷ்மி கண்ணன் என்று நிறையப் பேர் எழுதியிருக்கிறார்கள்.


எல்லாவற்றையும் படித்து விட்டு, 'ஓஹ்...எப்படிப்பட்ட ஆத்மா' என்று நமக்குப் பெருமூச்சு தான் வெளிப்படுகிறது.


'யாத்ரா' இதழ்கள் தொகுப்பு இரண்டு பாகங்களைக் கொண்டது.. இரண்டும் தனித்தனி புத்தங்களாக கிடைக்கிறது.. எதிர்காலத் தலைமுறையினரின்
ரசனைக்காகவும், அவர் தம் அறிவுத் தீனிக்காகவும் அழகுற இந்த இரண்டு புத்தகங்களையும் பதிப்பித்திருப்போர் பாராட்டுக்குரியவர்கள்.


புத்தகம் கிடைக்குமிடம்:
சந்தியா பதிப்பகம்,
57-A, 53வது தெரு, 9-வது அவென்யூ,
அசோக் நகர், சென்னை- 600 083

தொலைபேசி: 044- 24896979/ 65855704
செல்: 9841191397
Web: http://www.sandhyapublications.com

E.Mail: sandhyapublications@yahoo.com

Wednesday, July 15, 2009

ஆத்மாவைத் தேடி....7 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....

7. கனவும் நிஜமும்

தவைத் திறந்தால் கிருஷ்ணமூர்த்தி தான் நின்று கொண்டிருந்தார்.
"நாங்களும் ரெடியாயிட்டோம், கிருஷ்ணா.." என்றபடியே மாலு, சிவராமனைப் பார்க்க, "இதோ--" என்றபடியே சிவராமன் வெளிவந்தார்.

கதவைப் பூட்டி வெளிக்கிளம்புகையில் சுவர் பெண்டுலம் கடியாரம் ஐந்து முறை ஒலியெழுப்பி அவர்களை வெளியனுப்பி வைத்தது.

மாடிப்படி இறங்கி தரைத்தள கீழ்ப்படி அடையும் வரை யாருமே பேசவில்லை. கீழ் வராண்டா படி தாண்டி வரிசையாக குரோட்டன்ஸ் பாத்தி. அதைத் தாண்டியதும், "கிருஷ்ணா! இன்னிக்கு அதிகாலையில் ஓர் ஆச்சரிய அனுபவம்.." என்று ஆரம்பித்தாள் மாலு.

'என்ன?' என்கிற மாதிரி மாலுவை வியப்புடன் பார்த்தார் கிருஷ்ணமூர்த்தி.

"அதிகாலைக் கனவு பலிக்கும்னு சொல்வார்களில்லையா?.." என்று பீடிகையுடன் ஆரம்பித்து, தான் கண்ட கனவை விவரித்து விட்டு, "'படபட'வென்று அந்தப் புறாக்காள் பறந்து போனது இன்னும் நினைவில் நிழலாடிக் கொண்டே இருக்கிறது, கிருஷ்ணா!" என்று முடித்தாள் மாலு.

கிருஷ்ணமூர்த்தி யோசனையுடன் அவளைப்பார்த்து விட்டுச் சொன்னார்: "மாலு! அந்தப் புறாக்கள் இந்த மஹாதேவ் நிவாஸில் சுற்றிக் கொண்டிருந்தவை தான். நான் இங்கே வந்து சேர்ந்த ஆரம்ப காலத்தில் அடிக்கடி அந்த ஜோடிப்புறாக்களைப் பார்த்திருக்கிறேன்... ஆனா, திடீர்னு கொஞ்ச காலமா அதுகளைக் காணோம். இப்போ வந்திருக்கு போல இருக்கு" என்றார்.

"புறாக்கள் வருவதும், போவதும் சகஜம், கிருஷ்ணா! ஆனால், இந்த புறாக்களின் கதையே வேறே.. நான் அரியலூர்லே நம்பாத்திலே இதேப் புறாக்களைப் பார்த்தேன். முத்தத்திலே இறகுகளை உதிர்க்கறதுகளேன்னு சலிச்சிண்டு விரட்டினேன். அப்படி விரட்டினத்துக்காகப் பின்னாடி வருந்தினேன். என்னோட வருத்தத்தைப் போக்கறத்துக்காகவே இங்கே தரிசனம் கொடுத்திருக்கிறதா நெனைக்கிறேன்," என்று மூச்சு வாங்கப் பேசினாள்.

"எதுக்கு மாலு, இப்படிப் படபடக்கிறே?.." என்று அவளை ஆசுவாசப்படுத்தினார் சிவராமன். "கிருஷ்ணா.. இந்தப் புறாக்கள் டெல்லிலேந்து தான் அரியலூருக்கு வந்ததாகவும், இப்படி வருஷாவருஷம் வர்றது வழக்கம் தான்னும் எனக்குத் தகவல் கிடைச்சது," என்றார் சிவராமன்.

"அப்படியா?" என்று ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தார் கிருஷ்ணமூர்த்தி.

"இதை யார் எனக்குச் சொன்னதுன்னு கேட்டா இன்னும் ஆச்சரியப்படுவே. அரியலூர்லே நம்பாத்துலேந்து பஸ் ஸடாண்ட்டுக்குப் போற வழிலே, ஒரு குட்டி சந்து திரும்புமே, அதுலே முதல் வீடு. அந்த வீட்லே இருப்பவர் புறா வளர்க்கறதா கேள்விப்பட்டுப் போனேன். அவர் சொன்னது தான் இது."

"ஓ..." என்று உதட்டைக் குவித்தார் கிருஷ்ணமூர்த்தி. "ஓ, அவர் நம்ம சதாசிவம்னா!.. எங்க தாத்தா காலத்லே அவர் அப்பா ராமலிங்கம் நம்ம நிலத்தை எல்லாம் பாத்திண்டிருந்த பண்ணைக் காரியஸ்தர்னா.."

"அப்படியா.. இந்த விஷயம் எனக்குத் தெரியாதே.." என்று ஆச்சரியப்பட்டார் சிவராமன்.

இத்தனை நேரம் ஏதோ யோசனையில் இருந்தது போலவே இவர்கள் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த மாலு, நிதானமாகச் சொன்னாள். "கிருஷ்ணா! பெரியவாள்லாம் ஒண்ணு சொல்லுவா. மனுஷ யத்தனத்தில் புரிஞ்சிக்க முடியாததையெல்லாம், ரொம்ப தோண்டித் தோண்டி யோசிச்சுப் பாக்கக் கூடாதுன்னு சொல்லுவா. அதெல்லாம் தெய்வ சங்கல்பம்ன்னு எடுத்துக்கணுமாம்... இருந்தாலும் நினைச்ச ஒண்ணைச் சொல்லிடறேன்.. பகவான் ஷமிக்கணும்.. நீ இருக்கற இந்த இடம், அடுத்தாப்பலே உன்னோட
அரியலூர் அகம், அங்கே இந்தப் புறாக்களைப் பாத்த நாங்க, உங்க தாத்தா காலத்து பண்ணை காரியஸ்தர் ராமலிங்கம் வீடு, அவர் வீட்டுக்கு இந்த புறாக்கள் வருஷா வருஷம் ஒரு குறிப்பிட்ட காலத்லே டெல்லிலேந்து வர்றதுன்னு அவர்சொன்னது... நீ இங்கே பார்த்த பொழுது காணாமப் போனது, அதே நேரத்லே நாங்க அரியலூர்லே இருந்த போது அங்கே வந்தது, நாங்க இங்கே வந்ததும் இங்கே வந்தது... இந்த எல்லாத்துக்கும் ஏதோ நூல் சரட்லே கோத்த மாதிரி... ஐ மீன், ஒரு லிங்க்... இருக்கற மாதிரித் தெரியலே?.." என்று திகைத்தாள்.

"'அந்தப் புறாக்களை விரட்டி விட்டோமே' என்கிற ஒரு குற்ற உணர்வோடேயே நீ இருந்ததாலே, உன்னைச் சாந்தப்படுத்த அதே புறாக்கள் பிரதட்சயமாயிருக்கின்றன' என்று எடுத்துக் கொள்ளலாமில்லையா?.." என்று கேட்டார் சிவராமன்.

"லாம். ஆனால் அந்த குற்ற உணர்வு, என்னை அரித்துக் கொண்டிருந்ததால், மனத்தின் ஆழத்தில் தைத்த அந்த உணர்வு, என்ன சமனபடுத்துவதற்காக கனவாகியிருக்கலாம். அறிவு பூர்வமாக இதுவரைப் புரிந்து கொள்ள முடிகிறது.. ஆனால் கனவில் கண்டது, நிஜத்திலும் நிதர்சனமாகக் காண முடிகிறதென்றால்... ஓ! இட் இஸ் ஸம்திங் கிரேட்!.." என்று புளகாங்கித மடைந்து போனாள், மாலு.

அவர்கள் பேசிக் கொண்டே நடந்து வந்ததில், மஹாதேவ் நிவாஸையே நீண்ட ஒரு சுற்றாகச் சுற்றி வந்து, சிவன் கோயிலின் வெளிப்பிராகாரம் வரை வந்து விட்டார்கள்.

வெளிப்பிராகாரத்தின் நுழைவு வாயில் பக்கம் நுழைவதற்கு முன் தலைநிமிர்ந்து கோபுரம் பார்த்தவர்கள் திகைத்து அப்படியே நின்று விட்டார்கள்.

(தேடல் தொடரும்)

Sunday, July 5, 2009

ஆத்மாவைத் தேடி....6 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....


6. படபடத்தப் புறாக்கள்

சிவராமனும், மாலுவும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே தாங்கள் விளையாடித் திரிந்த அழகை அவர்கள் பார்க்க வேண்டித்தான் அங்கு வந்து அவர்களை எழுப்பி காணச்செய்து அவர்கள் பார்த்துக் களித்ததும் தங்கள் வேலை முடிந்த மாதிரி அந்த ஜோடிப்புறாக்கள் இவ்ர்கள் கண்முன்னாலேயே பறந்து பறந்து காணாமல் போயின.

தாங்க முடியாத சோகத்தில் தொய்ந்து போன மாலுவைக் காணப் பரிதாபமாக இருந்தது, சிவராமனுக்கு.

"இத்தனை நேரமும் இங்கே விளையாடித் திரிந்து நான் பார்த்ததும் பறந்து போயிடுத்தேன்னா.." என்று வேதனையில் விக்கித்து நின்றாள் மாலு.

"என்ன மாலு, நீ என்ன குழந்தையா? பறவைகளின் இயல்பு பறப்பது. அவை எழும்பி வானில் பறக்க முடியாமலிருந்தால் தான் நாம் பரிதாபப்பட வேண்டும்... அவை குஷியாகப் பறப்பது கண்டு நாம் சந்தோஷிக்க வேண்டாமா?.." என்று அவளைத் தேற்றினார் சிவராமன்.

தலை நிமிர்ந்து அவரைப் பார்த்தாள் மாலு. அந்த அரையிருட்டிலும் அவள் விழிகளிலிருந்து வெளிவந்த நீர் கோடிட்டு கன்னப்பிரதேசத்தில் பளபளத்தது.
"ஆமான்னா.. நீங்க சொல்றது ரொம்ப சரி. பறவைகள் பறந்து திரிவது குழந்தைகள் ஓடி விளையாடற மாதிரிதான். ஆனால் என் மனசில் இவை வெறும் பறவைகளாகப் படலே."

சிவராமன் திடுக்கிட்டார். மாலு எதைச் சொன்னாலும் யோசித்து ஸ்பஷ்டமாகச் சொல்லும் பழக்கம் உள்ளவள். ஆதலால் இவள் உளறலாக எதையும் சொல்ல மாட்டாள் என்கிற உணர்வும் அவருக்கு இருந்தது.

எதுவும் பேசாமல் அவர் பார்த்துக் கொண்டிருக்கையில், மாலுவே தொடர்ந்தாள்: "கொள்ளை அழகுன்னா; கிருஷ்ண விக்கிரகம் மாதிரி ரெண்டு குழந்தைகள். தாழ்வாரத்திலேயே தவழ்ந்திண்டு வந்ததுகள், முத்தத்து மறப்பிலே மறைச்சிண்டு என்னைப் பாக்கறதுகள். எந்த முத்தம்ங்கறேள்?.. நம்ம ஜானகியோட அரியலூராத்து முத்தம்"

சிவராமன் சுவாரஸ்யமாக 'உம்' போட்டார்.

"ரெண்டு குழந்தைகளும் கொழுகொழுன்னு என்னமா இருந்ததுங்கறேள்?.. அசல் அந்த பாலகிருஷ்ணனே தான்! முத்தத்து மறப்பிலே, மயிலிறகு செருகின கிரீட அலங்காரத்தோட, நம்ப பெங்களூர் ஆத்து ஹால்லே ரவிவர்மாவோட 'ஆர்ட்'டை பிரேம் போட்டு மாட்டியிருப்போமே, அந்த மாதிரின்னா. அச்சு அசலா ஸ்வாமியே ஒண்ணுக்கு ரெண்டா குழந்தைகளா வந்த மாதிரி இருந்ததுன்னா..."

"ஓ----"

"அதுகளைத் தூக்கிக் கொஞ்சணும்ங்கற தவிப்பை என்னாலே அடக்க முடியலே. ரெண்டு அடிதான் வைச்சிருப்பேன்...'படபட'ன்னு சிறகடிச்சு ரெண்டும் புறாக்களாகி முத்தத்து மற்ப்பிலேந்து பறந்து போச்சு.. எங்கே குழந்தைகளைக் காணோம்ன்னு தேடறேன். எங்கே போச்சுன்னு தவியா தவிச்சு----பட்டுன்னு விழிப்பு வந்திடுத்துன்னா.. எல்லாம் கனவான்னு நம்பமுடியாம் பாத்தா, நீங்க ஜன்னல் பக்கத்லே நின்னுண்டிருக்கேள். என்னன்னு எழுந்து வந்தா, நான் கனவுலே பாத்த அந்தப் புறாங்களேதான்னா..
நிஜத்திலேயும் மாமரக் கிளைலே குலாவிண்டிருக்குகள்.. எது கனவு, எது நிஜம்ன்னு எனக்கு விளங்கலேயேன்னா..."


சிவராமன் மாலுவை ஆசுவாசப்படுத்தினார். "நீ கனவு கண்டதும் நிஜம். கனவில் கண்டதை நிஜத்தில் பார்த்ததும் நிஜம்" என்று சொல்லிவிட்டு, ஸ்விட்ச் தட்டி பெரிய சுவர் கடியாரத்தில் மணிபார்த்தார். "பாரு மணி நாலரை ஆச்சு. அஞ்சு மணிக்கு ரெடியா இருக்கச் சொல்லி கிருஷ்ணா சொல்லியிருக்கான். வாக்கிங் போக நீ ரெடியாகு" என்று தலையணையைத் தட்டி அடுக்கி வைத்தார்.

அவர்கள் தயாராவதற்குத் தான் காத்திருந்தது போல அழைப்பு மணி கிணுகிணுத்தது.

(தேடல் தொடரும்)
Related Posts with Thumbnails